ரோசென்டோவின் கதை-மான்க் ஈஸ்ட்மேன், அநீதிகளை விநியோகிப்பவன்-JL Borges

monkeastman-rosendo11ரோசென்டோவின் கதை

ஜோர்ஜ் லூயி போர்ஹே

-1966-

இரவு பதினோரு மணி இருக்கும். பொலிவார்-வெனிசுலா மூலையில் பலசரக்குக் கடையாகவும் மதுபானக் கடையாகவும் இருந்ததில் நுழைந்தேன். (இப்போது அது வெறும் மதுபானக்கடை மட்டும்தான்) அதனுள் இன்னொரு பக்கத்தில் இருந்த மனிதன் வாயால் த்ஸ்ஸ் . . . சப்தமிட்டு எனக்கு சமிக்ஞை செய்தான். அவனுடைய செயலில் ஏதோ ஒரு கட்டுப்படுத்தும் தன்மை இருந்திருக்க வேண்டும். ஏனெனில் நான் உடனே அவனைக் கவனித்தேன். அங்கே இருந்த சிறிய மேஜையருகில் காலியான மதுக்கோப்பை முன் அமர்ந்திருந்தான். அவன் அங்கே நெடுநேரமாக உட்கார்ந்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்றும் எனக்குத் தோன்றியது. குள்ளமும் இல்லாமல் உயரம் என்று சொல்லமுடியாத படியும் இருந்த அவன் ஒரு சாதாரண தொழிலாளி அல்லது ஒரு பண்ணை வேலைக்காரன் போல தோற்றம் கொண்டிருந்தான். அவனுடைய மெல்லிய மீசை நரைத்துக் கொண்டிருந்தது. போனஸ் அயர்சில் இருந்த பல ஜனங்களைப் போலவே தன் உடல் ஆரோக்கியம் பற்றிய பயத்தினால் அவன் தோளைச் சுற்றியிருந்த ஸ்கார்ஃபை எடுக்காமலே இருந்தான். அவனுடன் ஒரு தரம் குடிக்கச் சொன்னான். நான் அமர, நாங்கள் இருவரும் அளவளாவினோம். இது எல்லாம் முப்பதுகளின் தொடக்கத்தில் நடந்தது. பின் வரும் கதைதான் அந்த மனிதன் சொன்னது:

“உங்களுக்கு என்னைத் தெரியாது. மற்றபடி என்னைப் பற்றி நிலவும் மதிப்புமரியாதை காரணமாக ஒரு வேளை தெரிந்திருக்கலாம். மற்றபடி எனக்கு உங்களைத் தெரியும். நான்தான் ரோசென்டோ யூவாரஸ். இறந்து போய்விட்ட பாரதெஸ் என்னைப் பற்றி உங்களிடம் சொல்லி இருக்கலாம். அந்தக் கிழவனுக்கு ஏதாவது ஒரு விஷயத்தை அல்லது செய்தியை நீட்டிக் கொண்டே போவது பிடிக்கும். ஒரு புள்ளி வரை நீட்டுவான்-ஆனால் பொழுது போக்காகத்தானே தவிர யாரையும் ஏய்ப்பதற்காக அல்ல. நல்லது. உங்களைப் பார்த்ததினாலும், எனக்கு அதை விட முக்கியமான வேலை எதுவும் தற்சமயம் இல்லை என்பதாலும் அந்த இரவு என்ன நடந்தது என்பதை நான் மிகச் சரியாகச் சொல்லப் போகிறேன். புட்ச்சர் கொல்லப்பட்ட அந்த இரவு. இது எல்லாவற்றையும் உங்கள் கதைப்புத்தகத்தில் எழுதி வையுங்கள். அதைப் பற்றி கருத்து சொல்வதற்கு எனக்கு அருகதை இல்லை. ஆனால் நிஜம் எது என்பதையும், ஜோடிக்கப்பட்ட விஷயங்கள் எது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.”

எப்பொழுதுமே விஷயங்கள் உங்களுக்கு நடக்கின்றன, பல வருஷங்களுக்குப் பிறகுதான் அவற்றைப் புரிந்து கொள்கிறீர்கள். அன்று இரவு எனக்கு நடந்ததன் தொடக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. ஃபுளோரெஸ்டாவுக்கு அப்பால் மால்டொனாடோ நதியின் சுற்றுப்புறங்களில் நான் வளர்ந்தேன். அப்போது மால்டொனாடோ ஒரு சாதாரண சாக்கடையாகத்தான் இருந்தது, ஒரு விதக் கழிவு ஓடையைப் போல. அவர்கள் அதை மூடிவிட்டது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். முன்னேற்றத்தின் அணிவகுப்பிற்கு எவராலும் தடை போட முடியாது என்ற கருத்து எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது. எனினும் ஒரு மனிதன் பிறந்த இடத்தினை மாற்ற முடியாது. என்னுடைய தந்தை யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்குத் ஏற்படவே இல்லை. கிலிமென்ட்டினா யூவாரஸ் என்பவள்தான் என் தாய்-வண்ணாத்தி வேலை செய்து பிழைப்பு நடத்திய கௌரவமான பெண். எனக்குத் தெரிந்தவரை அவள் உருகுவே அல்லது ‘என்ரெ ரியோஸ்’ பகுதியைச் சேர்ந்தவளாக இருக்க வேண்டும். இருந்தாலும் கான்செப்சியன் தா உருகுவே பகுதியிலிருந்த தன் உறவினர்களைப் பற்றியே அவள் எப்போதும் பேசினாள். ஒரு களைச் செடியைப் போல நான் வளர்ந்தேன். மற்ற எல்லாரையும் போல கத்தியைக் கையாளும் விதத்தினை, எரிந்து கருகிப்போன விறகுக் குச்சியில் கத்திச் சண்டை போடுவதன் மூலம் கற்றுக்கொண்டேன். உங்கள் எதிரியைக் குத்தினால் அது ஒரு தடயத்தினை அவன் முகத்தில் விடும். கால்பந்தாட்டம் எங்களை இன்னும் ஆட்கொண்டுவிடாத காலம்அது–இன்னும் ஆங்கிலேயர்களின் கையிலேயே இருந்தது.

“ஒரு நாள் இரவு மூலையிலிருந்த மதுபானக்கடையில் கார்மென்டியா என்ற இளைஞன் என்னைப் பரிகாசம் செய்யத் தொடங்கினான்-சண்டை பிடிக்கும் நோக்கத்தில். நான் என் காதில் இதெல்லாம் விழாத மாதிரியே இருந்தேன். ஆனால் அவனிடம் கொஞ்சம் இருந்தது. அவன் விடவே இல்லை. நாங்கள் வெளியே சென்றோம். பிறகு நடைபாதை பக்கமிருந்த கதவைத் திறந்து உள்ளே இருந்தவர்களிடம் கூறினான். “யாரும் கவலைப் பட வேண்டாம். இதோ நான் உடனே திரும்பிவிடுவேன். ”

எப்படியோ நான் ஒரு கத்தியை கைப்பற்றிக் கொண்டேன். ஒருவர் மீது ஒருவர் கண் வைத்தபடி சிறிய ஓடையை நோக்கி மெதுவாகச் சென்றோம். அவன் என்னை விட சில வருடங்கள் பெரியவனாக இருந்தான். இருவரும் சேர்ந்து அந்தக் கத்திச்சண்டை விளையாட்டை பல தடவை விளையாடி இருக்கிறோம். அவன் என்னை நார் நாராகக் கிழிக்கப் போகிறான் என்ற உணர்வு எனக்கிருந்தது. அவன் சாலையின் இடதுபுறமாகவும் நான் வலதுபுறமாகவும் இறங்கினோம். அவன் காய்ந்த மண்கட்டிகளின் மீது இடறி விழுந்தான். அந்த தருணம்தான் எனக்குத் தேவைப்பட்டது. உடனடியாக அவன் மீது தாவி ஏறினேன், சிந்திக்காமல் அவன் முகத்தில் ஒரு வெட்டினை ஏற்படுத்தினேன். நாங்கள் நெருங்கப் பொருதினோம். எது வேண்டுமானாலும் நடந்திருக்க முடியும் என்ற நிமிஷம் வந்தது அப்பொழுது வந்தது. இறுதியில் நான் என் கத்தியைச் செருகினேன். எல்லாமே முடிந்து விட்டது. அதற்குப் பிறகுதான் நானும் குத்தப்பட்டிருப்பது எனக்கே தெரிய வந்தது. ஆனால் அவை மேலோட்டமான சிராய்ப்புகளே. அன்றிரவு ஒரு மனிதனைக் கொல்வது என்பதும் ஒருவனால் கொல்லப்படுவது என்பதும் எவ்வளவு எளிமையான காரியம் என்பதைக் கண்டு கொண்டேன். ஓடையில் தண்ணீர் மிகக் குறைவாக இருந்தது. கொஞ்ச நேரம் போகட்டும் என்று செங்கல் சூளைகளில் ஒன்றுக்குப் பின்னால் அவனை அரைகுறையாக மறைத்து வைத்தேன். நான் ஒரு முட்டாள்-அவன் எப்போதும் அணிந்திருந்த நல்ல கல்பதித்திருந்த மோதிரத்தை அவன் உடலில் இருந்து கழற்றிப் போட்டுக் கொண்டேன். என் தொப்பியை நேராக்கிக் கொண்டு மதுபானக் கடைக்குத் திரும்பிச் சென்றேன். அலட்சியமாக உள்ளே நுழைந்தபடி “திரும்பி வந்த அந்த ஒருவர் நான்தான் என்று தோன்றுகிறது” என்றேன்.

நான் கொஞ்சம் ரம் கேட்டேன். நிஜத்தைச் சொல்வதானால் எனக்கு அப்போது அவசியமாக குடிக்கத் தேவைப்பட்டது. அப்பொழுதுதான் என் சட்டைக் கை மீதிருந்த ரத்தக்கறையை யாரோ கவனித்துச் சொன்னார்கள்.

அந்த ராத்திரி முழுவதும் படுக்கையில் புரண்டபடி இருந்தேன். நான் கண் மூடும்பொழுது ஏறத்தாழ விடியல் வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. மறுநாள் பின்பகுதியில் என்னைத் தேடிக்கொண்டு இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள். என் அம்மா (அவள் ஆன்மா சாந்தி அடைவதாக)வீறிட்டுக் கத்த ஆரம்பித்தாள்.என்னை ஒரு குற்றவாளியைப் போல போலீஸ் காரர்கள் ஓட்டிக்கொண்டு சென்றார்கள்.கட்டுக்கடங்காத கைதிகளுக்கான தனியறையில் இரண்டு பகல்கள் மற்றும் இரண்டு இரவுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. லூயி இராலாவைத் தவிர வேறு எவரும் என்னைப் பார்க்க வரவில்லை– அவன் நிஜமான நண்பன் –ஆனால் அவனை உள்ளே விடவில்லை. மூன்றாவது நாள் காலை போலீஸ் கேப்டன் என்னைக் கூப்பிட்டனுப்பினார். என் முகத்தைக் கூடப் பார்க்காமல் நாற்காலியில் அமர்ந்தபடி சொன்னார். “ஆக நீதான் கார்மென்டியாவை நல்லமுறையில் கவனித்துக் கொண்டது, அப்படித்தானே?”

“நீங்கள் சொல்வது அதுதான் என்றால் அப்படியே இருக்கட்டும்” நான் பதில் அளித்தேன்.

“நீ என்னை சார் என்று கூப்பிட வேண்டும். சுற்றி வளைத்துப் பேசுவதோ தமாஷ் பண்ணுவதோ வேண்டாம். சாட்சிகள் உறுதிமொழியுடன் எழுதிக்கொடுத்த அறிக்கைகளும், உன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மோதிரமும் இதோ இங்கே இருக்கின்றன. இந்த வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு விஷயத்தை முடித்துக்கொள்.”

மைக்கூட்டினுள் பேனாவை முக்கி என் கையில் தந்தார்.

“நான் கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன் கேப்டன் சார்.”, என்றேன்.

“இருபத்து நாலு மணிநேரம் தருகிறேன். தனி செல்லில் ஆழ்ந்த யோசனை செய்யலாம். நான் உன்னை அவசரப் படுத்த மாட்டேன். நீ விஷயத்தைப் பார்க்கத் தவறினால் லாஸ் ஹீராஸில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் கொஞ்ச காலத்தைக் கழிக்கும் எண்ணத்திற்கு உன்னைத் தயார் செய்து கொள்”அவர் சொன்னார்.

அவர் பேசியது எனக்குப் புரியவில்லை என்று உங்களால் எளிதாக ஊகித்து விட முடியும்.

அவர் சொன்னார். “கவனி. நீ ஒத்துக் கொண்டால் சில நாள் தண்டனை மாத்திரமே கிடைக்கும். அதற்குப் பிறகு உன்னை விடுதலை செய்து விடுவேன். டான் நிக்கலஸ் பாரெதெரஸ் உன் விஷயங்களை நேர் செய்து தருவதாக ஏற்கனவே என்னிடம் உறுதியளித்திருக்கிறார்.”

நிஜத்தில் மொத்தம் பத்து நாட்கள். கடைசியில் என்னைப் பற்றி அவர்களுக்கு ஞாபகம் வந்தது. அவர்கள் எதிலெல்லாம் கையெழுத்திடச் சொன்னார்களோ அதில் எல்லாம் கையெழுத்திட்டேன். இரண்டு போலீஸ்காரர்கள் என்னை காப்ரெரா தெருவில் இருந்த பாரெதெரஸின் வீட்டுக்குக் கூட்டிச்சென்றார்கள்.

நிறைய குதிரைகள் கட்டும் கம்பங்களில் கட்டப்பட்டிருந்தன. வாசலிலும் உள்ளேயும் ஒரு விபச்சார விடுதியில் இருந்ததை விடவும் அதிகமான மனிதர்கள் இருந்தார்கள். உள்ளுர் மதுவினை ருசித்துக் குடித்துக் கொண்டிருந்த டான் நிக்கலஸ் கடைசியாக என்னைக் கவனித்தார். வேண்டிய அளவு நேரத்தை எடுத்துக் கொண்டு தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மோரோன் பகுதிக்கு என்னை அனுப்புவதாகச் சொன்னார். திருவாளர் லாஃபெரர் என்பவருடன் என்னை தொடர்பு கொள்ளச் செய்வார். லாஃபெரர் என்னைச் சோதித்து அறிவார். முழுக்கறுப்பில் உடையணிந்திருந்த ஒரு இளைஞனிடம் எனக்கான அறிமுகக் கடிதத்தினை எழுதச் சொன்னார். நான் கேள்விப்பட்டிருந்த வரை குடிசைகள், கழிவுகள் பற்றி பண்பட்ட பொதுமக்கள் எவரும் படிக்க விரும்பாத கவிதைகளை அந்த இளைஞன் தயாரித்திருந்தான். பாரெதெரஸுக்கு நன்றி தெரிவித்துவிட்டு இடத்தை விட்டு அகன்றேன். என்னை எந்தப் போலீசும் பின் தொடர்ந்து வரவில்லை.

கடவுளுக்குத்தான் தெரியும் இதெல்லாம் எதற்கென்று. எல்லாமும் நல்லதற்காகவே நடந்தன. தொடக்கத்தில் நிறைய கவலையை அளித்த கார்மென்டியாவின் சாவு இப்போது எனக்குப் புதிய வழிகளைத் திறந்து விட்டது.வாஸ்தவமாக சட்டம் என்னைத் தன் உள்ளங்கையில் வைத்திருந்தது. கட்சிக்கு நான் பயனில்லாமல் போனால் என்னை மீண்டும் உள்ளே தள்ளி விடுவார்கள். ஆனால் மிகச் சௌகரியமாய் உணர்ந்தேன் என் மீது நம்பிக்கை வைத்து.

திருவாளர் லாஃபெரர் அவருடைய கஷ்டத்திலும் நஷ்டத்திலும் கூட நான் இருக்க வேண்டி வரும் என்று எச்சரித்து அப்படி நான் இருக்கும் பட்சத்தில் அவருடைய மெய்க்காப்பாளனாக ஆக முடியும் என்றார். என்னைப் பற்றிய எதிர்பார்ப்புகளை எல்லாம் நான் நிறைவேற்றினேன். மோரோனிலும் பிற்பாடு நகரின் என் பகுதியிலும் என் எஜமானர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானேன். போலீசும் கட்சியும் முரட்டு மனிதன் பலவான் என்ற அளவிலான என்னைப் பற்றிய பேரையும் புகழையும் கட்டி வளர்த்தபடி இருந்தனர். தலைநகரிலும் பிராந்தியங்களிலும் தேர்தல் சமயத்தில் வாக்குகளை ஒருங்கிணைப்பதை நான் சிறப்பாகச் செய்தேன். அச்சமயங்களில் நிகழ்நத ரத்தம் சிந்துதல் பற்றியும் அடிதடி சண்டைகள் பற்றியும் சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டேன். ஆனால் அந்த நாட்களில் தேர்தல்கள் மிகவும் கலகலப்பாக இருந்தன என்பதை மட்டும் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இன்றைய நாள் வரை அவர்கள் தலைவனான ஆலெமின் தாடியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிற முற்போக்குகளை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அங்கே இருந்த எல்லாருமே எனக்கு மரியாதை தந்தனர். லா லூஜனேரா என்ற அழகான பெண்ணையும் பழுப்புச் சிவப்பிலான அழகான குதிரைக் குட்டியையும் அடைந்தேன். பல வருடங்களுக்கு முன்னால் நாடுகடத்தப்பட்ட மொரேய்ராவின் நிலைக்கு வாழ முயற்சி செய்தேன். அவனும் இது போல ஏதோ ஒரு நாடுகடத்தப்பட்ட, கரடுமுரடான அடியாள் ஒருவனின் நிலைக்கு வாழ முயற்சி செய்திருக்க வேண்டும். சீட்டு விளையாடத் தொடங்கினேன். போதை மருந்துகள் சாப்பிட்டேன்.

“கிழவன் ஒருவன் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பான். ஆனால் நீங்கள் கேட்கவேண்டும் என்று நான் நினைக்கிற பகுதிக்கு இப்போது வருகிறேன். முன்பாகவே நான் லூயி இராலாவைப் பற்றி குறிப்பிட்டு விட்டேனா என்று தெரியவில்லை. அந்த மாதிரி ஒரு நண்பனை நீங்கள் அடிக்கடி பார்க்க முடியாது. இராலாவுக்கு வயசாகிவிட்டிருந்தது. அவன் வேலைக்கு என்றுமே பயப்பட்டதில்லை. அவனுக்கு என்னைப் பிடித்துப்போய் விட்டது. அவன் வாழ்க்கை முழுவதிலும் அவனுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அவன் தச்சு வேலை செய்து வந்தான். அவன் யாருக்குமே எந்தத் தொந்தரவும் கொடுத்ததில்லை. எப்பொழுதுமே எவரும் அவனுக்கு துன்பம் கொடுக்க அனுமதித்ததில்லை. ஒரு நாள் காலை என்னைப் பார்க்க வந்திருந்த போது சொன்னான், “வாஸ்தவமாக இந்நேரத்திற்கு காசில்டா என்னை விட்டுப் போய் விட்டாள் என்பது உனக்குத் தெரிந்திருக்கும். ரூஃபினோ அகுவேரா என்னிடமிருந்து அவளைக் கொண்டு போய் விட்டான்.”

அந்த வாடிக்கையாளரை மோரோன் சுற்றுப்புறங்களில் நான் அறிந்திருந்தேன். நான் பதில் அளித்தேன். “ஆமாம். அவனைப் பற்றி சகலமும் எனக்குத் தெரியும். அகுவேரா குடும்பத்திலேயே சற்று சுமாராக அழுகிப்போனவன்.” என்று பதில் சொன்னேன்.

“அழுகிப்போனவனோ இல்லையோ அவன் இப்போது என்னை எதிர் கொண்டாக வேண்டும்.”

அதைப் பற்றி சிறிது நேரம் யோசித்த பின் அவனுக்குச் சொன்னேன். “யாரும் எதையும் எவரிடமிருந்தும் எடுத்துக் கொண்டு விடுவதில்லை. காசில்டா உன்னை விட்டுப் போய் விட்டாள் என்றால் அவள் ரூஃபினோ பற்றி அதிகம் அக்கறை கொண்டிருக்கிறாள் என்றும் நீ அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல என்றும் அர்த்தம்.”

“ஜனங்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? நான் ஒரு கோழை என்று தானே?”

“ஜனங்கள் என்ன சொல்லுவார்கள் என்ற வம்புப் பேச்சில் உன்னைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே. உனக்குப் பிரயோஜனமில்லாத ஒரு பெண்ணைப் பற்றிய விஷயத்தில் ஈடுபடாதே என்பதுதான் என் அறிவுரை.”

அவர் சொன்னார்.“அவளைப் பற்றியல்ல நான் கவலைப் படுவது. ஒரு பெண்ணைப் பற்றி தொடர்ச்சியாக ஐந்து நிமிடம் சிந்திக்கிற ஆண் ஒரு ஆண் இல்லை. அவன் விநோதமானவன். காசில்டாவுக்கு இதயமே இல்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த இரவு எனக்கு முன்பிருந்த வாலிபம் இப்பொழுது இல்லை என்று என்னிடம் சொன்னாள்.”

“ஒரு வேளை உண்மையை உன்னிடம் அவள் சொல்லி இருக்கலாம்.”

“அதுதான் என்னை வருத்துகிறது. இப்பொழுது என் பிரச்சனை எல்லாம் ரூஃபினோதான்.”

“அங்கேதான் நீ மிகக் கவனமாக இருக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் மெர்லோவில் அவன் எப்படி இயங்கினான் என்பதை நான் பார்த்திருக்கிறேன். கத்தி வீசுவதில் மின்னல் அவன்.”

“அவனைக் கண்டு நான் பயப்படுகிறேன் என்றா நினைக்கிறாய்?”

“நீ அவனைக் கண்டு பயப்படவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இதுபற்றி இன்னும் நிதானமாக யோசனை செய். நீ அவனைக் கொன்றால் சிறைக்குப் போவாய். அவன் உன்னைக் கொன்றால் ஆறடி மண்ணுக்குள் புதையுண்டு போவாய். இரண்டில் ஒன்றுதான் எப்படியும் நடக்கும்.யோசித்துப் பார்.”

“அப்படியும் இருக்கலாம்.என் நிலைமையில் நீ இருந்தால் என்ன செய்வாய்?”

“எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் வாழ்க்கையே ஒரு கச்சிதமான முன்மாதிரி இல்லை. ஜெயில் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள கட்சியின் பலசாலியாக மாறிய ஒருவன்தான் நான்.”

“நான் எந்தக் கட்சிக்கும் பலசாலியாக இருக்கப் போவதில்லை. நான் பழைய கணக்கைத் தீர்க்கப் புறப்பட்டிருக்கிறேன்.”

“ஆக , உன் அமைதியையும் நிம்மதியையும் உனக்குத் தெரியாத ஒரு மனிதனுக்காகவும், உன்னை இனிமேலும் விரும்பாத ஒரு பெண்ணுக்காகவும் பணயம் வைக்கப் போகிறாய்?”

என் பேச்சை அவன் கேட்டுக் கொள்ளவில்லை. வார்த்தையின்றிக் கிளம்பிப் போய் விட்டான். மோரோனின் ஒரு மதுபானக் கடையில் ரூஃபினோவிடம் அவன் சவால் விட்டான் என்றும் ரூஃபினோ அவனைக் கொன்றான் என்றும் அடுத்த நாள் எனக்குச் செய்தி கிடைத்தது. அவன் கொல்வதற்காகக் கிளம்பினான். கொல்லப்பட்டா.-ஆனால் அது ஒரு நேர்மையான சண்டை. ஒண்டிக்கு ஒண்டி. ஒரு நண்பன் என்கிற முறையில் என் நேர்மையான அறிவுரையைக் கூறியிருந்தேன். ஆனாலும் குற்றவுணர்வு எனக்கு இருக்கத்தான் செய்தது.

அந்தச் சாவுக்கு சில நாட்களுக்குப் பிறகு ஒரு கோழிச்சண்டை பார்க்கப் போயிருந்தேன். கோழிச்சண்டை எனக்கு எப்போதுமே பிரமாதமானதாக இருந்ததில்லை. உண்மையைச் சொல்வதென்றால் அந்த ஞாயிற்றுக் கிழமை அதை நான் கஷ்டப்பட்டுப் பார்க்க வேண்டியதாயிற்று. “இந்தப் பறவைகளுக்குள் அப்படி என்ன இருக்கிறது ? ஒன்றின் கண்களை ஒன்று பிடுங்கிப் போடச் செய்யும் அளவிற்கு” என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

என் கதையின் இரவு அல்லது என் கதை முடிவின் இரவன்று பிளாக்கியின் வீட்டிற்கு நடனத்தில் கலந்து கொள்ள வருவேன் என்று என் உதவியாளர்களிடம் சொல்லி இருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்திருந்தாலும் என் காதலி அணிந்திருந்த பூப்போட்ட உடை இன்னும் நினைவுக்கு வருகிறது. விருந்து புறக்கடையின் திறந்த வெளியில் நடந்தது. வாஸ்தவமாக, குடித்து விட்டு ஊரைக் கூட்டி சப்தமிடும் ஒன்றிரண்டு குடியர்கள் அதில் இருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சிகள் சீராக நடக்கும்படி நான் பார்த்துக் கொண்டேன். அந்த அந்நியர்கள் அங்கே பிரவேசித்தபோது இன்னும் பன்னிரெண்டு மணி ஆகி இருக்கவில்லை. அவர்களில் ஒருவன் -புட்ச்சர் என்று அழைக்கப்பட்டவன்- அன்றிரவே முதுகில் குத்துப்பட்டு இறந்து போனவன்-எங்கள் எல்லோருக்கும் மது வாங்கித் தந்தான். விநோதமான விஷயம் என்னவென்றால் நாங்கள் இருவரும் நிறைய அம்சங்களில் ஒரே மாதிரி இருந்தோம். காற்றில் ஏதோ மணத்துக் கொண்டிருந்தது. என் அருகில் வந்தவன் என்னை முற்றிலுமாய்ப் புகழ்ந்தான். அவன் வடக்குப்óபிரதேசத்திலிருந்து வந்தவன் என்றும் அங்கே என்னைப் பற்றி ஓரிரு விஷயங்கள் கேள்விப்பட்டதாகவும் சொன்னான். அவனைப் பேச விட்டு அவனை எடை போட்டுக் கொண்டிருந்தேன். அவன் தொடர்ந்து ஜின் குடித்துக் கொண்டே இருந்தான். ஒரு வேளை தைரியத்தை வரவழைக்க வேண்டி இருந்திருக்கலாம். கடைசியில் என்னை சண்டைக்குக் கூப்பிட்டான். அப்புறம் ஏதோ ஒன்று நடந்தது. அது எவருக்கும் என்றுமே புரியவில்லை. வீராப்பு பேசும் அந்த மனிதனில் நான் என்னையே கண்டேன். ஒரு கண்ணாடியில் பார்ப்பதைப் போல. அது என்னை அவமான உணர்வு கொள்ள வைத்தது. நான் பயப்படவில்லை. ஒரு வேளை நான் பயப்பட்டிருந்தால் அவனுடன் சண்டையிட்டிருப்பேன். அங்கே ஏதும் நடக்காதது போலவே நான் நின்றிருந்தேன். அவன் முகம் சில அங்குலங்களே என் முகத்திலிருந்து தள்ளி இருந்தது. அவன் எல்லோரும் கேட்கும்படி கத்தினான். “கஷ்டம் என்னவென்றால் நீ ஒரு கோழை. வேறொன்றுமேயில்லை”

“இருக்கலாம்.” என்றேன் நான். “நான் ஒரு கோழை என்று கருதப்படுவதற்காகப் பயப்படவில்லை. அது உனக்கு மகிழ்ச்சி அளித்தால், நீ என்னை ஒரு வேசியின் மகன் என்று கூப்பிட்டாய் என்றும், என் மீது காறித் துப்ப நான் அனுமதித்தேன் என்றும் கட சொல்லிக் கொள். இப்பொழுது உனக்கு முன்பை விட சந்தோஷமாக இருக்கிறதா?”

லா லூஜனேரா நான் எப்போதும் உள்ளாடையில் மறைத்து எடுத்துச் செல்லும் கத்தியை எடுத்து என் கையில் திணித்தாள். அவள் உள்ளே கனன்று கொண்டிருந்தாள் : “ரோசென்டோ உனக்கு இது தேவைப்படப் போகிறது என்று நினைக்கிறேன்.” அழுத்தமாகக் கூறினாள்.

கத்தியைக் கீழே நழுவ விட்டு வெளியில் நடந்தேன், ஆனால் அவசரப்படாமல் நிதானமாக வெளியேறினேன். என் உதவியாளர்கள் எனக்கு வழி விட்டார்கள். அவர்கள் ஸ்தம்பித்துப் போயிருந்தார்கள். அவர்கள் என்ன நினைத்தார்கள் என்பது பற்றி எனக்கென்ன?

அதிலிருந்து ஒரு புத்தம் புதிய வாழ்க்கையைத் தொடங்க, உருகுவேயிற்குச் சென்றேன். அங்கே மாடுகள் மேய்க்கும் தொழிலாளியானேன். போனஸ் அயர்சுக்குத் திரும்பி வந்து இந்தப் பகுதியில் தங்கி விட்டேன். சேன் டெல்மோ என்றுமே ஒரு கௌரவமான பகுதியாக இருந்து வந்திருக்கிறது.

Translated by Normon Thomas Di Giovanni [From The Aleph and Other Stories 1933-1969]


மான்க் ஈஸ்ட்மேன்,

அநீதிகளை விநியோகிப்பவன்


ஜோர்ஜ் லூயி போர்ஹே


இந்த அமெரிக்காவின் அவர்கள்

நீலநிறச்சுவர்கள் அல்லது திறந்த வானம்ஆகிய இவற்றின் பின்னணியிலிருந்து துல்லியமாகத் மாறுபட்டுத் தெரியும்படி சாத்வீகமான கறுப்பு நிறத்தில் பிடிப்பான உடையணிந்து, குதிகால் உயர்ந்த காலணிகளைப் போட்டுக் கொண்டு இரண்டு அடியாட்கள் பொருத்தமான கத்திகளின் அபாயகரமான பாலே நடனத்தினை, அவர்களில் ஒருவரின் கத்தி அதன் அடையாளத்தை மற்றவனின் மீது கீறி, காதிலிருந்து சிவப்பு கார்னேஷன் மலர் விரிவது போல் குருதி வரும் வரை ஆடுகின்றனர். தன்னில் குருதிப் பூ விரியப் பெற்றவன் இந்தப் பின்னணி இசையில்லாத நடனத்தை தன் மரணத்தின் மூலமாக நிலத்தின் மீது முடிவுக்குக் கொண்டு வருகிறான். சந்தோஷத்துடன், மற்றவன் தனது உயரமான தலை உச்சி கொண்ட தொப்பியைச் சரி செய்து கொண்டு, அவனது கடைசி வருடங்களை இந்த இருவருக்கான இந்த திருத்தமான சண்டையைப் பற்றித் திரும்பத் திரும்ப சொல்வதில் தனது இறுதி வருடங்களைக் கழிக்கிறான். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதுதான் நமது பழைய கால அர்ஜன்டீனிய தலைமறைவு உலகத்தின் சாராம்சம். நியூயார்க்கின் பழைய தலைமறைவு உலகானது இன்னும் கூடுதலாகத் தலை சுற்றச் செய்யும் என்பதோடு இழிவுத்தன்மை கூடியதாகவும் இருக்கும்.

மற்றதின் அவர்கள்

நியூயார்க் நகரின் அடியாள் குழுக்களின் வரலாறு (ஹெர்பர்ட் ஆஸ்பரி என்பவரால் ஒன்றுக்கு எட்டு அளவில் நானூறு பக்கங்களைக் கொண்ட கனமான தொகுதியாக 1928 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் வெளிக் கொணரப்பட்டிருப்பது) இயலுலகத் தோற்றகால காட்டுமிராண்டிப் பிறப்புகளிடம் குடிகொண்டிருந்த குழப்பங்களையும், குரூரங்களையும், அவர்களுடைய பிரம்மாண்ட அளவிலான கையாலாகாத்தனங்களின் பெரும்பகுதியையும் உள்ளடக்கிறது-நீக்ரோ சேரிகளில் தேன்கூட்டுப் பொந்துகளாக சாராயம் வடிக்கும் பழைய நிலவறைகள்; மூன்று அடுக்குகள் கொண்ட பழைய உளுத்துப் போன நியூயார்க்; சாக்கடையின் சுழல்வழிகளில் ரகசிய சந்திப்புகளை நடத்திய ஸ்வாம்ப் ஏஞ்சல்ஸ் என்ற குற்றக் குழுக்கள்; Day Break Boys போன்ற பத்துப் பன்னிரண்டு வயதாகாத சிறு வயது கொலைகாரர்களை வேலைக்கு அமர்த்திய குற்றக் குழுக்கள்; Plug Uglies போன்ற ராட்சஷத்தனமான, துணிவான தனிமையாளர்கள்; அவர்கள் மாபெரும் விறைப்பான தொப்பிகள். கம்பளி நூலால் திணிக்கப்பட்டிருக்க அவற்றை, காதுகளை மூடும்படியாக தலைக்கவசம் அணிந்திருப்பவர்களைப் போல அவர்கள் அணிந்திருப்பார்கள். பொவரி காற்றில் கால்சட்டைகளுக்கு வெளியே தொங்க விடப்பட்டிருக்கும் சட்டையின் பின் முனைகள் படபடக்கும் வண்ணமிருந்த அவர்கள் தோற்றம் அவர்களைக் கடந்து சென்றவர்களின் எல்லாந் தெரிந்த புன்னகையைச் பம்பாதித்துக் கொடுத்தது. ஆனால் அவர்களின் ஒரு கையில் கதாயுதம் போல ஒன்றிருக்கும். பாக்கெட்டிலிருந்து துப்பாக்கி துருத்திக் கொண்டிருக்கும். டெட் ரேபிட்ஸ் போன்ற குற்றக் குழுக்கள் ஒரு ஈட்டியின் மீது செருகப்பட்ட செத்த எலியின் சின்னத்துடன் சண்டைக்குப் போவார்கள்; போன்றவர்கள் தலை முடியின் முன்கற்றையைச் சுருட்டி, எண்ணெய் தடவி நெற்றியில் ஒட்ட வைத்திருந்த பிரத்யேக சிகையலங்காரத்திற்கும் குரங்கை ஒத்த வடிவத்தில் செதுக்கப்பட்டிருந்த கைப்பிடி கொண்ட கைத்தடிக்கும், எதிரியின் கண்களைத் தோண்டியெடுக்க வேண்டி அவன் கண்டு பிடித்துப் பயன்படுத்தி வந்த கட்டை விரல் மீதான அந்தத் தாமிரப் பொறியமைப்பிற்கும் பெயர் பெற்ற ஷோக்குப் பேர்வழி டேன்டி ஜானி டோலான்; இருபத்தைந்து சென்ட் அமெரிக்கப் பணத்திற்காக கிட் பர்ன்ஸ் போன்றவர்கள் உயிருள்ள எலியின் தலையை ஒரே கடியில் கடித்துத் துண்டாக்கக் கூடியவர்கள்; மூன்று பெண்களுக்காகத் தரகன் வேலை பார்த்த ப்ளைன்ட் டேனி லியான்ஸ், இளமையாக, வெள்ளைத் தோலுடன், தங்க நிற முடியுடன், பிரம்மாண்டமான குருட்டுக் கண்களுடன் இருந்தான். அந்த மூன்று பெண்களும் பெருமையோடு வீதி உலா வந்தார்கள். நியூ இங்கிலாந்தில் இருந்த சிறிய கிராமத்தில் வசித்த, கிறிஸ்துமஸ் தினத்தின் முந்தைய நாளின் வியாபாரப் பணத்தை தர்மத்திற்காகக் கொடுத்த ஏழு சகோதரிகளின் வீட்டினில் எரிந்ததைப் போல இவர்களின் வீடுகள் வரிசையாக, ஜன்னல்களில் சிவப்பு லாந்தர்கள் எரிந்த வண்ணம் இருந்தன. அங்கே எலிக்குழிகளில் துறைமுகக் கிடங்கு எலிகள் பட்டினி போடப்பட்டு டெர்ரியர் காவல் நாய்களுக்கு எதிராகத் திருப்பி விடப்படும்; சீன சூதாட்ட விடுதிகள்; கோஃபர் குற்றக் குழுவின் அனைத்து அங்கத்தினர்களின் ஆசைநாயகியாக விளங்கிய, திரும்பத்திரும்ப விதவையாகிய சிவப்பு நோரா போன்ற பகட்டுப் பெண்கள். டேனி லியான்ஸ் கொலைக் குற்றத்திற்காக மரணதண்டனை அடைந்தபோது துக்கம் அனுஷ்டித்தவளும், இறந்து போன குருட்டு மனிதனுக்காகத் தம்மில் யாருடைய சோகம்மும் இழப்பும் அதிகம் என்ற வா
க்குவாதத்தின் ஒரு கட்டத்தில் ஜென்ட்டில் மேகி என்பவளால் குரல்வளையில் கத்திக் குத்துப்பட்டவளுமான
லிஸ்ஸி த டவ் போன்றவர்கள்; 1863 இல் நடந்தேறிய, நூற்றுக் கணக்கான கட்டிடங்கள் நெருப்புக்கு இரையாகி, மண்ணோடு மண்ணாக்கப்பட்டு, நகரமே ஏறத்தாழ கைப்பற்றப்பட்டு விட்ட திட்ட வரையறைக் கலவரங்களின் கொடூர வாரம் போன்ற மக்கள் கிளர்ச்சிகள்; கடலில் மூழ்குவது போல் மனித வெள்ளத்தில் சிக்கி ஒரு மனிதன் மிதிபட்டுச் செத்து மடிந்த கணக்கற்ற தெருச்சண்டைகள்; யோஸ்கே நிக்கர் போன்ற திருடனும், குதிரைகளுக்கு விஷம் வைப்பவனுமான ஒருவன்; இவை அனைத்தும் நியூயார்க் நகரின் இருண்ட உலகத்தின் பெருங்குழப்பமான வரலாற்றின் ஊடும்பாவுமான விஷயங்கள். இதன் மிகப் பிரபலமான நாயகன், ஆயிரத்து இருநூறு அடியாட்களின் எஜமானனான எட்வர்ட் டிலானே, என்கிற வில்லியம் டிலானே, என்கிற ஜோசப் மார்வின் என்கிற ஜோசப் மாரிஸ் என்கிற மான்க் ஈஸ்ட்மேன்.

நாயகன்

அடையாளம் குறித்த இந்த மாறுதல்கள் (யார் யார் என்று எவருக்கும் உறுதியாகச் சொல்ல முடியாத ஒரு மாறுவேட நிகழ்ச்சி அளவுக்கு அலைகக்கழிப்பானது) அவனுடைய நிஜப்பெயரை — அப்படி ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொண்டால்–விட்டுவிடுகின்றன. பதிவு செய்யப்பட்ட தகவல்களின்படி புரூக்ளின் நகரின் வில்லியம்ஸ்பர்க் பிரிவில் எட்வர்ட் ஓஸ்டர்மேன் என்ற பெயரில் பிறந்தான். பிறகு இந்தப் பெயர் ஈஸ்ட்மேன் என்று அமெரிக்கமயமாக்கப்பட்டது. விநோதமான வகையில் இந்த களேபரமான தலைமறைவுப் பாத்திரம் ஒரு யூதனாக இருந்தான். யூதர் உணவு விடுதி உரிமையாளர் ஒருவரின் மகன் அவன். அந்த விடுதியில் யூதப் பாதிரி போல தாடி வளர்த்தவர்கள் ஆபத்தின்றி, சடங்குடன் கொல்லப்பட்டு, மூன்று முறை சுத்தம் செய்யப்பட்ட, கன்றுக்குட்டி இறைச்சியைச் சாப்பிடலாம். ஏறத்தாழ 1892 ஆம் வருட சமயத்தில் அவனுக்குப் பத்தொன்பது வயதாகும் போது, அவன் தந்தை ஒரு பறவை விற்பனை நிலையத்தை அமைத்துக் கொடுத்து, வியாபாரத்தில் அறிமுகம் செய்தார். அவனுக்கு விலங்குகளின் மீது தீராத ஆர்வம் இருந்தது. அவற்றின் துருவி ஆராய முடியாத சூதின்மையிலும்,சிறிய தீர்மானங்களிலும் அவனுக்கு இருந்த ஈடுபாடு வாழ்க்கையின் இறுதி வரைக்குமான பொழுது போக்காக மாறிற்று. பல வருடங்களுக்குப் பிறகு, செழிப்பின் அபரிமித காலத்தில், பழுப்புப் புள்ளிகள் நிறைந்த முகங்கள் கொண்ட டேம்மனி தலைவர்கள் தந்த ஹவானா சுருட்டுகளை வெறுப்புடன் மறுத்தபோதும், அல்லது மிகச்சிறந்த விபச்சார விடுதிகளுக்கு, புதிய கண்டுபிடிப்பான காரில் (ஒரு கோன்டொலா கப்பலின் திருட்டுக் குழந்தை போலத் தோன்றியது) செல்லும் போதும் அவன் இரண்டாவது தொழிலைத் தொடங்கினான். ஒரு முகப்பு, அதில் நூறு பூனைகளும், நாநூறுக்கும் மேற்பட்ட புறாக்களும் வசிக்க முடிந்தது–ஆனால் இதில் எதுவும் எவருக்கும் விற்பனைக்காக அல்ல. அவை ஒவ்வொன்றையும் அவன் நேசித்தான்–அக்கம்பக்கத்து இடங்களுக்குச் செல்லும் போது ஒரு கையிடுக்கில் ஒரு சந்தோஷமான பூனையுடன் செல்வான். வேறு நிறைய பூனைகள் அவனுக்குப் பின்னால் எதிர்பார்ப்புடன் ஓடிவரும்.

அவன் ஒரு சிதைவுற்ற, பிரம்மாண்ட மனிதன். அவனுடையது குட்டையான மாட்டுக் கழுத்து. மிக அகலமான மார்பு. ஒரு உடைந்த மூக்கு. கரடுமுரடான கரங்கள். அதிகபட்சமான வடுக்கள் நிறைந்திருந்தாலும் அவனது முகம், அவனுடைய உடல் அளவுக்குக் குறிப்பிடும்படியானதல்ல. மாட்டுக்காரனுடையதைப் போலவோ,அன்றி மாலுமியினுடையதைப் போலவோ அவன் கால்கள் வளைந்திருந்தன. வழக்கமான சட்டையோ கோட்டோ போட்டுக் கொள்ளாமல் அவனைப் பார்க்கலாம். ஆனால் துப்பாக்கி ரவை மாதிரி வடிவமைப்பு கொண்ட தலையின் மீது, அவன் தலைக்கு பல தடவைகள் சிறியதான டெர்பி தொப்பி எப்பொழுதும் உட்கார்ந்திருப்பதைக் காண முடியும். மானுடம் அவனது ஞாபகத்ததைப் பாதுகாத்து வைத்தது. உடல் அளவில், சம்பிர தாயமான திரைப்பட துப்பாக்கிச் சண்டைக்காரன், ஈஸ்ட்மேனின் பிரதியே ஆவான். கட்டையாகவும் குட்டையாகவும் அலித்தன்மை மிகுந்தும் இருந்த கேபோன் என்பவனைப் போன்றல்ல. ஹாலிவுட் சினிமாக்காரர்கள், லூயி வோல்ஹேம் என்ற நடிகரை பயன்படுத்திக் கொண்டதற்குக் காரணம், வோல்ஹேமின் சாயல்கள்,இறந்து போன மான்க் ஈஸ்ட்மேனு டையதைப் போல இருந்ததுதான். தன் உடலின் பின்பகுதியின் மீது அமர்ந்திருக்கும் பறவை யுடன் திரியும் காளைமாட்டினைப் போல, அவனுடைய தலைமறைவு ராஜ்ஜியத்தில், பெரிய நீலநிறப் புறா அவன் தோள் மீது அமர்ந்திருக்க கம்பீரமாக ஈஸ்ட்மேன் நடந்து செல்வது வழக்கம்.

தொண்ணூறுகளின் மத்தியில், நியூயார்க்கில் பொது நடன விடுதிகள் வதவதவென்று நிறைய இருந்தன. அவற்றில் ஒன்றில் ஈஸ்ட்மேன் அடியாளாக வேலை பார்த்தான். ஒரு முறை நடன விடுதியொன்றின் மேலாளர் அவனை வேலைக்கு வைத்துக் கொள்ள மறுத்து விட்டது பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. ஈஸ்ட்மேன், உடனே, தன் வேலை செய்யும் திறனை செயல்முறைப் படுத்திக் காட்டுவதற்கு, அவனுக்கும் அவன் வேலைக்கும் குறுக்காக நின்ற இரண்டு அசுரத்தனமான ஆட்களை வைத்துத் தரை மெழுகினானாம். ஒற்றை ஆளாக, சகலராலும் அஞ்சப்பட்டு, 1899ஆம் ஆண்டு வரை இந்த வேலையில் அவன் இருந்தான். தகராறு செய்த ஒவ்வொருவனையும் அடக்கியபோது அவனது உருட்டுக்கட்டை போன்ற ஆயுதத்தில் ஒரு அடையாளத்தைச் செதுக்கிக் கொண்டான். ஓர் இரவு, தன் காரியத்தை மட்டும் கவனித்துக் கொண்டு யாருக்கும் இடைஞ்சல் செய்யாத, அடர்ந்த நிற பியரைக் குடித்துக் கொண்டிருந்த சொட்டைத்தலையன் ஒருவரைக் கண்ணுற்று, அந்த ஆளை ஒரே அடியில் காலி செய்து விட்டான். “என் அடையாளக் கோடுகளின் எண்ணிக்கை ஐம்பதாக இன்னும் ஒரு கோடு தேவைப்பட்டது”. என்று பிறகு அதற்கு விளக்கம் தந்தான்.

ஆதிக்க எல்லை

1899ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்ட்மேன் பிரபலமாக மட்டும் இருக்கவில்லை. தேர்தல்களின் போது ஒரு முக்கியமான தேர்தல் தொகுதி ஒன்றின் குழுத்தலைவனாகவும் இருந்தான். விபச்சார விடுதிகளில் இருந்தும், சூதாட்ட விடுதிகளில் இருந்தும், தெரு விபச்சாரிகளிடமிருந்தும், ஜேப்படித் திருடர்களிடமிருந்தும், அவனது ராஜ்ஜியத்தின் வீடுகள் உடைத்து கொள்ளை அடிப்பவர்களிட மிருந்தும் பாதுகாப்பு பணம் வசூலித்தான். டேம்மனி அரசியல்வாதிகள், அவனை கலவரம் உண்டு பண்ணுவதற்காக வேலைக்கு அமர்த்தினார்கள். இதே போலத்தான் தனியாரும். கீழ்க்கண்டவாறு அவனது விலைப்பட்டியல் இருந்தது:

காது வெட்டப்படுவதற்கு 15 டாலர்கள்

கையையோ காலையோ உடைப்பதற்கு 19 டாலர்கள்.

காலில் துப்பாக்கியால் சுடுவதற்கு 25 டாலர்கள்

கத்திக் குத்துக்கு 25 டாலர்கள்

பெரிய தொழிலை முடிப்பதற்கும்,

அதற்கு மேலும் 100 டாலர்களும்

சில சமயங்களில், தன் பங்கு இருக்க வேண்டுமென்று, ஈஸ்ட்மேன் தானே நேரடியாக வேலையை செய்து முடித்தான். எல்லைகள் குறித்த பிரச்சனை(சர்வதேச சட்டத்தின் குற்றப்பதிவு விதிமுறைகளின் நுண்மை, துல்லியம் அளவுக்கும் அளவுக்கு நுணுக்கமானவை, நெருடலானவை) பிரபலமாக இருந்த மற்றொரு குழுவின் தலைவனான பால் கெல்லியுடன் ஈஸ்ட்மேனை மோத வைத்தது. துப்பாக்கி குண்டுகளும்,எந்த ஒழுங்கினையும் அனுசரிக்காத சண்டைகளும், குறிப்பிட்ட பிரதேச எல்லைகளை நிறுவியிருந்தன. ஒரு நாள் காலை நேரத்தில், இந்த எல்லையை ஈஸ்ட்மேன் தன்னந் தனியனாக மீறத் துணிந்த போது, கெல்லியின் ஐந்து ஆட்களால் தாக்கப்பட்டான். தான்யம் அடிக்கும் கோல்களைப் போலிருந்த, மனிதக் குரங்கினுடையதைப் போன்ற அவனது கைகளைக் கொண்டும் கருப்புக் குண்டாந்தடியைக் கொண்டும், ஈஸ்ட்மேன், அவனைத் தாக்கிய மூன்று பேரை வீழ்த்தி விட்டான். ஆனால் இறுதியாக இரண்டு தடவை வயிற்றில் சுடப்பட்டு, இறந்து போனதாகக் கருதப்பட்டு விட்டுச் செல்லப்பட்டான். கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் வைத்து அவனுடைய குருதி பெருகும் காயங்களை ‘அடைத்து மூடியபடி, தடுமாறி கவ்வூனர் மருத்துவ விடுதிக்குச் சென்றான். அங்கே பயங்கரமான காய்ச்சல் உருவில் உயிரும், மரணமும் அவனை அடைய போட்டி போட்டுக் கொண்டிருந்த பல வாரங்களில், அவன் தன்னைக் கொல்லப் பார்த்த நபரின் பெயரைச் சொல்லத் திட்டவட்டமாக மறுத்துவிட்டான். மருத்துவ மனையை விட்டு வெளியில் வந்த போது, போர் தொடங்கி விட்டிருந்தது. 1903ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தொன்பதாம் தேதி வரை ஒரு துப்பாக்கி மோதல் அடுத்து இன்னொரு துப்பாக்கி மோதலாக தொடர்ந்து கொண்டிருந்தது.

ரிவிங்டன் தெரு போர்

போலீஸ் நிலையத்தின் கோப்புகளில் வெளிறிப் போய்க் கொண்டிருந்த புகைப்படங்களை விட சற்றே வித்தியாசமாக இருந்த ஒரு நூறு நாயகர்கள்; சாராய வாடையும் புகையிலை நாற்றமும் வீசும் நூறு நாயகர்கள்; வைக்கோல் தாள்களால் முடையப்பட்ட தொப்பிகளில் பளபளப்பான நிறங்களில் பட்டிகள் அணிந்தபடி நூறு நாயகர்கள்; சிலருக்குக் கூடுதலாகவும் சிலருக்குக் குறைவாகவும் சிறுநீரகக் கோளாறுகளும், சொத்தைப் பல்லும், அவமானப் பட வேண்டிய நோய்களும், சுவாசப்பை கோளாறுகளும் இருந்த ஒரு நூறு நாயகர்கள்; ட்ராய் நகரத்துப் போர், அல்லது அமெரிக்க விடுதலையின் புல்ரன் போரில் பங்கேற்றுக் கொண்டவர்களைப் போல முக்கியத்துவமற்ற அல்லது அற்புதமான ஒரு நூறு நாயகர்கள்; இந்த நூறுபேரும் தமது இருண்ட ஆயதப் போரினை உயரமான இரண்டாம் அவென்யூவின் மேல் வளைவுகளின் நிழலிலிருந்து வெளிப்படுத்தினார்கள். ரிவிங்டன் தெருவில் ஈஸ்ட்மேனிக் நண்பன் ஒருவன் நடத்தி வந்த சூதாட்டத்தின் மீது கெல்லியின் துப்பாக்கி வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்ற விஷயம்தான் காரணம். துப்பாக்கி வீரர்களில் ஒருவன் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்த சரமாரியான துப்பாக்கி சூடுகள் பெரிதாகி, எண்ணிக்கையற்ற கைத்துப்பாக்கிகளின் போராக மாறிற்று. உயரமாக அமைக்கப்பட்ட கட்டிட அமைப்புகளின் பாதுகாப்பில் இருந்தபடி, சுத்தமாக முகச் சவரம் செய்து கொண்டிருந்த மனிதர்கள் ஒருவரை நோக்கி மற்றவர்கள் சுட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி பிரமிக்க வைக்கும் வட்டத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த கார்கள். எதிர்பார்ப்பு மிக்க கூடுதல் ஆட்களும், ஆயுதங்களும் நிறம்பக் காத்திருந்தன.

இந்தப் போரின் பிரதான பாத்திரங்கள், போர் பற்றி என்ன நினைத்தார்கள்? ஒரு நூறு ரிவால்வார்களின் அர்த்தமற்ற இரைச்சல்கள் அவர்களை எந்த நிமிடமும் சாய்த்து விடப் போகிறது என்ற முரட்டுத்தனமான தீர்மானம் வைத்திருந்தார்கள்(என்று நம்புகிறேன்). இரண்டாவது, முதலாவதாகச் சுடப்படும் குண்டுகள் தம்மைத் தாக்கவில்லை என்றால் பின் தாங்கள் அசைக்க முடியாதவர்கள் என்ற முதலாவதற்கு எந்த வகையிலும் குறையாத அளவிலான தவறான உறுதிப்பாடும் அவர்களிடம் இருந்தது — (என்று நம்புகிறேன்).

எப்படியாயினும், சந்தேகத்திற்கிடமின்றி அவர்கள், பழிதீர்க்கும் உணர்வுடன், அந்த இரவு மற்றும் இரும்புத் தூண்களின் பாதுகாப்பில் சண்டையிட்டார்கள். இரண்டு தடவை போலீஸ் குறுக்கிட்டது, இரண்டு தடவையும் போலீசார் விரட்டியடிக்கப்பட்டார்கள். ஏதோ ஆபாசமானதென்பது போலவோ அல்லது பிசாசுத்தனமானது என்பது போலவோ விடியலின் முதல்óமினுங்கல் ஒளியில் போர் பிசுபிசுத்து விட்டது. பிரம்மாண்ட மேல்வளைவுகளின் அடியில் குற்றுயிராய்க் கிடந்த ஏழுபேரும், நான்கு பிணங்களும், ஒரு இறந்த புறாவும் மட்டுமே எஞ்சியிருந்தன.

பிளவுகள்

உள்ளூர் அரசியல்வாதிகளின் பின்னணியில் அவன் பணிணியாற்றிக் கொண்டிருந்தான். எனவே அவர்கள் அப்படிப்பட்ட குழுக்கள் இல்லவே இல்லை என்று பகிங்கரமாக மறுத்தார்கள். அல்லது அவை வெறும் விளையாட்டு மன்றங்கள் என்று சொன்னார்கள். ரிவிங்டன் தெருவின் இந்த விவஸ்தையற்ற போர் அவர்களுக்குப் பீதியூட்டியது. போர் நிறுத்தத்தின் அவசியம் பற்றி எடுத்துரைக்க, கெல்லிக்கும் ஈஸ்ட்மேனுக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்தார்கள். (போலீஸ் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு பல கோல்ட் ரிவால்வர்களை விட டேம்மனி ஹால்காரர்கள் கூடுதல் சக்திவாய்ந்தவர்கள் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு) கெல்லி உடனடியாக ஒப்புக் கொண்டான்.( ஈஸ்ட்மேன் தனது மாபெரும், காட்டுத்தனமாக பேருடம்பின் பெருமையில்)இன்னும் கூடுதலான துப்பாக்கிச் சண்டைக்கும் அமளிக்கும் தவித்துக் கொண்டிருந்தான். மேற்படி சந்திப்பை அவன் மறுக்கத் தொடங்கினான். அரசியல்வாதிகள் அவனை ஜெயிலில் போட்டு விடுவதாக மிரட்டினார்கள். கடைசியில், இரண்டு அடியாள் கூட்டத்தலைவர்களும் அவரவரின் ஆதரவாளவர்களின் கவனிப்புடன் சூழ்ந்தபடி, மாபெரும் சுருட்டுக்களை பல்லால் கடித்தபடி ஒரு கேவலமான சூதாட்ட விடுதியில் சந்தித்துக் கொண்டார்கள். அவர்களின் தகராறுகளை குத்துச் சண்டை மேடையில் முஷ்டிகளால் தீர்த்துக் கொள்வதென்று ஒரு கச்சிதமான அமெரிக்கத்தனமான முடிவை எட்டினார்கள். கெல்லி ஒரு அனுபவம் மிகுந்த குத்துச் சண்டை வீரனாக இருந்தான். பிரான்க்ஸ் பிரதேசத்தில் ஒரு தான்ய சேமிப்புக் கிடங்கில் நடைபெற்ற இந்தச் சண்டை வீணழிவு மிகுந்தது, ஊதாரித்தனமானது. நூற்றி நாற்பது பார்வையாளர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் துர்த்தனமாக டெர்பி தொப்பிகளை அணிந்திருந்த கலவரக்காரர்களும், தங்களின் பெரிய தலைமுடிகளில் ஒளித்து வைக்கப்பட்ட ஆயுதங்களையுடைய அவர்களின் ஆசைநாயகிகளும் இருந்தனர். இருவரும் சண்டையிட்டு, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சண்டை வெற்றி தோல்வி இன்றி முடிந்தது. ஒரு வாரம் முடியும் முன்னே துப்பாக்கிச் சண்டைகள் மீண்டும் தொடங்கின. மான்க் எத்தனையாவது தடவையாகவோ மீண்டும் கைது செய்யப்பட்டான். முழுமொத்தத் துல்லியத்துடன் நீதிபதி அவனுக்குப் பத்து வருட சிறைதண்டனை உண்டு என்று குறி சொன்னார்.

ஈஸ்ட்மேனுக்கு எதிராக ஜெர்மனி

இன்னும் இனம் புரியாத குழப்பத்தில் இருந்து விடுபடாமல் மான்க் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போது, அவன் குழுவில் இருந்த ஆயிரத்து இருநூறு அங்கத்தினர்களும் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்ளும் சிறு குழுக்களாக மாறியிருந்தார்கள். அவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இயலாததால், தனியாகவே செயல்படத் தொடங்கினான் மான்க். 1917ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி பொதுச்சாலையில் தகராறு செய்ததற்காகக் கைது செய்யப்பட்டான். அடுத்த நாள், இன்னும் கூடுதலான கலவரத்தில் பங்கேற்க முடிவு செய்து நியூயார்க் தேசீய பாதுகாப்பு அமைப்பின் 106வது தரைப்படைப் பிரிவில் ராணுவத்தில் சேர்ந்தான். சில மாதங்களிலேயே அவனது படைப் பிரிவினருடன் கப்பல் ஏற்றப்பட்டான்.

அவனுடைய ராணுவ நடவடிக்கைளின் பல வேறுபட்ட அம்சங்களைப் பற்றி நமக்குத் தெரியும். எதிரிகளைச் சிறைபிடிப்பதை பலவந்தமாக ஆட்சேபித்தான் என்பதும், ஒரு முறை தனது துப்பாக்கியின் அடிப்பக்கக் கட்டையைக் கொண்டு இந்த மாதிரியான கேவலமான செயல்பாட்டில் குறுக்கிட்டான் என்பதும் நமக்குத் தெரியும். குண்டடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்றாவது நாளில் யாருமறியாமல் அங்கிருந்து தப்பியோடி போர் நடக்கும் முன்னணி வரிசையில் மீண்டும் சேர்ந்து கொண்டான் என்பதையும் நாம் அறிவோம்.

மவுண்ட் ஃபௌகான் பிரதேசத்தைச் சுற்றி நடந்த போரில் தனித்தன்மையுடன் இயங்கினான் என்பதையும் அறிவோம். பின்னாளில், பொவரி பிரதேசத்தில் இருந்த குறிப்பிட்ட சிறிய நடன அரங்குகளை கட்டிக் காப்பது என்பது ஐரோப்பிய போர்களை விட மிகவும் கடினமானதென்ற கருத்தைக் கொண்டிருந்தான் என்பதையும் நாம் அறிவோம்.

1920 ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்தின் விடியல் நேரத்தில் மான்க் ஈஸ்ட்மேனின் உடல் நியூயார்க் நகரத்தின் கீழ்நகரத் தெருக்களில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஐந்து துப்பாக்கி குண்டுக் காயங்கள் இருந்தன. மகிழ்ச்சியாக, மரணம் பற்றிய பிரக்ஞையின்றி, குறுகல் தெருவின் பூனை ஒன்று, ஒரு வித குழப்பத்தோடு பிணத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.ழ்

Translated by Norman Thomas di Giovanni

ஜோர்ஜ் லூயி போர்ஹே என்ற கவிஞனின் உலகம்-The Poetry of Jorge Luis Borges

poetjlbஜோர்ஜ் லூயி போர்ஹே என்ற கவிஞனின் உலகம்

ஹோர்ஜ் லூயி போர்ஹே (1889–1986)வை புனைவுச் சிறுகதை எழுத்தாளர் என்றே பெரும்பான்மையோர் அறிவர். அவர் ஒரு கவிஞராக எழுத்து வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம். 1914ஆம் ஆண்டிலிருந்து 1920ஆம் ஆண்டு வரை போர்ஹே ஐரோப்பியாவில் படித்தார். முதல் உலகப்போரின் போது அவரது தந்தையின் கண் அறுவைச் சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு சென்ற அவர் குடும்பம், போர் முடியும்வரை அங்கே தங்க வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று. ஸ்பெயினில், குறிப்பாக மேட்ரிட் நகரில், அவர்கள் சிலகாலம் இருக்க வேண்டி வந்தது. போர்ஹே எழுதிய முதல் கதை ஒன்றினை மேட்ரிட் பத்திரிகை ஒன்று நிராகரித்தது. ஆனால் அவர் எழுதிய முதல் கவிதை பிரசுரம் கண்டது. பல வேறுபட்ட ஐரோப்பிய இலக்கியக் குழுக்களுடன் போர்ஹே தொடர்பு கொண்டிருந்தாலும் தன்னுடைய உத்வேகத்தை (கவிதையில்) அவர் கண்டுபிடித்துக் கொண்டது ஸ்பானிய யூதக்கவிஞரான ரஃபேல் கான்ஸினோஸ் அஸென்ஸ் என்வரைச் சந்தித்த பிறகுதான். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் கஃபே கலோனியல் என்ற காபி விடுதியில் அல்ட்ராயிஸ்டுகளின் சந்திப்புகள் நடைபெற்றன. அல்ட்ராயிஸ்டுகள், அமெரிக்க ஜாஸ் இசையை ரசிப்பவர்களாகவும் ஸ்பானியர்களாக இருப்பதை விடவும் ஐரோப்பியர்களாக இருப்பதையும் விரும்பினர். போர்ஹேவின் சர்தேச கலாச்சாரத்தன்மைக்கும் காஸ்மாபொலிட்டன் தன்மைக்கும் ஆன வித்து இந்தக் காலகட்டத்தில் ஊன்றப்பட்டுவிட்டது என்று உறுதியாகக் கூறலாம். 1921ஆம் ஆண்டு அர்ஜன்டீனாவுக்குத் திரும்பிய பொழுது அர்ஜன்டீனிய அல்ட்ராயிஸத்தின் தந்தை என்றுதான் போர்ஹே அழைக்கப்பட்டார். தொடர்ந்து இந்த இயக்கத்தின் பாணியில் போர்ஹேவால் கவிதைகள் எழுத முடியாமல் போனதால் அல்ட்ராயிஸத்தைக் கைவிட்டு வேறுமாதிரிக் கவிதைகளை எழுதத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில் அவருடைய தந்தையின் நண்பரான மேசிடோனியோ ஃபெர்னான்டஸ் என்பவரின் பாதிப்புக்கு உள்ளானார் போர்ஹே. மேசிடோனியோ ஒரு கவிஞர். எந்த ஒரு விஷயத்தையும் மேம்போக்காக நம்பிவிடாமல் கேள்விக்கு உட்படுத்தும் தன்மையை போர்ஹேவுக்குக் கற்றுக் கொடுத்தவர். எனினும் போர்ஹே தொடங்கிய முதல் இலக்கிய இதழான ப்ரிஸ்மா ஒரு அல்ட்ராயிஸ்ட் பத்திரிகையாகவே வெளிவந்தது. கவிதை என்கிற வடிவம் பற்றியும் கவிதை எழுதும் செயல்பாடு பற்றியும் கவிதையின் சமூகப்பங்கு பற்றியும் கவிதைத்தன்மைக்கும் உரைநடைத்தன்மைக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்தும் மிகத் தனித்துவமான கருத்துக்கள் போர்ஹேவுக்கு இருந்தன.

“ஒரு கவிஞனின் துறை,–எழுத்தாளனின் துறை–விநோதமான ஒன்று. செஸ்ட்டர்டன் குறிப்பிட்டார்: ஒரே ஒரு விஷயம்தான் தேவையாகிறது–சகலமும். ஒரு எழுத்தாளனுக்கு இந்த சகலமுமானது எல்லாவற்றையும் அரவணைக்கும் சொல்லை விடக் கூடுதல் அர்த்தம் கொண்டது. அது சொல்லுக்குச் சொல் நேரானது. அது பிரதானமான, அவசியமான மானுட அனுபவங்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு எழுத்தாளனுக்கு தனிமை தேவைப்படுகிறது, அவனுக்கு அவனது பங்கு கிடைக்கிறது. அவனுக்கு அன்பு தேவைப்படுகிறது–அவனுக்கு பகிரப்பட்டது அல்லது பகிர்மானமில்லாத ஒரு காதல் கிடைக்கிறது. அவனுக்கு நட்பு அவசிமாகிறது. வாஸ்தவமாக அவனுக்கு இந்தப் பிரபஞ்சமே தேவைப்படுகிறது. ஒரு எழுத்தாளனாக இருப்பதென்பது ஒரு பகல் கனவு காண்பவனாக இருப்பதாகும்– ஒருவிதமான இரட்டை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருத்தல் ஆகும்”.
(“Who needs Poets? New York Times, May 8, 1971)
மேற்குறிப்பிட்ட மேற்கோள் போர்ஹே அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையிலிருந்து எடுக்கப்பட்டது. போர்ஹே 1923ஆம் ஆண்டு Fervor de Buenos Aires என்ற முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டார். போனஸ் அயர்ஸ் நகரைப் பற்றிய புகழ்ச்சி உரைகள் கொண்டதல்ல இத்தொகுதி. அந்த நகரினைப் பற்றிய போர்ஹெவின் உணர்ச்சி ரீதியான பதிவுகளே அதில் கவிதைகளாக இடம் பெற்றிருந்தன. அவரது வாழ்நாளில் மொத்தம் 5 கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். வாசல் வழிகள், நிலைக்கண்ணாடிகள், ஃபைல்கள், அட்லஸ், நீர்பருகும் கண்ணாடித் தம்ளர்கள், ஜெர்மனி மொழி, ஆங்கிலோ சாக்ஸன் இலக்கணம், என்று அவரது கவிதைக்கான பொருள்கள் விரிந்து செல்கின்றன. இத்தாலிய நாவலாசிரியரும் கவிஞருமான பிரைமோ லெவி இந்த அளவுக்கு பரந்துபட்ட கவிப்பொருள்களை எடுத்து கவிதைகள் எழுதியிருக்கிறார். குறிப்பாக வரலாற்று நாயகர்களை கவிதைக்கான பொருளாக்குவதில் போர்ஹேவுக்கும் லெவிக்கும் சரிசமமான ஈடுபாடு இருந்திருக்கிறது. தத்துவவாதி ஸ்பினோசா பற்றி இரண்டு வேறுபட்ட கவிதைகளை போர்ஹே எழுதியிருக்கிறார். ஸ்பினோசாவை முழுமையாகப் புரிந்து கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் அவை. மேலும் ஸ்பினோசா மீது போர்ஹேவுக்கு இருந்த ஈடுபாட்டினை அவர் இரண்டு சிறுகதைகளில் இடம் பெறும் கதாபாத்திரங்களுக்கு வைத்திருக்கும் பெயரைக் கொண்டு நாம் அறியலாம். மரணமும் காம்பஸ் கருவியும் சிறுகதையில் ஒரு பாத்திரத்தின் பெயர் பாருக் ஸ்பினோசா. மாற்கு எழுதிய வேதாகமம் என்ற சிறுகதையில் வரும் இளைஞனின் பெயர் எஸ்பினோசா. பாருக் ஸ்பினோசா(1632–1677)டச்சு நாட்டு பொருள்முதல்வாத தத்துவ வாதியாவார். தெக்கார்த்தேவின் மாணவர். Ethics மற்றும் Tractatus-Theologico-politicus ஆகிய நூல்களின் ஆசிரியர். ஸ்பினோசா வின் சுதந்திரச் சிந்தனை காரணமாக ஆம்ஸ்டர்டாமின் யூதத்திருச்சபையிலிருந்து வெளியேற்றப் பட்டார். தத்துவத்தின் ஜியோமிதி முறைமைகளின் மூலவர் என்று அறியப்படுகிறார் ஸ்பினோசா. 1962இல் எழுதப்பட்ட ஸ்பினோசா, என்ற தலைப்பிலான கவிதை பதினான்குவரி சானெட் ஆகும். ஸ்பினோசா அவருடைய நம்பிக்கைகளைத் துறக்க மறுத்தார். வாழ்ந்த குறுகிய வாழ்க்கையில் தனது சிந்தனைச் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பியதால் பதவிகளையும், பரிசுகளையும் பென்ஷன்களையும் நிராகரித்து விட்டு லென்ஸ்களை பாலிஷ் செய்யும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் :

ஸ்பினோசா
அந்த யூதனின் ஊடுருவித் தெரியும் கைகள்
அரைகுறை வெளிச்சத்தில்
கிரிஸ்டல் லென்ஸூகளை பாலிஷ் செய்கின்றன.
பயமும் சில்லிடுதலும்தான் மங்குகிற அந்தியாகிறது.
அந்தி மங்கும் நேரங்கள் எல்லாம்
ஒன்று போலவே இருக்கின்றன.
யூதச் சேரிகளை நோக்கிச் செல்கையில் வெளிரும் ஹயாசிந்த் காற்றும்
இருப்பதாகவே தெரியவில்லை
இந்த மௌனமான மனிதனுக்கு.
அவன் ஒரு தெள்ளத் தெளிவான புதிர்ச் சிக்கலைக்
கனவு காண்கிறான்.
புகழ் அவனைத் தொந்தரவு செய்யவில்லை
அதுவோ கனவுகளின் பிரதிபலிப்பு
அதுவும் வேறு ஒரு நிலையாடியிலுள்ள கனவின் பிரதிபலிப்பு.
இளம்பெண்களின் பயமுறுத்தும் காதலினாலும்
அவன் இடைஞ்சலுறுவில்லை.
அவன் ஒரு கடினமாக கிரிஸ்டலை
பளபளப்பாக்கிக் கொண்டிருக்கிறான்.
அவனுடைய நட்ஷத்திரங்களாக ஒளிர்ந்திருக்கும்
ஒருவரின் எல்லையற்ற வரைபடத்தினை.
(Spinoza, The Other, 1964)

இந்தத் தன்மை கொண்ட மற்றொரு கவிதை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிஞரான ராபர்ட் ப்ரௌனிங் பற்றியது. Browning Resolves to be a Poet என்ற கவிதை The Dream Tigers தொகுதியில் இடம் பெறுகிறது. ஒரே மனிதன்தான் எல்லா மனிதனும் என்றும் ஷேக்ஸ்பியரின் ஒரு மேற்கோளைச் சொல்கிறவன் கூட ஷேக்ஸ்பியராகவே ஆகிவிடுகிறான் என்றும் போர்ஹே எழுதியிருக்கிறார் :

ப்ரௌனிங் ஒரு கவிஞனாக ஆவதற்குத் தீர்மானிக்கிறார்
இந்த லண்டன் நகரின் புதிர்ச் சுழல்வழிகளில்
மனிதத் தொழில்களிலேயே மிகவும் விநோதமானதைத்
தேர்ந்தெடுத்திருக்கிறேன்–
ஒவ்வொன்றுமே அதனதன் வழியில் விநோதமானது என்றாலும் கூட.
சிக்காமல் நழுவும் பாதரசத்தில்
சித்துமணிக்கல்லினைத் தேடித்திரிந்த பொன்மாற்றுக்காரர்கள் போல
நான் சாதாரண வார்த்தைகளை மாற்றுவேன்–
சீட்டாட்டத்தில் கள்ளத்தனம் செய்பவனின் குறியிடப்பட்ட சீட்டுகள்,
ஜனங்களின் பிரயோகங்கள்
அவற்றினுடையதேயான மந்திரத்தை ஈந்துவிட
தோர் உத்வேகப் புத்துணர்ச்சியாயும் திடீர் வெடிப்பாகவும்
இடியாயும் வழிபாடுமாய் இருந்த காலத்தில் போல
என்னுடைய முறை வருகையில் நித்தியத்துவமான விஷயங்களைச் சொல்வேன்.
பைரனின் பெரும் எதிரொலியாக இருப்பதிலிருந்து
தகுதி இழந்துவிடாதபடி பார்த்துக் கொள்வேன்.
நானாக இருக்கும் இந்தத் தூசி அழிவற்றதாக ஆகும்.
ஒரு பெண் என் காதலைப் பகிர்ந்து கொள்வாளாயின்
என் கவிதை ஒரே மையத்தைக் கொண்ட சொர்க்கங்களின்
பத்தாவது கோளத்தினை உராய்ந்து செல்லும்.
ஒருத்தி என் அன்பை உதறிச் செல்வாளாயின்
காலத்தின் ஊடாக அதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும்
ஒரு அகண்ட நதி என
என் வருத்தத்திலிருந்து என் இசையை உருவாக்குவேன்.
நானே பாதி பார்த்து மறந்து போகும் முகமாவேன்.
ஆசீர்வாதம் மிகுந்த விதியைக் கொண்ட
காட்டிக் கொடுப்பவனாய் இருத்தலை
ஏற்றுக் கொண்ட யூதாஸ் ஆவேன்.
சதுப்பு நிலங்களில் இருக்கும் காலிபனும் நானாவேன்.
நம்பிக்கையோ பயமோ இன்றி இறக்கும்
கூலிக் கொலைகாரனாகவும் ஆவேன்.
தலைவிதியால் மோதிரம் திருப்பப்படுதலை பீதியுடன் பார்த்த
பாலிகிரேட்டஸூம் நானாக ஆவேன்.
என்னை வெறுக்கும் எனது நண்பனாக ஆவேன்.
பாரசீகம் எனக்கு நைட்டிங்கேல் பறவையையும்
ரோம் எனக்கு உடைவாளையும் தரும்.
அவசங்களும் முகமூடிகளும் புத்துயிர்ப்புக்களும்
எனது விதியை நூற்று, நூற்றதைப் பிரிக்கும்
பிறகு ஏதோ ஒரு புள்ளியில்
நான் ராபர்ட் ப்ரௌனிங் ஆவேன்.

“ஒரு நிஜமான கவிஞனுக்கு வாழ்தலின் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயலும் கவித்துவமானதாகத்தான் இருக்க வேண்டும், ஏன் எனில் சாராம்சத்தில் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை, இன்றைய நாள் வரை எவருமே இவ்வுயர்ந்த பிரக்ஞை நிலையை அடையவில்லை. வேறு எவரையும் விட ப்ரௌனிங்கும் (Browning) பிளேக்கும் (William Blake) இந்த நிலையை நெருங்கிச் சென்றிருக்கின்றனர். விட்மன் அந்தத் திசையினை நோக்கி குறி வைத்த போதிலும், அவருடைய கவனமான எண்ணியெடுத்துச் சொல்லுதல் ஒரு வித கரடுமுரடான பட்டியலிடுதல் என்பதற்கு மேல் எழும்புவதில்லை.” (Preface to The Gold of Tigers) போர்ஹே பாரிஸ் ரெவ்யூ பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலும் ஒரு கவிஞன் முழுமையாகக் கவிஞனாக இருக்க வேண்டும் என்றும், அவன் சாதாரண கீழ்மையான அனுபவங்களுக்குத் தன்னைத் தந்துவிடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். போர்ஹே தேர்ந்தெடுத்துக் கொண்ட சர்வதேசீயத்தன்மையான கவிதைகளை எழுதும் நிலையை எளிதில் அடைந்துவிடவில்லை. அர்ஜன்டீனியக் கவிஞரான ஜோஸ் ஹெர்னான்டஸ்(1834-1886) என்பவர் எழுதிய பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காவியமான Martin Fierro வையும், போர்ஹேவின் சமகாலத்தவரான எவரிஸ்ட்டோ காரிஜோவின் மாட்டுக்காரன்தன்மையான கவிதைகளையும் கடந்து வருவது போர்ஹேவுக்கு எளிமையான காரியமாக இருக்கவில்லை. மார்ட்டின் ஃபைரோ காவியத்தை எழுதிய ஜோஸ் ஹெர்னான்டஸ் ஒரு கவிஞனாக மட்டுமல்ல, ஒரு தேசீய நாயகனாகப் பார்க்கப்பட்டார். பாம்ப்பா பிரதேசத்து அடியாள்–வீரன் ஒருவனின் சாகசங்ளைப் பற்றிய, டென்னிசன்தன்மையிலான நீண்ட விவரணைப் பாடல்தான் மார்ட்டின் ஃபைரோ. இந்த காவியத்திற்குப் பின் வந்த எந்த ஒரு அர்ஜன்டீனியக் கவிஞன் மீதும் ஜோஸ் ஹெர்னான்டஸின் நிழல்படியத்தான் செய்தது. ஆனால் “பிரதேச நிறம்(Local colour) பற்றிய தனது கருத்துக்கள் தெளிவாகும்வரைதான் போர்ஹே பிரதேசக் கவிதைகளை எழுதினார். மேலும் செண்ட்டி மென்டலான கவிதைகளை எழுதுவது பற்றி கடுமையான கருத்துக்கள் கொண்டிருந்தார்:
“A poetry that springs from domestic quarrels and that falls into frequent obsessions, imagining or registering irreconcilable differences so that the reader may feel sorry, seems to me a loss, an act of suicide.”
[Evaristo Carriego, 1930]
1925இல் வெளியிடப்பட்டது Moon Across the Way. போர்ஹே இந்த இரண்டாவது கவிதைத் தொகுதியை மறைத்திருக்க வேண்டும் என்று கூட நினைத்தார். அந்த அளவுக்கு “பிரதேச நிறம்” மிகுந்ததாய் இருந்தது அந்தத் தொகுதி. அவருடைய பெயரைக் கூட சிலிநாட்டு ஃபாஷனில் Jorje என்று அச்சிட்டிருந்ததாகத் தெரிவிக்கிறார் போர்ஹே. பின் வந்த பதிப்புகளில் இந்த விநோதத்தன்மைகளையும் மோசமான கவிதைகளையும் களைந்து விட்டார். மூன்றாவது தொகுதியான Cuaderno San Martinஐ எவரும் அர்ஜன்டீனிய தேசிய நாயகனான சேன் மார்ட்டினுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. அந்தப் பெயர் போர்ஹே பயன்படுத்திய சற்றே கர்நாடகமான நோட்டுப் புத்தகத்தின் பிராண்ட் பெயராகும். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் San Martin Copy Book என்று அர்த்தமாகும். போர்ஹே நினைவு கூறும் மற்றொரு இலக்கியவாதியான Ricardo Guiraldes வும் ஒரு காவியத்தை எழுதியவர். Don Segundo Sombra என்பது காவியத்தின் பெயர். அவரை 1924ஆம் ஆண்டு சந்தித்த போர்ஹே, தன்னுடைய கவிதைகளைக் காட்டி அபிப்ராயங்களைக் கேட்டார். கியூரால்டோ மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். சீர்குலைவான ஒரு கவிதையை எடுத்துச் சென்றாலும் கூட, அந்த வரிகளுக்கிடையிலாகவும் படித்து பிறகு இன்னதைத்தான் போர்ஹே சொல்ல முயல்கிறார் என்று மற்றவர்களுக்கும் சுட்டிக் காட்டுவாராம் கியூரால்டே. ஆனால் அவர் சொல்வதைக் கேட்பவர்களுக்கு அந்த விஷயங்கள் நேரடியாகக் கவிதையில் தென்படாத அளவுக்கு தெளிவில்லாமல் இருந்தன போர்ஹேவின் ஆரம்பக் கவிதைகள்.
ஒரு மனிதன் அழிந்து போகும் போது அவனுடன் அவன் தொடர்பான எல்லா அனுபவங்களும் அழிந்து போகின்றன என்று கருதினார் போர்ஹே. இதற்கான எடுத்துக்காட்டாக ஒரு கவிதை:

தற்கொலை(யாள்)
ஒற்றை நட்ஷத்திரம் கூட இந்த இரவில் விடுபட்டிருக்காது.
இரவும் விடப்பட்டிருக்காது.
நான் இறப்பேன், என்னுடன்,
சகிக்க முடியாத இந்த பிரபஞ்சத்தின் பாரமும் கூட.
நான் பிரமிடுகளையும், பட்டயப் பதக்கங்களையும்
கண்டங்களையும் முகங்களையும் அழித்து விடுவேன்.
சேகரிக்கப்பட்ட கடந்த காலத்தையும் நான் அழிப்பேன்.
வரலாற்றினை தூசியாக்குவேன், தூசியின் தூசியாக.
நான் இப்போது இறுதி சூரியாஸ்தமனத்தை பார்க்கிறேன்.
கடைசிப் பறவையின் குரலினைக் கேட்கிறேன்.
நான் ஒன்றுமின்மையை எவருக்கும் கையளித்துச் செல்லவில்லை.

லத்தீன், பிரெஞ்சு, இத்தாலி மற்றும் ஜெர்மன் மொழிகளையும் போர்ஹே கற்றிந்திருந்தார். அவருடைய கண்பார்வை இழப்புக் காலங்களில் பழைய ஆங்கிலம் என்று சொல்லக்க கூடிய ஆங்கிலோ சாக்ஸன் மொழியையும் கற்றுக் கொண்டார். ஆங்கிலோ சாக்ஸன் (Anglo-Saxon) மொழியின் இலக்கணம் பற்றி ஒரு கவிதையும் எழுதினார். இந்தத் தலைப்பைப் பார்த்து மிரட்சியும் பீதியும் அடைந்த ஒரு கல்வியியலாளர் போர்ஹேவிடம் இப்படிக் கேட்டிருக்கிறார்: “What do you mean by publishing a poem entitled “Embarking on the Study of Anglo-Saxon Grammar?.” ஒரு சூரியோதத்தைப் பார்ப்பதைப் போலவோ காதலில் ஈடுபடுவதைப் போலவோ அது ஒரு மிக அத்யந்தமான அனுபவம் என்று போர்ஹே அதற்குப் பதில் அளித்ததாகத் தெரிகிறது. அவரைப் பற்றிய சுயவிமர்சனக் கவிதையாக 1972 என்று தலைப்பிட்ட கவிதையைச் சொல்லலாம்:

1972
இப்பொழுது ஏற்கனவே சுருங்கிவிட்டிருக்கும்
எதிர்காலத்தைப் பற்றி பயந்திருக்கிறேன்
அது நீளும் நிலையாடிகளின் நடைக் கூடமாகத்
தெளிவின்றியும் பயனின்றியும் விரியும்
அவற்றின் பிரதிமைகள் தேய்ந்த வண்ணமிருக்கும்
எல்லாத் தற்பெருமைகளின் இரட்டிப்புகளாகவும்
கனவுக்கு சற்று முந்தியதான அரை வெளிச்சத்தில்
என் கடவுளர்களிடம் கெஞ்சினேன், அவர்களின் பெயர்களை நானறியேன்
எதையாவது எவரையாவது என் வாழ்நாட்களுக்குள் அனுப்பச் சொல்லி.
அருளினர். அதுதான் என் தேசம். நீண்ட விலக்கி வைத்தல்களின் மூலமாகவும்,
பசியிலும், பஞ்சத்திலும், போரின் மூலமாகவும் என் மூதாதையர்
தங்களை அர்ப்பணித்தனர் அதற்கு.
இங்கே, மீண்டும் ஒரு முறை வருகிறது கவர்ச்சிமிக்க அந்த சவால்.
காலத்தில் இன்னும் உயிர்த்திருந்த, நான் புகழ்ந்த அந்த பாதுகாப்பாளர்களின்
உருவங்களுடன் நானில்லை.
நான் பார்வையற்றவன்,
எழுபது வருடங்களை வாழ்ந்துவிட்டவன்
சாவுநாற்றம் வீசும் மருத்துவமனையின் ரத்தத்தில்
பல மனிதர்களின் இறுதி மரணவேதனைகளுக்கிடையில்
தன் நெஞ்சில் இரண்டு துப்பாக்கிக் குண்டுகளுடன்
இறந்து போன
கிழக்கிலிருந்து வந்த ஃபிரான்சிஸ்கோ போர்ஹே நானில்லை.
ஆனால் என் தேசம் இப்போது சேதப்படுத்தப்பட்டு
எழுத நிர்ப்பந்திக்கிறது.
போரனைய வேலைகளைச் செய்யக்கூடிய வாளின் வெகு தூரத்திற்கு அப்பாலிருக்கும்
தற்காலிகமான இலக்கணவாதியின் எழுதுகோளுடன்
காவியத்தின் பெரும் முனகலோசையை நான் தொகுக்கிறேன்
எனக்கேயான இடத்தினைச் செதுக்கிக் கொள்கிறேன். செய்கிறேன் நான் அதை.


கவிதை எனும் கலை அணங்கு(Muse)கவிஞர்களை எழுதத் தூண்டுவதான ரொமாண்டிக் கருத்துருவமானது பேரிலக்கிய (Classical)எழுத்தாளர்களால் முன் வைக்கப்பட்டது. ஆனால் கவிதையானது அறிவின் செயல்பாடு என்கிற கிளாஸிக்கல் கருத்துருவம் எட்கர் (Edgr Allen Poe) ஆலன் போ என்கிற ரொமாண்டிக்கினால் 1846ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது என்கிறார் போர்ஹே. எனினும் இந்த இரண்டு கருத்துருவாக்கல்களையும் போர்ஹே முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் என்றால் நிஜம் முரண்பாடாக இருக்கிறது. கலை அணங்கு என்பதை மில்ட்டனும் எபிரேயர்களும் ஆன்மா என்றழைத்தார்கள். நவீனகாலத்திலே அது “நினைவிலி (Unconscious)என்று அழைக்கப்படுகிறது. ஏறத்தாழ அவருக்குள் நடக்கும் படைப்பு ருவாக்க நிகழ்வினையும் கூட போர்ஹே கச்சிதமாக சித்தரித்திருக்கிறார். ஒரு தீவு போல மனதில் தோற்றம் கொள்ளும் “அது” இறுதியில் கதையாகவும் உருவாகலாம் அல்லது கவிதையாகவும் உருவாகலாம். ஆரம்பமும் தெரிகிறது. இறுதியும் தெரிகிறது. ஆனால் இடையில் இருப்பது தெரிவதில்லை:
“I begin with a glimpse of form, a kind of remote island, which will eventually be a story or a poem. I see the end and I see the beginning but not what is in between.”
(Preface to The Unending Rose)
அவருடைய கவிதைகள் யாவும் மாடர்னிசத்திலிருந்து தோன்றியவைதான். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் மாத்திரம் மாடர்னிசத்தை(Modernismo)இலக்கிய முன்னணிப்படை என்கிற Avant-gardeலிருந்து பிரித்துப் புரிந்து கொள்ள வேண்டும். கவிஞர் Ruban Darioவில் தொடங்கியது லத்தீன் அமெரிக்க மாடர்னிசம். 1920களுக்குள் அது தனது முனைப்பை இழந்துவிட்டிருந்தது. அதிலிருந்து மாறுபட்டு எழுத நினைத்த எல்லோரும் Avant-garde இயக்கத்தின் சோதனைகளையே தேர்ந்தெடுத்தனர்.
ஊடிழைப் பிரதி (Inter-Textuality) பற்றிய கருத்தாக்கத்தினை பின்நவீனத்துவ வாதிகள் விரிவாக்கி வலிமையாக்கின போதிலும், நிஜத்தில் மத்தியகாலத்திலேயே அதன் தொடக்கம் நிகழ்ந்து விட்டதை போர்ஹே (போர்ஹே பின்நவீனத்துவம் என்கிற இயக்கம் உருவாகும் முன்னரே காலமானார் என்பது வேறு செய்தி) சுட்டிக் காட்டுகிறார்: “The idea of a text capable of multiple readings is characteristic of the middle ages, those maligned and complex middle ages. . ” ஒரு பிரதிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட, ஏன் ஆயிரக்கணக்கான அர்த்தங்கள் இருக்க முடியும் என்று தனது கவிதை பற்றிய உரையில் குறிப்பிடுகிறார். (Poetry, [Seven Nights, 1987 ]pp.76-94) Scotus Eregena என்கிற ஐரிஷ் இயற்கை-இறையியல்வாதி(Pantheist) திருமறை நூலுக்கு முடிவற்ற அர்த்தங்கள் உண்டு என்று ஒரு முறை குறிப்பிட்டார். மற்றொரு ஸ்பானியதேசத்து கப்பாலிஸ்ட், உலகில் எத்தனை பேர் திருமறைநூலைப் படிக்கிறார்களோ அத்தனை தனித்தனி திருமறைநூல்களை கடவுள் எழுதினார் என்றும் குறிப்பிட்டார். இது திருமறைநூல்களுக்கு மாத்திரமல்ல, மறுவாசிப்பு செய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் பொருந்தக்கூடிய கருத்தாகும். இயற்கையால் அமைந்த எந்த ஒரு பொருளும் தொடர்ச்சியான சுழற்சிக்கும் மாறுதலுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்கிற தத்துவத்தை முன் வைத்தார் கிரேக்க தத்துவவாதி ஹீராக்ளீட்டஸ்: (கி.பி. 544-483). எந்த ஒரு மனிதனும் ஒரு முறை கால் வைத்த நதியில் மீண்டும் கால் வைக்க முடியாது என்றார். கால ஓட்டத்தின் நிற்பாடின்மையைத்தான் அவர் இப்படிப்பட்ட உருவகத்தில் வெளிப்படுத்தினார். நாம் எல்லாருமே ஹீராக்ளீட்டஸின் நதியாக இருக்கிற பட்சத்தில் நாம் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கிறோம். முடிவற்ற வகையில் நாம் மாறுதலுக்கு உட்பட்டுக்கொண்டே இருக்கிறோம். எனவே நம்மின் ஒவ்வொரு வாசிப்பும், அந்த வாசிப்பின் முந்தைய வாசிப்பின் நினைவுகூறல்களும், மறுவாசிப்புகளும் மாறுதல் அடைந்து கொண்டேயிருக்கும். வாசகன் ஒவ்வொரு முறை மறுவாசிப்பு செய்யும் போதும் பிரதியை மறுகண்டுபிடிப்பு செய்கிறான். பிரதியும் ஹீராக்ளீட்டஸின் நதி போல மாறிக் கொண்டேயிருப்பதுதான்.
விட்மனின் பாதிப்பு தெரியக்கூடிய ஒரு காதல் கவிதையையும் இங்கே மேற்காட்டுவது பொருந்தும். குறிப்பாக விட்மன்தன்மையான கவிதையின் பட்டியலிடுதல்களை The Threatened One என்ற கவிதையில் பார்க்கலாம் :

அது காதல்தான். நான் பதுங்கிக் கொள்ளவோ, தப்பிக்கவோ வேண்டும்.
ஒரு பயங்கரக் கனவில் போல அதன் சிறைச்சுவர்கள் பெரிதாய் வளர்கின்றன.
கவர்ச்சி மிகுந்த முகமூடி மட்டும் மாறியிருக்கிறது, ஆனால் எப்பொழுதும் போல அது ஒன்றேதான்.
என்னுடைய தாயத்துக்களாலும், உரைகற்களாலும் என்ன பயன்:
இலக்கியத்தின் பயன்பாடு, தெளிவற்ற படிப்பு,
கூர்ந்த கற்களால் நிறைந்த வடக்குநாடுகள் தம் கடல்களையும், வாள்களையும்
பாடுவதற்குப் பயன்படுத்திய ஒரு மொழிக்கான எனது பயிற்சி,
நட்புகளின் அமைதி, நூலகங்களின் படியடிக் கூடங்கள், சாதாரண பொருள்கள்,
பழக்கங்கள், என் தாயின் இளம் காதல், என் இறந்த முன்னோர்களால் வீசப்பட்ட போர்வீரர்தன்மையான நிழல்கள், காலமற்ற இரவு, கனவின், இரவின் சுவைகள்.?
உன்னுடன் இருத்தல் அல்லது உன்னுடன் இல்லாதிருத்தல் என்பதைக் கொண்டுதான் நான்
காலத்தை அளக்கிறேன்.
இப்பொழுது நீர் ஜாடி நீர் ஊற்றுக்கு மேலாக உடைந்து சிதறுகிறது, இப்பொழுது அந்த மனிதன் பறவையின் பாடல் சப்தத்திற்கு உயர்கிறான், இப்பொழுது ஜன்னல்களுக்கு ஊடாகப் பார்ப்பவர்களை பிரித்தரிய முடிவதில்லை, ஆனால் இருள் அமைதியைக் கொண்டு வரவில்லை.
அது காதல்தான், நானறிவேன். உன் குரலைக் கேட்டதினால் உண்டான பதற்றமும் ஆசுவாசமும், நம்பிக்கையும் ஞாபகமும், அடுத்தடுத்த தொடர்ச்சிகளில் வாழும் பயங்கரமும்.
அது காதல்தான். அதன் சொந்தப் புராணிகங்களுடன், அர்த்தமற்ற மந்திரங்களுடன்.
ஒரு தெருத் திருப்பம் உள்ளது அதன் வழியே கடந்து செல்லத் துணியேன்.
இப்பொழுது சைனியங்கள் சூழ்கின்றன என்னை ஜனத்திரள்கள்
(இந்த அறை நிஜமற்றது, இதை அவள் பார்க்கவில்லை)
ஒரு பெண்ணின் பெயர் என்னைச் சிறைபிடித்து வைத்திருக்கிறது.
ஒரு பெண்ணின் இருப்பு என் முழு உடலையும் பீடிக்கிறது.

In Praise of Darkness(1969) என்ற தொகுதியில் போர்ஹேவின் உரைநடைக் கவிதைகளும், சானெட்டுகளும், கலந்து வெளியாகியிருக்கின்றன. கவிதைக்கும் உரைநடைக்குமான வேறுபாடுகள் அதிகமில்லை என்று நினைத்தவர் போர்ஹே. அப்படியானால் எல்லா உரைநடை இலக்கியங்களையும் கவிதை என்ற தகுதி கொடுத்துப் படிப்பதா? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வியைப் பற்றி போர்ஹே அதிகமாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. போர்ஹே எழுதிய எல்லாவற்றையுமே கூட கவித்துவத்துடன் அணுக வேண்டும் என்று நினைத்திருக்கலாம். மானுட நிலையையே அடிப்படையானதொரு கவித்துவ நிலை என்று அவர் கருதியிருக்க வேண்டும். உரைநடைத்தன்மைக்கும் கவித்துவத்திற்கும் அடிப்படையான முரண்பாடோ வேறுபாடோ இல்லாதிருந்த காலம் இருந்திருக்கக் கூடும். அப்பொழுது எல்லாமே மந்திரத்தால் நிறமடைந்திருக்க வேண்டும். இந்த மாதிரியான ஒரு அணுகல்பார்வையை போர்ஹே என்கிற மந்திரவாதிதான் உருவாக்கியிருக்க முடியும். இந்தப் பார்வையை முழுமையாக ஏற்க வேண்டி வந்தால் மந்திரத்தின் துணை வடிவமாக இலக்கியம் ஆகிவிடும் சாத்தியம் இருக்கிறது. The Gold of The Tigers தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் இந்த வாதத்தை முன்வைக்கிறார் போர்ஹே:
. . . there can have existed no division between the poetic and the prosaic [and] everything must have been tinged with magic”
கற்பனையை நோக்கி எழுதப்பட்ட வரிகள் கவிதையாகின்றன என்றும் காராணார்த்த அறிவினை நோக்கி எழுதப்பட்ட வரிகள் உரைநடையாக ஆகின்றன என்றும் முன் கூறிய கருத்தை வலியுறுத்தும் பொருட்டு போர்ஹே எழுதிய அடுத்த வாதத்தைப் பார்க்கலாம் :
“A passage read as though addressed to the reason is prose; read as though addressed to the imagination, it might be poetry.” (Introduction to Selected Poems).
எனினும் கண்பார்வையிழப்பு அவரைப் பாவகை அமைப்பிலுள்ள கவிதைகளையே எழுதும் கட்டாயத்திற்கு உள்ளாக்கியது. பாஅமைப்புகள் எதுகை மோனை ஒழுங்குளை அனுசரிப்பதால் எளிமையாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள ஏதுவாக இருந்தது. எழுதப்பட்ட பிரதிகளின் வசதிகள் மறுக்கப்பட்ட ஒருவருக்கு ஞாபகமும், அதற்குத் தோதான பாவகை அமைப்புகளுமே உறுதுணையாக இருந்திருக்க முடியும். போர்ஹேவுக்கு முற்பட்ட இலக்கியவாதிகளில் போர்ஹே குறிப்பிடும் இருவர் கிரேக்கக் கவிஞர் ஹோமரும் ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்ட்டனும் ஆவர். இருப்பினும் ஆக்குபவன் என்ற சிறுகதையை எழுதும்போது தன்னை ஹோமருடன் ஒப்பிட்டுத்தான் எழுதினார் போர்ஹே. பதினைந்து நாணயங்கள் என்ற கவிதையில் வேறுபட்ட கவிப்பொருள்களை ஒன்றினைக்கிறார் போர்ஹே:
ஒரு கீழைநாட்டுக் கவிஞன்
உனது தீர்மானமற்ற வட்டத்தட்டினை
நான் ஒரு நூறு இலையுதிர்காலங்களாய்ப் பார்த்திருக்கிறேன்.
தீவுகளின் மீதாக உனது வானவில்களை
நான் ஒரு நூறு இலையுதிர்காலங்களாய்ப் பார்த்திருக்கிறேன்.
ஒரு நூறு இலையுதிர்காலங்கள் எனது உதடுகள்
இதைவிடப் பேச்சற்று இருக்கவில்லை.

மழை பெய்து கொண்டிருக்கிறது
எந்த நேற்றுவில், கார்த்தேஜ் நகரின் எந்த முற்றங்களில்
இந்த மழையும் கூட விழுகிறது?

மேக்பெத
நமது செயல்கள் அவற்றின் தீர்மானிக்கப்பட்ட வழியில் தொடர்கின்றன.
அதற்கு ஒரு முடிவுண்டென்பது தெரியாது.
நான் எனது அரசனை வாளால் வீழ்த்தினேன்
ஷேக்ஸ்பியர் தன் துன்பியல்நாடகத்தின் கதைத்திட்டத்தை
அமைக்க ஏதுவாய்.

வடிவ விஷயங்களில் மெய்யான ஒரு சர்தேசீயத்தன்மையைக் கடைபிடித்த போர்ஹே ஜப்பானியக் கவிதை வடிவமான தான்க்கா வையும் பின்பற்றிக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.
வாசகன் படிக்கும் ஒவ்வொரு கவிதையும் வாசகனுக்கு உள்ளாக எப்போதும் இருந்து கொண்டுதானிருக்கிறது என்று கூறுகிறார் போர்ஹே. கவிதை படித்தவுடன் இந்தக் கவிதை நாம் எழுதியிருக்க வேண்டிய கவிதை என்று அவனுக்குத் தோன்ற வேண்டும். கவிதை படிக்கும் போது ஏற்கனவே நாம் மறந்து போன ஒரு விஷயம் நமக்கு நினைவுக்கு கொண்டு வரப்படுகிறது என்றும் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிடுகிறார். மேலும் கவிதை ஒருவர் உணர்ந்தறிய வேண்டிய ஒன்று கருத்தை முன் வைக்கிறார்:
“I believe that poetry is something one feels. If you dont feel poetry, if you have no sense of beauty, if a story doesn’t make you want to know what happened next, then the author has not written it for you.” (Poetry, [Seven Nights],p.81)
போர்ஹேவின் உச்சபச்சமான சாதனைகள் அவருடைய கதைகளில் இல்லை என்றும் மாறாக அவருடைய இலக்கிய விமர்சனத்தில் இருக்கிறது என்றும் கருத்துக் கூறும் விமர்சகர்கள் (ஜேம்ஸ் அட்லஸ் போன்றோர்) இருக்கிறார்கள். ஒரு எழுத்தாளனின் ஆளுமையையும் அவனது எழுத்துக் களையும் பற்றியுமான கருத்துக்களை ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் வடித்து விடக் கூடிய அபாரத் திறன் காரணமாக ஜேம்ஸ் அட்லஸ் இந்தக் கருத்தைக் கொண்டிருக்க வேண்டும். எனினும் கவிதை, புனைகதை இலக்கிய விமர்சனம் ஆகிய மூன்று துறைகளிலும் தனக்கான நியாயத்தை போர்ஹே செய்தார் என்பதை வாசகன் அறிந்து கொள்ள முடியும். மேலும் அமெரிக்க எழுத்தாளர் எமர்சன் பற்றி போர்ஹே குறிப்பிடுவது அவருக்குமே பொருந்தும்:
“I have read the essential books and written others which oblivion will not efface”

Shape of the Sword-வாளின் வடிவம்-போர்ஹே-translator Brmmarajan

shapeswordjlb1வாளின் வடிவம்

போர்ஹே

ஒரு வன்மம் மிக்க வடு அவன் முகத்தின் குறுக்காகச் சென்றது. ஒரு முனையில் அவன் நெற்றிப் பொட்டுக்கும் மற்றொன்றில் கன்னத்துக்குமாக சுருக்கங்கள் ஏற்படுத்திய அது ஏறத்தாழ முழுமையடைந்த அரைவட்டமாகவும், சாம்பல் நிறத்திலும் இருந்தது. அவனின் உண்மையான பெயர் முக்கியமல்ல: டாகு ரெம்போவில் இருந்த எல்லோரும் அவனை கொலரோடோவிலிருந்து வந்த ஆங்கிலேயன் என்று அழைத்தார்கள். அந்த வயல்களின் சொந்தக்காரனான கார்டோசோ அவற்றை விற்க மறுத்தான்: எதிர்பார்த்திராத ஒரு விவாதத்திற்கு அந்த ஆங்கிலேயன் இட்டுச் சென்றிருக்க வேண்டும்: அவன் கார்டோசோவிடம் தன் வடுவின் ரகசியத்தைக் கூறியிருக்க வேண்டும். ரியோ கிராண்ட் டேல் சர் என்ற பகுதியிலிருந்து, எல்லைப் புறத்திலிருந்து அந்த ஆங்கிலேயன் வந்தான். அவன் ஒரு கடத்தல்காரனாக பிரேஸிலில் இருந்தவன் என்று சொல்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அந்த வயல்கள் புல் மண்டிக்கிடந்தன: நீர்ச்சுனைகள் உப்புக்கரித்தன: இந்தக் குறைபாடுகளை சரியாக்கும் பொருட்டு அந்த ஆங்கிலேயன் நாள் முழுவதும் தன் வேலையாட்களைப் போலவே கடினமாக உழைத்தான். கருணையின்மையின் எல்லைக்கு அவன் கண்டிப்பானவன் என்றும் துல்லியமான நியாயவாதி என்றும் அவனைப் பற்றிச் சொன்னார்கள்: ஒரு வருடத்தின் சில சமயங்களில் தன்னை ஒரு மாடி அறையில் வைத்துப் பூட்டிக்கொண்டான். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து ஒரு போரிலிருந்தோ, ஒரு தலை சுற்றலில் இருந்தோ வெளிப்படுவது போல வெளுத்துப் போய், நடுங்கியபடி, குழம்பிப்போய் ஆனால் முன்பைவிட அடக்கி ஆள்பவனாக அவன் வெளிப்பட்டான். அந்தக் கண்ணாடி போன்ற கண்கள், சக்திமிக்க மெல்லிய உடல், மற்றும் நரைத்துப்போன மீசை ஆகியவை எனக்கு ஞாபகம் வருகின்றன. அவன் எவரிடமும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவன் பேசிய ஸ்பானிய மொழி மிக அரிச்சுவடித்தனமானதும் ப்ரேஸீல் மொழிக் கலப்பு மிக்கதும் எனபதும் உண்மை. ஏதாவது ஒரு துண்டுப் பிரசுரம் அல்லது ஒரு வியாபார சம்பந்தமான கடிதம் தவிர அவனுக்கு எந்தக் கடிதங்களும் வருவதில்லை.

வடக்குப் பிராந்தியங்கள் வழியாக நான் சென்றமுறை பயணம் செய்தபோது கராகுவடா அருவியின் எதிர்பாராத பொங்கி வழிதல் என்னை ஒரு இரவு கொலரோடாவில் தங்கும்படி கட்டாயப்படுத்தியது. சில கணங்களுக்குள் என் வரவு அங்கு சமயப் பொறுத்தமற்றுப் போனதை என்னால் உணர முடிந்தது.

என்னை அந்த ஆங்கிலேயனுக்கு உவப்பாக்கிக் கொள்ள முயன்றேன். சிறிதும் பகுத்து அறிதல் அற்ற பற்றுக்களில் ஒன்றை நான் பயன்படுத்தினேன்: தேசப்பற்று. இங்கிலாந்து போன்ற வெல்ல முடியாத உணர்வுடைய ஒரு நாட்டினை என்னுடையதாகக் கூறினேன். என் நண்பன் ஒப்புக்கொண்டு ஆனால் தான் ஒரு ஆங்கிலேயன் இல்லை என்றான். அவன் அயர்லாந்தில் டங்கர்வான் பகுதியைச் சேர்ந்தவன். இதைக் கூறிய பிறகு, அவன் ஏதோ ஒரு ரகசியத்தைச் சொல்லிவிட்டது போல திடீரென்று நிறுத்தினான்.

இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் வானத்தைப் பார்க்க வெளியே சென்றோம். வானம் தெளிவாகி இருந்தது. ஆனால் தாழ்ந்த மலைகளுக்கு அப்பால் தெற்கு வானம் மின்னலால் கீறப்பட்டு, ஆழ்ந்து பிளக்கப்பட்டு, இன்னொரு புயலை கருக் கொண்டிருந்தது. சுத்தம் செய்யப்பட்ட உணவருந்தும் அறையில், இரவு உணவு பரிமாறிய பையன் ஒரு பாட்டில் ரம் கொண்டு வந்து வைத்தான். கொஞ்ச நேரம் நாங்கள் மௌனமாக அருந்தினோம்.

எனக்கு போதை ஏறிவிட்டதை நான் உணர்ந்தபோது என்ன நேரம் என்று தெரியவில்லை. என்னுடைய புத்துணர்ச்சியா, அல்லது சோர்வா, அல்லது பெருமகிழ்ச்சியா–அந்த வடுவைப் பற்றிக் குறிப்பிடச்செய்தது எது என்று தெரியவில்லை. ஆங்கிலேயனின் முகம் மாறுதல் அடைந்தது. அவன் என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளப்போகிறான் என்று சில வினாடிகள் நினைத்தேன். விரிவாக, தன் சாதாரண குரலில் அவன் கூறினான்:

“என் வடுவைப் பற்றிய வரலாற்றை ஒரு நிபந்தனையின் பேரில் நான் சொல்கிறேன்: அந்த பெரும் அவமானத்தை, இழிவான சந்தர்ப்பங்களின் தீவிரத்தை சற்றும் குறைக்கப் போவதில்லை.”

நான் ஒப்புக்கொண்டேன். அவனுடய ஆங்கிலத்தில் ஸ்பானிய மொழியையும், போர்ச்சுகீசிய மொழியையும் கலந்து அவன் சொன்ன கதை இதுதான்:

கிட்டதட்ட 1922இல் கன்னாட் நகரங்களில் ஒன்றில், அயர்லாந்தின் சுதந்திரத்திற்காக சூழ்ச்சியில் ஈடுபட்டிருந்த பலரில் நானும் ஒருவன். என்னுடைய தோழர்களில் சிலர்– தங்களை அமைதியான காரியங்களில் ஈடுபடுத்தியபடி இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்: மற்றவர்கள், புரிந்து கொள்ள முடியாத வகையில் பாலைவனத்திலும் கடலிலும் ஆங்கிலக்கொடியின் கீழ் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; தகுதிவாய்ந்த மற்றொருவன் விடியல் நேரத்தில், ராணுவ வீரர்களின் குடியிருப்பு முற்றத்தில், தூக்கம் நிரம்பிய மனிதர்களால் சுடப்பட்டு இறந்தான். இன்னும் பலர் (மிகவும் அதிர்ஷ்டமற்றவர்கள் அல்ல) பெயரற்ற, உள்நாட்டுப் போரின் ரகசிய மோதல்களில் தங்கள் முடிவுகளை எதிர்கொண்டனர். நாங்கள் தேசீயவாதிகள்; கத்தோலிக்கர்கள்; நாங்கள் ரொமாண்டிக்குகள் என்று கூட சந்தேகப்படுகிறேன். .. அயர்லாந்து எங்களுக்கு நிறைவேற்றம் காணமுடியாத எதிர்காலமாக மட்டுமின்றி பொறுத்துக்கொள்ள முடியாத நிகழ்காலமாகவும் இருந்தது. அது ஒரு கசப்பான, போற்றிப் பாதுகாத்த புராணிகம்; அது வட்ட வடிவக் கோபுரங்களாகவும் சிவப்பு சதுப்பு நிலங்களாகவும் இருந்தது. பார்னலின் மறுதலிப்பாக இருந்தது. மாபெரும் காவியப் பாடல்களாக அவை காளைகளைக் களவாடிய நிகழ்வுகளைப் பாடின. இவை இன்னொரு பிறவியில் நாயகர்களாகவும் மற்றும் சிலவற்றில் மீன்களாகவும், மலைகளாகவும். . . . ஒருநாள் மதியம், நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். மன்ஸ்டர் நகரத்திலிருந்து வந்த கூட்டாளி எங்களுடன் சேர்ந்தான்: ஒரு ஜான் வின்சென்ட் மூன்.

அவன் இருபது வயது நிரம்பாதவன். அவன் ஒரே சமயத்தில் மெலிந்தும், தொங்கும் சதைப்பற்று உடலுடனும் காணப்பட்டான்;முதுகெலும்பு இல்லாத பிராணியொன்றினைப் போல அசௌகரியமான மனப்பதிவை ஏற்படுத்தினான். அவன் தீவிரத்துடனும், தற்பெருமையுடனும் ஒவ்வொரு பக்கத்தையும் படித்திருந்தான்–கடவுளுக்குத்தான் தெரியும் என்ன கம்யூனிஸ்ட் புத்தகங்கள் என்று. எவ்விதமான விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க அவன் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்தினான். ஒருவன் மற்றவனை வெறுப்பதற்கு அல்லது விரும்புவதற்கு எல்லையற்ற காரணங்கள் கொண்டிருக்கலாம்: மூன் பிரபஞ்சத்தின் வரலாற்றையே மிக மோசமான ஒரு பொருளாதார பிரச்சனைக்குச் சுருக்கினான். புரட்சியானது வெற்றி யடையும்படி முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று உறுதியாகக் கூறினான். ஒரு நாகரீகமான மனிதனுக்கு இழந்தபோன நோக்குகள் மட்டுமே கவர்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்று நான் அவனிடம் சொன்னேன். . . இரவு வந்துவிட்டிருந்தது; எங்களுடைய கருத்துமாறுபாடுகளை, கூடத்தில், மாடிப்படிகளில், தெளிவில்லாத தெருக்களில் தொடர்ந்தோம். அவன் வெளிப்படுத்திய தீர்மானங்களை விட அவற்றின் மறுக்க இயலாத, நிறுவப்பட்ட தன்மையே என்னைக் கவர்ந்தது. புதிய தோழன் விவாதிக்கவில்லை. உதாசீனத் துடனும் வெறுப்புடனும் தன் கருத்துக்களைக் கட்டளைத்தொனியில் தெரிவித்தான்.

“வெளிப்பகுதியில் அமைந்திருந்த வீடுகளுக்குப் பக்கத்தில் நெருங்கும் போது, சற்றும் எதிர்பார்க்காத துப்பாக்கிச் சத்தம் எங்களை ஸ்தம்பிக்க வைத்தது. (இதற்கு முன்பு அல்லது பிறகு ஒரு தொழிற்சாலையின் வெற்றுச் சுவரையோ அல்லது ராணுவவீரர்களின் குடியிருப்பையோ சுற்றி வந்தோம்)கற்கள் பாவப்படாத ஒரு தெருவில் நுழைந்தோம்; பற்றி எரியும் குடிசை ஒன்றிலிருந்து, நெருப்பு வெளிச்சத்தில் பூதாகரமாய்த் தெரிந்த ஒரு ராணுவ வீரன் வெளிப்பட்டான். உரக்கக் கத்தியபடி, எங்களை நிற்கச்சொல்லி உத்தரவிட்டான். என் நடையை துரிதமாக்கினேன்; என் தோழன் கூட வரவில்லை. நான் திரும்பினேன்: ஜான் வின்சென்ட் மூன் பயத்தினால் நித்தியப்படுத்தப்பட்டவன் போல ஈர்க்கப்பட்டு அசைவற்று நின்றான். நான் பின்னால் திரும்பி ஓடி ராணுவ வீரனை ஒரே அடியில் கீழே தள்ளி, வின்சென்ட் மூனை அவமானப் படுத்தி, என்னைத் தொடர்ந்து வர உத்தரவிட்டேன். நான் அவன் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல வேண்டியதாயிற்று; பயம் என்ற உணர்ச்சி அவனை ஏதும் செய்ய இயலாதவனாக்கி விட்டிருக்கிறது. ஒளிப்பிழம்புகளால் ஊடுருவப்பட்ட இரவின் ஊடாக நாங்கள் தப்பித்தோம். துப்பக்கிக் குண்டுகள் ஏராளமாய் எங்களை நோக்கியபடி வந்தபோது, அதில் ஒன்று மூனின் வலது தோளைக் காயப்படுத்தியது. பைன் மரங்களுக்கிடையில் நாங்கள் தப்பித்துச் சென்றபோது அவன் ஒரு பலவீனமான தேம்பலை வெளிப்படுத்தினான்.

“1923ஆம் வருடத்தின் இலையுதிர்காலத்தில் நான் ஜெனரல் பார்க்லியின் கிராமத்து வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருந்தேன். (இதுவரை என்றும் நான் பார்த்திராத) அந்த ஜெனரல் நிர்வாகக் காரியமாற்றுவதற்கோ எதற்கோ பெங்கால் சென்றிருந்தார்; அந்த வீட்டுக்கு ஒரு நூற்றாண்டுக்கும் குறைவாகத்தான் வயதாகியிருக்கும். ஆனால் அது சிதைலமடைந்தும் நிழல் நிரம்பியும் இருந்தது. புரிபடாத வராந்தாக்களிலும் அர்த்தமற்ற பின் கூடங்களிலும் அது விரிவடைந்திருந்தது. காட்சிக் கூடமும், மாபெரும் நூலகமும் முதல் மாடியை ஆக்கிரமித்திருந்தன. சர்ச்சை மிகுந்த, உவப்பில்லாத புத்தகங்கள்–அவை ஒரு வகையில் 19ஆம் நூற்றாண்டின் வரலாறாக இருந்தன; நிஷாபூரின் அகன்ற முனைக் கொடுவாள்கள்–அவற்றின் உறைந்த வளைவுகளில் இன்னும் போரின் கொடூரமும் காற்றும் நிலைத்திருப்பது மாதிரியாகத் தோன்றியது. நாங்கள் பின்பக்கத்திலிருந்து (நான் நினைவு கொள்வது மாதிரி) நுழைந்தோம். மூன் நடுங்கியபடி, வாய் உலர்ந்து, அந்த இரவின் நடப்புகள் சுவாரஸ்யமானதென்று முணுமுணுத்தான்; நான் அவனின் காயத்திற்குக் கட்டுப்போட்ட பின் ஒரு கோப்பை தேநீர் கொண்டுவந்தேன்: என்னால் அவனின் “காயம்”’ மேலோட்டமானது என்று தீர்மானிக்க முடிந்தது. குழம்பிய நிலையில் அவன் திடீரென்று உளறினான்:

“உனக்குத் தெரியுமா நீ ஈடுபட்டது மிக ஆபத்தான காரியம்”.

அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று நான் அவனுக்குச் சொன்னேன். (உள்நாட்டுப் போரின் பழக்கம், நான் எவ்வாறு இயங்க விரும்பினேனோ அவ்வாறு செயல்படத் தூண்டியது; மேலும் ஒரு நபர் பிடிபட்டாலும் கூட எங்கள் நோக்கத்திற்கு ஆபத்து ஏற்படும்).

“அடுத்த நாள் மூன் தன் நிதானத்தை அடைந்திருந்தான் ஒரு சிகரெட்டை ஏற்றுக் கொண்டு “நம் புரட்சிகர கட்சியின் பொருளாதார வழிமுறைகள்”’குறித்து என்னை ஒரு கடுமையான விசாரணைக்கு ஆளாக்கினான். அவன் கேள்விகள் மிகத் தெளிவாய் இருந்தன: நான் (உள்ளபடி) நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறினேன். ஆழ்ந்த துப்பாக்கி வெடி ஓசைகள் தெற்கைக் குலுக்கின. நம் தோழர்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள் என்று மூனிடம் சொன்னேன். என்னுடைய மேல்கோட்டும் கைத்துப்பாக்கியும் என் அறையில் இருந்தன; நான் திரும்பியபோது மூன் கண்களை மூடியபடி சோபாவில் நீட்டிப் படுத்திருப்பதைப் பார்த்தேன். அவனுக்குக் காய்ச்சல் என்று அவன் கற்பனை செய்து கொண்டான். வலிமிக்க துடிப்பு ஒன்றினைத் தன் தோளில் அவன் வரவழைத்துக் கொண்டான்.

அந்த கணத்தில் அவனின் கோழைத்தனம் சரி செய்யவே முடியாதது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவனைப் பத்திரமாக இருக்கும்படி குலைந்த தொனியில் வேண்டிக்கொண்டு நான் வெளியே கிளம்பினேன். இந்த பயந்த மனிதன் என்னை அவமானத்துக்கு உள்ளாக்கினான். வின்சென்ட் மூன் அன்றி ஏதோ நான்தான் கோழை என்பது போல. ஒரு மனிதன் எது ஒன்றைச் செய்தாலும், அது எல்லா மனிதர்களும் செய்ததைப் போலத்தான். அந்தக் காரணத்துக்காக தோட்டத்தில் இழைக்கப்பட்ட ஒரு துரோகம் மனித இனத்தையே மாசுபடுத்துவது தவறானாதல்ல. அந்தக் காரணத்துக்காக, அதைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு தனிப்பட்ட யூதனை சிலுவையில் அறைந்தது போதுமானது என்பது நியாயமற்றதாகாது. ஒருவேளை ஷோப்பன்ஹீரீன் கூற்று சரியாகவும் இருக்கலாம்: நானே எல்லா மனிதர்களும், எந்த மனிதனும் எல்லா மனிதனே, ஷேக்ஸ்பியரும் ஒரு வகையில் இந்த மோசமான ஜான் வின்சென்ட் மூன்தான்.

“ஜெனரலின் பிரம்மாண்டமான வீட்டில் ஒன்பது நாட்கள் கழிந்தன. போரின் அவசங்களையும் வெற்றிகளையும் பற்றி நான் பேசப் போவதில்லை:என்னை அவமானப்படுத்தும் அந்த வடுவின் வரலாற்றைக் கூற முயல்கிறேன். என் ஞாபகத்தில் அந்த ஒன்பது நாட்கள், கடைசி நாளின் முந்திய தினத்தைத் தவிர, ஒரே நாளாகத்தான் இருக்கிறது. அன்று எங்கள் ஆட்கள் ராணுவக் குடியிருப்புக்களில் நுழைந்தனர். எல்ஃபின் பிராந்தியத்தில் யந்திரத் துப்பாக்கிகளுக்கு இறையாகிப் போன எங்கள் பதினாறு தோழர்களுக்கு ஈடாய் மிகச்சரியாக வஞ்சம் தீர்க்க முடிந்தது அன்று. விடியற்காலையின் தெளிவின்மையில், காலை உதிக்கும் முன் நான் வீட்டிலிருந்து வெளியேறினேன். இரவு கவியும் சமயத்தில் திரும்பினேன். மேல் மாடியில் என் தோழன் எனக்காகக் காத்திருந்தான்: அவனின் காயம் அவனை வீட்டின் கீழ்ப்பகுதிக்கு இறங்க அனுமதிக்க வில்லை. எஃப்.என்.மாட் என்பவரோ அல்லது க்ளாஸ்விட்ஸ் என்பவரோ எழுதிய யுத்த தந்திரம் பற்றிய தொகுதி ஒன்றை அவன் கையில் வைத்திருந்தது என் நினைவுக்கு வருகிறது. “தரைப்படையே எனக்குப்பிடித்த ஆயுதம்”’ என்று ஒரு இரவு என்னிடம் மனம் திறந்து கூறினான். எங்களுடைய திட்டங்களைப் பற்றி விசாரித்தான்: அவற்றை விமர்சிக்கவோ அல்லது மாறுதல் செய்யவோ விரும்பினான். “நமது படுமோசமான பொருளாதார அடிப்படை”யை’அவன் கண்டனம் செய்யப் பழகியிருந்தான். வறட்டு கொள்கைக்காரனாகவும் கலகலப்பற்றவனாகவும் இருந்த அவன் ஒரு அழிவிற்கான முடிவை முன்னறிவித்தான். “அது ஒரு கொழுந்துவிட்டு எரியும் விவகாரம்”’ என்று முணுமுணுத்தான். உடல் அளவில் அவன் ஒரு கோழை என்பதை அசட்டை செய்ய வேண்டி அவனின் மன ஆணவத்தைப் பெரிதாக்கிக் காட்டினான். நல்லதற்கோ, கெட்டதற்கோ, இவ்வாறு ஒன்பது நாட்கள் கழிந்தன.

பத்தாவது நாள் நகரம் இறுதியாக வேட்டை நாய்களிடம் சிக்கியது. உயரமான, மௌனமான குதிரை வீரர்கள் சாலையில் திரிந்து கண்காணித்தார்கள். சாம்பலும் புகையும் காற்றில் மிதந்தது: ஒரு சதுக்கத்தின் மையத்தில் வீரர்கள் தங்கள் குறிக் கூர்மையை முடிவற்று பயிற்சி செய்துகொண்டிருந்த ஒரு போலி மனித உருவை விட மெலிதான மனப்பதிவே இருக்கக் கூடிய அளவில், தரையின் ஒரு மூலையில் மனிதச் சடலம் வீசப்பட்டுக் கிடந்ததைப் பார்த்தேன். . . . வானில் விடியல் தெரியும் நேரம் நான் கிளம்பினேன்: மதியத்திற்கு முன் நான் திரும்பிவிட்டேன். நூலகத்தில் மூன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்; அவன் குரலின் தொனி அவன் தொலைபேசியில் பெசிக் கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிவித்தது. பிறகு என் பெயர் காதில் விழுந்தது; பிறகு நான் ஏழு மணிக்குத் திரும்புவேன் என்பதும், பிறகு நான் தோட்டத்தைக் கடந்து வரும்போது அவர்கள் என்னைக் கைது செய்ய வேண்டும் என்ற குறிப்புணர்த்தலும். என்னுடைய நியாயமான நண்பன் என்னை நியாயமான வகையில் விற்றுக்கொண்டிருந்தான். அவனுக்கு தன் சுயபாதுகாப்பு பற்றிய உறுதி தரவேண்டும் என்று கேட்டதும் என் காதில் விழுந்தது.”

“இந்த இடத்தில் என் கதை தெளிவற்றுத் தொலைகிறது. மயக்கமடையச் செய்யும் ஆழ்ந்த படிக்கட்டுகள் வழியாகவும், பயம் கொள்ளத்தகுந்த கூடங்கள் வழியாகவும் என்னைக் காட்டிக் கொடுத்தவனைப் பின் தொடர்ந்தேன் என்பது எனக்குத் தெரியும். மூன் அந்த வீட்டை மிக நன்றாக, என்னைவிட நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான். வீரர்கள் என்னை நிறுத்துவதற்கு முன்பு அவனை மடக்கினேன். ஜெனரலின் ஆயுதச் சேர்ப்புக்களில் ஒரு வளைந்த குறுவாளைப் பிடுங்கி எடுத்தேன். அந்த அரைச் சந்திரனால் அவனுடைய முகத்தில் என்றென்றைக்குமாக ரத்தத்தினால் ஆகிய அரைச்சந்திரனைச் செதுக்கினேன்.”

“போர்ஹே, ஒரு அந்நியரான உங்களிடம் இந்த மனந்திறப்பினைச் செய்திருக்கிறேன். உங்களின் வெறுப்பு அவ்வளவாய் என்னை வருந்தச் செய்யவில்லை.”

இங்கு கதை சொன்னவன் நிறுத்தினான். அவன் கைகள் நடுங்குவதை நான் கவனித்தேன்.

“அப்புறம் அந்த மூன்?”’நான் கேட்டேன் அவன் காட்டிக் கொடுத்துக் பெற்ற பணத்தை எடுத்துக் கொண்டு பிரேஸீலுக்கு ஓடிவிட்டான். அந்த மதியம், சதுக்கத்தில் ஒரு போலி மனித உரு சில குடிகாரர்களால் சுடப்படுவதை அவன் பார்த்தான்.

நான் பலனின்றி கதையின் மிச்சத்திற்காகக் காத்திருந்தேன். இறுதியில் அவனை தொடர்ந்து சொல்லச் சொன்னேன்.

அப்பொழுது ஒரு கேவல் அவன் உடம்பை உலுக்கியது: ஒரு மெலிந்த மென்மையுடன் அவனின் வெண்மையான வளைந்த வடுவைச் சுட்டிக் காட்டினான்.

“நீங்கள் நம்பவில்லையா? அவன் திக்கினான். என் முகத்தின் மீது பெரும் பாதகத்தின் குறி எழுதப்பட்டு நான் அதைச் சுமந்து திரிவதை நீங்கள் பார்க்கவில்லையா? கதையின் இறுதிவரை நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு கூறினேன். என்னைப் பாதுகாத்தவனைப் புறக்கணித்தேன் நான். நான்தான் வின்சென்ட் மூன். இப்பொழுது என்னைப் பழியுங்கள்.”

Translated by Donald A.Yates.

மரணத்தில் ஒரு இறையியல்வாதி-தள்ளிப் போடப்பட்ட மந்திரவாதி-மாற்கு எழுதிய வேதாகமம்-3 Borges’s Stories on related themes

3storiesrelated-themesjlb1மரணத்தில் ஒரு இறையியல்வாதி

ஜோர்ஜ் லூயி போர்ஹே

மெலன்க்தான் இறந்தபோது நிஜ உலகில் வாழ்ந்த போது இருந்த வீட்டினைப் போலவே ஏமாற்றும் வகையிலான ஒரு வீடு தரப்பட்டதாக தேவதூதர்கள் எனக்குச் சொன்னார்கள். (பெரும்பான்மையான புதிய வருகையாளர்கள் நித்தியத்துவத்தில் நுழையும்போது இது நடப்பதுதான்–அதனால் அவர்கள் இன்னும் இயற்கையான உலகத்தில் இருப்பதாக நினைத்து மரணத்தைப் பற்றிய அறியாமையில் இருக்கிறார்கள்.) அவருடைய அறையில் இருந்த எல்லாப் பொருள்களும் அவர் முன்பே உபயோகித்திருந்த பொருள்களை ஒத்திருந்தன – மேஜை, டெஸ்க், அதன் இழுப்பறைகள், புத்தக அலமாரிகள் உள்பட. தனது புதிய இருப்பிடத்தில் விழித்து எழுந்த உடனேயே, தனது மேஜையருகே அமர்ந்து, தனது இலக்கியப்பணியைத் தொடர ஆரம்பித்து, பல  நாட்கள் எழுதுவதில் கழித்தார். எப்பொழுதும்போல, பரோபகாரம் பற்றி ஒரு வார்த்தை கூட எழுத முடியவில்லை. நம்பிக்கையில் விளைந்த நியாயப்படுத்தலை பற்றி மட்டுமே எழுதினார். இந்த விடுபடல், தேவதூதர்களால் பிரஸ்தபிக்கப்பட்டு, அவர்களுடைய தூதுவர்களை அது பற்றி விசாரிக்க அனுப்பினார்கள். மெலன்க்தான் அவர்களுக்குப்    பதிலுரைத்தார்:           மறுதளிப்புக்கு அப்பாற்பட்ட அளவில்நான் நிரூபித்துவிட்டேன்.  ஆன்மாவுக்கு அத்தியாவசிமானதென்கிற எதுவும் பரோபகாரத்தில் கிடையாது. மீட்சி பெற நம்பிக்கை மாத்திரமே போதுமானது.

தான் இறந்துவிட்டதைப் பற்றிச் சந்தேகிக்காமல், தனது எதிர்காலம் சொர்க்கத்திற்கு வெளியில் இருக்கிறது என்பதும் தெரியாமல் அவர் பெரும் உறுதிப்பாட்டுடன் பேசினார். அவர் இந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவதைக் கேட்டதும் தேவதூதர்கள் கிளம்பிச் சென்றனர்.

சில வாரங்கள்  கழித்து, அவரது அறையில் இருந்த பொருள்களும், சாமான்களும் நிறமிழந்து மறையத்  தொடங்கின. இறுதியாக, சாய்வு நாற்காலி, மேஜை, காகிதம், மைக்கூடு தவிர வேறெதுவும் இல்லாமல் போயிற்று. இதை விட அதிகமாக, அறைகளின் சுவர்கள் சுண்ணாம் பினால் திட்டுத் திட்டாகி, தரைக்கு ஒரு மஞ்சள் பளபளப்பு வந்துவிட்டது. மெலன்க்தானின் உடைகளுமே கூட அதிகமான சொரசொரப்பாகி விட்டன. இந்த மாறுபாடுகள் பற்றி வியந்தாலும், நம்பிக்கை பற்றி அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்; பரோபகாரத்தை மறுத்தபடி. இந்த விடுபடுத்தலின் அளவினை அதிகமாக்கவே, அவர் திடீரென்று பூமிக்கடியில் அவரைப் போலவே பிற இறையியல்வாதிகள் இருந்த வேலைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டார். இப்படிப் பூட்டப்பட்ட சில நாட்களில், தனது கோட்பாடு குறித்து சந்தேகப்பட ஆரம்பித்ததால் அவருடைய பழைய அறைக்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார். அவர் இப்போது உடுத்தியிருந்தது ரோமத்தோல். ஆனால் அவர் தனக்கு நடந்தது வெறும் மனமயக்கம்தான் என்று சிரமப்பட்டு தன்னை நம்ப வைத்துக் கொண்டார். மீண்டும் நம்பிக்கையை உயர்த்திப் பிடித்து பரோபகாரத்தை சிறிதுபடுத்த ஆரம்பித்தார்.

ஒரு நாள் மாலை மெலன்க்தானுக்குக் குளிர் எடுத்தது. வீட்டை அலசிப் பார்க்க ஆரம்பித்தார். நிஜ உலகில் இருந்த பழைய வீட்டின் அறைகளுடன் இந்தப் பிற அறைகள் இப்பொழுது பொருந்திப் போகவில்லை. ஒரு அறையில் சில கருவிகள் இறைந்து கிடந்தன. அவற்றின் பயன்பாடு பற்றி அவருக்குத் தெரியவில்லை. மற்றொரு அறை மிகச் சிறியதாகச் சுருங்கிவிட்டதால் அதன் வாசலில் நுழைவது சாத்தியமில்லாமல் இருந்தது. மூன்றாவது அறை மாறுதல் அடையவில்லை. ஆனால் அதன் கதவுகளும் ஜன்னல்களும் பரந்து விரிந்த மணல் மேடுகளை நோக்கித் திறந்தன. வீட்டின் பின்புறத்திலிருந்த அறைகளில் ஒன்று அவரை வழிபட்ட பல மனிதர்களால் நிரம்பியிருந்தது.

அவர்கள் வேறு எந்த இறையியல்வாதியும் அவரைப் போல ஞானம் உள்ளவன் கிடையாது என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். இந்தப் புகழாரங்கள் அவருக்குப் பிடித்திருந்தன. ஆனால் அந்த விருந்தாளிகளில் சிலருக்கு முகங்கள் இருக்கவில்லை. சிலர் இறந்தவர்களாய்க் காணப் பட்டதாலும் அவர்களைச் சந்தேகப்படவும், வெறுக்கவும் செய்தார். இந்தக் கட்டத்தில்தான் பரோபகாரம் பற்றி எழுதுவதென்று தீர்மானித்தார். அதில் இருந்த ஒரே சிக்கல் என்னவென்றால், அவர் ஒரு நாள் எழுதியது மறுநாள் மறைந்து போயிற்று. இந்தப் பக்கங்கள் ஆழ்ந்த நம்பிக்கை இல்லாமல் எழுதப்பட்டதே இதற்குக் காரணம்.

புதிதாக இறந்த மனிதர்கள் பலர் மெலன்க்தானைப் பார்க்க வருகை தந்தனர். ஆனால் அவ்வளவு சீரழிந்து போயிருந்த இருப்பிடத்தில் அவர்கள் தன்னைக் காண்பது பற்றி அவர் அவமானப் பட்டார். தான் சொர்க்கத்தில் தான் இருக்கிறோம் என்பதை அவர்கள் நம்ப வேண்டும் பொருட்டு அண்டையிலிருந்த மந்திரவாதியை வேலைக்கு அமர்த்தினார். அவன் அங்கு வருகிறவர்களுக்கு ஒருவித அமைதியும், பேரொளிர்வும் இருப்பதான தோற்றத்தை வரவழைத்து ஏமாற்றினான். அவரைப் பார்க்க வந்தவர்கள் போன அடுத்த கணமோ, அல்லது, அதற்கு முன்பாகவோ அந்த அலங்கரிப்புகள், பழைய உதிர்ந்த சுவரும் பழைய அல்லல் நிலையும் தெரியும்படி, மறைந்து போயின. அந்த மந்திரவாதியும் முகமில்லாத மனிதர்களில் ஒருவனும் அவரை மணல் குன்றுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டதாகவும் மெலன்க்த்தான் அங்கே இப்போது அசுரகணங்களுக்கு வேலைக்காரனாக இருப்பதாகவும் நான் கடைசியாகக் கேள்விப்பட்டேன்.

Translated by Norman Thomas di Giovanni.

owl

தள்ளிப் போடப்பட்ட மந்திரவாதி

ஜோர்ஜ் லூயி போர்ஹே

சாண்டியாகோ நகரில் மந்திர வித்தையைக் கற்றுக் கொள்ளப் பேராவல் கொண்ட கிறித்தவ மதகுரு ஒருவர் இருந்தார். வேறு எவரையும் விட டோலேடோ பிரதேசத்தில் இருந்த டான் இலான் என்பவருக்கு மந்திர வித்தை அதிகம் தெரியும் என்று கேள்விப்பட்ட சமய குரு மந்திரவாதியைத் தேடி டோலேடோவுக்குச் சென்றார்.

அவர் சென்று சேர்ந்த அந்தக் காலையிலேயே டான் இலானின் வீட்டுக்குச் சென்று அவருடைய வீட்டின் பின்புறத்தில் இருந்த ஒரு அறையில் அவர் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மதகுருவை இன்முகத்துடன் வரவேற்ற டான் இலான் அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை மதகுருவின் வருகையின் நோக்கத்தினைச் சொல்வதைத் தள்ளிப் போடும்படி கேட்டுக் கொண்டார். மனதிற்கு இதமான வீட்டின் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று டான் இலான் மதகுருவின் வரவினால் தான் பெரு மகிழ்ச்சி அடைந்ததாகச் சொன்னார். அவர்கள் சாப்பிட்ட பிறகு சமயகுரு டான் இலானிடம் தான் வந்த நோக்கத்தினைச் சொல்லி மந்திர வித்தையைத் தனக்குக் கற்றுத் தரும்படி வேண்டினார். ஏற்கனவே தனது விருந்தாளி ஒரு மதகுரு என்பதும், மரியாதைக்குரிய மனிதர் என்பதும், நல்ல எதிர்காலம் உள்ளவர் என்பதும் தெரிந்திருந்ததாகக் கூறினார் டான் இலான். அவருக்குத் தன் எல்லா ஞானத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டி வந்தால் அவரது சேவைகளுக்கு மதகுரு எதையும் சன்மானம் அளிக்க மாட்டாத நாள் ஒன்று வரக்கூடும் என்றார். இது போலத்தான் பெரிய இடத்துப் பேர்வழிகள் செய்வது வழக்கம் என்றும் கூறினார். மதகுரு டான் இலானின் பெரும் கருணையை தான் என்றுமே மறக்கமாட்டார் என்றும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார் என்றும் மதகுரு சொன்னார். அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்ததும், மந்திர வித்தைகள் மிகத் தனிமையான இடங்கள் தவிர வேறெங்கும் கற்றுக் கொள்ள முடியாதென விளக்கம் சொல்லி, மதகுருவை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அடுத்த அறைக்குச் சென்றார். அதன் தரை மீது ஒரு அகலமான வட்ட வளையம் கிடந்தது. இதற்கு முன்பாகவே பணிப்பெண்ணிடம் இரவு உணவுக்கு பார்ட்ரிஜ் பறவைக் கறி தயார் செய்யச் சொல்லி, ஆனால் அவற்றை அவர் சொல்கிற வரை பொறித்து விட வேண்டாம்,  என்று கூறினார்.

டான் இலானும் அவரது விருந்தாளியும் வளையத்தைத் தூக்கி நன்கு புழங்கப்பட்ட, வளைந்து வளைந்து செல்லும் படிகளின் வழியாகக் கீழே இறங்கினர். அவர்கள் மிக ஆழமான தூரத்திற்குச் சென்றதால் டேகலின் படுகை தலை மீதிருக்கக்கூடும் என்று மதகுரு நினைத்தார். படிக்கட்டின் இறுதியில் ஒரு தனித்த அறையும் அதில் நிறைய புத்தகங்களும், ஒரு விதமான காபினட் நிறைய மாஜிக் செய்வதற்குப் பயன்படும் உபகரணங்களும் இருந்தன. அவர்கள் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த போது திடீரென்று பிஷப்பினால் எழுதப்பட்ட கடிதத்தினை எடுத்துக் கொண்டு இரண்டு ஆட்கள் தோன்றினர். கடிதத்தில் அவரது மாமனான பிஷப் தனக்கு உடல்நலம் மோசமாக இருப்பதாகவும், மதருரு அவரை உயிருடன் பார்க்க விரும்பினால் தாமதிக்கவே கூடாது என்றும் எழுதியிருந்தார். இந்தச் செய்தி மதகுருவுக்கு மிகுந்த சங்கடம் தருவதாக இருந்தது. ஒன்று, அவரது மாமாவுக்கு உடல்நலம் கெட்டிருப்பது. இரண்டாவது, இந்த ஆய்வினைத் தொடர முடியாது போய்விடும். இறுதியில், தங்கி விடுவது என்று முடிவெடுத்து, ஒரு மன்னிப்புக் கோரும் கடிதத்தை எழுதி பிஷப்புக்கு அனுப்பினார்.

மூன்று நாட்கள் சென்றன. துக்கம் அனுஷ்டிக்கும் பல ஆட்கள் அடுத்தடுத்த கடிதங்களை மதகுருவுக்குக் கொண்டு வந்தனர். அதில் பிஷப் இறந்து விட்டார் என்றும், கடவுளின் கிருபையால் மதகுரு அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதையும் படித்தார். இருந்த இடத்திலேயே இருக்கும்படி கடிதங்கள் அறிவுறுத்தின. அவரது தேர்வின் போது அவர் அங்கு இல்லாதிருப்பது சிலாக்கியம் என்பதால்.

பத்து நாட்கள் கடந்தன. நேர்த்தியாக உடையணிந்த இரண்டு கனவான்கள் மதகுருவின் காலடியில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து அவரது கைகளை முத்தமிட்டு அவரை ‘பிஷப்’ என்று வாழ்த்தினர். இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த டான் இலான், பெருமகிழ்ச்சியுடன் புதிய மதபீடத்தலைவர் பக்கம் திரும்பி, இந்த மாதிரியான நல்ல செய்திகள் தன் வீட்டுக்கு வருவது குறித்து கடவுளுக்கு நன்றி தெரிவித்தார். பிறகு, இப்பொழுது காலியாக இருக்கும் மதகுருவின் பதவியை தனது மகனுக்குத் தரும்படி கேட்டார். பிஷப் தன்னுடைய சொந்த சகோதரனுக்கே அந்தப் பதவியை ஒதுக்கி வைத்து விட்டதாகவும், ஜெபாலயத்தில் வேறு வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி, அவர்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து சாண்டியாகோ செல்ல வேண்டும் என்று கெஞ்சினார்.

அவர்கள் சாண்டியாகோ நகரைச் சென்றடைந்தார்கள். அங்கே அவர்களுக்கு பெரும் மரியாதையான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆறுமாதம் கழிந்தது. போப்பிடமிருந்து தூதுவர்கள் பிஷப்பிடம் வந்தார்கள். தூலோஸ் நகரத்தின் தலைமைக்குரு பதவியை அவருக்கு அளித்து, அடுத்து வருபரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பினையும் அவரிடம் ஒப்படைத்திருந்தார் போப். இதைக் கேட்ட டான் இலான், தலைமைக்குறுவிடம் அவர் கொடுத்த பழைய வாக்குறுதியை நினைவுபடுத்தி, காலி செய்யப்பட்ட பதவியைத் தன் மகனுக்குத் தரும்படி வேண்டினார். பிஷப்பின் பதவியை ஏற்கனவே தனது அப்பாவின் சகோதரனுக்கு ஒதுக்கி வைத்து விட்டதாகவும், ஆனால் டான் இலானுக்குத் தன் உதவியைத் தருவதென்ற வாக்குறுதியைக் கொடுத்திருப்பதால், அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து தூலோஸூக்குச் செல்ல வேண்டும் என்று கூறினார்        தலைமைக்குரு. டான் இலானுக்கு இதை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

இந்த மூவரும் தூலோஸூக்குச் சென்றார்கள். அங்கே கூட்டுப் பிரார்த்தனையுடன் பெரும் மரியாதையான வரவேற்பு கிடைத்தது. இரண்டு வருடங்கள் கழிந்தன. போப்பிடமிருந்து தூதுவர்கள் ஆர்ச்பிஷப்பிடம் வந்தார்கள். அவரைக் கார்டினல் ஸ்தானத்துக்குப் பதவி உயர்வு செய்து அவருக்கு அடுத்தவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் அவர் கையிலேயே ஒப்படைத்திருந்தார்கள். இதை அறிந்தவுடன் டான் இலான், கார்டினலிடம் அவர் கொடுத்த பழைய வாக்குறுதியை நினைவூட்டி, காலியான பதவியைத் தன் மகனுக்குத் தரும்படி கேட்டார். ஏற்கனவே ஆர்ச்பிஷப் பதவியைத் தன்னுடைய சொந்தத் தாய் மாமனுக்கு ஒதுக்கி வைத்து விட்டதாகவும்- அவர் ஒரு மிக வயதான மனிதர்–ஆனாலும் டான் இலானும் அவருடைய மகனும் அவருடன் ரோமாபுரிக்கு வருவதாக இருந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு சாதகமான சந்தர்ப்பம் கிடைத்து விடும் என்றார் கார்டினல். டான் இலான் இதனை ஆட்சேபித்தார். ஆனால் இறுதியில் ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மூவரும் சேர்ந்து ரோம் நகருக்குக் கிளம்பினார்கள். அங்கே, கூட்டுத் தொழுகையுடனும், ஊர்வலங்களுடனும் பெரும் மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார்கள். நான்கு வருடம் கழித்து போப் இறந்த போது, மற்ற எல்லாக் கார்டினல்களாலும் சேர்ந்து போப் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மதகுரு. இதை அறிந்த டான் இலான் மகாப்புனிதரின் கால்களை முத்தமிட்டு, பழைய வாக்குறுதியை நினைவூட்டி, காலியாக்கப்பட்ட கார்டினல் பதவியைத் தன் மகனுக்குத் தரும்படி கேட்டார். டான் இலானின் தொடர்ச்சியான வேண்டுகோள்களினால் சலித்துப் போய் விட்டதாக இப்போது கூறிய போப், தொடர்ந்து அவரிடம் இதே மாதிரி விண்ணப்பித்துக் கொண்டிருந்தால் டான் இலானை ஜெயிலில் போட்டு விடுவதாக எச்சரித்தார். இப்போது டான் இலான் வெறும் மந்திரவாதி என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு விட்டதாலும், தூலோஸில் அவர் வெறும் மந்திரக் கலையின் ஆசிரியர் என்று தெரிந்து விட்டதாலும்.

தான் ஸ்பெயின் தேசத்திற்கே திரும்புகிறேன் என்று சொல்வதைத் தவிர பாவப்பட்ட டான் இலானால் வேறு எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. நீண்ட கடல் பயணத்தின் போது சாப்பிடுவதற்காக ஏதாவது தரும்படி கேட்டார். மீண்டும் ஒரு முறை போப் மறுத்தார்.

அப்போது டான் இலானின் முகம் மிக விநோதமான வகையில் மாறிவிட்டிருந்தது. தீர்மானமான குரலில் கூறினார். அப்படியானால், நான் இந்த இரவு சாப்பிடுவதற்காக சமைக்கச் சொல்லியிருந்த பார்ட்ரிஜ் பறவைகளைத்-தான் சாப்பிட வேண்டி இருக்கும்.

பணிப்பெண் முன்னால் வந்தாள். டான் இலான் பேட்ரிஜ் பறவைகளைப் பொறிக்கும்படி சொன்னார். உடனடியாக போப் தன்னை டோலேடோவில் பூமிக்கு அடியில் இருந்த தனியறையில் தன்னைக் கண்டார் சாதாரண, சாண்டியாகோவின் மதகுருவாகத்  கண்டார். அவ்வளவு அவமானமாக உணர்ந்ததால் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. டான் இலான் இந்த சோதனை போதுமானது என்று கூறி, மதகுருவுக்குபார்ட்ரிஜ்  பறவைக் கறியில் பங்கு தர மறுத்து, வாசல் வரை வந்து பெறும் மரியாதையுடன் விடை கொடுத்து, மதகுரு பத்திரமாக வீடு திரும்ப வாழ்த்தினார்.

Translated  by Norman Thomas di Giovanni..

மாற்கு எழுதிய வேதாகமம்

ஜோர்ஜ் லூயி போர்ஹே

இந்த நிகழ்ச்சிகள் யூனின் நகரத்தின் தெற்குப் பகுதியில் உள்ள லா கொலோராடோ கால்நடைப்பண்ணையில் 1928 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கடைசி நாட்களில் நடந்தன. இதன் பிரதான பாத்திரம் பால்த்தஸார் எஸ்பினோசா என்ற பெயர் கொண்ட மருத்துவம் படித்த மாணவன். இப்போதைக்கு அவனை நாம் போனஸ் அயர்சில் இருந்து வந்த சாதாரண இளைஞர்களில் ஒருவனாகச் சித்தரிக்கலாம். அவனிடமிருந்த ஏறத்தாழ ஒரு எல்லையற்ற கருணையும், மேடைப் பேச்சுக்கான திறனும் தவிர வேறு எதுவும் அவனிடம் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கவில்லை. இரண்டாவது அவனுக்கு ரமேஸ் மெஜியாவில் இருந்த ஆங்கிலப்பள்ளியில் பல பரிசுகளைப் பெற்றுத் தந்தது. விவாதம் செய்வதை அவன் விரும்பவில்லை. கேட்டுக் கொண்டிருப்பவனே தன்னை விட சரியின் பக்கம் இருப்பதை விரும்பினான்.  அவன் விளையாடிய எந்த விளையாட்டிலும் அடங்கியிருக்கும் யதேச்சைத் தன்மையின் சாத்தியப்பாடுகள் அவனைக் கவர்ந்தாலும் அவன் ஒரு மோசமான ஆட்டக்காரனாகவே இருந்தான். காரணம், ஜெயிப்பது அவனுக்கு எந்தவித சந்தோஷத்தையும் கொடுக்கவில்லை. அவனது விரிவான அறிவுக்கூர்மை திசைப்படுத்தப்படாமலிருந்தது; முப்பத்து மூன்று வயதாகியும் பட்டப்படிப்பை முடிப்பதற்கான மதிப்பெண்கள் ஒரு பாடத்தில் அவனுக்குக் குறைவாக இருந்தது – அவனை அதிகம் ஈர்த்த பாடத்தில்; அவனுடைய அப்பா (அவர் காலத்திலிருந்த எல்லாக் கனவான்களைப் போலவும்) ஒரு சுதந்திரச் சிந்தனையாளராக இருந்தார். அவனுக்கு ஹெர்பர்ட் ஸ்பென்சரின் பாடங்களை அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் அவன் அம்மா, மாண்ட்டி வீடியோவுக்குப் பயணம் கிளம்பு முன் ஒரு முறை அவனிடம் ஒவ்வொரு இரவும் கர்த்தருக்கான பிரார்த்தனையைச் சொல்லி சிலுவைக் குறி இடும்படி கேட்டுக் கொண்டாள். இத்தனை வருடங்களில் அவன் அந்த வாக்குறுதியை மீறவே இல்லை.

எஸ்பினோசா ஆர்வத் துருதுருப்பில் குறைந்தவனல்ல. கோபம் என்பதை விட அதிக அக்கறையின்மையினால், பல்கலைக் கழக எதிர்ப்பு ஊர்வலத்தில் சேரச் சொல்லிக் கட்டாயப்படுத்திய சக மாணவர்களுடன் சில குத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறான். எதிர்ப்பின்றி உடன்பட்டு விடும் தனது தன்மையால் அவன் கேள்விக்குரிய கருத்துக்களை, அல்லது, மனதின் பழக்கங்களைக் கொண்டிருந்தான். அர்ஜன்டீனாவை விட, உலகத்தின்  பிற பகுதியில் வசிப்பவர்கள் நம்மை சிவப்பிந்தியர்கள் என்று எண்ணி விடக்கூடும் என்ற பயமே அவன் மனதை அதிகம் ஆக்கிரமித்திருந்தது. பிரான்ஸ் நாட்டினை வழிபட்டான். ஆனால், பிரெஞ்சுக்காரர்களை வெறுத்து ஒதுக்கினான். அவன் அமெரிக்கர்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்ற போதும் போனஸ் அயர்சில் இருந்த தங்களது உயரமான கட்டிடங்களைப் போலவே அமெரிக்காவில் நிறைய இருந்தன என்ற உண்மையோடு அவனுக்கு உடன்பாடு இருந்தது. மலை அல்லது குன்றுப் பிரதேசத்து மாட்டுக்காரர்களை விட சமவெளியில் இருந்த மாட்டுக்காரர்கள் கூடுதல் சிறப்பான குதிரை சவாரிக்காரர்கள் என்று நம்பினான். கொலோராடோவில் கோடை மாதங்களைக் கழிக்க அவனது மாமா பிள்ளை டேனியல் அவனை அழைத்தபோது அவன் உடனடியாக சரி என்று சொல்லிவிட்டான். கிராமப்புறம் அவனுக்கு நிஜமாகவே பிடித்திருந்தது என்பது மட்டுமல்ல:  இயல்பாகவே அவனிடமிருந்த தன்னிறைவினாலும், மற்றும், இல்லை என்று சொல்வதற்குப் பல காரணங்களைக் கற்பனை செய்வதை விட சரி என்று சொல்வது சுலபமாக இருந்த காரணத்தாலும் அவன் டேனியலின் அழைப்பை ஏற்றுக் கொண்டான்.

கால்நடைப் பண்ணையின் பிரதான வீடு பெரியதாகவும், சிறிது பராமரிப்பு இல்லாமலும் இருந்தது. தலைமைப் பண்ணையாளான குட்ரெவின் குடியிருப்பு அதற்கு அருகிலேயே இருந்தது. குட்ரெயின் குடும்பத்தில் மூன்று அங்கத்தினர்கள். தந்தை, வழக்கத்திற்கு மாறான அசிங்கமான தோற்றமுடைய ஒரு மகன், யாருக்குப் பிறந்தாள் என்று தெளிவாகத் தெரியாத ஒரு மகள். அவர்கள் வலுவான எலும்புகளுடன், உயரமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தார்கள். அவர்களின் தலை முடி சிவப்பு என்று சொல்லும்படியாகவும், முகங்கள் சிவப்பிந்திய பிறப்பினையும் தெரிவித்தன. அவர்கள் சரியாகப் பேசத் தெரியாதவர்களாக இருந்தார்கள். தலைமைப் பண்ணை யாளின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போய் விட்டாள்.

கிராமப்புறத்தில் எஸ்பினோசா முன்பின் தெரியாத, கனவிலும் நினைத்துப் பார்த்திராத பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினான். எடுத்துக் காட்டாக,  குடியிருப்புகளை நெருங்கும் போது குதிரையை நான்குகால் பாய்ச்சலில் ஓட்டக் கூடாது என்பதையும்,ஏதாவது ஒரு விசேஷமான நோக்கத்திற்கு தவிர வேறு விஷயங்களுக்கு குதிரையில் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் தெரிந்து கொண்டான். போகப் போக, பறவைகளின் குரல்களை வைத்தே அவற்றை வேறுபடுத்திச் சொல்லத் தெரிந்து கொண்டான்.

சில நாட்களுக்குப் பிறகு, சில கால்நடைகளின் விற்பனையை முடிப்பதற்காக டேனியல், போனஸ் அயர்சுக்குக் கிளம்ப வேண்டி வந்தது. அதிகபட்சமாகப் போனால் இந்தச் சிறு வேலையை முடிப்பதற்கு அவனுக்கு ஒரு வாரம் பிடிக்கலாம். ஏற்கனவே பெண்களைப் பொறுத்தவரையிலான அவனுடைய இடையறாத அதிர்ஷ்டம் பற்றியும் நவநாகரிக ஆடைகளில் அவனுக்கு இருந்த அளவற்ற ஈடுபாடு பற்றியும் கேட்டுக் கேட்டு சலித்துப் போயிருந்த எஸ்பினோசா தன்னுடைய பாடப்புத்தகங்களுடன் கால்நடைப் பண்ணையிலேயே தங்கிவிடுவது என்று முடிவெடுத்தான். ஆனால் வெய்யிலோ தாங்க முடியாததாக இருந்தது. இரவும் இதற்கான தணிப்பைக் கொண்டு வரவில்லை. விடியல் நேரத்தில் ஒரு நாள் காலை இடிச்சத்தம் அவனை எழுப்பி விட்டது. வீட்டுக்கு வெளியிலே காற்று ஆஸ்திரேலிய பைன் மரங்களை உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தது. மழையின் கனத்த தொடக்கத் துளிகள் விழும் ஓசையைக் கேட்டு கடவுளுக்கு நன்றி சொன்னான். உடனடியாகக் குளிர்ந்த காற்று உள்ளே உருண்டோடி வந்தது. அந்த மதியம் சாலாடோ நதியில் வெள்ளம் கரை புரண்டது.

அடுத்த நாள், பிரதான வீட்டின் மேல்தளத்திலிருந்து, வெள்ளத்தில் மூழ்கிய வயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது, பாம்ப்பா பிரதேசத்தை ஒரு கடலுக்கு ஒப்புமையாகச் சொல்லும் வழக்கமான உருவகம் முற்றிலுமாகத் தவறானதல்ல என்று நினைத்தான்–டபிள்யூ. ஹெச். ஹட்சன் என்பவர், கடல் அகலமாகத் தெரிவதற்குக் காரணம் குதிரையின் மேலிருந்தோ, கண்பார்வையின் தளத்திலிருந்தோ பார்க்காததும், கப்பலின் மேல்தளத்திலிருந்து நாம் பார்ப்பதுமே என்று கூறியிருந்த போதும்–குறைந்த பட்சம் அந்தக் காலை நேரத்தில்–மேற்படி ஒப்புமை மிகவும் சரியாகவே இருந்ததாக எண்ணிக் கொண்டான் அவன்.

மழை விடவே இல்லை. குட்ரெ குடும்பத்தார் நகரவாசியான எஸ்பினோசாவால் இடைஞ்சல் செய்யப்பட்டோ, அல்லது, உதவப்பட்டோ, கால்நடைகளில் பெரும்பான்மையானவற்றை வெள்ளத்திலிருந்து மீட்டனர். ஆனாலும், பல கால்நடைகள், மூழ்கிப் போயின. லா கொலோராடோவை நோக்கி வந்தவை மொத்தம் நான்கு சாலைகள். எல்லாமே வெள்ளத்தில் மூழ்கிவிட்டிருந்தன. மூன்றாவது நாள் அன்று குட்ரெ குடும்பத்தார் இருந்த வீடு ஒழுகலினால் மூழ்கிவிடும் ஆபத்தில் இருந்ததால் பிரதான வீட்டிற்குப் பின்பக்கம் இருந்த கருவிகள் வைக்கும் கொட்டகைக்கு அருகிலிருந்த ஒரு அறையை எஸ்பினோசா அவர்களுக்கு ஒதுக்கித் தந்தான். இது அவர்கள் எல்லோரையும் நெருக்கமாக இணைத்தது. பெரிய உணவருந்தும் கூடத்தில் அவர்கள் எல்வோரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். உரையாடல் நடத்துவது கடினமாக ஆகியது. கிராமப்புறம் பற்றி அவ்வளவு தெரிந்து வைத்திருந்த குட்ரெ குடும்பத்தாருக்கு அவற்றை விளக்கிச் சொல்வது கடினமாக இருந்தது. ஓர் இரவின் போது ‘யூனின் பகுதியில் பிரதேசக் கட்டுப்பாடு அமைந்திருந்த சமயம் நிகழ்ந்த சிவப்பிந்தியர்களின் தாக்குதல்கள் பற்றி ஞாபகம் இருக்கிறதா’ என்று எஸ்பினோசா கேட்டான். அதற்கு அவர்கள் ஆம் என்று பதில் சொன்னார்கள். ஆனால் முதலாம் சார்லஸ் அரசனின் தலை வெட்டப்பட்டது குறித்த கேள்விக்கும் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பார்கள். கிராமப்புறத்தில் எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்ட ஒவ்வொரு நீண்டநாள் உயிரோடிருத்தலும் நிஜத்தில் ஒரு மோசமான ஞாபக சக்தியின் விஷயமாகவோ, தேதிகள் பற்றிய மங்கலான கருதுதலும் ஆகவோ இருக்கக் கூடும் என்று அவன் அப்பா சொன்னதை நினைவு கூர்ந்தான். மாட்டுக்காரர்கள் தங்கள் பிறந்த வருடம் என்னவென்று அறியாமலும் தங்களைப் பெற்றெடுத்தவனின் பெயரை அறியாமலும் இருக்கத் தகுந்தவர்கள் தான்.

அந்த முழு வீட்டிலும், Farm Journalன் ஒரு தொகுதி, கால்நடை மருந்து பற்றி ஒரு கையேடு, உருகுவே தேசத்து காவியமான Tabre வின் டீலக்ஸ் பதிப்பு, History of Short Horn Cattle in Argentina என்ற நூல், காமத்துவமான அல்லது துப்பறிதல் தொடர்பான கதைப் புத்தகங்கள், சமீப நாவலான Don Segunda Sombra, இவை தவிர வேறு படிக்கக் கூடிய விஷயங்கள் இருக்கவில்லை. எஸ்பினோசா, தவிர்க்க இயலாத இரவு உணவு இடைவேளையை ஏதோ வகையில் சரிகட்டுவதற்காக இந்த நாவலின் சில அத்தியாயங்களை, படிக்கவும் எழுதவும் தெரியாத குட்ரெ குடும்பத்தாருக்கு படித்துக் காட்டினான். துரதிர்ஷ்டவசமாக தலைமைப் பண்ணையாளும் நாவலின் நாயகனைப் போல கால்நடை ஓட்டிச் செல்பவனாக இருந்திருப்பதால், கதை நாயகனின் செயல்கள் அவனது ஈடுபாட்டினைக் கூர்மைப்படுத்தவில்லை. அந்தக் கதை லேசானது என்று கூறிய குட்ரெ, கால்நடை ஓட்டிச் செல்பவர்கள் எப்போதும் தங்களுக்குத் தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் சுமந்து கொண்ட பொதிக்குதிரையில் பயணம் செய்தார்கள் என்றும், அவன் ஒரு கால்நடை ஓட்டுபவனாக இல்லாமல் போயிருந்தால் மிகவும் தூரத்திலிருந்த லாகுனா த கோமஸையும், பிரேகடோ நகரினையும், சாகாபூகோவில் நுநெஸ் குடும்பத்தினரின் பெருக்கத்தையும் என்றைக்குமே பார்த்திருக்க முடியாது போயிருக்கும் என்றும் கூறினான். சமையல்கட்டில் ஒரு கிட்டார் வாத்தியம் இருந்தது. நான் விவரிக்கும் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு முன்பு, பண்ணையாட்கள் வட்டமாக உட்கார்ந்து கொள்வது வழக்கம். யாராவது ஒருவர் கிடாரை வெறுமே சுருதி சேர்த்துக் கொண்டிருப்பார், வாசிக்கும் நிலைக்கு வராமலே. இதற்குப் பெயர் கிடார் விழா ஆகும்.

தாடி வளர்த்து விட்டிருந்த எஸ்பினோசா, கண்ணாடியின் முன் நின்று அவனது முகத்தின் புதிய வடிவத்தை ஆராயத் தலைப்பட்டான். போனஸ் அயர்ஸ் திரும்பிய பிறகு தன்  நண்பர்களை சேலோடா வெள்ளம் பற்றிய கதையைச் சொல்லி எப்படிச் சலிக்க வைப்பான் என்பதை நினைத்து இப்போது அவன் சிரித்துக் கொண்டான். விநோதமான விதத்தில் அவன் அடிக்கடி சென்றறியாத, அல்லது, போகத் தலைப்படாத இடங்களைப் பற்றிய இழப்புணர்வு அவன் மனதில் இடம் பிடித்தது.  கேப்ரெரா தெருவில் தபால்பெட்டி இருந்த ஒரு ஓரம்; பிளாஸா தல் ஒன்ஸ்க்கு சில கட்டிடங்கள் தள்ளி ஜூஜூயி தெருவின் மீதிருந்த ஒரு வெளி வாயிலில் இருந்த சிமெண்ட் சிங்கங்களில் ஒன்று; அதன் அமைவிடம் எதுவென்று அவன் அறிந்திராத, ஓடுகள் பதித்த தரை கொண்ட ஒரு பழைய மதுவருந்தும் விடுதியையும். அவன் அப்பாவையும் சகோதரர்களையும் பொறுத்தவரை, அவன் தனிமைப்பட்டுவிட்டான் –அர்த்த மாறுதல் வரலாற்று வகையில் சொல் மிகப் பொருந்தி வந்தது–வெள்ளத்தினால் என்று அவர்கள் ஏற்கனவே தெரிந்து கொண்டிருப் பார்கள்.

வீணான நீரினால் இன்னும் சூழப்பட்டிருந்த வீட்டினை அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான். ஒரு ஆங்கில பைபிள் அவனுக்குத் தட்டுப்பட்டது. பைபிளின் இறுதியில் இருந்த காலிப் பக்கங்களில் குத்ரெவின் முன்னோர்கள் அவர்களின் பாரம்பரியத்தின் பதிவுகளை கையெழுத்தில் விட்டுச் சென்றிருந்தார்கள். அவர்களது சொந்த ஊர் இன்வெர்னஸ். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் புதிய உலகினை அவர்கள் அடைந்த போது சாதாரணத் தொழிலாளர்களாகத் தான் இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. சிவப்பிந்தியர்களுடன் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்கள். 1870களில் எப்போதோ, அவர்களுக்குப் படிக்கவும் எழுதவும் தெரியாமல் போன பிறகு, வரலாறு தொடர்ச்சி விட்டுப் போயிருந்தது. இதற்கு அடுத்த சில தலைமுறைகளில் அவர்களுக்கு ஆங்கிலம் மறந்து போய்விட்டது. எஸ்பினோசா அவர்களைத் தெரிந்து கொண்ட சமயத்தில் அவர்களுடைய ஸ்பானிய மொழி அவர்களுக்கு சிரமம் கொடுத்தது. அவர்கள் மதநம்பிக்கை அற்றவர்களாய் இருந்தார்கள். ஆனாலும் மங்கலான தடயங்களைப் போல, கால்வினிஸ்டுகளின் இறுகலான மதவெறியும், பாம்ப்பா பிரதேசத்து செவ்விந்தியர்களின் மூட நம்பிக்கைகளும் அவர்களின் ரத்தத்தில் உறைந்திருந்தன. இந்தக் கண்டுபிடிப்பினை எஸ்பி னோசா அவர்களிடம் பின்னர் கூறினான். அதை அவர்கள் கவனித்தாகவே தெரியவில்லை.

அந்தத் தொகுதியைப் புரட்டிக் கொண்டிருந்த போது, அவனது விரல்கள் புனித மாற்கு எழுதிய வேதாகமத்தின் தொடக்கத்தில் இருந்தன. மொழிபெயர்ப்பில் ஒரு பயிற்சியாக இருக்கட்டும் என்றோ, அல்லது, ஒரு வேளை அதில் எதையும் குட்ரெ குடும்பத்தார் புரிந்து கொண்டார்களா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியோ, அந்த மாலைச் சாப்பாட்டிற்குப் பிறகு அதைப் படிக்க ஆரம்பிப்பது என்ற முடிவினை எடுத்தான் எஸ்பினோசா. மிக ஆழ்ந்த கவனத்துடன் அவர்கள் அதைக் கேட்டுக் கொண்டது அவனுக்கு வியப்பாக இருந்தது. புத்தகத்தின் மீது அச்சிடப் பட்டிருந்த தங்கமுலாம் எழுத்துக்கள் அதற்கு ஒருவித அதிகார தோரணையை கொடுத்திருக்கலாம். இன்னும் அது அவர்கள் ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்று நினைத்தான் எஸ்பினோசா. பல தலைமுறையைச் சேர்ந்த மனிதர்கள் பதிவு செய்யப்பட்ட காலகட்டம் முழுக்க எப்பொழுதுமே இரண்டு கதைகளை மாத்திரமே சொல்லியும், திரும்பத் திரும்பச் சொல்லியுமிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது.  வெகுவாக நேசிக்கப்பட்ட தீவு ஒன்றின் பொருட்டு மத்திய தரைக்கடல் பிரதேசங்களிலெல்லாம் தேடித் தொலைந்து போன கப்பல் ஒன்றின் கதை; மற்றும், கொல்கொதா என்ற இடத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஒரு கடவுள், இப்படி. ரேமோஸ் மெஜியாவில் பள்ளி நாட்களிள் பேச்சுப் போட்டிக்காக தனது பயிற்சிப் பாடங்களை நினைவு படுத்திக் கொண்டு, நீதிக் கதைகளுக்கு வந்த போது எஸ்பினோசா தான் சொல்லும் விஷயத்தில் தெளிவாக இருந்தான்.

வேதாகமத்தைத் தாமதப்படுத்த வேண்டாம் என்பதற்காக நெருப்பில் வாட்டப்பட்ட இறைச்சி யையும், பதனப்படுத்தப்பட்டு திணிக்கப்பட்ட சார்டைன் மீன்களையும் பூட்டி வைக்க ஆரம்பித் தார்கள். ஒரு சிறிய நீலநிற ரிப்பனைக் கொண்டு அந்தப் பெண் அலங்கரித்திருந்த செல்ல ஆடு முள்கம்பியின் பிசிறில் காயம் பட்டுக் கொண்டது. ரத்தப் போக்கினை நிறுத்துவதற்கு அவர்கள் சிலந்தி வலையை காயத்திற்கு இட விரும்பிய பொழுது எஸ்பினோசா ஏதோ மருந்து கொடுத்து ஆட்டைக் குணப்படுத்தினான். இந்த மருத்துவம் அவர்களுக்குள்ளாக விழிப்படையச் செய்திருந்த நன்றியுணர்வு அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.(குட்ரெ குடும்பத்தாரை நம்பாமல் ஆரம்பத்தில் அவன் கொண்டு வந்திருந்த இருநூற்றைம்பது பெசோக்களை அவனுடைய புத்தகங்களில் ஒன்றுக்குள்  ஒளித்து வைத்திருந்தான்)இப்போது அந்த இடத்தின் எஜமானர் வெளியில் சென்றிருக்கவே, அவர் இடத்தை எடுத்துக் கொண்டு அவர்களுக்குத் தயக்கத்தோடு கட்டளை களைப் பிறப்பித்தான். அவற்றை அவர்கள் உடனடியாக நிறைவேற்றினார்கள். குட்ரெ குடும்பத்தார் அவன் இல்லாமல் தொலைந்து போய் விட்டவர்களைப் போல் ஒவ்வொரு அறையாக அவனைப் பின் தொடர்ந்து வர விரும்பினார்கள். இவ்வாறே வீட்டைச் சுற்றி இருந்த மேல்தளத்திற்குச் செல்லும் போதும் பின் தொடர்ந்தார்கள். அவர்களுக்கு படித்துக் காட்டிக் கொண்டிருக்கும் போது தான் தவறி மேஜை மீது விழ விட்ட ரொட்டித் துணுக்குகளை அவர்கள் ரகசியமாகத் திருடியதைக் கவனித்தான் அவன். ஒரு நாள் மாலை, அவனைப் பற்றி அவர்கள் மரியாதையுடன் சொற்பமான வார்த்தைகளில் பேசிக் கொண்டதை அவர்களுக்குத் தெரியாமல் செவிமடுத்தான்.

மாற்கு எழுதிய வேதாகமத்தை படித்துக் காட்டிவிட்ட பிறகு, பாக்கியிருந்த மூன்று ஆகமங்களில் ஒன்றினைப் படித்துக் காட்ட விரும்பினான். ஆனால் கேட்டதன் அர்த்தங்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு அவன் அப்பொழுது வாசித்து முடித்திருந்ததை திரும்ப வாசிக்கும்படி வேண்டினார்கள். மாறுதல்களையும் புதுமையையும் விட, குழந்தைகள் போல திரும்பக் கூறுதலே அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கும் என்று எஸ்பினோசா நினைத்தான். அன்றிரவு – இது ஒன்றும் ஆச்சரியப்படத் தக்கதல்ல-அவன் ஜலப்பிரளயத்தைக் கனவு கண்டான். பிரளயத் திலிருந்து தப்பிப்பதற்கான சிறுகப்பலைக் கட்டும்போது அடிக்கப்பட்ட சுத்தியல் ஓசை யினால் அவன் விழித்தெழுந்தான். அவை ஒரு வேளை இடியோசையாக இருக்கக் கூடும் என்று அவன் நினைத்தான். நிஜத்தில், விட்டிருந்த மழை மீண்டும் தொடங்கியது. குளிர் கடுமையாக இருந்தது. கருவிகள் வைக்கும் அறையை புயல் சேதப்படுத்திவிட்டதாக குட்ரெ குடும்பத்தார் சொன்னார்கள். தூலங்களை மீண்டும் பொருத்திய பின் அவனுக்குக் காட்டுவதாச் சொன்னார்கள். இப்போது அவன் ஒரு அந்நியன் அல்லன். அவனைக் கெடுக்கும் அளவுக்கு அவர்கள் விசேஷ அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்கள். அவர்கள் யாருக்கும் காபி பிடிக்காது. ஆனாலும், அவனுக்காக ஒரு சிறிய கோப்பை காபி எப்போதும் இருந்தது. அதில் அவர்கள் எப்பொழுதுமே நிறைய சர்க்கரை போட்டிருந்தார்கள்.

செவ்வாய்க்கிழமை ஒரு புதுப்புயல் தொடங்கி விட்டிருந்தது. வியாழக்கிழமை இரவு, அவனது அறைக் கதவின் மென்மையான தட்டல் கேட்டு விழித்தெழுந்தான். முன்ஜாக்கிரதையாக அவன் எப்போதும் கதவைச் சாத்தியே வைத்திருந்தான். எழுந்து கதவைத் திறந்தான். அந்தப் பெண் அங்கே நின்று கொண்டிருந்தாள். இருட்டில் அவளை அடையாளப்படுத்துவது சிரமமாக இருந்தது. ஆனால் அவளுடைய காலடி ஓசையை வைத்து அவள் செருப்பு போடாமல் வந்திருக்கிறாள் என்று சொல்ல முடிந்தது. சில கணங்களுக்குப் பிறகு கட்டிலில் இருக்கும் பொழுது, வீட்டின் மறுகோடியிலிருந்து அவள் நிர்வாணமாகவே வந்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டான். அவள் அவனை அணைத்துக் கொள்ளவோ, ஒரு வார்த்தை பேசவோ இல்லை. முதல் தடவையாக ஒரு ஆண் மகனை அறிந்து கொள்கிறாள். அவள் அங்கிருந்து கிளம்பியபோது அவனை முத்தமிடவில்லை. அவளுடைய பெயரைக் கூட அவன் தெரிந்து கொள்ளவில்லை என்பதை அவன் உணர்ந்தான்.  அவன் துருவி ஆராய விரும்பவில்லை ஏதோ காரணத்தால். போனஸ் அயர்ஸ் திரும்பிய பிறகு எவரிடமும்  என்ன நடந்தது என்று சொல்லக் கூடாது என்று மனதிற்குள் தீர்மானம் செய்தான்.

அடுத்த நாளும் முந்தைய நாட்களைப் போலவே ஆரம்பித்தது. அப்பா குட்ரெ, எஸ்பினோசாவிடம் பேசும் போது, கிறிஸ்துவானவர் பூமியில் உள்ள சகல மனிதரையும் காப்பாற்றுவதற்காகத் தன்னைக் கொல்ல அனுமதித்தாரா என்று கேட்டான். சுதந்திரச் சிந்தனையாளனான எஸ்பினோசா, தான் படித்ததற்கு விசுவாசமான இருக்க வேண்டி பதில் அளித்தான். ”

“ஆம். எல்லோரையும் நரகத்திலிருந்து காப்பாற்றுவதற்காக.”

உடனே குட்ரெ கேட்டான். “நரகம் என்பது என்ன?”

“பூமிக்கு அடியில் ஓரிடத்தில் ஆன்மாக்கள் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கும் ஒரு இடம் அது”.

“ஆணிகளை அடித்த ரோமானிய போர்ச்சேவகர்களுமா காப்பாற்றப் பட்டார்கள்?”

தனது இறையியல் அவ்வளவு தெளிவாக இல்லாத எஸ்பினோசா “ஆம்” என்றான்.

அந்த உரையாடலின் போதெல்லாம் தலைமைப் பண்ணையாள் முந்திய இரவின் போது தனது மகளுடன் என்ன நடந்தது என்று கேட்டு விடுவான் எனப் பயந்து கொண்டிருந்தான் எஸ்பினோசா. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை கடைசி அத்தியாயங்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டார்கள்.

எஸ்பினோசா அந்த மதியம் ஒரு நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்தான். இடைவிடாத சுத்தியல் ஒலிகளாலும், தெளிவில்லாத முன்கூறல்களாலும் இடைஞ்சலுற்ற லேசான உறக்கம். மாலை ஆகும் போது அவன் எழுந்து மேல்தளத்திற்குச் சென்றான். தனக்குத் தானே சிந்திப்பவன் போல அவன் சொன்னான்: “வெள்ளம் இறங்கி விட்டது. இனி ரொம்பத் தாமதமாகாது.”

“இனி ரொம்பத் தாமதமாகாது”  என, எதிரொலி போல, அதை குட்ரெ திருப்பிச் சொன்னான்.

அந்த மூவரும் அவனைப் பின் தொடர்ந்து வந்திருக்கின்றனர். கல் பாவப்பட்ட மேடை மீது முழந்தாளிட்டு அவனுடைய ஆசீர்வாதங்களை வேண்டினார்கள். பிறகு அவனை அவர்கள் பரிகசித்தார்கள். அவன் மீது காறித்துப் பினார்கள். வீட்டின் பின் பகுதிக்குத் தள்ளிக் கொண்டு போனார்கள். அந்தப் பெண் அழுதாள். கதவுக்கு அந்தப் பக்கத்தில் அவனுக்காக என்ன காத்திருந்தது என்பதைப் புரிந்து கொண்டான் எஸ்பினோசா. கதவை அவர்கள் திறந்த போது வானத்தின் ஒரு பகுதியை அவன் பார்த்தான். குரலெடுத்து ஒரு பறவை பாடியது. தங்க ஃபின்ச் பறவையாக இருக்கும் என்று நினைத்தான். கொட்டகையின் மீது கூரை இருக்கவில்லை.  தூலங்களைக் கழற்றி இறக்கி வைத்து விட்டிருந்தார்கள்–சிலுவை செய்வதற்காக.

Translated  by Norman Thomas di Giovanni

redbook-1a1

குறுக்கீட்டாளர்-Intruder-Jorge Luis Borges-Translation Brammarajan

intruderjlb1

குறுக்கீட்டாளர்

ஜோர்ஜ் லூயி போர்ஹே

[1966]

  • …passing the love of women.
    2 Samuel I:

ஜனங்கள் சொல்கிறார்கள் (இது சாத்தியமில்லை) இந்தக் கதை நெல்சன் சகோதரர்களில் இளையவனான எடுவர்டோவினால், தூக்கத்திலேயே இறந்து போன அவனது சகோதரன் இறந்த இரவு சொல்லப்பட்டதென்று. இது தொண்ணூறுகளில் மொரோன் மாவட்டத்தின் வெளிப்பகுதி களில் நடந்திருக்கலாம்.  நிஜம் என்னவென்றால் நீட்சியாகித் தெரிந்த அந்த மங்கலான இரவில் ஒரு மிடறு உள்ளூர் மதுவிற்கும் மற்றதற்கும் இடையில் எவரிடமிருந்தோ எவரோ இந்தக் கதையைக் கேட்டிருக்கலாம். அதை சான்டியாகோ டபோவிற்குச் சொல்லி இருக்கலாம். அவரிடமிருந்துதான் நான் இந்தக் கதையைக் கேட்டேன். பல வருடங்களுக்குப் பிறகு கதை நடந்த துர்தேரா பிரதேசத்தில் அதை மீண்டும் நான் கேட்டேன். இரண்டாவதும் மிக விலாவரி யானதுமான கதை சான்டியாகோ சொன்னதை அடியொற்றிச் சென்றாலும் சில சிறிய மாறுதல் களையும் முரண்பாடுகளையும் கொண்டிருந்தது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் போனஸ் அயர்சின் விளிம்பில் அனுபவங்களால் உரமேறிய மனிதர்களின் கதாபாத்திரத்தின் பரிதாபகர மான குறுகுகிற பகுதியாக அதை நான் எழுதிவைக்கிறேன்.  சுற்றி வளைக்காமல் இதை நான் செய்ய விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்பே குறிப்பிட்ட தகவல்களை அழுத்திச் சொல்வது அல்லது சேர்த்துவிடுவது போன்ற எழுத்தாளனுக்கே உரிய சபலத்திற்கு ஆட்பட்டு விடுவேன் எனத் தெரிகிறது.

அவர்கள் வாழ்ந்த துர்தேரா பகுதியில் அவர்களை நில்சன் சகோதரர்கள் என்றே அழைத்தார்கள். அங்கிருந்த பாதிரியார் ஒருவர் அவரது முன்னோராகப் பட்டவர் நில்சன்களின் வீட்டில் கறுப்பு எழுத்துக்களில் அச்சிடப்பட்ட கனமாக பைண்ட் செய்யப்பட்ட நைந்து போன ஒரு பைபிள் இருந்ததை ஏதோ ஒரு வித ஆச்சர்யத்தில் பார்த்ததை நினைவு கூர்ந்தார். உள் அட்டைப்பக்கத்துத் தனித்தாளில் கையால் எழுதப்பட்ட பல பெயர்களையும் தேதிகளையும் கண்ணுற்றிருக்கிறார். நில்சன்களின் திரியும் வரலாறாக வீட்டில் இருந்த ஒரே புத்தகம் அதுதான். எல்லாப் பொருள்களும் ஒரு நாள் தொலைந்து போவது போல் அதுவும் தொலைந்து போயிற்று. அந்தப் பரந்த பழைய வீடு (இப்போது இல்லை) கலவை பூசப்படாத செங்கல் கட்டிடமாக இருந்தது. வளைந்த நுழைவாயிலின் வழியாக சிவப்பு ஓடுகள் பதிக்கப்பட்ட முற்றத்தையும் அதற்கு அப்பால் இறுகலான மண்ணினால் அமைந்த மற்றொன்றினையும் பார்க்க முடியும். அந்த வீட்டிற்கு உள்ளே சென்றவர்கள் சொற்பமே. நில்சன்கள் தங்களுக்கு உள்ளாகவே வாழ்ந்தார்கள். ஏறத்தாழ வெறுமையான அறைகளில் அவர்கள் கட்டிலின் மீது தூங்கினார்கள். அவர்களுடைய ஆடம்பரமாக இருந்தவை குதிரைகள், வெள்ளிப்பட்டி இடப்பட்ட சவாரி உடைகள், சிறிய நீளமுள்ள குறுங்கத்திகள், சனிக்கிழமை இரவுகளில் பகட்டாக உடையணிதல் ஆகியவை. இந்த சமயத்தில் அவர்கள் பணத்தைத் தாராளமாகச் செலவழித்து குடிகாரத் தகராறுகளில் பங்கேற்றார்கள். எனக்குத் தெரியும் அவர்கள் இருவருமே உயரமானவர்கள் என்று. இந்த அர்ஜன்டீனிய சகோதரர்களின் ரத்தத்தில் அவர்கள் கேள்விப்பட்டிராத டென்மார்க் அல்லது அயர்லாந்து அம்சம் கலந்திருக்க வேண்டும். இந்த சிவப்புத் தலையர்களைக் கண்டு சுற்று வட்டாரத்தில் இருந்தவர்கள் அச்சப்பட்டார்கள். இருவரில் ஒருவன் தன்னுடைய எதிரியைத் தீர்த்துக் கட்டியிருக்கிறான் என்பது சாத்தியம்தான். ஒரு முறை தோளோடு தோளிணைந்து போலீசோடு மோதினார்கள். யுவான் இபராவுடன் இளையவன் மோதினான் என்றும் அதை ஒன்றும் மோசமாகச் செய்துவிடவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அவர்கள் மாடுமேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டவர்களாகவும், குதிரைத் திருடர்களாகவும், சூதாட்டத்தினை தொழிலாகச் செய்பவர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய கஞ்சத்தனம் பிரசித்தமானது. குடியும் சீட்டாட்டமும் மட்டுமே அவர்களை செலவாளிகளாக ஆக்கியது. அவர்களுடைய சொந்தக் காரர்கள் யார் என்பது பற்றியோ, அவர்களின் ஆதியாகமம் பற்றியோ எதுவுமே தெரியவில்லை. அவர்களுக்கு ஒரு வண்டியும், மாடுகளும் சொந்தமாக இருந்தன.

கோஸ்டா பிரேவா பிரதேசத்திற்குக் கிடைத்த மோசமான பெயருக்குக் காரணமாக இருந்த மற்ற அடியாட்களை விட அவர்களின் வெளித்தோற்றம் வித்தியாசமாக இருந்தது. இதுவும், நமக்குத் தெரியாத பலவும், அவர்களுக்கு இடையே இருந்த நெருக்கமான பிணைப்புகளை புரிந்து கொள்ள உதவும். அவர்களில் ஒருவரைப் பகைத்துக் கொண்டாலும் இரண்டு எதிரிகளைச் சந்திக்க வேண்டி வரும்.

பெண்களுடன் பொழுதுபோக்குவதை நில்சன்கள் விரும்பினர். ஆனால் அந்தநாள் வரை அவர்களுடைய காமத்துவ சாகசங்கள் இருளடைந்த வழிவெளிகளிலும், விபச்சார விடுதிகளிலுமே நடத்தப்பட்டன. ஆகவே ஜுலியான பர்கோஸ் என்பவளை தன்னுடன் வாழ்வதற்கு கிறிஸ்டியன் கூட்டி வந்தபோது அதைப் பற்றிய பேச்சு நிற்கவேயில்லை. ஒத்துக்கொள்ளும்படி, இந்த வகையில் அவனுக்கு ஒரு வேலைக்காரி கிடைத்தாள். தன்னுடைய பணத்தையெல்லாம் சுரண்டி அவளுக்கு மிக மட்டரகமான நகைகள் வாங்குவதில் ஈடுபட்டான் என்பதும் விருந்துகளுக்கு அவளை அழைத்துச் சென்று பகட்டாகக் காட்டினான் என்பதும் உண்மை.

அந்த விருந்துகள் குடிசைகளில் நடத்தப்பட்டன. அங்கே விஷயங்களை மறைமுகமாகத் தெரிவிக்கக்கூடிய நடன அசைவுகள் கறாராகத் தடை செய்யப்பட்டிருந்தன. மேலும் நடன ஜோடிகள் அவர்களுக்கிடையே ஆறு அங்குல வெளிச்ச இடைவெளி தெரியும்படி ஆடினார்கள். ஜூலியானா கறுப்பான பெண். அவளுக்கு மாறு கண்கள் இருந்தன. எவர் ஒருவர் அவளைப் பார்த்தாலும் அவள் புன்முறுவல் செய்து விடுவாள். சலிப்படையச் செய்யும் வேலையும் புறக்கணிப்பும் பெண்களை வீணடித்து விடக் கூடிய ஒரு ஏழ்மையான பகுதியில் அவள் பார்ப்பதற்கு மோசமாக இருக்கவில்லை.

ஆரம்பத்தில் எடுவர்டோ அவர்களுடன் சேர்ந்தே பல இடங்களுக்குச் சென்றான். பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் அரெசியசின் வடக்குப் பகுதிக்கு வியாபாரத்திற்கோ அன்றி வேறெதற்கோ பயணம் செய்தான். வீட்டுக்குத் திரும்புகையில் வழியில் அவன் கூட்டிக்கொண்ட பெண் ஒருத்தியை அழைத்து வந்தான். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவளைத் துரத்தி விட்டான். இன்னும் கோபம் மிகுந்த மௌனத்தில் ஆழ்ந்து போனான். கிறிஸ்டியனின் கிழத்தி மீது அவன் காதல் வயப்பட்டு விட்டான். அவன் அதை அறிந்து கொள்ளும் முன்பே அறிந்து வைத்திருந்த அந்தப் பிரதேசத்து ஜனங்கள் இரு சகோதரர்களுக்கு இடையில் பகையின் ஆரம்பத்தை மிக சந்தோஷத்துடன் எதிர்நோக்கி இருந்தனர்.

ஒரு நாள் இரவு தாமதமாக வீடு திரும்பியபொழுது கிறிஸ்டியனுடைய பெரிய பழுப்பும் சிவப்பும் கலந்த நிறமுடைய குதிரை, தயாராக,  அவிழ்க்கும் கழியில் கட்டப்பட்டிருந்தது. உள்ளே முற்றத் திற்குள் தன் உடைகளிலேயே சிறந்தவற்றை உடுத்தியிருந்த கிறிஸ்டியன் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். “நான் ஃபரியாசின் வீட்டுக்குச் செல்கிறேன்; அங்கே ஒரு விருந்து கொடுக்கிறார்கள். ஜூலியானா இங்கே உன்னுடன் தங்குகிறாள்; உனக்கு வேண்டுமானால் அவளைப் பயன்படுத்திக் கொள்.”

அவனுடைய தொனி பாதி கட்டளை இடுவதாகவும் பாதி நட்பு தொனியுடனும் இருந்தது. எடுவர்டோ அவனை முறைத்தபடி என்ன சொல்வதென்று தெரியாமல் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தான். கிறிஸ்டியன் எழுந்தான். தன் தம்பியிடம் மட்டும் விடை பெற்றுக்கொண்டான். ஜூலியானாவிடம் அல்ல; அவள் ஒரு பொருள் என்ற அளவில்தான் இருந்தாள். தன் குதிரை மீதேறி சாவதானமாக சாதாரண வேகத்தில் கிளம்பிச் சென்றான்.

அந்த இரவிலிருந்து அவர்கள் இருவரும் அவளைப் பகிர்ந்து கொண்டார்கள். கோஸ்டா பிரேவோவின் கௌரவத்தையே கூட சீரழித்த இந்த பங்காளித்தன்மையின் விரிவான தகவல்கள் பற்றி எவருக்குமே தெரியாது. இந்த ஏற்பாடு சில வாரங்களுக்குச் சரியாக இருந்தது. ஆனால் நீடித்திருக்கவில்லை. சகோதரர்கள் தங்களுக்குள்ளாக அவள் பெயரைக் குறிப்பிடவே இல்லை. அவளைக் கூப்பிடுவதற்குக் கூட. ஆனால் முரண்பாடு கொள்வதற்கான காரணங்களைக் கண்டு பிடித்தபடியும் தேடியபடியும் இருந்தார்கள். ஏதோ ஒரு தோல் விற்பனை பற்றி விவாதம் செய்தார்கள். ஆனால் அவர்கள் சண்டை போட்டுக் கொண்டது வேறு எதுவோ பற்றி. கிறிஸ்டியன் குரலை உயர்த்திக் கத்தத் தொடங்கினான். எடுவர்டோவோ மௌனமாய் இருந்தான். அவர்களை அறியாமலேயே அவர்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி அடியாட்கள் நிறைந்த சுற்றுப்புறங்களில் பெண்ணாகப்பட்டவள் ஒரு மனிதனுக்கு காமம் என்பதற்கும் உடைமை என்பதற்கும் அப்பாற்பட்டு ஒரு பொருட்டாகிறாள் என எவரிடமும் எவரும்-ஏன் தனக்குத்தானே கூட என்றுமே ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் சகோதரர்கள் இருவரும் காதல்வயப்பட்டு விட்டனர். இது ஏதோ வகையில் அவர்களை அவமான உணர்வு கொள்ளச் செய்தது.

ஒரு மதியம் லோமாஸ் பகுதியின் சதுக்கத்தில் எடுவர்டோ யுவான் இபராவைச் சந்திக்க நேர்ந்தது. அவன் எடுவர்டோவுக்கு கிடைத்த அழகியைப் பற்றி பாராட்டிப் பேசினான். அப்பொழுது தான் என்று நம்புகிறேன் அவன் எதிராளிக்குக் கொடுத்தான். எவருமே இனி அவன் முகத்துக்கெதிரில் கிறிஸ்டியனைக் கிண்டல் பேசமுடியாது.

ஒரு வித விலங்கின் பணிதலுடன் இரண்டு ஆண்களின் தேவையையும் அவள் பூர்த்தி செய்தாள். ஆனால் இளையவனுக்கென்று அவள் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட தெரிவினை அவளால் மறைத்து வைக்க முடியவில்லை. அவன் அவளைப் பகிர்ந்து கொள்வதற்கு மறுக்கவுமில்லை; முன்மொழியவுமில்லை.

ஒரு நாள் ஜூலியானாவை அழைத்து முதல் முற்றத்தில் இரண்டு நாற்காலிகளைப் போடச் சொல்லி கட்டளையிட்டனர். அவர்களுக்கிடையே பேசித் தீர்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்ததால் கொஞ்ச நேரத்திற்கு அங்கே தலை காட்டக்கூடாது என்றார்கள். ஒரு நீண்ட அமர்வினை அவர்களுக்கிடையே எதிர்பார்த்த அவள் தூங்குவதற்காக உடலைச் சரித்தாள். அவளுடைய அம்மா அவளுக்கு விட்டுச்சென்ற சிறிய சிலுவை, கண்ணாடி ஜெபமாலை உட்பட எல்லாப் பொருள்களையும் ஒரு சாக்கு மூட்டையில் கட்டச் சொன்னார்கள். எந்தவிதமான விளக்கமும் சொல்லாமல் அவளைத் தூக்கி மாட்டு வண்டியில் உட்கார வைத்து ஒரு நீண்ட , களைப்படையச் செய்யக்கூடிய மௌனமான பயணத்தைத் தொடங்கினார்கள். மழை பெய்திருந்தது. சாலைகள் சகதி மண்ணால் நிரம்பி இருந்தன. மோரானை அடையும் பொழுது ஏறத்தாழ விடியற்காலை ஆகிவிட்டிருந்தது. அங்கே விபச்சார விடுதி நடத்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அவளை விற்றார்கள். வியாபாரம் குறித்த விஷயங்கள் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தன. கிறிஸ்டியன் பணத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர் தன் தம்பியுடன் அதைப் பிரித்துக் கொண்டான்.

துர்தேராவுக்குத் திரும்பி வந்து, அதுவரை அந்தப் ராட்ஷசத்தனமான காதலின் வலையில் சிக்கிக்கொண்டிருந்தவர்கள் (இதுவும் கூட ஒருவிதமான பழக்கம்தான்) ஆண்களுக்கு மத்தியில் ஆண்களாக வாழும் வாழ்க்கையைத் தொடங்க முயன்றார்கள். சனிக்கிழமை முழுவதும் நில்லாமல் தொடர்ந்த குடியாட்டத்திற்கும் சீட்டாட்டத்திற்கும் கோழிச்சண்டைக்கும் மீண்டும் திரும்பினார்கள். சில நேரம் தாங்கள் காப்பாற்றப்பட்டு விட்டோம் என்று உணர்ந்தார்கள். ஆனால் அடிக்கடியும் ஒவ்வொருவரும் தங்கள் வழியில் கணக்கிலடங்காத இல்லாமைகளில் ஆழ்ந்து போனார்கள். அந்த வருடம் முடிவதற்குக் கொஞ்சம் முன்னால் இளையவன் தனக்கு நகரத்தில் வேலை இருக்கிறது என்று சொன்னான். உடனடியாக கிறிஸ்டியன் மோரானுக்குக் கிளம்பிச் சென்றான். விபச்சார விடுதியில் குதிரைகள் கட்டுமிடத்தில் எடுவர்டோவின் குதிரையை அடையாளம் கண்டுகொண்டான். அங்கே அவனுடைய முறைக்காகக் காத்திருந்தான் அவன் தம்பி. கிறிஸ்டியன் அவனிடம் இப்படிச் சொன்னதாகக் கூறப்படுகிறது: “இதே மாதிரி நாம் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் குதிரைகளை ஓய்த்து விடுவோம். அவளை நமக்கு அருகிலே வைத்துக் கொண்டால்தான் நமக்கு நல்லது”.

அவன் விடுதியின் சொந்தக்காரியிடம் பேசினான். அவனுடைய பணம் வைத்திருக்கும் பெல்ட்டிலிருந்து கைநிறைய காசுகளைக் கொடுத்து விட்டு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றார்கள். ஜூலியானா கிறிஸ்டியனின் குதிரையில் சவாரி செய்தாள். அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்க விரும்பாத எடுவர்டோ முள்சக்கரம் பதித்த தன் காலணியை அழுத்தி குதிரையில் வேகமாகப் பறந்தான்.

ஏற்கனவே சொல்லப்பட்ட அங்கே திரும்பிச் சென்றார்கள். அவர்களின் தீர்வு தோல்வியில் முடிந்தது. ஏன் எனில் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றத் தொடங்கினார்கள். கெய்ன் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பினும், நில்சன்களுக்கிடையே இருந்த பாசம் மகத்தானது-யாருக்குத் தெரியும் எப்படிப்பட்ட ஆபத்துக்களை எல்லாம் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்து சந்தித்தார்கள் என்று? அவர்களுடைய கோபத்தை மற்றவர்கள் மீது காட்ட விரும்பினார்கள். அந்நியர்கள் மீதும், நாய்கள் மீதும், அவர்களுக்கிடையே பிளவினை வளர்த்த ஜுலியானா மீதும்.

மார்ச் மாதம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தாலும் வெப்பம் குறைவதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை (ஞாயிற்றுக் கிழமை ஜனங்கள் சீக்கிரமே தூங்கப் போய்விடுவார்கள்) சலூனிலிருந்து வீட்டுக்கு வரும்போது கிறிஸ்டியன் வண்டியில் எருதுகளைப் பூட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான். கிறிஸ்டியன் அவனிடம் சொன்னான். : “வா நாம் பர்டோவின் வீட்டில் சில தோல்களைக் கொண்டு போய் போட வேண்டும். நான் ஏற்கனவே அவற்றை வண்டியில் ஏற்றிவிட்டேன். இரவின் குளிர்ந்த காற்றினை நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.”

பர்டோவின் கிடங்கு தெற்கில் தொலைவில் இருந்தது என்று நான் நம்புகிறேன். கால்நடைகளின் பழைய அடிச்சுவட்டுப் பாதை வழியாக ஒரு சாலையில் திரும்பினார்கள். அப்பொழுதுதான் பற்ற வைத்திருந்த சுருட்டினைத் தூக்கி எறிந்து விட்டு சீராகச் சொன்னான் கிறிஸ்டியன், “நாம் துரிதமாக ஆவோம் சகோதரா. கொஞ்ச நேரத்தில் பிணந்தின்னிக்கழுகுகள் வேலையை ஆரம்பித்து விடும். இன்று மதியம் அவளைக் கொன்றேன். அவளுடைய மலிவான மணிகளுடன் அவள் இங்கே இருக்கட்டும். அவள் நமக்கு எந்த வித கஷ்டத்தையும் கொடுக்க மாட்டாள்.”

ஒருவர் மீது ஒருவர் கைகளை வீசிப் போட்டுக் கொண்ட அவர்கள் அழுகையின் விளிம்பில் இருந்தனர். கொடூரமான வகையில் அவர்கள் தியாகம் செய்த அந்தப் பெண், அவளை மறக்க வேண்டிய பொதுவான தேவை,’என்ற இந்த கூடுதலான பந்தம் அவர்களைப் பிணைத்தது.

Translated by Normon Thomas Di Giovanni.

மரணமும் காம்பஸ் கருவியும்- ஜோர்ஜ் லூயி போர்ஹே-Death and the Compass-Borges

deathnthecompassjlb1மரணமும் காம்பஸ் கருவியும்

ஜோர்ஜ் லூயி போர்ஹே

-1942-

To Mandie Molina Vedia

எரிக் லோன்ராட்டின் மடத்துணிவான சிந்தனையை வருத்திய பல பிரச்சினைகளுள், இடைவெளி விட்டு தொடர்ச்சியாக நடைபெற்று Trist – le – Roy பங்களாவில் இடைவிடாமல் வீசிய யூகாப்லிப்டஸ் மர வாசனைக்கு இடையில் உச்சகட்டத்தை எட்டிய ரத்தக்களரியான கொலைகளின்தொடர்ச்சி மிக விநோதமானது–கிரமமான விநோதமென்று சொல்லலாம்தான். ஆனால் அவன் அதை முன் கூட்டியே யூகித்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. கடைசிக் கொலையைத் தடுக்கத் தவறிவிட்டான் என்பது உண்மைதான். யார்மோலின்ஸ்கியின் அதிர்ஷ்டமற்ற கொலையாளின்அடையாளத்தை யூகிக்கத் தவறினான். ஆனால் தீவினைமிக்க நிகழ்ச்சித் தொடர்ச்சிகளின் மர்மமான

வடிவமைப்பையும், Scharlach the Dandy-என்ற பட்டப்பெயர் கொண்ட சிவப்பு ஸ்கார்லாக் என்பவன் அவற்றில் ஆற்றிய பங்குகளைப் பற்றியும் அவன் யூகித்துத்தான் இருந்தான். இந்த அடியாள் தலைவன் (அவனது மரபில் வந்த பலரைப் போல) எரிக் லோன்ராட்டை பிடிக்காமல் விடுவதில்லை என்று தன் கௌரவத்தின் மீது சூளுரைத்த போதிலும் லோன்ராட் இதனால் பயமுறுத்தப்படவில்லை. தன்னை ஒரு தூய தர்க்கவியலாளனாகக் கருதினான் லோன்ராட், ஒரு விதமான Auguste Dupin போல, ஆனால் அவனிடத்தில் ஒரு சாகசக்காரனின் தன்மையும், சூதாட்டக்காரனின் அம்சமும் இருந்தன.

அதன் பரந்த நீர்கள் மணலின் நிறத்தைப் போலிருக்கும் கழிமுகத்தை ஆதிக்கங்கொண்டிருந்த, உயர்ந்த முப்பட்டைக் கண்ணாடி போலிருந்த Hotel du Nord என்ற இடத்தில் முதல் கொலை நடந்தது(அது ஒரு வெறுக்கத்தகுந்த மருத்துவமனையின் வெற்றுச் சுவர்களையும், எண்ணிக்கை இடப்பட்ட அறைகளைக் கொண்ட சிறையைப் பற்றிய உணர்வையும், வேசிகள் இல்லத்தினைப் போன்ற பொதுவான தோற்றத்தையும் கொண்டதென்று அனைவரும் அறிவர்). டிசம்பர் மாதம் 3ஆம் தேதி, நரைத்த தாடியும், சாம்பல் நிறக்கண்களும் கொண்ட யூத அறிஞர் மார்செல் யார்மோ லின்ஸ்கி அந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார். மூன்றாவது Talmudic கருத்தரங்கத்திற்கு Podolsk பிரதேசத்திலிருந்து பிரதிநிதியாக அவர் வந்திருந்தார். ஹோட்டல் து நார்ட் அவருக்குப் பிடித்திருந்ததா என்று நாம் என்றுமே அறியப் போவதில்லை. கார்ப்பதியன் பிரதேசத்தில் நடந்த மூன்று வருடப் போரினையும், மூவாயிரம் வருட ஒடுக்கு முறையையும் யூதர்களை ஒழித்துக் கட்டுவதற்கான சதிகளையும் கடந்து வந்திருந்த ஒரு வித விருப்பு வெறுப்பற்ற, காலம்கடந்த மனநிலையுடன் அவர் அதை ஏற்றுக்கொண்டார். A என்ற தளத்தில் அவருக்கு ஒரு அறை கொடுக்கப்பட்டது. Galilee பிரதேசத்தின் நால்வர்தலைவர் தங்கியிருந்த பிரமாதமான அறைக்கு எதிர்த்தாற்போல் இவருடைய அறை இருந்தது.

யார்மோலின்ஸ்கி இரவு உணவருந்தினார். முன்பின் அறிமுகமில்லாதிருந்த அந்த நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதை அடுத்த நாளைக்குத் தள்ளிப் போட்டார். அவர் எழுதிய நிறைய நூல்களையும், சில உடையணிகளையும் அலமாரியில் அடுக்கி ஒழுங்கு செய்துவிட்டு, நடு இரவுக்கு முன்னால் இரவு விளக்கினை அணைத்தார்.(அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த

நால்வர்தலைவரின் காரோட்டி அப்படித்தான் கூறினான்) நான்காம் தேதி காலை 11.03 மணிக்கு, Judische Zeitung செய்தித்தாளின் ஆசிரியர் யூத அறிஞரை தொலைபேசியில் அழைத்தார். டாக்டர். ரபி மார்செல் யார்மோலின்ஸ்கி பதில் தரவில்லை. அதற்குப் பிறகு, அவருடைய அறையில், முகம் வெளிர்ந்து, அவரது பழைய பாணி தொளதொளத்த அங்கியில், முக்கால் பாகம் நிர்வாணமாய் அவர் கண்டு பிடிக்கப்பட்டார். ஹாலின் கதவுக்குப் பக்கத்தில் அவர் கிடந்தார். ஆழமான கத்திக்குத்து அவருடைய நெஞ்சினைப் பிளந்துவிட்டிருந்தது. சில மணிநேரம் கழித்து, அதே அறையில், பத்திரிக்கைச் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களின் கூட்டத்திற்கு மத்தியில் இன்ஸ்பெக்டர் ட்ரெவிரேனசும், லோன்ராட்டும் நடந்திருக்கும் விஷயம் பற்றி அமைதியாகத் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

ட்ரெவிரேனஸ் தனது ராஜரீகமான சுருட்டினைக் கையில் பிடித்தபடி “இங்கே மூன்று கால்களுடைய பூனைகளைத் தேடி நாம் காலத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார். நால்வர்தலைவரிடம் உலகத்தின் மிகச்சிறந்த ரத்தினங்கள் இருப்பது எல்லோரும் அறிந்ததே. அதைத் திருட வந்த எவரோ ஒருவர் இங்கே தவறுதலாக வந்திருக்கலாம். யார்மேலின்ஸ்கி விழித்துக் கொண்டார், திருடனுக்கு அவரைக் கொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. “இந்த விளக்கம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“சாத்தியம்தான், ஆனால் சுவாரசியமாக இல்லை” என்று பதில் அளித்தான் லோன்ராட். “– யதார்த்தம் என்பது சுவாரசியமானதாய் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்று நீங்கள் கூறுவீர்கள். அதற்கு அப்படி இருக்க வேண்டிய கடப்பாட்டை யதார்த்தம் ஒதுக்கிக்கொள்ளலாம். ஆனால் அது நம்மால் முடியாது. உங்களுடைய கருதுகோளின்படி, சந்தர்ப்பம் இதில் பெரிய பங்கு வகிக்கிறது. இதோ இங்கே ஒரு இறந்த ரபி. எனவே யூதகுருமார்களின் தன்மையைக் கொண்ட விளக்கமே நான் விரும்புவது. ஒரு கற்பனையான நகைத் திருடனின் கற்பனை செய்யப்பட்ட தவறுகள் அல்ல.”

“எனக்கு யூதகுருமார்கள் தன்மையான விளக்கங்களில் ஈடுபாடு இல்லை” என சற்று காட்டமாகப் பதில் சொன்னார் ட்ரெவிரேனஸ்; இந்த முன்பின் தெரியாத நபரைக் கொலை செய்தவரைக் கண்டுபிடிப்பதில்தான் என் ஈடுபாடெல்லாம் இருக்கிறது.”

“அவ்வளவு முன்பின் தெரியாத யாரோ ஒன்றும் அல்ல” திருத்தினான் லோன்ராட்“இதோ இங்கே இருக்கிறது அவர் எழுதிய அனைத்துப் புத்தகங்களும்.” அலமாரியின் அறைகளில் வரிசையாக அடுக்கப்பட்ட உயரமான புத்தகங்களைச் சுட்டிக் காட்டினான். Vindication of the Kabbalah, Study of the philosophy of Robert Fludd ஆகிய நூல்கள் இருந்தன. பால் ஷெம் பற்றிய ஒரு வாழ்க்கைச் சரிதமும், ஸெபிர் எஸிரா நூலின் மொழிபெயர்ப்பும், History of the Hasidic Sect என்ற நூலும், ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட டெட்ராகிரமட்டான் பற்றிய ஆய்வுக்கட்டுரையும், Pentateuch இல் கடவுளின் நாமங்களைப் பற்றிய கட்டுரைப்புத்தகமும் இருந்தது. ஒருவிதமான பயத்துடனும், ஏன், அருவருப்புடனும் இன்ஸ்பெக்டர் அவற்றை நோக்கினார். பிறகு அவரிடமிருந்து ஒரு வெடிச் சிரிப்பு கிளம்பியது.

“நான் ஒரு சாதாரண கிறிஸ்துவன்” என்றார். “உனக்குப் பிடித்திருந்தால் இந்த ஊச வாடை அடிக்கிற எல்லாப் புத்தகங்களையும் எடுத்துச் செல்லலாம். யூதமூடநம்பிக்கைகளின் மீது வீணடிக்க என்னிடம் நேரமில்லை.”

“இந்தக் கொலைக் குற்றமே யூத மூடநம்பிக்கைகளின் வரலாற்றுக்குச் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்” என்று லோன்ராட் முனகினான்.

“கிறித்தவ மதத்தைப் போலவே” என்று தன்னை தைர்யப்படுத்திக் கொண்டு சொன்னார் Judische Zeitung பத்திரிக்கையின் ஆசிரியர். அவன் கிட்டப்பார்வை கொண்டவனாகவும், கடவுள் நம்பிக்கையற்றவனாகவும், கூச்ச சுபாவமுள்ளவனாகவும் இருந்தான்.

யாரும் அவனுக்குப் பதில் தரவில்லை.

அவனைப் பற்றி எவரும் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. யார்மோலின்ஸ்கி யின் சிறிய டைப்ரைட்டரில் கீழ் வரும் முடிக்கப்படாத வாசகம் எழுதப்பட்ட வெள்ளைத்தாள் இருந்ததை போலீஸ் துப்பறிவாளர்களில் ஒருவர் கண்டுபிடித்தார் :

பெயரின் முதல் எழுத்து உச்சரிக்கப்பட்டுவிட்டது.

லோன்ராட் புன்முறுவல் செய்வதைக் கட்டுபடுத்திக் கொண்டான். திடீரென புத்தக வெறியனாகவும் எபிரேயப் படிப்பாளியாகவும் மாறிய அவன், இறந்து போன மனிதனுடைய புத்தகங்களை அடுக்கிக் கட்டச் செய்து தனது இருப்பிடத்திற்குக் கொண்டு வருமாறு உத்தரவிட்டான். அங்கே, போலீஸ் விசாரணை குறித்த அக்கறையைப் புறந்தள்ளிவிட்டு புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்து போனான். Pious என்ற இனத்தவரின் ஸ்தாபகரான Israel Baal Shem Tobh இன் போதனைகளைக் கூறியது ஒரு பெரிய எண்மடி அளவு தொகுதி; மற்றொன்று டெட்ராகிரமட்டனின் மந்திரத்தையும் பயங்கரத்தையும் கூறியது. மூன்றாவது தொகுதி “கடவுளுக்கு ஒரு ரகசியப் பெயர் உண்டு, அதில் அவருடைய ஒன்பதாவது அம்சமான நித்தியத்துவத்தையுக் காணலாம்–அதாவது, சூரியனுக்குக் கீழிருக்கும் சகல விஷயங்களின் எதிர்காலம், நிகழ்காலம், கடந்தகாலம் பற்றிய உடனடி அறிவு பெறலாம் என்று கூறியது. (இந்த ரகசியப் பெயர் மேசிடோனியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டரின் படிகக் கோளத்தில் உள்ளது போன்றது என பாரசீகர்கள் கூறுவார்கள்.) பாரம்பரியம் கடவுளின் தொண்ணூற்று ஒன்பது பெயர்களை பட்டியலிடுகிறது ; எபிரேயப் அறிஞர்கள் அந்த முழுமையற்ற பூஜ்ஜியத்திற்கு இரட்டைப்படை எண்கள் பற்றிய இறையியல் தன்மையான பயத்தினால் விளக்கம் தருவார்கள்; ஹேசிடிக் இனத்தவர் இந்த விடுபடும் சொல் நூறாவது பெயரை, முழுமுற்றான பெயரைக் குறிக்கிறது என்று வாதிடுகிறார்கள்.

இந்த புத்தகப்புழுத்தன்மையான செயலில் இருந்து லோன்ராட் சில நாட்களுக்குப் பிறகு Judische Zeitung பத்திரிக்கையின் ஆசிரியரின் வருகையால் கவனம் சிதறினான். வந்தவர் கொலையைப் பற்றிப் பேச விரும்பினார். எனினும் லோன்ராட், கடவுளின் பல பெயர்களைப் பற்றிப் பேசவே விரும்பித் தேர்ந்தான். தலைமை உளவாளி எரிக்லோன்ராட் கொலையாளியின் பெயரைக் கண்டுபிடிக்கும் பொருட்டு கடவுளின் பெயர்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருக் கிறார் என்று அடுத்த நாள், மூன்று பத்திச் செய்தியில் ஆசிரியர் எழுதினார். பத்திரிக்கைத் துறையின் எளிமைப்படுத்தல்கள் பற்றி நன்கு தெரிந்திருந்த லோன்ராட் அது குறித்து வியப்படைய வில்லை. எவர் வேண்டுமானாலும் எந்த ஒரு புத்தகத்தையும் வாங்குவதற்கு விரும்புகிறார் என்பதைக் கண்டு பிடித்துக்கொண்ட வியாபாரி ஒருவர் யார்மோலின்ஸ்கியின் History of the Hasidic Sect புத்தகத்தின் மலிவுப் பிரதி ஒன்றினை விற்க ஆரம்பித்தார்.

நகரத்தின் மேற்கு விளிம்புகளில், யாருமற்ற வெற்றுப் பிரதேசத்தில் இரண்டாவது கொலை ஜனவரி மூன்றாம் தேதி இரவு நடந்தது. விடியற்காலை இந்த தனிமைப் பிரதேசத்தை குதிரை மீதமர்ந்து ரோந்து சுற்றும் போலீஸ்காரர்களில் ஒருவர் சீரழிந்த இரும்பு மற்றும் பெயிண்ட் கடையின் வாசல்படி நிழலில் நீண்ட அங்கி அணிந்த மனிதன் மல்லாக்காகக் கிடத்தப் பட்டிருப்பதை கவனித்தார். ஒரு ஆழமான கத்திக் குத்து அந்த மனிதனின் நெஞ்சை வெட்டிப் பிளந்திருந்தது. அவனது இறுகலான வடிவக் கூறுகள் ரத்தத்தினால் மூடப்பட்டது போல் இருந்தது. கடைசிச் சுவரின் சம்பிரதாய சிவப்பு மற்றும் மஞ்சள் சதுரங்களின் மீது சாக்கட்டி யினால் சில சொற்கள் கிறுக்கப்பட்டிருந்தன. ரோந்துப் போலீஸ்காரர் அதை வாய் விட்டுப் படித்தார். அன்று மாலை ட்ரெவிரேனசும் லோன்ராட்டும் நகரத்தின் வழியாக கொலை நடந்த தூரத்து இடத்தை அடைந்தனர். அவர்களுடைய காரின் இடது மற்றும் வலது பக்கங்களில் நகரம் கலைந்து சென்றது. வானம் அகன்று வீடுகள் குறைவாயின. இப்பொழுது அதிகம் தெரிந்தது செங்கல் சூளைகளும் ஒன்றிரண்டு பாப்லார் மரங்களும்தான். அவலமான அந்த இடத்தினை அடைந்தார்கள். கற்கள் பாவப்படாத குறுகிய சந்து. அஞகே இருபக்கமும் இருந்த ரோஜா நிறச் சுவர்கள் அதீதமான சூர்யாஸ்தமனத்தைப் பிரதிபலிப்பதாய்த் தோன்றியது. இறந்து போனவனின் அடையாளம் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. டேனியல் சைமன் அஸிவேடோ என்ற அவன், பழைய வடக்குப் பிரதேசங்களின் வெளிப்பகுதிகளில் ஓரளவு பெயர் பெற்றிருந்தான். வாகன ஓட்டியாகத் தொடங்கி அடியாள் கும்பலின் தலைவனாக இருந்து தேர்தல்களத்து குண்டனாக மாறி, பிறகு திருடனாகவும், காட்டிக் கொடுப்பவனாகவும் சீரழிந்தான். (அவன் சாவின் விநோதத்தன்மை அவற்றிற்கெல்லாம் பொருத்தமாகத்தான் இருந்தது. தேர்ந்த முறையில் கத்தியைப் பயன்படுத்தத் தெரிந்த குற்றவாளிகளின் தலைமுறையில் கடைசி பிரதிநிதியாகத் திகழ்ந்தான் அஸிவேடோ. ஆனால் அவனுக்கு ரிவால்வாரைப் பயன்படுத்தத் தெரியாது). சுவரின் மீது சாக்கட்டியால் கிறுக்கப்பட்டிருந்த சொற்கள் பின்வருமாறு :

பெயரின்இரண்டாவதுஎழுத்து உச்சரிக்கப்பட்டுவிட்டது.

மூன்றாவது கொலை பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி இரவு நடந்தது. ஒரு மணிக்கு சற்று முன்பாக இன்ஸ்பெக்டர் ட்ரெவரேனசின் அலுவலகத்தில் தொலைபேசி ஒலித்தது. அளப்பரிய ரகசியத் தன்மையுடன் அடித்தொண்டையில் பேசிய மனிதன் தன் பெயர் கின்ஸ்பெர்க்(அல்லது கின்ஸ்பர்க்)என்றும் ஒரு போதுமான அளவு சன்மானத்திற்காக அசிவேடோ மற்றும் யார்மேலின்ஸ்கி ஆகிய இருவரின் இரட்டைத் தியாகங்களைப் பற்றிய தகவல்களைத் தெளிவு படுத்துவதாகவும் கூறினான். விஸில்கள் மற்றும் வண்டி ஹாரன்களின் கலவை ஒலியில் காட்டிக் கொடுப்பவனின் குரல் அமிழ்ந்து போயிற்று. பிறகு தொலைபேசி துண்டிக்கப்பட்டது. அந்த சமயம் பண்டிகைக் களியாட்டக் காலத்தின் உச்சம் என்பதால் ஒரு ஏமாற்று விளையாட்டாக அது இருக்கக் கூடும் சாத்தியத்தையும் தவிர்க்காமல் ட்ரெவிரேனஸ் சோதித்தறிந்து ரூ த தோலான் தெருவில் இருந்த லிவர்பூல் நிலையம் என்ற பெயரிட்ட மாலுமிகளின் தங்கும் விடுதியில் இருந்து தனக்கு அந்த தொலைபேசிச் செய்தி வந்ததென்று தெரிந்து கொண்டார். நீர்முகத்துத் தெருவான அது, மேல் வளைவுகள் கொண்டது. அந்த அழுக்குச் சந்தில் ஒரே சமயத்தில் எதிரெதிரெ மெழுகுப் பொம்மை மியூசியத்தையும், பால் விற்பவனின் கடையையும், விலைமாதர் விடுதியையும் விவிலியப் புத்தகம் விற்பவர்களையும் நம்மால் பார்க்க முடியும். ட்ரெவிரேனஸ் அந்த விடுதியின் உரிமையாளரை தொலைபேசியில் கூப்பிட்டார். அந்த மனிதன் (அவனது பெயர் கறுப்பு ஃபின்னகன்–அவன் சீர்திருந்திய அயர்லாந்துக் குற்றவாளி; இப்போது கௌரவம், மதிப்பு போன்றவற்றால் ஒரேயடியாகக் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறான்.) தொலைபேசியைக் கடைசியாக உபயோகித்தது அவனது விடுதியின் அறை வாசியான கிரிஃபியஸ் என்கிற ஒருவன் என்றும் சில நிமிடங்களுக்கு முன்னர்தான் அவன் தன் நண்பர்களுடன் வெளியில் சென்றான் என்றும் தகவல் தெரிவித்தான். உடனடியாக ட்ரெவிரேனஸ் லிவர்பூல் நிலையத்திற்குக் கிளம்பினார். நிலையத்தின் உரிமையாளர் அவருக்கு கீழ்வரும் கதையை கூறினார்.

எட்டு நாட்களுக்கு முன் கிரிஃபியஸ், மதுவருந்தும் அறைக்கு மேலிருந்த ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டான். கூர்மையான தோற்றக்கூறுகளுடைய அவனுடைய தாடி பனி போன்ற நிறத்தில் இருந்தது. அவனுடைய கறுப்பு நிற உடைகளை சீரற்று அணிந்திருந்தான். வெளிப்படையாகவே அதிகமான ஒரு தொகையை வாடகையாக ஃபின்னகன் கேட்டிருக்கிறான். (அந்த அறையை ஃபின்னகன் எந்த விஷயத்துக்காக பயன்படுத்துகிறான் என்பதை உடனடியாக ட்ரேவரேனஸ் யூகித்துவிட்டார்.) கோரப்பட்ட அந்த தொகையை கிரிஃபியஸ் சிறிதும் தயங்காமல் அந்த இடத்திலேயே செலுத்திவிட்டான். வெளியே செல்லாமலே இருந்த அவன், அறையிலேயே மதிய மற்றும் இரவு உணவைச் சாப்பிட்டான். மதுவருந்தும் பொது அறையில் அவன் முகம் பரிச்சயமே இல்லாதிருந்தது. குறிப்பிட்ட அந்த இரவில், ஃபின்னகனின் அலுவலகத்தில் இருந்த தொலைபேசியைப் பயன்படுத்த கீழிறங்கி வந்திருக்கிறான்.

மூடப்பட்ட கூப்பேவண்டி ஒன்று வாசலில் வந்து நின்றது. வண்டி ஓட்டி, இருக்கையிலிருந்து எழவில்லை. சில வாடிக்கையாளர்கள் அவன் ஒரு கரடியின் முகமூடியை “அணிந்திருந்தான் என்று நினைவு கூர்ந்தனர். இரண்டு வேஷமிட்ட கோணங்கிகள் வண்டியிலிருந்து இறங்கி வந்தனர். அவர்கள் மிகக் குள்ளமான மனிதர்கள். அவர்கள் மிக மோசமான குடி போதையில் இருந்ததை யாரும் கவனிக்கத் தவறவில்லை. தங்கள் ஊதல்களை சத்தமாக ஊதிக்கொண்டு, ஃபின்னகனின் அலுவலகத்திற்குள் திடீரென பிரவேசித்து கிரிஃபியஸின் கழுத்தைச் சுற்றித் தங்கள் கைகளை போட்டுக் கொண்டார்கள். ஆனால் கிரிஃபியஸ் அவர்களை முன்பே அறிந்திருந்த போதிலும் அவர்களுடைய செய்கைக்கு எந்த வித எதிர்வினையும் காட்டவில்லை. சில வார்த்தைகளை எபிரேய மொழியில் மூவரும் பேசிக்கொண்டார்கள்–அவன் தாழ்வான, அடித்தொண்டையிலும், அவர்கள் உச்சஸ்தாயிக் குரல்களிலும். பிறகு மூவரும் படிகளில் ஏறி மாடி அறைக்குச் சென்றார்கள். கால் மணி நேரத்தில் மிகவும் சந்தோஷமாக மூவரும் கீழிறங்கி வந்தனர். அவர்கள் அளவுக்கே குடிபோதையில், கிரிஃபியஸ், இப்போது அந்த வேஷமிட்ட கோணங்கிகள் இருவருக்கு மத்தியில், மிக உயரமானவனாக, போதை உச்சத்தில் தடுமாறி நடந்து வந்தான். (மதுவருந்தும் பொது அறையில் இருந்த பெண்களில் ஒருத்தி அவர்கள் உடையில் காணப்பட்ட சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் சாய்சதுரங்களை நினைவு கூர்ந்தாள்). இரண்டு முறை அவன் தடுக்கி விழுந்தான். கோணங்கிகள் இரண்டு முறையும் அவனைத் தாங்கித் தூக்கிப் பிடித்தனர். அருகிலிருந்த கப்பல் துறைமுகத்திற்காய் கிளம்பிய அம்மூவரும் (அங்கே அப்பகுதி சாய்சதுர வடிவிலான நீர்ப்பகுதிகளை உள்ளடக்கி இருந்தது) வண்டியில் ஏறிக்கொண்டு பார்வையிலிருந்து மறைந்தனர். கோணங்கிகளில் இரண்டாமவன் வண்டியின் முன்னால் ஏறுபலகையில் இருந்தபடி, கடைத்தூண்களில் தொங்கிக்கொண்டிருந்த மார்க்கெட் சிலேட் ஒன்றில் ஆபாசமான வரைபடத் தையும் சில வார்த்தைகளையும் கிறுக்கிச் சென்றான்.

ட்ரெவிரேனஸ் வெளியே எட்டிப்பார்த்தார். ஏறத்தாழ முன் கூறத்தக்க வகையில் அந்த வாக்கியத் தொடர் இவ்வாறிருந்தது:

பெயரின் கடைசி எழுத்து உச்சரிக்கப்பட்டு விட்டது.

பின்னர் அவர் கிரிஃபியஸ்-கின்ஸ்பர்க்கின் சிறிய அறையை சோதனை செய்தார். தரையில் நட்சத்திர அமைப்பில் ரத்தம் சிதறி விட்டிருந்தது; அறை மூலைகளில் ஹங்கேரியன்பிராண்ட் சிகரெட் துண்டுகள் கிடந்தன; துணிகள் வைக்கும் அலமாரியில் 1739 ஆம் வருடப் பதிப்பில் லத்தீனில் எழுதப்பட்ட கங்ன்ள்க்ங்ய் என்பவரின் டட்ண்ப்ர்ப்ர்ஞ்ன்ள் ஐங்க்ஷழ்ஹங்ர் — ஏழ்ஹங்ஸ்ரீன்ள் புத்தகம் இருந்தது. அதில் பல விளக்கக் குறிப்புகள் கையால் எழுதப்பட்டிருந்தன. கோபம் மிகுந்த ஒரு பார்வையை அவற்றின் மீது வீசிய ட்ரெவிரேனஸ் லோன்ராட்டுக்குச் சொல்லி அனுப்பினார். சாத்தியமாக இருக்கக் கூடிய கடத்தல் பற்றி எதிர்மாறான சாட்சிகளை இன்ஸ்பெக்டர் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, லோன்ராட், தான் அணிந்திருந்த தொப்பியைக் கூடக் கழற்ற அக்கறைப்படாமல், படிக்க ஆரம்பித்தான். அதிகாலை நான்கு மணிக்கு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்கள். வளைந்து வளைந்து சென்ற Rue de Toulon தெருவில் அந்த இரவின் அலங்காரத் தோரணங்களையும், ஜிகினாத் துண்டுகளையும் மிதித்தபடி வெளியே வந்த போது ட்ரெவிரேனஸ் குறிப்பிட்டார்: “இந்த இரவு நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு தமாஷாக இருந்தால்?”

எரிக் லோன்ராட், சிரித்தபடி, பக்குவமான நிதானத்துடன் “ஃபிலோலோகஸ் நூலின் முப்பத்து மூன்றாவது ஆய்வுக் கட்டுரையில் அடிக்கோடிடப்பட்டிருந்த ஒரு பகுதியைப் படித்துக் காட்டினான்:

Dies Judaeorum incipit a solis occasu usque ad soils occasum diei sequentis இதற்கு அர்த்தம் என்னவென்றால் என்றவன் தொடர்ந்தான்: “யூதர்களின் ஒரு தினம் சாயங்காலத்தில் தொடங்கி அடுத்த நாள் சாயங்காலத்தில் முடிகிறது.”

அதற்கு ட்ரெவிரேனஸ் கிண்டலாகக் கேட்டார்: “அதுதான் இன்றிரவு நீ சேகரித்த மிக மதிப்பு வாய்ந்த ஒரு தடயமா?”

“இல்லை அதை விட மதிப்பு வாய்ந்தது உங்களுடன் தொலைபேசியில் பேசிய போது கின்ஸ்பர்க் பயன்படுத்திய வார்த்தைகளில் ஒன்று”

அந்த மாலை செய்தித்தாள்கள் அந்த வழக்கமான திடீர் காணாமல்போதல்களைப் பற்றிப் பெரிது படுத்தி எழுதின. சென்ற முறை Congress of Hermits கூட்டம் நடைபெற்ற பொழுது இருந்த பாராட்டத்தக்க கட்டுப்பாட்டினையும் இப்போது நடந்த வன்முறைச் செயல்களையும் வித்யாசப் படுத்திக் காட்டியது La Croix de L’Epee என்ற செய்தித்தாள். The Martyr பத்திரிக்கையில் எழுதிய எர்னஸ்ட் பாலாஸ்ட் என்பவர் பொறுத்துக் கொள்ள முடியாத நிதானத்தில் இந்த ரகசியமான மட்டரகமான கொலைகளையும் அவை மூன்று யூதர்களை ஒழித்துக் கட்ட எடுத்துக்கொண்ட மூன்று மாதங்களைப் பற்றியும் விமர்சித்தார். யூதர்களுக்கு எதிரான ஒரு சதித்திட்டம்–பற்றிய குறிப்பினை ஊடுருவித் துருவும் அறிவுஜீவிகள் பலர் இந்த முக்கொலை மர்மத்திற்கு யூத இனம் அழிய வேண்டும் என்ற நோக்கம் தவிர வேறெந்த காரணமும் இல்லை என்று தீர்மானமாகக் கருதினாலும் Judische Zeitung பத்திரிக்கை மறுத்தது. நகரின் தென்பகுதியில் இருந்த தலைசிறந்த துப்பாக்கிக்காரனான சிவப்பு டான்டி ஸ்கார்லாக், நகரில் அவன் இருக்கும் பகுதியில் இந்த மாதிரியான குற்றங்கள் நடக்கவே நடக்காதென்று சூளுரைத்து, இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸ் ட்ரெவிரேனஸின் மீது தண்டனைக்குரிய அலட்சியத்தன்மை என்ற குற்றத்தையும் சாட்டினான்.

மார்ச் 1ஆம் தேதி இரவு, இன்ஸ்பெக்டருக்கு ஒரு பெரிய முத்திரையிடப்பட்ட கண்ணைக் கவரும் உறை வந்து சேர்ந்தது. அதைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த கடிதத்தை யாரோ ஒரு ‘பாருக் ஸ்பினோசா’ என்பவன் கையெழுத்திட்டிருந்தான். கூட அந்த நகரத்தின் விளக்கமான் வரைபடம் ஒன்றும் இருந்தது. சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டி வரைபடத்திலிருந்து அந்த நகரின் வரைபட அமைப்பு கிழித்தெடுக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. மார்ச் 3ஆம் தேதி, நான்காவதாக ஒரு கொலைக் குற்றம் நடக்கப் போவதில்லை என அந்தக் கடிதம் முன்னறிவித்தது. ஏன் என்றால் மேற்குப் பக்கத்தில் அமைந்த இரும்பு மற்றும் பெயிண்ட் கடை, Rue de Toulon தெருவில் இருந்த விடுதி, மற்றும் Hotel Du Nord ஆகிய இவை மூன்றும் ஒரு சமபக்க மர்மமான முக்கோணத்தின் பண்பட்ட பக்கங்களாக அமைந்துவிட்டன என்று விளக்கம் தரப்பட்டிருந்தது. வரைபடத்தில் தீட்டியிருந்த சிவப்புமை முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் மிகச்சரியான நீளத்தைக் கொண்டிருந்ததை எடுத்துக்காட்டின. ட்ரெவிரேனஸ் இந்த ஜியோமிதித்தன்மையான வியாக்கியானத்தை ஒரு வித சலிப்புடன் படித்துவிட்டு கடிதத்தையும் வரைபடத்தையும் எரிக் லோன்ராட்டுக்கு அனுப்பி வைத்தான். அவன்தான் இந்த மாதிரியான கிறுக்குத்தனமான கருதுதல்களுக்குப் பொருத்தமானவன். அதில் விவாதத்திற்கே இடமில்லை.

லோன்ராட் அவற்றை ஆராய்ந்தான். மூன்று புள்ளிகளுமே சரிசம தூரத்தில் இருந்தன. கால ஒழுங்கிலும் சீர்தன்மை இருந்தது (டிசம்பர் மூன்று, ஜனவரி மூன்று, பிப்ரவரி மூன்று); இப்போது புவித்தள வெளியிலும் சமச்சீர்தன்மை இருந்தது. திடீரென்று, அந்தப் புதிருக்குத் தீர்வு கண்டு பிடிக்கும் விளிம்பில் தான் இருப்பதாக உணர்ந்தான். ஒரு காம்பஸ் கருவியும் டிவைடரும் அவனது திடீர் உள்உணர்வை முழுமையாக்கின. அவன் புன்முறுவல் செய்து, டெட்ராகிரமட்டான் என்ற சொல்லை (அவன் சமீபகாலத்தில் சேகரித்துக் கொண்டது) உச்சரித்தான். பிறகு இன்ஸ்பெக்டரை தொலைபேசியில் அழைத்தான்.

“நீங்கள் நேற்றிரவு அனுப்பி வைத்த சமபக்க முக்கோணத்திற்கு நன்றி” என்றான். “அது மர்மத்தைக் விடுவிக்க எனக்கு உதவியது. நாளை, வெள்ளிக்கிழமை, கொலைகாரர்கள் பத்திரமாக சிறையில் இருப்பார்கள். நாம் அதை நிச்சயமாக நம்பலாம்”

“அப்படியானால் அவர்கள் நான்காவது குற்றத்திற்கு திட்டமிட வில்லையா?”

“மிகச்சரியாக அவர்கள் நான்காவது குற்றத்திற்குத் திட்டமிடுவதால்தான் நம்மால் எளிதில் ஓய்வு கொள்ளமுடியும் என்று என்னால் திட்டவட்டமாகக் கூற முடிகிறது”.

லோன்ராட் தொலைபேசியை வைத்தான். ஒரு மணி நேரம் கழித்து யாருமற்ற திரிஸ்லா ராய் பங்களாவை நோக்கி தென்னக ரயில்வேயின் ரயில்பெட்டிகளில் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தான் அவன். நமது கதை நகரின் தென்புறமாக, தோல் பதனிடும் தொழிற் சாலைகளின் கழிவுகளாலும் சாக்கடைகளாலும் அசுத்தமான ஒரு இருண்ட, சேறு கலந்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் எதிர்ப்பக்கக் கரையில் படுமோசமான அரசியல் பிரமுகன் ஒருவனின் ஆதரவினால் துப்பாக்கிக் கேடிகள் சுபிட்சமாக இருந்து வரும் ஒரு தொழிற்பேட்டை இருந்தது. லோன்ராட் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

துப்பாக்கியைக் கையாள்வதில் எல்லாரையும் விட அதிகம் பெயர்பெற்றவனான சிவப்பு ஸ்கார்லாக், லோன்ராட்டின் இந்த திடீர்ப் பயணத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு எதை வேண்டுமானாலும் கொடுத்திருப்பான். அஸிவேடோ ஸ்கார்லாக்கின் அடியாளாக இருந்தவன். நான்காவது பலி ஆளாக ஸ்கார்லாக்கே இருக்கக் கூடும் என்ற தூரத்து சாத்தியத்தை லோன்ராட் எண்ணிப் பார்த்தான். பிறகு அதை ஒதுக்கி விட்டான். ஏறக்குறைய அவன் புதிரினை முழுமையாக விடுவித்து விட்டான். அந்த வெறும் சந்தர்ப்பங்கள், யதார்த்தம் (பெயர்கள், கைது செய்தல்கள், முகங்கள், சட்ட மற்றும் குற்றவியல் ரீதியான செயல்முறைகள்) போன்றவை அவனுக்கு இப்போது ஈர்ப்பளிக்கவில்லை. மூன்று மாத அலுவலக ஃபைல் வேலைகளுக்கு பிறகு, நத்தை அளவுக்கு நடைபெற்ற ஆய்வுகளுக்குப் பின் அவன் எங்காவது ஓய்வாகச் செல்ல விரும்பினான். யார் அனுப்பியது என்று தெரியாமல் வந்து சேர்ந்த முக்கோணத்திலும், ஒரு தூசு படிந்த கிரேக்கச் சொல்லிலும் அந்தக் கொலைக்குற்றங்களுக்கான தீர்வு இருந்தது என்று ஆழ்ந்து யோசித்தான். மர்மம் இப்போது படிகத்தைப் போல தெள்ளத் தெளிவாகிவிட்டது. ஏறத்தாழ நூறுநாட்களை இதில் செலவழித்து விட்டதற்காக வெட்கப்பட்டான்.

யாருமற்ற அமைதியான ரயில் நிலையமொன்றில் ரயில் நின்றது. லோன்ராட் இறங்கிக் கொண்டான். விடியற்காலையைப் போலவே வெறுமையாக இருந்த பகல் நேரங்களில் அந்தப் பகல் வேளையும் ஒன்றாக இருந்தது. இருளடைந்து புல் நிறைந்த பகுதிகளின் காற்று ஈரம் மிகுந்தும், குளிர்ந்தும் இருந்தது. வயல்களுக்கு குறுக்காகச் செல்ல ஆரம்பித்தான் லோன்ராட். அவன் ஒரு நாயையும், வெளிப்புறச் சுவர் மறைப்பொன்றில் இருந்த காரினையும், தொடுவானத் தையும், தெளிவற்ற சாக்கடையிலிருந்து நீர் பருகிக் கொண்டிருந்த ஒரு வெள்ளை நிறக் குதிரையையும் பார்த்தான். சுற்றிலுமிருந்த யூகாலிப்டஸ் மரங்களின் உயரத்தை எட்டுவது போல் நெடுக மேலெழும்பி இருந்த திரிஸ் லா ராய் பங்களாவின் நீள்சதுர அழுக்கான திறந்த வெளி மேல்மாடியை அவன் பார்த்தபோது இரவு கவியத்தொடங்கி விட்டிருந்தது. பெயரை ஆவலுடன் தேடிக் கொண்டிருப்பவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் அற்புத விநாடியிலிருந்து அவனை இன்னும் ஒரு பகலும் ஒரு இரவும் அல்லது அதற்கும் குறைவான நேரமே (கிழக்கில் ஒரு புராதன ஒளியும் மேற்கில் இன்னொன்றும்) பிரித்து வைத்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டான் அவன்.

அந்த பங்களாவின் சீரற்ற சுற்றளவினை ஒரு துருப்பிடித்த இரும்பு வேலி வரையறுத்திருந்தது. பிரதான வாசல்கேட் சாத்தியிருந்தது. உள்ளே நுழைவதற்கான சாத்தியம் பற்றிய நம்பிக்கை அதிகம் இல்லாமல் லோன்ராட் கட்டடத்தைச் சுற்றி வந்தான். சாத்தப்பட்ட கேட்டினருகே மீண்டும் வந்து, இரும்புக் கம்பிக்கிடையில் ஏறத்தாழ இயந்திரத்தனமாகத் துழாவிய போது அதன் தாழ்ப்பாளைக் கண்டுபிடித்தான். துருப்பிடித்த இரும்பின் கீச்சொலி அவனை ஆச்சரியப் படுத்தியது. ஒரு வித கடினமான பணிவுடன், கேட் முழுமையாகத் திறந்து கொண்டது.

விழுந்த இலைகளின் அடுக்கடுக்கான குழப்பமான தலைமுறைகளை மிதித்த வண்ணம் யூக்காலிப்டஸ் மரங்களுக்கிடையில் லோன்ராட் முன்னேறி நடந்தான். கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும்போது அந்த பங்களா ஏராளமான அர்த்தமற்ற சீர்தன்மைகளின் சிதைவுகளாகவும் ஏறத்தாழ பைத்தியக்காரத்தனமான இரட்டிப்புகளின் இருப்பிடமாகத் தெரிந்தது. ஒரு இருண்ட மாடப்பிறையில் இருந்த டயானா வேறொரு மாடப்பிறையில் இருந்ததை ஒத்திருந்தது. ஒரு மேல் மாடம் மற்றொரு மேல்மாடத்தினைப் பிரதிபலித்தது. வெளியிலிருந்து இரண்டு படிக்கட்டுகள் ஒவ்வொரு இறங்கு தரையிலும் சந்தித்துக் கொண்டன. இரட்டை முகம் கொண்ட ஹெர்மிஸ் சிலை பூதாகரமான நிழலை வீசியது. தரையைச் சுற்றி வழி கண்டுபிடித்த மாதிரி வீட்டையும் சுற்றி வழி தேடினான். ஒவ்வொரு சிறு விவரத்தினையும் நுணுகிப் பார்த்தான். மாடித் தரைமட்டத்தினை ஒட்டி ஒரு குறுகலான திறப்புவழி இருப்பதைக் கவனித்தான்.

அதைத் தள்ளித் திறந்தான். சில பளிங்குப் படிகள் ஒரு நிலவறைக்குக் கீழே இட்டுச் சென்றன. இதற்குள்ளாக அதைக் கட்டிய கட்டிடக் கலைஞனின் இஷ்ட கோணங்களை முன்னோக்கிவிட முடிந்த லோன்ராட் அதற்கு எதிர்த்த சுவரிலும் இதை ஒத்த படிக்கட்டுகள் இருக்கும் என்பதை யூகித்தான். அதே மாதிரி இருக்கவும் செய்தது. அவற்றில் ஏறி, கைகளை உயர்த்தி ஒரு ரகசியத் திறப்பு கதவைத் திறந்தான்.

வெளிச்சத்தின் படிவு ஒன்று அவனை ஒரு ஜன்னலுக்கு இட்டுச் சென்றது. அதைத் திறந்தான். பராமரிப்பு இல்லாதிருந்த தோட்டத்தில் அமைந்த செயற்கை நீர் ஊற்றுக்களை வட்டவடிவமான மஞ்சள் நிற நிலா கோடிட்டுக் காட்டியது. தூசிபடிந்த படிக்கட்டு வழிகளில் ஏறி வட்ட வடிவமான பின்னறைகளைச் சேர்ந்தான். லோன்ராட் வீட்டைத் துருவி ஆராய்ந்தான். சிறிய முன்னறைகள், காத்திருப்பு அறைகள், விருந்தோம்பலறைகள் வழியாக அவன் முற்றங்களை ஒத்த பகுதிக்குச் சென்றான். சென்ற முற்றத்திற்கே மீண்டும் மீண்டும் செல்ல வேண்டி வந்தது. தூசி படிந்த படிக்கட்டுவழிகளில் ஏறி வட்டவடிவமான பின்னறைகளைச் சென்றடைந்தான். அங்கே அவன் உரு முடிவற்ற எண்ணிக்கையில் எதிரெதிர் அமைக்கப்பட்ட நிலைக் கண்ணாடிகளால் பிரதி பலிக்கப்பட்ட உரு பெருக்குமானம் கண்டான். அவன் மூடித்திறந்த, எட்டிப் பார்த்த ஜன்னல்கள் நிர்க்கதியாக விடப்பட்ட தோட்டத்தினை வேறுபட்ட உயரங்களில் இருந்தும், வேறுபட்ட கோணங்களில் இருந்தும் காட்டுவதாக அமைந்திருந்தது. அதில் அவன்சலிப்படைந்தான். அறைகளின் உட்புறம் மரச்சாமான்களின் துண்டங்கள், புழுதி மண்டிய மஞ்சள் காகிதத்தில் சுற்றப் பட்டிருப்பதையும், பளிங்குச் சரவிளக்குகள் மென்துகிலால் சுற்றப்பட்டிருப்பதையுமே கண்டு சலிப்படைந்தான். ஒரு படுக்கையறை அவன் கவனத்தைக் கவர்ந்தது. அதில் ஒரு பீங்கான் பூச்சாடியில் ஒரே ஒரு பூ இருந்தது. ஒரு தொடுதலிலேயே அதன் யுகாந்திர இதழ்கள் தூசியாகப் பொடிந்தன. மூன்றாவது மாடியில், கடைசி தளத்தில், வீடு முடிவற்றும் வளர்கின்ற மாதிரியும் தோன்றியது. இந்த வீடு அத்தனைப் பெரியதல்ல என்று நினைத்தான். இந்தக் குறைவான வெளிச்சம், ஒரே தன்மைகள், நிலைக்கண்ணாடிகள், அந்தப் பல ஆண்டுகள், என் அறிமுக மின்மை, என் தனிமை எல்லாமாகச் சேர்ந்துதான் இதைப் பெரிதாக்கு கின்றன என நினைத்தான்.

சுழல் படிக்கட்டுகளில் ஏறி ஒரு ஆய்வுப் பால்கனிக்குச் சென்றான். அந்த மாலையின் நிலா ஒளி சாய்சதுர வடிவில் இருந்த கண்ணாடிச் சட்டங்கள் வழியாகப் பிரகாசித்தது. அவை சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தன. ஒரு பிரமிக்கத்தக்க மயக்கத்தில் தள்ளக் கூடிய நினைவு கூறல் அவனைத் தாக்கியது.

கட்டையான, குட்டையான இரண்டு மனிதர்கள் அவன் மீது கரடுமுரடாகவும் ஆக்ரோஷமாகவும் பாய்ந்து அவனது ஆயுதத்தைக் கைப்பற்றினர்; உயரமாக இருந்த மற்றொருவன், லோன்ராட்டை அமைதியாக வரவேற்றுச் சொன்னான்: “நீ மிகவும் கருணை உள்ளவன். எங்களுக்கு ஒரு இரவினையும் பகலினையும் மிச்சப்படுத்தி விட்டாய்.”

அவன்தான் சிவப்பு ஸ்கார்லாக். அந்த இருவர் லோன்ராட்டின் இரண்டு மணிக்கட்டுகளையும் சேர்த்துக் கட்டினர். சில வினாடிகளுக்குப் பிறகு லோன்ராட் தன் குரலைத் திரும்பப் பெற்றவனாய்ப் பேசினான் : “ஸ்கார்லாக், நீயும் அந்த ரகசியப் பெயரைத் தேடுகிறாயா?”

எதிலும் பாதிக்கப்படாதவனாக ஸ்கார்லாக் நின்று கொண்டிருந்தான். லோன்ராட்டிடமிருந்து ஆயுதத்தை பறிக்கச் செய்ய ஏற்பட்ட கைகலப்பில் அவன் பங்கேற்கவில்லை. லோன்ராட்டின் ரிவால்வாரை வாங்கிக் கொள்வதற்கும் அவன் கை நீட்டவில்லை. அவன் பேசினான். இந்தப் பிரபஞ்சத்தின் அளவு கொண்ட வெறுப்பினையும், அந்த வெறுப்புக்கு இணையான சோகத்தையும், இறுதி வெற்றியின் சலிப்பினையும் அந்தக் குரலில் லோன்ராட் கேட்க முடிந்தது.

“இல்லை” என்றான் ஸ்கார்லாக். “அதிகம் நித்தியமற்ற, அதிகம் நொய்மையான ஒன்றைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் லோன்ராட்டைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.” மூன்று வருடங்களுக்கு முன்னால் ரூ த தோலான் வீதியில் இருந்த ஒரு சூதாட்டப் புகலிடத்தில் நீயே எனது சகோதரனைக் கைது செய்து ஜெயிலில் தள்ளினாய். துப்பாக்கி சூடுகள் முடியும் முன்னால் என் ஆட்கள் என்னை ஒரு மூடப்பட்ட வண்டியில் ஏற்றினர். ஆனால் என் வயிற்றில் ஒரு போலீஸ்காரனின் துப்பாக்கிக் குண்டு இருந்தது. இந்தக் கைவிடப்பட்ட திருத்தமான பங்களாவில் வலியில் துடித்தபடி ஒன்பது இரவுகள், ஒன்பது பகல்கள் நான் நரகத்தை அனுபவித்தேன். காய்ச்சல் என்னைச் சிதறடித்துக் கொண்டிருந்தது. விடியற்காலைகளையும் சூரியன் மறைதல் களையும் பார்த்துக் கொண்டிருக்கும் வெறுக்கத்தக்க இரட்டை முகம் கொண்ட ஜேனஸ் கடவுளின் உருவம் எனது உறக்கத்தையும், விழிப்புகளையும் பயத்தாலும் பீதியாலும் நிறைத்தது. என் உடலை நான் வெறுக்கத் தொடங்கினேன். இரண்டு கண்கள், இரண்டு கைகள், இரண்டு நுரையீரல்கள் ஆகியவை இரட்டைமுகங்கள்ளு அளவுக்கே பூதாகரமாகத் தோன்றின. என்னை யேசுவின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க முயற்சி செய்த அயர்லாந்துக்காரன் கோயிமி’லிருந்து ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். எல்லா சாலைகளுமே ரோம் நகரை நோக்கியே செல்கின்றன. இரவில் என் காய்ச்சல் அந்த உருவகத்தில் திளைத்தது. இந்த உலகம் ஒரு புதிர்ச்சிக்கல் என்றும் இதிலிருந்து தப்பிப்பது சாத்தியமற்றது என்றும் உணர்ந்தேன். ஏனென்றால் வடக்கு திசை நோக்கியோ தெற்கு திசை நோக்கியோ செல்வதாகத் தோன்றினாலும் எல்லா சாலைகளும் நிஜமாக ரோம் நகரையே நோக்கிச் சென்று கொண்டிருந்திருக்கின்றன. அதே சமயம் அந்த இடம் என் சகோதரன் செத்துக் கொண்டிருந்த சதுர ஜெயில் அறையாகவும் இந்த பங்களாவாகவும் இருந்தது. என் சகோதரனை ஜெயிலுக்கு அனுப்பிய மனிதனைச் சுற்றி ஒரு புதிர்ச்சிக்கலை பின்னுவது என அந்த இரவுகளில் இரட்டை முகங்களைக் கொண்டு பார்க்கும் கடவுளையும், பிற நிலைக்கண்ணாடிகள் மற்றும் காய்ச்சல்களின் கடவுள்களையும் முன் நிறுத்தி சூளுரைத்தேன். நல்லது. அதை நான் பின்னிவிட்டேன். அது இப்போது உறுதியாக இறுகிவிட்டது. ஒரு இறந்து போன யூத அறிஞனையும், ஒரு காம்பஸ் கருவியையும், பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இனத்தையும், ஒரு கிரேக்க வார்த்தையையும், ஒரு நீண்ட கத்தியையும், ஒரு பெயிண்ட் கடையின் சுவரின் மீதிருந்த சாய்சதுர அமைப்புகளையும் அதற்கான ஆகு பொருள்களாக்கினேன்.”

லோன்ராட் இப்போது நாற்காலியில் இருந்தான். அவனருகில் அந்த குட்டையான மனிதர் இருவரும் இருந்தனர்.

“தொடர்ச்சியின் முதல் சொல் மிகவும் சந்தர்ப்பவசமாகவே எனக்குக் கிடைத்தது” ஸ்கார்லாக் சொல்லிக்கொண்டு போனான். “என் கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து–அவர்களில் டேனியல் அஸிவேடோவும் ஒருவன்– நால்வர்தலைவரின் ரத்தினக் கற்களைக் திருடும் திட்டத்தினை முன்பு தீட்டியிருந்தேன். அஸிவேடோ எங்களைக் காட்டிக் கொடுத்து விட்டான். அவனுக்கு முன்பணமாக நாங்கள் கொடுத்ததை வைத்துக் குடித்துவிட்டு ஒரு நாள் முன்னதாகவே அதிகாலை இரண்டு மணிக்கு ஹோட்டலின் பிரம்மாண்டமான குழப்பத்தில் யார்மோலின்ஸ்கியின் அறைக்குள் தவறுதலாக நுழைந்தான். அந்த யூத அறிஞர் தூக்கம் வராமல் போகவே ஏதாவது எழுதுவதென்று தீர்மானித்து எழுதத் தொடங்கியிருந்தார். சாத்தியங்கள் எல்லாவற்றிலும் கடவுளின் பெயரைப்பற்றி குறிப்புகள் தயாரிக்கவோ, கட்டுரை எழுதவோ ஆரம்பித்து பெயரின் முதல் எழுத்து உச்சரிக்கப் பட்டுவிட்டது என்ற வார்த்தைகளை டைப் செய்திருந்தார். அஸிவேடோ அவரை கத்தக் கூடாது அசையக் கூடாது என்று எச்சரித்தான். ஹோட்டலில் வேலை செய்யக் கூடிய எல்லா அலுவலர்களையும் எழுப்பி விட்டிருக்கக் கூடிய அழைப்பு மணியினை நோக்கி அவர் கை நீண்டது. தனது கத்தியால் அவரை அஸிவேடோ ஒரே குத்தில் சாய்த்தான். அது அவன் அறியாமலே செய்த எதிர்வினைதான். “ஐம்பது வருட வன்முறையானது, மிக சுலபமானதும், உறுதியானதுமான செயல், கொல்வதுதான் என்று அவனுக்குக் கற்றுத் தந்திருக்கிறது. . .பத்துநாட்கள் கழித்து, Judische Zeitung பத்திரிகையின் மூலமாக யார்மோ லின்ஸ்கியின் சாவுக்கான திறவுகோலினை, அவர் எழுதிய புத்தகங்களில் இருந்து நீ தேடிக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தேன். நான் அவர் எழுதிய History of the Hasidic Sect நூலை படித்தேன். கடவுளின் பெயரை உச்சரிப்பதில் இருந்த புனித பயமானது,பெயர் ரகசியமான தென்றும் சர்வவல்லமை உடையதான கருத்து உருவாகக் காரணமாயிருந்தது என்றும் தெரிந்து கொண்டேன். Hasidim-ஐச் சேர்ந்த சிலர் அந்த ரகசியப் பெயரினைத் தேடிக் கொண்டிருப்பது மட்டுமின்றி நரபலி கொடுக்கும் அளவுக்கும் சென்றிருக்கின்றனர் என்பதை நான் தெரிந்து கொண்டேன். Hasidim- சேர்ந்தவர்கள் யூத அறிஞரை பலி கொடுத்துவிட்டார்கள் என நீ யூகிப்பாய் என்று நான் உணர்ந்தவுடன் அந்த யூகத்தினை நியாயப்படுத்துவதற்கு என்னாலான எல்லா வற்றையும் செய்தேன். யார்மோலின்ஸ்கி டிசம்பர் மூன்றாம் தேதி இரவு இறந்தார். இரண்டாவது பலிகொடுப்பதற்கு ஜனவரி மூன்றாம் தேதியைத் தேர்ந்தெடுத்தேன். அந்த ரபி வடக்குப் பக்கத்தில் இறந்திருந்தார்; இரண்டாவது பலிகொடுப்பதற்கு மேற்குப் பக்கத்தில் எங்களுக்கு ஒரு இடம் தேவைப்பட்டது. டேனியல் அஸிவேடோதான் எங்களுக்குத் தேவைப்பட்ட பலிஆள். அவன் காட்டிக் கொடுப்பவன், இஷ்டத்திற்கு செயல்படுபவன்; அவனுக்கு சாவு தகுதியானது. அவன் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் எங்களின் முழுத்திட்டமே அழித்தொழிக்கப் பட்டிருக்கும். ஆட்களில் ஒருவன் அவனைக் கத்தியால் குத்தினான். அவன் பிரேதத்தை முந்தைய கொலையுடன் சம்மந்தப்படுத்த வேண்டி பெயிண்ட் கடைச் சுவரில் இருந்த சாய்சதுரங்களின் மீது நான் கிறுக்கினேன் :

பெயரின் இரண்டாவது எழுத்து உச்சரிக்கப் பட்டுவிட்டது.

ஸ்கார்லாக் தன்னிடம் சிக்கியவனை நேருக்கு நேராகப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தான். “மூன்றாவது கொலை பிப்ரவரி மூன்றாம் தேதி நடத்தப்பட்டது. ட்ரெவிரேனஸ் யூகித்தது போல அது ஒரு பொய்த் தயாரிப்பு. கிரிஃபியஸ்–கின்ஸ்பெர்க்–கின்ஸ்பர்க் நான்தான். முற்றுப் பெறவே முடியாதது போலத் தோன்றிய ஒரு வாரம் (இந்த பொய் தாடியுடன்) ரு த துலானிலிருந்த தெள்ளுப் பூச்சிகள் நிறைந்த சிறிய அறையில் என் நண்பர்கள் என்னைக் கடத்திச் செல்லும் வரை தங்கினேன். வண்டியின் ஏறுபலகை மீதிருந்து அதில் ஒருவன் தூணில் எழுதினான்: பெயரின் மூன்றாவது எழுத்து உச்சரிக்கப்பட்டுவிட்டது. அந்தச் செய்தியானது கொலைகளின் தொடர்ச்சி மூன்றாக அமைந்ததைச் சொன்னது. அப்படித்தான் பொதுமக்கள் அதைப் புரிந்து கொண்டார்கள். லோன்ராட் என்கிற தர்க்கக்காரனான நீ கொலைகள் நான்கு என்று தீர்வு ஏற்படுத்திக் கொள்ளும்படி நான் மீண்டும் மீண்டும் சில துப்புக்களை வீசினேன். வடக்கில் ஒரு கொலை, மற்றவை கிழக்கிலும் மேற்கிலுமாக இருப்பது தெற்கில் நான்காவது கொலையைக் கோரியது. டெட்ராகிராமட்டான் கடவுளின் பெயர் JHVH– நான்கு எழுத்துக்களால் ஆனது. கோணங்கிகளும், பெயிண்ட் கடையில் இருந்த குறியீடும் நான்கு புள்ளிகளைக் குறித்தன. லுஸ்டெனின் கையேட்டி லிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை நான் அடிக்கோடிட்டேன் .

ஒரு நாளினை யூதர்கள் சூர்யாஸ்தமனத்திலிருந்து சூர்யோதயம் வரைலானது எனக் கருதினார்கள்’ என்பதை அந்தப் பகுதி தெளிவுப்படுத்துகிறது. மரணங்கள் எல்லாம் ஒவ்வொரு மாதத்தின் நான்காம் தேதியில் சம்பவித்தன என்று அதே பகுதி புரியத்தருகிறது. நான்தான் ட்ரெவிரேனசுக்கு அந்த முக்கோணத்தை அனுப்பி வைத்தேன். விடுபடும் புள்ளியை நீயே தந்து கொள்வாய்-முழுமையான சாய்சதுரத்தின் புள்ளியை–அந்தப் புள்ளி, சாவு உனக்கு எங்கே காத்துக் கொண்டிருக்கிறதோ அதை நிச்சயப்படுத்துகிறது என்று தெரிந்தே செய்தேன். எரிக் லோன்ராட் ஆகிய உன்னை திரிஸ்லா ராயின் தனிமைக்கு கவர்ந்து வர எல்லாவற்றையும் திட்டமிட்டேன்”.

ஸ்கார்லாக்கின் பார்வையைத் தவிர்த்தான் லோன்ராட். சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற சாய்சதுரங்களாக உடைபட்டிருந்த வானத்தையும் மரங்களையும் நோக்கினான். தான் மெல்லிதாக சில்லிட்டுப் போவதை உணர்ந்தான். கூடவே ஒருவித தன்வயமற்ற, அநாமதேயமான சோகத்தையும் உணர்ந்தான். இப்பொழுது இரவாகி விட்டிருந்தது. கீழே அநாதரவான தோட்டத்திலிருந்து ஒரு பறவையின் பயனற்ற கூவல் கேட்டது. லோன்ராட், கடைசி தடவையாக ஒரு முறை சீர்தன்மையோடு, தொடர்ச்சியான இடைவெளியில் நடந்த மரணங்கள் என்ற பிரச்சனை குறித்து யோசித்தான்.

இறுதியாக, “உன்னுடைய புதிர்ச்சிக்கலில் அதிகப்படியான மூன்று வரிகள் இருக்கின்றன” என்றான். ஒற்றை நேர்க்கோடாக அமைந்த ஒரு கிரேக்கப் புதிர்ச்சிக்கலை எனக்குத் தெரியும். அந்த வழியில் பலப்பல தத்துவஞானிகள் தங்களை இழந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஒரு சாதாரண துப்பறியும் அதிகாரியும் அப்படியே ஏமாறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்கார்லாக், வேறொரு ஒரு அவதாரத்தில் என்னை நீ வேட்டையாடும்போது. A யில் ஒரு குற்றத்தைப் புரிவதாக நடி. (அல்லது உண்மையாகவே செய்.) A யிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் B யில் இரண்டாவதையும் பின் A யிலிருந்தும் B யிலிருந்தும் சரிசமமாக நன்நான்கு கிலோமீட்டர் தொலைவில் இரண்டிற்கும் இடையில் இருக்கும்படியான C யில் மூன்றாவது குற்றத்தை நடத்து. அதற்குப் பிறகு A யிலிருந்தும் C யிலிருந்தும் சரிசம தூரத்தில். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்படியான D யில் எனக்காகக் காத்திரு. இதோ இப்பொழுது திரிஸ்லா ராயில் என்னைக் கொல்லப் போகிறாயே இதே மாதிரி”.

“அடுத்த முறை நான் உன்னைக் கொல்லும்போது கண்ணுக்குத் தெரியாததும் முடிவற்றதுமான ஒற்றைக் கோடு கொண்ட அந்தப் புதிர்ச்சிக்கலை உனக்குத் தருவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று பதிலளித்தான் ஸ்கார்லாக்.

பின்னோக்கி சில அடிகள் தன்னை நகர்த்தினான். பிறகு அவன் கவனமாகத் துப்பாக்கியால் சுட்டான்.

(இந்தக் கதையை Donald W.Yates என்பவரும் மொழிபெயர்த்திருக்கிறார். இங்கே எடுத்துக் கொள்ளப்பட்ட பிரதி அலெஃப் மற்றும் பிற கதைகள் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. லேபிரின்த்ஸ் தொகுதியிலிருந்து அல்ல.-மொழிபெயர்ப்பாளர்)

தமிழில் பிரம்மராஜன்

Translated by Normon Thomas Di Giovanni..

மணல் புத்தகம்/ஜோர்ஜ் லூயி போர்ஹே/Book of Sand-Borges-Tamil Translation Brammarajan

bookofsandjlbமணல் புத்தகம்

ஜோர்ஜ் லூயி போர்ஹே

தமிழில் பிரம்மராஜன்

Thy rope of sands … – George Herbert

முடிவில்லாத எண்ணிக்கை கொண்ட புள்ளிகளால் ஆக்கப்பட்டிருக்கிறது ஒரு கோடு. முடிவற்ற எண்ணிக்கையிலான கோடுகளால் ஆக்கப்பட்டிருக்கிறது சரிமட்டப்பரப்பு. முடிவற்ற எண்ணிக்கையிலான சரிமட்டப் பரப்பினால் ஆக்கப்பட்டிருக்கிறது ஒரு கன அளவை. மிகை அளவை அத்தகு கன அளவைகளால். . . .இல்லை, நிச்சயமின்றி என் கதையைத் தொடங்குவதற்கான மிகச்சிறந்த வழி இது-அதிகபட்சமான ஜியோமிதி-அல்ல. இட்டுக் கட்டி செய்யப்பட்ட எல்லாக் கதைகளின் தற்போதைய நடைமுறை மரபானது அதை நிஜம் என்று கோருவதுதான், ஆனாலும் என்னுடையது நிஜமாக நடந்ததுதான்.

போனஸ் அயர்சில், பெல்கிரானோ தெருவில் இருக்கும் நான்காவது மாடியிலுள்ள குடியிருப்பு ஒன்றில்  நான் தனியாக வசிக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னால், ஒரு நாள் சாயங்காலம் வெகு நேரம் கழித்து, யாரோ கதவைத் தட்டுவது கேட்டது. நான் திறந்தபோது அந்நியன் ஒருவன் அங்கே நின்று கொண்டிருந்தான். எளிதில் வகைப்படுத்திக் கூற முடியாத சாயல்கள் கொண்ட உயரமான மனிதன. ஒரு வேளை என் கிட்டப் பார்வை அப்படித் தோன்றச் செய்திருக்கக்கூடும். சாம்பல் நிற உடை அணிந்து, சாம்பல் நிற சூட்கேஸ் ஒன்றை வைத்திருந்த அவனிடம் தற்பெருமையற்ற, பாசாங்கற்ற தோற்றம் இருந்தது.  அவன் ஒரு அந்நிய தேசத்தவன் என்பதை உடனடியாகக் கண்டு கொண்டேன். ஆரம்பத்தில் எனக்கு அவன் வயோதிகனைப் போலத் தோற்றமளித்தான். பிறகுதான், அவனுடைய மெலிந்த செம்பட்டை முடி ஒரு ஸ்கான்டிநேவியத் தன்மையில்– ஏறத்தாழ வெள்ளை என்று சொல்லக் கூடிய முடியால்–நான் அப்படி எண்ணத் தலைப்பட்டேன் என்பதை உணர்ந்தேன்.  ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்காத எங்களது உரையாடலின் போக்கில் அவன் ஓர்க்கின்ஸ் தீவுகளைச் சேர்ந்தவன் என்பதைக் கண்டுபிடித்தேன்.

ஒரு நாற்காலியைக் காட்டியபடி அவனை உள்ளே வரவேற்றேன். அவனிடமிருந்து ஒரு சோகத்தன்மை வெளிப்பட்டுக் கொண்டிருந்தது–இன்று என்னிடமிருந்து வெளிப்படுவது போல.

“நான் பைபிள்கள் விற்கிறேன்”, என்றான் அவன்.

ஏதோ விதமான படிப்புப் பகட்டுடன், நான் பதில் கூறினேன். ““இந்த வீட்டில் ஜான் வைக்கிளிஃப்பின் முதலாவதையும் சேர்த்து பல பைபிள்கள் இருக்கின்றன. சிப்ரியானோ த வெலராவினுடையதும், லூத்தருடையதும்– இது இலக்கிய அணுகு முறையில் இருந்து பார்த்தால் மிகவும் மட்டமானது–வல்கேட்டின் லத்தீன் பிரதி ஒன்றும் என்னிடம் இருக்கின்றன. இப்போது உங்களுக்குத் தெரியும், எனக்குத் தேவைப்படுவது குறிப்பாக பைபிள்கள் அல்லவென்று.”

சில கண நேரத்து மௌனத்திற்குப் பிறகு அவன் சொன்னான், “நான் பைபிள்கள் மாத்திரம் விற்பவன் அல்லன். பிக்கானீரின் வெளிப்பகுதிகளில் எனக்குக் கிடைத்த புனிதப் புத்தகத்தை உங்களுக்குக் காட்டுகிறேன். அதில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கக் கூடும்.”

அவனுடைய சூட்கேசைத் திறந்து ஒரு புத்தகத்தை மேஜை மீது வைத்தான். ஒன்றுக்கு எட்டு என்ற அளவில் இருந்த அந்தப் புத்தகம் துணியால் பைண்ட் செய்யப்பட்டிருந்தது. அது பல கைகள் மாறியிருப்பது என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிந்தது. அதன் அசாதாரண கனம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அதன் முதுகில்  புனிதக் கட்டளை என்ற சொற்களும், அவற்றுக்குக் கீழாக“பம்பாய் என்ற சொல்லும் அச்சிடப்பட்டிருந்தது.

“ஒரு வேளை பத்தொன்பதாம் நூற்றாண்டாக இருக்கலாம்”, நான் குறிப்பிட்டேன்.

“எனக்குத் தெரியாது” என்றான் அவன். ““நான் கண்டு பிடிக்கவே இல்லை.”

யதேச்சையான இடத்திலிருந்து புத்தகத்தைத் திறந்தேன். அதில் இருந்த எழுத்து எனக்கு விநோதமாகத் தெரிந்தது. புழங்கித் தேய்மானமடைந்திருந்த அதன் பக்கங்கள் பைபிள் அச்சிட்டிருப்பது போல் இரண்டு பத்திகளில் ஆனால் மோசமான அச்சில் அமைந்திருந்தது.  சிறு சிறு பிரார்த்தனைப் பண் வடிவில் எழுத்துக்கள் மிக நெருக்கமாக அமைந்திருந்தன. பக்கங்களின் மேற்புற மூலைகளில் அரேபிய எண்கள் இருந்தன.

இடது கைப்பக்கம் (என்று வைத்துக் கொள்வோம்) 40,514 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைப் பார்த்தாற் போலிருந்த வலப்புறப் பக்கத்தில் 999 என்றிருந்தது. பக்கத்தைப் புரட்டினேன். அடுத்த பக்கம் எட்டு இலக்கங்களிலான எண்ணைக் கொண்டிருந்தது. தவிர, அதில் அகராதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள வகையைப் போன்று, ஒரு சிறு பள்ளிச் சிறுவனின் திறமையற்ற கரத்தினால் பேனாவும் மையும் உபயோகித்து வரையப்பட்ட நங்கூரம் போன்ற சிறு விளக்கப்படமும் இடம் பெற்றிருந்தது.

இந்தக் கட்டத்தில் தான் அந்த அந்நியன் சொன்னான். “சித்திரத்தை கூர்மையாகக் கவனியுங்கள். உங்களால் மீண்டும் அதைப் பார்க்க முடியாது.”

அந்த இடத்தைக் குறித்துக் கொண்டு புத்தகத்தை மூடினேன். உடனே திரும்பத் திறந்தேன். பக்கம் அடுத்து பக்கமாக நங்கூரத்தின் சித்திரத்தைப் பயனின்றித் தேடினேன். ““ஏதோ ஒரு இந்திய மொழியில் உள்ள மறைநூலின் பதிப்பு போலத் தோன்றுகிறது, இல்லையா?” என்று என் ஏமாற்றத்தை மறைக்க வேண்டி கூறினேன்.

“இல்லை.” என்று பதில் அளித்தான் அவன். பிறகு ஒரு ரகசியத்தைச் சொல்பவனைப் போல, குரலைத் தாழ்த்திக் கொண்டான். “சமவெளிப் பிரதேசங்களில் இருந்த நகரம் ஒன்றில், கொஞ்சம் ரூபாய்க்கும் ஒரு பைபிளுக்கும் மாற்றாக இது கிடைத்தது. அதனுடைய உரிமையாளனுக்குப் படிக்கத் தெரியாது. இந்தப் புத்தகங்களின் புத்தகத்தை அவன் ஒரு தாயத்து மாதிரி கருதியிருக்க வேண்டும் என்பது என் சந்தேகம். அவன் மிகவும் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன். தீண்டத் தகாதவர்களைத் தவிர்த்து வேறு யாரும் அசுத்தம் அடைந்து விடாமல் அவனது நிழல் மீது கூட,  அடி எடுத்து வைக்க முடியாது. அவனுடைய புத்தகம் மணல் புத்தகம் என்றழைக்கப்படுவதாக என்னிடம் தெரிவித்தான் அவன். காரணம் மணலும் சரி, புத்தகமும் சரி, எந்தத் தொடக்கமும் முடிவும் இல்லாதிருக்கின்றன.”

அந்நியன் என்னை முதல் பக்கத்தைக் கண்டு பிடிக்கச் சொன்னான். எனது இடது கையை அட்டை மீது வைத்துக் கொண்டு, எனது கட்டை விரலை உள் முதல் வெறும்தாளுக்கு இடையில் வைக்க முயற்சி செய்தபடி, புத்தகத்தைத் திறந்தேன். பயனிருக்கவில்லை. நான் முயற்சி செய்த ஒவ்வொரு தடவையும், நிறைய பக்கங்கள் அட்டைக்கும் என் கட்டை விரலுக்கும் இடையில் வந்தன. ஏதோ அவை அந்தப் புத்தகத்திலிருந்து வளர்ந்து கொண்டே இருப்பது போல இருந்தது.

“இப்போது கடைசிப் பக்கத்தைக் கண்டு பிடியுங்கள்.”

மீண்டும் நான் தோற்றுப் போனேன். என் குரலைப்போல இல்லாத குரலில், “இது சாத்தியமே இல்லை” என்று திக்கித் தடுமாறிச் சொல்லி முடித்தேன்.

இன்னும் தாழ்வான குரலில் பேசிக்கொண்டிருந்த அந்நியன் சொன்னான், “அது சாத்திய மில்லைதான். ஆனால் சாத்தியமாகியிருக்கிறது. முடிவின்மைக்குக்கு கூடுதலாகவும் இல்லை, குறைச்சலாகவும் இல்லை. எதுவும் முதல் பக்கமல்ல, எதுவும் இறுதிப் பக்கமும் அல்ல. அவை ஏன் இப்படி தன்னிச்சையான முறையில் எண்ணிக்கை இடப்பட்டிருக்கின்றன என்பது எனக்குத் தெரியாது. ஒரு வேளை முடிவற்ற தொடர்ச்சிகளின் வரையறை எந்த ஒரு எண்ணையும் அனுமதிக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாக இருக்கலாம்.”

பிறகு உரத்து சிந்திப்பவனைப் போல சொன்னான், “புவி வெளி எல்லையற்றதாயின், நாம் புவிவெளியின் எந்தப்புள்ளியில் வேண்டுமானாலும் இருக்கலாம். காலம் என்பது எல்லையற்ற தாயின் நாம் காலத்தின் எந்தப் புள்ளியில் வேண்டுமானாலும் இருக்கலாம்.”

அவனது யூகங்கள் எனக்கு எரிச்சலூட்டின. “நீங்கள் மதநம்பிக்கை கொண்டவர்தானே?, சந்தேகமில்லையே?” என்று அவனைக் கேட்டேன்.

“நான் ஒரு பிரெஸ்பிடேரியன். என் மனசாட்சி சுத்தமாக இருக்கிறது. அவனது தீவினை மிகுந்த புத்தகத்திற்குப் மாற்றாக கடவுளின் வார்த்தை நூலைக் கொடுத்த போது அந்த நாட்டு மனிதனை நான் ஏமாற்றவில்லை என்று என்னால் ஓரளவு உறுதியாகச் சொல்ல முடியும்.”

அவன் தன்னைத் தானே கடிந்து கொள்வதற்கு எந்த முகாந்தரமும் இல்லை என்று அவனிடம் உறுதி மொழிந்தேன். பிறகு, வெறுமே தனது பயணப் போக்கில் உலகின் இந்தப் பிரதேசத்தின் வழியாக கடந்து போகிறானா என்று கேட்டேன். அவனுடைய நாட்டுக்கு இன்னும் சில நாட்களில் திரும்பி விடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகப் பதில் கூறினான். அப்பொழுதுதான் அவன் ஸ்காட்லாந்தில் இருந்த ஓர்க்னி தீவுகளைச் சேர்ந்தவன் என்பதைத் தெரிந்து கொண்டேன். ஸ்டீவென்சன், ஹியூம் ஆகியோர் மீதான அன்பின்  வழியாக ஸ்காட்லாந்து மீது ஒரு வித தனிப்பட்ட வகையிலான அளப்பறிய அன்பு கொண்டிருந்தேன் நான் என்று அவனிடம் கூறினேன்.

“நீங்கள் ஸ்டீவென்சனையும், ராபி பர்ன்ஸ்ஐயும் தானே குறிப்பிடுகிறீர்கள்” என்று திருத்தினான்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது அந்த எல்லையற்ற புத்தகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தேன். வரவழைத்துக் கொண்ட ஈடுபாடின்மையுடன், நான் கேட்டேன், “இந்த விநோதப் பொருளினை பிரிட்டிஷ் மியூசியத்திற்கு விற்க உத்தேசித்திருக்கிறீர்களா?”

“இல்லை. நான் உங்களுக்குத் தருகிறேன்”, என்றான். மிகப் பெருந்தொகை ஒன்றை புத்தகத்திற்கு நிர்ணயம் செய்தான். மிகவும் உண்மையான தன்மையுடன் அவ்வளவு பெரிய தொகை என்னால் கொடுக்க முடியாத ஒன்று  எனக் கூறிவிட்டு, யோசிக்க ஆரம்பித்தேன். ஒன்றிரண்டு நிமிடங்களில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

“ஒரு பண்டமாற்று முறையை நான் முன் மொழிகிறேன்” என்றேன். “கைநிறைய ரூபாய்க்கும், பைபிள் பிரதி ஒன்றுக்கும் பதிலாகத்தானே இந்தப் புத்தகம் உங்களுக்குக் கிடைத்தது? எனது ஓய்வூதியத் தொகையின் காசோலையை நான் இப்போதுதான் வாங்கி வந்திருக்கிறேன். அதையும், கறுப்பு எழுத்து வைக்கிளிஃப் பைபிளையும் நான் உங்களுக்குத் தருகிறேன். என் முன்னோர்களிடமிருந்துó நான் ஸ்வீகரித்தது அந்த வைக்கிளிஃப்.”

“ஒரு கறுப்பெழுத்து வைக்கிளிஃப்”, என்று அவன் முணுமுணுத்தான். என் படுக்கை அறைக்குச் சென்று பணத்தையும் புத்தகத்தையும் அவனுக்குக் கொண்டு வந்தேன். பக்கங்களைப் புரட்டி விட்டு, ஒரு நிஜமான பைபிள் ஆர்வலனுக்குரிய தீவிரத்துடன் ஆராய்ந்தான்.

“இந்தப் பண்டமாற்றுக்கு உடன்படுகிறேன்” என்றான் அவன்.

அவன் வாதாடாமல் இருந்தது எனக்குப் பெரும் வியப்பாக இருந்தது. பணத்தை எண்ணிப்பார்க்காமல் உள்ளே போட்டுக் கொண்டான். பிறகுதான் நான் அறிந்தேன் அந்தப் புத்தகத்தினை விற்க வேண்டும் என்ற முடிவோடுதான் என் வீட்டில் நுழைந்திருக்கிறான் என்று.

இந்தியாவைப் பற்றியும், ஓர்க்னி தீவுகளைப் பற்றியும், நார்வே நாட்டை ஒரு காலத்தில் ஆண்டு வந்த ஜார்மன்னர்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அந்த மனிதன் கிளம்பிச் செல்லும் போது இரவாகி விட்டிருந்தது. அவனை மீண்டும் நான் பார்க்கவும் இல்லை, அவனுடைய பெயரும் எனக்குத் தெரியாது.

அலமாரியில் வைக்கிளிஃப் பைபிள் எடுக்கப்பட்டதால் உண்டான இடைவெளியில் மணல் புத்தகத்தை வைக்க எண்ணி, கடைசியில் தொடர்ச்சியற்றுப் போயிருந்த ஆயிரத்தி ஒருஇரவுகள் தொகுதிகளுக்குப் பின்னால் மறைத்து வைப்பதென்று முடிவு செய்தேன். படுக்கைக்குச் சென்றேன், ஆனால் தூங்கவில்லை. காலை மூன்று அல்லது நான்கு மணி சுமாருக்கு விளக்கைப் போட்டேன். அந்த அசாத்தியப் புத்தகத்தை எடுத்து அதன் பக்கங்களைப் புரட்டினேன். அதில் ஒரு பக்கத்தில் செதுக்கு அச்சு செய்யப்பட்ட முகமூடியைப் பார்த்தேன். பக்கத்தின் மேற்புற மூலையில் என்னால் இனியும் ஞாபகப் படுத்த முடியாத பக்க எண் அதன் 9வது பெருக்கு உருவிற்கு  உயர்த்தப்பட்ட  நிலையில் இருந்தது.

என் பொக்கிஷத்தை நான் எவரிடமும் காட்டவில்லை.         அதனை உடைமையாகப் பெற்றிருக் கும் அதிர்ஷ்டத்துடன் அது களவு போய்விடும் என்ற பயமும் தொற்றிக் கொண்டது. சிறிய சித்திரங்கள்,இரண்டாயிரம் பக்கங்களுக்குப் பிறகு வந்தன. ஒரு கையேட்டில் அகர வரிசைப்படி அவற்றைப் பட்டியலிட்டேன். அது சீக்கிரமே நிரம்பி விட்டது. எந்த ஒரு சமயத்திலும் ஒரே சித்திரம் திரும்ப வரவில்லை. இரவில் என் தூக்கமின்மை அனுமதித்த சொற்ப இடைவெளிகளில் அந்தப் புத்தகத்தைக் கனவு கண்டேன்.

கோடை காலம் வந்தது, போயிற்று. அந்தப் புத்தகம் அமானுஷ்யமானது என்பதை உணர்ந்தேன். அந்தத் தொகுதியைக் கண்ணால் பார்த்து, கைகளால் பிடித்துக் கொண்டிருந்த, எந்த வகையிலும் அசுரத்தனம் குறையாத எனக்கு என்ன விதமான நலம் பயக்கும்? அந்தப் புத்தகம் ஒரு பீதிப்பொருள் என்றும், யதார்த்தத்தையே தாக்கி அசுத்தப்படுத்திய ஆபாசமானதென்றும் நான் உணர்ந்தேன்.

தீயைப் பற்றி யோசித்தேன். ஒரு எல்லையற்ற புத்தகத்தை எரிப்பதென்பது அதே போல எல்லையற்றதாகி இந்தப் பூமிக்கோளத்தையே புகையினால் மூச்சுத் திணறச் செய்யக் கூடுமென்று அஞ்சினேன். ஒரு இலையை மறைத்து வைப்பதற்கான சிறந்த இடம் காடுதான் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. பதவி ஓய்வு பெறுவதற்கு முன்னால், மெக்சிகோ தெருவில் இருந்த அர்ஜன்டீனாவின் தேசீய நூலகத்தில்–அதில் ஒன்பது நூறாயிரம் புத்தகங்கள் இருக்கின்றன– வேலை பார்த்தேன். அதன் நுழைவாயிலின் வலது பக்கத்தில் ஒரு வளைவான படிக்கட்டு பூமிக்குக் கீழிருந்த, புத்தகங்களும், சஞ்சிகைகளும், தேசப்படங்களும் வைக்கப்பட்டிருந்த அறைக்கு இட்டுச் செல்லும் என்பது எனக்குத் தெரியும். ஒரு நாள் நான் அங்கே சென்றேன். ஒரு அலுவலரைத் தாண்டி, அது எந்த உயரத்தில் இருந்தது என்பதை அறிய முயலாமலும், கதவிலிருந்து அது எவ்வளவு தூரம் என்பதையும் கவனியாது, பூமியடியில் இருந்த பழுப்பேறிய அலமாரிகளில் ஒன்றில் மணல் புத்தகத்தைத் தொலைத்தேன்.

Translated  by Norman Thomas di Giovanni