Borges-வட்டச் சிதிலங்கள்(Circular Ruins)-Translated by Brammarajan

Circular Ruins-Borges

Circular Ruins-Borges

வட்டச் சிதிலங்கள்(Circular Ruins)

horizontal-line21

Circular Ruins-Borges: Translated into Tamil by Brammarajan

horizontal-line21

(1940)

And if he left off dreaming about you…Through the Looking – Glass, IV

சகலத்தையும் அரவணைத்திருந்த இரவில், மூங்கில் பரிசல் புனிதமான சேற்றில் தரை தட்டுவதையும் அவன் கரையேறுவதையும் எவரும் பார்க்கவில்லை. ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ஒரு சாந்தமான மனிதன் தெற்கிலிருந்து வந்திருக்கிறான் என்பதையும், அவனுடைய வீடு நீரோடையின் மேற்பகுதிகளில் இருந்த எண்ணிக்கையற்ற கிராமங்களில் ஒன்றாக இருந்தது என்பதையும், அங்கே கிரேக்க மொழியால் ஜென்ட் மொழி இன்னும் அசுத்தப்படாதிருந்தது என்பதையும், அங்கே தொழுநோயாளிகளே கிடையாது என்பதையும் தெரிந்து கொள்ளாதவர் எவருமே இல்லை என்று ஆயிற்று. நிஜம் என்னவென்றால் அந்த சாம்பல் நிற மனிதன் தன் உதடுகளை சேற்றின் மீது பதித்து, கரை மீது தடுமாறி எழுந்து, தன் சதையைக் கிழித்த முட்கிளைகளைக் கூட அகற்றாமல், (ஒரு வேளை உணராமல் கூட), பிரக்ஞை தப்பியபடியும், ரத்தம் சொட்டியபடியும் தன்னை இழுத்தபடி கல்லால் ஆன ஒரு புலி அல்லது குதிரையின் சிலை கண்காணித்துக் கொண்டிருந்த வட்ட வடிவமான திறந்த வெளிக்கு வந்து சேர்ந்தான். அந்தப் பிரதிமை ஒரு காலத்தில் நெருப்பின் நிறத்தினை ஒத்திருந்து தற்போது சாம்பலின் நிறத்தை அடைந்திருந்தது. இந்தத் திறந்த வெளி ஒரு கோயிலாக இருந்து பல யுகங்களுக்கு முன்னால் தீப்பிழம்புகளால் அழித்தொழிக்கப்பட்டது. அந்த சதுப்பு நில வனாந்திரத்தின் தெய்வ தூஷணையால் அந்தக் கோயிலின் கடவுள் மனிதரின் மரியாதையைப் பெறாமல் போனார். அந்த அந்நியன் பிரதிமையின் காலடியில் தன் உடலைச் சரித்துக் கொண்டான். தலை உச்சிக்கு வந்திருந்த சூரியனால் விழிப்பூட்டப்பட்ட அவன், ஏதோ வகையில் வியப்பு மேலிடாமல், தனது காயங்கள் ஆறிவிட்டதைக் கவனித்தான். அவனது வெளிர்ந்த கண்களை மூடி, மீண்டும் உறங்கினான், களைப்பினால் அல்லாமல் விருப்பத் தேர்வினால். அவனது விட்டுக் கொடுக்காத குறிக்கோளுக்குத் தேவைப்படும் இடம் இந்தக் கோயில்தான் என்பதை அவன் தெரிந்து வைத்திருந்தான். நெருப்பால் அழிக்கப்பட்ட, மரணமடைந்த கடவுள்களின் நல்லோரைக் கொண்ட மற்றொரு கோயிலின் இடிபாடுகளை, நதியின் கீழ்க்கோடியில் அத்துமீறுதல் செய்யும் மரங்கள் தமது வேர்களினால் இன்னும் மூடிவிட இயலவில்லை என்பதையும் அறிந்திருந்தான். அவனது உடனடிக் கடப்பாடு உறங்குவதே என்று அவன் அறிந்திருந்தான். நடுச்சாமத்தின் போது நிராதவரான ஒரு பறவையின் அழைப்பினால் விழித்தெழுந்தான். காலடித் தடங்கள், சில அத்திப் பழங்கள், ஒரு தண்ணீர் ஜாடி, இவை எல்லாம் அங்கே அருகில் வசித்த மனிதர்கள் அவனது உறக்கத்தினை ஒரு பயபபக்தியுடன் பார்த்து விட்டு அவனுடைய ரட்ஷிப்பினைக் கோரியோ, அன்றி, அவனது மந்திர சக்திக்குப் பயப்பட்டோ-வந்து போயிருந்ததைத் தெரிவித்தன. அவனுக்குள் பயத்தின் சில்லிடுதலை உணர்ந்தான். சிதிலமடைந்த சுவர்களுக்கிடையில் ஒரு புதைகுழியினைத் தேடி அதில் அவன் இதுவரை பார்த்திராத இலைகளைக் கொண்டு தன்னை மூடிக் கொண்டான்.

அவனை வழிநடத்தும் குறிக்கோளானது, இயற்கையை மீறிய ஒன்றாக இருந்த போதிலும், சாத்தியமில்லாததாய் இருக்கவில்லை. அவன் ஒரு மனிதனைக் கனவு காண விரும்பினான். அந்த மனிதனின் சிறிய, கடைசி நுணுக்கத் தகவல் வரை கனவு கண்டு, யதார்த்த உலகினுக்குள் நுழைக்க விரும்பினான். இந்த மர்மமான நோக்கம் அவனுடைய முழுமனதின் வீச்சினையும் திணற அடித்தது. எவரும் அவனது பெயரையோ, அன்றி, அந்த நிமிடத்திற்கு முந்திய அவனது வாழ்க்கை பற்றியோ கேட்டிருந்தால் அவர்களுக்கு என்ன பதில் கூறுவது என்பது அவனுக்குத் தெரிந்திருக்காது. அந்தக் கைவிடப்பட்ட, சிதிலமுற்ற கோயில் காட்சி தரும் உலகின் குறைந்தபட்சமாக இருந்தது அவனுக்குப் உகந்ததாக இருந்தது. மேலும், பக்கத்துக் கிராமத்தில் இருந்த விவசாயிகளின் அண்மையும், அவனது சொற்பத் தேவைகளைக் கவனித்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினால் அவனுக்கு உவப்பாக இருந்தது. மேலும் அவர்களின் காணிக்கையாக வந்த சோறும் பழங்களும் அவன் உடலுக்குத் தேவையான போஷாக்கினை அளித்தன. அவனது ஒரே கருமமாக இருந்தது உறங்குவதும் கனவு காண்பதும்.

ஆரம்பத்தில் அவனுடைய கனவுகள் பெருங்குழப்பமாக இருந்தன; பிறகு ஒரு இயங்கியல் தன்மையுடன் இருந்தன. அந்த அந்நியன் அரைவட்ட அரங்கின் மையத்தில் தான் இருப்பதாகக் கனவு கண்டான். அதுவே, ஏதோ வகையில் எரிந்து, அழிந்து போன கோயிலாகவும் இருந்தது. படி அடுக்கின் இருக்கைகளைக் களைப்படையச் செய்தனர் மௌனமான மாணாக்கர் கூட்டங்கள். மறுகோடி வரிசையில் இருந்த முகங்கள் அவனிடமிருந்து பல பல நூற்றாண்டுகளுக்கு அப்பால் நட்ஷத்திரங்களின் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனால், அவர்களின் அங்கக் கூர்மைகள் தெள்ளத்தெளிவாகவும், கச்சிதமாகவும் இருந்தன. உடற்கூற்றியல், விண்கோளங் களின் ஆய்வு, மந்திர வித்தைகள் ஆகியவற்றைப் பற்றி அந்த மனிதன் அவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தான். தங்களில் ஒருவரை இருப்பின் மாயையிலிருந்து விடுவித்து மெய்ம்மை உலகிற்குள் நுழைத்து விட வல்ல பரீட்சையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டவர்களே போல் அந்த முகங்கள் ஆர்வத்துடன் கவனித்து, புரிதலுடன் எதிர்வினை தர பெருமுயற்சி மேற்கொண்டன. அவனது உறக்கத்திலும் தனது மாணவ ஆவிகளின் பதில்களை ஆழ்ந்து பரிசீலித்து, மோசடியாளர்களால் திசைமாற அனுமதியாமல், அவர்களின் ஒருவித குழப்ப நிலையில் வளரும் புத்திக் கூர்மையைக் கண்டுபிடித்தான். யதார்த்த உலகினுள் ஒரு இடம் பிடிக்கும் தகுதிமிக்க ஆன்மாவினைத் தேடிக்கொண்டிருந்தான்.

ஒன்பது, பத்து இரவுகளுக்குப் பின்னர், தன்னுடைய பாடங்களை சலனமின்றி ஏற்றுக் கொண்ட மாணவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமேயில்லை என்பதையும், ஆனால், அவ்வப்பொழுது தர்க்க நியாயங்கள் கூடிய அளவில் முரண்பட்டவர்கள் நம்பிக்கை தருபவர்கள் என்பதையும் சிறிது கசப்போடு ஏற்றுக் கொண்டான். இதில் முதல் வகையினர் அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவர்களாக இருந்த போதிலும் அவர்களால் என்றைக்குமே நிஜமான தனிநபர்களாக ஆக முடியாது. இரண்டாவது வகையினர் ஒரு மங்கலான வகையில் ஏற்கனவே தேவைக்கு அதிகமாக நிஜமாகி விட்டிருந்தனர். ஒரு மாலைப் பொழுது(இப்பொழுது அவனது மாலைப் பொழுதுகளும் உறங்குவதற்குத் தரப்பட்டிருந்ததால் விடியற்காலையில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் மாத்திரமே அவன் விழித்திருந்தான்) அவனது விரிவான கனவுப் பள்ளியை இறுதியாக நிராகரித்து விட்டு ஒரே ஒரு மாணவனை மாத்திரம் வைத்துக் கொண்டான். அவன் அமைதியானவனாகவும், வெளுத்த உடல் கொண்டவனாகவும், சில நேரங்களில் அடங்காதவனாகவும், கூர்மையான அங்க வடிவங்களுடனும் அந்தக் கனவாளியால் காணப்படுபவனை ஒத்த கூர்மையான அங்க வடிவங்களுடன் இருந்தான். தனது சகமாணவர்களின் திடீர் காணாமல் போதலினால் அவன் அதிகம் பாதிக்கப் படவில்லை. சில தனிப்பட்ட பாடங்களுக்குப் பிறகு அவனுடைய முன்னேற்றம் அவனது ஆசிரியனை வியப்பில் ஆழ்த்தியது. என்றாலும், அழிவை விளைவித்தது. ஒரு நாள் ஒரு பிசுபிசுக்கும் தரிசு நிலத்திலிருந்து வருபவனைப் போலத் தனது உறக்கத்திலிருந்து வெளிவந்து, வெளிர்ந்த மாலை வெளிச்சத்தைக் கண்ணுற்று, முதலில் அதை விடியற்காலையுடன் போட்டுக் குழப்பிக் கொண்டாலும் பின்னர் தான் கனவு காணவில்லை என்பதை அறிந்து கொண்டான். அந்த இரவு முழுவதற்கும், அடுத்த நாளும் உறக்கமின்மையின் அருவருப்பான தெள்ளத் தெளிவு அவன் மீது கனத்துக் கவிந்தது. தன்னைக் களைப்படையச் செய்து கொள்ள சுற்றிலுமிருந்த காட்டினை ஆராய முயன்றான். ஆனால் அவனால் முடிந்ததெல்லாம் ஹெம்லாக் கொடிப்புதர்களிடையே தொடர்ச்சி உடைந்த சிறு சிறு உறக்கங்களை உறங்கியதுதான். அவ்வுறக்கங்களும் தாங்க முடியாத, பண்படாத, தகுதியற்ற ஆழ்பார்வைகளால் விரைவில் மறைந்து விடக் கூடிய மென்சாயல் கொண்டிருந்தன. அவனது பள்ளியை மீண்டும் அமைக்க முயன்று, ஒரு சில சுருக்கமான அறிவுரைகளைக் கூறி முடிக்கு முன்னரே அது உருவம் திரிந்து மறைந்து போயிற்று. அவனது ஏறத்தாழ முடிவற்ற விழிப்புக்காலங்களில், அவனின் வயோதிகக் கண்கள் கோபத்தின் கண்ணீர்த் துளிகளால் கனன்று எரிந்தன.

அவன் உயர்வானதும், கீழ்மையானதுமான ஒழுங்குகளில் சகல புதிர்களை ஊடுருவிய போதிலும், தலை சுற்றச்செய்யும் புத்தியற்ற, ஒழுங்கு முறையற்ற கனவுகளின் உட்பொதிவுகளை வடிவமைக்கும் சிரமகாரியம் ஒரு மனிதனால் முயற்சி செய்யக்கூடியதிலேயே மிகக் கடினமானது-முகமற்ற காற்றினை உருவாக்குவதை விடவும், மணல் கயிற்றினைத் திரிப்பதை விடவும் மிக மிகக் கடுமையானது-என்பதை உணர்ந்தான். . ஒரு தொடக்கத் தோல்வி தவிர்க்கப்பட முடியாதது என்பதையும்ó உணர்ந்தான். அவனை திசை மாறச் செய்த அளப்பரிய பிரமையை மறப்பேன் என சூளுரைத்தான். பிறகு வேறு ஒரு முறைமையைத் தேடித் தேர்ந்தான். அதை முயன்று பார்க்கும் முன்னால் அவனது ஜூரம் வீணடித்த உடல் வலுவினைச் சீர்செய்வதற்கு ஒரு மாதம் செலவழித்தான். கனவு காணுதல் பற்றிய சகல சிந்தனைகளையும் கைவிட்டு ஏறத்தாழ ஒரு பகல் பொழுதின் பெரும்பகுதி நேரம் உறங்கினான். இந்தக் காலகட்டத்தின் சில பொழுதுகளில் கனவு வந்த போது தனது கனவுகளில் லயிப்பதைக் கைவிட்டான். தனது காரியத்தை மீண்டும் கைக்கொள்ளு முன், நிலா ஒரு முழு வட்டத்தினை அடையும் வரை காத்திருந்தான். அப்புறம், மாலையில் நதியின் நீர்களில் தன் உடலைச் சுத்தப்படுத்திக் கொண்டு, கிரகங்களின் கடவுளர்களை வணங்கி, சகல வல்லமை கொண்ட பெயர் ஒன்றின் முறையான சொற்களை உச்சாடனித்து, உறங்கிப் போனான். ஏறத்தாழ உடனடியாக, துடிக்கும் இதயம் ஒன்றினைக் கனவு கண்டான்.

அது துடித்தபடியும், கதகதப்புடனும், ரகசியமாகவும் இருந்ததாகக் கனவு கண்டான். ஒரு முகமோ, பால் வேறுபாடோ இன்றி, மனித உடலத்தின் மங்கிய ரத்தச்சிவப்பில், ஒரு மூடப்பட்ட முஷ்டியின் அளவில் அது இருந்தது. ஒரு பதற்றக் காதலுடன் பதினான்கு தெள்ளிய இரவுகளில் அதைக் கனவு கண்டான். ஒவ்வொரு இரவும் அதை அதிகத் துல்லியத்தோடு அவதானித்தான். அதைத் தொட்டு விடாமல், பார்ப்பதற்கும், கூர்ந்து ஆராய்வதற்கும், அப்பொழுதைக்கப்பொழுது ஒரு பார்வை வீச்சில் அதனைச் சீராக்கவும் மட்டும் தன்னை அனுமதித்துக் கொண்டான். அவன் அதைப் பல தொலைவுகளில் இருந்தும், பல கோணங்களிலிருந்தும் கவனித்துவந்தான். வாழ்ந்து வந்தான். பதினான்காவது இரவில், நுரையீரலுக்குச் செல்லும் முதன்மைக் குருதி நாளத்தினைத் தனது விரலால் தொட்டான். பிறகு அந்த மொத்த இதயத்தையும் உள்ளும் புறமுமாக முழுவதுமாகத் தொட்டுப் பார்த்தான். அந்தப் பரிசோதனை அவனுக்குத் திருப்தியளித்தது. ஒரு நாளிரவு மாத்திரம், வேண்டுமென்றே, கனவு காணாதிருந்தான். அதன் பிறகு அந்த இதயத்திடம் சென்று, ஒரு கிரகத்தின் பெயரை வழிபட்டு வரவழைத்து, பிரதான அங்கங்களில் மற்றொன்றினைக் காட்சி கொள்ளத் தொடங்கினான். ஒரு வருடம் முடிவதற்கு முன்னால் எலும்புக் கூடு மற்றும் கண்ணிமைகள் வரை வந்து விட்டிருந்தான். எண்ணிக்கையில் அடங்காத கேசக் கற்றைகளைக் காட்சி கொள்வதுதான் ஒரு வேளை மிகவும் கடினமான காரியமாக இருந்தது என்று சொல்லலாம். ஒரு முழுமையான மனிதனை, ஒரு இளைஞனை அவன் கனவு கண்ட போதிலும் அந்த இளைஞனால் எழுந்து கொள்ளவோ, பேசவோ, கண்களைத் திறந்து கொள்ளவோ முடியவில்லை. ஒவ்வொரு இரவும்óஅந்த மனிதன் இளைஞனைத் தூங்கும் நிலையில் கனவு கண்டான்.

பண்டைய கிறித்தவ மறைஞானக் கோட்பாட்டாளர்களின் பேரண்டத் தோற்றவியலில் இருந்த படைப்புமுதல்வர்கள், தன் காலில் ஊன்றி நிற்க முடியாத சிவப்பு ஆதாமை வார்த்தெடுத்தனர், அந்தக் கரடுமுரடான, அலங்கோலமான, மூலாதாரமான புழுதியால் ஆன ஆதாம் அளவுக்கே மந்திரவாதியின் இரவுகளில் உருவாக்கப்பட்ட கனவுகளின் ஆதாமும் இருந்தான். ஒரு நாள் மாலை தன் படைப்பாக்கம் முழுவதையும் அழித்து விடும் நிலைமைக்கு (அப்படிச் செய்திருந்தால் அது நல்லதாகவே அமைந்திருக்கும் அவனுக்கு) வந்து கடைசியில் அதற்காக வருந்தி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். பூமி மற்றும் நதியின் கடவுளர்களுக்காக பிரார்த்தனைகளை செய்து தீர்த்த பிறகு பொலி குதிரையாகவோ அல்லது புலியாகவோ இருந்திருக்கக் கூடிய கல்பிரதிமையின் காலடியில் விழுந்து அதன் அறிந்தறியா உதவியைக் கோரி மன்றாடினான். அதே மாலையில் அவன் அந்தப் பிரதிமையைக் கனவில் கண்டான். உயிர்த்துடிப்புடனும், துடித்தபடியும் இருந்த அதைக் கனவில் கண்டான், அது இயற்கைக்கு விரோதமாக புலிக்கும், குதிரைக்கும் இடையிலான கலப்பினச் சேர்க்கையாக இருக்கவில்லை, மாறாக, ஏக சமயத்தில் இவ்விரண்டு மிருகங்களின் குமுறலான தோற்றமாகவும், கூடவே எருது ஒன்றின், ரோஜா ஒன்றின், இடிமழை புயலின் தோற்றமாகவும் இருந்தது. இந்தப் பன்முகக் கடவுள் தனது பூமிபூர்வமான பெயர் நெருப்பென்று தெரியப்படுத்தி, அந்த வட்டக் கோயிலிலும் (அது போன்ற பிறவற்றிலும்) அதற்கு பலி கொடுத்து மனிதர்கள் வணங்கி இருக்கிறார்கள் என்றும், அதன் மந்திர சக்தியால் அந்த மனிதன் தோற்றுவித்த உறங்கும் ஆவி ரூபம் உயிர்ப்பிக்கப்படும் என்றும், நெருப்பைத் தவிரவும், கனவு காண்பவனைத் தவிரவும், உலகின் சகல ஜீவராசிகளும் அவனை ஒரு ரத்தமும் சதையுமான மனிதன் என ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கூறியது. தனக்குரிய சடங்குகள் பற்றி அந்த மாணவன் அறிவுறுத்தப்பட்டவுடன் அவன் நதியின் கீழ்க்கோடியில் அமைந்த சிதிலமடைந்த கோயிலுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டது. அதன் பிரமிடுகள் இன்னும் நிலைத்திருந்தன. அவ்விதத்தில் இந்தக் கைவிடப்பட்ட இடத்தில் ஏதோ ஒரு மனிதக் குரல் அவனைப் போற்றிப் புகழக் கூடும். கனவு காண்பவனின் கனவில், கனவு காணப்பட்டவன் விழித்தெழுந்தான்.

மந்திரவாதி கட்டளைகளை நிறைவேற்றினான். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தினை (கடைசியில் அது இரண்டு வருடங்களாக ஆயிற்று) பிரபஞ்சத்தின் புதிர்களிலும், நெருப்புக் கடவுளின் வழிபாட்டிலும் அவனது மாணாக்கனை தீட்ஷைபெறச் செய்வதில் செலவிட்டான். உள் ஆழத்தில், தான் உருவாக்கிய அந்தப் படைப்புயிருக்கு விடை கொடுப்பது அவனுக்கு வருத்தமளித்தது. அவனுக்கு இன்னும் முழுமையாகச் சொல்லித் தரும் சாக்கில், ஒவ்வொரு நாளும் உறக்கத்திற்கென ஒதுக்கி இருந்த மணி நேரங்களைப் நீட்டித்தான். சற்றே குறைபாடுடையதாய் இருப்பதாகத் தோன்றிய வலது தோளை மறுபடியும் வடிவமைத்தான். அப்பொழுதைக்கப்பொழுது இதெல்லாம் முன்பே நடந்தது மாதிரியான உணர்வினால் துன்பப்பட்டான். ஆனால், மொத்தத்தில், அவன் காலத்தின்ó பெரும்பகுதி சந்தோஷமாக இருந்தான். கண்களை மூடிக்கொள்ளும் போது அவன் நினைப்பான், “இப்போது நான் என் மகனுடன் இருப்பேன். அல்லது, அடிக்கடி, நான் பெற்ற மகன் எனக்காகக் காத்திருக்கிறான், நான் போகாவிட்டால் அவன் உயிர்த்திருக்க மாட்டான்.”

கொஞ்சம் கொஞ்சமாக, அந்த இளைஞனை யதார்த்தத்திற்குத் தயார்ப்படுத்தினான். ஒரு சமயம் தூரத்து சிகரத்தில் கொடியினை ஏற்றச் சொல்லிக் கட்டளையிட்டான். அடுத்த நாள் அந்த மலைச் சிகரத்தின் மீது கொடி ஒளிர்ந்தது. இதை ஒத்த பிற பாடங்களையும், சொல்லிக் கொடுக்க ஒன்றை விட மற்றொன்று இன்னும் சவால் மிகுந்ததாய் இருக்கும்படியாக, சொல்லிக் கொடுத்தான். அவனது மகன் பிறக்கத் தயாராக ஆகிவிட்டான் என்பதையும் பொறுமையற்றுப் பரபரத்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவன் கசப்புடன் புரிந்து கொண்டான், ஒரு வேளை பொறுமை இழந்து விட்டானோ என்பதை அறிந்து வருத்தமுற்றான். முதல் முறையாக அந்த இரவு அவனை முத்தமிட்டு நதியின் கீழ்க் கோடியிலிருந்த கோயிலுக்கு அனுப்பி வைத்தான். கோயிலின் சிதிலங்கள், நுழைய முடியாத அடர் கானகம் மற்றும் சதுப்பு நிலங்களின் பலப் பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் வெண்ணிறத்தில் காணக்கிடைத்தன. ஆனால், முதலில் தான் ஒரு ஆவி ரூபம் என்பதை அவன் என்றுமே அறியாமலிருக்கவும், மற்றவர்களைப் போலவே ஒரு மனிதனாகக் கருதப்படவும் ஏதுவாய் அவனுடைய பயிற்சிக்கால வருடங்களை முழுமுற்றாக மறந்து போகச் செய்தான்.

அவனது வெற்றியும், நிம்மதியும் ஒரு களைப்பினால் ஒளிமங்கிப் போனது. காலையிலும், மாலை மயங்கும் பொழுதிலும் கல் உருவத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவனது மெய்யற்ற மகனும் இதனை ஒத்த சடங்குகளை நதியின் கீழ்க் கோடியில் இருந்த வேறு வட்டச் சிதிலங்களில் செய்து கொண்டிருப்பான் என்று கற்பனை செய்தபடி கல் உருவத்தின் முன் சாஷ்டாங்கமாக விழுவான். இரவில் அவன் இதன் பிறகு கனவு காணவில்லை, அல்லது பிற மனிதர்கள் எப்படி கனவு காண்பார்களோ அப்படியே கனவு கண்டான். இப்பொழுது ஒரு வித தெளிவின்மையுடன் நடப்புலகின் உருவங்களையும், சப்தங்களையும் புலன்காட்சி கொண்டான். ஏன் எனில் அங்கே இல்லாத அவன் மகன் மந்திரவாதியின் குறைவுபடும் பிரக்ஞையில் தன் ஊட்டத்தினைப் பெற்றுக் கொண்டிருந்தான். அவனது வாழ்வின் நோக்கம் முழுமையடைந்துவிட்டது; நிறைவேறிவிட்டது. ஒரு விதமான பெரு மகிழ்ச்சியில் அவன் நீடித்தான். ஒரு கால எல்லைக்குப் பிறகு அவனுடைய கதை சொல்லிகள் சிலர் வருடங்களாகக் கணக்கிடுகிறார்கள், பிறர் பாதிப்பத்து வருடங்களாக மதிப்பிடுகிறார்கள். ஒரு நள்ளிரவில் இரண்டு தோணி ஓட்டிகளால் விழிப்படைந்தான். அவர்களின் முகங்களை அவனால் பார்க்க முடியவில்லை, ஆனால் அவர்கள் வடக்குப் பகுதியில் இருந்த மந்திரமனிதன் ஒருவன் தீக்கிரையாகாமல் நெருப்பின் மீது நடப்பது பற்றி அவனிடம் சொன்னார்கள். மந்திரவாதி திடீரென்று அந்தக் கடவுளின் வார்த்தைகளை நினைவுக்கொண்டான். உலகின் படைப்புயிர்கள் அனைத்திலுமே, நெருப்புக்கு மட்டும் தான் அவன் மகன் ஒரு ஆவி என்று தெரியும் என்பதை நினைவு கூர்ந்தான். ஆரம்பத்தில் ஆறுதலாக இருந்த இந்த நினைவு கூறல், அவனை இறுதியில் வதைப்பதில் முடிந்தது. இந்த வினோதச் சலுகைப் பற்றி அவன் மகன் யோசனை செய்யக் கூடும் என்றும் அச்சப்பட்டான். ஏதோ வகையில் தான் வெறும் தோற்றமே என்ற தனது நிலையை எப்படியாவது கண்டு பிடித்து விடுவான்.

மந்திரவாதி தன் மகனின்-ஆயிரத்து ஒரு இரவுகளின் வியாபகத்தில் அங்கம் அங்கமாய், சாயல் சாயலாய் சிந்தனையில் வார்த்தெடுத்த மகனின் எதிர்காலம் பற்றி மந்திரவாதி கவலை கொள்வது இயல்பே.

இந்தப் பதற்றங்களின் முடிவு திடீரென வந்தது. ஆனால் சில குறிப்பிட்ட சகுனங்கள் இதை முன் கூறின. முதன் முதலில் ஒரு நீண்ட வறட்சிக்கு பிறகு, ஒரு மலை முகடின் உச்சியில் இருந்த தூரத்து மேகம் ஒரு பறவை அளவுக்கு லேசாகவும் விரைவாகவும் தெரிந்தது; அடுத்து, தெற்கு வானின் நிறம், சிறுத்தைப் புலியின் ஈறுகளை ஒத்த ரோஜா நிறத்தை அடைந்தது. அதன் பிறகு, இரவின் உலோகத்தினை துருப்பிடிக்கச் செய்த தூண்களென அடர்ந்த புகை; இறுதியாக கானகத்து விலங்குகளின் தலைதெறிக்கும் பெரும் பீதி. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் என்ன நடந்ததோ அது இப்போது நடந்தது. நெருப்புக் கடவுள் கோயிலின் சிதிலங்கள் நெருப்பால் அழிக்கப்பட்டன. பறவைகளற்ற விடியலில் நெருப்பின் சுழலும் விரிப்புகள் சுவர்களைச் சூழ்வதை மந்திரவாதி பார்த்தான். ஒரு கணம், நதியில் தஞ்சம் அடையலாம் என நினைத்தான். ஆனால் மரணம் அவனது வருடங்களுக்கு கிரீடமிடும் பொருட்டும், அவனது சிரமங்களில் இருந்து விடுதலை அளிக்கவும் வருகிறது என்று உணர்ந்தான். உயர்ந்து கிளம்பும் நெருப்பின் பிழம்புகளின் உள்ளாக நடந்தான். அவனது சதைக்குள் ஊடுருவதற்குப் பதிலாக அவை அவனை வருடி, சூடோ, தகித்தலோ இன்றி அவனை விழுங்கின. ஒரு ஆசுவாசத்தில், தன்னடக்கத்தில், பெரும் பீதியில், அவன் புரிந்து கொண்டான் தானுமே வேறு எவரோ ஒருவர் கனவு கண்டுகொண்டிருந்ததின் ஒரு தோற்றமே என்பதை.

horizontal-line21

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: