ழீன் ஜெனே-கீழ்மையின் அழகியல்/ பிரம்மராஜன்

620px-jean_genet_1983

ழீன் ஜெனே-கீழ்மையின் அழகியல்/ பிரம்மராஜன்

” No doubt it is one of the functions of art to replace religious faith by the effective ingredient of beauty. At least beauty must have the power of a poem, that is to say of a crime….”

-Jean Genet, Letter to Pauvert

நவீன பிரெஞ்சு இலக்கியத்தில் விளிம்புநிலையில் வாழ்ந்து அந்த வாழ்க்கையை சமரசமின்றி கலையாக மாற்றியவர்களில் ஜெனேவுக்கு இணையாக வேறு எவரையும் சொல்ல முடியாது. அவரது சமகாலக் கலைஞர்களின் முன்னணியில் இருந்தவர். எனினும் நவீன காலத்து தீவினையின் கவிஞனாக  (Poet of Evil)ஜெனே மாத்திரமே இருக்க முடியும். 1910ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் ஒரு வேசியின் மகனாகப் பிறந்தவர் ஜெனே. தன்  குழந்தைப்பிராயத்தை அனாதைகளுக்கான அரசின் இல்லத்தில் கழித்த ஜெனே பத்தாவது வயதில் திருட்டுக் குற்றத்திற்காக சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பட்டார். அவரது கல்வி எனச் சொல்லக்கூடியது இத்தகையது தான். ஐரோப்பிய தலைமறைவு வாழ்க்கையில் முப்பது ஆண்டுகளைக் கழித்து சமூகத்தின் மிகச் சீரழிந்த மனிதர்களைப் பற்றித் தெரிந்து கொண்டார். இதுவே அவரின் வாழ்க்கை முறையுமாயிற்று. அநேகமாய் அவர் சென்ற எல்லா நாடுகளிலும் ஜெனேவுக்கு  தவறாமல் கிடைத்தது சிறை வாழ்க்கை. நாடுகளின் எல்லைகளைக் கடந்து செல்லுதல், சிறைகளுக்குள் மாட்டிக்கொள்ளுதல் போன்ற நிஜவாழ்க்கைச் சாகசங்கள் ஜெனேயின் யதார்த்த வாழ்வனுபவத்தைத் துண்டித்து அவரை Fancy க்கு இட்டுச் செல்லக் காரண மாயிருந்தன. செக்கஸ்லோவாகியாவையும் போலந்தையும் பிரிக்கும் எல்லைப் பகுதியைக் கடந்து செல்லும் அனுபவத்தை மிக அற்புதக் கவிதையாக்கி இருக்கிறார் ஜெனே. (The Thief’s Journal.  37-38 )

நவீன பிரெஞ்சு இலக்கியத்தில் குறிப்பாக நாவல், நாடகம் ஆகிய துறைகளில் தனக்கானதொரு இடத்தை ஸ்தாபித்துக் கொள்ள முடிந்திருக்கிறது ஜெனேவால். 1942ஆம் ஆண்டு எங்ள்ய்ங்ள் சிறைச்சாலையில் இருந்த போது, காகிதப்பைகள் தயாரிப்பதற்காகத் கைதிகளுக்குத் தரப்பட்ட ப்ரௌன் நிற தாள்களில் அவரது முதல் நாவலான Our lady of the flowers  ஐ எழுதி முடித்தார்.

நாவலின் பிரதான அம்சங்களாக இருப்பவை கொலைக்குற்றங்கள், காட்டிக் கொடுத்தல், மற்றும் ஒருபால் புணர்ச்சி (Homo Sexuality) . பெண் தரகர்கள், திருடர்கள், வேசிப் பெண்கள், ஆண்வேசிகள், ஏமாற்றுக்காரர்கள் நிறைந்தது இந்நாவல். இதில் சித்தரிக்கப்படும் உலகில் ”நடத்தை” என்ற பொது அர்த்தம் உள்ள சொல்லுக்கு அர்த்தமில்லாமல் போகிறது. வெளிப்பார்வைக்கு ஒழுங்கமைக்கப்பட்டது போலத் தொன்றும் ஒரு சமூகத்திற்கு வெளியேற்றப்பட்ட கீழ்மையின் மனிதர்களை அறிமுகம் செய்கிறார் ஜெனே. மானுடநிலையின் மிகக் கீழ்மையைப்  பற்றிய புரிந்து கொண்டு அதைக் கலையாக வெளிப்பாடு செய்யும் மேதமை ஜெனேவிடம் காணப்படுகிறது. வெளியீட்டகம் சாராமல் தனிப்பட்ட முறையில் இந்நூல் Marc Barezatஎன்பவரால் 1943 ஆம் ஆண்டு அச்சாக்கம் செய்யப்பட்டது. மேலும் 1960கள் வரை இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் ஜெனேயின் நாவல்கள் தடை செய்யப்பட்  டிருந்தன.

1952ஆம் ஆண்டு சார்த்தர் ஜெனேவின் வாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஆழ்ந்து விமர்சித்து எக்ஸிஸ் டென்ஷியலிஸ்ட் என்ற உயர்ந்த ஸ்தானத்தை ஜெனேவுக்கு அளித்தார். எக்ஸிஸ்டென்ஷியலிஸக் கலகக்காரனான ஜெனே, முழுமுற்றான தீவினையை (Absolute Evil) அடையும் நோக்கத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாவிட்டாலும் அதைத் தன் கலையின் வாயிலாகச் சாதித்துக் கொண்டான் என்று அறிவித்தார்.

Saint Genet என்ற நூலில் சார்த்தர், Teresa of Avila வுக்கும், இடையிலான ஒப்புமையை ஆராய்கிறார். நிறைய மதாவாதிகளுக்கு சார்த்தரின் ஒப்புமை மிக அநியாயமாகத் தோன்றியிருக்கும். சார்த்தர் இந்த விஷயத்தில் எடுத்த முடிவும்  அதிர்ச்சி அளிக்கக்கூடியது. புனிதத்துவம் என்பது மானுட இருப்பு நிலையின் பாவத்தன்மையை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பண்பட்ட மனநிலை (humility)ஆகுமெனின், முழுமையின் முன்னர் சகலவிதமான அகங்காரங்களும் அழிக்கப்படும் செயலாகுமெனின் புனிதத்துவத்திற்கான ஜெனேயின் தகுதி இன்னும் சிறப்பானது.

தன்பாலுணர்வு சார்ந்த Fantasy களை புதினங்களாக மாற்றும் பொழுதும், தன் பகற்கனவுகளை அவற்றுக்கே உரித்தான லயம், நிறம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உள்ளார்ந்த தேவை ஆகியவற்றுடன் எழுதப்பட்ட வாக்கியங்களாக மாற்றும் பொழுதும் ஜெனே தனது கனவுலகினைக் கட்டுப்படுத்தும் திறனைப் புரிந்து கொண்டார். ஜெனேவின் நூல்களின் பொதுத்தன்மையை சார்த்தர் பின்வருமாறு கூறுகிறார்:

”தன் தீவினையால் நம்மைப் பீடிக்க வைக்கும் ஜெனே அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்கிறான். அவனின் ஒவ்வொரு நூலும் பீடிப்பின் உணர்ச்சி வடிகாலின் உச்சம், ஒரு மனோவியல் நாடகம். எங்ஙனம் அவனுடைய புதிய காதல்கள் அவனின் முந்திய காதல்களைச் சொல்லுகின்றன வோ அது போல ஒவ்வொரு நூலும் வெறுமனே அதற்கு முந்திய நூலை பிரதி எடுப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் ஒவ்வொரு நூலிலும் பீடிப்புக்கு ஆளாகிய இந்த மனிதன் இன்னும் சற்றுக் கூடுதலாய், தன்னைப் பிடித்திருக்கும் துர்தேவனுக்கு எஜமானன் ஆகிவிடுகிறான். இலக்கியத்தின் பத்து வருடங்கள் மனோவியல் பகுப்பாய்வு முறை வைத்தியத்திற்கு இணையாகும்.”

(Jean Paul Sartre-Saint Genet )

ஜெனேயின் விவரணை பாலுணர்ச்சி சார்ந்தும், பொருக்குகள் நிறைந்தும், மனிதக் கழிவுகளை ஆய்வது போலவும் தோன்றிய போதிலும் மிகக் கவித்துவமாக இருக்கிறது. தலைகீழாக்கப்பட்ட முறைமாறிய மதவியல் சூழல்களைக் கொண்ட உலகினையும் அதன் அனுபவங் களையும் சித்தரிக்கப் போதுமானதாகிறது ஜெனேயின் உரைநடை. கீழ்மையைத் தேடுவதிலும், அடைவதிலும் ஜெனேவின் தேடலும் புனிதமானதாய் மாறுகிறது.

ஜெர்மானியர்களால் ஃபிரான்ஸ் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலத்தில் சிறைகளுக்குள் போவதும் வெளியில் வருவதுமாக இருந்தார் ஜெனே. சிறைதான் ஜெனேவைக் கவிஞனாக்கியது. ஒரு சமயம் ரிமாண்டில் இருக்கும் போதே தவறுதலாக சிறையில் அணியும் உடைகள் தரப்பட்டு, இன்னும் தண்டனையளிக்கப்படாத மற்ற குற்றவாளிகளுடன் தள்ளப்படுகிறார் ஜெனே. ஆனால் மற்றவர்கள் எல்லோருமே தாம் தினசரி அணியும் உடைகளை அணிந்திருக்கின்றனர். இவ்வாறு பரிகாசத்திற்கும், காழ்ப்புக்கும் உட்படுத்தப்படுகிறார் ஜெனே. இந்தக் கைதிகளில் ஒருவன் தன்  தங்கைக்கு கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தான். அக்கவிதைகள் முட்டாள்தனமாக வும், தன்னிரக்கம் கொண்டவையாகவும் இருந்தபோதிலும் பாராட்டப்பட்டன. ஜெனே, அந்தக் கைதியின் அளவுக்கே கவிதை எழுத முடிமென்று நிரூபித்தார். நண்பனைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனையளிக்கப்பட்ட  Maurice Pilorgeஎன்பவன் மீதான ஜெனேயின் நீண்ட கவிதை- இறங்கற்கபாடல் (1939)

கேவலமான குடிசைகள், சிறைகள், மலர்கள், ரயில் நிலையங்கள் எல்லைப்பகுதிகள், அபின், மாலுமிகள், துறைமுகங்கள், பொதுக்கழிப்பறைகள், சமஊர்வலங்கள், சேரிகளில் தங்குமிடங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, ஜெனே ஒருவித மேலோட்டமான காட்சித்தன்மையைக் கவிதை என மயங்கும்படி செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

தமது உடல்களைத் தவிர எந்தவித அழகும் அற்ற

ஒதுக்கப்பட்டவர்களை நான் காதலிக்கிறேன்

என்பதுதான் ஜெனேயின் பதிலாக இருந்தது. இத்தகைய சமூக அகதிகளைப் பற்றி எழுதும்போது ஜெனே பயன்படுத்த வேண்டிய அலங்கரிப்புகள் மேற்குறிப்பிட்ட வகையில்தான் அமைய வேண்டிருக்கிறது.

1940க்கும் 1948க்கும் இடைப்பட்ட காலங்களில் ஜெனே எழுதிய Miracle of the Rose, Querelle of Brest, Funeral Rites, Our Lady of the Flowers ஆகிய நான்கு உரைநடைப் படைப்புகளை மார்ட்டின் எஸ்லின் நீண்ட வசன கவிதைகள் என்று அழைக்கலாம் என்கிறார். இக்கவிதைகளின் உலகம் ஹேமோசெக்ஸூவல் அகதிகளால் நிறைந்தது. எனினும் இவைகளை முழுமையான அளவில் நாவல் என்று கூறமுடியாது. ஜெனேவின் கூற்றுப்படியே அவருடைய எந்த ஒரு பாத்திரமும் தன் சொந்த முடிவினைத் தீர்மானிப்பதில்லை. வேறுவகையில் சொல்வதனால், இப்பாத்திரங்களின் ஆசிரியனின் இஷ்டப்படி நடவடிக்கை மேற்கொள்கிற வெளிப்பாடுகளே அவை. மிகச் சரியான வரையறுப்புக்குச்  சொல்வேமானால் சிறைவாசி ஒருவனின் பாலுணர்வு சார்ந்த Fantasy களேயாகும். இந்த சிறைவாசி, சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தனிமையில் தன் பகல் கனவுகளில் மூழ்கிப் போகிறான். சமூகம் எத்தகைய அமைவை (Pattern) இவன் மீது சுமத்தி, அதற்கு ஏற்றார்போல் வாழக் கட்டாயப்படுத்துகிறதோ, அவ்வமைப்பிற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டவன். எனவேதான் இந்த நூல்களில் மிகச்சீரழிந்த பேசுப் பொருளும்,கவித்துவ அழகும் வினோதமான வகையில் பிணைந்து காணப்படுகின்றன.

ஜெனேவின் நாடங்களின் உலகம் படிநிலை அமைப்பு குற்றத்திற்காக மரணதண்டனை அளிக்கப்பட்ட Maurice Pilorge என்பவன் மீதான நீண்ட இரங்கற்பாடலை 1939ஆம் ஆண்டு எழுதினார்.

II

ஜெனேவின் நாடகங்களின் உலகம் படிநிலை அமைப்பு சார்ந்தும், சடங்குகள் நிறைந்தும் இருக்கிறது. இந்த உலகம் எதிர்மாறாக்கப்பட்ட ”சாதாரண” மதிப்பீடுகள் மற்றும் சடங்கு முறைகளின் மீது பெருமளவு சார்ந்துள்ளது. இந்த எதிர்மாறாக்கப்பட்ட மதிப்பீடுகள் ஜெனேயின் எல்லா நாடங்களுக்கும் மையமான விஷயம். சாவு ஒன்றினையும், பலியாள் ஒருவரையும் சம்மந்தப்படுத்தும் இந்த நாடகங்கள் ”தீவினை”யின் வெற்றியைக் கொண்டாடுகின்றன. இந்தத் தீவினை, பூர்ஷ்வா சமூகங்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் மதிப்பீடுகளுக்கு மறுதலையானது. ஆட்கொள்ளும் நினைவுகள், பொய்மையான கற்பனைகள், மற்றும் தன்னிச்சையான மூலாதர விடாய்கள் ஆகியவற்றுடன், யதார்த்த உலகினை சவாலுக்கு இழுத்தபடி தம் சுய அடையாளத்தைத் தேடித்திரியும் கதாபாத்திரங்கள் இவ்வுலகில் நிறைந்துள்ளனர்.

ஜெனேவைப் பொறுத்தவரையில் நாடகங்கள் என்பவை யதார்த்த நிகழ்ச்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதற்கல்ல. அவை பகற்கனவுகள். சிறைவாசி ஒருவனின் fantasy களை வாழ்க்கைப் போலாக்கும் ஒரு முறைமை. இதே காரணத்திற்காக ஜெனேவின் நாடகங்கள் நேரடித்தன்மை மிக்க நேச்சுரலிஸத்தை நிராகரிக்கின்றன. சற்றே தூக்கலான, வகைமைப்படுத்தப்பட்ட சிறைக்காவியங்களாகவும் இவற்றைப் பார்க்கலாம்.

Death Watchஜெனேவின் முதல் ஓரங்க நாடகம். இதை ஓரளவு அவரின் உரைநடை எழுத்துக்களின் நீட்சி எனக்கூற முடியும். இந்த நாடகத்தின் களமும் ஒரு சிறைதான். நான்கு குற்றவாளிகளைப் பற்றியது. மூன்று முக்கியப் பாத்திரங்களே நாடகத்தில் வருகிறார்கள். இவர்களால் வழிபடப்படும் இன்னொருவன் வெறுமனே உரையாடல்கள் மூலம் உயிர் பெருகிறான். 1949 ல் முதல் முதலாக Death Watch பாரிஸ் நகரில் மேடை யேற்றப்பட்டது. சிறிய, ஆனால் சக்தி வாய்ந்த இந்த நாடகம் ஜெனேவின் பிற்காலத்திய நாடகங்களுக்கான ஒரு சிறந்த முகவுரையாக அமைகிறது.

சிறைவாசிகளின் குறுகலான எல்லைகளில் இருந்து விடுதலையடைந்தது The Maids என்ற நாடகம். The Maidsல் முதலில் தோன்றும் வேலைக்காரியும், எஜமானியும் நிஜத்தில் வேலைக்காரிகளே என்பதை நாம் பிறகு தான் கண்டு கொள்கிறோம். நிஜமான எஜமானி வெளியில் சென்றவுடன் வேலைக்காரிகள் நாடகம் நடிக்கின்றனர். எஜமானியின் திமிர்த்தனமும், வேலைக்காரியின் அடிமைத்தனமும் இரு வேலைக்காரப் பெண்களால் நடிக்கப்படுகின்றன. சகோதரிகள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் எஜமானியாகின்றனர். Claire என்ற பாத்திரமும், Solange என்ற பாத்திரமும் இந்த அடிமை விளையாட்டையும், இறுதியிலான ஒரு கலகத்தையும் கற்பனையாய் நடித்துப் பார்க்கின்றனர். அழகான, தங்களைவிட இளமையான எஜமானியின் மீதான காதல் வெறுப்பு உறவுகளும் நாடகத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றன. அன்பு, அதீத வெறுப்பு, பாலுணர்வு சார்ந்த காதல் எல்லாமே சேர்ந்து இறுதியில் Claire இன் இறப்பில் முடிகிறது. எஜமானியின் வேடத்தில் நடித்தபடி, நிஜ எஜமானிக்குத் தயாரித்து வைத்திருந்த விஷத்தை அருந்தி இறந்து போகிறாள் Claire.

பாரிஸில் 1947 ஆம் ஆண்டு முன்னணி நடிகராயிருந்த  Louis Jouvet இயக்குநராகப் பங்கேற்று The Maids நாடகத்தை மேடையேற்றினார். இந்த மேடையேற்றத்திற்குப் பிறகே ஜெனேவுக்கு ”மரியாதைக்குரிய” உலகின் அறிந்தேற்பு கிடைத்தது. ஆனால் 1948 ஆம் ஆண்டு ஜெனேவுக்கு ஆயுள் தண்டனை நிச்சயம் கொடுக்கப்படலாம் என்ற நிலைமை   இருந்தது. பிரதான இலக்கியவாதிகளான சார்த்தர், Jean Cocteau, பாப்லோ பிக்காஸோ போன்ற கலைஞர்கள் பிரான்ஸின் ஜனாதிபதிக்கு கையொப்பமிட்ட மனுக்களை அனுப்பினர். இதற்கு பிறகு ஜெனேவின் வாழ்க்கையில் சற்றே முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. ஃபிரான்ஸின் முன்னணிப் பதிப்பாளர் ஒருவர் ஜெனேயின் எழுத்துக்களை சிறந்த பதிப்பாக வெளியிட்டார். முதல் தொகுதி 1951 இல் வெளிவந்தது.

பொதுவாகவே ஜெனேவுக்கு நாடக உலகின் மீதும், நடிகர்கள்,  இயக்குநர்கள் மீதும் இருந்த வெறுப்பு The Balconyஎன்ற நாடகம் இங்கிலாந்தில் மேடையேற்றப்பட்ட பொழுது கலகபூர்வமாய்த் தெரியவந்தது. The Balconyமுதல் முறையாக 1957 ஆம் ஆண்டு லண்டனின் Arts Theatre Club இல் அதன் அங்கத்தினர்களுக்காக பிரத்யேகமாக மேடையேற்றப்பட்டது. Pater Zadek என்ற இளம் ஆங்கில இயக்குநர் இந்த முயற்சியை மேற்கொண்டார். ஆனால் நாடகம் நடைபெறும் பொழுதே அது நடத்தப்பட்ட விதம் குறித்து கலகம் செய்ததற்காக ஜெனே வெளியேற்றப் பட்டார். ஜெனே வாதிட்டார்: ”என் நாடகம் உன்னதப் பரிமாணங்கள் கொண்ட ஒரு விபச்சார விடுதியில் அமைக்கப்பட்டிருந்தது. ”பீட்டர் ஸாடெக் கேவலமான பரிமாணம் கொண்ட ஒரு விபச்சார விடுதியை மேடையில் நிறுத்தியிருக்கிறார்”. சில நாட்கள் கழித்து, லண்டனில் இருந்து வெளியான New Statesman பத்திரிகையில் (4 மே 1957) சிறந்த விவாதம் ஒன்றை முன் வைத்ததோடு மட்டுமின்றி Pater Zadek,, ஜெனேவின் மிகச் சரியான கனவாக இருந்த The Balconyநாடகத்தை நடிப்பின் வெளிப்பாடாய் மாற்றிய செயல்பாட்டில் சமரசம் நடந்துவிட்டது. இதை ஜெனேவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை என்றார் Pater Zadek..                          மேலும் மிக அழகிய திருஆலயத்தில் நடத்தப்பெறும் கூட்டுப் பிரார்த்தனையின் சிறப்பமைதியுடன் தன் நாடகம் நடத்தப்பட்  டிருக்கவேண்டும் என்று ஜெனே அபிப்ராயப்பட்டார்.

பொய்மைகளின் மாளிகையான இர்மாவின் விபச்சார விடுதிக்கு வருகை தரும் மனிதர்கள் தங்களின் மிக அத்யந்த, ரகசிய பகல்கனவுகளில் திளைக்கலாம். ஒருவர் நீதிபதியாக மாறி தன்முன் நிற்கும் பெண் குற்றவாளிக்கு தண்டனை வழங்கலாம். தொழுநோயாளி ஒருவனை கன்னிமேரி நேரில் தோன்றி அற்புத குணமளிக்கலாம். இதற்கான உடைகளை, ஒப்பனைகளை விடுதியின் தலைவி இர்மா வைத்திருக்கிறாள். The Maids நாடகத்தைப் போலவே The Balconyயும் நாடகத்திற்குள் ஒரு நாடகம். The Balconyயின் சிறப்பு என்னவென்றால் அது ஃபான்டஸியின் உலகைப் பற்றிய ஒரு ஃபான்டஸியின் உலகம். கீழ்ப்படிதலுக்கும் மேலாதிக்கம் செலுத்துவதற்குமான பிரத்யேக் கருவியாக செக்ஸ் இயங்குவதை ஜெனே இதில் சித்தரிக்கிறார்.

1957இல் ஜெனே எழுதிய The Blacks நாடகத்தை 1959ஆம் ஆண்டு தர்ஞ்ங்ழ் இப்ண்ய் என்ற இயக்குநர் மேடையேற்றினார். இதில் பங்கு பெற்ற எல்லா நடிகர்களும் நீக்ரோக்கள் என்ற செய்தி கவனத்திற்குரியது. நிறைய பார்வையாளர்களை இந்த நாடகம் குழப்பிய போதிலும், விமர்சகர்களால் புரிந்து கொள்ள இயலாமல் போனாலும், சிறந்த முறையில் நடிக்கப்பட்டு பல மாதங்கள் வெற்றிகரமாய் நடந்தது. இதில் நீக்ரோக்கள், சமூகத்திலிருந்து விலக்கப்பட்ட அனைத்து சாராருக்குமான படிமமாக இருக்கின்றனர். மற்ற நாடகப்பாத்திரங்களைப் போலவே இவர்களிலும் தண்டனைக் குற்றவாளிகள், சிறைவாசிகள் ஆகியோரைப் பார்க்க முடியும். குற்ற உணர்வையும், பழி தீர்த்தலையும் குறித்த கனவுகளைப் பற்றிய கனவுகளை இவர்கள் காண்பவர்களாகின்றனர். Village மற்றும் virtue ஆகிய இரு பாத்திரங்கள் மாத்திரமே ஜெனேவின் இருண்ட நாடக உலகில் தனித் தன்மை கொண்டவர்கள். தம் விஷச் சூழலில் இருந்து தப்பித்து வெளியேறி, பகற்கனவுகளைத் தாண்டி, உண்மையான மானிட உறவுகளைக் காதல் மூலமாக சிருஷ்டிக்கின்றனர். கவித்துவம் மிகுந்த மொழியை The Blacksநாடகத்தில் ஜெனே கையாள்கிறார்.

1961 ஆம் ஆண்டு உருவான The Screens, அல்ஜீரியப் போர் மீதான ஜெனெவின் கடும் விமர்சனமாக அமைகிறது. இந்த நாடகத்தில் சில அம்சங்களைப் பார்த்தபின் ஜெனே அபத்த நாடக அரங்கினை விட்டு விட்டு அரசியல் யதார்த்த நாடகத்திற்கு மாறி விட்டாரோ என்ற சந்தேகம் எழுவது இயல்பு. The Blacksஇல் சொல்லப்பட்ட விஷயங்களுக்கும், The Screens நாடகத்தில் விவாதத்திற்கு உள்ளாகும் விஷயங்களுக்கும் சில பொதுத்தன்மைகள் காணப்படுகின்றன. நான்கு அடுக்குகளில் அமைந்த திறந்தவெளி அரங்கில் The Screens நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள் இடம் பெறும் இந்த நாடகத்தை நிர்வாகம் செய்வது சுலபமாக இருக்கவில்லை. 1964 இல் Screens  நாடகத்திற்காக தயார்ப்படுத்த வேண்டுமென்ற பிரதான நோக்கத்துடன் தொடங்கப்பட்ட Peter Brook  இன் Theature of Cruelty, ஜெனேவின் நாடகத்தில் முதல் 12 காட்சிகளை மட்டுமே நிகழ்த்த முடிந்தது.

பொதுவாகச் சொல்வதானால் ஜெனேவின் எதிர்ப்புகளும், கலகமும் சடங்கியல்பானவை. இந்த சடங்கு என்பது இச்சை பூர்த்திக்கானது (Wish-fulfilment). எனவே மனோவியல் உண்மைகளைக் கொண்டதாக இருக்கின்றன. ஜெனேவின் படைப்புகள், நாடகத்திற்கு எழுத வந்த போது தன் நாவல்களில் விஷச் சூழல்கள் போலச் சுற்றிச் சூழ்ந்த பகற்கனவுகளில் இருந்து அவரால் வெளிவர முடிந்தது. இவை சமூகத்தினால் சிக்கி வைக்கப்பட்ட தனிமனிதர்களைப் பற்றிப் பேசுகின்றன. இவர்கள் தமக்கான அர்த்தங்களை சடங்குகள் மற்றும் புராணிகம் வழியாகக் கண்டுபிடிக்க முயன்று தோல்வியடைகின்றனர் The Balconyயில் வரும் புரட்சிக்காரர்களைப் போலவே.

ஜெனேயின் அரசியல் முக்கியத்துவத்தை Philp Thodyமட்டுமே சுட்டிகாட்டியிருக்கிறார். இறுதி இரண்டு நாடகங்களும் இனப் பிரச்னையையும், பிரான்சுக்கு எதிரான அல்ஜீரியாவின் துன்பப் போராட்டங்களையும் காட்டுகின்றன. அரசியல் ரீதியான பார்வையிலும் தோல்விக் கண்ணோட்டமே ஜெனேவுக்கு இருந்தாலும் ஒரு சமுதாயம் எங்ஙனம் தன்னை உருவாக்கிக் கொள்கிறது என்பதை நம்மால் கவனிக்க முடியும். மனித அனுபவங்களின் முக்கியத்துவத்தையும் ஜெனே மறுப்பதில்லை. மாறாக அவற்றுக்குப் புதிய பரிமாணங்களில் அர்த்தங்களைத் தரத் தேடுகிறார். ஆசாரமற்ற உலகு யதேச்சையானது. அர்த்தம் விளங்க சாத்தியம் தராத உலகம் ஆழம் காண முடியாததாய் இருக்கிறது.ஆனால் இவ்விரு உலகங்களும் இணையும் இடம் கவிதை பிறக்குமிடம். ஜெனேவின் ஒரு போக்கு வெளிப்புறத்திலிருந்த தினசரி வாழ்வினைப் பார்க்கிறது. இன்னொரு போக்கு முழுமையான பொய்த் தோற்றத்தை சிருஷ்டிக்க யத்தனிக்கிறது. இவ்விரு போக்குகளின் மோதலில் அனாசார உலகின் (Profane) தொடர்பு அறுந்து போய்விடுகிறது.

ஆரம்ப நாடகங்கள் இரண்டும் அவற்றின் கச்சிதத் தன்மை மூலம் சார்த்தரின் Huis clos ஐ நினைவூட்டுகின்றன. பின் கட்ட நாடகங்கள் உத்திமுறை காரணமாகவும், திறந்த வெளியை நோக்கிச் செல்வதாலும், Committedஆக இருப்பதாலும் பெர்டோல்ட் பிரெக்ட் தன்மையான காவியங்களைப் போலிருக்கின்றன. தன்னை மீறியே ஜெனே ஒரு Committed கவிஞராக இருக்கிறார். காரணம் ஜெனேவின் படைப்புச் செயலுக்கும், பார்வையாளர்களின் செயல்பாடுகளுக்கும் முரண்கள் இருக்கின்றன. ஜெனே தனது நாயகர்களை அவர்களின் சமூகப் பொருந்து சூழல்களில் இருந்து பிரித்து எடுத்து Negative heroகளாகக் காண்பித்தாலும், பார்வையாளர்கள், இந்த நாயகர்கள் எந்தச் சமூகச் சூழலில் இருந்து வந்தனரோ அங்கே அவர்களைப் பொருத்தி, Positive hero க்களாக விளக்கிக் கொள்கின்றனர். ஜெனேவின் இரட்டைநிலை இது தான்: சோஷலிஸ்ட் நாடக அரங்கினைச் சிருஷ்டிக்க மறுப்பதன் மூலம் negative revolt ஒன்றை உருவாக்குகிறார். இந்த negative revoltசமுக பூர்வமாகவே விளக்கம் பெற முடியும். இன்றைய பார்வையிலிருந்து பார்க்கும் போது கடைசி மூன்று நாடகங்களும் Antonin Artaud  இன் Theatre of Cruelty பற்றிய கோட்பாடுகளை ஏற்று, ப்ரெக்டின் Theatre of Provocationஐ ஸ்வீகரித்துக் கொண்டு, கவனம் சிதைக்கும் Theatre of Hatred ஆக மாறுகின்றன.

Trial of a Young Poet-ஜோசப் ப்ராட்ஸ்கி மீதான விசாரணை

joseph-brodskyஜோசப் ப்ராட்ஸ்கி (1940-1996)

“மௌனத்தின் முகத்தில் வீசப்பட்ட ஒரு பேச்சே வாழ்க்கை”  என்று எழுதிய ஜோசப் ப்ராட்ஸ்கிக்கு ஸ்வீடிஷ் அகெடெமி நோபல் இலக்கிய விருதை 1987ஆம் ஆண்டு வழங்கி கௌரவப்படுத்தியது. பிரெஞ்சு நாவலாசிரியரான ஆல்பர் காம்யூவுக்கு அடுத்து மிக இளைய வயதில் இப்பரிசினைப் பெற்றவர் ப்ராட்ஸ்கிதான். பதினைந்தாம் வயதில் பள்ளிப் படிப்பை விட்டு நின்று விட்ட ப்ராட்ஸ்கி தனக்குத் தானே மொழிஙூஇலக்கியக் கல்வியை போதித்துக் கொண்டார். எல்லா அம்சங்களிலும் அவர் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட மனிதர் ஆவார். தந்தையின் பெயர் அலெக்ஸாண்டர் ப்ராட்ஸ்கி. தாயாரின் பெயர் மரியா வோல்பொர்ட். அலெக்ஸாண்டர் ப்ராட்ஸ்கி பத்திரிக்கை புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். 1940ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள லெனின்கிராடில் அவரது பெற்றோருக்கு ஒரே மகனாகப் பிறந்த ப்ராட்ஸ்கி,  பாரம்பரிய யூதக் குடும்பத்தை சேர்ந்தவர்.

ஒரு இளம் கவிஞன் மீதான விசாரணை

லெனின்கிராட் பெருநகரின் தெர்ஷின்ஸ்கி மாவட்ட நீதி மன்றத்தின் அமர்வு. ஜோசப் ப்ராட்ஸ்கி மீதான முதல் விசாரணை. பிப்ரவரி 18, 1964.

தலைமை நீதிபதி திருமதி சாவ்லா

நீதிபதி :           உங்களுடைய தொழில் எது?

ப்ராட்ஸ்கி       :நான் கவிதைகள் எழுதுகிறேன். நான்  மொழிபெயர்க்கிறேன். நான் கருதுவது-

நீதிபதி :           நீங்கள் ”கருதுவதை”ப் பற்றிக் கவலைப்பட   வேண்டாம். நீதிமன்றத்தைப் பாருங்கள். நீதிமன்றத்திற்குத் தெளிவான பதில்  சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு முறையான வேலை இருக்கிறதா?.

ப்ராட்ஸ்கி       :அதை ஒரு முறையான வேலை என்று நான் கருதுகிறேன்.

நீதிபதி             : பதிலைத் தெளிவாகச் சொல்லுங்கள்.

ப்ராட்ஸ்கி       :நான் கவிதைகள் எழுதினேன். அவை அச்சிடப்படும் என்று நினைத்தேன்.    நான் என்ன கருதுகிறேன் என்றால்…..

நீதிபதி             :நீங்கள் என்ன ”கருதுகிறீர்கள்” என்பது பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை.   நீங்கள் ஏன் வேலை செய்யவில்லை   என்பதற்குப் பதில் சொல்லுங்கள்.

ப்ராட்ஸ்கி       :நான் வேலை செய்யத்தான் செய்தேன். நான் கவிதைகள் எழுதினேன்.

நீதிபதி :           அது எங்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. நீங்கள் எந்த நிறுவனத்துடன் தொடர்பு    கொண்டிருந்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

ப்ராட்ஸ்கி       :ஒரு வெளியீட்டு நிறுவனத்துடன்  எனக்கு    ஒப்பந்தங்கள் இருந்தன.

நீதிபதி             :அப்படியானால் பதில் சொல்லுங்கள்.   உங்கள் தினசரி வாழ்க்கைக்குத்  தேவையான ஒப்பந்தங்கள் இருந்தனவா? அவற்றுக்கான தொகைகளுடன்,   தேதிகளுடன் எங்களுக்கு ஒரு பட்டியல் கொடுங்கள்.

ப்ராட்ஸ்கி       : எனக்கு சரியாக நினைவில்லை. எல்லா  ஒப்பந்தங்களும் என் வழக்கறிஞரிடம்   உள்ளன.

நீதிபதி             : நான் கேட்பது உங்களை.

ப்ராட்ஸ்கி       : மாஸ்கோவில், என் மொழி பெயர்ப்புக்களைக் கொண்ட இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன (பெயர்களை கூறுகிறார்.)

நீதிபதி              : எவ்வளவு காலமாக நீங்கள் வேலை பார்க்கிறீர்கள்?

ப்ராட்ஸ்கி       : ஏறத்தாழ. . .

நீதிபதி             :உங்களின் ”ஏறத்தாழ” பற்றி எங்களுக்கு  கவலையில்லை.

ப்ராட்ஸ்கி       :ஐந்து வருடங்கள்.

நீதிபதி             :எங்கே நீங்கள் வேலை செய்தீர்கள்?

ப்ராட்ஸ்கி       :ஒரு தொழிற்சாலையில், புவியியல் ஆய்வுப்   பயணங்களில். . .

நீதிபதி :           தொழிற்சாலையில் எவ்வளவு காலமாக வேலை செய்தீர்கள்?

ப்ராட்ஸ்கி       :ஒரு வருடம்.

நீதிபதி             :என்னவாக?

ப்ராட்ஸ்கி       :ஒரு மில்லிங்-மிஷினிஸ்ட்டாக.

நீதிபதி             :உங்கள் உண்மையான தொழில் எது?

ப்ராட்ஸ்கி       :நான்ஒரு கவிஞன். மேலும் கவிதைகளின் மொழிபெயர்ப்பாளர்.

நீதிபதி             :யார் உங்களை ஒரு கவிஞராக அங்கீகாரம் செய்தது? கவிஞர்களுக்கு மத்தியில்  உங்களுக்கு ஒரு இடம் அளித்தது யார்?.

ப்ராட்ஸ்கி       :யாருமில்லை. மேலும் இந்த மனித இனத்தில் எனக்கொரு இடமளித்தது யார்?

நீதிபதி             :அதை நீங்கள் படித்தீர்களா?

ப்ராட்ஸ்கி       :எதை?

நீதிபதி             :ஒரு கவிஞனாக இருப்பதை. மனிதர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் ஒரு பல்கலைக் கழகத்திற்கு நீங்கள் செல்ல முயற்சிக்கவில்லை.    எங்கே             அவர்களுக்கு சொல்லித் தரப்படுகிறதோ  அங்கே. . . ?

ப்ராட்ஸ்கி       :நான் நினைக்கவில்லை. . . அதைப்    பயிற்சியினால் செய்ய முடியும் என்று நான்   நினைக்கவில்லை.

நீதிபதி             :பின்னர் வேறு எதனால்?

ப்ராட்ஸ்கி       :நான் நினைத்தேன். . . கடவுளால். . .

நீதிபதி             :நீதிமன்றத்திடம் உங்களுக்கு ஏதும் விண்ணப்பம் செய்ய வேண்டி உள்ளதா?

ப்ராட்ஸ்கி       : நான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

நீதிபதி             :அது ஒரு கேள்வி, விண்ணப்பம் அல்ல.

ப்ராட்ஸ்கி       :அப்படியானால் நான் செய்து கொள்ள   ஒருவிண்ணப்பமும் இல்லை.

நீதிபதி             :எதிர்த்தரப்பிலிருந்து ஏதும் கேள்விகள்  இருக்கிறதா?.

எதிர்த்தரப்பு

வழக்கறிஞர்    : ஆம், குடிமகன் ப்ராட்ஸ்கி, நீங்கள் சம்பாதிப்பதை உங்கள் குடும்பத்திற்கு கொடுக்கிறீர்களா?

ப்ராட்ஸ்கி       :ஆம்.

எ.த.வ              : சிகிச்சைக்காக எந்த நிறுவனத்திலாவது  நீங்கள் இருந்ததுண்டா?

ப்ராட்ஸ்கி       : ஆம். 1963ம் ஆண்டு டிசம்பர் இறுதியிலிருந்து ஜனவரி 5ம் தேதி, இந்த வருடம்    வரை மாஸ்கோவின் காஷ்செங்கோ மருத்துவ விடுதியில்  இருந்திருக்கிறேன்.

எ.த. வழக்கறிஞர்: ஒரே இடத்தில் நீண்ட காலம் வேலை பார்க்க முடியாமல் உங்கள் நோய்   உங்களைத் தடுத்தது என்று நீங்கள்   நினைக்கவில்லையா?

ப்ராட்ஸ்கி       :இருக்கலாம். சாத்தியம். எனக்கு நிஜத்தில் தெரியவில்லை.

எ.த.வ              :நீங்கள் க்யூபா நாட்டுக் கவிஞர்களின் தொகுதி ஒன்றிற்காக கவிதைகளை மொழி     பெயர்த்ததுண்டா?

ப்ராட்ஸ்கி       :ஆம்.

எ.த.வ              : வழக்கின் ஆவணங்களுடன் மொழிபெயர்ப் புத்துறை அலுவலகப் பிரிவின்   தேர்ந்த கருத்துக்களைச் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளின் பட்டியலை, ஒப்பந்தங்களின் பிரதிகளை, குடிமகன் ப்ராட்ஸ்கியின் ஆரோக்கியம் ஒரு நிலையான வேலையில் இருக்க விடாமல் தடுத்ததா என்பதை உறுதி செய்து கொள்ள, அவரை மருத்துவப் பரிசோதனை செய்யுமாறு அவர் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. மேலும், அவரைக் கைது செய்தது சட்டத்துக்குப் புறம்பானது என்று நான் கருதுகிறேன். அவருக்கு ஒரு நிலையான இருப்பிடம் உள்ளது. அவர் எந்த        நேரத்திலும் நீதிமன்றத்தின் முன் தன்னை ஆஜர்படுத்திக் கொள்ள முடியும்.

ஆலோசனைக்காக நீதிமன்றம் கலைந்து பின்னர் பின்வரும் முடிவு வாசிக்கப்படுகிறது.

பின்னரும் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய நீதி மன்ற மனவியல் மருத்துவரின் அறிக்கைக்காக அனுப்பப்பட வேண்டும். ப்ராட்ஸ்கி ஏதாவது மனநோயினால் துன்புறுகிறாரா? இந்நோய் ஒரு தூரப்பிரதேசத்தில் கட்டாய வேலைக்காக ப்ராட்ஸ்கி அனுப்பப்படுவதைத் தடுக்கிறதா? ப்ராட்ஸ்கியின் வேலை ஒப்பந்தங்களை சரி பார்க்க விசாரணை தொடர்பான ஆவணங்களை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும்.

நீதிபதி             :நீங்கள் ஏதும் கேள்விகள் கேட்க வேண்டுமா?

ப்ராட்ஸ்கி       :என்னுடைய ஒரு வேண்டுகோள். என் சிறை அறையில் பேனாவும்    பேப்பர்களும் தரப்பட வேண்டும்.

நீதிபதி             :ராணுவத்தின் முதன்மை அதிகாரிக்கு இந்த வேண்டுதல் விண்ணப்பிக்கப்பட    வேண்டும்.

ப்ராட்ஸ்கி       :நான் கேட்டேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். நான் கேட்பது பேனாவும்   பேப்பர்களும்.

நீதிபதி             :உங்கள் வேண்டுகோளை அவர்களுக்கு அனுப்புகிறேன்.

ப்ராட்ஸ்கி       :நன்றி.

(ஒரு பெரும் கூட்டம் நீதிமன்றத்தைச் சுற்றிக் கூடி இருக்கிறது. அநேகம் பேர் இளைஞர்கள்)

நீதிபதி             :எவ்வளவு ஜனங்கள்! நான்  நினைக்கவில்லை இவ்வளவு பேர் வருவார்கள் என்று.

குரல்                :ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தின் முன் ஒரு  கவிஞன் வருவதில்லையே.

ஜோசப் ப்ராட்ஸ்கிக்கு எதிரான வழக்கின் மீது இரண்டாவது விசாரணை (ஃபோன்டென்கா 22, உழைப்பாளர்கள் கழகக் கட்டிடத்தின் கூடம், மார்ச் 31ம் தேதி 1964)

அறிவிப்பு     :

உழைப்புச் சோம்பேறி பிராட்ஸ்க்கிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள். மனவியல் மருத்துவ அறிக்கையில் காணப்படுவது : ”மன நோயின் குணாம்சங்கள் கவனிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் வேலை செய்யும் திறமை இருக்கிறது. எனவே, நிர்வாக பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்”.

நீதிமன்றத்திடம் என்ன வேண்டுகோள்கள் ப்ராட்ஸ்கி செய்ய வேண்டி இருக்கிறது என்று நீதிபதி கேட்கிறார். குற்றப்பத்திரங்களின் பிரதியை இன்னும் ப்ராட்ஸ்கி பார்க்கவில்லை என்பது தெரிகிறது. விசாரணை ஒத்திப் போடப்பட்டு, குற்றப்பத்திரிக்கையை அவர் படிக்கக்கேட்பதற்காக வெளியில் அழைத்துச் செல்லப்படுகிறார். மீண்டும் உள்ளே அழைத்து வரப்பட்ட பின், பல கவிதைகள் தன்னுடையதல்ல என்று அறிவிக்கிறார். மேலும், 1956ல் அவரின் 16வது வயதில் எழுதப்பட்ட குறிப்பேட்டினை விசாரணை ஆவணங்களுடன் சேர்க்க வேண்டாமென்று வேண்டுகிறார். குறிப்பேடு அகற்றப்படவில்லை. நீதிபதி, ப்ராட்ஸ்கி ஏன் 1956ம் ஆண்டிலிருந்து பணிபுரியும் இடங்களை 13முறை மாற்றினார் என்றும், இந்த இடைக் காலங்களில் ஏன் வேலை செய்யவில்லை என்றும் கேட்கிறார்.

சொரோகின்    :(அரசு வழக்கறிஞர்) நீங்கள் சம்பாதிக்கும்  பணத்தில் வாழ முடியுமா?

ப்ராட்ஸ்கி       :முடியும். ஏன் என்றால், நான் சிறையில் இருந்தபோது ஒவ்வொரு நாளும்  எனக்கு      40 கோப்பெக்குகள் செலவழிக்கப் பட்டதாகக்கூறும் அறிவிப்பில் கையெழுத் திட்டிருக்கிறேன். மேலும் நான் ஒரு         நாளைக்கு 40 கோப்பெக்குகளுக்கு     அதிகமாக சம்பாதித்திருக்கிறேன்.

சொரோகின்    :உங்களுக்குக் காலணிகளும், உடைகளும் தேவைப்படாதா?

ப்ராட்ஸ்கி       :என்னிடம் ஒரு பழைய சூட் இருக்கிறது. ஒரு வகையான சூட். எனக்கு இரண்டாவது   தேவையில்லை.

எ.த.வ.             :துறையின் வல்லுநர்கள் உங்கள்  கவிதைகளின் ஏற்பினைத் தெரிவித்தார்கள்.

ப்ராட்ஸ்கி       :ஆம். For the First Time in the Russian Language என்ற இதழில் அச்சாகி உள்ளது. போலிஷ்  மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன்.

நீதிபதி             : (எ.த.வ.ரிடம்) அவர் என்ன உருப்படியான   வேலை செய்திருக்கிறார் என்பதை கேட்க   வேண்டிய நீங்கள் அவரின் கவிதை வாசிப்புகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

எ.த.வ.             :அவருடைய மொழிபெயர்ப்புகள் பயனுள்ள வேலைதான்.

நீதிபதி             :ப்ராட்ஸ்கி, வேலை மாற்றங்களின் இடைவெளிக் காலங்களில் நீங்கள் ஏன்  உழைக்கவில்லை என்பதை நீதிமன்றத்துக்கு விளக்கினால் நல்லது.

ப்ராட்ஸ்கி       :நான் கவிதைகள் எழுதினேன். நான்  உழைக்கத்தான் செய்தேன்.

நீதிபதி             :ஆனால் அதே நேரத்தில் நீங்கள்  உழைக்கவும் செய்திருக்கலாம்.

ப்ராட்ஸ்கி       :நான் வேலை செய்தேன். நான் கவிதைகள்   எழுதினேன்.

நீதிபதி             :ஆனால் சிலர் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டே கவிதைகள்    எழுதியிருக்கிறார்கள்.அதைச்     செய்வதிலிருந்து உங்களை எது தடுத்தது.

ப்ராட்ஸ்கி       :ஆனால் மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். அவர்களின்   ரோமங்களின் நிறம், முகங்களின்  வெளிப்பாடுகள் கூட. . .

நீதிபதி             :அது உங்கள் கண்டுபிடிப்பல்ல. எல்லோருக்கும் அது தெரியும்.  கம்யூனிசத் திற்கான முன்னோக்கிய பயணத்தில் உங்கள் பங்கினை எவ்வாறு மதிப்பீடு செய்வீர்கள் என்பதை நீங்கள் விளக்கினால் நல்லது.

ப்ராட்ஸ்கி       :கம்யூனிசத்தின் கட்டுமானம்- அது வேலை   மேஜைக்கு எதிரில் நிற்பது மட்டுமோ அல்லது மண்ணை உழவு செய்வது மட்டுமோ அல்ல. அது அறிவு ரீதியான    வேலைகயையும் அர்த்தப்படுத்துகிறது-

நீதிபதி             :வார்த்தைகளின் உரத்த தன்மைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எதிர் காலத்தில் நீங்கள் வேலை செய்யும் முறையை எவ்வாறு ஒழுங்கு       படுத்திக்கொள்ள எண்ணியிருக்கிறீர்கள் என்பதை எங்களிடம் சொல்லுங்கள்.

ப்ராட்ஸ்கி       :எழுதவும், கவிதைகளை மொழி பெயர்க்கவும் நான் விரும்பினேன். ஆனால் அது ஒரு பொது நியதியை முரண்படுத்துமானால் நான் ஒரு நிலையான வேலையை ஏற்றுக்கொண்டு அதற்கு அப்பாற்பட்டும் கவிதைகள் எழுதுவதாக இருக்கிறேன்.

நீதிபதி             :நம் நாட்டில் எல்லோரும் உழைக்கிறார்கள்.

டியாக்லி          :இவ்வளவு காலமாக   எப்படிஉங்களால் சோம்பித் திரிய முடிந்தது?.

ப்ராட்ஸ்கி       :நீங்கள் என் உழைப்பை, உழைப்பாக பார்க்கவில்லை-

நீதிபதி VECHERNINY LENINGRAD என்ற இதழில் வெளியாகியுள்ள A Literary Parasite  என்ற கட்டுரையை  ப்ராட்ஸ்கியிடம் நீட்டுகிறார் அது ப்ராட்ஸ்கியைப் பற்றியது. கட்டுரை ஆசிரியரான Lerner பொய்   சொல்வதாக அறிவிக்கிறார் ப்ராட்ஸ்கி.ப்ராட்ஸ்கியின் வயது தவறாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. கவிதைகள் அவருடையவை அல்ல. அவரின் நண்பர்கள் எனக் கருதப்படுபவர்கள் அவருக்கு அநேகமாக அறிமுகமற்றவர்கள், அல்லது பார்த்தே இருக்காதவர்கள்.பல சாட்சிகள் அழைக்கப் படுகிறார்கள். இலக்கிய சிருஷ்டியின் வேறுபட்ட அம்சங்களில், குறிப்பாக கவிதைத் துறையிலும்,மொழிபெயர்ப்பிலும் அவர்கள் வல்லுநர்கள். எல்லோரும் ப்ராட்ஸ்கியின் திறன் பற்றியும் உயர்வாகப் பேசுகிறார்கள்.

சொரோகின்    :  (அரசாங்க வழக்கறிஞர்) நமது மாபெரும்  தேசம் கம்யூனிசத்தைக் கட்டும் பணியில் இருக்கிறது. சோவியத் மனிதனுக்குள் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு குணாம்சம் வளர்ந்து வருகிறது. சமுதாய ரீதியான பயன்பாடுள்ள வேலையில் மகிழ்ச்சி அடைதல்.எந்த சோம்பலும் வளராத சமுதாயம். ப்ராட்ஸ்கிக்கும் நாட்டுப் பற்றுக்கும் சம்மந்தமில்லை. அவர் ஒரு மிக முக்கியமான கொள்கையை மறந்து விட்டிருக்கிறார். ஒருவர் உழைக்க வில்லை என்றால் அவருக்கு உண்ணும் தகுதி இல்லை. ஆனால் பல ஆண்டுகளாக ஒரு உழைப்புச் சோம்பேறியின் வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார். 1956இல் அவர் பள்ளியை விட்டு ஒரு தொழிற்சாலையில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது பதினைந்து. அதே வருடத்தில் அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார்  (ப்ராட்ஸ்கி வேலை செய்த இடங்களின் பட்டியலை மீண்டும் வாசிக்கிறார். தொடர்ச்சியான வேலைகளுக்கு இடையிலான காலத்தை சும்மா இருந்த காலமாக அறிவிக்கிறார்) ஒரு வேலைக்கு ப்ராட்ஸ்கி 37 ரூபிள்கள் மட்டுமே பெற்றதை நாங்கள் சோதித்து கண்டுபிடித்தோம். மாறாக அவர் 150 ரூபிள்கள் வாங்கியதாகச் சொன்னார்.

ப்ராட்ஸ்கி       :அது ஒரு முன்பணம். அது முன்பணம் மட்டுமே! நான் பின்னால் வாங்கிக்கொள்ள  வேண்டியதில் ஒரு பகுதி.

நீதிபதி             :சப்தம் போடாதீர்கள் ப்ராட்ஸ்கி.

சொரோகின்    : ப்ராட்ஸ்கி வேலை செய்த இடங்களில் தன் ஒழுங்கின்மையாலும் வேலை மீதான வெறுப்பினாலும் பலரை அதிர்ச்சி அடையச்     செய்தார் Vecherniny Leningradஇதழில் வெளிவந்த கட்டுரை நல்ல வரவேற்பினைப் பெற்றது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நிறைய கடிதங்கள் இளைஞர்களிடமிருந்து வந்திருந்தன. (கடிதங்களைப் படிக்கிறார்) ப்ராட்ஸ்கியின் நடத்தையை வன்மையாய்   அவர்கள் கண்டித்தனர். லெனின் கிராடில் அவருக்கு எந்த இடமும் இல்லை யென்றும் அவர் கண்டிப்பாகத் தண்டிக்கப் பட வேண்டும் என்றும் இளம் சமுதாயம் கருதுகிறது, மனசாட்சி பற்றியும், உழைப்பு பற்றியும் எந்தப் புரிந்துகொள்ளலும் இல்லாதவராக இருக்கிறார். எல்லோருமே ராணுவத்தில் பணிபுரிவதை ஒரு சந்தோஷமாகக் கருதுகிறார்கள். ஆனால் ப்ராட்ஸ்கி இதைத் தவிர்த்திருக்கிறார். ப்ராட்ஸ்கியின் தந்தை அவரை, வெளி நோயாளிகளின் மருத்துவப் பிரிவுக்கு சோதனைக்கு அனுப்பினார். ப்ராட்ஸ்கி அங்கிருந்து பெற்ற சான்றிதழை ஒரு எளிதில் நம்பிவிடும் ராணுவக் கமிஷன் ஏற்றுக் கொண்டது. ராணுவக் கமிசராட்டின் முன் ஆஜர்ப்படுத்திக்கொள்வதற்கு முன்பு தன் நண்பரான ஷக்மதோவுக்கு அவர் எழுதினார் ‘I am about to keep a date with the Defence Committee, your table will be a reliable refuge for my iambics’. ஒரு சைத்தானின் சிரிப்புடன் ”உழைப்பு” என்ற வார்த்தையை வரவேற்ற நண்பர்களுடன் கூட்டமாக இருந்தார். மற்றும் அவர்களின் ”தலைவரான” யுமான்ஸ்கியின் பேச்சை பயபக்தியுடன் கேட்டார். உழைப்பின் மீது வெறுப்பாலும் ப்ராட்ஸ்கி அவரின் கூட்டாளி ப்ராட்ஸ்கி ஒரு கவிஞனல்ல, ஆனால் சிறுபிள்ளைத்தனமான செய்யுள்கள் எழுதும் ஒரு மனிதன். நமது நாட்டில் மனிதன் உழைக்க வேண்டும் என்பதையும் மதிப்பீடுகள் உருவாக்க வேண்டும் என்பதையும் அவர் மறந்துவிட்டார். நம் வீரமிக்க நகரத்திலிருந்து அவரை வெளியேற்றம் செய்யவேண்டும். அவர் ஒரு உழைப்புச் சோம்பேறி. மரியாதை தெரியாதவர்,   ஒரு திறமையான ஏமாற்றுக்காரர். ஆன்மீகமாகவும் கறைபடிந்த ஒரு மனிதர்.  அவர் தன் கவிதைகளில் எழுதியிருக்கிறார். ”நான் ஒரு அந்நியத் தாய்நாட்டினை விரும்புகிறேன்”. பல காலங்களாக நான் இந்த சிவப்பு எல்லையைத் தாண்டிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். சிவப்பு முடியுடைய என் தலையில் சிந்தனைகள் முதிர்கின்றன…” மேலும் அவர் எழுதினார் ‘An Old Greedy guts framed by a wreath of fir-cones’.’ அவர் மார்க்சைப் பற்றிக் குறிப்பிட்டது’  ‘The Town Hall in Stockholm inspires more respect in me than the Kremlin in Prague…’ ஒரு கடிதத்தில் அவர் எழுதினார். ”நான் மாஸ்கோ மீது காறித்துப்ப விரும்புகிறேன்”. ப்ராட்ஸ்கிக்கும் அவருக்கு ஆதரவளிப்பவர்களுக்கும் முன் சொன்னதே தகுதியாகும். எதிர்த்தரப்பு வழக்கறிஞரின் இறுதியான வாத சாராம்சங்களின் ஆவணங்கள் தொலைந்திருக்கின்றன. அதன் முடிவுகளாவன: ப்ராட்ஸ்கியின் குற்றம் நிரூபணம் செய்யப்படவில்லை. ப்ராட்ஸ்கி ஒரு உழைப்புச் சோம்பேறி அல்ல. எனவே, ”நிர்வாக முறைகளின் தூண்டுதல்” அவருக்குப் பொருந்தாது. மே மாதம் 4ம் தேதிய ஆணையின் முக்கியத்துவம் அதிகம். நிஜமான ஒட்டுண்ணிகளையும் உழைப்புச் சோம்பேறிகளையும் நகரத் திலிருந்து வெளியேற்ற இது ஒரு ஆயுதமாகும். இதன் ஆதாரபூர்வமற்ற பயன்பாடு ஆணையின் நோக்கத்திற்குக் கேடு விளைவிக்கும். 1963ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதிய சோவியத் யூனியனின் தலைமை நீதிமன்றத்தின் முடிவு, சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் மீது விமர்சனப் பார்வை கொள்வதைக் கடமையாக்குகிறது. உழைப்பவர்களுக்கு எதிரான விசாரணை முடிவுகளை அனுமதிக்கக் கூடாதென்றும், குற்றம் சாட்டப்பட்டவர் தன் வழக்கின் ஆவணங்களைத் தெரிந்து கொள்வ தற்கான உரிமையை மதிக்க வேண்டுமென்றும், மேலும் அவர்களின் குற்றமின்மையின் ஆதாரத்தைச் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் கூறுகிறது. ப்ராட்ஸ்கி சட்டத்திற்குப் புறம்பாக பெப்ருவரி 1964ம் ஆண்டு 13ம் தேதியிலிருந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் பல ஆதாரங்களை சமர்ப்பிக்கும் சாத்தியத்தை இழந்தார். இருப்பினும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் மட்டுமே ப்ராட்ஸ்கி ஒரு உழைப்புச் சோம்பேறி அல்ல என முடிவுக்கு வரப் போதுமானவை.

(நீதி மன்றம் ஆலோசனைக்காகக் கலைந்தது)

(ஜோசப் ப்ராட்ஸ்கிக்கு 5வருட கட்டாய உழைப்பு தண்டனையாக வழங்கப்பட்டது)

(Rebels என்ற தலைப்பில் 1969ஆம் ஆண்டு  Routledge & Kegan Paul நிறுவனம் வெளியிட்ட புத்தகத்தில் இவ்விசாரணை இடம் பெறுகிறது)

பால் வெலரி-Paul Valery:introduced by Brammarajan

பால் வெலரி (1871-1945)*

கவிதையை விட கவிதை உருவாகும் முறை பற்றிய ஓய்வற்ற சிந்தனைக்காகவும் மனம் இயங்கும் முறைக்காகவும் அதிகம் பேசப்பட்டிருக்கின்றன பால் வெலரியின் கருத்துக்கள். வெனிஸ் மற்றும் கார்சிகப் பாரம்பரியத்தல் வந்த குடும்பம் ஒன்றில் பிறந்தார் வெலரி. Mantpelliers உள்ள Lyceeயில் படித்தார். கலை மற்றும் பண்டை நாகரிகங்களில் ஈடுபாடு கொண்டார். தனது பதினேழாவது வயதில் சட்டம் பயிலச் சென்றார். ஆனால் பிரதான ஈடுபாடுகளாக  அவருக்கு இருந்தவை கணிதம், இயற்பியல் மற்றும் இசை. முதன் முதலில் Mallarme வை 1891ஆம் ஆண்டு பாரிஸில் சந்தித்த போது தீவிரமாய் பாதிக்கப்பட்டார். 1920 ஆம் ஆண்டு வரை தொகுக்கப்படாமல் இருந்த இவர் கவிதைகள் பல ஏடுகளில் வெளிவந்தவை. 1892 ஆம் ஆண்டு ஜெனோவாவில் வசிக்கும் போது மல்லார்மேவைப் பின்பற்றி எழுத முயன்று ஏற்பட்ட மனக்குலைவில் கவிதையைக் கைவிட்டார். அடுத்து இருபது வருடங்களை மிகக் கடுமையான அறிவார்த்தத் தேடல்களில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார். 1921 ஆம் ஆண்டு நாவலாசிரியர் ஆய்க்ழ்ங் ஏண்க்ங், வெலரியின் கவிதைகளை மறுபிரசுரம் செய்ய அனுமதி கேட்டபொழுது கவிதைத் துறைக்குத் திரும்பும் உத்வேகம் மீண்டும் கிடைத்து வெலரிக்கு. 1917இல் La Jeune Parqueஎன்ற நீண்ட மிகக் கடினமான கவிதையை வெளியிட்டு மிகக் குறுகிய காலத்தில் பிரபலமானார். 1922இல் Charmes  கவிதைத் தொகுதியை வெளியிட்ட பொழுது தன் இலக்கிய ஸ்தானத்தை ஸ்திரமாக்கிக் கொண்டார். தன் இறுதி வாழ்வின் இருபத்தைந்து வருட காலத்தை உரைநடை, உரைநடைக் கவிதைகள் எழுதுவதிலும், மறைவிக்குப் பின் வெளிவந்த Note Book ஐ எழுதுவதிலும் செலவிட்டார். பிரெஞ்சு அகாடெமிக்கு 1927 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937ஆம் ஆண்டு College of France இன் chair of poetry பதவியில் அமர்த்தப்பட்டார். இதற்குள் ஐரோப்பிய இலக்கியவாதிகளில் மிகவும் மதிக்கப்பட்ட ஒருவராக ஆகியிருந்தார். அவர் எழுத்துக்கள் சமகால பிரெஞ்சு அறிவுலக வாழ்க்கையின் மீது பாதிப்பு செலுத்தின. மிகத்தகுதியாகவும், பொருத்த மாகவும் அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவ்விருதைப் பெறாமலேயே 1945ல் வெலரி காலமானார்.

பால் வெலரியின் கவிதைக் கோட்பாடுகள்

கவிதையில் சிந்தனையின் பங்கினைப் பிடிவாதத்துடன் வலியுறுத்திச் சொன்ன நவீன பிரெஞ்சுக் கவிஞர்களில் வெலரி முதன்மையானவர். டி. எஸ். எலியட் வெலரியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்:

” He is perpetually engaged in solving an insoluble puzzle – the puzzle of how poetry gets written” வெலரியின் பிரதான சாதனை எனக் கருதப்படுவது ”கவிஞன்” என்ற நபரைப்பற்றி அவர் உருவாக்கிய புதிய சித்திரம்: கவிஞன் ஒரு இலக்கிய விஞ்ஞானி ஒரே சமயத்தில் கனவு காண்பவனாகவும், algebraist ஆகவும் இருப்பவன். தன் கவிதைகளுக்கான காரணங்களையும் சொல்பவன். அவன் தன் கவிதையைத் தற்காப்பவன்.

நவீன கவிதைக் கோட்பாட்டின் மையமான முரண் வெலரியிடம் விளக்கம் பெறுகிறது. வெலரி கவிதையை Versdonnesஎன்றும் Vers Calcules  என்றும் பிரிக்கிறார். Vers donnes க்கு வெலரி அதிகம் சிறப்பளிப்பதில்லை. தானாகக்  கிடைப்பது, அல்லது தரப்படுவது என்று Vers donnes கவிதையைக் குறிப்பிட லாம். Vers Calcules என்பதே கவிஞனின் மெய்யான செயலாக்கம் என்றும், இத்தகைய கவிதைகளையே கவிஞன் உணர்ச்சிபூர்வ மாக ஆராய வேண்டும் என்றும் வெலரி கருதினார். Vers Calcules வகைக் கவிதையை புத்தியின் செயல்பாடு என்பது சரியாக இருக்கும். வெலரி இங்கு தனக்கு நேர்ந்த அனுபவத்தை அழுத்தமாகக் கூறுகிறார். அவருக்கு ஒரு சமயம் இசையின் உந்துதல் உணர்வு கிடைத்தது. இந்த உந்துதல் உணர்வை கலையாக்கும் அல்லது விரிவாக்கும் சக்தியும் திறனும் அப்போது அவருக்கு இருக்கவில்லை. இந்த மாதிரியான ஒரு ”கச்சாப் பொருளை”, அடித்து திருத்தி, எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான பிரதிகள் வழியாக கவிதை உருப் பெறச் செய்யக்கூடிய சக்தி கவிஞனிடம் மாத்திரமே உள்ளது. முடிவற்ற முறைகளில் முழுமையாக்கப்படக்கூடிய, ஆனால் என்றைக்குமே முழுமையடையாத கவிதையையும், அதன் சொற்கள் பொருந்து முறைகளையும் தேடிக்கொண்டே இருப்பது கவிஞன் வேலை என்றார் வெலரி.

இங்கு பிரயோகமாகும் பிரக்ஞைபூர்வமான ”தேர்வு” மற்றும் ”கணக்கிடுதல்” பற்றியும் நாம் கவனமாக இருக்க வேண்டும். தேர்வின் மூலம் (Choice) ”குழப்பமான யதேச்சைத்தன்மை”யை கவிஞன் ”வெளிப்படையான நன்கு வரையறுக்கப்பட்ட யதேச்சைத்தன்மை”யாக மாற்றுகிறான். இதில் ”புத்தி”யின் செயல்பாடு கவிதையை வெறும் கனவு காணுதல் என்னும் வீழ்ச்சி நிலைக்குச் சரிந்து விடாமல் தடுக்கிறது. மேலும் அது கவிதைக்கு சுற்றுச்சுவர் போன்ற பாதுகாப்பளித்து, வேறு தவறான அறிவின் வகைகளிடமிருந்தும் வேறுபடுத்துகிறது.

கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் உருவாக்கும் படைப்புலகம் அதற்குள்ளாகவே முழுமையுற்றதாக முடியும் போது அங்கே Impersnolity உண்டாகிறது. அதாவது சுயத்தின் நசிவு நிலை. கவிதையிலிருந்து, அதை எழுதுகின்ற மனிதன் மறைந்துவிட வேண்டும். இங்கு ஸ்பெயின் நாட்டைச் சோந்த சமூக விமர்சகரும் தத்துவவாதியுமான Ortega Y Gassetவின் “de-humanisation of art” பற்றிய கருத்தாக்கத்தை நினைவுப்படுத்திக் கொள்வது அவசியம். எல்லாவிதமான அழகியல் தூய்மைப்படுத்தல்களும்  ”மனிதமை அற்றநிலை” யில் முடியும் என்றார் ஒர்த்தேகா. கவிதையில் கவிஞனின் தலையீடு இருக்கக் கூடாது. கவிஞனின் சோகத்திற்கு கவிதையில் இடமில்லை.    அப்படிக் கவிதையில் நேரடியாகக் கவிஞன் இடம் பெறுவானால் அது ”மனிதமை”யைக் உள்ளடக்கியதாகி விடும் என்கிறார் வெலரி: “I must declare myself inhuman” என்றும் கூறினார். கவிதைகளை எவ்வளவு சுத்தமாக உருவாக்க முடியுமோ அவ்வாறு செய்த பின் (இதை T.E. Hulme ‘Exact curve of the thing’என்பார்.) அவற்றை எழுதிய கவிதை பற்றிய குறிப்பீடு எதுவும் இல்லாமல் முழுமையான தனிமையில் விட்டுவிட வேண்டும். ஒரு கலைப்படைப்பின் நிரந்தரம் அதன் ஆசிரியன் என்ன நினைத்து உருவாக்கினானோ அதற்கு மாறாக அது இயங்கும் சக்தியில்தான் உள்ளது. ஆசிரியனின் நோக்கத்தைப் புறக்கணித்தல் என்பது வெலரியின் கோட்பாட்டுக்கு மிக மையமானது. மேலும் அக்கலைப் படைப்பு ”விளக்கம் அளித்தலை” (Interpretation) பொறுத்துக் கொண்டாலும், என்றுமே விளக்கத்திற்கு உட்படாததது. ஒரே சமயத்தில் வெலரி விளக்கம் தரும் விமர்சகர்களைக் கண்டனம் செய்வதோ டல்லாமல், கவிஞனின் கவிதை மீதான உரிமைகளையும் மறுக்கிறார். கவிஞன் சொல்வதில்லை. உருவாக்குகிறான். கவிதைக்கு அர்த்தம் என்பது இல்லை. அதற்கான வாழ்வு இருக்கிறது. இந்த இடத்தில் ஆர்க்கிபால்ட் மேக்லீஷ் எழுதிய ”கவிதைக் கலை” என்ற கவிதை நம் நினைவுக்கு வரும். மேக்லீஷ் கவிதை:

ஒரு கவிதை இருக்க வேண்டும்

உணர முடிவதாய்

உருண்டு திரண்ட பழம் போல மௌனமாய்

பேச்சற்று

புராதனப் பதக்கங்கள் கட்டைவிரலுக்குத் தட்டுப்படுவது போல்

பாசி வளர்ந்து படிந்த

கைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்

போல மௌனமாய்

ஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்

பறவைகளின் பறத்தல் போல

நிலா உயர்வதைப் போல்

காலத்தினுள் கவிதை இயக்கமில்லாதிருக்க வேண்டும்

இரவு பின்னலிட்ட மரங்களை குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக நிலா

விடுவிப்பது போல,

ஒரு கவிதை இருக்க வேண்டும்

உணர முடிவதாய்

உருண்டு திரண்ட பழம் போல மௌனமாய்

பேச்சற்று

புராதனப் பதக்கங்கள் கட்டைவிரலுக்குத் தட்டுப்படுவது போல்

பாசி வளர்ந்து படிந்த

கைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்

போல மௌனமாய்

ஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்

பறவைகளின் பறத்தல் போல

நிலா உயர்வதைப் போல்

காலத்தினுள் கவிதை இயக்கமில்லாதிருக்க வேண்டும்

இரவு பின்னலிட்ட மரங்களை குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக நிலா

விடுவிப்பது போல,

பனிக்காலத்து இலைகளின் பின்புறமிருந்து நிலா

ஞாபகம் ஞாபகமாக மனதை விடுவிப்பது போல

ஒரு கவிதை காலத்தினுள் சலனமில்லாதிருக்க வேண்டும்

நிலா உயர்வது போல்

ஒரு கவிதை சமானமாய் இருக்க வேண்டும்

நிஜத்திற்கு இணையாய் அல்ல

எல்லாத்துயரத்திற்கும்

ஒரு வெற்று வாசலைப் போல

மேப்பிள் மர இலையைப் போல

காதலுக்கு

தலைசாயும் புற்கள் மற்றும் கடலுக்கு மேலாக இரண்டு வெளிச்சங்களைப் போல

ஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது

கவிதையாக இருக்க வேண்டும்

கவிதைகளை உரத்து வாசிக்கும்போது அவற்றின் அர்த்தங்களை தவறாக்கிவிடாமல் வாசிக்க முடியுமா என்ற சந்தேகத்தையும் வெலரி எழுப்புகிறார். கவிதைகள் சொற்களை பயன் படுத்துகின்றன. இதன் காரணமாக உண்டாகும் பிரச்சனைகள் 19ஆம் நூற்றாண்டிலிருந்தே கவிதைக் கோட்பாடுகளைப் பின் தொடர்ந்து வருகின்றன. கவிஞன் இன்றொரு புராதன உருவமாகக் காட்சி தருகிறான்- மொழி எந்தெந்த நோக்கங்களுக்கு துல்லியமாகப் பொருந்த வில்லையோ அவற்றுக்கும் கூட பயன்படுத்தியபடி. நவீன காலத்தில் கவிதை தன் வாழ்வை காப்பாற்றிக் கொண்டது சற்று அதிர்ஷ்டவசமான செயல் என்று வெலரி நினைத்தார். வியர்த்தமான உணர்வுகள் மேலோங்கி நிற்கிறபோதும் கவிதை எழுதுவதைத் தொடர்வது பயனுள்ள காரியமே. ஏனெனில் எப்போதாவது ஒரு மனிதன் ஒரு கவிதையின் மதிப்பீடுகளுக்கு  உணர்வுபூர்வமாய் எதிர்வினை தந்து, நவீன உலகம் மறந்து போய்க் கொண்டிருக்கிற இனிமையான நவீன அனுபவ மொன்றில் பங்கேற்கலாம்.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் கவிதைத்துறையில் மொழியைக் கையாள்வது கொஞ்சம் அசாத்தியமான செயலாகத் தோன்றுகிறது. தினசரி வாழ்வின் மொழி என்பது பிரதானமாய் நடைமுறை சார்ந்தது: முடிவற்ற மாறுதலுக்கு உட்பட்டுக் கொண்டே இருக்கிறது. அசுத்தமடைகிறது: இருக்கும் துல்லியத்தையும் இழந்த வண்ணம் இருக்கிறது. எல்லா வேலைகளையும், காதுகளை உறுத்தாத, மிகவும் உறுத்தாத, ”மிகவும் எளிதில் சிதைந்து விடக்கூடிய கவித்துவ பிரபஞ்சத்தை உடைத்துவிடாத”, கவிஞனின் சுயத்தை விட அதீத சுயம் கொண்டதான ஒரு மொழியை உருவாக்க வேண்டும் என்றார் வெலரி. கவிஞனின் மொழிப் பயன்பாட்டை non   usage என்று குறிப்பிட்டார். இங்கு அவரின் பிரபலமான ஒப்புமையைப் பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்கும். கவிதையின் தனித்துவ குணாம்சத்தையும், மதிப்பீட்டையும் அழுத்தமாகக் கூறவே இந்த ஒப்புமையை வெலரி உருவாக்கினார். உரைநடையை நடப்பது என்னும் மனிதச் செயலுக்கு ஒப்பிடலாம். கவிதையை நாட்டியத்திற்கு ஒப்பிடலாம். ஆனால் கவிதைக்கும் உரைநடைக்கும் இடையிலான முழுமுற்றான தொடர்ச்சியின்மை சர்ச்சைக்குரியது. ஆங்கில இலக்கிய உலகிற்கு வெலரியை அறிமுகப்படுத்தக் காரணமாக இருந்த எலியட் இந்த ஒப்புமையை ஏற்கவில்லை. வெலரியைப் பொருத்தவரை உரைநடை ஒரு கருவியைப் போன்றது. தன் செயலில் முடிவு கொண்டது. ஆனால் கவிதை நாட்டியத்தைப் போல தனக்கு வெளியில் எந்தப் பயனையோ, முடிவையோ கொண்டிருப்ப தில்லை. usage என்பதிலிருந்து non-usageக்கு மொழியைக் கொண்டுவரும் முறையை சில சமயங்களில் வெலரி ”இசைமய மாக்கல்” என்று அறிவித்தார். ஆனால்  இந்தக் கோட்பாடு புதியதல்ல. பழைய ரொமாண்டிக்-சிம்பலிஸ்ட் இயக்கக் கவிஞர்கள், கவிதையை இசையைப் போல ஆக்க வேண்டுமென்று கொண்டிருந்த பேராவலையே வெலரி இங்கு தெளிவாக்கி, கூர்மைப்படுத்துவதாகத் தெரிகிறது.

இசையின் கருத்து வெளிப்பாட்டுச் செயலை (discourse)  இசை அல்லாத கருத்து வெளிப்பாட்டுச் செயல்களுடன் குழப்பிக் கொள்ள முடியாது. ஆனால் கவிதையின் மொழி அக்கவிதை எந்த நாட்டில் எழுதப்படுகிறதோ அந்நாட்டின் பொது மொழியுடன் குழம்பிப் போவதற்கு சாத்தியங்கள் ஏராளமாய் உள்ளன. ஆனால் இசையை நம்மால் இயற்கையான சப்தங்களிலிருந்து வேறுபடுத்தி உணர முடியும். வெலரியைப் பொருத்தவரை கவிதைகள் ஓசைமைக்குள் ஒன்றுபட வேண்டும்-புறவயக் குறிப்பீடுகளின் உதவியின்றி. மேலும் இசைக்கலை தவிர, வெலரி கட்டிடக்கலையைப் பார்த்தும் பொறாமை கொண்டார். பார்வைக்குத் தெரிந்தபடி, தேய்மானங்களைச் சரிசெய்துவிட முடியக்கூடிய வடிவங்களாக, காலத்திலிருந்தும் பெருமளவு விடுதலை யடைந்து நின்றது கட்டிடக்கலை.

மல்லார்மே (Mallarmae) வைப் போலவே, விரும்பத்தகுந்த கவிதையின் மிகத் திருப்தியான முத்திரையை நாட்டியத்தில் கண்டார். வெலரி தன் Dialogues நூலில் மீண்டும் மீண்டும் நாட்டியமாடுபவரின் பிரதிமைக்குத் திரும்பினார். ரிச்சர்ட் வேக்னருக்குப் பிற்பட்ட கவிதைக் கோட்பாட்டின் சாரம்சத்தை Dialogues நூலில் காணலாம். நவீன கவிதைக் கோட்பாடுகளுக்கு பாரிஸ் நகரின் நாட்டியக்காரர்கள் பெரிதும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். ஆனால் வெலரி நாட்டியமாடுபவரின் முத்திரை அல்லது சின்னத்தைத் தனக்கு உகந்த வகையில் மாற்றம் செய்து கொண்டார். இரவில் விளக்குகளுடன் நாட்டியமாடும் கலைஞர்களின் புகைப்படங்களின் தொடர் ஒன்றினைத் தன் மன விருப்பப்படி அமைத்தார். அவை பல வெள்ளைக் கோடுகளின் சுழற்சியினால் அமைந்த ஒரு அமைப்பைக் கொண்டிருந்தன. இந்த அமைவு பல நோக்கமற்ற கவிதைச் செயல்களின் அமைவுகளை நினைவூட்டியது.

இயல்பெழுச்சியை(spontaneity)மறுத்து,பிரக்ஞை பூர்வமானதும், திட்டமிட்டுச் செய்யப் படுவதுமான கவிதையாக்கல் முறை பற்றிய கருத்துக்கள் அவரின் ஏனைய சிந்தனைகளைப் போலவே முரண்பாடுகள் மிகுந்து காணப்படுகின்றன. திறன்கவிதை பற்றி (Skilled Verse) வெலரி பின்வருமாறு எழுதினார் :

”ஆழ்ந்த நம்பிக்கையின்மைவாதியின் கலை, நம் எல்லாக் கருத்துருவங்கள் மற்றும் உணர்வுகள் குறித்து அது ஒரு மாபெரும் சுதந்திரத்தை முன்தேவை ஆக்குகிறது. கடவுளர்கள் தம் பெரும் கனிவில் எப்போதாவது ஒரு முதல் வரியை இலவசமாக தருகிறார்கள்: முதலாவதின் ஓசையுடன் ஒருங்கிணைந்து ஒலிக்கும் படியும், இயற்கை கடந்த அவ்வரிக்கு தகுதியில் குறைவில்லாதபடியும் இரண்டாவது வரியை உருவாக்குவது நம் பொறுப்பு. பரிசு எனத் தரப்பட்ட வரியுடன் ஒப்பிடப்படும் அளவுக்கு இரண்டாவது வரி எழுதப்பட, மனம் மற்றும்  அனுபவத்தின் எல்லா சேகரங்களும் அதிகபட்ச மானவையல்ல.”

இந்த மேற்கோள் வரிகளில் தொனிக்கும்  நம்பிக்கையின்மையில் கடடாயம் ஏதுமில்லை. மாறாக, விவாதிப்பதற்கும், அறிவார்த்த மாக்குவதற்கும் சுதந்திரம் இருக்கிறது. இந்த சுதந்திரமும், திறந்த மனமும், கவிதையின் விநோதக் கோரிக்கைகளுக்குத் தேவையாகும் என ஒருமையும் சேர்த்து நமக்கு ஒன்றைத் தெரிவிக்கின்றன. இயல்பெழுச்சி ”மனம் மற்றும் அனுளபவத்தின் எல்லா சேகரங்களும்” என்று குறிப்பிடும் போது வெலரி இயல்பெழுச்சி பற்றி உணர்ந்திருக்க வேண்டும். மேற்கோளின் இந்த வரிகள் “எழுதுவது” writing என்ற செயலின் நனவிலி unconscious அம்சங்களுக்கு மறைமுக பாராட்டுதலாய் அமைகின்றன. இந்த விஷயத்தை மறைமுகமாக வைக்கவேண்டிய அவசியம்? ஒரு சிந்தனையாளன் என்ற வகையிலும், விமர்சகன் என்ற முறையிலும் நனவிலி பற்றி வெலரிக்கு அச்சம் இருந்தது. கவிதையைப் பற்றி வெலரியின் வரையறை:

“a kind of machine for producing the poetic state of mind by means of words.”

(Poetry and Abstract Thought. p. 79)

யந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுபவை. குறிப்பிட்ட வகையில் நிர்மானிக்கப்பட வேண்டுமென்று தயாரிக்கப்படுபவை. எனி னும் வெலரியின் கவிதை மீதான ஈடுபாடு உணர்ச்சி மிக்கது. தர்க்கவியலாளனைப் பற்றியும், கவிஞனைப்பற்றியும் 1939 ஆம் ஆண்டு Oxford Lectrue இல் பேசும் போது, அரூப சிந்தனையும் கவிதையும் ஒத்துபோகக் கூடியவையே என்று வாதிட்டார். ”ஒவ்வொரு மனிதனும் தன்னுடையதைத் தவிர பல வேறு வாழ்வுகளை வாழமுடியாமல் போகும்” என்று தான் நிஜமாக நம்புவதாகவும் கூறினார். வெலரியின் முதல் கட்டக் கவிதைகள் தந்த ”முகமூடிகள்” அவரின் வாழ்வைத்தவிர, பிறர் வாழ்வுகளையும் கற்பனையில் வாழ ஏதுவாக்கின. இதற்கு மேலும், தன் உரைநடை எழுத்துக்களில், தர்க்கக்காரனையும் (Logician)யும் கவிஞனையும் ஒன்றுபடுத்தி விவாதிக்கிறார். அவருக்குள் இருக்கும் தர்க்கக்காரன், அரூப சிந்தனையாளனுடன் சில நேரங்களில் முரண்பாட்டால் இந்த முரண்பாட்டையும் வாழ்க்கைச் சரித்திரத்தை வைத்து புரிந்து கொள்ள முடியும் என்கிறார். இந்த சுயமுரண்பாடுகள், அரூப சிந்தனையாளனும், கவிஞனும் எந்தெந்த இடங்களில் ஒரே மாதிரியாக இருக்கவில்லையோ அந்த இடங்களில் தோன் றுகின்றன. ஆனால் வெலரியின் பிறர் வாழ்வுகள் பற்றிய குறைவான அறிதல் அவரை கலைஞன் மற்றும் அரூப சிந்தனையாளன் என்பதற்கும் அப்பாற்பட்டு செல்ல அனுமதிக்கவில்லை. இந்த அம்சம் அவருடைய எழுத்துக்களை எல்லைப்படுத்துகிறது.

வெலரியின் கவிதையிலும், உரைநடையிலும் பிறர் வாழ்வுகள் பற்றிய அறிதல் எல்லைக் குட்பட்தாயிருந்தது என்று கூறினோம். அவர் Oxford Lecture இல் கூறியதைப் போலவே இதற்கான காரணத்தையும் ”வாழ்க்கைச் சரிதம்” மூலம் கண்டுபிடிக்கலாம். மல்லார்மே இலக்கிய அந்தஸ்தின் உச்சத்தில் இருந்த போது பல இளம் கவிஞர்கள் மீது பாதிப்பு செலுத்தினார். பாரிஸ் நகரில் செவ்வாய் மாலைக்கூட்டங்களில் மல்லார்மேவைப் பார்க்கச் சென்றார் இளம் வெலரி. சிம்பலிசக் கவிஞர்கள் எல்லாருமே பொதுவாகக் கொண்டிருந்த யதார்த்தத்தின் மீதான அதிருப்தியை வெலரியும் அப்போது பகிர்ந்து கொண்டார்.

1892ஆம் ஆண்டு தன் இருபத்து ஒன்றாவது வயதில் வெலரி கவிதை எழுதுவதைக் கைவிட்டார். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது: ”லட்சிய” கவிதையை சிருஷ்டிக்கும் பயணத்தில் மல்லார்மே நெடுந்தொலைவு சென்றுவிட்டார் என வெலரி நம்பினார். வெலரியின் ஆரம்பகாலக் கவிதைகள் புத்தி பூர்வமாய் இல்லாமல், உணர்ச்சியைச் சார்ந்தவையாய் இருந்தது இரண்டாவது காரணம் : கவிதை எழுதுவதைக் கைவிட்ட பிறகு தன் கவனங்களை கருத்துதுருவங்களின் உலகினை ஆராய்வதற்குத் திருப்பினார்.

தத்துவம், கணிதம், இயற்பியல் போன்ற துறைகள் அவரை ஈர்த்தன. இப்படிப்பட்ட ஈடுபாடுகளால் சுமார் 20 வருட காலத்திற்குப் பொது வாழ்விலிருந்தும், கவிதை எழுது வதிலிருந்தும், யதார்த்தத்திலிருந்தும் தன்னை முற்றிலுமாய்த் துண்டித்துக்கொண்டார். எனினும் இந்த காலகட்டம் சிருஷ்டியற்றதெனக் கூறிவிட முடியாது. இந்த காலகட்டத்தில் இரண்டு குறிப்பிடத் தகுந்த உரைநடை நூல்களை வெலரி  எழுதினார். 1894ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Monsieur Testeஎன்ற நூல் ஒன்பது பகுதிகளைக் கொண்டது. M.Teste என்ற பாத்திரத்தை இந்த நூலில் உருவாக்கினார். பங்ள்ற்ங் என்ற பெயர் பிரெஞ்சு வார்த்தையான ”தலை” என்பதிலிருந்து பெறப்படுவது. M.Teste என்ற இந்த மனிதன் சக்தி வாய்ந்த அறிவைக் கொண்டவன். மனித மனம் இயங்கும் விதங்களின் விதிகளை முதன் முதலாகக் கண்டுபிடிக்கிறான். Testeவும் முற்றிலுமாய் தினசரி வாழ்வின் யதார்த்தங்களில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டவன். Testeவை முற்றிலும் வெலரியுடன் ஒப்புமைப்படுத்துவது முடியாதெனினும் கூட, வெலரியின் யதார்த்தத்திலிருந்து விலகல் மற்றும் அறிவுவாத தியானங்கள் போன்றவை பங்ள்ற்ங் வுக்கு அளிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. 1920இல்  வெளியிடப்பட்ட கவிதை ஒன்று இந்தக் காலகட்டத்தின் மனோ நிலையைச் சிறப்பாக விளக்குகிறது.

மகிழ்ச்சிக்குள் கனி கரைகையில்

ஈர்த்து இன்பமாய் மாறும்போது

வாயில் அங்கு அதன் இருத்தல் இல்லாமல் ஆக

சாம்பலும் தூசியுமாய் நான் ஆவேன்

எனும் முன் ருசியை அவ்வாறே அறிகிறேன்

நான் இங்கு

(Le Cimeterie Marin)

Teste என்ற பாத்திரத்திற்கும், அதன் படைப்பாளனுக்கும் வாழ்வின் உணர்ச்சி சார்ந்த பகுதி, யதார்த்தத்தினோடு தொடர்பு, புலன் உணர்வுகளின் உலகுடன் ஆன தொடர்பு போன்றவை என்றென்றைக்குமாக கைவிடப்படவோ, அடக்கப்படவோ முடியாது என்பது தெரிந்தது.

1895ஆம் ஆண்டு எழுதப்பட்ட உரைநடை நூல் Introduction to The Method of Leonardo da Vinci. இந்த நூலுக்கு இருபத்தைந்து வருடங்கள் கழித்து ஒரு முகவுரை எழுதினார். இந்த முன்னுரை கள் அவற்றின் உள்ளார்ந்த தகுதிகளுக்கு மேல், அவை பால் வெலரியின் முறைமைகளுக்கே (methods) முன்னுரைகளாக  அமைகின்றன. இவை இயங்கு முறை மற்றும் அறிவுபூர்வமான செயல்பாடு ஆகியவை பற்றிய பிரத்யேகமான முன்மாதிரிக ளை ஸ்தாபிக்கின்றன. இவற்றை வெற்றிகரமாக அடைதலின் சாத்தியமின்மை பற்றிய தொடச்சியான பிரக்ஞை இருந்த  போதிலும் கவிஞன் எப்போதும் அதற்கான அதீத முயற்சிகளைச் செய்து கொண்டேயிருப்பான்.

தன் இருபது வருட கவித்துவ மௌன காலத்தில் மனக்குலை வும், தீர்மானமின்மைகளும் இருந்தன  என்பதைப் பின்னர் வெலரி ஒப்புக் கொண்டார். இப்படிப்பட்ட மனோ நிலைகள், அவர் மேற்கொண்டது போன்ற அதீத அறிவார்த்த நிலைப்பாட்டின் விளைவுகளேயாகும். நம்பிக்கையின்மையும் கூடவே தொடர்ந்து வந்திருக்கிறது. எனினும் 1921 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாலாசிரியர் Andre Gide, வெலரி தன் கவிதைகளைத்  தொகுத்து வெளியிட வேண்டும் என்று வேண்டிய பிறகே கவிதைகளைத் தொகுக்க வேண்டும் என்ற  உணர்வு வெலரிக்கு ஏற்பட்டது. மேலும் இந்த முடிவு அவருக்கு வேறு ஒரு கண்டுபிடிப்பையும் தந்தது. அவருக்கு மிக முதன்மையாய்த் தோன்றிய இரண்டு செயல்பாடுகளான கவிதையும் அரூப சிந்தனையும் அவர் முன்பு எண்ணியிருந்ததைவிடத் தற்போது மாறுபாடுகள் குறைந்து தெரிந்தன.

1880களில் மல்லார்மே இருந்ததுபோல அல்லாமல், வெலரி யதார்த்ததிற்குத் திரும்பினார். தனக்குள்ளாகவே இயங்குவதற்கு முடுக்கி விடப்பட்ட மனம் அப்படியே இருக்க முடியாது என் பதை உணர்ந்து கொண்ட வெலரி, புலன் உணர்வுகளின் உலகின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்டார். மல்லார்மே தன் கவிதை என்ற ஊடகத்தின் வழியாக நிர்மானிக்க நினைத்த ”லட்சிய” உலகம் பற்றிய இலக்கைக் கடைசியில் கைவிட்டார். வெலரியின் விநோதமாய்ப் தூர விலகி நின்ற மனம் யதார்த்தத்தின் பால் ஈர்க்கப்பட்டதைவிட, யதார்த்தத்திற்கு மீண்டது என்றும் நிஜத்தின் பால் ஈர்க்கப்பட்டது என்றும் சொல்வதே சரியாக இருக்கும்.

1912ஆம் ஆண்டிற்குப் பிறகு உணர்வுகள் நிறைந்த உலகின் அனுபவத்தாக்குதல் வெலரியின் மீது அதிகரிக் தொடங்கியது.  வெலரியின் உணர்வுகளால் ஆன சுயம் (emotional self) இயங்குவதை அவரின் அறிவார்த்த சுயம், விலகி அப்பால் நின்று கவனிக்க முடிந்தது. தேவையான சமயங்களில் உணர்வின் சுயத்துடன் இணைந்து செயலாற்றி, அதன் போக்கைக் கட்டுப்படுத்தி, சில குறிப்பிட்ட வழிகளில் திசைப்படுத்தவும் செய்தது. 1917க்கும் 1922க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பான Charmes,, பல வேறு கோணங்களில், சிக்கலான பிரச்சனையான மனம்-உடல் இரண்டும் இணைந்து படைப்பின் ஆக்கமுறைக்கு  (creative  process)பங்களிப்பு செய்கின்றன என்பது பற்றிய கவிதைகளும் Charmes  தொகுதியில் உள்ளன. ஒரு விதத்தில் இந்த முழுத் தொகுதியும் Poetic Artஎன்று கூறப்படும் அளவுக்கு இருக்கின்றன. மேலும் அவை கவிதை எவ்வாறு எழுதப் படுகிறது என்கிற முறைமை பற்றிவையாகவும் அமைந் திருக்கின்றன. ‘Hour’, ‘Eqiunox’ ‘Show’ போன்ற கவிதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கவிதைக்கு வெளியில் வெலரி ஒரு word-scepticஆக இருந்தார். கலை வெளிப்படுத்த விரும்பிய அதீதத்தன்மை பற்றிய அதே பிரக்ஞையிலிருந்து தோன்றியதுதான் ”சொற்களைச் சந்தேகிக்கும் தன்மை”. சொற்களின் தப்பிக்கவியலாத சாதாரணத்துவ த்தை வெளிப்படுத்த கலை முயலும் போதும் word-scepticism தோன்றுகிறது. இந்த நிலையை ”வார்த்தைகள் வெளிப்பாடு செய்யக் கூடுமானால்” வெலரியின் Le Solitarie தன் இருப்பிடம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறான்:

”அது அதிகமாக இருக்காது. சொல்லப்படக் கூடியது எல்லாமே வெறுமை. வெளிப்படுத்தக் கூடியதை வைத்துக் கொண்டு மானுடர்கள் என்ன செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். எல்லாமே மிகச் சிறப்பாக. அவர்கள் அதை கீழ் மையான நாணயங்களாக மாற்றுகிறார்கள்: துல்லியத்தைக் காப்பாற்றாத கருவியாக: ஒரு ஏமாற்றும் கவர்ச்சியாக: சுரண்டலுக்கும் ஆள்வதற்காக சிக்க வைக்கும் ஒரு பொறியாக, யதார்த்தம் முழுமுற்றாய்ப் பரிமாற்றம் செய்யப்பட முடி யாதது..”

தூய கவிதையின் (Pure Poetry) விசுவாசமான, நேர்மையான கவிதைக் கோட்பாட்டாளராகவும் இருந்தார் வெலரி. இருப் பினும் தன் சுயமுரண்பாடு காரணமாக 1928 இல் இவ்வாறு அறிவித்தார்.

“Pure Poetry is in fact a fiction deduced from observation”

366

*இந்தக் கட்டுரை மீட்சி இதழ் 31இல்(ஜுலை 1989) வெளிவந்தது.

கதைசொல்ல மறுக்கும் புனைவுகளும் கோணங்கியின் பாழி நாவலும்/பிரம்மராஜன்

06_03_2008_0995493001204831752_dave_whitlam

கதைசொல்ல மறுக்கும்

புனைவுகளும்

கோணங்கியின்

பாழி நாவலும்

பிரம்மராஜன்

தமிழ்ப்புனைகதையின் போக்குகளைக் கூர்மையாகக் கவனித்து வந்திருப்பவர்கள் 1990களின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை அது அடைந்திருந்திருப்பது முன்னேற்றமா, தேக்கமா, சீரழிவா என்பதைத் தீர்மானிக்க முடியும். முனைப்பாகவும், வெளிப்படையாகவும், பகட்டாகவும் இந்தப் பத்தாண்டுகளில் எழுதிவந்திருப்பவர்களில் பெரும்பான்மையோர் பிரகடனம் செய்து வந்திருப்பவர்களாக இருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக இதில் சிலர் யதார்த்த வகை புனைகதைக்கு தாங்கள் மாற்று எழுத்துக்களைத் தந்துவிடப் போவதாக அறிவித்துக் கொண்டு எழுதினார்கள். இதன் பொருட்டு இவர்கள் புதிய வகை எழுத்து மொழியை உருவாக்குவதாகச் சொல்லிக் கொண்டும் எழுதினார்கள். யதார்த்த வகை எழுத்துக்கு மாற்றாக இருக்க முடியும் என்று அவர்கள் சொன்னது “வனமந்திரக் கதாச் சுருள்களும்” , “பான்டஸி” வகை எழுத்துக்களும். இதில் அவர்கள் செய்த மிகப் பெரிய புரட்சி என்னவென்றால் மொழிக் கட்டமைப்பின் மீது குறைந்தபட்ச கவனம் கூட இல்லாமல் எழுதித் தள்ளியதுதான். யதார்த்த வகை எழுத்திலும் சரி, புனைவு வகை எழுத்திலும் சரி–கவனக்குறைவான வாக்கியங்களை எழுதுபவர்களுக்கு எந்த மன்னிப்பும் கிடையாது. நேரடியாக பொருள் கொள்ளக் கூடிய, தெளிவான வாக்கியங்களைக் கோரும் யதார்த்த வகை எழுத்துக்களையே ஒழுங்காக எழுதத் தெரியாதவர்கள் புனைவுவகை எழுத்துக்களை எழுத இயலுமா? இதை வாசகர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த மாதிரி பிரகடனங்களை முன்மொழிந்து கொண்டு யதார்த்தவகை எழுத்துக்களுக்கு மாற்றுப் புதினங்களை (புனைவுகளை) எழுதுகிறேன் என்று எழுதிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் ஒருவிதமான கலங்கலான, உருவகங்களால் நிரம்பிப் போன, கவிதை மாதிரி தெரிகிற ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். இத்தகைய, கலங்கலான, கவிதை மாதிரித் தோற்றமளிக்கும் ஒரு உரைநடையைக் கையாள்வதால் வாசகன் அதில் ஏதோ இருக்கிறது என்று நம்பி ஏமாறுகிறான்.

இந்த இடத்தில் கவிதை மொழி மற்றும் உரைநடை மொழிக்கான வேறுபாடுகள் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளை முன் வைக்கிறேன். காரணம், புனைகதையின் சகலவிதமான விமர்சனக் கேள்விகளுமே இறுதியில் புனைகதை பயன்படுத்தும் மொழியின் அடிப்படைக் கேள்விகளாக மாறுகின்றன. மேலும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது என்பது அடிப்படையில் அர்த்தங்களைக் கையாள்வதுதான் என்ற குறைந்தபட்ச அடிப்படைக் கருத்துக்கு மரியாதை தருபவர்களாக புனைகதை எழுதுபவர்கள் இருக்க வேண்டும். ஒரு மகத்தான கருத்தினை ஒரு புனைகதையாசிரியன் மனதில் வைத்திருக்கலாம். ஆனால் அந்த மகத்தான கருத்தின் அர்த்தத்தையும் மதிப்பீடுகளையும் அவனுடைய வாசகர்களுக்கு அவன் தெளிவுபடுத்துவதற்கு முன்னர், அவன் தனக்குத் தானே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது. ஒரு மகத்தான ஐடியாவை தனது புனைகதைக்குள் வைத்திருக்கிறேன் என்று சொல்வது மட்டும் போதாது. புனைகதை எழுதும் போது கவிதையின் அம்சங்களைக் கொண்ட மொழிநடையையும் பல நாவாலாசிரியர்கள் கையாள்கிறார்கள். இன்று சற்றே புராதன நாவலாசிரியர் போலத் தோன்றும் ஹென்றி ஜேம்ஸ் ஒரு தீவிர உதாரணம் என்றால் பின்நவீனத்துவ காலத்தில் அதிகம் பேசப்படும் விளாதிமிர் நெபக்கோவ் மற்றும் யூலியோ கோர்த்தஸார் பிற உதாரணங்கள். கவிதையின் யத்தனங்கள் ஒரு புனைகதைக்குள் இருந்தாலும் அவை இறுதியில் உரைநடையின் தர்க்க ஒழுங்குக்குள் ஒருமைப்பட்டுவிட வேண்டிய அவசியமும் கட்டாயமும் இருக்கிறது. அல்லது கவித்துவ மொழிநடைக்கும் தர்க்கரீதியான சீர்ஒழுங்கினைக் கோரும் உரைநடை மொழிக்கும் இடையே ஒரு சமன்நிலை அடையப்பட வேண்டிய அத்தியாவசியம் இருக்கிறது. கவித்துவ மொழி நினைவிலி மனதினை (Unconscious) ஆராய்கிறது. உரைநடை மொழி புத்தியின் அம்சங்களை ஆராய்கிறது. நினைவிலி மனதினை ஆராயும் கவிதை மொழிநடையை வைத்து இன்று ஒரு புனைகதை எழுதினால் அது வாசகனின் பொறுமையைச் சோதிக்கக் கூடியதாகத்தான் இருக்கும். ஏனென்றால் உலக இலக்கிய வரலாற்றில் ஒரே ஒரு ஜேம்ஸ் ஜாய்ஸ்தான் இருக்க முடியும். ஒரே ஒரு ஃபின்னகன்ஸ் வேக் (Finnegan’s Wake) தான் இருக்க முடியும்.

“Strainings of Poetry” சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள் சிறுகதைகளில் அதிகமாகவே இடம் பெறுகிறது. ஜே. ஜே.சில குறிப்புகள் நாவலின் பல பகுதிகளிலும். ஆனால் அக்கதைகளின் வெற்றி அவை இறுதியில் உரைநடையின் தர்க்கத்திற்குள் ஒன்றுபட்டு சமன் செய்து கொண்டு விடும் தன்மையே. வண்ணநிலவனின் சில கதைகளில் இத்தன்மையைப் பார்க்கலாம்.( பிணத்துக்காரர்கள், பாம்பும் பிடாரனும்,) ந. முத்துசாமியின் சிறுகதைகளில் இந்தக் கவித்துவ அம்சம் நனவோடை உத்தியில் சாதிக்கப்பட்டு இறுதியில் உரைநடையின் தர்க்க மொழிக்குள் சமன்பட்டுவிடுகிறது. இவர்கள் எழுதிய எந்தக் கதையிலும் கவனக்குறைவான வாக்கியங் களையோ அசட்டுத்தனமான, விவரணைக்கு அவசியமற்ற கவித்துவ யத்தனங்களையோ பார்க்க முடியாது.

வாழ்வின் யதார்த்தம் பற்றிய ஒரு மாயத்தோற்றத்தைத் தர வேண்டிய கட்டாயத்திலிருப்பது புனைகதை. கவிதைக்கு அப்படி இல்லை. கவிதை கவிதையாகவே இருக்கலாம். தொடர் நிகழ்வுகளையோ நிகழ்ச்சி அடுக்குகளையோ வாழ்க்கை போலவே தெரியும்படி அடுக்க வேண்டிய கட்டாயத்தில் கவிதை இல்லை. பால் லெலேரியின் ஒரு மேற்கோளை இங்கு தருவது பயனுள்ளதாக இருக்கும்:

Thus understood, poetry is radically different from all prose: in particular, it is clearly opposed to the description and narration of events that tend to give the illusion of reality, that is to the novel and the tale when their aim is to give the force of truth to stories, portraits, scenes, and other representation of real life.

[Paul Valery, Remarks on Poetry [(from The Art of Poetry: tr.Denise Folliot(1958)]

இன்னும் ஒரு முக்கிய கவனிப்பை இங்கே வாசகர்களுக்கு முன் வைக்க வேண்டிய அவசியமிருக்கிறது. இந்த நவீனத்துவத்தை (நான்லீனியர், மெட்டாஃபிக்ஷன், மேஜிகல் யதார்த்தம், இத்யாதி)அறைகுறையாகப் புரிந்து கொண்டு எழுதிக் கொண்டிருக்கும் கதாச் சுருள்காரர்களும், புது எழுத்து மொழிக்காரர்களும் எப்பொழுதுமே முதலில் தம் ஆதர்ச எழுத்தாளர்களாக முன் வைப்பது போர்ஹேவையும் மார்க்வெஸ்ஸையும். போர்ஹேவை ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கு முதலில் ஒன்று தெரியும். அவர் மொழிநடை தெள்ளத் தெளிவானது. அரைவேக்காடு வாக்கியங்கள் இல்லாதது. உருவகப் படிமங்களால் அடைசலுறாதது. மார்க்வெஸ்ஸைப் பொறுத்தவரை அவர் மொழி ஆங்காங்கே கவிதையைத் தொட்டுச் செல்லும் தன்மை உடையதாய் இருப்பினும் மிகச்சிறந்த கதைசொல்லியாக விளங்குபவர். கதை சொல்வதற்குப் பதிலாக வெறும் மொழிச்சட்டகத்தை வைத்துவிடுபவர் அல்லர்.

ஆனால் இன்றைய தமிழ்ப் புனைகதை ஆசிரியர்களில் சிலர் மொழிச்சட்டகத்தை பிரதியின் மையத்தில் வைத்துவிட்டு அதுதான் புனைகதை என்று சொல்கிறார்கள். இந்தப் புனைகதைகளில் கதை ஒரு புள்ளியிலிருந்து வேறு ஒரு புள்ளிக்கு நகர்த்திச் செல்லப்படுவதில்லை. அரைகுறையாகவும், அவசரத்திலும், பிரமிக்க வைக்க வேண்டுமென்ற என்ற நோக்கத்திலும் குப்பையாக தகவல்கள் அள்ளி வாசகனின் மூளைக்குள் கொட்டப்படுகின்றன. தகவல்களிலோ ஏகப்பட்ட பிழைகள் நிறைந்து கிடக்கின்றன. அர்த்தத்தையும் மதிப்பீடுகளையும் அவனுடைய வாசகர்களுக்கு அவன் தெளிவுபடுத்து வதற்கு முன்னர், தனக்குத் தானே ஒரு புனைகதையாசிரியன் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று முன்பே குறிப்பிட்டோம். ஆனால் இன்றைய நிலைமை படு மோசமாக இருக்கிறது. எழுதுபவர்கள் தாங்கள் எழுதியது தங்களுக்குப் புரிந்ததா என்று கேள்வி கூட கேட்டுக் கொள்ளாமல் நிறைய செலவு செய்து அழகான புத்தகங்கள் தயாரித்து வெளியிட்டுக் கொள்கிறார்கள். தங்களுக்குத் தாங்களே தெளிவுபடுத்திக் கொள்ளாது எழுதி வெளியிடப்படும் இந்தப் புனைகதை எழுத்துக்கள் வாசகனை மறுப்பவையாகவே வந்து சேர்ந்திருக்கின்றன. வாசகன் தன்னுடைய பிரதியை உற்பத்தி செய்து கொள்ளும் வெளி இந்தப் புதினங்களில் மறுக்கப்படுகிறது. தங்களைத் தாங்களே குழப்பிக் கொள்ளும் பிரதிகளாக இருப்பதால் இப்புதினங்கள் வாசக மறுப்புப் பிரதிகளாக உருவாவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

மேலும் ரோலான் பார்த் (Rolland Barthes)குறிப்பிட்ட “பிரதியின் சந்தோஷங்கள்”(pleasures of the text)இவற்றில் தேடினாலும் கிடைப்பதில்லை. குறிப்பாக கோணங்கி மற்றும் கௌதம சித்தார்த்தன் போன்றோரின் பிரதிகளைப் படிப்பதென்பது வாசகனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகவே இருக்கிறது. இவர்களின் நண்பர்களே கூட முழுமையாக இவர்களின் பிரதிகளைப் படித்திருப்பார்களா என்பது சந்தேகமே. சிலரிடம்(ஒசூர் வாசகர் வட்ட நண்பர்கள்-புனைகதையாளர் ப.வெங்கடேசன் உட்பட) கேட்டபொழுது ‘இல்லை’ என்று நேர்மையாக பதிலளித்தார்கள்)வலிந்து வரவழைத்துக் கொண்ட புதிய எழுத்து மொழி இவர்கள் கோணங்கி மற்றும் கௌதமசித்தார்த்தன் ஆகியோருடையது. உதாரணமாக பெண் என்ற வார்த்தையைப் பிரயோகிப்பதற்குப் பதிலாக ஸ்தீரீ என்ற சொல்லையே பயன்படுத்துவார்கள். நாசம் என்ற சொல்லுக்குப் பதிலாக ஒரிஜினல் சமஸ்கிருத சொல்லான விநாசம் என்பதையே பயன்படுத்துவார்கள். ஆனால் இதில் ஒரு ஒழுங்கு இருக்காது. இடையில் பெண் என்ற சொல்லும் வந்துவிடும். வாக்கியங்கள் ஒருமையில் தொடங்கி பன்மையில் முடியும். அல்லது பன்மையில் தொடங்கி ஒருமையில் முடியும். மூன்று நான்கு வாக்கியங்கள் ஒரே வாக்கியத்தில் இணைக்கப்பட்டு தொடக்கம் என்ன முடிவு என்ன என்பது தெரியாமல் செய்யப்பட்டிருக்கும். இது பிரதியாசிரியனின் கவனக்குறைவும் குழப்பமுமே தவிர வாசகனின் இயலாமை அல்ல.

கோணங்கியின் ஆதர்ச அர்ஜன்டீனிய எழுத்தாளரான மார்க்வெஸ்ஸை ஏன் அவருக்குப் பிடிக்கிறது என்றால் மார்க்வெஸ்ஸின் மாஜிகல் ரியலிசத்தின் ஒரே காரணமாகத்தான். மற்றதெல்லாம் கோணங்கிக்கு பொருட்டல்ல. அவரையும் கூட கோணங்கி தெரிந்து கொண்டது (புரிந்து கொண்டது) அவருடைய நண்பரான நாகார்ஜுனனின் தப்பும் தவறுமான மொழிபெயர்ப்பின் மூலமே. கோணங்கி எழுதுகிறார்:

“கிணத்தின் சறுக்கத்தில் நல்லதங்காள் என்ற சோக விநோதக் கதைப் பாடலில் அவள் பதினாறடிக் கூந்தல் இறந்த பின்னும் கிணற்று நீர் சுழலில் சுழன்று நீள்வதைக் காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்ஸின் கடைசி நாவலான பலியான கன்னியின் கூந்தல் அலையை எழுதிய கதையில் காண நேர்ந்ததால் ஸ்பானியக் கதைப் பாடலுக்கும் நல்லதங்காளின் பதினாறடிக் கூந்தலுக்கும் பக்கம் பக்கமாக ஒரே சமயத்தில் கூந்தல் வளர்வதை தமிழின் வாய்வழிக் கதை மரபாகக் கொள்ள வெள்ளையம்மாள் கிழவியின் குடலுக்குள் இரைந்து கொண்டிருக்கும் கதைச் சுருளை என்னவென்று காணமுடியாத உள்ளுரைகளை உணர்கிறேன்.”

(உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை: பக். 18)

கோணங்கியின் திட்டத்தை ஒரு வித மானுடஆய்வியல் ஒப்புநோக்கு என்று பாராட்டிவிடலாம் என்றாலும் கூட சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. முதல் கோணல் மார்க்வெஸ்ஸின் நாவல் தலைப்பைப் புரிந்து கொண்டதிலேயே ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இவர் குறிப்பிடும் மார்க்வெஸ்ஸின் நாவலின் பெயர் இவ்வாறு இருக்கிறது: Of Love and Other Demons . நாவலோ முடிவளர்வது பற்றியல்ல. நாவலைப் படித்தவர்களுக்குத் தெரியும். பலியான கன்னி என்பது எப்படி சரியான மொழிபெயர்ப்பாகுமென்று மொழி வல்லுநர்கள்தான் நமக்குச் சொல்ல வேண்டும். கன்னி எதற்குப் பலியானாள்? கோணங்கிக்குத் தெரிய நியாயமில்லை. கன்னியான Sierva Maria வுக்கு நாவலில் 12வயதுதான் ஆகிறது. வெறிநாய்க்கடிக்கு (வெறிநாய்க் கடி அவளை ஒன்றும் செய்வதில்லை. அவள் இறப்பது காதலினால்) மருந்தில்லாத காலத்தில் அவளை வெறிநாய் கடித்து விடுவதால் கிறித்தவப் பாதிரிகள் அவளைப் பேய் பிடித்திருக்கிறது என்று பேயோட்டச் சொல்லி ஒரு இளம் பாதிரியை (34வயதான பாதிரியின் முழுப் பெயரைச் சொல்ல மூச்சு வாங்கும்: Cayetano Alcino del Espiritu Santo Delaura y Escudero) அனுப்புகிறார்கள்-அவளை அடைத்து வைத்திருக்கும் கடலோரத்திலமைந்த சான்ட்டா கிளாரா கன்னிகாஸ்தீரிகள் மடத்திற்கு. டெலவ்ரா என்று சில சமயங்களிலும் கேயடெனோ என்று சில இடங்களிலும் (ரஷ்ய நாவலாசிரியர்கள் செய்வதுபோல) இந்தப் பாத்திரத்தை மாற்றி மாற்றிக் குறிப்பிடுகிறார் மார்க்வெஸ். இதனாலும் கூட கோணங்கிக்கும் அவருடைய நண்பருக்கும் குழப்ப மேற்பட்டிருக்கலாம். கான்வென்ட்டில் இருக்கும் போதே அந்தச் சிறுமியின் போர்ட்ரெய்ட்டை ஒரு ஓவியர் வரைகிறார். அதில் அவள் தேவதை போலவும், அவளுடன் சில கீழ்ப்படிதல் உள்ள அசுரகணங்களும் இருப்பது போலவும் தீட்டுகிறார். அந்தச் சிறுமிக்கும் பாதிரிக்குமிடையிலான காதல்தான் இந்த நாவலின் மையமாக அமைந்திருக்கிறது. அவளுக்கு நீண்ட முடியிருக்கிறது. உண்மை. ஆனால் நாவல் முடிவளர்வது பற்றியல்ல. ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமிக்குக் கோபமேற்பட பாதிரியின் முகத்தில் காரித் துப்புகிறாள். அதற்கு டெலவ்ரா மறு கன்னத்தைக் காட்டுவது மட்டுமின்றி ஒவ்வொரு காரித்துப்பலுக்கும் ஒருவித பாலுணர்வுத் திருப்தி அடைகிறார். நாவலில் பேய் பிடித்திருப்பது அந்தச் சிறுமிக்கு மட்டுமல்ல காதல் என்ற பேய் அந்த இளம் பாதிரியையும் பிடித்து விடுகிறது. பெண் பைத்தியக்காரிகளுக்கான விடுதிகள், அடிமைகளின் இல்லங்கள், குஷ்டரோகிகளின் இல்லங்கள் ஆகிய இவற்றின் பின்னணியில் புத்தகப் பிரியனாகவும் கவிதை ரசிகனாகவும் காதலனாகவுமிருக்கிற அந்த இளம் பாதிரியே இந்த நாவலின் பிரதான பாத்திரம். அந்தச் சிறுமியின் நீண்ட முடி நாவலின் ஒரு கட்டத்தில் ஒட்ட வெட்டப்பட்டு எரிக்கப்படுகிறது.

சில தமிழ் மார்க்சீயர்கள் ஜோதிடத்தை மார்க்சீயத்துடன் சுமுகப்படுத்த வேண்டும் என்று சொன்னது போல கோணங்கியும் நல்ல தங்காளையும் ஸ்பானியக் கதைப்பாடலையும் இணைத்து சந்தோஷப்படுகிறார்.–எரிந்திராவை மணிமேகலையுடன் இணைத்தது போலவே. (பார்க்க: கல்குதிரை காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சிறப்பிதழ் பக். 143–144). இந்த ஒவ்வொரு இணைப்பின் மூலமும் அதிகப் பயனடைபவர் கோணங்கிதான். ஏனென்றால் கூடுதலாக ஒரு கதையை அவரால் உண்டுபண்ண முடியும். கோணங்கியின் மேற்கோளில் காணப்படும் “ஸ்பானியக் கதைப்பாடல்” மூலத்தில் இல்லை. எனவே கோணங்கியின் இலக்கியக் கண்டுபிடுப்புகளில் ஒன்றாக அதை வைக்கலாம்.

அர்த்தமிழந்த சுற்றிவளைத்தல்களையும், கதை சொல்லத் தேவையற்ற இரட்டிப்புகளையும் விலக்கி விட்டு எழுதினால் கோணங்கியின் பாழி நாவல் 50 பக்கங்களுக்கு மேல் வருவது சந்தேகமே. தேவதாசிகள் ராகம் உண்டாக்குகிறார்கள் என்று அர்த்தம் வரும்படி எழுதுவதற்காக எவ்வளவு வார்த்தைகள் விரயமாக்கப்படுகின்றன என்று பாருங்கள்:

உடல் இல்லாத தேவதாசிகள் கட்டில் காலில் தோன்றி மச்ச கந்தி உருவில் நீர்யாழியில் அலைவுற்ற ராகலட்சணம் வளைவுகள் கமகங்கள் சுரங்களைப் பிடிக்கும் வழியில் அனுசுரங்கள் ஒருங்கு சேர்ந்து ராகமுண்டாக்கினர் தாசியர். (பாழி பக்:180)

கோணங்கியின் பிதற்றல் என்று சொல்லும்படியான விவரித்தலுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு: (வாசகர்கள் மன்னிக்க வேண்டும்)

இடைவிடாத மோனத்திலிருந்த பாம்புநெளிவு மோதிரத்தால் எட்டாவது பஞ்சமும் ஒன்பதாவது கோமள தைவதமும் சுருதி நுட்பம் கூட யாளி முகத்தில் உருக்கொண்ட துயர் ராப்பாடி பறவையென குரல் அதிர்ந்து கண்ணாடிப் பந்தாகச் சுருள் கொள்ளும் பிரதியொலி கீழ்ப்பாய்ந்து கோமளரிஷபமும் தீவிர காந்தாரமும் ஆறாவது தீவிர மத்திமமும் தந்திகள் தழுவி எதிரெதிர் ராகமும் நாத பேத ஆதாரம் கால பருவங்கள் சுற்றிப் புலர் பொழுதுகளின் குளிரையும் உதிரும் தெருவையும் வெளிப்படுத்தியது.

(பாழி. பக்: 175–176)

கோணங்கிக்கு சங்கீதம் பற்றி எதுவும் தெரியுமா என்று கோணங்கிக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இவ்வளவு டெக்னிகலாக ஏதோ எழுதியிருக்கிறாரே அவருக்குத் தெரியாமலிருக்க முடியுமா என்று வாசகர் வியக்கலாம். சங்கீதம் தெரிந்த யாரும் (Ga)என்ற ஸ்வரத்தை சாதாரண காந்தாரம், சுத்த காந்தாரம், அந்தர காந்தாரம் என்றுதான் இன்றுவரை சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் கோணங்கி புனைகதையில் ஏற்படுத்திய புரட்சிக்கு சமமானதொரு புரட்சியை சங்கீத சொற்பாடுகளில் ஏற்படுத்த விரும்பிவிட்டதால் இனிமேல் புதியதாக தீவிர காந்தாரம் என்கிற புதிய செமிடோன் (Semitone) ஒன்று தோற்றுவிக்கப்பட்டுவிடும். கோமள ரிஷபம் என்று கர்நாடக சங்கீதத்தில் யாரும் குறிப்பிட மாட்டார்கள். இந்த வார்த்தைப் பிரயோகம் ஹிந்துஸ்தானி இசையில் மாத்திரம் புழங்குகிறது. மேலும் ஒரு வியப்பு வாசகனுக்கு வர வேண்டும். அப்படியானால் கோணங்கி ஹிந்துஸ்தானி இசையிலும் பெரிய விற்பன்ன ராகிவிட்டாரா? பாழியைப் படித்தால் அப்படித்தான் தோன்றுகிறது நமக்கு. எனினும் கர்நாடக இசை, கர்நாடக இசைக்கு முந்திய தமிழிசை, ஹிந்துஸ்தானி இசை இவற்றின் வரையறைச் சொற்களை எடுத்து எடுத்து இந்த அத்தியாயத்தில் வாகான இடங்களில் செறுகி வைத்திருக்கிறார். உருவான வகையிலும் பாடப்படும் வகையிலும் மூன்றுமே (ஹிந்துஸ்தானி, தமிழிசை, கர்னாடக இசை) தனித்தன்மை கொண்டவை. ஒன்றுடன் ஒன்றைப் போட்டு குழப்ப முடியாது. சங்கராபரணம் என்ற ராகம் ஹிந்துஸ்தானியில் பிலாவல் என்று அழைக்கப்படுகிறது. தமிழிசையில் செம்பாலை என்று சொல்லப்படுகிறது. பலதளஇசை (Polyphony-பாலிஃபொனி) என்ற ஒன்றை மேற்கத்திய இசையில் வரையரைப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட பாலிஃபொனி போன்று அமைந்த நாவலை மிலன் குந்தேரா எழுது முயன்றிருக்கிறார். கோணங்கியால் ஏன் முடியாது என்று நீங்கள் நினைக்க வேண்டும்?

கோணங்கிக்குப்ó பிடித்த வினைச் சொல் கீறுதல். எழுதுவதற்குப் பதிலாகக் கீறுகிறார். கீறித்தான் அவரால் எழுத முடிகிறது. இந்தக் கீறுதல் “உப்புக் கத்தி”யில் குறைவாகவும் பாழியில் அளவுக்கு அதிகமாகவும் காணப்படுகிறது. இப்படி கோணங்கியிடம் படாதபாடு படும் மற்றொரு வார்த்தை அலாதி. நமக்கு லெக்ஸிகன் சொல்வதுபடி அலாதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் எந்த ஒன்று தனியானதோ அது. (alahida-That which is separate). கோணங்கியின் சொல்லாட்சிக்கு சில சிறந்த உதாரணங்கள்:

“அதைக் கண்டதுமே ஸ்தீரிகள் அலாதி அடைகிறார்கள். (உப்புக் கத்தி பக். )”

தமிழர் வாழ்க்கையின் சமகாலப் பிரதிபலிப்பு இல்லாத பாழி நாவல் பெரும்பாலும் உப்புக் கத்தியில் அளவாகக் குறிக்கப்பட்ட சில விஷயங்களின் விரிவாக்கமாகவே இருக்கிறது. ஒரு அகழ்வாராய்ச்சியின் ரிப்போர்ட் போல, ஆனால் தகவலறிக்கைகளின் தெளிவு கைவரப் பெறாமல் நிற்கிறது பாழி.

நவீன புனைகதையாளர்களில் பலருக்கு இல்லாத துணிச்சல் கோணங்கிக்கு இருக்கிறது. தகவல்களை உறுதிசெய்து கொள்ளாமல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதில் அவர் சமர்த்தர். கோணங்கியின் பாழி நாவலின்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலோ சாக்ஸன் மொழி எழுதப்பட்டதாகத் தெரிகிறது. எடுத்துக் காட்டு:

“ஆங்கிலோஸாக்சனில் எழுதப்பட்டிருந்த விக்டோரிய சரித்திர ஆசிரியர்களின் காலனிய அடிமை மனவெளி பொங்கி செடிகொடி படர்ந்து சீசாக்கள் நிரம்பி வழிகின்றன.”

(பாழி. பக்.321)

ஆனால் ஆங்கிலோ சாக்ஸன் (Anglo Saxon) என்றழைக்கப்படும் பழைய ஆங்கிலம் (Old English)8ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டுவரையில்தான் பயன்பாட்டுக்கு உள்ளாயிற்று. ஷேக்ஸ்பியருக்கு சற்றே முற்பட்டவரான ச்சாசர் (Chaucer)என்ற கவிஞரையே நாம் நவீன ஆங்கிலத்தில் எழுதுபவராகத்தான் குறிக்கிறோம். ஆனால் யாரை வைத்து கோணங்கி எழுதினாரோ அவரைக் கேட்டால்தான் நமக்குத் தெரியும் எப்படி 19ஆம் நூற்றாண்டில், வரலாறு ஆங்கிலோ சாக்ஸனில் எழுதப்பட்டதென்று.

கதாபாத்திரத்தை சிருஷ்டிப்பது, அதிலும் குறிப்பாக பெண்களைச் சிருஷ்டிப்பது என்பது எவ்வளவு எளிது என்பதைக் கோணங்கியின் பாழி நாவலைப் படித்தால் தெரியும். எந்த ஒரு பெயரின் விகுதியில் வேண்டுமானாலும் ஒரு “ள்” அல்லது “அள்” சேர்த்து விடுங்கள். உங்களுக்கு ஒரு பெண் பாத்திரம் கிடைத்து விடுகிறாள். பாத்திரம் தேவையில்லையா, அந்த அத்தியாயத்தின் இறுதியில் அவளைப் பற்றிக் குறிப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். அந்தப் பாத்திரம் காலி. அவ்வளவு எளிது. பழைய வாசனை அடிக்கக் கூடிய பெயர்களாக வர வேண்டுமென்றால் ராகங்களின் பெயர்ப்பட்டியல் உள்ள புத்தகம் ஒன்றினைப் புரட்டி யதேச்சையாகத் தேர்ந்தெடுங்கள். ஏறத்தாழ பாழியின் பெண் கதாபாத்திரம் ஒன்று உங்களுக்குக் கிடைத்து விட்டது என்று அர்த்தம்.

வானம்பாடிகள் நாவல் எழுதவில்லை. ஒரு வேளை எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும். பாழி நாவலைப் போல இருந்திருக்கும். புரியும்படியாகக் கூட இருந்திருக்கலாம். ரசிக்கும்படியாகக் கூட இருந்திருக்கலாம்.

ஒரு டூரிஸ்ட்டின் மனோபாவத்தை எழுத்தில் வெளிப்படுத்தாமலிருப்பதற்கு கோணங்கியால் ஆரம்பத்திலிருந்து (கொல்லனின் ஆறு பெண்மக்கள் தொகுப்பில் தொடங்கிவிட்டது) முடியவில்லை. நான் எங்கெல்லாம் போயிருந்தேன் தெரியுமா என்பது தொனிக்கும்படியாக பாழியில் நிறைய இடங்கள் இருக்கின்றன. வாசகனுக்குப் பயன் இருக்கும் என்ற நல்ல நோக்கத்தில் கோணங்கி எழுதியிருப்பார் என்று நம்பலாம். (ஒரு இலக்கியவாதியின் டூரில் என்னென்ன இடங்கள் இடம்பெற வேண்டும்?)

டேர(ட்) கார்டுகள் ஒரு பீதிக் கனவு போல கோணங்கியைத் துரத்தி வருகின்றன. உப்புக் கத்தியில் குறைவாக இருந்த இவை பாழியின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெறும்படி இன்றியமையாதவையாக, வாசகன் தவிர்த்து சென்றுவிடாதபடிக்குச் செய்திருப்பது நாவலுக்கு ஒரு வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஆமாம் டேரட் கார்டுகள் என்றால் என்ன? கோணங்கியிடம் கேட்டால் தனிப்பட்ட முறையில் ஒரு “கல்ச்சாவி” தருவார். அதைப் போட்டுத் திறந்தால் உங்களுக்கும் தெரியும். நான் குறிப்பிடுவது அதிகபட்சமாகத் தோன்றக் கூடாது. இன்னின்ன அத்தியாயங்களை இப்படி இந்த வரிசையில் நீங்கள் படியுங்கள் என்று வாசகர்களுக்கு கடிதம் எழுதுகிறாராம். (பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் சாமத்தில் 3,5,6,2,7,9,1,4,8 என்ற வரிசைப்படி கதைகளைப் படியுங்கள். உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தையில் 2,5,6,7,8,10,9,1,3,4,11 என்ற வரிசையில் கதைகளைப் படியுங்கள் அப்போது கதைகளை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.(நன்றி. க.பூரணச்சந்திரன். தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறும் எழுத்தும், சொல் புதிது, ஜனவரி மார்ச் 2001). இது எவ்வளவு பெரிய முன்னேற்றம்? இதை நவீன எலக்ட்ரானிக் யுகத்தில் பயன்படும் “பாஸ் வோர்ட்”(கடவுச் சொல்?) என்ற ஒன்றைத் தெரிந்தவர்கள் இன்னும் சீக்கிரம் புரிந்து கொள்வார்கள்.

மந்திரத்தன்மை நம்பப்பட வேண்டுமானால் அது குறைவாகவே பிரயோகிக்கப்பட வேண்டும். இது தொடர்பான போர்ஹேவின் மேற்கோளை இங்கு தருவது பல நவீனத்துவவாதிகளுக்கு உபயோகமாக இருக்கும்:

. . . .நம்ப முடியாப் புனைவுக் கதை வாசகனால் ஏற்றுக் கொள்ளப்படும்படியாக இருக்க வேண்டுமானால் நம்பமுடியாத புனைவுக் கதைகளில் ஒரு சமயத்தில் ஒரேயொரு நம்புவதற்கியலா அம்சம் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். . . .

(அலெஃப் சிறுகதை பற்றி போர்ஹே எழுதிய குறிப்புகள். போர்ஹே கதைகள்: பக்.250)

*கோணங்கியின் பாழி நாவல் வந்த சமயத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை அதன் மறுமதிப்பு வெளிவரும்(புத்தகக் கண்காட்சி-2009)நாளை எதிர்நோக்கி சந்தோஷத்துடன் இங்கு பிரசுரிக்கப்படுகிறது

இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்-Ilayaraja’s Musical Confusions-Rajalakshmi

இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்*

ராஜலஷ்மி

How to Name it

Long play 33 1/3 R.P.M. Stereo

Echo Records 1986

*இந்த இசைத்தட்டு விமர்சனம் மீட்சி-28 (ஜனவரி-மார்ச் 1988) இதழில் வெளிவந்தது.
அப்பொழுது கேஸட்டுகள் அவ்வளவாய் புழக்கத்தில் இல்லை.

இளையராஜா சமீபகாலத்தில் எல்லோராலும் நிறைய பேசப்படுகிறார். தமிழ் சினிமா இசையில் இதுவரை யாரும் செய்திராத பலவிஷயங்களை அவர் செய்திருக்கிறார். நாட்டுப்பாடல் களிலிருந்தும், மேற்கத்திய சாஸ்திரீய சங்கீதத்திலிருந்தும் அவர் கடன் வாங்கி இருந்தாலும், சினிமா இசையை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை அவரையே சேரும். கர்நாடக சங்கீதத்தை பாமரர்களுக்கும் எட்டும்படியாக செய்திருப்பதும் மேற்கத்திய இசையைக் கேட்கவேண்டும் என்ற ஆவலை பல இளைஞர்கள் மனதில் விழைத்திருப்பதும் அவருடைய இசையமைப்புதான். சினிமாவுக்கென இல்லாமல் அவர் இசை அமைத்துள்ள சாஹித்யங்கள் How to Name it என்ற இசைத்தட்டாக வெளியிடப்பட்டுள்ளன. அடுத்ததாக Nothing but Wind என்று இன்னொரு இசைத்தட்டு வரப்போகிறதென அறிவித்து ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. இன்னும் வரக் காணவில்லை.

இது 1986இல் வெளிவந்த இளையராஜாவின் How to Name It இசைத்தட்டுக்கு மிகத் தாமதமாக வரும் மதிப்புரை. இந்த இசைத்தட்டில் எந்த அளவுக்கு ஒரு முதிர்ந்த இசையமைப்பாளராக இளையராஜா வெளிப்பட்டிருக்கிறார் என்ற கேள்வியுடன், அவரும் அவருக்கு பின் அட்டைக் குறிப்பு (Sleeve Notes) எழுதியவரும் வைக்கும் மிக உயரமான கற்பிதங்களில் எந்த அளவு வரை அவர் சாதனை செய்திருக்கிறார், என்ற கேள்வியையும் எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கம்.

How to Name It இல் உள்ள ஒன்பது சாஹித்யங்களும் (Compositions) சாஸ்திரீய கர்நாடக ராகங்களை சாஸ்திரீய மேற்கத்திய இசை வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. கேட்கும் போது நமக்கு ஏற்படும் முதல் உணர்வு இதை முன்னமே இளையராஜவின் சினிமாப் பாடல்களில் கேட்டிருக்கிறோம் என்பதுதான். அத்தனை ராகங்களிலும் அவர் குறைந்தது நான்கு அல்லது ஐந்து பாடல்களாவது இசையமைத்திருக்கிறார். பெரும்பகுதி மிகவும் நிதானமான வேகத்தில் ஒன்றுக்கொன்று அதிக மன நிலை (mood) வேறுபாடின்றி அமைக்கப்பட்டிருப்பதால் ஒரு புதுமையான விஷயத்தைக் கேட்கும் உணர்வு ஏற்படுவதில்லை. இது மிகவும் தன் வயப்பட்ட கருத்தாகவும் இருக்கலாம். ஆனால் மேற்கத்திய சாஸ்திரீய இசையைக் கேட்கும் உணர்வு நமக்குக் குறைவாகவே ஏற்படுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

முதல் சாஹித்யம் How to Name itதான் இந்த இசைத் தட்டில் உள்ளவற்றிலேயே நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ஷண்முகப்ரியா, சிம்மேந்திர மத்யம ராகங்களைக் கொண்டு அமைக்கப் பட்டுள்ள இந்த இசைத்துண்டு (Piece of Music) எப்படிச் சொல்வது என்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்துவதால் வெற்றியடைகிறது.

அடுத்துவரும் (Mad Mod Fugue) இரண்டு வயலின்களுக்கிடையிலான கேள்வி பதில் ஒரு நல்ல முயற்சி. ஆனால் நமக்குள் ஒரு பதிவை ஏற்படுத்துவதற்குள் முடிந்து போய்விடுகிறது இந்த மிகவும் சிறிய துண்டு.

மூன்றாவதான You cannot be Free கல்யாணி ராகத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக பின் அட்டைக் குறிப்பு கூறுகிறது ‘துளசி தளமுலசே’ என்ற தியாகராஜ கீர்த்தனை மாயாமாளவ கௌள ராகம்; தவறு யாரால் ஏற்பட்டது என்று தெரியவில்லை. நமக்குச் சொல்ல முடியாத ஏமாற்றத்தை தருகிறது இந்தத் துண்டு.

Study For Violin மறுபடியும் ஷண்முகப்பிரியாவை மேற்கத்திய பாணியில் தருகிறது. மற்றபடி இசையின் ஓட்டத்தில் எந்தப் புதுமையும் இல்லை.

It is Fixed பியானோவில் பந்துவராளியுடன் தொடங்குகிறது. ஆரம்பத்தில் ஏற்படும் நம்பிக்கை, பின்பகுதியில் drums ஐச் சேர்ப்பதால் குறைந்து போய் ஒரு தீவிரமற்ற மனோநிலைக்குத் தள்ளி விடுகிறது.

Chamber Welcomes Thiagaraja முழுக்க முழுக்க கல்யாணி ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பின் அட்டையில் மற்றவற்றிற்கு எழுதியது போல இதன் ராகம் குறிப்பிடப்படவில்லை. குறிப்பிட்டுள்ள உள் ஊடுருவும் பக்தி உணர்வோ நமக்கு ஏற்படுவதில்லை.

I met Bach in My House “ஒரு வைரத்தின் இதயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது”, என்று குறிப்பு கூறுகிறது. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு ஆண் குரல்களுக்கு எந்தவொரு அதிக பட்ச வேலையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார் இளையராஜா. அதற்கு அடுத்ததான … and we had a talk ம் ஒரு இந்திப் பாடலை நினைவு படுத்துவதுடன் நின்று போய் விடுகிறது. Do Anything திடீரென்று நடுவில் ஒரு ஷெனாய் புகுந்து அதுவரை நமக்கு ஏற்படுகிற மனப்பதிவுகளையும் ஒன்றுமில்லாமல் அடித்துவிடுகிறது. அந்த சாஹித்யத்தில் ஒரு பேரமைதி சூழ்ந்து உன்னதத்தின் ஒளி வீசுவதாக அட்டையில் கூறுகிறார்கள். இந்த சாஹித்யங்களுக்கான தலைப்புகள் பெரும்பாலும் பொருந்தாமல் போய்விட்டதாகத் தான் படுகிறது. இத்தலைப்புகளும் குறிப்புகளும் இல்லாமல் இருந்திருந்தால் இசை ஏற்படுத்தும் உணர்வுகளாவது கேட்பவனுக்கு மிச்சம் ஆகியிருக்கும்.

இளையராஜா Frontline குக் கொடுத்த பேட்டியில் இருந்து சில இடங்களை நினைவு கூற வேண்டிய அவசியம் இப்போது ஏற்படுகிறது. மியூசிக் அகாதமி வித்வான்கள் தியாகராஜரின் பதினைந்து கீர்த்தனைகளை மனப்பாடம் செய்துவிட்டு அதையே திரும்பத் திரும்பப் பாடுகிறார்கள் என்றும், அவர்களின் குரல்களில் ரீங்கரிக்கும் அகங்காரத்தைத் தான் கேட்டிருப்பதாகவும் இளையராஜா கூறுகிறார். ஏன் நீங்கள் அதிகம் பேட்டிகள் தருவதில்லை என்ற கேள்விக்கு, விமர்சகர்கள் எல்லோரும் தங்களுக்கு எல்லாம் தெரிந்ததான நினைப்புடன் பேசுபவர்கள். அவர்களுடைய கருத்துக்களை என் வாயால் வரவழைக்கப் பிரயத்தனப்படுபவர்கள், அவர்களுக்கு நான் ஏன் அந்த வாய்ப்பைத் தர வேண்டும் என்று கேட்கிறார். ஓரளவுக்கு அவருடைய கருத்து சரி. எல்லாம் தெரிந்து யாரும் இருக்க முடியாது. ஆனால் கேட்பவனின் இசை உள்ளுணர்வை (Listener’s Sensitivity to Music) மறுப்பது எந்த வகையில் நியாயம்?

“இசையில் Value Judgements க்கு இடம் இல்லை. ஒரு இசை வடிவம் இன்னொன்றை விட உயர்ந்தது என்பது போலான கருத்துக்களைக் கூற யாருக்கும் உரிமையில்லை,” என்கிறார். கர்நாடக சங்கீதம், லைட்மியூசிக்கைவிட உயர்ந்தது என்று கூறும் பலருக்கு, லைட் மியூசிக்கே தெரியாது என்கிறார். அது இவருக்கு எப்படித் தெரியும்? மேலும் இசை என்பது வெறுமனே ஸ்வரங்களை மாற்றி மாற்றிப் போடும் ஏமாற்று வேலை தான், என்று கூறுவதெல்லாம் Value Judgement இல்லாமல் வேறு என்னவாம்?

மிகவும் சுயமான இசை அமைப்பாளர் என்று கருதிக் கொள்ளும் இளையராஜா (வித்வான்கள் பாடியதையே பாடுபவர்கள்!) நிறைய மேற்கத்திய சாஸ்திரீய சங்கீதகர்த்தாக்களின் இசையைக் காப்பி அடிக்கிறார். Dvorak என்ற ஸெக் Composer ன் Symphony No. 9 in E minor ஐக் கேட்டால் ‘சிட்டுக் குருவி… … வெட்கப்படுது’ என்ற பாடல் எவ்வளவு அப்பட்டமான காப்பி என்று தெரிவரும். ஒரு சாஹித்யத்தை எடுத்து விளக்கம் தருதல் வேறு. அப்படியே காப்பி அடிப்பது வேறு. தான் இன்னதை எடுத்தாண்டிருப்பதாக எங்கும் ஒப்புதல் கூட செய்வது இல்லை. இது நமக்குத் தெரியாத வரையில் மட்டுமே அவர் இசை அமைப்பை வியக்க முடியும்.

நாயின் குரைப்பிலும், கதவோசையிலும் இசையைப் பார்க்க முடியும் என்கிறார். இது போன்ற ஒரு பார்வை வரவேற்கப்பட வேண்டியது தான். ஆனால் நமக்குப் புதிது ஒன்றும் இல்லை. தி. ஜானகிராமன் பல வருடங்கள் முன்பே ‘மோக முள்’ளில் எழுதியதுதான். அடுத்த வரியிலேயே ஊளையிடும் நாய்களுக்கும், வித்துவான்களுக்கும் வித்யாசமில்லை என்று அவர் கூறும் போது அவருடைய நோக்கங்களின் உன்னதம் பற்றிய கேள்வி எழுகிறது.

“நான் ஒரு சங்கீதக்காரனில்லை. ஒரு வித்வானுக்கு அவனுடைய ராகம் ஒரு தடை; தாளம் ஒரு தடை; அவனுடைய இசைப் பயிற்சி ஒரு தடை; இசை பற்றிய அவனுடைய கருத்துக்களே ஒரு தடை. நான் சங்கீதக்காரனில்லாததால் என்னைக்குறுக்கக் கூடிய எல்லைகள் எதுவும் இல்லை. என் மனதுக்குத் தோன்றுவதைச் செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை; உதாரணத்திற்கு நான் ஆரோகணத்தில் மட்டுமே ஒரு பாடலை இசை அமைத்திருக்கிறேன். ஆனால் சங்கீத வித்வான்கள் எல்லோரும் ஒரு கீர்த்தனை என்பது ஆரோகணத்தையும் அவரோகணத்தையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று நம்பி வந்திருக்கிறார்கள்,” என்று பேட்டியில் கூறுகிறார். (அடிக்கோடு என்னுடையது).

ஆரோகணம்: ஸரிகமபதநிஸ் ராகம்: கல்யாணி

அவரோகணம் : ஸ்நிதபமகரிஸ தாளம்: ஆதி

→ →

மா பா தா, நி ஸ் ô ; ; ; / நீ ஸ் ô ஸ் ô, ஸ் ô நி ஸ் ô ரீ ; //

க லை வா ணி யே / உ னைத் தா னே அழைத் தேன் //

மா பா பா,பா,பா,மா பாதா / ஸாரீகா, ம மாபாதா, நி //

உ யிர்த் தீ யை வ ளர்த்தேன் / வ ர வேண்டும் வரம் வேண்டும் //

இதில் கமகங்கள் காட்டப்படவில்லை. ஒரு தோராயமான ஸ்வரபடுத்துதல் தான் இது. இளையராஜா மிகவும் பெருமையாக தான் ஆரோகணத்தில் மட்டுமே அமைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் பாடல்.

முதல் விஷயம்-வித்வான்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை.

ஆரோகணத்தில் மட்டுமே பாடுவதானால் பாடல் பின்வருமாறு செல்ல வேண்டும்.

. . . . . . .. .. .. .. .. .. ..

ஸ ரி க ம ப த நி ஸரிகம பதநி ஸ் ரி க ம ப த நி ஸ ரி க ப த நி ஸ

. . . . . . .

அது சாத்தியமில்லை என்பது எல்லோரும் அறிந்ததே. ஒரு வார்த்தை முடிந்து அடுத்த வார்த்தை தொடங்கும்போது ஆரம்பத்தில் உள்ள ஸ்வரம் முதல் வார்த்தையின் முடிவிலுள்ள ஸ்வரத்துக்கு சற்றே கீழே உள்ள ஸ்வரமாகவோ அல்லது நான்கைந்து ஸ்வரங்கள் கீழாகவோ இருக்கிறது. அதனால் ‘ஸ்’ லிருந்து ‘நி’ யைத் தொட்டுத்தான் அல்லது ‘ப’ விலிருத்து ‘ம’ வைத்தொட்டுத்தான் சங்கதிகள் செல்கின்றன. இந்த இடங்களைப் பாடலிலும் அவரோகணத்திலும் அம்புக்குறியிட்டு காட்டியிருக்கிறேன். இரண்டாவது-இந்தப் பாடலில் இது சுலபமானதற்குக் காரணம் ஆரோகணமும் அவரோகணமும் அதே ஸ்வரங்களை உள்ளடக்கியவை. ஆரோகணத்தில் வேறு ஸ்வரங்களையும் அவரோகணத்தில் வேறு ஸ்வரங்களையும் ஒரு ராகம் கொண்டிருக்கும்போது இந்த மாதிரியான பரிசோதனை(!)கள் சாத்தியமில்லை. ஒரு பரிசோதனை என்பது நம்மை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்து செல்லாததால் இது பரிசோதனையே இல்லை. எல்லா வித்வான்களும் கல்பனாஸ்வரம் பாடும்போது இது போன்ற ஸ்வர அமைப்புகளைக் காலம் காலமாக உபயோகித்து வந்திருக்கிறார்கள். எந்த வித்வான்களை இவர் காரணமில்லாமல் கரிக்கிறாரோ, அவர்களிடமிருந்து ஒரு விஷயத்தை வாங்கி, தானாகவே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு ஆரோகணத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒரு ‘எல்லை கடந்த’ (அவருடைய வார்த்தைதான்) பரிசோதனை செய்துவிட்டார் இளையராஜா.

இசை கேட்கும் எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்கும் அவரவர்களுக்கான எல்லைகள் இருக்கின்றன. தன்னை எல்லை கடந்தவனாக நினைத்துக் கொள்வது ஒரு சரியான நினைப்பாக முடியாது. சினிமாவுக்கு இசையமைப்பதில் இருக்கின்ற பல எல்லைகள் ஒரு வித்வானுக்குக் கிடையாது. வித்வான்களில் குரல்களில் (ஒரு சிலருடையதைத் தவிர) இளையராஜா அளவுக்கு அகங்காரம் தொனிக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.

ஒரு நோக்கில் இளையராஜாவின் முயற்சிகளுக்கான மரியாதையையும், உரிய இடத்தையும் அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் இது போன்ற முயற்சியிலேயே இதுதான் வெற்றிகரமான முதல் முயற்சி என்று கூறிக்கொள்வது அதிகபட்சம். இளையராஜாவுக்கு முன்பே யஹுதி மெனுஹினின் ‘அர்ஜுன்’ என்ற ஸாஹித்யம் (Composition) மேற்கத்திய ஸாஸ்திரீய இசையிலிருந்து இழை பிறழாமல் நம் ராகங்களை வெளிப்படுத்தி இருக்கிறது. பண்டிட் ரவி ஷங்கரின் முதல் Concerto வை Andreprevin Conduct செய்ததும், இரண்டாவது Concertoவை Zubin Mehta Conduct செய்ததும் L.ஷங்கரும் Maclaughlinம் செய்துள்ள Jazz முயற்சிகளும் கண்டிப்பாக நாம் இங்கு குறிப்பிட வேண்டியவை. என்ன உணர்வை அவை ஏற்படுத்துகின்றன என்று அட்டைக் குறிப்புகள் வரையறுப்பதில்லை.

ஒரு அற்புதமான விஷயத்தைச் சொல்லி அதைச் சாதாரண உதாரணங்களால் விளக்குவது, ஒரு சுயமான வீச்சை அடுத்து ஒரு தவிர்க்க முடியாத கீழிறங்கல் (Bathos) இதுதான் இளையராஜாவின் இசையமைப்பின் சாராம்சம். சுயமான வீச்சு அங்கங்கு தென்படுவதை மறுக்க முடியாததால்தான் இம்மதிப்புரை.

குறிப்புகள்:

1. இதில் எடுத்துக் காட்டியுள்ள இளையராஜாவின் கூற்றுகள் Frontline Aug 22-Sept 4, 1987 இதழில் வெளிவந்த பேட்டியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டவை.

2. Concerto for Sitar and Orchestra-Ravi Shankar

Andre Previn

London Symphony Orchestra

Long play 33 1/3 RPM Stereo

EMI 1971 ASD 2752

3. Ragamala (Garland of Ragas)

Sitar Concerto No.2-Ravi Shankar

Zubin Mehta

London Philormonic Orchestra

Long play 33 1/3 RPM Stereo

EMI 1982 ASD 4314.

The Adventure of Life and Death of poetry-Rimbaud/Introduced by Brammarjan

rimbaud1

கவிதையின் மரணமும் வாழ்க்கையின் சாகசமும்

பிரம்மராஜன்

ஐரோப்பிய பொது வாழ்க்கையையும் அதன் கலாச்சார மதிப்பீடுகளையும் மாற்றியமைத்த மகத்தான சக்தி படைத்ததாய் அமைந்த சிம்பாலிசக் கவிதை இயக்கத்தின் பிதாமகராகக் கருதப்படுபவர் சார்ல்ஸ் பாதலெர். பாதலெரிடமிருந்துதான் பிரெஞ்சுக் கவிதை இறுதியாகத் தன் தேசீய எல்லைகளைக் கடந்து விரிந்து சென்றதென்றும் அது சகல இடங்களிலும் வாசகர்களைப் பெற்று நவீன காலத்தின் பிரத்யேகக் கவிதையாகத் தன்னை ஸ்தாபித்துக் கொண்டதென்றும் பால் வெலரி ஒரு முறை குறிப்பிட்டதை இங்கு நினைவு கூறலாம். பாதலெருடன் இணைத்தே சொல்லப்படும் பிற கவிஞர்களில் ரைம்போவும் (Rimbaud)மல்லார்மே (Mallarme)வும் சம முக்கியத்துவம் பெறுபவர்களாக இருக்கின்றனர். வெர்லெய்ன் என்ற மற்றொரு கவிஞர் இதே குழுவினைச் சேர்ந்தவராயிருந்த போதிலும் தவறான காரணங்களுக்காகப் பிரபலமானார். இருபதாம் நூற்றாண்டின் பல நவீன கவிஞர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் பாதலெரின் தாக்கத்தை ஊன்றிக் கவனிக்க முடிகிறது. அவர்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் அவர்களின் படைப்பாக்கத்தினை வேண்டிய அளவு பாதித்து மாற்றங்களை உருவாக்கின. இதற்கு இரண்டு முக்கிய இலக்கியவாதிகளை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

1. எஸ்ரா பவுண்ட்.

பவுண்டின் பொருளாதாரக் கொள்கைகளும் அவரது நீண்ட பகுதிகள் கொண்ட கேண்ட்டோக்களும்.

2. பெர்டோல்ட் ப்ரெக்ட்.

ப்ரெக்டின் கம்யூனிசமும் அவரது செயல்படு கவிதைகளும் (functional poems).

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த இரு பெரும் சர்வதேசக் கவிஞர்களின் மூல மாதிரியாக அமைகிறார் பாதலெர். பாதலெரின் சில தேர்ந்தெடுத்த கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. (பிரமிள் என்கிற தர்மு அரூப் சிவராம் மற்றும் தேவ தேவன்). மிகவும் பிரசித்த பெற்றதும் தடை செய்யப் பட்டதுமான தீவினையின் மலர்கள்(Flowers of Evil) என்ற தலைப்பிலான கவிதைகளை எழுதியவர் சார்ல்ஸ் பாதெலர். கலை கலைக்காகவே என்ற இலக்கியக் கொள்கை வலுப்பெறுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தவர். இந்தக் கொள்கையின் மூலம் கவிதையின் சுயாட்சியை வலுப்படுத்தி அதற்கான ஸ்தானத்தை மீட்டுப் பெற்றார் பாதலெர். மிகச் சிறந்த கலை மற்றும் ஓவிய விமர்சகராக விளங்கியவர். ஆயினும் பாதலெர் மிகவும் கலைத்துவமான சூழ்நிலைகளில் வாழ்வதாகக் குற்றம் சாட்டினார் இளைய தலை முறையைச் சேர்ந்த ஆர்தர் ரைம்போ. பாதலெர் புதிய கவிதை வடிவங்களைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டார் என்றும் கண்டனம் செய்தார் ரைம்போ. எனினும் ரைம்போ அளவுக்கு பாதலெரை வேறு எந்த சக கவிஞனும் போற்றிப் புகழ்ந்திருக்க முடியாது. பாதலெரைக் குறித்து ரைம்போ சொன்னது.

“the first of seers, king of poets, a true God”.

தீர்க்க தரிசியாகக் கவிஞன் செயல்பட வேண்டுமென்கிற ரொமாண்டிசிசக் கோருதலை சிம்பலிஸ்டான ரைம்போ முன் வைப்பது சற்று ஆச்சரியமாகக் கூடத் தோன்றலாம். கவிஞன் தீர்க்கதரிசியாக இருக்கிறான் என்பதை வலியுறுத்திக் கூறியவர் ஆங்கில ரொமாண்டிக் கவியான வில்லியம் வோட்ஸ்வொர்த். அவர் கவிஞனை “a seer into the life of things” என்று வரையறுத்தார். கவிஞனை தீர்க்கதரிசியாகக் காணும் தன்மை வேறெந்த சிம்பாலிசக் கவிஞனிடம் விடவும் ரைம்போவிடம் கூடுதலாகக் காணப்படுவதை பார்க்கலாம். இதை ரைம்போவின் வார்த்தைகளிலேயே (அவரது கவிதைகள் மற்றும் கடிதங்கள் வாயிலாக) நாம் அறிய முடியும்.

The Poet makes himself a seer by a long, gigantic and rational derangement of all the senses. All forms of love, suffering, and madness. He searches himself. He exhausts all poisons in himself and keeps only their quintessences.

(Letter to Paul Demny 15 May 1871)

Illuminations (1886)என்ற தொகுப்பில் அடங்கும் ரைம்போவின் கவிதைகளைப் படிக்கும் போதும் இந்தக் கடித வரிகளில் அவர் குறிப்பிட்டதை ஒருவர் உணர முடியும். பெரும்பாலான இலக்கிய விமர்சகர்களாலும் வரலாற்றாசிரியர்களாலும் குமரக் கவிஞன் (boy-poet ) என்று குறிப்பிடப் பட்டார் ரைம்போ. இதற்குக் காரணம் இல்லாமலில்லை. பதினாறு வயதில் தொடங்கிய படைப்பு வாழ்க்கையை ரைம்போ பத்தொன்பது வயதில் முடித்துக் கொண்டார். அவரது குமரப் பருவத்தில் சாத்தியமாகிய கவிதைச் சாதனைகள் எவ்விதத்திலும் சாதாரணப்படுத்தி விட முடியாதவை. ஒரு சாதாரணக் கவிஞன் (முதல் தரமில்லாதவன்) இந்தக் கவிதைகளை அவனது முதுமையிலும் சாத்தியப்படுத்த வாய்ப்பில்லை. அக்கவிதைகள் அடர்த்திச் செறிவினாலும் அவற்றின் ஸர்ரியல்தன்மைகளாலும் இன்றும் மிக நவீனமாகவே விளங்குகின்றன. (இளம் சாப்பாட்டு ராமன் என்ற தலைப்பிலான ரைம்போவின் கவிதையை ஆத்மாநாம் மொழிபெயர்த்திருக்கிறார்.) பல அம்சங்களில், விதங்களில் சர்ரியலிஸ்டுகளின் முன்னோடியாகக் கருதப்படுகிறார் ரைம்போ. ரைம்போவைப் பற்றி நவீன செக்கஸ்லோவிய கவிஞரான டேட்யூஸ் ரோஸ்விக்ஸ் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு பின் வருமாறு.

டேட்யூஸ் ரோஸ்விட்ஸ்

தீர்வுகள்

ஸ்திரமின்றி நாம் வாழ்கிறோம்

முகங்களின்

சொற்களின்

பெயர்களின்

மூடப்பட்ட ஒரு சுழல்வட்டப்பாதையில்

பிறர் நம்மை விவரிக்கின்றனர்

வகை பிரிக்கின்றனர்

நிலைப்படுத்துகின்றனர்

நமக்குத் தெரியும் நாம் அந்தப் பொய்யான வட்டத்தைக் கடக்க

உடைத்துக் கொண்டு

வெளியேற வேண்டுமென்று

ஆனால் நாம் இருக்கிறோம்

1880இல் ஏடன் நகரில்

ரைம்போ

பல் வேறு புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தார்

The Perfect Metal worker

The Pocket Carpenter

இவற்றையும் சேர்த்து

அல்லது இது போன்றவற்றுக்கு

வழிகாட்டி நூல்கள்

செங்கல் சுடுவது பற்றியும் பீங்கான் உருக்குவது பற்றியும்

மெழுகுவர்த்தி செய்வது

சுரங்க வேலை

உலோகப் பற்ற வைப்பு

செங்கல் அறுப்பது

சாக்கடை அமைப்பது

ஆம் அவர் நிஜமாகவே

விடைபெற்றுக் கொண்டார்

ஆனால் அவரும் கூட

சேமித்தார்

கவிதையின் மரணத்திற்குப் பிறகு

வீடு திரும்புவதற்கு

ஒரு நிஜமான முழுக் குடும்பத்தைத்

தொடங்கத் திட்டமிட்டார்

ஒரு மகனை ஆளாக்குவதற்குத்

தன்னை அர்ப்பணித்துக் கொள்ள

(அவன் இயல்பாகவே வீரமான புதிய தலைமுறை

மனிதனாக இருப்பான்)

அவர்

ராணுவப் பணிக்குத் தன் அணுகுமுறையை நிலைநாட்டிக் கொள்ளத்

திட்டமிட்டார்

ஒரு திடமான ஸ்திதியில்

மேலும் இப்படியாக

மேலும் இப்படியாக

அது சிறப்பானதுதான்

ஆனால் எனக்குச் சொல்

ஒரு ஐம்பது அறுபது

எண்பது வயதான

ரைம்போ

செய்ய வேண்டியது

என்ன

என்ன புத்தகங்கள்

அவர் ஆர்டர் செய்ய வேண்டும்

எங்கே அவர் செல்ல வேண்டும்

எதை அவர் எரிக்க வேண்டும்

எதைக் கைவிட வேண்டும்

(Taduesz Rosewicz: Selected Poems/Solutions / [Penguin Modern European Poets] pp.115-116)

டேட்யூஸ் ரோஸ்விட்ஸின் கவிதை மிக இறுக்கமாகவும் மிகச் சிக்கனமாகவும் ரைம்போவின் முழு வாழ்க்கையையும் அவர் தொடராமல் போய்விட்ட கவிதைப் படைப்பாக்க இருப்பினையும் அடிப்படையாக வைத்து சில உறுத்தும் கேள்விகளை முன் வைக்கிறது. ஆனால் இவை பதில்களற்ற கேள்விகள். கவிதை இல்லாத உலகில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை ரைம்போவின் கவிதைக் காலத்திற்குப் பிறகான வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் புரியும். கவிதை மற்றும் இலக்கியம் பற்றிய எந்தப் பின் வருத்தங்களும் இல்லாமல் வாழ்ந்தார் ரைம்போ என்று அவர் தன் வீட்டு அங்கத்தினர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து தெரிய வருகிறது. இந்தக் கடிதங்கள் வாயிலாக நமக்குத் தெரிய வருகிற ரைம்போவிற்கும் கவிதை மூலமாக நமக்குத் தெரிய வருகிற ரைம்போவிற்கும்தான் எத்தனை வேறுபாடுகள்?

அவர் வாழ்வின் ஒரு கட்டத்தில் ‘‘இலட்சிய வாழ்க்கையின் சாகசக்காரன் நிஜ வாழ்க்கையின் சாகசக்காரனால் பதிலி செய்யப்பட்டான்” என்பது பிரத்யட்ச உண்மை. இளமையின் ஆரம்ப கட்டத்திலேயே ரைம்போவிடம் தெரிந்த நாடோடித்தன்மையின் காரணமாக அவரது சிறிய கிராமப் பகுதியிலிருந்து (Charlesville) பாரிஸ் நகருக்கு ரயிலில் வரும்போது ரயில் கட்டணம் சரிவர செலுத்தாததால் தண்டனைக்காக இரண்டு நாட்கள் காவல் நிலையத்திலிருக்க வேண்டி வந்தது. தொடக்கதிலிருந்தே அவர் ஒரு வக்கிரத்தன்மை மிக்க கலகக்கார மேதையாக இருந்தார் என்பதை வாழ்ந்த வாழ்வும் சரி, எழுதிய எழுத்துக்களும் சரி, நிரூபிக்கின்றன. கலகத் தன்மைதான் A Season in Hell நூலின் அடிப்படையாக இருக்கிறது. கவிதைகள் எழுதாத காரணத்தால் அவரது இருபதாம் வயதிலிருந்து முப்பத்தி ஏழு வயதில் அவர் மரணம் வரையிலான வாழ்க்கையைப் படம் பிடிக்க அவர் எழுதிய கடிதங்களையே அடிப்படை ஆவணங்களாகக் கொள்ள வேண்டி இருக்கிறது. டேட்யூஸ் ரோஸ்விட்சுமே கூட மேற்காட்டிய தீர்வுகள் கவிதைக்கு அடிப்படையாக ரைம்போவின் கடிதங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார். இலக்கியப் புகழ் மற்றும் படைப்பு போதை ஆகியவை என்றுமே ரைம்போவின் சிந்தையை மயக்கி விடவில்லை என்று தெரிகிறது. எனினும் இலக்கியம் குறித்தும் அவர் கவிதை எழுதாமல் விட்டுவிட்டது குறித்தும் எவ்வித பின்வருத்தங்களும் அவருக்கு இருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.

அவரது இலக்கிய அல்லது இலட்சிய வாழ்வு திடீரென்று ஒரு முடிவுக்கு வந்ததற்கு அவருக்கும் கவிஞர் வெர்லெய்னுக்கும் ஏற்பட்ட நட்பும் நட்பு முறிவுமே காரணமாக இருந்தன என்று சொல்லலாம். வெர்லெய்னுக்கும் ரைம்போவிற்குமிடையில் இருந்தது நட்பு என்று குறிப்பதை விட உறவு என்று குறிப்பிடுவதே சாலப் பொருந்தும். இந்த உறவு காரணமாக வெர்லெய்னின் மணவாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டது. ரைம்போவின் உறவு ஏற்பட்ட பிறகு வெர்லெய்ன் பெல்ஜியத்திலும் ஃபிரான்சிலும் நாடோடி வாழ்க்கை மேற்கொண்டார் சாக்கடைக்கும் மதுபான விடுதிக்கும் இடையிலாய் அலைக்கழிந்தபடி. ஏனென்றால் அலைக்கழிப்பு என்பதே ரைம்போவின் வாழ்க்கைக்கு ஆதார ஸ்ருதியாய் இருந்தது. அலைக்கழிக்கப்படாமல் ரைம்போ சொற்ப காலம் கூட இருக்கவில்லை. பெல்ஜியத்தில் இருந்த சமயத்தில் ரைம்போவின் பிரிவைத் தாங்கவியலாத வெர்லெய்ன் இரண்டு முறை ரைம்போவைக் கொல்ல முயன்றார். இரண்டாவது முறை ஒரு மதுபான விடுதியில் ரைம்போவைக் நோக்கி துப்பாக்கியால் சுட்ட போது இடது கையில் குண்டு பாய்ந்தது. ரைம்போவைக் கொலை செய்ய முயன்றதற்காக சில காலம் வெர்லெய்ன் சிறையிலிருந்தார். இந்தக் கசப்பான அனுபவங்கள்தான் ரைம்போவின் உரைநடை எழுத்தான A Season in Hell என்ற நூலை எழுதத் தூண்டின. இந்த உறவு முறிவிற்குப் பிறகும் கூட ரைம்போ வெர்லெய்னுக்கு இரண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார் பயனின்றி. இலக்கற்ற அலைதல்களும் நோக்கமற்ற பயணங்களும் ரைம்போவை எகிப்து நோக்கிப் பயணிக்க வைத்தன. இதற்கு முன் ரைம்போ ராணுவத்தில் சேர்ந்த நிகழ்ச்சி நினைவு கூறப்பட வேண்டும்.

1876ஆம் ஆண்டின் வசந்த காலத்தின் போது ரைம்போ டச்சு ராணுவத்தில் சேர்ந்து பாட்டாவியா என்ற பிரதேசம் வரை பயணம் செய்யவும் செய்தார். ஆயினும் ராணுவத்திலிருந்து ஓடிப்போய் ஐரோப்பாவை நோக்கி நடந்தே திரும்பினார். வியன்னாவில் 1877ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டு ஆஸ்திரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஸ்வீடன் தேசத்தையும் டென்மார்க்கையும் பயணம் செய்து கடந்த பிறகு எகிப்து செல்ல பயனின்றி முயற்சி செய்தார். 1878இல் சைப்ரஸ் தீவில் ஒரு கல் உடைக்கும் குவாரியில் சிறிது காலம் மேஸ்திரியாக பணியாற்றினார். இத்தகைய நிலைமைகளில் வேறு விதமான இலக்கியவாதியாக இருந்திருப்பின் கழிவிரக்கம் கொண்டிருக்கும் எண்ணற்ற சாத்தியங்கள் உள்ளன.

பிறகு சைப்ரசிலிருந்து 1880ஆம் ஆண்டு எகிப்துக்குப் பயணமானார். எகிப்திலிருந்து ஏடனுக்குச் சென்றார். ஏடன் நகரில் காஃபிக் கொட்டை கொள்முதல் செய்யும் ஒரு ஏற்றுமதிக் கம்பெனியில் பணி புரிந்தார். அந்தக் கம்பெனியின் கொள்முதலாளராக சோமாலியா நாட்டிற்குச் சென்று சோமாலியாவை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப் பயணங்களைப் பற்றி The Geographic Society க்கு அறிக்கை எழுதி அனுப்பினார். ரைம்போவின் ஆய்வுப் பயணங்கள் மேன்மேலும் ஆபத்தானவையாக மாறின. 1887ஆம் ஆண்டு சோவா(Choa) நாட்டு அரசரான மெனலிக்கிற்கு (Menelik)பழைய துப்பாக்கிகளை ஐரோப்பாவிலிருந்து கொள் முதல் செய்து விற்றார். ஆனால் மெனிலிக் பணம் தராது ஏமாற்றியதால் பெரும் பண நஷ்டம் அடைந்தார் ரைம்போ. இது மட்டுமன்றி இந்த வியாபாரத்தில் அவரது கூட்டாளி இறந்து போனதும் அவரது நஷ்டத்திற்குக் காரணம் என்று ரைம்போ குறிப்பிட்டார்.

இந்தப் பயணக் காலங்களிலும் சரி, அரேபியப் பாலை வனங்களில் அவர் பணியாற்றிய காலத்திலும் சரி அவரது இலக்கிய மற்றும் கவிதை வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. பின் வருத்தம் கொள்ளவுமில்லை. இந்த காலகட்டத்தில் அவர் எந்த வித இலக்கியப் புத்தகங்களையும் படிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. தன் குடும்பத்தினர் வழியாக அவர் ஆர்டர் செய்த புத்தகங்கள் சகலமும் செய்முறைப் பயிற்சி விளக்க ஏடுகள். பெரும்பாலும் அவர் ஆர்டர் செய்த புத்தகங்கள் புதுவித அறிவியலையோ, தொழில் நுணுக்கத்தையோ கற்றுத் தரும் நூல்களாக இருந்தன. ஒரு சமயம் பாரிஸ் நகர தொலை பேசி புத்தகத்தை அனுப்பச் சொல்லி ஒரு கடிதத்தில் கேட்டிருக்கிறார். ஒரு முறை அவரது குடும்பத்தினர் அவருக்கு ஃபிரெஞ்சு அரசியல் பற்றி கடிதம் வாயிலாக ஏதோ செய்தியை எழுதியிருக்க ரைம்போ அதற்குப் பதில் எழுதுகிறார்.

“You write to me about political news. If you knew how indifferent I am all to that. For more than two years I haven’t touched a newspaper. All these debates are for the present without meaning for me. Like the Moslems, I know that what happens happens, and that is all.”

(6 May 1883)

1888லிருந்து 1891வரையில் மீண்டும் காஃபி ஏற்றுமதி செய்யும் வேறு ஒரு நிறுவனத்திற்காக ஹாராரில் வேலை பார்த்தார். மூட்டு வாதத்தினாலும் கால் பகுதியில் வீங்கிப் பெருத்த ரத்தக் குழாய்களினாலும் பெரும் அல்லல் பட்டார். அவர் பணியாற்றிய முஸ்லிம் நாடுகளில் நீக்ரோக்கள் வசித்த பிரதேசத்தில் மருத்துவர்கள் யாரும் இருக்கவில்லை. அரேபிய மொழி கற்றுக் கொள்வதற்கு முயன்று அதற்கான துணை நூலை வாங்கி அனுப்பும்படி தன் குடும்பத்தாரிடம் வேண்டினார். ஒரு கடித்தை அனுப்பிப் பதில் பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேலாகிறது என்று மற்றொரு கடிதத்தில் எழுதினார். தொடக்கத்தில் எகிப்தில் அவருக்குக் கிடைத்த குறை ஊதியங்களைப் பார்க்கையில் அவர் வாழ்வின் இறுதி வருடங்களில் சொல்லிக் கொள்ளும்படியான ஊதியம் கிடைத்ததால் சிறிது பணத்தை அவர் சேமிக்கவும் செய்தார். திருமணம் செய்து கொள்வது பற்றி அவரது தாயாருக்கு ஒரு தனிக்கடிதம் எழுதி இப்படி அலைக்கழிப்புக்கு ஆளாகும் ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்ள எந்தப் பெண்ணும் முன்வருவாளா என்றும் கேட்டார். ராணுவ சேவை பற்றியும் பிறிதொரு கடிதத்தில் குறிப்பு காணப்படுகிறது..

பன்னிரண்டிலிருந்து பதிமூன்றாயிரம் ஃபிரான்க்குகளை தங்கக் காசுகளாக அவரது இடுப்பு பெல்ட்டிலேயே வைத்து சுமந்து செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இந்த சேமிப்புப் பணமும் கூட அவருக்கு தொடர்ச்சியான இடர்களைத்தான் கொணர்கிறது என வருந்தி எழுதினார். (எட்டுக் கிலோ தங்க நாணயங்களை இடுப்பில் கட்டிச் சுமந்து வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது) யாரையும் நம்புவதற்கில்லை என்பது ஒரு புறம், மறுபுறம் உள்ளூர் கருவூலத்தில் வட்டி இல்லாமல் மாத்திரமே பணத்தை இட்டு வைக்க முடியும் என்கிற நிலை.

உலகிலே வேறு எந்தப் பகுதியையும் விட ஏடனில்தான் கோடை காலத்தின் கடுமை அதிகம். ஐரோப்பிய சீதோஷ்ணத்தில் வாழ்ந்து பழகிய ரைம்போ அந்தக் கோடையை எப்படி எதிர் கொண்டிருப்பார் என்று கற்பனை செய்து மாத்திரமே பார்க்க முடியும். ஒரு தீவிரமான கவிஞன் கோந்துப் பிசின், நெருப்புக் கோழியின் இறகுகள், தந்தம், பதனிடப்பட்ட தோல், கிராம்பு ஆகிய பொருள்களை ஒரு ஏற்றுமதி கம்பெனிக்காக வாங்குவதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். உலகின் வேறு பிரதேசங்களில் ஐந்து வருடங்களில் ஏற்படும் முதுமையானது ஒரு வருடத்தில் ஒருவருக்கு வந்து விடும் அளவு மோசமான சீதோஷ்ணம் ஏடனில் நிலவியது. ஆயினும் ரைம்போ தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார் அங்கே. ஒரு சமயம் அவரது வாழ்க்கை நிஜமாகவே ஒரு பீதிக்கனவாய் இருப்பதாக உணர்ந்து எழுதினார். மேலும் இவ்வளவு வெப்பத்தில் (செங்கடல் பகுதியில்) இருந்து பழகிய ஒருவர் ஐரோப்பாவிற்குத் திரும்பிச் சென்றால் ஐரோப்பாவின் கடுங்குளிர் காலத்தில் நுரையீரல் வியாதி வந்து விரைவில் இறந்து விடும் ஆபத்து இருக்கிறது. வணிகவியல் அகராதியையும் கடல் பிரயாண அகராதியையும் புனித குர்ஆனையும் 1885ஆம் ஆண்டு வாக்கில் ரைம்போ படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

1887ஆம் ஆண்டு வாக்கில் கெய்ரோ நகருக்கு வந்து சேர்ந்த ரைம்போ மூட்டு வாதத்தினால் மிகுந்து சிரமத்திற்குள்ளாகிறார். இடது கால் அவருக்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நீக்ரோக்களின் மத்தியில் அவர்களின் அசுத்தமான உணவை சாப்பிட்டபடி, அவர்களின் விசுவாசமின்மையாலும் மடத்தனங்களாலும் உண்டாகும் அசௌகரியங்களைப் பொறுத்துக் கொண்டு ரைம்போ வாழ்ந்து கொண்டிருந்தார். அந்த நீக்ரோக்களின் நிலை மேம்பட ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார். ஆனால் அந்த நீக்ரோக்கள் ரைம்போவை சுரண்டப் பார்த்ததாய் எழுதினார்.

“… how wretched my life is without a family, without intellectual occupation, lost in the midst of Negroes whose fate I would like to improve, but who try to exploit you and make it impossible for you to carry out your business swiftly.”

(4 August 1888)

ஆறு மாதங்கள் மழை பெய்து பாக்கி ஆறு மாதங்கள் எரிக்கும் கோடை காலமாய் இருக்கக் கூடிய பிரதேசங்களுக்கெல்லாம் எவ்வித வெளிப்படையான இலக்குமின்றி பயணித்துக் கொண்டிருந்தார். நாம் போக விரும்பாத இடங்களுக்குத்தான் செல்கிறோம், நாம் செய்ய விரும்பாத காரியங்களைத்தான் செய்கிறோம், நாம் விரும்பிய விதத்தை விட வித்தியாசமாக, எந்த வித நம்பிக்கையுமின்றி, ஆறுதலுமின்றி இறக்கிறோம் என்று குறிப்பிட்டார் ரைம்போ. அது அவரின் விதியைப் பொறுத்து 100 சதவீதம் நிஜமாக இருந்தது.

வலது காலில் தொடர்ந்து உபத்திரவம் கொடுத்தது மூட்டு வலி. அவருக்கு ஏடனிலோ, ஹாராரிலோ உரிய மருத்துவ உதவி கிடைக்கவில்லை. மேலும் அவரது வலது கால் முட்டியில் ஒரு புற்றுக் கட்டி உண்டாகி அதன் காரணமாய் சொல்லொனாத் துயரத்தையும் வலியையும் அனுபவித்தார். இறுதியில் ஃபிரான்சுக்குத் திரும்பி வந்து மார்செய்லில் உள்ள கன்செப்ஷன் மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சையின் போது அவரது வலது கால் வெட்டி எடுக்கப்பட வேண்டியதாயிற்று. இருப்பினும் சிறிது கால சிகிச்சைக்குப் பிறகு ரைம்போ நவம்பர் 10ஆம் தேதி 1891ஆம் ஆண்டு இறந்து போனார். அவரது முப்பத்தி ஏழாவது வயதில். சரியான உணவின்மையாலும் கால் நடையாகவும் குதிரை மீதும் தொடர்ந்து பாலை வனங்களில் பயணம் செய்ததாலும், சீதோஷ்ணத்திற்குத் தகுந்த உடைகள் இல்லாததாலும் அவரது உடல் நலம் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஃமீண்டும் ரோஸ்விட்ஸின் கவிதைக்குத் திரும்புவோம். கவிதையின் முதல் பகுதி ரைம்போ தேர்ந்தெடுத்து வாழ்ந்த அலைச்சல் மிகுந்த வாழ்க்கையைச் சிலாகித்துச் சொல்வதாகத் தெரிகிறது. நாம் வாளாவிருக்கிறோம் என்று கவிதை குற்றம் சாட்டுகிறது. ரோஸ்விட்ஸ் கவிதையின் மையப் பகுதி, கவிதையைப் புறக்கணித்து ரைம்போ வாழ்ந்த வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. மென்னுணர்வு மிகுந்த இலக்கியவாதி கவிஞனுக்கு இப்படித் தலை கீழாக்கப்பட்ட ஒரு வாழ்க்கை எண்ணிப் பார்க்கவே இயலாதது. கவிதையின் மரணத்திற்குப் பின்னான வாழ்க்கை என்று ரோஸ்விக்ஸ் இதைக் குறிப்பிடுகிறார். நிறைய விஷயங்கள் ரைம்போவின் வாழ்வில் தலைகீழான மாதிரி கவிதைக்கும் மீண்டு திரும்பியிருக்க மாட்டாரா என்ன அவரது ஐம்பது வயதில்?க்ஷ

***

25-03-2003 அன்று மரபு இலக்கிய அமைப்பும் அலயன்ஸ் ஃபிரான்சேஸூம் இணைந்து பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் வடிவம்.

யாசுனாரி கவாபட்டாவின் தூங்கும் அழகிகளின் இல்லம்

kawabatanobel1யாசுனாரி கவாபட்டாவின் தூங்கும் அழகிகளின் இல்லம்

பிரம்மராஜன்

நவீன ஜப்பானிய இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெறும் யாசுனாரி கவாபட்டா (1899-1972). ‘‘ஒரு குடும்பமோ வீடோ இன்றி” வளர்ந்தவர். இளையதலைமுறை நாவலாசிரியரான யூகியோ மிஷீமா, கவாபட்டாவை ‘‘நித்திய பயணி” என்று குறிப்பிட்டார். டோக்கியோ இம்பீரியல் பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் கவாபட்டா. அவரின் நாவல் உலகு மனிதனின் தனிமைப்படுத்தலை சில்லிடும் கவித்துவத்துடன் வெளிப்படுத்துகிறது. 1968 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கவாபட்டாவுக்கு வழங்கப்பட்டது. ஐந்து நாவல்களையும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியிருக்கி றார்.
யூகியோ மிஷீமா, கவாபட்டாவின் ‘‘தூங்கும் அழகிகளின் இல்லம்” நாவலை “esoteric masterpiece” என்று சொன்னதோடன்றி, அதை நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஒப்பிடவும் செய்தார். பொய்யான கூச்சத்தையும், அசூயையும் விலக்கிவிட்டு கவாபட்டா என்ற கலைஞன் எழுதிய மிகச்சிறந்த நாவல் இது. மிக நுண்ணிய விவரணைகள், மற்றும் கச்சிதத் தன்மை ஆகியவை இந்த நாவலை கவாபட்டாவின் பிற நாவல்களில் இருந்து வேறுப்பட்டுத் தெரியவைக்கின்றன. கழுத்தை நெரிக்கும் இறுக்கத்துடன் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
நூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அலாதியான வாசிப்புத்தன்மை கொண்டது. தூங்கும் அழகிகளின் இல்லம் வயோதிகர்களுக்கான பிரத்யேகமான விடுதி. இதில் நிர்வாணமாய் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அழகிய பெண்கள் இருப்பர். விடுதிக்கு வரும் வயோதிகர்கள், தூங்கும் பெண்களுடன் ஓர் இரவு தூங்கலாம். அவளை எழுப்புவதோ மோசமான ரசனையில் அவளை ஏதும் செய்ய முயல்வதோ கூடாது. சக்தி வாய்ந்த தூக்க மாத்திரையாலோ அல்லது போதைப் பொருளாலோ இந்தப் பெண்கள் உறங்க வைக்கப்படுகின்றனர். உறங்குவதற்கு முன் அவர்கள் என்னமாதிரி உடை அணிந்திருந்தனர் என்பதை அறிய முடியாது. எல்லோருமே கண்ணிப் பெண்கள். நீங்கள் யாருடன் உறங்குறீர்களோ அந்தப் பெண்ணை அடுத்து ஏதோ ஒரு நாளில் சந்திக்க நேர்ந்தால் அவளை அடையாளம் கண்டு பேசுவது குற்றம். அந்தப் பெண்களும் தாங்கள் எவருடன் உறங்கினர் என்பதை அறியமாட்டார்கள். உறங்க வைப்பதற்கு முன் எந்த வயோதிகனும் அவர்களைப் பார்த்ததில்லை- பார்க்கவும் கூடாது என்பது விடுதியின் சட்ட திட்டங்களில் ஒன்று. விடுதியில் எவரும் மது அருந்தக்கூடாது.
67வயதாகும் எகுச்சி இந்த விடுதியைப் பற்றி அவருடைய நண்பரான கிகோ மூலமாக அறிகிறார். விடுதிக்கு வருகை தரும் வேறு நபர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யக் கூடாது. நாவலில் எகுச்சி, கிகோ, மற்றொரு ஃபுக்குரோ தவிர வேறு எவருக்கும் பெயர் தரப்படவில்லை. எகுச்சியின் மூன்று மகள்கள், அவரது மனைவி, எகுச்சியின் காதலிகள், தூங்கும் பெண்கள் எவருக்குமே பெயரில்லை.
சாவின் அருகாமையால் உந்தப்பட்டு உருவாகும் காமத்தின் பயங்கரம் எகுச்சியின் மூலம் பதிவு செய்யப்படுகிறது. பாலியல் தன்மைக்கும் மென்மையானதொரு கவித்துவத்தைத் தருகிறது கவாபட்டாவின் நடை. ஐந்து இரவுகளில் எகுச்சி சந்திக்கும் பெண்களை வைத்து எகுச்சியின் சிந்தனைப் பாதைகளை பதிவு செய்கிறது நாவல். ஃப்ளாஷ்பாக்கும் நனவோடையும் (stream of Conciousness) கலந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது. பாலியல் தன்மை(Sexuality)மற்றும் இறப்பு பற்றிய இரட்டைத் தியானங்கள் நாவலின் கருக்களம்.
முதன் முறையாக விடுதிக்கு வருகை தரும் எகுச்சியை நாற்பது வயது மிக்க யுவதி வழிநடத்துகிறாள். தேவைக்கு அதிகமான ஆர்வத்தில் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் அவள் பதில் அளிப்பதில்லை. விடுதியின் மாடி அறையில் வெல்வெட் திரைச்சீலைகளால் சூழப்பட்டு நிர்வாணமாய் இளம் பெண் ஒருத்தி உறங்கிக் கொண்டிருக்கிறாள். அறையை அடைந்து, உடைகளைக் களைந்து அந்தப் பெண்ணின் படுக்கையில் சாய்ந்து கொள்ளும் எகுச்சிக்கு விநோதமான உணர்வு தோன்றுகிறது. தாயின் மார்பிலிருந்து பாலருந்தும் குழந்தையின் மீது வீசும் வாசம் வருவதாக அவர் உணர்கிறார். போர்வையை விலக்கிப் பார்க்கும் போது உறங்கும் அந்தப் பெண் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருக்க முடியாது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்கிறார் எகுச்சி. அவரது மூன்றாவது மகள் குழந்தையாக இருந்தபோது அவளை தூக்கி வைத்திருந்த பின், உடையை மாற்றிக் கொள்ளாமல் ஒரு கெய்ஷாப் பெண்ணிடம் செல்கிறார். அவரிடம் பால் வாசனையை முகர்ந்த மலட்டு கெய்ஷா எகுச்சியை மறுத்து அனுப்பி விடுகி றாள். பிஸினஸ் எக்சிகியூட்டிவ்வின் மத்திய வயது மனைவியுடன் எகுச்சி நடனமாடிக் கொண்டிருக்கிறார். தன்னை முத்திமிடக்கூடிய நெருக்கமுள்ள ஆண்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிப் பார்த்தபின் அவள் உறங்குவது வழக்கம் என்று கூறுகிறாள். விரல்விட்டு எண்ணினால் மனம் அந்த ஆண்களை வடிவப் படிமமாகக் கொண்டு வராதா? வெறும் எண்ணிக்கையுடன் நின்று விடுமா என்று தனக்குள் கேட்டுக் கொள்கிறா.
அவருடன் உறங்கும் இந்த இளம் பெண் எகுச்சியின் நினைவுச் சங்கிலியில் அவர் சந்தித்த பிற பெண்களை பிணைத்து விடுகிறாள். விடுதிக்கு வெளியே கடல் அலைகள் மோதி உடைகின்றன. காற்று ஊளையிடுகிறது. கியோடோவில் தனது கல்லூரிப்படிப்பு முடிந்து வேலைக்குப் போகத் தொடங்கிய சமயம் இளம் பெண் ஒருத்தியுடன் ஓடிப் போக திட்டமிடு கிறார். ரயில் பாதை வழியாக தப்பித்துச் செல்லும் போது பல சின்னச் சின்ன குகைகளைக் கடந்து வெளியே வருகிறார்கள். ஒவ்வொரு முறை வெளியே வரும்போதும் அந்த மலைப் பகுதியில் ஒரு வானவில் தோன்றுகிறது. வானவில்களை ஒவ்வொரு முறையும் வியக்கிறாள் அந்தப் பெண். தன்னுடைய 67வருட வாழ்க்கையில் சந்தித்த பெண்களில், அந்தப் பெண்ணுடையதைப் போன்றதான மிகச்சுத்தமான உடல் உட்பாகங்களைப் பார்த்ததில்லை என்று இப்போது நினைவு கூர்கிறார். இவ்வளவு மென்மையான நினைவுகளை துவக்கி விட்ட உறங்கும் இந்தப் பெண்ணை நன்றியுடன் நோக்குகிறார். விடுதியில் தரப்படும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உறங்கப் போகிறார்.
இரண்டு வாரங்கள் கழித்து விடுதியில் இருந்து தொலைபேசியில் பேசுகிறாள் விடுதியின் மத்திய வயதுப் பெண். எகுச்சியை இரவு பதினொரு மணிக்கு மேல் வரும்படி சொல்கிறாள். அவருடைய முதல் வருகை எவ்விதமான அசிங்கமான நினைவுகளையும் உண்டாக்கவில்லை என்பதால் இரண்டாம் முறை போகத் தீர்மானிக்கிறார். உறங்கும் பெண்ணுடன் உறங்குவது மனிதத்தன்மையானதே அல்லவென்று வாதிடுகிறார். வயோதிகர்கள் இந்த விடுதியைத் தேடிவரக் காரணம் உறங்கும் இந்தப் பெண்கள் வயதே ஆகாத விடுதலையைத் தருவதுதான் என்று நினைக்கிறார் எகுச்சி. அவர்கள் உறங்கியபடி இருந்தாலும் வயோதிகர்களின் கீழ்த்தன்மையையும், இயலாமையையும் நினைவுறுத்தும் சின்னங்களாக இருக்கின்றனர். இருப்பினும் இப்பேர்பட்ட இளமை மற்றும் தூய்மையின் முன்னிலையில் வயோதிகர்கள் அடையும் அவமானத்தை அப்பெண்களால் அறிய முடியாது. வயோதிகர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. சென்ற வருடம் இதே நேரத்தில் வெள்ளை கெமிலியா கோவிலுக்கு தனது மூன்றாவது மகளுடன் சென்றார் எகுச்சி. அவளுக்குத் திருமணம் நடப்பதற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது. மிக புத்திசாலியான அவரது மகள் பல இளைஞர்களுடன் பழகுவதை எகுச்சியோ எகுச்சியின் மனைவியோ கண்டிப்ப தில்லை. எதிர்பாராத விதமாக அவரது மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறா ளோ அந்த இளைஞனால் அவளது கன்னித்தன்மையை இழக்கி றாள். இந்நிகழ்ச்சியினால் பெரிதும் பாதிக்கப்படுகிற தனது மகளை ஒரு மாற்றத்திற்காய் வெள்ளை கெமிலியா மரக்கோயி லுக்கு அழைத்து வருகிறார். அந்தக் கோயில் நகரின் மிக இரைச்சலான, மோசமான பகுதியில் அமைந்திருக்கிறது. நானூறு வருடம் முதிர்ந்த அந்த மரம் ஐந்து நிறங்களில் பூக்கிறது. அந்தப் புராதன மரத்திற்குள் என்னவிதமான கதகதப்பு இருக்கக்கூடும் என்று வியக்கிறார்.தேனீக்களின் கூட்டமொன்று மரத்தண்டிற்குள் இருப்பது போல மென்மை யான கர்ஜனையும் மரத்திற்குள்ளிருந்து வருவதாக அவருக்குத் தோன்றுகிறது.
எட்டே நாட்களில் மூன்றாவது வருகை தருகிறார். இம்முறை அதிகப் ‘‘பயிற்சி இல்லாத” இருபது வயதிற்கும் குறைவான பெண் அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். கோபே நகரில் ஒரு இரவு விடுதியில் நடனப் பெண் ஒருத்தியை அழைத்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு வந்தது எகுச்சிக்கு ஞாபகம் வருகிறது. நிறைய குடித்து விட்டு அவர் உறங்கி விடுகிறார். குடித்தும் தூங்க முடியாத அவள் எகுச்சியின் பயன்படுத்திய அழுக்கான உள்ளாடைகளை சுத்தமாக மடித்து வைத்து விட்டு அதிகாலையில் விடைபெறுகிறாள். அவள் இரண்டு குழந்தைக்குத் தாய் என்பதை எகுச்சியால் நம்ப முடியவில்லை. கோபே நகருக்கு மீண்டும் வந்தால் தன்னைச் சந்திக்கும்படி வேண்டியவள் பிறகு சந்திக்க வேண்டாம் என்று கடிதம் எழுதி விடுகிறாள். எகுச்சியிடம் அவள் பழகும் போது குற்ற உணர்வோ மன உறுத்தலோ இன்றி நடந்து கொண்டது ஆச்சரியத்தைத் தருகிறது. தன்னருகில் உறங்கும் தன் மகள் வயதே இருக்கும் இந்தப் பெண்ணைப் பார்க்கையில் ஆவள் புத்தனின் ஒரு அவதாரமாக இருக்கலாம் என்று நினைக்கிறார். ‘‘இந்தப் பெண்களுடன் உறங்குவது ஒரு ரகசிய புத்தனுடன் உறங்குவது போன்றது” என்று நண்பன் கிகோ சொல்லி இருக்கிறான்.
இதற்கிடையில் விடுதியில் தங்கிய ஃபுக்குரா என்ற ஆள் இறந்து போன செய்தியை அறிகிறார் எகுச்சி. எனினும் ஐந்தாம் முறையாக விடுதிக்கு வருகை தருகிறார். விடுதியில் ஒரு ஆள் இறந்ததால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக தனியாக உறங்க மறுக்கின்றனர் பெண்கள். எனவே எகுச்சி இன்று இரண்டு பெண்களுக்கிடையில் உறங்குகிறார். கறுப்புப் பெண் சற்று வயது முதிர்ந்தவள், சிவப்புப் பெண் இளையவள். அதிகாலை நான்கு மணிக்கு விழிப்புக் கொள்ளும் எகுச்சி, கறுப்புப் பெண் இறந்து போயிருப்பதை அறிகிறார். அவளுக்குத் தரப்பட்ட தூக்க மாத்திரையின் அளவு அதிகமாகப் போயிருக்கலாம். விடுதியின் மத்திய வயதுப் பெண் இறந்துப் போனவளை அறை யிலிருந்து அகற்றுகிறாள். இன்னொரு பெண்தான் இருக்கி றாளே அவளுடன் தொடர்ந்து உறங்கலாமே என்று மத்திய வயதுப் பெண் எகுச்சியிடம் சொல்கிறாள். எகுச்சிக்கு தூங்கு வதற்கு தூக்கமாத்திரை தரப்படுகிறது. கொஞ்ச நேரத்தில் கீழே ஒரு கார் புறப்பட்டுச் செல்கிறது.
இம்மாதிரியான கதைக் கருவை விரசத்தின் சாயல் சிறிதும் விழுந்து விடாமல் எழுத கவாபட்டா போன்ற பெரும் கலை ஞர்களால் தான் முடியும். முதற்பதிப்பு 1969ஆம் ஆண்டு வெளி வந்தது. Edward Seidensticker ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

282

தமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்

Perfect targetதமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்

பிரம்மராஜன்

தமிழ்ச் சிற்றேடுகள் என்று குறிப்பிடும் போது இனி அவற்றை ஏ4 அளவு மத்திய ஏடுகளிலிருந்து பிரித்தறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ”மீடியம் ஈஸ் த மெஸேஜ்'” என்று என்னதான் மக்லூஹன் சொன்னாலும் அது தமிழ்ச்சூழலில் இன்று விஷய கனம் என்பதற்கு பதிலாக மேலோட்டமான தளுக்கு என்றே அறியப்பட்டுள்ளது. குறிப்பாக எழுதுவதற்கு ஏதுமில்லாதபோது சில ”பிளாக்'”(வலைப்பூ) எழுத்தாளர்கள் செய்வது போல ”மொக்கை”ப் பதிவுகளைச் செய்து அவைதான் இன்றைக்கு இன்றியமையாத எழுத்து என்று கதைகட்டிவிட சில ஏ4 ஏடுகள் முயல்கின்றன. ஆனால் இந்த வணிக உத்தியை ஊடுருவி பார்க்கத் தெரியாத அந்தகன் அல்ல நவீன வாசகன். உற்பத்திசாதனங்களின் உபரிநன்மைகளால் அவை பார்வைக்கு மட்டுமே பளிச்சென்று தெரிகின்றன.

ஏ4 அளவு ஏடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதற்குக் காரணம் அச்சகங்களினால் ”சும்மாயிருக்க” முடிவதில்லை என்பது மட்டுமல்ல. எதை வேண்டுமானலும் எழுத வைத்து அதற்கு இலக்கிய சாயம் பூசிவிட முடியும் என்கிற துணிச்சலும் காரணம். மீண்டும் உபரி மதிப்பு குறித்து ஆழ்ந்து அலச வேண்டிய அவசியம் வந்துவிட்டது போல் தெரிகிறது. ”வெட்டி ஒட்டுதல'” மற்றும் வையக வலைத்தளம் அனைவருக்கும் கிடைக்கும்படியாகியிருக்கும் நிலையுடன் இதை வைத்து ஆய்வோமானால் இன்றைய இலக்கிய வெறுமைக்கு நிறைய பதில்கள் கிடைக்கும். ”சும்மா”வுக்காக விசைப்பலகையை நோக அடிப்பவர்கள் பீதிதரும் அளவுக்கு அதிகரித்திருக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் ஐபிஎம் சாஃப்வேர் நிறுவனம் “பொயட்'” என்றொரு கையடக்கமான கவிதை எழுதித் தரும் மென்பொருளைத் தந்தது. அதில் நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான். கவிதை யாருக்கு? ஆண்ஞிபெண் காதல், பிரிவு, போன்ற ஏதாவது ஒரு கவிதைக் கருவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெண் எங்கே வாழ்கிறாள்-மலையகமா கடற்கரைப் பகுதியா? இந்தத் தகவல்களைக் கொடுத்துவிட்டால் போதும் ஒரு நிமிடத்தில் ஒரு கவிதையை ”பொயட்'” நமக்குத் தயாரித்துக் கொடுத்துவிடும். இன்றைக்கு எழுதப்படும் பல கவிதைகள் ”பொயட்” மென்பொருளால் எழுதிவிட முடியும் அளவான தரத்தை மனதில் வைத்து எழுதப்படுவதாகத் தெரிகின்றன. எனவேதான் இன்றைக்கான கவிதைகள் ஏ4 அளவு இதழ்களின் நிரந்தர ”ஃபில்லர்'”களாகப் பங்காற்றுகின்றன. கவிஞன் என்ற உபரிப் பெயரடையை(அ)விருப்புமிக்க முள்கிரீடத்தை ஏற்க விரும்பும் கவிதை உற்பத்தியாளனும் ”மொக்கை'”அரட்டை இதழைத் தாங்கி நிற்கும் தூணாக மாறிவிடுகிறான்.

சரி. இவ்வளவு அபரிமிதமாக உரைநடை(அதிலும் தரப்படுத்தப்பட்டது-அந்த காலத்து சிற்றிதழ்(குறிப்பாக ”பிரக்ஞை'”யில் எழுதப்பட்டது போன்ற உரைநடையன்று) எழுதப்பட்டாலும் நல்ல சிறுகதைகள் கிடைப்பது அரிதாக இருக்கும் காரணம் என்ன? ”நல்ல” என்பதற்கான வரையறை கிளாசிக் என்றே நம்புவோம். நல்ல என்பதைக் கூட விட்டுவிடுவோம். சிறுகதைக்கான குறைந்தபட்ச அலகுகள் கூட வளமான மொழிக்கு தேவையில்லாமல் போய்விடுகிறதா? மயக்கமான சொல்லாடல்களும் ஜடத்துவமான கூறுமுறைகளும்தாம் இன்று சிறுகதைகளின் பண்புகளாகி இருக்கின்றன. ”சீனியர் ரைட்டர்ஸ்” என்று பிதற்றும் எழுத்தாளர்களுக்கு சிறுகதையின் விஷய கனம் புரியாமல் தடுமாறும் போது இளம் படைப்பாளிகள் நிலை பரிதாபத்திற்குரியது. அவர்களை ஏ4 அளவு இதழ்கள் காப்பாற்றாது.காரணம் இல்லாமல் இல்லை. வெறும் சிறுகதைகள் எழுதினால் பிரபலத்தின் சிகரத்தை அடைய முடியுமா?  விசைப்பலகையை சிரமப்படுத்தி, உங்களுக்கு வந்த ”சேட்'” அரட்டைகளை தமிழ்ப்படுத்தி, “வெட்டி ஒட்டி'” தலையணை சைசுக்கு செய்யப்படும் நாவலுக்குத்தானே விருதுகள் எல்லாம் தருகிறார்கள். எதைக் குறி வைத்து எழுதுவான் இன்றைய உரைநடைக்காரன்? உரைநடை எழுதுவதற்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன என்பதைக் கேட்டு உச்சி குளிர்ந்தது. படைப்பூக்கத்திற்கான பூடக வழிகளை கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர்-க்கு எழுதும் உரைநடையை வைத்து கண்டுபிடிக்க இயலாது.

சேஸரே பவேசேவின் கவிதைகள்/The Poetry of Cesare Pavese

pavese-llarge

சேஸரே பவேசேவின் கவிதைகள்

பிரம்மராஜன்

அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறந்த இதாலிய மொழிபெயர்ப்பாளராகவும், நவீன இதாலிய நாவலாசிரியர்களில் குறிப்பிடத் தகுந்தவராகவுமிருந்த சேஸரே பவேசே அடிப்படையில் ஒரு கவிஞர். அதிலும் இடதுசாரிக் கவிஞர். போருக்குப் பின்னான இதாலிய யதார்த்தத்தின் பிரதானமான தோற்றுவாய்களாக அவரது புனைகதைகள் கருதப்படுகின்றன. (The Moon and The Bonfire, The Devil in The Hills) சேஸரே பவேசேவைப் பொருத்தவரை யதார்த்தம் என்பது மீட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புராணிகமாக இருந்தது. அவரைப் பொருத்தவரை ஞாபகம் கொள்வதென்பதே ஒரு வஸ்துவை முதன்முதலாகப் பார்ப்பதைப் போன்றதென்றார். அதனால்தான் அவரது படைப்புகளில் திரும்பத் திரும்ப இடம் பெறும் படிமங்களான மலைகளும், நாட்டுப்புறச் சாலைகளும், வெறிச் சோடிய நகரத்து ரோடுகளும் யதார்த்தமல்லாத ஒரு இலக்கியப் பயன்பாட்டையே பெறுவதாகின்றன.

இதாலியின் பய்ட்மாண்ட் பகுதியில் பிறந்த சேஸரே பவேசேவின் தந்தை ஒரு நீதித்துறை அதிகாரி. ட்யூரின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சேஸரே பவேசே படித்தது ஆங்கிலம் மற்றும் அமெரிக்க இலக்கியம். வால்ட் விட்மேன் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். மாணவப் பருவத்திலிருந்தே தற்கொலை எண்ணங்கள் அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. இதன் காரணமாக அவரால் அவர் சந்தித்த பெண்களுடன் மனநிறைவுள்ள, அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவியலாது போயிற்று. அமெரிக்காவின் கொலம்பியப் பல்கலைக் கழகத்தில் படிப்பு ஊக்கத்தொகை பெற முயன்றது வீணாய்ப் போயிற்று. பிறகு பகுதி நேர ஆசிரியர் வேலை பார்க்கத் தொடங்கி அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த பெண்ணைக் கண்டுபிடித்து விருப்பத்தையும் சொன்னார்–திரும்பத் திரும்ப. ஒரு இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி, பின் என்னவ்டி (Ennaudi) என்னும் பிரபல வெளியீட்டு நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார். பாஸிச எதிர்ப்புச் செயல்பாடுகளுக்காக 1935ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கெலாப்ரியா என்னுமிடத்தில் ஓராண்டு சிறை வைக்கப்பட்டார். சேஸரே பவேசே தனது பெரும்பான்மையான கவிதைகளையும் டயரியையும் இந்த காலகட்டத்தில்தான் எழுதினார்.

அமெரிக்க நடிகை  Constance Dowlingவுடனான உறவுச் சிக்கல்களின் விளைவாக ட்யூரின் ஹோட்டல் ஒன்றில் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்னால் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்ணுக்கு தொலை பேசியில் பேசியது ஒரு நாடகத்தை அவர் நிறைவூட்டுவது போல நிஜவாழ்க்கையில் அமைந்து போயிற்று.

கவிதை மற்றும் புனைகதை ஆகிய இரு துறைகளிலும் இயங்கிய பலருக்கு நிகழ்ந்தது போல சேஸரே பவேசேவுக்கும் அவரின் கவிதை சார்ந்த முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அல்லது அவரது புனைகதைகள் அவரது கவிதைகளுக்கான புகழை அபகரித்துக் கொண்டன எனலாம். குறிப்பாக The Moon And The Bonfires, Among Women Only  ஆகிய இரு நாவல்களும் நவீன ஐரோப்பிய நாவல்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அவர் 1935ஆம் ஆண்டிலிருந்து  அவர் தற்கொலை செய்து கொண்ட 1950ஆம் ஆண்டு வரையில்  எழுதிய டயரி இந்த நாவல்கள் அளவுக்கு பிரபலமடைந்தது.

ஆனால் சேஸரே பவேசேவின் ஆதி மற்றும் இறுதி படைப்புத் தூண்டல்கள் யாவும் கவிதை சார்ந்தவையே. இது மட்டுமின்றி கவிதைக்கலை பற்றி இரு முக்கிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதில்  The Poet’s Craftஎன்ற கட்டுரையில் வால்ட் விட்மனின் Leaves Of Grass பற்றியும் பாதலெரின் (Baudelaire) Flowers of Evil பற்றியும் கொண்ட ஆரம்ப காலப் பொறாமைகளை மனம் விட்டு ஒப்புக் கொள்கிறார். ”ஒவ்வொரு கவிதைத் தூண்டுதலும், அது எவ்வளவு உன்னதமானதாய் இருந்த போதிலும், அறம் சார்ந்த கோரிக்கைகளை எதிர் கொள்ளும் முயற்சியே” என்று குறிப்பிட்டார். அவரது கவிதை மொழி ஒரு தெளிவான, தனித்துத் தெரிகிற வலுவான மொழி. அவர் எந்த அம்சத்திற்காக வால்ட் விட்மனைச் சிறப்பித்து எழுதினாரோ அதே அம்சம் அவர் கவிதைகளினூடாய் வெளிப்பாடு காண்கிறது இரட்டை தீர்க்கதரிசன நோக்கு. ஐரோப்பிய மறைபொருள்தன்மையான தாக்கங்களிலிருந்து தப்பிக்கவே அவர் அமெரிக்க நேச்சுரலிஸ இயக்கத்து படைப்பாளிகளுடன் தன்னைப் பிணைத்துப் பார்த்துக் கொண்டார். இயற்கையை அனுபவம் கொள்வதன் மூலமாகக் கிடைக்கும் ஒரு ஆன்மீக  உணர்வு அவருக்கு உவப்பாக இருந்தது. புராணிகமே அவரைப் பொருத்தவரை சாதாரண ஜட உலகத்திலிருந்துதான் உருவாகிறதென்ற கருத்துக் கொண்டிருந்தார் சேஸரே பவேசே. இந்த அனுபவத்தில் தனக்கு சோதனையாளர்கள் மற்றும் துணிகரச்செயல்காரர்களுடன் பகிர்ந்து கொள்ள ஏதுமில்லை என்றறிவித்தார். வியத்தலுணர்வு பெற்று ஒரு அற்புத அனுபவ கணத்தை அடைய ஒரு வஸ்துவை பயமின்றி வெறித்துப் பார்த்தலே போதுமானது என்றார்

“I have nothing in common with experimentalists, adventurers, with those who travel in strange regions. The surest, and the quickest way for us to arouse the sense of wonder is to stare, unafraid, at a single object. Suddenly-miraculously-it will look like something we have never seen before”.

இந்த மேற்கோளில் தெரிவது என்னவென்றால் சேஸரே பவேசே புனைவை விட நிஜத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதே. ஆனால் அவரது நேச்சுரலிசம் தொடக்க காலத்தியது என்றால் அவரது முதிர்ச்சிக் கட்டம் ஸிம்பலிஸம் என்பதைத் தெளிவாக்கிவிட வேண்டிய அவசியமுள்ளது. அவரது இரட்டை தீர்க்கதரிசனப் பார்வைக்கும் இந்த நேச்சுரலிஸ-ஸிம்பலிஸ இருமைக்கும் தொடர்பிருப்பதை  உணர முடியும். பெரும்பான்மைக் கவிதைகள் சேஸரே பவேசேவின் பிள்ளைப்பிராய நினைவுகளை அசைபோடுகின்றன. முதிர்ச்சிக் காலத்தவை ஒரு மனிதனின் முதிர்ச்சி பற்றிய கேள்விகளை உள்ளடக்கியவை. பெரும்பாலும் எல்லாக் கவிதைகளும்  கிராமப் புற நேச்சுரலிஸ பின்னணியில் விவரிக் கப்பட்டிருக்கின்றன.

காலத்தின் தொடர்ச்சி பற்றிய கூர்ந்த பிரக்ஞையும் அவர் கவிதைகளில் காணப்படுகின்றன. ”காலத்தின் வெளியிலாகப் பேசுவது” பற்றிய குறிப்பொன்று அவரது டயரியில் உள்ளது.

பெண்கள் குறித்தான சேஸரே பவேசேவின் அணுகு முறை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒன்று. ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட பெண்ணியவாதிக்கு அவரது அணுகல் உவப்பானதாய் இருக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் கூட அவரது நாவலான (Among Women Only) 1931ஆம் ஆண்டு எழுதப்பட்ட கவிதையான (Fallen Women)யும் பெண்ணிய பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றிய கூர்மையான மதிப்பீடுகள் கொண்ட படைப்புகள். விலைமாதர்களைப் பற்றி அவர் எழுதிய கவிதைகள் (Deola’s Thinking, Deola’s Return) சுவைக்கேடு மிக்கவை என சில விமர்சகர்களால் அன்றைய காலகட்டத்தில் கருதப்பட்டவை. சேஸரே பவேசேவின் கவிதையில் இடம் பெறும் நபர்களும் சரி புனைகதை மாந்தர்களும் சரி தனிமையாகவே இருக்கின்றனர்.

அசிரத்தை

இந்த வெறுப்பு மலர்ந்திருக்கிறது வாழும் காதலைப் போல,

துக்கித்துக் கொண்டு, தள் களைப்பை கவனித்துபடி.

அது ஒரு முகத்தைத் தேடுகிறது, அது தசையைத் தேடுகிறது, ஏதோ அதுவே காதல் போல.

இந்த உலகியல் தசை மற்றும் பேசிய அந்தக் குரல்கள்

மரித்துவிட்டன, சகலமும் அஞ்சி நடுங்கி ஒதுங்கியாயிற்று,

சகல வாழ்வும் ஒரு குரலின் மீது தொங்கிக்கொண்டிருக்கிறது.

நாட்கள் செல்கின்றன ஒருவித சோகப் பெருமகிழ்வில்

அந்த துக்கக் குரலின் வருடலில் அது திரும்புகிறது

மற்றும் நமது முகங்களின் குருதியை வடித்தபடி.

இனிமை இல்லாமல் இல்லை

அந்தக் குரல் மனதிடம் வருகிறது களைத்துப் போய்

நடுக்கத்துடன். ஒரு முறை எனக்காய் நடுங்கிற்றது.

ஆனால் தசை நடுங்குவதில்லை. காதல் மாத்திரமே

அதை ஒளிப்படுத்த முடியும்,

இந்த வெறுப்பு அதைத் தேடிப்பிடிக்கிறது.

உலகின் உடமை அனைத்தும், தசைகள் யாவும், குரல்கள் யாவும்

அவ்வுடல் மற்றும் கண்களின் எரிக்கும் அணைப்புக்கு இணையாக முடியாது. அந்தக் கசந்த பெருமகிழ்வில்

அது தன்னையே மாய்க்கிறது,

இவ்வெறுப்பு இன்னும் கூட கண்டுபிடிக்கிறது

ஒவ்வொரு நாளும் ஒரு பார்வையை,

ஒரு உடைந்த வார்த்தையை.

பிறகு அவற்றைப் பற்றிக் கொள்கிறது,

பசியுடன், காதலைப் போல.

இரவு சந்தோஷங்கள்

நாங்களும் கூட இரவினை முகர்வதற்கு நிற்கிறோம்

காற்று மிகவும் மோசமாக இருக்கையில். சாலைகள்

காற்றால் ஜில்லிட்டிருக்க, ஒவ்வொரு வாசனையும் உலர்ந்து விட்டது.

எங்கள் நாசிகள் மினுங்கும் வெளிச்சத்திற்கு உயர்த்தப் பட்டுள்ளன.

இருளில் காத்திருக்கும் ஒரு வீடு நம் அனைவருக்கும் உண்டு திரும்புவதற்கு. இருட்டில் ஒரு பெண் நமக்காகக் காத்திருக்கிறாள் படுத்துறங்கியபடி வாசனைகளால் அறை வெதுவெதுக்கிறது.

உறங்கியபடி ஸ்வாசித்துக்கொண்டிருக்கும் பெண் காற்றினைப் பற்றி ஏதும் அறிந்திலாள், அவள் உடலின் கதகதப்பு நமக்குள் முணுமுணுக்கும் குருதியை ஒத்ததே.

காற்று நம்மைக் கழுவுகிறது, இருளில் திறந்தபடி கிடக்கும் சாலைகளின் ஆழத்திலிருந்து வருகிறது அது.

மினுங்கும் வெளிச்சங்கள் மற்றும்

நமது விடைத்த நாசிகள் ஒன்றையொன்று

நேராக எதிர்கொள்கின்றன.

ஒவ்வொரு வாசனையும் ஒரு ஞாபகம்.

அப்பால் இருளிலிருந்து காற்று நகரில் கிடக்கும் ஏதொன்றையும் இடம் மாற்றுகிறது.

கீழே வயல்கள் மற்றும் மலைகள்

அங்கே சூரியனால் எரிக்கப்பட்ட புல் மாத்திரமே உண்டு.

மற்றும் ஓதத்தால் கறுத்துப் போன மண்.

நம் ஞாபகம் ஒரு கசந்த சுவை, பிளக்கப்பட்ட பூமியால் குளிர்காலத்தில் வெளியேற்றப்படும் ஒரு சிறு இனிமை

கீழிருந்து வரும் ஒரு மூச்சு.

எல்லா வாசனையும் உலர்ந்து விட்டது இருளில்

மற்றும் நகரினுள் காற்று மாத்திரமே நம்மை அடைய முடியும்.

இன்றிரவு நாம் திரும்பிச் செல்வோம்  உறங்கும் அந்தப் பெண்ணிடம்

சில்லிடும் விரல்களால் அவளின் உடலை ஆராய்ந்தபடி,

மேலும் வெப்பம் நமது குருதியை உலுக்கும்.

பூமியின் வெப்பம்

ஓதத்தால் கறுப்பாக்கப்பட்டு வாழ்வின் ஒரு மூச்சு.

அவளும் கூட சூரியனால் வெதுவெதுப்பாக்கப்பட்டிருக்கிறாள்

மேலும் இப்போது அவளது நிர்வாணத்தில்

அவளின் உச்ச இனிமை வாழ்வு

பகலில் அது மறைந்து விடுகிறது,

அது மண் ருசியுடன் இருக்கிறது.

சந்திப்பு

அந்தக் கடினமான மலைகள் என் உடலை உருவாக்கின

அவை அதை பலவிதமான ஞாபகங்களினால் உலுக்குகின்றன, தந்தன எனக்கு

அந்தப் பெண்ணின் அற்புதத்தினை நான் சிருஷ்டிக்கிறேன் எனபதை அவள்

அறியாள், ஆனால் நான் அவளைப் புரிந்து கொள்ளவில்லை.

ஒரு நாள் மாலை அவளை நான் சந்தித்தேன்.

இரு அர்த்தம் கொண்ட நட்ஷத்திரங்களின் கீழே

அவள் ஒரு லேசான வடிவம்,

கோடையின் பனிப்படலத்தில்.

சுற்றிலுமாக இந்த மலைகளின் முணுமுணுப்பு,

நிழலை விட ஆழமாக,

ஒரே நேரத்தில் அந்த மலைகளிலிருந்து வருவது போல ஒரு ஓசை,

ஒரு குரல் ஒரே சமயம் தெளிவாகவும்  கடூரமாகவும்,

இழந்து போன காலங்களிலிருந்து வந்த ஒரு குரல்.

சில சமயங்களில் நான் காண்கிறேன் அவளை,

மேலும் அவள் என் முன்னே வாழ்கிறாள்

தெள்ளத் தெளிவாக, மாறுதலேயில்லாது,

ஒரு ஞாபகத்தைப் போல.

அவளை எப்போதும் என்னால் மறக்க முடிந்ததில்லை. அவளின் நிஜம்

எப்பொழுதுமே என்னிடமிருந்து நழுவுகிறது.

என்னை வெகு தொலைவிற்குக் கொண்டு செல்கிறது.

அவள் அழகானவளா என்று எனக்குத் தெரியாது. பெண்களுக்கிடையில் அவள் இளையவள்.

அவள் பற்றிய சிந்தனை ஒரு தூரத்து ஞாபகத்தினை நினைவு கூர்கிறது

மலைகளுக்கு இடையே வாழப்பட்ட குழந்தைப்பிராயம்,

அவள் அவ்வளவு இளையவள். அவள் விடியலைப் போலிருக்கிறாள்.

தொலைவான காலைகளின் எல்லா தூரத்து வானங்களும்

அவள் கண்களிலிருந்து எனக்கு அழைப்பு விடுக்கின்றன.

அந்தக் கண்கள் ஒரு தெளிவு கூடிய ஒளியை வெளிப்படுத்துகின்றன

இந்த மலைகளின் மீது விடியல் வெளிப்படுத்தியதை விட.

எனக்கு அத்யந்தமான இந்த விஷயங்களின் ஆழங்களிலிருந்து அவளை உருவாக்கினேன்,

நான் புரிந்து கொள்ளாத ஏதோ ஒன்றாகவே அவள் இருக்கிறாள்.

டி.க்கான இரு கவிதைகள்

ஏரி மருங்கின் மரங்கள் கண்டன

உன்னை ஒரு காலைப் போதில்

கூழாங்கற்கள் ஆடுகள் வியர்வை

எல்லாம் காலத்தின் வெளியில்,

ஏரியின் நீரைப் போல்.

நாட்களின் துக்கமும் குமுறலும்

ஏரியை அசங்குவதில்லை.

காலைப் போதுகள் கடந்து விடும்

துயரம் மறைந்து விடும்,

பிற கற்கள் வியர்வை

உன் குருதியுள் கடிக்கின்றன-

இவை நீடிக்கா மாட்டா.

நீ மீண்டும் எதையாவது கண்டுபிடிப்பாய்,

காலையொன்று வரும்

அப்போது குமுறலுக்கப்பால்

நீ தன்னந்தனியாய் ஏரி மீதிருப்பாய்

நீ காதலும் தான்

பிறரைப் போலவே குருதியாலும் மண்ணாலும்

ஆகியிருக்கிறாய்

வீட்டின் வாசலைக் கடக்காத யாரோ ஒருவரைப் போல

நீ நடக்கிறாய்

நீ காத்திருப்பது போல பார்க்கிறாய்

ஆனால் பார்ப்பதில்லை

துக்கித்து பேச்சற்றிருக்கும் பூமிதான் நீ

நொதித்தல் சோர்வு நீ அறிவாய்

உன்னிடம் சொற்களுண்டு–நீ நடக்கிறாய்

மற்றும் காத்திருக்கிறாய்.

காதல்தான் உன் குருதி–வேறெதுவுமல்ல.

வேசிப் பெண்கள்

அவர்களை அப்படி நடத்துவது சரியே.

நிச்சயமாக அவர்களுக்காகப் பரிதாபப்பட்டு

பின் படுக்கைக்கு அழைத்துச் செல்வதை விட.

”அது நம் வாழ்வனைத்திலும் மிக வலுவான தேவை”-

ஆனால் சொல்லுங்கள் பதிலாய் ”நாம் இதில் தீர்த்தொதுக்கப்பட்டுள்ளோம்

ஆயினும் தொழிலில் அந்தப் பெண் நுழைந்தால் நான் கடுங்கோபத்தால் தொண்டை அடைத்துப் போவேன் அல்லது வஞ்சந்தீர்ப்பேன்”

கருணை எப்போதும் கால வீணடிப்பு,

வாழ்க்கை பெரியது, கருணை அதை மாற்றாது,

மௌனத்தில் உங்கள் பற்களை நரநரத்துக் கடிப்பது மேல்.

ஒரு மாலைப்போதில்

பயணம் செய்தேன் ரெயிலொன்றில்

அதில் அமர்ந்திருந்தாள்

அந்த யுவதி, கௌரவமாய் உடையணிந்து, மேக்கப் செய்து,

முகத்தில் ஒரு தீவிர பார்வையுடன்.

வெளியில், வெளிர் விளக்குகளும் சாம்பல்-பச்சை பூமியும்

உலகினை தேய்த்தழித்தன. நாங்கள் தனித்திருந்தோம்

மூன்றாம் வகுப்புப் பெட்டியில், நானும் அந்தப் பெண்ணும்,

நான் இளையவனாய்.

அந்த பிராயத்தில் எப்படிப் பேசுவதென எனக்குத் தெரியவில்லை

மேலும் நானழுதேன் பெண்களைப் பற்றி எண்ணும் போது. இவ்வாறு நான்

பயணம் செய்தேன், கவனமாய் படபடப்புடன்,

மேலும் அவள்

சிலநேரம் என்னைப் பார்த்தாள் புகைத்தாள். நான் பேசவில்லை,

நிச்சயமாய் நான் எண்ணவில்லை, ஆனால் என் குருதியில்

இன்னும் உணர்கிறேன் அந்த ஊடுருவும் பார்வையை,

கடுமையாய் உழைத்து வாழ்க்கையை அது கிடைத்தவாறு ஏற்ற

யாரோ ஒருவரின் ஒரு கண நகைப்பை.

ஒரு நண்பன், சொல்ல ஏதாவது வைத்திருக்கும் ஒருவன்,

ஒரு பெண்ணைக் காப்பாற்ற விரும்புவான், அவள் கண்ணீரைத் துடைத்து,

சந்தோஷப் படுத்துவான்.

”இல்லை, நம் வாழ்நாள் அனைத்திலும் அது வலுவான தேவை

கடின இதயம்தான் நம் ஒரே வலிமை என்றால்

மேலும் பயனற்றது எனின், நாம் நாசமாய்ப் போவோம்”.

நீங்கள் ஆயிரக்கணக்கில் பெண்களைக் காப்பாற்ற இயலும்,

ஆனால் நான் பார்த்த

புகைக்கும் அந்த எல்லோரும், தற்பெருமை கொண்ட பார்வை அல்லது சலித்த புன்னகை–

என் நல்ல நண்பர்கள்–எப்போதும் இருப்பார்கள்

மௌனமாய் துன்பப்பட்டு எல்லோருக்காகவும் கடன்தீர்ப்பார்கள்

மரணம் வரும், உன் கண்களைக் கொண்டு

மரணம் வரும், உன் கண்களைக் கொண்டு-

காலையிலிருந்து இரவுவரை நம்முடனிருக்கும் மரணம், உறக்கமற்று,

மூடத்தனமான தீயொழுக்கம் அல்லது

பழைய கழிவிரக்கத்தைப் போலோ. உன் கண்கள்

ஒரு வெற்றுச் சொல்லாகும்,

அமுக்கப்பட்ட ஒரு கதறலாகும்.

இப்படி ஒவ்வொரு நாள் காலையிலும்

நீ பார்க்கிறாய், நிலைக் கண்ணாடி மீது நீ சாய்கையில்.

போற்றிப் பேணிய நம்பிக்கையே,

அந்த நாளில் நாமும் கூட அறிவோம்

நீயேதான் வாழ்வும் வெறுமையும் என்பதை.

ஒவ்வொருவருக்கும் ஒரு தோற்றம் தருகிறது மரணம்.

மரணம் வரும், உன் கண்களைக் கொண்டு.

அது தீயொழுக்கத்தை நிறுத்துவது போலிருக்கும்,

கண்ணாடியிலிருந்து வெளிக்கிளம்பும்

ஒரு மரண முகத்தை கண்ணுறுவது போலிருக்கும்,

மூடிய உதடுகள் பேசுவது போலிருக்கும்.

நாம் மௌனத்தில் இறங்குவோம்.

0161

அமி லோவல்/கவிதை உருவாக்கும் முறை

amy_lowellஅமி லோவல் (1874-1925)

1914-ல் எஸ்ரா பவுண்டினால் துவங்கப்பட்ட படிம இயக்கம் (Imagist Movement)கவிதையில் சாதாரண மொழியின் பயன்பாட் டையும் புதிய ஓசைமைகளையும் துல்லியமான படிமங்களை யும் வலியுறுத்தியது.

அமி லோவல் (1874-1925) என்ற பெண் கவிஞர் அமெரிக்க இமேஜிஸ்ட்டுகளில் மிக முதன்மையானவர். கவிஞர் என்பதை விடவும் அமெரிக்க கவிதை இயக்கத்தின் நடைமுறையாள ராகவே பிரபலமாக அறியப்பட்டிருக்கிறார். இவர் அமெரிக்கக் கவிதை இயக்கத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்பு, மிக பரந்து பட்டதாகவும் குறிப்பிடத்தகுந்ததாகவும் இருந்தது. எஸ்ரா பவுண்டின் கோபத்திற்கு உள்ளாகி இவ்வியக்கம் Amygists களின் இயக்கம் என்று பவுண்டால் பரிகாசத்துடன் அழைக்கப்பட் டது. ஏனென்றால் இமேஜிஸ இயக்கத்தின் தேக்கத்தையும் எல்லைப்பாடுகளையும் ஏற்கனவே உணர்ந்தறிந்துவிட்ட பவுண்ட் வோர்ட்டிஸிஸம் என்ற இயக்கம் மிகுந்த படிமக் கவிதையை நோக்கிச் சென்றுவிட்டார். அமிலோவல் எழுதிய புத்தகங்களில் முக்கியமானவை Tendencies in Modern American Poetry மற்றும் Poetry of John Keats.

கவிதை உருவாக்கும் முறை

தமிழில் பிரம்மராஜன்

கவிதைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது என் உள்ளுணர்வு பூர்வமான பதில் ஒரு தட்டையான ‘‘எனக்குத் தெரியாது” என்பதுதான். அவை எவ்வாறு உருவாகின்றன என்று சிறிதும் தெரியாதிருப்பினும் அதே போல் மற்றவர்களின் கவிதை உருவாக்கம் பற்றித் தெரியாத போதிலும், என்னைக் கேட்கப்பட்ட கேள்வி முழுவதும் என் கவிதைகள் சம்மந்தப்பட்டது என்றாலும் அவை எந்த வேறுபாட்டினையும் ஏற்படுத்துவதில்லை. அதைப் பற்றி எனக்குத் தெரிந்திருப்பது, தெரிந்து கொள்ளப்பட வேண்டியதின் ஒரு மில்லியன் பகுதியில் ஒரு பகுதிதான். என் பிரக்ஞைநிலையைத் தொடும்பொழுதுதான் நான் கவிதைகளைச் சந்திக்கிறேன். அது அதற்குள்ளாக அதன் பரிணாமப் பாதையில் வேண்டிய தூரம் வந்துவிட்டிருக்கும்.

திருவாளர் க்ரேவ்ஸ் கூறுவது போல கவிதை எதிரிடையான கருத்தாக்கங்களின் ஒருங்கிணைப்பு என்றாலும், உணர்ச்சிகளின் உறுத்தல்களுக்கும் Tensionக்கும் வடிகால் தருவதாய் ஏற்படும் விளைவு என்று Sara Teasdaleகூறியபோதிலும், பகற்கனவின் எல்லைக் கோட்டினைத் தொடும் ஒரு மனோவியல் நிலைக்கு நம்மை உட்படுத்துதல் என்று (பேராசிரியர் ப்ரெஸ்காட்) ஒரு முழு புத்தகமே எழுதி நிரூபித்த போதிலும் இறுதியான வரையறை தருவதற்கு யாராலும் இயலாது. தன்னம்பிக்கையு டன் என்னுடைய அனுபவங்களிலிருந்து அழுத்தமாக நான் கூறுவதெல்லாம், கவிதை ஒரு பகற்கனவு அல்ல என்பதே–மாறாக மிகவும் வித்தியாசமான, தனக்கே உரித்தான ஒரு மனோவியல் நிலை.

உண்மை என்னவென்றால் ஒரு மர்மம் இங்கு இருக்கிறது. கவிஞன் அளவுக்கு இதைப்பற்றி பிரக்ஞை எவருக்கும் இருக்க முடியாது. கவிஞன் ஒரு ரேடியோ ஏரியலைப் போன்றவன் என்பதை உடனே நாம் ஒப்புக்கொள்வோம்-ஒருவித அலைவரிசைகளில் செய்திகளைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறது. ஆனால் அவன் ஏரியல் என்பதற்கும் மேற்பட்டவன். இது ஏனெனின் இந்தச் செய்திகளை அந்த வார்த்தைகளின் அமைவுகள் என நாம் கூறும் கவிதைகளாக  மாற்றும் சக்தி படைத்தவனாகவும் கவிஞன் இருக்கிறான்.

ஒரு கவிஞனைப் பற்றிய அறிவியல் ரீதியான வரையறையை ஏறத்தாழ நாம் இவ்வாறு கூறலாம் என்று நினைக்கிறேன்: அதீதமான உணர்வுமிக்க ஒரு மனிதன், இயக்க பூர்வமான அடிமன ஆளுமை உடையவன், எதிர்ப்பற்ற பிரக்ஞையால் போஷிக்கப்பட்டும் அதற்கு உயிரளித்தபடியும் இருப்பவன். கவிஞர்களிடையே ஒரு பொதுவான சொல் வழக்கு உண்டு. ‘‘அது என்னிடம் வந்தது” என்பார்கள். இந்தப் சொற்பிரயோகம் சீரழிக்கப்பட்டுவிட்டதால் ஒருவர் கவனத்துடன் இதைத் தவிர்க்க முயல்கிறார். ஆனால் நிஜத்தில் ஒரு கவிதையின் பிரக்ஞைபூர்வமான வரவினைப் பற்றி எனக்குத் தெரிந்ததில் இதுதான் மிகச்சிறந்த விளக்கம்.

சிலசமயங்களில் ஒரு கவிதை உருவாக்கிய புறவயத் தூண்டுதல் தெரியும் அல்லது கண்டுபிடிக்கலாம். இரு ஒரு காட்சியாகவோ, அது ஒரு சப்தமாகவோ, ஒரு சிந்தனையாகவோ அல்லது ஒரு உணர்ச்சியாகவோ இருக்கலாம். தொடக்கத் தூண்டுதலைப் பற்றி சில நேரங்களில் நினைவு மனத்திற்கு ஒரு பிரக்ஞையும் இருக்காது. இந்தத் தூண்டுதல் மறக்கப்பட்டிருக்கலாம், அல்லது ஆழ்ந்த அறிந்து உணரப்பட்டிராத நினைவுகளிலி ருந்து எழலாம். இது என்னவாக இருந்தபோதிலும், உணர்ச்சி அறியப்பட்டிருந்தாலும், மறைக்கப்பட்டிருந்தாலும், இது அதன் ஒரு பகுதி. ஏனெனில் உணர்ச்சி மட்டுமே அடிமனதைச் செயலுக்குத் தூண்டுவது. எவ்வளவு கவனமாகவும், கச்சிதமா கவும் அடிமனம் இயங்குகிறது என்பதற்கு நானே என் எழுத்துக் களில் ஒரு காட்சியாக இருந்திருக்கிறேன். எந்த வெளிப்படை யான காரணத்துக்காகவுமின்றி ஒரு கருத்தாக்கம் என் சிந்தனைக்குள் வரும். எடுத்துக்காட்டாக The Bronze Horsesகுதிரைகளை ஒரு கவிதைக்கான விஷயமாக நான் மனதில் புரிந்து கொண்டேன். அவற்றை அவ்வாறு பதிவு செய்த பின்னர் இந்த விஷயம் பற்றி வேறு எதையும் நான் பிரக்ஞைபூர்வமாகச் சிந்திக்கவில்லை.  ஆனால் உண்மையில் நான் செய்தது என்னவென்றால் என் கருப்பொருளை ஆழ்மனத்திற்குள் போட்டு வைத்து விட்டதுதான்-தபால் பெட்டியில் ஒருவர் கடிதத்தைப் போடுவது போல. ஆறுமாதங்களுக்குப் பிறகு, அந்தக் கவிதையின் சொற்கள் என் மண்டைக்குள் வர ஆரம்பித்தன-அந்தக் கவிதை என் தனிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துவோமானால் ‘‘அங்கே இருந்தது”.

சில கவிஞர்கள் ஒரு குரல் அவர்களுடன் பேசுவதாகச் சொல்கிறார்கள். மேலும் அக்குரல் உச்சரிக்கும் வார்த்தைகளை அப்படியே எழுதுவதாகவும் கூறுகிறார்கள். இந்த முறை என்னுடையதிலிருந்து வேறுபடுவதாலோ அல்லது என் ஆரம்பகால அறிவியல் பயிற்சியின் காரணமாகவோ எனக்குத் தெரியவில்லை-எது குறைவான காட்சிபூர்வமான வார்த்தை களை பயன்படுத்துவதற்குக் காரணம் என- நான் குரல் எதையும் கேட்பதில்லை, ஆனால் வார்த்தைகள் உச்சரிக்கப்படுவதைக் கேட்கிறேன். உச்சரிப்பு மட்டுமே சப்தமற்றது. ஆனால் யாராலும் பேசப்படாமல் அவ்வார்த்தைகள் என் மண்டைக்குள் உச்சரிக்கப்படுகின்றன. இந்த விளைவு எனக்குப் பரிச்சயமான ஒன்று. ஏனென்றால் என் மனதிற்குள் நான் படிக்கும் பொழுது கூட நான் எப்போதும் வார்த்தைகளைக் கேட்கிறேன். கொஞ்சம் அதிகமாக நான் எழுதும் நேரத்தில் (இது அவசியமில்லை என்றாலும் கூட) எழுதும்போதும், பலசமயம் நான் எழுதியதை உரக்கப் படிப்பதற்கு நிறுத்தும் போதும். அவ்வளவு தெளிவாய் வார்த்தைகள் என் மண்டைக்குள் ஒலிக்கின்றன.

எனினும் இந்த ஆழ்மனம், மிகவும் தன் இஷ்டப்படி நடந்து கொள்ளும் ஒரு கூட்டாளி. நிறைய சமயங்களில் அது  தீவிரமான சூழ்நிலையில் வேலை நிறுத்தம் செய்யும். அதற்குப் பின் எந்த ஒரு சொல்லையும் அதனிடமிருந்து பெறுவதற்கு இயலாது. இங்குதான் கவிஞனின் பிரக்ஞைபூர்வமான பயிற்சி தேவையாகிறது. காரணம் ஆழ்மனம் விட்டுவிட்ட விஷயங்களை அவன் நிரப்ப வேண்டும். மற்ற வார்த்தைகளின் தன்மைக்கு ஒத்தவாறு, முடிந்தவரை நிரப்பவேண்டும். ஒவ்வொரு நீண்ட கவிதையும் இம்மாதிரியான இடைவெளிகளால் தெளிக்கப்பட்டிருக்கும். இந்தக் காரணத்தினால்தான் பெரும்பாலான கவிதைகள் எண்ணற்ற திருத்தங்களுக்கு உள்ளாகின்றன. சில நேரங்களில் இந்த கள்ளத்தனமான ஆழ்மனக் கூட்டாளி சிரமம்படும் கவிஞன் மீது கருணை கொண்டு அவனின் உதவிக்குத் திரும்பும். அந்தக் குறிப்பிட்ட பகுதியுடன் பல சமயங்களில் மீண்டும் எந்தத் தொடர்பும் இருக்காது அதற்கு. இக்காரணத்தினால்தான் ஒரு கவிஞன் என்பவன் பிறக்கவும், உருவாக்கப்படவும் வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவனுக்காக எப்போதும் உழைக்கக்கூடிய ஒரு ஆழ்மனத் தொழிற்சாலையுடன் அவன் பிறக்க வேண்டும். இல்லையென்றால் அவன் என்றும் கவிஞனாக முடியாது. திருவாளர் க்ரேவ்ஸின் வெளிப்பாட்டு முறையைப் பயன்படுத்தினால்-அவனின் ஓட்டைகளை மெழுகி அடைக்க அறிவும் திறமையும் வேண்டிய அளவுக்கு இருக்க வேண்டும். இந்த (மெழுகி) அடைக்கும் முறையை யாரும் தாழ்வாக மதிப்பிட்டுவிட வேண்டாம். நல்ல கவிதையில் ஒரு நிலை இது. கடந்த 25 ஆண்டுகளாக என் கைகளுக்கு எட்டிய பல பெரும் கவிஞர்களின் முதல் கையெழுத்துப் பிரதிகளில் நான் ஒன்றிலும் ‘‘மெழுகி அடைத்தல்” பங்கினை பார்க்காமல் இல்லை. இதில் மிகவும் அடித்து எழுதப்பட்டிருந்தது கீட்ஸின் The Eve of St.Agnes.

நீண்ட கவிதைகள் ஆழ்மனதில் உருவாக மாதங்கள் ஆகும். சிறிய கவிதைகளைப் பொறுத்தவரை ஆழ்மனதில் கருக் கொள்ளும் காலம் ஒரு நாளாகவோ, ஒரு கணமாகவோ இருக்கலாம். திடீரென்று சில சொற்கள் அங்கே இருக்கும்  ஒரு வித ராஜரீகமான வற்புறுத்தலுடன் அவை எந்த தாமதத்தையும் பொறுக்காது. அவை உடனடியாக எழுதப்பட வேண்டும் இல்லையென்றால் ஒரு தீவிரமான துன்புறுதல் நேரும்–ஒரு உடல்ரீதியான வலி அளவுக்கு இது இருக்கும். கவிதைக்கு வழி கொடுத்தால் ஒழிய இந்த வலியிலிருந்து நிவாரணம் கிடைக்காது. கவிதைகள் வரும் காலத்தில் நான் அவற்றை நிராகரிப்பது கிடையாது. நான் என்ன செய்து கொண்டிருந்தாலும், நான் என்ன எழுதிக் கொண்டிருந்தாலும் அவற்றை விலக்கி வைத்துவிட்டு கவிதையின் வரவை நான் கவனிக்கிறேன். என்னுடைய இயல்பின் காரணமாக, நான் நண்பர்களுடன் இருக்கும்போதோ, வீட்டுக்கு வெளியில் உள்ளபோதோ கவிதைகள் வருவதில்லை. ஆனால் தனியாக இருக்கும்போது, நான் பார்த்த, அல்லது செய்த ஏதோ ஒன்றின் தொடர்பான கருத்தாக்கம்–வெளியில் இருந்த பொழுது தன்னை அறிவித்துக் கொள்ளும்–ஏதோ நான் மோனத்திலும், ஏற்புத்தகுதியுடனும் இருக்கும் காலத்திற்காகக் காத்திருந்தது போல்.

என் மண்டைக்குள் நான் உருவாக்குவது குறைவு. ஒரு கவிதையின் வருகை பற்றிய பிரக்ஞையை நான் அடையும்போது நான் செய்யும் முதல் காரியம் பேப்பரையும் பென்சிலையும் தேடிப் போவதுதான். ஒரு துண்டு வெள்ளைத் தாளை வெறுமனே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததே ஆழ்மனம் பற்றிய பிரக்ஞைக்கு ஹிப்நாட்டைஸ் செய்து விடுவதுபோலத் தோன்றுகிறது. அதே காரணத்துக்காக, நான் நடந்து கொண்டிருக்கும்போதோ, கார் ஓட்டிக் கொண்டிருக்கும் சமயத்திலோ கவிதைகளைத் திருத்தம் செய்வதில்லை. இதற்குத் தேவைப்படும் கூர்ந்த கவனம் ஒரு தியானத்தின் தன்மையதாய் இருக்கிறது. (இதற்கு இந்த வார்த்தை சற்று அதிகபட்சமானது என்றாலும் கூட) இந்தக் கூர்ந்த கவனம் (அ)தியானம் நான் எங்கே போகிறேன் அல்லது எந்த நிலையத்தில் இறங்க வேண்டும் என்பது பற்றிய அக்கறைகளால் சிதைக்கப்படுகிறது.

இந்த அரைத்தியான நிலை நாம் சிறிய கவிதைகளைப் பற்றிச் சிந்திக்கும்பொழுது ஆச்சரியப்படுத்துவதில்லை. விநோதம் என்னவெனில் இந்தத் தியானம் போன்ற நிலை நீண்ட கவிதைகளைப் பொறுத்தவரை, குறுக்கீடுகளுக்கு மேலாகத் தாக்குப் பிடிக்கக் கூடியது.  பல நாட்கள் அல்லது வாரங்கள் எழுதத் தேவைப்படும் அளவுக்கு ஒரு கவிதை நீளமாக இருக்கும் போது, அதைத் தொடர உட்காரும் ஒரு செயலே அதற்குத் தேவையான மனநிலையை உருவாக்குகிறது- இந்நிலை (நான் குறிப்பிட்ட இடைவெளிகள் தவிர) கவிதையின் திருத்தங்கள் வரை தாங்குகிறது.

அதற்கு மாறாக, ஆழ்மனநிலை மட்டும் தயாராக இல்லை என்றால் எந்த சக்தியாலும் அந்த நிலையை உருவாக்க முடியாது. எனவே சிருஷ்டி இல்லாத காலங்கள் எல்லாக் கவிஞர்களுக்கும் இருப்பது சகஜம்தான்.

கவிஞனால் முடிந்த எல்லாவற்றையும் அவன் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். எந்த துறையும் அவனுக்கு  அந்நியமானதல்ல. எந்தத் திசையிலும் அவன் அறிவு ஆழமானதாக இருந்தால், அவனுடைய கவிதைக்கும் நல்ல ஆழமிருக்கும். புதிய மற்றும் பழைய கவிதை வடிவங்களில் அவனுக்கு முழுமையான, அடிப்படையான பரிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் தீர்மானமாக என் நம்பிக்கை என்னவென்றால் பாரம்பரியத்திற்கு அவன் தன் உள்ளுணர்வின் சுயத்திற்கு மேலாக மரியாதை தரக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய சுயநேர்மை பற்றி உறுதியாக இருக்க வேண்டும். பொது அங்கீகரிப்புகளுக்கு அவன் தலை பணியக்கூடாது-எவ்வளவு கவர்ச்சிகரமான வையாக அவை இருந்தபோதிலும். அதன் பின் அவனின் ஆழ்மனம் எதை உணர்த்துகிறதோ அதை அவன் சகல தைர்யத்துடன் எழுதட்டும்.

0161


ஆக்டேவியோ பாஸின் கவிதைகள் /The Poetry of Octavio Paz/intrdouced by Brammarajan

ஆக்டேவியோ பாஸின் கவிதைகள்

1990ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசினைப் பெற்ற ஆக்டோவியோ பாஸ், 1914 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நரில் பிறந்தார். Quevedo, Gongora, Sor Juana Ines de la Cruz போன்ற ஸ்பானியக் கவிஞர்களின் பாதிப்பில் கவிதை எழுதத் தொடங்கினார். 1937ஆம் ஆண்டு ஸ்பெயினின் ரிபப்ளிகன் பகுதிக்கு சென்று திரும்பிய பாஸ், Taller என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார். மெக்ஸிகோவின் இளம் எழுத்தாளர்களும், ஸ்பானிய எழுத்தாளர்களும் தங்கள் எழுத்துக்களை Taller (Workshop)இதழில் வெளியிட்டனர். 1943-45 வருடங்களில், பாஸ் அமெரிக்காவில் வாழ்ந்தபோது மெக்ஸிகோவின் வெளியுறவுத்துறையில் சேர்ந்தார். அமெரிக்காவில் இருந்த சமயத்தில்தான் ஆங்கில-அமெரிக்கக் கவிதை, நவீனத்துவக் கவிதை போன்ற இயக்கங்களுடன் அவருக்குத் தேவையான பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொண்டார். பல பதவிகளை வெளிதேசங்களில் வகித்தார். மெக்ஸிகோவின் தூதராக ஃபிரான்ஸூக்கு சென்றவர்  ஸர்ரியலிஸத்தின் பிதாமகரான ஆந்ரே ப்ரெத்தனுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டார்.  ஸர்ரியலிஸ  ஓவியர்களுடன் நட்பானார். 1949ஆம் ஆண்டு பட்ங் The Labyrinth of Solitude என்ற புகழ் பெற்ற நூலை எழுதினார். Eagle or sun (1951) அவருடைய உரைநடை எழுத்துக்களையும் கவிதைகளையும் ஒருங்கே வெளிக் கொணர்ந்தது.  அவரின் பிற எழுத்துக்களை விட இந்நூலில் உள்ளவை ஸர்ரியலிஸத்திற்கு மிக நெருக்கமானவை. மெக்ஸிகோவின் இந்தியத்தூதராக 1962ம் ஆண்டு பதவி அமர்த்தப்பட்டார். கிழக்குநாடுகளின் கலை மற்றும் தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். Salamandra (1962), Laedra Este (1969) ஆகிய தொகுதிகளில் பாஸ் தனது கிழக்குநாட்டு அனுபவங்களை கவிதையின் பாடுபொருளாகப் பயன்படுத்தினார். இந்தியாவில் இருந்த காலத்தில் எழுதிய 2 நூல்கள் பாஸூக்கும் பொதுவான இலக்கியத்திற்கும் மிக முக்கியமானவை. அவை- 1.The Monkey Grammarian (1974)  2.Eastern Slope (1969). மானுடவியல், அழகியல், அரசியல், இலக்கியக் கோட்பாடு போன்ற தளங்களிலும் தனித்துவத்துடன் இயங்கினார். Alternating Current (1973), Conjunctions and Disjunctions போன்ற நூல்கள் பாஸின் இலக்கிய விவாதங்கள் அடங்கியவை. 1968 ஆம் ஆண்டு இந்தியாவில் அவர் வகித்த தூதர் பதவியை  ராஜினாமா செய்தார். அந்த வருடம் மாணவக் கிளர்ச்சி யாளர்களை மெக்ஸிகோ அரசு படுகொலை செய்ததைக் கண்டித்து பாஸ் இதைச் செய்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1970 ஆம் ஆண்டு Professor of Latin American Studiesஆகப் பணியாற்றினார். 1971 ஆம் ஆண்டு மெக்ஸிகோ திரும்பியவுடன் Plural என்ற ஏட்டினைத் தொடங்கினார். ஸர்ரியலிஸ ஓவியரான Marcel Duchampபற்றி எழுதிய நூல் (Marcel Duchamp: Appearence Stripped Bare) 1976இல் வெளிவந்தது. பத்திரிக்கை சுதந்திரத்தில் மெக்ஸிகோ அரசின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் Plural ஏட்டின் ஆசிரியர் குழுவிலிருந்து விலகினார். பிறகு Vuelta என்ற கலாச்சார-விமர்சன மாத ஏட்டிற்கு ஆசிரியரானார். 1985ஆம் ஆண்டு Partisan Reviewக்கு கொடுத்த பேட்டியில் நிகாரகுவாவில் அமெரிக்கத் தலையீட்டைக் கண்டித் திருக்கிறார். பாஸ் 1998இல் காலமானார். ஆக்டோவியோ பாஸின் கவிதைச் சாதனை பாப்லோ நெரூதா ஒருவரைத் தவிர பிற லத்தீன் அமெரிக்கக் கவிஞர்களை பின் ஒதுக்கி வளர்ந்திருக்கிறது. பாஸின் உரைநடை எழுத்துக்கள் அவரை சக ஸ்பானியரான Ortega y Gassetவுடன் ஒப்பிட்டுப் பேச வைத்திருக்கிறது. எனினும் ஓர்த்தேகா ஒரு கல்வியாளர். பாஸ் கவிஞர். பாஸின் கவிதைகள் சர்வதேசத்தன்மைகள் கொண்டவை. வேறுபட்ட கலாச்சாரங்களை ஒன்றிணைப் பவை. பிரெஞ்சு ஸர்ரியலிஸம். அமெரிக்க கவிதை. ஜெர்மன் ரொமாண்டிசிசம். மாக்சிய விவாதம். ஸ்ட்ரக்சுரலிசம். இந்திய தாந்த்ரீகம். புத்த தத்துவம் இவை யாவும் அவருடைய ஆளுமையில் இயல்பாகப் பிணைந்து நிற்கின்றன. ஸ்பானிய போரின் போது ஸ்பெயினுக்கு விஜயம் செய்த பாஸின் கவிதைகள் சரியான முதிர்ச்சி பெற ஸ்பெயினின் நேரடி அனுபவங்கள் தேவைப்பட்டன. அவர் பிறந்த மெக்ஸிகோ
வின் பழமையை வருங்காலத்துடன் முரண்படாது ஒன்றிணைப்பதும், தனது பன்முக ஆளுமையை ஒருங்கிணைப் பதும் பாஸின் கவிதைச் செயல்பாடுகளில் முக்கியமாகின. கவிதையைப் பற்றி தனது கருத்தை இப்படித் தெரிவிக்கிறார்: ”கவிதையானது வேற்றுக்குரல். அது வரலாற்றின் குரலோ, அல்லது எதிர்வரலாற்றின் குரலோ அல்ல. எனினும் கவிதையில் வரலாறு எப்போதும் வேறுபட்ட ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்கும்”. தத்துவார்த்த அடிமைத்துவத்திற்கான இந்த எதிர்ப்பு நமக்கு Andre Bretonஐயும் ஸர்ரியலிஸ்டு களையும் நினைவுக்குக் கொண்டு  வருகிறது. ஒரு காலத்தில் பாஸ் a telluric surrealist என்றும் அழைக்கப்பட்டார். இந்த பூமியுடன் இணைந்த ஸர்ரியலிஸ்ட் எனினும் இந்த லேபிள் பாஸின் எழுத்துக்களை ஏகமாய்ச் சுருக்கி எளிமைப்படுத்திய ஒன்று. 17ஆம் நூற்றாண்டு ஸ்பானிய கவிஞர் களான Gongora மற்றும் Quevedo ஆகியோரிடமிருந்து தனது கவிதைக்கான உந்தங்களைக் கடன் பெற்றிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் பாதிப்புகளாக இருப்பவர்கள் Jorge Guillen  மற்றும் Luis Cernuda(1902-1963) Jorge Guillenஸ்பெயினின் ”தூய கவிதை”க் கோட்பாட்டாளர்களில் முக்கியமானவர். செர்னூடாவின் நட்பினால்தான் பாஸூக்கு பிரெஞ்சுக் கலாச்சாரத்திலும், பிரெஞ்சுக் கவிஞர்களான Apollinaire, Reverdy, Andre Breton ஆகியோரின் எழுத்துக்களிலும் ஈடுபாடு ஏற்பட்டது. புவித்தள, இசைக் கட்டுமானத்துடன் எழுதப்பட்ட எலியட்டின் ”பாழ் நிலம்” பாஸூக்கு பிடித்தமான கவிதையாயிற்று. காலம் பற்றிய பாஸின் தியானங்கள் எலியட்டின் காலச் சிந்தனையுடன் ஒப்புதல் பெறக் கூடியவை: “Moments in and out of time”என்கிறார் எலியட். “Interpenetration of the timeless with time” என்கிறார் பாஸ். பாஸின் உரைநடை எழுத்து அவரது கவிதைக்கு இன்றியமை யாத அங்கமாகும். 1974இல் எழுதப்பட்ட Children of the Mire என்ற நூல் நவீனகவிதை பற்றிய பாஸின் உரைத்தொகுப்பு. ஒவ்வொரு புதிய அறிவார்த்த இயக்கத்தையும் ஒரு சந்தர்ப்பவாதியின் தந்திரத்தோடு தனது ஆளுமைக்குள் பாஸ் ஸ்வீகரித்துக் கொண்டு தனதாக்கிக் கொண்டார். ”நிகழ்காலம் நித்தியமானது” என்கிறார் பாஸ். இந்த பிரதானமான ஸர்ரியலிஸ உட்பார்வைக்கு இப்போது ஸ்ரட்க்சுரலிஸ வர்ணமும் தந்திருக்கிறார். ஸர்ரியலிஸப் புரட்சியின் பங்காளர்களிலேயே தனது ஸர்ரியலிஸத்தைத் திறந்த மனத்தோடும், நெகிழ்வோடும் வைத்திருந்து, அதை சர்வத்தையும் உட்கிரகிக்கும் புத்தியின் மாறுதல்களுக்கு உட்படுத்திய மிகப்பிரதான கவியாகிறார் பாஸ். பாஸின் பிற்காலக் கவிதைகளே அவருக்கான சர்வதேச வாசகர்களையும் விமர்சன அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தன. Sun Stone என்ற நீண்ட கவிதைக்கு முற்பட்ட கவிதைகளை அவரே ஒதுக்கி விடுகிறார். தொடக்ககாலக் கவிதைகளைத் தேர்ந் தெடுத்து Lebertad bayo palabra  என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார். சுதந்திரம்-ஊடகம்-சொற்கள் என்று இது பொருள் தரும். 1930களிலும் 40களிலும் எழுதப்பட்ட இந்தக் கவிதைகளில் தனது தனிமையை, கிளர்ச்சி மிகுந்த காமத்துவத்தின் மூலமாகவே குறைக்கிறார். ”என்னைத் தொடாமலேயே நான் மூழ்குகிறேன்” என்ற வரி Mirror என்ற கவிதையில் வருகிறது. 10 ஆண்டுகள் கழித்து ”ஒளி ஊடுருவும் மதியத்தில்” அவரின் மன நிலை அமைதியாக இருக்கிறது. கவிதையிலிருந்து விடுதலை பெற்று பறவையின் மேலே எழும்புகிறது. The Birdஎன்ற கவிதை சாவில் முடிகிறது. இக்கவிதைகளின் திரவத்தன்மையை தனது பிரத்தேகமான சலுகைமிக்க படிமங்களுக்குப் பயன்படுத்துகிறார். இதில் கண் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இந்த திரவத்தன்மைமிக்க தெரிவிப்பின் வழியாகச் சாத்தியமாகும் விடுதலை கவிதையின் பொருட்கூறுகளை தனிமைப் படுத்திக் காட்டுவதில்லை. வைகரையைவிட அந்தி முக்கியமான தென்றோ, கற்களைவிட மரங்கள் வலுவானவை என்றோ, பறவைகளைவிட மரங்கள் பின்பற்றத் தகுந்தவை என்றோ பிரித்தல
் ஏதும் இக்கவிதையில் இல்லை. சர்ச்சைமிகுந்த பாலியல் வாழ்வுமுறைகளைப் பின் பற்றிய Marquis de Sade என்ற  பிரெஞ்சு எழுத்தாளரைப் சிறப்பித்து Prisoner(1948) என்ற கவிதையை எழுதினார். தன்னையே தான் கடந்து செல்லமுடியாத நஹக்ங் இன் இயலாமையை விமர்சிக்கவும் செய்கிறார். The Eagle or Sun (1949-50), தொகுதியில் உள்ள வசன கவிதைகள், பாஸ் எதிர்கொண்ட சிக்கலான காலக்கட்டத்தைப் பதிவு செய்கின்றன. இவற்றில் குறிப்பிடத் தகுந்தது Hymn among the Ruins என்ற கவிதை. 1950களின் காலகட்டத்திய அமெரிக்க, ஸ்பானிய, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மீது இக்கவிதை தொடர்ந்த, ஆழ்ந்த பாதிப்பைச் செலுத்தியது. 1948க்கும் 1954க்கும் இடைப்பட்ட காலக் கவிதைகள் ஒரு புறம் மெக்ஸிகோவில் இருக்கும் “சூரியக்கல்” பற்றிய கவிதையாலும் மறுபுறம் The Labyrinth of Solitude என்ற கட்டுரைகள் அடங்கிய நூலாலும் சூழப்பட்டிருந்தன. The Sun Stone பாஸின் கவிதைச் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்று மட்டுமின்றி இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நீள் கவிதைகளில் ஒன்றாகும். இக்கவிதையின் வேர்கள் இந்தியாவின்  தொன்மங்களில் இருந்து பாஸ் பெற்ற அனுபவங்களில் இருக்கின்றன. இந்த வட்டச்சுழல் கவிதை ஒரே ஒரு சொல்லாடலில் எழுதப்பட்டிருக்கிறது. கண்டுபிடிப்புக்கும் மரபுக்கும் இடையிலான நீண்ட சச்சரவு என்ற அப்போலினேரின் கருத்தாக்கத்தால் உந்தப்பெற்ற தியானமாய் அமைகிறது.  இதன் நீட்சி சுக்கிரனின் Synocal Period இன் நாள் எண்ணிக்கையால் கட்டுப்படுத்தப்படுகிறது. இக்கவிதை ஒரே சமயத்தில் திறந்தமுனைக் கவிதையாயும், சரியாய் முற்றுப் பெற்றதாயும் இருக்கிறது. Sun Stone பயன்படுத்தும் அபரிமிதமான கவிதைப் பொருள்கள் ஒரு தீவிர ஸர்ரியலிஸ்டின் சக்திக்குக் கூட, ஏன், பாஸ் மீண்டும் மீண்டும் நமக்கு சிபாரிசு செய்யும் அந்ரே ப்ரெத்தோனின் சக்திக்கும் கூட அப்பாற்பட்டது என்கிறார் John Pilling என்ற விமர்சகர். Sun Stone தெரிவிப்பது, மொழியின் மீதான காதலும், காதலின் மொழியும் பிரிக்க முடியாதவை என்பதையே. மூலாதார தொன்மவியல் விசாரங்களான சாவு-மறுபிறப்பு பற்றிய கவிதைகள் அடங்கியது Salamander(1962). ”இரண்டு அடைப்புக் குறிகளுக்கிடையில்” இருக்கும் வாழ்க்கையைப் பற்றியும் இக்கவிதைகள் பிரஸ்தாபிக்கின்றன. Eastern Slope கவிதையும் அது தொடர்பான பிற கவிதைகளும் இந்தியாவில் எழுதப்பட்டவை. படைப்பு-அழிப்பு தெய்வமான காளியே Eastern Slope க்கு ஆதர்சம். ”பிருந்தாவனம்” என்ற நீண்ட கவிதையில் தனது கவிதைக் கோட்பாட்டினைச் சொல்கிறார் பாஸ்: எனக்குத் தெரியும் என்ன தெரியும் எனக்கென்று அதை எழுதுகிறேன் நான் காலத்தின் திரள்வடிவம் இந்தியாவில் வாழ்ந்த சமயத்தில்தான் பாஸின் வெளிப்படை யான பரிசோதனைக் கவிதை Blanco(1966)வெளிவந்தது. தாந்த்ரீக பாலியல் சடங்குகளுக்கு ஒரு பாராட்டாகவும் ஸ்ட்ரக்சுலிஸ்டுகளின் Intertextuality  க்குப் புகழுரையாகவும் அமைகிறது. Blancoவில் பாஸ் தனது வட்டச்சுழல் தனிமையிலிருந்து மீண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. A Draft of Shadows (1975) என்ற சுயசரிதைத் தன்மையான கவிதையில் இப்படி எழுதுகிறார். “To die is to return”. இம்மாதிரியான சொல்லாடல் தனது தூண்டுதலை இந்திய சிந்தனையிலிருந்து பெற்றிருக்கிறது. இந்தக் கவிதையில் தனது பால்ய காலத்திற்கும், தனக்குப் பிரத்யேகமான அத்திமரத்திட  மும் பாஸ் திரும்புகிறார். புதுப்பிக்கப்பட்ட ஒரு யத்தனத்தில் பிறப்புக்கும் சாவுக்கும் அப்பால் கடந்து செல்கையில் மூன்றா வது கட்டத்தை அடைகிறார். பாஸின்  சொற்களில், ”வெறுமைகளால் நிறையும் முழுமை”, ”வாழ்தல் இல்லாமலாகும் ஒரு வாழ்நிலை” என்றவாறு விவரிக்கலாம். Heidegger இன் கருத்தாக்கத்தை (Language is the house of being)  தனது இரங்கற்பாவினை புகழுரையாக மாற்றுகிறார்: மரித்தவர் பேச்சற்றனர் எனினும் நாம் சொல்வதை
வர் சொல்வர்
பெரும் பாழின் விளிம்பில் தொங்கும் மொழியே எல்லார் இல்லமும் மனிதத்துவமே பேச்சு காலம் பற்றிய நம்பிக்கை இழத்தல், புரட்சிகளின் தோல்வி ஆகியவற்றிலிருந்து பாஸ் தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சியும், இப்பூமியின் மீதிலான, காலத்தின் உள்ளான வாழ்வினை நியாயப்படுத்தலும் எனக் கவிதை விரிகிறது. பாஸ் Youth என்ற கவிதையில் எழுதியிருப்பது மிகச்சுருக்கமான  அழகியல்-வாழ்வியல் தெரிவிப்பு: அடிமையின் பாய்ச்சல் வெண்மையாய் மனிநேரம் ஒவ்வொன்றும் இன்னும் பசுமையாய் ஒவ்வொரு நாளும் இன்னும் இளமையாய் மரணம்

ஆக்டேவியோ பாஸின் கவிதைகள்

கன்னியாகுமரிக்கு அருகில்

ஒரு லேண்ட் ரோவர்ஜீப் வெள்ளம் நிரம்பிய வயல்களுக்கு மத்தியில் கிடக்கிறது. புதிய பிறப்பெடுத்த வானத்தின் கீழே கழுத்து வரை நீருக்குள் மரங்கள். வெளுத்த, ரத்தநிற பறவைகள் கொக்குகள், நரைகள், நிஷ்களங்கமாய் இந்த நாடகத்தன்மையான பச்சைகளுக்கிடையில், மெலிந்த புத்தியற்ற எருமைகள் நிஜமாகவே தூங்குவது போல் நீராம்பல்களைத் தின்கின்றன. பிச்சைக்காரக் குரங்குகளின் கூட்டம் ஒன்று. ஒரு கூர்ந்த பாறையின் மீது அசாத்திய சமனில் நிற்கிறது மஞ்சள் நிற ஆடு அதன் மீது ஒரு அண்டங் காக்கை கண்ணுக்குப் புலப்படா ஆனால் பீதி இருப்பு எப்போதும், சிலந்தியல்ல, நாகமல்ல பெயரற்றது பிரபஞ்ச அசிரத்தை. அதில் கீழ்மை வடிவமும் கடவுள் போன்றதும் வாழ்ந்து ஒன்றை ஒன்று மறுதளிக்கும்: வெற்றுக்கூட்டம் புவி வெளியின் நிலைப்பின் உள்ளே இரண்டு நாடித்துடிப்பு சூரியன் சந்திரனின் கூடுதல். இருட்டாகிறது. புஷ்பராகத்தின் ஒற்றை வீச்சொளியாய் மீன் கொத்தி. கார்பன் மிஞ்சுகிறது. மூழ்கிய நிலக்காட்சி கரைகிறது. தான் தசையற்ற ஒரு ஆன்மாவா அன்றி திரியும் உடலா? தடங்கிப் போன லேண்ட் ரோவரும் கரைகிறது அவ்வாறே. ஸ்பரிசம் எனது கைகள் உனது உயிரின் திரைகளைத் திறந்து உடுத்துகிறது உன்னை. இன்னும் கூடுதலாகும் நிர்வாணத்தில் உனது உடல்களின் உடல்களைக் களைந்து எனது கைள் கண்டுபிடிக்கின்றன உனது உடலுக்கென வேறொரு உடலை. காதற்பாடல் இந்த திராட்சைக் கொடியின் பிணைந்த விரல்களுக்கு ஊடே ஊற்றும் நீரைவிடக் கண்ணாடியாய் உன்னில் தொடங்கி உன்னில் முடியும் ஒரு பாலத்தை நீட்சிக்கிறது என் எண்ணம் உன்னைப் பார் என் மனதின் மையப்புள்ளியில் நிலைபெற்று நீ வாழும் உனது உடலை விட நிஜமாய் நீ ஒரு தீவின் மீது வாழப் பிறந்திருக்கிறாய். நீரின் திறவு கோல் ரிஷிகேஷிற்குப் பிறகு கங்கை இன்னும் பசுமை. கண்ணாடித் தொடுவானம் உடைகிறது மலை முகடுகளில். நாம் நடக்கிறோம் படிமங்களின் மீது. மேலும் கீழும் அமைதியின் பெரு வெள்ளம். நீல வெளிகளில் வெள்ளைப் பாறைகள் கறுப்பு மேகங்கள் நீ சொன்னாய்: இந்த கிழக்கு தேசம் நீரால் நிறைந்திருக்கிறது அன்றிரவு நான் எனது கைகளை அலம்பினேன் உனது முலைகளில்.

இங்கே

இந்தத் தெருவின் வழியாகும் எனது காலடிகள் எதிரொலிக்கின்றன மற்றொரு தெருவில் அதில் நான் கேட்கிறேன் எனது காலடிகளை இந்தத் தெருவினைக் கடந்து செல்கையில் இதில் பனிப்புகை மட்டுமே நிஜமானது புனித அத்திமரம்* இந்தக் காற்று பழத்திருடர்கள் (குரங்குகள், பறவைகள்) விதைகளைப் பரப்புகின்றனர் ஒரு பெரிய மரத்தின் மத்தியில். பசுமையாய், ரீங்கரித்தபடி, நிரம்பி வழியும் பெருங்கோப்பை சூரியன்கள் அதிலிருந்து அருந்தும் காற்றின் ஒரு குடல். விதைகள் வெடித்துத் திறந்து, செடி பற்றிக் கொள்கிறது வெறுமையின் மீது, தனது மயக்கத் தலைசுற்றலை சுற்றுகிறது. அதில் அது நிமிர்ந்து வளர்கிறது அசைந்தாடி பெருக்குகிறது. ஆண்டாண்டாய் அது வாழ்கிறது ஒரு நேர்க்கோட்டில் அதன் வீழ்ச்சி நீரின் பாய்ச்சல் பாயும் போதே உறைந்து விடுகிறது: காலம் கல்லான மாற்றம். அது தன் வழியை உணர்கிறது, நீண்ட வேர்களை பின்னும் கிளைகளை வீசுகிறது கருப்பு பின்னிய கோர்வையின் பீச்சுக்குழல்கள் தூண்களைத் துளையிடுகிறது ஈரமான காலரிகளைத் தோண்டுகிறது அவற்றில் எதிரொலி சீறி ஒளிர்ந்து இறக்கிறது. தாமிரத்தன்மையாய் அதிர்வு ஒவ்வொரு நாளும் கார்பனாகப் பொடியும் சூரியனின் நிச்சலனத்தில் தீர்வுறுகிறது. போர்க்கருவிகள், கட்டுத்தளம், வளையங்கள் தரை தட்டிய சிறு கப்பலின் கொடி மரம், பாய்மரக் கயிறுகளின் சிக்குப் பின்னல். திரியும் வேர்கள் தொற்றித் தடுமாறி ஒன்றாய்ச் சுருள்கின்றன. அது கைகள் பலவற்றின் புதர் அவை ஓர் உடம்பினைத் தேடுகின்றன, பூமியை அல்ல: அவை ஓர் அணைப்பினைப் பின்னுகின்றன. மரம் உயிருடன் சுவரடைக்கப்படுகிறது. அதன் அடி மரம் உளுத்துப் போக ஒரு நூறு வருஷங்கள் பிடிக்கின்றன அதன் உச்சி: வழுக்கை மண்டை, மானின் உடைந்த கொம்புகள், தோல் இலைகளின் அங்கிக்கு அடியில் இசைக்கும் அலை சுருதி பேதம் செய்கிறது இளஞ்சிவப்பு-மஞ்சள்காவி-பச்சை, தன் முடிச்சுகளிலேயே சிக்கிக்கொண்டு இரண்டாயிரம் வருஷங்கள், அந்த அத்தி மரம் தவழ்கிறது, உயர்ந்து வளர்கிறது, தன் மூச்சை தானே நெரிக்கிறது. *இங்கு குறிப்பிடப்படும் அத்தி மரம், ஆல மரத்தின் வம்சத்தைச் சார்ந்தது. பிப்பால் என்று இந்தியாவின் வடக்கு பிரதேசங்களில் அழைக்கப்படுகிறது. தாவரவியல் பெயர் Ficus Religiosus. புத்தமதத்தினர் இதனை புனித மரம் என்று கருதுகின்றனர். இதன் அடியிலேயே கௌதமன் போதம் அடைந்து புத்தன் ஆனது. கண்ணன் கோபிகாஸ்த்ரீகளின் ஆடைகளை, யமுனை நதிக்கரையில் இம்மரத்தின் மேல் எடுத்து வைத்து விளையாடினான் என்றும் கூறப்படுகிறது

.

மெக்ஸிகோவின் பள்ளத்தாக்கு

ஒளி ஊடுருவும் தனது உடலைத் திறக்கிறது பகல். கண்ணுக்குப் புலப்படாத சுத்தியல்களுடன் என்னைத் தாக்குகிறது சூரியக்கல்லுடன் கட்டப்பட்ட ஒளி. ஒரு அதிர்வுக்கும் அடுத்ததற்கும் நான் ஒரு நிறுத்தம் மட்டுமே: கூர்ந்த, உயிர்ப் புள்ளி. அமைதியாய் நிலை பெற்றிருக்கிறது ஒன்றை ஒன்று புறக்கணிப்பு செய்யும் இரு பார்வைகள் சந்திக்கும் புள்ளியில்- எனக்குள் சந்திக்கின்றன அவை? தூய வெளியும், போர்க்களமும் நான். என் உடல் வழியாக, என் வேறு உடலைப் பார்க்கிறேன். கல் பளிச்சிடுகிறது. சூரியன் என் கண்களைப் பிளந்தெடுக்கிறது. என் வெற்றுக் கண்குழிகளில் இரண்டு விண்மீன்கள் தம் சிவந்த சிறகுகளை மிருதுப்படுத்துகின்றன. சுழல் சிறகுகளின் அற்புதம் மற்றும் ஆக்ரோஷமான மூக்கு. இப்பொழுது பாடுகின்றன என் கண்கள். பாடலுக்குள் கூர்ந்து பார்த்து நெருப்புக்குள் வீழ்த்திக்கொள்.

நான் நகரத்தைப் பற்றிப் பேசுகிறேன்

இன்று ஒரு புதுமை, நாளை பழமையிலிருந்து வந்த சிதைமானம், புதைபட்டு ஒவ்வொரு நாளும் மீட்டுயிர்ப்பு பெற்று, வாழ்ந்தது தெருக்களில், பிளாசாக்களில், பேருந்துகளில், டாக்சிகளில், திரைப்பட அரங்குகளில், நாடக அரங்குகளில், மதுபான விடுதிகளில், ஹோட்டல்களில், புறாக்கூடுகளில் மற்றும் சேமநிலவறைகளில், மூன்று கஜத்திற்கு மூன்று கஜமே உள்ள அறையில் பொருந்தும் அந்த மாபெரும் நகரம், மற்றும் ஒரு பால்வெளி மண்டலத்தைப் போல எல்லையற்றதாய், நம் அனைவரையும் கனவு காணும் நகரம், நாம் அனைவரும் கட்டி, பிரித்துக் கட்டி, மறுகட்டுமானம் செய்கிறோம் கனவு கண்டவாறு, நாம் அனைவரும் கனவு காணும் நகரம், நாம் கனவு காண்கையில் ஓய்வற்ற மாறுதலடையும் நகரம், ஒவ்வொரு நூறுவருடத்திற்கும் ஒரு முறை விழித்தெழுந்து ஒரு வார்த்தையின் நிலையாடியில் தன்னைப் பார்த்துக் கொள்கிறது பிறகு திரும்பித் தூங்கச் செல்கிறது, என்னருகில் உறங்கும் பெண்ணின் விழிமூடிகளிலிருந்து முளைவிடும் அந்த நகரம், மாற்றமடைகிறது, தன் நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகளுடன், அதன் வரலாறுகள் மற்றும் பழங்கதைகளுடன், எண்ணற்ற கண்களால் செய்யப்பட்ட ஒரு நீர்பீச்சும் ஃபௌன்ட்டனாய், ஒவ்வொரு கண்ணும் அதே நிலக்காட்சியை பிரதிபலிக்கிறது, காலத்தில் உறைந்து போய், பள்ளிகள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு முன்னால், அரிச்சுவடிகள் மற்றும் எண்களின் முன்னால், பலிபீடம் மற்றும் சட்டத்தின் முன்னால் நான்கு நதிகளாய் இருக்கும் ஒரு நதி, பழத்தோட்டம், மரம், ஆண் மற்றும் பெண், காற்றினால் உடையுடுத்தி– திரும்பிச் செல்ல, மீண்டும் மண்ணுக்குத் திரும்பிச் செல்ல, அந்த ஒளியில் நீராடுவதற்கு, அந்த ஆராதனை விளக்குகளின் கீழ் உறங்குவதற்கு, நீரோட்டம் இழுத்துச் செல்லும் கனலும் மேப்பிள் மர இலையைப் போல் காலத்தின் நீர்களின் மேல் மிதக்க, திரும்பிச் செல்ல–நாம் உறங்குகிறோமா அல்லது விழித்திருக்கிறோமா?–நாம் இதை விட அதிகமில்லை, நாள் உதிக்கிறது, முன் நேரம், நாம் நகரத்தில் இருக்கிறோம், வேறொரு நகரத்தில் வீழ்வதற்கன்றி நாம் கிளம்ப முடியாது, வேறு ஆனால் ஒன்றுபோல், நான் பிரம்மாண்ட நகரத்தைப் பற்றிப் பேசுகிறேன், தினசரி யதார்த்தம் இரண்டு வார்த்தைகளாக உருவாக்குவது  மற்றவை ஒவ்வொன்றிலுமே நாமிலிருந்து வெட்டப்பட்ட ஒரு நான் இருக்கிறது, திசையற்றுத் திரியும் ஒரு நான், நான் இறந்தவர்களால் கட்டப்பட்ட நகரத்தைப் பற்றிப் பேசுகிறேன், அவர்களின் இரக்கமற்ற ஆவிகளால் வாழப்பட்டு, அவற்றின் கொடுங்கோன்மையான ஞாபகத்தினால் கோலோச் சப்பட்டு, நான் வேறு எவரிடமும் பேசாதிருக்கையில் நான் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நகரம், இந்த தூக்கம்வராத வார்த்தைக ளை எனக்கு எழுதச் சொல்லிப் பணிக்கும் நகரம், நான் கோபுரங்களைப் பற்றி, பாலங்கள், புழைவழிகள், விமானத் தளங்கள், அதிசயங்கள் மற்றும் அழிவுகள், அரூப அரசாங்கமும் அதன் ஸ்தூலமான போலீஸூம், பள்ளி ஆசிரியர்கள், சிறைக்காவலர்கள், மதப்பிரச்சாரகர்கள், சகலமும் கொண்ட கடைகள், அங்கே எல்லாவற்றையும் நாம் செலவழித்துவிடுகிறோம், மேலும் அது சகலமும் புகையாய் மாறுகிறது, பழங்களின் பிரமிடுகளுடன் அந்த மார்க்கெட்டுகள், பருவ காலங்களின் மாற்றம், கொக்கிகளிலிருந்து தொங்கிக் கொண்டி ருக்கும் பன்றி இறைச்சியின் பக்கங்கள், வாசனைத் திரவியங் களின் மலைகள், பாட்டில்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட உணவுகளின் கோபுரங்கள், எல்லா சுவைகளும் நிறங்களும், எல்லா வாசனைகள் மற்றும் அந்த எல்லாப் பொருள்களும், குரல்களின் அலைகள்–நீர், உலோகம், மரம், களிமண்–கூட்டப் பெருக்கம் காலத்தின் அளவே பழமையான சச்சரவுகளும் பாராதிருத்தல்களும், நான் கல் மற்றும
பளிங்குக் கட்டிடங்கள் பற்றிப் பேசுகிறேன், சிமெண்ட்டினால் ஆனது, கண்ணாடி மற்றும் எஃகு, நடைவழிகள் மற்றும் கதவுவழிகளிலிருக்கும் மனிதர்கள், தெர்மாமீட்டரில் உள்ள பாதரசம் போல் உயர்ந்து வீழும் எலிவேட்டர்கள், வங்கிகள் மற்றும் இயக்குநர்களின் குழுக்கள், உற்பத்திச் சாலைகள் மற்றும் அவற்றின் மேலாளர்கள், பணியாட்கள் மற்றும் அவர்களின் தகாப்புணர்ச்சிசார் யந்திரங்களும், விழைவு மற்றும் சலிப்பு போல நீளமான தெருக்களின் வழியேயான வேசை வியாபாரத்தின் காலமற்ற அணிவகுப்பு பற்றி பேசுகிறேன், கார்கள், நம் பதற்றங்களின் கண்ணாடிகள், வியாபாரம், பேருணர்ச்சி (ஏன்? எதை நோக்கி? எதற்கான?) போன்றவற்றின் வந்து போதல்கள், எப்பொழுதுமே நிறைந்து போயிருக்கும் மருத்துவமனைகள் பற்றி, மேலும் அங்கே நாம் எப்பபோதும் தனிமையில் சாகிறோம், நான் சில தேவாலயங்களின் குறைவெளிச்சம் பற்றியும் அவற்றின் பலிபீடங்களில் மினுக்கி எரியும் மெழுகுவர்த்திகள் பற்றியும் பேசுகிறேன், புனிதர்களுடனும் கன்னிகளுடனும் உணர்ச்சிமிக்க, கைவிடும் மொழியுடன் ஆறுதலற்றவர்களின் தயக்கமான குரல்கள், ஒரு வளையும் மேஜையில் விளிம்பு உடைந்த தட்டுகளில் ஒரு பக்கவாட்டுப் பார்வை கொண்ட வெளிச்சத்தில் இரவு உணவு பற்றிப் பேசுகிறேன், தம் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் திறந்த வெளிகளில் கூடாரமிடும் கள்ளமிலா ஆதிவாசிகள் பற்றி, அவர்களின் விலங்குகள் மற்றும் ஆவிகள், சாக்கடையில் உள்ள எலிகள், ஒயர்களில் கூடு வைக்கும் வீரமிகு குருவிகள், கட்டிட உச்சிகளின் சிற்பப் பிதுக்கங்களிலும், தியாகிகளான மரங்களில், சிந்தனை செய்யும் பூனைகள், நிலவின் வெளிச்சத்தில் அவற்றின் காமுக நாவல்கள், கூரைஉச்சிகளின் குரூரப் பெண் கடவுள்கள், நமது ஃபிரான்ஸிஸ்கன்கள் மற்றும் பிக்குகளாய் இருக்கும் தெரு நாய்கள், சூர்யனின் எலும்புகளை பிறாண்டி எடுக்கும் நாய்கள், துறவிகள் மற்றும் தன்வினையாளும் சகோரத்துவம், சட்டத்தை அமுல்படுத்துபவர்களின் ரகசிய சதித்திட்டங்கள் பற்றி மற்றும் திருடர் கூட்டங்கள் பற்றி, சமத்துவவாதிகளின் சதிகள் மற்றும் குற்றங்களின் நண்பர்களின் அமைப்பு, தற்கொலையாளர்களின் கிளப், ஜேக் த ரிப்பர், மக்கள் நண்பர்கள் பற்றி, கில்லட்டின்களை சானை பிடிப்பவர்கள், சீசர், மானுட இனத்தின் பெருமகிழ்வு, நான் பக்கவாதம் கொண்ட சேரியைப் பற்றிப் பேசுகிறேன்,  வெடிப்புவிட்ட சுவர், வறண்ட நீர்ஃபௌன்டன், கிறுக்கல் எழுத்துக்களால் நிறைந்த சிலை, நான் மலையளவிலிருக்கும் குப்பை மேடுகள் பற்றிப் பேசுகிறேன், புகை-பனி கலப்பின் வழியாக வடிகட்டி வரும் சூர்யஒளியின் மனசஞ்சலத்தை. . .