ரோசென்டோவின் கதை-மான்க் ஈஸ்ட்மேன், அநீதிகளை விநியோகிப்பவன்-JL Borges

monkeastman-rosendo11ரோசென்டோவின் கதை

ஜோர்ஜ் லூயி போர்ஹே

-1966-

இரவு பதினோரு மணி இருக்கும். பொலிவார்-வெனிசுலா மூலையில் பலசரக்குக் கடையாகவும் மதுபானக் கடையாகவும் இருந்ததில் நுழைந்தேன். (இப்போது அது வெறும் மதுபானக்கடை மட்டும்தான்) அதனுள் இன்னொரு பக்கத்தில் இருந்த மனிதன் வாயால் த்ஸ்ஸ் . . . சப்தமிட்டு எனக்கு சமிக்ஞை செய்தான். அவனுடைய செயலில் ஏதோ ஒரு கட்டுப்படுத்தும் தன்மை இருந்திருக்க வேண்டும். ஏனெனில் நான் உடனே அவனைக் கவனித்தேன். அங்கே இருந்த சிறிய மேஜையருகில் காலியான மதுக்கோப்பை முன் அமர்ந்திருந்தான். அவன் அங்கே நெடுநேரமாக உட்கார்ந்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்றும் எனக்குத் தோன்றியது. குள்ளமும் இல்லாமல் உயரம் என்று சொல்லமுடியாத படியும் இருந்த அவன் ஒரு சாதாரண தொழிலாளி அல்லது ஒரு பண்ணை வேலைக்காரன் போல தோற்றம் கொண்டிருந்தான். அவனுடைய மெல்லிய மீசை நரைத்துக் கொண்டிருந்தது. போனஸ் அயர்சில் இருந்த பல ஜனங்களைப் போலவே தன் உடல் ஆரோக்கியம் பற்றிய பயத்தினால் அவன் தோளைச் சுற்றியிருந்த ஸ்கார்ஃபை எடுக்காமலே இருந்தான். அவனுடன் ஒரு தரம் குடிக்கச் சொன்னான். நான் அமர, நாங்கள் இருவரும் அளவளாவினோம். இது எல்லாம் முப்பதுகளின் தொடக்கத்தில் நடந்தது. பின் வரும் கதைதான் அந்த மனிதன் சொன்னது:

“உங்களுக்கு என்னைத் தெரியாது. மற்றபடி என்னைப் பற்றி நிலவும் மதிப்புமரியாதை காரணமாக ஒரு வேளை தெரிந்திருக்கலாம். மற்றபடி எனக்கு உங்களைத் தெரியும். நான்தான் ரோசென்டோ யூவாரஸ். இறந்து போய்விட்ட பாரதெஸ் என்னைப் பற்றி உங்களிடம் சொல்லி இருக்கலாம். அந்தக் கிழவனுக்கு ஏதாவது ஒரு விஷயத்தை அல்லது செய்தியை நீட்டிக் கொண்டே போவது பிடிக்கும். ஒரு புள்ளி வரை நீட்டுவான்-ஆனால் பொழுது போக்காகத்தானே தவிர யாரையும் ஏய்ப்பதற்காக அல்ல. நல்லது. உங்களைப் பார்த்ததினாலும், எனக்கு அதை விட முக்கியமான வேலை எதுவும் தற்சமயம் இல்லை என்பதாலும் அந்த இரவு என்ன நடந்தது என்பதை நான் மிகச் சரியாகச் சொல்லப் போகிறேன். புட்ச்சர் கொல்லப்பட்ட அந்த இரவு. இது எல்லாவற்றையும் உங்கள் கதைப்புத்தகத்தில் எழுதி வையுங்கள். அதைப் பற்றி கருத்து சொல்வதற்கு எனக்கு அருகதை இல்லை. ஆனால் நிஜம் எது என்பதையும், ஜோடிக்கப்பட்ட விஷயங்கள் எது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.”

எப்பொழுதுமே விஷயங்கள் உங்களுக்கு நடக்கின்றன, பல வருஷங்களுக்குப் பிறகுதான் அவற்றைப் புரிந்து கொள்கிறீர்கள். அன்று இரவு எனக்கு நடந்ததன் தொடக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. ஃபுளோரெஸ்டாவுக்கு அப்பால் மால்டொனாடோ நதியின் சுற்றுப்புறங்களில் நான் வளர்ந்தேன். அப்போது மால்டொனாடோ ஒரு சாதாரண சாக்கடையாகத்தான் இருந்தது, ஒரு விதக் கழிவு ஓடையைப் போல. அவர்கள் அதை மூடிவிட்டது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். முன்னேற்றத்தின் அணிவகுப்பிற்கு எவராலும் தடை போட முடியாது என்ற கருத்து எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது. எனினும் ஒரு மனிதன் பிறந்த இடத்தினை மாற்ற முடியாது. என்னுடைய தந்தை யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்குத் ஏற்படவே இல்லை. கிலிமென்ட்டினா யூவாரஸ் என்பவள்தான் என் தாய்-வண்ணாத்தி வேலை செய்து பிழைப்பு நடத்திய கௌரவமான பெண். எனக்குத் தெரிந்தவரை அவள் உருகுவே அல்லது ‘என்ரெ ரியோஸ்’ பகுதியைச் சேர்ந்தவளாக இருக்க வேண்டும். இருந்தாலும் கான்செப்சியன் தா உருகுவே பகுதியிலிருந்த தன் உறவினர்களைப் பற்றியே அவள் எப்போதும் பேசினாள். ஒரு களைச் செடியைப் போல நான் வளர்ந்தேன். மற்ற எல்லாரையும் போல கத்தியைக் கையாளும் விதத்தினை, எரிந்து கருகிப்போன விறகுக் குச்சியில் கத்திச் சண்டை போடுவதன் மூலம் கற்றுக்கொண்டேன். உங்கள் எதிரியைக் குத்தினால் அது ஒரு தடயத்தினை அவன் முகத்தில் விடும். கால்பந்தாட்டம் எங்களை இன்னும் ஆட்கொண்டுவிடாத காலம்அது–இன்னும் ஆங்கிலேயர்களின் கையிலேயே இருந்தது.

“ஒரு நாள் இரவு மூலையிலிருந்த மதுபானக்கடையில் கார்மென்டியா என்ற இளைஞன் என்னைப் பரிகாசம் செய்யத் தொடங்கினான்-சண்டை பிடிக்கும் நோக்கத்தில். நான் என் காதில் இதெல்லாம் விழாத மாதிரியே இருந்தேன். ஆனால் அவனிடம் கொஞ்சம் இருந்தது. அவன் விடவே இல்லை. நாங்கள் வெளியே சென்றோம். பிறகு நடைபாதை பக்கமிருந்த கதவைத் திறந்து உள்ளே இருந்தவர்களிடம் கூறினான். “யாரும் கவலைப் பட வேண்டாம். இதோ நான் உடனே திரும்பிவிடுவேன். ”

எப்படியோ நான் ஒரு கத்தியை கைப்பற்றிக் கொண்டேன். ஒருவர் மீது ஒருவர் கண் வைத்தபடி சிறிய ஓடையை நோக்கி மெதுவாகச் சென்றோம். அவன் என்னை விட சில வருடங்கள் பெரியவனாக இருந்தான். இருவரும் சேர்ந்து அந்தக் கத்திச்சண்டை விளையாட்டை பல தடவை விளையாடி இருக்கிறோம். அவன் என்னை நார் நாராகக் கிழிக்கப் போகிறான் என்ற உணர்வு எனக்கிருந்தது. அவன் சாலையின் இடதுபுறமாகவும் நான் வலதுபுறமாகவும் இறங்கினோம். அவன் காய்ந்த மண்கட்டிகளின் மீது இடறி விழுந்தான். அந்த தருணம்தான் எனக்குத் தேவைப்பட்டது. உடனடியாக அவன் மீது தாவி ஏறினேன், சிந்திக்காமல் அவன் முகத்தில் ஒரு வெட்டினை ஏற்படுத்தினேன். நாங்கள் நெருங்கப் பொருதினோம். எது வேண்டுமானாலும் நடந்திருக்க முடியும் என்ற நிமிஷம் வந்தது அப்பொழுது வந்தது. இறுதியில் நான் என் கத்தியைச் செருகினேன். எல்லாமே முடிந்து விட்டது. அதற்குப் பிறகுதான் நானும் குத்தப்பட்டிருப்பது எனக்கே தெரிய வந்தது. ஆனால் அவை மேலோட்டமான சிராய்ப்புகளே. அன்றிரவு ஒரு மனிதனைக் கொல்வது என்பதும் ஒருவனால் கொல்லப்படுவது என்பதும் எவ்வளவு எளிமையான காரியம் என்பதைக் கண்டு கொண்டேன். ஓடையில் தண்ணீர் மிகக் குறைவாக இருந்தது. கொஞ்ச நேரம் போகட்டும் என்று செங்கல் சூளைகளில் ஒன்றுக்குப் பின்னால் அவனை அரைகுறையாக மறைத்து வைத்தேன். நான் ஒரு முட்டாள்-அவன் எப்போதும் அணிந்திருந்த நல்ல கல்பதித்திருந்த மோதிரத்தை அவன் உடலில் இருந்து கழற்றிப் போட்டுக் கொண்டேன். என் தொப்பியை நேராக்கிக் கொண்டு மதுபானக் கடைக்குத் திரும்பிச் சென்றேன். அலட்சியமாக உள்ளே நுழைந்தபடி “திரும்பி வந்த அந்த ஒருவர் நான்தான் என்று தோன்றுகிறது” என்றேன்.

நான் கொஞ்சம் ரம் கேட்டேன். நிஜத்தைச் சொல்வதானால் எனக்கு அப்போது அவசியமாக குடிக்கத் தேவைப்பட்டது. அப்பொழுதுதான் என் சட்டைக் கை மீதிருந்த ரத்தக்கறையை யாரோ கவனித்துச் சொன்னார்கள்.

அந்த ராத்திரி முழுவதும் படுக்கையில் புரண்டபடி இருந்தேன். நான் கண் மூடும்பொழுது ஏறத்தாழ விடியல் வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. மறுநாள் பின்பகுதியில் என்னைத் தேடிக்கொண்டு இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள். என் அம்மா (அவள் ஆன்மா சாந்தி அடைவதாக)வீறிட்டுக் கத்த ஆரம்பித்தாள்.என்னை ஒரு குற்றவாளியைப் போல போலீஸ் காரர்கள் ஓட்டிக்கொண்டு சென்றார்கள்.கட்டுக்கடங்காத கைதிகளுக்கான தனியறையில் இரண்டு பகல்கள் மற்றும் இரண்டு இரவுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. லூயி இராலாவைத் தவிர வேறு எவரும் என்னைப் பார்க்க வரவில்லை– அவன் நிஜமான நண்பன் –ஆனால் அவனை உள்ளே விடவில்லை. மூன்றாவது நாள் காலை போலீஸ் கேப்டன் என்னைக் கூப்பிட்டனுப்பினார். என் முகத்தைக் கூடப் பார்க்காமல் நாற்காலியில் அமர்ந்தபடி சொன்னார். “ஆக நீதான் கார்மென்டியாவை நல்லமுறையில் கவனித்துக் கொண்டது, அப்படித்தானே?”

“நீங்கள் சொல்வது அதுதான் என்றால் அப்படியே இருக்கட்டும்” நான் பதில் அளித்தேன்.

“நீ என்னை சார் என்று கூப்பிட வேண்டும். சுற்றி வளைத்துப் பேசுவதோ தமாஷ் பண்ணுவதோ வேண்டாம். சாட்சிகள் உறுதிமொழியுடன் எழுதிக்கொடுத்த அறிக்கைகளும், உன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மோதிரமும் இதோ இங்கே இருக்கின்றன. இந்த வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு விஷயத்தை முடித்துக்கொள்.”

மைக்கூட்டினுள் பேனாவை முக்கி என் கையில் தந்தார்.

“நான் கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன் கேப்டன் சார்.”, என்றேன்.

“இருபத்து நாலு மணிநேரம் தருகிறேன். தனி செல்லில் ஆழ்ந்த யோசனை செய்யலாம். நான் உன்னை அவசரப் படுத்த மாட்டேன். நீ விஷயத்தைப் பார்க்கத் தவறினால் லாஸ் ஹீராஸில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் கொஞ்ச காலத்தைக் கழிக்கும் எண்ணத்திற்கு உன்னைத் தயார் செய்து கொள்”அவர் சொன்னார்.

அவர் பேசியது எனக்குப் புரியவில்லை என்று உங்களால் எளிதாக ஊகித்து விட முடியும்.

அவர் சொன்னார். “கவனி. நீ ஒத்துக் கொண்டால் சில நாள் தண்டனை மாத்திரமே கிடைக்கும். அதற்குப் பிறகு உன்னை விடுதலை செய்து விடுவேன். டான் நிக்கலஸ் பாரெதெரஸ் உன் விஷயங்களை நேர் செய்து தருவதாக ஏற்கனவே என்னிடம் உறுதியளித்திருக்கிறார்.”

நிஜத்தில் மொத்தம் பத்து நாட்கள். கடைசியில் என்னைப் பற்றி அவர்களுக்கு ஞாபகம் வந்தது. அவர்கள் எதிலெல்லாம் கையெழுத்திடச் சொன்னார்களோ அதில் எல்லாம் கையெழுத்திட்டேன். இரண்டு போலீஸ்காரர்கள் என்னை காப்ரெரா தெருவில் இருந்த பாரெதெரஸின் வீட்டுக்குக் கூட்டிச்சென்றார்கள்.

நிறைய குதிரைகள் கட்டும் கம்பங்களில் கட்டப்பட்டிருந்தன. வாசலிலும் உள்ளேயும் ஒரு விபச்சார விடுதியில் இருந்ததை விடவும் அதிகமான மனிதர்கள் இருந்தார்கள். உள்ளுர் மதுவினை ருசித்துக் குடித்துக் கொண்டிருந்த டான் நிக்கலஸ் கடைசியாக என்னைக் கவனித்தார். வேண்டிய அளவு நேரத்தை எடுத்துக் கொண்டு தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மோரோன் பகுதிக்கு என்னை அனுப்புவதாகச் சொன்னார். திருவாளர் லாஃபெரர் என்பவருடன் என்னை தொடர்பு கொள்ளச் செய்வார். லாஃபெரர் என்னைச் சோதித்து அறிவார். முழுக்கறுப்பில் உடையணிந்திருந்த ஒரு இளைஞனிடம் எனக்கான அறிமுகக் கடிதத்தினை எழுதச் சொன்னார். நான் கேள்விப்பட்டிருந்த வரை குடிசைகள், கழிவுகள் பற்றி பண்பட்ட பொதுமக்கள் எவரும் படிக்க விரும்பாத கவிதைகளை அந்த இளைஞன் தயாரித்திருந்தான். பாரெதெரஸுக்கு நன்றி தெரிவித்துவிட்டு இடத்தை விட்டு அகன்றேன். என்னை எந்தப் போலீசும் பின் தொடர்ந்து வரவில்லை.

கடவுளுக்குத்தான் தெரியும் இதெல்லாம் எதற்கென்று. எல்லாமும் நல்லதற்காகவே நடந்தன. தொடக்கத்தில் நிறைய கவலையை அளித்த கார்மென்டியாவின் சாவு இப்போது எனக்குப் புதிய வழிகளைத் திறந்து விட்டது.வாஸ்தவமாக சட்டம் என்னைத் தன் உள்ளங்கையில் வைத்திருந்தது. கட்சிக்கு நான் பயனில்லாமல் போனால் என்னை மீண்டும் உள்ளே தள்ளி விடுவார்கள். ஆனால் மிகச் சௌகரியமாய் உணர்ந்தேன் என் மீது நம்பிக்கை வைத்து.

திருவாளர் லாஃபெரர் அவருடைய கஷ்டத்திலும் நஷ்டத்திலும் கூட நான் இருக்க வேண்டி வரும் என்று எச்சரித்து அப்படி நான் இருக்கும் பட்சத்தில் அவருடைய மெய்க்காப்பாளனாக ஆக முடியும் என்றார். என்னைப் பற்றிய எதிர்பார்ப்புகளை எல்லாம் நான் நிறைவேற்றினேன். மோரோனிலும் பிற்பாடு நகரின் என் பகுதியிலும் என் எஜமானர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானேன். போலீசும் கட்சியும் முரட்டு மனிதன் பலவான் என்ற அளவிலான என்னைப் பற்றிய பேரையும் புகழையும் கட்டி வளர்த்தபடி இருந்தனர். தலைநகரிலும் பிராந்தியங்களிலும் தேர்தல் சமயத்தில் வாக்குகளை ஒருங்கிணைப்பதை நான் சிறப்பாகச் செய்தேன். அச்சமயங்களில் நிகழ்நத ரத்தம் சிந்துதல் பற்றியும் அடிதடி சண்டைகள் பற்றியும் சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டேன். ஆனால் அந்த நாட்களில் தேர்தல்கள் மிகவும் கலகலப்பாக இருந்தன என்பதை மட்டும் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இன்றைய நாள் வரை அவர்கள் தலைவனான ஆலெமின் தாடியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிற முற்போக்குகளை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அங்கே இருந்த எல்லாருமே எனக்கு மரியாதை தந்தனர். லா லூஜனேரா என்ற அழகான பெண்ணையும் பழுப்புச் சிவப்பிலான அழகான குதிரைக் குட்டியையும் அடைந்தேன். பல வருடங்களுக்கு முன்னால் நாடுகடத்தப்பட்ட மொரேய்ராவின் நிலைக்கு வாழ முயற்சி செய்தேன். அவனும் இது போல ஏதோ ஒரு நாடுகடத்தப்பட்ட, கரடுமுரடான அடியாள் ஒருவனின் நிலைக்கு வாழ முயற்சி செய்திருக்க வேண்டும். சீட்டு விளையாடத் தொடங்கினேன். போதை மருந்துகள் சாப்பிட்டேன்.

“கிழவன் ஒருவன் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பான். ஆனால் நீங்கள் கேட்கவேண்டும் என்று நான் நினைக்கிற பகுதிக்கு இப்போது வருகிறேன். முன்பாகவே நான் லூயி இராலாவைப் பற்றி குறிப்பிட்டு விட்டேனா என்று தெரியவில்லை. அந்த மாதிரி ஒரு நண்பனை நீங்கள் அடிக்கடி பார்க்க முடியாது. இராலாவுக்கு வயசாகிவிட்டிருந்தது. அவன் வேலைக்கு என்றுமே பயப்பட்டதில்லை. அவனுக்கு என்னைப் பிடித்துப்போய் விட்டது. அவன் வாழ்க்கை முழுவதிலும் அவனுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அவன் தச்சு வேலை செய்து வந்தான். அவன் யாருக்குமே எந்தத் தொந்தரவும் கொடுத்ததில்லை. எப்பொழுதுமே எவரும் அவனுக்கு துன்பம் கொடுக்க அனுமதித்ததில்லை. ஒரு நாள் காலை என்னைப் பார்க்க வந்திருந்த போது சொன்னான், “வாஸ்தவமாக இந்நேரத்திற்கு காசில்டா என்னை விட்டுப் போய் விட்டாள் என்பது உனக்குத் தெரிந்திருக்கும். ரூஃபினோ அகுவேரா என்னிடமிருந்து அவளைக் கொண்டு போய் விட்டான்.”

அந்த வாடிக்கையாளரை மோரோன் சுற்றுப்புறங்களில் நான் அறிந்திருந்தேன். நான் பதில் அளித்தேன். “ஆமாம். அவனைப் பற்றி சகலமும் எனக்குத் தெரியும். அகுவேரா குடும்பத்திலேயே சற்று சுமாராக அழுகிப்போனவன்.” என்று பதில் சொன்னேன்.

“அழுகிப்போனவனோ இல்லையோ அவன் இப்போது என்னை எதிர் கொண்டாக வேண்டும்.”

அதைப் பற்றி சிறிது நேரம் யோசித்த பின் அவனுக்குச் சொன்னேன். “யாரும் எதையும் எவரிடமிருந்தும் எடுத்துக் கொண்டு விடுவதில்லை. காசில்டா உன்னை விட்டுப் போய் விட்டாள் என்றால் அவள் ரூஃபினோ பற்றி அதிகம் அக்கறை கொண்டிருக்கிறாள் என்றும் நீ அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல என்றும் அர்த்தம்.”

“ஜனங்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? நான் ஒரு கோழை என்று தானே?”

“ஜனங்கள் என்ன சொல்லுவார்கள் என்ற வம்புப் பேச்சில் உன்னைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே. உனக்குப் பிரயோஜனமில்லாத ஒரு பெண்ணைப் பற்றிய விஷயத்தில் ஈடுபடாதே என்பதுதான் என் அறிவுரை.”

அவர் சொன்னார்.“அவளைப் பற்றியல்ல நான் கவலைப் படுவது. ஒரு பெண்ணைப் பற்றி தொடர்ச்சியாக ஐந்து நிமிடம் சிந்திக்கிற ஆண் ஒரு ஆண் இல்லை. அவன் விநோதமானவன். காசில்டாவுக்கு இதயமே இல்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த இரவு எனக்கு முன்பிருந்த வாலிபம் இப்பொழுது இல்லை என்று என்னிடம் சொன்னாள்.”

“ஒரு வேளை உண்மையை உன்னிடம் அவள் சொல்லி இருக்கலாம்.”

“அதுதான் என்னை வருத்துகிறது. இப்பொழுது என் பிரச்சனை எல்லாம் ரூஃபினோதான்.”

“அங்கேதான் நீ மிகக் கவனமாக இருக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் மெர்லோவில் அவன் எப்படி இயங்கினான் என்பதை நான் பார்த்திருக்கிறேன். கத்தி வீசுவதில் மின்னல் அவன்.”

“அவனைக் கண்டு நான் பயப்படுகிறேன் என்றா நினைக்கிறாய்?”

“நீ அவனைக் கண்டு பயப்படவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இதுபற்றி இன்னும் நிதானமாக யோசனை செய். நீ அவனைக் கொன்றால் சிறைக்குப் போவாய். அவன் உன்னைக் கொன்றால் ஆறடி மண்ணுக்குள் புதையுண்டு போவாய். இரண்டில் ஒன்றுதான் எப்படியும் நடக்கும்.யோசித்துப் பார்.”

“அப்படியும் இருக்கலாம்.என் நிலைமையில் நீ இருந்தால் என்ன செய்வாய்?”

“எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் வாழ்க்கையே ஒரு கச்சிதமான முன்மாதிரி இல்லை. ஜெயில் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள கட்சியின் பலசாலியாக மாறிய ஒருவன்தான் நான்.”

“நான் எந்தக் கட்சிக்கும் பலசாலியாக இருக்கப் போவதில்லை. நான் பழைய கணக்கைத் தீர்க்கப் புறப்பட்டிருக்கிறேன்.”

“ஆக , உன் அமைதியையும் நிம்மதியையும் உனக்குத் தெரியாத ஒரு மனிதனுக்காகவும், உன்னை இனிமேலும் விரும்பாத ஒரு பெண்ணுக்காகவும் பணயம் வைக்கப் போகிறாய்?”

என் பேச்சை அவன் கேட்டுக் கொள்ளவில்லை. வார்த்தையின்றிக் கிளம்பிப் போய் விட்டான். மோரோனின் ஒரு மதுபானக் கடையில் ரூஃபினோவிடம் அவன் சவால் விட்டான் என்றும் ரூஃபினோ அவனைக் கொன்றான் என்றும் அடுத்த நாள் எனக்குச் செய்தி கிடைத்தது. அவன் கொல்வதற்காகக் கிளம்பினான். கொல்லப்பட்டா.-ஆனால் அது ஒரு நேர்மையான சண்டை. ஒண்டிக்கு ஒண்டி. ஒரு நண்பன் என்கிற முறையில் என் நேர்மையான அறிவுரையைக் கூறியிருந்தேன். ஆனாலும் குற்றவுணர்வு எனக்கு இருக்கத்தான் செய்தது.

அந்தச் சாவுக்கு சில நாட்களுக்குப் பிறகு ஒரு கோழிச்சண்டை பார்க்கப் போயிருந்தேன். கோழிச்சண்டை எனக்கு எப்போதுமே பிரமாதமானதாக இருந்ததில்லை. உண்மையைச் சொல்வதென்றால் அந்த ஞாயிற்றுக் கிழமை அதை நான் கஷ்டப்பட்டுப் பார்க்க வேண்டியதாயிற்று. “இந்தப் பறவைகளுக்குள் அப்படி என்ன இருக்கிறது ? ஒன்றின் கண்களை ஒன்று பிடுங்கிப் போடச் செய்யும் அளவிற்கு” என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

என் கதையின் இரவு அல்லது என் கதை முடிவின் இரவன்று பிளாக்கியின் வீட்டிற்கு நடனத்தில் கலந்து கொள்ள வருவேன் என்று என் உதவியாளர்களிடம் சொல்லி இருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்திருந்தாலும் என் காதலி அணிந்திருந்த பூப்போட்ட உடை இன்னும் நினைவுக்கு வருகிறது. விருந்து புறக்கடையின் திறந்த வெளியில் நடந்தது. வாஸ்தவமாக, குடித்து விட்டு ஊரைக் கூட்டி சப்தமிடும் ஒன்றிரண்டு குடியர்கள் அதில் இருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சிகள் சீராக நடக்கும்படி நான் பார்த்துக் கொண்டேன். அந்த அந்நியர்கள் அங்கே பிரவேசித்தபோது இன்னும் பன்னிரெண்டு மணி ஆகி இருக்கவில்லை. அவர்களில் ஒருவன் -புட்ச்சர் என்று அழைக்கப்பட்டவன்- அன்றிரவே முதுகில் குத்துப்பட்டு இறந்து போனவன்-எங்கள் எல்லோருக்கும் மது வாங்கித் தந்தான். விநோதமான விஷயம் என்னவென்றால் நாங்கள் இருவரும் நிறைய அம்சங்களில் ஒரே மாதிரி இருந்தோம். காற்றில் ஏதோ மணத்துக் கொண்டிருந்தது. என் அருகில் வந்தவன் என்னை முற்றிலுமாய்ப் புகழ்ந்தான். அவன் வடக்குப்óபிரதேசத்திலிருந்து வந்தவன் என்றும் அங்கே என்னைப் பற்றி ஓரிரு விஷயங்கள் கேள்விப்பட்டதாகவும் சொன்னான். அவனைப் பேச விட்டு அவனை எடை போட்டுக் கொண்டிருந்தேன். அவன் தொடர்ந்து ஜின் குடித்துக் கொண்டே இருந்தான். ஒரு வேளை தைரியத்தை வரவழைக்க வேண்டி இருந்திருக்கலாம். கடைசியில் என்னை சண்டைக்குக் கூப்பிட்டான். அப்புறம் ஏதோ ஒன்று நடந்தது. அது எவருக்கும் என்றுமே புரியவில்லை. வீராப்பு பேசும் அந்த மனிதனில் நான் என்னையே கண்டேன். ஒரு கண்ணாடியில் பார்ப்பதைப் போல. அது என்னை அவமான உணர்வு கொள்ள வைத்தது. நான் பயப்படவில்லை. ஒரு வேளை நான் பயப்பட்டிருந்தால் அவனுடன் சண்டையிட்டிருப்பேன். அங்கே ஏதும் நடக்காதது போலவே நான் நின்றிருந்தேன். அவன் முகம் சில அங்குலங்களே என் முகத்திலிருந்து தள்ளி இருந்தது. அவன் எல்லோரும் கேட்கும்படி கத்தினான். “கஷ்டம் என்னவென்றால் நீ ஒரு கோழை. வேறொன்றுமேயில்லை”

“இருக்கலாம்.” என்றேன் நான். “நான் ஒரு கோழை என்று கருதப்படுவதற்காகப் பயப்படவில்லை. அது உனக்கு மகிழ்ச்சி அளித்தால், நீ என்னை ஒரு வேசியின் மகன் என்று கூப்பிட்டாய் என்றும், என் மீது காறித் துப்ப நான் அனுமதித்தேன் என்றும் கட சொல்லிக் கொள். இப்பொழுது உனக்கு முன்பை விட சந்தோஷமாக இருக்கிறதா?”

லா லூஜனேரா நான் எப்போதும் உள்ளாடையில் மறைத்து எடுத்துச் செல்லும் கத்தியை எடுத்து என் கையில் திணித்தாள். அவள் உள்ளே கனன்று கொண்டிருந்தாள் : “ரோசென்டோ உனக்கு இது தேவைப்படப் போகிறது என்று நினைக்கிறேன்.” அழுத்தமாகக் கூறினாள்.

கத்தியைக் கீழே நழுவ விட்டு வெளியில் நடந்தேன், ஆனால் அவசரப்படாமல் நிதானமாக வெளியேறினேன். என் உதவியாளர்கள் எனக்கு வழி விட்டார்கள். அவர்கள் ஸ்தம்பித்துப் போயிருந்தார்கள். அவர்கள் என்ன நினைத்தார்கள் என்பது பற்றி எனக்கென்ன?

அதிலிருந்து ஒரு புத்தம் புதிய வாழ்க்கையைத் தொடங்க, உருகுவேயிற்குச் சென்றேன். அங்கே மாடுகள் மேய்க்கும் தொழிலாளியானேன். போனஸ் அயர்சுக்குத் திரும்பி வந்து இந்தப் பகுதியில் தங்கி விட்டேன். சேன் டெல்மோ என்றுமே ஒரு கௌரவமான பகுதியாக இருந்து வந்திருக்கிறது.

Translated by Normon Thomas Di Giovanni [From The Aleph and Other Stories 1933-1969]


மான்க் ஈஸ்ட்மேன்,

அநீதிகளை விநியோகிப்பவன்


ஜோர்ஜ் லூயி போர்ஹே


இந்த அமெரிக்காவின் அவர்கள்

நீலநிறச்சுவர்கள் அல்லது திறந்த வானம்ஆகிய இவற்றின் பின்னணியிலிருந்து துல்லியமாகத் மாறுபட்டுத் தெரியும்படி சாத்வீகமான கறுப்பு நிறத்தில் பிடிப்பான உடையணிந்து, குதிகால் உயர்ந்த காலணிகளைப் போட்டுக் கொண்டு இரண்டு அடியாட்கள் பொருத்தமான கத்திகளின் அபாயகரமான பாலே நடனத்தினை, அவர்களில் ஒருவரின் கத்தி அதன் அடையாளத்தை மற்றவனின் மீது கீறி, காதிலிருந்து சிவப்பு கார்னேஷன் மலர் விரிவது போல் குருதி வரும் வரை ஆடுகின்றனர். தன்னில் குருதிப் பூ விரியப் பெற்றவன் இந்தப் பின்னணி இசையில்லாத நடனத்தை தன் மரணத்தின் மூலமாக நிலத்தின் மீது முடிவுக்குக் கொண்டு வருகிறான். சந்தோஷத்துடன், மற்றவன் தனது உயரமான தலை உச்சி கொண்ட தொப்பியைச் சரி செய்து கொண்டு, அவனது கடைசி வருடங்களை இந்த இருவருக்கான இந்த திருத்தமான சண்டையைப் பற்றித் திரும்பத் திரும்ப சொல்வதில் தனது இறுதி வருடங்களைக் கழிக்கிறான். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதுதான் நமது பழைய கால அர்ஜன்டீனிய தலைமறைவு உலகத்தின் சாராம்சம். நியூயார்க்கின் பழைய தலைமறைவு உலகானது இன்னும் கூடுதலாகத் தலை சுற்றச் செய்யும் என்பதோடு இழிவுத்தன்மை கூடியதாகவும் இருக்கும்.

மற்றதின் அவர்கள்

நியூயார்க் நகரின் அடியாள் குழுக்களின் வரலாறு (ஹெர்பர்ட் ஆஸ்பரி என்பவரால் ஒன்றுக்கு எட்டு அளவில் நானூறு பக்கங்களைக் கொண்ட கனமான தொகுதியாக 1928 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் வெளிக் கொணரப்பட்டிருப்பது) இயலுலகத் தோற்றகால காட்டுமிராண்டிப் பிறப்புகளிடம் குடிகொண்டிருந்த குழப்பங்களையும், குரூரங்களையும், அவர்களுடைய பிரம்மாண்ட அளவிலான கையாலாகாத்தனங்களின் பெரும்பகுதியையும் உள்ளடக்கிறது-நீக்ரோ சேரிகளில் தேன்கூட்டுப் பொந்துகளாக சாராயம் வடிக்கும் பழைய நிலவறைகள்; மூன்று அடுக்குகள் கொண்ட பழைய உளுத்துப் போன நியூயார்க்; சாக்கடையின் சுழல்வழிகளில் ரகசிய சந்திப்புகளை நடத்திய ஸ்வாம்ப் ஏஞ்சல்ஸ் என்ற குற்றக் குழுக்கள்; Day Break Boys போன்ற பத்துப் பன்னிரண்டு வயதாகாத சிறு வயது கொலைகாரர்களை வேலைக்கு அமர்த்திய குற்றக் குழுக்கள்; Plug Uglies போன்ற ராட்சஷத்தனமான, துணிவான தனிமையாளர்கள்; அவர்கள் மாபெரும் விறைப்பான தொப்பிகள். கம்பளி நூலால் திணிக்கப்பட்டிருக்க அவற்றை, காதுகளை மூடும்படியாக தலைக்கவசம் அணிந்திருப்பவர்களைப் போல அவர்கள் அணிந்திருப்பார்கள். பொவரி காற்றில் கால்சட்டைகளுக்கு வெளியே தொங்க விடப்பட்டிருக்கும் சட்டையின் பின் முனைகள் படபடக்கும் வண்ணமிருந்த அவர்கள் தோற்றம் அவர்களைக் கடந்து சென்றவர்களின் எல்லாந் தெரிந்த புன்னகையைச் பம்பாதித்துக் கொடுத்தது. ஆனால் அவர்களின் ஒரு கையில் கதாயுதம் போல ஒன்றிருக்கும். பாக்கெட்டிலிருந்து துப்பாக்கி துருத்திக் கொண்டிருக்கும். டெட் ரேபிட்ஸ் போன்ற குற்றக் குழுக்கள் ஒரு ஈட்டியின் மீது செருகப்பட்ட செத்த எலியின் சின்னத்துடன் சண்டைக்குப் போவார்கள்; போன்றவர்கள் தலை முடியின் முன்கற்றையைச் சுருட்டி, எண்ணெய் தடவி நெற்றியில் ஒட்ட வைத்திருந்த பிரத்யேக சிகையலங்காரத்திற்கும் குரங்கை ஒத்த வடிவத்தில் செதுக்கப்பட்டிருந்த கைப்பிடி கொண்ட கைத்தடிக்கும், எதிரியின் கண்களைத் தோண்டியெடுக்க வேண்டி அவன் கண்டு பிடித்துப் பயன்படுத்தி வந்த கட்டை விரல் மீதான அந்தத் தாமிரப் பொறியமைப்பிற்கும் பெயர் பெற்ற ஷோக்குப் பேர்வழி டேன்டி ஜானி டோலான்; இருபத்தைந்து சென்ட் அமெரிக்கப் பணத்திற்காக கிட் பர்ன்ஸ் போன்றவர்கள் உயிருள்ள எலியின் தலையை ஒரே கடியில் கடித்துத் துண்டாக்கக் கூடியவர்கள்; மூன்று பெண்களுக்காகத் தரகன் வேலை பார்த்த ப்ளைன்ட் டேனி லியான்ஸ், இளமையாக, வெள்ளைத் தோலுடன், தங்க நிற முடியுடன், பிரம்மாண்டமான குருட்டுக் கண்களுடன் இருந்தான். அந்த மூன்று பெண்களும் பெருமையோடு வீதி உலா வந்தார்கள். நியூ இங்கிலாந்தில் இருந்த சிறிய கிராமத்தில் வசித்த, கிறிஸ்துமஸ் தினத்தின் முந்தைய நாளின் வியாபாரப் பணத்தை தர்மத்திற்காகக் கொடுத்த ஏழு சகோதரிகளின் வீட்டினில் எரிந்ததைப் போல இவர்களின் வீடுகள் வரிசையாக, ஜன்னல்களில் சிவப்பு லாந்தர்கள் எரிந்த வண்ணம் இருந்தன. அங்கே எலிக்குழிகளில் துறைமுகக் கிடங்கு எலிகள் பட்டினி போடப்பட்டு டெர்ரியர் காவல் நாய்களுக்கு எதிராகத் திருப்பி விடப்படும்; சீன சூதாட்ட விடுதிகள்; கோஃபர் குற்றக் குழுவின் அனைத்து அங்கத்தினர்களின் ஆசைநாயகியாக விளங்கிய, திரும்பத்திரும்ப விதவையாகிய சிவப்பு நோரா போன்ற பகட்டுப் பெண்கள். டேனி லியான்ஸ் கொலைக் குற்றத்திற்காக மரணதண்டனை அடைந்தபோது துக்கம் அனுஷ்டித்தவளும், இறந்து போன குருட்டு மனிதனுக்காகத் தம்மில் யாருடைய சோகம்மும் இழப்பும் அதிகம் என்ற வா
க்குவாதத்தின் ஒரு கட்டத்தில் ஜென்ட்டில் மேகி என்பவளால் குரல்வளையில் கத்திக் குத்துப்பட்டவளுமான
லிஸ்ஸி த டவ் போன்றவர்கள்; 1863 இல் நடந்தேறிய, நூற்றுக் கணக்கான கட்டிடங்கள் நெருப்புக்கு இரையாகி, மண்ணோடு மண்ணாக்கப்பட்டு, நகரமே ஏறத்தாழ கைப்பற்றப்பட்டு விட்ட திட்ட வரையறைக் கலவரங்களின் கொடூர வாரம் போன்ற மக்கள் கிளர்ச்சிகள்; கடலில் மூழ்குவது போல் மனித வெள்ளத்தில் சிக்கி ஒரு மனிதன் மிதிபட்டுச் செத்து மடிந்த கணக்கற்ற தெருச்சண்டைகள்; யோஸ்கே நிக்கர் போன்ற திருடனும், குதிரைகளுக்கு விஷம் வைப்பவனுமான ஒருவன்; இவை அனைத்தும் நியூயார்க் நகரின் இருண்ட உலகத்தின் பெருங்குழப்பமான வரலாற்றின் ஊடும்பாவுமான விஷயங்கள். இதன் மிகப் பிரபலமான நாயகன், ஆயிரத்து இருநூறு அடியாட்களின் எஜமானனான எட்வர்ட் டிலானே, என்கிற வில்லியம் டிலானே, என்கிற ஜோசப் மார்வின் என்கிற ஜோசப் மாரிஸ் என்கிற மான்க் ஈஸ்ட்மேன்.

நாயகன்

அடையாளம் குறித்த இந்த மாறுதல்கள் (யார் யார் என்று எவருக்கும் உறுதியாகச் சொல்ல முடியாத ஒரு மாறுவேட நிகழ்ச்சி அளவுக்கு அலைகக்கழிப்பானது) அவனுடைய நிஜப்பெயரை — அப்படி ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொண்டால்–விட்டுவிடுகின்றன. பதிவு செய்யப்பட்ட தகவல்களின்படி புரூக்ளின் நகரின் வில்லியம்ஸ்பர்க் பிரிவில் எட்வர்ட் ஓஸ்டர்மேன் என்ற பெயரில் பிறந்தான். பிறகு இந்தப் பெயர் ஈஸ்ட்மேன் என்று அமெரிக்கமயமாக்கப்பட்டது. விநோதமான வகையில் இந்த களேபரமான தலைமறைவுப் பாத்திரம் ஒரு யூதனாக இருந்தான். யூதர் உணவு விடுதி உரிமையாளர் ஒருவரின் மகன் அவன். அந்த விடுதியில் யூதப் பாதிரி போல தாடி வளர்த்தவர்கள் ஆபத்தின்றி, சடங்குடன் கொல்லப்பட்டு, மூன்று முறை சுத்தம் செய்யப்பட்ட, கன்றுக்குட்டி இறைச்சியைச் சாப்பிடலாம். ஏறத்தாழ 1892 ஆம் வருட சமயத்தில் அவனுக்குப் பத்தொன்பது வயதாகும் போது, அவன் தந்தை ஒரு பறவை விற்பனை நிலையத்தை அமைத்துக் கொடுத்து, வியாபாரத்தில் அறிமுகம் செய்தார். அவனுக்கு விலங்குகளின் மீது தீராத ஆர்வம் இருந்தது. அவற்றின் துருவி ஆராய முடியாத சூதின்மையிலும்,சிறிய தீர்மானங்களிலும் அவனுக்கு இருந்த ஈடுபாடு வாழ்க்கையின் இறுதி வரைக்குமான பொழுது போக்காக மாறிற்று. பல வருடங்களுக்குப் பிறகு, செழிப்பின் அபரிமித காலத்தில், பழுப்புப் புள்ளிகள் நிறைந்த முகங்கள் கொண்ட டேம்மனி தலைவர்கள் தந்த ஹவானா சுருட்டுகளை வெறுப்புடன் மறுத்தபோதும், அல்லது மிகச்சிறந்த விபச்சார விடுதிகளுக்கு, புதிய கண்டுபிடிப்பான காரில் (ஒரு கோன்டொலா கப்பலின் திருட்டுக் குழந்தை போலத் தோன்றியது) செல்லும் போதும் அவன் இரண்டாவது தொழிலைத் தொடங்கினான். ஒரு முகப்பு, அதில் நூறு பூனைகளும், நாநூறுக்கும் மேற்பட்ட புறாக்களும் வசிக்க முடிந்தது–ஆனால் இதில் எதுவும் எவருக்கும் விற்பனைக்காக அல்ல. அவை ஒவ்வொன்றையும் அவன் நேசித்தான்–அக்கம்பக்கத்து இடங்களுக்குச் செல்லும் போது ஒரு கையிடுக்கில் ஒரு சந்தோஷமான பூனையுடன் செல்வான். வேறு நிறைய பூனைகள் அவனுக்குப் பின்னால் எதிர்பார்ப்புடன் ஓடிவரும்.

அவன் ஒரு சிதைவுற்ற, பிரம்மாண்ட மனிதன். அவனுடையது குட்டையான மாட்டுக் கழுத்து. மிக அகலமான மார்பு. ஒரு உடைந்த மூக்கு. கரடுமுரடான கரங்கள். அதிகபட்சமான வடுக்கள் நிறைந்திருந்தாலும் அவனது முகம், அவனுடைய உடல் அளவுக்குக் குறிப்பிடும்படியானதல்ல. மாட்டுக்காரனுடையதைப் போலவோ,அன்றி மாலுமியினுடையதைப் போலவோ அவன் கால்கள் வளைந்திருந்தன. வழக்கமான சட்டையோ கோட்டோ போட்டுக் கொள்ளாமல் அவனைப் பார்க்கலாம். ஆனால் துப்பாக்கி ரவை மாதிரி வடிவமைப்பு கொண்ட தலையின் மீது, அவன் தலைக்கு பல தடவைகள் சிறியதான டெர்பி தொப்பி எப்பொழுதும் உட்கார்ந்திருப்பதைக் காண முடியும். மானுடம் அவனது ஞாபகத்ததைப் பாதுகாத்து வைத்தது. உடல் அளவில், சம்பிர தாயமான திரைப்பட துப்பாக்கிச் சண்டைக்காரன், ஈஸ்ட்மேனின் பிரதியே ஆவான். கட்டையாகவும் குட்டையாகவும் அலித்தன்மை மிகுந்தும் இருந்த கேபோன் என்பவனைப் போன்றல்ல. ஹாலிவுட் சினிமாக்காரர்கள், லூயி வோல்ஹேம் என்ற நடிகரை பயன்படுத்திக் கொண்டதற்குக் காரணம், வோல்ஹேமின் சாயல்கள்,இறந்து போன மான்க் ஈஸ்ட்மேனு டையதைப் போல இருந்ததுதான். தன் உடலின் பின்பகுதியின் மீது அமர்ந்திருக்கும் பறவை யுடன் திரியும் காளைமாட்டினைப் போல, அவனுடைய தலைமறைவு ராஜ்ஜியத்தில், பெரிய நீலநிறப் புறா அவன் தோள் மீது அமர்ந்திருக்க கம்பீரமாக ஈஸ்ட்மேன் நடந்து செல்வது வழக்கம்.

தொண்ணூறுகளின் மத்தியில், நியூயார்க்கில் பொது நடன விடுதிகள் வதவதவென்று நிறைய இருந்தன. அவற்றில் ஒன்றில் ஈஸ்ட்மேன் அடியாளாக வேலை பார்த்தான். ஒரு முறை நடன விடுதியொன்றின் மேலாளர் அவனை வேலைக்கு வைத்துக் கொள்ள மறுத்து விட்டது பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. ஈஸ்ட்மேன், உடனே, தன் வேலை செய்யும் திறனை செயல்முறைப் படுத்திக் காட்டுவதற்கு, அவனுக்கும் அவன் வேலைக்கும் குறுக்காக நின்ற இரண்டு அசுரத்தனமான ஆட்களை வைத்துத் தரை மெழுகினானாம். ஒற்றை ஆளாக, சகலராலும் அஞ்சப்பட்டு, 1899ஆம் ஆண்டு வரை இந்த வேலையில் அவன் இருந்தான். தகராறு செய்த ஒவ்வொருவனையும் அடக்கியபோது அவனது உருட்டுக்கட்டை போன்ற ஆயுதத்தில் ஒரு அடையாளத்தைச் செதுக்கிக் கொண்டான். ஓர் இரவு, தன் காரியத்தை மட்டும் கவனித்துக் கொண்டு யாருக்கும் இடைஞ்சல் செய்யாத, அடர்ந்த நிற பியரைக் குடித்துக் கொண்டிருந்த சொட்டைத்தலையன் ஒருவரைக் கண்ணுற்று, அந்த ஆளை ஒரே அடியில் காலி செய்து விட்டான். “என் அடையாளக் கோடுகளின் எண்ணிக்கை ஐம்பதாக இன்னும் ஒரு கோடு தேவைப்பட்டது”. என்று பிறகு அதற்கு விளக்கம் தந்தான்.

ஆதிக்க எல்லை

1899ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்ட்மேன் பிரபலமாக மட்டும் இருக்கவில்லை. தேர்தல்களின் போது ஒரு முக்கியமான தேர்தல் தொகுதி ஒன்றின் குழுத்தலைவனாகவும் இருந்தான். விபச்சார விடுதிகளில் இருந்தும், சூதாட்ட விடுதிகளில் இருந்தும், தெரு விபச்சாரிகளிடமிருந்தும், ஜேப்படித் திருடர்களிடமிருந்தும், அவனது ராஜ்ஜியத்தின் வீடுகள் உடைத்து கொள்ளை அடிப்பவர்களிட மிருந்தும் பாதுகாப்பு பணம் வசூலித்தான். டேம்மனி அரசியல்வாதிகள், அவனை கலவரம் உண்டு பண்ணுவதற்காக வேலைக்கு அமர்த்தினார்கள். இதே போலத்தான் தனியாரும். கீழ்க்கண்டவாறு அவனது விலைப்பட்டியல் இருந்தது:

காது வெட்டப்படுவதற்கு 15 டாலர்கள்

கையையோ காலையோ உடைப்பதற்கு 19 டாலர்கள்.

காலில் துப்பாக்கியால் சுடுவதற்கு 25 டாலர்கள்

கத்திக் குத்துக்கு 25 டாலர்கள்

பெரிய தொழிலை முடிப்பதற்கும்,

அதற்கு மேலும் 100 டாலர்களும்

சில சமயங்களில், தன் பங்கு இருக்க வேண்டுமென்று, ஈஸ்ட்மேன் தானே நேரடியாக வேலையை செய்து முடித்தான். எல்லைகள் குறித்த பிரச்சனை(சர்வதேச சட்டத்தின் குற்றப்பதிவு விதிமுறைகளின் நுண்மை, துல்லியம் அளவுக்கும் அளவுக்கு நுணுக்கமானவை, நெருடலானவை) பிரபலமாக இருந்த மற்றொரு குழுவின் தலைவனான பால் கெல்லியுடன் ஈஸ்ட்மேனை மோத வைத்தது. துப்பாக்கி குண்டுகளும்,எந்த ஒழுங்கினையும் அனுசரிக்காத சண்டைகளும், குறிப்பிட்ட பிரதேச எல்லைகளை நிறுவியிருந்தன. ஒரு நாள் காலை நேரத்தில், இந்த எல்லையை ஈஸ்ட்மேன் தன்னந் தனியனாக மீறத் துணிந்த போது, கெல்லியின் ஐந்து ஆட்களால் தாக்கப்பட்டான். தான்யம் அடிக்கும் கோல்களைப் போலிருந்த, மனிதக் குரங்கினுடையதைப் போன்ற அவனது கைகளைக் கொண்டும் கருப்புக் குண்டாந்தடியைக் கொண்டும், ஈஸ்ட்மேன், அவனைத் தாக்கிய மூன்று பேரை வீழ்த்தி விட்டான். ஆனால் இறுதியாக இரண்டு தடவை வயிற்றில் சுடப்பட்டு, இறந்து போனதாகக் கருதப்பட்டு விட்டுச் செல்லப்பட்டான். கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் வைத்து அவனுடைய குருதி பெருகும் காயங்களை ‘அடைத்து மூடியபடி, தடுமாறி கவ்வூனர் மருத்துவ விடுதிக்குச் சென்றான். அங்கே பயங்கரமான காய்ச்சல் உருவில் உயிரும், மரணமும் அவனை அடைய போட்டி போட்டுக் கொண்டிருந்த பல வாரங்களில், அவன் தன்னைக் கொல்லப் பார்த்த நபரின் பெயரைச் சொல்லத் திட்டவட்டமாக மறுத்துவிட்டான். மருத்துவ மனையை விட்டு வெளியில் வந்த போது, போர் தொடங்கி விட்டிருந்தது. 1903ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தொன்பதாம் தேதி வரை ஒரு துப்பாக்கி மோதல் அடுத்து இன்னொரு துப்பாக்கி மோதலாக தொடர்ந்து கொண்டிருந்தது.

ரிவிங்டன் தெரு போர்

போலீஸ் நிலையத்தின் கோப்புகளில் வெளிறிப் போய்க் கொண்டிருந்த புகைப்படங்களை விட சற்றே வித்தியாசமாக இருந்த ஒரு நூறு நாயகர்கள்; சாராய வாடையும் புகையிலை நாற்றமும் வீசும் நூறு நாயகர்கள்; வைக்கோல் தாள்களால் முடையப்பட்ட தொப்பிகளில் பளபளப்பான நிறங்களில் பட்டிகள் அணிந்தபடி நூறு நாயகர்கள்; சிலருக்குக் கூடுதலாகவும் சிலருக்குக் குறைவாகவும் சிறுநீரகக் கோளாறுகளும், சொத்தைப் பல்லும், அவமானப் பட வேண்டிய நோய்களும், சுவாசப்பை கோளாறுகளும் இருந்த ஒரு நூறு நாயகர்கள்; ட்ராய் நகரத்துப் போர், அல்லது அமெரிக்க விடுதலையின் புல்ரன் போரில் பங்கேற்றுக் கொண்டவர்களைப் போல முக்கியத்துவமற்ற அல்லது அற்புதமான ஒரு நூறு நாயகர்கள்; இந்த நூறுபேரும் தமது இருண்ட ஆயதப் போரினை உயரமான இரண்டாம் அவென்யூவின் மேல் வளைவுகளின் நிழலிலிருந்து வெளிப்படுத்தினார்கள். ரிவிங்டன் தெருவில் ஈஸ்ட்மேனிக் நண்பன் ஒருவன் நடத்தி வந்த சூதாட்டத்தின் மீது கெல்லியின் துப்பாக்கி வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்ற விஷயம்தான் காரணம். துப்பாக்கி வீரர்களில் ஒருவன் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்த சரமாரியான துப்பாக்கி சூடுகள் பெரிதாகி, எண்ணிக்கையற்ற கைத்துப்பாக்கிகளின் போராக மாறிற்று. உயரமாக அமைக்கப்பட்ட கட்டிட அமைப்புகளின் பாதுகாப்பில் இருந்தபடி, சுத்தமாக முகச் சவரம் செய்து கொண்டிருந்த மனிதர்கள் ஒருவரை நோக்கி மற்றவர்கள் சுட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி பிரமிக்க வைக்கும் வட்டத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த கார்கள். எதிர்பார்ப்பு மிக்க கூடுதல் ஆட்களும், ஆயுதங்களும் நிறம்பக் காத்திருந்தன.

இந்தப் போரின் பிரதான பாத்திரங்கள், போர் பற்றி என்ன நினைத்தார்கள்? ஒரு நூறு ரிவால்வார்களின் அர்த்தமற்ற இரைச்சல்கள் அவர்களை எந்த நிமிடமும் சாய்த்து விடப் போகிறது என்ற முரட்டுத்தனமான தீர்மானம் வைத்திருந்தார்கள்(என்று நம்புகிறேன்). இரண்டாவது, முதலாவதாகச் சுடப்படும் குண்டுகள் தம்மைத் தாக்கவில்லை என்றால் பின் தாங்கள் அசைக்க முடியாதவர்கள் என்ற முதலாவதற்கு எந்த வகையிலும் குறையாத அளவிலான தவறான உறுதிப்பாடும் அவர்களிடம் இருந்தது — (என்று நம்புகிறேன்).

எப்படியாயினும், சந்தேகத்திற்கிடமின்றி அவர்கள், பழிதீர்க்கும் உணர்வுடன், அந்த இரவு மற்றும் இரும்புத் தூண்களின் பாதுகாப்பில் சண்டையிட்டார்கள். இரண்டு தடவை போலீஸ் குறுக்கிட்டது, இரண்டு தடவையும் போலீசார் விரட்டியடிக்கப்பட்டார்கள். ஏதோ ஆபாசமானதென்பது போலவோ அல்லது பிசாசுத்தனமானது என்பது போலவோ விடியலின் முதல்óமினுங்கல் ஒளியில் போர் பிசுபிசுத்து விட்டது. பிரம்மாண்ட மேல்வளைவுகளின் அடியில் குற்றுயிராய்க் கிடந்த ஏழுபேரும், நான்கு பிணங்களும், ஒரு இறந்த புறாவும் மட்டுமே எஞ்சியிருந்தன.

பிளவுகள்

உள்ளூர் அரசியல்வாதிகளின் பின்னணியில் அவன் பணிணியாற்றிக் கொண்டிருந்தான். எனவே அவர்கள் அப்படிப்பட்ட குழுக்கள் இல்லவே இல்லை என்று பகிங்கரமாக மறுத்தார்கள். அல்லது அவை வெறும் விளையாட்டு மன்றங்கள் என்று சொன்னார்கள். ரிவிங்டன் தெருவின் இந்த விவஸ்தையற்ற போர் அவர்களுக்குப் பீதியூட்டியது. போர் நிறுத்தத்தின் அவசியம் பற்றி எடுத்துரைக்க, கெல்லிக்கும் ஈஸ்ட்மேனுக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்தார்கள். (போலீஸ் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு பல கோல்ட் ரிவால்வர்களை விட டேம்மனி ஹால்காரர்கள் கூடுதல் சக்திவாய்ந்தவர்கள் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு) கெல்லி உடனடியாக ஒப்புக் கொண்டான்.( ஈஸ்ட்மேன் தனது மாபெரும், காட்டுத்தனமாக பேருடம்பின் பெருமையில்)இன்னும் கூடுதலான துப்பாக்கிச் சண்டைக்கும் அமளிக்கும் தவித்துக் கொண்டிருந்தான். மேற்படி சந்திப்பை அவன் மறுக்கத் தொடங்கினான். அரசியல்வாதிகள் அவனை ஜெயிலில் போட்டு விடுவதாக மிரட்டினார்கள். கடைசியில், இரண்டு அடியாள் கூட்டத்தலைவர்களும் அவரவரின் ஆதரவாளவர்களின் கவனிப்புடன் சூழ்ந்தபடி, மாபெரும் சுருட்டுக்களை பல்லால் கடித்தபடி ஒரு கேவலமான சூதாட்ட விடுதியில் சந்தித்துக் கொண்டார்கள். அவர்களின் தகராறுகளை குத்துச் சண்டை மேடையில் முஷ்டிகளால் தீர்த்துக் கொள்வதென்று ஒரு கச்சிதமான அமெரிக்கத்தனமான முடிவை எட்டினார்கள். கெல்லி ஒரு அனுபவம் மிகுந்த குத்துச் சண்டை வீரனாக இருந்தான். பிரான்க்ஸ் பிரதேசத்தில் ஒரு தான்ய சேமிப்புக் கிடங்கில் நடைபெற்ற இந்தச் சண்டை வீணழிவு மிகுந்தது, ஊதாரித்தனமானது. நூற்றி நாற்பது பார்வையாளர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் துர்த்தனமாக டெர்பி தொப்பிகளை அணிந்திருந்த கலவரக்காரர்களும், தங்களின் பெரிய தலைமுடிகளில் ஒளித்து வைக்கப்பட்ட ஆயுதங்களையுடைய அவர்களின் ஆசைநாயகிகளும் இருந்தனர். இருவரும் சண்டையிட்டு, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சண்டை வெற்றி தோல்வி இன்றி முடிந்தது. ஒரு வாரம் முடியும் முன்னே துப்பாக்கிச் சண்டைகள் மீண்டும் தொடங்கின. மான்க் எத்தனையாவது தடவையாகவோ மீண்டும் கைது செய்யப்பட்டான். முழுமொத்தத் துல்லியத்துடன் நீதிபதி அவனுக்குப் பத்து வருட சிறைதண்டனை உண்டு என்று குறி சொன்னார்.

ஈஸ்ட்மேனுக்கு எதிராக ஜெர்மனி

இன்னும் இனம் புரியாத குழப்பத்தில் இருந்து விடுபடாமல் மான்க் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போது, அவன் குழுவில் இருந்த ஆயிரத்து இருநூறு அங்கத்தினர்களும் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்ளும் சிறு குழுக்களாக மாறியிருந்தார்கள். அவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இயலாததால், தனியாகவே செயல்படத் தொடங்கினான் மான்க். 1917ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி பொதுச்சாலையில் தகராறு செய்ததற்காகக் கைது செய்யப்பட்டான். அடுத்த நாள், இன்னும் கூடுதலான கலவரத்தில் பங்கேற்க முடிவு செய்து நியூயார்க் தேசீய பாதுகாப்பு அமைப்பின் 106வது தரைப்படைப் பிரிவில் ராணுவத்தில் சேர்ந்தான். சில மாதங்களிலேயே அவனது படைப் பிரிவினருடன் கப்பல் ஏற்றப்பட்டான்.

அவனுடைய ராணுவ நடவடிக்கைளின் பல வேறுபட்ட அம்சங்களைப் பற்றி நமக்குத் தெரியும். எதிரிகளைச் சிறைபிடிப்பதை பலவந்தமாக ஆட்சேபித்தான் என்பதும், ஒரு முறை தனது துப்பாக்கியின் அடிப்பக்கக் கட்டையைக் கொண்டு இந்த மாதிரியான கேவலமான செயல்பாட்டில் குறுக்கிட்டான் என்பதும் நமக்குத் தெரியும். குண்டடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்றாவது நாளில் யாருமறியாமல் அங்கிருந்து தப்பியோடி போர் நடக்கும் முன்னணி வரிசையில் மீண்டும் சேர்ந்து கொண்டான் என்பதையும் நாம் அறிவோம்.

மவுண்ட் ஃபௌகான் பிரதேசத்தைச் சுற்றி நடந்த போரில் தனித்தன்மையுடன் இயங்கினான் என்பதையும் அறிவோம். பின்னாளில், பொவரி பிரதேசத்தில் இருந்த குறிப்பிட்ட சிறிய நடன அரங்குகளை கட்டிக் காப்பது என்பது ஐரோப்பிய போர்களை விட மிகவும் கடினமானதென்ற கருத்தைக் கொண்டிருந்தான் என்பதையும் நாம் அறிவோம்.

1920 ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்தின் விடியல் நேரத்தில் மான்க் ஈஸ்ட்மேனின் உடல் நியூயார்க் நகரத்தின் கீழ்நகரத் தெருக்களில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஐந்து துப்பாக்கி குண்டுக் காயங்கள் இருந்தன. மகிழ்ச்சியாக, மரணம் பற்றிய பிரக்ஞையின்றி, குறுகல் தெருவின் பூனை ஒன்று, ஒரு வித குழப்பத்தோடு பிணத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.ழ்

Translated by Norman Thomas di Giovanni

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: