The Approach to Al-Mutasim-Jorge Luis Borges-தமிழில் பிரம்மராஜன்

Approach to Al-Mutasim-Jorge Luis Borges

Approach to Al-Mutasim-Jorge Luis Borges

அல் முட்டாசிம்: ஓர் அணுகல்/ ஜோர்ஜ் லூயி போர்ஹஸ்-தமிழில்

பிரம்மராஜன்

ஜோர்ஜ் லூயி போர்ஹஸ்

அல் முட்டாசிம்: ஓர் அணுகல்

பாம்பே பாரிஸ்டரான மீர் பஹதூர் அலி எழுதிய The Approach to A1-Mutasim என்ற நாவலைப் பற்றி Philip Guedella நமக்குத் தெரிவிக்கிறார்: ““அதன் மொழிபெயர்ப்பாளர்களை ஈர்க்கவே தவறாத இஸ்லாமிய தொடர் உருவகங்கள் மற்றும் டாக்டர் வாட்சனின் கதைகளையும் மிஞ்சக் கூடிய துப்பறியும் கதைத் தன்மையையும் இசகு பிசகாக இணைக்கிறது. இரண்டாவது தன்மை பிரைட்டனின் மிகக் கௌரவமான விடுதிகளில் தென்படக் கூடிய மனித வாழ்வின் பயங்கரங்களையும் மிஞ்சி விடுகிறது”. இவருக்கு முன்பே, வில்கி காலின்ஸ் மற்றும் 12 ஆம் நூற்றாண்டு பாரசீக எழுத்தாளரான பரித் எத்தின் அத்தார் ஆகிய இருவரின் விவரிக்க முடியாத இரட்டைப் பாதிப்பாக பஹதூரின் புத்தகம் இருக்கிறது என சிசில் ராபர்ட்ஸ் விளாசியிருக்கிறார். மிகக் கோபமான மொழியில் சொல்லப்பட்ட போதிலும் Guedella வினுடையது மிகச் சாதாரணமான பிறரின் கருத்துக்களைத் திரும்பச் சொல்லலே ஆகும். நூலின் துப்பறியும் கதை அமைப்பையும் அதன் அடியோட்டமாக இருக்கும் இறைமைத்துவத்தையும் சுட்டும்போது சாராம்சத்தில் இரு புத்தக மதிப்புரையாளர்களும் ஒத்துப் போகின்றனர். இந்த ஒட்டுவீரியத் தன்மை செஸ்ட்டர்டனுடனான ஒருவித உறவினை சந்தேகிக்கவும் வைக்கிறது; எனினும் அத்தகைய பிணைப்பு இல்லை என்பதை நாம் இப்போது கண்டுபிடிக்கலாம்.

The Approach to A1-Mutasim புத்தகத்தில் முதல் பதிப்பு 1923 ஆம் வருடத்தின் இறுதியில் பம்பாயில் வெளியிடப்பட்டது. எனக்கு கிடைத்த தகவலின்படி அந்தப் பதிப்பு நியூஸ்பிரிண்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டது. பம்பாய் நகரவாசி ஒருவரால் எழுதப்பட்ட முதல் துப்பறியும் நாவல் என்பதையும் புத்தகத்தின் கழற்றக் கூடிய அட்டை அறிவித்தது. சில மாதங்களுக்குள் 4 பதிப்புகள்–ஒவ்வொன்றும் 1000 பிரதிகள் விற்றுத் தீர்த்தன. The Bombay Quarterly, Bombay Gazette, Calcutta Review , Hindustani Review (of Allahabad) Culcutta Englishman போன்ற பத்திரிக்கைகள் புத்தகத்தின் புகழ் பாடின. சித்திரங்கள் கொண்ட பதிப்பு ஒன்றையும் பஹதுர் வெளியிட்டார். இந்த பதிப்பு அல்முட்டாசிம் என்ற மனிதனுடனான உரையாடல்’என்ற திருத்திய தலைப்பிடப்பட்டு A Game With Shifting Mirrors என்ற அழகிய துணைத்தலைப்புடன் வெளிவந்தது. இந்த பதிப்பைத்தான் லண்டனில் உள்ள Victor Gollancz என்ற வெளியீட்டு நிறுவனம், Dorothy L.Sayers இன் முகவுரையுடன் மறுவெளியீடு செய்தது. கருணைமிக்க வகையில் இந்த வெளியீட்டில் சித்திரங்கள் இடம் பெறவில்லை. இந்தப் பதிப்புத்தான் என் வசமிருக்கிறது. இதன் முந்தைய பதிப்பின் பிரதியை என்னால் பெறுவதற்கு இயலாமல் போய்விட்டது. அது நல்ல புத்தகம் என்ற கணிப்பு எனக்கு உண்டு. எனக்கு ஏற்பட்ட இந்த சந்தேகத்திற்கு காரணம் 1932 மற்றும் 1934ம் வருஷங்களின் பதிப்புகளின் வித்தியாசங்களை தொகுத்துத் தந்த அனுபந்தமே. நாவலை பற்றிய விவாதத்தைத் தொடங்கு முன் பொது கதைக் திட்டம் பற்றிய ஒரு வித தெரிவிப்பினைத் தருவது நல்லதாக இருக்கும்.

நாவலின் பிரதான பாத்திரம்–பெயர் நமக்குச் சொல்லப்படுவதே இல்லை–அவன் பம்பாயில் சட்டம் பயிலும் மாணவன். தெய்வநிந்தனை கொண்ட அவன் அவனது முன்னோரின் இஸ்லாமிய நம்பிக்கைகளை சந்தேகிக்கிறவனாக இருக்கிறான். எனினும் முஹரம் காலத்து பத்தாவது நிலா இரவில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான கலவரத்தின் மத்தியில் இருக்கிறான். அது மேளங்கள் மற்றும் பிரார்த்தனைகளின் இரவு. நம்பிக்கையற்ற ஜனங்களுக்கு இடையில் முஸ்லிம் ஊர்வலத்தின் பெரிய காகித விதானங்கள் வழி ஏற்படுத்திச் செல்கின்றன. ஒரு மாடியின் மேலிருந்து இந்துக்கள் வீசிய சரமாரியான செங்கற்கள் பறந்து வந்து விழுகின்றன. ஒரு கத்தி ஒரு வயிற்றில் செருகப்படுகிறது– யாரோ? முஸ்லிமா? இந்துவா?–சாகிறான். செத்தவனை மிதித்துச் செல்கிறது கும்பல். மூவாயிரம் மனிதர்கள் சண்டையிடுகிறார்கள்–ரிவால்வரை எதிர்த்து தடி, சாபத்திற்கு எதிராக கெட்டவார்த்தை, கடவுள் என்ற பிரிவுபடாத ஒருவருக்கு எதிராக பல கடவுள்கள். உள்ளுணர்வின் தூண்டுதலால் மாணவ சுதந்திர சிந்தனையாளன் சண்டையில் கலந்து கொள்கிறான். அவனது வெறுங்கைகளால் ஒரு இந்துவை கொன்று விடுகிறான். (அல்லது கொன்று விட்டதாக நினைக்கிறான்) குதிரை மீதமர்ந்து, இடி முழக்கத்துடன், ஏறத்தாழ தூக்கக் கலக்கத்துடன், பாரபட்சமற்ற சவுக்கடிகளைக் கொடுத்து அரசாங்க போலீஸ் தலையிடுகிறது. குதிரைகளின் கால்களுக்கிடையில் இருந்து தப்பித்து, மாணவன் நகரின் மறுகோடியை நோக்கிச் செல்கிறான். இரண்டு ரயில் பாதைகளைக் கடக்கிறான். அல்லது ஒரே பாதையை இரண்டு தடவை. பராமரிக்கப்பட்டிராத ஒரு தோட்டத்தின் சுற்றுச்சுவர் மீதேறிக் குதிக்கிறான். தோட்டத்தின் ஒரு மூலையில் சுழல் கோபுரம் எழும்பி நிற்கிறது. “மெலிந்த, தீவினை மிக்க நிலாநிறத்து வேட்டை நாய்களின் கும்பல்” கறுப்பு ரோஜாப் புதர்களில் இருந்து அவனை நோக்கிப் பாய்கிறது. துரத்தப்பட்ட அவன் கோபுரத்தில் தஞ்சமடைகிறான். இரண்டு அல்லது மூன்று குறுக்குச் சட்டங்கள் இல்லாத இரும்பு ஏணியில் ஏறி கோபுரத்தின் மட்டத்தரையை அடைகிறான். அதன் மத்தியில் அமைந்திருக்கும் கரிய பள்ளத்திற்கு வருகிறான். நிலா ஒளியில் அங்கு குந்திய நிலையில் தீவிரமாக சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் அழுக்கான மனிதனைப் பார்க்கிறான். பார்ஸி இனத்தவர் அந்த கோபுர தளத்தில் விட்டுச் செல்லும், வெள்ளை கோடித்துணியால் மூடப்பட்ட பிணங்களில் இருந்து தங்கப் பற்களைத் திருடுவது அவனது தொழில் என்று அந்த மனிதன் இவனிடம் கூறுகிறான். பலவித நிஷ்டூரமான விஷயங்களைக் குறிப்பிட்டுச் செல்கையில், அவன் தன்னை எருமைச் சாணி கொண்டு சுத்தப்படுத்தி பதினான்கு இரவுகள் ஆகிவிட்டன என்றும் கூறுகிறான். ‘ “நாய்களையும், பல்லிகளையும் தின்கிற–சுருக்கமாக நம் இருவரைப் போலவே வெறுக்கத் தக்க மனிதர்கள்”’ என்று குஜராத்தைச் சேர்ந்த, குதிரைகளைக் களவாடுகிற திருடர் கூட்டத்தைப் பற்றி வெளிப்படையான கோபத்துடன் கூறுகிறான். பொழுது விடிகிறது. உண்டு பெருத்த பிணந்தின்னிக் கழுகுகள் காற்றில் தாழப்பறக்கின்றன. அதீதமான களைப்பில் மாணவன் படுத்து உறங்கிப்போகிறான். அவன் கண்விழித்துப் பார்க்கையில் சூரியன் உச்சியில் இருக்கிறது. திருடன் போய் விட்டுருக்கிறான். மாணவனின் திருச்சிராப்பள்ளி சுருட்டுகளும் பல வெள்ளி ரூபாய்களும் இருப்பதில்லை. முந்தைய இரவின் நடப்புகளினால் பயமுறுத்தப்பட்ட மாணவன் இந்தியாவின் எல்லைகளுக்குள் தன்னை இழக்கத் தீர்மானிக்கிறான். தன்னால் ஒரு தெய்வநம்பிக்கை அற்றவனைக் கொல்ல முடியும் என்பதையும் உணர்கிறான். ஆனால் அவனது நம்பிக்கைகளின் மூ
லம் தெய்வ நம்பிக்கை இல்லாதவனை விட ஒரு முஸ்லிம் எந்தவகையில் நியாயபடுத்தப்பட்டவன் என்பதை தீர்மானத்துடன் அவனால் அறிய முடியவில்லை. குஜராத் என்ற பெயர் அவனில் அலைபாய்கிறது. அவ்வாறே, பிணங்களை சேதப்படுத்தும் அந்த மனிதனின் வெறுப்புக்கும் வசவுக்கும் ஆளான பாளன்பூரை சேர்ந்த மல்கா–சான்சி (திருடர் இனத்தைச் சேர்ந்த பெண்)யின் பெயரும் அவனை ஆக்ரமிக்கிறது. அவ்வளவு முற்றான தீவினையுடைய மனிதனின் கோபமானது அதன் அடிப்படையிலேயே ஒருவித புகழ்ச்சி ஆகுமென மாணவன் காரணப்படுத்துகிறான். நம்பிக்கை இல்லாதிருந்தும் அவளைக் கண்டுபிடிக்க முடிவெடுக்கிறான். தொழுகை செய்த பிறகு நிதானமாகவும் திட்டமிட்டும் தனது பயணத்தைத் தொடங்குகிறான். இவ்வாறு முடிகிறது நாவலின் இரண்டாம் அத்தியாயம்.

மற்ற பத்தொன்பது அத்தியாயங்களில் அவன் ஈடுபடும் துணிகரச் செயல்களை கோடிட்டுக் காட்டுவது சாத்தியமில்லை. கதாபாத்திரங்களின் எண்ணிக்கையில் பெருகும் குழப்பம் திகைக்க வைக்கிறது. இந்தியாவின் விரிந்த நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரை மற்றும் மனித மனதின் விஸ்தீரணத்தையே தீரச்செய்யும் ஒரு வாழ்க்கைச் சரிதம் ஆகியவை பற்றிச் சொல்லவே வேண்டாம். பம்பாயில் தொடங்கிய கதை பளான்பூரின் தாழ்நிலங்களுக்குச் செல்கிறது. காட்மாண்டுவில், குழப்பும் வழிகளைக் கொண்ட மாளிகையில் சதித்திட்டம் ஒன்றில் கதாநாயகன் பங்கு பெறுகிறான். கல்கத்தாவில் மச்சுவா பஜாரில், பெருநோயின் நாற்றத்தில் பிரார்த்திக்கிறான், புணர்கிறான். மதராசின் சட்ட அலுவலகம் ஒன்றிலிருந்து கடலில் உதயமாகும் நாளைப் பார்க்கிறான். திருவாங்கூர் சமஸ்தானத்து பால்கனியில் இருந்து சாயுங்காலங்கள் கடலில் மாய்வதை பார்க்கிறான். தடுமாறி இந்தாப்பூரில் கொலை செய்கிறான். “நிலா நிறத்து வேட்டை நாய்களின்” தோட்டத்திற்கு சில அடிகளுக்கு அப்பால் பம்பாயில் தொடங்கிய இந்த துணிகரச்செயலின் மைல்கள் மற்றும் வருஷங்களின் ஆரம் முற்றுப் பெறுகிறது. அடியோட்டமான கதைத் திட்டம் இதுதான்: ஒரு மனிதன்–சுதந்திர சிந்தனையுள்ள மாணவன் நமக்கு முன்னரே தெரிந்த, மிகவும் தாழ்ந்த ஜாதி மக்களுடன் பழகி, தீவினை செய்வதில் போட்டி மாதிரி தெரியும் காரியத்தில், அவர்களுடைய வழிகளை மேற்கொள்கிறான். மணலில் ஒரு மனிதனின் காலடித் தடங்களைக் கண்டுபிடித்த ராபின்சன் குரூசோ அடைந்ததற்கு இணையான வியப்புடனும் பீதியுடனும் தனது குரூர உலகில் திடீரென ஒரு குறுகிய விழிப்புணர்வைப் பெறுகிறான். ஒருவித மன நெகிழ்வையும், சந்தோஷ கணத்தையும், மன்னிக்கும் மௌனத்தையும் தனது வெறுக்கத்தக்க சகாக்களிடம் காண்கிறான். “அது ஏதோ ஒரு அந்நியன், ஒரு மூன்றாம் மனிதன், நுணுக்கமானதொரு ஆள், அந்த உரையாடலில் கலந்து விட்டது போலத் தோன்றியது.”:’தன்னுடன் பேசிக்கொண்டிருக்கும் கேடி, இப்பேர்ப்பட்ட திடீர் மாற்றத்திற்குத் தகுதியற்றவன் என்பதை அறிகிறான் கதாநாயகன். இதன் மூலமாய் அந்த கேடி ஒரு நண்பனையோ அல்லது நண்பனின் நண்பனையோ அல்லது வேறு எவரையோ எதிரொலிக்கிறான் என யூகிக்கிறான். பிரச்சனையை மீண்டும் சிந்தித்து, இந்த பூமியின் முகத்தில் எங்கோ இந்த ஒளிக்கு நிகரான மனிதன் வாழ்கிறான்’என்ற மர்மமான முடிவுக்கு வருகிறான். அந்த மனிதனைத் தேடுவதில் தனது வாழ்க்கையைச் செலவழிக்கத் தீர்மானம் செய்கிறான் மாணவன்.

கதையின் கோட்டுருவம் இப்போது தெளிவாகிறது. இந்த ஆன்மாவினால் பிறர்களில் வீசப்பட்ட அதிகம் புலனாகாத பிரதிபலிப்புகளைத் தேடும் ஒரு சலிப்பற்ற மனித ஆன்மாவின் தேடல்–ஆரம்பத்தில் புன்முறுவலின் மெல்லிய நகல் அல்லது ஒற்றைச்சொல்; இறுதியில் நேர்மைத்தன்மையுடையதும், அறிவார்த்தத்தினுடையதும்,கற்பனையுடையதுமான பிரமிக்கவைக்கும் மாறுபாடுகளும் கிளைபிரிதல்களும். அவர்கள் யாவருமே கண்ணாடிகள் என்பது புரிந்து கொள்ளப்பட்டிருந்த போதிலும் .அல்முட்டாசிமினால் சோதிக்கப்படுகிற மனிதர்கள் எவ்வளவு நெருங்கி வருகிறார்களோ அந்த அளவுக்கு தெய்வீகத்தில் அவர்களுடைய பங்கு அதிகமாகும்–ஒரு கணிதவியல் ஒப்புமை இங்கு பிரயோஜனமாக இருக்கும். பஹதூரின் கதைமாந்தர் நிறைந்த நாவல் ஒருநிலை எண் படிமுறை வளர்ச்சியாகும் ( Ascendant Progression ). அதனுடைய கடைசி எண்ணுறுக்கூறு “அல்முட்டாசிம் என்று அழைக்கப்படும் மனிதனில்”’ கோடிகாட்டப்படுகிறது. அல்முட்டாசிமின் மிகச் சமீப சந்ததியைச் சேர்ந்தவர் விசேஷ மகிழ்ச்சியும் பணிவும் நிறைந்த ஒரு பாரசீக புத்தக வியாபாரியும் புனிதரும் ஆவார். இறுதியாக, பல ஆண்டுகள் கழித்து மாணவன் ஓரிடத்தை அடைகிறான். காரிடாரின் முடிவில் மலிவான மணிகளுடன் கூடிய திரைச்சீலைக்குப் பின்புறம் வெளிச்சம் ஒளிர்கிறது. மாணவன் இரண்டு அல்லது மூன்று முறை கைகளைத் தட்டி அல்முட்டாசிம் எங்கே என்று கெட்கிறான். ஒரு மனிதனின் குரல்–கற்பனையே செய்வதற்கரிய அல்முட்டாசின் குரல்–உள்ளே வரச்சொல்லி வேண்டுகிறது. திரைச்சீலையை விலக்கி மாணவன் முன்னால் அடி எடுத்து வைக்கிறான். இந்த இடத்தில் நாவல் முடிந்துவிடுகிறது.

நான் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை எனின், கதைக் கட்டுமானத்தின் சரியான கையாளல் நாவலாசிரியனை இரண்டு கட்டாயங்களுக்கு உட்படுத்துகிறது. தீர்க்கதரிசனத்தன்மைகளுடன் அடர்ந்து பெருக வைப்பது ஒன்று. இவ்விதமான வீச்சுகளினால் முன்பாகவே கோடிகாட்டப்படும் நபரானவர் வெறும் சம்பிரதாயம் அல்லது ஆவி என்பதற்கு அப்பாற்பட்டவர் என நம்மை நம்ப வைப்பது இரண்டாவதாகும். பஹதூர் முதலாவதினைப் பூர்த்தி செய்கிறார். எவ்வளவு தூரத்திற்கு இரண்டாவதினை சாதிக்கிறார் என்பது தெரியவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கேட்கப்பட்டிராத, பார்க்கப்பட்டிராத அல்முட்டாசிம், ஒரு நிஜமான கதாபாத்திரத்திற்கு உரிய மனப்பதிவுகளை நம்மிடத்தில் விட்டுச் செல்ல வேண்டுமே தவிர சாரமற்ற உயர்ச்சொற்களின் உடைசல்களை அல்ல. 1932ஆம் வருஷப் பதிப்பில் சில மந்திரத்தன்மையான அடித்தளங்கள் உள்ளன. சில தனிமனிதக் குணாம்சங்கள் அவனுக்கு இருந்த போதிலும்‘“அல்முட்டாசிம் என்று அழைக்கப்படும் மனிதன்” வெளிப்படையான ஒரு குறியீடு. சில தனிமனிதத் தன்மைகள் இல்லாமலும் இல்லை. துரதிர்ஷ்டவசமாய் இந்த இலக்கிய நன்னடத்தை தொடர்ந்து நீடிப்பதில்லை. 1934ஆம் வருஷப் பதிப்பில் நாவலானது உருவகக் கதையாகச் சரிந்து விடுகிறது. அல்முட்டாசிம் கடவுள் என்றும், கதாநாயகனின் பல்வேறுபட்ட நாடோடித் தன்மைகளும் ஏதோ ஒரு வகையில் புனிதமான சங்கமத்தை நோக்கிய ஆன்மாவின் மேல்நோக்கிய பயணம் என்றும் தெரிகிறது. வருத்தமளிக்கக் கூடிய சில தகவல்களும் இருக்கின்றன: கொச்சினைச் சேர்ந்த ஒரு கருப்பு யூதன், அல் முட்டாசிமினுடைய கருப்பு சருமத்தை பற்றிப் பேசுகிறான். கைகளை விரித்தபடி அவன் உயரத்தில் நிற்பதாக ஒரு கிறிஸ்தவன் விவரணை செய்கிறான். ஒரு சிவப்பு லாமா, “நான் தாச்சில்ஹன்போவில் உள்ள பிக்குகளின் இல்லத்தில் “காட்டெருமையின் வெண்ணையில் வடிவமைத்து வழிபட்ட உருவத்தைப் போல” அல் முட்டாசிம் அமர்ந்திருப்பதாக நினைவு கூறுகிறான். பலவிதங்களில் வேறுபடும் மனித இனத்துடன் தன்னை சமரசப்படுத்திக் கொள்ளும் ஒரே ஒரு கடவுளை இந்த சொற்பாடுகள் யாவும் உணர்த்துவதாகத் தோன்றுகிறது. என் கருத்துப்படி, இந்த கருத்து அப்படி ஒன்றும் விருவிருப்பூட்டுவதாய்த் தெரியவில்லை.

இன்னொரு கருத்துரு பற்றி நான் அப்படிச் சொல்ல மாட்டேன்–பேரிறைவன் யாரோ ஒருவனைத் தேடிக் கொண்டிருக்கிறான், அந்த யாரோ ஒருவன் தனக்கு மேலான யாரோ ஒருவனை (அல்லது வெறுமனே தவிர்க்க இயலாத சரிநிகரான ஒருவனை) இப்படியாக, காலத்தின் இறுதி வரை (அல்லது முடிவின்மை வரை) ஒரு வேளை சுழற்சித் தன்மையிலும் கூட . . . அல் முட்டாசிம் (இப்பெயர் அந்த எட்டாவது அப்பாஸித் காலிஃப்பினுடையது. அவர் எட்டு போர்களில் வெற்றி பெற்று, எட்டு மகன்களையும் எட்டு மகள்களையும் பெற்றெடுத்து, எட்டு வருஷங்கள், எட்டு நிலவுகள், எட்டு நாட்கள் ஆட்சி புரிந்து, எட்டாயிரம் அடிமைகளை விட்டுச் சென்றவர்) என்றால், வேர்ச்சொல் அர்த்தப்படி ““உதவியை நாடிச் செல்பவர்” என்பது பொருள். 1932ஆம் வருஷப் பதிப்பின்படி புனித யாத்திரையின் நோக்கமே புனித யாத்ரீகரான அவரேதான் என்கிற உண்மை, அவரைக் கண்டடைவதில் உள்ள சிரமத்தினால் நன்றாக நியாயப்படுத்தப்படுகிறது. பிறகு வந்த பதிப்பானது நான் முன்னரே குறிப்பிட்ட புராதன இறையியலைத் தருகிறது. இருபதாவது அத்தியாத்தில் அல் முட்டாசிமுக்கு சொந்தமான சொற்கள் என அந்தப் பாரசீக புத்தக வியாபாரி கூறுவது, கதாநாயகனால் பேசப்பட்டவற்றின் வெறும் உயர்ச்சிப்படுத்தலே ஆகும். இதுவும், உள்தொக்கி நிற்கும் பிற ஒப்புமைகளும் தேடுபவனுக்கும், தேடப்படுவதற்குமான அடையாளங்களாக ஆகலாம். இவை இறைத்துவத்தின் மீதான மனிதனின் பாதிப்புகளைச் சொல்வதாகவும் இருக்கலாம்… மாணவன் தான் கொன்று விட்டதாய், நம்பிக் கொண்டிருக்கிற ஹிந்துவே அல் முட்டாசிம்தான் என மற்றொரு அத்தியாயம் குறிப்பு உணர்த்துகிறது. மீர் பஹதூர் அலி கலையின் அடிமட்டமான சபலமான மேதையாய் இருப்பது பற்றிய சுயப்பிரக்ஞையைத் தவிர்க்க முடிவதில்லை.

இந்தப் பக்கங்களைப் படித்ததற்குப் பிறகு, நான் இந்த நாவலின் பல நல்ல குணாம்சங்களுக்குக் கவனத்தை கோராமல் விட்டு விட்டேனோ என அஞ்சுகிறேன். அவற்றில் நுண்மையான சில வேறுபடுத்திக் காட்டும் பண்புகள் அடங்கும். பத்தொன்பதாவது அத்தியாயத்தில் ஒரு உரையாடல் வருகிறது. அல் முட்டாசிமின் நண்பன் வேறு ஒருவனிடம் பேசிக்கொண்டிருக்கிறான். “வெளிப்படையாகவே சரியின் பக்கம் இருக்க வேண்டாம் என்பதன் பொருட்டு”’அந்த வேறு ஒருவனின் வார்த்தை விளையாட்டுகளை சுட்டிக் காட்டாமல் இருக்கிறான்.

சமீப காலத்தில் நவீன நூல் ஒன்றின் வேர்கள் புராதன நூல் ஒன்றில் இருப்பது பாராட்டுதற்கு உரியதாய்க் கருதப்படுகிறது. ஏன் என்றால் (Dr. ஜான்சன் கூறியது போல ) எவருமே தமது சமகாலத்தவர் ஒருவருக்குக் கடன் பட்டிருப்பதை விரும்புவதில்லை. ஹோமரின் Odyssey க்கும் ஜாய்சின் Ulysses க்கும் இடையே உள்ள பல, ஆனால் மேலோட்டமான உறவுகளை சில விமர்சகர்கள் பாராட்டுவது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியாது. பஹதூரின் நாவலுக்கும், பிரசித்தமான பரீத் உத்தீன் அத்தாரின் Parliament of Birds நூலுக்கும் இடையே உள்ள தொடர்புப் புள்ளிகள் இதே அளவு ஏற்புகளை லண்டன், அலகாபாத் மற்றும் கல்கத்தாவில் உண்டாக்கி இருக்கிறது. என் அறிவுக்கு எட்டிய வரை இந்த இரு நூல்களுக்கும் இடையே உள்ள தொடர்புப் புள்ளிகள் அதிகமில்லை. பிற தோற்றுவாய்கள் இருக்கின்றன. யாரோ ஒரு பேரார்வக்காரன் நாவலின் தொடக்க அத்தியாயத்திற்கும் Kipling இன் கதையான On the City Wall க்கும் இடையே உள்ள சில ஒற்றுமைகளைப் பட்டியலிட்டிருக்கிறான். பஹதூர் இதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் முஹரத்தின் பத்தாவது இரவினைப் பற்றிய இரண்டு விவரணைகள் ஒன்றுக்கொன்று வேறுபடுமானால் அது முரணாகத்தெரியும் என பஹதூர் வாதிடுகிறார். முற்றுப் பெறாத உருவகக் கதைப் பாடலான The Faerie Queen இல் உள்ள எழுபது கேண்டோப் பாடல்களிலும் அதன் கதாநாயகி குளோரியானா ஒரு முறை கூடத் தோன்றாமல் இருப்பது எலியட்டின் நினைவுக்கு வந்திருப்பது பொருத்தமாய் இருக்கிறது– இந்தத் தவறினை ஏற்கனவே Richard William Church (Spenser, 1879) சுட்டிக் காட்டியிருக்கிறார். நான் மிகுந்த பணிவுடன் ஒரு தூரத்து, ஆனால் சாத்தியமிக்க முன்னோடியான, ஜெருசலத்தைச் சேர்ந்தகப்பாலிஸ்ட் ஆன ஐசக் லூரியாவை இங்கு குறிப்பிடுகிறேன். இந்தப் பதினாறாம் நூற்றாண்டு ஆசிரியர் ஒரு கருத்தை முன் வைக்கிறார்: துயரங்களை அனுபவித்த ஒருவரைத் தேற்றவோ அல்லது அறிவுறுத்தவோ அவருடைய முன்னோர் அல்லது எஜமானரின் ஆவி அவருடைய ஆவியில் புகுந்துவிடும். இவ்வகைப்பட்ட கூடுவிட்டு கூடுபாயும் ஆன்ம நிகழ்வுக்கு இபுர் என்பது பெயராகும். «

« இந்த புத்தக மதிப்புரையின் ஊடே பாரசீக மெய்ஞானியான பரீத் உத்தீன் அபு தாலிப் மொகம்மது இபின் இப்ராகிம் அத்தார் எழுதிய The Parliament of Birds என்ற நூல் பற்றிக் குறிப்பிட்டேன். நிஷாபூரின் மீது தாக்குதல் தொடுத்தபோது செங்கிஸ்கானின் புதல்வர்களில் ஒருவரான தூலுய் என்பவரின் வீரர்களால் அவர் கொல்லப்பட்டார். அவர் எழுதிய கவிதையின் பொழிப்புரையைத் தருவது உபயோகமாக இருக்கும்.பறவைகளின் தொலை தூரத்து அரசனான சிமுர்க் தனது அற்புதமான இறகுகளில் ஒன்றினை மத்திய சீனப் பிரதேசத்தில் எங்கோ ஓரிடத்தில் போடுகிறார். இதைக் கேள்விப்பட்ட, தமது யுகாந்திர அராஜகத்தினால் சலிப்படைந்த பறவைகள் தமது அரசனை கண்டுபிடிக்கத் தீர்மானிக்கின்றன. அரசனின் பெயருக்கு அர்த்தம் முப்பது பறவைகள்” என்பது அவற்றுக்குத் தெரிகிறது. பூமியை வளையமிடும் காஜ் என்கிற மலைத் தொடர்ச்சியில் அரசனின் கோட்டை அமைந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. ஏறத்தாழ முடிவற்ற வீரச் செயல்களில் தொடங்கி, ஏழு சமவெளிகள் அல்லது கடல்களைக் கடந்து பேரழிவு’என்று பெயருள்ளதற்கு முந்தைய பெருந்திகைப்பு’என்ற இடத்திற்கு வந்து சேர்கின்றன; பல கை விட்டு ஓடிவிடுகின்றன; இதில் பல பறவைகள் இறக்கின்றன. தமது துயரங்களால் தூய்மைப்படுத்தப்பட்ட முப்பது பறவைகள் சிமுர்க்கின் மலை உச்சியை அடைகின்றன. கடைசியில் அவனுடைய தரிசனம் கிடைக்கிறது. அவைதாம் சிமுர்க் என்பதையும், ஒவ்வொருவரும் மொத்தமாகவும் அனைவருமாகவும் சிமுர்க் என்பதையும் அறிகின்றன. (Plotinus என்பவர் [Enneads, V, 8, 4) மேலும் கூறுகிறார். “ஒரு தெய்வீக அடையாளத் தத்துவத்தின் விரிவாக்கம் பற்றி: எல்லா புரிந்து கொள்ளப்படக்கூடிய சொர்க்கங்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. எந்த ஒரு பொருளும் எல்லாப் பொருள்களும் ஆகும். சூரியனே எல்லா நட்சத்திரங்கள் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரமும் மற்ற எல்லா நட்சத்திரமும் சூரியனும் ஆகும்.”) Mantiq Ut Tair அல்லது Parliament of Birds பிரெஞ்சு மொழியில் Garcin de Tassy என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் Edward Fitzgerald ஆவார். இந்த அடிக்குறிப்புக்காக Burton எழுதிய Arabian Nights இன் 10 வது தொகுதியும் Margaret Smith இன் ஆய்வான The Persian Mystics: Attar (1932) என்ற நூலும் எனக்கு உதவி இருக்கின்றன.

Translated by Norman Thomas di Giovanni in Collaboration with the author

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: