பரிசுகளின் இரவு/அவெலினோ அரிடோண்டோ/நுழைவாயிலில் ஒரு மனிதன்/Borges

3storiesfinal-post12

பரிசுகளின் இரவு/அவெலினோ அரிடோண்டோ/நுழைவாயிலில் ஒரு மனிதன்/Borges

பரிசுகளின் இரவு

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஃபுளோரிடா தெருவில், பய்டாட் பகுதியின் சுற்றுப்புறங்களில், பழைய கான்ஃபிட்டரியா தெல் ஆகுய்லாவில் நாங்கள் இந்தக் கதையைக் கேட்டோம். அறிவு-ஞானம் பற்றிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நாம் அனைவரும் எல்லா விஷயங்களையும் இதற்கு முந்தைய உலகத்திலேயே பார்த்து விட்டோம் என்றும், அதனை அறிவது என்பது மீண்டும் அறிவதற்கு சமானமாகும் என்கிற பிளாட்டோதன்மையான கருத்தாக்கத்தினை யாரோ ஒருவர் முன் வைத்தார். பேகன் என்ற ஆங்கில சிந்தனையாளர் அறிதல் என்பது ஞாபகம் கொள்வதற்குச் சமமானால், அறியாதிருப்பது அதை மறந்து போய் விட்டிருப்பதற்குச் சமம் என்று எழுதியிருப்பதாக என் அப்பா கூறினார் என்று நினைக்கிறேன். வேறு ஒரு நபர், வயோதிகர், மெய்ம்மை கடந்த விஷயங்களில் தன்னை இழந்துவிட்டிருந்தவர், இந்த விவாதத்திற்குள் நுழையத் தீர்மானித்தார். நிதானமாகவும் அமைதியான தன்மையுனும் பேசிய அவர் எங்களுக்குச் சொன்னதுதான் பின் வரும் கதை.
மனதாரச் சொல்ல வேண்டுமானால், இந்த பிளாட்டோ தன்மையான தொன்ம வடிவங்களைப் பற்றிய பேச்சினை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எவருமே முதன் முதலாகத் தான் பார்த்த கறுப்பு அல்லது மஞ்சள் நிறத்தையோ, தான் முதல் முறையாக ருசித்து சாப்பிட்ட பழத்தைப் பற்றியோ நினைவு கொள்வதில்லை-காரணம் அச்சமயத்தில் அவர் மிகச் சிறிய பிராயத்தினராக இருந்திருப்பார்-ஒரு மிக நெடிய தொடர்ச்சிகளை அவர் தொடக்குகிறார் என்ற அறியும் வழி இல்லாதிருக்கிறார். உள்ளபடியே எவர் ஒருவரும் பல முதலாம் தடவைகளும் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இரவில் வாழ்வு எனக்களித்ததை உங்களுக்குச் சொல்ல முடியும். நான் அதிகமாகவும், அடிக்கடியும் ஞாபகப்படுத்திக் கொள்ளும் 1974ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முப்பதாம் தேதியின் இரவினை.
அப்பொழுதெல்லாம் கோடை விடுமுறை நாட்கள் நீண்டதாக இருக்கும். ஆனால் போனஸ் அயர்சிற்கு வெளியே நாங்கள் ஏன் தங்கினோம் என்பது எனக்கு அன்றைய தேதிவரை தெரியாது. லோபாஸூக்கு அதிக தொலைவில் இல்லாத டோர்னாசில் எங்களுடைய உடன்பிறவா சகோதரர்களின் பண்ணையில் இருந்தோம். மாட்டுக்காரர்களில் ஒருவனான ரூஃபினோ அப்பொழுது நாட்டுப்புற விஷயங்களை எனக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினான். நான் பதின்மூன்று வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். அவன் என்னை விட வயதில் பெரியவனாக இருந்தான். எதற்கும் பயப்படாத முரடன் என்றும் பெயர் எடுத்திருந்தான். அவன் மிக வேகமான வனாகவும், நெளிவுசுளிவுகளில் விரைவானவனாகவும் இருந்தான். பண்ணையாட்களில் இளையவர்கள், எரிந்த குச்சிகளைக் கொண்டு கத்திச் சண்டை போடும் போது, எப்போதுமே எதிராளியின் முகத்தின் மீது கோடு போட்டான் ரூஃபினோ. ஒரு வெள்ளிக்கிழமை சொன்னான் அடுத்த நாள் இரவு ஜாலியாக சுற்றுவதற்கு நகரத்திற்குள் செல்லலாம் என்று. உள்ளபடியே நான் இந்த சந்தர்ப்பத்தினை சடக்கென்று பற்றிக் கொண்டேன் அதுவெல்லாம் என்னவென்று தெரியாமலேயே. எனக்கு நடனமாடத் தெரியாது என்பதை அவனுக்கு முன் எச்சிரித்தேன். நடனம் மிகச் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியக் கூடியது என்றான் அவன்.
சனிக்கிழமை இரவு உணவுக்குப் பிறகு, ஏழரை மணி அளவில் நாங்கள் கிளம்பினோம். ஒரு விருந்துக்குச் செல்பவனைப் போல ஒப்பனை செய்து கொண்டு, இடுப்பு பெல்ட்டில் ஒரு வெள்ளிக் கத்தியைச் செறுகிக்கொண்டிருந்தான். அது போன்றே ஒரு சிறிய கத்தி என்னிடம் இருந்த போதிலும் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள் என்ற பயத்தினால் நான் எடுத்துச் செல்லவில்லை. முதல் வீடுகள் எங்கள் கண்ணில் படும்போது அதிக நேரமாகி இருக்கவில்லை. லோபோஸூக்கு நீங்கள் யாரும் போயிருக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். பொருட்படுத்த வேண்டியதல்ல அது. மிகச்சரியாக எல்லாவற்றையும் ஒத்தில்லாத ஒரு சிறு நகரமும் அர்ஜன்டீனாவிற்குள் கிடையாது -தன்னையே வேறுபட்டதென்று நினைக்கிற அளவுக்கு. கல்பாவப்படாத சந்துத் தெருக்கள், ஒரே மாதிரியான திறந்த வெளிகள், ஒரே மாதிரியான ஒற்றை அடுக்கு மாடி வீடுகள்-இவை எல்லாம் குதிரை மீதமர்ந்த ஒரு மனிதனை மிக முக்கியத்துவம் வாய்ந்தவனாக ஆக்குகிறது.
வானத்து நீலநிறத்திலோ இளஞ்சிவப்பிலோ வர்ணம் அடித்திருந்த தெருமுனை வீட்டின் முன்னால் -வீட்டுப் பெயர் ‘லா எஸ்ட்ரெலா’ என்று எழுதியிருந்தது-இறங்கினோம். கட்டும் கழியில் கட்டப்பட்டிருந்த குதிரைகளுக்கு சிறந்த சேனங்கள் பொருத்தப்பட்டிருந்தன. நுழைவழிப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் மரபெஞ்சுகள் போடப்பட்ட ஒரு பெரிய அறை இருந்தது. பெஞ்சுகளுக்கு இடையில் நிறைய கறுப்பு நிறக் கதவுகள் இருந்தன.
அவை எதற்கான வழிகள் என்று யாருக்குத் தெரியும்? மஞ்சள் நிற முடி அடர்ந்த நாட்டுநாய் குரைத்தபடி என்னை வரவேற்க வந்தது. நிறைய ஆட்கள் அங்கும் இங்கும் தென்பட்டனர். பூப்போட்ட டிரசிங் கவுன் அணிந்த ஐந்தாறு பெண்கள் வந்து போனார்கள். கௌரவமாகத் தோற்றமளித்த, தலையிலிருந்து கால்வரை கறுப்பு உடையணிந்திருந்த பெண் அந்த வீட்டின் உரிமையாளர் போலத் தோற்றமளித்தாள். ரூஃபினோ அவளுக்கு வந்தனம் தெரிவித்துவிட்டு சொன்னான். “அதிகமாக குதிரை சவாரி செய்திராத ஒரு புதிய நண்பரைக் கூட்டி வந்திருக்கிறேன் நான்”.
“கவலைப் படவேண்டாம் அவர் மிக விரைவிலேயே கற்றுக் கொள்வார்” என்று அந்தப் பெண் கூறினாள் :
எனக்கு வெட்கமாக இருந்தது. அவர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்ப அல்லது நான் ஒரு சிறுவன் என்பதை அவர்கள் உணர வைக்க, ஒரு பெஞ்சின் கடைசியில் அந்த நாயுடன் விளையாடத் தொடங்கினேன். பாட்டிலில் வைக்கப்பட்ட மலிவான மெழுகுவர்த்திகள் சமையல் அறையில் எரிந்து கொண்டிருந்தன. பின் பக்க மூலையில் தீக்கங்குகள் வைக்கும் கொள்கலன் ஒன்று இருந்தததையும் நான் நினைவு கூர்கிறேன். எதிர்த்தாற் போலிருந்த வெள்ளையடிக்கப்பட்ட சுவற்றில் நம் கருணை மாதாவின் உருவப்படம் தொங்கியது.
ஒரு நகைச் சுவைத் துணுக்குக்கும் மற்றதற்கும் இடைவெளியில் யாரோ ஒருவர் ஒரு கிட்டார் வாத்தியத்தை சுருதி சேர்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அது ஏகப்பட்ட சிரமத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. சுத்தமான மருட்சி காரணமாக எனக்கு அவர்கள் தந்த ஜின்னை நான் மறுக்கவில்லை. சிவந்த நெருப்புக் கட்டிகள் போல அது என் வாயை எரித்தது. பெண்களுக்கிடையில் வித்தியாசமாகத் தெரிந்த ஒருத்தியைக் கவனித்தேன். அவர்கள் அவளை லா காட்டிவா என்று அழைத்தார்கள். சிறை பிடிக்கப்பட்டவள் என்று அதற்குப் பொருள். அவளிடம் ஏதோ விதமான சிவப்பிந்தியத்தன்மை இருந்தது. ஆனால் அவளது அங்கச் சாயல்கள் ஒரு ஓவியத்தில் உள்ளது போலிருந்தன. அவளது கண்கள் மிகவும் சோகமாக இருந்தன. அவளது பின்னல் போடப்பட்ட முடி இடுப்பு வரை வந்தது. நான் அவளைக் கவனிப்பதை ரூஃபினோ பார்த்து விட்டான்.
“எங்கள் ஞாபகத்தைப் புதுப்பிக்க வேண்டி மீண்டும் ஒரு முறை அந்த முற்றுகையைப் பற்றிக் கூறுங்களேன்” என்று அவளிடம் கேட்டான்.
வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாதவள் போல அவள் எனக்குத் தோன்றினாள். அவள் தான் மாத்திரம் இருப்பது போன்றதான தோரணையில் பேசினாள். அவள் எங்களுக்குச் சொன்ன கதையைத் தவிர வேறு ஒன்றுமே அவள் வாழ்க்கையில் நடந்திராதது போலவும் பேசினாள்.
காட்டமார்க்காவுக்கு அவர்கள் என்னை அழைத்து வந்தபோது நான் மிகச் சிறு வயதினளாக இருந்தேன். அவள் சொன்னாள் இந்தியர்களின் முற்றுகை பற்றி எனக்கு என்ன தெரியும்? நாங்கள் அவ்வளவு பயந்து போயிருந்தததால் சான்ட் இரேநா பகுதியில் அப்படிப்பட்ட விஷயங்கள் பற்றிப் பேசவே இல்லை. ஒரு ரகசியத்தைக் கொஞ்சம் கொஞசமாகத் திறப்பது போல, நான் சிறிது சிறிதாகக் கற்றுக் கொண்டேன்-செவ்விந்தியர்கள் ஒரு மேகத்தைப் போல் வந்திறங்கி, மனிதர்களைக் கொன்று, அவர்களின் கால்நடைகளைக் களவாடிப் போவார்கள் என்பதை. பெண்களை பாம்ப்பாவுக்குத் தூக்கிச் சென்று அவர்களை எது வேண்டுமானாலும் செய்தார்கள் என்பதை. இது எதையும் நம்பக்கூடாது என்று சிரமப்பட்டு முயற்சி செய்தேன். என் சகோதரன் லூகாஸ்-பின்னர் அவனை செவ்விந்தியர்கள் வேலால் குத்திக் கொன்றார்கள்-அது எல்லாமே பொய் என்று அடித்துச் சொன்னான். ஆனால் ஒரு விஷயம் நிஜமாக இருக்கிற போது, அது அப்படித்தான் என்று தெரிவதற்கு ஒரு முறை சொல்லப்பட்டால் போதுமானது. செவ்விந்தியர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் மிக சக்திவாய்ந்த சாராயத்தையும், யெர்பாவையும் தருகிறது – ஆனால் அவர்கள் என்னதைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் தந்திரமான மந்திரவாதிகள் அவர்கள் மத்தியில் உண்டு. அவர்கள் தலைவர்கள் ஒரு வார்த்தை சொன்ன உடனே எங்கோ வெளியில் இருக்கிற பண்ணை மதில்களைத் தாக்குவது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அதைப் பற்றி அவ்வளவு யோசித்ததாலேயே அவர்கள் வருவார்கள் என நான் விழைந்தேன், அவர்களை சூரியன் மறையும் மேற்கு வானில் எப்படிக் கண்டு கொள்வது என்பதும் எனக்குத் தெரியும். எவ்வளவு காலம் கடந்ததுóஎன்பதை நான் அறியேன். ஆனால் கட்டிப் பனி வீழ்வுகளும், கோடை காலங்களும், சுற்றிவளைத்தல்களும், முற்றுகைக்கு முன்னால் தலைமைக் கண்காணிப்பாளரின் மகனின் மரணமும் நிகழ்ந்தன.
சிந்தனையில் ஆழ்ந்து போய் ஓரிரு கணங்கள் இடைவெளி விட்டு பிறகு தொடர்ந்தாள். “அவர்களை ஏதோ தெற்கத்திய காற்று கொண்டு வந்ததைப் போலிருந்தது. ஒரு திசில் செடியை சாக்கடையில் பார்த்த அன்றிரவு செவ்விந்தியர்களைக் கனவு கண்டேன். எங்களுக்குத் தெரியும் முன்பாக ஆடுமாடுகளுக்குத் தெரிந்து விட்டது. ஒரு பூகம்பம் நடக்கும் போது எப்படியோ அப்படி. கால்நடைகள் நிலை கொள்ளாமல் தவித்தன. வானத்தில் பறவைகள் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்த வண்ணமிருந்தன. நான் எப்போதும் பார்த்து வந்த திசையில் அனைவரும் ஓடிச்சென்று பார்த்தோம்.
“யார் உங்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள்?” எவரோ ஒருவர் கேட்டார்.
எப்போதுமே தூரத்தில் இருப்பவள் போலிருந்த அந்தப் பெண் தனது கடைசி வாக்கியத்தை மீண்டும் உச்சரித்தாள். “நான் எப்போதும் பார்த்து வந்த திசையில் அனைவரும் ஓடிச்சென்று பார்த்தோம். அவர்கள் எங்கள் கண்ணில் படுமுன்னர், ஜன்னல் கிரில்லின் குறுக்குச் சட்டங்களின் ஊடாக ஒரு புழுதி மேகத்தைப் பார்த்தோம். அது ஒரு முற்றுகை கோஷ்டி. வாய் மேல் கைகளைக் கொண்டு அடித்தபடி போர்க்குரல் கொடுத்தனர். சான்ட்டா இரெநாவில் சில ரைஃபில் துப்பாக்கிகள் இருந்தன, ஆனால் அவை அனைத்துமே சத்தம் மட்டுமே வரவழைத்து இன்னும் கூடுதலாக செவ்விந்தியர்களைக் காட்டுமிராண்டிகளாக்கவே செய்தன.
லா காட்டிவா, மனப்பாடம் செய்து வைத்திருந்த பிரார்த்தனையைச் சொல்பவளைப் போலப் பேசினாள். ஆனால் வெளியே, தெருவில் பாலைவன இந்தியர்கள் வந்திருப்பதையும், அவர்களின் போர்க்குரல்களையும் கவனித்தேன். கனவின் சிதிலங்களின் மீது குதிரைகள் ஏறிச் செல்வது போல ஒரு புடைப்பு எழுந்தது, அறைக்குள் அவர்கள் வந்துவிட்டிருந்தார்கள். வந்தவர்கள் உள்ளுர் அடியாட்கள். சகலரும் குடித்திருந்தனர். இப்பொழுது என் ஞாபகத்தில் அவர்களை மிக உயரமானவர்களாகப் பார்க்கிறேன். அவர்களின் தலைமையில் வந்தவன் கதவருகே நின்றிருந்த ரூஃபினோவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். ரூஃபினோ முகம் வெளிறி வழியை விட்டு ஒதுங்கினான். அவளது இடத்திலிருந்து அசையாமல் இருந்த கறுப்பு உடைக்காரி எழுந்து நின்றாள்.
“யூவான் மொரேய்ராதான் அது” என்றாள் அவள்.
இவ்வளவு நாட்களுக்குப் பிறகு, அந்த இரவின் மனிதன், நாட்டை விட்டு விரட்டப்பட்ட மொரேய்ராதானா அல்லது மாட்டுச் சந்தைகள் பக்கம் அடிக்கடி தென்படும் வேறு எவரோவா என்று சொல்ல முடியவில்லை. அந்த நீண்ட அடர்த்தியான தலை முடியையும், மொரேய்ராவை வைத்துப் புனையப்பட்ட கறுப்பு தாடியும் கொண்ட மேடைக் கதாபாத்திரமா என. ஆனால் இது தவிர பெரியம்மையால் வடுபட்டுப் போன சிவந்த முகத்தையும் நினைவு கொண்டேன். அந்தக் குட்டி நாய் விரைந்து வந்தது அவனை வரவேற்க. ஒரே ஒரு சவுக்குச் சொடுக்கில் அதைத் தரையில் மல்லாக்காகக் கிடத்தினான். தன் முதுகின் மேல் கிடந்தபடி, காற்றைக் கால்களால் பிறாண்டிபடி அந்த நாய் செத்துப் போயிற்று. இங்குதான் நிஜமாக என் கதை ஆரம்பிக்கிறது.
சிறு ஓசையும் படுத்தாமல் அங்கிருந்த கதவுகளில் ஒன்றை நோக்கி நான் நகர்ந்தேன். அது ஒரு குறுகிய இடைவழியில் திறந்தது. அங்கே படிக்கட்டுகள் இருந்தன. மேல் மாடியில் ஒரு இருட்டான அûயில் நான் மறைந்து கொண்டேன். மிகத் தாழ்வாக இருந்த படுக்கையைத் தவிற வேறு எந்த மரச்சாமான்களும் இருந்தனவா என்பது எனக்குத் தெரியாது. நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். கீழே கத்தல்கள் ஓயவே இல்லை. கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. ஒரு பெண்ணின் காலடிச் சத்தம் படிகளில் ஏறிவருவது எனக்குக் கேட்டது. பிறகு ஒரு கீற்று வெளிச்சம் தெரிந்தது. ஒரு கிசுகிசுத்த குரலில் லா காட்டிவா என்னை அழைத்தாள். “”நான்ó இங்கே உதவுவதற்கே வந்திருக்கிறேன்-ஆனால் சமாதானமான மனிதர்களுக்கு மாத்திரம் உதவ” என்று கூறினாள்.
“கிட்ட வா நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்.”
அவளுடைய டிரஸ்ஸிங் கவுனை எடுத்து விட்டாள். அவளருகில் படுத்தபடி, அவளுடைய முகத்தை என் கைகளால் நான் உணர்ந்தேன். இப்படி எவ்வளவு நேரம் போயிருக்கும் என்ற யூகிப்பு எனக்கு இருக்கவில்லை. ஒரு வார்த்தையையோ அல்லது முத்தத்தையோ நாங்கள் பரிமாறிக் கொள்ளவில்லை. அவளது ஜடைப் பின்னலை நான் அவிழ்த்து விட்டேன், பிறகு என் கைகள் அவளுடைய கூந்தலுடன் விளையாடின. பிறகு அவளுடன் விளையாடின. அதற்குப் பிறகு நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை, அவளுடைய நிஜப் பெயர் என்ன என்பதையும் நான் தெரிந்து கொள்ளவில்லை.
துப்பாக்கிச் சத்தம் எங்களைத் தூக்கிவாரிப் போட்டது. லா காட்டிவா சொன்னாள் “” நீ அந்த படிகளின் வழியாகத் தப்பித்துப் போகலாம்.”
நான் சென்ற, புழுதியால் ஆன சந்துத் தெருவில் முடிந்தது. அது ஒரு நிலாக்காலம். ஆன்ரெஸ் சிரினியோ என்ற போலீஸ் சார்ஜண்ட், துப்பாக்கியில் பொருத்தப்பட்ட பாயனெட் கத்தியுடன் சுவர் அருகே காவலிருந்தான். “” நீ சீக்கிரமே எழுந்து விடுபவன் போலத் தெரிகிறது” என்று என்னிடம் சொல்லி விட்டுச் சிரித்தான்.
அதற்கு நான் ஏதோ பதில் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவன் என் மீது எந்தக் கவனமும் செலுத்தவில்லை. சுவறிலிருந்து ஒரு மனிதன் தொங்கி இறங்கிக் கொண்டிருந்தான். ஒரே பாய்ச்சலில் சார்ஜண்ட் பாயனெட் கத்தியை அந்த மனிதனின் உடம்பில் புதைத்தான். அந்த மனிதன் தரையில் வீழ்ந்தான். மல்லாக்கக் கிடந்தபடி, முனகிக் கொண்டு ரத்தம் வெளியேறி இறந்து கொண்டிருந்தான். முடிவாக அந்த மனிதனைத் தீர்த்துக் கட்ட, சிரினியோ மீண்டும் ஒரு முறை பாயனெட்டைப் பாய்ச்சினான்.
“இந்த தடவை உன்னால் முடியவில்லை, மெரேய்ரா” என்று ஏறத்தாழ மகிழ்ச்சியாகக் கூறினான்.
எல்லாப் பக்கங்களில் இருந்தும் யூனிபார்ம் அணிந்த மனிதர்கள்-வீட்டைச் சூழ்ந்து கொண்டிருந்தவர்கள்-வந்தார்கள். பிறகு அண்டை வீட்டார் வந்தனர். பாயனெட்டைப் பிடுங்கி எடுக்க சார்ஜண்ட் மிகவும் சிரமப்பட்டான். எல்லோரும் அவனுடன் கைகுலுக்க விரும்பினார்கள்.
“அங்கும் இங்குமாக இடம் மாற்றித் திரிவது முடிந்து விட்டது இந்த அடியாளுக்கு” என்று ஒரு சிரிப்புடன் சொன்னான் ரூஃபினோ.
ஒவ்வொரு குழுவினரிடமும் சென்று நான் பார்த்ததைச் சொல்லிக் கொண்டிருந்தேன். பிறகு திடீரென்று சலிப்பாக உணர்ந்தேன். அது ஒருவித காய்ச்சலாகக் கூட இருக்கலாம். நழுவிச் சென்று, ரூஃபினோவைக் கண்டு பிடித்தேன். இருவரும் வீட்டுக்குப் புறப்பட்டோம். எங்கள் குதிரைகளின் மீதிருந்த வெளுத்த விடியல் வெளிச்சத்தைப் பார்த்தோம். களைத்துப் போயிருந்தேன் என்பதை விட அருவியாகக் கொட்டும் நிகழ்ச்சிகளினால் மலைத்துப் போயிருந்தேன் என்பதுதான் சரி.
“அந்த இரவின் பெருநதியில் இருந்து”, என என் அப்பா சொன்னார், அந்த மனிதன் பேசி முடித்தவுடன்.
அது சரிதான் அவன் ஏற்றுக் கொண்டான். சில மணிநேரங்களின் சொற்ப இடைவேளையில் நான் காதலைப் பார்த்து விட்டேன், மரணத்தைக் கண்டு விட்டேன். எல்லா விஷயங்களுமே எல்லா மனிதர்களுக்காகவும் தரிசனமாக்கப் படுகின்றன-அல்லது அது எப்படியாயினும் சகல விஷயங்களும் ஒரு மனிதன் அறியும்படி அளிக்கப்படுகின்றன. ஆனால் எனக்கு இரண்டு அடிப்படை விஷயங்கள் ஒரே ஒரு இரவில் தரிசனமாக்கப் பட்டன. வருடங்கள் மறைகின்றன, இந்தக் கதையை நான் பல தடவை சொல்லி இருக்கிறேன்-அதை அப்படியே இருந்தபடியா, ஞாகப்படுத்தியா, அல்லது எனது வார்த்தைகளை மாத்திரம் ஞாபகம் வைத்துக் கொண்டா என்பது தெரியவில்லை. இதே விஷயம் லா காட்டிவாவுக்கு ஒரு சிவப்பிந்திய முற்றுகையின் போது நடந்திருக்கக் கூடும். மெரேய்ரா கொல்லப்படுவதைப் பார்த்தது நானா அல்லது வேறு எவரோ ஒருவரா என்பது இப்போது முக்கியமில்லை.

Translated by Norman Thomas di Giovanni

அவெலினோ அரிடோண்டோ

இந்த நிகழ்ச்சி மாண்ட்டிவீடியோவில் 1897ஆம் ஆண்டு நடந்தது. வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிற, அல்லது, வீட்டுக்கு எவரையும் வரவழைத்து உபசரிக்க முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட ஏழை ஜனங்களின் வழியில், ‘கஃபே தல் குளோபா’ விடுதியில், மேஜையின் ஒரே பக்கத்தில் ஒரு இளைஞர் குழு அமர்ந்திருந்தது. அவர்கள் அனைவரும் மாண்ட்டிவீடியோ விலிருந்து வந்தவர்கள். அவர்கள் அவெலினோ அரிடோண்டோவிடம் நட்பு செய்து கொள்ள சிரமப்பட்டார்கள். மாண்ட்டிவீடியோவின் உட்பகுதியிலிருந்து வந்த அல்வெலினோ மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கவுமில்லை: அல்லது, மற்றவர்கள் அவன் மீது நம்பிக்கை வைக்கவும் உதவி செய்யவில்லை. அவனுக்கு இருபது வயதிற்கும் கூடுதலாக இருக்கும். மெலிந்த தேகத்துடன், கறுத்த நிறத்துடன், குள்ளமாக, ஒரு வேளை அசிங்கமாகவும், இருந்தான். ஒரே சமயத்தில் தூக்கக் கலக்கத்தில் இருப்பது போலவும், துருதுருப்புடன் இருப்பது போலவுமிருந்த அவனுடைய கண்கள்தான் அவனுக்கு ஒரு அநாமதேயமான முகம் என்பதிலிருந்து அவனைத் தப்புவித்தன: விடுவித்தன. போனஸ் அயர்சில் இருந்த உலர்பொருள் விற்பனைக் கடையில் எழுத்தராக வேலை பார்த்தான். ஓய்வு நேரத்தில் சட்டம் பயின்றான். அப்போது நாட்டினைச் சூறையாடி அழிவேற்படுத்திக் கொண்டிருந்த போரினைக் அவர்கள் கண்டனம் செய்தபோதிலும், தகுதியற்ற காரணங்களுக்காக ஜனாதிபதி தன் பதவிக் காலத்தினை நீட்டிக் கொண்டு போகிறார் என்ற பொதுக்கருத்து நிலவியபோதும் அரிடோண்டோ மௌனமாக இருந்தான். அவனுடைய கஞ்சத்தனம் பற்றி அவர்கள் கிண்டல் செய்தபோதும் அவன் மௌனமாகவே இருந்தான்.
செர்ரோஸ் பிளேன்கோஸ் போர் நடந்த சிறிது காலத்திற்குப் பிறகு தனது தோழர்களிடம் அவன் மெர்சிடஸ் நகரத்திற்குப் பயணம் போவதால் அவனைச் சிறிது காலம் பார்க்க முடியாது என்று கூறினான். இந்தச் செய்தியானது எவரையும் கிளர்ச்சி அடையச் செய்யவில்லை. அப்பொழுதும் அவனிடம் யாரோ சொன்னார்கள் வெள்ளையர்களின் புரட்சித் தலைவனான அபெரிசியோ சாராவின் மாட்டுக்காரர்களின் கும்பல் பற்றி ஜாக்கிரதையாக இருக்கும்படி- ஒரு புன்சிரிப்புடன். வெள்ளையர்களைப் பற்றி அவன் பயப்படவில்லை என்று பதில் சொன்னான். தானுமே ஒரு வெள்ளையனாக இருந்த அவர்களில் ஒருவன் இதற்கு ஒன்றும் சொல்லவில்லை.
அவன் திருமணம் செய்து கொள்ள நிச்சயம் பண்ணியிருந்த பெண்ணான கிளேராவிடம் விடை பெறுவது அரிடோண்டோவுக்குச் சிரமமாக இருந்தது. அவனுடைய நண்பர்களுக்குச் சொன்ன வார்த்தைகளைக் கொண்டே ஏறத்தாழ அவளிடம் சொல்லி விட்டு, கடிதங்களை எதிர்பார்க்க வேண்டாம் என்று எச்சரித்தான். ஏன் என்றால் அவனுக்கு ஓயாத வேலையிருக்கும். கடிதம் எழுதும் பழக்கம் இல்லாத கிளேரா இந்த விளக்கத்தினை எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டாள். அவர்கள் இருவரும் ஆழ்ந்து காதலித்துக் கொண்டிருந்தார்கள்.
புறநகர்ப்பகுதியில் அரிடோண்டோ வசித்தான். அவனைக் கவனித்துக் கொண்ட நீக்ரோ-வெள்ளை இனக் கலப்புப் பெண்ணுக்கும் அவனுடைய குடும்பத்தின் துணைப் பெயரே இருந்தது. காரணம், மகா யுத்த காலத்திலிருந்தே அவளுடைய முன்னோர்கள் அவனுடைய குடும்பத்தின் அடிமைகளாக இருந்ததுதான். கிளிமென்டினா முழுக்கவும் நம்பிக்கைக்கு உகந்தவள். அவனைத் தேடி வந்த எவருக்கும் அவன் நாட்டுப்புறத்திற்குச் போயிருப்பதாகச் சொல்லச் சொல்லி கட்டளை யிட்டான். அவன் ஏற்கனவே அவனது கடைசி சம்பளச் செக்கை உலர்பொருள் விற்பனைக் கடையிலிருந்து பெற்றுக் கொண்டிருந்தான்.
அவன் வீட்டிலிருந்த, மண்பாவப்பட்ட மூன்றாவது முற்றத்திற்குள் திறந்த பின் பக்கத்து அறைக்கு மாறிக் கொண்டான். அது ஒரு அர்த்தமில்லாத நடவடிக்கை. ஆனாலும் அவன் தனக்குத் தானே போட்டுக் கொண்ட மனிதத்தனிமையை ஆயத்தப்படுத்துவதற்கு உதவியது. மறுபடியும் அவன் தூக்கங் கொள்ள ஆரம்பித்த குறுகலான இரும்புக் கட்டிலில் இருந்து வெறுமையாக இருந்த புத்தக அலமாரியை சோகத் தொனிப்புடன் பார்த்தான். அவனுடைய சகல புத்தகங்களையும், பாடப்புத்தகங்கள் உட்பட, விற்றுவிட்டிருந்தான். அதில் மிச்சமிருந்ததெல்லாம் அவன் என்றுமே படித்து முடிக்காத பைபிள் மாத்திரமே.
அவன் அதை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டு வந்தான்-சில சமயம் ஈடுபாட்டினாலும், சில சமயம் சலிப்பினாலும்-யாத்திரையாகமத்திலிருந்தோ: ‘பிரசங்கி’யிலிருந்தோ சில அத்தியாயங் களை மனப்பாடம் செய்வதென்று தானே முடிவு செய்து கொண்டான். அவன் என்ன படித்தான் என்பதைப் புரிந்து கொள்வதற்கு முயற்சி எடுக்கவில்லை. அவன் ஒரு சுதந்திரச் சிந்தனையாள னாக இருந்த போதிலும் தேவனுக்கான ஸ்தோத்திரங்களை ஒரு நாள் இரவு கூட அவன் சொல்லத் தவறவில்லை. மாண்ட்டிவீடியோவிலிருந்து வந்த பிறகு அப்படிச் செய்வதாக அவன் அம்மாவுக்கு வாக்குக் கொடுத்திருந்தான். பெற்றோருக்கான வாக்குத் தவறுதல் அவனுக்குக் கெடுதலைக் கொண்டு வரும் என்று நினைத்தான்.
அவனுடைய இலக்கு ஆகஸ்ட் மாதம் இருபத்தைந்தாம் தேதி காலை என்பதை அறிந்திருந்தான். அவன் கடக்க வேண்டிய மிகச் சரியான நாட்களின் எண்ணிக்கையையும் அவன் அறிந்திருந்தான். அவனுடைய இலக்கு அடையப்பட்ட உடன் காலம் நின்று போய் விடும். அல்லது, அதற்குப் பிறகு நடக்கும் எதற்கும் அர்த்தமிருக்காது. ஒரு விடுதலைக்கோ, அருட்கொடைக்கோ காத்திருப்பவன் போல அவன் அந்தத் தேதிக்காகக் காத்திருந்தான். அதை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம் என்பதற்காக அவனுடைய கடிகாரத்தினை சாவி கொடுக்காமல் நின்று போக விட்டான். ஆகிலும், ஒவ்வொரு இரவும் நகரத்தின் கடிகாரம் பன்னிரண்டு இருண்ட ஒலிகளை எழுப்பக் கேட்கும் போது, காலண்டரில் ஒரு காகிதத்தைக் கிழித்தெறிந்து, ஒரு நாள் குறைவு என்று நினைத்தான்.
ஆரம்பத்தில் ஒருவிதமான நடைமுறை ஒழுங்கினைக் கட்டுவதற்கு முயற்சி செய்தான் – மேட்டி பானத்தைக் காய்ச்சுவது, அவனே சுருள் செய்து கொண்ட துருக்கி சிகரெட்டுகளைப் புகைப்பது, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பக்கங்களை வாசிப்பது, மீண்டும் மறுவாசிப்பு செய்வது, அவனுக்கு பரிமாறும் தட்டினில் உணவைக் கொண்டு வரும் க்ளிமென்டினவுடன் உரையாட முயல்வது, மெழுகுவர்த்தியை அணைக்கும் போது தான் பேச வேண்டிய உரையைச் செம்மைப் படுத்துவது என இவ்வாறாக. நிறைய வயதாகிவிட்ட க்ளிமென்டினாவுடன் பேசுவது எளிமை யானதாக இருக்கவில்லை. காரணம், அவளுடைய ஞாபகமானது நாட்டுப்புறத்திலும், அதன் தினசரி வாழ்க்கையிலும் வேர்பிடித்து நின்று போயிருந்ததுதான். ஒரு சதுரங்கப் பலகையையும் அரிடோண்டோ தயார் செய்து வைத்திருந்தான். அதில் திட்டமற்ற, என்றுமே முடிவுக்கு வராத ஆட்டங்களை ஆடினான். அவனுக்கு ஒரு ரூக் கிடைக்காது போகவே அதற்குப் பதிலாக ஒரு துப்பாக்கி குண்டையோ அல்லது ஒரு இரண்டு சென்ட் நாணயத்தையோ வைத்தான்.
நேரத்தைத் தள்ளுவதற்கு, அவனுடைய அறையை ஒவ்வொரு நாளும் காலையில், சிலந்திப் பூச்சிகளைத் துரத்தியபடி ஒரு கந்தல் துணியாலும், பெருக்குமாறினாலும் சுத்தம் செய்தான். இந்த மாதிரியான கீழ்மையான வேலைகளை அவன் செய்தது க்ளிமென்டினாவுக்குப் பிடிக்கவில்லை. அது அவளுடைய காரியமாக இருந்தது மட்டுமல்ல – அவன் அதற்கு லாயக்கில்லாதவனாக இருந்தான். சூரியன் உச்சிக்கு வந்த பிறகு விழிப்பதை அவன் விரும்பிய போதும், விடியல் நேரத்தில் எழுந்துவிடும் பழக்கம் அவனுடைய எண்ணத்தை விட வலுவானதாக இருந்தது. அவனுடைய நண்பர்களைப் பார்க்காதிருப்பது நிறைவே பாதித்தது. ஆனால் அது பற்றி வருத்தப்படாமல் தன்னுடைய வெல்ல முடியாத மனோதிடத்தை வைத்துப் பார்க்கும் போது, அவன் இல்லாதது பற்றி அவர்கள் வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தான். ஒரு நாள் மாலை அவனுடைய நண்பர்களில் ஒருவன் அவனைத் தேடி வந்து வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்டான். கிளிமென்டினாவுக்கு அவனைத் தேடிவந்தவன் யாரென்று அடையாளம் தெரியவில்லை. அல்வெலினோவும் அவன் யாராக இருக்கும் என்று என்றைக்கும் தெரிந்து கொள்ளவில்லை. தினசரிப் பேப்பர்களை பெரும் ஆர்வத்துடன் வாசிப்பவன் என்பதால் இப்போது அந்த அழிவுத் துக்கடாக்களின் மியூசியம்களைக் கைவிட்டு விடுவது கடினமாக இருந்தது. ஆழ்ந்த சிந்தனை செய்வதற்கோ, நிதானித்து முடிவெடுப்பதற்கோ அவன் பிரத்யேகமான ஆள் அல்ல.
அவனது இரவுகளும் பகல்களும் ஒரே மாதிரியாக இருந்தன. ஆனாலும் ஞாயிற்றுக் கிழமைகள் அவனை அதிகம் அழுத்தின. ஜூலை மாதத்தின் நடுவில், ஏதோ விதத்தில் நம்மை நகர்த்திச் செல்லும் காலத்தினை மூட்டை கட்டி விடுவது தவறான காரியம் என்று சந்தேகித்தான். இப்போது அவனது கற்பனையை உருகுவே நாட்டின் அகலங்களின் மீதும், நீளங்களின் மீதும் உலவ விட்டான். அப்போது சான்ட்டா இரினேவில் அவன் காகிதப் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுது இறந்திருக்கலாம் என்கிற ஒரு இரட்டை நிற ரோமம் கொண்ட பின்ட்டோ குதிரையின் மீது. மாடு ஓட்டிக்கொண்டு செல்பவர்களால் முடுக்கப்படும் கால்நடைகள் கிளப்பிய புழுதியின் மீது. ஃபிரே பென்ட்டோசிலிருந்து ஒவ்வொரு மாதமும் சிறு அணியும் மணிகளின் தொகுதியை ஏற்றிக் கொண்டு வந்த ஓய்ந்து போன கோச் வண்டியின் மீது. நாட்டின் தேசீய நாயகர்கள் முப்பத்து மூன்று பேரும் வந்திறங்கிய லா அக்ரெசியாடா வளைகுடாவின் மீது. ஹெர்விடெரோ மீது. மலைத் தொடர்ச்சிகள், காடுகள், நதிகளின் மீது. செர்ரோ மலை மீதமைந்த கலங்கரை விளக்கத்தின் படிகளில் ஏறினான். லா பிளாட்டாவின் இரண்டு பக்கத்துப் பிரதேசங்களிலும் அது போன்றதொரு மலைச் சிகரம் இல்லை என்று நினைத்தபடி. மாண்ட்டிவீடியோவின் வளைகுடாவினைப் பார்த்து அமைந்திருந்த இந்த மலையின் மீதிருந்து உருகுவே நாட்டின் தேசீய சின்னத்தின் மீது சென்றது. பிறகு அவன் உறங்கிப் போனான்.
ஒவ்வொரு இரவும் கடலுக்கு அப்பாலிருந்து வந்த தென்றல் காற்று அவன் தூக்கத்திற்கு உகந்த ஒரு குளுமையைக் கொண்டு வந்தது. அவன் என்றும் விழிப்பாக இருந்ததில்லை. அவன் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை முழுமையாக விரும்பினான். ஆயினும் பெண்களை, குறிப்பாக அவர்கள் இல்லாத போது, நினைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது. கிராமப்புறத்து வாழ்க்கை அவனைக் கற்புள்ளவனாகப் பழக்கி இருந்தது. அந்த இன்னொரு பொறுப்பான-அவன் வெறுத்த மனிதன் பற்றி எவ்வளவு குறைவாகச் சிந்திக்க முடியுமோ அவ்வளவு குறைவாகச் சிந்தித்தான். தட்டைக் கூரையின் மீது மழை ஏற்படுத்திய சத்தம் அவனுக்குத் துணையாக இருந்தது.
சிறையிலிருக்கும் ஒரு மனிதனுக்கோ, அல்லது, கண்பார்வை இழந்த மனிதனுக்கோ காலம் கீழ் நோக்கி ஒழுகி ஓடுகிறது, வசமான சாய்தளத்தில் ஓடுவது போல. அவனுடைய மனிதத் தனிமையின் பாதிக் காலத்திலேயே, ஒரு தடவைக்கு மேல் அரிடோண்டோ காலமற்ற காலத்தினை ஏறத்தாழ அனுபவம் கண்டான். வீட்டின் மூன்று முற்றங்களில் மூன்றாவதில் இருந்த ஒரு நீர்த்தொட்டியில் ஒரு தவளை இருந்தது. நித்தியத்துவத்தின் எல்லையைத் தொட்டபடி இருந்த தவளையின் காலம் பற்றி நினைக்கவே என்றும் அரிடோண்டோவுக்குத் தோன்றவில்லை. ஆகிலும் அவன் தேடியது அதைத்தான்.
குறிப்பிட்ட தேதிக்கு அதிக காலம் இல்லாத போது, அவனது பொறுமையின்மை மீண்டும் தொடங்கியது. ஒரு நாள் இரவு, அதை இனி மேலும் தாங்கிக் கொள்ள முடியாத போது, கிளம்பி தெருவுக்குள் நுழைந்தான். எல்லாமே வித்தியாசமாகவும் அளவில் பெரிதாகவும் தெரிந்தது. ஒரு திருப்பத்தில், வெளிச்சத்தைப் பார்த்து அந்த மதுவருந்தும் விடுதிக்குள் நுழைந்தான். அவனுடைய இருப்பினை நியாயப் படுத்த வேண்டி ஒரு கோப்பை கசப்பு ரம் ஆர்டர் செய்தான். சில ராணுவ வீரர்கள், ஒரு தச்சமைப்பில் இருந்த மதுவருந்தும் பாரின் மீது சாய்ந்தபடி நடத்திக் கொண்டிருந்தார்கள். “உனக்குத் தெரியும், போர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுவது முழுமுற்றாகத் தடை செய்யப் பட்டிருக்கிறது.” அவர்களில் ஒருவன் சொன்னான். “நேற்று மாலை என்ன நடந்தது என்று நான் சொல்வதைக் கேள். அது உனக்குப் பொழுது போக்காக இருக்கும். லா ரேஸோன் பிரதேசத்தைக் கடந்து எங்களில் சில பேர் சென்றபோது, உள்ளேயிருந்து ஒரு குரல் ஆணையை மறுப்பது தெரிந்தது. கொஞ்சமும் தாமதிக்காது நாங்கள் உள்ளே நுழைந்தோம். அலுவலகம் கடும் இருட்டாக இருந்தது. யார் பேசிக் கொண்டிருந்தார்களோ அவர்களைத் தோட்டாக்களால் துளைத்தோம். கால்களைப் பிடித்து வெளியே இழுக்க விரும்பினோம். அமைதி திரும்பிய போது அந்த ஆளைத் தேடினோம். ஆனால், நாங்கள் கண்டதென்னவோ தனக்குத் தானே பேசிக்கொள்ளும், அவர்கள் ஃபோனோகிராஃப் என்று அழைக்கும் மெஷின்களில் ஒன்று”.
எல்லோரும் சிரித்தனர். “அந்த மாதிரி ஒரு ஏமாற்று பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் விவசாயி?” என்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த அரிடோண்டோவிடம் அவன் கேட்டான். அரிடோண்டோ மௌனமாக இருந்தான்.
சீருடை அணிந்திருந்தவன் அரிடோண்டோவின் முகத்துக்கு மிக நெருக்கமாகத் தன் முகத்தைக் கொண்டு வந்து இவ்வாறு சொன்னான்:. “சீக்கிரம். நம் ஜனாதிபதி யூவான் இடியார்டே போர்டே நீண்ட நாள் வாழ்க என்று நீ உரக்கக் கத்துவதை நான் கேட்க வேண்டும்.”
அரிடோண்டோ இதற்குப் பணிந்தான். அவனைப் பரிகாசம் செய்யும் கைதட்டல்களுக்கு மத்தியில் கதவை நோக்கி சென்றான். அவன் தெருவில் இருக்கும் போது கடைசியான அவமானச் சொற்கள் அவன் மீது வீசப்பட்டன.
“பயம் ஒன்றும் முட்டாள் அல்ல”, அவனுக்குக் கேட்டது. “அது ஆத்திரத்தைக் கொல்கிறது.” அரிடோண்டோ ஒரு கோழையைப் போல நடந்து கொண்டான். ஆனால் அவனுக்குத் தெரியும் அவன் ஒரு கோழை அல்லவென்று. நிதானமாகத் தன் வீட்டை நோக்கிப் போனான்.
ஆகஸ்ட் மாதம் இருபத்தைந்தாம் தேதி, அரிடோண்டா ஒன்பது மணிக்குப் பிறகு விழித்தெழுந்தான். கிளாராவைப் பற்றி முதலில் நினைத்தான். பிறகு தான் தேதியைப் பற்றி நினைத்தான். காத்திருத்தலுக்கு விடை கொடுத்தாயிற்று விடை கொடுத்தாயிற்று என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். விடுதலை உணர்வுடன் சொன்னான். “இன்றுதான் அந்த நாள்.”
அவசரப்படாமல் முகச்சவரம் செய்து கொண்டான். கண்ணாடியில் தன் தினசரி முகத்தைக் கண்டான். ஒரு சிவப்பு ‘டை’யைத் தேர்ந்தெடுத்து, அவனுடைய மிகச் சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டான். தாமதமான மதிய உணவு சாப்பிட்டான். மேகம் கட்டியிருந்த வானம் எப்போது வேண்டுமானாலும் தூறல் போடும் போலிருந்தது. அவன் எப்போதும் வானம் வெளிச்சமாகவும் நீலநிறமாகவும் இருக்கும் என்று கற்பனை செய்திருந்தான். அவனது ஈர ஓதம் மிகுந்த அறையை விட்டுக் கடைசியாக வெளியே வந்த போது ஒரு விதமான சோகம் அவனைக் கப்பிக் கொண்டது. வளைந்த நுழைவாயிலில் க்ளிமென்டினாவைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த மிச்ச பெசோக்களை அவளிடம் தந்தான். வர்ணத்தில் தீட்டப்பட்டு, அங்கே பெய்ண்ட் விற்கப்படுகிறது என்று தெரிவித்த இரும்புக் கடையின் சாய்சதுரங்களை இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒரு சிந்தனையுமில்லாது இருந்து விட்டதாக நினைத்தான். அவன் சாரண்ட்டி தெருவை நோக்கி நடந்தான். அது ஒரு விடுமுறை நாளாக இருந்தபடியால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது.
கடிகாரம் இன்னும் மூன்று அடித்திருக்கவில்லை. அப்போது அவன் மேட்ரிஸ் பிளாசாவை அடைந்தான். காலைத் துதிப்பாடல் ஏற்கனவே முடிந்திருந்தது. அரசாங்க அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், மதபோதக நிர்வாகிகள் ஆகியவர்களால் அமைந்த குழு தேவாலயத்தின் நிதானமான படிகளில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தது. முதல் பார்வையில், உயரமான தொப்பிகளும்- சில இன்னும் கையிலேயே இருந்தன- சீருடைகள், தங்கப் பின்னல்கள், ஆயுதங்கள் ட்யூனிக்குகள் எல்லாமாய்ச் சேர்ந்து அந்தக் குழு பெரிதோ என்ற பொய்த் தோற்றத்தினைக் கொடுத்தது. நிஜத்தில் முப்பதிற்கும் மேற்பட்டவர்கள்தான் அதில் இருந்தனர். அரிடோண்டோவுக்கு பயம் ஏற்படவில்லை. மாறாக, ஒரு வித மரியாத உணர்வு அவனுக்குள் நிறைந்தது. “அவர்களில் ஜனாதிபதி யார்?” என்று யாரோ ஒருவரைக் கேட்டான்.
“சமயத் தலைவரின் சிலுவைக் கோலும் கிரீடத் தொப்பியும் உள்ள ஆர்ச்பிஷப் தெரிகிறார் அல்லவா? அதற்கு அடுத்தாற் போல் இருப்பவர்.”
அரிடோண்டோ ஒரு ரிவால்வரை எடுத்துச் சுட்டான். இடியர்டே போர்டே ஒன்று அல்லது இரண்டு அடிகள் எடுத்து வைத்து, தலைகுப்புற விழுந்ததும் சொன்னார்: “நான் சுடப்பட்டு விட்டேன்.”
அரிடோண்டோ தன்னை அதிகாரிகள் வசம் ஒப்புவித்தான். பின்னர் அவன் இவ்வாறு அறிவிக்க இருந்தான். “நான் கொலோராடோவைச் சேர்ந்த ஒரு சிவப்பன், அதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். எங்கள் கட்சியைக் கறைப்படுத்திய, காட்டிக் கொடுத்த ஜனாதிபதியை நான் கொலை செய்தேன். அவர்களை இந்தக் காரியத்தில் தொடர்பு படுத்தாதபடிக்கு, எனக்கு நிச்சயம் செய்திருந்த பெண்ணிடமிருந்தும் என் நண்பர்களிடமிருந்தும் உறவை முறித்துக் கொண்டேன். நான் தினசரிப் பேப்பர்களைப் பார்க்காமல் இருந்தேன். எனவே அவை என்னைத் தூண்டி விட்டிருக்கும் என்று எவரும் சொல்ல முடியாது. இந்த நியாயத்தினைச் செயல்படுத்தியதை என்னுடையதாக மட்டுமே கோருகிறேன். இப்போது என் மீது தீர்ப்பளிக்கலாம்.”
இப்படித்தான் ஒரு வேளை அது நடந்திருக்கக் கூடும். இதை விட இன்னும் கூடுதலான சிக்கல் அமைப்பிலும் நடந்திருக்கலாம். இந்த விதத்தில்தான் அது நடந்ததாக நான் கற்பனை செய்கிறேன்.

Translated by Norman Thomas di Giovanni.

நுழைவாயிலில் ஒரு மனிதன்
-1952-
பியோய் காசரெஸ் லண்டனிலிருந்து திரும்பிய பொழுது H வடிவில் கைப்பிடியும் முக்கோண வடிவில் கத்திப் பகுதியும் கொண்ட வினோத வாள் ஒன்றினைக் கொண்டு வந்தார். பிரிட்டிஷ் கவுன்சிலைச் சேர்ந்த எங்கள் பொது நண்பரான கிரிஸ்டோபர் ட்யூயி அம்மாதிரியான ஆயுதங்கள் இந்தியாவில் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுபவை’என்றார். அவர் சொன்னது — இரண்டு போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் இந்தியாவில் பணிபுரிந்தாரென்பதை குறிப்பாய் உணர்த்தியது. (Ultra Auroram et Gangem) என்று லத்தீன் மொழியில் அவர் மேற்கோள் காட்டியது ஜூவனலின் ஒரு வரியைத் தவறுதலாக குறிபிட்டதாகும். அன்றிரவு எங்களைச் சந்தோஷப்படுத்த அவர் கூறிய கதைகளில் ஒன்றினைச் சொல்ல முனைகிறேன். நான் கதை சொல்வது நியாயமாய் இருக்கும். சூழ்நிலைக்கேற்ற தகவல்களைச் சேர்த்துச் சொல்லும் சபலத்திலிருந்தும் ஆங்கில நாவலாசிரியர் கிப்ளிங்கினுடைய எழுத்துக்களில் உள்ளது போல் இடைச் செருகல் செய்து கதையின் கிழக்கு நாடுகளின் குணாம்சத்தின் மீது சுமத்தாமலிருக்கும்படியும் அல்லா என்னைக் காப்பாற்றட்டும். ஏறத்தாழ ஆயிரத்தோரு அராபிய இரவுகளிலிருந்து நேரிடையாக எடுத்தது போலிருக்கும் இக்கதையின் புராதன எளிமையானது இழக்கப்பட்டால் அது வருத்தம் தரக்கூடும்.
ட்யூயி கூறினார். நான் சொல்லப்போகும் கதையின் பூமியியல் அவ்வளவு முக்கியமானது அல்ல. மேலும் ப்யோனஸ் அயர்ஸ் நகரில் இருப்பவர்களுக்கு அமிர்தசரஸ் அல்லது அவுத் போன்ற பெயர்கள் என்ன விதமான அர்த்தத்தைக் கொடுக்கக் கூடும்? குறிப்பிட்ட அந்த வருஷங்களில் ஒரு முஸ்லிம் நகரத்தில் கலவரங்கள் நடந்தன என்பதையும், அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு அதன் மிகச் சிறந்த அலுவலர்களில் ஒருவனை அனுப்பி வைத்தது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ஸ்காட்லாந்தின் மிகச்சிறந்த போராளிகளின் வம்சத்தில் வந்த அவனின் ரத்தத்திலேயே, வன்முறையின் வம்சாவழி முத்திரை இருந்தது. ஒரே ஒரு முறைதான் நான் அவனை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவனுடைய கறுப்புத் தலை முடியையும், தூக்கலான கன்ன எலும்புகளையும், ஆர்வமான மூக்கு அல்லது வாயையும், அகன்ற தோள்களையும், வைக்கிங் இனத்தவருக்கே உரிய உடலமைப்பையும் என்னால் மறக்க முடியாது. இன்றிரவு நான் சொல்லப்போகும் கதையில் அவன் பெயர் டேவிட் அலெக்ஸான்டர் க்ளென்கெயின். அவனைப் பார்த்து எல்லோரும் அஞ்சினர். அவன் வருகை பற்றிய செய்தி மட்டுமே நகரினை அமைதிப்படுத்த போதுமானதாய் இருந்தது. இருந்தும் சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நகரின் அமைதி அவனைத் தடுக்கவில்லை. சில வருடங்கள் கடந்தன. நகரமும் அதைச் சுற்றி இருந்த மாவட்டமும் அமைதியாக இருந்தது. சீக்கியர்களும், முஸ்லிம்களும் தமது பழமையான பகைமைகளை ஒதுக்கிவிட்டு இருந்தபோது திடீரென்று க்ளென் கெயின் காணாமல் போய்விட்டான். அவனைக் கடத்திக் கொண்டு போய் விட்டதாகவும், அல்லது அவன் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் பல வதந்திகள் கிளம்பின. இது இயல்பானதுதான்.
என் மேலதிகாரியிடமிருந்து இந்த செய்திகளை நான் தெரிந்து கொண்டேன். ஏனெனில் அப்போது செய்தித்தணிக்கை மிகக் கடுபிடியாக இருந்தது. செய்தித்தாள்கள் க்ளென் கெயின் காணாமல் போனது பற்றி குறிப்பிட்டுச் சொல்லவே இல்லை. இந்தியா உலகத்தை விடப் பெரியது’ என்று ஒரு பழமொழி உண்டு. ஒரு தஸ்தாவேஜின் அடிப்பகுதியில் கிறுக்கப்பட்ட ஒரு கையெழுத்தினால், அந்த நகரத்தில் சகல வல்லமையும் பொருந்தியவனாய் அவன் இருந்திருக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அரசு யந்திரத்தில் அவன் ஒரு பல்சக்கரம் மாத்திரமே. உள்ளூர் போலீசின் விசாரணைகள் எந்த விதத்திலும் பலன் அளிக்கவில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து (இந்தியாவில் தூரங்கள் மிகவும் தாராளமானவை) என் பணிக்கு நான் அனுப்பப்பட்டேன். ஒரு மனிதனை சடக் என்று இழுத்துக் கொண்டுவிட்ட அந்த மிகச் சாதாரணமான நகரின் வீதிகளில், வெற்றிக்கான எந்தவித நம்பிக்கையுமின்றி நான் என் வேலையைத் தொடங்கினேன்.
க்ளென் கெயின் விதியை ரகசியமாக வைக்கும்படியான ஒரு சதியைப் பற்றி நான் உடனடியாக உணர்ந்தேன். அந்த ரகசியத்தைப் பற்றி தெரியாத, ஆனால் அதை வெளியிடுவதில்லை என்று உறுதியெடுக்காத ஒருவர் கூட இந்த நகரில் இருக்க முடியாது என நான் சந்தேகித்தேன். விசாரிக்கப்பட்ட பொழுது பெரும்பாலானோர் தங்களுக்கு ஒன்றுமே தெரியாதென்று சாதித்தனர். க்ளென் கெயின் யாரென்றே தெரியாதென்றும், அவர்கள் அவனைப் பார்த்ததில்லை என்றும், அவனைப் பற்றி எவரும் பேசியதைக் கூடக் கேட்டதில்லையென்றும் கூறினர். ஒரு சிலரோ யாரோ ஒருவனிடம் க்ளென்கெயின் சற்று நேரம் முன்பு பேசிக் கொண்டிருந்ததைத் தாங்கள் பார்த்ததாகவும் கூறி, அவர்களிருவரும் நுழைந்த வீட்டிற்கும் என்னை அழைத்துச் சென்றனர். வீட்டிலிருந்தோர், அவர்கள் வெளியே போய்விட்டார்களென்றும், அவர்களைப் பற்றி தங்களுக்கு ஒன்றுமே தெரியாதென்றும் கூறி விட்டனர். இது போல் அக்கறையோடு புளுகுபவர்களை அடித்து வீழ்த்தவும் நான் தயாரானேன். என் கோபாவேசத்தை ஒப்புக்கொண்ட சாட்சிகள் வேறு பல புளுகுகளைக் கூற ஆரம்பித்தனர். என்னால் அவர்களை நம்பவும் முடியவில்லை: நம்பாமலிருக்கவும் முடியவில்லை. இந்நிலையில், ஒரு நாள் பகலில் முகவரி எழுதப்பட்ட துண்டுக் காகிதம் அடங்கிய உறை ஒன்றினை என்னிடம் தந்தனர்.
நான் அந்த இடத்தை அடைந்த போது சூரியன் மறைந்து விட்டிருந்தது. அந்தப் பகுதி ஏழ்மையாய் இருந்ததே ஒழிய ரௌடித்தனமாகஇருக்கவில்லை.வீடு தாழ்ந்திருந்தது.தெருவிலிருந்தது பார்க்கும் பாழுது, கற்கள் பாவப்படாத தொடர்ச்சியான, அடுத்தடுத்த உள் முற்றங்களும் எங்கோ அதன் மறுகோடியில் ஒரு வழியும் இருப்பது தெரிந்தது. அங்கே ஒருவிதமான முஸ்லிம் சடங்கு நடந்து கொண்டிருந்தது. சிவப்புநிற மரத்தில் செய்யப்பட்ட சரோட் வாத்தியத்துடன் ஒரு குருடன் நுழைந்தான்.
நுழைவாயிலில், என் கால்களுக்கு அருகில் ஜட வஸ்துவைப்போல சலனமே இல்லாத, வயதான, மனிதன் குந்தியிருந்தான். அவன் எப்படி இருந்தான் என்ற விவரணையைத் தருகிறேன். ஏனெனில் கதையின் மிக அத்தியாவசியப் பகுதி அவன்தான். ஓடும் நீர் தேய்த்து உருட்டிய கூழாங்கல்லைப் போல, பல தலைமுறையைச் சேர்ந்த மனிதர்கள் தொடர்ந்து நேர்த்தி செய்து வந்த ஓரு சொற்றொடரைப் போல வயது அவனை மிருதுவாக ஆக்கிவிட்டிருந்தது. நீளமான கந்தல் ஆடை அவனை மூடியிருந்தது. அல்லது அப்படி தோன்றியது. அவன் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த தலைப்பாகையையும் இன்னொரு கந்தல் என்று தான் சொல்ல வேண்டும். அந்த நேரத்தில், வெண்தாடி கொண்ட அவன் கருத்த முகத்தை நிமிர்த்தினான்.எவ்வித அறிமுகப்படுத்தலும் இன்றி நான் அந்த வயோதிகனிடம் பேசத் தொடங்கினேன். காரணம், அச்சமயத்தில் க்ளென்கெயினை கண்டுபிடிக்கும் சகல நம்பிக்கைகளையும் நான் இழந்து விட்டிருந்தேன். அந்த வயோதிகனால் நான் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை (ஒரு வேளை நான் பேசியது அவன் காதில் விழுந்திருக்காது). க்ளென்கெயின் ஒரு நீதிபதி என்பதை விளக்கி, அவனைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று அவனிடம் கூறினேன். இந்த வார்த்தைகளைப் பேசும் பொழுதே இந்த நிகழ்காலமானது ஒரு தெளிவற்ற வதந்தி என்பதற்கு மேல் அர்த்தமிருக்காது’அந்த வயோதிகனைக் கேள்வி கேட்பதிலுள்ள பயனின்மையை உணர்ந்தேன். அந்த மனிதனால் சிப்பாய் கலகத்தைப் பற்றியோ அல்லது அக்பர் பற்றியோ தகவல்களைத் தர முடியுமே தவிர க்ளென்கெயினைப் பற்றி அல்ல என நான் எண்ணினேன். அவன் கூறியது எனது சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.
நலிந்த குரலில் அவன் கத்தினான். “ஒரு நீதிபதி” தன்னையே தொலைத்துக் கொண்டு விட்டு தேடப்படுகிற ஒரு நீதிபதி. நான் சிறுவனாக இருந்த போது அது நடந்தது. தேதிகளைப் பற்றிய ஞாபகம் எனக்குக் கிடையாது. நிக்கல்சேன் (Nicholsen) டெல்லியின் வெளிச்சுவர்களுக்கு அருகில் கொல்லப்படுவதற்கு முன்பு, அது நடந்தது. கடந்துவிட்ட அந்தக் காலம் என் ஞாபகத்தில் நிலைத்திருக்கிறது. அப்பொழுது என்ன நடந்தது என்பதை என்னால் மீண்டும் ஞாபகப்படுத்த முடியும். கடவுள் மிகக் கடுங்கோபமாக இருந்தார். மனிதர்களை அவர்களது சீரழிவில் விழ அனுமதித்து விட்டிருந்தார். மனிதர்களின் வாய் நிந்தனைச் சொற்களால் நிறைந்திருந்தது. அவர்கள் ஏமாற்றியும் மோசடி செய்தும் திரிந்தனர். எனினும் எல்லாமே மோசமாகப் போயிருக்கவில்லை. இந்த தேசத்தில் இங்கிலாந்தின் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒரு மனிதனை ராணி அனுப்ப இருக்கிறாள் என்ற செய்தியை அறிந்தவுடன் தீவினை அதிகம் செய்யாதவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் அராஜகத்தை விட சட்டம் மேலானது என்று அவர்கள் நம்பினர். அந்த கிறிஸ்தவன் எங்களிடத்தில் வந்தான். அவனும் எங்களை ஏமாற்றி ஒடுக்குவதற்கு அதிக காலம் ஆகிவிடவில்ûலை. அவன் அருவருக்கத்தக்க குற்றங்களை மறைத்திருந்தான். தீர்ப்புகளை விற்கத் தொடங்கினான். ஆரம்பத்தில் நாங்கள் அவனைக் குற்றம் சொல்லவில்லை. அவன் பரிபாலித்த ஆங்கிலச் சட்டம் எவருக்குமே பரிச்சயம் இல்லாதது. புதிய நீதிபதியின் மேலோட்டமான வரம்பு மீறல்கள் அவனுக்கு மட்டுமே புரியக் கூடிய காரண காரியத்தை அனுசரித்திருக்கக் கூடும். எல்லா விஷயங்களும் அவனுடைய சட்டப் புத்தகத்திற்கு ஏற்றபடி நியாயம் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் கற்பித்துப் புரிந்து கொண்டோம். ஆனால் இந்த உலகின் பிற பகுதிகளில் உள்ள தீவினை மிகுந்த நீதிபதிகளுடன் அவனுக்கிருந்த ஒற்றுமை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு வெளிப்படையாக இருந்தது. கடைசியில் அவன் ஒரு சாதாரண, கெட்ட மனிதன்தான் என்பதை ஒப்புக் கொள்ளவேண்டிய கட்டாயம் வந்தது. அவன் ஒரு கொடுங்கோலனாக மாறினான். அதிர்ஷ்டமில்லாத ஜனங்கள் (அவனது நம்பிக்கை துரோகங்களுக்கு வஞ்சம் தீர்க்க) அவனைக் கடத்திச் சென்று அவனுக்குத் தண்டனையளிக்க வேண்டிய கருத்தில் ஊசலாட்டம் கொண்டிருந்தனர். பேசுவது மட்டும் போதுமானதல்ல. திட்டங்களிலிருந்தும் அவர்கள் செயலுக்கு மாறியாக வேண்டும். மடையர்கள் அல்லது மிக இளம்வயதினர் தவிர வேறு எவரும் இந்த கண்மூடித்தனமான திட்டம் செயல்படுத்தப்படக் கூடியது என்று நம்பவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான சீக்கியர்களும், முஸ்லிம்களும் தங்கள் வார்த்தையைக் காப்பாற்றினர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சாத்தியமே இல்லை எனத் தோன்றியதை நடக்க முடியாததை நடத்திக் காட்டினர். நீதிபதியைத் தனிமைப்படுத்தி, கடத்திச் சென்று நகரின் வெளிப்பகுதிக்கு அப்பால் ஒரு பண்ணை வீட்டில் கைதியாக வைத்தனர். அவனால் தீங்கிழைக்கப்பட்ட எல்லோரையும் அழைத்தனர். அவர்களில் சிலர் அநாதைகளாகவும், விதவைகளாகவும் இருந்தனர். காரணம் மரணம் வழங்குபவனின் வாள் ஓய்வு கொள்ளவேயில்லை. தேடிக் கண்டுபிடித்து அந்த நீதிபதியை விசாரிப்பதற்கு ஒரு நீதிபதியை முன்மொழிந்தனர். அதுதான் மிகவும் சிக்கலான காரியம்.”
இந்த சமயம் அந்த வீட்டிற்குள் நுழைந்த பல பெண்களால் கிழவனின் பேச்சு தடைப்பட்டது. பிறகு அவன் தொடர்ந்தான், மெதுவாக. எந்த ஒரு தலைமுறையிலும் உலகின் ரகசியத் தூண்களாக இருக்கக் கூடிய நான்கு நியாயாதிபதிகள் இருக்கவே செய்வார்கள் என்பது யாவரும் அறிந்ததுதான். இவர்கள்தான் கடவுளிடம் நியாயப்படுத்துவார்கள். இவர்களில் ஒருவர் மிகப் பொருத்தமான நீதிபதியாக இருந்திருக்கக் கூடும். சந்தித்தாலும் ஒருவரை ஒருவர் அறியாதபடியும், அவர்களின் மிக உயர்ந்த வாழ்வின் விதியை அறியாமலும், அநாமதேயமாகவும் தொலைந்தும், நாடோடிகளாகத் திரியும் பொழுது அவர்களை எப்படிக் கண்டு பிடிப்பது? விதியானது ஞானவான்களை நமக்குத்தராது தடுக்குமானால் நாம் ஏன் ஞானமில்லாதவர்களைத் தேடி அடையக் கூடாது என யாரோ ஒருவர் வாதிட்டார். இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. குர்ஆனைப் படித்தவர்கள், நீதியின் விற்பன்னர்கள், ஒரே ஒரு கடவுளை வழிபடும், சிங்கங்களின் பெயர்களைத் தமது பெயராகக் கொண்ட சீக்கியர்கள், எண்ணிலடங்காத கடவுளர்களை வழிபடும் இந்துக்கள், கால்களை சற்றே அகட்டிய நிலையிலிருக்கும் மனிதனைப் போல் இருப்பதே பேரண்டத்தின் வடிவம் என்பதைக் கற்பிக்கும் மகாவீர பிக்ஷூக்கள், தீயை வழிபடுபவர்கள், கறுப்பு யூதர்கள் ஆகியோர் கோர்ட்டில் அங்கம் வகித்தனர். ஆனால் இறுதித் தீர்ப்பு ஒரு பைத்தியக்காரனிடம் ஒப்படைக்கப்பட்டது.”
இந்த இடத்தில் சடங்கு முடிந்து வெளியேறும் மனிதர்களால் கிழவனின் பேச்சு தடைப்பட்டது.
“ஒரு பைத்தியக்காரனிடத்தில்”, என அவன் மீண்டும் கூறினான். “அதன் மூலம் கடவுளின் ஞானம் அவன் வாய் வழியாகப் பேசப்பட்டு, மனிதனின் தற்பெருமை அவமானப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக. அந்த பைத்தியக்காரனின் பெயர் மறைக்கப்பட்டது. அல்லது என்றுமே அறியப்படவில்லை. அவன் தெருக்களில் நிர்வாணமாகவோ, கந்தல்களை உடுத்திக்கொண்டோ தனது விரல்களைக் கட்டைவிரல் கொண்டு எண்ணியபடியோ மரங்களைப் பரிகாசம் செய்து கொண்டோ இருந்தவன்.”
எனது காரண அறிவு கொதித்தது. இறுதித் தீர்ப்பினை ஒரு பைத்தியக்காரனிடம் ஒப்படைத்து விடுவது என்பது விசாரணையை நிர்மூலம் ஆக்குவற்கு இணையாகும் என்று கூறினேன்.
“பிரதிவாதியாகப்பட்டவன் நீதிபதியை ஏற்றுக்கொண்டான்” என்றான் கிழவன். அவன் பைத்தியக்காரனால் விடுவிக்கப்பட்டால் சதிகாரர்களுக்கு அது ஒரு சிக்கலாகிவிடும். ஒரு பைத்தியக் காரனிடமிருந்து அவன் மரண தண்டனையைத் தீரப்பாக எதிர்பார்க்கவில்லை. அவனிடம் நீதிபதி யாரென்று சொல்லப்பட்ட போது அவன் நகைத்தான் என்று நான் கேள்விப்பட்டேன். விசாரணை பல பகல்கள் மற்றும் இரவுகள் நீடித்தது. அடர்ந்து கிளர்ந்த சாட்சிகளின் எண்ணிக்கையால் விசாரணை நின்று போயிற்று”. கிழவன் பேச்சை நிறுத்தினான். ஏதோ ஒன்று அவனைச் சிரமப்படுத்தியது. இடைவெளியை இணைக்க வேண்டி நான் “எத்தனை நாட்கள்” என்று கேட்டேன்.
“குறைந்தபட்சம் பத்தொன்பது நாட்கள்” என்று பதில் கூறினான். சடங்கு முடிந்து வெளியே கிளம்பிய மனிதர்கள் மீண்டும் அவனைத் தடங்கல் செய்தார்கள். முஸ்லிம்களுக்கு மது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் முகங்களும், குரல்களும் குடிகாரர்களுடையதுபோல் இருந்தது. கிழவனிடம் ஒரு ஆள், போகிற போக்கில் எதையோ கத்திக் கூறினான்.
“பத்தொன்பது நாட்கள் மிகச் சரியாக. விசுவாசம் இல்லாத அந்த நாய், தீர்ப்பு வழங்கப்பட்டதை கேட்டான். வாள் அவனது தொண்டையை ருசித்தது.”
கிழவன் ஆவேசமாகவும் சந்தோஷமாகவும் பேசினான். மிக வித்தியாசமான குரலில் அப்பொழுது கதையை முடிவுக்கு கொணர்ந்தான். அவன் பயமின்றி செத்தான்: மிக ஈனமான மனிதர் களிடத்திலும் ஏதோ நற்குணமும் இருக்கிறது.”
“இதெல்லாம் எங்கே நடந்தது?” நான் கேட்டேன். “பண்ணை வீட்டிலா?”
முதல் முறையாக என் கண்களை நேராகப் பார்த்தான். பிறகு நிதானமாக, வார்த்தைகளை அளந்து, விஷயங்களைத் தெளிவாக்கினான். அவன் ஒரு பண்ணை வீட்டில் அடைக்கப்பட்டான் என்று சொன்னேனே தவிர, அங்கே விசாரிக்கப்பட்டான் என்று நான் சொல்லவில்லை. அவன் இந்த நகரத்தில் விசாரிக்கப்பட்டான். வேறு எந்த வீட்டினைப் போலவும் இருக்கக் கூடிய, இது போன்ற ஒரு வீட்டில். ஒரு வீடு பிற வீடுகளிலிருந்து சிறிது வேறுபடுவதில்லை. தெரிந்து கொள்ள வேண்டியதில் முக்கியமானது என்னவெனில், அந்த வீடு கட்டப்பட்டிருப்பது சொர்க்கத்திலா நரகத்திலா என்பதுதான்.
சதிகாரர்களின் கதி பற்றிக் கேட்டேன். “எனக்குத் தெரியாது”, கிழவன் பொறுமையாகக் கூறினான். “இந்த விஷயங்கள் பல வருடங்களுக்கு முன்னரே நடைபெற்று மறக்கப்பட்டு விட்டன. அவர்கள் செய்தது பலரால் கண்டனம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் தேவனால் அல்ல”.
இதைக் கூறிய பிறகு கிழவன் எழுந்தான். அவனுடைய கடைசி வார்த்தைகள் என்னைப் போய்த்தொலை என்று கூறுவது போல் உணர்ந்தேன். அந்தக் கணத்திலிருந்து அவனைப் பொறுத்தவரை நான் அங்கே இருந்ததாகவே கணக்கில்லை. பஞ்சாபின் எல்லா மூலைகளில் இருந்தும் வந்த ஆண்களும், பெண்களும் எங்களை மொய்த்தனர். பிரார்த்தனை செய்து கொண்டும், உச்சாடனம் செய்துகொண்டும் எங்களை நகர்த்தி எறிந்தனர். ஏறத்தாழ வழிநடை என்பதற்கு மேல் அகலமில்லாத குறுகிய முற்றங்களிலிருந்து எப்படி அவ்வளவு பேர் வெளியே வந்து கொண்டே இருக்க முடியுமென்று நான் வியந்தேன். சிலர் பக்கத்து வீடுகளிலிருந்து வெளியே வந்தனர்: சுவர்களைத் தாண்டி அவர்கள் குதித்து வந்தது போலத் தோன்றியது. இடித்துத் தள்ளிக் கொண்டும், திட்டியபடியும் நான் வழி ஏற்படுத்திக் கொண்டு உள்ளே சென்றேன். எல்லா முற்றங்களுக்கும் மையமான முற்றத்தில் தலையில் மஞ்சள் பூக்களால் செய்த கிரீடம் சூடிய ஒரு நிர்வாண மனிதனைக் கண்டேன். எல்லோரும் அவனை முத்தமிட்டும், தழுவிக்கொண்டும் சென்றனர். அவன் கையில் ஒரு வாள் இருந்தது. வாளில் ரத்தக்கறை படிந்திருந்தது, ஏனெனில் அது க்ளென் கெயினுக்கு மரணத்தை வழங்கியிருந்தது. க்ளென் கெயினின் சிதைக்கப்பட்ட உடலை பின்னால் இருந்த தொழுவத்தில் கண்டேன்.

Translated by Norman Thomas di Giovanni.