ஜோர்ஜ் லூயி போர்ஹே / நித்தியமானவர்கள்/Immortals/Borges/

immortals-borges

ஜோர்ஜ் லூயி போர்ஹே / நித்தியமானவர்கள்

To Cecilia Ingenieros

Salomon saith, “There is no new thing upon the earth. So that as Plato had an imagination, that all knowledge was but remembrance; So Salomon giveth his sentence, that all novelty is but oblivion.”

Francis Bacon: Essays, LVIII

லண்டனில் 1929ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ஸ்மிர்னாவைச் சேர்ந்த ஜோசப் கார்ட்டோ ஃபீலியஸ் என்ற தொல்பொருள் விற்பனையாளர் லூசிஞ் இளவரசிக்கு சிறிய க்வார்ட்டோ சைசில் இருந்த, போப் எழுதிய இலியட் காவியத்தின் ஆறு தொகுதிகளை விற்க முன் வந்தார். இளவரசி அவற்றை வாங்கினார். புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட சமயத்தில் விற்பனையாளரிடம் சில வார்த்தைகள் பேசினார். இளவரசி சொல்கிறபடி அந்த விற்பனையாளன் வெளிர்ந்த கண்களும் நரைத்த தாடியுடனும் தெளிவற்ற அங்கச் சாயல்களுடனும் இருந்த அவன் மண்ணை ஒத்த மனிதனாகவும் நலிந்து குன்றிப் போன உடலுடனும் இருந்தான். பல வேறு மொழிகளில் அவன் தங்குதடையின்றி ஆனால் மடமையுடன் பேசினான். மிகச் சில நிமிடங்களிலேயே பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து ஒரு சலோனிகா ஸ்பானிய மொழி மற்றும் மக்காவோ போர்த்துகீசிய மொழியின் புதிர்க் கலவையான மொழிக்கும் தாவினான். ஜீயூஸ் என்ற கப்பலில் வந்த ஒரு பயணியிடமிருந்து துறைமுக நகரமான ஸ்மிர்னாவுக்குத் திரும்பும் வழியில், கடல் மார்க்த்திலேயே கார்ட்டாஃபீலியஸ் இறந்தான் என்ற செய்தியையும் இயோஸ் தீவில் அவன் புதைக்கப்பட்டான் என்பதையும் இளவரசி தெரிந்து கொண்டாள். இலியட் நூலின் கடைசி தொகுதியில் இந்தக் கையெழுத்துப்பிரதி இருப்பதைக் கண்டு பிடித்தாள்.
மூலப்பிரதி, ஏராளமான லத்தீன்மொழி வார்த்தைக் கலப்புடன், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. நாங்கள் சமர்ப்பிப்பது வரிக்கு வரி உண்மையானது.
என்னால் நினைவு கூற முடிகிற அளவில், எனது பிரயத்தனங்கள், தீபஸ் ஹெகடம்ஃபைலோஸில், ஒரு தோட்டத்தில் தொடங்கியது. அப்போது டயோக்கிளீஷியன் மன்னராக இருந்தார். சமீபத்திய எகிப்தியப் போர்களில் (எவ்விதமானப் புகழாரமுமின்றி) நான் பங்கேற்றிருந்தேன். செங்கடலினை நோக்கி அமைந்திருந்த பெரனீஸ் நகரில் முகாமிட்டிருந்த ராணுவத்தினருக்கு நான் மாகாணத் துணைத் தலைவராக இருந்தேன். வாளின் மீது பெருந்தகைமையுடன் காதல் கொண்டிருந்த பல வீரர்கள் காய்ச்சலுக்கும் மந்திரதந்திரத்திற்கும் இரையானார்கள். மாரிட்டேனிய தேசத்தவர்கள் தோற்கடிக்கப் பட்டனர், முன்பு புரட்சிக்கார நகரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலப்பகுதிகள் என்றென்றைக்குமாக புளோட்டினிய கடவுளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. அடக்கி ஒடுக்கப்பட்டவுடன், அலெக்சாண்டிரியா பயனற்று சீசரின் மன்னிப்பை(கருணையை) வேண்டிற்று, ஒரு வருடத்திற்குள்ளாக வெற்றியைப் பற்றிய தகவலைத் தந்தன படைகள், ஆனால் நானோ போர்க்கடவுள் மார்சின் முகதரிசனத்தைக் கூட சிறிதும் காணவே இல்லை. இந்த வறுமை என்னை வருத்தியது, பயங்கரமானதும், பரந்து விரிந்ததுமான பாலைவனங்களின் ஊடாக நித்தியமானவர்களின் ரகசிய நகரத்தைக் கண்டு பிடிக்க திடீரென நிர்ப்பந்தித்தது ஒரு வேளை இதுவேயாக இருக்கக் கூடும்.
நான் ஏற்கனவே கூறியது போல என் பிரயத்தனங்கள் சகலமும் தீபஸில் ஒரு தோட்டத்தில் தொடங்கியது. அந்த இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. ஏதோ ஒன்று என் மனதிற்குள் போராடிக் கொண்டிருந்தது தான் காரணம். விடியலுக்குக் கொஞ்சம் முன்னர் எழுந்து விட்டேன். என் அடிமைகள் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். முடிவற்ற மணலின் நிறத்தை ஒத்திருந்தது நிலா. களைத்துச் சோர்ந்து போன குதிரைவீரன் ஒருவன் கிழக்கிலிருந்து குருதி பெருக வந்தான். எனக்கு முன்னால் சில அடி தூரத்திற்குள் குதிரையின் இருக்கையிலிருந்து தலை குப்புற கவிழ்ந்து விழுந்தான். ஒரு மெலிந்த, திருப்தியடையாத குரலில் அந்த நகரினைச் சுற்றி ஓடும் நதியின் பெயர் என்னவென்று லத்தீன் மொழியில் விசாரித்தான். மழை நீர்களினால் நிரப்பப்பட்ட எகிப்துதான் அது என்றேன். “நான் வேறு ஒரு நதியினைத்தான் தேடுகிறேன்”, என்று சோகமாக அவன் சொன்னான். “மனிதர்களின் மரணத்தைக் கழுவக்கூடிய ரகசிய நதி அது.” கறுத்த ரத்தம் அவன் மார்பிலிருந்து பீறிட்டது. அவனுடைய தாய்நாடு கங்கை நதியின் மறுபக்கமிருக்கிற ஒரு மலை என்றும், ‘மேற்கில் உலகம் முடிகிற இடத்திற்கு ஒருவர் பயணம் செய்தால் நித்தியத்துவத்தைத் தரும் நதியினை அடையலாம்”என்றும் அங்கிருப்பவர்கள் கூறியதாகச் சொன்னான். ‘அதன் தூரத்துக் கரையில், வட்டவடிவ அரங்குகள், கோயில்கள் மற்றும் முனைப்புமுக அரண்கள் ஆகியவற்றுடன் நித்தியமானவர்களின் நகரம் உயர்ந்து நிற்கிறது’ என்பதையும் கூறினான். விடியும் முன் இறந்து போனான்.
ஆனால், நான் அந்த நகரத்தையும், நதியையும் கண்டு பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டேன். தூக்குத் தண்டனையாளரால் விசாரணை செய்யப்பட்ட மாரிட்டேனிய நாட்டுக் கைதிகள் சிலர் அந்தப் பயணியின் கதையினை ஊர்ஜிதம் செய்தார்கள். பூமியின் விளிம்புப் பிரதேசத்தில் அமைந்து மனிதர்களின் உயிர்கள் அழிவின்றி இருக்கும் எலீசியச் சமவெளியை யாரோ நினைவு கூர்ந்தார்கள். மனிதர்கள் ஒரு நூற்றாண்டு வரை உயிரோடிருக்கும், பேக்டோலஸ் உதிக்கும் மலைச்சிகரங்களை எவரோ ஒருவர் நினைவு கூர்ந்தார். ஒரு மனிதனின் வாழ்வினை நீட்டிப்பது என்பது அவனது அவசங்களை நீட்டித்து அவனது மரணங்களைக் கூட்டுவதற்குச் சமமாகும் என்ற தத்துவவாதிகளுடன் நான் ரோம் நகரில் உரையாடினேன். நித்தியமானவர்களின் நகரம் இருக்கக் கூடும் என்று நான் எப்போதாவது நம்பினேனா என்று எனக்குத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் பிரயத்தனமே போதுமானது என்று நான் நினைத்தேன். கெட்டூலியா மாகாணத் துணைத் தலைவராக இருந்த ஃபிளாவியஸ் இந்தக் காரியத்தின் பொருட்டு இருநூறு போர் வீரர்களை எனக்களித்தார். பாதைகள் தமக்கு நன்றாகத் தெரியும் என்று கூறிவிட்டு முதன் முதலில் படையிலிருந்து ஓடிவிட்ட கூலிப்படையினரையும் நான் இந்த வேலைக்குத் தேர்ந்தெடுத் திருந்தேன்.
பின்பு நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் பிரயாணத்தின் தொடக்க நாட்களின் ஞாபகத்தினை பிரித்தறிய முடியாதபடி குலைத்து விட்டன. ஆர்சிநோவிலிருந்து கிளம்பி தகிக்கும் பாலை வனத்தில் நுழைந்தோம். வார்த்தைகளால் ஆன செய்திப் பரிமாற்றம் பற்றி அறிந்திராத, பாம்புகளைச் சாப்பிடும் ட்ரோக்ளோடைட்டுகளின் நாட்டினைக் கடந்தோம். சிங்கத்தின் மாமிசத்தைப் புசித்து, பெண்கள் அனைவரையும் பொதுவில் வைத்திருந்த காரமான்ட்டுகளின் நாட்டையும், டார்டாரெசை மட்டுமே வணங்கும் அகுயல்களின் நாட்டையும் கடந்தோம். பகல் பொழுதின் ஆக்ரோஷம் பொறுத்தற்கரியதாய் இருந்ததால் பயணிகள் இரவு நேரங்களைக் கைக்கொள்ள வேண்டி வரும் கறுமை நிறமுடைய மணலின் பாலைவனங்களைத் துருவினோம். சமுத்திரத்திற்கு அந்தப் பெயர் வரக் காரணமாயிருந்த சிகரத்தினை மிக நெடிய தூரத்திலிருந்து கண்ணுற்றேன், அதன் புறங்களில் விஷத்தை முறிக்கும் ஸ்பர்ஜ் செடிகள் வளர்ந்தன, இழிதகைமைக்குத் தங்களைத் தந்து விட்ட, வீழ்ச்சியுற்ற காட்டுமிராண்டிகளான சாட்டிர்கள் அதன் உச்சியில் வாழ்ந்தனர், இப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பிரதேசங்கள் தங்களின் உட்புறப் பிரதேசங்களில் – பூமி எங்கே அசுரகணங்களுக்குத் தாயாகிறாளோ அங்கே – அதற்குள்ளே, ஒரு பிரசித்தமான நகரைக் கொண்டிருக்கும் என்று எங்களால் எண்ணவே முடியவில்லை. திரும்பி விடுதல் மதிப்புக் குறைவான செயலாகும் என்பதால் முன்னோக்கிய பயணத்தைத் தொடர்ந்தோம். சில முட்டாள்தனமானவர்கள் தமது முகங்களை நிலவுக்குக் காட்டியபடி தூங்கினர். அவர்களைக் காய்ச்சல் எரித்தது. நீர்த்தொட்டிகளின் அசுத்தப்பட்ட தண்ணீரில் மற்றவர்கள் மரணத்தையும் பைத்தியத்தையும் பருகினார்கள். அப்போதுதான் சிலர் படையிலிருந்து ஓடத்தொடங்குவது ஆரம்பமாகியது. அதற்குக் கொஞ்சம் கழித்து உள்கலகங்கள் ஆரம்பித்தன. அவற்றினை அடக்கும் பொருட்டு நான் கெடுபிடியாக இருப்பதற்குத் தயங்கவில்லை. நான் நியாயமான தீர்ப்பு வழங்கினேன். காட்டிக் கொடுப்பவர்களில் சிலர் (தங்களின் சகா ஒருவனை நான் சிலுவையில் ஏற்றியதை வஞ்சம் தீர்க்கும் பொருட்டு) என்னைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதை ரோமானிய நூற்றுவர் தளபதி ஒருவன் எனக்கு எச்சரிக்கை செய்தான். எனக்கு விசுவாசமாக இருந்த சில வீரர்களுடன் நான் முகாமிலிருந்து தப்பினேன். அவர்களும் நெடிய இரவிலும், மணற்புயல்களிலும் என்னிடமிருந்து காணாமல் போனார்கள். கிரேட்டன் தேசத்து அம்பு ஒன்று என்னைக் காயப்படுத்தியது. பல நாட்கள் நான் குடிக்கத் தண்ணீர் இன்றித் திரிந்தலைந்தேன். என் தாகத்தினாலோ தாகத்தைப் பற்றிய பயத்தினாலோ ஒரு மாபெரும் நாளே பல நாட்கள் போலப் பெருக்கமடைந்து தெரிந்திருக்கலாம். வழியை என் குதிரையின் தீர்மானத்திற்கு விட்டுவிட்டேன். விடியல் பொழுதில் தூரங்கள் பிரமிடுகளாகவும், கோபுரங்களாகவும் சிலிர்த்து நின்றன. சகிக்க முடியாதபடிக்கு ஒரு அரைகுறை புதிர் வழியினைக் கனவு கண்டேன்; அதன் மையத்தில் ஒரு தண்ணீர் ஜாடி; என் கைகள் ஏறத்தாழ அதைத் தொட்டு விட்டன; என் கண்களால் அதைப் பார்க்க முடிந்தது; ஆனால் அதன் வளைவுகள் அத்தனை நுணுக்கமாகவும் குழப்பமுற்றும் இருந்ததால் அதைத் தொடு முன்னர் நான் இறந்து போவேன் என்று எனக்குத் தோன்றியது.

– 2 –

இந்தப் பீதிக்கனவில் இருந்து என்னை இறுதியாக விடுவித்துக் கொண்ட பொழுது என் கைகள் இரண்டும் கட்டப்பட்டு, கல்லால் ஆனதொரு நீள்வட்டவடிவ குழிப்பிறையில் இருந்தேன். அது ஒரு சாதாரண சவக்குழியை விட அதிகமான அகலம் இல்லாமல் ஒரு மலையின் கூரான சரிவில் குடைந்தெடுக்கப்பட்டிருந்தது. அதன் இரண்டு பக்கங்களும் ஈரமாக இருந்தன. மனித யத்தனத்தை விடவும் காலத்தினால் அது மெருகேற்றப்பட்டிருந்தது. என் நெஞ்சில் ஒரு வலி மிகுந்த துடிதுடிப்பினை உணர்ந்தேன். என் தாகத்தினால் நான் தகித்துக் கொண்டிருந்தேன் எனபதையும் உணர்ந்தேன். வெளியே நோக்கி நலிந்த குரலில் உரத்துக் கத்தினேன். மலையின் அடிவாரத்தில் ஒரு அசுத்தமான ஓடை மணலும் இடர்ப்பாட்டுத் துணுக்களிடையிலும்சப்தமின்றி பெருகிக் கொண்டிருந்தது, அதன் எதிர்க் கரையில் (கடைசி அல்லது முதல் சூரிய ஒளியில்) வெளிப்படையாக நித்தியமானவர்களின் நகரம் ஒளிர்ந்தது. அதன் அடித்தளம் ஒரு கல் பீடபூமியாக இருந்தது. அதன் சுவர்களையும், வளைவுகளையும், ஊடு வழிகளையும் நான் கண்டேன். என்னுடையதைப் போன்றே நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட சீரற்ற என்னுடையதை ஒத்த குழிப்பிறைகள் மலையையும் பள்ளத்தாக்கினையும் வடுப்படுத்தியிருந்தன. மணலில் ஆழங்குறைந்த குழிகள் இருந்தன. இந்தக் கேவலமான குழிகளில் இருந்தும், குழிப்பிறைகளில் இருந்தும் குறுக்குமறுக்கான தாடியுடன் சாம்பல் தோல் கொண்ட மனிதர்கள் வெளிப்பட்டனர். நான் அவர்களை அடையாளம் கண்டு கொண்டதாக நினைத்தேன். அரேபிய வளைகுடாப் பகுதியையும், எத்தியோப்பிய குகைப் பிரதேசங்களையும் நிரப்பிய அந்த விலங்குத்தன்மை கொண்ட மனிதர்கள், ட்ரோக்ளோடைட்டுகளின் காமத்துவ வழி வந்தவர்கள். அவர்களால் பேச முடியவில்லை என்பதும், அவர்கள் பாம்புகளை விழுங்கினார்கள் என்பதும் என்னை வியப்படையச் செய்யவில்லை.
என் தாகத்தின் அவசரம் என் பயத்தினை மீறச் செய்தது. மணலில் இருந்து நான் ஒரு முப்பது அடி உயரத்தில் இருந்தேன் எனக் கணக்கிட்டேன். என் கைகள் பின் புறம் கட்டப்பட்டிருக்க, கண்களை மூடிக்கொண்டு மலைச் சரிவில் தலை குப்புற என்னை வீழ்த்தினேன். என் ரத்தம் தோய்ந்த முகத்தை இருண்ட நீரில் அமிழ்த்தினேன். விலங்குகள் நீர் பருகுவதைப் போல நானும் அருந்தினேன். மீண்டும் உறக்கத்திலும், கனவுப்பிதற்றலிலும் என்னை நான் இழக்கும் முன் அர்த்தம் புரியாமல் சில கிரேக்க வார்த்தைகளை திரும்பத் திரும்பச் சொன்னேன்:
“ஜெலியாவிலிருந்து வந்த செழிப்பான ட்ரோஜன்கள் அய்சிபோசின் கருமையான தண்ணீரைக் குடிக்கின்றனர்.”


என் தலைக்கு மேல் எத்தனை பகல்களும் இரவுகளும் கடந்து போயின என்று எனக்குத் தெரியாது. உடலெல்லாம் வலித்தபடி இருக்க, குகைகளின் பாதுகாப்புக்குத் திரும்ப முடியாமல் ஒரு இனம் புரியாத பிரதேசத்தில் நிர்வாணமாக இருந்த நான், சந்திரனையும் சூரியனையும் என் துரதிர்ஷ்டவசமான விதியுடன் சூதாட அனுமதித்தேன். அவர்களின் ஆரம்பத்திய காட்டு மிராண்டித்தனத்தில் உழன்ற ட்ரோக்ளோடைட்டுகள் நான் உயிரோடு இருப்பதற்கோ சாவதற்கோ உதவவில்லை. பயனின்றி, என்னைக் கொன்றுவிடும்படி அவர்களிடம் கெஞ்சினேன். ஒரு நாள் என் கைக் கட்டுகளை சிக்கிமுக்கி கல்லைக் கொண்டு அறுத்துக் கொண்டேன். இன்னொரு நாள் ஆயிரம் ரோமானிய போர் வீரர்களுக்குத் தளபதியாகிய, மார்க்கஸ் ஃபிளாமினியஸ் ரூஃபஸ் ஆகிய நான் என் முதல் வெறுப்புக்குரிய பாம்புக் கரியின் பங்கினைப் பிச்சையாகவோ அல்லது திருடியோ பெற்றேன். அமானுஷ்யமான நகரினைத் தொடுவதற்கும், நித்தியமானவர்களைக் காண்பதற்குமான என் பெரு இச்சை என்னைத் தூங்க விடவே இல்லை. என் நோக்கத்தை ஊடுருவிப் பார்த்துவிட்டவர்கள் போல ட்ரோக்ளோடைட்டுகளும் தூங்க வில்லை. என்னை அவர்கள் கண்காணிக்கிறார்கள் என்று தொடக்கத்தில் நினைத்தேன். பிறகுதான் நாய்களுக்குத் தொற்றுவது போல என் நிலைகொள்ளாத் தன்மை அவர்களையும் தொற்றிக் கொண்டு விட்டது என நினைத்தேன். அந்தக் காட்டுமிராண்டி கிராமத்தை விட்டுச் செல்ல மிகவும் பட்டவர்த்தனமான நேரத்தை, அவரவர் குழிகள் மற்றும் குழிப்பிறைகளில் இருந்து ஏறத்தாழ எல்லா மனிதர்களுமே வெளியே வந்து மறையும் சூரியனைப் பார்க்காமல் பார்க்கும் மாலை வேளையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். தெய்வங்களின் அனுகூலத்தை வேண்டி என்பதை விட உச்சரிக்கப்படும் வார்த்தைகளைக் கொண்டு அந்தப் பழங்குடியினரை மிரட்டுவதே பிரதான நோக்கமாக சத்தமாகப் பிரார்த்தித்தேன். மணல் திட்டுக்களால் அடைபட்டுப் போன ஓடையைக் கடந்து நகரத்தை நோக்கி நான் நடந்தேன். குழப்பத்தோடு என்னை இரண்டு மூன்று பேர் பின் தொடர்ந்தனர். அந்த மெலிந்த தேகமுடையவர்கள் (அந்த இனத்தின் மற்றவர்களைப் போலவே)என்னுள் அருவருப்பை உண்டாக்கினார்களே ஒழிய பயத்தை அல்ல. கல் வெட்டிஎடுக்கும் குழிகளைப் போல எனக்குத் தோன்றிய பல சிறிய மலையிடுக்குகளை நான் தவிர்த்துச் செல்ல வேண்டியதாயிற்று. நகரத்தின் பிரம்மாண்டத் தோற்றத்தினால் உணர்வு மழுங்கிப் போயிருந்த நான் அது குறைவான தூரத்தில் இருக்கும் என்று நினைத்து விட்டேன். நடு இரவை நெருங்கும் போது அதன் சுவர்களின் கரிய நிழல் மீது கால் வைத்தேன். மஞ்சள்நிற மணலில் அதன் உருவ வழிபாட்டுத் தோற்றங்கள் கிளர்ந்து நின்றன. ஒரு புனிதமான பயங்கரத்தினால் நான் நின்று போனேன். புதுமையும் பாலைவனமும் அந்த அளவுக்கு மனிதரால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்ததால், என்னைக் கடைசி வரை தொடர்ந்து வந்த ட்ரோக்ளோ டைட்டுப் பற்றி நான் மகிழ்ச்சி அடைந்தேன். தூங்காமல், என் கண்களை மூடியபடி விடியல் வெளிச்சத்திற்காகத் தூங்காமல் காத்திருந்தேன்.
நகரம் ஒரு கல்பீடபூமியின் மீது அமைக்கப்பட்டிருந்தது என்று சொல்லி இருந்தேன். இந்தப் பீடபூமி ஒரு உயர்ந்த மலைமுகடிற்குச் சமானமாய் இருந்ததால் சுவர்களின் அளவுக்கு சிரமம் தருவதாக இருந்தது. பயனின்றி என் சக்தியைச் செலவழித்துச் சோர்ந்து போனேன். கரிய அடித்தளமானது எந்தச் சிறிய ஏற்றத்தாழ்வினையும் வெளிக்காட்டவில்லை, ஒன்று போலவே இருந்த சுவர்கள் எந்த ஒரு கதவு இருப்பதாகவும் தெரிவிக்கவில்லை, சூரியனின் உக்கிரம் என்னைக் குகையில் தஞ்சம் அடைய வைத்தது, குகையின் பின்புறத்தில் ஒரு பள்ளமும் அந்தப் பள்ளத்தில் ஒரு படிக்கட்டும் இருந்தது, கீழே இருந்த இருட்டுக்குள் முடிவே இல்லாத பாதாளத்திற்குள் அது இறங்கியது. நான் கீழே சென்றேன். படுகளேபரமான படியரங்கங்களின் குழப்பங்களின் ஊடாக, இருட்டில் அமிழ்ந்து போயிருந்த ஒரு வட்ட வடிவ அரங்கினை அடைந்தேன். அதில் எட்டுக் கதவுகள் ஒரு புதிர் வழிக்குக் கூட்டிச் சென்று, மீண்டும் அதே அரங்குக்குத் திரும்பும்படி வஞ்சித்தன. மற்றொரு புதிர்வழியாகச் சென்று ஒன்பதாவது கதவானது முதல் அரங்கிற்கு இணையான இரண்டாவது வட்ட வடிவ அரங்கிற்கு இட்டுச் சென்றது. இந்த நிலவறைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு என்று எனக்குத் தெரியாது. என் துரதிஷ்டமும், பதற்றமும் அவற்றை மிகக் கூடுதலாகத் தெரியவைத்தன. அங்கு நிலவிய நிசப்தம் விரோதமாக, ஏறத்தாழ பூரணமாக இருந்தது. இந்த அடியாழத்து கல்தொடர்ச்சி இணைப்புகளில் பூமிக்கு கீழ்ப்பட்டதான காற்றினுடையதைத் தவிர வேறு எந்த ஓசையும் இருக்கவில்லை. ஆனால் பூமிக்கு அடியில் வீசும் காற்றுக்கான காரணத்தை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. புழைகளின் வழியாக, துருப்பிடித்த நீர்களின் சிறு ஓடைகள் ஓசையின்றி ஓடி மறைந்தன. வெறுக்கத் தகும்படி, இந்த சந்தேகத்திற்குரிய உலகிற்கு என்னை பழக்கப்படுத்திக் கொண்டேன். அந்த ஒன்பது கதவுகள் கொண்ட நிலவறைகள் மற்றும் நீண்டு கிளை பிரிந்த நிலவறைகளைத் தவிர வேறு எதுவும் அங்கு இருக்கும் என்று என்னால் நம்பமுடியவில்லை. பூமிக்கு அடியில் இப்படி எவ்வளவு நேரம் நடந்திருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. அந்த தொகுதிகளுக்கு இடையில் ஒரு தடவை, ஒரு வித ஏக்கத்தில், அந்த காட்டுமிராண்டிகளின் வினோத கிராமத்துடன் எனது பூர்வீக நகரினை குழப்பிக்கொண்டேன்.
நடைகூடமொன்றின் ஆழத்தில் எதிர்பார்த்திராத ஒரு சுவர் என்னைத் தடுத்தது. ஒரு தொலைவான வெளிச்சம் மேலிருந்து வீழ்ந்தது. என்னுடைய குழம்பிப்போன பார்வையை உயர்த்தினேன். தலைச்சுற்றச் செய்யும் நெடிய உயரங்களில் வானத்தின் வட்டவடிவத்தைக் கண்டேன். வானம் வெகு அடர் நீலமாயிருந்ததால் இளம்சிவப்பு போலத் தோன்றியது. சில உலோகக் குறுக்குச்சட்டங்கள் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தன. நான் களைப்பில் கால் சோர்ந்துப் போயிருந்தேன், ஆனாலும் சில சமயம் பெருமூச்சு விட்டுத் தேம்புவதற்கு மட்டும் சற்று நிறுத்தம் செய்து, மேலே ஏறிவிட்டேன். பிரம்மாண்டமான தூண்களின் உச்சிப்பகுதியையும், மடக்குக்கதவுகளின் சந்திப்பு நிலைகளையும், முக்கோண முகப்பு முகடுகளையும், கவிகை மாடங்களையும், கருப்பு மற்றும் வெண்பளிங்கின் குழப்பமான அற்புதக் காட்சிகளையும் கண்டேன். இவ்வாறு,. . . . இருளடைந்த ஒன்றுக்கொன்று பிணைந்திருந்த புதிர் வழிகளின் குருட்டுப் பிரதேசத்தில் இருந்து ஒளிரும் நகருக்குள் இத்தகையதொரு மேலேற்றம் எனக்கு வாய்த்தது.
ஒரு விதமான சிறு சதுக்கம் அல்லது முற்றத்திற்குள் நுழைந்தேன். இதனைச் சுற்றி ஒரு சீரற்ற ஒற்றை வடிவமுள்ள கட்டிடம் மாறுபட்ட உயரங்களுடன் அமைந்திருந்தது; இந்த முரண்கூறுகள் உடைய கட்டிடத்திற்குச் சேர்ந்தவைதான் அந்த பிரம்மாண்ட தூண்களும், தூபி மாடங்களும். நம்புவதற்கரிய இந்த நினைவுச் சின்னத்தின் வேறு எந்த குணாம்சத்தை விடவும் அதன் கட்டுமானத்தின் அதீத தொன்மத்தினாலேயே நான் ஈர்க்கப்பட்டேன். அது மானுடத்தை விடவும், பூமியை விடவும் பழமையானது என்பதாய் எனக்குள் ஒரு உணர்வு எழுந்தது. இந்த வெளிப்படையாகத் தெரியும் பழமை (சில விதங்களில் பயங்கரமாகக் காட்சி அளித்தாலும்) நித்தியமான கட்டிடக்கலைஞர்களின் வேலையுடன் இயைபு கூடி இருந்ததாக எனக்குப் பட்டது. முதலில் மிகுந்த கவனத்துடனும், பிறகு எது பற்றிய பொருட்படுத்தல் இன்றியும், இறுதியில் வேறு வழியின்றியும் பிரிக்கமுடியாத மாளிகையின் நடைகூடத்துப் படிகளில் ஏறித்திரிந்தேன். ( படிகளின் அகலமும் உயரமும் விகிதாசாரத்தில் இருக்கவில்லை என்பதை பிறகு கண்டுபிடித்தேன். அவை வரவழைத்த என் தனித்துவமான களைப்பினைப் புரிந்து கொள்ள இந்த தகவல் உதவியது.) இந்த மாளிகை கடவுளர்களால் கட்டப்பட்டது என்று நான் ஆரம்பத்தில் எண்ணினேன். மனிதக்காலடிகள் படாத அதன் உட்புறங்களை ஆராய்ந்த பின்னர் என்னை நான் திருத்திக் கொண்டேன், இதனைக் கட்டிமுடித்த கடவுளர்கள் இறந்து விட்டார்கள். அதன் வினோத அம்சங்களை கண்டுபிடித்து பிறகு குறிப்பிட்டேன், இதைக் கட்டிய கடவுளர்கள் பைத்தியக்காரர்கள் என. எனக்குத் தெரியும் நான் சொன்னதை நானே புரிந்துக்கொள்ள முடியாத ஏறத்தாழ கழிவிரக்கத்தை ஒத்த ஒரு கண்டனத்துடன், ஒரு அதிகபட்ச அறிவார்த்தமான பயங்கரத்தில் (வெளிப்படையான பயம் என்பதைக் காட்டிலும்) அப்படிச் சொன்னேன் என்று எனக்குத் தெரியும். இந்த அளப்பரிய புராதனத்துடன் பிறவும் சேர்க்கப்பட்டன. முடிவில்லாதெனத் தோன்றியவவையும், சிக்கலான வகையில் வகையில் அர்த்தமற்றிருந்தவற்றையும், அடாதவையும். நான் ஒரு புதிர்ச்சுழலைக் கடந்துவிட்டேன். என்றாலும் நித்தியமானவர்களின் பிரகாசமான நகரம் எனக்குள் பயத்தினையும் அருவருப்பையும் உண்டாக்கியது. மனிதரை குழப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டு வடிவமே புதிர் வழியாகும். அதன் கட்டிடக்கலை ஒத்ததன்மைகளைக் கொண்டிருப்பினும், இந்த நோக்கத்தைச் சார்ந்ததாகவே அமைந்திருந்தது. மாளிகைக்குள் நான் அரைகுறையாக ஆராய்ந்து கட்டிடவடிவாக்கம் அப்படிப்பட்டதொரு அறுதி முடிவை இழந்திருந்தது என்று கண்டேன். அது மூளியான நடைவழிப் பாதைகளால் நிறைந்திருந்தது, உயரமான எட்டவே முடியாத ஜன்னல்கள், ஒரு பள்ளத்திற்கோ அல்லது தனி அறைக்கோ இட்டுச் சென்ற பிரம்மாண்டமான கனத்த கதவுகள், நம்பவே முடியாத அளவில், தலைகீழாகத் தொங்கிய அவற்றின் படிகளும், பக்கக்கம்பிகளும்; மேல்கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் படிக்கட்டுகள்; பிற மாடிப்படிவழிகள் பிரமாண்டமான சுவர்களின் பக்கங்களைத் காற்றாடித் தொற்றிக் கொண்டிருந்தன. தூபிமாடத்தின் உயர்வான இருட்டுக்குள் அவை இரண்டு அல்லது மூன்று திருப்பங்கள் சென்ற பிறகு எங்கேயும் இட்டுச் செல்லாமல் அழியுமாறு இருந்தன. நான் எடுத்துச் சொன்ன காரணங்கள் அனைத்தும் அப்படியே உள்ளது உள்ளதுபடியே தரப்பட்டிருக் கின்றனவா என்று எனக்கு தெரியவில்லை. என் பீதிக் கனவுகளை பல ஆண்டுகளாக அவை தொற்றிக் கொண்டன என்பதை நான் அறிவேன். இன்னின்ன தகவல்கள் யதார்த்தத்தின் நேரடிப் பிரதி எடுப்புதானா என்று இனியும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது என் இரவுகளை இற்றுப் போகச் செய்த வடிவங்கள்தாமா என்று இனிமேல் என்னால் அறிய
முடியாத நிலை. இந்த நகரம் (நான் நினைத்தேன்) மிக பயங்கரமாக இருப்பதன் விளைவாய் அதன் இருப்பும், நிலைப்பும் ஒரு ரகசிய பாலைவனத்துக்கிடையில் இருந்த போதிலும் கடந்த காலத்தினையும் எதிர்காலத் தையும், ஏதோ சில வழியில் நட்சத்திரங்களையும் கூட களங்கப்படுத்துகின்றன. இது நிலைத் திருக்கிற நாள் வரை இந்த உலகத்தில் எவருமே வலுவாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்க முடியாது, என நான் எண்ணினேன். அதை நான் விவரிக்க விரும்பவில்லை, முரண்கூற்று வார்த்தைகளின் பெரும் குழப்பம், ஒரு புலியின் உடல், அல்லது எருதின் உடல் அதில் பற்களும், உடற்பகுதிகளும், தலைகளும் அசுரத்தனமான பரஸ்பர சந்திப்புகளிலும் பல்கிப் பெருகும் அதீத வெறுப்பிலும் என்பதானவை ஒருக்கால் அதன் உத்தேசமான படிமங்களாகலாம்.
தூசிப்புழுதியாலும், ஈரப்பத பூமியடிப் பாறைகள் ஊடாக எனது திரும்புதலின் கட்டங்களை என்னால் ஞாபகபடுத்திப் பார்க்க முடியவில்லை. கடைசி புதிர் வழியை விட்டுச் சென்ற போது, மீண்டும் நான் நித்தியமானவர்களின் நகரத்தினால் சூழப்பட்டு விடுவேன் என்ற பயம் என்னை விட்டு விலகவே இல்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். வேறு எதுவும் நான் நினைவில் கொள்ளவில்லை. இந்த அதீத மறதி, இப்போது மீள முடியாமல், ஒரு வேளை விரும்பித் தேர்ந்ததாய்க் கூட இருக்கலாம். ஒரு வேளை எனது தப்பித்தலின் சூழ்நிலைகள் மிக அசௌகரியமான மனப்பதிவை ஏற்படுத்தியதன் காரணமாய், பிறவற்றைப் போலவே என் நினைவிலிருந்து தப்பி விட்ட பிறகு ஒரு நாளில், அவற்றை மறக்க எனக்குள் உறுதியெடுத்துக் கொண்டேனாயிருக்கலாம்.

– 3 –

எனது பிரயத்தனங்களின் விவரணைகளை கவனத்துடன் படித்தவர்கள் அந்த இனத்து மனிதன் ஒருவன் ஒரு நாயைப் போல அந்த சமச்சீரற்ற சுவர்களின் நிழல்வரை என்னைத் தொடர்ந்து வந்ததை நினைவு கூர்வார்கள். கடைசி நிலவறையில் இருந்து நான் வெளிவந்த பொழுது குகையின் வாயிலில் அவனைக் கண்டேன். மணல் மீது கைகால்களை நீட்டியப்படி கிடந்தான். புரிந்துகொள்ளப்படும் விளிம்பிற்கு வந்து கலைந்து போகும் கனவில் தோன்றும் எழுத்துக்களைப் போல சில குறியீடுகளின் தொடர்களை மணல் மீது. . . வரைந்தபடி அழித்துக் கொண்டிருந்தான். அது ஏதோ விதமான புராதன எழுத்து வடிவமாக இருக்கும் என்று நினைத்தேன். பிறகு பேசப்பட்ட வார்த்தையை அடையமுடியாத மனிதர்கள் எழுத்து வடிவத்தை அடைவது என்ற கற்பனை அபத்தமானது என்று உணர்ந்தேன். அவன் எழுதியதில் எந்த வடிவமும் ஒன்றுக்கொன்று சமமாக இல்லாதிருந்ததால், அவை குறியீட்டு அளவிலான மொழியாக இருக்கலாம் என்கிற சாத்தியத்தை அழித்தன, அல்லது, குறைத்தன. அந்த மனிதன் அவற்றை எழுதிய பின் கவனித்து பின்னர் அதை திருத்தினான். திடீரென இந்த விளையாட்டினால் எரிச்சலுற்றவனாய் தனது முன் கையினாலும் உள்ளங்கையினாலும் அவற்றை அழித்தான். என்னைப் பார்த்தான். ஆனால் என்னை அடையாளம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. தீவிரத்தில் (அல்லது என்னுடைய தனிமை அத்தனை அகண்டதாக, பயங்கரமானதாக இருந்ததால்) குகையின் தரைப்பகுதியில் இருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்த அவன் எனக்காகவே காத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. சமவெளியை சூடாக்கியது சூரியன். முதல் நட்சத்திரங்களின் கீழாக, மணல் பாதங்களை எரித்தது. முதல் வெள்ளி மீன்களின் கீழ் நாங்கள் கிராமத்திற்கு திரும்பத் தொடங்கினோம். ட்ரோக்ளோடைட் என்னை முந்திச்சென்றான். அன்றிரவு அவனுக்கு சில வார்த்தைகளை, அடையாளப்படுத்துவதற்கோ,ஒருவேளை திருப்பிச்சொல்வதற்கோ கற்றுத்தரும் திட்டத்தினை மனதில் உருவாக்கினேன். நாயும், குதிரையும் (நான் யோசித்தேன்) முந்தையதில் திறன் மிக்கவை, பல பறவைகள், சீசரின் நைட்டிங்கேல் பறவைகளைப் போல, பிந்தையதில் திறன் மிக்கவை. ஒரு மனிதனின் மனம் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக இருந்தபோதிலும் அறிவற்ற விலங்குகளினுடையதை விட என்றும் மேன்மையானது.
ட்ரோக்ளோடைட்டின் பணிவான தன்மையும், பரிதாப நிலையும் ஒடிசி காவியத்தில் வரும், இறக்கும் நிலையில் உள்ள, கிழட்டு நாயான ஆர்கோஸின் படிமத்தை என் நினைவுக்கு கொண்டு வந்தது. எனவே அவனுக்கு ஆர்கோஸ் என்ற பெயரிட்டு சொல்லித்தர முயன்றேன். மீண்டும் மீண்டும் தோற்றுப் போனேன். சமரசமும், வன்மையான கண்டிப்பும், பிடிவாதமும் முழுமுற்றாக பயனற்றுப்போயிற்று. சலனமில்லாமல், உயிர் துடிப்பற்ற கண்களுடன் இருந்த அவன், நான் அவன் மீது திணிக்க முயன்ற ஓசைகளை உள் வாங்கிகொண்டதாகத் தெரியவில்லை. சில அடிகனே தள்ளி இருந்தவன், வெகுதொலைவில் இருப்பதாகக் கண்டான். மணல் மீது, சிதைந்த, ஒரு சிறிய, எரிமலைக் குழம்பிலான எகிப்திய புதிர்ச்சிலை மாதிரிக்கிடந்து, தன் மீது கிரகங்களை விடியலின் மெல்லொளியில் தொடங்கி மாலை வரை, சுழல்வதற்கு அனுமதித்தான். என் நோக்கத்தைப் பற்றிய பிரக்ஞை அவனுக்கு இல்லாது இருக்க முடியாது எனவும் அனுமானித்தேன். வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்து தப்புவதற்காக, குரங்குகள் வேண்டுமென்றே பேசாமல் இருக்கின்றன என்பது எத்தியோப்பியர்கள் நன்கு அறிந்தது என்பதையும் நினைவு படுத்திக் கொண்டேன். ஆர்கோஸின் மௌனத்திற்குக் காரணமாக, பயமோ, சந்தேகமோ இருக்கலாம் என்று நினைத்தேன். இந்த கற்பனையில் இருந்து நான் பிற நம்புவதற்கரிய கற்பனைகளுக்குச் சென்றேன். நானும் ஆர்கோஸூம் வேறு வேறு பிரபஞ்சங்களில் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக எண்ணினேன். எங்களது காட்சிப்பாடுகள் ஒன்றேயாக இருப்பினும் அவன் அவற்றை வேறு ஒரு விதத்தில் கலந்து, அந்தக் கலவையிலிருந்து அவன் பிற பொருள்களை உருவாக்கிக் கொண்டான் என்றும் எண்ணினேன். ஒரு வேளை அவனுக்கு எந்தவிதமான பொருள்களும் இருக்கவில்லை என்றும் நினைத்தேன். மிகச்சிறிய மனப்பதிவுகளின் தொடர்ச்சியான தலைச்சுற்றச் செய்யும் இயக்கம் மட்டுமே இருந்தது அவனுக்கு. ஞாபகம் என்ற ஒன்று இல்லாத, காலம் என்ற ஒன்றில்லாத உலகினை நினைத்துப் பார்த்தேன். பெயர்ச்சொற்களும், வினைமுதல் சுட்டாத, ஆளைக் குறிக்காத வினைச்சொற்களும், உருவம் திரிபுறாத பண்புசுட்டுச் சொற்களும் இல்லாத ஒரு மொழியின் சாத்தியம் குறித்து எண்ணினேன். இவ்வாறு நாட்களும்,
அவற்றின் கூடவே வருடங்களும் கடந்தோடின. எனினும் மகிழ்ச்சிக்கு இணையானதொரு நிகழ்ச்சி ஒரு நாள் காலையில் நடந்தது. வலுவான முன்தீர்மானத்துடன் பெய்வதாய் மழை பெருவீச்சுடன் அடித்தது.
பாலைவன இரவுகள் மிக குளிர்ந்திருக்கும், ஆனால் அந்த இரவு நெருப்பாய்த் தகித்தது. தெஸ்ஸாலே நகரிலிருந்த ஒரு நதி (நான் ஒரு தங்க மீனை நான் அதில் திரும்ப விட்டிருக்கிறேன்) என்னை விடுவிக்க வருகிறது என்று நான் கனவு கண்டேன். கருப்புப் பாறைகளின் மீதாகவும், சிவப்பு மணலின் மீதாகவும் அது அணுகுவதை நான் கேட்டேன். காற்றில் இருந்த குளிர்ச்சியும் துரிதமான மழையின் முணுமுணுப்பும் என்னை எழுப்பி விட்டன. நான் நிர்வாணமாக அதைச் சந்திக்க ஒடினேன். இரவு வெளுத்துக் கொண்டிருந்தது. மஞ்சள் நிற மேகங்களுக்கு கீழே, என்னை விட எந்த விதத்திலும் சந்தோஷம் குறையாத அந்த இனத்தவர்கள் உயிர்ப்பும் ஒளிர்வுமாகக் கொட்டும் மழைக்கு ஒரு வகையான பேரானந்தத்துடன் தம்மைத் தந்துக் கொண்டிருந்தனர். கோரிபான்டஸுக்கு சாமி வந்து விட்டது போலத் தோன்றியது. ஆர்கோஸ், தனது கண்கள் விண்ணை நோக்கி இருக்க, முனகல் ஒலி எழுப்பினான், நீரினது மட்டுமின்றி கண்ணீர்த் துளிகளினாலும் ஆன கனத்த சாரல்கள் அவன் முகத்திலிருந்து வழிந்தோடின. (பிறகு நான் அறிந்து கொண்டேன்). நான் ஆர்கோஸ் ஆர்கோஸ் என்று அழுதேன்.
பிறகு, ஒரு மென்மையான போற்றுதலுடன், நீண்ட காலத்திற்கு முன்னரே மறக்கப்பட்டு, இழக்கப்பட்டதைக் கண்டுபிடித்துக் கொள்பவனைப் போல, ஆர்கோஸ் கீழ்க்கண்ட வார்த்தைகளை திக்கி திக்கிச் சொன்னான், “ஆர்கோஸ், யூலிசிஸிஸின் நாய்”. தொடர்ந்து என்னைப் பாராமலேயே கூறினான் ” எருக்குப்பையில் கிடக்கும் இந்த நாய். ”
நாம் யதார்த்தத்தை எளிதாக ஏற்றுக் கொண்டு விடுகிறோம், ஒரு வேளை உள்ளுணர்வு மூலமாய் எதுவுமே நிஜமல்ல என்று உணர்வதால் இருக்கலாம். அவனுக்கு ஒடிசி காவியம் பற்றி என்ன தெரியும் என்று கேட்டேன். கிரேக்க மொழிப்பயன்பாடு அவனுக்கு சிரமமாக இருந்தது. நான் என் கேள்வியை திருப்பிச் சொல்ல வேண்டியதாயிற்று. மிகச் சொற்பம்தான்” என்றான் அவன். சாதாரணமானதொரு வீரகாவியம் எழுதுபவனை விடக் குறைவாகவே. அதை நான் ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடித்தேன்.”

– 4 –

எல்லாம் அந்த தினம் எனக்குத் துலக்கமாகத் தெளிவாகியது. ட்ரோக்ளோடைட்டுகள்தான் நித்தியமானவர்கள். மணற்பாங்கான நீரின் சிறு ஒடைதான் அந்தக் குதிரைவீரன் தேடியலைந்த நதி. கங்கைநதி வரை அதன் புகழ் பரவியிருந்த அந்த நகரத்தை பொறுத்தவரை நித்தியமானவர்கள் அதை அழித்து ஒன்பது நூற்றாண்டுகள் ஆகிவிட்டிருந்தன. அந்த சிதிலங்களின் எச்சங்களுடன் அதே இடத்தில் நான் கடந்து வந்த பைத்தியக்கார நகரத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். ஒருவிதமான நையாண்டி, அல்லது தலைகீழ்ப்புரட்டல். மேலும், மனிதர்களை ஒத்திருக்கமாட்டார்கள் என்பதைத் தவிர வேறொன்றும் அவர்களைப் பற்றித் தெரியாதவர்களும் இவ்வுலகத்தை நடத்திச் செல்பவர்களுமான காரணகாரியங்களற்ற கடவுளரின் கோயில். இந்தக் கட்டிடமே நித்தியமானவர்கள் மனமிறங்கி ஏற்றுக் கொண்ட இறுதிக் குறியீடு. எல்லா முயற்சிகளும் வியர்த்தமானவையே என்று தீர்மானித்து, சிந்தனையில் வாழ்வதென்று முடிவெடுத்த தூய யூகித்தலின் கட்டத்தை அது அடையாளப்படுத்துகிறது. அவர்கள் அந்தக் கட்டிடத்தை எழுப்பினார்கள், மறந்து போனார்கள், குகையில் வாழச்சென்றார்கள். சிந்தனைக்குள் சர்வமும் ஈர்க்கப்பட்டவர்களாய் அவர்கள் ஸ்தூல உலகினை உள்வாங்கிக் கொள்ளவே இல்லை.
ஒரு குழந்தைக்குச் சொல்வது மாதிரி இந்த விஷயங்களை ஹோமர் எனக்குச் சொன்னார். தனது வயோதிகத்தைப்பற்றியும், யூலிசிஸ் மேற்கொண்டது போல, கடல் என்னவென்று தெரியாத, துடுப்பு பற்றித் தெரியாத, உப்பினால் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்டிராத மனிதர்களைச் சென்றடையும் குறிக்கோளினால் உந்தப்பட்டு அவர் மேற்கொண்ட கடைசிப் பயணத்தைப் பற்றியும் கூறினார். ஒரு நூற்றாண்டு வரை நித்தியமானவர்களின் நகரத்தில் வாழ்ந்திருக்கிறார். அது அழிக்கப்பட்டவுடன் அந்த மற்றொன்று நிறுவப்பட வேண்டுமென்று அறிவுரை வழங்கியிருக்கிறார். இது நமக்கு வியப்பைத் தரக்கூடாது; இலியன் நகரின் போரைப் பற்றிப் பாடிய பிறகு தவளைகள் மற்றும் எலிகளின் சண்டையையும் அவர் பாடியது பிரசித்தமானதே. ஒரு பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கும் பிறகு ஒரு பெருங்குழப்பத்தை உருவாக்குவதற்கும் அவரால் முடியும்-ஒரு கடவுளைப் போல.
நித்தியமானவராக இருப்பது சர்வசாதாரணம். மனிதனைத் தவிர அனைத்து ஜீவராசிகளுமே நித்தியமானவையே-காரணம் அவற்றின் மரணம் பற்றிய அறியாமை; புனிதமானதும், பயங்கரமானதும், புரிந்துகொள்ள முடியாததும் ஒருவர் தான் நித்தியமானவர் என்று அறிவது. மதங்களையும் மீறி இந்த ஆழ்ந்த நம்பிக்கை மிக அரிதானதென நான் கண்டு கொண்டிருக்கிறேன். இஸ்ரேல் நாட்டவர்களும், முகமதியர்களும், கிறித்தவர்களும் நித்தியத்துவத்தை முன்வைக்கி றார்கள். ஆனால் அவர்கள் இந்த இக உலகிற்குத் தரும் அதிகபட்ச மரியாதை இதைத் தவிர வேறு எதிலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நிரூபிக்கிறது. ஏன் எனில் அவர்கள் எண்ணிலடங்காத மற்றெல்லா உலகங்களையும் இந்த உலகின் பரிசு என்றோ அல்லது தண்டனை என்றோ அறுதிப்படுத்துகின்றனர். ஆனால் சில குறிப்பிட்ட இந்திய மதங்களின் சக்கரம் எனக்கு அதிகம் நியாயமாகப் படுகிறது. ஆரம்பமோ முடிவோ இல்லாத இந்தச் சக்கரத்தில் ஒவ்வொரு வாழ்வும் அதற்கு முந்திய வாழ்வின் விளைவாகி அதன் பின் வரும் வாழ்வினை உற்பத்தி செய்கிறது. ஆனால் இதில் எது ஒன்றுமே முழுமையைத் தீர்மானிப்பதில்லை. . . . . பல நூற்றாண்டுகளின் பழக்கத்தால் கருத்துப் போதனைக்கு உள்ளாகி, நித்தியமானவர்களின் குடியரசினைச் சேர்ந்தவர்கள் சகிப்புத்தன்மையிலும் ஏறத்தாழ அசட்டைத் தன்மையிலும் அதேயளவு பூரணத்துவத்தை எட்டியிருந்தார்கள். முடிவற்ற காலத்தினுள், சகல விஷயங்களும் சகல மனிதர்களுக்கும் நடக்கின்றன என்பதை அறிந்தனர். இந்த கடந்தகாலத்திய அல்லது எதிர்காலத்திய நற்குணங்களினால், ஒவ்வொரு மனிதனும் சகலவிதமான நற்காரியங்களுக்கும், அதே சமயம் சகலவிதமான வக்கிரங்களுக்கும் தகுதியானவனாகிறான், அவனது கடந்த கால, எதிர்கால பெரும்பழி காரணமாக. யதேச்சைத்தன்மைகள் கொண்ட விளையாட்டுக்களில் உள்ளது போல…… எண்கள் நடுநிலை அமைதியை நோக்கிச் செல்வதைப் போல, மந்தத்தன்மையும் அறிவும் ஒன்றை ஒன்று தவிர்த்தும், ஒன்றை ஒன்று சரிசெய்து கொண்டும் இருக்கும். ஹீராக்ளிட்டஸின் ஒரு முகப்பு மேற்கோள் கோருகிற, அல்லது ஊஸ்ரீர்ப்ர்ஞ்ன்ங்ள் இன் ஒரு அடைமொழிச் சொல் கோருகிற எதிர்சமனாக, நாட்டுப்புறத்தன்மையான டர்ங்ம் ர்ச் ற்ட்ங் ஈண்க் இருக்கிறது. மிக வேகத்தில் உண்டாகி அழியும் சிந்தனை கூட கண்ணுக்குப் புலப்படாத வடிவ நேர்த்தியைப் பணிந்து ஒரு ரகசிய வடிவத்திற்குக் கீரிடமிடுவதாகவோ அல்லது அந்த மறை வடிவத்தைத் துவக்கி வைக்கவோ முடியும். வரும் நூற்றாண்டுகளில் நல்லது நடக்க வேண்டுமென்பதற்காக, அல்லது நடந்த முடிந்த நூற்றாண்டுகளில் விளைந்த நன்மைகளின் பொருட்டுத் தீவினையைச் செய்தவர்களை நான் அறிவேன். இந்த வகையில் பார்த்தால் நம்முடைய எல்லாச் செயல்களும் நியாயமானவையே. அவை அசட்டைத்தனம் வாய்ந்தவையும் கூட. தார்மீக அல்லது அறிவார்த்த குணாம்சங்கள் என்று எதுவும் கிடையாது. ஹோமர் ஒடிசி காவியத்தை எழுதினார்; நாம் முடிவற்ற காலப்பகுதியினை, அதன் முடிவற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் மாறுதல்களுடன் முன்வைப்போமானால், ஒரு தடவையாவது ஒடிசியை எழுதாதிருக்கும் சந்தர்ப்பம் இருக்க முடியாது. யாருமே எவரும் கிடையாது. ஒரு நித்தியமான மனிதனே சகல மனிதனும் ஆவான். கார்னீலியஸ் அக்ரிப்பாவைப் போல நானே கடவுள், நானே நாயகன், நானே தத்துவவாதி, நானே அசுரன், நானே உலகம். என் இருப்பின் இன்மையை சலிப்பு மிகுந்த வழியில் சொல்வதே இது.
இந்த உலகினை ஒரு கச்சிதமான இழப்பீடுகளின் அமைப்பாகக் கொண்ட கருதுகோள் நித்தியமானவர்களை அதிகமாகப் பாதித்தது. முதலாவதாக, பரிதாபத்தினால் பாதிக்கப் படாதவர்களாக அவர்களை ஆக்கியது. அந்தப் பக்கத்துக் கரையின் வயல்களைக் குறுக்கிட்ட புராதன கல்குழிகளைப் பற்றி நான் குறிப்பிட்டேன். அதில் மிக ஆழமானதில் ஒரு மனிதன் விழுந்துவிட்டான். அவன் தன்னைக் காயப்படுத்திக் கொள்ளவோ சாகடித்துக் கொள்ளவோ முடியவில்லை. என்றாலும் தாகம் அவனை எரித்தது. அவனுக்கு மற்றவர்கள் ஒரு கயிறை வீசுவதற்கு முன் எழுபது வருடங்கள் கழிந்தன. தங்களது விதி பற்றியும் அவர்கள் ஈடுபாடு காட்டவில்லை. அவர்களைப் பொறுத்த வரை உடலானது கீழ்ப்படிதலுள்ள ஒரு வீட்டு மிருகம். மாதத்திற்கு ஒரு தடவை சில மணி நேரங்களின் சொற்ப தூக்கம், ஒரு மிடறு தண்ணீர், இறைச்சியின் துணுக்கு ஆகியவை போதுமானது. எவரும் நம்மை கடுந்துறவி அளவுக்குக் கீழிறக்கி விட வேண்டாம். சிந்தனையை விட நெருக்கமான முற்றுப் பெற்ற மகிழ்ச்சி எதுவும் கிடையாது. அதற்கு எம்மை சரண் தந்துவிட்டோம். சில சமயம் ஒரு அசாதாரண தூண்டுதல் எம்மை ஸ்தூல உலகிற்கு மீட்டுத் தரும். உதாரணமாக, அன்று காலையில் பெய்த அந்த புராதன, மூலாதாரமான சந்தோஷத்தைக் கொடுத்த மழை. இம்மாதிரிப் பிழைகள் எப்போதாவது தான் நடக்கும். எல்லா நித்தியமானவரும் முழுமுற்றான நிச்சலன அமைதி கைவரப் பெற்றவர்கள். என்றுமே எழுந்து நிற்காதிருந்த ஒருவனை எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு பறவை அவனது நெஞ்சின் மீது கூடு கட்டிவிட்டது. வேறு ஏதொன்றிலோ இழப்பீடு இல்லாதிருக்கிற எதுவுமேயில்லை என்ற சிந்தாத்தத்தின் துணை முடிபுகளில் ஒன்றின் கருத்து முக்கியத்துவம் மிகச்சொற்பமே. ஆன போதிலும் அதுவே பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அல்லது இறுதியில், எங்களை இந்த உலகின் முகத்திலிருந்தே அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தூண்டியது. அதைக் கீழ்க்கண்ட வார்த்தைகளில் சொல்லலாம்: நித்தியத்துவத்தை அளிக்கக் கூடிய நீரையுடைய நதி இருந்தாக வேண்டும். வேறு ஒரு பிரதேசத்தில் அந்த நித்தியத்துவத்தை அகற்றிவிடக் கூடிய நீரையுடைய மற்றொரு நதி இருக்கிறது. நதிகளின் எண்ணிக்கை முடிவற்றதன்று. நித்தியத்துவத்தினை அடைந்த பயணி ஒருவன் இந்த உலகின் குறுக்கும் நெடுக்குமாய்ப் பயணம் செய்யும்போது, என்றாவது ஒரு நாள் எல்லா நதிகளில் இருந்தும் நீரினைக் குடித்திருப்பான். அந்த நதியைக் கண்டுபிடிப்பதென்ற தீர்மானத்திற்கு வந்தோம்.
மரணமும்(அல்லது மறைகுறிப்பும்)மனிதரை அரிதானவர்களாக்கி, பரிதாபமானவர்களாக்கி விடுகிறது. அவர்களின் ஆவித்தோற்ற நிலை காரணமாக அவர்கள் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள்; அவர்கள் செயல்படுத்தும் ஒவ்வொரு செயலும் அவர்களின் கடைசியாக இருக்கக் கூடும். ஒரு கனவிலான முகம் போல் கலைந்து விடும் விளிம்பில் இல்லாத எந்த முகமும் இல்லை. அநித்தியமானவர்களுக்கிடையேயான அனைத்துமே மீட்க முடியாதது, பேராபத்து வாய்ந்தது ஆகியவற்றின் மதிப்பார்த்தமாக இருக்கிறது. இதற்கு மாறாக அநித்தியமானவர்களின் மத்தியில் ஒவ்வொரு செயலும் (மற்றும் ஒவ்வொரு சிந்தனையும்) கடந்த காலத்தில் அவற்றிற்கு முந்தி இருந்த செயல்களின் எதிரொலியாக, வெளிப்படையான தொடக்கம் எதுவும் இல்லாமல், அல்லது எதிர்காலத்தில் அது தலை சுற்றச் செய்யும் அளவுக்கு இரட்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கைபூர்வமான முன்கூறல் எதுவும் இன்றி இருக்கின்றன. இடையறாத கண்ணாடிகளின் புதிர்ச்சிக்கலில் தொலைந்து போவதாய் இழக்கப்படாதிருப்பது என்று எதுவுமே கிடையாது. ஒரே ஒரு முறை நடக்கக் கூடியது என்று எதுவுமே இல்லை, எதுவுமே விலைமதிக்க முடியாத அளவுக்கு நிலையற்றதில்லை. இரங்கற்பாடல்தன்மை மிக்கதும், பொருட்படுத்த வேண்டியதும், சடங்கு நிறைந்ததும் நித்தியமானவர்களுக்கு ஒத்துப் போவதில்லை. ஹோமரும் நானும் டேன்ஜியர் என்ற இடத்தின் நுழைவாயிலில் பிரிந்தோம். நாங்கள் பரஸ்பரம் போய் வருகிறேன் என்று கூட சொல்லிக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

– 5 –

புதிய சிறிய நாடுகள், பெரிய நாடுகள் வழியாகப் பயணம் செய்தேன். 1066 ஆம் ஆண்டின் குளிர்பருவத்தில் ஸ்டேம்ஃபோர்டு பாலத்தில் நான் போரிட்டேன். சீக்கிரமே வாழ்விறுதிக்கு வந்து விட்ட ஹெரால்டின் ராணுவத்தினருடன் சேர்ந்தா என்பது நினைவில் இல்லை. அதிர்ஷ்டமில்லாத ஆங்கில மண்ணின் ஆறடி அல்லது அதற்கு சற்று மேலானதைக் கைப்பற்றிய மகிழ்ச்சியற்ற ஹெரால்ஹார்ட்ரோடாவின் படையினருடன் சேர்ந்தா? ஹெஜிரா வருட அமைப்பில், ஏழாவது நூற்றாண்டில், புலாக் என்ற பிரதேசத்தின் புறநகர்ப்பகுதியில், நான் அறியாத அட்ஷர எழுத்துக்களைக் கொண்டு, மறந்து போய்விட்ட மொழியில், ஒரு நிதானமான அழகிய கையெழுத்தில் சிந்துபாதின் ஏழு துணிகரப் பயணங்களையும், வெண்கல நகரின் வரலாற்றினையும் நான் படி எடுத்து எழுதினேன். சாமர்க்கண்ட் நகரத்தின் சிறை முற்றத்தில் நிறையவே சதுரங்கம் விளையாடினேன். பிக்கானீரிலும் பொஹிமியாவிலும் நான் ஜோதிட விஞ்ஞானத்தை எடுத்துரைத்தேன். 1638ஆம் ஆண்டு கோலோஷ்வாரிலும் பிறகு லீப்ஸிக்கிலும் இருந்தேன். 1714ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் அபெர்டீன் நகரில் போப் என்பவர் எழுதிய ஆறு தொகுதி இலியட் நூலுக்கு சந்தா கட்டினேன். அதனுடைய பக்கங்களை திரும்பத் திரும்ப படித்து சந்தோஷப்பட்டேன். 1729ஆம் ஆண்டு வாக்கில் அந்தக் கவிதையின் தோற்றுவாய் பற்றி சொல்கலைப் பேராசிரியர் ஒருவரிடம்-அவர் பெயர் கியம்பட்டிஸ்ட்டா என்று நினைக்கிறேன்-விவாதித்தேன். அவருடைய வாதங்கள் மறுத்துப் பேச முடியாதவையாக எனக்குத் தோன்றின. 1921ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் நான்காம் தேதி, பாட்னா என்ற பெயருடைய கப்பலில் பம்பாய்க்கு பயணம் செய்தேன். எரித்ரேயக் கடல் எல்லையில் இருந்த துறைமுகத்தில் அது நங்கூரமிட வேண்டி வந்தது.* நான் நிலப்பகுதிக்குச் சென்றேன். செங்கடலின் எதிர்த்த பகுதியில், மாயாஜாலமும் காய்ச்சலும் போர்வீரர்களை வீணடித்த, முகாமின், ரோமானிய மாவட்ட முதல்வராக இருந்த போது பார்த்த, மிகப்புராதனமான பிற வேறு காலை நேரங்களை நினைவு கூர்ந்தேன். நகரத்தின் வெளிப்புறங்களில் ஒரு தெளிந்த நீரோடையைக் கண்டேன். பழக்கத்தினால் தூண்டப்பட்டு அதன் நீரைப் பருகினேன். கரை ஏறி வரும்போது முட்புதர் ஒன்று என் கையின் பின்புறத்தைக் காயப்படுத்தியது. என்றுமில்லாத அந்த வலியை நான் தீவிரமாக உணர்ந்தேன். நம்பவே முடியாமலும், பேச்சிழந்தும், ஆனந்தமாகவும் நிதானமாய் உருவான ஒரு சொட்டு ரத்தத்தின் தோன்றுதலை ஆழ்ந்து பார்த்தேன். மீண்டும் ஒரு முறை நான் அநித்தியமானவன் ஆனேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், மீண்டும் ஒரு முறை நான் எல்லா மனிதரையும் போல ஆகிவிட்டேன் என்று திரும்பவும் சொல்லிக் கொண்டேன். அந்த இரவு விடியும் வரை தூங்கினேன் …
ஒரு வருடம் கழித்து நான் இந்தப் பக்கங்களைப் பரிசீலித்தேன். அவை உண்மையைப் பிரதிபலிக்கின்றன என்பது உறுதி. ஆனால் முதல் அத்தியாயத்திலும், பிற அத்தியாயங்களின் குறிப்பிட்ட பத்திகளிலும் தவறான விஷயங்கள் இருப்பதைக் கண்டு பிடித்தேன்.
*இந்த இடத்தில் கையெழுத்துப் பிரதியில் அழித்தல் இருக்கிறது. ஒரு வேளை துறைமுகத்தின் பெயர் அகற்றப்பட்டிருக்கலாம்.
துணை விவரணைகளை தேவைக்கு அதிகமாய்ப் பயன்படுத்துவதால் இது நேர்ந்திருக்கக் கூடும்,சகலத்தையும் பொய்ம்மையினால் அசுத்தப்படுத்தும் இந்த செயல்முறையை நான் அந்தக் கவிஞனிடமிருந்து கற்றுக் கொண்டேன், ஏன் எனில் அந்தக் குறிப்பிட்ட தகவல்கள் யதார்த்தங்களினால் பல்கிப் பெருகலாமே அன்றி அவற்றின் நினைவு கூறலினால் அல்ல … எவ்வாறாயினும் இதை விட மிக அத்யந்தமான ஒரு காரணத்தைக் கண்டுபிடித்தேன்.
நான் அதை எழுதுவேன், என்னை ஒரு பைத்தியக்காரன் என்று யார் தீர்மானித்தாலும் பரவாயில்லை.
நான் கூறிய கதை நிஜமல்லாதது போலத் தோன்றக் காரணம் இரு வேறுபட்ட மனிதர்களின் நிகழ்ச்சிகள் அதில் கலந்திருக்கின்றன. முதல் அத்தியாயத்தில், குதிரைவீரன் தீபஸ் நகரின் அரண்களைச் சுற்றி ஓடும் நதியின் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்புகிறான். ஃபிளேமினியஸ் ரூஃபஸ், அந்த நகருக்கு ஹெக்டெம்ஃபைலோஸ் என்ற அடைமொழியை வழங்கியவன், நதியின் பெயர் எகிப்து என்று கூறுகிறான்; இந்த உரையாடல் மொழி எதுவுமே அவனுக்கு உரியது அல்ல, ஹோமருக்கு உரியது. ஹோமர் இலியட் காவியத்தில் தீபஸ் ஹெக்டம்பைலோஸ் பற்றி வெளிப்படையாகக் கூறிவிட்டு, ஒடிசி காவியத்தில் வரும் புரோட்டியஸ் மற்றும் யூலிசிஸ் ஆகிய பாத்திரங்கள் வழியாக நைல் நதி என்று சொல்வதற்குப் பதிலாக எகிப்து என்று கூறுகிறார். இரண்டாவது அத்தியாயத்தில் அந்த ரோமானியன் நித்திய நதியின் நீரைக்குடித்து விட்டு சில கிரேக்க வார்த்தைகளைக் கூறுகிறான். இந்த வார்த்தைகள் யாவும் ஹோமர் தன்மையானவை, கப்பல்களின் பிரசித்தமான பட்டியல்களின் இறுதியில் அவற்றைத் தேடிப் பிடிக்கலாம். பின்னர் அந்த தலை
சுற்றச் செய்யும் மாளிகையில் அறிவார்த்தமான பயங்கரத்தில், “ஏறத்தாழ பின் வருத்தத்தை ஒத்ததொரு கண்டனம்” என்று சொல்கிறான்”.
இந்தச் சொற்களும் ஹோமருக்குச் சொந்தமானவையே. அவர்தான் அந்தப் பயங்கரத்தை முன் நிறுத்தியவர். இப்படிப்பட்ட முரண்பாடுகள் என் அமைதியைக் குலைத்தன. மற்றவை, ஒரு வித
அழகியல் முறையில் அமைந்தவை, உண்மையைக் கண்டு பிடிக்க என்னை அனுமதித்தன. அவை கடைசி அத்தியாயத்தில் இடம் பெற்றிருந்தன. அதில் நான் ஸ்டாம்ஃபோர்டு பாலத்தில் போரிட்டதாக எழுதப்பட்டிருக்கிறது, புலாக்கில் கடலோடி சிந்துபாதின் பயணங்களை பிரதி எடுத்து எழுதியதாகவும், அபெர்டீனில் போப்பின் ஆங்கில மொழி இலியடுக்கு சந்தா செலுத்தியதாகவும். மற்றவைகளுக்கிடையில், ஒரு வரி இப்படிப் படிக்கக் கிடைக்கிறது: “பிக்கானீரில், பொஹிமியாவில் ஜோதிட விஞ்ஞானத்தை எடுத்துரைத்தேன்.” இந்தச் சான்றுகள் எதுவுமே பொய்யானதல்ல, முக்கியமானது என்னவென்றால், அவை வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவது ஒரு போர் வீரனுக்கு பொருந்திப் போகும். ஆனால், பிறகு விவரணையாளன் போர்த்தன்மையான செயல்பாடுகளைத் தொடர்ந்து பேசாமல் மனிதர்களின் ஊழ்வினைகளில் நின்று நிலைக்கிறான் என்பதை நம்மால் கண்டறிய முடிகிறது. இவற்றைத் தொடர்ந்து வருபவை இன்னும் கூட விநோதமாக இருக்கின்றன. ஒரு இருண்மை யான மூலாதாரமான காரணார்த்தம் அவற்றைப் பதிவு செய்ய என்னைக் கட்டாயப்படுத்தியது. நான் அப்படிச் செய்ததற்குக் காரணம் அவை பரிதாபகரமாய் இருந்ததுதான். ரோமானியன் ஃபிளேமினியஸ் ரூஃபஸால் பேசப்பட்ட அளவில் அவை அத்தன்மையதல்ல. ஆனால் ஹோமரால் பேசப்பட்ட அளவில் அவை அப்படித்தான். இரண்டாமவர் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிந்துபாதின் பராக்கிரமங்களைப் பிரதியெடுப்பதும், பின் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஒரு வடதிசை ராஜ்ஜியத்தில் காட்டுமிராண்டி மொழியில், தனது இலியடைப் படிப்பவர்களைக் கண்டுபிடிப்பதும் விசித்திரமாக இருக்கிறது. பிக்கானீர் என்ற பெயர் இடம் பெற்றிருக்கும் அந்த வாக்கியத்தைப் பொறுத்த மட்டில், அற்புத வார்த்தைகளை வெளிக்காட்டும் ஆர்வமிக்க (அந்தக் கப்பல்களின் பெயர்ப்பட்டியலின் ஆசிரியரைப் போல) சொற்கலையில் சிறந்த மனிதனால்தான் அது புனையப்பட்டது என்பதை அனைவராலும் அறிய முடியும்.
முடிவு அண்மையேகி வருகையில், நினைவு கூறப்பட்ட படிமங்கள் என்று எதுவுமே நிலைப்பதில்லை. ஒரு காலத்தேஎன்னைப் பிரதிநிதித்துவப்படுத்திய வார்த்தைகளை எல்லாம் பல நூற்றாண்டுகள் என்னோடு வந்தவனின் விதிசார் குறியீடுகளோடு காலம் குழப்பிக் கொள்ள வேண்டி வந்ததில் எந்த விசித்திரத்தன்மையும் இல்லை. நான் ஹோமராக இருந்தேன். விரைவிலேயே யூலிசிஸ் போல ஒரு அநாமதேயமாகி விடலாம். விரைவிலேயே எல்லா மனிதர்களுமாகி, நான் இறந்தும் போய்விடுவேன்.

பின்குறிப்பு (1950)
முந்தைய வெளியீடு தோற்றுவித்த விளக்க உரைகளிலேயே மிகவும் விநோதமாய், அல்லது மிகவும் நடைநயம் மிக்கதாய், வேதாகமத் தலைப்பிடப்பட்டது மிகவும் பிடிவாத எழுத்துக்காரரான டாக்டர் நாஹம் கார்டோவெராவின் A Coat of Many Colours (Manchester, 1948) என்று தலைப்பிடப்பட்ட புத்தகம். இது ஒரு நூறு பக்கங்களைக் கொண்டது. ஆசிரியர் கிரேக்க செய்யுள் தொடர்களையும், தமது சமகாலத்தவர்களை செனகாவின் சொற்களைக் கொண்டு வர்ணித்த பென் ஜான்சன் பற்றியும், அலெக்சாண்டர் ராஸின் Virgilus Evangelizans ஐப் பற்றியும், ஜார்ஜ் மூர் மற்றும் எலியட் ஆகியோரின் நுண்மையான கலையாக்கங்கள் பற்றியும் கடைசியாக தொல்பொருள் விற்பனையாளன் கார்ட்டோஃபீலியஸூக்கு சொந்தமானது என்று கூறப்படும் விவரணை பற்றியும் பேசுகிறார். முதல் அத்தியாயத்தில் பிளீனியின் நூலான ஹிஸ்டோரிய நேச்சுரலிஸ் (வி.8) என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டு, இடைச்செருகப்பட்டவற்றைக் கண்டனம் செய்கிறார். இரண்டாவதில் தாமஸ் டிக்வென்சியினுடையதை. (Writings, III,439) மூன்றாவதில் Virgilius Evangelizans இன் தூதுவராக இருந்த தெக்கார்த்தேவின் கடிதங்களை, நான்காவதில் பெர்னாட் ஷாவிடமிருந்து (Back to Methuselah,V,) எடுக்கப்பட்டதை. இந்த இடையீடுகள் அல்லது திருட்டுக்களில் இருந்து அந்த முழுப்புத்தகமுமே போலியானது என்று யூகிக்கிறார். என் கருத்தில், அப்படிப்பட்டதொரு முடிவு செய்வது ஒப்புக் கொள்ள முடியாததாய் இருக்கிறது. “இறுதி அருகில் நெருங்கி வரும்போது” கார்ட்டோஃபீலியஸ் எழுதுகிறான். “எந்த ஒரு நினைவுகூறப்பட்ட படிமும் நிலைத்திருப்பதில்லை. சொற்கள் மாத்திரமே நிலைக்கின்றன”. சொற்கள், முடமாக்கப்பட்ட, இடம் பெயர்க்கப்பட்ட சொற்கள், பிறருடைய சொற்கள் மட்டுமே நாழிகைளாலும், நூற்றாண்டு களாலும் அவனுக்கு விட்டுச் செல்லப்பட்ட பிச்சை.’

Translated by James E.Irby

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: