குறுக்கீட்டாளர்-Intruder-Jorge Luis Borges-Translation Brammarajan

intruderjlb1

குறுக்கீட்டாளர்

ஜோர்ஜ் லூயி போர்ஹே

[1966]

  • …passing the love of women.
    2 Samuel I:

ஜனங்கள் சொல்கிறார்கள் (இது சாத்தியமில்லை) இந்தக் கதை நெல்சன் சகோதரர்களில் இளையவனான எடுவர்டோவினால், தூக்கத்திலேயே இறந்து போன அவனது சகோதரன் இறந்த இரவு சொல்லப்பட்டதென்று. இது தொண்ணூறுகளில் மொரோன் மாவட்டத்தின் வெளிப்பகுதி களில் நடந்திருக்கலாம்.  நிஜம் என்னவென்றால் நீட்சியாகித் தெரிந்த அந்த மங்கலான இரவில் ஒரு மிடறு உள்ளூர் மதுவிற்கும் மற்றதற்கும் இடையில் எவரிடமிருந்தோ எவரோ இந்தக் கதையைக் கேட்டிருக்கலாம். அதை சான்டியாகோ டபோவிற்குச் சொல்லி இருக்கலாம். அவரிடமிருந்துதான் நான் இந்தக் கதையைக் கேட்டேன். பல வருடங்களுக்குப் பிறகு கதை நடந்த துர்தேரா பிரதேசத்தில் அதை மீண்டும் நான் கேட்டேன். இரண்டாவதும் மிக விலாவரி யானதுமான கதை சான்டியாகோ சொன்னதை அடியொற்றிச் சென்றாலும் சில சிறிய மாறுதல் களையும் முரண்பாடுகளையும் கொண்டிருந்தது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் போனஸ் அயர்சின் விளிம்பில் அனுபவங்களால் உரமேறிய மனிதர்களின் கதாபாத்திரத்தின் பரிதாபகர மான குறுகுகிற பகுதியாக அதை நான் எழுதிவைக்கிறேன்.  சுற்றி வளைக்காமல் இதை நான் செய்ய விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்பே குறிப்பிட்ட தகவல்களை அழுத்திச் சொல்வது அல்லது சேர்த்துவிடுவது போன்ற எழுத்தாளனுக்கே உரிய சபலத்திற்கு ஆட்பட்டு விடுவேன் எனத் தெரிகிறது.

அவர்கள் வாழ்ந்த துர்தேரா பகுதியில் அவர்களை நில்சன் சகோதரர்கள் என்றே அழைத்தார்கள். அங்கிருந்த பாதிரியார் ஒருவர் அவரது முன்னோராகப் பட்டவர் நில்சன்களின் வீட்டில் கறுப்பு எழுத்துக்களில் அச்சிடப்பட்ட கனமாக பைண்ட் செய்யப்பட்ட நைந்து போன ஒரு பைபிள் இருந்ததை ஏதோ ஒரு வித ஆச்சர்யத்தில் பார்த்ததை நினைவு கூர்ந்தார். உள் அட்டைப்பக்கத்துத் தனித்தாளில் கையால் எழுதப்பட்ட பல பெயர்களையும் தேதிகளையும் கண்ணுற்றிருக்கிறார். நில்சன்களின் திரியும் வரலாறாக வீட்டில் இருந்த ஒரே புத்தகம் அதுதான். எல்லாப் பொருள்களும் ஒரு நாள் தொலைந்து போவது போல் அதுவும் தொலைந்து போயிற்று. அந்தப் பரந்த பழைய வீடு (இப்போது இல்லை) கலவை பூசப்படாத செங்கல் கட்டிடமாக இருந்தது. வளைந்த நுழைவாயிலின் வழியாக சிவப்பு ஓடுகள் பதிக்கப்பட்ட முற்றத்தையும் அதற்கு அப்பால் இறுகலான மண்ணினால் அமைந்த மற்றொன்றினையும் பார்க்க முடியும். அந்த வீட்டிற்கு உள்ளே சென்றவர்கள் சொற்பமே. நில்சன்கள் தங்களுக்கு உள்ளாகவே வாழ்ந்தார்கள். ஏறத்தாழ வெறுமையான அறைகளில் அவர்கள் கட்டிலின் மீது தூங்கினார்கள். அவர்களுடைய ஆடம்பரமாக இருந்தவை குதிரைகள், வெள்ளிப்பட்டி இடப்பட்ட சவாரி உடைகள், சிறிய நீளமுள்ள குறுங்கத்திகள், சனிக்கிழமை இரவுகளில் பகட்டாக உடையணிதல் ஆகியவை. இந்த சமயத்தில் அவர்கள் பணத்தைத் தாராளமாகச் செலவழித்து குடிகாரத் தகராறுகளில் பங்கேற்றார்கள். எனக்குத் தெரியும் அவர்கள் இருவருமே உயரமானவர்கள் என்று. இந்த அர்ஜன்டீனிய சகோதரர்களின் ரத்தத்தில் அவர்கள் கேள்விப்பட்டிராத டென்மார்க் அல்லது அயர்லாந்து அம்சம் கலந்திருக்க வேண்டும். இந்த சிவப்புத் தலையர்களைக் கண்டு சுற்று வட்டாரத்தில் இருந்தவர்கள் அச்சப்பட்டார்கள். இருவரில் ஒருவன் தன்னுடைய எதிரியைத் தீர்த்துக் கட்டியிருக்கிறான் என்பது சாத்தியம்தான். ஒரு முறை தோளோடு தோளிணைந்து போலீசோடு மோதினார்கள். யுவான் இபராவுடன் இளையவன் மோதினான் என்றும் அதை ஒன்றும் மோசமாகச் செய்துவிடவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அவர்கள் மாடுமேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டவர்களாகவும், குதிரைத் திருடர்களாகவும், சூதாட்டத்தினை தொழிலாகச் செய்பவர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய கஞ்சத்தனம் பிரசித்தமானது. குடியும் சீட்டாட்டமும் மட்டுமே அவர்களை செலவாளிகளாக ஆக்கியது. அவர்களுடைய சொந்தக் காரர்கள் யார் என்பது பற்றியோ, அவர்களின் ஆதியாகமம் பற்றியோ எதுவுமே தெரியவில்லை. அவர்களுக்கு ஒரு வண்டியும், மாடுகளும் சொந்தமாக இருந்தன.

கோஸ்டா பிரேவா பிரதேசத்திற்குக் கிடைத்த மோசமான பெயருக்குக் காரணமாக இருந்த மற்ற அடியாட்களை விட அவர்களின் வெளித்தோற்றம் வித்தியாசமாக இருந்தது. இதுவும், நமக்குத் தெரியாத பலவும், அவர்களுக்கு இடையே இருந்த நெருக்கமான பிணைப்புகளை புரிந்து கொள்ள உதவும். அவர்களில் ஒருவரைப் பகைத்துக் கொண்டாலும் இரண்டு எதிரிகளைச் சந்திக்க வேண்டி வரும்.

பெண்களுடன் பொழுதுபோக்குவதை நில்சன்கள் விரும்பினர். ஆனால் அந்தநாள் வரை அவர்களுடைய காமத்துவ சாகசங்கள் இருளடைந்த வழிவெளிகளிலும், விபச்சார விடுதிகளிலுமே நடத்தப்பட்டன. ஆகவே ஜுலியான பர்கோஸ் என்பவளை தன்னுடன் வாழ்வதற்கு கிறிஸ்டியன் கூட்டி வந்தபோது அதைப் பற்றிய பேச்சு நிற்கவேயில்லை. ஒத்துக்கொள்ளும்படி, இந்த வகையில் அவனுக்கு ஒரு வேலைக்காரி கிடைத்தாள். தன்னுடைய பணத்தையெல்லாம் சுரண்டி அவளுக்கு மிக மட்டரகமான நகைகள் வாங்குவதில் ஈடுபட்டான் என்பதும் விருந்துகளுக்கு அவளை அழைத்துச் சென்று பகட்டாகக் காட்டினான் என்பதும் உண்மை.

அந்த விருந்துகள் குடிசைகளில் நடத்தப்பட்டன. அங்கே விஷயங்களை மறைமுகமாகத் தெரிவிக்கக்கூடிய நடன அசைவுகள் கறாராகத் தடை செய்யப்பட்டிருந்தன. மேலும் நடன ஜோடிகள் அவர்களுக்கிடையே ஆறு அங்குல வெளிச்ச இடைவெளி தெரியும்படி ஆடினார்கள். ஜூலியானா கறுப்பான பெண். அவளுக்கு மாறு கண்கள் இருந்தன. எவர் ஒருவர் அவளைப் பார்த்தாலும் அவள் புன்முறுவல் செய்து விடுவாள். சலிப்படையச் செய்யும் வேலையும் புறக்கணிப்பும் பெண்களை வீணடித்து விடக் கூடிய ஒரு ஏழ்மையான பகுதியில் அவள் பார்ப்பதற்கு மோசமாக இருக்கவில்லை.

ஆரம்பத்தில் எடுவர்டோ அவர்களுடன் சேர்ந்தே பல இடங்களுக்குச் சென்றான். பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் அரெசியசின் வடக்குப் பகுதிக்கு வியாபாரத்திற்கோ அன்றி வேறெதற்கோ பயணம் செய்தான். வீட்டுக்குத் திரும்புகையில் வழியில் அவன் கூட்டிக்கொண்ட பெண் ஒருத்தியை அழைத்து வந்தான். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவளைத் துரத்தி விட்டான். இன்னும் கோபம் மிகுந்த மௌனத்தில் ஆழ்ந்து போனான். கிறிஸ்டியனின் கிழத்தி மீது அவன் காதல் வயப்பட்டு விட்டான். அவன் அதை அறிந்து கொள்ளும் முன்பே அறிந்து வைத்திருந்த அந்தப் பிரதேசத்து ஜனங்கள் இரு சகோதரர்களுக்கு இடையில் பகையின் ஆரம்பத்தை மிக சந்தோஷத்துடன் எதிர்நோக்கி இருந்தனர்.

ஒரு நாள் இரவு தாமதமாக வீடு திரும்பியபொழுது கிறிஸ்டியனுடைய பெரிய பழுப்பும் சிவப்பும் கலந்த நிறமுடைய குதிரை, தயாராக,  அவிழ்க்கும் கழியில் கட்டப்பட்டிருந்தது. உள்ளே முற்றத் திற்குள் தன் உடைகளிலேயே சிறந்தவற்றை உடுத்தியிருந்த கிறிஸ்டியன் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். “நான் ஃபரியாசின் வீட்டுக்குச் செல்கிறேன்; அங்கே ஒரு விருந்து கொடுக்கிறார்கள். ஜூலியானா இங்கே உன்னுடன் தங்குகிறாள்; உனக்கு வேண்டுமானால் அவளைப் பயன்படுத்திக் கொள்.”

அவனுடைய தொனி பாதி கட்டளை இடுவதாகவும் பாதி நட்பு தொனியுடனும் இருந்தது. எடுவர்டோ அவனை முறைத்தபடி என்ன சொல்வதென்று தெரியாமல் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தான். கிறிஸ்டியன் எழுந்தான். தன் தம்பியிடம் மட்டும் விடை பெற்றுக்கொண்டான். ஜூலியானாவிடம் அல்ல; அவள் ஒரு பொருள் என்ற அளவில்தான் இருந்தாள். தன் குதிரை மீதேறி சாவதானமாக சாதாரண வேகத்தில் கிளம்பிச் சென்றான்.

அந்த இரவிலிருந்து அவர்கள் இருவரும் அவளைப் பகிர்ந்து கொண்டார்கள். கோஸ்டா பிரேவோவின் கௌரவத்தையே கூட சீரழித்த இந்த பங்காளித்தன்மையின் விரிவான தகவல்கள் பற்றி எவருக்குமே தெரியாது. இந்த ஏற்பாடு சில வாரங்களுக்குச் சரியாக இருந்தது. ஆனால் நீடித்திருக்கவில்லை. சகோதரர்கள் தங்களுக்குள்ளாக அவள் பெயரைக் குறிப்பிடவே இல்லை. அவளைக் கூப்பிடுவதற்குக் கூட. ஆனால் முரண்பாடு கொள்வதற்கான காரணங்களைக் கண்டு பிடித்தபடியும் தேடியபடியும் இருந்தார்கள். ஏதோ ஒரு தோல் விற்பனை பற்றி விவாதம் செய்தார்கள். ஆனால் அவர்கள் சண்டை போட்டுக் கொண்டது வேறு எதுவோ பற்றி. கிறிஸ்டியன் குரலை உயர்த்திக் கத்தத் தொடங்கினான். எடுவர்டோவோ மௌனமாய் இருந்தான். அவர்களை அறியாமலேயே அவர்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி அடியாட்கள் நிறைந்த சுற்றுப்புறங்களில் பெண்ணாகப்பட்டவள் ஒரு மனிதனுக்கு காமம் என்பதற்கும் உடைமை என்பதற்கும் அப்பாற்பட்டு ஒரு பொருட்டாகிறாள் என எவரிடமும் எவரும்-ஏன் தனக்குத்தானே கூட என்றுமே ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் சகோதரர்கள் இருவரும் காதல்வயப்பட்டு விட்டனர். இது ஏதோ வகையில் அவர்களை அவமான உணர்வு கொள்ளச் செய்தது.

ஒரு மதியம் லோமாஸ் பகுதியின் சதுக்கத்தில் எடுவர்டோ யுவான் இபராவைச் சந்திக்க நேர்ந்தது. அவன் எடுவர்டோவுக்கு கிடைத்த அழகியைப் பற்றி பாராட்டிப் பேசினான். அப்பொழுது தான் என்று நம்புகிறேன் அவன் எதிராளிக்குக் கொடுத்தான். எவருமே இனி அவன் முகத்துக்கெதிரில் கிறிஸ்டியனைக் கிண்டல் பேசமுடியாது.

ஒரு வித விலங்கின் பணிதலுடன் இரண்டு ஆண்களின் தேவையையும் அவள் பூர்த்தி செய்தாள். ஆனால் இளையவனுக்கென்று அவள் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட தெரிவினை அவளால் மறைத்து வைக்க முடியவில்லை. அவன் அவளைப் பகிர்ந்து கொள்வதற்கு மறுக்கவுமில்லை; முன்மொழியவுமில்லை.

ஒரு நாள் ஜூலியானாவை அழைத்து முதல் முற்றத்தில் இரண்டு நாற்காலிகளைப் போடச் சொல்லி கட்டளையிட்டனர். அவர்களுக்கிடையே பேசித் தீர்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்ததால் கொஞ்ச நேரத்திற்கு அங்கே தலை காட்டக்கூடாது என்றார்கள். ஒரு நீண்ட அமர்வினை அவர்களுக்கிடையே எதிர்பார்த்த அவள் தூங்குவதற்காக உடலைச் சரித்தாள். அவளுடைய அம்மா அவளுக்கு விட்டுச்சென்ற சிறிய சிலுவை, கண்ணாடி ஜெபமாலை உட்பட எல்லாப் பொருள்களையும் ஒரு சாக்கு மூட்டையில் கட்டச் சொன்னார்கள். எந்தவிதமான விளக்கமும் சொல்லாமல் அவளைத் தூக்கி மாட்டு வண்டியில் உட்கார வைத்து ஒரு நீண்ட , களைப்படையச் செய்யக்கூடிய மௌனமான பயணத்தைத் தொடங்கினார்கள். மழை பெய்திருந்தது. சாலைகள் சகதி மண்ணால் நிரம்பி இருந்தன. மோரானை அடையும் பொழுது ஏறத்தாழ விடியற்காலை ஆகிவிட்டிருந்தது. அங்கே விபச்சார விடுதி நடத்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அவளை விற்றார்கள். வியாபாரம் குறித்த விஷயங்கள் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தன. கிறிஸ்டியன் பணத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர் தன் தம்பியுடன் அதைப் பிரித்துக் கொண்டான்.

துர்தேராவுக்குத் திரும்பி வந்து, அதுவரை அந்தப் ராட்ஷசத்தனமான காதலின் வலையில் சிக்கிக்கொண்டிருந்தவர்கள் (இதுவும் கூட ஒருவிதமான பழக்கம்தான்) ஆண்களுக்கு மத்தியில் ஆண்களாக வாழும் வாழ்க்கையைத் தொடங்க முயன்றார்கள். சனிக்கிழமை முழுவதும் நில்லாமல் தொடர்ந்த குடியாட்டத்திற்கும் சீட்டாட்டத்திற்கும் கோழிச்சண்டைக்கும் மீண்டும் திரும்பினார்கள். சில நேரம் தாங்கள் காப்பாற்றப்பட்டு விட்டோம் என்று உணர்ந்தார்கள். ஆனால் அடிக்கடியும் ஒவ்வொருவரும் தங்கள் வழியில் கணக்கிலடங்காத இல்லாமைகளில் ஆழ்ந்து போனார்கள். அந்த வருடம் முடிவதற்குக் கொஞ்சம் முன்னால் இளையவன் தனக்கு நகரத்தில் வேலை இருக்கிறது என்று சொன்னான். உடனடியாக கிறிஸ்டியன் மோரானுக்குக் கிளம்பிச் சென்றான். விபச்சார விடுதியில் குதிரைகள் கட்டுமிடத்தில் எடுவர்டோவின் குதிரையை அடையாளம் கண்டுகொண்டான். அங்கே அவனுடைய முறைக்காகக் காத்திருந்தான் அவன் தம்பி. கிறிஸ்டியன் அவனிடம் இப்படிச் சொன்னதாகக் கூறப்படுகிறது: “இதே மாதிரி நாம் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் குதிரைகளை ஓய்த்து விடுவோம். அவளை நமக்கு அருகிலே வைத்துக் கொண்டால்தான் நமக்கு நல்லது”.

அவன் விடுதியின் சொந்தக்காரியிடம் பேசினான். அவனுடைய பணம் வைத்திருக்கும் பெல்ட்டிலிருந்து கைநிறைய காசுகளைக் கொடுத்து விட்டு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றார்கள். ஜூலியானா கிறிஸ்டியனின் குதிரையில் சவாரி செய்தாள். அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்க விரும்பாத எடுவர்டோ முள்சக்கரம் பதித்த தன் காலணியை அழுத்தி குதிரையில் வேகமாகப் பறந்தான்.

ஏற்கனவே சொல்லப்பட்ட அங்கே திரும்பிச் சென்றார்கள். அவர்களின் தீர்வு தோல்வியில் முடிந்தது. ஏன் எனில் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றத் தொடங்கினார்கள். கெய்ன் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பினும், நில்சன்களுக்கிடையே இருந்த பாசம் மகத்தானது-யாருக்குத் தெரியும் எப்படிப்பட்ட ஆபத்துக்களை எல்லாம் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்து சந்தித்தார்கள் என்று? அவர்களுடைய கோபத்தை மற்றவர்கள் மீது காட்ட விரும்பினார்கள். அந்நியர்கள் மீதும், நாய்கள் மீதும், அவர்களுக்கிடையே பிளவினை வளர்த்த ஜுலியானா மீதும்.

மார்ச் மாதம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தாலும் வெப்பம் குறைவதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை (ஞாயிற்றுக் கிழமை ஜனங்கள் சீக்கிரமே தூங்கப் போய்விடுவார்கள்) சலூனிலிருந்து வீட்டுக்கு வரும்போது கிறிஸ்டியன் வண்டியில் எருதுகளைப் பூட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான். கிறிஸ்டியன் அவனிடம் சொன்னான். : “வா நாம் பர்டோவின் வீட்டில் சில தோல்களைக் கொண்டு போய் போட வேண்டும். நான் ஏற்கனவே அவற்றை வண்டியில் ஏற்றிவிட்டேன். இரவின் குளிர்ந்த காற்றினை நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.”

பர்டோவின் கிடங்கு தெற்கில் தொலைவில் இருந்தது என்று நான் நம்புகிறேன். கால்நடைகளின் பழைய அடிச்சுவட்டுப் பாதை வழியாக ஒரு சாலையில் திரும்பினார்கள். அப்பொழுதுதான் பற்ற வைத்திருந்த சுருட்டினைத் தூக்கி எறிந்து விட்டு சீராகச் சொன்னான் கிறிஸ்டியன், “நாம் துரிதமாக ஆவோம் சகோதரா. கொஞ்ச நேரத்தில் பிணந்தின்னிக்கழுகுகள் வேலையை ஆரம்பித்து விடும். இன்று மதியம் அவளைக் கொன்றேன். அவளுடைய மலிவான மணிகளுடன் அவள் இங்கே இருக்கட்டும். அவள் நமக்கு எந்த வித கஷ்டத்தையும் கொடுக்க மாட்டாள்.”

ஒருவர் மீது ஒருவர் கைகளை வீசிப் போட்டுக் கொண்ட அவர்கள் அழுகையின் விளிம்பில் இருந்தனர். கொடூரமான வகையில் அவர்கள் தியாகம் செய்த அந்தப் பெண், அவளை மறக்க வேண்டிய பொதுவான தேவை,’என்ற இந்த கூடுதலான பந்தம் அவர்களைப் பிணைத்தது.

Translated by Normon Thomas Di Giovanni.