இடாலோ கால்வினோவின் 3 சாகசக் கதைகள்/Adventures of a Clerk, Adventures of a Crook,Adventures of a Married Couple/Translated by Brammarajan

3adventurestories

3adventurestories

இடாலோ கால்வினோவின் 3 சாகசக் கதைகள்/Adventures of a Clerk, Adventures of a Crook,Adventures of a Married Couple/Translated by Brammarajan

ஒரு எழுத்தரின் சாகசம்

இடாலோ கால்வினோ

தமிழில் பிரம்மராஜன்

என்ரிகோ ஜின்னி என்கிற எழுத்தர் ஒரு அழகிய பெண்ணுடன் ஒரு இரவு கழிக்க வேண்டி வந்தது. அதிகாலை, அவளுடைய வீட்டிலிருந்து வெளியே வரும்போது, வசந்த காலத்து விடியலின் காற்றும் வர்ணங்களும் தன் முன்னால் இருப்பதை உணர்ந்தான் ஜின்னி. அது இதமாகவும் தெம்பூட்டு வதாகவும் இருந்தது. அது ஏதோ அவன் சங்கீதத்திற்கு ஏற்ப நடப்பதுபோலிருந்தது.

அதிர்ஷ்டவசமான சந்தர்ப்பங்களின் ஒருமித்த நிகழ்வுதான் இந்த சாகசத்தினை பரிசாக அளித்திருக்கிறது என்பது சொல்லப்பட்டே ஆக வேண்டும்: ஏதோ ஒரு நண்பனின் வீட்டில்  நடந்த விருந்து. ஒரு பிரத்யேகமான சட்டென்று தோன்றி மறையக் கூடிய அந்த யுவதியின் மனோ நிலை–மனதின் விநோத விருப்பங்களுக்கு அடிபணியாதவள், மற்றபடி அந்தப் பெண் கட்டுப்பாடு உடையவள்–அது நிஜமானதோ அல்லது பாசாங்கு செய்யப்பட்டதோ மதுவினால் உந்தப்பட்ட ஒரு லேசான தூண்டல்.  மேலும் இதுதவிர விடை பெறும் நிமிஷத்திய ஒரு சாதகமான கணிப்பியல் திட்டத்தைப்  போன்ற பொருத்தம்: இவை எல்லாமும்  சேர்ந்ததுதான்– ஜின்னியின் தனிப்பட்ட வசீகரம் எதுவுமல்ல. அல்லது ஒரு வேளை, அவனுடைய ஜாக்கிரதையானதும் இன்னாருடையது என்று அடையாளப் படுத்த முடியாததுமான தோற்றம் அவனை அதிகம் நிர்ப்பந்திக்காத ஒருவனாக, தலையீடுகள் இல்லாத உடனிருப்பாளனாக  குறித்திருக்க வேண்டும். இது அந்த இரவின் எதிர்பார்த்திராத விளைவினை உண்டாக்கி  இருக்க வேண்டும். அவன் இது பற்றி எல்லாம் நன்கு உணர்ந்திருந்தான். இயல்பாகவே பகட்டில்லாத அவன் தனது அதிர்ஷ்டத்தை மிகவும் விலைமதிப்பற்றதாகக் கருதினான். இந்த நிகழ்வுக்கு  எந்தத் தொடர்ச்சியும் இருக்காது என்பதையும் அவன் அறிந்திருந்தான். அவன் அதைப்பற்றி புகார் செய்யவுமில்லை. ஏன் எனில் ஒரு நிலையான உறவானது அவனுடைய இயல்பான வாழ்க்கை யோட்டத்திற்கு தர்மசங்கடமான பிரச்சனைகளை உண்டாக்கியிருக்கக் கூடும். ஒரு இரவின் விஸ்தீர்ணத்தில் தொடங்கி முடிந்ததில்தான் அந்த சாகசத்தின் முழுமை இருந்தது. ஆகவே என்ரிகோ ஜின்னி அன்று காலையில் உலகத்திடமிருந்து எதை மிகவும் விரும்பியிருக்க முடியுமோ, அதைப் பெற்று விட்ட மனிதனாக இருந்தான்.

அந்த  யுவதியின்  வீடு  மலை மாவட்டத்தில் இருந்தது. ஜின்னி  ஒரு பச்சை நிற, வாசனை மிகுந்த,  இருமருங்கும் மரங்கள் அடர்ந்த தெருவில் இறங்கி வந்தான். அவன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்குச் செல்லும் வழக்கமான நேரம் இன்னும்  ஆகியிருக்கவில்லை.  வேலைக் காரர்கள்  கவனித்து விடாதபடிக்கு அந்த யுவதி அவனை இப்பொழுது நழுவிச் செல்ல அனுமதித் தாள். அவன் தூங்கவில்லை என்கிற நிஜம் அவனைத் தொந்தரவு செய்யவில்லை. வாஸ்தவத்தில் அது அவனுக்கு இயற்கைக்கு மாறானதொரு தெள்ளிய தன்மையை அளித்தது. இந்த உயிர்ப்பானது புலன்கள் ரீதியானதாய் இல்லாமல் அறிவின் ரீதியானதாய் இருந்தது. காற்றின் ஒரு வீச்சு, ஒரு அடக்கமான இரைச்சல், மரங்களின் வாசனை, ஆகியவை எப்படியோ அவன் கைப்பற்றி அனுபவிக்க வேண்டிய விஷயங்களாகத் தோன்றின. அவன் மீண்டும் தன்னை தாழ்மையான முறைகளில் அழகினை ரசிப்பவனாக பழகிக் கொள்ள முடியாமலிருந்தது.

அவன் முறைமையைக் கடைபிடிக்கிற மனிதனாகையால், ஒரு விநோத வீட்டில் தூங்கி எழுதலும், அவசரமாக உடை யணிதலும், முகச் சவரம் செய்யாதிருத்தலும், அவனுக்குள்  வழக்கங்களைச் சரித்துப் போடப்பட்டதொரு மனப்பதிவினை உண்டாக்கின.  அலுவலகத்திற்குச்  செல்வதற்கு முன் முகச் சவரம் செய்து கொள்வதற்கும் அவனை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும் வேகமாய் வீட்டிற்குப் போய்வந்து விடலாம் என்று ஒரு கணம் நினைத்தான். அவனுக்கு நேரம் இருந்திருக்கும். ஆனால், உடனடியாக ஜின்னி அந்த சிந்தனையை நிராகரித்தான். தாமதமாகி விட்டது என்று அவனை நம்ப வைக்க அவன் தேர்ந்தான்.  காரணம்  அவன்  வீடு மற்றும் தினசரி காரியங்களின் திரும்பச் செய்தல் ஆகியவை அவன் இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் செறிவான, அலாதியான சூழ்நிலைகளை அகற்றி விடும் என்ற பயத்தினால் பீடிக்கப் பட்டிருந்தான்.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு அந்த இரவின் ஸ்வீகரித்தலை தக்க வைத்துக் கொள்ள அவனுடைய நாள் ஒரு தாராளமிக்கதும் அமைதியானதுமான ஒரு உயர் வளைவுக் கோட்டினைப் பின்பற்றும் என்று முடிவு செய்திருந்தான்.  கடந்து சென்ற மணி நேரங்களை அவன் பொறுமையாக மறுகட்டுமானம் செய்ய முடிந்தால், அவன் ஞாபகம், வினாடி அடுத்து வினாடியாக, எல்லையற்ற ஏடன் தோட்டங்களை அவனுக்கு உறுதியளித்தது. இப்படி அவனுடைய சிந்தனைகளைத் திரியவிட்டு, அவசரமின்றி என்ரிகோ ஜின்னி, ட்ராம் வண்டி நிறுத்த நிலையத்திற்குச் சென்றான்.

ஏறத்தாழ காலியாக இருந்த ட்ராம், அதனுடைய தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்காகக் காத்திருந்தது. சில ட்ராம் ஓட்டுநர்கள் அங்கே புகை பிடித்தபடி இருந்தார்கள். அவனுடைய  ஓவர்  கோட்  திறந்து  கொண்டு படபடக்க, மேலே ஏறும் போது விசிலடித்தபடி ஏறினான் ஜின்னி. சற்றே கால்களை விரித்து அமர்ந்தான். பிறகு உடனடியாக  நாகரீகமாய் அமரும் ஒரு நிலைக்கு வந்து விட்டான். உடனடியாகத் தன்னைத் திருத்திக் கொள்ள நினைத்தது பற்றி சந்தோஷப்பட்டுக் கொண்டான். ஆனால் மிக இயல்பான முறையில் வந்துவிட்ட கட்டுப்பாடற்றிருக்கும் அணுகுமுறைக்காக அவன் வருந்தவில்லை.

அண்டைப்பிரதேசம் அதிகமான வீடுகளைக் கொண்டிருக்க வில்லை. மேலும் அதில் வசித்தவர்கள் சீக்கிரம் எழுபவர்களாக இல்லை. மேலே ட்ராமில் முதிய இல்லத்தரசி ஒருத்தியும், சர்ச்சை செய்து கொண்டிருந்த இரண்டு வேலையாட்களும், மனநிறைவுற்ற மனிதனான அவனும் இருந்தார்கள். ஓசைகள், காலை நேரத்து மனிதர்கள். அவர்கள் விரும்பப்படக் கூடியவர்களாக அவனுக்குத் தெரிந்தனர். அவன், என்ரிகோ ஜின்னி அவர்களுக்கு ஒரு மர்மமான கனவானாகத் தெரிந்தான், மர்மமானவன் மற்றும் மனநிறைவுற்றவன். ஆனால் இந்த நேரத்தில் இந்த ட்ராமில் முன்பு எப்போதும் பார்க்கப்பட்டிராதவன். அவன் எங்கிருந்து வருபவனாக இருக்கும்? ஒரு வேளை அவர்கள் தங்களைக் கேட்டுக் கொள்கிறார்கள் போலும் இப்போது. அவர்களுக்கு அவன் ஒரு பிடிமானமும் தரவில்லை. விஸ்டேரியா மலர்களை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். விஸ்டேரியாக்கள் எப்படிப் பார்க்கப்பட வேண்டும் என்பதைத் தெரிந்த ஒரு மனிதனைப் போல் அவன் விஸ்டேரியாக்களைப் பார்க்கிறான், அந்த என்ரிகோ ஜின்னி. டிக்கெட்டுக்கான பணத்தை கண்டக்டரிடம் கொடுத்துவிடும் ஒரு பயணி அவன். அவனுக்கும் கண்டக்டருக்கும் இடையே ஒரு பக்குவமான பயணி-கண்டக்டர்  உறவு  நிலவுகிறது.  இதை  விடச்  சிறந்ததாக  அது இருக்க  முடியாது.  ட்ராம்  நதியை  நோக்கி  நகர்ந்தது. அது ஒரு அற்புத வாழ்க்கையாக இருந்தது.

என்ரிகோ ஜின்னி கீழ்நகரப் பகுதியில் இறங்கிக் கொண்டு ஒரு காபிவிடுதிக்குச் சென்றான். வழக்கமான ஒன்றல்ல அது. மொசைக் சுவர்களைக் கொண்ட ஒரு காபிவிடுதி. அது இப்போதுதான் திறக்கப்பட்டிருந்தது. கேஷியர் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. விடுதியாள் காபி யந்திரத்தை இயக்க ஆரம்பித்தான். ஒரு விற்பன்னனைப் போல ஜின்னி அந்த இடத்தின் மையப் பகுதிக்கு நடந்து சென்று, கவுண்ட்டரை அடைந்து,  ஒரு  காபிக்கு  ஆர்டர் கொடுத்துவிட்டு, கண்ணாடிக் குடுவையில் வைக்கப்பட்டிருந்த இனிப்பு பிஸ்கெட்டைத் தேர்ந் தெடுத்தான். அதைக் கடிக்கும் போது முதலில்  பசியுடனும்  பிறகு  ஒரு  கட்டுப்பாடற்ற இரவுக்குப் பின் வாயில் உண்டாகும் மோசமான நுகர்வை உணர்ந்த மனிதனின் முக வெளிப்பாடும் கொண்டிருந்தான்.

கவுண்ட்டரின் மேல் ஒரு செய்தித்தாள் விரிந்து கிடந்தது. ஜின்னி  அதை  நோட்டம்  விட்டான்.  அவன்  இன்று காலை ஒரு செய்தித்தாளை வாங்கியிருக்கவில்லை. அதைப் பற்றிச் சிந்திக்கும் போது, வீட்டை விட்டு கிளம்பும் முன் அவன் எப்போதும் செய்யும் முதல் காரியம் அதுவாகத்தான் இருக்கும். அவன் ஒரு பழக்கப்பட்ட வாசகன், அதிக கவனமுடையவன், மிகச்  சாதாரண  செய்திகளைக்  கூடப் படித்து வைத்திருப்பவன். படிக்காமல் அவன் எந்தப் பக்கத்தையும் தள்ளி யதில்லை. ஆனால் அன்றைக்கு அவன் பார்வை தலைப்புச் செய்திகள் மீது தாவியது. மேலும் அவனுடைய எண்ணங்கள் தொடர்பற்றுக் கிடந்தன. ஜின்னியால் படிக்க முடியவில்லை: ஒரு வேளை, யாருக்குத் தெரியும்? உணவினாலும் சூடான காபியினாலும் தூண்டப்பட்டோ அல்லது காலைக் காற்றின் மழுங்கடிக்கும் விளைவாலோ தெரியவில்லை, முந்திய இரவிலிருந்து உணர்ச்சிகளின் ஒரு அலை அவன் மீது கவிந்தது. அவன் கண்களை மூடி, முகவாயை உயர்த்தி, பிறகு புன்முறுவல் செய்தான்.

மனதிற்கு இதமான இந்த வெளிப்பாட்டிற்குக் காரணம் செய்தித்தாளில் வந்த விளையாட்டுப் போட்டி பற்றிய  செய்தி என நினைத்த விடுதியாள் அவனிடம் சொன்னான்: “ஓ! போகடேஸ் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை விளையாடுவான் என்பது உங்களுக்கு சந்தோஷம்தானே?” தலைப்புச் செய்தியைச் சுட்டிக் காட்டி ‘சென்ட்டர் ஹாஃ’பில் விளையாடுபவன் மீண்டும் விளையாட வந்திருப்பதைச் சுட்டிக் காட்டினான். ஜின்னி படித்தான். தன்னை சுதாரித்துக் கொண்டான்.  ஆங்! போக்கடேஸை விட அதிகம் சிறப்பான ஒன்று எனக்கு நினைப்பதற்கு இருக்கிறது நண்பனே, என ஆச்சர்யத்தொனி எழுப்புவதை அவன் விரும்பியிருப்பான்: இருப்பினும் அவன் இதை மாத்திரம் சொல்வதற்குத் தன்னை உட்படுத்திக் கொண்டான்: “ம்ம் . . . நல்லது. . .”  மேலும் அவனது உணர்வோட்டத்தை இடையூறு செய்யும்படியாக வரவிருக்கிற விளையாட்டுப் போட்டிகள் பற்றிய உரையாடலை அனுமதிப்ப தற்கு விருப்பம் இல்லாதிருந்தான். அவன் கேஷியரின் மேஜையை நோக்கித் திரும்பினான். அங்கே இதற்கிடையில் ஒரு இளம் பெண் ஈடுபாடற்ற பார்வையுடன் தன்னை இருத்திக் கொண்டிருந்தாள்.

“அப்படியானால்”, ஜின்னி சொன்னான், ஒரு வித நெருக்கமான தொனியில்:  “நான் ஒரு காபிக்கும் பிஸ்கெட்  டுக்கும் உனக்குப் பணம் தர வேண்டும்.” கேஷியர் கொட்டாவி விட்டாள். “தூக்கக் கலக்கமா? மிக சீக்கிரத்திலேயே எழுந்துவிட்டீர்களா?” ஜின்னி கேட்டான். புன்முறுவல் செய்யாமலே தலையை ஆட்டினாள் கேஷியர். “ஆஹா! நேற்றிரவு சரியாகத் தூங்கவில்லை. அப்படித்தானே?” ஒரு கணம் எண்ணிப் பார்த்து விட்டு, பிறகு தான் ஒரு புரிந்து கொள்ளும் நபர் என்று தன்னை நம்ப வைத்து மேலும் கூறினான்: “நான் இன்னும் தூங்கவே போகவில்லை.” பிறகு அவன் மௌனமானான். கவனம் மிகுந்தவனாக, புரிந்து கொள்ளப்பட முடியாதவனாக. அவன் பணம் செலுத்தி விட்டு எல்லோருக்கும் காலை வணக்கம் சொல்லி விட்டுக் கிளம்பினான். பார்பர் கடைக்குப் போனான்.

“காலை வணக்கம் சார். அமருங்கள் சார்.” வேலைபூர்வமான உச்சஸ்தாயிக் குரலில் சொன்னான் முகச் சவரம் செய்பவன். அது என்ரிகோ ஜின்னிக்கு ஒரு கண் சிமிட்டலைப் போலிருந்தது.

“ம்ம், ம்ம், எனக்கு முகச் சவரம் செய்து விடு,” ஒரு  சந்தேகிக்கும் தாராளத்தனத்துடன், தன்னை நிலைக் கண்ணாடியில் பார்த்தபடி பதில் அளித்தான். அவனுடைய கழுத்தில் சுற்றப்பட்ட துண்டுடன் அவன் ஒர சுதந்திரமான பொருளாகத் தோன்றினான். அவனது பொதுவான உடல் இயங்கு முறையினால் இனியும் சரி செய்யப்படாதிருந்த களைப்பின் சில சுவடுகள் வெளித் தெரியத் தொடங்கின. சூதாட்டத்தில் சீட்டுக்களுடன் ஓர் இரவினைக் கழித்த சூதாட்டக் காரனுடையதைப்  போலவோ,  காலையில்  ரயிலில் இருந்து இறங்கிய பயணியினுடையதைப் போலவோ அவன் முகம் இன்னும் சாதாரணமாகவே தெரிந்தது.  அவனுடைய களைப்பின்  தனித் தன்மையைக் குறிப்பிட்டுக் காட்டிய ஒரு தோற்றத்தைத் தவிர–ஜின்னி கவனித்தான் அலட்டிக் கொள்ளாமல்–ஒரு வித சாவதானமான, தன்போக்கிலான தோற்றம், தனக்கான விஷயங்களில் அவனுக்கான பங்கினைப் பெற்றுக் கொண்டுவிட்ட மனிதனைப் போன்று.  மேலும் அவன் நல்லதையும் கெட்டதையும் சமமாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தான்.

மிக வேறுபட்ட வருடல்கள்–ஜின்னியின் கன்னங்கள் அவற்றை வெதுவெதுப்பான நுரையில் உறையிட்ட பிரஷ்ஷிடம் சொல்வது போலத் தோன்றியது–உன்னுடையதிலிருந்து மிக வேறுபட்ட வருடல்கள்–அவைகளுக்குத்தான் நாங்கள் பழக்கப்பட்டிருக்கிறோம்.

சுரண்டு கத்தியே சுரண்டு–தோல் சொல்வது போலத் தோன்றியது–நான் எதை உணர்ந்தும் தெரிந்தும் கொண்டேனோ அதை உன்னால் சுரண்டிவிட முடியாது.

ஜின்னியைப் பொருத்தவரை, அவனுக்கும் சவரம் செய்பவனுக்கும் இடையே மறைகுறிப்புகள் நிறைந்த உரையாடல் நடைபெறுவது போலத் தோன்றியது. மாறாக சவரம்  செய்பவன் மௌனமாக, தன் கருவிகளைக் கையாள்வதில்  தன்னை  ஈடுபடுத்திக்  கொண்டிருந்தான்.  அவன் இளம் நாவிதன். பேச்சு வளர்க்காதவன். ஒரு விநோதமான குணாம்சத்தில் என்பதை விட அதிகமும் கற்பனை இல்லாத காரணத்தினால்.  நிஜத்தில்  ஒரு  உரையாடலைத்  தொடங்க முயற்சி  செய்து  அவன்  கூறினான்:  “ஏதோ  இந்த  வருஷம்.  ம். . . நல்ல  சீதோஷ்ண  நிலை. ஏற்கனவே வந்துவிட்டது  வசந்தம். . .”

இந்தக் குறிப்பு வார்த்தைகள் ஜின்னியை அவனுடைய கற்பனை உரையாடலின் மையத்தில் போய் சந்தித்தன. மேலும் வசந்தம் என்ற சொல் ஒரு மறைமுகக் குறிப்பீடு நிறைந்ததாய், அர்த்தங்களால் சக்தி பெற்று நின்றது: “ஆஹா. வசந்தம். . .” என்றான் அவன். எல்லாம் தெரிந்த ஒரு புன்முறுவல் அவனது நுரை மூடிய உதடுகளில் தோன்றிற்று. இங்கே உரையாடல் காலியானது.

ஆனால் பேச வேண்டும் என்ற தேவையை உணர்ந்தான் ஜின்னி.  வெளிப்படுத்த, பரிமாற்றம் செய்ய. இதற்கடுத்து நாவிதன்  எதையும்  சொல்லவில்லை.  இரண்டு  அல்லது  மூன்று தடவைகள் ஜின்னி வாயைத் திறக்கத் தொடங்கிய பொழுது அந்த இளைஞன் சவரக் கத்தியை உயரத் தூக்கினான். அவனால்  எந்த  வார்த்தையையும்  கவனிக்க  முடியாததால், மீண்டும்  சவரக்  கத்தி  உதட்டின்  மீதும்  முகவாயின்  மீதும் வந்தது.

ஜின்னியின் உதடுகள் அசைவதைப் பார்த்த நாவிதன் “நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டான் உதடுகளில் இருந்து எந்த சப்தமும் வராததால்.

தன் முழு கதகதப்பையும் கூட்டி ஜின்னி சொன்னான்: “ஞாயிற்றுக்கிழமை போகடேஸ் மீண்டும் விளையாட்டுக் குழுவுடன் திரும்பி வருவான்.”

அவன் ஏறத்தாழ சத்தமாகக் கத்திவிட்டான். அவனை நோக்கி மற்ற வாடிக்கையாளர்கள் தங்களின் பாதி சோப்பு நுரை தோய்க்கப்பட்ட முகங்களைத் திருப்பினர். நாவிதனின் சவரக்கத்தி அந்தரத்தில் நிற்க அப்படியே நின்றான்.

“ஆ! நீங்கள் * * * வரின் விசிறியா?”அவன் கேட்டான் சிறிது மனமுடைந்தவனாக. “நான் * * *வரின் விசிறி.” அவன் நகரின் பிறிதொரு கால்பந்தாட்டக் குழுவின் பெயரைச் சொன்னான்.

“ஓ! * * *க்கு ஞாயிற்றுக் கிழமை ஒரு எளிமையான விளையாட்டு அமைந்துவிடும். அவர்கள் தோற்கமாட்டார்கள்”. ஆனால் அவனது உயிர்ப்பு ஏற்கனவே அணைந்து போயிற்று.

முகச்சவரம் முடிந்து அவன் வெளியில் வந்தான். நகரம் இரைச்சலாகவும், துருதுருப்புடனும், ஜன்னல்களின் மீது தங்க நிற பளபளப்புக்களுடன் இருந்தது. நீர்பீச்சும் பவுண்ட்டன்களில்  இருந்து  நீர்  வழிந்து சென்றது.  ட்ராம்களின் கம்பங்கள் தலைக்கு மேலிருந்த இணைப்புகளில் நெருப்புப் பொறி உண்டாக்கின.  என்ரிகோ ஜின்னி ஏதோ ஒரு அலையின் உச்சியில் போல முன்னேறிச் சென்றான். துரித சக்தியின் திடீர் வெளிப்பாடுகளுடன் அவனது இதயத்தில் சோர்வின்,  தளர்வின் திடீர்த் தாக்குதல்களும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.

“ஏய் நீ ஜின்னிதானே?”

“ஏய் நீ பார்டெட்டாதானே?”

அவன் பத்து வருடங்களாய் பார்க்காத பழைய பள்ளித் தோழனைச் சந்தித்தான். அவர்கள் வழக்கமான விசாரிப்புகளை பரிமாறிக்  கொண்டனர்.  எப்படி  வருடங்கள்  உருண்டோடி விட்டன, எப்படி  அவர்கள்  மாறாமலே  இருக்கின்றனர் என்றெல்லாம்.  நிஜத்தில்  பார்டெட்டா  சிறிது வெளுத்துப்போயிருந்தான்,  நரித் தோற்றத்துடன்,  அவன்  முகத்தில்  இருந்த சூழ்ச்சித்தன்மை  இன்னும்  கூர்மை  பெற்றிருந்தது.  பார்டெட்டா வியாபாரத்தில்  இருந்தான்  என்பதை ஜின்னி அறிவான். ஆனால் அவனது பின்னணி சற்று இருளடைந்ததாய் இருந்தது. கொஞ்ச நாட்களாக அவன் வெளிநாட்டில் வசித்து வந்தான்.

“இன்னும் பாரிஸ் நகரில்தானா?”

“வெனிஸுலாவில். நான் திரும்பிச் செல்ல இருக்கிறேன். நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“இன்னும் இங்கேயே இருக்கிறேன்”. மேலும் தன் ஒரே இடத்தில் இருக்கும் நிலை பற்றி அவமானப்பட்டவன் போல, அவனை மிஞ்சியும் கூட ஒரு தர்மசங்டமான நிலையில் புன்முறுவல் செய்தான்.  அதே நேரத்தில் அதைத் தெளிவாக்க முடியாத காரணத்தால் கோபப்பட்டான். முதல் பார்வையில் யதார்த்தத்திலான அவனது இருப்பானது கற்பனை செய்யப் படுவதை விடவும் கூடுதல் முழுமையுடனும், திருப்தியுற்றும் இருக்கிறதென.

“உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?” பார்டெட்டா கேட்டான்.

முதல் மனப்பதிவினை சரி செய்வதற்கான சந்தர்ப்பமாக இது ஜின்னிக்குத் தோன்றியது. “பிரம்மசாரி” என்றான், “இதுவரையிலும் ஒரு பிரம்மசாரி. ஹா ஹா. நாங்கள் மறைந்தழியும் ஒரு இனம்”. ஆம் பார்டெட்டா ஒரு மனசாட்சியில்லாத மனிதன், மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்லவிருக்கிறான், இப்போது இந்த நகரத்திற்கும் அதன் வம்புப் பேச்சுகளுக்கும் அவனுக்கும் எந்தப் பிணைப்பும் இல்லை. அவன்தான் பொருத்தமான ஆள்.  அவனிடம்  அதீத உற்சாகத்திற்கு  தடையில்லாத  வெளிப்பாடு  கொடுக்கலாம். அவனிடம்  மாத்திரமே  ஜின்னி  தனது  ரகசியத்தைச்  சொல்ல முடியும். வாஸ்தவத்தில் இன்னும் மிகைப்படுத்தியும் கூட சொல்லலாம்.  நேற்றிரவு நடந்த சாகசம் அவனுக்கு ஏதோ வாடிக்கை போல பேசலாம்.  “அதுதான் சரி.”  அவன்  அழுத்திச் சொன்னான், “பிரம்மசாரிகளின் பழைய பாதுகாவலர்கள் நாம் இருவருமா?” கோரஸ் பாடும் பெண்களை ஒரு காலத்தில் சுற்றிச் சுற்றி வந்த பார்டெட்டாவின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடும் அர்த்தத்தில்.

மேலும் அவன் ஏற்கனவே அந்தப் பேச்சுக்கு வந்து சேர்வது பற்றிய குறிப்புச் சொற்களை ஆராய்ந்து கொண்டிருந்தான். ஏறத்தாழ இந்த ஒழுங்கில், “ஏன் நேற்று ராத்திரி கூட, எடுத்துக் காட்டாக . . .”

“நிஜத்தைச் சொல்வதானால்” பார்டெட்டா கூறினான், ஒரு வித வெட்கம் நிறைந்த சிரிப்புடன், “எனக்குக் கல்யாணமாகி நான்கு குழந்தைகள் இருக்கின்றன. . .”

ஜின்னி அவனைச் சுற்றி ஒரு முழுமொத்தமான லட்சியமற்ற, திளைத்தல் உலகின் சூழ்நிலைகளை மறுகட்டுமானம் செய்து கொண்டிருந்த போது இந்தக் குறிப்புச் சொற்களைக் கேட்டான். மேலும் இதனால் அவனுடைய நிதானம் சற்றே குலைந்தது. பார்டெட்டாவை அவன் முறைத்துப் பார்த்தான். அந்த மனிதனின் கசங்கலான, அடிபட்ட தோற்றத்தைக் கவனித்தான். அவனுடைய களைப்புற்ற தோற்றத்தையும்.

“ஆங். நான்கு குழந்தைகள். . .” அவன் ஒரு மந்தமான குரலில் சொன்னான்.

“வாழ்த்துக்கள். அங்கே எப்படி இருக்கின்றன சமாச்சாரங்கள்?”

“ம். . . பெரிதாய்  ஒன்றுமில்லை. . . . எல்லாம் எங்கும் போலத்தான்.  சுரண்டி  எடுத்து . . .  குடும்பத்தைக்  காப்பாற்றி. . .” அவன் தனது தோல்வியுற்ற அணுகுமுறையில் கைகளை வெளியில் விரித்தான்.

ஜின்னி தனது உள்ளுணர்வு பூர்வமான பணிவுடன் பரிவையும் வருத்தத்தையும் உணர்ந்தான். எப்படி அவன் நினைத்திருக்க முடியும் இத்தகைய சீரழிவான ஒரு மனிதனை ஈர்க்கும் பொருட்டு தன்னுடையதேயான  நல்ல அதிர்ஷ்டத்தைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ள நினைத்திருக்க முடியும்? “ஓ! இங்கும் கூட, என்னால் சொல்ல முடியும்”, உடனடியான அவன் தனது தொனியை மாற்றிக் கொண்டு சொன்னான்: “நாங்கள் சிரமப்பட்டுத்தான் சமாளிக்கிறோம், ஒவ்வொரு நாளும். . .”

“நல்லது. விஷயங்கள் நல்லதாக மாறும் என்று நம்புவோம். .”

“ஆம். நாம் தொடர்ந்து நம்பிக் கொண்டுதானிருக்க வேண்டும்.”

அவர்கள் சகல நல் வாழ்த்துக்களையும் பரிமாற்றிக் கொண்டு, விடை பெற்று, ஒவ்வொருவரும் ஒரு திசையில் கிளம்பிச் சென்றனர்.  உடனடியாக,  ஜின்னி  பின்வருத்தத்தினால் நிறைந்து போனான். தன் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் சாத்தியமுள்ள, அவனுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதமாகத் தெரிந்த, அவன் முதன் முதலில் கற்பனை செய்திருந்த  பார்டெட்டாவை  இப்போது  என்றென்றைக்குமாக  இழந்தாகி விட்டது. அவர்களுக்கிடையே–ஜின்னி எண்ணி னான்–சகமனிதனுடனான  ஒரு உரையாடல் நிகழ்ந்திருந்திருக்கலாம் –நல்தன்மை யுடயதாகவும், ஒரு சிறிது எதிர்மறைத்தன்மை கொண்டதாகவும், பகட்டாகக் காட்டிக் கொள்ளாமலும், பீற்றிக்கொள்ளாமலும். மாறுதலுக்கு உட்படாதிருக்கும்  ஒரு நினைவுடன் அவனுடைய நண்பன் அமெரிக்காவுக்குச் சென்றிருப்பான்.  அந்த கற்பனா ரீதியான பார்டெட்டாவின் சிந்தனைகளில் தான்  பாதுகாக்கப் பட்டிருப்பதை தெளிவின்றிப் பார்த்தான் ஜின்னி. பார்டெட்டா அங்கே, அவனது வெனிஸுலாவில், பழைய ஐரோப்பாவை ஞாபகப்படுத்தியபடி.ஏழைதான், ஆனால் அழகையும் சுகிப்பையும் வழிடும் மரபிற்கு எப்போதும் விசுவாசமானவனாய் இருந்தபடி–மேலும் உள்ளுணர்வு பூர்வமாகத் தன் நண்பனைப் பற்றி யோசித்தபடி, பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கப்பட்ட அந்தப் பள்ளித் தோழன்,  எப்பொழும் அந்த விவேகமுடைய தோற்றத்துடன், எனினும் அவனைப் பற்றியதொரு சுய உறுதியுடன் இருப்பான்: ஐரோப்பாவைக் கைவிட்டு விடாமலிருக்கும் ஒரு மனிதன், மேலும் புராதன வாழ்வறிவின் முழுமையான குறீயீடாகவும், அதனுடைய கவனம் மிக்க உணர்ச்சிகளுடனும். ஜின்னி அதீதமாக உற்சாகமடைந்தான்: ஒன்றே போலிருக்கும் வெற்று நாட்களின் கடலில் மணல் போல் மறைந்து விடாமல் முந்திய இரவின் சாகசம் ஒரு பதிவினை விட்டுச் சென்றிட முடிந்திருக்கும், ஒரு தீர்மானமான அர்த்தத்தினை எடுத்துக் கொண்டிருக்கும்.

எப்படியாவது அவன் பார்டெட்டாவிடம் அது பற்றி பேசியிருந்திருக்க வேண்டும், மற்ற விஷயங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒரு பரிதாபமான ஆளாக பார்டெட்டா இருந்தாலும் கூட, அவனை அவமானப்படுத்தக் கூடும் என்கிற விலை கொடுத்தலிலும் கூட. மேலும் பார்டெட்டா வாழ்க்கையில் தோல்வியுற்றவன் என்பது பற்றி அவன் எப்படி உறுதியாக இருப்பது? மேலும் அவன் அதைத் தான் சொல்லியிருக்கக் கூடும், மேலும் கடந்த காலத்தில் போல அவன் அதே பழைய நரிதான், . . . நான் அவனை வேகமாய்ப் போய்ப் பிடிப்பேன்–ஜின்னி நினைத்தான்–நான் ஒரு உரையாடலைத் துவக்குவேன். பிறகு அவனிடம் சொல்வேன்.

அவன் நடைபாதையை  ஒட்டி மேலே ஓடினான், சதுக்கத்தில் திரும்பினான், வளைவு விதானத்தில் முன்னேறினான். பார்டெட்டா மறைந்து போய்விட்டான். ஜின்னி நேரத்தைப் பார்த்தான். அவனுக்குத் தாமத மாகிவிட்டிருந்தது. அவனது வேலையை நோக்கி விரைந்தான். அவனைச் சமாதானப்படுத்திக் கொள்வதற்காக, இந்த மாதிரி தன் உறவுகளை மற்றவர்களுக்குச் சொல்லுவ தென்பது அவனுடைய குணத்துக்கும் அவனுடைய வழிகளுக்கும் அந்நியமானது  என்று முடிவு செய்தான்.  இந்தக் காரணத்  தினால் அவன் அதைச் செய்வதைத் தவிர்த்திருந்தான். இவ்வாறு தன்னுடன் தானே சமரசமடைந்து, அவனது தற்பெருமை மீட்படைந்து, அலுவலகத்தில் வருகை நேரத்தைக் கணக்கிடும் யந்திரத்தில் தன் வருகையை பதிவு செய்தான்.

மனந்திறந்து வெளியில் சொல்லப்படாதிருப்பினும் அவனுடைய வேலைக்கான ஒரு மோக உணர்ச்சியைத் தக்க வைத்திருந்தான். அது எழுத்தர்களின் இதயங்களை உயிர்ப்பூட்டக்கூடியது. ஒரு தரம் அவர்களுக்கு அந்த ரகசிய இனிய  சுவையும்  கண்மூடித்தனமான பற்றும் தெரிந்து விட்டதும், அவை அவர்களின் மிகவும் ஒரேமாதிரி நிகழ்கிற அதிகாரவர்க்க நியமங்களுக்குக் கூட கூடுதல் சக்தி அளித்து விடும். கவனக் கோருதலற்ற கடிதப் போக்குவரத்துகள், பதிவேடுகளை  நிர்வாகித்தல்.  ஒரு  வேளை இன்றைய காலையில் அவனது பிரக்ஞையின்பாற்படாத நம்பிக்கை யாக இருந்தது அந்த மோக உணர்ச்சியும் எழுத்தர்தனமான பேருணர்ச்சியும் ஒன்றே ஆகி, ஒன்றில் ஒன்று பிணைந்து, என்றும் அணைக்க முடியாதபடி தொடர்ந்து எரிந்தபடி இருக்கும் என்பதுதான். ஆனால் அவனது மேஜையின் தோற்றமும், அதன் பழக்கப்பட்ட, “முடிக்கப்பட வேண்டியது” என்ற எழுத்துக்கள் அச்சிடப்பட்ட வெளிரிய பச்சை நிற ஃபைலின் தோற்றமும், அவன் இப்பொழுதான் பிரிந்து வந்த தலை சுற்றச் செய்யும் அழகிற்கும் அவனது வழிகளுக்கும் இடையிலான ஒரு கூர்மையான வேறுபாட்டினை உணர்வதற்குப் போதுமானதாய் இருந்தது.

உட்காராமலே அவனுடைய மேஜையைச் சுற்றி பல தடவைகள் நடந்தான் . அந்த அழகிய யுவதிக்கான தீடீரென்ற அவசரமான காதல் உணர்வினால் அவன் திக்குமுக்காடிக் கொண்டிருந்தான். மேலும் அவனால் ஓய்வு கொள்ள முடியவில்லை. கவனமாகவும், திருப்தியடையாமலும் தங்களது எண்ணும் இயந்திரங்களைத் தட்டி இயக்கிக் கொண்டிருந்த கணக்காளர்களின் அடுத்த அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

ஹல்லோ என்று சொல்லிக் கொண்டே அவர்கள் ஒவ்வொருவரையும் கடந்து அப்பால் நடந்து சென்றான், படபடப்புடனும், மகிழ்ச்சியுடனும், திருட்டுத்தனமாகவும், ஞாபகத்தில் வெப்பம் ஏற்றிக் கொண்டும், நிகழ்காலத்துக்கான நம்பிக்கையின்றியும்.  காதலினால் பித்துப் பிடித்துப் போய், அந்த கணக்காளர்களுக்கு மத்தியில் இருந்தான். உங்கள் அலுவலகத்தில் நான் உங்களுக்கு மத்தியில் வளைய வரும் போது–அவன் எண்ணிக் கொண்டிருந்தான்–அவ்வாறே நான் அவளுடைய போர்வைகளுக்குள் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன், ரொம்ப காலத்திற்கு முன்பு அல்ல. “ஆம், அதுதான்  சரி, மாரினொட்டி” என்று சொன்னான், அவனுடைய சக எழுத்தரின் மேஜை மீது கை முஷ்டியால் ஓங்கிக் குத்தியபடி.

மாரினொட்டி மூக்குக்கண்ணாடியை உயர்த்தி நிதானமாகக் கேட்டான்: “இந்த மாதமும் கூட உன் சம்பளத்திலிருந்து கூடுதலாக ஒரு நாலாயிரம் லயர் பணத்தைப் பிடித்தார்களா சொல் ஜின்னி?”

“இல்லை. என் நண்பனே! பிப்ரவரி மாதத்தில்”, ஜின்னி ஆரம்பித்தான்.  மேலும் அதே நேரத்தில் அதிகாலைப் பொழுதின் போது அந்த யுவதி செய்த ஒரு உடலசைவினை நினைவுபடுத்திக் கொண்டான். அது அவனுக்கு ஒரு புதிய கண்திறப்பாக இருந்து, அளப்பரிய, முன்பின் தெரிந்திராத காதல்களின் சாத்தியப் பாடுகளைத் திறந்து விட்டது–“இல்லை அவர்கள் ஏற்கனவே என்னுடையதைப் பிடித்து விட்டார்கள்”. அவன் தொடர்ந்து சொன்னான், அவனுக்கு முன்னால் நிதானமாகக் கையை அசைத்து ஒரு தணிந்த குரலில், காற்றின் நடுப்பகுதியில், அவனது உதடுகளைச் சுழித்தபடி சொன்னான்: “அவர்கள் முழுப்பணத்தையும் என் பிப்ரவரி மாத சம்பளத் திலிருந்தே பிடித்துக் கொண்டார்கள், மாரினொட்டி.”

வெறுமனே பேசிக்கொண்டிருக்கும் பொருட்டு அவன் இன்னும் கூடுதலான தகவல்களையும் விளக்கங்களையும் சேர்க்க விரும்பியிருப்பான், ஆனால் அவனால் முடியவில்லை.

தனது அலுவலகப் பகுதிக்குச் சென்றவாறு அவன் தீர்மானித்தான்–இதுதான் ரகசியம், நான் செய்கின்ற சொல்கின்ற ஒவ்வொரு விஷயத்திலும் நான் அனுபவம் கண்டிருக்கிறவை உள்தொக்கி இருக்க வேண்டும். ஆனால் அவன் ஒரு பதற்றத்தினால் விழுங்கப்பட்டுக் கொண்டிருந்தான், அவன் எதுவாக இருந்தானோ அதற்கு சமானமாக அவனால் ஈடுகொடுத்து என்றுமே வாழ முடியாது, சிறு சமிக்ஞைகளாலோ இன்னும் குறைந்த அளவில் வெளிப்படையான வார்த்தை களாலோ, ஒரு வேளை சிந்தனைகளாலோ கூட, அவன் உணர்ந்தடைந்த முழுமையை என்றுமே வெளிப்படுத்த முடியாது என நினைத்தான்.

தொலைபேசி ஒலித்தது. ஜெனரல் மேனேஜர் பேசினார். குயுசிபியிரி புகார் மீதான பின்னணியைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்.

“சார் விஷயம் எப்படி இருக்கிறதென்றால்”, ஜின்னி தொலை பேசியில் விளக்கினான்: “குயுசிபியரி மற்றும் கம்பெனி அந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி . . . .”  மேலும் அவன் சொல்ல  விரும்பினான்: நீங்கள் கவனியுங்கள் அவள் நிதானமாகச்  சொல்லும் போது: நீ போகப் போகிறாயா?. . . .நான் உணர்ந்தேன் அவள் கையைப் பிடியிலிருந்து விட்டுவிடக் கூடாதென்று. . . .

“ஆமாம் சார், புகாரானது முன்னர் பில் போடப்பட்ட சரக்குகள் தொடர்பானதாக இருக்கிறது. . . .” மேலும் அவன் சொல்ல நினைத்தான்: எங்களுக்குப் பின்னால் கதவு மூடப்படும் வரை, எனக்கு உறுதியாகத் தெரியாது. . . .

“இல்லை”, அவன் விளக்கினான்: “உள்ளூர் அலுவலகம் வாயிலாக பாதிப்புப் பணம் கோரப்படவில்லை”. மேலும் அவன் அர்த்தப்படுத்தினான்: ஆனால் நான் அப்பொழுதுதான் உணர்ந்தேன் அவளை நான் கற்பனை செய்திருந்ததை விட முற்றிலும் வேறாக இருந்தாள், அவ்வளவு உணர்ச்சி காட்டாமலும் திமிர்த்னமாகவும். . . .

அவன் தொலைபேசியை வைத்தான். அவனுடைய புருவம் வியர்வையால் முத்துக் கோத்திருந்தது. அவன் களைப்பை உணர்ந்தான், தூக்கத்தின் பாரத்தினால். வீட்டில் சிறிது நேரம் நின்று,  ஓய்வளித்து புதுப்பித்துக் கொள்ளாததும், உடை மாற்றிக் கொள்ளாததும் ஒரு தவறுதான். அவன் அணிந்து கொண்டிருந்த ஆடைகள் கூட அவனுக்கு எரிச்சலூட்டின.

அவன் ஜன்னலருகில் சென்றான். உயரமான சுவர்களால் சூழப்பட்ட, பால்கனிகளால் நிறைந்த ஒரு முற்றம் அங்கே இருந்தது. ஆனால் அது ஒரு பாலை வனத்தில் இருப்பது போலிருந்தது. கூரைகளுக்கு மேலாக வானத்தைப் பார்க்க முடிந்தது, அது இனியும் தெளிவின்றி, நிறம் வெளுத்து, மழுங்கலான களிம்பினால் மூடப்பட்டிருந்தது–ஜின்னியின் ஞாபகத்தில் உள்ளது போல ஒரு ஒளியை ஊடுடுருவ அனுமதிக்காத வெள்ளை நிறம் ஒவ்வொரு உணர்ச்சியின் ஞாபகத்தையும் துடைத்தழித்துக் கொண்டிருந்தது. சூரியனின் இருப்பானது தெளிவற்ற, நிலைத்த ஒரு திட்டு வெளிச்சத்தைப் போல இருந்தது, ஒரு ரகசிய துக்கத்தின் தாக்குதல் போல.•

Adventures of a Clerk-Difficult Loves Translated by William Weaver

reader4calvinolevenko_ivan1

ஒரு திருடனின் சாகசம்

இடாலோ கால்வினோ

தமிழில் பிரம்மராஜன்

உடனடியாகத் தான் கைது செய்யப்பட முடியாமல் வைத்துக் கொள்வதுதான் அவனுக்கு முக்கியமான விஷயமாக இருந்தது. ஒரு கதவின் வழியில் நீட்டிப் படுத்துக் கொண்டான், போலீஸ்காரர்கள்  நேராக அவனைக் கடந்து ஓடுவது போலத் தோன்றிது. ஆனால் உடனடியாக  அவர்களின் காலடிகள் திரும்பி வருவதையும், சந்து வழியில் திரும்புவதையும் அவன் கேட்டான். வேகமாகப் பாய்ந்தான் அவன் தனது துரிதமிகுந்த தாவல்களில்.

“ஜிம்! நில் அங்கே. இல்லையேல் நாங்கள் சுடுவோம்.!”

கண்டிப்பாக, கண்டிப்பாக, மேலே போய் சுடுங்கள், என்று அவன் எண்ணினான். மேலும் அவன் அவர்களின் எல்லையிலிருந்து ஏற்கனவே வெளியிலிருந்தான்.  பழைய நகரின் சாய்மானமாக இருக்கும் தெருக்களின் வழியாக அவனுடைய கால்கள் கூழாங்கற்கள் பாவியிருந்த தெருவின் முனைக்குத் தள்ளிக் கொண்டிருந்தன. நீர் பீச்சும் பவுண்டன்களுக்கு மேற்புறமாக, படிகளின் கைப்பிடி வேலிகளைத் தாவிக் குதித்தான். அவன் வளைவு வழியில் அடியில் வந்திருந்தான். அது அவனது கால்களின் அழுத்தமான ஓசையை அதிகரித்துக் காட்டியது.

அவனுடைய மனதிற்குள் வந்த முழு சுழற்சியுமே நிராகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது. லோலா, வேண்டாம், நில்டெ, வேண்டாம், ரெனீ, வேண்டாம்.  கதவுகளைத் தட்டியபடி அந்த ஆட்கள் உடனே அந்த எல்லாப் பிரதேசங்களுக்கும் வந்திருப்பார்கள்.  அது ஒரு தண்மையான இரவு, சந்து வழிகளின் மிக உயரத்தில் அமைக்கப்பட்ட வளைவு வழிகளின் மீது அந்த மேகங்கள் அவ்வளவு வெளுப்பாக இருந்ததால் அவை ஒரு பகல் பொழுதில் இருந்தாலும்  இடம் மாறி விட்ட உணர்வு வராது.

புதிய நகரத்தின் விசாலமான தெருக்களை அடைந்தவுடன், மரியோ அல்பநேசி என்கிற ஜிம் போலரோ தன் வேகத்தை சிறிது மட்டுப்படுத்தினான். தன் நெற்றிப் பொட்டுக்களின் இரண்டு பக்கமும் விழுந்த  கேசக்கற்றைகளை காதுகளுக்குப் பின்னால் செருகிக் கொண்டான். எந்த ஒரு காலடிச் சத்தமும் கேட்கவில்லை.  தீர்மானமாகவும் ஜாக்கிரதையாகவும், அவன் கடந்து அப்பால் சென்று,  ஆர்மாண்டாவின் வாசல் கதவினை  அடைந்தான். அவளுடைய அபார்ட்மெண்ட்டுக்குப் படியேறினான்.   இரவின் இந்த நேரத்தில் நிச்சயமாக அவளுடன் யாரும் இருக்க மாட்டார்கள்.  அவள் தூங்கிக் கொண்டிருப்பாள்.  ஜிம் வலுவாகத் தட்டினான்.

“யாரங்கே?” ஒரு கணத்திற்குப் பிறகு ஒரு மனிதனின் குரல்  எரிச்சலுடன் கேட்டது : ” இரவின் இந்த நேரத்தில் ஜனங்கள் அவரவர் தூங்கிக் கொண்டிருப்பார்கள் . . . .” அது லிலின் என்பவனின் குரல்.

“ஒரு நிமிஷம் திற ஆர்மாண்டா. அது நான்தான், நான்தான் ஜிம்.” அவன் சத்தமாக ஆனால் அழுத்தமாகச் சொன்னான்.

ஆர்மாண்டா படுக்கையில் புரண்டு படுத்தாள், “ஓ ஜிம் பையா! ஒரு நிமிஷம் பொறு, நான் கதவைத் திறந்து விடுகிறேன். . . ஹ்ம், அது ஜிம்தான்.” படுக்கையின் தலைமாட்டிலிருந்த, முன் பக்கத்து கதவைத் திறக்கும்  கம்பியைப் பிடித்து இழுத்தாள்.

கதவு “க்ளிக்” என்று சப்தமிட்டு, கீழ்ப்படிதலுடன் திறந்து கொண்டது.  தன் கைகளை பாக்கெட்டுகளில் நுழைத்தபடி நடை கூடத்தின் வழியாக ஜிம் சென்றான்.  படுக்கை அறையில் நுழைந்தான். ஆர்மாண்டாவின் பெரிய படுக்கையில், அவள் உடம்பு ஒரு பெரிய குவியலாக போர்வைக்கு அடியில் எல்லா இடத்தையும் ஆக்கிரமித்துக் கொள்வது மாதிரித் தோன்றியது. தலையணை மீது மேக்-அப் இல்லாத அவள் முகம் பைபோலும், சுருக்கங்களுடனும், நெற்றியின் கறுப்பு நிற முன் முடியின் அடியில் தளர்ந்து தொங்கிற்று. அப்பால், ஏதோ அந்த போர்வையின் ஒரு மடிப்பில் இருப்பது போல, படுக்கையின் அந்த ஓரத்தில் அவள் கணவன் லிலின் படுத்திருந்தான். தடைப்பட்ட அவனது தூக்கத்தை மீட்டுக் கொள்ள அவனது நீல நிற முகத்தினை தலையணையில் புதைத்துக் கொள்ள விரும்புபவன் போல அவன் தோன்றினான்.

படுக்கைக்குச் சென்று அவனது சோம்பேறித்தனமான நாட்களின் சோர்வினை தூங்கி சரி செய்வதற்கு கடைசி வாடிக்கையாளர் போகும் வரை லிலின் காத்திருக்க வேண்டியிருந்தது. லிலினுக்கு எதுவும்  எப்படிச் செய்ய வேண்டுமென்றோ, செய்வதற்கு விருப்பம் உள்ள மாதிரி எதுவுமோ இந்த உலகத்தில் இல்லை. புகை பிடிப்பதற்கு அவனுக்கு இருந்தால் அவன் திருப்தியாக இருப்பான். லிலினால் அதிகம் செலவாகிறது என்று ஆர்மாண்டாவால் சொல்ல முடியாது, பகல் நேரத்தில் அவன் உபயோகிக்கும் சில புகையிலைப் பொட்டலங்கள் தவிர. தன்னுடைய பொட்டலத்துடன் அவன் காலையில் வெளியில் செல்வான். செருப்பு தைப்பவனிடம் கொஞ்ச நேரம் உட்காருவான். சிறிது நேரம் காயலான் கடைக்காரனிடம். கொஞ்சம் குழாய் ரிப்பேர்க்காரனுடன். ஒரு காகிதம் அடுத்து இன்னொன்றாக அவன் உருட்டியபடி அந்தக் கடைகளின் முன்னால் போடப்பட்டிருக்கும் மொட்டை நாற்காலியின் மீது அமர்வான், அவனுடைய நீண்ட, திருடனுக்குரியதான கைகள் அவனது முட்டிகளின் மீது வைத்துக் கொண்டு. அவனுடைய வெறித்த பார்வை கூர்மை குன்றியிருக்கும்.  ஒவ்வொருவர் சொல்வதையும் ஒரு உளவாளியைப் போலக் கேட்டுக் கொண்டிருப்பான், பேச்சுக்கு எந்த ஒரு வார்த்தையையும் தந்து விடாமல், சில சுருக்கமான குறிப்பு வார்த்தைகள் மற்றும் எதிர்பார்த்திராத முன்முறுவல்களுடன், கோணலாகவும் மஞ்சளாகவும். மாலையில் கடைசிக் கடையும் மூடப்பட்டவுடன், மதுபானக் கடைக்குச் சென்று ஒரு லிட்டர் மது குடிப்பான். மிச்சம் வைத்திருக்கும்   சிகரெட்டுகளை,  கடைக்காரர்கள் ஷட்டர்களை  இழுத்து மூடும் வரை புகைத்துத் தீர்ப்பான். அவன் வெளியில் வருவான். அவன் மனைவி இன்னும் கோர்சோ பகுதியில் தன் வீங்கிய கால்களை பிடிப்பான காலணிக்குள் திணித்து குட்டை உடையுடன் இருப்பாள். அந்த மூலைக்கு வருவான்  லிலின்.  வந்து  ஒரு  தாழ்ந்த  ஒலியில்  விசில்  அடித்து, அவளுக்குத் தாமதமாகிவிட்டது என்று சொல்லி, அவள்  படுக்கைக்கு  வர  வேண்டும் என்றும் சில வார்த்தை களை முணுமுணுப்பான். அவனைப் பார்க்காமலே, நடைபாதையின் படியில்  அது  ஏதோ  ஒரு  நாடக  மேடையைப் போல, அவளது மார்பகங்கள் கம்பிகளும் எலாஸ்டிக்குகளும் நிறைந்த சுற்றிலுக்குள் திணிக்கப்பட்டு, அவளது  வயதான  பெண்ணின்  உடல்  ஒரு  இளம் பெண்ணின் உடைக்குள் இருக்க, பதற்றத்துடன் அவளது பர்சை பற்றியபடி, நடைபாதையின் மீது தனது குதிகால்களால் வட்டங்கள் வரைந்தபடி  இருப்பாள்.  அவள்   அவனிடம்   முடியாது  என்று  சொல்கிறாள். இன்னும் மனிதர்கள் சுற்றிக்   கொண்டிருக்கிறார்கள், அவன் போய்  காத்திருக்க வேண்டும். அவர்கள் இப்படி ஒருவரை ஒருவர் தினசரி காதலிக்கிறார்கள்.

“நல்லது ஜிம்” ஆர்மாண்டா கூறினாள், கண்களை அகலத் திறந்தபடி.

அவன் அதற்குள்ளாக இரவு மேஜையின் மீது சில சிகரெட்டுகளைக் கண்டுபிடித்து ஒன்றினைப் பற்ற வைத்துக் கொள்கிறான்.

“நான் இரவு இங்கேதான் தங்க வேண்டும். இன்றிரவு.”

அதற்குள்ளாக அவனுடைய ஜாக்கெட்டினை எடுத்து விட்டு, டையை கழற்றிக் கொண்டிருக்கிறான்.

“கண்டிப்பாக  ஜிம், படுக்கைக்குள் வா. நீ சோஃபாவுக்குப் போ லிலின், போ லிலின் கண்ணா,  இடத்தை  இப்போது காலி செய், ஜிம் படுக்கட்டும்.”

லிலின் அங்கே படுத்துக் கிடக்கிறான், ஒரு கல்லைப் போல, பிறகு தன்னைச் சுதாரித்துக் கொண்டு, தெளிவில்லாத வார்த்தைகளில் ஒரு புகாரினை வெளிப்படுத்துகிறான். படுக்கையிலிருந்து இறங்குகிறான், தனது தலையணையை எடுத்துக் கொள்கிறான், ஒரு போர்வையை, மேஜை மீதிருந்து புகையிலையை, சிகரெட் சுருட்டும் காகிதங்களை, தீக்குச்சிகளை, மற்றும் சாம்பல் தட்டும் கிண்ணத்தை. “போ! லிலின் தேனே, போ!”  சிறிய ஆகிருதியுடன், கூனிக்கொண்டு, அவன் போகிறான், அவனது சுமைகளுக்கு அடியில் நடை கூடத்திலிருந்த சோஃபாவை நோக்கி.

உடைகளைக் கழற்றியபடி ஜிம் புகை பிடிக்கிறான், தனது கால்சராய்களை சுத்தமாக மடித்து மாட்டுகிறான். அவனது ஜாக்கெட்டினை படுக்கையின் தலைமாட்டிலிருக்கும் ஒரு நாற்காலி மீது ஒழுங்குபடுத்துகிறான். டிரெஸ்ஸிங் டேபிளிலிருந்து  சிகரெட்டுகளையும்,  தீக்குச்சிகளையும், சாம்பல் கிண்ணத்தையும் கொண்டு வந்த பின் படுக்கையில் ஏறிக் கொள்கிறான். விளக்கை அணைத்து விட்டு ஆர்மாண்டா பெருமூச்சு  விடுகிறாள்.  ஜிம்  புகை  பிடிக்கிறான். லிலின் நடைக் கூடத்தில் தூங்குகிறான். ஆர்மாண்டா புரண்டு படுக்கிறாள். ஜிம் சிகரெட்டை அழுத்தி அணைக்கிறான். கதவுக்குப் பின்புறம் யாரோ தட்டுவது கேட்கிறது.

ஒரு கையைக் கொண்டு ஜிம் ஏற்கனவே அவனுடைய ஜாக்கெட்டின் பாக்கெட்டில் இருக்கும் ரிவால்வாரை தொட்டபடி இருக்கிறான். இன்னொரு கையில் ஆர்மாண்டாவின் முட்டிக்கையை பற்றிக் கொண்டு எச்சரிக்கிறான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று. ஆர்மாண்டாவின் கை தடிமனாகவும் மிருதுவாகவும் இருக்கிறது. அவர்கள் இப்படி சில கணங்கள் நிலைத்திருக்கின்றனர்.

“அது யாரென்று கேள், லிலின்” ஆர்மாண்டா தாழ்ந்த குரலில்  சொல்கிறாள்.

கூடத்தில் லிலின், பொறுமையின்றி சிடுசிடுக்கிறான்: “யாரது?” முரட்டுத்தனமாக அவன் கேட்கிறான்.

“ஏய் ஆர்மாண்டா! அது நான்தான், ஆஞ்சலோ!”

“ஆஞ்சலோவா யார்?” அவள் கேட்கிறாள்.

“போலீஸ்காரன் ஆஞ்சலோ. இந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தேன், இங்கே வரலாம் என்று நினைத்தேன். . . .நீ கதவைத் திறக்கிறாயா ஒரு நிமிடம்?”

படுக்கையிலிருந்து எழுந்து கொண்டு ஜிம் அவளை அமைதியாய் இருக்கும்படி சைகை செய்கிறான். அவன் ஒரு கதவைத்  திறந்து,  குளிக்கும் அறைக்குள் எட்டிப் பார்த்து விட்டு, அவனுடைய உடைகளுடன் நாற்காலியை எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறான்.

“என்னை யாரும் பார்க்கவில்லை. அவனை சீக்கிரமாக அனுப்பி விடு.” அவன் மென்மையாகச் சொல்லியடி குளிக்கும் அறையில் தன்னைப் பூட்டிக் கொள்கிறான்.

“பரவாயில்லை வா லிலின் கண்ணா, மீண்டும் படுக்கைக்கு வா, வா லிலின்”, படுக்கையிலிருந்து ஆர்மாண்டா மறுஒழுங்கமைப்பினை இயக்குகிறாள்.

“ஆர்மாண்டா நீ என்னைக் காக்க வைக்கிறாய்”, கதவுக்குப் பின்னாலிருந்து அந்த மனிதன் சொல்கிறான்.

லிலின் மௌனமாகப்  போர்வையை, தலையணையை, புகையிலையை, தீக்குச்சிகளை, காகிதங்களை, சாம்பல் கிண்ணத்தை எடுத்துக் கொள்கிறான், பிறகு படுக்கைக்கு வருகிறான், மேலேறுகிறான், போர்வையை கண்கள் மூடும்படி போர்த்துகிறான். ஆர்மாண்டா கம்பிûயைப் பிடித்து இழுத்து கதவைத் திறக்கிறாள் “க்ளிக்” ஓசையுடன்.

சார்ஜண்ட் சோது உள்ளே வருகிறான், சிவிலியன் உடையணிந்த ஒரு வயதான போலீஸ்காரனின் கசங்கி உருக்குலைந்த தோற்றத்துடன். அவனுடைய தடித்த முகத்தின் மீது நரைத்த மீசை.

“நீங்கள் தாமதமான நேரத்தில் வந்திருக்கிறீர்கள் சார்ஜண்ட்”, ஆர்மாண்டா சொல்கிறாள்.

“ஓ! நான் சும்மா நடந்து போனேன்”, சோது சொல்கிறான்,

“பிறகு உன் வீட்டுக்கு வரலாம் என்று தோன்றியது.”

“நீங்கள் தேடியது என்ன?”

அவனது  வியர்வை  வழிந்த  முகத்தை  கைக்குட்டையால் துடைத்தபடி  சோது  இப்பொழுது  படுக்கையின் தலைமாட்டில் இருந்தான்.

“ஒன்றுமில்லை ஒரு சிறிய ரோந்து விஷயம். புதிதாய் ஏதாவது?”

“எப்படி புதியதாய்?”

“சந்தர்ப்பவசமாக நீ ஆல்பநேசியைப் பார்த்தாயா?”

“ஜிம்! என்ன செய்து விட்டான் அவன்?”

“ஒன்றுமில்லை. விளையாட்டுப் பிள்ளை விவகாரம்தான். . . அவனிடம் நாங்கள் ஒரு விஷயம் கேட்க விரும்பினோம். அவனை நீ பார்த்தாயா?”

“மூன்று நாட்களுக்கு முன்னால்”

“நான் இப்போது கேட்கிறேன்.”

“நான் இரண்டு மணி நேரமாகத் தூங்கிக் கொண்டிருக் கிறேன்,   சார்ஜண்ட். ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?  அவனுடைய  பெண்களிடம்  கேளுங்கள்:  ரோசி,   நில்டெ,  லோலா. . .”

“ஒன்றும் பயனில்லை. அவனுக்கு சிக்கல் வரும்போது அவர்களிடம் அவன் போவதில்லை.”

“அவன் இங்கே வரவில்லை. அடுத்த தடவை சார்ஜண்ட்.”

“நல்லது ஆர்மாண்டா, நான் சும்மா கேட்டேன். எப்படியாயினும் உன்னைப் பார்க்க வந்தது பற்றி நான் சந்தோஷப்படுகிறேன்.”

“இரவு வணக்கம் சார்ஜண்ட்.”

“இரவு வணக்கம்.”

சோது திரும்பினான் ஆனால் இடத்தை விட்டு நகரவில்லை.

“நான்  யோசித்துக்  கொண்டிருந்தேன் . . . .  ஏறத்தாழ விடியப்  போகிறது,  மேலும்  ரோந்து  வேலை  இனி  மேல் கிடையாது.  நான்  அந்தக்  கட்டிலுக்குத்  திரும்பிப்  போக விரும்பவில்லை.  நான்  இங்கு  இருக்கும்  நேரம்  வரை,  இங்கே தங்க  வேண்டும்  என்று  பாதி  மனது  இருக்கிறது.  அது  பற்றி என்ன சொல்கிறாய் ஆர்மாண்டா?”

“சார்ஜண்ட், நீங்கள் எப்போதுமே அற்புதமானவர்தான். ஆனால் உங்களுக்கு உண்மையைச் சொல்வதானால், இரவின் இந்த நேரத்தில் நாங்கள் வாடிக்கையாளர்களை ஏற்பதில்லை. அப்படித்தான் விஷயமெல்லாம், சார்ஜண்ட். எங்களுக்கும் எங்கள் நிகழ்ச்சி ஒழுங்குகள் இருக்கின்றன.”

“ஆர்மாண்டா. . . என்னைப் போன்ற ஒரு பழைய நண்பன்”, சோது ஏற்கனவே தனது ஜாக்கெட்டினைக் கழற்றிக் கொண்டிருந்தான், அவனது உள் சட்டையையும்.

“நீங்கள் ஒரு அருமையான மனிதர் சார்ஜண்ட், நாம் ஏன் நாளை இரவு கூடிக் கொள்ளக் கூடாது?”

சோது தொடர்ந்து உடைகளைக் கழற்றிக் கொண்டிருந்தான்.  “இரவினைக் கழிப்பதற்காகத்தான். உனக்குப் புரிகிறதா ஆர்மாண்டா? நல்லது, எனக்கு கொஞ்சம் இடம் விடு.”

“லிலின் நீ சோஃபாவுக்குப் போ!  போ, லிலின் கண்ணா, கிளம்பு இப்போது.”

லிலின் தனது நீண்ட கைகளால் துழாவினான், மேஜை மீதிருந்த புகையிலையைக் கண்டு பிடித்து எடுத்துக் கொண்டு, தன்னை சுதாரித்துக் கொண்டு, முனகிக் கொண்டு, படுக்கை யிலிருந்து கீழிறங்கி ஏறத்தாழ கண்களைத் திறக்காமலே, தலையணை,  போர்வை,  காகிதங்கள்,  தீக்குச்சிகள் ஆகியவற்றை பொறுக்கி எடுத்துக் கொண்டான். “போ!  லிலின் தேனே!”  போர்வையை கூடத்தின் வழியாக இழுத்துக் கொண்டு அவன் போய்ச் சேர்ந்தான். போர்வைகளுக்கு இடையே சோது புரண்டான்.

அடுத்த அறையில், ஜிம் சிறிய ஜன்னலின் சட்டகங்கள் வழியாக பச்சையாக மாறிக்கொண்டிருந்த வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மேஜை மீதிருந்த சிகரெட்டுகளை மறந்து விட்டுவிட்டான்,  அதுதான்  இப்போது  பிரச்னை. இப்பொழுது  அந்த  வேறு  மனிதன்  படுக்கைக்கு  சென்று கொண்டிருக்கிறான், ஜிம் அங்கே அறையில் அடைந்தபடி காலை  வெளிச்சம்  வரும் வரை  இருக்க வேண்டும், புகை பிடிக்க முடியாமல் பிடெட்டுக்கும் (தாழ்வாகப் பொருத்தப்பட்ட அந்தரங்க உடல்பகுதிகளைக் கழுவிக் கொள்வதற்கான நீர் பீச்சும் இணைப்பு கொண்டது) டால்காம் பவுடர் டப்பாக்களுக்கும்  இடையே  இருக்க  வேண்டும். அவன் மீண்டும்  ஓசையின்றி  உடையணிந்து  கொண்டு  விட்டிருந்தான். சுத்தமாகத் தலையை வாரியிருந்தான்.  பர்ஃம்யூம்கள்,  கண்ணுக்கு விட்டுக்  கொள்ளும்  மருந்துகள்,  சிரிஞ்சுகள்   ஆகியவற்றின் வேலிக்கு  மேலிருந்தும்  அலமாரியை   அலங்கரித்த  மருந்துகள்  மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு மேலிருந்தும் அவன் தன் முகத்தை வாஷ்பேசின் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தான். ஜன்னலில்  இருந்து  வந்த  வெளிச்சத்தில்  அவன்  சிலவற்றின் லேபிள்களைப்  படித்தான்.  ஒரு  டப்பா  மருந்துகளைத்  திருடிக் கொண்டான். பிறகு குளிக்கும் அறையின் சுற்றிப் பார்த்தலைத் தொடர்ந்தான். அங்கே கண்டுபிடிப்புகள் செய்ய  அதிகம் இருக்கவில்லை.  துணி  காய  வைக்கும் கொடி மேல் சில  துணிகளும்  அகன்ற  வாய்ப்  பாத்திரத்தில்  சில துணிகளும் இருந்தன. அவன் பிடெட்டின் பம்ப்புகளைச் சோதித்துப்பார்த்தான்.  நீர் சத்தமாகப்  பீரிட்டு  வந்தது.  அந்த சத்தத்தை  சோது  கேட்டால்?  சோதுவும்  ஜெயிலும்  நாசமாய்ப்  போகட்டும்.  ஜிம்முக்குப்  போரடித்து  விட்டது. மீண்டும்  வாஷ் பேசினுக்குச்  சென்று  அவனது  ஜாக்கெட்  மீது யூடிகொலோனைத் தெளித்துக் கொண்டான். அவனது தலைக்கு சிறிது கிரீமைப் பூசிக் கொண்டான். நிஜம் என்னவென்றால் அவர்கள் அவனை இன்று கைது செய்ய வில்லையானால், நாளை செய்யப் போகிறார்கள். ஆனால் அவனை  அவர்கள்  கையும்  களவுமாகப் பிடிக்கவில்லை. மேலும்  எல்லாம்  நல்லபடியாக  நடந்தால்  அவனை  அவர்கள் உடனே விட்டு விடுவார்கள். அங்கே அந்தக் குறுகலான இடத்தில் சிகரெட்டுகள் இல்லாமல் இன்னும் ஒரு இரண்டு மூன்று நேரத்திற்குக்  காத்திருப்பது. . . .  ஏன்  அவன்  கவலைப்பட  வேண்டும்?  வாஸ்தவமாக  அவனை  அவர்கள் உடனே  விட்டுவிடுவார்கள்.  அவன்  ஒரு அலமாரியைத்  திறந்தான்.  அது சப்தமிட்டது. இந்த அலமாரியும் மற்ற எல்லாமும் நாசமாய் போகட்டும். அதன் உள்ளே ஆர்மாண்டாவின் உடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு கம்பளிக்  கோட்டின்  பாக்கெட்டில்   அவனது   ரிவால்வாரைச் செருகி வைத்தான். நான் திரும்பி வந்து எடுத்துக் கொள்வேன், அவன் எண்ணினான், எப்படியிருந்தாலும் குளிர்காலம் வரும் வரை இதை  அவள்  அணியப் போவதில்லை.  அவன் கையை வெளியே  எடுத்த போது அவன் கைகள் பாச்சை உருண்டையால் வெண்ணிறமாக ஆகியிருந்தன. இன்னும் நல்லதுதான்.  துப்பாக்கியை  பூச்சி  அரிக்காது. அவன் சிரித்தான். மீண்டும் அவன் தன் கைகளைக் கழுவிக் கொள்ளச் சென்றான். ஆனால்  ஆர்மாண்டாவின்  துண்டுகள்  அவன் குடலைப்  பிடுங்கிவிடும்  போல  நாற்றமடித்தன.  அவன்  தன் கைகளை  அலமாரியிலிருந்த  ஒரு  மேல்  கோட்டில்  துடைத்துக் கொண்டான்.

படுக்கையில் படுத்தபடி சோது அடுத்த அறையிலிருந்து வந்த ஓசையைக்  கேட்டான்.  அவன்  ஒரு  கையை  ஆர்மாண்டா மீது வைத்துக் கொண்டு கேட்டான், “யாரங்கே?”

அவள் புரண்டு, அவன் மீது அழுந்தியபடி, அவளது மிருதுவான பெரிய கைகளை அவனுடைய கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டாள்: “அது  ஒன்றுமில்லை. . . .  அது  யாராக இருக்கும்?”

சோது தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பவில்லை, ஆனால் அவன் இன்னும் அந்த அறையில் நடமாடும் சப்தங்களைக்  கேட்டுக்  கொண்டிருந்தான்.  பிறகு  கேட்டான், விளையாடுவது  போல:  “என்ன இது?  என்ன அது?”

ஜிம்  கதவைத்  திறந்தான்: “வாருங்கள் சார்ஜண்ட். நடிக்காமல் என்னைக் கைது செய்யுங்கள்.”

ஆணியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஜாக்கெட்டிலிருந்து அவனது ரிவால்வாரை  எடுப்ப தற்கு  சோது  ஒரு  கையை நீட்டினான். ஆனால் அவன் ஆர்மாண்டாவை விடவே இல்லை: “யாரது?”

“ஜிம் போலேரோ.”

“கையை மேலே தூக்கு.”

“ஆயுதம் எதுவும் என்னிடமில்லை. மடத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள் சார்ஜண்ட். நான் சரணடைகிறேன்.”

படுக்கையின்  தலைமாட்டில்  நின்று  கொண்டிருந்த  அவன், அவனுடைய  ஜாக்கெட்டை  தோளின் மீது போட்டுக் கொண்டு கைகளைப் பாதி உயர்த்தியிருந்தான்.

“ஓ ஜிம்!” என்றாள் ஆர்மாண்டா.

“உன்னைப் பார்க்க இன்னும் சில நாட்களில் திரும்பி வருவேன் ஆர்மாண்டா” என்றான் ஜிம்.

முனகியபடி சோது எழுந்து கொண்டு, கால்சட்டைகளை மாட்டிக் கொண்டான்.

“என்ன மட்டரகமான வேலை. . .ஒரு நிமிடம் கூட ஓய்வில்லை.”

மேஜை  மீதிருந்து  ஜிம்  சிகரெட்டுகளை  எடுத்து  ஒன்றைப் பற்ற  வைத்துக்  கொண்டு  சிகரெட்  பாக்கெட்டை  தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

“எனக்கு ஒரு சிகரெட் கொடு”ஆர்மாண்டா கேட்டாள். அவளுடைய தொங்கிப் போன மார்பகத்தை உயர்த்தியவாறு வெளியே உடம்பை நீட்டினாள்.

அவளுடைய வாயில் ஒரு சிகரெட்டைப் பொருத்தி, அவளுக்காகப் பற்றவும் வைத்தான். பிறகு சோதுவுக்கு ஜாக்கெட் போட்டுக் கொள்ள உதவினான்:  “நாம்  கிளம்பலாம் சார்ஜண்ட்”

“இன்னொரு சமயம் ஆர்மாண்டா”  சோது சொன்னான்.

“அதுவரை ஆஞ்சலோ”  என்றாள் ஆர்மாண்டா.

“அதுவரை? ஆர்மாண்டா” சோது மீண்டும் சொன்னான்.

“பார்க்கலாம் ஜிம்.”

அவர்கள் வெளியே சென்றார்கள். உடைந்து போன சோஃபாவின் விளிம்பில் எக்குத்தப்பாய் படுத்தபடி நடைக்கூடத்தில் லிலின் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் அசையக் கூட இல்லை.

பெரிய  படுக்கையின்  மீது  அமர்ந்தபடி  ஆர்மாண்டா  புகை பிடித்துக் கொண்டிருந்தாள். ஏற்கனவே சாம்பல் நிற வெளிச்சம்  அறைக்குள்  வரத்  தொடங்கி  விட்டதால்  அவள் விளக்கை அணைத்தாள்.

“லிலின்!”அவள் கூப்பிட்டாள், “வந்து விடு லிலின்!, படுக்கைக்கு வந்து விடு, லிலின் கண்ணா! வா!”

லிலின் அதற்குள்ளாக தலையணையையும் சாம்பல் கிண்ணத்தையும் சேகரித்துக் கொண்டிருந் தான்.

Adventures of a Crook [from Difficult Loves Martin Secker &Warburg] Translated by William Weaver

reader4calvinolevenko_ivan

ஒரு திருமணமான தம்பதியினரின் சாகசம்

இடாலோ கால்வினோ

தமிழில் பிரம்மராஜன்

காலை  ஆறு  மணிக்கு  முடியக்கூடிய  இரவு  ஷிஃப்டில் இருந்தான்  ஆலைத்  தொழிலாளியான  ஆர்துரோ மேசோலரி.  வீட்டை  அடைய  அவன்  நீண்ட  தூரம்  செல்ல வேண்டி யிருந்தது.  நல்ல  சீதோஷ்ண  நிலையில்  அவன்  இதை சைக்கிளிலும்,  மழை  மற்றும்  குளிர்  மாதங்களில்  ட்ராம் வண்டியிலும் கடந்தான்.  ஆறு  நாற்பத்தைந்துக்கும்  ஏழு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீட்டை அடைந்தான். அவனுடைய  மனைவியான எலைட்-ஐ எழுப்புவதற்கான அலாரம்  கடிகாரம்  ஒலிப்பதற்கு  சில  சமயங்களுக்கு  முந்தியும் சில சமயங்களில் பிந்தியும்.

பல  சமயங்களில்  இந்த  இரண்டு  சத்தங்களும்– கடிகாரத்தின்  சத்தம்  மற்றும்  அவன்  உள்ளே நுழையும் காலடிச் சத்தம்–எலைடின் மனதில் ஒன்றன் மீது ஒன்றிணைந்து,  அவளை  அவளுடைய  தூக்கத்தின் ஆழங்களில் சென்றடைந்தது –அவள் முகம் தலையணையில் புதைந்தபடி, கூடுதலாக   அவள்   இன்னும்   பிழிந்து   எடுத்துவிட  முயன்ற காலை நேர கச்சித உறக்கம்.  ஒரு வெடுக்கென்ற இழுப்புடன்  அவள்  தன்னை  படுக்கையிலிருந்து  விடுவித்துக் கொண்டாள்.  அதற்குள்ளாக  கண்ணை  மூடியபடியே அவளது அங்கிக்குள்  கைகளை  நுழைத்தாள்.  அவளுடைய தலை முடி அவள்  கண்களை  மறைத்துக் கொண்டிருக்கும். அவள் அப்படித்தான்  அவனுக்குக்  காட்சியளித்தாள்–சமையலறையில், அவன்  வேலைக்குத்  தன்னுடன்  எடுத்துச் சென்ற  காலியான  பாத்திரங்களை  பையிலிருந்து  வெளியில் எடுத்து வைக்கும் சமயத்தில்.  மதிய  உணவு  பாத்திரம், ஃபிளாஸ்க். அவற்றை அவன் பாத்திரம் கழுவுமிடத்தில் வைத்தான். அவன் ஏற்கனவே ஸ்டவ்வைப் பற்ற வைத்து காபி தயாரிக்கத் தொடங்கியிருந்தான். அவன் அவளைப் பார்த்தவுடனே, எலைட் உள்ளுணர்வு பூர்வமாய்  அவளுடைய  கேசத்திற்குள்  ஒரு கையை நுழைத்தாள். கண்களை கட்டாயமாக அகன்று திறக்க முயன்றாள். அவள் கணவன் வீட்டை அடைந்தவுடன்  அவனுக்குக்  கிடைக்கும்  முதல்  தரிசனம்,  அவள்  முகம்   பாதி  தூக்கக்  கலக்கத்தில்  இருந்தபடி எப்போதுமே அவ்வளவு தாறு மாறாக இருப்பது குறித்து ஒவ்வொரு தடவையுமே அவமானமடைந்தது போல் உணர்ந்தாள்.   இரண்டு  நபர்கள்  ஒன்றாகத் தூங்கியிருந்தால் அந்த  விஷயமே  வேறுதான்,  காலையில்  இரண்டு   பேருமே ஒரே  உறக்கத்தின் ஆழத்திலிருந்து மேற்புறத்தை அடைகின்றனர், மேலும்  அப்போதுதான் அவர்கள் சரி சமமானவர்களாக இருக்கின்றனர்.

இதற்கு மாறாக, அலாரம் கடிகாரம் ஒலிக்கத் தொடங்குவதற்கு ஒரு வினாடிக்கு முன்னால் சில சமயங்களில், ஒரு சிறிய கோப்பை காபியுடன் அவளை எழுப்புவதற்கு வந்தவன் அவன்தான். அதற்குப் பிறகு சகலமும் இயல்பான தாகிவிடும். தூக்கத்திலிருந்து வெளிப்படும் போது உண்டாகும் முகச்சுளிப்பு ஒருவிதமான சோம்பல்தனமான இனிமையைக் கொண்டதாகிவிடும். நிர்வாணமாய், சோம்பல் முறிக்க நீண்ட கைகள் அவனுடைய கழுத்தைக் கட்டிக் கொள்வதில் முடிந்தன. அவர்கள் தழுவிக் கொண்டார்கள். ஆர்துரோ மழை நுழைய முடியாத விண்ட்சீட்டர் அணிந்து கொண்டிருந்தான். அவனை மிக அருகில் உணர்ந்த அவளால் சீதோஷ்ணம் எப்படி இருந்தது  என்பதைப்  புரிந்து  கொள்ள முடிந்தது. மழை பெய்து கொண்டிருந்ததா, அல்லது பனிப்புகை மூட்டமாக இருந்ததா, அல்லது திரள்பனி வீழ்ந்து கொண்டிருந்ததா என்பதை  அவன்  எந்த  அளவுக்கு  ஈரமாக  இருந்தான்  அல்லது ஜில்லிட்டிருந்தான் என்பதை வைத்துத் தெரிந்து கொண்டாள். ஆனாலும்  கூட  அவள்  அவனைக் கேட்பாள்: “வானிலை எப்படி இருக்கிறது?” அவனுடைய வழக்கமான  முணு முணுப்புகளை  அவன்   தொடங்குவான். பாதி எதிர்மறைத் தன்மையுடன், அவன்  சந்தித்த  எல்லாப்  பிரச்சனைகளையும்   மறுபரிசீலனை செய்தவாறு,  முடிவிலிருந்து தொடங்கினான்.  அவனது சைக்கிள் பயணம், தொழிற்சாலையை விட்டு வெளியே வந்தவுடன் அவன் கண்ட வானிலை, அதற்கு முந்திய நாள் மாலையில் நுழையும் போதிருந்ததை  விட  வேறு மாதிரியாக  இருந்ததை,  வேலையில் அவனுக்கிருந்த பிரச்சனைகளை, அவனுடைய பிரிவில் உலவிக் கொண்டிருந்த வதந்திகளை, இப்படி இன்னும் பலவற்றை.

அந்த மணி நேரத்தில்  வீடு  எப்போதுமே மிகக் குறை வாகவே சூடுபடுத்தப்பட்டிருந்தது.  ஆனால் எலைட் முற்றிலுமாய்  உடைகளைக்  களைந்து  விட்டிருந்தாள்.  அவள் அந்த  சிறிய  குளியலறையில்  சுத்தம்  செய்து  கொண்டிருந்தாள். பிற்பாடு  அவன்  உள்ளே  வந்தான்  கூடுதலான  நிதானத்துடன். அவன்  தன்  உடைகளைக்  களைந்து  குளித்தான்.  நிதானமாக, தொழிற்சாலையின்  தூசி  மற்றும்  கிரீஸ் போன்றவற்றை அகற்றியபடி.  எனவே, இருவரும்   ஒரே  பேசினுக்கு  அருகில் பாதி  நிர்வாணமாய்  நின்று  கொண்டு,  சிறிது  குளிரில் உறைந்து போய், ஒவ்வொரு சமயம் ஒருவரை ஒருவர் இடித்தபடியும் தள்ளியபடியும், ஒருவரிடமிருந்து மற்றவர்  சோப், பற்பசையை வாங்கிக்  கொண்டு  அவர்கள்  ஒருவருக் கொருவர்  சொல்லிக் கொள்ள  வேண்டிய  அவசியமானவற்றை  தொடர்ந்து சொல்லிக் கொண்டார்கள். மிக நெருக்கமான கணம் வந்தது.  சில  சமயங்களில்,  ஒரு வேளை  முறை வைத்து உதவிகரமாக  ஒருவர் முதுகினை மற்றவர்  தேய்த்து  விடும்  சமயம்  ஒரு  கொஞ்சுதல் உள் நுழைந்தது. அவர்கள் இருவரும் அணைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் திடீரென்று எலைட் உரக்கக் கத்துவாள் : “ஓ! கடவுளே! நேரம் என்ன பார்?” அவள்  ஓடுவாள் மிக அவசரத்தில் அவளுடைய காலுறையைக் கட்டும் இடுப்பு பெல்ட்டையும் பாவாடையையும் எடுத்துக் கொள்ள.  நடந்தபடி, இன்னும் தலை முடியை வாரியபடி, அவளுடைய முகத்தை டிரஸ்ஸிங் டேபிளின் கண்ணாடி முன்னால்  நீட்டியவாறு, ஹேர்பின்களை உதடுகளுக்கிடையில் இடுக்கிக் கொண்டிருப்பாள்.  ஆர்துரோ  அவளுக்குப்  பின்னால் வருவான். சிகரெட் புகைந்து கொண்டிருக்கும். அவளைப் பார்ப்பான், நின்று கொண்டு, புகைபிடித்தபடி, ஒவ்வொரு சமயமும் தர்மசங்கடத்துக்கு உள்ளானவன் போலத் தோன்றுவான், அங்கே  எதையும்  செய்ய  முடியாமல் நின்று கொண்டிருப்பதற்காக.  எலைட்  தயாராகி விட்டாள். காரிடாரில் அவளுடைய கோட்டினைப் போட்டுக் கொண்டாள். அவர்கள் ஒரு முத்தத்தைப் பரிமாற்றிக் கொண்டார்கள். அவள்  கதவைத் திறந்தாள்.  ஏற்கனவே  அவள் படிகளின்  வழியாக  இறங்கி  ஓடுவதைக்  கேட்க முடிந்தது.

ஆர்துரோ தனியாக இருந்தான். படிகளின் வழியாக எலைடின்  காலடிச்  சத்தங்களை  அவன் தொடர்ந்தான். மேலும் இனியும் அவன் சப்தங்களைக் கேட்க முடியாத போதும் அவன்  அவளை  அவனுடைய  சிந்தனைகளின்  வழியாகத் தொடர்ந்தான். முற்றத்தின் ஊடாக அந்த சிறிய காலடி வைப்புகள்,  பிறகு  கட்டிடத்தின்  கதவுக்கு  வெளியிலாக, பிறகு நடைபாதையில்.  ட்ராம்  வண்டியின்  நிறுத்தம்  வரையில்.   மாறாக ட்ராம் வண்டியின் ஓசையைத் தெளிவாகக்  கேட்க  முடிவதாக  இருந்ததுஙி கிறீச்சிட்டபடி, நின்ற வண்ணம், ஒவ்வொரு பயணி மேலேறும் பொழுதும்  படாரென்று  அடித்துக்  கொண்ட  படிகள்.  அதோ அங்கே, அவள் ட்ராமைப் பிடித்து விட்டாள். தொழிலாளர் கூட்டம் மற்றும் ஆண்கள் பெண்களால் ஆன கூட்டத்திற்கு மத்தியில் ட்ராமில் தொங்கு பிடியைப் பிடித்துக் கொண்டிருக்கும் அவளை அவனால்  பார்க்க  முடிந்தது.  அந்த  ஒவ்வொரு  நாளும்  அவனை   தொழிற்சாலைக்கு   இட்டுச்  சென்ற  அந்த பதினோறாம்  நம்பர்  ட்ராம்  வண்டியில்.  சிகரெட்  முனையை அழுத்தி  அணைத்துவிட்டு,  ஜன்னல்களின் ஷட்டர்களை மூடி, அறையை இருட்டாக்கிக் கொண்டு படுக்கையில் படுத்தான்.

எலைட் விழித்த போது விட்டுச் சென்றபடிதான் படுக்கை இருந்தது. ஆனால் ஆர்துரோவின் பகுதி ஏறத்தாழ களையாமல் இருந்தது,  ஏதோ  இப்பொழுதான்  சரிப்படுத்தி வைத்தது போல. அவனுடைய பாகத்திலேயே அவன் சரியாகப் படுத்துக் கொண்டான்.  ஆனால்  பிறகு  அங்கே  ஒரு  காலை  நீட்டினான் –அவன்  மனைவியின்  கதகதப்பு  இன்னும்  நிலைத்திருந்த இடத்தில்.  பிறகு  மற்றொரு  காலையும்  கூட  அவன்  நீட்டிக் கொண்டான்.  இவ்வாறு  சிறிது  சிறிதாக  அவன்  எலைடின் பகுதிக்கு  முற்றிலுமாக  நகர்ந்து  கொண்டான்– அவளுடைய உடலின் வடிவத்தை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருந்த அந்த கதகதப்பின் மூலைக்கு. பிறகு  அவன் அவளுடைய தலையணையில்  முகத்தைப் புதைத்து, அவளுடைய வாசனையில்  புதைந்து, அப்புறம்  உறங்கிப் போனான்.

மாலையில் எலைட் திரும்பிவந்த பொழுது, ஆர்துரோ ஏற்கனவே அறைகளில் சிறிது நேரமாக நடமாடிக் கொண்டிருந்தான். ஸ்டவ்வைப் பற்றவைத்து அவன் எதையோ வேகப் போட்டிருந்தான்.  இரவு  உணவுக்கு  முந்திய  மணி நேரங்களில்  சில  காரியங்களை  அவன் செய்தான். படுக்கையைச் சரி செய்தல், கொஞ்சம் வீடு கூட்டுதல், அழுக்குத் துணிகளை  நனைத்து  வைப்பது  இப்படி.  எல்லாவற்றையும் எலைட் குற்றம் சொன்னாள்.  நிஜத்தைச் சொல்வதானால் அவன் அதிகப் பிரயாசை எடுத்துக் கொள்ளவில்லை. அவன் செய்தது என்னவென்றால் அவளுக்காகக் காத்திருப்பதற்கான ஒரு சடங்கு.  வீட்டுச் சுவர்களுக்குள்ளிருந்தபடியே அவளை பாதி வழியில் சந்திப்பது போன்றதானது.  வெளியில்  விளக்குகள் எரியத் தொடங்கியிருந்தன. அந்த அருகாமைப் பகுதிகளின் தாமதித்த சந்தடிகளுக்கிடையிலிருந்த கடைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தாள். அங்கே பல பெண்கள் மாலையில் கடைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

இறுதியில் படிகளில் அவளது காலடிச் ஓசைகளைக் கேட்டான். காலையில் கேட்டதிலிருந்து மிக வேறுபட்டதாக, கனத்ததாக,  கனம்  கூடியதாக  அது  இருக்கிறது.  காரணம் எலைட் மேலே  ஏறிக்  கொண்டிருக்கிறாள்–நாளின் வேலையால் சோர்ந்து  போய்,  கடைப்  பொருள்களினால்  பாரமேற்றப்பட்டு. ஆர்துரோ படியிறங்கும் தளத்திற்கு சென்றான். கடைப் பையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான். அவளுடைய கோட்டைக் கூட கழற்றாமல் சமயல றையிலிருந்த நாற்காலியில் சரிந்தாள்–அவன் பையிலிருந்த பொருள்களை வெளியே எடுத்து வைத்தான். பிறகு அவள் சொல்லுவாள்: “சரி. நாம் நம்மை சுதாரித்துக் கொள்வோம்”.  பிறகு  எழுந்து  நின்று, கோட்டைக் கழற்றிவிட்டு, வீட்டில் அணியும்  உடையைப்  போட்டுக்  கொண்டாள்.  அவர்கள் உணவு தயாரிக்கத் தொடங்குவார்கள். இருவருக்குமான  இரவு  உணவு,  ஒரு  மணி  இடைவேளையில் அவன் சாப்பிடுவதற்காக தொழிற்சாலைக்கு  எடுத்துச்  செல்ல  வேண்டியது,  மற்றும் அடுத்த நாள் காலையில் விழிக்கும் போது தயாராக வைக்க வேண்டிய நொறுக்குத் தீணி.

அவள் சிறிது அங்குமிங்குமாக நடப்பாள். பிறகு பின்னிய நாற்காலியில் சிறிது நேரம் உட்கார்ந்து அவன் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுவாள். மாறாக அவனுக்கு இதுதான் ஓய்வெடுத்துக் கொள்ளும் நேரம். இப்பொழுதுதான் ஒரு வித தீர்மானத்துடன் இயங்கினான். வாஸ்தவமாக அவன் எல்லாவற்றையும் செய்ய விரும்பினான்–ஆனால் எப்பொழுதுமே சிறிது கவனக் குறைவாக. அவன் மனம் ஏற்கனவே பிற விஷயங்களில் லயித்திருந்தது. அம்மாதிரி கணங்களில், ஒருவர்  மீது  ஒருவர்  கோபப்பட்ட சந்தர்ப்பங்களும்  வசைகள் பறிமாறிக் கொண்டதும் உண்டு. காரணம் அவன் செய்கிற வேலையில் இன்னும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமென்று அவள் விரும்புவாள். விஷயங்களை அவன் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்று, கூடுதலான  நெருக்கத்துடன்  இருக்க  வேண்டு மென்று,  அல்லது அவளை ஆறுதல் படுத்த வேண்டுமென்று. ஆனால் அவள் வீட்டுக்குள் வந்த முதல் உத்வேகத்திற்குப் பிறகு அவன் சீக்கிரமாகவே கிளம்ப வேண்டுமென்பதால் அவன் விரைய வேண்டும் என்ற சிந்தனை யால் ஆக்கிர மிக்கப்பட்டிருந்தான்.

உணவு தயார் செய்யப்பட்டவுடன், தயாரிக்கப்பட்ட எல்லாப் பொருள்களும்–பிறகு எழுந்து கொள்ள வேண்டிய அவசியமில்லாதபடிக்கு–கையருகில் வைக்கப்பட்டவுடன், அவர்கள்  இருவரையும் மூழ்கடித்த ஏக்கத்திற்கான கணம் வந்தது.  ஒன்றாக  இருப்பதற்கான  நேரம்  அவ்வளவு  குறைவாய் இருப்பது   பற்றி  அவர்கள்  எண்ணினார்கள்.   அவர்கள் சாப்பிடும்   ஸ்பூனை  வாய்க்கு  உயர்த்துவதற்கே  இயலாத வர்களாய்  இருந்தார்கள்–அங்கே  அமர்ந்து  கைகளைப்  பற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஏக்கத்தினால்.

பாத்திரத்தில் காபி கொதித்து முடிக்கு முன்னால் அவனுடைய சைக்கிளுக்கு அருகில் வந்தான்–எல்லாம்  சரியாக இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள. அவர்கள் அணைத்துக் கொண்டார்கள்.  அப்பொழுதுதான் எவ்வளவு மிருது வானவளாகவும், கதகதப்பானவளாகவும் அவன் மனைவி இருக்கிறாள் என்பதை ஆர்துரோ உணர்ந்து கொண்டவன் போலிருந்தான்.  ஆனால்   அவன்  தோளுக்கு மேலே சைக்கிளைத்  தூக்கியபடி கவனமாகப்  படிகளில் கீழிறங்கி வந்தான்.

எலைட் பாத்திரங்களைக் கழுவினாள். அவள் கணவன் செய்திருந்த விஷயங்களை எல்லாம் திருத்தமாகச் செய்தபடி வீட்டின் எல்லாப் பகுதிக்கும் சென்றாள், தலையை ஆட்டியபடி. இப்பொழுது அவன் இருண்ட தெருக்களின் ஊடாக விரைந்து கொண்டிருந்தான்,  குறைந்த  விளக்குகள் கொண்ட தெருக்களில்.  ஒரு  வேளை  அவன்  ஏற்கனவே  வாயுமீட்டரைக் கடந்து சென்றிருக்கக் கூடும். எலைட் படுக்கைக்குச் சென்றாள். விளக்கை அணைத்தாள். படுத்தபடி அவளுடைய படுக்கைப் பகுதியிலிருந்து,  அவளுடைய  கணவனின்  பகுதிக்கு ஒரு  காலை  நீட்டுவாள்,  அவனுடைய கதகதப்பை எதிர்பார்த்து. ஆனால் ஒவ்வொரு தடவையும் அவள் உறங்கிய பகுதி கூடுதல் கதகதப்புடன் இருப்பதை உணர்ந்தாள். ஆர்துரோவும் கூட அந்த இடத்திலே தூங்கினான் என்பதற்கான அறிகுறி அது.  பிறகு  ஒரு அபரிமிதமான மென்மையுணர்வினை அவள் உணர்வாள்.•

Adventures of a Married Couple-from Difficult Loves-[Martin Secker& Warburg 1983] Translated  by William Weaver

reader4calvinolevenko_ivan

ஒரு கவிஞனின் சாகசம்

இடாலோ கால்வினோ

தமிழில் பிரம்மராஜன்

அந்த சிறிய தீவுக்கு உயர்வான பாறை மிகுந்த கடலோரம் அமைந்திருந்தது. அதன் மீது அடர்த்தியான, கடல் புறத்தில் வளரும் குட்டைச் செடிகள் வளர்ந்தன. கடல் காக்கைள் வானத்தில் பறந்தன. கரையோரத்திலிருந்த மனிதர் வசிக்காத, பயிர்செய்யப்படாத ஒரு சிறிய தீவு அது: அரை மணி நேரத்தில் ஒரு படகிலோ அல்லது இங்கே முன்னால் வந்து கொண்டிருக்கும் இவர்கள் பயன்படுத்தும் ரப்பர் தோணியிலோ உங்களால் சுற்றி வந்து விட முடியும். தோணியில் ஒரு மனிதன் அமைதியாகத் துடுப்பு போட்டுக் கொண்டிருக்கிறான். அந்தப் பெண் நீட்டிப் படுத்து வெய்யில் காய்ந்து கொண்டிருக்கிறாள். அருகில் வரும்போது அந்த மனிதன் உற்றுக் கவனிக்கிறான்:

“உனக்கு என்ன கேட்கிறது?” அவள் கேட்டாள்.

“நிசப்தம்”, அவன் சொன்னான்: “தீவுகளிடம் நம்மால் கேட்க முடியக்கூடிய நிசப்தம் உண்டு.”

நிஜத்தில், ஒவ்வொரு நிசப்தமுமே அதனைச் சுற்றி மூடியிருக்கும் பல சிறிய ஓசைகளின் தொடர்ச்சியால் ஆக்கப்பட்டிருக்கிறது: தீவின் நிசப்தம் அதனைச் சூழ்ந்திருக்கும் அமைதியான கடலினுடையதிலிருந்து தனித்துவம் கொண்டதாயிருந்தது. காரணம் கடல் ஒரு தாவர சலசலப்பு அல்லது பறவைகளின் அழைப்பு அல்லது சிறகுகளின் =விர்ரிடுத+லினால் படர்ந்து பரவிக் கிடக்கிறது.

பாறைக்குக் கீழே, இந்த நாட்களில் அலையே இல்லாத நீர் கூர்மையான, தெள்ளிய நீலநிறத்தில், அதனுடைய ஆழங்கள் வரையிலாக சூர்யக் கதிர்களால் துளைக்கப்பட்டிருந்தது. பாறை முகங்களில் குகைகளின் நுழைவுகள் தெரிந்தன. ரப்பர் தோணியில் அந்த ஜோடி நிதானமாக ஆய்வு செய்யச் சென்றது.

இன்னும் உல்லாசப் பயணங்களால் பாதிக்கப்படாமலிருந்த தெற்குப் பகுதியிலிருந்த கடற்கரை அது.  இந்த இரண்டு நீச்சல்காரர்களும் வேறு எங்கிருந்தோ வந்தவர்கள். அவன் பெயர் உஸ்நெல்லி.  ஓரளவுக்கு நன்றாகத் தெரிய வந்திருக்கிற ஒரு கவிஞன். அவள், டீலியா ஹெச். ஒரு மிக அழகிய யுவதி.

உணர்ச்சி மயமாக, கண்மூடித்தனமாகக் கூட தெற்கை ஆராதிப்பவள் டீலியா.  தோணியில் படுத்தபடி அவள் ஒரு மாறுதலற்ற பெருமகிழ்ச்சியில் கண்ணில் படுகிற சகலத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறாள். ஒரு வேளை உஸ்நெல்லியின் மீதான ஒரு  பகைமையின் சிறு தெரிவிப்புடன் கூட. இந்த இடங்களுக்கு அவன் புதியவன். அவளுடைய உத்வேக உணர்ச்சியை வேண்டிய அளவுக்கு அவன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதாக அவளுக்குத் தோன்றியது.

“பொறு”, உஸ்நெல்லி சொன்னான், “பொறு”.

“எதற்காகப் பொறுக்கணும்?” அவள் கேட்டாள். “இதை விட வேறு எது அழகாக இருக்க முடியும்?”.

(அவனுடைய இயல்பினாலும், அவனது இலக்கியப் படிப்பினாலும்) அவனுடையதையும், ஏற்கனவே பிறரின் உடைமையாக மாறிவிட்டிருந்த வார்த்தைகளையும் உணர்ச்சிகளையும் நம்பிக்கையின்றிப் பார்த்தான். வெளிப்படையானதும், சர்ச்சைக்கு அப்பாற்பட்டதுமானவற்றை விட மறைந்திருக்கிற, அவ்வளவு அசலாய் இல்லாத அழகுகளைக் கண்டுபிடித்துக் கொள்ளவே அவன் பழகி யிருந்தான்.  உஸ்நெல்லியைப் பொருத்தவரை சந்தோஷம் என்பது அந்தரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட  ஒரு நிலை,  அதை  அனுபவம்  கொள்ள  நீங்கள் மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும். டீலியாவைக் காதலிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து  அவனது  கவனமிக்க, இந்த  உலகுடனான  உறவு ஆபத்திற்குள்ளானதைக் கவனித்தான். ஆனால் அவன் எதையும் கைவிட்டு விட விரும்பவில்லை. தன்னையோ  அவன் முன் விரிந்த சந்தோஷத்தையோ. இப்போது அவன் ஜாக்கிரதையாக இருந்தான். அவனைச்  சூழ்ந்திருக்கிற  இயற்கை  அடைந்த ஒவ்வொரு  டிகிரி  பூரணத்துவமும்,  நீரின்  நீலம்  ஊற்றப்படுதல், கடற்கரையின் பசுமையானது சாம்பல் நிறத்திற்கு மாறுதலடைவது, கடலின் பெரும் பரப்பு மிகவும் மிருதுவாயிருந்த அதே இடத்தில் ஒரு மீனின் துடுப்பு மின்னல்– எல்லாமே வேறு ஒரு வருகையை அறிவித்தது–உயர்ந்த அளவில்.  இவ்வாறு  பலவாக, எங்கே அந்த கண்ணுக்குப் புலனாகாத தொடுவானத்தின் புள்ளி தெளிவாகத்  திறக்கும்  ஒரு முத்துச் சிப்பியைப் போல திடீரெனத்  திறந்து  வேறு  ஒரு உலகினையோ அல்லது புதிய வார்த்தையையோ வெளிக்காட்டும்.

அவர்கள் குகைக்குள் நுழைந்தனர்.  வெளிர்வான பச்சை நிறம்  கொண்ட  ஒரு  ஏரியின் உட்புறம் போல அது அகலமாகத் தொடங்கியது, ஒரு அகலமான பாறையின் விதானத்திற்கடியில். அதற்கப்பால் அது ஒரு  இருண்ட வழியாகச் சுருங்கியது.  கையில் துடுப்பு வைத்திருந்த அவன் தோணியை வளையவிட்டான் ஒளியின் வேறுபட்ட விளைவுகளை அனுபவிப்பதற்கு.  வெளிப்புற  வெளிச்சம், சீரற்ற துளை வழியாக, வர்ணங்கள் பின்னிய வேறுபாட்டினால் கூடுதலாக மிளிர்ந்தது. அங்கேயிருந்த தண்ணீர் ஜொலித்தது. ஒளிக் கற்றைகள் மேல்  நோக்கி தத்திப் பாய்ந்து கொண்டிருந்தன. பின்புறத்திலிருந்து பரவிய மிருதுவான நிழல்களுடன் முரண்பட்டன. பிரதிபலிப்புகளும், மினுங்கல் களும் பாறைச் சுவர்களுடன் செய்திப் பரிவர்த்தனை செய்தன–விதானத்துடன், நீரின் நிலையாமை பற்றி.

“இங்கே நீ கடவுள்களைப் புரிந்து கொள்கிறாய்”. அந்தப் பெண் சொன்னாள்.

“ஹம்”. உஸ்நெல்லி சொன்னான். அவன் படபடப் புடனிருந்தான். உணர்வுகளை வார்த்தையால் மொழிபெயர்க்கும்  வழக்கத்திலிருந்த  அவன்  மனம்,  இப்போது  ஏதும்  இயலாமலிருந்தது–ஒரு ஒற்றை வார்த்தையைக்  கூட உருவாக்க முடியாமல்.

அவர்கள் இன்னும் உள் நோக்கிச் சென்றார்கள்.  மீன் திரள்களைக் கடந்து சென்றது தோணி. பாறையின் திமிள் தண்ணீரின் உயரத்தில் இருந்தது. இப்போது  துடுப்பின் ஒவ்வொரு இழுப்பிற்கும் தோன்றி மறைந்து கொண்டிருந்த அபாரமான மினுங்கல்களைக் கடந்து தோணி மிதந்தது. மற்றதெல்லாம் அடர்ந்த நிழலாக இருந்தது. துடுப்பு சிறிது நேரத்திற்கொரு முறை பாறையைத் தட்டியது. டீலியா, திரும்பிப் பார்க்கையில் திறந்த வானத்தின் நீலநிற சுற்றுவட்டம் தொடர்ந்து விளிம்புகள் மாறுவதைக் கண்டாள்.

“ஒரு நண்டு! பெரியது! அதோ அங்கே!”, அவள் கத்தினாள் எழுந்து அமர்ந்து.

“. . . .ண்டு! . . . .ங்கே!”, எதிரொலி ஒலித்தது.

“எதிரொலி!” அவள் கூறினாள், சந்தோஷமடைந்தவளாக. பிறகு அந்த இருண்டு வளைந்த விதானங்களை நோக்கி வார்த்தைகளையும், வேண்டுதல் அழைப்புகளையும், கவிதை வரிகளையும் உரக்கக் கத்தத் தொடங்கினாள்.

“நீயும் செய்! நீயும் உரக்கக் கத்து! ஏதாவது வேண்டிக் கொள்!” அவள் உஸ்நெல்லியிடம் சொன்னாள்.

“ஹோ. . .” உஸ்நெல்லி கத்தினான். “ஹே. . . எதிரொலி!”

கொஞ்ச நேரத்திற்கொரு தரம் தோணி உரசியது. இருள் அடர்த்தியாயிருந்தது.

“எனக்குப் பயமாக இருக்கிறது. கடவுளுக்குத்தான் தெரியும் என்ன விலங்குகள். . . .”

“நாம் விரைவாகக் கடந்து விடலாம்.”

ஆழங்களில் வசிக்கும் மீன் ஒன்று சூர்ய ஒளி நிறைந்த நீரிலிருந்து தப்பித்துச் செல்வது போல தான் இருட்டை நோக்கிச் செல்வதாக உணர்ந்தான் உஸ்நெல்லி.

“எனக்குப் பயமாக இருக்கிறது. நாம் திரும்பிப் போய்விடலாம்.” அவள் அழுத்தமாகக் கூறினாள்.

அவனுமே கூட பயங்கரமான விஷயங்களில் ஈடுபாடற்றவன். அவன் பின்னோக்கி துடுப்பு போட்டான். குகை விரிந்த இடத்திற்குத் திரும்பிவந்தவுடன், கடல் கோபால்ட் நீலத்தில் தெரிந்தது.

“இங்கே ஆக்டோபஸ்கள் இருக்குமா?” டீலியா கேட்டாள்.

“இருந்தால் தெரியுமே. தண்ணீர் அவ்வளவு தெளிவாக இருக்கிறது.”

“அப்படியானால் நான் கொஞ்சம் நீந்தப் போகிறேன்.”

தோணியின் ஒரு பக்கத்தில் அவள் சரிந்திறங்கினாள், விடுபட்டு, அந்த பூமிக்கு அடியிலான ஏரியில் நீந்தினாள். அவளது உடல் சில நேரங்களில் வெண்ணிறத்தில் தெரிந்தது (அது ஏதோ வெளிச்சமானது அதற்குரித்தான எல்லா நிறங்களையும் களைந்துவிட்டது போல) மேலும் சில நேரங்களில் நீரின் திரையளவுக்கே நீலமாகத் தெரிந்தது.

துடுப்பு போடுவதை உஸ்நெல்லி நிறுத்திவிட்டான். அவன் இன்னும் ஸ்தம்பித்து நின்றான். அவனைப் பொருத்தவரை டீலியாவைக் காதலிப்பதென்பது எப்பொழுதுமே இப்படித்தான், இந்தக் குகையின் பிரதியாடியைப் போல! வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதொரு உலகம் அது. அதன் பொருட்டு அவன் (எழுதிய எல்லாவற்றிலும்)  ஒரு காதல் கவிதை கூட எழுதவில்லை. ஒன்றே ஒன்று கூட.

“கிட்ட வா”. டீலியா கூறினாள். அவள் நீந்தியபொழுது அவள் மார்பகத்தை  மூடியிருந்த   சிறு துணியைக் கூட எடுத்துவிட்டாள்.  அதைத் தோணியில் வீசினாள்.  “ஒரு நிமிஷம்.” அவள் இடுப்புப் பகுதியில் கட்டப்பட்டிருந்த இன்னொரு துண்டுத் துணியையும் கழற்றி உஸ்நெல்லியின் கையில் கொடுத்தாள்

இப்பொழுது அவள் நிர்வாணமாய் இருந்தாள். அவளது மார்பகம் மற்றும் இடுப்புப் பகுதிகளின் வெண்ணிற சருமம் வேறுபாடின்றித் தெரிந்தது, காரணம் அவளது முழு உடலும் அந்த வெளிர்ந்த நீலநிற தகிப்பினை வெளிப்படுத்தியது, ஒரு மெடுசாவைப் போல.  அவள் ஒரு பக்கமாக நீந்தினாள் ஒரு வித சோம்பலான இயக்கத்தில், அவளுடைய தலை (வெளிப்பாடு அழுத்தமாகவும் ஏறத்தாழ எதிர்மறைத்தன்மையுடன், ஒரு சிலையினுடையதைப் போல) மட்டும் நீருக்கு வெளியே இருந்தது.   சில  சமயங்களில்  அவளது  தோள்களின்  வளைவு மற்றும்  நீட்சி  பெற்ற  கைகளின்  மிருதுவான  நீட்சி  தெரிந்தது. இன்னொரு கை, ஒருவித வருடும் வீச்சுகளில், அவளது உயர்வான மார்பகங்களை மூடியும் தெளிவாக்கிய வண்ணமுமாக இருந்தது.  அதன் காம்புகள் நுனியில் விறைப்பாக  நின்றன.  அவளின்  மிருதுவான  வயிற்றைத் தாங்கிக் கொண்டிருந்த  கால்கள் நீரைத் தட்டவில்லை.  மணல்  மீது  மங்கலாகப்  பதிந்த  ஒரு மெல்லுடலியின் நட்சத்திர அச்சினைப் போல  வயிற்றினை குறியிட்டிருந்தது தொப்புள்.  நீருக்கடியில் பிரதிபலித்துக் கொண்டிருந்த சூர்யக்கதிர்கள், அவளை உரசின, அவளுக்கு ஒரு விதமான ஆடையைத் உருவாக்கியபடி, அல்லது மீண்டும் தொடக்கத்திலிருந்து அவளை நிர்வாணமாக்கியபடி.

அவளது நீச்சல் ஒரு விதமான நடனமாய்  மாறியது.  நீருக்குள் ஆடியபடி, அவனைப் பார்த்து  புன்முறுவல் பூத்தபடி, தோள்கள் மற்றும் மணிக்கட்டுகளின் ஒரு மெத்தென்ற உருட்டலில் அவள் கைகளை நீட்டினாள். அல்லது முட்டியின் ஒரு உந்தலில் தண்ணீரின் மேல் தளத்திற்கு மற்றொரு வளைவான காலைக் கொண்டு வந்தாள், ஒரு சிறு மீனைப் போல.

தோணியிலிருந்த உஸ்நெல்லி உடம்பெல்லாம் கண்ணாக இருந்தான். வாழ்க்கை இப்பொழுது அளித்திருப்பது வேறு எவருக்கும்  பார்க்க உரிமை  அளிக்கப்பட்டிராத ஒன்று என்பதை அவன் புரிந்திருந்தான், கண்கள் திறந்து, சூர்யனின் திணறடிக்கும்  மையப்பகுதியைப்  பார்ப்பது  போல.  அங்கிருந்து எதுவுமே அந்த கணத்தில் வேறு எதுவாகவும் மொழி பெயர்க்கப்பட முடியாததாய் இருந்தது,  ஒரு வேளை ஞாபகத்திற்குள்ளாகக் கூட.

இப்பொழுது டீலியா மல்லாக்க நீந்திக் கொண்டிருந்தாள், சூரியனை நோக்கியடி, குகையின் நுழைவாயிலில், திறந்த வெளியை  நோக்கி கைகளின் ஒரு வித லேசான இயக்கங் களுடன்.  அவளுக்குக்  கீழே  நீர்  அதன்  நீல  நிறத்தை மாற்றியபடி இருந்தது, இன்னும் வெளிறியபடி, கூடுதல் ஒளிகசிவினை அடைந்தவாறு.

“ஜாக்கிரதை! எதையாவது போட்டுக் கொள்! வெளியிலிருந்து சில தோணிகள் வருகின்றன!”

டீலியா ஏற்கனவே பாறைகளுக்கு மேலேயிருந்தாள், வானத்தினடியில். அவள் நீருக்கடியில் நழுவி,  கைகளை நீட்டினாள்.  உஸ்நெல்லி  அவளிடம் அந்த துண்டுத் துணிகளைக் கொடுத்தான். அவள் அவற்றை அணிந்து கொண்டாள். மீண்டும் நீந்தியபடி தோணிக்கு வந்து ஏறிக்கொண்டாள்.

நெருங்கி  வந்துகொண்டிருந்தவை  மீனவர்களின்  படகுகள். மீன் பிடிக் காலத்தை கடல்புறப் பாறைகளின் மீது தூங்கிக் கழித்த  ஒரு  குழு  என  உஸ்நெல்லி  அடையாளம்  கண்டான். அவன் அவர்களை நோக்கிச் சென்றான். துடுப்புப் பகுதியிலிருந்தவன்  ஒரு  இளைஞன்,  அவன்  முகம் பல்வலியால்  இறுகிப்  போயிருந்தது,  அவனது  குறுகலான கண்களின் மீது மாலுமியின் தொப்பி இழுத்து விடப்பட்டிருந்தது. உந்தித் தள்ளுதல் வகையில் துடுப்புப் போட்டுக்  கொண்டிருந்தான்  அவன்,  ஏதோ   அந்த  ஒவ்வொரு பிரயத்தனமும்  அவனது பல் வலியைக் குறைவாக உணர உதவியது போல.  ஐந்து  குழந்தைகளின்  தந்தை.  பரிதாபமான கேஸ்.   கிழவன்  படகின்  பின்கோடி  மேடைப்  பகுதியிலிருந்தான். ஓரப்பட்டையின் வெளிவட்டமுள்ள ஒரு மெக்ஸிக பாணி தொப்பி  அணிந்திருந்தான்,  அவன்  ஒரு  மெலிந்த  உடல்காரன்,  ஒரு காலத்தில் திமிர்த்தனமான தற்பெருமையில் இருந்த அகன்ற வட்டமான அவனது கண்கள், இப்பொழுது  குடிகாரக் கோமாளித் தனத்திலிருந்தன.  அவன் வாய்  இன்னும்  கறுப்பாக  இருந்து தொங்கலான மீசைக்கடியில் திறந்திருந்தது.  அவர்கள்  பிடித்திருந்த  நீள்  உருளை  மீனை ஒரு கத்தியைக் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தான்.

“நிறைய பிடித்தீர்களா?” டீலியா கேட்டாள்.

“எவ்வளவு குறைவாக இருந்ததோ அதையெல்லாம்,” அவர்கள் பதில் கூறினார்கள். “மோசமான வருடம்.”

டீலியாவுக்கு உள்ளூர் ஆட்களுடன் பேசுவதற்குப் பிடித்திருந்தது. ஆனால் உஸ்நெல்லிக்கு அப்படியல்ல.(“அவர்களைப் பொருத்தவரை”, அவன் சொன்னான், “எனக்கு ஒரு  அசௌகரியமில்லாத மனசாட்சி இருப்பதில்லை.” தோள்களைக் குலுக்கி விட்டு அத்துடன் விட்டு விடுவான்)

இப்போது படகின் அருகே இருந்தது தோணி. படகின் பெய்ண்டில் வெடிப்புகள் கோடுகளாக விழுந்து, சிறு பகுதிகளாக சுருண்டிருந்தன, மேலும் ஒரு கயிற்றில் துடுப்பு பொருத்துமிடத்தில் கட்டப்பட்டிருந்த துடுப்பு உளுத்துப் போன ஒரு பக்கத்து மரத்தின் மீது ஒவ்வொரு திருப்பலுக்கும் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தது. நான்கு கொக்கிகளுடன் துருப்பிடித்துப் போயிருந்த சிறிய நங்கூரம், பிளான்க்–சீட்டுடன் சிக்கிக் கொண்டிருந்தது ஒரு பிரம்புக் கூடை வளையில் சிவப்பு நிற கடல் தாவரம் தாடி போல நீட்டிக் கொண்டிருந்தது, காய்ந்து போய், கடவுளுக்குத்தான் தெரியும் எவ்வளவு காலமாக என்று. டேனின் கொண்டு சாயமேற்றப்பட்ட, ஓரங்களில் வட்டமான கார்க்கு சீவல்களினால் புள்ளியிடப்பட்ட வலை அடுக்குகளின் மேல் மூச்சுத் திணறும் மீன்களின் அழுத்தமான வாசனை கொண்ட செதில்கள் மின்னின–வெளிர்ந்த சாம்பல் அல்லது வெளுத்த நீலத்தில். இன்னும் துடித்துக் கொண்டிருந்த செவுள்கள் அடியில் ஒரு முக்கோண வடிவத்தில் குருதியைக் காட்டின.

உஸ்நெல்லி மௌனமாக இருந்தான். சிறிது நேரத்திற்கு முன்னால் இயற்கையின் சௌந்தர்ய மானது அவனுக்கு சொல்லிக் கொண்டிருந்த செய்திக்கு இந்த மனித உலகின் துன்பம் முரணாக இருந்தது! அங்கே எல்லா சொற்களும் செயலற்றுப் போயின. மாறாக இங்கே அவன் மனதில் சொற்களின் திரள் குழப்பம் நெருக்கியடித்தது. ஒவ்வொரு பாலுண்ணியும், சரியாக முகச்சவரம் செய்யப்படாதிருந்த அந்த வயோதிக மீனவனின் மெலிந்த முகத்திலிருந்த ஒவ்வொரு ரோமமும், நீள் உருளை மீனின் ஒவ்வொரு வெள்ளிநிற செதிலும்.

கரை மீது, வேறு ஒரு படகு மேலேற்றி நிறுத்தப்பட்டு, கவிழ்க்கப்பட்டு, அணைப்புச் சட்டங்களின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. கீழே, நிழலிலிருந்து, உறங்கும் மனிதர்களின்  காலணியற்ற  உள்ளங்கால்கள் வெளிவந்தன, இரவு மீன் பிடிக்கச் சென்றவர்கள் அவர்கள். அருகிலே, ஒரு பெண், அவள் உடை முழுவதும் கறுப்பு நிறத்திலிருந்தது, முகம் தெரியவில்லை, உலர்ந்த கடல் தாவரங்களினால் உண்டாக்கப்பட்ட  நெருப்பின்  மீது  ஒரு பாத்திரத்தை வைத்துக் கொண்டிருந் தாள். அதிலிருந்து ஒரு நீண்ட புகைக் கோடு வெளிவந்தது. அந்த நீள்குடாவின் கரை சாம்பல்நிறக் கற்களால் ஆகியிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் ஆடைகளின் அடர்ந்த நிறங்கள் திட்டுத் திட்டாக  வெளுத்துப்  போயிருந்தது.  சிறியவர்களை,  அழுகின்ற  தங்கச்சிகளை,  பெரிய குழந்தைகள் பார்த்துக் கொண்டன. வளர்ந்தவர்களின் பழைய கால் சட்டைகளிலிருந்து வெட்டித் தைக்கப்பட்ட கால் சட்டைகளை அணிந்திருந்த இன்னும் பெரிய, துடிப்பான பையன்கள் பாறைகள் மற்றும் தண்ணீருக்கிடையிலாக ஓடிக் கொண்டிருந்தனர். இன்னும் கொஞ்சம் தொலைவில் ஒரு நேரான மணற்பாங்கான பீச்சின் தொடர்ச்சி ஆரம்பித்தது. வெண்ணிறமாகவும் ஆளற்றுமிருந்த அது விவசாயம் செய்யப்படாத வயல்களுக்கிடையிலும், குறைவான நாணல் புற்கள் வளர்ந்த இடங்கள் வழியாகவும் அது மறைந்து போயிற்று. அவனது சிறந்த உடைகளிலிருந்த ஒரு இளைஞன், முழுவதும் கறுப்பு–அவனது தொப்பி கூட– அவனது தோளின் மீதிருந்த ஒரு குச்சியிலிருந்து ஒரு  பொட்டலம் தொங்க நடந்து கொண்டிருந்தான். அந்த பீச்சின் நீளத்தை கடலின் அருகாமையில் நடந்து கொண்டிருந்தான். அவனுடைய ஷ÷க்களின் ஆணிகள் வறுக்கப்படக் கூடிய கடினத்திட்டுகளை மணலில் ஏற்படுத்திக் கொண்டிருந்தன. உள்நாட்டுக் கிராமத்திலிருந்து கரைப்பகுதிக்கு மார்க்கெட்டுக்கோ வேறு எதற்கோ வந்து கடல் புற பாதையை அதன் காற்றுக்காகத் தேர்ந்தெடுத்திருந்த ஒரு விவசாயியாகவோ அல்லது இடையனாகவோ அவன் இருக்க வேண்டும். ரெயில் பாதையின் ஒயர்கள் தெரிந்தன, அதன் உயர்ந்த பகுதியும், அதன் கம்பங்களும், வேலியும் தெரிந்து பிறகு ஒரு குகைப் பாதையில் மறைந்து போயின.  சிறிது தள்ளி மீண்டும் தொடங்கி மறுபடியும் ஒரு முறை மறைந்து போயின. மறுபடியும் வெளித் தெரிந்தன ஒரு சீரற்ற தையலின் நூலைப் போல. நெடுஞ்சாலையின் கறுப்பு மற்றும் வெள்ளை நிற குறிகளுக்கு மேலே, குட்டையான ஆலிவ் மர வரிசைகள் தொடங்கின. இன்னும் உயரத்தில் மலைகள் வெறுமையாயிருந்தன, மேய்ப்பு நிலங்களோ, அல்லது குட்டைச் செடிகளோ, அல்லது வெறும் பாறைகளோ இருந்தன. இந்தப் உயரமான பாறைகளின் பிளவில் அமைந்திருந்த கிராமத்தின் வீடுகள் ஒன்றின் மேலே மற்றொன்றாய் கட்டப்பட்டிருந்தன.  கற்கள் பாவப்பட்ட படித் தெருக்களால்  பிரிக்கப்பட்டிருந்தன.  கோவேறு கழுதைகளின் சாணி  வழிவதற்கு  ஏதுவாய்  மத்தியில்  தெருவானது  உட்குழிவாக அமைக்கப்பட்டிருந்தது.. அந்த எல்லா வீடுகளின் வாசல்களிலும் எண்ணிக்கையற்ற பெண்கள் இருந்தார்கள், வயதான அல்லது வயது முதிர்ந்தவர்கள்–மேலும் கைப்பிடிச் சுவர் மீது வரிசையாக அமர்ந்திருந்தனர் இளைஞர்களும் வயோதிகர் களுமாக எண்ணிக்கையற்ற ஆண்கள். ஒரு படிக்கட்டின் நடுப்பகுதியைப் போலத் தோன்றிய  தெருக்களின் மத்தியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவர்களை விட வயதில் மூத்த இளைஞன் பாதையின் குறுக்காகப் படுத்திருந்தான், அவனது கன்னம் படியின் மேல் உரசியவாறு,  ஏனென்றால்  இங்கே வீட்டின் உள்பகுதியை விடக் குளிர்ச்சி யாகவும் நாற்றம் குறைவாகவும் இருந்தது. மேலும் பார்க்கும் இடமெங்கிலும் இறங்கியபடியோ அல்லது வட்டமடித்த
க் கொண்டோ கூட்டம் கூட்டமாக ஈக்கள் இருந்தன.  மேலும் ஒவ்வொரு சுவற்றின் மீதும், கனப்பு அடுப்பின் அருகிலிருந்த  தோரணம் போன்ற ஒவ்வொரு செய்தித் தாள் மீதும் ஈக்களின் எல்லையற்ற எச்சம் தெறித்துக் கிடந்தது.  உஸ்நெல்லியின்  மனதில்  வார்த்தைகள்  அடுத்து வார்த்தைகளாக வந்து கொண்டிருந்தன,  அடர்ந்து, ஒன்றுக்குள் ஒன்றாக  பின்னிக் கொண்டு, வரிகளுக்கிடையில் இடை வெளியே இல்லாமல், சிறிது  சிறிதாக  அவற்றை  அடையாளம்  கண்டு பிடிக்கவே  முடியாத  நிலை வரை.  அந்த  சிக்கலில்  மிகச்  சிறிய வெள்ளைப் பரப்புகள் கூட மறைந்து கொண்டிருந்தன. கறுப்பு நிறம்  மாத்திரமே  மிஞ்சி  நின்றது, மிகக் கரிய பகுதி, துளைத்துச் செல்ல முடியாத, ஒரு கதறலைப் போல நம்பிக்கையற்றதாய்.•

Adventures of a Poet, [from Difficult Loves, Martin Secker & Warburg  1983] Translated  by William Weaver

3Adventures_Calvino

3Adventures_Calvino

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: