போர்ஹேவின் விநோத விலங்குகள் (A Review of Jorge Luis Borges’s Book of Imaginary Beings :Brammarajan)

bkpicturejlb

போர்ஹேவின் விநோத விலங்குகள்

(A Review of Jorge Luis Borges’s Book of Imaginary Beings :Brammarajan)

பிரம்மராஜன்

“தத்துவத்தின் வரலாற்றிலிருந்து ஒரு காட்சிப் பொருளைப் பற்றி நான் விவாதிக்கவில்லை.” –போர்ஹே

பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரையிலான உலக இலக்கிய வரலாற்றில் அகராதிகள் பெரும் ஈர்ப்பினை படைப்பாளிகளுக்கு அளித்து வந்திருக்கின்ற விஷயம் உறுதிப்படுகிறது. ஆங்கிலத்தின் முதல் அகராதித் தொகுப்பாளர் அல்லது லெக்ஸிகோகிராபர் (Lexicographer) டாக்டர் சாமுவெல் ஜான்சன். கவிஞர், விமர்சகர். கடும் சிரமங்களுக்கிடையியே தனி ஆளாக அவர் ஆங்கிலத்தின் முதல் அகராதியைத் தொகுத்தார். அகராதியின் மூலம் இலக்கிய உலகில் பிரபலம் மட்டுமடையவில்லை, சர்சைக்குரியவராகவும் ஆனவர் டாக்டர் ஜான்சன்.  21 ஆம் நூற்றாண்டில் ராபர்ட்டோ கலோஸோ (Roberto Calasso)என்கிற இதாலியர் ஏறத்தாழ அகராதி வடிவில் புனைகதை எழுதுபவராக இருக்கிறார். ஏற்கனவே மிலோரட் பாவிக் என்பவரின் காஸார்களின் அகராதி (Dictionary of the Kazars) அகராதி வடிவ  பின் நவீனத்துவ புதினம் பற்றிய சிறிய சலசலப்புகள் தமிழ் இலக்கிய உலகில் ஏற்பட்டிருக்கின்றன. ராபர்ட்டோ கலாஸோ இன்று கிரேக்கப் புராணிகத்தை புனைகதையளவுக்கு நிறைவு தரும்படி (The Marriage of Cadmus and Harmony) எழுதுவதற்கும் அவரது மிகச் சமீப நூலான “கா” (Ka)வில் இந்தியப் புராணிகத்தை புனைவளவுக்கு எழுதியிருப்பதற்கும் ஆதர்ச முன்னோடி ஜோர்ஜ் லூயி போர்ஹேவாகத்தான் இருக்க முடியும்.

இந்த சமயத்தில் இது வரை அதிகம் கவனிப்பிற்கு உள்ளாகாதிருக்கும் போர்ஹேவின் புத்தகமான கற்பனை விலங்குகளின் நூல் (The Book of Imaginary Beings )பற்றி இங்கு விவாதிப்பது பொருந்தும்.  ஒரு புதின எழுத்தாளருக்கு அகராதியையோ அல்லது நிகண்டையோ தொகுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வியை எழுப்பிக் கொள்வோமானால் போர்ஹேவின் காஸ்மாபொலிட்டன் கலாச்சாரம் நம் நினைவுக்கு வரும். அப்படி வந்தாலும் அது போதிய நிறைவளிப்பதாக இருப்பதில்லை. கட்டற்று விரியும் பல் உலகப் புராணிகக் கதைகளை ஒரு அமைவுக்குக் கொண்டுவரும் செயல்பாட்டில் அவர் தன் அறிவுச் சேகரத்திற்கே ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டினையும் ஒழுங்கினையும் கொண்டு வர முயலும் யத்தனம் தெரிகிறது. மேலும் The Universal History of Infamy என்ற சிறுகதைத் தொகுதியுமே கூட ஒரு விதமான அகராதித்தன்மை நிறைந்ததாய்த்தான் காணப்படுகிறது.

போர்ஹேவின் விலங்குப் பிரபஞ்சத்தில் நிஜ விலங்குகளை விட கற்பனை விலங்குகளுக்கே அதிகப் பிரதானம் தரப்பட்டிருக்கிறது. மேலும் இந்த விலங்குகள் பற்றிய அகராதிக் குறிப்புகள் பெரும்பாலும் கதைகளின் வடிவில் அமைந்திருக்கின்றன.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் அனுபந்தத்தைப் படிப்பது போலிருக்கிறது “உலுப்பி” பற்றிய குறிப்பு. மகாபாரதக் கதையில் அர்ஜ÷னன் தீர்த்த யாத்திரையின் போது கங்கையில் இறங்கி நீராடிக் கறையேறித் திரும்பும்  பொழுது உலுப்பி என்ற நாக கன்னிகை அவனைப் பற்றி இழுத்து அவன் அவளைப் புணர்ந்து மகிழ்விக்க வேண்டுமென்கிறாள். பிரம்மச்சரிய விரதத்திலிருக்கும் தான் எப்படி அவ்வாறு செய்ய இயலுமென்று அர்ஜூனன் கேட்கிறான். அவனது விரதமும் கெடாமல் அவள் விருப்பமும் பழுதுபடாமல் காரியமாகும்படியான உபாயத்தைச் சொல்லச் சொல்லி கேட்கிறான் அர்ஜூனன். அவளைப் புணர்ந்து காமநோயிலிருந்து அவளை ரட்ஷிப்பதென்பதும் ஒரு தர்மம் ஆதலால் அவனது விரதம் கெடாது என்கிறாள் உலுப்பி. அதற்கிணங்கி அன்றிரவு அவளுடன் கழித்து இரவாந் என்கிற மகனையும் அவளிடத்தில் பிறப்பித்துச் செல்கிறான். (மகாபாரதம்-அத்தியாயம்.234). இதில் போர்ஹே கொடுக்காத ஒரே ஒரு தகவல் உலுப்பி மற்றும் அர்ஜூனன் ஆகிய  இருவருக்குப் பிறந்த குழந்தையின் பெயர் மாத்திரம்தான்.

தனிமையில், ஒரு அத்தி மரத்தடியில் புத்தர் தியானத்திலிருந்த சமயம் அவரை புயலும் மழையும் வலு கொண்டு தாக்கின. அவரைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு நாகம்(ர்) தன் உடலைக் கொண்டு ஏழு மடக்கு அணைப்பின் மூலம் அவரைச் சுற்றி அரண் அமைத்ததையும் தன் ஏழு தலைகளைக் கொண்டு அவருக்கு குடையளித்ததையும் கண்ட புத்தர் அந்த நாகரைத் தன் நம்பிக்கையின் வழிக்கு மாற்றுகிறார். நாகர்கள் மேகங்களையொத்த பாம்புகள். அவர்கள் பாதாள லோகத்து அரண்மனைகளில் வசிப்பவர்கள். புத்தர் மனிதர்களுக்கு ஒரு வித அறங்களையும் இன்னொரு விதமான அறங்களை கடவுளர்களுக்கும் போதித்ததாக நம்பப்படுகிறது.  இரண்டாவதாய்ச் சொல்லப்பட்ட ரகசியச் சட்டங்கள் சொர்க்கத்திலும் நாகர்களின் அரண்மனைகளிலும் பாதுகாக்கப்பட்டிருந்தன. நாகர்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடு இவற்றை பின்னர் வந்த பிக்குவான நாகார்ஜூனனுக்கு வெளிப்படுத்தினர்.  அசோகர் கண்டு இடித்துக் கட்ட நினைத்த மற்றொரு நாகர் அரண்மனை பற்றியும் அங்கே அவர் சந்தித்த பிராமணனுடனான உரையாடலும்  பதிவாக்கப்பட்டிருக்கிறது. நாகர்கள் பற்றிய இந்தக் கதைகளும் குறிப்புகளும் ஒரே ஒரு பக்கத்தில் போர்ஹேவால் சொல்லப்பட்டிருக்கிறது.

கீழை நாடுகள் போர்ஹேவின் மனதில் ஒரு அகலாத ஆக்கிரமிப்பைச் செய்து வந்திருக்கின்றன.  அவற்றில் எகிப்து, இந்தியா, மற்றும் சீனா ஆகிய நாடுகள் பிரத்யேகமானவை. கீழை நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உரையாடல் போர்ஹேவைப் பொருத்தவரை திருப்தியற்றதாய் இருக்கிறது. சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட மஞ்சள் பட்டுத் துணியால் ஆன புத்தக பைண்டிங் ஒன்றினைத் தொட்டுணர்ந்த கவிஞர் வர்ஜில் அந்த விச்ராந்தியான சீன நாட்டினை கற்பனை மட்டுமே செய்தார். இது தவிர பிளினி எழுதிய இயற்கை விஞ்ஞானம் என்ற நூலில் சீனா பற்றியும், பாரசீகம் பற்றியும், போரஸ் மன்னன் ஆட்சி செய்த இந்தியாவைப் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன. பிறகு சிலுவைப் போர்களில் பங்கேற்க வந்தவர்கள் தங்களின் நினைவுகளாக எடுத்துச் சென்ற கீழை நாடுகளின் மனப்பதிவுகள். இதற்கடுத்து மார்க்கோ போலோ. 1704 ஆம் ஆண்டில் ஆயிரத்து ஒரு இரவுகளின் முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்ட பின், ஐரோப்பிய இலக்கியத்தின் ரொமாண்டிக் இலக்கிய காலகட்டத்தின் பொழுது மீண்டும் கீழை நாடுகள் மேற்கு நாடுகளின் பிரக்ஞையை ஆக்கிரமிக்கின்றன. இதில் குறிப்பிடப்பட வேண்டிய இரண்டு பிரதான  இலக்கிய ஆசிரியர்கள்   கவிஞர் பைரன் மற்றும் விக்டர் ஹியூகோ ஆவர்.

போர்ஹேவைப் பொருத்தவரை ஆயிரத்து ஒரு இரவுகள் மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்டது எல்லா ஐரோப்பிய இலக்கியங்களுக்கும் ஒரு முக்கிய இலக்கிய நிகழ்வாகும். ஆயிரத்து ஒரு இரவுகள் எழுதியவர் ஒரே ஒரு ஆசிரியராக இருக்க முடியாது. அது பலருடைய கூட்டு இலக்கிய இணைவாகத்தான் இருக்க முடியும். ஆயினும் அந்தத் தனித்தனி ஆசிரியர் எவருமே தான் ஒரு உன்னதமான புத்தகத்தின் கட்டுமானத்தில்  உதவுவதாக நினைத்திருக்க மாட்டார். போர்ஹேவே குறிப்பிடுகிற மாதிரி ஆயிரத்து ஒரு இரவுகள் கீழைநாடுகளை விட மேற்கு நாடுகளிலேயே அதிகம் சிலாகிக்கப்பட்டு ஏற்கப்பட்டிருக்கிறது. ஆயிரத்து ஒரு இரவுகள் ஒரு எல்லையற்றதும் முடிவற்றதுமான புத்தகம். அதில்தான் இருக்கிறது அதன் தீராத வசீகரம்.

வருட வரிசையியலும்,வரலாறும் முக்கியமான இரண்டு மேற்கத்திய கருத்துருவாக்கல்கள் அல்லது கண்டு பிடிப்புகளே. இந்தியத் தத்துவ வரலாறுகளையோ, சீன இலக்கிய வராலாறுகளையோ, பாரசீக இலக்கிய வரலாறுகளையோ நாம் பார்க்க முடியாதென்கிறார் போர்ஹே.

பாதி விலங்கு பாதி மனிதன், விலங்கு மற்றும் பறவையினங்கள் பிணைந்த பின்னப் பிணைப்பு, கனிமமாகயிருந்து உயிரியாகி விலங்காகும்  உருவ மாற்றம், மனித இனத்தை வெறுத்தழிக்கும் வன் உயிரிகள், தத்துவவாதி இமானுவெல் ஸ்வீடன்போர்க் என்பவரால் கற்பனை செய்யப்பட்ட மிருகம், பறவைகளின் பேரரசரான சிமுர்க், தன் சாம்பலிலிருந்தே மீண்டும் சுயசிருஷ்டி செய்து கொள்ளும் ஃபீனிக்ஸின் ஆதியாகமம், சிறுத்தை பற்றி லியோனார்டோ டாவின்சி உருவாக்கி யிருந்த படிமம், விலங்குமல்லாத தாவரமுமல்லாத இரண்டும் கெட்டானான மாண்ட்ரேக் வேர், யூத அசுரர்கள், இப்படியாக இந்த சிறு நூல் வெளிக் கொணரும் தகவலடுக்குகளும் அவற்றின் வாயிலாக வெளிக்கொணரப்படும் கதைகளும், புராணிகங்களும் தமிழ்ப் புனைகதையாளர்களால் எழுதப்பட்டிருப்பின் பல தொகுதிகளும் ஆயிரக்கணக்கான பக்கங்களும் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும். வெறும் 157 பக்கங்களில் இந்த விநோத விலங்கியல் (Fantastic Zoology) போர்ஹேவுக்கு சாத்தியமாகியிருக்கிறது.

தகவல் தொகுப்பின் வகைப்பாட்டியலில் அகர வரிசை பின்பற்றப்பட்டிருப்பினும் காலங்களையும் தேசங்களையும் இடைவெட்டிச் செல்லும் இந்நூலை வேண்டிய போது படித்து விட்டு வைத்து விடலாம். புராணிகங்கள் உலக மதங்களையும் உள் இழுத்துக் கொள்வது போர்ஹேவைப் பொருத்தவரை பெரிய ஆச்சரியமில்லை. ஏனெனில் போர்ஹேவின் கடவுளாகப்பட்டவர் பிரிவுபடாத  ஒருவர். அந்தக் கடவுள் இன்னும் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்.

இந்த இடத்தில் யேசுகிறிஸ்துவை இணைக்கும் இரண்டு பதிவுக் குறிப்புகளை நினைவு கூர்வது பொருந்தும். பெலிகன் மற்றும் சிறுத்தை ஆகிய அடுத்தடுத்த பதிவுகளாகவும் இவை அமைவதும் ஒரு வித ஒற்றுமைதான். யேசுவை ஒரு சிறுத்தை என்று நவீன ஆங்கிலக் கவிஞர் ட்டி.எஸ். எலியட்  Ash Wednesday என்ற கவிதையில் வர்ணிப்பதை நினைவு கூறி பெலிகன் பறவையாகவும் அவர் தாந்தேவின் ‘இன்ஃபர்னோ’வில் அழைக்கப்பட்டிருப்பதையும் நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார். அதாவது மனிதஇனத்தின் பெலிகன் பறவை. எகிப்திய பறவையான பெலிகன் பற்றி டாவின்சியின் விலங்குலகத்தில் எத்தகைய சித்திரம் உருவாகியிருக்கிறதென்றும் வாசகன் அறிய முடியும். இலக்கியம், வாய்மொழிக் கதைகள், பிளினி(Pliny) போன்றோரின் இயற்கை வரலாறு (Natural History)வால்ட்டர் ஸ்காட்டின்  Demonology and Witchcraft, இவற்றுடன் நோவா வெப்ஸ்டர் மற்றும் ராபர்ட் பர்ட்டன் ஆகியோரின் அவதானிப்புகள் சேரும் போது கிடைக்கும் அடர்த்தி வியக்க வைக்கிறது. போர்ஹேவுடன் இந்த விநோத விலங்கியல் நூலை எழுத உதவிய பெண் எழுத்தாளர் மார்கரிட்டா கெரோரோ என்பவர்.

விஷ்ணுவின் பக்தராக மாறிய ஹீலியோடோரஸ் என்கிற கிரேக்க தேசத்தவரைப் பற்றி பெரும்பாலான இந்துக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கருடன் பற்றிய குறிப்பில் போர்ஹே இதைச் சுட்டிக்காட்டுகிறார். கருடனும் பாதி கழுகாகவும் பாதி மனிதனாகவுமிருப்பதாலேயே போர்ஹேவுக்கு ஆழ்ந்த ஈடுபாடு. கருட புராணம் முழுக்கவும் படித்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிற அளவுக்கு இந்தப் பதிவினை செய்திருக்கிறார். பிரபஞ்சத்தின் தொடக்கங்களையும், விஷ்ணுவின் சூர்ய சாராம்சம் என்னவென்பதையும்,  விஷ்ணு வழிபாடு குறித்தும், சூர்யகுலத்தில் (சந்திர குலத்திலும்) உதித்த மாமன்னர்கள் பற்றியும், ராமாயணத்தின் கதைத் திட்டம் பற்றியும், வேறு சில சாதாரண விஷயங்கள் பற்றியும்–அதாவது இலக்கணம், கவிதைக் கலை, மருத்துவம் இப்படி–கருடன் விஷ்ணு புராணத்தில் எடுத்துரைக்கிறார். கருடன் பற்றிய 17ஆம் நூற்றாண்டின் புத்தமதம் தொடர்பான நாடகமான Mirth of the Snakes  ஐயும் போர்ஹே விட்டு வைக்கவில்லை. ஆனால் இந்த நாடகம் (எழுதியவர் பெயரில்லை) புத்தமதத்தை நையாண்டி செய்வதற்காக ஒரு பிராமணனால் எழுதப்பட்டதாக இருக்கும் என்று போர்ஹே சந்தேகிக்கிறார். நிம்பார்க்கன் என்கிற மறைஞானியின் கூற்றினைப் பொருத்தவரை என்றென்றைக்குமாக விமோசனம ளிக்கப்பட்ட ஒரு ஆன்மாதான் கருடன். கருடன் மனந்திருந்தி தான் தினம் ஒவ்வொன்றாய்க் கொன்று தின்ற பாம்புகளின் எலும்புகளை மீண்டும் உயிர்ப்பிப்பதாக வரும் நிகழ்வுக்குக் காரணம் ஒரு புத்த இளவரசன் கொல்லாமை பற்றி கருடனுக்கு உணரச் செய்வதுதான்.

நிலவின் முயல் என்ற குறிப்பிலும் புத்தர் பற்றி தகவல் வருகிறது. அது சாதாரண முயல்தானெனில் எப்படி நிலவில் இடம் பிடித்திருக்க முடியும்? நிலவின் கலங்கத்தைப் பற்றி ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு கருத்து கொண்டிருந்ததை இலக்கிய வரலாற்றுப் பதிவுகள் காணத் தருகின்றன. நிலவின் நிழல் பற்றி ஷேக்ஸ்பியரின் நாடகமான ஒரு நடுகோடை இரவுக் கனவு என்ற நாடகத்தில் அது ஒரு மனிதன் என்ற மனப் பதிவு ஏற்படும்படியே இரண்டு முன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. தாந்தேவும் மற்றொரு இதாலியருமான டோமாஸோ கேஸினியும் (Tomasso Casini) நிலவின் நிழல் தன்னுடன் ஒரு சுமை முட்களை எடுத்துச் செல்லுமாறு சபிக்கப்பட்ட கெய்ன் என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. லூபோல்டோ லூகோனஸ் (Lupoldo Lugones) தன் காவியத்தில் புனிதக் குடும்பமே (வெள்ளை நிறக் கழுதை உட்பட) நிலவில் இருப்பதாக எழுதியிருக்கிறார். சீனர்கள்தான் முயலுக்குப் புனிதத்துவம் தந்தவர்கள். புத்தர் தன் முற்பிறவிகளில் ஒன்றில் பசியால் வாடியதைப் பார்த்த முயல் தன்னை நெருப்பில் வீழ்த்திக் கொண்டு புத்தருக்கு உணவாயிற்று. இந்த நன்றியை மறவாத புத்தர் முயலின் ஆன்மாவினை நிலவில் சென்று சேரும்படி செய்தார்.

பிரைமோ லெவியின் ‘லிலித்’ (Lilith-[Moments of Reprieve-Primo Levi]) சிறுகதையைப் படித்தவர்களுக்கு போர்ஹேவின் லிலித் குறிப்பு அதிகம் அதிர்ச்சியளிக்காது. (ஆதாமின் முதல் மனைவி லிலித்) ஒரு யூதர் என்ற முதல் நபர் பார்வை மற்றும் அனுபவம் பிரைமோ லெவியின் நம்பகத்தன்மை மிக்க லிலித் கதைக்குக் காரணமாக இருக்கலாம்.

குறிப்பாக இந்த உலகத்தின் கப்பாலிஸ்ட் தன்மையான ஒரு படிமத்தை நம்புவதற்கு முடிகிற அளவுக்கு சில சிறுகதைகளில் பயன்படுத்தினார். இந்த கப்பாலிஸ்டுகளின் மனித இருப்பு குறித்த உச்சமான உருவகம் பற்றி 1914ஆம் ஆண்டு வாக்கிலேயே, போர்ஹே ஜெனிவாவிலிருந்த போதே, குஸ்தாவ் மெரின்க் (Gustav Meyrink )என்பவர் எழுதிய The Golem நாவலைப் படிக்கையில் அவருக்கு தேவையான மனப்பதிவு ஏற்பட்டிருக்க வேண்டும். பிறகு கப்பாலிஸ–யூதப் புலமை வாய்ந்தவரான மாரிஸ் ஆப்ரமோவிச்(Maurice Abramowicz )என்பவருடன் ஏற்பட்ட தொடர்புக்குப் பிறகு இந்த உச்ச உருவகம் முழுமைப் பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த பிரபஞ்சமே ஒரு மஹா புத்தகம். இதில் இடம் பெறுகிற ஒவ்வொரு வஸ்துவும், மனதின் நிகழ்முறைகளும் அர்த்தம் செறிந்தவை. ஆகவே இந்த நம் உலகமானது மாபெரும் எழுத்து. ஸ்தூல யதார்த்தம், வரலாற்றின் தகவல்கள், எவற்றையெல்லாம் மானுடர்கள் சிருஷ்டித்திருக்கின்றனரோ அவை யாவும் முடிவேயில்லாத செய்திகளாகின்றன. நாம் எல்லையற்ற அர்த்தப்பாடுகளின் தொடர்களினால் சூழப்பட்டிருக்கிறோம். கப்பாலாவின் மொழியியல் ரீதியான கருதுகோள்களின் தெரிவிப்புகள், ரகசியமானதும் மூலாதாரமானதுமான பேச்சு ஒன்றை நிஜமாக்கும் சக்தி மிக்கவை. கோளம்(Golem)பற்றிய போர்ஹேவின் அகராதிக் குறிப்பு மேற்குறிப்பிட்ட விதத்திலும், அவரது சிறுகதைகளின் உலகிலும் கூடுதல் அழுத்தம் பெறுகின்றன.

கட்டுரையின் முகப்பு மேற்கோளில் சொல்லியிருக்கிறபடி போர்ஹே தத்துவத்தின் வரலாற்றிலிருந்து ஒரு காட்சிப் பொருளை வைத்து பேசிக் கொண்டிருப்பதில்லை. மாறாக ஒரு அமைப்பானது அதற்குரித்தான ஒரு பயன்படுதன்மையைக் கொண்டுதானிருக்கும் என்று வாதிடுகிறார். இந்த அமைப்பு(கள்), இந்தப் பிரபஞ்சத்தைப் புரிவதற்கு உதவும்.

கப்பாலிஸ்டுகளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகக் கருதப்படும் நாஸ்டிக்குகள் ஒரு தீர்மானிக்கப்பட முடியாத இறைவனைப் பற்றிய கருத்தை முன் வைத்தனர். மகத்தான இறைத்துவத்தின் சாதாரண, எளிய அவதாரங்கள் இருக்க முடியும். இந்த அவதாரங்கள் மகத்தான இறைத்துவத்துடன் ஒப்பிடுகையில் மலினமானவை என்று கருதப்பட வேண்டியிருக்கிறது. நம்முடைய இந்த உலகம் அந்த மகத்தான இறைவனால் அல்லாது அவரின் பிரதி அவதாரங்களில் ஒருவரால்தான் படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஷோப்பன்ஹர்(Schopenhaever)கூறியது போல குற்றம் மன்னன் மேலில்லை, நிர்வாகத்தை நடைமுறைப் படுத்தும் மந்திரிகள் மேல்தான் இருக்கிறது. இந்தக் கருத்துருவாக்கலின் மூலமே நம்மால் இவ்வுலகில் நிறைந்திருக்கும் தீவினைகளுக்கு சப்பைக் கட்டு கட்ட முடியும்.இறையியல்வாதிகள் பொதுவாகச் செய்யும் நியாயப்படுத்தல் என்னவென்றால் தீவினை என்பது முரண்எதிர் நிலையில் இருப்பது. அதாவது நல்வினையின் இல்லாமை. ஆனால் இந்த வாதம் பொய்மையாய்த் தெரிகிறதென்கிறார் போர்ஹே. ஸ்தூல உடம்பின் வலியானது இன்பத்தை விட விளக்கமானது. லெவியத்தான் என்னும் அரக்க மிருகத்தை பற்றி விரிவாக பழைய வேதாகமம் சொல்கிறது. பெஹிமாத் என்பதற்கு வேர்ச்சொல் அர்த்தம் பல மிருகங்கள் என்பதாகும்.  லெவியத்தான் என்பது முதலை மற்றும் திமிங்கிலம் ஆகிய இரண்டும் இணைந்துருவாகிய ஒரு மிருகம் என தோற்றம் தருகிறது. இவ்விரு விலங்குகளும் எப்படி மனிதனால் புரிந்து கொள்வதற்கு முடியாதவையாக இருக்கின்றனவோ அங்ஙனமே பேரிறைவன் மனிதனால் அளக்கப்பட முடியாதவனாக இருக்கிறான். பெஹிமாத்(பக்: 31–32), ஜோபின் புத்தகம் என்ற பழைய வேதாகமத்தில் குறிக்கப்பட்டிருப்பினும் அது கிறித்தவ சகாப்தத்திற்கு நான்கு நூற்றாண்டுகள் முற்பட்டது. எபிரேய மூலச் சொல் ‘பல விலங்குகள்’ என்று பொருள்படுகிறது.

இந்தியப் புராணிகங்களின் மானஸ புத்திரர்களுக்கும், யூதர்களின் ‘கோளம்’களுக்கும் ஒரு சம்மந்தமிருப்பதால் மீண்டும் கோளம் பற்றிய குறிப்பிற்கு வருவோம். யூத முதன்மைப் பாதிரி ஒருவர் கடவுளின் நாமாவளிகளைக் கண்டு பிடித்துக் கொண்டாலோ அல்லது கற்றுக் கொண்டு பிறகு மனித வடிவில் செய்யப்பட்ட களிமண் பிரதிமை மீது அதை உச்சரித்தாலோ அது உயிர் பெற்று ஒரு கோளமாக ஆகிறது.

இந்த பரம்பரைக் கதைகளில் ஒன்றில் உண்மையைக் குறிக்கும் இமெட் (EMET)என்ற யூதச் சொல் ஒரு கோளத்தின் நெற்றியில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த கோளம் வளர்கிறது. அதன் எஜமானனால் தொட முடியாத அளவு உயரமாக வளர்ந்து விடுகிறது. எஜமானன் அவனுடைய பூட்சுகளின் நாடாக்களைக் கட்டிவிடச் சொல்லி கோளத்திடம் ஆணையிடுகிறான். கோளம் குனியும் சயமத்தில் அதன் நெற்றியில் உள்ள எழுத்துக்களில் இ(E)என்ற எழுத்தை அழித்து விடுகிறான். மிச்சமிருக்கும் மூன்று எழுத்துக்களான மெட்(MET)என்பதன் அர்த்தம் மரணம். கோளம் மண்ணாகிப் போகிறது. (“The Kabbalah”, in Seven Nights, Jorge Luis Borges, Faber& Faber,(1987), pp.95-106). கோளம் மிகச் சரியாக ஒரு மனிதன் கிடையாது. ஒரு மாதிரியான மங்கலான, பாதி பிரக்ஞையுள்ள தாவர வஸ்துதான். 23 ஃபோலியோ தொகுதிகளால் ஆன நூல்களிலிருந்து பெறப்பட்ட 221 நுழைவாயில் எழுத்துக்கள் பற்றிய அறிவினைப் பயன்படுத்தியும் ஒரு கோளத்தை உருவாக்கலாம். இந்த எழுத்துக்கள் கோளத்தின் ஒவ்வொரு அங்கத்தின் மீதும் உச்சாடனம் செய்யப்பட வேண்டும். Eleazar of Worms என்பவர் தரும் ரகசிய சூத்திரமாகும் இது. (கோளம்: பக் 71–73) இந்தத் தகவல்களைத் தெரிந்து கொண்ட பின் போர்ஹவின்  வட்டச் சிதிலங்கள் கதையைப் புரிந்து கொள்வது எளிமையாக இருக்கும்.

பெஹிமாத்தின் புகழ் அரேபிய தேசத்தை எட்டிய போது அவர்கள் அதிலிருந்து மாற்றியமைக்கப்பட்ட ஒரு விலங்கினைப் படைத்தார்கள். அதன் பெயர் பஹாமுத். நீர் யானை அல்லது யானை போன்றோ இருந்தது இப்போது ஆழம் காண முடியாத கடலில் மிதக்கும் ஒரு மீனாக மாறிவிடுகிறது. மீனின் முதுகின் மேல் ஒரு எருதினை வைத்தனர். பிறகு எருதின் மீது ஒரு ரூபி மலையை வைத்தனர். மலையின் மீது ஒரு தேவதூதனை. தேவதூதன் மீது ஆறு நரகங்களை. நரகங்களின் மீது பூமி வைக்கப்பட்டது. மலையின் மீது ஏழு சொர்க்கங்கள் வைக்கப்பட்டன. அளவிடற்கரிய உருவத்தினைக் கொண்ட பஹாமுத்தின் கண்ணைக் குருடாக்கும் ஒளி மனிதர்கள் தாங்க முடியாதது. இந்த உலகத்தின் சகல சமுத்திரங்களும் இந்த மீனின் ஒரு நாசித் துளையில் வைக்கப்பட்டால் அது பாலைவனத்தில் வைக்கப்பட்ட ஒரு கடுகினைப் போலிருக்கும். அராபிய இரவுகளின் 496வது இரவில் சொல்லப்படும் ஒரு கதையை போர்ஹே திரும்பச் சொல்கிறார். “இஸா” என்றழைக்கப்படும் யேசு கிறிஸ்துவுக்கு பஹாமுத் விலங்கைப் பார்க்க சந்தர்ப்பம் வருகிறது. விலங்கினைக் கண்ணுற்று மயக்கமடைந்து தன் நினைவு திரும்புவதற்கு இஸாவுக்கு மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

பிரபஞ்சத்தின் கிரகங்கள் யாவுமே உயிர்த்தன்மை மிகுந்த விலங்குகள் என்ற அசாத்திய மனிதக் கருத்துருவத்தின் தந்தை பிளாட்டோதான். இந்த உலகம் மாத்திரமல்ல, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் போன்றவையுமே வாழும் உயிரிகள் என்று பிளாட்டோ அவருடைய Laws (898)  நூலில் அறிவித்தார். மறுமலர்ச்சிக் காலத்தில் லூசியோ வானினி என்பவர் சொர்க்கம் ஒரு உயிருள்ள விலங்கென்று கூறியதையும், கியோர்டனோ பூரோனோ கிரகங்கள் யாவுமே சாதுவான, சண்டையை விரும்பாத விலங்குகள் என்று அவதானித்ததையும் நம் நம்ப வேண்டியிருக்கலாம். 17 ஆம் நூற்றாண்டு ஜெர்மானிய வானவியல் அறிஞரான ஜோஹன்னஸ் கெப்லருக்கும் ஆங்கில மறைஞானியான ராபர்ட் ஃபிளட் என்பவருக்கும் இடையே நடந்த விவாதங்களும் சுவாரஸ்யமானவை.

நூறு தலைகள் என்ற அகராதிக் குறிப்பில் போர்ஹே மீண்டும் சீன பௌத்தத்திற்குத் திரும்புகிறார். இதில் கப்பிலன் என்னும் புத்த பிக்குவைப் பற்றிய கதை இடம் பெறுகிறது. ஒரு சமயம் மீனவர்கள் இழுக்க முடியாமல் இழுத்து மிகுந்த பிரயத்தனத்திற்குப் பிறகு ஒரு அசுர மீனை கரைக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர். அது மீன் அல்ல. மாறாக நூறு தலைகள். ஒன்று மனிதக் குரங்கினுடையதாகவும், மற்றொன்று பன்றியினுடையதாகவும், இன்னொன்று புலியினுடையதாகவும்–இப்படி நூறு தலைகள். புத்தர் அந்த விலங்கினை நோக்கி இப்படி ஒரு கேள்வி கேட்கிறார். “நீ கப்பிலன்தானே?” “ஆம்”, என்று கூறி விட்டு அந்த விலங்கு இறந்து போகிறது. இதன் பிறகு புத்தர் தன் சிஷ்யர்களுக்கு கப்பிலனின் முற்பிறவி பற்றிய கதையைச் சொல்கிறார். பிராமணனாக இருந்து பின் புத்த பிக்குவான கப்பிலனுக்கு பௌத்த மறை நூல்களில் இருந்த அறிவு மிக ஆழமானது மட்டுமன்றி எவராலும் மிஞ்சுவதற்கரியதாயிருந்தது. இருப்பினும் கப்பிலனின் சக சிஷ்யர்கள் ஒரு சொல்லை தவறாகப் படித்த பொழுது மனிக் குரங்குத் தலையனென்றும், நாய்த் தலையனென்றும் அவர் வசைபாடியதால் அவருடைய இறப்புக்குப் பிறகு அவருடைய அவமானச் சொற்களின் கர்மவினையின் விளைவாக அவர் நூறு தலைகளாகப் பிறப்பெடுத்தார். கர்ம வினைகளின் பயன் பற்றிய சாதாரண பௌத்தக் கதை இது.

The King of  Fire and his Steed மற்றும் The Kraken ஆகிய இரண்டு பதிவுகளும் கவிதைகளை மேற்கோள் காட்டும் இலக்கியக் கலைக் களஞ்சியங்களை நினைவூட்டுகின்றன. இவ்விரு பதிவுகளிலும் கதை சொல்வது தவிர்க்கப்பட்டிருப்பது கவனத்திற்குரியது.

ஒரு மரத்தில் பறவைகள் வந்தமர்கின்றன. பறவைகள் பறந்து போகா வண்ணம் மரம் அவற்றைப் பிடித்து உறிஞ்சிக் கொன்று விடுகிறது. அதற்குப் பிறகு வரும் வசந்த காலத்தில் அந்த மரம் இலைகளுக்குப் பதிலாக சிறகுகளை வளர விடுகிறது. இது ஏதோ ‘திகில்’ காட்சி போலத் தோன்றினாலும் ஜி.கே.செஸ்ட்டர்டன் என்கிற ஆங்கில நாவலாசிரியர் எழுதிய கதையில் வரும் ஒரு நிகழ்ச்சி. விலங்குப் பிரஞ்சத்திற்கும் தாவர உலகத்திற்கும் நெருக்கமான உறவினை உண்டாக்கக் கூடிய வேறு சில குறிப்புகள் மாண்ட்ரேக் வேர் மற்றும் பாரோமெட்ஸ் என்கிற ‘காய்கறி ஆடு’ ஆகும். பாரோ மெட்ஸ் ஆட்டைப் போல வடிவமுள்ள ஒரு தாவரம். நான்கு அல்லது ஐந்து வேர்களின் சார்பில் நிற்கிறது. இதை ஓநாய்கள் விரும்பிச் சாப்பிடுகின்றன. இதன் தாவர சாரம்  ரத்தத்தைப் போலிருக்கிறது.

வேதாகம காலத்திலிருந்தே மாண்ட்ரேக் வேரைச் சுற்றி நிறைய கதைகள் உலவி வந்திருக்கின்றன. மாண்ட்ரேக் பற்றி ஆங்கில நாடகாசிரியர் மற்றும் கவிஞரான வேஷக்ஸ்பியர் தனது நாடகத்தில் (Romeo and Juliet)குறிப்பிடுகிறார். இதுவும் பாதித் தாவரமாகவும் பாதி மனிதனாகவும் இருந்ததற்கு இலக்கியத்தில் அத்தாட்சிகள் உண்டு. பொதுவாக மாண்ட்ரேக் வேரை பூமியிலிருந்து பிடுங்கி எடுப்பது பற்றி பயன்படுத்துவோர் கையேடு போல சிலர் எழுதியிருக்கின்றனர். பூமியிலிருந்து பிடுங்கப்படும் போது அது ஒரு மனிதனைப் போலக் கூக்குரலிடும் என்ற குறிப்பு இரண்டு மூன்று ஆவணங்களில் காணப்படுகிறது. பாதி மனிதத்தன்மைக்குக் காரணம் இல்லாமலில்லை. மாண்ட்ரேக் வேரானது தூக்கிலிடப்படும் மனிதன் உயிர் பிரியு முன் வெளியேற்றும் விந்துத் துளிகள் நிலத்தில் வீழ்ந்து அதிலிருந்து உருவாவதான ஒரு புராதன மூடநம்பிக்கை நிலவி வந்திருக்கிறது. (தாமஸ் ப்ரௌன்-Pseudodoxia Epidemica 1646) அப்படிப்பட்ட ஒரு மனிதனிலிருந்து சேகரிக்கப்பட்ட விந்து ஒரு பரத்தைக்கு செலுத்தப்படுகிறது. அவள் ஒரு அழகிய பெண்ணைப் பெற்றெடுக்கிறாள். இதை பதினெட்டாம் நூற்றாண்டில் Hans Heinz Ewers என்பவர் Alraune(1913) என்ற நாவலில் எழுதியிருக்கிறார். மானிட வடிவம் கொண்டதாய் மாண்ட்ரேக் வேர் இருப்பதாக பித்தாகரஸ் எழுதியிருக்கிறார். ரோமானிய மண்ணியல் ஆய்வாளர்(Agronomist) லூசியஸ் காலுமெல்லா அதை அரைþமனிதன் என்று சொன்னார். பிறப்புறுப்புகளைப் பிரித்தறியுமளவுக்கு மாண்ட்ரேக் மனிதனைப் போலவே இருக்கிறது என்று ஆல்பர்ட்டஸ் மேக்னஸ் குறிப்பிட்டதையும் கவனிக்க வேண்டும். ஆயினும் பிளீனிதான் மாண்ட்ரேக் வேர்களில் வெண்ணிறத்தில் இருப்பது ஆண் என்றும் கறுப்பு நிறத்திலிருப்பது பெண் என்றும் வித்தியாசப்படுத்திச் சொன்னவர். அந்த வேரைப் பிடுங்க விரும்புபவர் அதைச் சுற்றி தன் உடை வாளால் மூன்று வட்டங்களைக் கீறிவிட்டு மேற்கு நோக்கிப் பார்க்க வேண்டும். அதன் இலைகளின் வலுமிக்க வாசனை ஒருவரைப் பேச்சிழக்கச் செய்துவிடும். அதைப் பிடுங்கி எடுக்கத் துணிபவன் பேரழிவுகளைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். ஃபிளாவியஸ் ஜோசப் (Flavius Josephus: History of the Jewish Wars) என்பவர் இதற்கு ஒரு பயிற்றுவிக்கப்பட்ட நாயைப் பயன்படுத்தலாம் என்றார். வேர் பிடுங்கப்பட்ட  உடன் நாய் இறந்து போய் விடும். போதைக்கும் மந்திரத்திற்கும் வேர் பயன்பட்டிருக்கக் கூடும். ஹோமர் எழுதிய ஒடிசி காவியத்திலும் மாண்ட்ரேக் வேர் பற்றிய குறிப்பு உள்ளது.

மனிதனுக்கும் விலங்குக்குமான உறவுகள் பற்றிய ஆக்கிரமிக்கும்  சிந்தனை அது தொடர்பான ஒரு விலங்கினை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்திருக்க வேண்டும். மனிதனும் குதிரையும் இணைந்த ஒரு மனித விலங்கான செண்ட்டார் கிரேக்கப் புராணிகத்தில் முக்கிய இடம் வகித்திருக்கிறது. அவ்வாறே கடல் கன்னிகள் என்றழைக்கப்பட்ட மீன் கன்னிகள் பற்றி உலக இலக்கியங்கள் பலவற்றில் நிலவும் கதைகள் மற்றும் கவிதைகள் ஏராளம். ஆயினும் ஆங்கிலக் கவிஞரான டென்னிசன் மாத்திரமே கைவிடப்பட்ட கடல் மனிதன் பற்றிக் கவிதை எழுதியிருக்கிறார். பாதி மனிதன்-பாதி எருதாக இருந்ததாகக் கருதப்படும் மினோட்டார் மிகவும் பிரசித்தமான ஒரு இலக்கிய கதாபாத்திரம். செண்ட்டார் மற்றும் மினோட்டார் ஆகிய இரண்டு இலக்கியப் பாத்திரங்களைப் பற்றிய குறிப்புகளில் மாத்திரமே கிரேக்கப் புராணிகத்திற்கு முக்கியத்துவமளித்திருக்கிறார் போர்ஹே. மற்றபடி விநோத விலங்குகளை ஆராயும் பொருட்டு உலக இலக்கியத்தில் அதிகம் பேசப்படாத நூல்களை மற்றும் கலாச்சார ஆவணங்களை, மானிட ஆய்வியல் தகவல்களை போர்ஹே தீவிரமான ஆய்வுக்குட்படுத்தி இந்த அகராதியைத் தொகுத்திருக்கிறார்.

போர்ஹே வெறும் சர்வதேசவாதியல்ல. மாறாகப் பிரபஞ்சவாதி. ஆகவேதான் பிரபஞ்சத்தின் அனைத்துக் கலாச்சாரங்களும் அவரது எழுத்துக்களில் ஐக்கியமாகின்றன. சாத்தியமிக்க வேறு உலகங்களின் வடிவத்திற்குள் மறு ஒழுங்கு செய்யும் பொருட்டே அவரது கற்பனையான குறுக்குக் குறிப்புகளையும், கண்டுபிடிக்கப்பட்ட புத்தகத் தலைப்புகளையும், எவருமே எழுதியிராத நூல் தொகுதிகளையும், கற்பனையான இலக்கியவாதிகளையும் (அப்படியா?) உருவாக்கினார் என்பது புரிந்து கொள்ளப்படுதல் அவசியம்.

22

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: