பெட்ரோல் நிலையம் இடாலோ கால்வினோ தமிழில் பிரம்மராஜன்

பெட்ரோல் நிலையம்

இடாலோ கால்வினோ

தமிழில் பிரம்மராஜன்

அது பற்றி நான் முன்பே யோசித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. பன்னிரண்டரை மணிக்கு மேலாகிவிட்டது. நான் நிரப்பிக் கொள்ள மறந்துவிட்டேன். சேவை நிலையங்கள் மூன்று மணிவரை மூடியிருக்கும். ஒவ்வொரு வருடமும் பூமியின் பாறை மடிப்புகளில், லட்சக்கணக்கான நூற்றாண்டுகளாய் மணல் மற்றும் களிமண் படிவங்களுக்கு இடையிலாக சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு மில்லியன் கச்சா எண்ணெய் மேலே கொண்டு வரப்படுகிறது. இப்பொழுது நான் புறப்பட்டால் பாதி வழியில் தீர்ந்துபோய் விடும் ஆபத்து இருக்கிறது. எச்சரிக்கை அளவைமானி கொஞ்ச நேரமாகவே டேங்க் ரிசர்வ்வில் இருக்கிறது என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறது. பூமிக்கு அடியிலான உலகளாவிய சேமிப்புகள் இருபது சில்லரை வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்று அவர்கள் கொஞ்ச காலமாகவே எச்சரித்து வந்திருக்கிறார்கள். அது  பற்றி  சிந்திப்பதற்கு  எனக்கு நிறைய நேரம்  இருந்தது.  எப்போதும்  போல  பொறுப்பில்லாமல்  நான் இருந்திருக்கிறேன். டேஷ்போர்டில் சிவப்பு விளக்கு மினுங்கி எரியத் தொடங்கும் பொழுது நான் கவனம் செலுத்துவதில்லை அல்லது விஷயங்களைத் தள்ளிப்போடுகிறேன். பயன்படுத்துவதற்கு முழு சேமிப்பும் இன்னமும் மிச்சமிருக்கிறது என்று எனக்கு  நானே  சொல்லிக் கொள்கிறேன் பிறகு மறந்து போய் விடுகிறேன். இல்லை, ஒரு வேளை, அதுதான் கடந்த காலத்தில், காற்று அளவுக்கே பெட்ரோல் அபரிமிதமாக இருந்த அந்த நாட்களில் நடந்திருக்கக் கூடும்.  கவனக் குறைவாக இருந்து விட்டு பிறகு அதைப் பற்றி மறந்து விடுவது. இப்பொழுது அந்த மினுங்கல்  வெளிச்சம்  வரும்  பொழுது அது ஒரு அபாயகரத்தையும், பெரும் அச்சுறுத்தலையும், ஒரே சமயத்தில் தெளிவின்றியும் ஆனால் நடந்து விடக்கூடியது என்கிற மாதிரியும் பரிமாற்றம் செய்கிறது.  பலவிதமான  பதற்றம்  நிறைந்த  சமிக்ஞைகள்  என எனது பிரக்ஞையின் மடிப்புகளுக்கிடையே படிந்து விடும் அவற்றுடன்  அந்த  செய்தியையும்  நான் எடுத்துப் பதிவு செய்து கொள்கிறேன். இது எனது ஒருவிதமான மனோநிலையில் கரைந்து விடுகிறது. அந்த மனோநிலையில் அதை என்னால் உதறிவிட முடிவதில்லை. அதே சமயம் அது அதன் விளைவானதொரு கச்சிதமான நடைமுறைக் காரியம் செய்வதற்கு என்னைத் தூண்டுவதில்லை. எடுத்துக் காட்டாக நான்  காண்கிற  முதல்  பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி நிரப்பிக் கொள்வதற்கு.  அல்லது  சேமிப்பதற்கான உள்ளுணர்வு என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறதா–ஒரு அனிச்சையான  கஞ்சத்தனம்?  என்னுடைய டேங்க் தீர்ந்து போகப் போகிறது என்பதை  நான்  உணர்கிற  மாதிரியே  எண்ணெய்  சுத்தகரிப்பு கையிருப்புகள் குறைந்து வருவதையும், எண்ணெய்க் குழாய்களின் போக்குகள் பற்றியும், மேலும் எண்ணெய்க் கப்பல்கள் பாரங்களுடன் கடல்களை உழுது செல்வதையும் உணர்கிறேன். டிரில் பிட்டுகள் பூமியின் ஆழங்களைத் துழாவுகின்றன.  ஆனால்  அழுக்கு  நீரைத்  தவிர  வேறு எதையும் மேலே கொண்டு வருவதில்லை.  ஆக்ஸிலேட்டரின் மீதான  எனது கால் நமது பூமிக்கோளம் சேமித்து வைத்திருக்கும் கடைசி பீற்றுதாரை சக்தியை அதன் மிக எளிய அழுத்தம் கூட எரித்து விடக் கூடும் என்ற உண்மையை உணர்வதாகிறது. என்னுடைய கவனம் கடைசி சொட்டு எரிபொருளை உறிஞ்சுவதில் நிலை கொள்கிறது. டேங்க் ஏதோ ஒரு  எலுமிச்சைப்  பழம்  என்பது  போலவும்  அதிலிருந்து  ஒரு சொட்டு கூட வீணாக்கப்படாமல் பிழியப்பட வேண்டும் என்பது போலவும் நான் பெடலை அழுத்துகிறேன். நான்  வேகத்தைக்  குறைக்கிறேன்.  இல்லை.  அதிகப்படுத்துகிறேன். என் உள்ளுணர்வு பூர்வமான எதிர்வினை, நான் எந்த அளவுக்கு வேகமாகச் செல்கிறேனோ அந்த அ
ளவுக்கு தூரமாக எனது பிழிதலில் இருந்து எனக்குக் கிடைக்கும் என்பதாக இருக்கிறது. மேலும் அது கடைசியானதாய் இருக்கவும் கூடும்.

நிரப்பிக் கொள்ளாமல் நகரத்தை விட்டுச் செல்லும் ஆபத்தில் நான் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. நிச்சயமாக  திறந்திருக்கும் ஒரு பெட்ரோல் நிலையத்தை நான் கண்டுபிடிப்பேன். நிழல்மரச் சாலைகளில் காரை ஓட்டிக் கொண்டு, வேறுபட்ட பெட்ரோலிய கம்பெனிகளின் வர்ண அறிவிப்புப் பலகைள் முளைத்து நிற்கும் நடைபாதைகளையும், மலர்ப்படுகைளையும் தேடிக் கொண்டு செல்கிறேன். முன்பு அவை இருந்த ஆக்கிரமிப்புடன் இன்றில்லை–அந்த நாட்களில் புலிகளும் பிற விலங்குகளும் நமது என்ஜின்களுக்குள்  தீப்பிழம்புகளை உமிழ்ந்த காலத்தில் போல.  மீண்டும் மீண்டும் நான் திறந்திருக்கிறது  என்ற  அறிவிப்புப்  பலகையைப்  பார்த்து முட்டாளாகிறேன். அதற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையம் வழமையான நேரத்தில்  திறந்திருக்கும் எனவே மதிய இடைவேளையின் போது மூடியிருக்கும்.  சில  நேரங்களில்  ஒரு பெட்ரோல்  நிலைய  உதவியாளன்  ஒரு மடக்கு  நாற்காலியில் அமர்ந்தபடி  சாண்ட்விச்சை  சாப்பிட்டுக் கொண்டோ, அல்லது,  அரைத் தூக்கத்திலோ இருக்கிறான். மன்னிப்பு கோரும் தோரணையில் அவன் கைகளை விரித்தும் காட்டுகிறான் சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றுதான் — எனது கேள்வி கேட்கும் சைகைகள்  நான் அவை அவ்வாறு ஆகும் என்று அறிந்திருந்தவாறு பயனற்றவையாகின்றன. சகலமும்  எளிமையாகத் தோன்றிய காலம் முடிந்து விட்டது, அதாவது மனித சக்தியானது இயற்கை சக்தியைப் போலவே நிபந்தனையற்றும் தீராவே தீராமலும் உங்கள் சேவையில் இருக்கிறது என நீங்கள் நம்ப முடிந்த காலம். அப்போது பெட்ரோல் நிலையங்கள் எல்லாமும் உங்கள் வழியில், வரிசையாக கவர்ச்சியுடன் முகிழ்த்தவாறு, அவற்றின் உதவியாளன் பச்சை அல்லது நீலம் அல்லது கோடுபோட்ட தொளதொள முழு அங்கியை அணிந்தவாறு வண்டுகள் கூட்டத்தின் அரைபடலால் காரின் முன்பக்கத்துக் கண்ணாடி அசுத்தப்பட்டுப் போனதைத் துடைப்பதற்குத் தயாராக நீர் சொட்டும் ஸ்பாஞ்சினை கையில் வைத்துக் கொண்டிருப்பான்.

அல்லது, மாறாக. ஒரு சில வேலைகளை மேற்கொண்டிருந்த சிலர் இருபத்தி நாலு மணி நேரமும் வேலை செய்து கொண்டிருந்த  காலங்களின்  முடிவுக்கும்,  சிலவித  பொருள்கள் என்றைக்குமே தீர்ந்து போகாது  என்று  நீங்கள்  கற்பனை செய்திருந்த காலங்களின் முடிவுக்கும் இடையில் ஒரு முழு வரலாறே இருக்கிறது–அதன் நீளம் ஒரு நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்  வேறுபடுகிறது, ஒரு தனிநபருக்கும்  இன்னொரு  தனிநபருக்கும் கூட.  அதனால் நான் சொல்கிறேன் இந்த கணத்தில் செழுமைச் சமுதாயங்கள் என்று  அழைக்கப் பட்டவற்றின்  எழுச்சியையும்,  உச்சத்தையும்  வீழ்ச்சியையும்  நான்  ஒரே  சமயத்தில்  அனுபவம்  கொள்கிறேன்– ஒரு சுழலும் டிரில் கருவி ஒரு கணத்தில் பிளியோசீனிய, கிரெடீசிய, டீரசீய படிவப் பாறைகளின் ஊடாக ஒரு மில்லினியத்திலும் அடுத்த மில்லினியத்திலும் நுழைவதைப் போல.

கிலோமீட்டர்மானி தந்திருக்கிற தகவல்களை உறுதி செய்து கொண்டு காலம் மற்றும் புவி வெளியில் எனது நிலைமையைக் கணக்கெடுக்கிறேன். இப்பொழுதான் முள் பூஜ்யத்திற்கு வந்து நிற்பதையும், எரிபொருள் மானி இப்பொழுது நிலையாக பூஜ்யத்தில் நிற்பதையும் காலக் கடிகாரத்தின் சிறிய மணிக்கை இன்னும் மேற்புற கால்வட்டத்தில் நிற்பதையும் பார்க்கிறேன். மதிய வேளைகளில் தண்ணீருக்கான ஒப்பந்தம் தாகமாக இருக்கும் புலியையும் மானையும் கலங்கிய ஒரே குட்டைக்குக் கொண்டு வந்தது போல என்னுடைய கார் அதன் எண்ணெய் ஒப்பந்தம் அதை, ஒரு பெட்ரோல் நிலையம் அடுத்து மற்றொன்றுக்கு ஓடச் செய்யும் பொழுது  பயனின்றி புத்துணர்ச்சிக்காகத் தேடுகிறது. கிரெடீசிய உயிர்களின் உச்சிவேளைப் பொழுதுகளில் கடலின் மேற்பரப்பில் பொங்கிப் பரவின–வாழ் உயிரிகள் நுண்ணிய பாசிக்கூட்டங்கள்  நுண்ணிய பாசிகளின் அடர்ந்த கூட்டம், ப்ளாங்க்டன்களின் மெல்லிய ஓடுகள், மிருதுவான கடல் பஞ்சுகள், கூர்மையான பவளப் பாறைகள்–அவற்றினூடாய் ஒரு வாழ்வு சாவைத் தொடரும் நீண்ட சுழற்சியில் தொடர்ந்து கொதித்து, அவற்றினூடாய் வாழ்ந்து கொண்டேயிருக்கும்  சூரியனைக் கொண்டிருக்கும் அவை. இவை ஒரு கனமற்ற விலங்கு மற்றும் தாவரக் கசடுகளின் மழையாய் மாற்றப்படும் பொழுது,  மேலோட்டமான நீர்களில் படிந்து, பிறகு சகதியில் அமிழ்ந்து, பின் கடந்து செல்லும் பிரளயங்களினால் வழியாக அவை கால்கரீயப் பாறைகளின் தாடைகளில் மெல்லப்பட்டு,  சின்க்லைன் மற்றும் ஆன்ட்டிக்கிளைன் ஆகிய மடிப்புகளில் செரிக்கப்பட்டு, அடர்த்தியான எண்ணெய்யாக மாற்றப்பட்டு, இருண்ட, பூமியின் அடியிலான போரோசைட்டு களின் வழியாக மேலே உந்தித் தள்ளப்படுகின்றன–அவை பாலைவனங்களுக்கு மத்தியில் பீச்சி அடிக்கும் வரை. பின்பு பிழம்புகளாக வெடித்து மீண்டும் ஒரு முறை பூமியின் தளத்தை ஒரு புராதன மதியம் போல கண்கூசும் ஒளியால் சூடாக்குகின்றன.

மேலும், இங்கே மதியத்தின் மத்தியில் உள்ள நாகரீக பாலைவனத்தில் ஒரு திறந்திருக்கும் சேவை நிலையத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். கார்களின் கூட்டம் ஒன்று அதைச் சுற்றி பரபரத்துக் கொண்டிருக்கிறது. உதவியாளர்கள் ஒருவருமில்லை. பணநோட்டுக்களை மெஷின்களில் எடுத்துக் கொள்ளக் கூடிய சுய சேவை நிலையங்களில் ஒன்றுதான் அது. குரோம் நிற பம்ப் நாஸில்களை அவற்றின் உறைகளில் இருந்து வெளியில் எடுத்தபடி சுறுசுறுப்பாக இருக்கின்றனர். இயக்கக் குறிப்புகளை வாசிப்பதற்காக அவர்களின் கையசைவுகளை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். தானாகவே உள்ளிழுத்துக் கொள்ளக் கூடிய ரப்பர் பம்ப்புகள் பாம்புகள் போல வளைகின்றன.  மாறுதல்களின் காலத்தில் உருவான,  எனது கைகள், எனது உயிர் பிழைப்புக்கான அத்தியவாசிய செயல்பாடுகளை வேறு கைகள் நிகழ்த்துவதற்குக் காத்திருந்து பழகிவிட்ட அந்த என்னுடைய கைகள் பம்ப்புடன் தடுமாறுகின்றன. இந்த நிலைமை நிலையானதல்ல என்பதை நான் எப்போதோ கொள்கை ரீதியில் அறிந்திருந்தேன். கோட் பாட்டளவில் என் கைகள் மனித இனத்தின் உடல் ரீதியான இயக்கங்கள் அனைத்தையும் மீட்டுக் கொள்வது தவிர வேறு எதையும் செய்ய விரும்பாது. பழங்காலத்தில் சீற்றம் மிகுந்த இயற்கையை இரண்டு வெறுங்கைகளால் மாத்திரம் நேர் கொண்டது மாதிரி இன்று காட்டுமிராண்டித்தனமான  இயற்கையை  விட அதிகம் எளிதாய், சந்தேகத்திற்கிடமின்றி இயக்கி விட முடியக் கூடிய யந்திர உலகத்தினை நாம்  எதிர் கொண்டிருக்கிறோம்.  நமது கைகள் இனி தமக்குத் தாமாகவே சமாளித்துக் கொண்டாக வேண்டிய, நமது தினசரி வாழ்வு சார்ந்திருக்கிற யந்திர உழைப்பினை பிற கைகளுக்கு மாற்றிக் கொடுக்க  இனி இயலாத உலகத்தில் இருக்கிறோம்.

நிஜத்தில் எனது கைகள் சிறிது ஏமாற்றம் அடைந் திருக்கின்றன.  பயன்படுத்துவதற்கு பம்ப் மிக எளிதாக இருக்கிறது.  சுயசேவை  நிலையங்கள்  ஏன்  பல  ஆண்டுகளுக்கு முன்னரே  சர்வ சாதாரணமாக ஆகவில்லை என வியக்க வைக்கிறது. ஆனால், ஒரு தானியங்கி சாக்லேட் விநியோக யந்திரத்தைப் பயன்படுத்துவதில் இருப்பதை விடவும் அல்லது வேறு எந்த பணம் எண்ணும் இயந்திரத்தை  இயக்குவதால் வருவதை விடவும் இதில் நீங்கள் கூடுதலான சந்தோஷத்தை பெறவில்லை. சிறிது கவனம் தேவைப்படும் ஒரே செயலாக்கம் பணம் செலுத்துவதில் அடங்கியிருக்கிறது. ஒரு சிறிய இழுப்பறையில் நீங்கள் ஒரு ஆயிரம் லயர் நோட்டை சரியாக வைக்க வேண்டும்–அதன் எலக்ட்ரிக் ஒளிக்கண் ‘குய்செப் வெர்டி’யின் தலை உருவப்பொறிப்பினை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு ஏற்றவாறு, அல்லது, ஒவ்வொரு வங்கி நோட்டின் குறுக்காகச் செல்லும் மெல்லிய உலோகப்பட்டியை அடையாளம் காணுமளவுக்கு குறுக்காகச் செல்லும்படி. அந்த நோட்டு விழுங்கப்படும் போது ஒரு வெளிச்சம் கிளம்பும்.  அப்பொழுது நான் விரைய வேண்டும், பம்ப்பின் நுனியை டேங்கின் வாயில் நுழைத்து  கச்சிதமாக, நடுங்கியபடி வரும் ஜெட்டை உள்ளே பொங்கிப் பீறிட நுழைக்க வேண்டும்.  இந்தப் பரிசினை நான் அனுபவிக்க விரைய வேண்டும். இது எனது அறிவுணர்வுகளை சந்தோஷப் படுத்துவதற்கு தகுதியற்றது எனினும் எனது போக்குவரத்து வழியாக இருக்கும் எனது உடற்பகுதிகள் அதற்கு ஆர்வத்துடன் ஏங்குகின்றன.  இவை எல்லாவற்றையும் சிந்தித்து முடித்ததுதான் தாமதம். அப்பொழுது ஒரு கூர்மையான ‘க்ளிக்’ ஓசையுடன் பெட்ரால் வருவது நின்று போய் சமிக்ஞைவிளக்குகள் அணைந்து போகின்றன. சில விநாடிகளுக்கு முன்பாக இயக்கி விடப்பட்ட சிக்கலான கருவி ஏற்கனவே இயக்கமற்று நிறுத்தப்பட்டுவிட்டது.  எனது சடங்குகள் உயிர் கொடுத்த நிலவுலகம் சார்ந்த சக்திகளின் நகர்வுகள் ஒரு கணத்திற்கு மேலாக நீடிக்கவில்லை.வெறும்  உலோகப் பட்டிகையாகக்  குறைக்கபட்ட ஆயிரம் லயர் நோட்டுக்கு மாற்றாக பம்ப் மிகக் குறைந்த அளவு பெட்ரோலையே தரும். கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை பதினோரு டாலர்.

நான் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். வேறு ஒரு நோட்டு, பிறகு மற்றது, ஒரு தடவைக்கு ஒரு ஆயிரம் என தர வேண்டும். பணமும் பாதாள லோகமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. அவை நீண்டகாலம் பின்னோக்கிச் செல்கின்றன. அவற்றின் உறவு ஒரு பிரளம் அடுத்து மற்றொரு பிரளயமாக வெளிப்பாடு காண்கிறது–சில நேரங்களில் மந்தமாகவும், சில நேரங்களில்  மிகத்  திடீரென்றும். எனது டேங்கை சுயசேவை நிலையத்தில் நிரப்பிக் கொண்டிருக் கையில் பாரசீக வளைகுடாவில் புதையுண்டிருக்கும் ஒரு கருப்பு ஏரியில் ஒரு வாயுக் குமிழி வீங்கி உயர்கிறது. ஒரு எமீர் மௌனமாக தனது அகன்ற வெண்ணிற சட்டையில்  மறைக்கப்பட்ட கைகளை உயர்த்தி தனது மார்புக்கு குறுக்காக மடிக்கிறார். ஆகாயத்தைத் தொடும் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் எக்ஸான் கம்ப்யூட்டர் ஒன்று எண்களை மெல்லுகிறது. கடலில் மிகத் தொலைவில் ஒரு சரக்குக்கப்பல் அது வேறு திசையில் செல்ல வேண்டும் என்ற ஆணையைப் பெறுகிறது. எனது பாக்கெட்டுகளில் நான் துழாவுகிறேன். காகிதப் பணத்தின் நோஞ்சான் சக்தி ஆவியாகிப் போகிறது.

என்னைச் சுற்றிலும் நான் பார்க்கிறேன். ஆளற்ற பம்ப்புகளுக்கிடையில் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருக்கிறேன்.  இந்த நேரத்தில்  திறந்திருக்கும் ஒரே பெட்ரோல்  நிலையத்தைச் சுற்றியிருந்த கார்களின் முன்வருதலும் பின்போதலும் எதிர்பாராத விதத்தில் நின்று போயிற்று.  ஏதோ மிகச் சரியான இந்தக் கணத்தில் பதுங்கிக் கொண்டிருந்த பிரளயங்களின் ஒருமிப்பு திடீரென்று அந்த உச்சபட்சமான பிரளயத்தை உருவாக்கி விட்டதைப் போல–ஒரே சமயத்தில்  பம்ப்புகள், கார்புரேட்டர்கள், மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் எண்ணெய்க் கிணறுகளின் குழாய் வழிகள் போன்ற சகலமும் வறண்டு போகின்றன. முன்னேற்றம் அதற்கான ஆபத்துக்கள் நிறைந்ததாகத்தான் இருக்கிறது, இதில் பொருட்படுத்தப்பட வேண்டியது என்னவென்றால் நீங்கள் இதையெல்லாம் முன்னரே எதிர்நோக்கி விட்டீர்கள் என்று சொல்ல முடிவதுதான். இப்பொழுது சமீப காலமாக எதிர்காலத்தை என்னால் அச்சமின்றி கற்பனை செய்ய முடிகிறது. என்னால் ஏற்கனவே வரிசை வரிசையான, நூலாம்படை படிந்த, கைவிடப்பட்ட கார்களைப் பார்க்க முடிகிறது.  இந்த நகரம் ஒரு பிளாஸ்டிக் காயலான் கடையாக சிறுத்துப் போவதையும், முதுகின் மேல் சாக்குகளுடன் திரியும் மனிதர்கள் எலிகளால் துரத்தப்படுவதையும்  இப்பொழுதே என்னால் பார்க்க முடிகிறது.

திடீரென்று இந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்ற ஏக்கத்தால் நான் பீடிக்கப்படுகிறேன். ஆனால், எங்கே போவது? எனக்குத் தெரியவில்லை. அதனால் பரவாயில்லை. ஒரு வேளை  சக்தியின் எந்தச் சிறு மிச்சம் விடப்பட்டிருக்கிறதோ அதை எரித்து சுழற்சியை முற்றுப் பெறச் செய்ய விரும்புகிறேனாக இருக்கலாம். இன்னும் ஒரு தாரைப் பெட்ரோலை வடித்து விட நான் கடைசி ஆயிரம் லயர் நோட்டைத் தோண்டி எடுக்கிறேன்.

ஒரு ஸ்போர்ட்ஸ் கார் பெட்ரோல் நிலையத்தில் வந்து நிற்கிறது. அதன் ஓட்டுநர் ஒரு இளம்பெண். அவளுடைய வழிந்தோடும் கூந்தல் சுழற்சிகளினாலும், கழுத்தை இறுக்கிப் பிடிக்கிற மாதிரி ஸ்வெட்டராலும் ஸ்கார்ஃபாலும் சுற்றப்பட்டு தெரிகிறாள். இந்த சிக்கு விழுந்த குவியலில் இருந்த ஒரு சிறிய மூக்கினை உயர்த்தியபடி சொல்கிறாள்: ”அவளை நிரப்பு”

நான் அங்கே பெட்ரோல் நிரப்பும் நாஸிலுடன் நின்று கொண்டிருக்கிறேன்.  நான் நிகழ்த்தும் இயக்கங்கள், நான் பயன்படுத்தும் பொருட்கள்,  நான் எதிர்பார்க்கும் மீட்பு என சகலமும் கவர்ச்சியில்லாமலிருக்கும் ஒரு உலகத்தில் குறைந்த பட்சம் அவை எரியும் பொழுது மகிழ்ச்சிகரமான ஞாபகங்களையாவாது விட்டுச் செல்லட்டும் என்பதற்கு வேண்டி இந்தக் கடைசி ஆக்டேன்களை அவளுக்கு அர்ப்பணம் செய்யலாம். ஸ்போர்ட்ஸ் காரின் எரி பொருள் செலுத்தும் மூடியைக் கழற்றுகிறேன். பம்ப்பின் வளைந்த மூக்கினை உள்ளே நுழைத்து பித்தானை அழுத்துகிறேன். அந்தப் பிரவாகம் உள்ளே செல்வதை உணர்கையில் இறுதியாக ஒரு தூரத்துச் சுகிப்பின் ஞாபகமொன்றினை அனுபவம் கொள்கிறேன். ஒரு உறவினை உருவாக்கக் கூடிய ஒரு விதமான வீர்ய சக்தி, ஒரு திரவ ஒழுகலோட்டம் எனக்கும் கார் ஸ்டீயரிங் வளையத்திற்கு முன்னால் அமர்ந்திருக்கும் அந்த அந்நியளுக்கும் இடையே நிகழ்கிறது.

அவள் என்னைப் பார்க்க வேண்டி திரும்புகிறாள். அவளது மூக்குக் கண்ணாடியின் பெரிய சட்டங்களை உயர்த்துகிறாள். அவளுக்கு ஒளிகசியும் ஊடுருவல் மிகுந்த பச்சைக் கண்கள் இருக்கின்றன: ”ஆனால் நீங்கள் பெட்ரோல் நிலைய உதவியாளர் இல்லையே. . .என்ன செய்கிறீர்கள் நீங்கள். . .ஏன்?” என் பக்கத்து காதலின் அதீதமான செயல்பாடு இது என அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மனித இனம் தன்னுடையதென சொந்தம் கொண்டாடிக் கொள்ளக் கூடிய வெப்பத்தின் கடைசி வெடித்தலில் அவளை நான் இணைக்க விரும்புகிறேன். அந்த செயல்பாடு ஒரு காதல் செயலாக இருக்கையில் வன்முறைச் செயலாகவுமிருக்கும், ஒருவிதமான வன்புணர்ச்சி, பாதாள சக்திகளின் ஆளை அழிக்கும் உக்கிரத் தழுவல்.

அவளைக் ‘கப்சிப்’ என்று இருக்கச் சொல்லி சைகை செய்கிறேன். காற்றில் என் கையைக் கொண்டு கீழ் நோக்கிச் சுட்டுகிறேன். இந்த மயக்குநிலை எந்த கணத்தில் வேண்டுமானாலும் துண்டிக்கப் பட்டுவிடலாம் என எச்சரிப்பதற்கு என்பது போல. பிறகு நான் ஒரு விதமான வட்டவடிவக் கையசைப்பினைச் செய்கிறேன்–பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை என்று சொல்வது போல. மேலும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்  என் மூலமாக கருப்பு நிற புளூட்டோ பாதாள உலகிலிருந்து மேலே வருகிறான், அவள் வழியாக ஒரு சுடர் விடும் பெர்ஸிஃபோன்*þஐ தூக்கிச் செல்ல. ஏனெனில் அவ்வாறுதான் வாழும் வஸ்துக்களை கருணையற்று விழுங்குபவளான பூமி தன்னுடைய சுழற்சியை மீண்டும் தொடங்குகிறாள்.

தனது கூர்மையான, இளமையான முன்பற்களை வெளிக் காட்டியபடி அவள் சிரிக்கிறாள். அவள் தீர்மானமில்லாதவளாக இருக்கிறாள். காலிஃபோர்னியாவில் எண்ணெய்ப் படிவு களுக்காக மேற்கொள்ளப்பட்ட தேடல் அதில் வாள் வடிவப் பற்களையுடைய புலியும் அடக்கம்–கரிய ஏரிக்குழியின் மேற்புறமிருக்கும் நீர்ப்பரப்பால்தான் அந்த மிருகம் கட்டாயமாக ஈர்க்கப் பட்டிருக்கும். அந்த நீர்ப்பரப்பு அதை உறிஞ்சி உட்கொண்டு விட்டது.

ஆனால் எனக்கு அளிக்களிக்கப்பட்ட குறைந்த நேரம் முடிந்துவிட்டது.  பெட்ரோல் வருவது நின்று விட்டது. பம்ப் சலனமில்லாதிருக்கிறது. அணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மனித இனத்தின் சுழற்சி வாழ்வு நின்று போய், எல்லா இடங்களிலும் சகல என்ஜின்களும் எரிப்பதை நிறுத்திவிட்ட மாதிரி ஒரு கனத்த மௌனம் நிலவுகிறது.  இந்த பூமியின் மேல் ஓடு இந்த நகரங்களை மறுபடி உள்ளிழுத்துக் கொள்ளும் நாளில், மனித இனமாக இருந்த இந்த ப்ளாங்க்டன் படிவம் ஒரு மில்லியன் வருடங்களில் ஆஸ்பால்ட் மற்றும் சிமிண்ட்டின் புவியியல் அடுக்குகளால் மூடப்பட்டு விடும்  அது எண்ணெய்ப் படிவுகளாய்ப் பெருகும். யார் பொருட்டு என்று நாம் அறியோம்.

அவளுடைய கண்களுக்குள் நான் பார்க்கிறேன்: அவள் புரிந்து கொள்வதில்லை. ஒரு வேளை அப்பொழுதான் பயப்படத் தொடங்கியிருக்கிறாள்  போலும்.  நல்லது.  நான் நூறு வரை எண்ணுவேன். மௌனம் தொடர்ந்தால், நான் அவள் கையைப் பற்றுவேன். பிறகு நாங்கள் ஓடத் தொடங்குவோம்

.• .• .•

_______________________________________________

*பெர்ஸிஃபோன் பாதாள உலகத்தின் தேவதை. கிரேக்கப் புராணிகத்தின்படி ஒரு வருடத்தின் மூன்றில் ஒரு பகுதியில் பாதாள உலகத்திலும் ஒரு பகுதியில் பூமியிலும் வாழ்கிறாள். ரோமானியர்கள் Prosperina என்று இவளை அழைத்தனர். விதைகள் பூமியில் முளைக்கக் காரணம் என்று கருதப்படுகிறவள். எனினும் விதைமுளைப்புச் சடங்குகளில் பெர்சிஃபோனின் பெயரைச் சொல்லக் கூடாது என்ற ஐதீகம் இருந்தது.

Petrol Pump-Numbers in the Dark [1999] Vintage Edition, New York translated by  Tim Parks

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: