My poetry-Brammarajan/நானும் என் கவிதையும்-பிரம்மராஜன்

My poetry-Brammarajan

நானும் என் கவிதையும்


பிரம்மராஜன்

நானும் என் கவிதையும் என்னும் தலைப்பே தனிமனித சுதந்திரத்திலான தலையீடாகத் தோன்றுகிறது. கவிதை எழுதுதல் என்பது மிகத் தீவிரமான தனி மனிதச் செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது. அது எப்படி நிகழ்கிறது என்பதை எல்லோருடனும் பகிர்ந்துகொள்வது  ஒருவரது மிக அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு இணையான ஒன்று. ஒரு கவிதையின் உருவாக்க மனநிலையை நினைவுபடுத்தி மீட்டுச்சொல்வது அதன் நிஜமான உருவாக்க மனநிலைக்குச் செல்வது ஆகாது. உத்தேசமாக அதன் மிக அருகில் செல்வதாகத்தான் அச்செயல்பாடு இருக்க முடியும். நினைவுகொள்ளப்படும் எந்த  விஷயமும் அதன் காலத்தையும் இடத்தையும் கடந்து ஒரு மனோ வெளியில் வியாபகம் கொண்டுவிடுகிறது. இன்னொரு விதமாகவும் இந்தத் தலைப்பிலான விஷயங்களை அணுகலாம்.   புறச்சூழல்கள் காலம் மனத்தில் ஏற்படுத்திக் கொடுத்ததற்கு இணையான வற்றுக்குச் சற்றே குறைவான முக்கியத்துவம் கொண்டவையே. வெறும் புறச்சூழல்களின் அழுத்தத்தினால்கூட ஒருவரால் ஒரு கவிதையை எழுத முடியக்கூடியதாக இருக்கலாம். இப்படிப்பட்ட கவிதைகள்தான் பெரும்பான்மையான கவிதைகள். அந்தப் புறச்சூழல் மனத்தில் ஏற்படுத்தும் பரிமாணங்களையும் இயக்கங்களையும் சிலர் கவிதையாக ஆக்குகின்றனர். இரண்டாவதாகச் சொல்லப்பட்ட கவிதை உருவாக்க முறையில் கவிதை உருவான தடங்கள் கவிஞனாலேயே திரும்ப மீட்டுக்கொள்ள முடியாதபடிக்கு அழிந்துபோய்விடும் சாத்தியம் இருக்கிறது. சில சமயம் கவிஞன் கவிதையின் உருவாக்கத் தடயங்களைக் கவிதையில் விட்டுச் செல்லக்கூடும். சில கவிஞர்கள் அந்தத் தடயங்களை முற்றிலுமாகத் துடைத்தழித்துவிடுகிறார்கள். இந்த மாதிரிக் கவிதைகளில் வாசகனுக்கு எந்தப் பிடிப்பும் கிடைக்காது. மேலும் நூறு சதவீதம் யதார்த்த வாழ்க்கையுடன் சமப்படுத்திப் பார்ப்பது கவிதைக்குப் பொருந்தாது. புனைகதைக்கு இது அவசியமான ஒன்று. புறச் சூழல்களில் தூண்டுதல் இன்றி ஒரு வாக்கியம் அல்லது சில வார்த்தைகள் அல்லது ஒற்றைச் சொல் கவிஞனை எழுதத் தூண்டிக்கொண்டிருக்கும். இது மன நோயாளிகளிடம் காணப்படும் ஒரு நோய்க்கூறு என்றும்கூடச் சொல்கிறார்கள். ஆனால் கவிஞன் மனநோயாளியைவிட அதிகபட்ச ஈகோ சக்தி உள்ளவன். எனவே தன்னிச்சையாகத் தோன்றி ஒலிக்கும் இந்த அசரீரி போன்ற வார்த்தைகள் வகுத்த வழியிலிருந்து கவிதையின்  தொடக்கத்தைத் தன் கட்டுமானத்திற்குள் கொண்டுவந்துவிடுகிறான் கவிஞன்.

ஒரு முழுக் கவிதையுமே மனத்தில் எழுதப்பட்ட பிறகு காகிதத்திற்கு அதை மாற்றும் சந்தர்ப்பங்களும் உண்டு. அல்லது ஒரு நல்ல வரி உருவான தெம்பில் எழுதத் தொடங்கி மற்ற வரிகள் தாமாக வந்து அமைந்துவிடுவதும் உண்டு. அந்த நல்ல வரி தனியாக நின்றுபோய்விட, கவிதையாகாமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. சில சமயம் அந்த ஒற்றை வரியைக்கூடப் பிடித்துவைக்க முடியாமல் போய்விடும் நிலைமையும் ஏற்படலாம். ஒரு காட்சியிலிருந்து தூண்டப்பட்ட முழுக்க முழுக்க மொழித்தளத்தில் இயங்கும் கவிதைகளும் கிடைத்துவிடும் சாத்தியப்பாடுகளும் உண்டு. படிமமோ காட்சியோ இல்லாத முற்றான மொழி ரீதியான கிளைத்தல்களும் சில சமயம் வாய்க்கின்றன. இத்தகைய மொழி ரீதியான தற்பிரவாகமான கவிதைகளையும் வாசகன் அடைவது சிரமம். முழுப் படிம வெளிப்பாட்டினைப் புரிந்துகொள்வது அதிக சிரமமாகத் தெரியவில்லை. ஆனால் மொழி மனத்தில் ஏற்படுத்தும் ஒலிச்சலனங்களையும் அந்த ஒலிச் சலனங்களினூடே அர்த்தச் சலனங்களும் உண்டாகும்போது மிகவும் அடர்த்திச் செறிவான ஒரு கவிதை கிடைக்கிறது. எனினும் இது நினைத்தபோதெல்லாம் மண்டையின் கைக்கெட்டாது, மனத்தின் பிடிக்கும் எட்டாது. சில வார்த்தைகளோ வாக்கியத் தொடர்களோ ஏன் அந்த மாதிரி மனத்தின் கூடங்களில் திடீரெனக் கிளம்பி அலையத் தொடங்குகின்றன என்பதற்கு அறிவியல் ரீதியாகவோ (மனோவியலிலும்கூட) தர்க்கவியல் ரீதியாகவோ காரணங்களைக் கண்டு பிடிக்க முடிவதில்லை. கவிதை எழுதுவது என்பதே ஒரு வினோத மனநிலைதான்.

கவிதை சில சமயம் தானாக எழுதிக்கொள்வதும் உண்டு. இந்த அனுபவத்தை நகுலன் பல ஆண்டுகளுக்கு முன்னரே  தனது நாவலில் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது நனவிலி மனத்தின் ஆளுமையிலிருந்து புறப்படும் ஒரு கவிதை கவிஞனை ஸ்தூலக் கருவியாக வைத்து எழுதிக்கொண்டு தன் பிறப்பை  நமது உலகிற்குள் பிறப்பித்துக்கொண்டு விடுகிறது. யதார்த்தவாதத்தில் இதற்கு மாற்று மருந்தில்லை. யதார்த்தவாதக் கவிதை எழுதுபவர்களும் அவற்றைச் சிலாகிப்பவர்களாலும் கனவு ஆட்சி செலுத்தும் இந்தக் குறிப்பிட்ட வகையான  கவிதைகளைப் பாராட்டி ரசிக்க முடியாது.

என்னைப் பொருத்தவரை ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதைப் படிமத்திலோ சாதாரண மொழியிலோ வெவ்வேறு மாதிரி உரைநடையில் சாத்தியமில்லாத வகையில் சொல்லிப் பார்ப்பதல்ல. ஒரு தனிமனித அனுபவத்தை இந்தப் பிரபஞ்சத்தின் பல இயங்கு விசைகளுடன் ஒரே சமயத்தில் செயல்படுமாறு இணைத்துவிடுதல் கவிதை பற்றிய என்னுடைய  தனிப்பட்ட அனுபவமாக இருக்கிறது. கவிதை விவரணை செய்யக் கூடாது என்று  சொன்னால் எவரும் நம்மைப் பார்த்து சிரிக்கக் கூடும். ஹோமரில் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் வரை அதைத்தான் செய்தார்கள். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் வாழும் கவிஞன் தன்னுடைய வாழ் உலகினைச் சொல்லும்போது அது அவன் மனம் சிதறுண்ட தன்மையுடன்தான் விவரிப்புக்கு உள்ளாகிறது. இன்னும் நாம் இயற்கையைப் பற்றித் தொடர் காட்சிகளை எழுதுவது சாத்தியமில்லாமல் இருக்கிறது. அழகு இன்றைக்குச் சிரிக்க முடியாத சூழ்நிலையில் (அதாவது பழைய சம்பிரதாயமான யதார்த்தபாணியில்)இருக்கிறது. இன்று  அழகின் சிரிப்பு கோரமாக இருக்கிறது. அந்தக் கோரத்தை ஒதுக்கிவிடாமல் பதிவு செய்வதே நேர்மையான கவிதை.

கவிதை ஒரு கருவியாகப் பயன்பட வேண்டும் என்று சொல்பவர்களை நான் சமீபத்தில்கூடச் சந்திக்க நேரிட்டது. கவிதையின் பயன்பாட்டு மதிப்பு மார்க்சீய ரீதியில் அணுக முடியாத ஒன்று. கம்யூனிசம் தோற்ற பிறகும் – சோஷலிச யதார்த்தவாதம் தோற்ற பிறகும்- ஜார்ஜ் லூகாக்ஸூக்குப் பிறகும் ஹிட்லர் இறந்த பிறகும் நாஜி வதை முகாம்களுக்குப்    பிறகும் ஸ்டாலினின் களையெடுப்புகளுக்குப் பிறகும் கவிதை வாழ்ந்துகொண்டு வருகிறது. கவிதையின் லட்ஷணம் என்று நாம் சொல்ல முடிவதெல்லாம் முதலில் அது கவிதையாக ஆகும் தகுதியுடன் அந்தக் கவிஞனிடத்திலிருந்து வெளிவந்திருக் கிறதா என்பதைத்தான். ஒருவன் உரைநடைக்கு எதிராக எடுத்து ஒரு பக்கத்தில் அடுக்கும் வரிகள் உரைநடைக்கு நேர்மாறான சொல் சிக்கனத்தைக் கையாளும் கவிதையாக வந்திருக்கிறாதா எனப் பார்க்க வேண்டும். அடிப்படையில் ஒரு கவிதையாக மாறுவதற்குத் தகுதியற்ற ஒரு வஸ்து, கருவியாக ஆகும் தகுதியையும் இழந்து மொண்ணையான பொருளாகவே ஆகிறது. கவிதையாகாமல் தோற்றுப்போவது என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம். அதனால் தீவிரக் கவிதைக்கும் கவிதை வாசகனுக்கும் எந்தப் பங்கமும் பாதகமும் வந்துவிடாது. குறைந்த கால நோக்கில், பயன்பாட்டுக்காக எழுதப்படும் துண்டு, துணுக்குகளை அடுத்த பத்தாண்டுகளில் பிற கவிதைகளின் தீட்சண்யம் அழித்துவிடும்.

சமீப காலங்களில் விமர்சன உலகில் சொல்லப்படும் கருத்துகளைப் பார்த்தால் எழுத்தாளனுக்கு அல்லது ஆசிரியனுக்கு அவன் எழுதிய பிரதியின் மீதான உரிமையும் சொந்தம் கொண்டாடுதலும் குறைவாகத்தான் இருக்கிறது எனத் தோன்றுகிறது. மேலும் கவிஞன் என்ன நினைத்து எழுதினானோ அதே மாதிரி ஒரு கவிதையைக் கவிஞனாலேயே வியாக்கியானம் கொடுக்க முடியாது. ஒவ்வொரு நிகழ் கணத்திலும் நாம் அனைவரும் காலம் வெளி ஆகிய இரண்டுடன் சேர்த்தே மாறிக்கொண்டிருக்கிறோம். கவிஞன் எழுதிய கவிதையை வாசகன் அவனுக்குப் பிடித்த வகையில், அவன் சேகரித்துக்கொண்டிருக்கும் கவித்துவ அனுபவங்கள், பிற கவிதைகளைப் படித்த அனுபவம், பிற நூல்களைப் படித்த அனுபவங்கள் அனுபவத் தொகுதியின் வாயிலாகத் தன்வயப்படுத்திப் பார்க்கிறான். சில சொற்கள் வாசகனுக்கு இடறலாக இருக்கலாம், கவிஞன் குறிப்பிடும் ஒரு மலரைப் பார்த்திருக்க வாய்ப்பில்லாதிருக்கலாம், அல்லது வாசகனுக்குத் தெரிந்த மலரையே தாவரவியல் பெயர் சொல்லிக் கவிஞன் அழைக்கலாம். ஒரு மறைமுகக் குறிப்பீட்டை அறிய வாசகன் ஓர் இலக்கியக் களஞ்சியத்தை எடுத்துப் பார்க்க வேண்டி வரலாம். இதற்கெல்லாம் வாசகன் தயாராகத்தான் இருக்க வேண்டும். கவிதை ஒரு விசேஷமான அறிவுத்துறை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த விசேஷ அறிவுத்துறைக்குள் நுழையும் முன் சில முன் தயாரிப்புகளும் குறைந்தபட்ச பொறுமையும் அவசியம். கவிதை படிப்பது செய்தித்தாள் படிப்பதைவிட ஒரு மேன்மையான செயல்பாடு என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வோம். ஆனால் செய்தித்தாள் படித்தவுடன் புரிகிற மாதிரி கவிதை புரியவில்லை என்று சொல்பவர்களே அதிகம். மேலும் கவிதை எப்போது கருவியாக ஆக  முடியும் எனக் குறிப்பிட்டோம். ஒரு கவிதை கவிதையான பிறகு அது கருவியாகவும் ஆக முடியும். ஒவ்வொரு கவிதைக்கும் அதற்கான ஒரு வாழ்வு இருக்கிறது. அதைத் தற்காக்கத் தாய்க் கோழியைப் போலக் கவிஞன் அடிக்கடி பறந்து வரவேண்டிய அவசியம் இல்லை. ஒரு நல்ல கவிதையின் தற்காப்பு அதற்குள்ளாகவே இருக்கிறது. ஒரு நல்ல கவிதை காலத்திற்குப் பதில் சொல்லும், எதேச்சதிகாரத்தை முறியடிக்கும், குறுகிய கால நோக்கங்கள் கொண்டவற்றி லிருந்து தனித்துத் தெரியும். வரலாறே அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களால் எழுதப்படுகிறது. எனவே எந்தத் ‘தில்லுமுல்லு’ வரலாற்றினாலும் நிஜமான கவிதையை எரிபொருள் தீர்ந்துபோன ராக்கெட்டின் பகுதியைப் போலக் கழற்றிவிட்டுவிட முடியாது.

Advertisements