The Adventure of Life and Death of poetry-Rimbaud/Introduced by Brammarjan

rimbaud1

கவிதையின் மரணமும் வாழ்க்கையின் சாகசமும்

பிரம்மராஜன்

ஐரோப்பிய பொது வாழ்க்கையையும் அதன் கலாச்சார மதிப்பீடுகளையும் மாற்றியமைத்த மகத்தான சக்தி படைத்ததாய் அமைந்த சிம்பாலிசக் கவிதை இயக்கத்தின் பிதாமகராகக் கருதப்படுபவர் சார்ல்ஸ் பாதலெர். பாதலெரிடமிருந்துதான் பிரெஞ்சுக் கவிதை இறுதியாகத் தன் தேசீய எல்லைகளைக் கடந்து விரிந்து சென்றதென்றும் அது சகல இடங்களிலும் வாசகர்களைப் பெற்று நவீன காலத்தின் பிரத்யேகக் கவிதையாகத் தன்னை ஸ்தாபித்துக் கொண்டதென்றும் பால் வெலரி ஒரு முறை குறிப்பிட்டதை இங்கு நினைவு கூறலாம். பாதலெருடன் இணைத்தே சொல்லப்படும் பிற கவிஞர்களில் ரைம்போவும் (Rimbaud)மல்லார்மே (Mallarme)வும் சம முக்கியத்துவம் பெறுபவர்களாக இருக்கின்றனர். வெர்லெய்ன் என்ற மற்றொரு கவிஞர் இதே குழுவினைச் சேர்ந்தவராயிருந்த போதிலும் தவறான காரணங்களுக்காகப் பிரபலமானார். இருபதாம் நூற்றாண்டின் பல நவீன கவிஞர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் பாதலெரின் தாக்கத்தை ஊன்றிக் கவனிக்க முடிகிறது. அவர்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் அவர்களின் படைப்பாக்கத்தினை வேண்டிய அளவு பாதித்து மாற்றங்களை உருவாக்கின. இதற்கு இரண்டு முக்கிய இலக்கியவாதிகளை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

1. எஸ்ரா பவுண்ட்.

பவுண்டின் பொருளாதாரக் கொள்கைகளும் அவரது நீண்ட பகுதிகள் கொண்ட கேண்ட்டோக்களும்.

2. பெர்டோல்ட் ப்ரெக்ட்.

ப்ரெக்டின் கம்யூனிசமும் அவரது செயல்படு கவிதைகளும் (functional poems).

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த இரு பெரும் சர்வதேசக் கவிஞர்களின் மூல மாதிரியாக அமைகிறார் பாதலெர். பாதலெரின் சில தேர்ந்தெடுத்த கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. (பிரமிள் என்கிற தர்மு அரூப் சிவராம் மற்றும் தேவ தேவன்). மிகவும் பிரசித்த பெற்றதும் தடை செய்யப் பட்டதுமான தீவினையின் மலர்கள்(Flowers of Evil) என்ற தலைப்பிலான கவிதைகளை எழுதியவர் சார்ல்ஸ் பாதெலர். கலை கலைக்காகவே என்ற இலக்கியக் கொள்கை வலுப்பெறுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தவர். இந்தக் கொள்கையின் மூலம் கவிதையின் சுயாட்சியை வலுப்படுத்தி அதற்கான ஸ்தானத்தை மீட்டுப் பெற்றார் பாதலெர். மிகச் சிறந்த கலை மற்றும் ஓவிய விமர்சகராக விளங்கியவர். ஆயினும் பாதலெர் மிகவும் கலைத்துவமான சூழ்நிலைகளில் வாழ்வதாகக் குற்றம் சாட்டினார் இளைய தலை முறையைச் சேர்ந்த ஆர்தர் ரைம்போ. பாதலெர் புதிய கவிதை வடிவங்களைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டார் என்றும் கண்டனம் செய்தார் ரைம்போ. எனினும் ரைம்போ அளவுக்கு பாதலெரை வேறு எந்த சக கவிஞனும் போற்றிப் புகழ்ந்திருக்க முடியாது. பாதலெரைக் குறித்து ரைம்போ சொன்னது.

“the first of seers, king of poets, a true God”.

தீர்க்க தரிசியாகக் கவிஞன் செயல்பட வேண்டுமென்கிற ரொமாண்டிசிசக் கோருதலை சிம்பலிஸ்டான ரைம்போ முன் வைப்பது சற்று ஆச்சரியமாகக் கூடத் தோன்றலாம். கவிஞன் தீர்க்கதரிசியாக இருக்கிறான் என்பதை வலியுறுத்திக் கூறியவர் ஆங்கில ரொமாண்டிக் கவியான வில்லியம் வோட்ஸ்வொர்த். அவர் கவிஞனை “a seer into the life of things” என்று வரையறுத்தார். கவிஞனை தீர்க்கதரிசியாகக் காணும் தன்மை வேறெந்த சிம்பாலிசக் கவிஞனிடம் விடவும் ரைம்போவிடம் கூடுதலாகக் காணப்படுவதை பார்க்கலாம். இதை ரைம்போவின் வார்த்தைகளிலேயே (அவரது கவிதைகள் மற்றும் கடிதங்கள் வாயிலாக) நாம் அறிய முடியும்.

The Poet makes himself a seer by a long, gigantic and rational derangement of all the senses. All forms of love, suffering, and madness. He searches himself. He exhausts all poisons in himself and keeps only their quintessences.

(Letter to Paul Demny 15 May 1871)

Illuminations (1886)என்ற தொகுப்பில் அடங்கும் ரைம்போவின் கவிதைகளைப் படிக்கும் போதும் இந்தக் கடித வரிகளில் அவர் குறிப்பிட்டதை ஒருவர் உணர முடியும். பெரும்பாலான இலக்கிய விமர்சகர்களாலும் வரலாற்றாசிரியர்களாலும் குமரக் கவிஞன் (boy-poet ) என்று குறிப்பிடப் பட்டார் ரைம்போ. இதற்குக் காரணம் இல்லாமலில்லை. பதினாறு வயதில் தொடங்கிய படைப்பு வாழ்க்கையை ரைம்போ பத்தொன்பது வயதில் முடித்துக் கொண்டார். அவரது குமரப் பருவத்தில் சாத்தியமாகிய கவிதைச் சாதனைகள் எவ்விதத்திலும் சாதாரணப்படுத்தி விட முடியாதவை. ஒரு சாதாரணக் கவிஞன் (முதல் தரமில்லாதவன்) இந்தக் கவிதைகளை அவனது முதுமையிலும் சாத்தியப்படுத்த வாய்ப்பில்லை. அக்கவிதைகள் அடர்த்திச் செறிவினாலும் அவற்றின் ஸர்ரியல்தன்மைகளாலும் இன்றும் மிக நவீனமாகவே விளங்குகின்றன. (இளம் சாப்பாட்டு ராமன் என்ற தலைப்பிலான ரைம்போவின் கவிதையை ஆத்மாநாம் மொழிபெயர்த்திருக்கிறார்.) பல அம்சங்களில், விதங்களில் சர்ரியலிஸ்டுகளின் முன்னோடியாகக் கருதப்படுகிறார் ரைம்போ. ரைம்போவைப் பற்றி நவீன செக்கஸ்லோவிய கவிஞரான டேட்யூஸ் ரோஸ்விக்ஸ் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு பின் வருமாறு.

டேட்யூஸ் ரோஸ்விட்ஸ்

தீர்வுகள்

ஸ்திரமின்றி நாம் வாழ்கிறோம்

முகங்களின்

சொற்களின்

பெயர்களின்

மூடப்பட்ட ஒரு சுழல்வட்டப்பாதையில்

பிறர் நம்மை விவரிக்கின்றனர்

வகை பிரிக்கின்றனர்

நிலைப்படுத்துகின்றனர்

நமக்குத் தெரியும் நாம் அந்தப் பொய்யான வட்டத்தைக் கடக்க

உடைத்துக் கொண்டு

வெளியேற வேண்டுமென்று

ஆனால் நாம் இருக்கிறோம்

1880இல் ஏடன் நகரில்

ரைம்போ

பல் வேறு புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தார்

The Perfect Metal worker

The Pocket Carpenter

இவற்றையும் சேர்த்து

அல்லது இது போன்றவற்றுக்கு

வழிகாட்டி நூல்கள்

செங்கல் சுடுவது பற்றியும் பீங்கான் உருக்குவது பற்றியும்

மெழுகுவர்த்தி செய்வது

சுரங்க வேலை

உலோகப் பற்ற வைப்பு

செங்கல் அறுப்பது

சாக்கடை அமைப்பது

ஆம் அவர் நிஜமாகவே

விடைபெற்றுக் கொண்டார்

ஆனால் அவரும் கூட

சேமித்தார்

கவிதையின் மரணத்திற்குப் பிறகு

வீடு திரும்புவதற்கு

ஒரு நிஜமான முழுக் குடும்பத்தைத்

தொடங்கத் திட்டமிட்டார்

ஒரு மகனை ஆளாக்குவதற்குத்

தன்னை அர்ப்பணித்துக் கொள்ள

(அவன் இயல்பாகவே வீரமான புதிய தலைமுறை

மனிதனாக இருப்பான்)

அவர்

ராணுவப் பணிக்குத் தன் அணுகுமுறையை நிலைநாட்டிக் கொள்ளத்

திட்டமிட்டார்

ஒரு திடமான ஸ்திதியில்

மேலும் இப்படியாக

மேலும் இப்படியாக

அது சிறப்பானதுதான்

ஆனால் எனக்குச் சொல்

ஒரு ஐம்பது அறுபது

எண்பது வயதான

ரைம்போ

செய்ய வேண்டியது

என்ன

என்ன புத்தகங்கள்

அவர் ஆர்டர் செய்ய வேண்டும்

எங்கே அவர் செல்ல வேண்டும்

எதை அவர் எரிக்க வேண்டும்

எதைக் கைவிட வேண்டும்

(Taduesz Rosewicz: Selected Poems/Solutions / [Penguin Modern European Poets] pp.115-116)

டேட்யூஸ் ரோஸ்விட்ஸின் கவிதை மிக இறுக்கமாகவும் மிகச் சிக்கனமாகவும் ரைம்போவின் முழு வாழ்க்கையையும் அவர் தொடராமல் போய்விட்ட கவிதைப் படைப்பாக்க இருப்பினையும் அடிப்படையாக வைத்து சில உறுத்தும் கேள்விகளை முன் வைக்கிறது. ஆனால் இவை பதில்களற்ற கேள்விகள். கவிதை இல்லாத உலகில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை ரைம்போவின் கவிதைக் காலத்திற்குப் பிறகான வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் புரியும். கவிதை மற்றும் இலக்கியம் பற்றிய எந்தப் பின் வருத்தங்களும் இல்லாமல் வாழ்ந்தார் ரைம்போ என்று அவர் தன் வீட்டு அங்கத்தினர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து தெரிய வருகிறது. இந்தக் கடிதங்கள் வாயிலாக நமக்குத் தெரிய வருகிற ரைம்போவிற்கும் கவிதை மூலமாக நமக்குத் தெரிய வருகிற ரைம்போவிற்கும்தான் எத்தனை வேறுபாடுகள்?

அவர் வாழ்வின் ஒரு கட்டத்தில் ‘‘இலட்சிய வாழ்க்கையின் சாகசக்காரன் நிஜ வாழ்க்கையின் சாகசக்காரனால் பதிலி செய்யப்பட்டான்” என்பது பிரத்யட்ச உண்மை. இளமையின் ஆரம்ப கட்டத்திலேயே ரைம்போவிடம் தெரிந்த நாடோடித்தன்மையின் காரணமாக அவரது சிறிய கிராமப் பகுதியிலிருந்து (Charlesville) பாரிஸ் நகருக்கு ரயிலில் வரும்போது ரயில் கட்டணம் சரிவர செலுத்தாததால் தண்டனைக்காக இரண்டு நாட்கள் காவல் நிலையத்திலிருக்க வேண்டி வந்தது. தொடக்கதிலிருந்தே அவர் ஒரு வக்கிரத்தன்மை மிக்க கலகக்கார மேதையாக இருந்தார் என்பதை வாழ்ந்த வாழ்வும் சரி, எழுதிய எழுத்துக்களும் சரி, நிரூபிக்கின்றன. கலகத் தன்மைதான் A Season in Hell நூலின் அடிப்படையாக இருக்கிறது. கவிதைகள் எழுதாத காரணத்தால் அவரது இருபதாம் வயதிலிருந்து முப்பத்தி ஏழு வயதில் அவர் மரணம் வரையிலான வாழ்க்கையைப் படம் பிடிக்க அவர் எழுதிய கடிதங்களையே அடிப்படை ஆவணங்களாகக் கொள்ள வேண்டி இருக்கிறது. டேட்யூஸ் ரோஸ்விட்சுமே கூட மேற்காட்டிய தீர்வுகள் கவிதைக்கு அடிப்படையாக ரைம்போவின் கடிதங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார். இலக்கியப் புகழ் மற்றும் படைப்பு போதை ஆகியவை என்றுமே ரைம்போவின் சிந்தையை மயக்கி விடவில்லை என்று தெரிகிறது. எனினும் இலக்கியம் குறித்தும் அவர் கவிதை எழுதாமல் விட்டுவிட்டது குறித்தும் எவ்வித பின்வருத்தங்களும் அவருக்கு இருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.

அவரது இலக்கிய அல்லது இலட்சிய வாழ்வு திடீரென்று ஒரு முடிவுக்கு வந்ததற்கு அவருக்கும் கவிஞர் வெர்லெய்னுக்கும் ஏற்பட்ட நட்பும் நட்பு முறிவுமே காரணமாக இருந்தன என்று சொல்லலாம். வெர்லெய்னுக்கும் ரைம்போவிற்குமிடையில் இருந்தது நட்பு என்று குறிப்பதை விட உறவு என்று குறிப்பிடுவதே சாலப் பொருந்தும். இந்த உறவு காரணமாக வெர்லெய்னின் மணவாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டது. ரைம்போவின் உறவு ஏற்பட்ட பிறகு வெர்லெய்ன் பெல்ஜியத்திலும் ஃபிரான்சிலும் நாடோடி வாழ்க்கை மேற்கொண்டார் சாக்கடைக்கும் மதுபான விடுதிக்கும் இடையிலாய் அலைக்கழிந்தபடி. ஏனென்றால் அலைக்கழிப்பு என்பதே ரைம்போவின் வாழ்க்கைக்கு ஆதார ஸ்ருதியாய் இருந்தது. அலைக்கழிக்கப்படாமல் ரைம்போ சொற்ப காலம் கூட இருக்கவில்லை. பெல்ஜியத்தில் இருந்த சமயத்தில் ரைம்போவின் பிரிவைத் தாங்கவியலாத வெர்லெய்ன் இரண்டு முறை ரைம்போவைக் கொல்ல முயன்றார். இரண்டாவது முறை ஒரு மதுபான விடுதியில் ரைம்போவைக் நோக்கி துப்பாக்கியால் சுட்ட போது இடது கையில் குண்டு பாய்ந்தது. ரைம்போவைக் கொலை செய்ய முயன்றதற்காக சில காலம் வெர்லெய்ன் சிறையிலிருந்தார். இந்தக் கசப்பான அனுபவங்கள்தான் ரைம்போவின் உரைநடை எழுத்தான A Season in Hell என்ற நூலை எழுதத் தூண்டின. இந்த உறவு முறிவிற்குப் பிறகும் கூட ரைம்போ வெர்லெய்னுக்கு இரண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார் பயனின்றி. இலக்கற்ற அலைதல்களும் நோக்கமற்ற பயணங்களும் ரைம்போவை எகிப்து நோக்கிப் பயணிக்க வைத்தன. இதற்கு முன் ரைம்போ ராணுவத்தில் சேர்ந்த நிகழ்ச்சி நினைவு கூறப்பட வேண்டும்.

1876ஆம் ஆண்டின் வசந்த காலத்தின் போது ரைம்போ டச்சு ராணுவத்தில் சேர்ந்து பாட்டாவியா என்ற பிரதேசம் வரை பயணம் செய்யவும் செய்தார். ஆயினும் ராணுவத்திலிருந்து ஓடிப்போய் ஐரோப்பாவை நோக்கி நடந்தே திரும்பினார். வியன்னாவில் 1877ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டு ஆஸ்திரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஸ்வீடன் தேசத்தையும் டென்மார்க்கையும் பயணம் செய்து கடந்த பிறகு எகிப்து செல்ல பயனின்றி முயற்சி செய்தார். 1878இல் சைப்ரஸ் தீவில் ஒரு கல் உடைக்கும் குவாரியில் சிறிது காலம் மேஸ்திரியாக பணியாற்றினார். இத்தகைய நிலைமைகளில் வேறு விதமான இலக்கியவாதியாக இருந்திருப்பின் கழிவிரக்கம் கொண்டிருக்கும் எண்ணற்ற சாத்தியங்கள் உள்ளன.

பிறகு சைப்ரசிலிருந்து 1880ஆம் ஆண்டு எகிப்துக்குப் பயணமானார். எகிப்திலிருந்து ஏடனுக்குச் சென்றார். ஏடன் நகரில் காஃபிக் கொட்டை கொள்முதல் செய்யும் ஒரு ஏற்றுமதிக் கம்பெனியில் பணி புரிந்தார். அந்தக் கம்பெனியின் கொள்முதலாளராக சோமாலியா நாட்டிற்குச் சென்று சோமாலியாவை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப் பயணங்களைப் பற்றி The Geographic Society க்கு அறிக்கை எழுதி அனுப்பினார். ரைம்போவின் ஆய்வுப் பயணங்கள் மேன்மேலும் ஆபத்தானவையாக மாறின. 1887ஆம் ஆண்டு சோவா(Choa) நாட்டு அரசரான மெனலிக்கிற்கு (Menelik)பழைய துப்பாக்கிகளை ஐரோப்பாவிலிருந்து கொள் முதல் செய்து விற்றார். ஆனால் மெனிலிக் பணம் தராது ஏமாற்றியதால் பெரும் பண நஷ்டம் அடைந்தார் ரைம்போ. இது மட்டுமன்றி இந்த வியாபாரத்தில் அவரது கூட்டாளி இறந்து போனதும் அவரது நஷ்டத்திற்குக் காரணம் என்று ரைம்போ குறிப்பிட்டார்.

இந்தப் பயணக் காலங்களிலும் சரி, அரேபியப் பாலை வனங்களில் அவர் பணியாற்றிய காலத்திலும் சரி அவரது இலக்கிய மற்றும் கவிதை வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. பின் வருத்தம் கொள்ளவுமில்லை. இந்த காலகட்டத்தில் அவர் எந்த வித இலக்கியப் புத்தகங்களையும் படிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. தன் குடும்பத்தினர் வழியாக அவர் ஆர்டர் செய்த புத்தகங்கள் சகலமும் செய்முறைப் பயிற்சி விளக்க ஏடுகள். பெரும்பாலும் அவர் ஆர்டர் செய்த புத்தகங்கள் புதுவித அறிவியலையோ, தொழில் நுணுக்கத்தையோ கற்றுத் தரும் நூல்களாக இருந்தன. ஒரு சமயம் பாரிஸ் நகர தொலை பேசி புத்தகத்தை அனுப்பச் சொல்லி ஒரு கடிதத்தில் கேட்டிருக்கிறார். ஒரு முறை அவரது குடும்பத்தினர் அவருக்கு ஃபிரெஞ்சு அரசியல் பற்றி கடிதம் வாயிலாக ஏதோ செய்தியை எழுதியிருக்க ரைம்போ அதற்குப் பதில் எழுதுகிறார்.

“You write to me about political news. If you knew how indifferent I am all to that. For more than two years I haven’t touched a newspaper. All these debates are for the present without meaning for me. Like the Moslems, I know that what happens happens, and that is all.”

(6 May 1883)

1888லிருந்து 1891வரையில் மீண்டும் காஃபி ஏற்றுமதி செய்யும் வேறு ஒரு நிறுவனத்திற்காக ஹாராரில் வேலை பார்த்தார். மூட்டு வாதத்தினாலும் கால் பகுதியில் வீங்கிப் பெருத்த ரத்தக் குழாய்களினாலும் பெரும் அல்லல் பட்டார். அவர் பணியாற்றிய முஸ்லிம் நாடுகளில் நீக்ரோக்கள் வசித்த பிரதேசத்தில் மருத்துவர்கள் யாரும் இருக்கவில்லை. அரேபிய மொழி கற்றுக் கொள்வதற்கு முயன்று அதற்கான துணை நூலை வாங்கி அனுப்பும்படி தன் குடும்பத்தாரிடம் வேண்டினார். ஒரு கடித்தை அனுப்பிப் பதில் பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேலாகிறது என்று மற்றொரு கடிதத்தில் எழுதினார். தொடக்கத்தில் எகிப்தில் அவருக்குக் கிடைத்த குறை ஊதியங்களைப் பார்க்கையில் அவர் வாழ்வின் இறுதி வருடங்களில் சொல்லிக் கொள்ளும்படியான ஊதியம் கிடைத்ததால் சிறிது பணத்தை அவர் சேமிக்கவும் செய்தார். திருமணம் செய்து கொள்வது பற்றி அவரது தாயாருக்கு ஒரு தனிக்கடிதம் எழுதி இப்படி அலைக்கழிப்புக்கு ஆளாகும் ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்ள எந்தப் பெண்ணும் முன்வருவாளா என்றும் கேட்டார். ராணுவ சேவை பற்றியும் பிறிதொரு கடிதத்தில் குறிப்பு காணப்படுகிறது..

பன்னிரண்டிலிருந்து பதிமூன்றாயிரம் ஃபிரான்க்குகளை தங்கக் காசுகளாக அவரது இடுப்பு பெல்ட்டிலேயே வைத்து சுமந்து செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இந்த சேமிப்புப் பணமும் கூட அவருக்கு தொடர்ச்சியான இடர்களைத்தான் கொணர்கிறது என வருந்தி எழுதினார். (எட்டுக் கிலோ தங்க நாணயங்களை இடுப்பில் கட்டிச் சுமந்து வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது) யாரையும் நம்புவதற்கில்லை என்பது ஒரு புறம், மறுபுறம் உள்ளூர் கருவூலத்தில் வட்டி இல்லாமல் மாத்திரமே பணத்தை இட்டு வைக்க முடியும் என்கிற நிலை.

உலகிலே வேறு எந்தப் பகுதியையும் விட ஏடனில்தான் கோடை காலத்தின் கடுமை அதிகம். ஐரோப்பிய சீதோஷ்ணத்தில் வாழ்ந்து பழகிய ரைம்போ அந்தக் கோடையை எப்படி எதிர் கொண்டிருப்பார் என்று கற்பனை செய்து மாத்திரமே பார்க்க முடியும். ஒரு தீவிரமான கவிஞன் கோந்துப் பிசின், நெருப்புக் கோழியின் இறகுகள், தந்தம், பதனிடப்பட்ட தோல், கிராம்பு ஆகிய பொருள்களை ஒரு ஏற்றுமதி கம்பெனிக்காக வாங்குவதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். உலகின் வேறு பிரதேசங்களில் ஐந்து வருடங்களில் ஏற்படும் முதுமையானது ஒரு வருடத்தில் ஒருவருக்கு வந்து விடும் அளவு மோசமான சீதோஷ்ணம் ஏடனில் நிலவியது. ஆயினும் ரைம்போ தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார் அங்கே. ஒரு சமயம் அவரது வாழ்க்கை நிஜமாகவே ஒரு பீதிக்கனவாய் இருப்பதாக உணர்ந்து எழுதினார். மேலும் இவ்வளவு வெப்பத்தில் (செங்கடல் பகுதியில்) இருந்து பழகிய ஒருவர் ஐரோப்பாவிற்குத் திரும்பிச் சென்றால் ஐரோப்பாவின் கடுங்குளிர் காலத்தில் நுரையீரல் வியாதி வந்து விரைவில் இறந்து விடும் ஆபத்து இருக்கிறது. வணிகவியல் அகராதியையும் கடல் பிரயாண அகராதியையும் புனித குர்ஆனையும் 1885ஆம் ஆண்டு வாக்கில் ரைம்போ படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

1887ஆம் ஆண்டு வாக்கில் கெய்ரோ நகருக்கு வந்து சேர்ந்த ரைம்போ மூட்டு வாதத்தினால் மிகுந்து சிரமத்திற்குள்ளாகிறார். இடது கால் அவருக்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நீக்ரோக்களின் மத்தியில் அவர்களின் அசுத்தமான உணவை சாப்பிட்டபடி, அவர்களின் விசுவாசமின்மையாலும் மடத்தனங்களாலும் உண்டாகும் அசௌகரியங்களைப் பொறுத்துக் கொண்டு ரைம்போ வாழ்ந்து கொண்டிருந்தார். அந்த நீக்ரோக்களின் நிலை மேம்பட ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார். ஆனால் அந்த நீக்ரோக்கள் ரைம்போவை சுரண்டப் பார்த்ததாய் எழுதினார்.

“… how wretched my life is without a family, without intellectual occupation, lost in the midst of Negroes whose fate I would like to improve, but who try to exploit you and make it impossible for you to carry out your business swiftly.”

(4 August 1888)

ஆறு மாதங்கள் மழை பெய்து பாக்கி ஆறு மாதங்கள் எரிக்கும் கோடை காலமாய் இருக்கக் கூடிய பிரதேசங்களுக்கெல்லாம் எவ்வித வெளிப்படையான இலக்குமின்றி பயணித்துக் கொண்டிருந்தார். நாம் போக விரும்பாத இடங்களுக்குத்தான் செல்கிறோம், நாம் செய்ய விரும்பாத காரியங்களைத்தான் செய்கிறோம், நாம் விரும்பிய விதத்தை விட வித்தியாசமாக, எந்த வித நம்பிக்கையுமின்றி, ஆறுதலுமின்றி இறக்கிறோம் என்று குறிப்பிட்டார் ரைம்போ. அது அவரின் விதியைப் பொறுத்து 100 சதவீதம் நிஜமாக இருந்தது.

வலது காலில் தொடர்ந்து உபத்திரவம் கொடுத்தது மூட்டு வலி. அவருக்கு ஏடனிலோ, ஹாராரிலோ உரிய மருத்துவ உதவி கிடைக்கவில்லை. மேலும் அவரது வலது கால் முட்டியில் ஒரு புற்றுக் கட்டி உண்டாகி அதன் காரணமாய் சொல்லொனாத் துயரத்தையும் வலியையும் அனுபவித்தார். இறுதியில் ஃபிரான்சுக்குத் திரும்பி வந்து மார்செய்லில் உள்ள கன்செப்ஷன் மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சையின் போது அவரது வலது கால் வெட்டி எடுக்கப்பட வேண்டியதாயிற்று. இருப்பினும் சிறிது கால சிகிச்சைக்குப் பிறகு ரைம்போ நவம்பர் 10ஆம் தேதி 1891ஆம் ஆண்டு இறந்து போனார். அவரது முப்பத்தி ஏழாவது வயதில். சரியான உணவின்மையாலும் கால் நடையாகவும் குதிரை மீதும் தொடர்ந்து பாலை வனங்களில் பயணம் செய்ததாலும், சீதோஷ்ணத்திற்குத் தகுந்த உடைகள் இல்லாததாலும் அவரது உடல் நலம் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஃமீண்டும் ரோஸ்விட்ஸின் கவிதைக்குத் திரும்புவோம். கவிதையின் முதல் பகுதி ரைம்போ தேர்ந்தெடுத்து வாழ்ந்த அலைச்சல் மிகுந்த வாழ்க்கையைச் சிலாகித்துச் சொல்வதாகத் தெரிகிறது. நாம் வாளாவிருக்கிறோம் என்று கவிதை குற்றம் சாட்டுகிறது. ரோஸ்விட்ஸ் கவிதையின் மையப் பகுதி, கவிதையைப் புறக்கணித்து ரைம்போ வாழ்ந்த வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. மென்னுணர்வு மிகுந்த இலக்கியவாதி கவிஞனுக்கு இப்படித் தலை கீழாக்கப்பட்ட ஒரு வாழ்க்கை எண்ணிப் பார்க்கவே இயலாதது. கவிதையின் மரணத்திற்குப் பின்னான வாழ்க்கை என்று ரோஸ்விக்ஸ் இதைக் குறிப்பிடுகிறார். நிறைய விஷயங்கள் ரைம்போவின் வாழ்வில் தலைகீழான மாதிரி கவிதைக்கும் மீண்டு திரும்பியிருக்க மாட்டாரா என்ன அவரது ஐம்பது வயதில்?க்ஷ

***

25-03-2003 அன்று மரபு இலக்கிய அமைப்பும் அலயன்ஸ் ஃபிரான்சேஸூம் இணைந்து பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் வடிவம்.