அறிந்த நிரந்தரம் -பிரம்மராஜன் முதல் கவிதைத் தொகுதி/Brammarajan’s First Collection of Poems

manzana

அறிந்த நிரந்தரம்

(1980)

பழைய மிருகத்துடன் ஒரு புதிய மனிதன்  சில குறிப்புகள்

சொல்லில் கிடைத்த சங்கிலியைக்

கழுத்தில் கட்டி

இழுத்துக்கொண்டலைந்தேன் அம்மிருகத்தை.

கிளைகளுடன் உரையாடித் திரும்பிய

மனநிலைகளில் விநோதப் பறவைகள் பற்றி

வண்ண வண்ணமாய்க் கதைகள் சொல்லிற்று

கேட்டவர் உறங்க.

கண்களில் நெருப்பு ஜொலித்தாலும்

பிடறியைத் தூண்டி  நானை  வளர்த்த  பெண்களிடம்

நன்றி என்றது

குளிர் காற்றைப்  பார்வையில் கொணர்ந்து.

கோடுகளைத் தாண்டிக்

காடுகளில் அலைந்து

சிறகு போல் இலகுவாய்

மாடிமேலிருந்து பறந்திறங்கிப்

பஸ் பிடிக்கக் கூச்சலிட்டுப் பிறாண்டிய மனிதர்களைக்

கேலிசெய்தது.

அலைதலில் அளவற்றுத்

தளர்வுற்றுத்  தகர்ந்தபோது

சோடா உடைத்து நுரை நீரில் முகம் கழுவி

டாக்ஸி பிடித்து

வீடு சேர்ப்பித்தேன்.

தொல்லை போதும் காட்சி சாலையில் விடு என்றவர்க்குச்

சொன்னேன்

காட்சியே மறையும் விரைந்து

சாட்சியாய் ஒரு சொல் மட்டும்

நானென்று நிற்கும்.


இறப்புக்கு முன் சில படிமங்கள்

ஜன்னலில் அடைத்த வானம்.

குறுக்கிடும் பூச்செடிகளுடன்

சுப்ரபாதம் இல்லையென்றாலும்கூட

மங்களமான பனிப்புகையில்

விடியல்.

நரைத்து உடைந்த இரவின் சிதறல்கள்

நேரம் உண்டாகவே வந்துவிட்ட

தோட்டியின் கால்கள் முன்.

மண் தின்று  எஞ்சிய

எலும்பின் கரைகளில் சிற்பத்தின் வாசனை

காற்றைத் தவிர

அவனுக்கு மட்டும்.

பியானேவென இசைத்து ஒலித்து

உறங்காமல் திரிந்த

மணிக்கூண்டு உணர்விழந்துவிட்டது

உறையும் குளிரில்.

பறந்த பறவைகள் வானில் கீறிய ஓவியம்

பார்த்ததில்

பந்தயம் இழந்தது நேற்று.

விரலிடுக்கில் வழிந்த காலத்தின்

துளிகளை

மற்றெரு கையில் ஏந்த

கணங்களை முழுவதும் எரித்தாகி விட்டது.

அவன்  இறந்துவிட்டான்.

இன்றெதற்கு  இரண்டாம் மாடியில்

அழகான அறை ?

அங்கு

பூக்கள் நிஜமாய் மலராது.


எதிர்கொள்ளல்

அரங்கத்தில் அடிக்கடி இருள்.

எங்கோ ஒரு நாள்

நரம்புகளின் லயத்துடன் இழைகிறது

வானவில்.

காதுகள் அற்றவர் அசைவில்

கழுதைகளை

மனதில் நிறுத்திவிட்டு  மறைகின்றனர்.

அன்னையின் கைகள்

சிரசில் ஊர்வதை மீண்டும் எக்கிக் கேட்பதுபோல்

வீணையின் விரலில்

தரிசனம்  தேடி வருகையில்

காலில் சகதி.

குவித்த  விரல்களின்  குவளையில்

கங்கை நீர்.

தகரத்தின்  பிய்ந்த குரல்கள்

கழுவாத முகங்கள் போன்ற கட்டிடங்களின்

வாயில் நாறும் .

ஆயினும் மீட்டலொன்று போதும்.

குருதி கசியும்

மனதின் சுவர்களில்

தளிர்கள்

உதயமாகும்.

இப்பொழுது

கற்சிலையின் பாரம் உருகிக் கரைந்ததில்

புதியதொரு ஜனனம்.

காற்றைப் போல் மென்மை

அச்சிசுவின் காலெட்டில்.

நேற்று விழுந்த சருகுகள் நீருக்கு

நிறம் தரும்.

சுவை மாற

அலைகளும் உறங்காது.

உடனே புதிய ஊற்றுகளின்

கதவைத் தட்டு.

சற்றுமுன் சிறு விரல்களில் தந்த

மலர்

இப்பொழுது வாடும்.

மாற்று புதியதொன்றை மணத்துடன்.

நாளைக்கென்று நீளாத

தெருக்களில் நடக்கவிடு.

பார்வை விரியப் பாதை வளரட்டும்.

முன்பே ஒன்றிருந்தால்

உடைத்த கைகள், உளி

கல் துகள், கண்ணீர்,

இடது முலையில் இதழ்கள்,

சக்கரம், நெரிசல், மரங்கள்,

கார்கள், கார்பன் மோனாக்சைட்,

விடியலில் பறவைகளின் குரல்,

எல்லாமே

பளிச்சென்று ஜ்வலிக்க

கண் முன்

எப்பொழுதும் தா.


கூப்பிட்ட குரல்

மாலைக்கு மேல் வேளை கெட்டு வந்தால்

விபரீதம் தோற்றுவிக்கும்

பனங்காடுகள் தாண்டிப்

பண்ணை பூத்த விதவை நிலங்களுக்கும்

அப்பால்

கீற்று நிலா வெற்றுத்தனமாய்க் காயும்

மயிரற்ற ஆண் மார்புகளாய்க் கிடக்கும்

குன்றுகள் தாண்டித்

தனித்துப் போய்த் தனக்குத் தானே

சலசலக்கும் ஒற்றை அரசமரத்திற்கும்

அப்பால்

முகமற்ற குரலொன்று

அழைத்தது.

பாதைத் திருப்பமொன்றின் பாதியிருளில்

வீற்றிருந்தது

மனிதக் கைகளே கிளைகளாய்

வாவெனப் பரிவுடன் வீசிய

கனவின் மரம்

அப்பால்

அங்கிருக்கும்.

பாதுகை தேய்ந்தறுந்தும்

கட்டிய மணிப்பொறி விட்டெறிந்தும்

கலையாமல் தொடர்கிறது பயணம்

குரல் தேடி.

ஒரு யுகம் வேண்டும் முகம் தேட.

chorreon-de-pintura

அறிந்த நிரந்தரம்

ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு.

இரவெனும் கருப்புச் சூரியன்

வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது.

நெட்டித் தள்ளியும் நகராத காலம்

எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது.

அரைத் தூக்கத்தில் விழித்த காகம்

உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்

கேட்காமல் மறதியில் கரைகிறது.

இதோ வந்தது முடிவென்ற

சாமச் சேவலின் கூவல்

ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக.

இரண்டாம் தஞ்சம்

பொய் முகம் உலர்ந்தன ஏரிகள்.

நாதியற்றுப்போன நாரைகள்

கால்நடைகளின் காலசைப்பில்

கண் வைத்துக் காத்திருக்கும்.

எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்?

தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த

மனிதன் ஒருவன்

ஒட்டடை படிந்த தலையுடன்

வாசல் திறந்து வருகிறான்

கோதும் விரல்களிடம்.

காயும் நிலவிலும் கிராமக் குடிசை

இருள் மூலைகள் வைத்திருக்கும்

மறக்காமல்

மின்மினிக்கு.

வாழும் பிரமைகள்

காலம் அழிந்து

கிடந்த நிலையில்

கடல் வந்து போயிருக்கிறது.

கொடிக்கம்பியும் அலமாரியும்

அம்மணமாய்ப் பார்த்து நிற்க

வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல்.

நினைவின் சுவடாய்  உதட்டில் படிந்த கரிப்பும்

காற்றில் கரைந்துவிட

வந்ததோ எனச் சந்தேகம் கவியும்.

பெண்ணுடல்  பட்டுக் கசங்கிய ஆடைகள்

மறந்த  மனதின்

இருண்ட மூலைகளினின்று

வெளிப்பட்டு

உடல் தேடி  அலைவதால்

எங்கும் துணியின் சரசரப்பு.

அன்று பக்கவாட்டில்  நடந்து  வந்த மஞ்சள் நிலா

தசைகளின் சுடரை

நகல் எடுக்க முயன்று

கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது.

இறந்த நாள்களின்

குளிர் நீளக் கைகள்

நீண்டு வந்து

மறதியைக் கொண்டு தூர்த்துவிட

கற்பனைக்கும்  சொந்தமில்லை

கோலங்கள்.


இளம் இரவில் இறந்தவர்கள்

இளம் இரவில் இறந்தவர்கள்

பிண வாடை மிதி வண்டியில் தொற்றி வந்து

அறைச் சுவர்களில் ஒட்டடையாய்த் தொங்கும்.

அடுத்த நாள்

நாசித் துவாரங்களில்

சாம்பல் நிறத்தில் காளான்கள் பூக்கும்.

அடிக்கடி கொடி மின்னல்கள்

வலியெனப் படர்வதால்

இதயச் சுவர்கள் காரை உதிர்க்கும்.

இரவறுத்தும் ஓயாத சிள் வண்டுகள்

இலையுதிரும் காலைகளில்

குயில்களின் பாட்டில் குரல் நீட்டிக் குறுக்கிடும்.

கானக மரங்கள் மூளைச் சாலைகளில்

படை எடுக்கும்.

லாரி என்ஜின்களின் நடை துவள

ஒரு ஸிம்பனியின் உச்சம் முற்றுப் பெறும்.

இறந்த இலைகள்

நடைக்கு அடியில் கிசுகிசுக்கும்.

சாணைக்கல் நெருப்புக் கம்பிகள் தெறித்து விழக்

காடு கருகி

உடல் நாற்றம் வீசும்.

நூலறுந்த பட்டமொன்று

யோனியில் நீந்தும் விந்தின் நினைவோடு

பூத்து நிற்கும் முருங்கையில் வால் துடிக்கும்.

நாளைக்கும் காற்று வரும்.


நிலைப்பாடு

பசிகொண்டு நிதம் செல்லும் பாதங்கள்

தொலைவற்ற தூரம் கேட்கும்.

சாலை மரங்கள் சற்றே

உரங்கிப்போவென்று சொல்லும்

தாம் தந்த நிழலுக்காய்.

கால்களில் தீப்பொறி குதிரைகளின் கனைப்பை

நினைவுக்குள் புகை மூட்டும்.

நிழல் தின்று ஆறாது பசியெனினும்

ஒரு கிளை பிடித்து

குடையெனப் பாவனைசெய்ய

தொடரும் பயணம்.

நினைவுக்கென வெட்டிக் கொடுத்து

பின் காயங்களில் சாசுவதம் கண்டு

வரும் நாள்கள் கழியும்.

வேர்கொள்ளாக் கால்கள்

பகற் கானலில் சாம்பலாகும்

கட்டிடங்களுக்கு அப்பால்

நீலத் தொடுவானம் தேடிச் செல்ல

வழி மரங்கள் தாம் பெற்ற

ராகங்களின் நிரந்தரமாறியாது

உடல் சிலிர்த்துப் பாதையை

நிறைக்கும்

கந்தல் நிழல் கொண்டு.


29_01_2008_0812653001201606494_marcel_christசுடர் அரங்கும்நத்தை ஓடுகளும்

அடுத்த மழைக்குக் காத்திராமல்

ஓடைக்கரையில் ஒதுங்கிய

நத்தை ஓடுகளுக்குத் தெரியாது.

விண்ணில் ஏகிய குதிரை வீரர்கள்

விட்டுச் சென்ற

பட்டாக் கத்திகள் குல்மொஹர் மரங்களில் தொங்கக்

கோடை நெருப்பில்

சிவப்புக் கலவரத்தில்

திக்கெங்கும் முன்னங்கால்களில் தாவும்

வேட்டை நாய்கள்

தலை உதறிச் சிலிர்த்த பனித்துளிகள்

துருவங்களில் விழுந்து

பூமியைச் சிறைபிடிக்க

நெஞ்சில் சுடருடன்

நடனம் காட்டுகின்றன

இவ்வறையின் தேய்த்த கண்ணாடிகள் மட்டும்.

இரவை உதறிய பறவையின் சிறு குரல்

சூரியனின் சாய்ந்த ஒளிக்கற்றையில் சரிய

சுவரில் சாய்ந்த மிருதங்கம் உருகி

உறை கழலுகிறது.

உறைந்த புல்லாங்குழலும்

கூடடைந்த பறவைச் சிறகில் ஆர்கனும்

முன் விழித்து

சமன் செய்துகொள்வதால்

எடுத்த அடியிலும்

பிடித்த முத்திரையிலும்

நடனம் தொடர்கிறது.


இல்லாமல் இருந்தது ஒன்றுதான்

இல்லாமல் இருந்தது ஒன்றுதான்.

மகிழ்ச்சியான கடல் அது.

தவிர

பறவைக் குரல்களாலும் உடைபடாமல்

தடுப்பவர்களற்றுக்

காலடியில் சுழன்று கொண்டிருந்தது

ஓர் ஆரஞ்சுப் பழமென அச்சாம்ராஜ்யம்.

புலர் பொழுதுகளில்

வெண்மையாய் விழித்தது

மலர்ந்த குளங்களில்.

வெறுக்காமல் மறுத்துப் புறப்பட்டபோது

சகுனம் பாராதிருந்தும்

மழை மரங்களின் மாலைச் சிந்தனையாகப்

பின்னிய கிளைகளில் சிக்கி நின்றது

மௌனமாய் மஞ்சள் சூரியன்.

வந்த நிலத்தில் அன்று

மழையில் நனைந்தது தொடக்கம்.

தேவையென்று கொண்டுவந்த நாள்களின்

எச்சம்

பாக்கெட்டில் நிறைந்த

வார்த்தைகள் மேல் பூத்தது.

மத்தாப்புக் கம்பிகளும் நனைந்திருந்தன.

மின்கம்பிகளின் தொய்வில்

இன்று உறக்கமின்மை ஊஞ்சல் பயில

நரம்பின் முடிச்சுகளில் கண்கூசும் வெளிச்சம்.

மீட்சிக்கு முயற்சியற்றுப் போயினும்

தாறுமாறாய்க் கிடக்கும் வார்த்தைகளை

உலுக்கிஎழுப்ப வேண்டும்.

1210847356_7

கூண்டுகள்

புதிய இலக்குகளை மனதில் வைத்து

எம்பிப் பறந்ததில்

சிக்கிக்கொண்டது என் சிறகின் ஒரு மூலை

முழுமையடையாத

விடுதலையின் கம்பிகளில்.

அறுத்துக்கொண்டு அரைச் சொர்க்கத்திலிருந்து

படபடக்க யத்தனிக்கையில்

உன் நினைவு

ஒற்றை இறகாய்

பாரம் அறியாமல் இறங்கியது.

உன் விடுதலைக்காய் நான் இறைத்த வார்த்தைகள்

பாதை பாவாமல்

சிதறி வழியடைத்தன.

நாலெட்டில் உனது இலக்கு என

நான் நினைத்தபோதிலும்

இடைவெளியில் புகுந்து புறப்பட்டது

உன் பயணம்.

கால்களின் அளப்புக்கு மிஞ்சிய

என் பாதையில்

நானே பதிக்கவில்லை ஒரு பாதமும்.


தனிமொழி-1

நேற்றுப் பாலையாய் விரிந்திருந்து

இன்று குறுகிப்போன

நாள்களில்

நீ எண்ணியிருக்க முடியாது

நான் உன் வழித்துணையாய்

வருவேனென்று.

உன் ஸ்நேகத்துக்கு முன்

புற்றென வளர்ந்திருந்தது

நடுமனதில்

தனிமை.

விழிகள் அழுந்த மூடிக்

காதுகள் வைகறைக் காக்கைகளுக்காகக்

காத்திருந்த இரவுகளில்

தேய்ந்து மறையும்

புகை வண்டியொலியில் கலந்தன

உன் நினைவுகள்.

இருந்தும்

விழிக்கும் இரவின் நீளத்தைக் குறைக்கும்

புத்தகங்களைப் போல

இதமிருந்தது அவற்றில்.

விழித்தெழுந்து அழுதது குழந்தை

தான் மறந்த முலைகளுக்காய் வேண்டி.

இன்றென்

ஈரம் படர்ந்த விழிகளில்

நீ கலைந்த வெளிச்சம்.


தனிமொழி-2

நீரில் மூழ்கிய கடிகாரங்களென

சப்தமற்றுப் போயிருந்த காலம்

நான்

உன்னிலிருந்து பிரிந்தவுடன்

கடல் காக்கைகளாய்ச்

சிறகு விரித்துப் பறந்து

ஒலிகளாய்

வெடித்துச் சிதறித்

தன் நீட்சியை நினைவுறுத்தும்.

காது மடலைத் தடவியபடி

நான் இனிச்

சிவப்பு நிற டீயின் கசப்பில்

உன்னை மறக்க முயல்வேன்.

நீயும்

காற்றை வெட்டிச் சாய்த்துச்

சுழலும் மின் விசிறியில்

கவனம் கொடுத்துப்

பேனா பிடித்தெழுதி

பஸ் ஏறி

வீடு செல்வாய்.

எனினும் இருளுக்கு முன்

நீ போய்ச் சேர வேண்டுமென்று

என் மனம் வேண்டும்.

தனிமொழி-3

உன்னுடன் கழித்த

சாதாரண நிமிடங்கள்கூட

முட்கள் முளைத்த வண்ணக் கற்களென

நினைவின் சதையைக் கிழிக்கின்றன.

மெல்லிய ஸ்வாசங்கள்

புயலின் நினைவுடன்

இரைச்சலிடுகின்றன.

உன் கையில் பூட்டிய

என் விரல்களை அறுத்து

விடுதலை பெற்றும்

மனதில் சொட்டிய குருதித் துளிகள்

வளர்க்கின்றன

முள் மரங்களை.

சரிவுகள்

சார்பற்ற வெறுமையின் சாத்தியம்

எனக்குச் சாதகம் ஆக

வெறுப்பதற்கில்லை எனினும்

உன்னை விலக்க

என்னுள் யத்தனிப்பு.

உணர்வுக்கயிறுகளை அசைக்கத் தெரியாது

பட்டங்களை அறுத்துக்

காட்சிகளை அழித்து

நெற்றி

நிலம் தொட மன்னிப்பை யாசித்தவன்

குழந்தை போல்

சாலையைத் தாண்டும் உன்னிடம்

பேசுவது தத்துவம்.

அடைந்ததைக் கடப்பது

கடந்த பின் அப்பால் என்னவென்பது

எல்லாம் சப்தமாய்ப் புழுதியை இறைத்துக்

கரை உடைக்கும் குளங்களை

உன் கண்ணில் தோற்றுவிக்க

என் நிழல் சிதைகிறது.

உருவம் இழந்து அந்நியனாய் நான் நடக்கிறேன்.

26 மே 1979

கந்தலில் முடிந்து தந்தாலும்

கனவுகளை முடிவற்றதென்று உணராமல்

மடியில் குழந்தையெனக் கிடக்கும்

ஒரு பாட்டில் ஹார்லிக்ஸ்

உடன் வாங்கி வைத்துக்கொண்டேன்.

பஸ்ஸின் தகர முதுகைப் பிய்த்தன பனிக்கற்கள்

முதுகில் நனைந்தும்

கண்களில் தூசி நிரம்பியும்

நோய் நடப்பதற்கில்லாமல் செய்திருந்தும்

தேவதைகள் என்னிடம் வந்ததால்

உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஊர் அடைந்ததும்

பஸ்ஸை விட்டிறங்கும் உன் கால்களிடம்

சொல்லும்

மழையில் ஊறிய மண்.

பரிசு முடிவற்றது

என்று வரும் அந்த இன்று

என்ற நினைவு பதியுமுன்

வைத்துக்கொள்

என ஒட்டி ஏந்திய கைக்குழியில்

வார்த்தாய் புது நாள்களை.

அத்துடன் அறியாப் பரிசும்

கண்திறவாக் குட்டிகளாய்

வீட்டுக் கொட்டிலில் கிடந்தது.

அரும்புகள் தொடுத்த

உயிர்த்த விரல்கள்

சற்றே விறைத்தன

செவியில் படபடத்த சிறகொலியில்.

மாற்றுவதென்பதே முடியாமல் மலைக்க

உயிர் கரைத்து உண்டு வாழ்கிறது

கபாலத்தில் மின்னல் புழு.

நிழல் விளையாட்டு

கனவிலும் சாதுவாய்

வருகிற

கோழையைப் போல்

வளர்ந்துவிட்ட இந்நிழல் விளையாட்டிலும்

உனக்குக் கண்ணாமூச்சி.

நான் நான் இல்லையென்று

நீ மட்டும் நீதான் என்றும்

கற்பனை அரண்கட்டி

என்னைக் கை விரல்களுக்கப்பால் மறைத்து

என்னில் ஒரு பூனைக்குட்டியைப் பிரித்தெடுத்து

உனக்கு விளையாட்டு.

பால் எனக்கு என்றும் போல்.

கால்களும் பஞ்சல்லவென்பதால்

குவளைகள் உடைவதில்லை.

உன் சிதறல்களில் விழும் ஆச்சர்யம்

வளையல் துண்டுகளில் உருவிழக்கும்.

மனக்கூட்டில் வந்தடையும் சோகம்.

வளர்ந்த பின்னும்

மழலையே பேச்சென்றால்

நிறைய உண்டு

மரப்பாச்சிகள்

உனக்கு.


இவ்விதமாகவும்

மையத்தில் குறுக்கும் நெடுக்குமாய்க்

கொடிபடரும் வலிகளுக்கு

பதில் தர இன்றிரவு

உறக்கத்துடன் உறவில்லை.

மூக்கில் காற்றின் முடிச்சுகள்

சிக்கலாகிக்

கனவுக்குள் கனவும்

நாற்றங்காலில் மலைத்தோட்ட மலர்விதைகளும்

ஈரம் வறண்டு

கரும்புகைக்குக் கருவாகலாம்.

நீளும் சாலைகளும்

மாறும் முகங்களும்

பனிப்புகையில் பார்வையிழந்து

இடத்துக்கு இடம் தாவும் ஒற்றைக் காக்கையும்

அவசரமாய்ப் பார்வை அழியலாம்.

வர்ணம் கரைந்த நிமிஷங்களில்

செப்பியா நிற ஆல்பம் ஒன்றில்

விரல் சுட்டி முகம் காட்டிப்

புத்தகங்கள் விட்டுச் சென்றவன் தனக்கு

என்றொரு பெண் சொல்லலாம்.


வழியில் நிகழ்ந்த இழப்பு

கற்கள் வழிவிடுமா எனக் காத்திருந்து

அடையாத ஊற்றுக்கண் தேடி

அலைந்த வேளையில்

விரித்த வறிய விரல்களாய்

இலை களைந்து மரம் விண்ணை நோக்கி வேண்டிற்று.

மௌன ஓட்டுக் குகையிலிருந்து

தவழ்ந்ததும்

வாரியணைக்கும் உன்னையும்

வரும் வழியில் மறதியாய் விட்டுவந்த

உறக்கத்துடன்

சாம்பல் இரவொன்றில் இழந்துவிட்டேன்

அழியாதே

என்ற அன்புச் சொல் நிக்கொட்டின் மணக்கும்

உதடுகளின் அருகாமையில் கேட்காது.

வயலின்கள் பாடிய

நாட்கள் போய்

இனி கதவின் குரல்கள்

எண்ணெய்க்கு அழும்.

இரவின் பரிமாணங்களை அளந்து

காற்றிடம் பேசிக்கொண்டிருந்தாலும்

கீர்த்தனைகள் சமர்ப்பிக்க

மனித

ஜீவன் இருக்காது.

தெரு முனைகளும் தருணமும்

அன்று நான் சோகமாய்த் திரும்பியதாய்

மனிதர்கள் சொன்னார்கள்

நினைவு நிலைகளில்

குளிர் நீர்ப்பரப்பு நிறைந்ததை அறியாமல்.

தவசியை ஒத்த ஒளி நிமிடம்

ஒரு துளி விழுந்து

மனம்

வர்ணங்களற்ற நீள்வெளியாகும். தருணமிதில்

காற்றில் லேசான தக்கையாகும்

உடலும்.

கனவில் சிறகின்றிப் பறக்கும்

நிழல் “நான்கள்

ஒன்றில் ஒன்றிணைந்து

சமதளத்தில் அலையாய்ப் பரவும்

இசையில் சங்கமம்.

சிரிக்கும் முலைகள்,

சிற்பம்,

நீ,

மழையில் மணக்கும் உன் அணைப்பு

சூரியன் மறையும் தெரு முனைகள்

தெருவிளக்குகளின் இடையிருளில் நட்ஷத்ரங்கள்

தொண்டை நனைய ஒரு வாய் நீர்

யாவும் சுவை அறும். சமம்.

கடவுளற்ற உலகம் எனக்கென்றால்

உனக்கு உன்  பிரார்த்தனைகள்.

வேண்டுமானால் என் நிறமற்ற நிமிடங்கள்

வளர

உன் கடவுளிடம் முறையிடு.


அது ஒரு ராகம்

இருட்டைச் செதுக்கி

நின்று நீண்ட செவ்வகத்தில் நிறுத்தி

ஒளியின் பிரமையை நிராகரித்த

உனக்குப்

பசி பறந்தது.

அமிலத்தின் கோஷங்களை அடக்கிய

உன் குரல்

மழைக்கும் சோறிட்டது.

வாகன இரைச்சல் போர்த்திய

புழுதி கரைந்தது.

ஆத்மா இப்போது

புது ரோஜாப்பூ.

துண்டித்த நரம்புகளுக்குச் சிகிச்சை வேண்டி

உன்னிடம்

யாசித்தது  யதுகுல காம்போஜி.

தாலாட்டிக்  கரைத்தாய்

என்னை நீலாம்பரியில்.

கனவின் எல்லைகள் கைக்குள்பட

முலைக்காம்புகளின் முத்தம்

மூடிய இமைகளின் மீது.

என் ரதங்கள் புறப்பட்டுப் போய்விடும்.

சோறும் உறங்கிவிடும்

உன்  வயிற்றின் ஒடுங்கல் நிமிரும் நேரம்.


அதிகாலைக் கனவில் தேவிக்கு ஒரு பாடல்

ஆயிரம் ஆல் இலைகளால்

என் வானத்தைத்

தைத்த  பின்னும்

பட்டாய்  மின்னுகிறது

நீலத்துணுக்குகளில்

மயிர் சுழித்து

உள் வாங்கும் உன் வயிறு.

ரத்த  தாளங்களில்  வீணை உலவ

நாட்டியங்களற்ற  என் மேடையில்

உன் முந்தானை.

அருகிலான  விண்வெளிப் புகைப்படம்

நிலவின் அப்பக்கம்

கனவுக் கோடுகள் விரிந்த என் நிலம்.

அகழ்வில் சிசுக் குரல்

உன் கால் சதங்கைகளை ஒரு தரம்

ஒலிக்கச் சொல்லி

என் இன்னொரு நனவிடம் கேட்கும்.

மின்னலும்

ஆர்கன்  இசையும்

ஒருங்கி மடிந்ததும்

மனிதர் அற்றுப் பிறக்கும் ஒரு சமவெளி.

பூட்டிக்கொண்ட பூமிக்குள்

ஒரு மழலை மடிந்திருக்கும்.


கடவுளும் ஒரு கனவின் கருவும்

நிலைகள் மூன்றினையும் மறந்து

கடல் நிற மணிமாலைகளுடன்

இருள் வேளைகளில் கரைகளில்

திரும்பிக்கொண்டிருக்கிறேன்.

கழுகு இரை கொள்ளும் நேரம்

களைத்து வருகிறேன் படிகளில் உருண்டு.

பிரகாரத்தை அணைத்த இடைவெளிகளில்

மனிதர்களின் மையத்தில்

கைக் கமண்டலத்தில் முகம் அசைய

நடப்பது அறியாமல் அமர்ந்திருக்க

இட்டுவிடு என்று வருகிறான் குரு

நீர்த்தட்டுடன்.

நானாவென நானே கேட்டுச் சிதறுமுன்

கும்பல் கூவுகிறது ஆம் ஆமென்று.

குருவின் நெற்றியில் என் பெருவிரல்.

காணவில்லை

என் முகம்.

கல்லில் விழும் உளிகளும்

கலைக்காத கனவில் தொலைவிலிருந்தும்

மூலைக்கு மூலை தெறித்து விழுகிறது

அலை நுரை.

திரை நனைந்து எலுமிச்சை நிறத்தில் விடிகிறது

கடற்கரை.

கோயிலில் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

தொடுவானில் அலையும் புலிகளின்

தொண்டையில்

சப்தக் கவளமாய்த் திரண்டு

பாம்பின் அசைவுகளில் தவழ்ந்து

பாசியில் படிகிறேன்.

மெஷின்களுக்குப் பின்னாலும் மனிதர்கள்

நன்றாகத் தாழிட்டிருந்தும்

கதவின் இடைவெளிகளில்

பால் வண்ணத்தில் பிளிறுகிறது தெரியாத தெருவிளக்கு.

தார்ச்சாலையின்

மௌனம் கலைக்கத்

தினசரிப் பேப்பரின் பையொன்று

காற்றுடன் பேசிச் சரசரக்கிறது.

அண்ணாந்து பார்த்து

இரண்டு நட்சத்திரங்களின் தொலைவு வெளி பற்றி

உனக்கு அக்கறை இல்லை என்று சொல்கிறேன்.

மாதா கோயிலின் மணிகள் இருள் மடியில்

புரளும்போதும்கூட

மிலான் நகரத்து ஓவியங்களுக்காக

விழிக்கும் வியப்பற்றவளாய் இருக்கிறாய்.

மத்தாப்பு ஒளிகளாய்ச் செவியைக் கீறும்

முன்பறியாத பூச்சி சொல்கிறது என்னிடம்.

நியூட்ரான் குண்டுகள் குதறிய பின்னும்

மீண்டும் ஒரு முறை புழுவாய்த் தோன்றுவான் மனிதன்

என்பது ஐயம்.

சிங்கத்தின் தாடி

மார்க்ஸின் சோற்றுக் கணக்கு

எல்லாம் இங்கு மண்ணில் இறைத்த விந்தாகிவிட்டது

என்று உன் அறியாமை பற்றிப்

பட்டியல்கள் அடுக்கப்படும்.

காலம் எவ்வாறு அளக்கப்படினும்

மலையாய் உயரும் கான்க்ரீட் எலும்புகளுக்குப்

பின்னாலும்

நியான் விளக்குகளைத் தாண்டியும்

எனது உனது பாஷைகள்

ரத்தமும் சதையும்-

மொழி வெறும் சங்கேதக் குறிகளாய்

கம்ப்யூட்டர்களின்

கைகளில்

சிக்கிய பின்னும்.

மனநிழல் ஓரம்

இடம் பெயரும் ஈசல் குருவிகளின் அலையாய்

ஸ்ருதிக்குத் தவித்தது இவ்வறை.

உன் கருப்பைக் குருதியின் வெளிச்சம்

இரவு விளக்காக.

பாதைகளின் புழுதிக்குச் செம்பு நீர் ஊற்றாமல்

காலில் தலை கவிழ்த்து

உறக்கம் வரும்.

நடு முதுகில் மயிலிறகு

இமை பிளந்து

அடியாற்றின்

இருளுக்குள் இருள் தேடும்.

நிலைக்கண்ணாடியற்ற என் குருட்டுத்தனம்

மலடாகும்.

விடை பெறும் நேரம்

சொல்லாதே

ஓய்வுக்கென அமர்ந்தேன் என.

உன் சொல் ஏற்காது

என் உயரம்.


எனக்கு எதிராய் என் நிலைக்கண்ணாடியில் உனக்கு ஒரு சித்திரம்

சொல்வாய்

அப்படி ஒரு மனிதன் இருந்தானென்று.

இல்லை

நினைத்துக்கொள்வாய்

சிதறல்களில் செழிப்பைச் செதுக்கிய

கடவுள் ஒருவன் என்று.

இல்லை

காட்சிகொள்ளும் உன் மனது

செலவுக்கென்று சுதந்திரத்தின் கட்டுகளை

முறிக்காத அதீத மனிதன் இருந்தானாவென்று.

அலையலையாய்

இனி உன் கரை மாந்தர் கோஷமிடுவர்

கொஞ்ச நாளாய் வந்து வாழ்ந்த

மௌனத்தைக் கொன்று.

தோட்டமும் கரையும் பாதையும் அலையும்

நுரையும்.

இமைக்காதிருந்து

நிமிஷங்களை வலையில் பிடித்து

சதையில் சதை திருடும் சரித்திரம் உயிர்த்ததில்லை

என்றும்.

சொற்கள் விலகித் தெரிந்திருக்கலாம் தோட்டம்.

துளையிடப்பட்ட ஜீனியா மலர்கள்

கட்டளையிடும்.

கம்பி வேலியின் நட்ஷத்திரங்களில்

பச்சை நிற வெட்டுக்கிளிகள்

கழுவேற்றப்படும்.

கோடுகள் மட்டும் வழிவதில்லை என் விரல்களில்

சில சமயம் துரப்பணக்கருவிகளும்

கூர்நுனிப் புற்களும்.

நட்டுப் பதினைந்து நாட்கள்

நாற்று கண் விழிக்கவில்லை.

கவலைகொள்ளும் ஊர் சென்ற மனது

வாரத்தின் இறுதியில்

அன்புடன் டேலியாக் கிழங்குகளின்

கழுத்தில் விழும் நகக் குறி.

கிழங்கிற்குள்ளும் ஒரு மிருகம்

சதை தின்று வாழும்

என நினைக்கிறாய்.

நானில்லை.

ஆனால் அழுத்தமாய் மூச்சிழுத்து

அரைவட்டம் போய்வந்து

சாம்பல் பனி விலக்கித் தெரியவிட்டேன்

சதையும் புகையுமாய்

தினம் ஒரு பிணம் எரியும்

என் வழியை.

ஓய்வற்றுத் திரியும்

பத்தாம் கபால நரம்பு

அமில ஆறுகளை நினைத்துப் பிளந்த நாக்குகளைச் சுழற்றும்.

நுரையீரல் மரக்கிளையில்

கூடு வளர்க்கும் சுதை நெருப்பு.

வர்ணத்திட்டுகளை செதிலாய் வளர்த்தும்

விருப்பத்தைச் சிலிர்த்து உடைத்துவிட்டுத்

திசுக்கள் அழிந்து மிஞ்சிய மூளைச் சிற்பத்தை

மொகஞ்சதாரோ எனக் கண்டெடுத்து

புதிய தூண்கள் தேடிச் செல்கையில்

நீ மீண்டும் சொல்வாய்

இப்படியும்

ஒரு மனிதன்

இருந்தானென


வெளியேற்றம்

பனித்துணியில் ஒரு முகத்திரை.

நகத்தைக் கிழித்த

கல்லுக்கும் நடனம் கற்பனையாய் ஓர் இசைக்கு.

கூடத் தொடரும்

சப்தம் ருசிக்கும் கூட்டம்.

நிழல்கள் அறுபடாமல் அலையும்.

களைத்துவிட்டது. சிக்கி

விடுவேன் என்றபோது

என்னுடலை முழுக்காற்றுக்குத்

தின்னக் கொடுத்து

உடைகளை நிழற்கறையான்களுக்கும் எறிந்துவிட்டேன்.

காற்று மட்டும்

தொடைகளைத் திறந்து

போவெனச் சொன்னது

என்னை.

முடிவுரை தற்காலிகமாக

இறுதி வரிகள் உன் மனதில் கேள்வியாகும் நேரம்

என்னுருவம் எங்கோ தொலைவில் கல் மரம்.

காய்ந்து விழுந்தும் நெற்றியில் பொட்டின் தடம்.

காற்றில் கரைந்திருக்கும்

என் அரூபச்சொற்களின் மிச்சம்.

ஆலின் விதையொன்று உண்டாகும்

வைத்துக் கொள் என் பால்யத்தை.

பின் கல்லலைகள் மோதும் உன் காதில்.

என் சிரிப்பும்.

வீடு சென்று தேடு

பாக்கிச் சொத்துகள் எனது என்னவென்று.

திண்ணைப்புறம் கிடக்கும் ஆற்றங்கரைக் கூழாங்கல்.

பச்சைப் புதரில் வெறும் விரலில்

பிடுங்கிய மூங்கில் கிளை ஒன்று.

Advertisements

வலி உணரும் மனிதர்கள்/பிரம்மராஜன்/Men Sensitive to Pain-poems/Brammarajan

or8i8p

This is the collection of poetry(publised 22 years ago) that I wanted to suppress for ever. Consequently I didn’t include a single poem from this collection in my “Selected Poems”. Since my friends like Anand,Pazhani Vel who have high regards for my poetry insisted that I publish them at least in the Collected Edition. Since there is no hope of a collected Edition I am posting these poems here. I have put my pen in a few places correcting a punctuation here and rewriting a word there. I still consider these my apprentice poems. Not all that a poet scribbles becomes poetry. I leave the judgement to the discerning reader-of course not the common,lazy reader.

Bibliographic Details

First Edition May 1985

Publisher: MEETCHI Books, 59/E Elk Hill Road,

Ooty-643001 Cover Design: Brad W.Foster. Price Rs.8-50


vali-unarum

ஆத்மாநாமுக்கு

பிரம்மராஜன்

உன் வலியை நீ உணர்ந்த
அந்த முதல் நிமிஷம்
நனவோடையில் தேடி வந்த சொற்கூட்டத்தின்
புத்தம்புதிய ஆரவாரம்
பனிப்படலத்தில் சுற்றப்பட்ட தீக்கங்குகளின் தாக்குதல்–
நகரத்தின் மாலை நேர நியான் விளக்குகள் மின்னத்
தொடங்கியிருக்கும். வெதுவெதுப்பான
தூய மில்லியன் உணர்ச்சிகளின் மார்பகங்கள்
ரோதான்
பெர்னினி
உலோகம்
சலவைக்கல் உருவங்களில் மட்டுமே உனக்கு.
உன்னைத் தேடி வந்த பெண்ணைக் கண்டிருக்க மாட்டாய்.
அழைப்பு மணியின் சலனமின்மை
உன்னைக் கூப்பிட்டிருக்காது.
காலித்தகர டின்களால் சூழப்பட்ட மனிதன்
ரயில் என்ஜின்கள் நிராகரித்த
நிலக்கரித் தூள் மலைகளின் மேல் திரியும் சிறுவர்கள்
உன் நிறுவனம்
உருவாக்கும் தயாரிப்பு ஆடைகளை
அணியப் போகும் குழந்தைகள்
சற்று முன் நீ கண்டிருப்பாய்
உன் காலணிகளின் மீது மட்டும் பதிந்த பசிக்கண்களை.
எல்லாம் தெரிந்திருக்கும்
நீ நிசப்தத்தின் நடனத்தைக் கேட்டபடி உணவருந்தினாலும்
இரண்டு காதுகளிலும் தெளிந்த நீரோடைச் சங்கீதம்
பதிவான போதிலும்
மிலிட்டரி பச்சை நிறப் பையை
உன் ஷேகுவாராத் தொப்பியைக் கிண்டலடிக்கும் நண்பனையும்
விஷத்தையே உணவாக நாளும் புசிக்கும்
உன் சக மனிதர்களையும்
முதல் ‘டாடாயிசக்’ கண்காட்சி காட்டியது சிறுநீர் சேகரத் தொட்டி
உன் தேசமே அப்படி உனக்கு
சர்வ நிஜத்தில் முப்பரிமாணக் குறியீடு.
கிழிக்கப்படாத தேதித்தாள்கள்
உறையிலிருந்து பிரிக்கப்படாத கடிதங்கள்
முகப்பு தெரிவிக்காத பத்திரிகைகள்
அறிவியல் திரைப்படங்களின் விழாவுக்கு அழைப்பிதழ்
சிவனின் பேச்சு மௌனமாகிப் போச்சு
ஜென்னும்
உன் மிலிட்டரி நிறப் பச்சை மோட்டார் சைக்கிளும்
உன்னைப் போலவே.
உன் அறையின் ஜன்னலில் எட்டிப் பார்த்த தென்னை மரம்
நீ விரும்பிய ஸ்படிக நீரலைகள்
உன் தொண்டைக்குள்
நுரையீரல்களில்.
ஒவ்வொரு கன சதுரமும் உன்னை விழுங்கிய போது
ஐந்தாவது படியில் வரிசைக் கிரமத்தில் மடிக்கப்பட்டு
அடுக்கப்பட்ட உன்னுடைகள்
உன் தேய்ந்து போன காலணிகள்
நீருக்கு மேலே வந்த
உன் முகம்–
பட்டியல்கள் அனைத்தையும் மறந்து சொற்களைத் துறந்து
மருந்துப் புட்டிகளின் நிறங்கள் அழிந்து
நிறமிழந்து
நீரைப் போல.

14.08.1984

367மணற்கரையில் திரியும் மனிதன்

ஒரு நகரா, மனிதனா, புத்தகமா,
பெயரா அல்லது புனிதனா,
எதுவென்று புரியவில்லை
நான் சொல்வது உனக்கு.
அனந்தத்தின் ஒரு துளியைக் கண்ணுற்று
வைரத்தின் முகங்களென மருள்கிறாய் நீ
புவி வெளியில்
கிரகங்களின் இடை கோடுகளைத் தழுவித் திரும்பி
வாசலில் காத்து நிற்கும் மத்திய கால வீரனைப் போன்ற
இசையை நீ கேட்கிறாய் வெறும் காற்றேசையாய்
அவை
எப்பொழுதாவது கோர்க்கப்படும் பிச்சைக்காரன்
கழுத்து மாலையென
மின்னல் வெட்டி மறைகையில்
புதுப்புதுப் பதுமைகள் தோன்றும் .
உனக்கோ உறக்கத்தின் வெறும் சாயைகள் மட்டும் பிடிபடும்.
ஓட்டை வலைகளுடன் மணற்கரையில்
திரியும் மனிதனே
எப்பொழுதும் முகடுகளின் விளிம்பில்
இலைகளுக்கு இடையில்
சப்தமற்று வீழ்ந்துகொண்டிருக்கிறது
அருவி.


367அழுக்கின் ஆறும் அலுமினிய மனிதர்களும்

பனித்துளிகள் விளைந்த
புல்லின் வாசனையுடன்
வயலின் கம்பிகளில்
என் வாழ்வைப் பின்னல் ஓவியம் வரைந்து
கொண்டிருந்தது காலம்.
மூன்று ஸ்வரங்கள் மட்டுமே
பழகியிருந்தது புல்லாங்குழல்.
அருந்திய காபிகளின் எண்ணிக்கையை
செலவிடப்பட்ட சர்க்கரையின் அளவில் ஈடுதர
வேண்டியிருந்தது.
புறக்கணிக்கப்பட்ட வாடகைக்காரின்
பின்னிருக்கையில் உறங்கும் காசநோயாளியைப் போல்
கமறிய முதல் பகுதி இரவுக் காக்கைகளைப்
பற்றி இன்னும் சொல்லவில்லை.
இருப்பினும்
தெருக்கள் தீப்பற்றியது போல் சாலையில்
விளக்குகள் எரியும் இப்பெருநகர் விழுங்கியது என்னை
அழுக்கின் ஆறு எனக்குள் வழிகிறது
உணவைக் கனவில் கண்டு உறங்கும்
நடைபாதைக் குழந்தைகளின் அம்மணத்தில்,
பாலிதீன் போர்வைகளில்
முகம் ஒட்டிக் கிடக்கும்
பெண்களின் மீது
குதிரைச் சாணமும் தெருப்புழுதியும் சட்டையெனப் படிந்திருக்கும்
மனிதன் கை ரொட்டித் துண்டுகளுக்கு
விமான வரிசையென இறங்கும்
காகங்களின் நிறத்தில்.
மேஜை விளிம்புகளில் சிந்தும்
எச்சில் தேநீரில் கலக்கிறது
மொய்க்கும் ஈக்களை விரட்டி .
எனக்குள் அழுக்கின் ஆறு
ஒழுகுவதாகிறது.
நாற்றம் குடல் வரை சென்றதை அறியாமல்
அலுமினிய மனிதர்கள்
தம் நிற வர்ணம் பூசும்
ரயில் நிலையத்தில்
நின்று கொண்டிருக்கிறேன்
துண்டுகளாக்கப்பட்ட
நாளின்
நுனிகளைக்
கொறித்தபடி.

367

பயணம்-கீழ்நோக்கி

ஏன் நான் நீ எல்லோருமே ஒரு ஏணிப்படியில்தான்
ஏறிக்கொண்டிருக்கிறோம்.
இறங்கும்போது
ஒவ்வொருவரும்
லிஃப்டிலோ
மொசைக் படிகளில் செருப்புகள் அழுந்தும்படியோ
ஜில்லிப்பு பாதம் ஏற்க வெறுங்காலுடனோ
அனைத்துப் படிகளிலும்
அல்லது கைப்பிடியில் சிறுவர்கள் போல சறுக்கி
சீக்கிரமாய்
எப்படியோ
கீழே
உனக்குத் தெரியும் நீ அடைகாத்த மண் உன் பாதங்களைத்
தாங்காதென்று.
அவனுக்குத் தெரியும்
பரந்த ஹாலும்
தேக்குக் கதவுகளும்
உலோகக் கைப்பிடிகளும்
இவ்வாறான இடத்தில் தான் கிடத்தப்பட்டிருப்பதை
அறிவதற்கில்லாதவாறு.
யூதர்களுக்கு விஷவாயுக் கிடங்குகள் தந்தவன் கூடத்
தன் கீழ்நோக்கிய பயணம்
பற்றி க்ஷண நேரம் யோசித்திருப்பான்.
நான் நீ அவன் எவரும்
யோசித்திருப்போமோ
நுரையீரலில் நீர் புகுந்து
மூச்சற்று
முடிவற்று
உயிர்கள் இறக்கும் நாளை
தாவரங்கள் கருகும் நாளை
கண்கள் மணிகளை இழக்கும் கணகாலத்தை
உன் டெக்னலஜி உனை நோக்கித்
துப்பாக்கி எனத்
திரும்பும் நாளை.

367

வலி உணரும் மனிதர்கள்

இந்தக் கூரை எப்போது வேண்டுமானாலும்
பொத்துக் கொண்டு விடுகிறது.
குறிப்பாக இடது மூலை.
வலி.
சிவப்பின் துடிப்பென
நெருப்பின் நிறத்தில்
நிமிர்ந்த ஆணியாய்
முன்னறிவித்தலின்றி
உள் செருகி துருத்திக் கொள்கிறது சில நேரம்.
பிடுங்கப்பட்டுவிட்டாலும்
பின் வரும் தாக்குதல்களுக்காய்
கூரை செப்பம் செய்வதில்
மாத்திரைகள் தீர்ந்து போகின்றன.
கம்பிகளின் இனிமை
அதிர்வலைகள் அயர
விரல்களின் அழுத்தம் குறைய
கூரையின் துளை வளர்கிறது
பெரிதாய்.
நீலவானம்
கடும் இருள்
தெரிய ஆரம்பிக்கிறது அங்கிருந்து.
துடிக்கும் நட்சத்திரங்களின்
ஒளி வலிகள் காட்சிப்பாடுகள்
போர்க்கிரகமும்
சிவந்து விடுகிறது வலியின் வறண்ட காற்றுகளால்.
இனி முழு வானத்தையும்
பார்க்கவேண்டும்
கூரையின் மேல்தளத்தை முழுவதுமாய் அகற்றி.
அப்பொழுதும்
ஏதோ ஒரு நட்சத்திரக் கூட்டத்திற்கிடையிலிருந்து
தெரியும்
பழுக்கக் காய்ந்த கூர் ஆணி.

367

நிலையங்களும் நினைவுகளும்

ஊர்திகளாலும் ரயில்களாலும்
நிலையங்களில் வீசப்பட்டு
மிதந்தபடி சென்று கொண்டிருந்தேன்.
சுவாசம் மறந்த பழங்கள், பனியில் உறைந்த இலைகள்
திடீரென சகதியில் புதைந்து
இறங்கும் கண்ணடிக் கோலியின் ஈர்ப்பு.
வீசும் காற்றின்றி ஜன்னல்களற்ற சிறைக்குள்
அடைக்கப்பட்டு
எடை அளக்கும் யந்திரம்
அச்சடிக்காமல் துப்பும் அட்டைத் துண்டுகளென
வெளிப்பட்டன
என் சொற்கள்.
நோயில் படுத்திருந்தும் நடன அசைவுகளை
சிருஷ்டித்த ஒருவன் முகம் வியர்வையில் ஒளிர்ந்தது
பளீர் நினைவின் திரையில்.
என் படுக்கையில் அசைவற்று கிடந்தது உடல்.
தோண்டும் கருவியொன்று மண்டையில்
திருகித் துளையிட
சிந்தனைகள்
வடிவமிழந்த வார்த்தைகளாய்
வெளியேறிக் கரைந்தன.

367

விசாரம் வேண்டும் மனித இறப்புகள்

உன் காடுகளில் திரிந்த புலியை
பரவிக் கிடந்த முட்பரப்பை
அகற்றி
தசைகளில் உலவிய ஜ்வாலையைப் பிழிந்து
குடிசைக் கலயங்களின்
கூழ்நிலையுடன் மாறினாய்.
இருளின்
கவியும் ஆக்ரமிப்புகளைக் கிழித்துச் சென்ற
உன் பாதங்கள்
காலணிகள் காணாதவை.
காய்ந்த அருகம்புல்லில்,
படரும் நெருஞ்சிக் கொடியில்,
ஒற்றைத் தடங்கள்,
கிராமங்களை இணைத்த மனிதனே
நாளை பார்ப்போம் எனக் கூறிச் சென்றாய்.
உன் கடைசிச் சொற்களுக்கு
மொழியைக் கடந்து
அர்த்தம் தருவார்கள் சீருடையாளர்கள்
எனக் கற்பிதம் கொள்ளாத என் பார்வை
உன் கிழிந்த சட்டைக் காலரில்
நிலைத்துப் போனது.
காலங்களின் முதுமையைச் சுமந்தது
அவர்கள் பிரயோகித்த ஆயுதம்.
கற்கள் உன் மூட்டுக்களின்
பாஸ்பேட்டுக்களைத் தேடியிருக்கவேண்டும்.
திரவ ஒலியுடன்
உன் தொடைகளைக் கிழித்திருக்கும்.
ரணங்களை ஆற்றாமல்
ரத்தப்பொலிவுடன் வெளியேற்றியது
அரசு மருத்துவமனை.
இறுதிப் பார்வை கொள்ள வந்த என்னிடம்
கல்லறையிலும் முளைத்துவிடுவாய்
எனப் பயந்த மின்சார இயந்திரம்
உன்னுடலைச் சாம்பலாக்கி
பாலீதீன் பையில் அடைத்துக்
கையில் தந்தது.

367

ஓர் இந்தியக் கிராமத்தின் கோட்டுப் படம்

தூசிகள் மடிந்தும்
தோள்கள் வீழ்ந்த பின்னும்
புழுக்கள் திரியும்
இவ்வமைதியற்ற சமாதிகளில்
யாரைத் தேடுகிறீர்கள்?
முக்காலமும்
விஸ்தாரமும்.
பச்சைக் குழந்தையின் புதுமேனி வாசம்
கழுதைப்புலியிடம் அல்லது ஓநாயிடம் என்ன வேண்டும்?
வயிற்றில் மந்தமாய்
ஜீரணமாகாத தவளை
வண்டித் தடங்கள் அழிந்தாலும்
நரி சொல்லித் தரும் தந்திரம்.
வளைந்த பாதைகள் டைனமைட் கொண்டு செல்லும்.
யார் வேண்டும் உங்களுக்கு?
சதைகள் பிளந்து
ஆறுகள் பெருக்கெடுக்கும்
ஆர்ப்பரிக்கும் நிலம்
எனும் இயக்கச் சித்திரம் மாறும்.
கதிர் வயல்களில் உஷ்ண மூச்சு
அமில மழையில்
தேசத்தின் ஆறுகள் கரை உடைக்கும்
அச்சமயம்.

367

கிராமங்களின் மௌனங்களுடன்

அவன் விட்டுச் சென்ற ஓவியங்கள்
என் அறைச்சுவர் விரிசல்களுக்குத் திரையிட்டன.
அவற்றிலிருந்து எப்பொழுதும்
முரட்டு மனிதர்களின் இயக்க கோஷம்
தலைமேல் பிழம்புக் கோளத்தைச் சுமந்தபடி.
அடிக்குரலில் ஆலாபித்த இசை
மஞ்சள் நிற வயிற்றுப் பறவையாய்
திசைக் கொன்றய்
கருப்பந் தோகைகளைக் கிழித்துவந்து
கூடு பின்னுகிறது.
குஞ்சுகள் பொரிக்கும் நாளில்
இச்சுவர்கள்
எனக்குச் சொந்தமற்றதாகிவிடும்.
அறைமூலையில் நிற்கும் அவன் ஒரு ஜோடி காலணிகள்.
அவற்றில் சிலந்திகள் பின்னும் வலைகளை
பிள்ளையார் எலிகள் விளையாடிக் கலைக்கும்.
அவன் அமர்ந்துபோன
உடுக்கை வடிவ இருக்கை
தலைகீழாய்
அதன் உள்ளே அவன் உடைமைகள்
புத்தகங்கள்,
புறக்கணித்த கையெழுத்துப் பிரதிகள்,
கெட்டி மை தீர்ந்த பேன
இரும்புக் கிராதிகளை அரித்துத் தின்றபடி
கடல் உப்புக் காற்றாக
வீசும் மழையில்
பிடறி சிலிர்த்து
அடைத்த கதவை
பிய்த்துக்கொண்டு வெளியேறும்
குதிரையென
எங்கோ
கிராமங்களின் மௌனங்களுடன்
அவன்.

367

கற்பனை நிகழ்வின் யதார்த்தம்

கதவுகள் தகர்க்கப்படும்
கனிகள் கனவுகள் நீரில் மூழ்கும்
தெருக்களில் தற்காலிகச் சுவர்கள் முளைக்கும்
இரும்பு வாகனங்களைக் கிழிக்கும் நாள் நிலைக்கும்
முன்பு போல் இராது எதுவும்
இலைகள் உதிரும்
கிளைகள் ஒடியும்
சந்துகள் வெடிமருந்தின் நெடியில் கமரும்.
குழந்தைகள், குரல்கள் , அலரும்.

யாரும் யாரும் கலந்துவிட வேண்டும்
எதுவும் இராது முன்புபோல்
தீயில் வழலும் பறவை இறைச்சியென
மனிதர் தீய்ந்து தெருவோரம் கிடப்பர்
துண்டித்த கால்
சிதறிய விரல்கள் துடித்துக்கொண்டிருக்கும் சாக்கடைகளில்.
எதுவும் முன்புபோல் இருக்காது.
இன்று உறிஞ்சப்படுவது
அன்று சிந்துவது சில துளி குறையும்
நீரைவிட எளிதாய் மனிதர் குருதி
காய்ந்து மொய்க்கும் .
ஈக்களின் ரீங்காரம்
யாரும் பாட முடிவதாயிருக்காது.
பாடல்காரரும் குண்டுகளின் நீள் ஓசையாய்ப்
பாடலாய்க்கொள்வர்.
காகம் ஒன்று சிறகடித்துக் கண் குதறும்
கேட்பாரற்ற பிணத்தை.
கற்கள் செங்கள் சுவர்கள் குவியலாகும்.
இரண்டு இசைகளின் இடைவெளியாய்ப் பெருமௌனம்
கல்
உலோகச் செதில்
புண்ணாய்ப் பிளந்திருக்கும் சுவர்கள்
விரிசலில்
சிறுபுல் முளைக்கும் கிளி நிறத்தில்
களைத்திருக்கும் உடல்களில்
வியர்வை வைரப் பொடியாகும் .
கழற்றப்படும் சட்டையென
உன் தோல் சோதனைக்கு.
இசைக்கும் நரம்புகள்
இருப்பது அறியப்படும்.
பத்திரமாய் ஓர் இடமில்லை
வேற்று தேசத்திற்கொரு விமானச்சீட்டுமில்லை.
எண்ணி இரண்டோ மூன்றோ
தோட்டாக்கள் செலுத்தப்படும்
கழுத்தின் கீழ்
விலா எலும்புகளின் பிளவுகளில்.

367

கவிதையின் பொய்

போய்க் கொண்டிரு
நிச்சயமாய்.
திரும்புதல் தவறாதென்றால்
புழுதியில் உறங்கி
கன்னம் ஒடுங்கி
கண்களை நீரின்றித் துடைத்து
கால்களிடம் கேட்டு வா.
போய்க்கொண்டிரு.
கபாலம் சூரியனில் நனைந்து
உள்ளாடைகளற்று
மனநல விடுதிக்குச் செல்.
கோதுமை வயல்களை வரைந்து
மேலும் முதிர்ந்து
பழுத்து உன்னையே இழந்து கொள்.
செவிப்புலன் இழந்தும்
கூட்டுக் குரல்களைக் கலந்து
இறுதியாய் ஒரு கீர்த்தனையைச் செய்
சோற்றுக்குக் கால்வாய்கள் வெட்டி
சோர்ந்து போ
கவிதை எனச் சொல்லிப் பொய்யை
நிறுத்தாதே.

367

என்றும் இன்றும் எல்லோரும்

ஒரு இரவை நூலால் நான்காய்ப் பிரித்து
அவனிடம் தந்தேன்
மூன்றாம் பகுதியில் நுழைந்து
கடல் புறங்களில் கரைமறந்த சிரிப்புகளை
கிளிஞ்சல் சுண்ணாம்பின் நிறமென
அறைக்குள் எதிரொளித்தான்.
‘ஆனால் பைக்குள் பணம் வைத்திரு’
என்பவன் ரோடரிகோ இயாகோ எவனெனத்
தொடர்பு நாளங்கள்
கால் பிசகிக் கேட்க
என்றும் இன்றும் எல்லோரும் என்றேன்
சிரிப்புகளைப் பண்டமாற்றி
நான்காம் கட்டம் தாண்டினான்
கபாலம் துருத்திய என்னிரு கண்ணாடிக் கோலிகளில்
விழுந்தது
தீச்சுடரும் கண்மணிகளைக்
கொண்டதொரு முகம்.
போல்களின் குரல்கள்

367

இன்னும் கொஞ்சம் நிலா வேண்டும்போல்

சிறிது இனிப்பு காபியில் கூடியிருக்கக் கூடாதென
படிகளும் கைப்பிடிக் கிராதிகளும் பரிமாணமுற்றுத் தெரிய
இடைவெளியற்று
தவளைகள் எறியும் உலோகச் சில்லுகள்
இரவை முற்றிலும் உடைக்க வேண்டுமென
அணைக்கப்பட்ட மேஜைவிளக்கின் வெப்பம்
குறையக் கூடாதென
இன்னும் கொஞ்சம் நிலா வேண்டும் போல்
கிரகம் ஒன்றின் தெருக்கள் தெரிய வேண்டும்
தெளிவாய் என
இன்னும் ஒரு மிடறு நீர்
குளிர்ந்து தொண்டையில் இறங்கவேண்டும் போல்
கையசைப்பில் ஒரு பொம்மை நாடக நடிப்பு சிறைப்பட
உதடுகளின் குவிப்பில்
வெற்றொலிகள் சித்திரச் செதுக்கம் போல
இன்னும் கொஞ்சம் நிலா வேண்டும் போல
கேட்டு முடிந்து ஒலித்த குரல்
மன ஆகாசங்களில் எதிரொலித்தபடி
இருக்க
முடிவற்ற வெளியேற்றமாய் பிரக்ஞை தவித்துக் கிடக்க
அங்கிருந்தும் ஒரு தூரக்குரல் அழைக்க
திசையற்ற மூலையில் கொஞ்சம்
ஏதோ வேண்டும் போல்.

367

வலியின் முகம்

எல்லாம் மறந்து விடும்
சுத்தமாக,
துடைக்கப்பட்ட ஸ்லேட்டாக.
இப்பள்ளத்தாக்கின் முகட்டில்
என்னை நகர்த்திக் கொணர்ந்து நிறுத்தினேன்.

மூளை குப்பைகளைத் துறந்துவிடும்.
ஒரு குற்றுச்செடி அதன் இடது மூளையில்
வலியுடன்
காற்றின் வீச்சினைத் தாங்கும்.

என் முகம் ஒரு காமிராவென
‘பான்’ அசைவுகளில் இடது வலதாய் நகர்ந்தது.

பதிந்தது
நெகிழ்ந்த பாறையின் முகத்தில் நீர் வழிதல்
நீர் அருவியின் குறையும் அகலம்
‘நீர்தெளிப்பான்’களின் சுதந்திரச் சுழல் விளையாட்டு
வயலில் உருளைக் கிழங்கு விதைக்கும் மனிதர்கள் எதிர்த்த
முதுகு பிளக்கும் சூரியன்.

கூசும் ஒளி வலி நினைவை உலர்த்தியது.
என் படுக்கைக்கு அழைத்துச் சென்றேன் என்னை மீண்டும்.
முணுமுணுப்பு
எங்கென்று தெரியாதிருந்தது-
எலும்புகளின் வலியும்
இன்னும் இரு வாரங்களில் முளைக்கப்போகும்
கிழங்கின் குருத்துகளும் உரையாடுவது.

எல்லாம் மறந்து விடும்
என்னை அழைத்துச் சென்றதும்
என் தகுதியின்மையும்
பசும் குருத்துக்கள் மண்ணை உடைத்து
கண் திறக்கும்போது.

367

துருப்பிடிக்கும் குரல்

கடந்து காதல் தெளிந்து பின்
நடந்த ஒரு இருள் தெரு
30ஐத் தாண்டும் உன்னை
பால் வடியும் முகமெனச் சொல்லி அழைக்கும் அவன்.
பாடுமுன் மீட்டிய தம்பூராவின் அதிர்வலைகள்.
உனக்குள் இன்னும் துடிக்காத சிசுவின்
மூளை லயப்படும்.
நான் நீயென்று
தலையிட்டுக் கொத்தி
வேலிப் பூக்களைச் சிதறி
சொந்தச் சிறகுகளையும் உதிர்த்துச் செல்லும் குருவிகள்.
தலை நிமிர்த்திப் பாராமல் உணர்வாய்
தேநீர்க் கோப்பைகளில் எஞ்சியதில்
சாகத்துணியும் ஈ ஒன்றை அவன்
சுட்டுவிரல் விடுவிப்பதை
தவிர்க்க இயலாதவற்றின் தன்மைகள்
உன் முகத்தில் தெரியும்
தம்பூரா மீண்டும் அறையின் மூலையில்
சாய்ந்து நிற்கும்
காற்றில் சங்கீதம் கரைந்து கிடக்கும்.
உன் குரலோ
பழுக்கக் காத்திருந்து துருப்பிடிக்கும்.

(ரேவதிக்கு)

367

மூன்றாவது பாடல்

குலைந்து சிதைவுற்ற
கருவின் தினம் ஒன்றில்
குவிந்த கைகள் எனப் பாரத் திரள்கள் ஞாபகத்தில்
கவிந்த நிமிடங்களில்,
பள்ளத்தாக்குகள்
பெயர் தெரியாத மரங்களின் வாசனைகள்
புற்களைச் சுழன்றாடிய காற்றின் ஜியோமிதி வடிவங்கள்
மீண்டும் உன்னை அழைத்துக் கூவின
வடித்து இறைக்கப்பட்டு
மெலிந்து அதிர்ந்து பாடப்பட்ட பாடல் என
என்னுடன் என் மயிர்க்கால்களில்
சிலிர்த்து வெளிப்பட்டதை நீ அறியவில்லை.
நடுவானில் உறைந்த அருவியாய் நீ நின்றதை
உணர்ந்தேன் நீரின் பேரோசையால்.
நீளும் மெல்லிய உன் விரல்களில்
அடங்காதது என் கண்ணாடிகளும் விலா எலும்புகளும்
என்றாலும்
உன் கை நரம்புகளின் கொடிகளை அசலாய்ப்
பார்த்துச் சென்றது
யாரென்று கேட்டது என் அகம்.
ஆம் என்ற பதில் ஒன்று
உன்னிடமில்லை இப்போது
எப்போது
அப்போது
மீண்டும் உன் தலை கலைத்து விளையாடிச் செல்லும்
நீலக்காற்றாக
நான் அலைவேன்.

367

இசையெனும் பேராறு

நாம் கிளை பிரிகிறோம் என்றால்
அது கச்சிதமற்ற உருவகம் என்று சொல்வாய்.
நம் வார்த்தைகள் பிளவுபடுகின்றன எனின்
மரபின் சொல் வழி வந்தததாகுமது
சூடேறி, சொல் மீதேறி அழுத்தமானியின் குறியீடுகள்
அதிகம் காட்டுவது உன் குருதியின் கூர்மையை
என்பேன்.
உன் அறிவியல் சொற்கட்டுக்களை வீசாதே
என்மீதென்பாய்.
‘தூரமாய் விலகிப் போகிறோம்’–கடிதத்திற்கான வரி.
நிஜத்தை ஓர் ஒளிரும் ஆடையற்ற தூய்மையாய்
உரிக்கத் தெரியாத கையறு நிலை.
தொடுதலும் உணர்தலும் இடைவெளியற்று
நடக்குமாயினும்
மெய்யென்று அறியுமோ தனித்தனி மனதுகள்?
துவக்கத்தின் புல்லரிப்புகள்
சிலிர்த்த கற்பனைகள்
நமக்குப் பின் என்றென்றும் ஓடிக்கொள்ளும்
இசையெனும் பேராறு
யாவும் காவியேறிய புகைப்படங்கள்
கூடிப் பிரிந்து சமரசத்தில் கை குலுக்கினால் நட்பு.
இடைவெளியைத் தூர்த்து
கையை நீட்டினாலும்
இட்டு நிரப்பியதென்று அறிவோம்
நீயும் நானும்.

367

காத்திருக்க வேண்டும்

காத்திருக்க வேண்டும்
கடந்து செல்லும் மரங்கள்
கன்னத்தின் மீது காற்றைக் கோடிட்டுச் செல்ல
கால்களைத் தீட்டியபடி பெயர் தெரியாத வைரசை
உன் தோள் மீது தொற்ற நினைக்கும் ஈக்களுக்காக

உள் ஓடும் ஆற்றுடன் நாளும் வாழ்ந்து
கேட்டவுடன் அள்ளித்தரும் இசைக்காரருக்காக
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
கிறித்தவக் கோயிலின் நான்காவது முகம்
மழையில் நனைவதற்கு

உன் இதயத்தின் வால்வுகளில் ஒன்று
தாளம் தவறுவதைப் பதிவு செய்ய
வெட்டியும் துளிர்த்த
மரக்குருத்துக்களை குருட்டுக் கால்கள்
மிதிக்கும் ஒரு அஞ்சல் அலுவலக நுழைவாயிலுக்கு

நாளை உனக்குச் சுதந்திரம்
என்று கூறிச் செல்லும் அரைப் புரட்சிக்காரனின்
மூளை வெறுமையைச் சிந்திக்க
நிறங்களை மண்ணில் மூழ்கடித்து
பூக்களை விரல்களாய் நீட்டும் பெயர் தெரியாத
தாவரத் தண்டு நரம்புகளின்
வரி அமைப்புக்களைக் காண

இரண்டுகைகள் கட்டியணைத்தும்
இடைவெளி மிஞ்சும் அடிமரங்களின்
வெட்டுத் துண்டுகளை
ஆழ்ந்த கார்பன் மோனாக்சைட் மூச்சிழுத்து
வாரிச் செல்லும் லாரியின் சிவப்பு எச்சரிக்கை விளக்குக்காக
மழைக்குப் பயந்து
பழுதாகிக் கிடக்கும் கார்களின் அடியில்
நிற்கும் கோழிக்குஞ்சுகளின் இறகு சிலிர்க்க
ஒரு மாலைக்கால மழை நேரத்தை
மூன்றாவது பரிமாணமாகும் வயலின்
மீட்டல்களுக்காக
சேகரிக்கப்பட்ட மனித ஞாபகங்களுடன்
எதிர் கேள்ளிகளுக்கு விடை தர
உன் மூளையில் பதிக்கப்படவிருக்கும் 2010ன் மினி
கம்ப்யூட்டருக்காக

ஒரு அதிகாலையில் ஜன்னல் திறக்கப்பட்டவுடன்
முகத்தில் விழிப்பு கொள்ளும்
புலியை நினைவூட்டும் பூக்களுக்கென
உனக்கே உன் முகம்
கண்ணாடியில் அடையாளம் மறந்து போகும்
நியாயமற்ற நாளின் நிமிஷத்துக்காக

நடனத்தில் கலந்தும் விலகியும் நின்று
காட்சியாகும் பித்தனின்
பிறைசூடிய நெற்றி மின்னலுக்கு
எங்கிருந்தோ பச்சைப் பெரும் விரிப்பில்
வெற்று ஓடங்களாய் நீந்தும்
கொக்குக் கூட்டத்தின் சிறகடிப்புகளுக்காக

கடவுளரைத் தெரியாது
ஆயினும் ஆறு ஒரு பெரும் மண்ணிறக் கடவுள்
என்றவனின் அச்சு வரிகளில் உன் கவனம் மோத
காத்திருக்க வேண்டும்.

367

சிலை ஒன்றின் சமீப வெற்றிடம்

இமைகளின் பிளவில்
வினாடியின் வீச்சில்
எறியப்பட்ட பூமியும் உயிர்களும்
நம் உடன் வரவில்லை.
விரல் விட்டு நாட்களை எண்ணிய
குழந்தை
பசியின் கோஷங்களை வயிற்றில் வாங்கிய போது
உன் கோள்
இரு சந்திரன்களை ஒளியூட்டி
பிணிக்கு
மறதியைப் பதிலாய்ப் பூசியது.
நடை பாதையில் நாம் கைகளுடன் நீந்தினோம்
எனில்
அவ்வொளி
தேசப் படங்களை தொலை நோக்கிக்குக் கிட்டாமல்
செய்திருந்தது.
இலையுதிர்க்கும் மரங்களை
செம்மண் புழுதியை
புழுக்களை உண்ணும் பறவைகளை
சிநேகிதம் கொள்ளாமலிருந்தது.
வெள்ளைக் கணுக்கால்களும்
பச்சை மின்னல்களும்
பதித்து வைக்க செப்புப் பீடம் தேடும்
ஆஸ்திகம் இல்லாமல் போயிற்று.
காலம் கலந்த வெளியில்
விரல் சேர்க்க நீ வருமுன்
கர்ப்பக்கிருகத்தின் வாசனையை
உன்மீது போர்த்தியதோ
இந்நாள் வாழ்வின் நினைவுகள்
ஒரு சிலையின்
வெற்றிடத்தை மறைப்பதற்கு.

367

சமர்ப்பிக்கப்படாத கவிதை–மனதின் குழந்தைக்கு

நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் நின்று பார்க்கும்
மனிதர்களிடையில்
நான் ஒற்றை விலா எலும்புடன் அல்ல
மூடிய என் கண்களுக்குள்
சற்பி சைத்ரீகன் கடவுள்
உருவாக்கினேன்
உன்னை
தொடாமல் உணரும் சருமம்
அணிகள் அற்ற முகம்
கற்பனைக் கைகள்
ரோமானிய சிற்பத்தின் மூக்கு
பழகாத உள்மனம்.
இலைகள் சிந்திய பயணப்படாத என் சாலைகள்
ஒரு குழந்தைக்காகுமென
நான் அழைக்க
கானல் வீசும் கறுப்புத் தார்ச் சாலையில்
எங்கே தத்துகின்றன உன் பாதங்கள்?

( சியாமளிக்கு )

367

வேலியும் விருக்ஷமும்

க்ரானைட்டில் அரண் எடுத்து நிறுத்தியதாய்
மனப் பாதுகாப்பு
சரக்கென்று காகிதமெனக் கிழிந்து
அப்பால்
நீயும் உன் ரகஸ்யப் படைப்புகளும்
வியர்வையில் மின்னும் ரோதான் சிற்பம்,
ஆல மரம் பற்றிப் பின்னிய
தொடைகளின் இடையில்
பனை ஒன்றின் நிமிரல்.

எப்பொழுதும் தேடுவிளக்குகள்
ஊர்ந்து வரலாம்
இருள் முடுக்குகளின் ரகஸ்ய
அம்பலத்திற்கு.

ஒவ்வொரு இலையாய்
கணுவாய் வளர்த்த செடி
ஒரு க்ஷணத்தில் களை எனச் சொல்லிப் பிடுங்கப்படும்
வேருடன்.

சூர்ய ஈர்ப்பு
நீ உறங்கும்
மாடி ஜன்னல்களின் வழியாய் வரும் தேடி.

பிடுங்கப்பட்ட செடி
உறக்கத்தின் ஒளியில்
கனவுகளின் நிழலில்
நனைந்து
எண்ணெய் மினுமினுப்பில்
ராக்ஷச விருக்ஷமாகும்.

வேலியின் நினைவு வருமுன்
விழித்துக் கொள்வாய்.
வேலியின்றி விடுதலையெனவாகும்
தோட்டத்திற்கு
விடுபடுவாய்.

திரும்புதலின் பிரச்சனைகள்
தெருக்கள் சுருங்கிவிட்டன
மறதியின் நிழல் படர்ந்து
பறவையின் உயரப் பார்வையில் போல்
திட்டுத் திட்டாய்த் தெரிகிறது கிராமம்.
பெண் முகம் ஒன்று அம்மை வடுக்களுடன்
தன் மடியில் கிடத்தக் கேட்கிறது உன்னை
மீண்டும் ஒரு முறை.
கோயில் முற்றத்துப் பறை
நரம்புகளைச் சொடுக்கி இழுக்கிறது
கால்கள் பரபரக்க. . . . . .
காசுகள் இறைந்தது போல்
குடிசையின் ஓட்டைகளில்
தரை மீது
நிலா ஒளி
கந்தல் சாக்கு எப்படித்தஞ்சமாகும் உனக்கிது
என்கிறது தந்தைக்குரல்.
தட்டித் தட்டி
தடம் பிடித்துச் செல்கிறது கைத்தடி.
திரும்பக் கேள் ஞாபகமே
ஒற்றைத் தடத்தை.
மின்மினிப் பூச்சிகளையாவது கேட்டுப்பார்.
ஈரக்களிமண் சிறையில்
குருவிக் கூடுகளில் கிடக்கின்றன அவை.
தவறு நிகழ்ந்துவிட்டது
நாடாப் பதிவு அழிந்து விட்டது.

367

முதல் மற்றும் இறுதி வரிகள்

என் முதல் வரி கிடைத்து விட்டது
என் மீது பச்சைத் தேயிலை வாசனை வீசிக்கிடந்தது.
இரண்டாவது
நாணற் புற்களுக்கிடையில் மணற்கரையில்
நெளிந்து வெளியேறும் பாம்புக் குட்டிகளாயிற்று.
இதோ மூன்று
மகாமசானத்தில் என்னைத் தொலைத்த பின்
யாரோ ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின்
தகரக் குரல் பாடலில் கண்டெடுக்கிறேன்.
படிகளில் ஏறி இறங்கி
கண்ணாமூச்சி விளையாட்டாகிறது சுவாசம்.
தவறிக் கால் வைத்து
குழியில் திடுக்கிட்டு
விழிப்புற்று
கவிதை கனவன்று தூய
உறக்கமாகும்
முதல் அடுக்கில்.