ரகசிய அற்புதம் (Secret Miracle)Jorge Luis Borges-translation by Brammarajan

ரகசிய அற்புதம்

Secret Miracle-Jorge Luis Borges-translation by Brammarajan

horizontal-line3

மேலும் கடவுள் அவனை நூறு வருடங்களுக்கு இறந்து போகச்செய்து,

பிறகு உயிர்ப்பித்து அவனிடம் கேட்டார் :

எவ்வளவு காலமாய் நீ இங்கிருக்கிறாய்?

ஒருநாள் அல்லது ஒரு நாளின் பகுதி

அவன் பதில் அளித்தான்.

குர் ஆன். II,261


1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி இரவு ப்ராக் நகரின் ட்செல்ட் நெர்கஸெவில் ஒரு தங்கும் விடுதியில், The Enemies, or Vindication of Eternity  என்ற முடிக்கப்படாத நாடகத்தின் ஆசிரியனும், யாக்கோப் பாமெவின் மறைமுக யூதப் பின்னணியைப் பற்றிய ஆய்வை எழுதியவனும் ஆன யரோமிர் ஹ்லாடிக் மிக நீண்டதொரு சதுரங்க ஆட்டம் பற்றிய கனவைக் கண்டான். விளையாடுபவர்கள் இரண்டு நபர்களாக இல்லாமால் இரண்டு பிரசித்தமான குடும்பங்களாக இருந்தன. சதுரங்க விளையாட்டு பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. பணயங்கள் என்னவென்று எவருக்கும் நினைவில்லை. ஆனால் அவை மிகப்பெரிய அளவிலும், ஒருவேளை முடிவற்றும் இருக்கக் கூடும் என்ற பேச்சு அடிபட்டது. சதுரங்கக் காய்களும், சதுரங்கப் பலகையும் ஒரு ரகசிய கோபுரத்தில் இருந்தன. யரோமிர் (தன் கனவில்) போட்டியிடும் குடும்பங்களில் ஒன்றின் முதல் மகனாக இருந்தான். தள்ளிப் போடவே முடியாத, அந்த விளையாட்டிற்கான நேரத்தைக் கடிகாரம் ஒலித்தது. சதுரங்கக் காய்களைப் பற்றியோ, ஆட்டத்தின் விதிமுறைகளைப் பற்றியோ நினைவு கொள்ள இயலாமல், கனவு காண்பவன் மழைசார்ந்த பாலைவன மணலின் மீது தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தான். அந்த கணத்தில் அவன் உறக்கத்திலிருந்து விழித்தான். மழையினுடையதும், பயங்கரக் கடிகாரங்களினுடையதுமான அலையலையான உலோக ஓசை நின்றது.  ஒருங்கிசைவான, வேறுபாடற்ற சப்தம், இடையிடையே ஆணைகள் பிறப்பிக்கப்படும் குரலினால் குலுக்கிடப்பட்டு ட்செல்ட் நெர்கஸெவிலிருந்து கேட்கத் தொடங்கியது. அதிகாலை நேரம். கவச மோட்டார்களுடன், மூன்றாம் ரைக்கின் முன்னணிப் படை ப்ராக் நகரில் நுழைந்து கொண்டிருந்தது. பத்தொன்பதாம் தேதி அதிகாரிகளுக்கு பொது மன்றக் குற்றச்சாட்டு பற்றிய தகவல் கிடைத்தது. அதே நாள், மாலை நேரம் நெருங்கும் போது யரோமிர் ஹ்லாடிக் கைது செய்யப்பட்டான். மால்டவ் நதியின் கரைக்கு எதிர்ப்புறம் அமைந்த தூய்மையான, வெண்மையான, போர் வீரர் குடியிருப்புக்குக் கொண்டு செல்லப்பட்டான். கெஸ்டெப்போவின் குற்றச்சாட்டுகளில் ஒன்றைக் கூட அவனால் மறுக்க முடியவில்லை — அவன் அம்மாவின் குடும்பப் பெயர் யரோஸ்லாவ்ஸ்கி, அவன் யூதப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவன். பாமெ’ பற்றி அவன் செய்த ஆய்வில் யூதத்தன்மை பற்றிய வெளிப்படையன முக்கியத்துவம் இருந்தது, சிறு நாடுகளின் இணைப்பை எதிர்த்துக் கையெழுத்திட்டவர்களுடன் அவன் கையொப்பமும் இருந்தது. ஹேர்மன் பார்ஸ்டார்ஃப் என்ற வெளியீட்டு நிறுவனத்திற்காக 1928 இல் அவன் Sepher Yezirah  வை மொழிபெயர்த்திருந்தான். விளம்பர நோக்கங்களுக்காக வெளியீட்டு நிறுவனத்தின் அலுப்பூட்டும் புகழ்ந்துரை கொண்ட புத்தகப் பட்டியலில், மொழி பெயர்ப்பாளனின் மதிப்பு அளவுக்கு அதிகமாய் மிகைப்படுத்தப்பட்டிருந்தது.   ஹ்லாடிக்கின் விதியைத் தன் கைவசம் வைத்திருந்த அதிகாரிகளில் ஒருவரான யூலியஸ் ராட்டே, புத்தகப் பட்டியலை பரிசீலித்துப் பார்த்தார். தன்னுடைய பிரத்யேகத் துறையில் தவிர, எந்த ஒரு மனிதனும் நம்பப்படக் கூடியவன் அல்லன். பட்டியலில் காணப்பட்ட, முரட்டு அச்செழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்த இரண்டு  மூன்று குணச்சொற்கள் ஹ்லாடிக்கின் முக்கியத் துவத்தை யூலியஸ் ராட்டே நம்புவதற்குப் போதுமானதாக இருந்தது. மற்றவர் களையும் ஊக்குவிக்கும் பொருட்டு மரண தண்டனைக்கான ஆணையை அறிவித்தான். ஆணை நிறைவேற்றப்பட வேண்டிய தேதி மார்ச் மாதம் 29 ஆம் நாள் காலை 9 மணி எனத் தீர்மானிக்கப்பட்டது.  இந்தத் தாமதம் (முக்கியத்துவத்தை வாசகன் பின்னர் புரிந்து கொள்ள முடியும்) காய்கள், தாவரங்களின் முறையைப் பின்பற்றி சுயச் சாய்வின்றியும், மெதுவாகவும் இயங்குவதற்கு அதிகாரிகள் பக்கமிருந
்த விருப்பத்தின் காரணம்.

ஹ்லாடிக்கின் முதல் எதிர்வினை பயங்கர அச்சமாக இருந்தது. தூக்கு மரத்திலிருந்தோ, தலைவெட்டப்படும் கட்டையிலிருந்தோ அல்லது கத்தியிலிருந்தோ தான் பின்வாங்கி இருக்க மாட்டோம் என அவன் நினைத்தான். ஆனால் துப்பாக்கி வீரர்களால் சுடப்பட்டு இறப்பதை அவனால் பொறுத்துக்கொள்ள இயலாமல் இருந்தது. பயன் ஏதுமின்றி வெளிப்படையான, ஜோடிக்கப்படாத மரணம் என்கிற உண்மையே பயங்கரமானதென்றும், அதன் தொடர் சூழல்கள் அல்லவென்றும் தன்னை சமாதானப் படுத்திக்கொள்ள முயன்றான்.  அந்த உறக்கமற்ற விடியற்காலைப் பொழுதிலிருந்து மர்மம் மிகுந்த துப்பாக்கி குண்டுகள் வரை — சாகும் முறையை முடிவற்று எதிர் நோக்கினான். யூலியஸ் ராட்டே நிச்சயித்திருந்த அந்த நாளுக்கு முன், அவன் நூற்றுக்கணக்கான இறப்புகளை இறந்தான் — அசாதாரணமான கோணங்கள், ஜியோமித சாத்தியங்கள் கொண்ட முற்றங்களின் வடிவங்களில், வேறு வேறு போர்வீரர்களால், மாறுபடும் எண்ணிக்கையில், யந்திரத் துப்பாக்கிகளால் சுடப்பட்டான்–அவர்களில் சிலர் சில சமயங்களில் மிக நெருக்கத்திலிருந்தோ, சிலர் தூரத்திலிருந்தோ அவனைக் கொன்றார்கள். இந்த கற்பனைக் கொலைத் தண்டனைகளை அவன் நிஜமான பேரச்சத்துடன் எதிர்கொண்டான். (ஒரு வேளை நிஜமான வீரத்துடன்) : ஒவ்வொரு பாவனையும் சில வினாடிகளே நீடித்தன. சுழற்சி முடிந்தவுடன் முடிவுற்று மீண்டும் தன் சாவின் நடுங்கும் மாலைப் பாடல்களுக்குத் திரும்பினான். யதார்த்தம் பொதுவாக நமது எதிர்ப்பார்ப்புடன் பொருந்திப் போவதில்லை என்று பிறகு சிந்தித்தான் : ஒரு தொடர் சூழ்நிலை பற்றிய விவரங்களை முன்னோக்குதல் என்பது அது நிகழ்வதைத் தடுப்பதாகும் என்று தன் சொந்த தர்க்கத்திலிருந்து யூகித்தான். இந்த வலுவற்ற மந்திரத்தில் நம்பிக்கை கொண்டு, மிகக் கோரமான விவரங்களை உருவாக்கினான்–அவை நிகழக் கூடாதென்றபடிக்கு. இரவில் பரிதாபமாக, கை நழுவிச் செல்லும் காலம் எனும் பொருளைத் தடுத்து நிறுத்தும் வழியைக் கண்டுபிடிக்கப் பெரு முயற்சி செய்தான். காலம் இருபத்தி ஒன்பதாம் நாளின் அதிகாலையை நோக்கி அதீத வேகத்தில் பாய்கிறது என்பதை அவன் உணர்ந்திருந்தான். அவன் உரக்க விவாதித்தான்: ‘நான் இப்பொழுது இருபத்தி இரண்டாம் நாளின் இரவில் இருக்கிறேன்: இந்த இரவு நீடிக்கிற வரையில் (மேலும் ஆறு இரவுகளுக்கு) நான் அழிவற்றவன், நித்தியமானவன். தூக்கம் மிகுந்த இரவுகள் ஆழமாகவும் அவன் தன்னை மூழ்கடித்துக்கொள்ளக் கூடிய இருண்ட குட்டைகளாகவும் தோன்றின.

நல்லதற்கோ, கெட்டதற்கோ, இந்த பயனற்ற கற்பனைகளின் கட்டாயங்களில் இருந்து தன்னை விடுவிக்கப்போகும் அந்த இறுதியான துப்பாக்கி வெடிகளுக்காக அவன் பொறுமையின்றி ஏங்கிய கணங்களும் இருந்தன. இருபத்தி எட்டாவது நாளில், கடைசி சூரிய அஸ்தமனம் உயர்ந்த கம்பிகள் கொண்ட ஜன்னல்களில் பட்டுத் தெரித்துக் கொண்டிருந்தபோது, தன் நாடகமான எதிரிகள் பற்றிய சிந்தனை, இந்தப் படுமோசமான எண்ணங் களிலிருந்து அவனை திசை திருப்பியது.

ஹ்லாடிக் நாற்பது வயது முழுமையடைந்தவன். சில நட்புகளுக்கும், பல பழக்கங்களுக்கும் அப்பாற்பட்டு, பிரச்னைமிகுந்த செயல்பாடான இலக்கியமே அவன் வாழ்க்கையை அமைத்திருந்தது. எல்லா எழுத்தாளர்களையும் போலவே அவன் மற்றவர்கள் முடித்ததை வைத்தே அவர்களின் சாதனைகளை அளவிட்டான். அவன் திட்டமிட்டதையோ அல்லது எதிர் நோக்கியதையோ வைத்து அவனை அளவிடக் கோரினான் அவர்களிடம். அவன் வெளியிட்ட எல்லா நூல்களும் ஒரு குழம்பிய வருந்தும் உணர்வை அவனிடம் தங்கவிட்டிருந்தன. பாமெவின் எழுத்துக்களைப் பற்றிய அவன் ஆய்வுகள், இபின் எஸ்ரா பற்றியவை,  ஃப்ளட் பற்றியவை எல்லாம் சாராம்சத்தில் வெறும் பொருந்தற் செயல்பாடுகளால் தனிப்பட்டுத் தெரிந்தன. ஸெஃபிர் எஸிரா மொழிபெயர்ப்பு, கவனக் குறைவாலும், சோர்வினாலும், யூகித்தலாலும் பண்பு பெற்றிருந்தது. ஒரு வேளை Vindication of Eternity மாத்திரம் சொற்பமான குறைபாடுகள் கொண்டதாயிருக்கும்.

இதன் முதல் தொகுதி மனிதனின் பல வேறுபட்ட, நித்தியத்தைப்பற்றிய கருத்தாக்கங்களின் வரலாற்றைத் தருகிறது–பார்மிநைடிசின் மாறும் இயல் பற்ற இருத்தலில் இருந்து ஹிண்ட்டனின் மாற்றப்படக் கூடிய கடந்த காலம் வரை. இரண்டாம் தொகுதி (ஃபிரான்சிஸ் ப்ராட்லியுடன் இணைந்து ) பிரபஞ்ச நிகழ்வுகள் எல்லாம் சேர்ந்து ஒரே காலத் தொடர்ச்சியை உருவாக்குபவை என்பதை மறுத்தது. விவாதம், மனிதனுக்கு சாத்தியமாகக் கூடிய அனுபவங்களின் எண்ணிக்கை முடிவற்றது அல்ல என்றும், மேலும் ஒரே ஒரு ‘இரட்டிப்பு காலம் என்பது ஒரு மாயத்தோற்றம் என்பதை நிரூபிக்கப் போதுமானதாகி விடுகிறது . . . . துரதிர்ஷ்டவசமாக இதைப் பொய்யானதென்று நிரூபிக்கும் இந்த விவாதங்கள் யாவும் சரிசமமான அளவு பொய்யானவை. ஹ்லாடிக் இவற்றை ஒரு வெறுப்பு மிகுந்த குழப்பத்துடன் ஆராயும் வழக்கத்தில் இருந்தான். அவன் எக்ஸ்ப்ரஷனிஸக் கவிதைத் தொடர்களையும் எழுதியிருந்தான். 1924ல் வெளிவந்த தொகுப்பில் இவை சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் அவன் கடும் ஏமாற்றம் கொள்ளும் வகையில் பின் வந்த தொகுப்புகள் அவன் கவிதைகளை ஸ்வீகரித்துக் கொள்ளவில்லை. இந்த இரட்டைத் தொனி கொண்ட, உத்வேகமற்ற கடந்த காலம் எல்லாவற்றிலிருந்தும், தன் கவிதை நாடகமான எதிரிகள்’மூலமாகத் தன்னை மீட்டுக் கொள்ள நம்பியிருந்தான். (ஹ்லாடிக் கவிதை வடிவம் முக்கியம் என உணர்ந்திருந்தான், காரணம், பார்வையாளர்கள் யதார்த்தத்தின் பொய்த்தோற்றத் திலிருந்து பார்வையை அகற்றுவதை அது இயலாமல் ஆக்கிவிடுகிறது : கலையின் அத்தியாவசியங்களில் இதுவும் ஒன்று).

நாடகமானது, காலம், இடம், செயல் ஆகிய ஒருமைகளைப் பின்பற்றியது. காட்சி, ஹ்ராட்கெனி என்ற இடத்தில் ரோமர்ஸ்டாட் என்ற பிரபுவின் நூலகத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மாலை நேரங்களில் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்தது. முதல் அங்கத்தின் முதல் காட்சியில் ஒரு விநோதமான மனிதன் ரோமர்ஸ்டாட்டைப் பார்க்க வருகிறான். (கடிகாரம் ஏழு அடித்துக் கொண்டிருந்தது, மறையும் சூரியனின் கதிர்களின் உக்கிரம் ஜன்னல்களைக் கவர்ச்சியாகக் காட்டின, உணர்ச்சி மிகுந்த ஹங்கேரிய இசை காற்றில் மிதந்தது). இந்த வருகையைத் தொடர்ந்து மற்றவர்கள் வருகிறார்கள். தன்னிடம் கெஞ்சி முறையிடும் அந்த மனிதர்களை யாரென்று தெரியவில்லை ரோமர்ஸ்டாட்டுக்கு: ஆனால் அவர்களை எங்கோ பார்த்ததான–ஒரு வேளை கனவில் கண்டதான–ஞாபகம் சங்கடமான உணர்வை உண்டாக்கியது. அவர்கள் எல்லோரும் குழைவாகக் கெஞ்சு கிறார்கள்: ஆனால் அவர்கள் அவனை நாசமாக்க ஒன்றிணைந்திருக்கும் எதிரிகள் என்பது முதலில் பார்வையாளர்களுக்கும் பிறகு பிரபுவுக்கும் தெளிவாகிறது. அவர்களின் சிக்கலான சதிகளைத் தவிர்த்தோ அல்லது கட்டுப்படுத்தியோ வெற்றிபெறுகிறான். உரையாடலில் அவனுடைய காதலியான யூலியா வான் வைய்டெனவ் பற்றிய குறிப்பு வருகிறது. யரோஸ்லாவ் குபின் என்பவன் ஒரு காலத்தில் அவளைக் காதலித் திருக்கிறான். குபின் தற்போது புத்திஸ்வாதீனமிழந்து, தான்தான் ரோமர்ஸ்டாட் என்று நம்பிக்கொண்டிருக்கிறான். அபாயங்கள் அதிகரிக்கின்றன: இரண்டாவது அங்கத்தின் இறுதியில் ரோமர்ஸ்டாட் சதிகாரர்களில் ஒருவனை கொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இறுதியான, மூன்றாவது அங்கம் தொடங்குகிறது: பொறுத்தமற்ற நிகழ்ச்சிகள் சிறிது சிறிதாய் அதிகமாகின்றன: நாடகத்திற்கு வெளியில் சென்றுவிட்ட நடிகர்கள் கூட மீண்டும் தோன்று கின்றனர்: ரோமர்ஸ்டாட் யாரைக் கொன்றானோ அந்த மனிதன் ஒரு கணம் மீண்டும் திரும்புகின்றான்: யாரோ ஒருவர் இன்னும் மாலை நேரம் முடியவே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்: கடிகாரம் ஏழு அடிக்கிறது: உயர்ந்த ஜன்னல்களில் மேற்குச் சூரியன் தெரிகிறது: காற்று ஒரு உணர்ச்சி நிறைந்த ஹங்கேரிய இசைப் பண்ணைத் தாங்கி வருகிறது. முதல் நடிகன் மேடைக்கு வந்து முதல் அங்கத்தின் முதல் காட்சியில் பேசிய வரிகளைத் திரும்பச்  சொல்கிறான். ரோமர்ஸ்டாட் அவனிடம் எவ்வித ஆச்சரியமும் இல்லாமல் பேசுகிறான்: ரோமர்ஸ்டாட்தான், பரிதாபகரமான குபின் என்பதைப் பார்வை யாளர்கள் புரிந்து கொள்கிறார்கள். நாடகம் நடக்கவே இல்லை: குபின் வாழ்ந்து, முடிவற்று வாழ்ந்து கொண்டிருக்கும் சுழல்மயக்கமே அது.

தவறுகளின் இன்ப–துன்பியல் நாடகமான இது பாராட்டத்தகுந்ததா, அல்லது இயல்புக்கு முரண்பட்டதா, சிறப்பான முறையில் சிந்திக்கப்பட்டதா அல்லது கவனக் குறைவானதா என்றெல்லாம் எப்பொழுதுமே ஹ்லாடிக் தன்னைக் கேட்டுக் கொண்டதில்லை. அவன் திட்டமிட்ட கதைப் பின்னல், அவனுடைய குறைபாடுகளை மறைப்பதற்குப் பொருந்தும்படியும், திறன்களைச் சுட்டிக் காட்டும் அளவுக்கும் இருந்து, மேலும்  (குறியீட்டு தளத்தில்) தன் வாழ்வின் அர்த்தத்தை மீட்க அனுமதிக்கும் ஒரு சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது என அவன் நினைத்தான். அவன் முதல் அங்கத்தையும், மூன்றாவது அங்கத்தின் ஓரிரண்டு காட்சிகளையும் எழுதி முடித்திருந்தான். கவிதை நாடகத்தின் சீர் ஒழுங்குத் தன்மை, அறுசீர் செய்யுள் அடிகளை மாற்றியபடி தன் முன்னால் கையெழுத்துப் பிரதி இல்லாமலேயே  அதை தொடர்ந்து எழுதுவதற்குச் சாத்தியமாக்கியது. இன்னும் இரண்டு அங்கங்கள் எழுதி முடிக்கப்பட வேண்டியிருக்கும் நிலையில், தான் மிக விரைவில் சாகப் போகிறோம் என நினைத்தான். இருளில் கடவுளிடம் பேசினான்: ஏதோ ஒரு வகையில் நான் உயிரோடு இருக்கிறேனென்றால், உன் மறுபிரதிகள் அல்லது தவறுகளில் ஒன்றாக நான் இல்லை என்றால், நான் எதிரிகள் நாடகத்தின் படைப்பாளனாக இருக்கிறேன். இந்த நாடகத்தை எழுதி முடிக்க, அதனால் உன்னையும் என்னையும் நியாயப்படுத்த எனக்கு இன்னும் ஒரு வருடம் தேவை. காலத்தையும், நூற்றாண்டுகளையும் வைத்துக் கொண்டிருக்கிற நீ இந்த நாட்களை எனக்குத் தர வேண்டும். எல்லாவற்றிலும் மிகப் பயங்கரமான இந்த கடைசி இரவில், பத்து நிமிடங்கள் கழித்து இருண்ட நீரைப்போல உறக்கம் அவன் மீது நிரம்பி ஓடியது.

அதிகாலை நெருங்கும்போது க்ளிமென்டைன் நூலகத்தின் நடுக்கூடங்களில் ஒன்றில் மறைந்து கொண்டிருப்பதாக அவன் கனவு கண்டான். கறுப்புக் கண்ணாடி அணிந்த நூலகர் அவனைக் கேட்டார்: ” நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாய்? ஹ்லாடிக் பதில் அளித்தான்: “நான் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்”‘. நூலகர் அவனிடம் கூறினார் : “க்ளிமென்டைனின் நான்கு லட்சம் தொகுதிகளில் ஏதோ ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துக்களில் ஒரு எழுத்தில் கடவுள் இருக்கிறார். என் தந்தையர்களும், தந்தையர்களின் தந்தையர்களும் இந்த எழுத்தைத் தேடி இருக்கிறார்கள். நான் அதைத் தேடி குருடாகி விட்டேன்.” அவர் மூக்குக் கண்ணாடியைக் கழற்றினார். முற்றிலும் குருடான அவர் கண்களை ஹ்லாடிக் பார்த்தான். ஒரு வாசகன் அட்லஸ் ஒன்றைத் திருப்பித் தருவதற்கு உள்ளே நுழைந்தான்.  ‘இந்த அட்லஸ் பயனற்றது’ என்று கூறியவன் ஹ்லாடிக்கிடம் கொடுத்தான். கைபோன போக்கில் ஹ்லாடிக் அதைத் திறந்தபோது மயக்கம் கலந்த பிரமிப்பில் பார்ப்பது போல இந்திய தேசப்படத்தைப் பார்த்தான். திடீரென்று, தன்னைப் பற்றிய உறுதிப்பாட்டில், மிகச் சிறிய எழுத்துக்களில் ஒன்றைத் தொட்டான். எங்கும் நிறைந்த குரல், அவனுக்குச் சொன்னது : உன் உழைப்பின் காலம் உனக்குத் தரப்பட்டுவிட்டது. இந்த கணத்தில் ஹ்லாடிக் விழித்தெழுந்தான். மனிதர்களின் கனவுகள் கடவுளுக்குச் சொந்தமானவை என்பதையும், கனவில் ஒலிக்கும் குரல், வார்த்தைகள் தெய்வீகமானவை–அவை மிகத் தெளிவாகவும், தனித்தும் கேட்டாலும் பேசும் நபரைப் பார்க்க முடியாது என்பதையும் மைமோநைடிஸ் எழுதியிருப்பதை ஞாபகப்படுத்திக் கொண்டான். அவன் உடையணிந்து கொண்டான்: இரண்டு ராணுவ வீரர்கள் அவனுடைய ஜெயில் அறைக்குள் நுழைந்து, அவர்களைப் பின்தொடருமாறு அவனுக்கு உத்தரவிட்டார்கள்.

கதவுக்குப் பின்புறம் இருந்துகொண்டு ஹ்லாடிக் சுழல் வட்டமான நடைவழிப்பாதைகளையும், படிக்கட்டுகளையும், தனித்தனி கட்டிடங்களையும் கற்பனை செய்திருந்தான். யதார்த்தம் அவ்வளவு காட்சித்தன்மையாய் இருக்கவில்லை. குறுகலான இரும்புப் படிகளின் வழியாக இறங்கி உள் முற்றத்தை அடைந்தார்கள். பல ராணுவ வீரர்கள் பித்தான்கள் போடப்படாத சீருடையில், ஒரு மோட்டார்சைக்கிளைக் கூர்ந்து கவனித்து பேசிக் கொண்டிருந்தனர்.

சார்ஜெண்ட் கடிகாரத்தை பார்த்தான். 8.44 ஆகியிருந்தது. அவர்கள் 9 மணி அடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஹ்லாடிக், பரிதாபமாக என்பதைவிட மிக அற்பமானவனாய் மரக்கட்டைகளின் குவியல் ஒன்றின் மீது உட்கார்ந்தான். ராணுவ வீரர்களின் பார்வை அவன் பார்வையைத் தவிர்ப்பதைக் கவனித்தான். அவனுடைய காத்திருத்தலைக் குறைக்க சார்ஜென்ட் ஒரு சிகரெட்டை நீட்டினான். ஹ்லாடிக் புகை பிடிப்பவன் அல்லன். தாழ்மை உணர்வு காரணமாகவோ, பணிவு காரணமாகவோ சிகரெட்டைப் பெற்றுக்கொண்டான். சிகரெட்டைப் பற்றவைக்கும்போது  தன் கைகள் நடுங்குவதைக் கவனித்தான். வானம் மேகம் சூழ ஆரம்பித்தது. அவன் ஏற்கனவே இறந்து விட்டது போல ராணுவவீரர்கள் மெல்லிய தொனியில் பேசினார்கள். யூலியா வான் வைய்டெனவ்வின் உருவத்திற்கு ஏற்ற ஒரு பெண்ணை பயன் இன்றி நினைவில் கொண்டுவர முயற்சி செய்தான்.

கைதியைச் சுடும்குழு அமைக்கப்பட்டு விறைப்பாக நின்றது. பாரக்ஸ் சுவருக்கு முன்னால் நின்றிருந்த ஹ்லாடிக் சரமாரியான குண்டுகளுக்காகக் காத்திருந்தான். சுவர் ரத்தத்தால் கறையாகப்போகிறது என்று எவரோ சுட்டிக் காட்டினார்கள். சில அடி தூரம் முன்னெ நகர்ந்து வரும்படி பலி ஆளுக்கு கட்டளை இடப்பட்டது. பொருத்தம் சிறிதும் இன்றி அவனுக்கு இது புகைப்படக்காரர்களின் தடுமாறும் ஏற்பாடுகளை நினைவு படுத்தியது. ஒரு பெரிய மழைத்துளி ஹ்லாடிக்கின் நெற்றிப் பொட்டில் விழுந்து மெதுவாகக் கன்னத்திற்கு உருண்டது. சார்ஜென்ட் கடைசி ஆணையைக் கத்தி அறிவித்தான்.

பௌதிகப் பிரபஞ்சம் ஒரு நிறுத்தத்திற்கு வந்து நின்றது. ஹ்லாடிக்கை நோக்கி துப்பாக்கிகள் ஒருமித்திருந்தன. ஆனால் அவனைக் கொல்ல வேண்டிய மனிதர்கள் இயக்கமற்று நின்றனர். முற்றத்தின் வழிநடைக் கல்லின் மீது ஒரு வண்டின் மாறுதலற்ற நிழல் படிந்திருந்தது. ஒரு சித்திரத்தில் காற்று வீசுவது போல நின்றிருந்தது. ஹ்லாடிக் ஒரு வார்த்தையைக் கத்த முயன்றான். கையின் ஒரு அசைவைச் செய்ய யத்தனித்தான். அவன் செயல் இழந்து போய் விட்டதை அறிந்தான். நின்றுபோன உலகிலிருந்து அவனை ஒரு ஓசையும் அடையவில்லை. அவன் எண்ணினான் : நான் நரகத்தில் இருக்கிறேன். நான் இறந்து விட்டேன்.  அவன் எண்ணினான் :  ‘நான் பைத்தியக்காரன். அவன் எண்ணினான் : காலம் நின்றுவிட்டது. அது நிஜமாக இருக்குமானால் அவன் சிந்தனையும்தானே நின்றிருக்கவேண்டும் என நினைத்தான். அவன் இதைச் சோதிக்க விரும்பினான். வர்ஜிலின் மர்மமான நான்காவது சிறு உரையாடல் பாட்டினை (உதடுகளை அசைக்காமல்) திரும்பச் சொல்லிப்பார்த்தான்.

இப்போது தூரமாய்ப் போய்விட்ட ராணுவ வீரர்களும் அவனுடைய பதற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனக் கற்பனை செய்தான் : அவர்களுடன் தொடர்பு கொள்ள அவன் ஏக்கங்கொண்டான். நீட்சி பெற்ற செயலின்மையால் உண்டாகும் மரத்துப்போன தன்மையையும், மிகக்குறைந்த சோர்வையும் கூட உணராதது அவனைப் பிரமிக்க வைத்தது.  நிர்ணயிக்க முடியாத காலத்திற்குப் பிறகு அவன் உறங்கிப்போனான். அவன் விழித்தபோது உலகம் இயக்கமற்று மௌனமாய்த் தொடர்ந்தது : அவன் கன்னத்தில் இன்னும் அந்தத் நீர்த்துளி  ஒட்டிக் கொண்டிருந்தது : வண்டின் நிழல் கல்லின் மீது நிலைத்திருந்தது. அவன் வீசியெறிந்த சிகரெட்டிலிருந்து வந்த புகை கலையாமல் நின்றது. இன்னொரு நாள் கடந்து சென்றது, ஹ்லாடிக் அறியும் முன்பாக–தன் படைப்பை முடிக்க கடவுளிடம் அவன் ஒரு முழு வருடத்தைக் கேட்டிருந்தான். அவரின் எங்கும் நிறைந்த சக்தி அதை அளித்து விட்டது. கடவுள் அவனுக்காக ஒரு ரகசிய அற்புதத்தைச் செய்திருக்கிறார். நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தில் ஜெர்மன் குண்டுகள் அவனைக் கொல்லும், ஆனால் அவன் மனதில் அந்த ஆணைக்கும், அதன் நிறைவேற்றத்திற்கும் இடையில் ஒரு வருடம் கடக்கும். குழப்பத்திலிருந்து மயக்க நிலைக்கும், மயக்க நிலையிலிருந்து எல்லாம் துறந்த நிலைக்கும், அதிலிருந்து திடீரென்ற நன்றி உணர்வுக்கும் அவன் மாறினான்.

அவனிடம் அவனுடைய ஞாபகத்தைத் தவிர வேறு காகிதங்கள் இல்லை. அதிகமாகச் சேர்க்கப் பட்ட ஒவ்வொரு அறுசீர் செய்யுள் அடியுடன் அவன் பெற்ற பயிற்சி, ஒரு தற்காலிகமான, முழுமையற்ற பாராவை எழுதிய பின் மறந்துவிடுபவர்களால் சந்தேகிக்க இயலாததொரு ஒழுக்கத்தினை அவனுக்கு அளித்தது. பின் வரும் சந்ததியினருக்காகவோ, அல்லது கடவுளுக்காகவோ–அவருடைய இலக்கிய ரசனைகள் பற்றி அவனுக்குத் தெரியாது–அவன் எழுதவில்லை. மிகக் கவனமாக, இயக்கமின்றி, ரகசியமாக, காலத்தில் தன் உன்னதமான, பார்வைக்குப் புலனாகாத சுழல்வட்டங்களைச் செதுக்கினான். இரண்டாம் முறையாக மூன்றாவது அங்கத்தை எழுதினான். திரும்பத் திரும்ப ஒலிக்கும் கடிகாரம், மற்றும் இசை போன்ற சில குறியீடுகளை மிகவும் வெளிப்படையானதெனக் கருதி நீக்கினான். எதுவும் அவனை அவசரப் படுத்தவில்லை. அவன் வரிகளை விடுத்தான்,  இறுக்கமாக்கினான்,  விரிவுபடுத்தினான். சில இடங்களில் அவன் மூலப் பிரதிக்குத் திரும்பினான். முற்றத்தையும், பாரக்சையும் இப்போது ஒருவித அன்புடன் நோக்கினான்: அவனுக்கு முன்னால் இருந்த முகங்களில் ஒன்று ரோமர்ஸ்டாட்டின் பாத்திரம் பற்றிய உருவாக்கத்தை மாறுதல் செய்தது. ஃப்ளாபரைத் துன்புறுத்திய, சலிக்க வைக்கும் ஒருங்கிசைவற்ற வெறும் பார்வை தளத்திலான மூடநம்பிக்கைகள், எழுதப்பட்ட வார்த்தையின் பலவீனம், எல்லைவரையறை என்றும், பேசப்பட்ட வார்த்தை அல்லவென்றும் கண்டுபிடித்தான் . . . அவனுடைய நாடகத்தை முடித்தான். ஒரே ஒரு சொற்பிரயோகம் பற்றிய பிரச்சனையே அவனுக்கு இருந்தது. அதையும் அவன் கண்டுபிடித்தான். அவன் கன்னத்திலிருந்த நீர்த்துளி வழிந்து விழுந்தது. ஒரு பைத்தியக்காரத்தனமான கத்தலுடன் அவன் வாயைத் திறந்தான், முகத்தை நகர்த்தினான், நான்கு துப்பாக்கிகளின் வெடிகளில் கீழே சரிந்தான்.

யரோமிர் ஹ்லாடிக் மார்ச் 29 ஆம் தேதி காலை 9-02 மணிக்கு இறந்தான்.

horizontal-line3Secret Miracle-JL Borges

Translated by Harriet de Onis

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: