Love Far Away from Home-Italo Calvino-வீட்டின் சேய்மையிலிருந்து காதல்-கால்வினோ

Love far away from Home

Love far away from Home

வீட்டின் சேய்மையிலிருந்து காதல்

இடாலோ கால்வினோ

தமிழில் பிரம்மராஜன்

கடல்புறத்தை ஒட்டி எப்பொழுதாவது ஒரு ரயில் கிளம்பிச்செல்கிறது, அதில் நான் இருக்கிறேன் புறப்பட்டபடி. ஏனெனில் மலைப் பிரதேசத்திலிருந்து வந்த ஒரு சிறுவன் பாலத்தின் சுவர் மீது அமர்ந்தபடி வெளிநகரத்துக் கார்களின் நம்பர் பிளேட்டுகளைப் பார்த்துக் குழம்பியபடி இருப்பது போல, தூங்கி வழிகிற, பாத்தி போலிருக்கிற கிராமத்தில் தங்கியிருக்க நான் விரும்பவில்லை. விடைபெறுகிறேன் என் கிராமமே.

என் கிராமத்திற்கு அப்பால் இருக்கும் உலகத்தில் பல நகரங்கள் இருக்கின்றன, சில சமுத்திரத்தை ஒட்டி அமைந்துள்ளன, எனக்குத் தெரியவில்லை ஏன் என்று, சில தாழ்நிலங்களின் ஆழங்களில் அமைந்துள்ளன. சில நகரங்கள் முடிவற்றது போலத் தோன்றும் கிராமப்புற வெளிகளின் ஊடான மூச்சழுந்தும் பிரயாணங்களுக்குப் பிறகு எப்படியென்பதே தெரியாமல் வந்து சேரும் ரயில் நிலையங்களின் புறப்பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த நகரங்களில் ஒன்றில் நான் அடிக்கடி இறங்கி விடுகிறேன். பாக்கெட்டுக்களில் திணிக்கப்பட்ட செய்தித்தாள்களுடன், கண்கள் தூசியால் உறுத்தியபடி இருக்க எனது தோற்றம் எப்பொழுதும் முதல் முறை பயணம் செய்பவனைப் போலவே இருக்கிறது.

இரவில் என் புதுப்படுக்கையில், இரவு விளக்கினை அணைத்து விட்டு ட்ராம் வண்டிகளின் ஓசையைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, பிறகு கிராமத்தில் இருக்கும் என் அறையை நினைத்துப் பார்க்கிறேன். இரவில் அவ்வளவு தூரத்திற்கு அப்பால் இருப்பதால் ஒரே கணத்தில் இவையிரண்டும் அருகருகே இருப்பது சாத்தியமில்லாதது போலத் தோன்றுகிறது. மேலும் நான் எங்கிருக்கிறேன் என்பது உறுதியில்லாமல் தூங்கிப் போய்விடுகிறேன்.

காலையில், ஜன்னலுக்கு வெளியே கண்டறிய வேண்டியது நிறைய இருப்பது தெரிகிறது. ஜெனோவா நகரமாக  இருக்கும் பட்சத்தில்  மேலும்  கீழுமாக  ஏறி  இறங்கும் தெருக்கள், அவற்றில் அமைந்திருக்கும் மேலும் கீழுமான வீடுகள், அவற்றினிடையே வேகமாக வீசிச் செல்லும் காற்று. அது ட்யூரின் நகரமாக இருக்கும் பட்சத்தில் முடிவே இல்லாதது போலத் தோன்றும் நேர்க்கோட்டுத் தெருக்கள், பால்கனிகளின்  கம்பி வரிசைகளுக்கு  அப்பால்  நோக்கும்  போது அவற்றுடன் இரட்டை வரிசையில் அமைந்த மரங்கள் வெள்ளைநிற வானத்திற்கு அப்பால் மறைந்து போகும்.  மிலான் நகரமாக இருக்கும் பட்சத்தில் பனிப்புகைப் படலத்தில் தமது முதுகினைக் காட்டும் வீடுகள் இருக்கும். வேறு நகரங்களும், அவற்றில் வேறு விஷயங்களும் கண்டுபிடிப்பதற்கு இருக்கும். ஒருநாள் நான் சென்று பார்ப்பேன்.

ஆனால், எல்லா நகரங்களிலுமே அறை ஒரே மாதிரித்தான் இருக்கிறது. நான்  வருவது  தெரிந்தவுடன்  வீட்டின்  பெண் உரிமையாளர்கள் ஒரு நகரத்திலிருந்து மற்றதற்கு மரச் சாமான்களை அனுப்பி  வைப்பர்  போலத்  தெரிகிறது. சலவைக்  கல்லால் ஆன  டிரெஸ்ஸிங் டேபிளின் மீதிருக்கும் என் முகச்சவர சாமான் பெட்டி  நானே அதை அங்கே வைத்தேன் என்பதை விட, நான் அங்கு வந்து சேர்ந்தவுடனே பார்க்கிறேன் என்றவாறிருக்கிறது,  தோற்றத்தில்  அப்படி  ஒரு தவிர்க்கவியலாத  தன்மை அடங்கி  இருக்கிறது — அதனால் அது என்னுடையது அல்ல என்பதைப் போல் தோன்றுகிறது. இந்த அறைகளில் ஒன்றில் பல ஆண்டுகளை நான் வாழ்ந்து விட முடியும், பிறகு மற்றதில் பிற வருடங்களை, இதைப் போன்ற முழுமொத்தமான ஒத்த தன்மை கொண்ட அறைகளில்–அது என்னுடையதுதான்  என்ற  உணர்வு எப்போதும் வந்துவிடாமல், அல்லது எனது பதிவினை அவற்றில் பதித்துவிடாமல்.  காரணம்  என் சூட்கேஸ் எப்போதுமே அடுத்த பயணத்திற்குத் தயாராக இருக்கிறது. இதாலியில் இருக்கும் எந்த ஒரு நகரமுமே சரியான நகரமல்ல, எந்த நகரமுமே வேலை தருவதில்லை,  வேலை கிடைத்தாலும் எப்போதுமே  வேறு  ஒரு  நகரம் இதைவிட சிறப்பான நகரமாக இருக்கும், அங்கே ஒரு நாள் நீங்கள் வேலைக்குச் செல்ல விரும்புவீர்கள்–நம்பிக்கையுடன். எனவே எனது பொருட்கள் சூட்கேஸில் எப்படி இருந்தனவோ அதே வாக்கில் அவற்றை அறையின் இழுப்பறைகளில் அடுக்கி வைக்கிறேன், மீண்டும் அடுக்கப்படுவதற்குத் தயாராக.

நாட்களும்  வாரங்களும் கடந்து செல்கின்றன. ஒரு  பெண் உங்கள் அறைக்கு வரத் தொடங்குகிறாள். அவள் ஒரே பெண்தான்  என்று என்னால் சொல்ல முடியும். காரணம் தொடக்கத்தில் ஒரு பெண்ணுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் பெரிய வித்தியாச மிருப்பதில்லை. அவர்கள் அந்நியர்கள். தீர்மானிக்கப்பட்டதொரு சடங்கார்த்தமான முறையில் அவர்களுடன் பரிவர்த்தனை கொள்கிறீர்கள்.  நீங்கள்  கொஞ்சம் நேரத்தைச் செலவழித்தாக  வேண்டும்,  நிறைய  காரியங்களைச் செய்ய வேண்டும்–நீங்கள் இருவரும் ஏன்களையும் எதிலிருந்துகளையும் புரிந்து கொள்வதற்கு. அதற்குப் பிறகு தொடங்குகிறது அபரிமிதமான கண்டு  பிடிப்புகளின்  பருவ காலம், நிஜமான, ஒருக்கால் உணர்ச்சி ததும்பும் காதலின் ஒரேயொரு  பருவகாலம்.  பிறகு  இன்னும்  கொஞ்ச  காலத்தைச் செலவழித்து,  இன்னும் சில காரியங்களைச் செய்த பிறகு– இந்தப் பெண்ணுடன் செய்த பிறகு–மற்ற எல்லாப் பெண்களும் இவளைப் போலத்தான் இருந்தனர்  என்பதை  உணர்கிறீர்கள்.  நானும் கூட இப்படித்தான் இருந்தேன் என்பதை உணர்கிறேன், நாம் எல்லோருமே கூட.  அவள் செய்யும் எல்லாமே சலிப்படைய வைக்கிறது–ஒரு ஆயிரம் நிலைக்கண்ணாடிகளில் திரும்பத்  திரும்ப பிரதிபலித்தது  மாதிரி.  விடை  பெறுகிறேன்  சிநேகிதியே!

முதல் தடவையாக ஒரு பெண் என்னைச் சந்திக்க வரும்போது, அது மரியமரெல்லா என்று வைத்துக் கொள்ளலாம்.  நான் மதியம் முழுவதும் ஒன்றுமே செய்வதில்லை. நான் படித்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தைத் தொடர்கிறேன், பிறகு கடந்த இருபது பக்கங்களாக, நான் அந்த எழுத்துக்களை, அவை ஏதோ சித்திரங்கள் என்பது போல, பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன் என்பதை உணர்கிறேன். நான் எழுதுகிறேன், ஆனால்  நிஜத்தில்  வெள்ளைத் தாள் முழுவதிலும் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். எல்லாக் கிறுக்கல்களும் சேர்ந்து இறுதியில் ஒரு யானையின் கோட்டுருவமாய் மாறுகிறது.  அது  ஒரு  பிரம்மாண்டமான கம்பளி யானையாக  மாறுகிறது. பிறகு அந்த கம்பளி யானையுடன் நான் பொறுமையை இழக்கிறேன். கிழித்தெறிகிறேன்.  ஒவ்வொரு தரமும் ஏன்  ஒரு கம்பளி யானை பேபி?

கம்பளி யானையைக் கிழித்தெறிகிறேன். அழைப்பு மணி அடிக்கிறது. அது மரியமரெல்லா. தடுப்பு போடப்பட்ட கழிப்பறைக்  கதவின்  வழியாகத்  தோன்றி, வீட்டுச் சொந்தக்காரி கத்துவதற்கு முன்னால் நான் ஓடிச் சென்று கதவைத் திறக்கிறேன். மரியமரெல்லா மிரண்டு  திரும்பிப் போய் விடுவாள்.

திருடர்களால் குரல்வளை நெறிக்கப்பட்டு ஒரு நாள் இந்த வீட்டுச் சொந்தக்காரி சாகப் போகிறாள். அது பற்றி எவர் ஒருவரும் எதுவும் செய்வதற்கியலாது. அவர்கள் அழைப்பு மணியை அடிக்கும் பொழுது சென்று கதவைத் திறக்காமல் இருப்பதன்  மூலம்,  தடுப்பு  போடப்பட்ட  கழிப்பறைக்  கதவின் வழியாக ”யாரது கூப்பிடுவது?”, என்று கேட்காதிருப்பதன் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்  என்று  நினைக் கிறாள். ஆனால் அது அர்த்தமில்லாத முன் ஜாக்கிரதை. அச்சுக் கோர்ப்பவர்கள்  ஏற்கனவே  தலைப்புச் செய்தியை தயார் செய்து விட்டார்கள்–வீட்டுச் சொந்தக்காரி அடலெய்ட் பிரேகெட்டி அடையாளம் தெரியாத கொலைகாரர்களால் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டாள்–பக்கத்தைத் தயார்ப் படுத்து வதற்கான உறுதிப் பாட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கே அறைகுறை வெளிச்சத்தில் மரியமரெல்லா இருக்கிறாள்–அவளுடைய மாலுமி தொப்பியுடனும், அதில் உள்ள இயந்திர பீரங்கியுடனும், இதயம் போன்ற வடிவமைந்த உதடுகளுடனும்.  நான்  கதவைத் திறக்கிறேன். உள்ளே வந்தவுடன் பேசுவதற்கு அவள் ஏற்கனவே ஒரு முழு உரையையே தயார் செய்து வைத்திருக்கிறாள். அவள்  நிஜத்தில் என்ன சொல்கிறாள் என்பது பொருட்டல்ல.  ஆயினும் நாங்கள் இடைவெளியே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்–அறையின் மத்தியில் ஏதோ சொல்லப்படாது விடாமலிருக்கும் பொருட்டு ஒரு  நீண்ட பேச்சாக இருக்க,  இருண்ட நடைக்கூடத்தின்  வழியாக  அவளை  அழைத்துச்  செல்கிறேன்.  உலோகத்தால் ஆன படுக்கை சட்டம் மற்றும்   சிறிய புத்தக அலமாரியில் முன்பறிந்திராத, புத்தகத் தலைப்புகளுடன், மறந்த வசனத்திற்கு நினைவூட்டல்  தராது அறை அதனுடைய அசுத்தத்தில்.

”வா, வந்து ஜன்னலின் வழியாகப் பார் மரியமரெல்லா.”

ஜன்னல் ஒரு ஃபிரெஞ்சு ஜன்னல். அதில் இடுப்பளவு கம்பிகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் பால்கனி கிடையாது.  இரண்டு படிகள் ஏறிய உடனே நிறைய நேரம் ஏறிக் கொண்டேயிருப்பது மாதிரி உணர்வு ஏற்படும். வெளியே செந்நிற ஓடுகளின் சமுத்திரம். எல்லாப் பக்கங்களிலும் விரிந்து செல்கிற கூரைகளைக் கண்கள் செல்லும் தூரம் வரை பார்க்கிறோம். கட்டை கட்டையான புகைப் போக்கிகள் திடுமென கந்தலான புகையை விட்டுக் கொண்டிருக்கின்றன. கட்டிட உச்சியில் மடத்தனமான மாடிக் கைப்பிடிச் சுவர்கள்–அவற்றின் வழியாக எவருமே என்றுமே வெளியே பார்க்க முடியாது. உருண்டுவிடும்படியான வீடுகளின் மேற்புறத்திலுள்ள வெற்று வெளிகளைச் சூழ்ந்திருக்கும் தாழ் சுவர்கள். அவள்  தோள்  மீது  என்  கையைப் போடுகிறேன். அது என்னுடைய கையைப் போன்ற உணர்வை அளிப்பதில்லை. ஏறத்தாழ  வீங்கின  மாதிரி,  நாங்கள்  ஒருவரை  ஒருவர்  நீரின் படலத்தின் வழியாக தொட்டுக் கொண்டிருப்பது போல.

”வேண்டிய அளவு பார்த்தாயா?”

”ஆம்.”

”அப்படியானால் கீழே போகலாம்.”

நாங்கள்  கீழே  சென்று  ஜன்னலைச்  சாத்துகிறோம். நாங்கள்  நீருக்கடியில் இருக்கிறோம், தெளிவற்ற உணர்வுகளோடு  தடுமாறுகிறோம்.  பிரம்மாண்டமான  கம்பளி யானை அறை முழுவதும் உலாவுகிறது, புராதன மனித பயம்.

”அப்புறம்”

நான்  அவளது  மாலுமி தொப்பியை எடுத்து படுக்கையின் மீது வீசுகிறேன்.

”இல்லை நான் எப்படியும் உடனே போயாக வேண்டும்.”

அவள் தொப்பியை மீண்டும் தலைக்குப் போட்டுக் கொள்கிறாள். நான் பிடுங்குகிறேன்.  பிறகு உயர காற்றில் வீசி எறிகிறேன்.  காற்றில்  பறப்பதை  பிடிப்பதற்கு  ஒருவரை  ஒருவர் துரத்தி ஓடுகிறோம், விளையாட்டாக பற்களை நறநறவென்று கடித்துக்  கொண்டு,  காதல்,  இந்த ஒருவர்  மற்றவர் மீதான காதல், கீறிக்கொண்டும்,  கடித்துக் கொண்டும் ஒருவருக் கொருவர் ஏங்கியபடியுமிருக்கும் காதல், குத்தல்களும் உண்டு–தோள்களின் மீது. பிறகு களைத்து, களைத்துப் போன ஒரு முத்தம்ஙி காதல்.

ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்தபடி அமர்ந்தவாறு புகை பிடிக்கிறோம். எங்கள் விரல்களுக்கிடையில் சிகரெட்டுகள் பூதாகரமாகத் தெரிகின்றன, நீருக்கடியில் இருத்தப்பட்ட பொருள்கள்  மாதிரி,  மூழ்கிப்போன பெரிய நங்கூரங்கள். நாங்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை?

”என்ன விஷயம்?” என்று கேட்கிறாள் மரியமரெல்லா.

”அந்த கம்பளி யானை.” என்று அவளிடம் நான் சொல்கிறேன்.

”என்னது அது?” அவள் கேட்கிறாள்.

”ஒரு குறியீடு.” நான் சொல்கிறேன்.

”எது பற்றியது?” அவள் கேட்கிறாள்.

”எது பற்றியது என்று எனக்குத் தெரியாது”, நான் அவளுக்குச் சொல்கிறேன். ”ஒரு குறியீடு.”

”கவனி”, அவளிடம் சொல்கிறேன், ”ஒரு நாள் மாலை நதிக்கரை ஓரம் நான் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருந்தேன்.”

”என்ன பெயர்?

”அந்த நதி போ என்றும் இளம்பெண் என்ரிகா என்றும் அழைக்கப்பட்டாள். ஏன்?”

”ஓ! ஒன்றுமில்லை. நீங்கள் யாருடன் போயிருந்தீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.”

நல்லது. ஆக நாங்கள் புல் அடர்ந்த நதிக்கரையின் மீது அமர்ந்திருந்தோம். அது இலையுதிர் காலமாக இருந்தது, மாலைப் பொழுதாக இருந்தது, ஏற்கனவே இரு கரையும் இருட்டாக இருந்தது, நதியின் வழியாக  நின்றபடி படகு வலித்து வந்த இரண்டு  பேர்களின்  நிழல்  தெரிந்தது.  நகரத்தில்  விளக்குகள் எரியத் தொடங்கின.  நாங்கள் கரையில் நதியின் அந்தப் பக்கத்தில் அமர்ந்திருந்தோம்.  பிறர் காதல் என்றழைத்த ஒரு விஷயத்தினால் நாங்கள் நிறைந்திருந்தோம்.   ஒருவர் மீது ஒருவருக்கான அந்தத் தேடல், ஒரு கரடுமுரடான கண்டுபிடித்தல், ஒருவருக்கு ஒருவர் மீதான ஒரு கூர்ந்த சுவை, உனக்குத் தெரியும், காதல்.   எனக்குள் முழுவதும் தனிமையும் சோகமும் நிறைந்திருந்தேன். நதிக்கரைகளின் மீதான அந்த மாலையில், நதிக்கரைகளின், அவற்றின் கருநிழல்களின் மீதான அந்த மாலையில் என் உள்ளத்தில் துயரமும், தனிமையும் ததும்பி வழிந்திருந்தன. புதிய காதல்களின் சோகமும் தனிமையும், பழைய காதல்களின் சோகமும், இழப்புணர்வுகளும் இருந்தன.  மேலும் வருங்காலக் காதல்களுக்கான சோகமும் பதற்றமும் இருந்தது. டான் யூவான், பழைய நாயகன், புராதன பாரம், அவனுக்குள் தனிமையும் சோகமும் தவிர வேறெதுவும் இருக்கவில்லை.”

”அதே போலத்தான் என்னிடமுமா?” மரியமரெல்லா கேட்கிறாள்.

”நீ இப்பொழுது கொஞ்சம் பேசினால் என்ன? உனக்குத் தெரிந்ததைச் சொன்னால் என்ன?”

நான் பெருங்கோபத்தில் கத்தத் தொடங்கினேன். சில சயமங்களில் நீங்கள் பேசும்போது, நீங்கள் எதிரொலி என்று சொல்லும்படியானதைக் கேட்க நேரிடும் போது, அது உங்களைப் பைத்தியமாக்குகிறது.

”நான் என்ன சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? இந்த விஷயங்கள் எல்லாம். .  . உங்களைப் போன்ற ஆண்கள். . . எனக்குப் புரியவில்லை.”

எல்லாம் அப்படித்தான்: பெண்களுக்குக் காதலைப் பற்றிச் சொல்லப்பட்டு வந்த எல்லாமும் தவறானவை. எல்லா விதமான விஷயங்களும் அவர்களுக்குச் சொல்லப் பட்டிருக்கின்றன.  ஆனால் எல்லாமே தவறானவை. மேலும் அவர்களுடைய அனுபவங்கள் எல்லாம் கச்சிதமற்றவை. என்றாலும், அவர்களுக்குச் சொல்லப்பட்டதை அவர்கள் நம்புகிறார்கள், அனுபவங்களை அல்ல. அதனால்தான் அவர்கள் தவறான புத்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

”நான் விரும்புகிறேன், அதாவது பெண்களாகிய நாங்கள்,” அவள் சொல்கிறாள்.  ”ஆண்களைப் பற்றிஙி அவர்களைப் பற்றி நீங்கள் படிக்கும் விஷயங்கள், மற்றவர்கள் ஆண்களைப் பற்றி நீங்கள் சிறிய பெண்ணாக இருந்த சமயத்திலிருந்தே காதில் ஓதி வைத்தது. வேறு எதையும் விட அது மிக முக்கியத்துவம் வாய்ந்தது, அது வேறு பிற விஷயங்கள் எல்லாவற்றின் இலக்கும் கூட. பிறகு நான் அறிந்து கொண்டேன் அந்த இடத்தை அடையவே முடியாது என்று, நிஜமாகவே அந்த இடத்தை. அது வேறு எதையும் விட முக்கியமானது அல்ல. அது இல்லாதிருக்கட்டும் என்று நான் விரும்பினேன், அதில் எதுவுமே கூட, நீங்கள் அது பற்றிச் சிந்திக்க வேண்டாம் என்பதற் கேற்றவாறு.  என்றாலும் எப்போதும் அதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லா விஷயங்களின் நிஜமான அர்த்தத்தை புரிந்து கொள்ள ஒரு வேளை நீங்கள் ஒரு தாயாகவோ அல்லது வேசியாகவோ மாற வேண்டி இருக்கலாம்.”

அதேஙி மிகவும் பிரமாதம். நம் எல்லோருக்குமே ரகசிய விளக்கங்கள் இருக்கின்றன. நீங்கள் உங்கள் ரகசிய விளக்கத்தினை வெளிப்படுத்தினால் போதும், அவள் இனிமேலும் அந்நியளாக இல்லை. நாங்கள் இரண்டு பெரிய நாய்களைப் போலவோ அல்லது நதிக்கடவுளர்களைப் போலவே ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு கிடக்கிறோம்.

”நீங்கள் கவனிக்க வேண்டும்” மரியமரெல்லா சொல்கிறாள்.

”நான் உங்களைக் கண்டு பயப்படுகிறேனாக இருக்கும். ஆனால் எனக்குத் தெரியவில்லை எங்கே மறைந்து கொள்வதென்று. தொடுவானின் மீது எதுவும் இல்லை, நீங்கள்தான் இருக்கிறீர்கள். நீங்கள்தான் கரடி, நீங்கள்தான் குகையும் கூட. அதன் காரணமாகத்தான்  இப்போது  உங்கள்  கைகளுக்குள்ளாக ஒடுங்கி இருக்கிறேன், உங்கள் மீதான பயத்திலிருந்து நீங்கள் என்னைக் காப்பாற்றும் பொருட்டு.”

இருந்தாலும் கூட, அது பெண்களுக்கு எளிதாக இருக்கிறது. வாழ்வு அவர்களுக்குள்ளாக வழிந்து செல்கிறது, ஒரு பெரிய நதி, அவர்களுக்குள்ளாக, அந்த விருத்தியாளர்களில்  நித்தியப் படுத்துபவர்கள், இயற்கை அவர்களிடத்தில் மிகத் தீர்மான மானதாயும் மர்மமானதாயும் இருக்கிறது. ஒரு காலத்தில் மிகப் பெரிய தாய்வழிச் சமூகம் இருந்தது, ஜனங்களின் வரலாறு தாவரங்களைப் போல அதிலிருந்து வழிந்தது. பிறகு வந்தது வேலை செய்யாத ஆண் தேனீக்களின் தற்பெருமை. ஒரு புரட்சி: விளைவாய் நமக்குக் கிடைத்தது நாகரிகம். அப்படித்தான் நான் எண்ணுகிறேன், ஆனால் அதை நம்புவதில்லை.

”ஒரு முறை ஒரு பெண்ணுடன் அது சாத்தியமில்லை என்பதைக் கண்டு பிடித்தேன்”, நான் அவளிடம் சொல்கிறேன், மலை மீதிருந்த ஒரு புல்பரப்பின் மீது. ”மலை ‘பெரும் ஒன்றுமில்லை’ என்று அழைக்கப் பட்டது,  ‘தேவதை பியா’ என அந்த இளம்பெண் அழைக்கப்பட்டாள். நான் நினைவு படுத்துகிறேன் நிறைய புதர்களுக்கிடையில் இருந்தது அந்த பெரிய புல்பரப்பு, ஒவ்வொரு இலை மீதும் ஒரு வெட்டுக்கிளி தத்திக் கொண்டிருந்தது.  தப்பித்தலே  இல்லாமல் அந்த வெட்டுக் கிளிகளின் இரைச்சல், மிக உச்சமாக இருந்தது,  அப்பொழுது  எழுந்து கொண்டு கடைசி கேபிள் கார் புறப்படத் தயாராக இருக்கிறது  என்று நான் ஏன் சொன்னேன் என்பதை அவளால் நிஜமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் அந்த இடத்தை ஒரு கேபிள் கார் மூலமாகத்தான் அடைய முடியும். உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு மேலாகப் பயணம் செய்யும் பொழுது உங்களுக்கு உள்ளாக வெறுமை வருவதை  உணர்கிறீர்கள்.  மேலும் அவள் சொன்னாள்: “அது நீங்கள் என்னை முத்தமிடுவதைப் போல.” அது ஒரு பெரிய ஆசுவாசமாக இருந்தது என்பதை நினைவு கூர்கிறேன்.”

”இந்த மாதிரி விஷயங்களை நீங்கள் என்னிடம் சொல்லக் கூடாது”, மரியமரெல்லா சொல்கிறாள்: ”இங்கே இனி குகையும் இருக்காது, கரடியும் இருக்காது. எனக்கு மிச்சமாக இருக்கக் கூடியதெல்லாம் எல்லாப் பக்கங் களிலும் பயம் மாத்திரமே.”

”இதைப் பார் மரியமரெல்லா”,  நான் அவளிடம் சொல் கிறேன்,  நாம் வஸ்துக்களை சிந்தனைகளிலிருந்து பிரிக்கக் கூடாது. நமது தலைமுறையின் சாபக்கேடு அதுதான் என்று நினைக்கிறேன். நாம் சிந்தித்ததை செயல்படுத்த முடியாமல் இருப்பது. அல்லது நாம் என்ன செய்தோம் என்பதைப் பற்றிச் சிந்திக்க முடியாதிருப்பது.  நான் உனக்கொரு உதாரணம் தருகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு (நான் என் அடையாள அட்டையில் என் வயதை மாற்றியிருந்தேன், காரணம் எனக்கு வயது போதவில்லை), ஒரு விலைமாதர் விடுதியில் ஒரு பெண்ணிடம் சென்றேன். விலைமாதர் விடுதி எண் 15, கேலன்ரா தெருவில் இருந்தது, மற்றும் அந்தப் பெண்ணின் பெயர் டெர்னா”

”என்னது?”

”டெர்னா. அப்போது நம்மிடம் அரசாட்சி இருந்தது, மேலும் அப்போதிருந்த புதுமை எல்லாம் விடுதியில் இருந்த பெண்கள் டெர்னா, அடுவா, ஹாரார் மற்றும் டெஸ்ஸி என்று அழைக்கப்பட்டதுதான்.”

”டெஸ்ஸியா?”

”டெஸ்ஸி என்றும் கூட என்று எனக்கு ஞாபகமிருக்கிறது. இப்போதிருந்து நான் உன்னை டெஸ்ஸி என்று அழைக்க வேண்டும் என்று விரும்புகிறாயா?”

”இல்லை.”

சரி  மீண்டும்  அந்த  காலத்திற்கு  இந்த  டெர்னாவுடன் செல்வோம்.  நான்  மிகவும்  இளைவனாக  இருந்தேன்.  அவள் பெரியவளாய்  முடி  அடர்ந்தவளாய்  இருந்தாள்.  நான்  தப்பி ஓடினேன்.  நான் எதைச் செலுத்த வேண்டுமோ அதைச் செலுத்தி விட்டு ஓடினேன்: படிகளில் இறங்கும் போது எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரிப்பதற்கு அவரவர் அறைகளை விட்டு வெளியே வந்தார்கள் என்ற எண்ணப் பதிவு எனக்கிருந்தது. ஆனால் அது முக்கியமானதல்ல. விஷயம் என்னவென்றால் நான் வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடனே அந்தப் பெண் ஒரு சிந்தனையாக மாறிவிட்டாள், மனம் அளவிலான ஒன்றாக. மேலும் நான் அதற்குப் பிறகு அவளைப் பற்றிப் பயப்படவில்லை. அவளை விரும்பத் தொடங்கினேன், மிகத் தீவிரமாக. . . அதுதான் விஷயம்: நமக்கு சிந்திக்கப்பட்ட விஷயங்கள், உள்ளபடியே விஷயங்களை விட மாறுபட்டவை யாக இருக்கின்றன.”

”சரி” மரியமரெல்லா சொல்கிறாள் ”சாத்தியமுள்ள எல்லாவற்றையும் நான் சிந்தித்து வைத்திருக்கிறேன். நான் நூற்றுக் கணக்கான வாழ்க்கைகளை என் சிந்தனையின் வாயிலாய் வாழ்ந்து விட்டேன். கல்யாணம் செய்து கொள்வது பற்றி, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி, கர்ப்பம் கலைத்துக் கொள்வது பற்றி, பணம் படைத்த ஒருவரைத் திருமணம் செய்து கொள்வது பற்றி, மிகவும் ஏழையான ஒருவரைத் திருமணம் செய்து கொள்வது பற்றி, சமூகத்தின் உயர்தட்டு பெண்ணாக இருப்பது பற்றி, ஒரு விலைமாதாக ஆவது பற்றி, ஒரு நடனக்காரியாக, ஒரு கன்னிகா ஸ்திரீயாக, வறுத்த செஸ்ட்நட் கொட்டைகள் விற்பவளாக, ஒரு நட்சத்திரமாக, ஒரு எம்.பியாக, ஒரு  ஆம்புலன்ஸ் டிரைவராக, ஒரு விளையாட்டு வீராங்கனையாக ஆவது பற்றியெல்லாம்.  நூற்றுக் கணக்கான வாழ்வுகள் அதன் துல்லிய விபரங்களுடன். அவை எல்லாம் சுபமாக வாழ்ந்து முடிக்கப்பட்டன. நிஜவாழ்க்கையில் இதில் எந்த ஒரு விஷயமுமே நடப்பதில்லை என்று நினைக்கிறேன்.  ஒவ்வொரு  முறை  விஷயங்களை நான் கற்பனை செய்வதாக கண்டு பிடித்துக் கொள்ளும் பொழுது நான் பயந்து போய் சிந்தனைகளை தடுத்து நிறுத்தப் பார்க்கிறேன். ஏன் எனில் நான் எதையாவது கனவாகக் கண்டால் அது எப்போதும் நடக்காது.”

மரியமரெல்லா ஒரு நல்ல பெண்.  நல்ல பெண் என்று நான் சொல்லும் போது நான் சொல்லும் கடினமான விஷயங்களைப் புரிந்து கொள்கிறாள், உடனே அவற்றை எளிமையாக்கி விடுகிறாள் என்ற அர்த்தத்தில். நான் அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்க விரும்புகிறேன், ஆனால் நான் முத்தமிட்டால் நான் அவளைப் பற்றிய சிந்தனையை முத்தமிடுவதாக நான் நினைப்பேன், அவளும்  என்னுடைய சிந்தனையின் மூலமாக தான் முத்தமிடப்படுவதாக நினைக்கலாம், எனவே நான் அது பற்றி ஒன்றும் செய்யாமலிருக்கிறேன்.

”நமது தலைமுறையானது விஷயங்களை அவற்றின் அளவிலேயே மீட்டெடுக்க வேண்டும் மரியமரெல்லா”, நான் சொல்கிறேன், ஒரே சமயத்தில் சிந்தித்தபடி  செயல்களைச் செய். பொருள்களின் ஊடாகச் சிந்தனை செய்யாமல் விஷயங்களைச் செய்யாதே. நாம் சிந்திக்கும் விஷயங்களுக்கும் நிஜமான விஷயங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அதற்கப்புறம் நாம் மகிழ்ச்சியாக இருப்போம்.”

”ஏன் இது இப்படி இருக்கிறது?” அவள் கேட்கிறாள்.

”ஆனால் எல்லோருக்கும் இது இப்படி இல்லை”, நான் அவளிடம் சொல்கிறேன், ”நான் சிறு பையனாக இருந்த போது ஒரு பெரிய வீட்டில் வசித்தேன், கடல் மீது பறந்து போவது போன்ற உயரமான மாடிக் கைப்பிடிச் சுவர்களுடன். நான் தனிமைப்பட்ட குழந்தையாக இருந்தேன். மேலும் எனக்கு சகலமுமே ஒரு விநோதமான குறியீடாக இருந்தது, அடிக் கட்டையின்  குஞ்சங்களிலிருந்து  தொங்கிக் கொண்டிருந்த  பேரீச்சைகளின்  இடைவெளிகள்,  கள்ளிகளின்  திருகல் மருகலான கைகள்,  பாதைகளின் மீதிருந்த ஜல்லிகளின் விநோதமான அமைப்புகள். பிறகு வளர்ந்தவர்கள் இருந்தார்கள். பொருள்களை, நிஜமான பொருள்களைக் கையாள்வதுதான் அவர்களுடைய வேலையாக இருந்தது. நான் செய்ய வேண்டி இருந்ததெல்லாம் புதிய குறியீடுகளையும், புதிய அர்த்தங் களையும் கண்டுபிடிப்பது.  இந்த  மாதிரி  என் வாழ்க்கை முழுவதற்கும் இருந்து விட்டேன், நான் இன்னும் அர்த்தங்களின் ஒரு கோட்டையில் வாழ்கிறேன், பொருள்களில் அல்ல. இன்னமும் நான் மற்றவர்களின் மீது, வளர்ந்தவர்கள் மீது சார்ந்திருக்கிறேன். அவர்கள்தான் பொருள்களைக் கையாள் கின்றனர்.  ஆனால் குழந்தையாயிருந்த காலத்திலிருந்தே லேத்துகளில் வேலை செய்தவர்கள் இருக்கிறார்கள். அது பொருள்களைச் செய்யும் ஒரு கருவி. அது உருவாக்கும் பொருள்களைத் தவிர அதற்கு வேறு எதுவும் அர்த்தமிருக்க முடியாது.  நான் ஒரு யந்திரத்தைப் பார்க்கும் பொழுது அதை ஒரு மாயாஜாலக் கோட்டையாகவே பார்க்கிறேன். அதற்குள் அதன் பல் சக்கரங்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் சிறிய மனிதர்களைக் கற்பனை செய்கிறேன். கடவுளுக்குத்தான் தெரியும் ஒரு லேத் என்பது என்னவென்று. உனக்கு ஒரு லேத் என்றால் என்னவென்று தெரியுமா, மரியமரெல்லா?”

”ஒரு லேத், எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, இப்பொழுது”, அவள் சொல்கிறாள்.

”லேத்துகள், நிஜமாகவே முக்கியமானவையாகத்தான் இருக்க வேண்டும். ஒரு ரைஃபிளை இயக்குவதற்குச் சொல்லித் தருவதை விட, எல்லோருக்கும் அவர்கள் லேத்தை இயக்குவதற்குக் கற்றுத் தர வேண்டும், ஒரு ரைஃபிள் என்பதும் குறியீட்டால் ஆன வேறு ஒரு பொருள்தான், அதில் நிஜமான பயன் ஏதும் இல்லை.”

”எனக்கு லேத்துகளில் ஈடுபாடு கிடையாது”

”பார். அது உனக்கு எளிமையாக இருக்கும். உன்னைக் காப்பாற்றுவதற்கு உனக்கு உன்னுடைய தையல் மெஷின்கள் இருக்கின்றன, உன்னுடைய ஊசிகள், இப்படிப் பல, காஸ் வளையங்கள், டைப் ரைட்டர்கள் கூட. உனது தப்பித்தலுக்காக  சில புராணிகங்கள்  மட்டுமே உனக்கு உள்ளன. சகலமும் எனக்கு ஒரு குறியீடாக இருக்கிறது. மிகவும் நிச்சயமாக இருக்கக் கூடிய தெல்லாம் நாம் பொருள்களை வென்று மீட்டெடுக்க வேண்டும் என்பது மட்டுமே.”

நான் அவளை மிக மென்மையாக வருடுகிறேன்.

”அப்படியானால், நான் ஒரு பொருளா?”அவள் கேட்கிறாள்.

”ஆங்” என்கிறேன் நான்.

அவளுடைய கையிடுக்குக்கு மேலாக, தோள் மீது ஒரு குழியைக் கண்டு பிடிக்கிறேன், அதன் பின்னால் எலும்பில்லாத, மிருதுவான பகுதி, கன்னக் குழிகளில் இருப்பதைப் போல இருக்கிறது.  என் உதடுகள் அக்குழி மீதிருக்கும்படியாகப் பேசுகிறேன்.

”கன்னத்தைப் போன்ற தோள்கள்”, நான் சொல்கிறேன், அது புரிந்து கொள்ள முடிவதாக இல்லை.

”என்ன?”, அவள் வினவுகிறாள். ஆனால்  நான் அவளிடம் சொல்வது என்னவென்று கொஞ்சம் கூட கவலைப் படாதிருக்கிறாள்.

”ஜூன் மாதிரி ரேஸ்”  நான் சொல்கிறேன், இன்னும் அந்தக் குழியில் இருந்தபடி. நான் செய்வது என்னவென்று அவளுக்குப் புரியவில்லை, ஆனால் அவளுக்குப் பிடித்திருக்கிறது, சிரிக்கிறாள். அவள் ஒரு நல்ல பெண்.

”கடல் போன்ற வருகை” நான் சொல்கிறேன், அவளுடைய தோள் குழியிலிருந்து என் வாயை எடுத்து விட்டு என் காதை அதில்  வைத்து எதிரொலியைக் கேட்கிறேன். நான் கேட்க முடிவதெல்லாம் அவளுடைய மூச்சும், தூரத்தில் புதைந்து போயிருக்கும், அவளது இதயத்தின் ஓசையும்தான்.

”ரயிலைப் போன்ற இதயம்”, நான் சொல்கிறேன்.

”அங்கே இப்போது என் மனதில் இருக்கும் மரியமரெல்லா அல்ல இவள், கூடவே ஒரு நிஜ மரியமரெல்லா:  அவள்தான் மரியமரெல்லா. நாங்கள் இப்போது செய்து கொண்டிருப்பது கொஞ்சம் மனதளவிலானதும் கொஞ்சம் நிஜமானதும் அல்ல:  கூரைகளுக்கு மேலான பறத்தல், என்னுடைய கிராமத்தில் இருக்கும் வீட்டின் ஜன்னல் அருகாமையிலான தென்னை மரங்கள் காற்றில் அசைவது போல் இந்த வீடு உயரத்தில் அசைகிறது, ஒரு பெரிய காற்று எங்கள் மேல்மாடியைத் தூக்கிக் கொண்டு வரிசையான சிவப்பு ஓடுகளுக்கும் வானத்திற்கும் அப்பால் எடுத்துச் செல்கிறது.

என் கிராமத்தின் அருகில் இருக்கும் கடற்கரையில், கடல் என்னைக் கவனித்து விட்டு ஒரு பெரிய நாயைப் போல என்னை வரவேற்கிறது. கடல்–அந்த பிரம்மாண்டமான நண்பன், சிறிய வெள்ளைக் கைகளுடன், அது கடற்கரைக் கூழாங்கல் பரப்பினைச் சிராய்த்து விடுகிறது–ஒரே சமயத்தில் அது கழிமுகத்தின் சுழல் மதில்களின் மீது வீசிச் செல்கிறது, தனது வெள்ளை வயிற்றை பின்னுக்கிழுத்து, மலைகளின் மீது தாவுகிறது,  இதோ  இங்கே  வருகிறது  பின்  வாங்கும்  நீரோட்டத் தேக்கத்தின் வெள்ளைப் பாதம் கொண்ட ஒரு பிரம்மாண்ட நாயைப் போல. வெட்டுக்கிளிகள் மௌன மாகிவிடுகின்றன. எல்லாத் தாழ்நிலங்களும் வெள்ளத்தால் நிறைந்து விடுகின்றன–வயல்களும் திராட்சைத் தோட்டங்களும். ஒரே ஒரு விவசாயி முள் மண்வெட்டியை எடுத்து உரக்கக் கத்தும் வரை. கடல் மறைகிறது. நிலத்தினால் குடிக்கப்பட்டது போல. விடை பெறுகிறேன், கடலே!

வெளியே சென்று, நானும் மரியமரெல்லாவும் படிகளுக்கு கீழே எவ்வளவு வேகமாய் முடியுமோ அவ்வளவு வேகமாய் ஓடத் தொடங்குகிறோம், வீட்டுச் சொந்தக்காரி தடுக்கப்பட்ட கதவின் வழியாகத் தோன்றி, எங்கள் கண்களுக்கு உள்ளாகப் பார்த்து எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயல்வதற்கு முன்னால்.

••••

Love far away from Home-Numbers in the Dark [1999] Vintage Edition, New York translated by Tim Parks.

readerr

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: