ஆக்டேவியோ பாஸ்/ கவிதையும் வரலாறும்

octavio_paz

ஆக்டேவியோ பாஸ்

கவிதையும் வரலாறும்

தமிழில் பிரம்மராஜன்

ஒவ்வொரு கவிதையும், கவிதையின் நலனுக்காக கவிதையையும் வரலாற்றையும் சமரசப்படுத்தும் ஒரு முயற்சியாகும். தான் வாழும் சமூகத்துடன் கவிஞன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற போதிலும் ”காலத்தின் சுழல் ஓட்டம்” என்பதில் அவன் பங்குகொள்கிறபோதிலும், வரலாற்றின் கொடுங்கோன்மையிலிருந்து எப்போதுமே தப்பிக்க முயல்கிறான்- இப்படிப்பட்ட தீவிர உதாரணங்களை நவீன உலகில் கற்பனை செய்வது அருகிவருகிறது. பெரும் கவித்துவ சோதனைகள் யாவும்–மந்திரச் சூத்திரங்கள், காவியக் கவிதையிலிருந்து ‘ஆடோமேடிக் எழுத்து’ வரை, புராணிகம், தகவல் செய்தி, கொச்சைச் சொல் வழக்கு, படிமம், என்றுமே திரும்ப நிகழ முடியாததேதி, கோலாகலம்–இவையும், கவிதைக்கும் வரலாற்றுக்கும் பொதுவான உலைக் களனாகப் பயன்படுத்தப்படுபவதாகக் கூறப்படுகிறது. உயிர்த்துடிப்பு மிக்க தேதி கருவளச் செறிவுடன், ஒரு புதிய காலகட்டத்தினை தொடக்கி வைக்க முடிவற்றுத் திரும்பிக் கொண்டிருக்கும். கவிதையின் தன்மையானது களிப்பூட்டும் விழாவுக்கு இணையானது. அது காலண்டிரில் ஒரு தேதியாக இருப்பதோடன்றி காலத்தின் சீர் ஓட்டத்தில் ஒரு இடை வெட்டாகவும், நேற்றுமில்லாது, நாளையுமில்லாது, காலம் தவறாது நிகழ்காலத்தினுள் வெடித்துச் சிதறும் பொருளாகவும் இருக்கிறது. ஒவ்வொரு கவிதையும் ஒரு களியாட்ட விழா, தூய காலத்தின் திரட்சி.

மனிதர்களுக்கும் வரலாற்றுக்கும் இடையிலான உறவு அடிமைத்தனமும், சார்புநிலையும் உள்ளதாக இருக்கிறது. வரலாற்றின் முதன்மைப் பாத்திரங்கள் நாம் மட்டுமே எனினும் நாம் அதன் கச்சாப் பொருளாகவும், பலியாட்களாகவும் இருக்கிறோம். வரலாற்றின் நிறைவேற்றம் நம்மைக் கொண்டே நடக்கும். கவிதை இந்த உறவினை தீவிரமாக மாறுதல் அடையச் செய்கிறது. கவிதையின் நிறைவேற்றம் வரலாற்றின் ஏதுவில்தான் நடக்க முடியும். கவிதையின் விளைபொருட்கள்- நாயகன், கொலையாள், காதலன், நீதிக்கதை, பகுதியான ஒரு கல்வெட்டு, திரும்ப வரும் வரிகள், சூளுரை, விளையாடும் குழந்தையின் உதடுகளில் தானாய் உருவாகும் ஒரு வியப்புக்குறி, சாவுத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளி, முதன் முதலாய்க் காதல் செய்யும் பெண், காற்றில் மிதந்துவரும் சொற்றொடர், அலறலின் ஒரு இழை, புதிய சொல்லாக்கம் மற்றும் புராதன சொல்லாட்சி, மேற்கோள் வரிகள்–இவை யாவும் தம்மை சுவரில் மோதி நொறுங்கிப் போகவோ, இறந்துபோவதற்கு தம்மை இழந்து கொள்ளவோ அனுமதியாது. இவை முடிவின் முடிவிற்கு, இருத்தலின் உச்சத்திற்குக் காத்திருக்கின்றன. காரண-காரியத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்றன. அவை என்னவாக இருக்கின்றனவோ அவையாக தம்மை ஆக்கி மீட்டுத் தரும் கவிதைக்காகக் காத்திருக்கின்றன. வரலாறு இன்றி எந்தக் கவிதையும் இருக்கமுடியாது என்றாலும் வரலாற்றை உருவமாற்றம் செய்யும் பணியினைத் தவிர கவிதைக்கு வேறு பணி ஏதுமில்லை. எனவே நிஜமான புரட்சிகர கவிதை ஊழியிறுதி செய்தியுடைய கவிதையாகும்.

சரித்திரமும் சமுதாயமும் எப்பொருளினால் ஆக்கப்படுகிறதோ- மொழியாலான கவிதையும் அதனாலேயே ஆக்கப் படுகிறது. உரையாடல் மற்றும் தர்க்கரீதியான சொல்லாடல் போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளைத் தவிர்த்த வேறு விதிகளால் மொழியை மறுஉற்பத்தி செய்கிறது கவிதை. இந்தக் கவிதைப்பண்பு மாற்றம் மொழியின் ஆழ்ந்த உள்ளிடங்களில் நிகழ்கிறது. இந்த சொற்றொடர்- தனித்த சொல் அல்ல- மொழியின் மிக எளிய தனிமம் அல்லது அதன் செல் கூறு ஆகும். ஒரு சொல் பிற சொற்களின்றியோ, ஒரு சொற்றொடர் பிற சொல் தொடர்களின்றியோ நிலைக்க முடியாது.

அதாவது, ஒவ்வொரு வாக்கியமும் மற்றொன்றிற்கான தொக்கி நிற்கும் குறிப்பினையும் கொண்டுள்ளது. மற்றதினால் விளக்கமுட்டப்படுவதற்கு ஏற்புடனும் இருக்கிறது. ஒவ்வொரு சொல் தொடரும் எதையாவது ”சொல்லும் விருப்பத்தை” உள்ளடக்கி இருக்கிறது. தனக்கு அப்பாற்பட்டதை பட்டவர்த்தனமாகக் குறிக்கிறது. இயக்கம் மிகுந்ததும் இடம் மாற்றிக் கொள்ளக் கூடியதுமான குறியீடுகளால் ஆனதே மொழி. ஒவ்வொரு குறியீடும் எதை ”இலக்கு வைத்து” செல்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த வகையில் அர்த்தம் என்பதும், செய்திப் பரிமாற்றம் என்பதும் சொற்களின் நோக்கத்தன்மை (Intentionality)யின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் கவிதை சொற்களைத் தொட்ட மாத்திரத்தில் லயமிக்க அலகுகளாகவும், படிமங்களாகவும் மாறிவிடுகின்றது. அவை தமக்குள்ளாகவே முழுமை அடைந்ததாயும் சுயாட்சிமிக்கதாயும் ஆகின்றன. உரைநடையில் ஒரு பொருளைச் சொல்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. ஆனால் கவிதையில் ஒரே வழிதான் உண்டு. கவித்துவமான சொல்லுக்கு எந்த பதிலியும் கிடையாது. அது ஏதோ ஒன்றை சொல்லும் விருப்பம் அல்ல. மாறாக மாற்றமுடியாதபடிக்கு சொல்லப் பட்டிருக்கிறது. எதையோ ஒன்றினை நோக்கிச் செல்வதுமல்ல. இதையோ அதையோ பேசுவதும் அல்ல. பயங்கரத்தைப் பற்றியோ அல்லது காதலைப் பற்றியோ கவிஞன் பேசுவதில்லை. அவன் அவற்றைக் காண்பிக்கிறான். மாற்றமுடியாதபடியும், மாற்றீடு செய்வதற்கில்லாதபடியும் இருக்கும் கவிதை சொற்கள் தமது வகையில் தவிர வேறு எப்படியும் விளக்கத்திற்கு அப்பாற்பட்டவை. அவற்றின் அப்பால் இல்லை அவற்றின் அர்த்தம். மாறாக அவற்றுக்குள்ளேயே. அர்த்தத்திற்கு ”உள்” இருக்கிறது படிமம்.

குறுக்க முடியாதது போலவும், முரண்கள் நிறைந்தும் தோன்றுகிற யதார்த்தங்களைத் தீர்மானித்து ஒரே ஒருமையாக ஆக்குவதுதான் கவிதைப் படிமத்தின் சரியான வேலையாகும். இந்தச் செயலினால் இரண்டு ஒருமைகளுக்கிடையே எழும்புகின்ற அல்லது மறுசிருஷ்டி செய்யப்படுகிற முரண்களும் எதிர்நிலைகளும் நீக்கப்பட்டுவிடாமலும், தியாகம் செய்யப்படாமலும் படிமம் இயங்குகிறது. இதன் காரணமாகத்தான் அதன் மிகச்சரியான அர்த்தத்தில் கவிதைப் படிமம் விளக்கப்பட முடியாதிருக்கிறது. எந்த இரு அர்த்தங்களுடன் யதார்த்தம் தன்னை நமக்கு வெளிப்படுத்திக் கொள்கிறதோ அதே அர்த்த நிச்சயமின்மையை கவிதை மொழியும் பங்கு பெற்றுக் கொள்கிறது. மொழியை பண்பு மாற்றம் செய்யும் போது, யதார்த்தத்தை அப்பட்டமாக்கி அதன் இறுதியான ஒருமையைக் காட்டுகிறது. சொல் தொடர்  ஒரு படிமமாகிறது. கூட்டமாகிறது கவிதை. நாம் எதை யதார்த்தம் என்று அழைக்கிறோமோ அதன் மறைவினால் உண்டாகும் வெற்றிடம், முரண் கூறுகள் அல்லது எதிராகும் ஆழ்பார்வைகளின் கூட்டத்தினால் நிறைகிறது. இவை பகுக்க முடியாத மறைமுகக் குறிப்பீடுகளைத் தீர்க்கத் தேடுகின்றன- அதுவே கவிதை : ஒளி ஊடுருவ முடியாத அழிவுறக் கூடிய சொற்களின் பிரபஞ்சம். எனினும் இச்சொற்கள் எப்பொழுதெல்லாம் அவற்றைத் தொடக் கூடிய உதடுகள் வருகின்றனவோ அப்போதெல்லாம் ஒளிபெற்று எரியத்தக்கவை. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் இந்த சொல் தொடர்–ஆலை பேசுபவர் சிலரின் வாய்களில், எவ்வித விரிவுரையும் தேவைப்படாத தெளிவான உண்மைகளின் பிறப்பிடமாகிறது. அப்பொழுது நாம் காலத்தின் முழுமைக்குள் அனுப்பப்படுகிறோம். இயலும் உச்ச அளவுக்கு மொழியைப் பயன்படுத்திக் கொண்டு, கவிஞன் அதைக் கடந்து செல்கிறான். வரலாற்றுக்கு அழுத்தம் கொடுக்கும்போது அவன் அதையும் அப்பட்டமாக்கி, அதன் இருப்பைக் காட்டும்போது அதுவே காலம் என்பதாகிறது.

முடிவோ அர்த்தமோ இல்லாத பிசாசுத்தனமான ஊர்வலம் தவிர வேறு ஒன்றுமில்லை என வரலாறு தன்னைச் சந்தேகிக்கும் அனுமதியை நமக்குத் தரும்போது, மொழியின் இருபொருள் தன்மை கூர்மையடைந்து, நிஜமான உரையாடலைத் தடுக்கிறது. சொற்கள் தம் அர்த்தத்தை இழக்கின்றன. இதன் விளைவாக செய்திப் பரிமாற்றம் செய்யக்கூடிய ஆற்றலையும் மொழி இழக்கிறது. நிகழ்வுகளின் வெற்றுத் தொடர்ச்சியாக வரலாறு சீரழியும்போது மொழியின் சீரழிவும் அதனுடன் பிணைந்துவிடுகிறது. இந்நிலையில் சவமான குறியீடுகளின் தொகுதியாக மாறுகிறது மொழி. எல்லா மனிதர்களும் அதே சொற்களைப் பயன்படுத்தினாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதில்லை. சொற்களின் அர்த்தம் பற்றிய ஒரு ”உடன்பாட்டை அடைய” மனிதர்கள் முயல்வது பயனற்றது. மொழி ஒரு சம்பிரதாயமல்லவெனினும் அதிலிருந்து மனிதன் தன்னைப் பிரித்துக் கொள்ள முடியாத பரிமாணம். சொல்லின் துணிகரச் செயல் ஒவ்வொன்றும் முழுமையானது. தனது முழு சுயத்தையும், வாழ்க்கையையும் ஒரு தனிச் சொல்லின் மீது பணயம் வைக்கிறான் மனிதன். கவிஞன் என்ற மனிதனின் அடிப்படை வாழ்வு அவனது சொற்களுடன் ஒன்றிணைகிறது. எனவே கவிஞன் மாத்திரமே ஒரு புதிய உரையாடலை சாத்தியமாக்க வல்லவன். நமது காலம் போன்றதொன்றில் கவிஞனின் விதியானது ”சொற்களின் கூட்டத்திற்கு மிகத் தூய்மையான அர்த்தத்தை வழங்குவதுதான்” என்றாகிறது. இது உணர்த்துவது என்னவெனில் சாதாரண மொழியிலிருந்து சொற்கள் பிடுங்கப்பட்டு கவிதைக்குள் பிறப்படையச் செய்யப்படுகின்றன என்பதே. இந்த உண்மையிலிருந்தே நவீன கவிதையின் மூடுமந்திரத்தன்மை எழுகிறது. ஆனால் சொற்கள் மனிதனிலிருந்து பிரிக்க முடியாதவை. இதன் காரணமாக கவிதைச் செயல்பாடு என்பது கவிதையால் பிரதிநிதித்துவமாகும் மந்திரப்பொருளில், அதாவது, கவிஞனுக்கு வெளியில் நிகழ முடியாது: மனிதனை மட்டுமே மையப்புள்ளி என கவிதை ஏற்பது மில்லை. மனிதனுக்குள்ளாகவும் எதிரிடைகள் இணைக்கப்படுகின்றன. கவிதையில் மட்டும் அல்ல. இவை இரண்டும் இணை பிரியாதவை.

ரைம்போவின் கவிதைகள் ரைம்போ (Rimbaud)தான்-அவன் மீது இறங்கிய சொல்லின் காரணத்தால் அவனை ஒருவித மிருகமாக மாற்றும் அனைத்து முயற்சிகளையும் மீறி ஜொலிக்கும் அவதூறுகளுடன் கத்திச்சண்டையிடும் வளர்பிராயத்தவன். கவிஞனும் அவனது சொல்லும் ஒன்றேதான். கடந்த ஒரு நூற்றாண்டு  காலமாகவே நமது கலாச்சாரத்தின் மாபெரும் கவிஞர்களின் நோக்கு இப்படியாகத்தான் இருந்திருக்கிறது. ஸர்ரியலிஸம் என்ற இந்த நூற்றாண்டின் இறுதிப் பேரியக்கத்தின் அர்த்தமும் இதிலிருந்து மாறுபடவில்லை. இந்த முயற்சிகளின் பிரம்மாண்டம் நம்மைத் தனித் தனியாகக் கிழித்தெறியும் இருமையை இறுதியாகவும் அறுதியாகவும் ஒழித்துக்கட்டுவதில் தங்கி இருக்கிறது- தனது பெயருக்குத் தகைமையுள்ள எந்தக் கவிஞனும் இதிலிருந்து வேறுபட முடியாது. கவிதையானது, அறியாதவற்றின் உள்ளேயான பாய்ச்சல். அப்படியில்லை எனின் அது சூன்யம்.

இன்றைய சூழ்நிலையில் கவிதையின் மட்டுமீறிய கோரல்கள் பற்றிக் குறிப்பிடுவது அபத்தமாகத் தோன்றும். வரலாற்றின் ஆதிக்கம் இப்போதிருப்பதை விட கூடுதலாக எப்போதும் இருந்ததில்லை. ”அடுத்து என்ன செய்ய வேண்டும்” என்பதின் கொடுங்கோன்மை மேன்மேலும் தாங்கிக் கொள்ள முடியாததாகிறது. இதன் விகிதாச்சாரப்படி கவிதை எழுதுவது மேலும் ரகசியமானதாயும், அரிதாயும், தனிமைப்பட்டும் போகிறது. நடைமுறைப்படுத்தப்பட்டவைகளுக்கு நமது ஒப்புதல் கேட்கப்படவில்லை. இவை எப்போதுமே மனிதனின் அழிவை நோக்கியே திசைப்பட்டிருக்கின்றன. சமூக ஒழுங்கினை (order)அதன் இரட்டைக் குணாம்சத்துடன் சமரசப்படுத்தியபடி, கவிதை எழுதுவதோ அல்லது காதல் செய்வதோ பயங்கரவாத நடவடிக்கையாக ஆகிப்போனது நேற்றுதான். இன்று ஒழுங்கமைப்பு பற்றிய கருதுதலே மறைந்துவிட்டது. ஒழுங்கமைப்பின் இடம் பலவித கூட்டு சக்திகள், மக்கள் திரள்கள், எதிர்ப்பு இயக்கங்கள் ஆகியவற்றால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. யதார்த்தம் தனது மாறுவேஷத்தை கழற்றி அப்பால் எறிந்துவிட, தற்கால சமுதாயம் அதுவாகவே பார்க்கப்படுகிறது: பலதன்மைத்தாகிய பொருள்களின் தொகுதி சாட்டையின் மூலமோ, பிரச்சாரத்தின் மூலமோ ”ஒருதன்மைத்தாக” ஆக்கப்படுகிறது. இச்செயலை இயக்கும் குழுக்கள் ஒன்றிலிருந்து மற்றது காட்டும் காட்டுமிராண்டித்தனத்தின் அளவு கொண்டு பிரித்து அடையாளம் காணப்படுகிறது. இம்மாதிரியான சூழ்நிலைகளில் கவிதைச் செயல்பாடு தனது பதுங்குமிடத்திற்குச் சென்று விடுகிறது. கவிதை என்பது விழாவாயின், அதிலும் புழங்கப்படாத தாவுகளில் பருவம் மாறி வெளிக் கொணரப்படுவதாயின் அது ஒரு தலைமறைவு விழா.

கவிதைச் செயல் தனது ரகசியத்தின் மூலம் அதன் புராதன காலத்து உடைப்புச் சக்திகளை மறு கண்டுபிடிப்பு செய்து கொண்டிருக்கிறது. இந்த ரகசியம் மறைபொருள்தன்மை மற்றும் உடல்கிளர்ச்சித்தன்மை ஆகியவற்றால் நிறைக்கப் பெற்று தடையீடுகளுக்கு ஒரு சவாலாகிறது. வெளிப்படையாக உருவாகாததால் கண்டனத்துக்கும் உட்படுகிறது. நேற்று பிரபஞ்ச பரிவர்த்தனையின் சுதந்திரக் காற்றினை சுவாசிக்க வேண்டியிருந்த கவிதை இன்று நம்மை பலாத்காரம் மற்றும் தீயமந்திரத்திலிருந்து காத்துக் கொள்வதற்கான பேயோட்டலாய்த் தொடர வேண்டியிருக்கிறது. நமது வாழ்வுகளை நிர்வகிக்கும் முறைகளைத் தீர்மானிப்பதோடு திருப்தி அடையாது நமது மனசாட்சிகளையும் ஆட்சி செலுத்த விரும்பும் எல்லா சக்திகளுக்கும் ”இல்லை” என்று சொல்வதற்கான நவீன மனிதனின் வழிவகை, கவிதையே என்று சொல்லப்பட்டது. இந்த ”இல்லை”, தனக்குள்ளாகவே தன்னை விடவும் சக்திமிக்க “ஆம்” என்பதையும் கொண்டிருக்கிறது.

ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் சாமுவெல் பெக்கெட்.

தமிழில்: பிரம்மராஜன்.

(Anthology of Mexican Poetry, Thames & Hudson, 1959)