எம்மா சுன்ஸ்/ ஜோர்ஜ் லூயி போர்ஹஸ்-தமிழில் பிரம்மராஜன்-Emma ZunZ translation by Brammarajan

jlborgescollectedfic

எம்மா சுன்ஸ்ஜோர்ஜ் லூயி போர்ஹஸ்

டார்பக் மற்றும் லோவன்த்தால் ஆலையிலிருந்து, 1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி அன்று வீடு திரும்பிய எம்மா சுன்ஸ் முன் கூடத்தின் பின்பகுதியில் ஒரு கடிதம் கிடப்பதைக் கண்டாள். ப்ரேஸீல் நகரில் அஞ்சல் செய்யப்பட்ட அக்கடிதம் அவளின் தந்தை இறந்துவிட்டார் என்பதைத் தெரிவித்தது. தபால்தலையும், உறையும் முதலில் அவளை ஏமாற்றின : பிறகு முன்பு பார்த்திராத கையெழுத்து அவளைச் சங்கடப்படுத்தியது, ஒன்பது அல்லது பத்து வரிகள் பக்கத்தை நிரப்ப முயன்றன. திருவாளர் மேய்யர், தவறுதலாக வெரோனால் என்ற தூக்கமாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு அந்த மாதத்தின் மூன்றாம் நாள் பேஜில் உள்ள மருத்துவமனையில் இறந்திருக்கிறார். அவள் அப்பாவுடன் விடுதியில் தங்கியிருந்த, ரியோகிராண்டைச் சேர்ந்த ஒரு நண்பர் ஃபெய்னோ அல்லது ஃபைனோ–கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தார். இறந்து போனவரின் மகளுக்கே அந்தக் கடிதத்தை எழுதுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள எந்த வழியும் இன்றி அவர் எழுதியிருந்தார்.

தன் வயிற்றிலும், கால் முட்டிகளிலும் உணர்ந்த பலவீனமான தன்மையே அவளின் முதல் உணர்வுப்பதிவாக இருந்தது : பிறகு கண்மூடித்தனமான குற்றவுணர்வு, பொய்த்தோற்றம், குளிர், பிறகு பயம் : அதற்குள்ளாக அது அடுத்த நாளாக ஆகியிருக்க வேண்டும் என்று விரும்பினாள். பிறகு உனடியாக அந்த விருப்பம் பயனற்றது என்பதை உணர்ந்தாள்–ஏன் எனில் இந்த உலகில் நிகழ்ந்த ஒரே நிகழ்வு அவள் அப்பாவின் சாவு, மேலும் அது முடிவற்று நிகழ்ந்து கொண்டேயிருக்கும். கடிதத்தை எடுத்துக்கொண்டு தன் அறைக்குத் திரும்பினாள். ரகசியமாக மேஜையின் இழுப்பறையில் அதை மறைத்தாள்–எப்படியோ, முன்பாகவே, இறுதி உண்மைகளை அறிந்திருந்தாற்போல ஒரு வேளை, அவள் அதற்குள்ளாக அவற்றைச் சந்தேகிக்க ஆரம்பித்திருக்க வேண்டும்: அவள் எந்த நபராக ஆக வேண்டுமோ அவளாக இப்போதே ஆகிவிட்டாள்.

அதிகரிக்கத் தொடங்கிய இருளில், பழைய மகிழ்ச்சியான நாட்களில் இமானுவெல் சுன்ஸாக இருந்து பிறகு மேனுவல் மேய்யராக மாறிய அவர் தற்கொலை செய்து கொண்டதற்காக அந்த நாளின் இறுதிவரை எம்மா அழுதாள். குவெல்குவேவுக்கு அருகில் ஒரு சிறிய பண்ணையில் அவள் கழித்த கோடை விடுமுறை நாட்களை நினைத்துக் கொண்டாள் : அவள் அம்மாவை (ஞாபகப் படுத்திக் கொள்ள முயன்றாள்) நினைவு கூர்ந்தாள். லானூஸில் இருந்த, ஏலத்திற்குப் போய் விட்ட சிறிய வீட்டைப் பற்றி நினைத்தாள்: ஜன்னல்களின் மஞ்சள் நிற சாய்சதுரங்களை கைது செய்யப்பட அனுப்பப்பட்ட வாரண்ட்டை, பெரும் அவமானத்தை நினைத்தாள். காசாளரின் கையாடல் பற்றிய செய்திப்பத்திரிக்கையின் விவரணையையும், அது குறித்த வாசகர்களின் அநாமதேயக் கடிதங்களையும் நினைவு கூர்ந்தாள். கடைசி இரவு, அவள் அப்பா அவளிடம் திருடன் லோவன்த்தால்தான் எனச் சத்தியம் செய்ததை அவள் நினைத்தாள். (ஆனால் இதை அவள் எப்போதும் மறக்கவில்லை). லோவன்த்தால், ஏரான் லோவன்த்தால், ஒரு காலத்தில் மில்லின் மானேஜர், இப்போது எஜமானர்களில் ஒருவன். 1916லிருந்து எம்மா இந்த ரகசியத்தைப் பாதுகாத்து வருகிறாள். அதை அவள் எவரிடமும் சொல்லியதில்லை, அவளின் மிக நெருக்கமான சிநேகிதியான எல்ஸா யுர்ஸ்டீனிடம் கூட. ஒரு வேளை அவமதிப்புக்குரிய அவநம்பிக்கையை அவள் தவிர்த்துக் கொண்டிருந்திருக்கலாம்: ஒரு வேளை அந்த ரகசியம் அவளுக்கும், இப்போது இல்லாத அவள் தந்தைக்கும் இடையிலான ஒரு பிணைப்பு எனக் கருதியிருக்கலாம். அவளுக்குத் தெரியும் என்பது லோவன்த்தாலுக்குத் தெரியாது : எம்மா இந்த சாதாரண உண்மையிலிருந்து, வலிமையைப் பற்றிய உணர்வை அடைந்தாள்.

அந்த இரவு அவள் தூங்கவே இல்லை. ஜன்னலின் செவ்வகம் விடியலின் முதல் வெளிச்சத்தில் தெளிவாகியபோது, அவளுடைய திட்டங்கள் அதற்குள் முழுமைப் படுத்தப்பட்டிருந்தன. முடிவே இல்லாதது போல் தோன்றிய அந்தப் பகல் தினத்தை, வெறு எந்த ஒரு நாளையும் போல ஆக்குவதற்கு முயற்சி செய்தாள். மில்லில் ஒரு வேலை நிறுத்தம் பற்றிய வதந்திகள் இருந்தன. எம்மா எப்பொழுதும் போல, தன்னை எல்லா வன்முறைகளுக்கும் எதிராக அறிவித்துக் கொண்டாள். வேலை முடிந்ததும் ஆறு மணிக்கு, எல்ஸாவுடன் பெண்கள் மன்றத்திற்குப் போனாள். அதில் ஒரு உடற்பயிற்சிப் பிரிவும், நீச்சல் குளமும் இருந்தன. அவர்கள் பெயர்களைக் கையெழுத்திட்டார்கள்; அவளுடைய முதல் மற்றும் கடைசிப் பெயர்களை எடுத்து எழுத்து எழுத்தாக, திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி வந்தது. மருத்துவ பரிசோதனையின் போது வந்த விரசமான ஜோக்குகளுக்கு அவள் மறுவினை தர வேண்டி இருந்தது. எல்ஸாவுடனும், க்ரான்ஃபஸ் பெண்களில் இளையவளுடன் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் எந்த சினிமாவுக்குப் போகலாம் என்பதைப் பற்றிப் பேசினாள். பிறகு அவர்கள் ஆண் சிநேகிதர்கள் பற்றிப் பேசினார்கள். அதிலும் எவரும் எம்மா பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. ஏப்ரல் வந்தால், அவளுக்குப் பத்தொன்பது வயதாகும், ஆனால் ஆண்கள் ஏறத்தாழ ஒரு நோய்க்கூறான பயத்தையே உருவாக்கினார்கள் … வீட்டுக்கு வந்தபிறகு மரவள்ளிக் கிழங்கு சூப்பையும், சில காய்களையும் தயாரித்து, சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு, சீக்கிரம் படுக்கப்போய், தன்னைத் தூங்குவதற்கு உட்படுத்திக் கொண்டாள். இந்த வகையில், களைப்புடனும், அற்பமாகவும், பதினைந்தாம் தேதி வெள்ளிக்கிழமை, அந்த நாளின் முன்தினம் மறைந்தது.

பொறுமையின்மை அவளை ஞாயிற்றுக்கிழமை எழுப்பியது. பொறுமையின்மைதான் அது, மன அமைதியின்மை அல்ல — மேலும் கடைசியாக அந்த நாளாக அது இருந்ததனால் உண்டான பிரத்தியேக மனநிம்மதி. அவள் இனி திட்டமிடவோ, கற்பனை செய்யவோ வேண்டியதில்லை : சில மணி நேரங்களுக்குள் தகவல்களின் எளிமையே போதுமானதாயிருக்கும். மால்மாவிலிருந்து Nordstjarnan என்ற கப்பல் அந்த மாலை, கப்பல் நிறுத்து தளம் எண்.3 லிருந்து பயணமாகும் என்பதை La Prensa பத்திரிகையில் அவள் படித்தாள். அவள் லோவன்த்தாலுக்கு ஃபோன் செய்தாள் : மற்ற பெண்கள் அறியாமல், அவனிடம் ரகசியமாக, வேலை நிறுத்தம் தொடர்பான சிலவற்றைச் சொல்லவேண்டுமென மறைமுகமாகக் குறிப்பிட்டாள் : அவனுடைய அலுவலகத்தின் முன்னால் இரவு தொடக்கத்தில் வந்து நிற்பதாக உறுதி கூறினாள். அவள் குரல் நடுங்கியது : காட்டிக்கொடுப்பவர்களுக்கே பொறுத்தமானதாக இருந்தது அந்த நடுக்கம். குறிப்பிடத்தக்க வேறு எதுவும் அந்தக் காலையில் நிகழவில்லை. 12மணிவரை வேலை செய்த பிறகு, எல்ஸா மற்றும் பெர்லா க்ரான்ஃபஸ் உடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஊர்சுற்றல்கள் பற்றிய விவரங்களை முடிவு செய்தாள். மதிய உணவுக்கு பிறகு, படுத்துக் கொண்டு, தன் கண்களை மூடியபடி அவள் உருவாக்கியிருந்த திட்டத்தை பரிசீலித்தாள். இறுதிக்கட்டம், முதல் கட்டத்தை விட பயங்கரம் குறைவாய், சந்தேகம் இன்றி வெற்றியினுடையதும், நீதியினுடையதுமான சுவையைத்தரும் என்று நினைத்தாள். திடீரென, பீதியடைந்து, எழுந்து, உடையணியும் மேஜைக்கு ஓடினாள். இழுப்பறையைத் திறந்தாள். மில்டன் ஸில்ஸின் படத்துக்கு அடியில், அதற்கு முந்திய இரவு அவள் விட்டுச் சென்ற ஃபெய்னின் கடிதம் இருந்தது. யாரும் அதைப் பார்த்திருக்க முடியாது: அவள் அதைப் படிக்கத் தொடங்கி, பின் கிழித்தெறிந்தாள்.

அந்தப் பிற்பகலின் நிகழ்வுகளை கொஞ்சம் யதார்த்தத்துடன் விவரிப்பது மிகவும் கடினமானது, ஒரு வேளை நேர்மையற்றதாகவும் கூட இருக்கலாம். நரகத்தன்மையான ஒரு அனுபவத்தின் இயல் குணமானது நேர்மையற்றது, மற்றும் அந்த இயல் குணம் அந்த அனுபவத்தின் பயங்கரங்களை மட்டுப்படுத்துவதாகவும் தோன்றுகிறது. ஆனால் நிஜத்தில் அது பன்மடங்கு அவற்றை அதிகப்படுத்தக்கூடும். செயல்படுத்திய நபரினாலேயே சிறிதும் நம்பப்படாத ஒரு செயலை, எப்படி ஒருவர் நம்பத்தக்கதாக ஆக்குவது? இன்று எம்மா சுன்ஸின் ஞாபகம் குழப்பியும், மறுதளிக்கவும் செய்யும் அந்த சுருக்கமான, ஒழுங்கற்ற பெருங்குழப்பத்தை மீட்டுச் சொல்வது எப்படி? எம்மா, அல்மேக்ரோவில், லினியர்ஸ் தெருவில் வசித்தாள். மதியத்தில் அவள் நீர்முகப் பகுதிக்குச் சென்றாள் என்பது பற்றி நமக்கு உறுதியாகத்தெரியும். ஒருவேளை கேவலமான பாஸியோ த ஜூலியோவில் தன் உருவத்தைக் கண்ணாடிகள் பலமடங்கு பெருக்கிக் காட்டுவதை விளக்குகளால் விளக்கமூட்டப்பட்டும், பசிமிகுந்த கண்களால் நிர்வாணமாக்கப்பட்டும் அவள் தன்னைக் கண்டிருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் எவரும் கவனிக்காதபடி, கேட்பாரற்ற முகப்பின் வழியாகத் திரிந்திருப்பாள் என எடுத்துக்கொள்வது மேலும் ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருக்கும். . . இரண்டு மூன்று மதுபானப் பிரிவுகளில் நுழைந்து மற்ற பெண்களின் உத்தியையோ அல்லது வழக்கமான நடவடிக்கைகளையோ கவனித்திருப்பாள். இறுதியாக Nordstjarnan லிருந்து வந்த ஆண்களைச் சந்தித்தாள். அவர்களில் ஒருவன், மிக இளைஞன், அவளுக்குள் ஏதும் மென்மையை உருவாக்கிவிடலாம் என்று அவள் பயந்து வேறு ஒருவனைத் தேர்ந்தெடுத்தாள்–பயங்கரத்தின் தூய்மை குறைவுபட்டு விடக்கூடாது என்பதற்காக அவளை விட உயரத்தில் குறைவாகவும், முரட்டுத்தனமாகவும் இருந்தவனை. அவன் முதலில் ஒரு கதவுக்கருகில், பிறகு ஒரு இருட்டான நுழைவுக் கூடத்திற்கும், அதன் பின்னர் குறுகலான படி வழியிலும், பிறகு ஒரு முன் கூடத்திற்கும் (அதில் ஜன்னல்களின் சாய்சதுரங்கள் லேனஸில் இருந்த வீட்டினுடையவற்றுடன் ஒத்திருந்தன) பின் ஒரு கதவுக்கு அழைத்து சென்றான்–அது அவளுக்குப் பின்புறம் சாத்தப்பட்டது. அதன் மிக அண்மையான கடந்த காலம் எதிர் காலத்திலிருந்து துண்டிக்கப்பட்டது போன்றிருந்ததாலோ, அல்லது இந்த நிகழ்வுகளை உருவாக்கிய பகுதிகள் தொடர்ச்சியானவை போலத் தோன்றாததன் காரணத்தாலே, அந்த மிகக் கடினமான நிகழ்வுகள் காலத்திற்கு வெளியில் இருந்தன.

காலத்திற்கு வெளியில் இருந்த அந்த காலத்தில், தொடர்பறுந்ததும், அட்டூழியமானதுமான உணர்ச்சிகளின் ஒழுங்கற்ற குழப்பத்தில், எம்மா சுன்ஸ், இந்த தியாகத்தைச் செய்யத் தூண்டுதலாயிருந்த இறந்து போன மனிதனைப் பற்றி ஒரு முறையாவது நினைத்தாளா? அவள் ஒரு முறை நினைக்கவே செய்தாள் என்பது என் நம்பிக்கை — மேலும் அந்த ஒரு கணத்தில் அவளின் அபாயகரமான கடும் பொறுப்பை ஆபத்துக்குள்ளாக்கினாள். அவளுக்கு அப்போது நடந்து கொண்டிருந்த பயங்கரமான அருவருக்கும் செயலை அவள் தந்தை அவள் அம்மாவுக்கும் நிகழ்த்தியிருக்கிறார் என்று அவள் நினைத்தாள் (அவளால் நினைக்காமல் இருக்க இயலவில்லை) அதைப் பற்றிய ஒரு பலவீனமான திகைப்புடன் சிந்தித்து, அவசரத்துடன் தலைசுற்றலில் தஞ்சம் புகுந்தாள். அவன், ஸ்வீடன் தேசத்தவனோ, ஃபின்லாந்துக்காரனோ–ஸ்பானிய மொழி பேசவில்லை. அவள் எப்படி அவனுக்கு இருந்தாளோ அது போன்றே எம்மாவுக்கு அவன் ஒரு கருவியாக இருந்தான் : ஆனால் அவள் அவனுக்கு சந்தோஷத்திற்காக பயன்பட்டாள், மாறாக அவன் அவளுக்கு நீதிக்காகப் பயன்பட்டான்.

எம்மா தனியாக இருந்தபோது, உடனடியாகக் கண்களைத் திறக்கவில்லை. சிறிய இரவு மேஜை மீது அந்த மனிதன் வைத்து விட்டுப் போன பணம் இருந்தது: எம்மா எழுந்து உட்கார்ந்து, முன்பு கடிதத்தைக் கிழித்தெறிந்ததைப் போலவே அந்தப் பணத்தைச் சுக்கல் சுக்கலாக கிழித்தெறிந்தாள். ரொட்டியை வீசியெறிவது போலவே பணத்தைக் கிழிப்பதும் ஒரு பாவச்செயல். அதைச் செய்து முடித்த அடுத்த கணத்தில் அதற்காக எம்மா மனம் வருந்தினாள். பெருமைக்குரிய ஒரு செயல் மற்றும் அந்த நாளில். . . .அவள் உடலின் துக்கத்திற்குள்ளும், அவளின் அருவருப்புணர்விலும் அவளுடைய பயம் மறைந்து போயிற்று. துக்கமும், வாந்தி வருவது போன்ற உணர்வும் அவளை சங்கிலியிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் எம்மா மெதுவாக எழுந்து உடையணிந்து கொள்ளத்தொடங்கினாள். அந்த அறையில் அதற்குப் பின் எந்தவிதமான பளிச்சென்ற வர்ணங்களும் இருக்கவில்லை: அந்தியின் கடைசி வெளிச்சம் மெலிதாகிக் கொண்டிருந்தது: யாரும் அவளைப் பார்க்கும் முன்பாக எம்மா அந்த இடத்தை விட்டுச் செல்ல முடிந்தது: தெருமுனையில், மேற்கு நோக்கிச் சென்ற ஒரு லெக்ரோஸ் ட்ராமில் ஏறிக்கொண்டாள். அவளுடைய திட்டத்திற்கு ஏற்பவும், அவள் முகம் பார்க்கப்படாமலிருப்பதற்காகவும், முன் கோடியில் ஒரு இருக்கையைத் தேர்ந்தெடுத்தாள். தெருக்களின் வழியாக ட்ராம் ஓடும்போது உண்டான ஈர்ப்பற்ற ஓட்டத்தில், இதுவரை நிகழ்ந்தவை, விஷயங்களைக் கறைப்படுத்தி விடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கலாம். வெளிச்சம் குறைந்து கொண்டிருந்த புறநகர்ப் பகுதிகளின் வழியே, அவற்றைப் பார்த்த அதே கணத்தில் மறந்தபடியும் ட்ராமில் பிரயாணம் செய்தாள் : வார்னஸின் பக்கவாட்டுத் தெருக்களில் ஒன்றில் இறங்கிக் கொண்டாள். அவளின் சோர்வு அவளின் வலிமையாக மாறிக் கொண்டிருந்தது. காரணம் துணிகரச் செயல்பாட்டின் அம்சங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்த வைக்க கடமைப்படுத்தி, அவளிடமிருந்து, அதன் பின்னணியையும், இலக்கினையும் மறைத்தது.

ஏரன் லோவன்த்தால் எல்லோருக்கும் ஒரு பொறுப்புணர்ச்சி மிக்க மனிதன் : அவனுடைய நெருக்கமான நண்பர்களுக்கு அவன் ஒரு கஞ்சன். மில்லின் மேற்பகுதியில் தனியாக வசித்து வந்தான். நகரத்தின் பொட்டலான வெளிப்புறப் பகுதியில் மில் அமைந்திருந்ததால், அவன் திருடர்களுக்காகப் பயந்தான். மில்லின் முற்றத்தில் ஒரு பெரிய நாய் இருந்தது : அவனுடைய மேஜை இழுப்பறையில் ஒரு ரிவால்வர் இருப்பது பற்றி அனைவரும் அறிவர். அந்த வருடத்திற்கு முந்திய வருடத்தில், திடீரென்று இறந்துபோன அவனுடைய மனைவியின் மரணம் குறித்து ஆழ்ந்த துக்கம் அனுசரித்தான்– அவள் ஒரு காஸ் இனப்பெண், ஏராளமான வரதட்சிணையைக் கொண்டு வந்தவள் — ஆனால் அவனின் உணர்ச்சிமிக்க நிஜமான ஈடுபாடு பணம்தான். அதைச் சேமிப்பதில் விடவும் அவன் பணம் சம்பாதிப்பதில் சமர்த்தம் குறைந்தவனாயிருந்தான் என்பதை மிக உள்ளார்ந்ததொரு மன இக்கட்டில் உணர்ந்தான். அவன் தீவிர மதப்பற்று கொண்டவன். அது கடவுள் பற்றுக்கும், வழிபாட்டுக்கும் பதிலியாக, அவனை நல்லது செய்வதிலிருந்தது விலக்கு அளித்த ஒப்பந்தம் என — அவனுக்கும் கடவுளுக்கும் இடையிலான ஒரு ரகசிய ஒப்பந்தம் என– நம்பினான். வழுக்கைத் தலையும். பருத்த உடம்புடனும், துக்கம் தெரிவிக்கும் பட்டையை அணிந்தபடி கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு, செம்பட்டை தாடியுடன், ஜன்னலுக்கு அருகில் நின்று கொண்டு, தொழிலாளி எம்மாவின் ரகசிய அறிக்கைக்காகக் காத்திருந்தான்.

அவள் இரும்பு கேட்டைத் தள்ளித் திறந்து (அவளுக்காக அவன் கேட்டைப் பூட்டாமல் வைத்திருந்தான்) இருளடைந்த முற்றத்தைக் கடந்து வருவதைப் பார்த்தான். சங்கிலியில் கட்டப்பட்ட நாய் குரைத்தவுடன் அவள் சிறிது சுற்றி வளைத்து வருவதைப் பார்த்தான். அடிக்குரலில் கடவுள் துதி செய்பவர் ஒருவரைப் போல, எம்மாவின் உதடுகள் மிக வேகமாக அசைந்தன: அவை சோர்வடைந்து, திருவாளர் லோவன்த்தால் சாகும் முன்னர் கேட்கப் போகும் வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தன.

எம்மா எதிர்நோக்கியது போல் நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. முந்திய காலையிலிருந்தே, கனமான ரிவால்வாரைக் கையாளுவதைப் பற்றித் தனக்குத் தானே கற்பனை செய்திருந்தாள். கேவலமான அந்த மிருகத்தைத் தன் கேவலமான குற்றத்தை மனம் விட்டு ஒப்புக் கொள்ளச் செய்யக் கட்டாயப் படுத்துவதைப் பற்றியும், மேலும் கடவுளின் நீதி மனிதனின் நீதியை வெல்வதற்காக, துணிகரமான யுக்தியை அம்பலபடுத்துவதற்கும் நினைத்தாள், (பயத்தினால் அல்ல, ஆனால் நீதியின் கருவியாக இருந்த அவள் தண்டிக்கப்படுவதை விரும்பாத காரணத்தால்). பிறகு, நெஞ்சில் மத்தியில் ஒரே ஒரு துப்பாக்கி ரவை லோவன்த்தாலின் விதியை முடித்துவிடும். ஆனால் விஷயங்கள் அந்த விதத்தில் நிகழவில்லை.

ஏரன் லோவன்த்தால், தன் முன் இருக்கும் போது, அவள் தந்தைக்காகப் பழிதீர்க்க வேண்டும் என்ற அவசரத்தைவிட, எம்மா தான் அனுபவித்த அவமானத்திற்காகத் தண்டனை அளிக்க வேண்டிய தேவையை உணர்ந்தாள். அந்த முழுமையான அவமானத்திற்கு பிறகு அவனைக் கொல்லாமலிருக்க அவளால் முடியவில்லை. நாடகத் தன்மையான செயல்களுக்கு நேரம் இருக்கவில்லை. பயந்தபடி, உட்கார்ந்து, அவள் லோவன்த்தாலிடம் பொய்க் காரணங்கள் சொன்னாள். தான் நம்பிக்கையுடன் நடத்தப்படுவோம் (காட்டிக்கொடுப்பவருக்கு உரிய தனித்தகுதி) என்ற விசுவாசக் கட்டுப்படுதலை அவள் வேண்டிக்கொண்டாள். ஏதோ அவளை அச்சம் ஆட்கொண்டு விட்டது மாதிரி, சில பெயர்களைக் கூறினாள், மற்ற சிலரை யூகம் செய்தாள்: பிறகு ஸ்தம்பித்தாள். அவளுக்காக ஒரு கண்ணாடித் தம்ளர் நீரைக் கொண்டுவரும்படி லோவன்த்தாலை அங்கிருந்து போகச் செய்தாள். அந்த மாதிரியான ஒரு வெற்றுப் படபடப்பில் லோவன்த்தால் நம்பிக்கையற்றிருந்த போதிலும், விட்டுக் கொடுத்து, தண்ணீருடன் உணவருந்தும் கூடத்திலிருந்து திரும்பியபோதே எம்மா கனத்த ரிவால்வாரை இழுப்பறையிலிருந்து எடுத்துக் கொண்டு விட்டாள். துப்பாக்கியின் விசைப்பகுதியை இரண்டு முறை அழுத்தினாள். பெரும் உடம்பு, சப்தமும் புகையும் அதனைச் சிதறடித்து விட்டதுபோலச் சரிந்தது : கண்ணாடித் தம்ளர் நொறுக்கப்பட்டு, லோவன்த்தாலின் முகம் அவளை கோபத்திலும், அதிர்ச்சியிலும் பார்த்தது, முகத்தின் வாய் அவளை நோக்கி ஸ்பானிய மொழியிலும், யூத மொழியிலும் சூளுரைத்தது. கெட்ட வார்த்தைகள் குறையவே இல்லை: எம்மா மறுபடியும் சுட வேண்டியிருந்தது. முற்றத்தில் சங்கிலியில் கட்டப்பட்டிருந்த நாய் குரைக்க ஆரம்பித்தது திடீரென்று. ஆபாசமான உதடுகளிலிருந்து பிரவாகிக்க ஆரம்பித்த முரட்டுத் தனமான ரத்தம், தாடியையும், உடைகளையும் கறைப்படுத்தியது. எம்மா தான் தயாரித்து வைத்திருந்த குற்றசாட்டுகளைத் தொடங்கினாள். (என் தந்தைக்காகப் பழி வாங்கி விட்டேன், அவர்கள் என்னைத் தண்டிக்க முடியாது…) ஆனால் அவள் முடிக்கவில்லை, காரணம் லோவன்த்தால் இறந்து போயிருந்தான். அவன் புரிந்து கொள்ள முயன்றிருப்பானா என்று அவளுக்குத் தெரியவில்லை.

வலிந்த குரைப்புகள் அவள் இன்னும் ஓய்வெடுக்க முடியாது என்பதை நினைவூட்டின. போடப்பட்டிருந்த திண்டின் ஒழுங்கைச் சிதைத்தாள். இறந்த மனிதனின் சட்டைப் பித்தான்களைக் கழற்றிவிட்டாள். உடைந்த மூக்குக் கண்ணாடியை ஃபைல்கள் அடுக்கும் காபினட் மீது வைத்தாள் பிறகு தொலைபேசியை எடுத்து பின்வரும் பிற வார்த்தைகளுடன் அவள் எவற்றை பல தடவைகள் மீண்டும் மீண்டும் கூறுவாளோ அவற்றையும் சேர்த்துக் கூறினாள்: நம்ப முடியாத ஒன்று நடந்து விட்டது. . . . திருவாளர் லோவன்த்தால் வேலை நிறுத்தத்தைப் பொய்க் காரணமாக வைத்து என்னை இங்கே வர வைத்தார். . . அவர் என்னை தவறாக பயன்படுத்தினார், நான் அவரைக் கொன்றேன். . .

நிஜத்தில், கதை நம்பமுடியாததாக இருந்தது, ஆனால் எல்லோரையும் அது பாதித்தது, காரணம் கணிசமான அளவில் அது உண்மையாக இருந்தது, எம்மா சுன்ஸின் தொனி உண்மையானது, அவளின் அவமானம் உண்மையானது, அவளின் வெறுப்பும் உண்மையானது. அவள் அனுபவித்த அவமானச் செயலும் உண்மையானது. சூழ்நிலைகளும், நேரமும், ஓரிரண்டு பெயர்களும் மாத்திரமே பொய்யானவை.

Translated by Donald A.Yates.

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: