ஜோசப் ப்ராட்ஸ்கியின் கவிதைகள்/Poems of Joseph Brodsky-introduced by Brammarajan

ஜோசப் ப்ராட்ஸ்கி (1940-1996) யின் கவிதைகள்

பிரெஞ்சு நாவலாசிரியரான ஆல்பர் காம்யூவுக்கு அடுத்து மிக இளைய வயதில் இப்பரிசினைப் பெற்றவர் ப்ராட்ஸ்கிதான். பதினைந்தாம் வயதில் பள்ளிப் படிப்பை விட்டு நின்றுவிட்ட ப்ராட்ஸ்கி தனக்குத் தானே மொழி-இலக்கியக் கல்வியை போதித்துக் கொண்டார். எல்லா அம்சங்களிலும் அவர் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட மனிதர். தந்தை அலெக்ஸாண்டர் ப்ராட்ஸ்கி. தாயார் பெயர் மரியா வோல்பொர்ட். அலெக்ஸாண்டர் ப்ராட்ஸ்கி பத்திரிக்கை புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். 1940ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள லெனின்கிராடில் அவரது பெற்றோருக்கு ஒரே மகனாகப் பிறந்த ப்ராட்ஸ்கி,  பாரம்பரிய யூதக் குடும்பத்தை சேர்ந்தவர். இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பட்ட வருடங்களில் அவர் கண்ட ரஷ்யா போரின் சிதிலங்களில் இருந்து இன்னும் தன்னை சுதாரித்துக் கொள்ளாமல் இருந்தது. உடைமைகளுக்கான விருப்பம் அற்ற தலைமுறையினராக ப்ராட்ஸ்கியும் அவரது சமகாலத்தவர்களும் உருவாயினர். அவர்களின் கோட்டுகளும் உள்ளாடைகளும் தம் பெற்றோரின் சீருடைகளில் இருந்து வெட்டித் தைக்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் அவர்கள் அடையத்தகுதியான பொருள்கள் அச்சமயத்தில் மோசமாக உருவாக்கப்பட்டு அசிங்கமாகத் தோற்றமளித்தன. பிள்ளைப் பருவம் என்ற ஒன்றே தனக்கு இருக்கவில்லை என்று எழுதுகிறார் ப்ராட்ஸ்கி. (”In a sense there never was such a thing as child hood”)  பள்ளியிலிருந்து நின்ற பின் ஒரு தொழிற்சாலையில் சிறிது காலம் வேலை பார்த்தார். பிறகு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். நவீன ரஷ்யக் கவிதையின் முதிய தலைமுறையைச் சேர்ந்த பெண் கவிஞரான அன்னஅக்மதோவாவின் நண்பராக அக்மதோவாவின் கடைசி ஐந்து  வருடங்களில் இருந்தார்.  ஓசிப் மெண்டல்ஷ்டம், போரிஸ் பாஸ்டர்நாக், மரீனா ஸ்வெட்டயேவா, மற்றும் அக்மதோவா ஆகிய நால்வருமே ஸ்டாலினிய ரஷ்யா கட்டவிழ்த்துவிட்ட எழுத்தாளர்கள் மீதான அடக்குமுறையையும் துன்புறுத்தல்களையும் அனுபவித்தவர்கள். இவர்கள் கட்சி சாராத எழுத்தாளர்கள் என்பதையும் ரஷ்யா அரசு பிரபலப்படுத்திய சமூக-யதார்த்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த நால்வரின் கவிதைச் சாதனைகளைப் பற்றிய விரிவான கட்டுரைகளை ப்ராட்ஸ்கி எழுதியிருக்கிறார். நிறைய வாசகர்களுக்கு போரிஸ் பேஸ்டர்நாக் ஒரு நாவலாசிரியர் என்று தெரியுமே தவிர அவரது கவிதையின் முக்கியத்துவம் தெரியாது.

ஜோசப் ப்ராட்ஸ்கிக்கும் அவருக்கு முன் நோபல் பரிசு பெற்ற அலெக்ஸாண்டர் சோல்செனிட்ஸினுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவருமே எதிர்ப்பு (Dissident)எழுத்தாளர்கள். சோல்செனிட்ஸின் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய போது ஸ்டாலினைப் பற்றி விமர்சனம் செய்ததற்காக கடும் உழைப்பு முகாமுக்கு அனுப்பட்டவர். ஒரு பாடலானது, மொழி மூலமாய் அனுசரிக்கப்படும் பணியமறுத்தலின் (Linguistic Disobedience)வடிவமாகிறது. ஸ்தூலமான ஒரு அரசியல் அமைப்பின் மீது சந்தேகங்களைக் கிளர்ந்தெழச் செய்யும் வலிமையும் அதற்கு உண்டு. அது வாழ்வின் ஒட்டுமொத்தமான ஒழுங்கினையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. ப்ராட்ஸ்கியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அவரது “சமூக ஒட்டுண்ணித் தன்மையும்” (Social Parasitism) காஸ்மாபாலிடனிசமும். ப்ராட்ஸ்கியின் மீதான இந்த வழக்கு விசாரனை மிகவும் பிரசித்தமானது. விசாரணை முடிந்து 5வருட தண்டனை அளிக்கப்பட்டு ரஷ்யாவின் வடக்கு பகுதியில் நாடு கடத்தப்பட்டார். மொத்த தண்டனைக் காலத்தில் 18 மாதங்கள் முடிவடையும் சமயத்தில் விடுதலை செய்யப்பட்டார். தண்டனைக் காலத்தின்போது அவர் மனம் தளரவில்லை. தனக்குத் தானே அளித்துக் கொண்ட சுயகல்வியை இன்னும் தீவிரப்படுத்திக் கொண்டார். 1972ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனிலிருந்து வெளியேறும்படி சோவியத் அரசு அவருக்கு ”அழைப்பு” விடுத்தது.

சிறிது காலம் வியன்னாவிலும், லண்டனிலும் தங்கிய பின் அமெரிக்காவுக்குச் சென்றார். அப்பொழுது உயிருடன் இருந்த நவீன ஆங்கிலக் கவிஞர் ஆடனின் உதவியுடன்தான் அமெரிக்கா செல்ல முடிந்தது. ஆங்கிலத்தை ரஷ்ய மொழி அளவுக்கே சரளமாகவும், லகுவாகவும் எழுதத் தொடங்கினார். இந்த அம்சத்தில் இவருடைய முந்திய தலைமுறையினரான விளாதிமிர் நபக்கோவ் என்ற நவீன ரஷ்ய நாவலாசிரியருடன் ஒப்புமைப்படுகிறார். நபக்கோவ் ரஷ்யப்புரட்சி சமயத்தில் ஐரோப்பாவில் அடைக்கலம் தேடி இறுதியாக அமெரிக்கப் பிரஜையாக மாறினார். அமெரிக்கப் பல்கலைகழகம் ஒன்றில் ஐரோப்பிய இலக்கியம் போதித்தார். ப்ராட்ஸ்கி 1977ம் ஆண்டு அமெரிக்கப் பிரஜையானார். மிஷிகன் பல்கலைக் கழகத்தில் Visiting Professor ஆகவும் Poet in Residence ஆகவும் இருந்தார்.  1981ஆம் ஆண்டு அவருக்கு அவருடைய மேதமைமிக்க படைப்புகளுக்காக Mac Arthur Foundation Award வழங்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு ப்ராட்ஸ்கியின் 47வது வயதில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. 1991-1992 வருடங்களில் அமெரிக்காவின் Poet-Laureateஆக இருந்தார்.

ப்ராட்ஸ்கி எழுதிய கவிதைகளில் நான்கு மட்டுமே சோவியத் ரஷ்யாவில் பிரசுரிக்கப்பட்டன. 10க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் ப்ராட்ஸ்கியின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தொகுதியாக முதன்முதலில் வெளிவந்தது பென்குவின் நிறுவனம் 1973ஆம் ஆண்டு வெளியிட்ட Selected Poems ஆகும். A  Part of Speech என்ற கவிதை தொகுதி 1980 ஆம் ஆண்டு வெளிவந்தது. 1986ஆம் ஆண்டு ப்ராட்ஸ்கியின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, Less than one என்ற பெயரில் பிரசுரமாயின. பென்குவின் நிறுவனம் Penguin International Poets வரிசையில் To Uraniaஎன்ற மூன்றாவது கவிதைத் தொகுதியை வெளியிட்டது. இரண்டாவது கட்டுரைத் தொகுதியான Watermark வெளியிடப்பட்ட வருடம் 1992.

இருபதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தைக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கியவர் ப்ராட்ஸ்கி. Catastrophes in the Air என்ற கட்டுரையில் ரஷ்ய நாவலின் வளமும், உரைநடை சாதனைகளும் குன்றிப்போனதற்குக் காரணம் சோவியத் அரசினால் பிரபலப்படுத்தப்பட்ட சோஷலிஸ்ட் யதார்த்தமே என்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாஸ்தாயெவ்ஸ்கியையும், தால்ஸ்தாயையும் உருவாக்கிய ரஷ்யா, அப்படிப்பட்ட குறிப்பிடத்தகுந்த எவரையும் இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கவில்லை. ப்ராட்ஸ்கியின் கூற்றுப்படி ”கான்சர் வார்டு” என்ற நாவலுக்காக நோபல் பரிசு பெற்ற சோல்செனிட்ஸின் தனது நாவலில் ஒரு எல்லை வரை வந்து தோற்றுப் போகிறார். மிகைல் ஷோலகோவுக்கு நோபல் பரிசு கிடைத்ததின் மர்மமே சோவியத் ரஷ்யா, கப்பல் கட்டுவதற்கான பெரிய காண்ட்ராக்ட் ஒன்றை ஸ்வீடனுக்கு கொடுத்ததுதான் என்று ஐயப்படுகிறார். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர் என சாமுவேல் பெக்கெட்டைக் கருதுகிறார். மேலும் பெக்கெட்டின் Unnamable நாவல் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாவல்களில் ஒன்று என்பது அவரின் கணிப்பு. பெக்கெட்டின் பாதிப்பு இருப்பதை ப்ராட்ஸ்கியின் மிக நீண்ட கவிதையான  Gorbunov and Gorchakov வை படிப்பவர்கள் அறியவியலும். Gorbunovவும்  Gorchakovவும் மனநோய் மருத்துவவிடுதியில் நோயாளிகள். ரஷ்ய உரைநடை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் என்று ப்ராட்ஸ்கி சிபாரிசு செய்யும் பிளாட்டானோவின் நாவல்கள் எதுவும் மொழிபெயர்ப்பில் கிடைப்பதில்லை. Joyce, Robert Musil, Kafka போன்ற நாவலாசிரியர்களுடன் பிளாட்டானோவை ஒப்பிடுவது முடியாது. இந்தக் குறிப்பும் இதே கட்டுரையில் உள்ளது.

கலையின் நவீனத்துவம் பற்றிய மிகவும் புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டிருந்தவர் ப்ராட்ஸ்கி. கலையில் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு புதிய மனோவியல் மற்றும் அழகியல் யதார்த்தம் அதைக் கடைபிடிக்கும் அடுத்த தலைமுறை எழுத்தாளனுக்கு அது பழையதாகி விடுகிறது. இந்த ஒழுங்கினை மதிக்காத எழுத்தாளன் எவ்வளவு சிறந்த அச்சகத்தின் மூலமாக தன் படைப்பை வெளியீட்டுக்குக் கொண்டு வந்தாலும் அது காகிதக்கூழ் என்ற ஸ்தானத்தையே பெறும். அரசியலுக்கெதிரான ஒரு ஸ்தனாத்தில் கலையை வைப்பது ப்ராட்ஸ்கிக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது: மனிதர்களின் சிந்தனையிலும், மனதிலும் கலை இல்லாமல் போவதால் உண்டாகும் வெற்றிடத்தை மட்டுமே அரசியலால் நிரப்ப முடியும்.

கவிஞன் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை என்ற ஒன்று இருக்குமானால் அவனுடைய கவிதைகளை சரியாக எழுதுவதாகத்தான் இருக்க முடியும். அவனுக்கு வேறு எந்தத் தேர்வும் கிடையாது. இந்தக் கடமையிலிருந்து தவறுவதால் அவன் மீட்க முடியாத மறதியில் மூழ்கடிக்கப் படுகிறான். இதற்கு மாறாக சமூகமோ கவிஞனுக்காக எவ்விதப் பொறுப்பும் அற்றதாக இருக்கிறது. எவ்வளவு சிறப்பாக எழுதப்பட்டிருப்பினும் கூட கவிதைகள் படிப்பதைத் தவிர வேறு கடமைகள் தனக்கு இருப்பதாக சமுதாயம்  பாவனை செய்து கொள்கிறது. இதனால் மீட்க முடியாத மறதியில் மூழ்கிவிடும்  ஆபத்து சமுதாயத்திற்குத்தான் ஏற்படும்.

கவிஞர்கள் அடிப்படையில் டையரி எழுதுபவர்கள். அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாகவே என்ன நிகழ்கிறது என்பது பற்றிய நேர்மையான பதிவுகளைச் செய்பவர்களாக இருக்கின்றனர். தமது ஆன்மா சுருங்கிப் போகிறதா அல்லது விரிவடைகிறதா என்பதை கவிஞர்கள்தான் பதிவு செய்கின்றனர். தமது மொழி பற்றிய உணர்வுக்கு அவர்கள் நேர்மையாளர்க ளாக இருக்கின்றனர். வார்த்தைகள் சமரசம் அடைகின்றனவா அல்லது மதிப்புக் குறைவுபடுகின்றனவா என்பதை முதன் முதலில் உணர்பவர்கள் கவிஞர்கள்தான். இந்தக் கருத்துக்கு இன்னும் வலுவூட்டி சொல்லும் பொழுது ப்ராட்ஸ்கி கூறுகிறார்: ”கவிஞர்களின் வாயிலாகவே மொழி வாழ்கிறது”.

வேறு எந்த ஐரோப்பியக் கவிஞரையும் விட ஜோசப் ப்ராட்ஸ்கியின் உலக இலக்கிய அறிவு மிக விரிவானது, ,ஆழமானது. கரீபியக் கவிஞர் டெரக் வால்காட்டின் கவிதைத் தொகுதி ஒன்றுக்கு (“Poems of the Carribean”)ப்ராட்ஸ்கி முன்னுரை (“The Sound Of the Tide”(1983))எழுதியிருக்கிறார். நவீன இதாலியக் கவிதை பற்றித் தெரியாத வாசகனுக்கு ப்ராட்ஸ்கியின் In the Shadow of  Dante ஒரு விமர்சன முன்னுரையாக அமையும்.

அதிலும் குறிப்பாக, யூஜினியோ மான்ட்டேலின் கவிதை பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் வாசகனுக்கு பரிந்துரை செய்யப்படக்கூடிய அளவு சிறப்பாக அமைந்திருக்கிறது. 1976 ஆம் வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யூஜினியோ மான்ட்டேல். Futurism  த்திற்கும் Hermeticism த்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்பதும் நவீன இதாலியக் கவிதைக்கும் இந்த இஸம்களுக்கும், மான்ட்டேலுக்கும் தொடர்பு என்ன என்பதும் விளக்கமாகக் கூறப்படுகிறது. நவீன ஆங்கிலக் கவிஞர் ஆடன் மற்றும் டி.எஸ். எலியட் ஆகியோரின் கவிதைகள் மீது பக்தி மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் ப்ராட்ஸ்கி. எலியட் இறந்த சமயம் ப்ராட்ஸ்கி தண்டனை முகாமில் இருந்தார். எலியட் காலமான செய்தி அவருக்கு ஒரு வாரம் கழித்துத்தான் தெரிந்தது. எலியட் பற்றிய நினைவுக் கவிதையை சிறையிலேயே எழுதி முடித்தார். Verses  On the death of T.S.Eliot என்ற ப்ராட்ஸ்கியின் கவிதை ஆடன் எழுதிய “In Memory of W.B.Yeats” நினைவுக் கவிதையின் வடிவத்தையும் ஒழுங்கினையும் முன்மாதிரியாக கடைபிடித்து எழுதப்பட்டது. ப்ராட்ஸ்கியின் ”கிறிஸ்துமஸ் கவிதை” (1 ஜனவரி 1965) தால்ஸ்தாயின் War and Peaceநாவலில் இருந்து ஆன்ட்ரி என்ற கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறது. இக்கவிதையில் சாகும் தறுவாயில் இருக்கும் இளவரசன் ஆன்ட்ரிக்கும் குழந்தை ஏசுவுக்கும் மறைமுகக் குறிப்பின் மூலமாக தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது. அற்புதங்களுக்கு இது தாமதமான காலம் என்பதை உணர்ந்தும் கூட அவன் தன் பார்வையை விண்ணோக்கி உயர்த்துகிறான்-தனக்குத் தரப்பட்ட வாழ்வே ஒரு பரிசென உணர்ந்து.

அமெரிக்கா ப்ராட்ஸ்கிக்கு இரண்டாம் தாய்நாடாக இருந்த போதிலும், தன் சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, தன் சொந்த மொழியை பேசாத மனிதர்களிடையே வாழும் அந்நிய உணர்வினை ப்ராட்ஸ்கியின் கவிதைகள் வெளிப்படுத்தவே செய்கின்றன. நிறைய ஐரோப்பியத் தன்மைகள் கொண்ட நகரான லெனின்கிராடில் வசித்த அவருக்கு கட்டாய இடப்பெயர்வு என்பது அமெரிக்காவில் அதிகம் உணர வேண்டிய அனுபவமாயிற்று. ப்ராட்ஸ்கி ஒரு முறை குறிப்பிட்டார்: ”பிரிவு இனி ஒரு போதும் மனிதத் தேர்வாக இருக்காது. அது சரித்திரத்தாலும், பூகோள அமைப்பினாலும் நிர்ணயம் செய்யப்படும்”. அவரது கவிதைகளில் மையமான இடத்தைப் பெறுவது ”பிரிவு”. இப்பிரிவு மனிதன் கடவுளிடமிருந்தும், மனிதன் சக மனிதனிடத்திலிருந்தும், ஆண் தனக்கான பெண்ணிட மிருந்தும் என பல வகைமையில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக:

நம் விடைபெறுதல் மௌனமாய் நிகழட்டும்

இசைத்தட்டினை நிறுத்தி விடு.

இவ்வுலகில் தனிமைப்படுதல்

அப்பால் வரும் பிரிவுகளின் குறிப்பு.

இந்த நாட்களில் நாம்

பிரிந்து உறங்குவது மட்டுமல்ல

சாவும் நம்மை ஒன்றாய் இணைக்காது

பிரியத்தின் காயத்தினை போக்கவும் செய்யாது.

உக்கிரமான இந்த வரிகள் ஒரு பெண்ணை விளித்து எழுதப்பட்டிருக்கின்றன. வாழ்வின் கசப்பு ஒவ்வொரு வரியிலும் தோய்ந்திருக்கிறது. வாழ்வனுபவங்களால் கசந்து போன தன்மையும், தனிமைப்படுதலும் இணையும்பொழுது இன்னும் கூடுதலான உக்கிரத்தை அடைகின்றன அவரின் கவிதைகள்.

இரண்டு சமுத்திரங்கள்

அதைப் போல இரண்டு கண்டங்களை

அனுபவம் கொண்ட  பின்

இப்பூமிக் கோளம் முழுவதும் எப்படி இருக்கும்

என்று உணர்கிறேன்.

போவதற்கு எங்கும்

எவ்விடம் இல்லை.

ப்ராட்ஸ்கி எளிமையான கவிஞர் அல்லர். பொதுமையான அர்த்தத்தில் அவரைச் சமூகக் கவிஞர் என்றும் சொல்லிவிட முடியாது. இம்ப்ரஷனிச ஓவியன் வின்சென்ட் வான்கோவைப் போலவும்  ஆங்கில நாவலாசிரியை வர்ஜீனியா வுஃல்ப் போலவும் சாதாரண ஸ்தூலப் பொருட்களை புனிதக் குறியீட்டுப் பொருள்களாய் மாற்றிப் பார்க்கச் செய்யும் தீட்சண்யம் அவரிடத்தில் உண்டு. எடுத்துக்காட்டாக பட்ங் பங்ய்ஹய்ற் என்ற கவிதையிலிருந்து சில வரிகள்:

ஆனால் இந்த வீடு தன் வெறுமையைத் தாங்காது.

இந்தப் பூட்டு மட்டுமே

எப்படியோ ஒரு விதத்தில் கம்பீரமற்றிருக்கிறது.

குடித்தனக்காரனின் தொடுதலை அடையாளம் காணத் தாமதித்து

இருளில் சிறிது நேரம் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

வண்ணாத்திப் பாலத்தின் மீது” என்ற கவிதை கசப்பு தொனிக்காத சந்தோஷமான காதல் கவிதை:

வண்ணாத்திப் பாலத்தின் மீது, அங்கே நீயும் நானும்

நள்ளிரவு கடிகாரத்தின் இரண்டு முட்களைப் போல நின்றிருந்தோம்

அணைத்தப்படி, விரைவில் பிரிவதற்கு, ஒரு நாளைக்கு மட்டுமல்ல சகல நாட்களுக்கும்.

இன்று காலை நம் பாலத்தின் மீது

தன்னைத் தான் காமுறும் மீனவன் ஒருவன்

தன் கார்க் தூண்டிலை மறந்து, விரிந்த கண்களுடன்             வெறித்துப் பார்க்கிறான்

தன் அலையுறும் நதியின் பிம்பத்தை.

அலைச் சுருக்கங்கள் அனைத்தும் வயோதிகனாக்கி பிறகு இளைஞனாக்குகின்றன.

சுருக்கங்களின் வலை ஒன்று அவனது புருவத்தின் குறுக்காக

அவன் இமையின் அங்கங்களுடன் உருகுகிறது.

அவன் நம் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறான்.

ஏன் கூடாது? அது அவன் உரிமை.

சமீப வருடங்களில் தனித்து நிற்கும் எது ஒன்றும்

வேறு ஒரு காலத்தின் குறியீடாக நிற்கிறது.

இடத்திற்கானது அவனது கோருதல்.

எனவே அவன் உற்றுப்பார்க்கட்டும்

நமது நீர்களுக்குள்ளாக, அமைதியாக,

தன்னையே அவன் அறிந்து கொள்ளக் கூட இயலும்.

அந்த நதி

இன்று உரிமைப்படிஅவனுடையது.

அது ஒரு வீட்டைப் போல இருக்கிறது:

அதில் புதியக் குடித்தனக்காரர்கள் நிலைக்கண்ணாடியை வைத்து விட்டனர்

ஆனால் இன்னும் குடிபுகவில்லை.

(On Washerwoman’s Bridge)

Spring  Season of Muddy Roads என்ற மற்றொரு கவிதையிலிருந்து சில வரிகள்:

இது வசந்த காலமல்ல. ஆனால் அதைப் போன்ற ஒன்று உலகம் சிதைந்து கிடக்கிறது இப்போது

கோணிக்கொண்டு கிழிந்த கிராமங்கள் நொண்டுகின்றன.

சலித்த பார்வையில் மாத்திரமே

நேரான பார்வை இருக்கிறது.

மனித அனுபவத்தில், மனிதத் துயரங்களுக்கு அதிகபட்ச அழுத்தம் தருவது அவரது மதம் சார்ந்த கவிதைகளுக்கு வலிமை மிகுந்த அழகினை அளிக்கின்றது:

மேரி இப்போது பேசுகிறாள் கிறிஸ்துவிடம்

நீ என் புதல்வனா? அல்லது கடவுளா?

சிலுவையில் அறையப்பட்டிருக்கிறாய்

எங்கே இருக்கிறது எனது வீடு நோக்கிய பாதை?

நிச்சயமின்றியும் பயந்தும்

எவ்வாறு நான் கண்களை மூடுவது?

இறந்து விட்டாயா? அல்லது உயிர்த்திருக்கிறாயா?

நீ என் புதல்வனா? அல்லது கடவுளா?

கிறிஸ்து பேசுகிறார் அவளிடம்:

மரித்திருப்பதோ அல்லது உயிருடனிருப்பதோ

பெண்ணே, எல்லாம் ஒன்றுதான்ஙு

புதல்வனோ கடவுளோ நான் உன்னவன்.

(Nature Morte)

இந்த வரிகளில் கிறிஸ்து புனித மனிதனாக, ஆனால் நிலைப்படுத்தப்பட்ட சித்திரமாகக் காட்சிப்படுத்தப்படுகிறார்.

இரண்டுவிதமான காதல் அனுபவங்கள் இங்கே ஆராயப்படுகின்றன. முதலாவது உணர்ச்சி பூர்வமானது உடல்சார்ந்தது. தன்னை அர்ப்பணிப்பதும் அதனால் மீட்சி தருவதும் இரண்டாவது வகைப்பட்ட காதல்.

இலக்கியத்தை பொதுவிலும் கவிதையைப் பிரத்யேகமாயும்  ஒருவிதமான சகித்துக் கொள்ளல் என்ற கோணத்தில் ப்ராட்ஸ்கி பார்க்கிறார். பொது வாழ்வு, தனி வாழ்வு ஆகியவற்றின் பேய்த்தன்மைகளைச் சந்திக்க சக்தி தரும் செயலாகிறது கவிதை. கவிதை எழுதும் செயல், வாழ்வின் இடர்ப்பாடுகளையும் மனஅவசங்களையும் கடந்து செல்வதற்கு உதவுகிறது. ”கலை கலைக்காக” என்ற கோட்பாட்டினை அவர் ஏற்பதில்லை. மேற்சொன்ன காரணத்தினாலயே ”கலை அரசியலுக்காக” என்ற கோட்பாட்டினையும் அடியோடு நிராகரிக்கிறார்.

தள் எழுத்துக்கள் மூலம் ஒரு புதிய ஆன்மீகக் கருத்துருவத்தினை துயரங்கள் நிறைந்த இந்த உலகுக்கு கொண்டு வர முடிந்த தாஸ்தாயெவ்ஸ்கி மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக் ஆகிய ரஷ்ய எழுத்தாளர்களுக்கு தனித்த இடம் ஒதுக்குகிறார் ப்ராட்ஸ்கி.

இன்றின் எல்லா அணைப்புகளின் கூட்டுத் தொகையும்

சிலுவை மீது அறையப்பட்ட கிறிஸ்துவின் அகட்டிய கைகளுக்குள்

கிடைத்ததை விடவும் குறைவான காதலையே தருகிறது.

(Adieu, Mademoiselle Veronique)

இவ்வரிகளில் தாஸ்தாயெவ்ஸ்கி வலியுறுத்திய கருத்து வெளிப்படுகிறது. போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak) எழுதிய டாக்டர் ஷீவாகோ (Doctor Shivago)வரிசையில் வந்த கவிதை ஒன்றுக்கு மேற்குறிப்பிட்ட வரிகள் மறைமுகக் குறிப்புணர்த் தலையும் செய்கின்றன.

”கலை சுருக்கமாய் இருப்பதற்கும், பொய்கள் சொல்லாமல் இருப்பதற்கும் யத்தினிக்கிறது” என்கிறார் The Candlestick என்ற கவிதையில்.வேறு வகையில் இதைச் சொல்வதானால் கவிஞன் ஒரு காலகட்டத்தின் அல்லது வரலாற்றின் மனசாட்சியாக இருக்க வேண்டும். 1960களின் இடைக்காலங்களில் லெனின் கிராடின் ஒரு பகுதியில் அமைந்த கிரேக்கக் கிறிஸ்தவக் கோயில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் எஃகு மற்றும் கண்ணாடி அமைப்புகள் கொண்ட விஸ்தாரமான அக்டோபர் இசையரங்கம் நிர்மாணிக்கப்பட்டது. ப்ராட்ஸ்கி வாழ்ந்த குடியிருப்புக்கு மிக அருகாமையில் இது நிகழ்ந்தது. இந்நிகழ்வைப் பற்றிய நீண்ட கவிதையாக அமைகிறது  A  Halt in the Desert. மதம் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றை ஜடப்பொருளுடனும் யந்திரங்களுடனும் எதிர்ப்படுத்துவது இக்கவிதையின் தனித்தன்மை. கிறித்தவமும் கலாச்சாரமும் நவீனமயமாகும் ஒரு சமயத்தில், நவீனமயமாதலுடனும் இலக்கற்ற வளர்ச்சியுடனும் எப்படி முரண்பட வேண்டி வருகிறது என்பதற்குக் குறியீடாகிறது இக்கவிதை.

தண்டனை முகாமில் ப்ராட்ஸ்கிக்கு கிடைத்த அனுபவங்கள் தவிர்க்க இயலாதபடி அவரது ஒருமித்த கவனங்கள் எல்லாவற்றையும் தப்பிப் பிழைத்தலில் மையப் படுத்தியது. அவரது உள்ளார்ந்த வாழ்வானது தனக்குக் கிடைக்கக்கூடிய சின்னஞ்சிறு துணுக்கு ஆறுதல்களையும் இறுகப் பற்றிக் கொண்டது. மாலையில் வீடு திரும்பும் கொக்கு, குளிர்கால உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அந்துப்பூச்சி, நட்சத்திரக் கூட்டங்கள் போன்றவை இதில் சில. Spring Season of Muddy Roads, Sadly and Tenderly ஆகிய தலைப்பிலான கவிதைகளாக இவை உருவாகியுள்ளன. New Stanzas to Augusta என்ற கவிதையில் பிரிவின் இழப்பு மிகச் சிறப்பாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது. ப்ராட்ஸ்கி பைபிளிலிருந்து சொற்களையும் பதங்களையும் எடுத்தாள்கிறார். அவரது நிலைப்புறும் பிரிவுணர்வுக்கு பைபிள் வார்த்தைகள் கூடுதல் கூர்மை தருகின்றன. பெரும்பான்மைக் கவிதைகள் நினைவுகளுக்குள் வாழ்தல் என்ற விஷயத்தைப் பிரதான கவிப்பொருளாக ஆக்கிக் கொள்கின்றன.

History of the Twentieth Century (1980என்ற நீண்ட கவிதை 1900-1914க்கு இடைப்பட்ட வருடங்களின் நடப்புகளை நினைவு கூறுகிறது. ப்ராட்ஸ்கி எழுதியவற்றிலேயே இக்கவிதை நகைச்சுவை உணர்வுடனும், சந்தோஷத்துடனும் எழுதப்பட்டிருக்கிறது. பிரதானமாகத் தென்படும் இன்னொரு அம்சம் வாழ்வு பற்றி கணக்கெடுத்துக் கொள்ளும் தன்மை. வாசகர்களுக்கு இளைப்பாறுதல் தரும் மற்றொரு அம்சம் ப்ராட்ஸ்கி கவிதைகளில் இடம் பெறும் புதிர்த்தன்மை மிக்க ஒற்றை வரிகள்:

யாருக்கு வேண்டும் முழுமையான பெண்

அவளின் கால்கள் கிடைத்து விடும் பொழுது?

அந்த விடுதியின் லெட்ஜர்களில் வருகையை விட புறப்பாடுகளே அதிகம் முக்கியப்படுகிறது

எல்லாவற்றிருக்கும் முடிவிருக்கிறது துயரம் உட்பட.

கவிதை வடிவம், மற்றும் கவிதை மொழிபெயர்ப்பு ஆகிய விஷயங்களில் ப்ராட்ஸ்கி சர்ச்சை மிகுந்த கருத்துக்களைக் கொண்டிருந்தார். அவர் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர். போலிஷ் மொழியில் இருந்து ரஷ்ய மொழிக்கு இருபதாம் நூற்றாண்டின் நவீன கவிஞர்களை மொழிபெயர்த் துள்ளார். ஜான் டன் (John Donne) போன்ற ஆங்கில மெட்டபிஸிகல் கவிஞர்களை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மொழிபெயர்ப்பிற்கும் சர்வாதிகாரத்திற்கும் ஒப்புமை இருப்பதாகக் கருதியவர் ப்ராட்ஸ்கி. ஏனெனில் சர்வாதிகாரமும் மொழிபெயர்ப்பும் ”சாத்தியமாகக் கூடியது என்ன?” என்ற அடிப்படைக் கொள்கையில் இயங்குகின்றன. சமமான விஷயங்களைத்தான் மொழிபெயர்ப்பாளன் தேட வேண்டுமே ஒழிய பதிலிகளை அல்ல. ஆனால் பெரும்பாலும் மொழிபெயர்ப்பாளர்கள் பதிலிகளைக் கண்டுபிடிக்கவே விரைகின்றனர். இதற்குக் காரணம் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பாளர்கள் கவிஞர்களாக இருப்பதுதான்.

எந்தக் கவிஞனும்-அவன் எழுதியிருக்கிற கவிதைகளின் எண்ணிக்கை கூடுதலோ குறைவோ- அவன் வாழ்ந்த வாழ்வின் யதார்த்தத்தில் பத்தில் ஒரு பங்கினை மாத்திரமே வெளிப்படுத்த முடியும் என்றார் ப்ராட்ஸ்கி. 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி காலமானார் ப்ராட்ஸ்கி.

ப்ராட்ஸ்கி அமெரிக்கப் பிரஜையான பிறகு கவிதைகளை ரஷ்ய மொழியிலும் கட்டுரைகளை ஆங்கிலத்திலம் எழுதினார். Less Than Oneஎன்ற கட்டுரைத் தொகுதிக்குப் பெயர்க்காரணம் உண்டு. ப்ராட்ஸ்கி ரஷ்யாவில் சிறைத்தண்டனை அனுபவித்த சமயத்தில் அரசாங்க ஆவணங்களில் அவரைப் பற்றிக் குறிப்பிட்ட சொற்கள்தான் Less Than One. On Grief and Reason என்ற உரைநடை நூல் 1995ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் ப்ராட்ஸ்கி அமெரிக்கக் கவிஞரான ராபர்ட் ஃராஸ்ட் மற்றும் ஆங்கிலக் கவிஞரான தாமஸ் ஹார்டி ஆகியோர் பற்றிய கட்டுரைகளில் மரபான அந்தக் கவிஞர்களை சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்.ப்ராட்ஸ்கியின் கவிதைகள் அடிப்படையில் மரபானவையாகவும் செவ்வியல்தன்மை மிக்கனவாகவும் உள்ளன.

ஜோஸப் ப்ராட்ஸ்கியின் கவிதைகள்

1 ஜனவரி 1965

விவேக மனிதர்கள் உன்பெயரை மறந்துவிடுவார்கள்.

எந்த நட்க்ஷத்திரமும் உன் தலைக்கு மேல் ஒளி சிந்தாது;

கலைப்புற்ற ஒரு சப்தம் வேறுபாடற்றிருக்கும்

புயற்காற்றின் கரகரத்த பேரொலி.

உன் துணையற்ற படுக்கைப் பக்கத்து மெழுகுவர்த்தி அணையும்போது

சோர்ந்து போன உன் கண்களிலிருந்து வீழ்கின்றன நிழல்கள்.

நிறைய மெழுகுவர்த்திகள் முடியும் வரை

இங்கு ஆண்டுக் குறிப்பேடு இரவுகளைப் பெருக்குகின்றது.

துயர்படிந்த பாடல் தொனியை எது நினைவூட்டுகிறது?

ஒரு நீண்ட பழகிப்போன இசை.

அது மறுபடியும் ஒலிக்கிறது. அது அவ்விதமே இருக்கட்டும்.

இன்றிரவிலிருந்து மீண்டும் ஒலிக்கட்டும்.

என் இறப்பின் சமயத்தில் ஒலிக்கட்டும் அது.

நம் நிலைபடிந்த பார்வையை தூரத்து வானத்து நோக்கி

உயர்த்தச் செய்யும் அக்காரணத்திலான

கண்களின் உதடுகளின் நன்மையுடமை போல.

மௌனமாய் சுவரை நோக்குகிறது உன் வெறித்த பார்வை.

உன் காலுறையின் வாய் திறந்திருக்கிறது.

பரிசுப்பொருள்கள் ஒன்றுமே இல்லை

புனித நிக்கலஸின் மீது நம்பிக்கை இழக்கும் அளவுக்கு

வயது முதிர்ந்து விட்டாய் என்பது தெளிவாகிறது.

அற்புதங்களுக்கு இது மிகவும் தாமத காலம்.

ஆனால் திடீரென்று வான் உலகின் வெளிச்சத்திற்குப்

பார்வை உயர்த்தி உணர்கிறாய்.

உன் வாழ்க்கையே ஒரு அற்புதப் பரிசு.

ஏப்ரல் மாதத்தில் கவிதை வரிகள்

கடந்துவிட்ட இந்த குளிர் காலத்தில் மறுபடியும்

நான் பைத்தியமாகவில்லை குறிப்பாக குளிர்காலத்தைப்பற்றி:

ஒரு பார்வை மட்டுமே; சென்றுவிட்டது.

ஆனால் பூமியைப் போர்த்திய பசிய கோடித்துணியிலிருந்து

பனிக்கட்டிகள் பெரும் ஓசையில் உடைவதை

என்னால் தனிப்படுத்த முடிகிறது. எனவே நான் ஸ்வாதீனத்தில்

இருக்கிறேன்.

என் விருப்பம்

எதிர் வரும் வசந்தத்தில் நான் ஆரோக்கியமானவனாய் இருப்பது.

ஃபோன்டெக்கா நதியின் பிரதிபலிப்பில் குருடாக்கப்பட்டு

உதிரிகளாக என்னுள் உடைபடுகிறேன்.

மேலும் கீழுமாய்

என் தட்டைக் கை முகத்தில் படர்கிறது.

பனிக்கட்டியின் கடினப் பகுதிகள் என் மூளையில்

காடுகளில் நின்று விடுவதைப் போன்றே தங்கி விடுகின்றன

தலையில் நரைபடியும் காலம்வரை வாழ்ந்து விட்ட

நான்

தகடுகளாக மிதக்கும் பனிக்கட்டிகளின் இடையில்

வழிகாணும் சிறிய யந்திரப் படகு

திறந்த கடலை நோக்கிச் செல்வதைப் பார்க்கிறேன்.

உன்னை எழுத்தில் மன்னிப்பதென்பது

தவறுக்காக உன்னைக் குற்றம் சாட்டுவதற்கு

சமமாகும் கனிவற்ற நேர்மையற்ற செயல் மன்னிக்க வேண்டும்

தயை கூர்ந்து

இவ்வுயர்ந்த நடைக்காக:

நம் அதிருப்தி முடிவுற்றதாயினும்

நம் குளிர்காலங்களுக்கு முடிவு ஒன்றிருக்கிறது.

ஏன் எனின் மாறுதலின் சாரம் பொதிந்துள்ளது இதில்-

ஞாபகத்தின் பெருவிருந்தில் குழுமும்

கலைத் தேவதையின் உரத்த வாதாடலில்.

பாலைவனத்தில் ஒரு நிறுத்தம்1

வெகுசில கிரேக்கர்களே இன்று லெனின்கிராடில் வசிப்பதால்

தற்போதைய மகிழ்வுற்ற கருணைகாணாத பாணியில்

புதிய இசையரங்கினை நிர்மாணிக்க இடம்தர

கிரேக்கர்களின் கிறித்துவத் திருக்கோயிலை தரைமட்டமாய்

இடித்துவிட்டோம் நாம்.

மேலும்

பதினைந்தாயிரம் இருக்கைகள் கொண்டதொருஇசையரங்கம்அவ்வளவு

கருணையிழந்த பொருளல்ல.

புராதன நம்பிக்கைகளின் நைந்த தோரணங்களை விட

கலையின் அதி நுட்பம் கவர்ச்சியானதாயிருப்பின்

யாரைக் குறை சொல்ல?

இருப்பினும் இந்தத் தொலைவிலிருந்து நாம் பார்க்கும்போது

வருத்தமளிக்கிறது பழக்கப்பட்ட வெங்காய வடிவ கோபுரங்களைக் காணாமல்

விசித்திரமான மழுங்கிய நிழல்வடிவம் தெரிவது.

எனினும்

இறுகலான சமநிலை அமைப்புகளின் அழகின்மைக்கு

மனிதர்கள்

சமமான அமைப்புகளின் அழகின்மையை விட

அவ்வளவு மிகுதியாக கடன் பட்டிருக்கவில்லை.

திருக்கோயில் எவ்வாறு சரணடைந்தது என்பது நன்கு

நினைவில் இருக்கிறது.

அப்போது நான் அருகமையில் வாழ்ந்த

தார்த்தாரியக் குடும்பத்திற்கு வசந்த பருவத்திய பயணம் செய்து கொண்டிருந்தேன்

அவ்வீட்டின் முகப்பு ஜன்னல்

கோயிலின் தெளிவான கோட்டுருவினைத் தந்தது பார்வைக்கு.பேச்சின் இடையில் ஆரம்பித்தது அது.

ஆனால் குழப்பச் சப்தங்களின் உறுமல் வன்முறையாய்ப் புகுந்து கலந்து, பின் நிதானமான மனித உரையாடலை மூழ்கடித்தது.

மிகப் பெரிய தானியங்கி மண் தோண்டி உலோகச்   சொடுக்கல்களுடன்

இரும்புப் பந்து அதன் சங்கிலியில் தொங்க

திருக்கோயிலை நெருங்கியது.

உடனே சுவர்கள் அமைதியாய் வழிவிடத் தொடங்கின.

வெறும் சுவர் அப்படியொரு எதிரியின் முன்

வழிவிடாமற் போவது ஏளனத்திற்குரியது.

தானியங்கி மண் தோண்டி

தன்னைப் போலவே

சுவரும் உயிரற்ற ஆன்மாவிழந்த பொருள் என எண்ணியிருக்கக் கூடும்.

உயிரற்ற ஆன்மாவற்ற பொருள்களின் பிரபஞ்சத்தில்

எதிர்ப்பு

தவறான முறைமை எனக்கருதப்படும்.

பின் வந்தன அள்ளிக் கொண்டு செல்லும் லாரிகள்

அதன்பின் நிலத்தை சமன் செய்யும் பெரும்ஊர்தி. . .

முடிவில்-பின்னிரவு நேரம்வரை அமர்ந்திருந்தேன்

திருக்கோயிலின் பன்முக ஒதுக்கிடத்தில்

புத்தம் புதிய சிதைவுகளுக்கிடையில்,

பீடத்தின் வாய்பிளந்த ஓட்டைகளின் பின்னால்

இரவு கொட்டாவி விட்டது.

திறந்த பீடத்தின் காயங்களின் வழியாக

சாவின் நிறமென வெளுத்து நிற்கும் போர்வீரர்களைப் போன்ற தெருவிளக்குகளை மெதுவாய் மிதந்து கடந்து மறையும்

தெருக் கார்களை கவனித்தேன்.

திருக்கோயில்கள் ஒரு போதும் காட்டாத பல பொருள்களின் திறளை

இத்திருக்கோயிலின் முப்பட்டகம் வழியாய்ப் பார்த்தேன்.

ஏதாவது ஒரு நாள்

இன்று வாழும் நாங்கள் இறந்த பின்

அல்லது நாங்கள் சென்ற பின்

எங்களை நன்கு அறிந்தவர்களுக்கு

பீதியை, கலவரத்தைக் கொணரும் தன்மையில்

முன்னால் எங்களின் வாழ்விடமாயிருந்த வெளியில்

ஒரு பொருள் தோற்றம் கொள்ளும்.

ஆனால் எங்களைத் தெரிந்தவர்கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள்.

நாய்கள் பழைய நினைவினால் உந்தப்பட்டு

ஒரு சமயம் பழக்கப்பட்ட இடத்தில் பின்னங்கால்களைத் தூக்குகின்றன.

திருக்கோயிலின் சுவர்கள் என்றோ பிய்த்தெரியப்பட்டுவிட்டன.

ஆனால் இந்த நாய்கள் திருக்கோயில் சுவர்களை

அவற்றின் கனவில் காண்கின்றன.

நாய்க்கனவுகள் நடப்புமெய்மையை ரத்துசெய்து விட்டன.

ஒரு வேளை இப்பூமி அப்பழமையின் வாசனையைக்            கொண்டிருக்கக் கூடும்.

நாய் முகரும் ஒன்றைத் தார் மூடிவிட முடியாது.

அத்தகைய நாய்களுக்கு இப்புதிய கட்டிடம்

என்னவாக முடியும்! அவைகளைப்     பொருத்தவரை  திருக்கோயில் இன்னும் இருக்கிறது.

அவை தெளிவாகப் பார்க்கின்றன.

மனிதர்களுக்கு வெளிப்படையான உண்மையை

அவை நம்ப மறுக்கின்றன

இக்குணமே  சில வேளைகளில்

நாய்களின் விசுவாசம்” என்று அழைக்கப்படுகிறது.

மனித வரலாற்றின் தொடர்ஓட்டத்தைப் பற்றி

நான் மெய்யாக ஏதாவது சொல்வதானால்

இத்தொடர் ஓட்டத்தின் மீது மட்டுமே உறுதியளிக்கிறேன்,

இனி வரப் போகும் எல்லாத் தலைமுறைகளின்

இந்த ஓட்டத்தின் மீது.

வெகு சில கிரேக்கர்களே இன்று லெனின்கிராடில் வசிக்கிறார்கள்

கிரேக்கத்திற்கு வெளியே, பொதுவாக வெகு சிலரே

அதில் மிகச் சிலரே நம்பிக்கையின் ஸ்தலங்களை காப்பாற்ற,

கட்டிடங்களில் நம்பிக்கை கொள்வது

யாரும் அதைக் கேட்பதில்லை.

கிறிஸ்துவிடம் மனிதர்களை அழைப்பது ஒரு பக்கம்.

ஆனால் அவர்களின் சிலுவையை சுமப்பது முற்றிலும் வேறானது.

அவர்களின் கடமை தெளிவானது, ஒன்றை நோக்கியது.

எனினும் அக்கடமையை பூரணமாய் வாழ்வதற்குப் பலவீனர்களாயிருந்தனர்.

அவர்களின் உழவுகாணா நிலங்கள் பயனற்ற களைகளால் மண்டிக்கிடந்தது.

விதைப்பவர்களே கூர்மையான கலப்பையைத் தயாராய் வைத்திருங்கள்.”

நாம் தெரிவிப்போம்

என்று உம் தானியம் விளைந்ததென”

அவர்கள் கையருகில் தயாராய் தங்கள் கூர்ந்த கலப்பையை

வைக்கத் தவறினர்.

இன்றிரவு இருண்ட ஜன்னலின் வழியாக வெறித்துப் பார்த்து

நாம் வந்து நிற்கிற அவ்விதம் பற்றிச் சிந்தித்து

என்னைக் கேட்டுக் கொள்கிறேன்:

எதிலிருந்து நாம் இன்று மிகவும் விலகியுள்ளோம்-

பழைய கிரேக்க உலகத்திலிருந்தா-இல்லை மதத்திலிருந்தா

எது இப்போது அருகாமை?

இனி வரப்போவது என்ன? ஒரு புதிய சகாப்தம்

நமக்காகக் காத்திருக்கிறதா?

அது அவ்வாராயின் நாம் எவ்வகையில் கடமைப் பட்டிருக்கிறோம்?.

எவற்றை இழக்க வேண்டும் நாம் அதற்காக.

1.1960களின் மத்தியில் லெனின்கிராடின் ஒரு பகுதியில் அமைந்திருந்த கிரேக்க கிறித்தவக் கோயில் இடிக்கப்பட்டு எஃகு-கண்ணாடி அமைப்பு கொண்ட விஸ்தாரமான அக்டோபர் இசையரங்கம் எழுப்பப்பட்டது. ப்ராட்ஸ்கியின் குடியிருப்புக்கு மிக அருகிலேயே இது நிகழ்ந்தது.

கவிதை

1.

நாம் விடைபெறல் மௌனமாய் நிகழட்டும்

இசைத் தட்டினை நிறுத்தி விடு.

இவ்வுலகில் தனிப்படுதல்

அப்பால் வரும் பிரிவுகளின் குறிப்பு.

இந்த வாழ்நாட்களில் நாம்

பிரிந்து உறங்குவது மட்டுமல்ல

சாவு நம்மை ஒன்றாய் இணைக்காது

பிரியத்தின் காயத்தைப் போக்கவும் செய்யாது.

2.

எது குற்றமுள்ளதாயிருப்பினும்

இறுதித் தீர்ப்பு ஒலிக்கும் போது

பாவமறியாத ஒன்றினைப் போல் வரவேற்பினைப்   பெறமுடியாது.

நாம் சொர்க்கத்தில் சந்திக்க மாட்டோம்.

நரகத்திலும் அடுத்தடுத்து இருக்கப் போவதில்லை.

என்பதை உணர்ந்திருப்பதால்

நம் விடைபெறுதல் மிகவும் இறுதியானது.

3.

நாம் இருவருமே நேர்மையாளர்கள் என்னும் உண்மை

தழை மக்கிய மண்ணை கலப்பைப் பிளப்பதைப் போன்று

நம்மைப் பாவத்தை விடவும் பரிபூரணமாக இரண்டாக்குகிறது.

ஒரு கண்ணாடிக் கோப்பையை இடித்து உடைத்து விடுகையில்

நாம் கவனக் குறைவானவர்கள். குற்றவாளிகளல்ல.

கொட்டிச் சிதறிய மதுவின் மீதான கவலை

உடைத்து விட்டபின் என்ன நலம் பயக்கும்?

4.

நம் இணைவு எங்ஙனம் பூரணமாகியதோ

அவ்வாறே பிரிவும் முழுமையானது.

காமிராவின் பக்கவாட்டு அசைவோ முன்னோக்கிய நகர்தலோ

காட்சியின் தெளிவின்மையைத் தள்ளிப் போட முடியாது.

நம் கூட்டிணைவு இன்னும் நிஜம் என்பதில்   அர்த்தமில்லை

ஆனால் திறமை மிகுந்த தனிப்பகுதி

பூரணம் எனப் பொய்த்தோற்றம் தரலாம்.

5.

நிரைந்து வழிதலில் மயக்கமுறு

வறட்சிவரை உன்னை இறைத்து ஊற்று.

நம் இரு பாதிகளும் மதுவின் பொருண்மையைக் கொண்டிருக்கிறோம் அதன் வீரியத்தை அல்ல

ஆனால் என் உலகம் முடிந்துவிடாது

வருங்காலத்தில்

நாம் பிரிவுற்ற அந்த தாறுமாராய்க் கிழிபட்ட

விளிம்புகளை மட்டுமே பகிர்ந்துக் கொண்டாலும்.

6.

மனிதன் எவனும் அந்நியனாகிப் போய்விடுவதில்லை.

ஆனால் ஒரு போதுமில்லை மீண்டும்” எனும்போது

நம் உணர்வுகளால் அவமானத்தின் நுழைவாயில் வரையறுக்கப்படுகிறது.

இவ்வாறு வருந்திப் பின் புதைந்து

மீண்டும் நம் அக்கறைகளைத் துவங்கி

இரண்டு ஒருபொருட் சொற்களைப் போல்

சாவினை அதன் மையத்தில் துண்டிக்கிறோம்.

7.

இந்த நாடெங்கிலும் நாம்

இணைந்திருக்க இயலாதென்பது

பரந்த பிரபஞ்சத்தன்மையின் மாறுபட்ட வெளிப்பாடாகிறது.

பெருமைகளைக் கண்டு பொறாமை கொள்கிறது நம்நிலம்

எனினும் அது

மறதி நதியின் தூரப்பகுதியில் அதன் வறிய உடையற்றவர்களுடன்

எந்தச் சக்திக்கும் பணிந்து விடுவதில்லை.

8.

பின் எதற்கு

கடந்து போனவற்றை அழித்துவிட இந்தத் தோல்வியுறும் முயற்சிகள்?

இந்த ஏழ்மை வரிகள் நாம் அறிந்த ஒரு விபத்தை

எதிரொலிக்க மட்டுமே செய்யும்.

தொடக்கங்களை விட காதலின் முடிவுகளே

அதிகம் கவனிக்கப்படுகின்றன என்பதற்கு ஆதாரங்கள்

திடீர் பூஞ்சைகைளாய்க்  கிளம்பும் இந்த வதந்திகள்.

9.

நம் விடைபெறுதல் மௌமாய் நிகழட்டும்

நம் உடைந்த முகவரி

(உனது தேவதை, எனது துர்தேவன்”)

செர்க்கத்தின் வேட்டை நாய்களிடமிருந்து

ஒரு வருடலையும் பெற முடியாது.

கூட்டாக இசைக்கும் கலைத்தேவதைகள் வருந்துவர்

பின்வரவேண்டிய இடர்கள்

நாம் வாழும்போதே உறுத்தும் வலிகளைக் கொணர்வதால்.

வடக்கு  பால்டிக் பிரதேசம்

ஒரு பனிப்புயல் இந்த துறைமுகத்தைத் தூளாக்கும் போது

கிரீச்சிடும் ஒரு பைன் மர இலைகள்

பனிச்சருக்கு வண்டியின் எஃகு ரன்னரை விட ஆழமாய்

காற்றில் தடம் பதிக்கையில்,

எந்தவித நீலநிறங்களின் அளவுகளை ஒரு விழியால் அடையவியலும்?

கருமித்தனத்தில் என்னவிதமான சைகை மொழி முளைத்தெழ முடியும்?

பார்வைக்குப் புலனாகாது வெளி உலகம்

தனது சிறைபிடிப்பாளரைப் பார்த்துப் பழிக்கிறது.

வெளிர்ந்து, பனிநிறைந்து, சாதாரணமாய்.

இவ்வாறுதான் ஒரு நத்தை சமுத்திரத்தரையினடியில் தொடர்ந்து ஒளிர்கிறது.

இப்படித்தான் நிச்சலனம் ஒலியின் வேகமனைத்தையும் உறிஞ்சிக்கொள்கிறது.

இவ்வாறே ஒரு தீக்குச்சி ஒரு அடுப்பினைப் பற்ற வைக்கப் போதுமாகிறது.

தாத்தா காலத்துக் கடிகாரமொன்று-

அது இதயத்துடிப்பின் சகோதரன்-

கடலின் இந்தப்பக்கத்தில் நின்றுபோய் விட்டாலும்

இன்னும் அந்தப்பக்கத்தில் காலம் காட்ட ஒலியிடுகிறது டிக்-டாக் என.

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை நாம் வசிக்கிறோம் நேப்பிள்ஸ்

விரிகுடாவின் பக்கம்.

கரும்புகை மேகங்கள் கடக்கின்றன, தினமும், நமக்குமேல்.

நமது சொந்த வெசுவியஸ்

தொண்டையைச் செருமிக்கொண்டது;

பக்கவாட்டுத் தெருக்களில் படிகிறது எரிமலைச் சாம்பல்.

அதன் கர்ஜனையில் நம் கண்ணாடி ஜன்னலின் சட்டங்கள்

சடசடத்து விட்டன.

என்றாவது ஒரு நாள் நாமும் கூட சாம்பலால்             சுற்றப்படுவோம்.

மேலும் அது நிகழும்போது, அந்த பயங்கர கணத்தில்

நகரின் புறநகர்ப்பகுதிகளுக்கு ட்ராம் வண்டியில் வந்து

உன் வீட்டைக் கண்டுபிடிக்க விரும்புவேன்;

ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு

நமது நகரைத் தோண்டி எடுக்க

விஞ்ஞானிகளின் கூட்டமொன்று இங்கு வருமாயின்

நான் நம்புகிறேன் அவர்கள் கண்டெடுப்பார்கள்

நம் நவீன சகாப்தத்தின் சாம்பல்களால் சூழப்பட்டு-

மேலும் என்றென்றைக்குமாய் உனது அணைப்புக்குள்

என்னை.

நீ வீடு திரும்புகிறாய் மீண்டும்

நீ வீடு திரும்புகிறாய் மீண்டும். அதற்கென்ன பொருள்?

உன்னைத் தேவை என்று உணர்பவர்,

இன்னும் தன் நண்பர் என்று கருதுபவர் எவரும்

இருக்க முடியுமா?

வீட்டுக்கு வந்து விட்டாய், இரவு உணவுடன் அருந்த இனிப்பு மது வாங்கி வந்திருக்கிறாய்,

மேலும்,ஜன்னலின் வெளியில் வெறித்தபடி, சிறிது சிறிதாய்

நீ அறியத் தொடங்குகிறாய், ”நீ” மாத்திரமே குற்றம்            செய்தவனென்று.

ஒரே ஒருவன். அருமை அது. கடவுளுக்கு நன்றி சொல்.

அதற்கு .மாறாக, ”சிறிய உதவிகளுக்கு நன்றிகள்”, என்று நீ ஒரு வேளை சொல்ல வேண்டியிருக்கலாம்.

அருமை,

வேறு எவரையும் குற்றம் சொல்ல முடியாதென்பது

அருமை

உறவுகள் யாவற்றிலிருந்தும் நீ விடுதலையானவன் என்பது

அருமை, உன்னைக் கவனம் சிதைக்கும் அளவு

காதலிக்கக் கடமைப்பட்டவர் இந்த உலகில் எவரும் இல்லை என்பது.

அருமை, எவரும் உன் கையைப் பிடித்தபடி

ஒரு இருண்ட மாலைப்பொழுதில் கதவு வரை வந்து வழியனுப்பவில்லை என்பது,

அருமை

தனியாக, இப்பரந்த உலகில், களோபரம் மிகுந்த

ரயில் நிலையத்திலிருந்து வீட்டை நோக்கி நடப்பது என்பது.

அருமை வீட்டுக்கு வேகமாய் செல்லும் போது

வெளிப்படையானதற்குச் சற்றுக் குறைவானதொரு

வார்த்தையை உச்சரித்தபடி உன்னை நீயே தடுத்துச் சந்திப்பது

நீ திடீரென்று உணர்கிறாய் என்ன நடந்தது என்பதை ஏற்க

உன் ஆன்மாவே மிகவும் விரைவற்றது.

குடித்தனக்காரன்

முற்றிலும் விநோதமாய்

முற்றிலும் விநோதமாய்த் தனது புதிய வீடிருப்பதை

பார்க்கிறான் குடித்தனக்காரன்.

அவனது விரைந்த பார்வை பரிச்சயமற்ற பொருள்களின் மேல் விழுகிறது.

அவற்றின் நிழல்கள் முழுமையற்றது

அவனில் பொருந்துவதால் அவையேகூட அதுபற்றி சிறிது

சஞ்சலம் கொள்கின்றன.

ஆனால் இந்த வீடு தன் வெறுமையைத் தாங்காது

இந்தப்பூட்டு மட்டுமே-அது மட்டும் எப்படியோ கம்பீரமற்றிருக்கிறது.

குடித்தனக்காரனின் தொடுதலை உணரத் தாமதித்து

இருளில் தனது சிறிது நேர எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

தான் என்றும் இந்த இடத்தை வீட்டு அகல வேண்டியதில்லை

என்ற நினைப்புடன் இவ்வீட்டுக்குள் இழுப்பறைகள்

கொண்ட பீரோவையும் மேஜையையும் கொண்டு வந்த

பழயவனைப் போலில்லை இந்தப் புதிய குடித்தனக்காரன்;

ஆனாலும் இவன் செய்தான்: இவன் வாழ்வின் துளிகள் சாவுத்தரமாயின.

அவர்கள் இருவரையும் ஒருவராக்குவதற்கு ஒன்றுமே இல்லை போலத் தோன்றும்:

தோற்றம், குண இயல்பு, மனம் சந்தித்த பேரதிர்ச்சி.

எனினும் வழக்கமான ஒரு வீடு” என அழைக்கப்படுவது

ஒன்றே இந்த இருவருக்கும் இடையில் பொதுவானதாயிருக்கிறது.

0161

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: