வாத்துக்களின் பறத்தலைப் போல-Like A Flight of Ducks-Italo Calvino

likeaflight

Calvino-Like Flight of Ducks

வாத்துக்களின் பறத்தலைப் போல

இடாலோ கால்வினோ

தமிழில் பிரம்மராஜன்

துப்பாக்கி வெடியோசை கேட்டு விழித்து தனது பலகைப் படுக்கையிலிருந்து  எகிறிக் குதித்தான்.  அந்த  நெரிசலில் எவரோ சிறை அறைகளின் கதவுகளைத் திறந்து விட்டுவிட்டனர்-அவ னுடையது உள்பட. தாடி வைத்த ஒரு பொன்னிறத் தோல் மனிதன், துப்பாக்கியை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டு அங்கே தோன்றினான்: ”சரி வாருங்கள், சீக்கிரம் வெளியேறுங்கள், உங்களை விடுதலை செய்தாகிவிட்டது.” நதாலேவுக்கு சந்தோஷமாக இருந்தது ஏனென்று புரிந்து கொள்ளாமலும் கூட. தான் அணிந்திருந்த ‘டி’-ஷர்ட்டுக்கு அடியில் அவன் அம்மணமாய் இருந்தான் என்பதை அவன் ஞாபகம் கொண்டான். அவனுடைய கால்களை ராணுவக் கால்சராய்க்குள் நுழைத்தான். அவன் வைத்திருந்த மாற்று உடை என்பது அது மட்டுமே. அவன் கால்கள் அதன் உள்ளே போகாததால் சபித்தான்.

அப்போதுதான் கையில் தடி வைத்திருந்த அந்த ஏறத்தாழ ஆறடி உயர மனிதன் உள்ளே வந்தான். அவனுக்கு ஒன்றரைக்கண், அவனது மூக்குத் துவாரங்கள் விடைக்க அவன் முணுமுணுத்தான்:  ”எங்கே  அவர்கள்?  எங்கே  அவர்கள்?” தடி ஏற்கனவே அவனுடைய தலைக்கு மேலே உயர்த்தப்பட்டு தலை மீது இறங்குதை நாதாலே பார்த்தான். அவன் மூளைக்குள் ஒரு வாத்துக்  கூட்டம்  வெடித்துக் கிளம்பியது போல இருந்தது. ஒரு சிவப்பு நிற வெளிச்சம் அவன் மண்டைக்குள் ஆழமாக எரிந்தது.  அவன்  பஞ்சுக்  குவியல்களில்  ஒன்றில்  விழுந்தான், இந்த உலகத்திற்கு உணர்வற்றுப் போனான்.

தொடக்கத்திலிருந்தே அவர்களுடன் இணைந்திருந்த குடிப்படை வீரர்களில் ஒருவன் கத்தினான்: ”என்ன செய்தாய் நீ? அவன் ஒரு கைதி.” தரையில் விழுந்து தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்த மனிதனைச் சுற்றி உடனடியாக மற்றவர்கள் கூட ஆரம்பித்தனர். தடி வைத்துக் கொண்டிருந்த மனிதனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை: ”எனக்கு எப்படித் தெரியும்? அவன் அணிந்து கொண்டிருந்த ஃபாசிஸ்டுகளின் கால்சட்டைகளுடன் பார்க்க எனக்கு எப்படி அடையாளம் தெரியும்?”, என்றான் அவன்.

இப்பொழுது அவர்கள் அவசரமாக வெளியேற வேண்டும், ஃபாசிஸ்ட்டுகளின் மறுபடைகள் எந்த நிமிடமும் வந்து சேரலாம். முக்கியமானது என்னவென்றால் யந்திரத் துப்பாக்கிகளையும் அவற்றுக்கான குண்டுகள் அடங்கிய ‘மெகஸின்’கள், வெடிகுண்டுகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு மற்றவற்றை எரித்து விட வேண்டும், குறிப்பாக ஆவணங்களை. ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு நிமிடத்திற்கு ஒரு முறை  யாராவது  ஒருவர்  பிணையக்கைதிகளுக்கு  செய்தி  சொல்லச்  சென்றனர். ”நாங்கள் போகிறோம், நீங்கள் வருகிறீர்களா?” ஆனால் அவர்கள் ஒரு பயங்கர அவசரத்தில் இருந்தனர்.  ஜெனரல் தன் இரவுச் சட்டையை அணிந்தபடியே சிறை அறைகளைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்: ”நான் உடனடியாக உடை அணிந்து கொள்கிறேன்”, என்று சொன்னார் அவர்.  ஒரு அராஜகவாதியின் கைக்குட்டையை கழுத்தில் சுற்றியிருந்த மருந்தாளர், பாதிரியாரிடம் அறிவுரை கேட்டுக்கொண்டிருந்தார்.  ஆனால் ஒரு பெண் வழக்கறிஞர், கிளம்பத்  தயார் நிலையில் இருந்தாள்.

பிறகு அவர்கள் குடிப்படைப் படை வீரர்கள் மீதும், வழியில் இடைஞ்சலாகக் குறுக்கிட்டபடியும் அவர்களின் குடும்பத்தையும் குழந்தைகளையும் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்த தொள தொளத்த பேண்ட்டுகள் அணிந்திருந்த  இரண்டு வயதானவர்கள் மீதும் ஒரு கண் வைக்க வேண்டியிருந்தது. அவர்களை இவர்கள் சிறை பிடித்து வந்திருந்தனர்.  மேலும் அதில் சார்ஜண்ட் மாத்திரம் மௌனமாய் ஒரு மூலையில் இருந்தான், மஞ்சள் நாளங்கள் அடர்ந்திருந்த  முகத்துடன்.

முடிவில் ஜெனரல் பேசத் தொடங்கினார்–அவர்கள் அங்கே பிணையக் கைதிகளாக இருந்தனர் என்றும், நிச்சயமாய் விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்பட இருக்கின்றனர் என்றும், மாறாக குடிப்படை வீரர்களுடன் அவர்கள் சென்றால் விஷயங்கள் அவர்களுக்கு எப்படி நடக்கும் என்று சொல்வது கடினம் என்றும் சொன்னார்.  நன்கு உடற்கட்டு அமையப்பெற்ற, ஏறத்தாழ முப்பது வயதில் இருந்த பெண் வழக்கறிஞர் குடிப்படை வீரர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பினாள்.

ஆனால் பாதிரியாரும் மருந்தாளரும் ஜெனரலுடன் ஒப்புதலாகி அவர்களுடன் தங்கிவிட்டனர்.

மலைகளை நோக்கி குடிப்படை வீரர்கள் செல்லத் தொடங்கிய போது அதிகாலை இரண்டு மணி அடிக்கத் தொடங்கியது.  ஒரு சிலர் ஒரு பக்கமாகவும் மற்றவர்கள் வேறு பக்கமாகவும் சென்றனர்.  அவர்கள் உள்ளே நுழைய உதவி செய்த இரண்டு காவலர்களைத் தங்களுடன் கூட்டிக் கொண்டு சென்றனர், மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சில சிறுவர்களையும், முதுகில் துப்பாக்கிகள் அழுத்தப்பட்ட நிலையில் அந்த மூன்று ஃபாஸிஸ்ட் கைதிகளையும்  கூட்டிச் சென்றனர்.    தடி வைத்துக் கொண்டிருந்த உயரமான மனிதன், காயம்பட்ட மனிதனின் தலையை ஒரு துண்டால் சுற்றி அவனைத் தன் முதுகின் மேல் தூக்கிக் கொண்டு சென்றான்.

அவர்கள் நழுவிய கொஞ்ச நேரத்தில் நகரின் வேறு பக்கமிருந்து துப்பாக்கி ஓசையைக் கேட்டார்கள். பொதுச் சதுக்கத்தின் மத்தியில்  இருந்து காற்றை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தான் அந்த மடையன் கெக்.  ஃபாசிஸ்டுகள் முதலில் அங்கே ஓடிச் சென்று நேரத்தை வீணடிப்பார்கள் என்பதற்காக.

முகாமில் இருந்த ஒரே கிருமிநாசினி ‘ஸல்ஃபானமைட்’ க்ரீம்தான். அதுவும் கால் நமைச்சல் களுக்கானது. நதாலேயின் தலையில் இருந்த ஓட்டையை நிரப்புவதற்கு ஒரு முழு குழாயே தேவைப்பட்டிருக்கும். காலையில் இருவர் கீழ்ப்பகுதிக்கு அந்த நகரத்திலிருந்து வெளியேற்றப் பட்ட ஒரு டாக்டரிடம்  அனுப்பப்பட்டனர்.

செய்தி பரவியது, ஜனங்கள் குடிப்படை வீரர்கள் மீதான இரவுத் தாக்குதல் பற்றி மகிழ்ச்சி அடைந்தனர். பகல் நேரத்தில் குடிப்படை வீரர்களுக்குத் தேவையான அளவுக்கு இருப்புப் பொருள்கள் கிடைத்ததால் நதாலேவின் தலைக்கு கிருமிநாசினி பீச்சுக் கழுவல்கள் கொடுக்க முடிந்தது. கட்டுகட்டும் துணியாலும் பிளாஸ்திரியாலும் பேண்டேஜுகளாலும் நதாலேவுக்கு  ஒரு  தலைப்பாகையே செய்திருந்தார்கள்.  ஆனால் மூடிய கண்களும் பிளந்த வாயுமாக, இந்த உலகத்தைப் பொறுத்தவரை நதாலே இறந்தவனாகத்தான் இருந்தான், அவன் முனகுகிறானா அல்லது குறட்டை விடுகிறானா என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. பிறகு, ஏறத்தாழ அந்தக் காலப் புள்ளியில் அவனது மண்டை இன்னும் அட்டூழியமான முறையில் உயிர்ப்புடன் இருக்க, வர்ணங்களும் உணர்வுகளும் மெதுவாகவே உருவாகத்  தொடங்கின. ஆனால் ஒவ்வொரு தடவையும் அவனுடைய தலைக்குள்ளாக ஒரு கருவியைப் போட்டுத் திருகிய மாதிரி இருந்தது, அவனுடைய கண்களுக்குள்  வாத்துக் கூட்டத்தின் பறத்தல். இதன் விளைவாக அவன் தன் பற்களை நரநரவெனக் கடித்து வலிமிகுந்த முனகல்களில் எதையோ தெளிவின்றி  முணுமுணுத்தான்.   உணவகத்தின் சமையல்காரராகவும்,  நர்ஸ் ஆகவும், சவக்குழி  தோண்டுப வராகவும்  இருந்த பாலின் என்பவர் அவர்களுக்கு அந்த நல்ல செய்தியைத் தந்தார்: ”அவன் குணமாகிக் கொண்டு வருகிறான். அவன் சபித்தான்.”

சபித்தல்களுக்குப் பிறகு வந்தது பசி. இதாலிய சூப் நிறைந்த முழு மெஸ் பாத்திரத்தை தன் வாயில் ஊற்றிக் கொண்டான், அதைக் குடிப்பவன் போல, தன் மேலெல்லாம் சிந்திக் கொண்டு. பிறகு அவன் சிரித்தான், ஒரு வட்டமான, ஆனந்தமான விலங்கு முகத்துடன், பாண்டேஜுகள், பிளாஸ்திரிகளுக்கு இடையில், எதையோ முனகலாய்ப் பேசிக் கொண்டு. கடவுளுக்குத்தான் தெரியும் என்னவென்று.

”அவன் என்ன மொழி பேசுகிறான்?” அவனைக் கவனித்தபடி மற்றவர்கள் கேட்டார்கள்: ”அவன் எங்கிருந்து வருகிறான்?”

”நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்”. பழைய காவலர்களும், அவனுடைய பழைய சிறைக் கூட்டாளிகளும் பதில் அளித்தனர். ”ஏய் எங்கிருந்து வருகிறாய் நீ?” யோசிப்பதற்காக நதாலே தன் கண்களைப் பாதி திறந்தான், ஆனால் பிறகு ஒரு வலி மிகுந்த அனத்தலை வெளிப்படுத்தி மீண்டும் பிறர் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை முனகினான்.

”அவன் பைத்தியமாகி விட்டானா?” என்று கேட்டான் அன்றைக்கு பொறுப்பில் இருந்த பொன்னிறத் தோல் கொண்ட மனிதன், ”அல்லது ஏற்கனவே பைத்தியம்தானா?” மற்றவர்களுக்கும்  உறுதியாகத்  தெரியவில்லை. ”நிச்சயமாக அவன் தலையில் உள்ளது பெரிய விரிசல்.” என்றார்கள் அவர்கள், ”முன்பே அவன் பைத்தியமாகவில்லை என்றாலும் இப்போது பைத்தியம்தான்.”

அந்த வட்டமான, தட்டையான, கருத்த,  உணர்ச்சி வெளிப் பாடற்ற  முகத்தை உடைய நதாலே ராணுவத்திற்கு அழைக்கப் பட்ட பல ஆண்டுகளாக நிலையற்று அலைந்து கொண்டிருக்கிறான். படிக்கவோ எழுதவோ தெரியாததால் அவனுக்கு வீட்டிலிருந்து எந்த விஷயமும் வரக் கிடைக்கவில்லை. விடுமுறை கொடுத்து சில தடவைகள் அனுப்பினார்கள், ஆனால் அவன் தவறான ரயில் ஏறி ட்யூரின் நகருக்கு திரும்பி வந்து விட்டான். செப்டம்பர் 8ஆம் தேதிக்கு பிறகு டோட் பகுதியில் அவன் தனது இடுப்பு பெல்டில் மெஸ் பாத்திரம் கட்டப்பட்டு திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். பிறகு அவனை உள்ளே தள்ளி விட்டார்கள். திடீரென்று அவனை விடுதலை செய்ய வந்து தலை மீது தடியால் அடித்து விட்டார்கள். அவனைப் பொறுத்தவரை இது முழுமையான அளவு  தர்க்க  ரீதியில் இருந்தது, அவனுடைய வாழ்க்கையின் பிற விஷயங்களைப் போலவே.

அவனுக்கு இந்த உலகம் மஞ்சள்கள் மற்றும் பச்சைகளின் கலப்பாக,  இரைச்சல்களும்  கத்தல்களுமாக,  சாப்பிடுவதற்கான தூண்டுதலும் தூங்குவதற்கான தூண்டுதலுமாய் இருந்தது. நல்லவைகளே நிறைந்த ஒரு நல்ல உலகம்–உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கூட, புரிந்து கொள்ள முயற்சி செய்வது அவனுடைய மண்டையின் ஆழத்திற்குள் ஒரு கூர்மையான  வலியைக் கொண்டு வந்தாலும் கூட, அந்த வாத்துக் கூட்டம் பறப்பதையும்  அவன் தலையைப் பிளந்த தடியையும் அவன் மூளைக்குள் கொண்டு வந்தாலும் கூட.

பொன்னிறத் தோல் மனிதனின் குழுவிலிருந்த குடிப்படை வீரர்கள் நகர் மீது தாக்குதல்கள் நடத்த வேண்டியிருந்தது. புறநகர்ப் பகுதிகளின் மேல் இருந்த முதல் பைன் காடுகளில் அவர்கள் வசித்தார்கள். அந்தப் பிரதேசத்தில் எல்லாமே சிறிய ‘வில்லா’வீடுகளாக–அங்கே மத்திய தரக் குடும்பங்கள் பழைய நாட்களில் கோடை விடுமுறையைக் கழித்தன–இருந்தன. அவர்களுடைய கட்டுப்பாட்டில் இப்போது அவை இருக்கின்றன என்பதால் குடிப்படை வீரர்கள் தங்களது குகைகளில்  இருந்தும்,  குடிசைகளில்  இருந்தும் வெளியேறி, சில ஃபாசிஸ்டு தலைவர்களின் வில்லாக்களை தங்கள் முகாம்களாக மாற்றினர்.  இதன் மூலம் அவர்களின் படுக்கைகளை பேன்களால் நிறைத்து, அவர்களுடைய டிரசிங் டேபிளின் மீது யந்திரத் துப்பாக்கிகளைப் பொருத்தினார்கள். இந்த வில்லா வீடுகளில் சில பாட்டில்களும், சிறிது சேமிக்கப்பட்ட உணவும், மற்றும் கிராமஃபோனும் இருந்தது. ப்ளாண்டி கருணையற்றவன், எதிரிகள் மீது கருணையற்றவன், நண்பர்கள் மீது கொடுங்கோல்தன்மை காட்டுபவன். ஆனாலும் அவன் தன் ஆட்களை சந்தோஷமாக வைக்க முடிந்த போதெல்லாம் அதைச் செய்ய முயற்சித்தான். அவர்களுக்கு சில கேளிக்கை விருந்துகளை நடத்தினான். அதற்கு சில பெண்கள் வந்தனர்.

அவர்களுடன் இருப்பதில்  நதாலே  மகிழ்ச்சியடைந்தான்.   பிளாஸ்திரிகளும் பாண்டேஜுகளும் இப்போது எடுக்கப்பட்டு விட்டன.  அவனுடைய காயத்தில் மிச்சமிருந்தது அவனது பரட்டைத் தலையின் மத்தியில் இருந்த ஒரு பெரிய கீறல்தான்.  மற்றும், ஒரு பயந்த குழப்பம்  அவனுக்குள்ளிருந்து வராமல் அவனைச் சுற்றியிருந்த எல்லா விஷயங்களிலிருந்தும் அவனைச் சூழ்ந்தது. குடிப்படை வீரர்கள் அவனை விளையாட்டுப் பொருளாக்கி அவனைப் பலவிதமாய் கேலியும் கிண்டலும் செய்து வந்தார்கள். ஆனால் அவன்  கோபமடையவில்லை. அவன் தன்னுடைய விளக்க முடியாத மொழி வழக்கில் சில சாபங்களை இட்டதோடு சரி. அல்லது  யாருடனாவது குத்துச் சண்டையில் இறங்குவான். ப்ளாண்டியுடன் கூட. அவனுக்குத் தோல்வியே என்றாலும் அவனுக்கு மகிழ்ச்சி குறையாது. குடிப்படை வீரர்கள் அவன் மீது ஒரு சாயங்காலம்  வேடிக்கை ஒன்றை நிகழ்த்த முடிவு செய்தனர். அந்தப் பெண்களில்  ஒருத்தியுடன் அவனைத் தனியாக அனுப்பி என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கத் திட்டமிட்டனர். அதற்கு அவர்கள் மிருதுவான, சதைப்பற்றான, வெண்மையும் ரோஜா நிறமும் சேர்ந்த, மார்கரீட்டாவைத் தேர்ந்தெடுத்தார்கள். ஊளைச் சதை மிகுந்த பெண் அவள். அவர்கள் நதாலே மீது விளையாட்டு நிகழ்த்த ஆரம்பித்தனர். அதற்கு அவள்தான் சூழ்ச்சித் திட்டமாக விளங்கினாள். மார்கரீட்டா அவனைக் காதலிக்கிறாள் என்கிற மாதிரியான ஒரு செய்தியை அவனுக்குள் செலுத்தத் தொடங்கினர். ஆனால் நதாலே ஜாக்கிரதையாக இருந்தான். அவனுக்கு இதில் பழக்கமிருக்கவில்லை. அவர்கள் யாவரும் சேர்ந்து குடிக்கத் தொடங்கினர். அவனுக்கு அருகில் அவளை அமரச் செய்தனர் அவனைக் கிளர்ச்சியூட்டும் பொருட்டு.  மேஜைக்கு அடியில் அவளுடைய கால்கள் தன் கால்களின் மீது அழுந்துவதையும், அவள் அவனைப் பார்ப்பதைப்  பார்த்ததும் நதாலே முன்பு எப்போதும் இருந்ததை விட திசையிழந்து போனான்.  அவர்கள் இருவரையும் தனியாக விட்டுவிட்டு, கதவுக்குப் பின்புறமிருந்து அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர்.  ஒருவிதமான குழம்பிய கவனத்தில் அவன் சிரித்தான். அந்தப் பெண் இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கினாள், அவனைத் தூண்டி விட்டபடி. ஆனால் நதாலே அவளுடைய சரிப்பு பொய்யானது என்பதை உணர்ந்து விட்டான். அவள் தனது கண்ணிமைகளைச் சிமிட்டினாள். அவன் அந்தத் தடியையும், வாத்துக்களையும், காயத்தையும் மறந்தான்: அவளைப் பற்றி இழுத்து படுக்கையின் மீது வீசினான். அவன் சகலத்தையும் இப்போது முழுமையாகப் புரிந்து கொண்டான்: அவனுக்கு அடியில் இருந்த வெண்மையும் ரோஜா நிறமும் கலந்த நிற, மிருதுவான பெண் விரும்புவது எதை என்பதைப் புரிந்து கொண்டான்.  எதனால்  அது விளையாட்டல்ல என்பதையும், மாறாக அவர்களுக்கே உரியது,   அவனுடையதும், அவளுடையதுமானது  என்பதையும்,  சாப்பிடுவது மற்றும் நீர் அருந்துவது போல என்பதையும் புரிந்து கொண்டான்.

திடீரென்று அந்தப் பெண்ணின் ஏற்கனவே பிரகாசமாக இருந்த கண்கள் மின்னத் தொடங்கி பிறகு கடுமையாகவும் கோபமாகவும் மாறின. அவளுடைய கைகள் அவனைப் புறந்தள்ளின. அவனுக்கு அடியிலிருந்து வெளியில் வருவதற்கு அவள் முண்டினாள், கத்தியபடி: ”காப்பாற்றுங்கள். அவன் என் மேலே படுத்திருக்கிறான்.” மற்றவர்கள் சிரித்தபடி உள்ளே நுழைந்தனர். கூச்சலிட்டபடி அவன் மீது தண்ணீரை வாரி இறைத்தனர். அதற்கு முன்பு எப்படி எல்லா விஷயங்களும் இருந்தனவோ அப்படி எல்லாமும் பழைய நிலைமைக்கு வந்து விட்டன. அவனுடைய மண்டைக்கு அடியில் இருந்த வர்ண மயமான வலி உட்பட. மார்கரீட்டா தன் மார்பின்  மீது ரவிக்கையைச் சரி செய்து கொண்டே, வலிந்து உண்டாக்கப் பட்ட சிரிப்பை வெளிப்படுத்தினாள். ஏற்கனவே பிரகாசமான கண்களைக் கொண்ட, ஈரமான உதடுகளைக் கொண்ட மார்கரீட்டா ஏன் சத்தமிட்டு மற்றவர்களைக் கூப்பிடத் தொடங்கினாள் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. காற்றை நோக்கிச் சுட்டபடி, அவ்வளவு அதிகமாகச் சிரித்ததால் அவரவர் படுக்கையின் மீது உருண்டபடி, அந்த குடிப்படை வீரர்கள் அனைவரும் அவனைச் சுற்றிலுமிருக்க, நதாலே ஒரு குழந்தையைப் போல கண்ணீர் பொங்கி அழுதான்.

ஒரு நாள் காலை  ஜெர்மானியர்கள்  எல்லோரும்  ஒரே நேரத்தில் விழித்துக் கொண்டனர்: டிரக்குகளில் நிரப்பப்பட்டு அவர்கள் வந்து அந்தப் பிரதேசத்தை புதர் அடுத்து புதராகத் துழாவினர். துப்பாக்கிச் சத்தத்தினால் விழித்துக் கொண்ட ப்ளாண்டி படுக்கையிலிருந்து எழுவதற்கு மிகவும் தாமதித்ததால், புல்படுகையின் மத்தியில் யந்திரத் துப்பாக்கிகளின் குண்டுகளுக்கு பலியாகிப் போனான். நதாலே ஒவ்வொரு துப்பாக்கிக் குண்டும் அவனை ஒட்டி சத்தமிட்டபடி சென்ற போது தன் தலையை தரையில் சாய்த்து ஒரு புதரினடியில் பதுங்கிக் கொண்டு தப்பித்தான். ப்ளாண்டியின் மரணத்திற்குப் பிறகு, குழு பிரிந்து போயிற்று: சிலர் இறந்தனர், சிலர் சிறை பிடிக்கப் பட்டனர், சிலர் மற்றவர்களைக் காட்டிக் கொடுத்தனர், சிலர் கட்சி மாறினர், சிலர் ஒரு சோதனை அடுத்த மறு சோதனையில் தப்பித்து, தொடர்ந்து இலக்கின்றி திரிந்து கொண்டிருந்தனர், சிலர் மலை மீதிருந்த பிரிகேடுகாரர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

நதாலே பிரிகேடுகாரர்களுடன் சேர்ந்தான்.  மலை மீது வாழ்க்கை கடினமாக இருந்தது. ஒரு பள்ளத்தாக்கிலிருந்து மறு பள்ளத்தாக்கிற்கு நடந்து செல்ல வேண்டிய வேலைதான் நதாலேவுக்கு. ஒரு கோவேறு கழுதையைப் போல பாரம் சுமந்தபடி, தன் முறை வரும்போது கண்காணிப்பு பணியையும் மற்றும் போர்சாரா வேலைகளையும் செய்தான். அது மீண்டும் ஒரு போர் வீரனாக ஆவதைப் போலிருந்தது. நூறு மடங்கு கடினம் ஆனால் நூறு மடங்கு மேலானது. அவனைப் பார்த்து நகைத்து பரிகசித்த குடிப்படை வீரர்கள், ராணுவத்தைச் சேர்ந்த, அவனைப் பரிகாசம் செய்து சிரித்த வீரர்களைப் போலிருந்தனர். இருப்பினும் வித்தியாசமாகவும் இருந்தனர், அவன் நிச்சயமாகப் புரிந்து கொண்டிருப்பான், அவனுடைய தலையில் உண்டான வாத்துக்களின் பறத்தல் மட்டும் இல்லாதிருந்தால்.

அவை எல்லாவற்றையும்  அவன் புரிந்து கொள்ள ஆரம்பித்தான், அவனுக்கு மிக அருகிலாக கோலெட்டாவுக்குச் செல்லும் சாலையில் ஏறியபடி அவர்களின் நெருப்பு வீசும் கருவிகளுடன் புதர்களில் சுட்ட ஜெர்மானியர்களோடு தன்னைக் கண்டபோது தரையில் நீட்டிப் படுத்தபடி, துப்பாக்கி குண்டு அடுத்து ஒரு துப்பாக்கிக் குண்டாக சுடத் தொடங்கினான்,  கூடவே அவன் ஏன் அதைச் செய்கிறான் என்பதையும் அவன் புரிந்து  கொண்டான். கீழே இருந்த மனிதர்கள்தான் அவனுடைய அடையாள ஆவணங்கள் ஒழுங்கில் இல்லை என்ற காரணத்தால் அவனைக் கைது செய்தது. அவர்கள்தான் அவனுடைய நேரத்தைக் குறித்துக் கொண்ட ‘டோட்’ பகுதிக் காவலர்களுமாய்  இருந்தனர். கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்த ஆர்டர்லிகளாக இருந்ததும் அவர்கள்தான். ஒரே சமயத்தில் அவர்கள் இந்த எல்லாமுமாக இருந்தனர். அவன் ராணுவத்திற்கு அழைக்கப்படுமுன்பு வரை வாரம் முழுவதும் அவனை வியர்வை சிந்த வைத்த விவசாயியுமாகவும் அவர்கள் இருந்தனர். நகரத்திற்குள் கண்காட்சி பார்ப்பதற்கு அவன் சென்ற போது அவனைக் குப்புறத் தள்ளிவிட்ட பையன்களும் அவர்களே. அவனை அறைந்த அவனுடைய அப்பாவுமாக அவர்கள் இருந்தனர். அவனுடன் செல்லும் நிலையிலிருந்து பிறகு அவனுக்கு எதிராகத் திரும்பிவிட்ட மார்கரீட்டாவாகக் கூட அவர்கள் இருந்தனர். மிகச் சரியான அளவில் மார்கரீட்டா அல்ல, ஆனால் அவனுக்கு எதிராக மார்கரீட்டா திரும்புவதற்குக் காரணமாக இருந்த எல்லாமும்: இந்த சிந்தனையானது மற்றவைகளை விட அதிகம் கடினமானதாய் இருந்தது, ஆனால் அந்த கணத்தில் அவன் அதைப் புரிந்து கொண்டான். பிறகு அவன் நினைத்தான் கீழே இருந்த மனிதர்கள் ஏன் அவனை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட வண்ணம் இருக்கிறார்கள்,  அவனை நோக்கி கத்திய வண்ணம், அவனுடைய துப்பாக்கி குண்டுகள் பட்டு வீழ்ந்த வண்ணம் இருக்கிறார்கள் என்று யோசித்தான். பிறகு அவன் புரிந்து கொண்டான் அவர்கள் தன்னைப் போன்றவர்கள்தான் என்று. குழந்தைகளாக இருந்த போது தந்தைகளால் அடிக்கப்பட்டவர்கள், விவசாயிகளால் வேலையில் ஈடுபடுத்தப்பட்டு, ஆர்டர்லிகளால் பரிகாசம் செய்யப்பட்டு, மற்றும்  இப்போது  அதை  அவன்  மீது காட்டுகிறார்கள். அவன் மீது அந்தக் கோபத்தைத் திருப்புவது அவர்களது கிறுக்குத்தனம்,  அதற்கும்  அவனுக்கும்  சம்மந்தமில்லை, மேலும் அதனால்தான் அவன் அவர்களை நோக்கிச் சுடுகிறான். ஆனால் அவர்கள் எல்லோரும் அவன் பக்கம் இருந்திருந்தால் அவர்களை நோக்கி அவன் சுட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டான், மாறாக வேறு ஆட்களை நோக்கி சுட்டிருப்பான். ஆனால் அவனுக்கு உறுதியாக யாரென்று தெரியாது, மேலும் மார்கரீட்டா அவனுடன் வந்திருப்பாள். ஆனால் எப்படி அவனுடைய எதிரிகள் இந்த மனிதர்களாகவும் மற்றும் அந்த மனிதர்களாகவும், நல்லவர்களாகவும் மற்றும்  கெட்டவர் களாகவும், அவனைப் போலவும் அவனுக்கு எதிரானவர்களாகவும் இருக்கிறார்கள். ஏன் அவன் இங்கே சரியின் பக்கத்தில் இருக்கிறான், ஏன் அவர்கள் தவறின் பக்கத்தில் இருக்கிறார்கள் என்று நதாலேவுக்குப் புரியவில்லை: அது வாத்துக்களின் பறத்தல். அதுதான் அது, அதிகமும் இல்லை  குறைவுமில்லை.

போர் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ஆங்கிலேயர்கள் பொருள்களை பாரசூட் வழியாகப் போடுவது என்று முடிவு செய்தனர். குடிப்படை வீரர்கள் பைய்ட்மாண்ட் பகுதிக்கு நடந்து சென்றனர். இரண்டு நாட்கள் அணிவகுப்பில் சென்று இரவில் வயல்களுக்கு நடுவில் நெருப்பு எரிய விட்டார்கள். தங்கப் பித்தான்கள்  வைத்த ஓவர்கோட்டுகளை ஆங்கிலேயர்கள் மேலிருந்து வீசினார்கள். ஆனால் ஏற்கனவே வசந்தகாலம் வந்து விட்டிருந்தது. மேலும் முதல் ஆப்பிரிக்க போரில் பயன்படுத்திய இதாலிய ரைஃபில் பொட்டலங்களையும் போட்டனர். குடிப்படை வீரர்கள் அவற்றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு  நீக்ரோக்களின் குழுக்களைப் போல நெருப்பைச் சுற்றி காட்டுத்தனமாக நடந்தனர். நதாலே அவர்களுடன் ஆட்டம் போட்டான், அவர்கள் மத்தியில் கத்தி சப்தமிட்டான், சந்தோஷமாக இருந்தான்.

32x32-digg-guy

Like a Flight of Ducks–Numbers in the Dark [1999] Vintage Edition, New York Translated by Tim Parks

reader3

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: