கிளை பிரியும் பாதைகளின் தோட்டம்-Borges-Garden of Forking Paths-Translated by Brammmarajan

கிளை பிரியும்  பாதைகளின் தோட்டம்-Translated by Brammarajan

விக்டோரியா ஓகேம்ப்போவுக்கு

borders4

லிடல் ஹார்ட்  என்பவர் எழுதிய முதல் உலகப் போரின் வரலாறு என்ற நூலில் பதிமூன்று பிரிட்டீஷ் தரைப்படைப் பிரிவுகள் (1400 தரைப் படை ஆயுத வண்டிகளின் உதவியுடன்) Sarre-Montauban பிரிவின் மீது 1916 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 24 ஆம் தேதி செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல் 29ஆம் தேதி காலைவரை ஒத்திப்போடப்பட்டது என்பதை 22ஆம் பக்கத்தில் காண்பீர்கள். பொத்துக் கொண்டு கொட்டிய மழை இந்தத் தாமதத்தை ஏற்படுத்தியது என்று கேப்டன் லிடல் ஹார்ட் குறிப்பிட்ட போதிலும் அது முக்கியமற்ற ஒரு காரணம் என்பது உறுதி.

பின்வரும் அறிக்கை யூ சூன் என்பவரால் சொல்லப்பட்டு, மறுபடி படித்துப் பார்க்கப்பட்டு, கையெழுத்திடப்பட்டது. சிங்காட்டோவில் உள்ள Hochschule வில் சில காலம் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார் யூ சூன். அவரின் அறிக்கை, மேற்குறிப்பிட்ட அந்த முழு நிகழ்ச்சியின் மீது சந்தேகமே பட்டிராத ஒரு தெளிவினை அளிக்கிறது. அவருடைய அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களைக் காணவில்லை. அறிக்கை தொடர்கிறது.

. . . நான் தொலைபேசி ரிஸீவரைக் கீழே வைத்தேன். உடனடியாக ஜெர்மன் மொழியில் எனக்குப் பதில் தந்த குரலினை அடையாளம் கண்டு கொண்டேன். அந்தக் குரல், கேப்டன் ரிச்சட் மேடனுடையது. விக்டர் ரூனபெர்க்கின் இருப்பிடத்தில் மேடன் இருப்பது எங்கள் பதற்றங்களுக்கெல்லாம் ஒரு முடிவினை அர்த்தப்படுத்தியது–ஆனால் இது, இரண்டாம் பட்சமாக எனக்குத் தோன்றியது, கண்டிப்பாகத் தோன்றியிருக்க வேண்டும்,–அது எங்கள் உயிருக்கும் முற்றுப் புள்ளியும்தான் என.  தவிர ரூனபெர்க் கைது செய்யப்பட்டான். அல்லது கொலை செய்யப்பட்டான் என்றும் அது அர்த்தப் படுத்தியது.* அந்த நாளின் சூரியாஸ்தமனத்திற்குள் நானும் அதே மாதிரியான முடிவினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேடன் மசியமாட்டாதவன். அல்லது அவ்வாறு இருக்க வேண்டிய கட்டாயமுற்றவன். இங்கிலாந்தின் பணியில் இருந்த அந்த ஐரிஷ்காரன், கடமை தவறியதற்கு அல்லது காட்டிக் கொடுத்தலுக்காக குற்றம் சாட்டப்பட்டவன்.   ஜெர்மன் ரைக்கின் இரு ரகசிய உளவு ஏஜண்டுகளைக் கண்டுபிடித்து, கைது செய்து தீர்த்துக்கட்டுவதற்கான இந்த அரிய வாய்ப்பினை நன்றியுடன் ஏற்று இந்த அற்புதமான சந்தர்ப்பத்தை எப்படிக் கைப்பற்றத் தவறுவான்?  நான் என் அறைக்குச் சென்றேன்; அபத்தமாக கதவைச் சாத்திவிட்டு என் குறுகலான இரும்புக் கட்டிலில் சரிந்தேன். ஜன்னலின் வழியாக பரிச்சயமான வீட்டுக் கூரைகளையும் மேகம் மறைத்த ஆறுமணிச் சூரியனையும் பார்த்தேன். எவ்விதமான முன்தெரிவித்தலோ அல்லது அறிகுறிகளோ இல்லாத அந்த நாள் எனது இரக்கமற்ற மரண நாளாக இருக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இறந்து போன என் தந்தையை மீறியும், ஹை ஃபெங்கின்  சமச்சீரான தோட்டம் ஒன்றில் நான்  குழந்தையாய் இருந்தேன் என்பதை மீறியும்–இப்போது–நான் சாகப் போகிறேனா? சகலமும் ஒரு மனிதனுக்கு இந்தக் கணத்தில், மிகச் சரியாக,

இந்தக் கருதுகோள் வெறுக்கத்தக்கது, விநோதமானது. ஹான்ஸ் ராஸனர் என்கிற விக்டர் ரூனபர்க் ரஷ்யாவைச் சேர்ந்தவன். அவனைக் கைது செய்ய வாரண்ட்டுடன் வந்திருந்த கேப்டன் ரிச்சட் மாடனை ஆட்டோமேடிக் துப்பாக்கியால் தாக்கத் தயாரானான். மாடன் தற்காப்புக்காக தாக்கியபோது ஏற்பட்ட காயத்தினால் ரூனபர்க் இறந்தான். (எடிட்டரின் குறிப்பு)

இப்போதுதான் நடக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்தித்தேன்.  நூற்றாண்டுகளின் நூற்றாண்டுகளாக நிகழ்காலத்தில்தான் விஷயங்கள் நடக்கின்றன. காற்றிலும் இந்த பூமியின் முகத்தின் மீதும் கடலின் மீதும், உள்ள கணக்கற்ற மனிதர்கள் மற்றும் நிஜமாக நடந்து கொண்டிருப்பதெல்லாம் இப்போது எனக்கு நடக்கின்றன . . . . இம்மாதிரியான சிந்தனையின் கட்டற்ற ஓட்டத்தினை, பொறுப்பதற்கரிய, மேடனின் குதிரை போன்ற முகம் நிறுத்தியது. எனது வெறுப்புக்கும், பீதிக்கும் இடையே (இப்பொழுது நான் பீதியைப் பற்றிப் பேசுவது என்னளவில் அர்த்தமற்றதாகிறது. நான் ரிச்சட் மேடனை பழித்துவிட்டபடியாலும், எனது கழுத்து தூக்குக் கயிற்றுக்கு ஏங்குவதாலும்) அந்தக் கொந்தளிப்பான, சந்தோஷமான போர் வீரன் என்னிடத்தில் ரகசியம் இருப்பதாக சந்தேகப்படவில்லை என்று எனக்குத் தோன்றியது. Ancre நதியின் பக்கம் புதிய பிரிட்டீஷ் தரைப்படைத் துருப்புக்கள் முகாம் போட்டிருந்த இடம்–மிகச் சரியான இடம்–எதுவென்பது தான் ரகசியம். சாம்பல் நிற ஆகாயத்தில் ஒரு பறவை குறுக்காகப் பறந்தது.  அதை நான் ஒரு விமானமாக மாற்றிப் புரிந்து கொண்டேன். அந்த விமானத்தை (பிரெஞ்சு வானத்தின் பின்னணியில்) தரைப்படையின் மீது செங்குத்தாகக் குண்டுகளை வீசி அழிக்கக்கூடிய பல போர் விமானங்களாகவும்.  ஒரு துப்பாக்கிக் குண்டு என் வாயைச் சிதைப்பதற்கு முன் என்னால் மட்டும் அந்த ரகசியப் பெயரை உரக்கக் கத்தி ஜெர்மனியில் கேட்கும்படி  அறிவிக்க முடியுமானால்? என் மனிதக் குரல் பலவீனமானது.  நாங்கள் ஸ்டாஃபோர்ஷயரில் இருக்கின்றோம் என்பதைத் தவிர வேறு எதுவும் என்னைப் பற்றியும் ரூனபர்க் பற்றியும் தெரியாமல்–பெர்லினில் காற்று வீசியடிக்கும் தனது அலுவலகத்தில் அமர்ந்து, முடிவே இல்லாது செய்தித்தாள்களை ஆராய்ந்து கொண்டு, எங்கள் அறிக்கைக்காகக் காத்துக் கொண்டிருக்கிற, நோயாளியான எனது முதன்மையதிகாரியின்  வெறுப்பு மிகுந்த காதுகளுக்கு எப்படி கேட்கச் செய்வது?. . . நான் உரக்கக்கூறினேன்.  நான் தப்பித்தாக வேண்டும். ஏதோ மேடன் என்னைப் பிடிக்க மறைந்திருப்பது போல., ஒரு வித பயனற்ற அமைதியின் முழுமையில் ஓசையின்றி எழுந்தேன்.  ஏதோ ஒன்று– எனது கையிருப்புகள் ஒன்றுமே இல்லை என்பதை நிரூபிப்பதற்கான பயனற்ற வெறும் பகட்டு–என் பாக்கெட்டுகளைத் துழாவச் செய்தது. நான் எதைப் பார்ப்பேன் என்று தெரிந்திருந்தேனோ அதைப் பார்த்தேன். அமெரிக்க கடிகாரம், நிக்கல் செயின், ஒரு சதுரமான நாணயம், ரூனபெர்க்கின் அறைக்கான வில்லங்கத்தில் மாட்டிவிடக் கூடிய சாவிகளைக் கொண்ட வளையம், ஒரு நோட்டுப் புத்தகம், உடனடியாக கிழித்துவிட வெண்டுமென்று தீர்மானித்த ஒரு கடிதம் (அதை நான் செய்யவில்லை) ஒரு crown, இரண்டு ஷில்லிங், சில பென்சுகள், சிவப்பு மற்றும்  நீல மைய் கொண்ட பென்சில், கைக்குட்டை, ஒரே ஒரு குண்டு மட்டுமிருந்த ரிவால்வார். எனக்குள் தைரியத்தை வரவழைக்கும் பொருட்டு அந்த ரிவால்வாரை அபத்தமாகக் கையில் எடுத்து கனத்தை அளந்தேன். ஒரு துப்பாக்கி சப்தமானது நீண்ட தொலைவிற்கு அப்பால் கேட்கும் என்று தெளிவற்று எண்ணினேன். பத்து நிமிடங்களில் திட்டத்தினை முழுமைப்படுத்தினேன். செய்தியை ஒலிபரப்புவதற்குத் தகுந்த ஒரே ஒரு மனிதனின் பெயரை தொலைபேசி டைரக்டரி காட்டியது.  ஃபென்டன் புறநகர்ப் பகுதியில், அரை மணிநேர ரயில் பயணத்தில் சென்று அடையக்கூடிய தூரத்தில் அந்த மனிதன் வசித்தான்.

நான் ஒரு கோழைத்தனமான மனிதன். அதன்  அபாயங்களின் தன்மையை எவராலும் மறுக்க முடியாத திட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதால் , இப்போது நான் சொல்கிறேன், அதன் செயலாக்கம் பயங்கரமாக இருந்ததை நான் அறிவேன். ஜெர்மனிக்காக நான் அதைச் செய்யவில்லை. இல்லை. ஒரு உளவாளியாக இருக்க வேண்டிய கையறுநிலையை என்மீது சுமத்திய ஒரு காட்டுமிராண்டி நாட்டைப் பற்றி எனக்கு எந்த அக்கறையுமில்லை. மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மனிதரை நான் அறிவேன்–ஒரு பவ்யமான மனிதர்–என்னைப் பொருத்தவரை அவர் கதேவை விட எந்த வகையிலும் தகுதி குறைந்தவரல்லர். ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் அவருடன் நான் பேசியிருப்பேன், ஆனால் அந்த நேரத்தில் அவர்தான் எனக்கு கதே. . . . நான் இதைச் செய்வதற்குக் காரணம் என் முதன்மை அதிகாரி என் இனத்து மனிதர்களைக் கண்டு ஏதோ வகையில் அஞ்சினார்–என்னுள் இணையும் என் கணக்கிலடங்காத மூதாதையர்களுக்காக. ஒரு மஞ்சள் நிற மனிதன் அவரது படைகளைக் காப்பாற்ற முடியும் என்று அவருக்கு நிரூபிக்க விரும்பினேன். மேலும் நான் கேப்டன் மேடனிடமிருந்து தப்பிக்க  வேண்டும். அவனது கைகளும், குரலும் எந்த வினாடியிலும் என் கதவருகில் வந்து விடலாம். மௌனமாய் உடையணிந்து, கண்ணாடியில் தெரிந்த என் உருவத்திடம் விடை பெற்று, படியிறங்கி, அமைதியான தெருவினை உற்றுக் கவனித்த பின் வெளியே வந்தேன். என் வீட்டிலிருந்து ரயில் நிலையம் அதிக தூரமில்லை என்றாலும் ஒரு வாடகைக் காரை அமர்த்திக்கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நினைத்தேன். என்னை அடையாளம் கண்டு பிடித்துவிடக்கூடிய சாத்தியம் இதனால் குறையும் என எனக்குள் விவாதித்தேன்; ஆள் நடமாட்டமே இல்லாத தெருவில் என்னை எளிதாகக் கண்டுபிடித்து விட முடியும். மேலும் பாதுகாப்பில்லாது போகும். பிரதான நுழைவாயிலுக்கு சற்று தூரம் முன்பாகவே வண்டியை நிறுத்தும்படி டிரைவரிடம் சொல்லியிருந்தேன். நானே உருவாக்கிக் கொண்ட ஏறத்தாழ  வலிமிக்க நிதானத்துடன் வண்டியிலிருந்து இறங்கினேன். நான் ஆஷ்குரோவ் என்ற கிராமத்திற்குச் செல்ல வேண்டியிருந்த போதிலும் இன்னும் தூரமான ஒரு ஸ்டேஷனுக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டேன். இன்னும் சில நிமிடங்களில் ரயில் கிளம்பத் தயாராக இருந்தது. அதாவது 8.50 க்கு.  ஏறத்தாழ  அடுத்த ரயில் கிளம்ப ஒன்பதரை மணி ஆகும். நான் விரைந்தேன். பிளாட்பாரத்தில் ஆட்களே இல்லை. கோச்சுகள் வழியாக நடந்தேன். சில விவசாயிகள், துக்க நாட்களுக்காக உடை உடுத்தியிருந்த ஒரு பெண்,  டேசிடஸ் எழுதிய Annalsஐ தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், காயம்பட்ட ஆனால் சந்தோஷமான ராணுவ வீரன் ஆகியோரைப் பார்த்தேன்.

ஒரு வழியாக ரயில் பெட்டிகள் முன்நோக்கி இழுத்துக் குலுங்கின. நான் அடையாளம் கண்ட ஒரு மனிதன் பிளாட்பாரத்தின் முனை வரை பயனற்று ஓடிவந்தான். அவன் கேப்டன் ரிச்சட் மேடன். பீதியூட்டும் ஜன்னலில் இருந்து இருக்கையின் தூரத்து முனையில் போய் ஒதுங்கினேன். குன்றிப்போன இந்நிலையில் இருந்து ஒரு விதமான இழிவான மனநெகிழ்வுக்கு உள்ளானேன். இருவருக்கான யுத்தம் ஏற்கனவே தொடங்கிவிட்டதென்றும், ஒரு விதிவசமான சந்தர்ப்பத்திலும் வெறும் நாற்பது நிமிடங்களுக்கே எனினும் எதிராளியின் தாக்குதலை முறியடித்தேன் என்றும் மிகச் சொற்பமான வெற்றிகளில் இது ஒன்று என்ற போதிலும் முழுமுற்றான வெற்றியை இது முன் அறிவிக்கிறது என்று நான் சொல்லிக் கொண்டேன். துணிகரமான அந்தக் காரியத்தை வெற்றிகரமாக சாதிக்கக் கூடிய மனிதன் நான் என எனது கோழைத்தனமான மனநெகிழ்வு நிரூபித்தது என அதே அளவு பொய்மையோடு எனக்குள் விவாதித்தேன். இந்த பலவீனத்திலிருந்து என்னைக் கைவிட்டு விடாத ஒரு பலத்தைப் பெற்றேன். மனிதன் ஒவ்வொரு நாளும் இன்னுமின்னும் கொடுரமான நடவடிக்கைகளை மேற்கொள்வான் என்பதை என்னால் முன் கூட்டியே பார்க்க முடிகிறது ; விரைவிலேயே போர்வீரர்களையும் படைகளையும் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நான் பின் வரும் ஆலோசனைகளை வழங்குகிறேன்.–ஒரு கொடுமையான அல்லது அநியாயமான செயலை செய்யப் போகிறவர் ,அதை தான் ஏற்கனவே செய்து முடித்து விட்டதாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டியதும் , கடந்த காலத்தின் மாற்ற முடியாத தன்மையைக் கொண்ட ஒரு வருங்காலத்தைத் தன் மேல் வலிந்தேற்றிக் கொள்ள வேண்டியதும் மிக அவசியம். இப்படி நான் தொடர்ந்தேன்- ஏற்கனவே இறந்துபோனவனுடையதைப் போன்ற எனது கண்களைக் கொண்டு அந்தப் பகல் மறைவதையும்– ஒரு வேளை இது கடைசியாக இருக்கலாம்–இரவின் பரவுதலையும் பதிவு செய்தவாறு, நான் பயணமானேன்., சாம்பல் மரங்களிடையே நிதானமாய் ரயில் ஓடிக்கொண்டிருந்தது. ஏறத்தாழ வயல்களுக்கு நடுவில் நின்றது. எவரும் நிலையத்தின் பெயரை அறிவிக்கவில்லை. பிளாட்பாரத்தில் இருந்த சில இளைஞர்களிடம் “ஆஷ்குரோவ்?” என்று கேட்டேன் “ஆஷ்குரோவ்”தான் என்று பதில் கூறினார்கள். நான் ரயிலை விட்டிறங்கினேன்.

ஒரு விளக்கு பிளாட்பாரத்திற்கு வெளிச்சம் தந்தது. ஆனால் பையன்களின் முகங்கள் நிழலில் இருந்தன. அதில் ஒருவன் “Dr.ஸ்டீபன் ஆல்பர்ட்டின் வீட்டுக்கா செல்கிறீர்கள்?”‘ என்று கேட்டான். என் பதிலுக்குக் காத்திராமல் அவன் சொன்னான் “வீடு இங்கிருந்து நீண்ட தொலைவில் இருக்கிறது. இந்த சாலையில் சென்றீர்களானால் நீங்கள் வழி தவறிவிட மாட்டீர்கள். ஒவ்வொரு குறுக்குச் சாலை வரும்போதும் இடதுபக்கமாகத் திரும்ப வேண்டும்.”‘அவர்களிடம் ஒரு நாணயத்தை எடுத்து வீசினேன் (என் கடைசி).  கல் பாவப்பட்ட படிகளில் இறங்கி தனிமையான சாலையில் நடக்கத் தொடங்கினேன். அது மலைச்சரிவில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியது . அந்த சாலை மூலாதீனமான மண்ணால் ஆகியிருந்தது. தலைக்கு மேல் மரக்கிளைகள் பின்னலிட்டன. தாழ்ந்த முழு நிலவு என்னைத் தொடர்ந்து வருவது போலத் தோன்றியது.

ரிச்சட் மேடன் ஏதோ வகையில் எனது நெருக்கடியான திட்டத்திற்குள் ஊடுருவி விட்டான் என ஒரு கணம் நினைத்தேன்.  உடனே அது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். எப்போதும் இடது புறம் திரும்ப வேண்டும் என்ற அறிவுரை, சில சுழல்வட்டப்புதிர்களின் மையப்புள்ளியை கண்டு பிடிப்பதற்கான பொதுவான செயல்முறையை நினைவூட்டியது. சுழல்வட்டப் புதிர்கள் பற்றி ஒருவித புரிந்துகொள்ளல் எனக்கு உண்டு. யூனான் பகுதியின் கவர்னராக இருந்த, சூயி பென்னின் கொள்ளுப் பேரனாக நான் இருப்பது ஒன்றுமில்லாமல் போய் விடுவதற்கல்ல. சூயி பென் லௌகீக உலகின் அதிகாரத்தை இரண்டு விஷயங்களுக்காகத் தியாகம் செய்தார்.   ஹுங் லா மெங்  நூலில் இருப்பதை விட அதிகம் கதாபாத்திரங்கள் நிறைந்திருக்கக் கூடிய ஒரு நாவலை எழுதுவதற்காகவும், சகல மனிதர்களும் தொலைந்து போய் விடக்கூடிய ஒரு சுழல் வட்டப் புதிரினை கட்டுவதற்காகவும் பதின்மூன்று வருடங்களை (முற்றிலும் வேறுபட்ட பணிகளுக்கு) தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஒரு அந்நியனின் கை அவர் உயிரைப் பறித்து விட்டது. அவருடைய நாவல் கோர்வை இல்லாதிருந்தது. புதிரைக் கண்டுபிடிக்க எவராலும் முடியவில்லை. ஆங்கில நாட்டு மரங்களுக்குக் கீழே இருந்தபடி, தொலைந்து போன அந்தப் புதிரைப் பற்றித் தியானித்தேன். ஒரு மலையின் சிகரத்தில் பூரணமானதாயும், தூய்மை மீறப்படாததாயும் அப்புதிரைக் கற்பனை செய்தேன். நெல் வயல்களால் அழித்தெழுதப்பட்டிருப்பதாக, நீருக்கு அடியில் அது இருப்பதாகக் கற்பனை செய்தேன். எண்கோணக் கூடாரங்கள் மற்றும் திரும்பு பாதைகள் போன்றவற்றால் அது அமைக்கப்பட்டிராது, நதிகளாலும், சமஸ்தானங்களாலும், அரசுகளாலும் அது எல்லையற்று அமைந்திருப்பதாக. . . . கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் சுற்றிச் சூழ்ந்து, வளைந்து பெருகி, எப்படியோ நட்சத்திரங்களையும் சம்மந்தப்படுத்தக்கூடிய, புதிர்களின்புதிரான  சுழல்வழி யினைக் கற்பனை செய்து பார்த்தேன்.

இந்தப் பொய்யான காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, துரத்தப்படும் ஒருவனின் கதியை நான் மறந்து போனேன். அறியப்பட்டிராத ஒரு காலவரையறைக்குள் இவ்வுலகினை அரூபமாய் உட்கிரகிக்கக் கூடியவனாக என்னை உணர்ந்தேன். மங்கலான ஆனால் உயிர்ப்புடனிருந்த கிராமப்புறம், அந்த நிலவு, நாளின் மிச்சங்கள் ஆகியன என் மீது ஆட்சி செலுத்தின. சாலையின் தாழ்வான சரிவு, களைப்பின் சாத்தியத்தை இல்லாமல் செய்தது. மதியம் ,இணக்கமும் நெருக்கமும் கொண்டதாகவும், எல்லையற்றதாகவும் இருந்தது. பாதை இறங்கி இப்போது குழம்பித் தோன்றிய புல்பரப்புகளுக்கு இடையில் கிளைத்துப்பிரிந்தது. உச்சஸ்தாதியினதும் ஏறத்தாழ அசை வடிவானதும் ஆன இசை என்னை அடைந்து, மாறி வீசும் காற்றினாலும் இலைகளாலும் தொலைவினாலும் கூர்மை குறைந்து பின்வாங்கியது. ஒரு மனிதனாகப்பட்டவன் பிற மனிதர்களுக்கும், பிற மனிதர்களின் கணங்களுக்கும் எதிரியாக இருக்கலாமே தவிர ஒரு நாட்டுக்கே இருக்க முடியாது: மின்மினிகளுக்கு, சொற்களுக்கு,தோட்டங்களுக்கு, நீரோடை களுக்கு, சூரியாஸ்தமனங்களுக்கு எதிரியாக இருக்கவே முடியாது. இப்படியாக நான் ஒரு உயரமான துருப்பிடித்த கேட்டுக்கு முன்னால் வந்து சேர்ந்தேன். குறுக்குக் கம்பிகளின் இடைவெளியில் பாப்லர் மரக்கூட்டத்தையும் ஒரு விதான மண்டபத்தையும் அடையாளம் கண்டேன். திடீரென்று இரண்டு விஷயங்களைப் புரிந்து கொண்டேன்: இசையானது விதான மண்டபத்திலிருந்து வந்ததென்பதையும், அது சீனத்து இசை என்பதையும். முதலாவது அற்பமானது ; இரண்டாவது நம்பவே முடியாதது. பிரத்யேகமாய் இதே காரணத்திற்காக எவ்வித சிரத்தையுமின்றி திறந்த மனத்துடன் அதை நான் ஏற்றுக் கொண்டேன். அங்கே ஒரு அழைப்பு மணி இருந்ததா அல்லது நான் கையால் கேட்டினை தட்டினேனா என்பது எனக்கு நினைவில்லை. இசையின் கீற்றுத் தெறிப்புகள் தொடர்ந்தன.

வீட்டின் பின்புறத்திலிருந்து ஒரு லாந்தர் விளக்கு நெருங்கி வந்தது: சில சமயம் மரங்களால் கோடிடப்பட்டும், சில சமயம் மறைக்கப்பட்டும் வந்த அந்த காகித லாந்தர் ஒரு மத்தள உருவிலும் நிலாவின் நிறத்திலும் இருந்தது. அதை ஒரு உயரமான மனிதர் பிடித்திருந்தார். அவர் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. காரணம் ஒளி என் கண்களைக் கூசச் செய்தது. அவர் கதவைத் திறந்து மெதுவாக என் மொழியிலேயே சொன்னார்.'”பக்திமிக்க சி பெங் எனது தனிமையை தொடர்ந்து, இடைவிடாது சரி செய்கிறார் என்பதைப் பார்க்க முடிகிறது. சந்தேகமின்றி தோட்டத்தைப் பார்க்கத்தானே விரும்பினீர்கள்?”

எங்களது அயல் நாட்டுத் தூதர்களில் ஒருவரின் பெயரினை அடையாளம் கண்டு கொண்ட நான் சற்றே மனச்சமன் குலைந்து “தோட்டமா?”‘என்றேன்.

“கிளை பிரியும் பாதைகளின் தோட்டம்”

ஏதோ ஒன்று என் ஞாபகத்தில் கிளர்ந்தது. புரிந்துகொள்ள முடியாத நிச்சயத்துடன் நான் சொன்னேன், “என் மூதாதை சூயு பென்னின் தோட்டமா?”

“உங்கள் மூதாதையா? உங்கள் பிரசித்தமான மூதாதையா? உள்ளே வாருங்கள்”.

எனது இளம் பிராயத்தைப் போலவே வளைந்து வளைந்து சென்றது ஈரமான பாதை. மேற்கு நாடுகள் மற்றும் கிழக்கு நாடுகளின் புத்தகங்கள் அடங்கிய நூலகத்திற்கு வந்து சேர்ந்தோம். தொலைந்துபோன என்சைக்குளோபீடியாவின் பல தொகுதிகள் மஞ்சள் பட்டுத் துணியில் பைண்ட் செய்யப்பட்டிருப்பதை  அடையாளம் கண்டேன். அவை  பிரகாசமிகுந்த பேரரசினைச் சேர்ந்த மூன்றாவது பேரரசரால் எடிட் செய்யப்பட்டது. ஆனால் அச்சாகவே இல்லை. வெண்கலத்தில் வார்க்கப்பட்ட ஃபீனிக்ஸ் பறவைக்கு  அருகில் கிராமபோனில் ஒரு இசைத்தட்டு சுழன்றது. பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு Famille Rose பூச்சாடியையும் பாரசீகத்து மட்பாண்ட கைவினைஞர்களிடமிருந்து எங்கள் கைவினைஞர்கள் காப்பியடித்த ஒரு வித நீலத்தின் வகையையும் கூட என்னால் நினைவு கூற முடிகிறது. . .

ஒரு புன்முறுவலுடன் ஸ்டீபன் ஆல்பர்ட் என்னை உற்றுக் கவனித்தார். நான் கூறியபடி அவர் மிக உயரமாயிருந்தார்– கூர்மையான தோற்றக் கூறுகளுடனும், நரைத்த தாடியுடனும் சாம்பல் நிறக் கண்களுடனும் காணப்பட்டார். “சீனவியலாளராக ஆகும் எண்ணம் வருமுன்” டியன்ட்சன் பகுதியில் அவர் ஒரு மதப்பிரச்சாரகராக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

நாங்கள் அமர்ந்தோம்–நான் நீண்ட தாழ்வான திவான் மீது அமர ஜன்னலுக்கு முதுகைக் காட்டியபடி உயரமான வட்டவடிவ கடிகாரத்திற்கருகில் அவர் அமர்ந்தார். என்னைத் துரத்திவரும் ரிச்சட் மேடன் இன்னும் அரைமணி நேரத்திற்கு இங்கு வந்து சேர முடியாது. என்னுடைய மாற்றமுடியாத தீர்மானத்தினை கொஞ்சம் தள்ளிப் போடலாம். “சூயி பென்னின்  விதியானது பிரமிக்கத்தக்கது” என்று ஸ்டீபன் ஆல்பர்ட் கூறினார். “அவரது சொந்த மாநிலத்தின் கவர்னர்ராக இருந்தார். வானசாஸ்திரம், ஜோதிடம் கற்றிருந்தார், சலிப்பே இல்லாமல் வேத மதசமயச் சட்டங்கள்–நூல்களுக்கு விளக்கம் தந்தவர், சதுரங்க ஆட்டக்காரர், பிரசித்தமான கவிஞர், கையெழுத்துக் கலைஞர்–இவ்வளவு விஷயங்களையும் ஒரு நூலை எழுதவும் ஒரு புதிரைக் கட்டவும் கைவிட்டார். சர்வாதிகாரத்தினுடையதும்,நீதியினுடையதுமான சந்தோஷங்களை தியாகம் செய்தார். பல பெண்களால் நிரம்பிய அவரது கட்டிலை, பெரும் விருந்துகளை, ஏன் ஆழ்ந்த படிப்பினையும் கூடக் கைவிட்டு தெள்ளிய தனிமையின் விதானமான மண்டபத்தில் தன்னைப் பூட்டிக் கொண்டார். அவர் இறந்த பிறகு பெருங்குழப்பமாக இருந்த கையெழுத்துப் பிரதிகளைத் தவிர அவரின் வாரிசுகள் வேறு எதையும் கண்டெடுக்கவில்லை. நீங்கள் அறிந்தபடி அவரது குடும்பத்தார் அவற்றை நெருப்பில் எரிக்க விரும்பினர். ஆனால் அவரது விருப்பத்தை செயலாற்றியவர் ஒரு தாவோயிஸ்ட் அல்லது புத்த பிக்கு-அப்பிரதிகளை வெளியிட வேண்டுமெனப் பிடிவாதமாயிருந்தார்.”

“சூயி பென்னின் வழிவந்த நாங்கள் அந்த பிக்குவை சபித்துக்கொண்டிருக்கிறோம்.” நான் பதில் அளித்தேன். “அவற்றின் வெளியீடு அர்த்தமற்றது. அந்த நூல் முரண்பாடுகள் மிகுந்த பிரதிகளின் தீர்மானிக்க முடியாத குவியல். ஒரு முறை நான் அவற்றை ஆராய்ந்திருக்கிறேன். மூன்றாவது அத்தியாயத்தில் கதாநாயகன் சாகிறான், நான்காவதில் உயிரோடிருக்கிறான். சூயி பென்னின் மற்றொரு காரியமான புதிரைப் பொருத்தவரை. . .” என்று கூறிய நான் முடிக்காமல் நிறுத்தினேன்.

“இதோ இருக்கிறது சூயி பென்னின் புதிர்”‘ ஒரு உயரமான வார்னிஷ் பூசிய பெரிய மேஜையைக் காட்டிக் கூறினார் அவர்.

“ஒரு தந்தத்தால் ஆன புதிர்!”ஆச்சரியத்தில் கூறினேன். “ஒரு குறைந்தபட்ச புதிர்.”

“குறியீடுகளால் ஆன ஒரு புதிர்!”‘ என அவர் திருத்தினார். “கண்ணுக்குப் புலனாகாத காலத்தின் புதிர். இந்த ஊடுருவிப் புலனாகும் மர்மத்தை விடுவிக்க வேண்டிய பொறுப்பு ஒரு காட்டுமிராண்டித்தனமான ஆங்கிலேயனான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நூறு வருஷங் களுக்கு மேற்பட்ட தகவல்கள் திரும்பக் கிடைக்க முடியாதவை, ஆனால் என்ன நடந்தது என்பதை யூகிப்பது கடினமல்ல.  நான் ஒரு நூலை எழுதுவதற்காக ஓய்வு பெறுகிறேன் என.சூயி பென் ஒரு முறை சொல்லி இருக்கவேண்டும். வேறு ஒரு சமயம்: நான் ஒரு வட்டச் சுழல் புதிரைக் கட்டுவதற்காக தனித்துப் போகிறேன் எனவும். ஒவ்வொருவரும் இரண்டு படைப்புகளை கற்பனை செய்திருந்தனர். புத்தகமும் புதிரும் ஒன்றே என எவருக்கும் தோன்றவே இல்லை. சிக்கலாக அமைந்த தோட்டத்தின் மையத்தில் நின்றிருந்தது தெள்ளிய தனிமையின் விதான மண்டபம். இந்த சந்தர்ப்பங்கள் அவரது சந்ததியினருக்கு ஸ்தூலமானதொரு புதிரை அறிவித்திருக்கக்கூடும். சூயி பென் இறந்தார். அவருக்குச் சொந்தமான  பரந்த நிலப்பரப்புகளில் எவருமே புதிரைக் கண்டு பிடிக்கவில்லை. நாவலின் குழப்பம் எனக்கு அதுவேதான் புதிர் எனத் தெரிவித்தது. பிரச்னைக்கான சரியான தீர்வினை இரண்டு சந்தர்ப்பங்கள் அளித்தன. முதலாவது சூயி பென் கறாரான வகையில் முடிவில்லாத ஒரு புதிரினை படைக்கத் திட்டமிட்டார் என்கிற விநோதமான புராணிகக் கதை. இரண்டாவது: நான் கண்டுபிடித்த ஒரு கடிதத்தின் பகுதி.”

ஆல்பர்ட் எழுந்தார். என் பக்கம் ஒரு கணம் அவரது முதுகு திரும்பியிருந்தது. கறுப்பு மற்றும் தங்க நிற டெஸ்க்கின் இழுப்பறையைத் திறந்தார். அவர் என்னை நோக்கித் திரும்பி நின்றார்.  இற்று விழுந்துவிடக் கூடிய, பல தடவை மடிக்கப்பட்ட, ஒரு காலத்தில் சிவப்பாக இருந்திருக்கக் கூடிய , இப்பொழுது பிங்க் வர்ணத்தில் இருந்த ஒரு காகிதத் துண்டை அவர் கைகளில் பிடித்துக் கொண்டிருந்தார்.

சூயி பென்னுக்குக் கிட்டியிருந்த கையெழுத்துக் கலைஞன் என்ற பேரும் புகழும் நியாயமனைவையே.  என்னுடைய ரத்தத்தின் ரத்தமான ஒரு மனிதனால் நுண்மையான தூரிகை கொண்டு எழுதப்பட்டிருந்த  வார்த்ததைகளை , நான் அர்த்தங்களை உள்வாங்கிக் கொள்ளாமலும், அதீத ஆர்வத்துடனும் படித்தேன். பல்வேறு வேறுபட்ட வருங்காலங்களுக்கு  (எல்லாவற்றுக்கும் அல்ல)என்னுடைய கிளைபிரியும் பாதைகளின் தோட்டத்தை நான் விட்டுச் செல்கிறேன். வார்தைகளின்றி காகிதத்தை நான்  திருப்பித் தந்தேன். ஆல்பர்ட் தொடர்ந்தார்:

“இந்தக் கடிதத்தைக் கண்டுபிடிக்கு முன், இந்த நூல் முடிவற்றதாய் இருக்கக் கூடிய வழிவகைகளைப் பற்றி என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். ஒரு வட்ட வடிவமான தொடர்சுற்றுத் தொகுதியைத் தவிர வேறு எதையும் என்னால் யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. அந்தப் புத்தகத்தின் கடைசிப் பக்கம் முதல் பக்கத்துடன் ஒன்றுபடும். இவ்வாறு முடிவற்று தொடரும் சாத்தியம் கொண்டது. ஆயிரத்து ஒரு இரவுகளின் மையத்தில், ஒரு இரவில் ஷெஹர் ஷாதி (பிரதி எடுப்பவனின் மந்திரத்தனமான கவனப்பிசகின் காரணமாக) வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் ஆயிரத்து ஒரு இரவுகளின் கதையை திரும்பச் சொல்லத் தொடங்கி அவள் திரும்பச் சொல்லவேண்டிய அந்த இரவுக்கு வரவேண்டிய அபாயத்தினை ஏற்படுத்தி, இவ்வாறு எல்லையற்று–என நான் அந்த இரவினையும் நினைவு கூர்ந்தேன். வம்சாவழியான, தந்தையிடமிருந்து மகனுக்கு மாற்றப்படுகிற பிளாட்டோ தன்மையான ஒரு படைப்பினையும் நான் கற்பனை செய்தேன். அதில் ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு அத்தியாயத்தைச் சேர்ப்பான் அல்லது பயபக்தியுடன் தனது மூதாதையரின் பங்கங்களைத் திருத்துவான். இந்தக் கற்பிதங்கள் என்னைத் திசை திருப்பின. ஆனால் எதுவுமே, தூரத்துத் சம்மந்தத்திலும் கூட முரண்மிக்க சூயி பென்னின் அத்தியாயங்களுடன் ஒத்துப் போகவில்லை. இந்தப் பெருங்குழப்பத்திற்கு இடையில் ஆக்ஸ்போர்டிலிருந்து ஒரு கையெழுத்துப் பிரதி எனக்குக் கிடைத்தது. அது நீங்கள் படித்தது. இயல்பாகவே நான் இந்த சொற்றொடரில் நிலைத்திருந்தேன்.

பல் வேறு வருங்காலங்களுக்கு (எல்லாவற்றிற்கும் அல்ல) என்னுடைய கிளைபிரியும் பாதைகளின் தோட்டத்தை நான் விட்டுச் செல்கிறேன். ஏறத்தாழ அந்த கணத்திலேயே எனக்கு புரிந்துவிட்டது. “கிளைபிரியும் பாதைகளின் தோட்டம்” தான் அந்தக் குழப்பமான  நாவல். பல வேறுபட்ட வருங்காலங்கள் (எல்லாவற்றுக்கும் அல்ல) என்ற  சொற்தோடர், கிளை பிரிதல் காலத்தில் மட்டும்தானே தவிர புவிவெளியில் அல்ல என்று குறிப்பால் உணர்த்தியது.  அகண்ட மறுவாசிப்பு இந்தக் கருத்தாக்கத்தினை உறுதிப்படுத்தியது. எல்லாப் புதினங்களிலும் வேறுபட்ட மாற்றுக்களை ஒவ்வொரு முறை ஒரு மனிதன் எதிர்கொள்ளும் போதும், அவன் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து மற்றவற்றை நீக்கி விடுகிறான். சூயி பென்னின் நாவலில்–ஒரே நேரத்தில்–அவன் அனைத்தையும் தேர்வு செய்கிறான். இவ்வாறு அவன் தம் அளவிலேயே பெருகிக் கிளைபிரியும்–வேறுபட்ட வருங்காலங்களையும், மாறுபட்ட காலங்களையும்  உருவாக்குகிறான்.  இங்குதான் இருக்கிறது நாவலின் முரண்பாடுகளுக்கான விளக்கம். ஃபேங் என்பவனிடம் ஒரு ரகசியம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவனிடத்திற்கு ஒரு அந்நியன் வந்து கதவைத் தட்டுகிறான். ஃபேங் அவனைக் கொல்லத் தீர்மானிக்கிறான். இதன் விளைவுகள் இயல்பாகவே வேறுபட்ட சாத்தியமிக்கவையாய் இருக்கும். இடையூறு செய்தவனை ஃபேங் கொல்லலாம், இடையூறு செய்தவன் ஃபேங்கைக் கொல்லலாம். இருவருமே தப்பித்து விடலாம், இருவருமே இறந்து போகலாம், இப்படியாக. சூயி பென்னின் நாவலில் சகல சாத்தியமிக்க விளைவுகளும் தோன்றுகின்றன. ஒவ்வொன்றும் வேறு ஒரு கிளைபிரிதலுக்குரிய ஆரம்பப் புள்ளியாகிறது. சில நேரம் சுழல் புதிர்களின் பாதைகள் சங்கமிக்கின்றன. எடுத்துக்காட்டாக இந்த வீட்டை நீங்கள் அடைகிறீர்கள், ஆனால் சாத்தியமுள்ள கடந்த காலங்களில் ஒன்றில் நீங்கள் எனது எதிரி, மற்றொன்றில் எனது நண்பன். எனது திருத்தமுடியாத உச்சரிப்பை பொறுத்துக் கொள்ள முடியுமென்றால், நாம் சில பக்கங்களைப் படித்துப் பார்க்கலாம்.”

அவருடைய முகம், விளக்கு வெளிச்சத்தின் துலக்கமான வட்டத்தில் கேள்விக்கு அப்பாற்பட்ட வகையில் ஒரு கிழவனுடையதைப் போல் இருந்த போதிலும் அதில் ஏதோ ஒன்று மாறுதலுக்கு அப்பாற்பட்டதாய், இறவாத்தன்மையுடையதாய்த் தோன்றியது. நிதானமான ஒழுங்குடன் அவர் ஒரே காவியத்தன்மை வாய்ந்த அத்தியாயத்தின் இரண்டு விவரிப்புகளை நிதானமாகவும் திருத்தமாகவும் வாசித்தார். முதல் விவரிப்பில் ஒரு தனித்த மலையில் வழியாக போருக்கு அணிவகுத்துச் செல்கிறது ஒரு படை; பாறைகளின் நிழலும் பயங்கரமும் வீரர்களைத் தமது உயிரைக் குறைத்து மதிப்பிட வைக்கிறது. அவர்கள் எளிமையான வெற்றியைப் பெறுகின்றனர். இரண்டாவதில் அதே படை ஒரு அரண்மனையின் ஊடாகக் கடந்து செல்கிறது. அதில் பெரும் விழா ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நெருப்பு ஒளிரும் போரானது அவர்களுக்குக் களியாட்டத்தின் தொடர்ச்சியைப் போலத் தோன்றியதால் அவர்கள் ஜெயிக்கிறார்கள். எனக்கு ரத்த சம்மந்தம் உள்ளவனால் உருவாக்கப்பட்டவை, உலகின் ஒரு கோடியில் உள்ள சாம்ராஜ்தைச் சேர்ந்த ஒருவனால் மேற்கத்திய தீவொன்றில் துணிகர முயற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த  சமயம் கண்டறியப்பட்டு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதைத் தவிர அந்த புராதனக் கதையார்த்தங்களில், அவற்றின் அளவில் பாராட்டும்படியாக பெரிதாக ஒன்றும் இல்லை என்று தோன்றியது. ஒரு ரகசியக் கட்டளை போல ஒவ்வொரு வகையான விவரிப்பிலும் திரும்பத் திரும்பக்  கூறப்பட்ட அந்தக் கடைசி சொற்களை நினைத்துக் கொண்டேன். இவ்வாறு போரிட்டார்கள் நாயகர்கள், பாராட்டுதல் மிக்க அவர்களின் இதயங்கள் சலனமின்றி, அவர்கள் வாள்களோ வன்மத்துடன், கொல்வதற்கும் சாவதற்கும் தீர்மானித்தபடி.

அந்தக் கணத்திலிருந்து, என்னைச் சூழ்ந்தும், எனது இருண்ட உடலுக்கு உள்ளாகவும் கண்ணுக்குப் புலனாகாத, ஸ்பரிசிக்க முடியாத, மொய்த்துக் கொள்ளப்படும் உணர்வு எனக்கு ஏற்பட்டது. விலகிச் செல்கிற, இணைகோட்டுத் தன்மையிலிருந்து இறுதியில் சங்கமித்துக் கலக்கும் படைகளின் பெருகுதல் அல்லாமல்,  ஆனால் மேலும் சென்றடையச் சிரமமான மிக அத்தியந்தமான உலுக்குதல்களாக ஏதோ வகையில் இவை முன் கூறலாயின. ஸ்டீபன் ஆல்பர்ட் தொடர்ந்தார்:

“வெட்டியாய் இந்த மாறுபாடுகளுடன் உங்கள் மூதாதை பொழுது போக்கினார் என நான் நம்பவில்லை. வெறும் சொல்திறன் மிக்க ஒரு சோதனைப் படைப்பின் எல்லையற்ற செயல்பாட்டிற்காக பதிமூன்று வருடங்களைத் தியாகம் செய்திருப்பார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் நாட்டு இலக்கியத்தில் நாவலானது ஒரு துணை வடிவமாகவே கருதப்படுகிறது. சூயி பென்னின் காலகட்டத்தில் அது அருவருக்கத்தக்க இலக்கிய வடிவமாக இருந்தது. சூயி பென் அற்புதமான நாவலாசிரியர். ஆனால் அவர் ஒரு இலக்கியவாதி என்பதால் சந்நேகத்துக்கிடமின்றி தன்னை வெறும் நாவலாசிரியராக மட்டும் அவர் கருதவில்லை. அவரது ஆன்மீகமும் தத்துவார்த்த சர்ச்சைகளும் நாவலின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவரின் சமகாலத்தவர்கள் அளித்த சான்றுகளும் அவரது வாழ்வும் இதை உறுதிப் படுத்துகிறது. ஆழம் காண முடியாத பிரச்சனையான காலம் தவிர வேறு எந்தப் பிரச்சனையும் அவரை அவ்வளவு பெரியதாக தொந்தரவு செய்யவோ கிளர்ச்சி ஊட்டவோ இல்லை. ஆயினும் அந்த பிரச்சனைதான் “தோட்டத்தின்” பக்கங்கள் எதிலும் காணப்படுவதே இல்லை. காலம் என்பதைக் குறிப்பிடும் எந்த ஒரு சொல்லையும் அவர் பயன்படுத்தியதில்லை. வேண்டுமென்றே செய்த  விடுபடலுக்கு நீங்கள் எப்படி வியாக்கியானம் தருவீர்கள்?

நான் பலவிதமான தீர்வுகளைக் கூறினேன்–எல்லாம் திருப்தியற்றதாய்.  நாங்கள் அவற்றை விவாதித்தோம். இறுதியில் ஸ்டீபன் ஆல்பர்ட் என்னிடம் கூறினார்:

“எந்த விடுகதையின் விடை சதுரங்கமோ அதில் தடை செய்யப்படும் சொல் எது?”

ஒரு கணம் யோசித்துவிட்டுப் பின் கூறினேன். “சதுரங்கம் என்ற சொல்.”

“மிகச் சரியாக” என்றார் ஆல்பர்ட். “கிளைபிரியும் பாதைகளின் தோட்டம் ஒரு மாபெரும் புதிர் அல்லது நீதிக் கதை, அதன் சாராம்சம் காலம்; இந்தப் புதிர்க்காரணம் அதைத் தெரிவித்தலை தடைசெய்கிறது. எப்போதுமே, ஒரு சொல்லைத் தவிர்த்து, ஜடமான உருவங்கள், வெளிப்படையாய் சுற்றி வளைத்துச்சொல்லும் சொற்றொடர் ஆகியவற்றின் பயன்பாட்டைத் தேர்ந்தெடுப்பது அதனை மிக அழுத்தமான வகையில் முக்கியப்படுத்துதல் ஆகும். இந்த மறைமுக எழுத்துக்காரரான சூயி பென் உடைய சோர்வற்ற இடைவிடாத நாவலின் ஒவ்வொரு வளைதலிலும் இந்த சுற்றி வளைத்துச் சொல்லும் முறையே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளை ஒப்பிட்டு, பிரதி எழுத்தாளர்களின் கவனக் குறைவினால் உண்டான பிழைகளைத் திருத்திவிட்டேன். இந்தக் குழப்பும் திட்டத்தினை யூகித்துக் கொண்டேன். அதன் மூலாதரமான கட்டமைப்பினை மீட்டு நிலைநிறுத்திவிட்டேன் என நம்புகின்றேன். முழு நாவலையும் நான் மொழிபெயர்த்து விட்டேன். ஒரு தடவை கூட “காலம்” என்ற சொல்லை அவர் பயன்படுத்தவில்லை என்று எனக்குத் தெளிவாகிவிட்டது. விளக்கம் வெளிப்படை. கிளைபிரியும் பாதைகளின் தோட்டம் சூயி பென் உள்வாங்கிக் கொண்ட ஒரு பிரபஞ்சத்தின் படிமம். ஆனால் அது பொய்யானதல்ல. நியூட்டன் மற்றும் ஷோப்பன்ஹீர் ஆகியோரைப் போல உங்கள் மூதாதை ஒரே சீரான, முழுமுற்றான காலத்தில் நம்பிக்கை வைக்கவில்லை. அவர் எல்லையற்ற காலங்களின் தொடர்ச்சிகளில் நம்பிக்கை வைத்திருந்தார். அதாவது, வளர்ந்து கொண்டே போவதான தலைச்சுற்றச் செய்யும்படிக்கு விலகிச் சென்று ஒன்று சேர்கிற இணைகோட்டுத் தன்மையான காலங்களின் வலை.  இந்தக் காலங்களின் பின்னல் தொடர்ச்சி ஒன்றை ஒன்று சந்தித்து கிளை பிரிந்து முறிந்துபோய், அல்லது ஒன்றை மற்றொன்று பல நூற்றாண்டுகளாய் காலத்தின் சகல சாத்தியங்களையும் அரவணைத்துக் கொள்கிறது. இதில் உள்ள பெரும்பான்மையான காலங்களில் நாம் வாழ்வதில்லை. சிலதில் நீங்கள் இருக்கிறீர்கள் நான் இருப்பதில்லை. பிறவற்றில் நான் இருக்கிறேன் நீங்கள் இல்லை. மற்றவற்றில் நாம் இருவரும் இருக்கிறோம். நிகழும் இந்தக்காலத்தில், ஒரு சாதகமான விதி எனக்கு அளித்திருக்கிற இதில், என் வீட்டுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். இன்னொன்றில், தோட்டத்தைக் கடக்கும் போது, நீங்கள் நான் இறந்திருப்பதைக் கண்டீர்கள், இன்னுமொன்றில், இதே சொற்களை நான் சொல்கிறேன், ஆனால் நான் ஒரு தவறு, ஒரு ஆவி.”

“ஒவ்வொன்றிலும்” என் குரல் நடுக்கமே இல்லாது உச்சரித்தேன், “நான் உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறேன். சூயி பென்னின் தோட்டத்தை மறு ஆக்கம் செய்ததற்காக உங்களை வணங்குகின்றேன்.”

“எல்லாவற்றிலும் அல்ல”‘என அவர் ஒரு புன்சிரிப்புடன் முணுமுணுத்தார். “எண்ணிலடங்காத எதிர்காலங்களை நோக்கி நித்தியமாய் காலம் கிளை பிரிகிறது. அவை ஒன்றில் நான் உங்கள் எதிரி”.

மீண்டும் நான் முன்பே குறிப்பிட்ட அந்த  மொய்த்துக் கொள்ளப்படும் உணர்வை அடைந்தேன். வீட்டைச் சூழ்ந்திருந்த வெக்கையான தோட்டம் முடிவே இல்லாத வகையில் கண்ணுக்குப் புலனாகாத நபர்களால் அடர்ந்திருந்தது என எனக்குத் தோன்றியது. அந்த நபர்கள், நானும் ஆல்பர்ட்டும்– ரகசியமாய் இயக்கத்துடன் பல உருவங்களில், காலத்தின் வேறு பரிமாணங்களில். என் கண்களை உயர்த்தியபோது அந்த நொய்மையான பீதிக் கனவு கலைந்து விட்டிருந்தது. அந்த மஞ்சளும் கறுப்புமான தோட்டத்தில் ஒரே ஒரு மனிதன்தான் இருந்தான். ஆனால் இந்த மனிதன்óஒரு சிலை அளவுக்கு வலிமையானவனாய் இருந்தான் . . . இந்த மனிதன் பாதை வழியாக என்னை நெருங்கி வந்து கொண்டிருந்தான். அவன் கேப்டன் ரிச்சட் மேடன்.

“எதிர்காலம் ஏற்கனவே நிகழ்கிறது”  என பதில் சொன்னேன் “எனினும் நான் உங்கள் நண்பன். மீண்டும் ஒரு தடவை அந்தக் கடிதத்தை நான் பார்க்கலாமா?”

ஆல்பர்ட் எழுந்தார். நிச்சலனமாய் நின்று அந்த உயர்ந்த டெஸ்க்கிலிருந்து இழுப்பறையைத் திறந்தார்; அந்த ஒரு கணம் அவரது முதுகு என்னை நோக்கி இருந்தது. நான் என் ரிவால்வாரை தயார் செய்திருந்தேன். ஆழ்ந்த கவனத்துடன் சுட்டேன். ஆல்பர்ட் எவ்வித முணுமுணுப்பும் இல்லாமல் சரிந்தார். உடனே அவருடைய இறப்பு மின்னலடிக்கும் சொடுக்கைப்போல உடனடியானது என நான் உறுதியாகக் கூற முடியும்.

மற்றதெல்லாம் நிஜமல்லாதது, அற்பமானது. மேடன் உள்ளே நுழைந்து என்னைப் கைது செய்தான். எனக்கு தூக்குத்தண்டனை தரப்பட்டது. அருவருக்கத்தக்க வகையில் நான் ஜெயித்திருந்தேன்; அவர்கள் தாக்க வேண்டிய நகரத்தின் பெயரினை பெர்லினுக்குத் தெரிவித்துவிட்டேன். நேற்று அவர்கள் அதன் மீது குண்டுகள் வீசினார்கள்; ஆழ்ந்த படிப்பறிவு மிக்க சீனவியல்வாதியான ஸ்டீபன் ஆல்பர்ட் ஒரு யூ சூன் என்கிற அயல் தேசத்தவனால் கொலை செய்யப்பட்டதின் மர்மத்தினை இங்கிலாந்துக்கு அளித்த அதே செய்தித்தாள்களில் நான் அதைப் படித்தேன். முதன்மை அதிகாரி மர்மத்தை விடுவித்துவிட்டார். ஆல்பர்ட் என்ற நகரத்தை (போரின் கூச்சல் குழப்பங்களுக்கிடையே) அடையாளம் காட்ட வேண்டியிருந்ததே என் பிரச்சனை என்றும் அதைச் செய்ய வேறு எந்த வழியும் இல்லாது போனதால், அந்தப் பெயருள்ள ஒரு மனிதனை நான் கொல்ல வேண்டி வந்தது என்றும் அவர் அறிந்திருந்தார். ஆனால் அவரால் (வேறு எவராலும் கூட) என்னுடைய எண்ணிலடங்கா உளைச்சல்களையும் சோர்வுகளையும் அறிய முடியாது.

borders4

Translated  by Donald A.Yates


Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: