Italo Calvino-காசனோவாவின் நினைவுக் குறிப்புகள்- Memoirs of Casanova

memoirs-of-casanova_calvioகாசனோவாவின் நினைவுக் குறிப்புகள்

இடாலோ கால்வினோ

தமிழில் பிரம்மராஜன்

——-என்ற இடத்தில் நான் தங்கியிருந்த காலம் முழுவதிலும் எனக்கு இரண்டு காதலிகள் இருந்தார்கள்:  அவர்கள்  கேட்  மற்றும்  இல்டா.  ஒவ்வொரு நாள் காலையிலும் கேட் என்னைப் பார்க்க வருவாள், இல்டா மதியத்தில் வருவாள். மாலைப் பொழுதுகளில் சமூக பங்கேற்புகளில் ஈடுபட நான் சென்றுவிடுவேன், மக்கள் நான் தனியே இருப்பது பற்றி வியப்படைந்தனர். கேட்  நல்ல உடற் கட்டு  அமையப் பெற்றவள், இல்டா ஒல்லியானவள். ஒருவரிடமிருந்து மற்றவரிடம் செல்லுதல் இச்சையைப்  புதுப்பித்தது, இது திரும்பச் செய்தலின் சலிப்பிற்கும் வேறுபடுதலுக்கும் ஒரே அளவுக்கு இட்டுச் சென்றது.

கேட் சென்ற உடன் அவளது எல்லாத் தடயங்களையும் நான் மறைத்தேன்; இதே போலத்தான் இல்டாவுடனும்; நான் நினைக்கிறேன் ஒருத்தி மற்றவளைக் கண்டு பிடித்துக் கொள்வதை நான் எப்போதுமே தடுத்து வைத்திருந்தேன், இருவரும் அதே சமயத்திலும், மற்றும் ஒரு வேளை அப்புறமாகவும் கூட.

வாஸ்தவமாக,  நான் சில சமயம் தடுமாறி விடுவேன். அவர்கள் ஒருவரிடம் சில விஷயங்களைச் சொல்லி விடுவேன்.  இதுவே   மற்றவளிடம்  சொல்லியிருந்தால்  வேறுவிதமாக அர்த்த மாகிவிடும்:  “உனக்குப் பிடித்தமான மலர்கள், இந்த ஃபியூஷியாக்களை மலர்ச்செண்டு விற்கும் கடையில் பார்த்தேன்”, அல்லது, “உன் நெக்லஸை எடுத்துக் கொள்ள மீண்டும் மறந்து விடாதே”, இவ்வாறு வியப்பினையும், கோபத்தினையும், சந்தேகத்தையும் தூண்டிவிட்டுக் கொண்டு. ஆனால் இந்த சாதாரண இடப்பொருத்தமின்மைகள், நான் நன்றாக ஞாபகம் வைத்திருக்கிறேன், அந்த இரட்டை உறவுகளின் தொடக்கத்தில் மாத்திரமே நிகழ்ந்தன; மிக விரைவிலேயே இந்த இரண்டு உறவுகளையும் தனிப்படுத்தக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு உறவும் அதனதன் போக்கில் சென்றது, அதனதன் உரையாடல்கள், மற்றும் பழக்க வழக்கங்களின் தொடர்ச்சியைக் கொண்டிருந்தது, எப்போதுமே மற்றதுடன் குறுக்கிடவில்லை.

தொடக்கத்தில் நான் நினைத்தேன் (நான் அப்போது, நீங்கள் பாராட்டுகிறபடியே, மிக இளவயதினனாக, அனுபவங்களைத் தேடிக் கொண்டிருந்தேன்) இந்த சல்லாபக் கலைகள் ஒரு பெண்ணிடமிருந்து மற்றவளுக்கு மாற்ற முடியக் கூடியதாக இருக்கும் என்று: இருவரும் என்னை விட அதிகம் தெரிந்து வைத்திருந்தார்கள், இல்டாவிடம் நான் கற்றுக் கொண்ட ரகசியங்களைக் கேட்டிற்குக் கற்றுத் தர முடியும் என்று நான் நினைத்தேன், இதை நிலையெதிர் மாற்றியும் கூட. நான் நினைத்தது தவறு:  தன்னிச்சையாகவும் நேரடியாகவும் இருக்கையில் விலைமதிப்பற்றதாக இருந்த விஷயங்களை நான் குழப்பியதுதான் மிச்சம்.  ஒவ்வொரு பெண்ணுமே அவள்  அளவில் ஒரு உலகமாய் இருந்தாள், மாறாக ஒவ்வொருத்தியுமே நான் நட்சத்திரங்களையும், கோளங்களையும்,  சுற்றுப்பாதை  களையும், கிரகணங்களையும், தாழ்வுகளையும், சந்திப்பு களையும், சூரியமண்டலத் திரும்புமுகங்களையும், பூமத்திய ரேகையைக் கடந்து செல்லும் காலங்களையும் அடியொற்றிச் செல்ல வேண்டிய வானமாக இருந்தாள். ஒவ்வொரு விண்வெளியும் அதற்குரிய இயக்கத்தினைக் கொண்டதாய் இருந்தது, அதனுடைய சூட்சும இயக்கத்தினையும் லயத்தினையும் கொண்டதாய் இருந்தது. கேட்டின் வானத்திலிருந்த நான் கற்றுக் கொண்ட வானசாஸ்திர கருது கோள்களை இல்டாவுக்கு பொருத்திப் பார்க்க முடியவில்லை.

இந்த இரட்டை வரிசைக்கு இடையில் இருந்த நடத்தை முறையிலிருந்த சுதந்திரமானது என்னுடைய விருப்பத் தேர்வாக இருக்கவில்லை என்பதை நான் மனந்திறந்து சொல்கிறேன்: கேட்- உடன்  ஒருவிதமாய் நடந்து கொள்ள நான் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறேன், இல்டாவுடன் வேறுவிதமாக. ஒவ்வொரு விதத்திலும் நான் உடனிருந்த சகவாசியினால் நிலைப்படுத்தப் பட்டேன், என்னுடைய உள்ளுணர்வு பூர்வமான தேர்வுகளும், முகச்சுளிப்புகளும் மாறும் அளவுக்கு. இரண்டு ஆளுமைகளும் எனக்குள் மாறுதலுக்கு உட்பட்டுக் கொண்டே இருந்தன; எந்த ஒரு நான், நிஜமான நான் என்று என்னால் கூறியிருக்க முடியாது.

நான் சொன்னது எல்லாம் உடலுக்கும் மனதிற்குமே பொருந்தும்:  ஒருவரிடம்  பேசிய  வார்த்தைகளை  மற்றவரிடம் திருப்பிச்  சொல்லி விட  முடியாது,  மேலும்  சீக்கிரமே  நான் உணர்ந்தேன் என் சிந்திக்கும் விதத்தினையும்  மாறுதலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டு மென்று.

என்னுடைய சாகசமான வாழ்க்கையின் பல திடீர்த் திருப்பங்களை திரும்பச் சொல்லவும், மறுஉயிர்ப்பூட்டவும் எனக்குள் தோன்றுகிற தூண்டுதலை நான் உணரும்போது, நான் சமூக சந்தர்ப்பங்களுக்காக நன்றாக உருவாக்கி வைத்திருக்கும் நடைமுறைப்படுத்தப்பட்ட வடிவங்களுக்கே இயல்பாகச் செல்கிறேன்–வார்த்தைக்கு வார்த்தை திரும்பச் சொல்லப்பட்ட அதனுடைய முழு வாக்கியங்ளுடன், விளைவுகளின் நிறுத்தங்கள்,  மற்றும்  விலகல்கள் வரை. ஆனால் சில சாகசங்கள் என்னை முன்பே தெரியாத நபர்களின் குழுக்கள் அல்லது சம்பந்தப்படாதவர்களின் சிலாகிப்பைப் பெறாமல் இருக்கவில்லை. ஆனால் இதையே கேட்டிடமோ அல்லது இல்டாவிடமோ சொல்ல வேண்டியிருந்திருந்தால் வேண்டிய அளவுக்கு மாற்றிச் சொல்ல வேண்டியிருந்திருக்கும். சிலவிதமான சொல்வெளிப்பாடுகள் மிகவும் இயல்பானதொரு இடத்தை கேட்டிடம் பெற்று விட்டாலும் நான் இல்டாவிடம் இருக்கும் போது தவறுதலாக ஒலித்தன; இல்டா உடனடியாக ஏற்றுக் கொண்டு திரும்பச் சொன்ன வசைத்துணுக்கு அல்லது சொல்வன்மையின் ஒவ்வொரு எழுத்தையும் திருத்தி நான் கேட்டுக்குச் சொல்ல வேண்டியிருக்கும், ஆனாலும் இல்டாவிடம் சலனத்தையே ஏற்படுத்தாத பிற ஜோக்குகளை அவள் ரசித்தாள்; சில சமயம் ஒரு கதையிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய முடிவுகள் இல்டாவிடமிருந்து கேட்டுக்கு மாறுபட்டன. இதன் காரணமாய்  நான்  என்  கதைகளுக்கு வேறு வேறு முடிவுகளைக் கொடுக்கத் தொடங்கினேன். இந்த வகையில்  நான்  என்  வாழ்க்கையின்  வேறுபட்ட  வடிவங்களை சிறிது சிறிதாக கட்டிக் கொண்டிருந்தேன்.

நகரின் முக்கியச் சந்திப்புப் புள்ளிகளில் திரிந்து அந்த நாளுக்கு முந்திய மாலையில் நான் பார்த்த, கேட்ட விஷயங்களை ஒவ்வொரு நாளும் கேட்டிடமும் இல்டாவிடமும் சொல்வேன்: வம்புப் பேச்சுகள், காட்சிகள், பிரபலங்கள், நடைமுறை ஃபேஷனிலிருந்த ஆடைகள், விநோத நடத்தைகள் வரை. வேறுபடுத்தப்படாத அறிவின்மையின் ஆரம்பக் காலத்து நாட்களில் காலையில் நான் கேட்டிடம் சொன்ன எல்லா விஷயங்களையும் வார்த்தைக்கு வார்த்தை இல்டாவிடம் திரும்பச் சொல்வேன்: ஜனங்களை ஈடுபாட்டுடன் வைத்துக் கொள்வதற்கு நிலையாக நான் வைத்துக் கொள்ள வேண்டிய  கற்பனா முயற்சியை என்னால் மிச்சப்படுத்த முடியும் என்று நான் நினைத்தேன்.  விரைவிலேயே நான் உணர்ந்தேன் அதே கதை ஒருவருக்கு ஈர்ப்பாக இருந்து மற்றவருக்கு பிடிக்காமல் போயிற்று, அல்லது இருவருக்கும் ஈர்ப்பளிப்பதாக இருக்குமானால், அவர்கள் கேட்ட தகவல்கள் வேறாகவும், அதே மாதிரி அவர்கள் அவற்றின் மீது அளித்த தீர்ப்புகளும் விமர்சனங்களும் வேறாகவும் இருந்தன.

அந்த மாதிரி சமயங்களில் நான் ஒரே விஷயத்திலிருந்து இரண்டு முற்றிலும் வேறுபட்ட கதைகளைத் தயாரிக்க  வேண்டி வந்தது: இது குறிப்பிட்ட வகையில் பிரச்சனைக்குரியதாக ஆகியிருக்காது, சில சமயம் ஒவ்வொரு மாலையும் பொருள்களுக்கு ஊடாக இரண்டு வேறுபட்ட வழிகளில் நான் வாழ வேண்டி வந்தது தவிர. அடுத்த நாள் காலையில் நான் சொல்ல வேண்டி வரும் கதைகளுக்குப் பொருந்திப் போகிற வகையில் எல்லா விஷயங்களையும் எல்லா மனிதர்களையும் கேட்டின் பார்வையிலிருந்தும், இல்டாவின் பார்வைக் கோணத்திலிருந்தும் நான் பார்ப்பேன். அவர்களின் இரண்டு வேறுபட்ட  தராதரங்களிலிருந்து  அவற்றைத்  தீர்ப்பளிப்பேன். பேசும் பொழுது  யாரோ  ஒருவரின்  ஒரே  ஒரு  சொல் வன்மைக்கு  இரண்டு விதமான பதில் அளிப்புகளை–ஒன்று இல்டாவுக்குப் பிடித்தது மற்றது கேட்டுக்குப் பிடித்தது –கொணர்வேன். ஒவ்வொரு பதிலடியும் பல மறுபதிலடிகளை உற்பத்தி செய்தன, அவற்றுக்கெல்லாம் மீண்டும் ஒரு முறை இரண்டு விதமாக பதில் அளிக்க வேண்டும். ஒருவர் அல்லது மற்றொருவருடன் நான் இருக்கும்போது இந்த பிளவுபட்ட ஆளுமை செயல்படுவதை உணரவே இல்லை, பெரும்பாலும் அவர்கள் அங்கே இல்லாத போதுதான் உணர்ந்தேன்.

அந்த இரண்டு பெண்களின் போர்க்களமாக மாறிற்று என் மனம். என் புத்திக்கு அப்பாற்பட்டு ஒருவரை ஒருவர் அறிந்திராத கேட்டும் இல்டாவும் எனக்குள்ளாக இருந்த எல்லைகளுக்காக மோதிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், ஒருவரை ஒருவர் நார் நாராகக் கிழித்துக் கொண்டும் இருந்தார்கள். என் இருப்பின் ஒரே இலக்காக இருந்தது இந்த இரண்டு எதிரிகளின் கடுமையான யத்தனத்திற்கு, (அவர்கள் இருவருக்குமே இது பற்றி எதுவுமே தெரியாது), இடமளிப்பவனாக இருப்பது என்பதுதான்.

அந்தக் காரணம்தான் நான் —– என்ற இடத்தை விட்டுச் செல்ல என்னைத் தயார்ப்படுத்தியது. அவசரமாக, என்றைக்குமே திரும்பி விடாமல்.

-2-

டர்சியை எனக்கு ஞாபகப்படுத்தியதால் நான் இர்மாவிடம் ஈர்க்கப்பட்டேன்.  நான்  அவளருகில் அமர்ந்தேன்: என் பக்கமாக அவளுடைய  உடலை சிறிதே திருப்ப வேண்டியதுதான், நான் ஒரு  கையை  அவள்  முகத்தின்  மீது வைப்பேன் (அவளிடம் நான் கிசுகிசுப்பேன், அவள் சிரிப்பாள்) டர்சியின்  மிக  அருகாமையில்  இருப்பதான  மாயை, குறிப்பிடத் தகுந்ததாக இருக்கும். இந்த மாயை ஞாபகங்களையும், ஞாபகங்களின் விருப்பங்களையும் எழுப்பியது.  ஏதோ  வகையில்  அவற்றை  இர்மாவுக்கு  மாற்றம் செய்யும் பொருட்டு அவள் கையை இறுகப் பற்றினேன். அவளுடைய தொடுதலும், அவள் தொடங்கிய விதமும் அவளுக்கே உரிய  வித்தியாசமானவளாக எனக்கு அவளை வெளிப்படுத்தியது.  மற்றதை விட இந்த  உணர்வானது  வலுவாக  இருந்தது. மற்றதை முற்றிலுமாக ரத்துசெய்து விடாமல், மற்றும் அதனளவில், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்தது. இர்மாவிடமிருந்து ஒருவிதமான இரட்டை  சந்தோஷத்தினை  நான்  பெற  முடியும்  என்று  நான் உணர்ந்தேன்: நான் இழந்து போன டர்சியை அவளின் ஊடாக நான் தேடுவதும், முன்பு அறிமுகமில்லாத ஒரு  இருப்பினால் நான் வியப்படைய என்னை நான்  அனுமதிப்பதும்.

ஒவ்வொரு விருப்பமும் அதன் வளைவுக் கோட்டினை நமக்குள்ளாக அடியொற்றிப் பின் செல்கிறது, உயர்ந்து, தடுமாறி, சிலசமயம்  கரைந்து  போகும் ஒரு கோடு.  இல்லாதிருந்த  அந்தப் பெண் எனக்குள் உருவாக்கிய கோடு, ஒரு வேளை அது தாழ்வதற்கு  முன்னர்,  தற்போதிருக்கும்  பெண்ணிடமிருந்த தேடலுணர்வின் கோட்டுடன் வெட்டிக் கொண்டது. அதன் மேல்  நோக்கிய  உந்தத்தை  இன்னும்  எல்லா வகையிலும் கண்டு பிடித்திராத விசை வீச்சு வலைவில் உமிழ்ந்தது. திட்டம் முயல்வதற்கு  தகுதி  உடையதாய்  இருந்தது. இரவில் என்னுடைய அறைக்கு அவளை வரச் சொல்லி அவளை ஒப்புக் கொள்ளச் செய்யும் வரை இர்மாவின் மீதான என் கவனத்தினை நான் இரண்டு மடங்காக்கினேன்.

அவள் அறைக்கு வந்தாள். அவள் உடையை சரிய விட்டாள். உள்ளே மிக மெல்லிய வெள்ளை மஸ்லின் ரவிக்கை அணிந்திருந்தாள், அதை காற்று படபடக்கச் செய்தது (அது வசந்த காலமாக இருந்ததால் ஜன்னல் கதவு திறந்திருந்தது).  அந்த சயமத்தில்தான் ஒரு வேறுபட்ட மற்றும் எதிர்பார்த்திராத நுட்பவிசை என் உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் பொறுப்பேற்றுக் கொள்வதை நான் உணர்ந்தேன். முழுமையான கவனத்தின் புலத்தையும் இர்மாதான் எடுத்துக் கொள்கிறாள், ஒரு திரும்பச் சொல்ல முடியாத நபராய், தன்னளவில் தனித்தன்மை மிகுந்தவளாய். எப்போதாவது என் மனதின் மேற்புறத்திற்கு வந்த டர்சியுடனான ஒற்றுமைகள் இடைஞ்சலாக அன்றி வேறு மாதிரி தெரியவில்லை. அதனாலேயே அவற்றை நான் துறக்க ஆர்வத்துடன் இருந்தேன்.

எனவே இர்மாவுடனான என் சந்திப்பு டர்சியின் நிழலுடனான எனது யுத்தமாக மாறியது. அவள் எங்களுக்கு இடையில் ரகசியமாக நுழைந்தபடி இருந்தாள். வரையறுக்க முடியாதது எனத் தோன்றிய இர்மாவின் சாராம்சத்தைக் கைப்பற்ற முயலும் ஒவ்வொரு சமயத்திலும், எங்களுக்கு இடையிலாக ஒரு வித நெகிழ்வான அருகாமையை–அது எல்லா விதமான பிற இருப்புகளையும் சிந்தனைகளையும் விலக்கி வைத்தது–நான் தோற்றுவித்துவிட்டேன் என்று உணரும் போது டர்சி திரும்ப வந்தாள். அல்லது டர்சியால் உருக்கொள்ளப்பட்ட கடந்த கால அனுபவம் திரும்ப வந்தது. நான்  அனுபவம் கொள்ளும் அந்த கணத்தின் மீது தனது பதிவினைப் பதிக்கவும், அதை நான் புதுமையானதாக உணர்வதையும் தடுத்தாள். இந்தப் புள்ளியில் டர்சியும், அவளது ஞாபகமும், அவள் என் மீது ஏற்படுத்திய பதிவும் உபத்திரவத்தையும், இடைஞ்சலையும், சலிப்பையுமே உண்டாக்கின.

விடியல் வந்து கொண்டிருந்தது, ஷட்டர்களின் திரைப்பட்டிகை வழியாக கருத்த முத்தின் கூரிய ஒளிக்கற்றைகளாக. எந்த விதமான சந்தேகத்திற்கு இடமின்றியும் இர்மாவுடனான அந்த இரவு அப்பொழுது முடியப் போவதல்ல என்பதையும், இதைப் போன்ற வேறு ஒரு இரவு, இன்னும் வர வேண்டிய ஒரு இரவு வரப் போகிறது அதில் நான் இர்மாவின் ஞாபகங்களை நான் வேறு ஒரு பெண்ணில் தேடுவேன். மீண்டும் அவளே கிடைக்கும் பொழுது துன்புறுவேன், அவளை மீண்டும் இழந்தவுடன், அவளிடமிருந்த என்னை விடுதலைப் படுத்திக் கொள்ள முடியாதிருக்கும்.

-3-

நான் டுல்லியாவை இருபது வருடங்கள் கழித்து மறுபடி கண்டு பிடித்தேன். கடந்த  காலத்தில்  எங்களை  ஒன்றாக்கிய சந்தர்ப்பம்  நாங்கள்  ஒருவரை  பிடித்திருக்கிறது என்று உணர்ந்த போது பிரித்து விட்டது. இறுதியாக இப்போது எங்களுக்கு இடையிலிருந்த உறவின் நூலினை, அது எங்கே துண்டாகியதோ அங்கிருந்து, மறுபடி எடுத்துக் கொள்ள அனுமதித்தது. “நீ மாறவே இல்லை,” நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்கிறோம். நாங்கள் சொன்னது பொய்யா? முழுமையாக அல்ல: “நான் மாறவில்லை”, நானும்  அவளும்  ஒருவருக்கொருவர்  புரிந்து  கொள்ளும் பொருட்டு சொல்லிக் கொள்ள விரும்பினோம்.

இந்த முறை நாங்கள் இருவரும் எதிர்பார்த்தபடியே உறவு வளர்ந்தது. முதன்  முதலில்  என்  கவனத்தை  முழுமையாகக் கோரியது  டுல்லியாவின்  முதிர்ச்சியான  அழகு.  பிறகுதான் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்  இளம்  டுல்லியாவை மறந்துவிடக் கூடாதென்று.  இரு டுல்லியாக்களுக்கும்  இடையே இருந்த  தொடர்ச்சியை  மீட்டுக்  கொள்ள  வேண்டி.  எனவே நாங்கள்  பேசிக்  கொள்ளும்  போது தன்னிச்சையாக எங்களுக்கு வந்த விளையாட்டினை விளையாடி, நாங்கள் பாசாங்கு செய்வோம் எங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரிவு வெறும் இருபத்தி நாலு மணி நேரங்கள்தானென்றும், இருபது வருடங்கள் அல்லவென்றும், மற்றும் எங்களுடைய ஞாபகங்கள் வஸ்துக்களுடனானவை, அவை ஒரு நாளைக்கு முன்பு உண்டானவையே  என்றும்.  அது மிக அழகாக இருந்தது, ஆனால் அது நிஜமாக  இருக்கவில்லை. அந்தக் காலத்தில் அவளுடன்  இருந்த என்னைப் பற்றிச் சிந்தித்தால், நான் இரண்டு அந்நியர்களை எதிர் கொண்டேன். நிறையவே வெது வெதுப்பையும், அன்பையும், மென்மையுணர்வையும் கூட அவர்கள் உண்டாக்கினார்கள். ஆனால் அவர்களைப் பொருத்த வரை நான் கற்பனை செய்தது தற்போது நானும்  டுல்லியாவுமாக இருந்தவர்களுடன் எந்த சம்மந்தமும் இல்லாதிருந்தது என்பதுதான்.

வாஸ்தவமாக, எவ்வளவு குறுகியதாக எங்கள் முதல் சந்திப்பு அமைந்து விட்டது என்பது பற்றி இன்னும் வருத்தப்பட்டுக் கொண்டோம். இழந்து போன வாலிபத்திற்கான இயல்பான வருந்துதலா அது? ஆனால் எனது இப்போதைய திருப்தி எந்த விதமான அதிருப்திக்கும் இடம் தரவில்லை. டுல்லியாவும் கூட, நான் அவளைத் தெரிந்து கொள்ளத் தொடங்கும் பொழுது, இந்த நிகழ்காலத்தினால் மிகவும்   ஆக்கிரமிக்கப் பட்டிருந்த  ஒரு பெண்ணாக  இருந்ததால்  தன்னை  அவள் இழந்ததற்கான வருத்தத்திற்கு உட்படுத்தவில்லை. முன்பு எங்களால் அடைய முடியாமல் இருந்தவற்றுக்கான வருத்தமா? ஒரு வேளை சிறிது இருக்கக் கூடும். ஆனால் முழுமையாக அல்ல. காரணம் (மீண்டும் நிகழ்காலம் எங்களுக்கு அளித்துக் கொண்டிருந்தவற்றிற்கான தனித்துவமான புத்துணர்ச்சி) நான் உணர்ந்தேன் (ஒரு வேளை தவறுதலாக) எங்களுடைய விருப்பம் உடனடியாகத் திருப்தி செய்யப்பட்டிருந்தால் அது எங்களுடைய இன்றைய சந்தோஷத்திலிருந்து ஏதோ ஒன்றை அகற்றியிருக்கும்.

ஏதோ ஒரு வகையில் அந்தப் பின்வருத்தம்,  அந்தப் பரிதாபமான  இளவயதுக்காரர்கள் சம்மந்தப்பட்டது அது. அந்தப் பிறர்கள், இழந்து போனவை இந்த உலகமானது ஒவ்வொரு ஷணத்திலும் மீட்டுக்கொள்ள முடியாதபடிக்கு இழந்து கொண்டிருக்கும் இழப்புகளின் ஒட்டு மொத்த தொகையுடன்  அது  சேர்க்கப்பட்டு விட்டது. எங்களது திடீரென உருவாக்கப்பட்ட செல்வ நிலையிலிருந்து, விலக்கி வைக்கப்பட்டவர்களின் மீது ஒரு கருணையுள்ள பார்வையை வீசியது உணர்ச்சிக் கலப்பற்றது என்று சொல்லிவிட முடியாது, காரணம், அது எங்களது சலுகைகளை நன்றாக அனுபவிக்க அனுமதியளித்தது.

டுல்லியாவுடனான என் உறவிலிருந்து இரண்டு விதமான முரண்பட்ட முடிவுகளை அடைய முடிகிறது. இருபது வருடங்களுக்கு முந்தியதான பிரிவை, நாங்கள் ஒருவருக்கொருவர் மீண்டும் கண்டுபிடித்துக் கொண்டதானது ரத்து செய்து விட்டது என்றும், நாங்கள் அடைந்த இழப்பினை அழித்து விட்டது என்றும்  ஒருவர்  சொல்லக்  கூடும். இதற்கு மாறாக முன் சொன்ன அனுபவம் இழப்பினைத் தீர்மானிக்கப்பட்டதாயும், வருந்தத்தக்கதாயும் ஆக்கிவிட்டது என்றும் ஒருவர் சொல்லக் கூடும். அந்த இருவரும் (அப்பொழுதிருந்து டுல்லியாவும் நானும்) ஒருவருக்கொருவர் என்றென்றைக்குமாக இழந்து விட்டிருந் தார்கள், மீண்டும் சந்திக்க முடியாதபடி. மேலும் பலனின்றி அவர்கள் வீணில் இன்றைய டுல்லியாவும் நானாகவும் இருக்கிற எங்களை உதவிக்கு அழைத்திருக்கிறார்கள், இருப்பினும் நாங்கள் (சந்தோஷமான காதலர்களின் சுயநலமானது எல்லையற்றது) அவர்களை மறந்து விட்டிருந்தோம்.

-4-

ஒரு  கையெழுத்துப்  போல  தனித்துத்  தெரியும்படி  ஒரு ஆளுமையின்  சாராம்சத்துடன்  பிணைக்கப்பட்டிருக்கும்  ஒரு கையசைப்பையோ, திரும்பத் திரும்ப வரும் சொல்வெளிப் பாட்டினையோதான்  மற்ற பெண்களைப் பொருத்தவரை நினைவு கூர்கிறேன்.   சோஃபியாவைப் பொருத்தவரை இது பொருந்தாது. அல்லது மாறாக, நான் சோஃபியாவைப் பற்றி விரிவான அளவில் நினைவு கொள்கிறேன், ஒரு  வேளை  மிகவும் அதிகபட்சமாக என்று கூட நினைக்கிறேன். விழி மூடிகள், ஆடுசதை, ஒரு பெல்ட், வாசனை செண்ட், பல தனிநபர் தெரிவுகள், மற்றும் நிலைப்பட்டுப் போன மன ஆக்கிரமிப்புகள், அவளுக்குத் தெரிந்திருந்த பாடல்கள், ஒரு தெளிவற்ற மனந்திறப்பு, மற்றும் சில கனவுகள். எல்லா விஷயங்களையும் என் ஞாபகம் சேகரிப்பில் வைத்துக் கொண்டிருக்கிறது, அவளுடன் இணைக்கிறது. ஆனால் அவை யாவுமே இழந்து போகக் கடவதாயின. ஏன் எனில் அவற்றை இணைக்கும் சரடினை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவற்றில் எவை நிஜமான சோஃபியாவைக் கொண்டிருக்கின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு தகவலுக்கு இடையிலும் ஒரு இடைவெளி இருக்கிறது. ஒன்றடுத்து ஒன்றாக எடுத்துக் கொள்ளும்  போது, அவளுக்குப் பொருந்துவது போலவே அவை வேறு பெண்களுக்கும் பொருந்தக் கூடியவையாக ஆக முடியும். காதல் செய்வதைப் பொருத்த வரை (நாங்கள் பல மாதங்களாக ரகசியமாக சந்தித்துக் கொண்டோம்) அது ஒவ்வொரு தடவையும் வேறுபட்டிருந்தது என்பதை நினைவு கூர்கிறேன். பழக்கத்தின் மழுங்கடிக்கும் விளைவுக்காக அச்சப்படும் என்னைப் போன்ற ஒருவனுக்கு இது நல்ல தன்மையான குணமாய் இருந்திருக்கக் கூடும். என்றாலும் கூட இப்பொழுது  அது ஒரு தவறாக மாறுகிறது.  காரணம்  ஒவ்வொரு  தடவையும்  வேறு  எவரையும் விட அவளிடம் என்னைச் செல்லத் தூண்டியது எதுவென ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஒரு வேளை அவளைப் பற்றி நான் புரிந்து கொள்ள விரும்பியது எல்லாமே, தொடக்கத்தில் அவளை நான் விரும்பினேனா இல்லையா என்பதுதான். இதன் காரண மாய்த்தான் நான் முதல் தடவையாக அவளைப் பார்த்தபொழுது கேள்விகளால் அவளைத் துளைத்து எடுத்தேன், அவற்றில் சில இசகுபிசகானவை. இந்தக் கேள்விகளைத் தவிர்ப்பதை விட–இதை அவள் எளிதாகச் செய்திருக்க முடியும்–என் ஒவ்வொரு கேள்விக்குமான பதிலில் எல்லாவிதமான தெளிவு படுத்தல்கள், விளக்கமூட்டல்கள், மற்றும் உள்குறிப்புகள் மூலமாக என்னை மூழ்கடித்தாள். இவை ஒரே சமயத்தில் சிதைவுற்றும்,  மையத்திலிருந்து விலகிச் செல்பவையாகவும் இருந்தன.  இந்த நேரத்தில் நானோ அவளுடன் என்னை சரிசமமாக வைக்கும் பொருட்டும், அவள் கூறுவதைக் கிரகித்துக் கொள்ளும்  பொருட்டும், மேலும் மேலும் தொலைந்து போனேன்.  விளைவு.  என் கேள்விகளுக்கு அவள் பதிலே அளிக்காதது போல ஆயிற்று.

வேறு ஒரு மொழியில் செய்திப் பரிமாற்றம் நிலைநாட்டு வதற்கு ஒரு வருடலைச் செய்யத் துணிந்தேன். இதன் எதிர் வினையாக சோஃபியாவின் இயக்கங்கள் யாவும்  எனது தாக்குதல்களை உள்வாங்கிக் கொண்டு தவிர்ப்பதிலேயே இலக்கு கொண்டிருந்தன, அவள் அவற்றை மிகச்சரியாக நிராகரிக்க வில்லை என்றாலும் கூட. இதன் விளைவாக அவள் உடலின்  ஒரு  பாகம்  என்  கையிலிருந்து  நழுவிச்  சென்ற கணத்தில்,  எனது விரல்கள் வழுக்கிக் கொண்டு வேறு ஒன்றிற்குச் செல்லும். அவளுடைய தவிர்த்தலானது ஒரே சமயத்தில் முழுமையற்றும் விரிவாகவும் இருந்த அவளுடைய சருமத்தினை ஆராய்ந்து கண்டு பிடிக்க என்னை இட்டுச் சென்றது. சுருக்கமாகச் சொன்னால், ஒரே அளவுக்குக் கோர்வையற்றிருந்தாலும், தொடுதல் மூலமாகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள், கேட்டல்களின் மூலமாகப் பதிவு செய்யப்பட்டவற்றின் அபரிமிதத்திலிருந்து எந்த வகையிலும் குறைந்து விடவில்லை.

எதுவும் மிச்சமிருக்கவில்லை–எங்களது அறிமுகத்தை எல்லா மட்டங்களிலும், உடனடியாகவும் ஆக்குவதற்கு. இந்த உலகம் நம் மீது திணித்திருக்கும் கண்ணுக்குத் தெரியக் கூடியதும், புலனாகாததுமான உடைகளை என் முன்னாலிருந்து களையும் இந்த நபர் ஒரு தனித்துவமான பெண்ணா? அல்லது ஒருவரிலேயே அடங்கிய பல பெண்களா? மேலும் என்னை ஈர்த்தது  இவர்களில்  எவர்? என்னைத் தள்ளி வைத்தது எவர்? ஒரு சந்தர்ப்பமும் என்றும் இருக்கவில்லை நான்  சோஃபியா விடமிருந்து  எதிர்பார்த்திராத  ஏதோ  ஒன்றினைக் கண்டு பிடிக்காதிருந்தது — நான் என்னைக் கேட்டுக் கொண்ட முதல் கேள்விக்குப் பதில் தருவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தன.  அவளை விரும்பினேனா இல்லையா?

இன்று  என்  ஞாபகத்தின்  வழியாகத் திரும்பிப் பார்க்கையில், மற்றொரு  சந்தேகம்  எழும்புகிறது.  ஒரு  பெண் தன்னிடமிருந்து  எதையுமே  மறைக்காத போதுதான் நான் அவளை முழுமையாகப் புரிந்து கொள்ளும் சக்தியற்றவனாகி விடுகிறேனா? அல்லது, சோஃபியா தன்னை அவ்வளவு அபரிமிதமாக  வெளிப்படுத்திக்  கொண்டதன்  மூலம்  அவளை நான்  கைப்பற்ற முடியாதபடிக்கு  ஒரு நுண்ணிய  யுக்தியைச் செயல்படுத்தினாளா?  எனக்கு நானே  சொல்லிக் கொள்கிறேன்: அவர்கள் எல்லோரிலும் தப்பித்துச் சென்றவள் அவள்தான், நான் அவளை அடையவே இல்லை என்பது போல. நான் நிஜமாகவே  அவளை  அடைந்தேனா?  மேலும்  எனக்கு  நானே கேட்டுக் கொள்கிறேன்: யாரை நான் நிஜமாக அடைந்தேன்? மற்றும் அதிகப்படியாக: அடைதல் எவரை? என்ன? அதற்கென்ன பொருள்?

-5-

மிகச் சரியானதொரு கணத்தில் நான் ஃபுல்வியாவைச் சந்தித்தேன். சந்தர்ப்பவசமாக அவளது இளம் வாழ்வில் நான்தான் முதல் ஆணாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக இந்த அதிர்ஷ்ட சந்திப்பு மிகச் சுருக்கமாய் அமைந்து விட நேர்ந்தது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை நகரத்தை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தின. நான் செல்ல வேண்டிய கப்பல் ஏற்கனவே துறைமுகத்தில் நின்றிருந்தது. அடுத்த நாள் காலை அது பயணமாக இருந்தது.

நாங்கள்  இருவரும்  ஒருவர்  மற்றவரை  மறுபடியும்  சந்திக்க மாட்டோம்  என்பதை  அறிந்திருந்தோம். மேலும்  இது ஒரு மாற்ற முடியாத விதிவசமானதின் பகுதி என்பதையும் இதே அளவுக்கு அறிந்திருந்தோம்.  எனவே நாங்கள் உணர்ந்த வருத்தம், வேறுபட்ட விகிதங்களில் இருப்பினும் மீண்டும் ஒரு தடவை வேறுபட்ட விகிதங்களில் காரணார்த்தத்தில் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது.  மிக லேசாகத் தொடங்கப்பட்ட எங்களது புதிய அறிமுகமானது துண்டிக்கப்படும் போது அவள் உணரப் போகிற வெறுமையை ஏற்கனவே அவள் அறிந்திருந்தாள். எனினும் இது திறந்து விடக்கூடிய சுதந்திரத்தையும்  அது  ஏற்படுத்தித்  தரும்  பல வாய்ப்புகளையும்  கூட  அறிந்திருந்தாள்.   இதற்கு  மாறாக  நான் எனது வாழ்வின் நிகழ்ச்சிகளை ஒரு  வித அமைவில்  வைக்கும்  பழக்கத்தைக் கொண்டிருந்தேன்.  அதில் நிகழ்காலம்  எதிர்காலத்தினிடத்திலிருந்து  வெளிச்சத்தையும்  நிழலையும் பெறுகிறது. இந்த விஷயத்தில் அந்த ஒரு எதிர்காலத்தின்  வீழ்வளைவுக் கோட்டினை என்னால் ஏற்கனவே அதன் வீழ்ச்சி வரை கற்பனை செய்ய முடிந்தது.  காமத்துவமிக்க  வாழ்க்கைத் தொழில் ஒன்றின் முழு மலர்ச்சியை நான் ஃபுல்வியாவுக்காக  முன்னோக்கியிருந்தேன், அதனை விழிப்பூட்ட நான் உதவி இருந்தேன்.

எனவே அந்தக் கடைசி சாகசங்களில், எங்களுடைய விடைபெறலுக்கு முன்பாக  சந்தேகத்திற்கிடமின்றி ஃபுல்வியா இனிமேல் அடையப் போகும் காதலர்களின் தொடர்ச்சியில் முதல் ஆளாக  நானே என்னைக் காண்பதைத் தவிர்க்க முடியவில்லை. முழுமையான கட்டுப்பாட்டு இழப்புடன் ஃபுல்வியா தன்னை சரண் செய்து கொண்ட உணர்ச்சிகளின் கடைசித் துணுக்கு வரை அவள் இன்னும் சிறிது வருடங்களில் ஆகப் போகிற பெண்மணியால் நினைவு கூறப்பட்டு மதிப்பீடு செய்யப்படும் என்பதை நான் உணர்ந்தேன். இப்போது விஷயங்கள் இருந்த நிலைமையில், ஃபுல்வியா என்னைப் பற்றிய எல்லாவற்றையும்  மதிப்பீடு செய்யாமலே  ஏற்றுக் கொண்டாள். ஆனால்  அந்த  நாள்  வெகு  தூரத்தில்  இல்லை,  அப்பொழுது அவளால்  என்னைப்  பிற ஆண்களுடன் ஒப்பீடு செய்ய முடியும். என்னைப்  பற்றிய  ஒவ்வொரு  ஞாபகமும்  இணைகோடுகளுக்கு உட்படுத்தப்படும், தனிப்படுத்தல்களுக்கும், மதிப்பீட்டு ஆய்வுகளுக்கும்.  என் முன்னால் இன்னுமே அனுபவமில்லாத  ஒரு  பெண்  இருந்தாள். அறியப்படக் கூடியவற்றுக்கெல்லாம்  பிரதிநிதித்துவம்  செய்பவனாக நான் அவளுக்கு இருந்தேன்.  எவ்வாறாயினும்  மேலும் விஷயங் களைக் கோரிக் கொண்டும், மயக்கம் தெளிவு பெற்றுமிருக்கும் நாளைய ஃபுல்வியாவால் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தேன்.

என்னுடைய முதல் எதிர்வினை ஒப்பிடுதல் பற்றிய பயமாக இருந்தது. ஃபுல்வியாவின் எதிர்கால ஆண்கள், நான் நினைத்தேன், அவர்களுடன் முழுமையாக அவளைக் காதலில் விழச் செய்யும் திறன் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று. என்னுடன் அவள் இப்படி இல்லை. சீக்கிரத்திலோ அல்லது தாமதித்தோ, எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய அரிய சந்தர்ப்பத்திற்குத் தகுதியற்றவனாக என்னைக் கருதுவாள். என்னைப் பற்றிய நினைவை  உயிர்ப்பூட்டி வைக்கக்கூடியதாக அவளுக்கு இருக்கக் கூடியவையாக  ஏமாற்றமும் கிண்டலுமே இருக்கும்.  எனக்குப்  பின் வரக்கூடிய பெயரற்றவர்களை எண்ணி நான் பொறாமைப் பட்டேன், அவர்கள் எல்லோருமே ஃபுல்வியாவை  என்னிடமிருந்து  அபகரித்துச்  செல்லத் தயாராக  ஏற்கனவே  பதுங்கிக்  கொண்டிருப்பதை  நான் உணர்ந்தேன்.  எனவே ஏற்கனவே அவளையும் நான் வெறுத்தேன், காரணம் விதியானது அவளை  மற்றவர்களுக்கென்று  ஏற்கனவே எழுதிவிட்டது. . . .

இந்த வலியிலிருந்து தப்பிக்க, எனது சிந்தனை ஓட்டத்தினைத் தலைகீழாகத் திருப்பினேன்–சுயபழித்தலில் இருந்து தற்புகழ்ச்சிக்கு. அது கடினமாக இருக்கவில்லை. சுபாவத்தில், தாழ்வானதை விட, நான் என்னைப் பற்றிய உயர்வான எண்ணத்தையே உருவாக்கிக் கொண்டேன். என்னை முதன் முதலாகச் சந்தித்ததில் ஃபுல்வியாவுக்கு ஒரு விலைமதிப்பற்ற அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஆனால் என்னை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதென்பது அவளை குரூரமான ஏமாற்றங்களுக்கு இட்டுச் செல்லும். எனக்குப் பிறகு அவள் சந்திக்கப் போகும் ஆண்கள், பலவீனர்களாகவும், கரடுமுரடான வர்களாகவும், சோம்பலாளர்களாகவும்,  புத்திக்கூர்மை குறைவானவர்களாகவும் தெரிவார்கள். சந்தேகத் திற்கிடமின்றி அவளது கபடற்ற தன்மையில் என்னுடைய நல்ல குணநலன்களை என் பால் சார்ந்தோரிடம் காணப்படும் பொது குணாம்சமாக இருக்கும் என்று அவள் கற்பனை செய்திருந்தாள். அவள் என்னிடத்தில் கண்டதை மற்றவர்களிடம் தேடுவது ஏமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை நான் கண்டிப்பாக எச்சரித்துவிட வேண்டும். அப்படிப்பட்டதொரு சந்தோஷமான தொடக்கத்திற்குப்  பிறகு  ஃபுல்வியா தகுதியற்றவர்களின் கைகளில் சிக்குவாள் என்கிற சிந்தனையின் பயங்கரத்தால் நடுக்கமுற்றேன். அவர்கள் அவளைத் துன்புறுத்துவார்கள், முடமாக்குவார்கள், சீரழிப்பார்கள். அவர்கள் யாவரையும் நான் வெறுத்தேன். முடிவாக அவளை வெறுப்பதில் இது சென்று முடிந்தது. காரணம் விதியானது என்னிடமிருந்து அவளைப் பறித்துக் கொண்டு அவளை ஒரு சீரழிவான எதிர்காலத்திற்குத் தள்ளிவிட இருந்தது.

ஒரு வழியிலோ அல்லது மற்றதிலோ, என்னைப் பிடிமானத்தில் வைத்திருந்த பெரும் உணர்ச்சி, நான் சந்தேகிக்கிறேன், என்றுமே “பொறாமை” என விளக்கமூட்டப்பட்ட ஒன்றாகும்.  இந்த மனரீதியான இடரிலிருந்து சந்தர்ப்பங்கள் என்னைப் பாதிக்கப்பட முடியாதவனாக ஆக்கியிருந்தன என்று கற்பனை செய்திருந்தேன். நான் பொறாமைக்காரன்தான் என்று நிரூபித்த பிறகு பொறாமையுள்ள மனிதனாகத்தான் என்னால் நடந்து கொள்ள முடிகிறது. ஃபுல்வியாவிடம் கோபப்பட்டேன்.  நாங்கள் பிரிவதற்கு சற்று முன்பாக அவள் அவ்வளவு அமைதியாக இருந்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறினேன். என்னை ஏமாற்றுவதற்கு அவளால் பொறுத்துக் கொள்ளக் கூட முடியவில்லை என்று அவள் மீது குற்றம் சாட்டினேன். அவளிடம் கருணையே இல்லாமல் நடந்து கொண்டேன், குரூரமாகவும். ஆனால் அவள் (சந்தேகமின்றி அவளது அனுபவமின்மை காரணமாக) எனது மனநிலையில் இருந்த மாற்றத்தினை இயல்பானது என எடுத்துக் கொண்டது மாதிரி தெரிந்தது. ஆகையால் தேவையில்லாமல் வருத்தப் படவில்லை. எங்கள் இருவருக்கும் இடையே மிச்சம் விடப்பட்டிருக்கிற நேரத்தை அர்த்தமில்லாத எதிர் குற்றச்சாட்டுகளில் வீணடிக்க வேண்டாம் என்று மிக புத்திசாலித்தனமாக அறிவுரை  கூறினாள்.

பிறகு அவளுடைய காலடியில் மண்டியிட்டேன். என்னை மன்னித்து விடும்படி கெஞ்சினேன். அவளுக்குத் தகுதியான துணையைக் கண்டு பிடித்த பிறகு என்னைக் கசப்பான முறையில் பழிதூற்ற  வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். நான் மறக்கப்படுவதை விடவும் பெரியதொரு சலுகை காட்டுதலை எதிர்பார்க்கவில்லை என்றேன். அவள் மிகவும் புகழ்ச்சியான வார்த்தைகளில் தவிர வேறு எந்த வகையிலும் எங்களுக்கிடையே நடந்தவற்றைப் பற்றி என்னைப் பேச அனுமதிக்கவில்லை. இல்லை என்றால் அது விளைவினைப் பாழடித்து விடுகிறது என்றாள்.

இது எனது சுயபிம்பத்தைப் பற்றிய மறுஉறுதிப்பாட்டுக்கு உதவியது. ஆனால் நான் ஃபுல்வியாவின் எதிர்கால விதியினைப் பற்றி  வருத்தமான இரக்கம் கொள்வதை எனக்கு நானே கண்டேன். மற்ற ஆண்கள் தகுதியற்றவர்கள். என்னுடன் அவள் அறிந்துணர்ந்த  முழுமையானது  மீண்டும்  எவரிடமும்  நிகழவே நிகழாது என்பதைக் கண்டிப்பாக நான் அவளுக்கு எச்சரிக்க வேண்டும்.  அவளும் கூட எனக்காக வருத்தப் பட்டதாக எனக்குப் பதில் அளித்தாள். நாங்கள் இருவரும் பிரிந்து போனவுடன் இழந்து விடுவோம். அதை வெளியிலிருந்து வரையறுத்துச் சொல்வதைக் கற்பனை செய்வதை விடவும் கொஞ்ச காலத்திற்குக் காப்பாற்றி வைக்க நாங்கள் இருவரும் அதில் எங்களை முழுமையாக மூழ்கடித்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு வெளியிலிருந்து நான் முடிவுக்கு வந்தேன், என்  கைக்குட்டையை என் கப்பலிலிருந்து அவளுக்கு ஆட்டிக் காண்பித்தேன். அப்போது கப்பலின் நங்கூரம்  மேலேற்றப்பட்டிருந்தது. அவள் என்னுடனிருந்த காலம் முழுவதற்கும் அவளை ஆட்படுத்திக் கொண்டிருந்த அனுபவமானது என்னைப் பற்றிய கண்டு பிடித்துக் கொள்ளல் அல்ல, காதல் மற்றும் பிற ஆண்கள் பற்றிய கண்டுபிடித்துக் கொள்ளலும் அல்ல, அது அவளைப் பற்றிய கண்டுபிடிப்பே. ஒரு முறை துவங்கப்பட்ட இந்தக் கண்டு பிடிப்பு, நான் அவளுடன் இல்லாதிருக்கும் காலத்திலும் என்றுமே நில்லாதது. நான் ஒரு கருவியாக மாத்திரமே இருந்திருக்கிறேன்.•

reader4calvinolevenko_ivan1a

Italo Calvino-Memoirs of Casanova-Numbers in the Dark tr.Tim Parks

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: