கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்-பனிப்பாதையில் உனது ரத்தச் சுவடு/Marquez-The Trail of Your Blood in the Snow

2கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

பனிப்பாதையில் உனது ரத்தச் சுவடு

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ரெங்கநாயகி

பகல் பொழுது சாய்ந்து இரவு தொடங்கி விட்டிருந்த சமயம், அவர்கள் அந்த நகர எல்லையை அடைந்த போது, திருமண மோதிரம் அணிந்திருந்த அவளது விரலிலிருந்து இன்னும் இரத்தம் கசிந்து கொண்டிருப்பதை நேநா டாகொண்ட்டே உணர்ந்தாள். முரட்டுத் தோலால் ஆன தனது மும்முனைத் தொப்பியை கடினமான கம்பளிப் போர்வை மறைத்தபடி இருக்க பிரனீஸிலிருந்து அடிக்கும் ஆக்ரோஷ காற்றில் தன் பாதங்களை திடமாய் ஊன்றிக் கொள்ளப் போராடிக் கொண்டு, கார்பைட் விளக்கின் வெளிச்சத்தில், அவர்களது அரசாங்க பாஸ்போர்ட்டுகளை பரிசோதித்தார் அந்த சிவில் பாதுகாவல் அதிகாரி. அந்த இரண்டு பாஸ்போர்ட்டுகளும் முழுமையான ஒழுங்கில் இருந்த போதிலும், அந்தப் புகைப் படங்கள் அவர்களை ஒத்திருக்கின்றனவா என்று நிச்சம் செய்து கொள்ள அந்த விளக்கினை உயரே தூக்கிப் பிடித்தார். நேநா டாகொண்டே கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் போல இருந்தாள், மகிழ்ச்சியான ஒரு பறவையின் கண்களுடன், சோகம் கப்பிய ஜனவரி மாதத்தின் மங்கிய ஒளியில் அவளது வெல்லப்பாகு போன்ற சருமம் இன்னும் பளபளப்பாக இருந்தது. அந்த எல்லையோரப் படையின் முழு வருடச் சம்பளத்தையும் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத மின்க்கின் மென் தோலால் ஆன கோட் கன்னம் வரை அவளை போர்த்தியிருந்தது. அந்தக் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவள் கணவன், ஓராண்டு இளையவனாக அதற்குரிய அழகுடன், ஒரு பேஸ்பால் தொப்பியுடன், வண்ணக்கோடுகளால் கட்டங்கள் இழைத்த கோட் அணிந்திருந்தான். அவனது மனைவி போலன்றி அவன் உயரமாக, உடல் வலிமையுடனும், அச்சமூட்டும் அடியாள் ஒருவனின் இரும்பு போன்ற இறுகிய தாடையும் கொண்டிருந்தான். ஆனால் எது அவர்கள் இருவரின் அந்தஸ்த்தை சிறப்பாக வெளிப்படுத்தியது என்றால், உயிருள்ள விலங்கு போல மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதான உட்பகுதி அமைந்த அந்த வெள்ளி நிறக் கார் வளம் குறைந்த எல்லைப் பகுதி வழியே என்றுமே காண முடியாத ஒன்று அது. அந்தப் பின்புற இருக்கை மிகப் புதிய பெட்டிகளாலும், மேலும் இன்னும் திறக்கப்பட்டிராத பல பரிசுப் பொருள் அடங்கிய பெட்டிகளாலும் நிறைந்து வழிந்தது. அவளின் அமைதி குலைத்த கடற்கரை முரடனின் மென்மையான காதலுக்கு அவள் அடிபணியும் முன்னர், நேநா டாகொண்டேவின் வாழ்வில் அடக்க இயலாத, மற்ற அனைத்தையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்த, அந்த உயர்ஸ்வர சாக்ஸபோனையும் அந்தக் கார் தாங்கியிருந்தது.

முத்திரையிட்ட பாஸ்போர்ட்டுகளை அந்த அதிகாரி திரும்பக் கொடுத்தவுடன், பில்லி சான்ஷெஸ் அவனது மனைவியின் விரலைக் குணப்படுத்த மருந்துக்கடை ஏதாவது தென்படுமா என்று அவரிடம் கேட்டான். அதற்கு அந்த அதிகாரி பிரெஞ்சுப் பகுதியான ‘ஹென்டே’யில்தான் அவர்கள் விசாரிக்க இயலும் என்று காற்றினூடே கத்தியபடி கூறினார். ஆனால் ஹென்டேயில் இருந்த பாதுகாவலர்கள், வெதுவெதுப்பான, நன்றாக ஒளியூட்டப்பட்டிருந்த அவர்களுக்கான பிரத்யேகமான சதுரமான கண்ணாடி எல்லைக் காவல் அறைக்குள், மேஜையில் அமர்ந்தபடி, கையில்லாச் சட்டையுடன் சீட்டு விளையாடிக் கொண்டு, பெரிய கண்ணாடிக் குவளைகளில் இருந்த மதுவில் ரொட்டித் துண்டுகளை முக்கி எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அப்போது பார்க்க வேண்டியிருந்ததெல்லாம், ஃபிரான்சுக்குள் செல்ல கையசைத்து அனுப்ப வேண்டியிருந்த அந்தக் காரை, அதன் அளவினை, தயாரித்த கம்பெனியை மாத்திரமே. பில்லி சான்ஷெஸ் ஹார்னை பலமுறை அழுத்தினான், ஆனால் அவன் அவர்களை அழைக்கிறான் என்று அந்த காவலர்கள் புரிந்து கொள்ளவில்லை. மேலும், அவர்களில் ஒருவன் ஜன்னலைத் திறந்து, காற்றைவிட அதிக சீற்றத்துடன் அலறினான்

“Merde! Allez-vouz-en!”

காதுகள் வரை மேல்கோட்டால் போர்த்தப்பட்டிருந்த நேநா டாகொண்டே பிறகு காரை விட்டு வெளியே இறங்கி அந்தக் காவலரிடம் சுத்தமான ஃபிரெஞ்சில் மருந்துக்கடை எங்கே உள்ளது என்று கேட்டாள். அவனது வழக்கம் போல வாய் நிறைய ரொட்டியுடன், அது அவன் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை என்றும், அதுவும் இது போன்ற புயல் நேரத்தில் மிகக்குறைந்த பட்சம் கூட இல்லை என்றும் பதலளித்தான் பிறகு ஜன்னலை மூடினான். ஆனால், பிறகு அவன் சற்று கூடுதல் கவனத்துடன், மின்க்கின் இயற்கையான மினுமினுப்பு மிக்க தோலால் முழுவதும் போர்த்தப்பட்டிருந்த அந்தப் பெண்ணை நோக்கினான் அந்த பயங்கர இரவில் காயம் பட்ட தன் விரலை சப்பிக் கொண்டிருந்தவளை ஏதோ ஒரு மந்திரக் காட்சியாக அவன் நினைத்திருக்க வேண்டும் காரணம் அவனுடைய மனநிலை உடனடியாக மாறியது. மிகவும் அண்மையிலிருக்கும் நகரம் ‘பியாரிட்ஸ்’ என்றும், ஆனால் அந்த மத்திய குளிர்காலத்தில், ஓநாய்களைப் போல ஊளையிடும் அந்தக் காற்றில், சற்றுத் தொலைவிலுள்ள ‘பேயோன்’ பிரதேசம் செல்லும்வரை, திறந்திருக்கும் ஒரு மருந்துக் கடையையும் அவர்களால் கண்டு பிடிக்க இயலாது என்று விளக்கினான்.

‘‘மிகவும் மோசமான நிலையா?”, என்று கேட்டான்.

‘‘அது ஒன்றுமில்லை,” நேநா டாகொண்டே புன்னகைத்துக் கொண்டே சொன்னாள். நுனியில், ஏறத்தாழ கண்ணுக்குப் புலப்படாத சிறிய ரோஜா முள் கீறலுடனான, வைர மோதிரம் அணிந்திருந்த விரலை அவனிடம் காண்பித்தாள். ‘‘அது வெறும் முள்”.

அவர்கள் ‘பேயோனை’ அடையும் முன்னரே பனிமழை பெய்யத் தொடங்கியது மறுபடியும். ஏழு மணியாகவில்லை எனினும் தெருக்கள் நடமாட்டமின்றி காட்சியளித்தன. புயலின் சீற்றத்தையொட்டி வீடுகள் மூடப்பட்டிருந்தன. பல மூலை முடுக்குகள் சென்று திரும்பிய பிறகும் ஒரு மருந்துக்கடையும் தென்படாது போகவே, அவர்கள் தொடர்ந்து செல்ல முடிவு செய்தனர். இந்த முடிவு பில்லி சான்ஷெஸை சந்தோஷப்படுத்தியது. கார்களுக்கென, அபூர்வமான, திருப்தியுறாத ஒரு ஆவல் கொண்டிருந்தான் அவன், மேலும் அவனுக்கு பல குற்றவுணர்வுகள் கொண்ட ஒரு அப்பா இருந்தார், மேலும் அவனது இஷ்டத்தையெல்லாம் திருப்திப்படுத்த அவரிடம் வசதியிருந்தது திருமணப் பரிசாக அவனுக்கு அளிக்கப்பட்டிருந்த, மேல் பகுதியை மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க பென்ட்லி வகைக் காரை அவன் இதுவரை ஓட்டியிருக்கவில்லை.

ஸ்டீயரிங் பிடிப்பதனால் உண்டான அவனது அதீதப் பேரானந்தத்தின் காரணமாக எவ்வளவு தொலைவு ஓட்டினானோ, அதற்கேற்ப குறைந்த பட்சமே அசதியடைந்தான். அந்த இரவே ‘போர்டோ’வை அடைந்து விட விரும்பினான். ‘ஸ்ப்லென்டிட் ஹோட்டலில்’ மணப் பெண்ணுக்கான தொடர் அறைகளை அவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். மேலும், மாறி மாறி வீசும் பலத்த காற்றும், பனியுடனான ஆகாயமும் அவனைப் பிடித்து நிறுத்திவிட முடியாது. இதற்கு மாறாக, மேட்ரிட்லிருந்து தொடங்கிய அந்த நீண்ட நெடுஞ்சாலையின் கடைசி நீட்சியில்குறிப்பாக ஆலங்கட்டிப் புயல் அடித்துத் தாக்கும், மலை ஆடுகளுக்கு ஏற்ற செங்குத்தான பாறையின் விளிம்புப் பகுதியில்நேநா டாகொண்டே உற்சாகம் தீர்ந்து விட்டிருந்தாள். எனவே பேயோனுக்குப் பிறகு அவள் ஒரு கைக்குட்டையை மோதிர விரலில் சுற்றிக் கொண்டாள் அழுத்தமாக, அமுக்கி, இன்னும் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை நிறுத்திவிட. பிறகு ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினாள். நடு இரவு நெருங்கும் வரை, பனி அடித்து முடிந்திருந்ததையும், சடாரென ஊசி இலைக் காட்டில் காற்று நின்று விட்டதையும், மேய்ச்சல் நிலத்தில் உறைந்த நட்சத்திரங்கள் ஆகாயத்தை நிறைக்கும் சமயத்தை எட்டியதையும் பில்லி சான்ஷெஸ் கவனிக்கவில்லை. ‘போர்டோ’வின் தூங்கி வழியும் விளக்குகளைக் கடந்து விட்டிருந்தான். ஆனால் நெடுஞ்சாலையின் வழியே பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் கலத்தை நிரப்பிக் கொள்ள மட்டும் நிறுத்தினான். மேலும், பாரீஸ் வரை நிறுத்தமின்றி வண்டி ஓட்டுவதற்கான தெம்புடனிருந்தான் அவன் போலவே உணர்ந்தாளா என்று அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை அவன். அவனது பெரிய 25000 பவுண்ட் ஸடெர்லிங் பெறுமானமுள்ள பொம்மையினால் அவன் அவ்வளவு களிப்படைந்திருந்ததால்அவனருகில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவள்இரத்தம் தோய்ந்திருந்த மோதிர விரலின் கட்டு அவளது வளர்பிராயத்துக் கனவுகளை முதல் முறையாக நிச்சயமின்மையின் மின்னல் தீற்றல்கள் துளைக்கஅந்த ஜீவனும் அப்படியே உணர்ந்தாளா என்று அவன் தனக்குத்தானே கேட்டுக் கொள்ளவில்லை.

மூன்று தினங்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் திருமணம் செய்து கொண்டிருந்தனர், பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருந்த, ‘கார்த்தஜீனா த இன்டியாஸ்’ இல்அவன் பெற்றோர்கள் வியப்படையவும், அவளது மதிமயக்கம் நீங்கவும், மற்றும் ஆர்ச் பிஷப்பின் தனிப்பட்ட ஆசிர்வாதத்துடனும். அந்தக் காதலின் உண்மையான அஸ்திவாரத்தையோ அல்லது முன்கூட்டியே கண்டறிந்திராத தோற்றுவாயையோ இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ளவில்லை. அந்தத் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அது துவங்கியிருந்தது, கடலோரத்தில் ஒரு ஞாயிறன்று பில்லி சான்ஷெஸின் குழுவினர் மார்பெல்லா கடற்கரையில் பெண்களின் உடையணியும் அறைகளை புயல் போல தாக்கிய தருணத்தின் போது. நீனா அப்போதுதான் பதினெட்டு வயது நிரம்பியிருந்தாள் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ‘செயின்ட்பிளேய்ஸ்’ என்னுமிடத்தில் ‘ஷேட்டல் லெனி’ பள்ளியிலிருந்து வந்திருந்தாள் நான்கு மொழிகளில் சீர் அழுத்தமற்ற உச்சரிப்புடன் பேசிக் கொண்டும், உயர்ஸ்வர சாக்ஸபோனில் தேர்ச்சி பெற்ற அறிவுடனும் மேலும் இது, அவள் திரும்பி வந்ததிலிருந்து, அந்தக் கடற்கரைக்கு அவளது முதல் ஞாயிறு வருகை. சருமம் தெரிய உடைகள் அனைத்தையும் உரிந்து விட்டிருந்தாள் அவள் பக்கத்து உடைமாற்றும் அறைகளிலிருந்து கடற் கொள்ளையரின் கூக்குரலும் பீதியுற்ற ஜனங்களின் நெருக்கடி சந்தடியும் கேட்கத் தொடங்கிய பொழுது அவளது நீச்சல் உடையை அணியப் போன நேரத்தில், என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லைஅவள் கதவுத் தாழ்ப்பாள் உடைந்து நொறுங்கும் வரை கற்பனைக்கெட்டக்கூடிய மிக அழகான கொள்ளைக்காரன் அவள் முன் நிற்கும் வரை. போலி சிறுத்தைப்புலித் தோலால் ஆன கயிற்று உள்ளாடை ஒன்றைத் தவிர அவன் வேறெதுவும் அணிந்திருக்கவில்லை. மற்றும் அவன் சமுத்திரத்திற்கருகில் வாழ்பவர்களின் சமாதானமான, நெகிழ்தன்மை மிக்க தேகம் கொண்டிருந்தான். வலது மணிக்கட்டில் உலோகத்தாலான ரோமானிய வாட்போர் சண்டியனின் உருவம் பொறித்த காப்பு அணிந்திருந்தான். வலது முஷ்டியைச் சுற்றி ஒரு இரும்புச் சங்கிலியைப் பிணைத்திருந்தான் அதை அவன் ஒரு அபாயகரமான ஆயுதமாகப் பிரயோகப்படுத்தினான். அவன் கழுத்தைச் சுற்றி எந்த புனிதனின் உருவமும் பொறிக்கப்படாத ஒரு பதக்கம் தொங்கியது அவன் இதயத்தின் துரித ஓட்டத்தில் மௌனமாய் அதுவும் துடித்தது. அவர்கள் இருவரும் ஒரே தொடக்கப்பள்ளிக்கு சென்றிருந்தனர், அதே பிறந்தநாள் விருந்துகளில் பல ‘பினாட்டாக்களை’(லத்
ீன் அமெரிக்க திருவிழாக்களில் சிறு பரிசுப் பொருள்கள் மற்றும் இனிப்புகள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட
, மேற்கூரையிலிருந்து தொங்கவிடப்படும் கலங்கள் அவற்றை கோலால் உடைத்து பரிசுகளைப் பெற வேண்டும்) உடைத்திருந்தனர், ஏனெனில், குடியேற்ற நாட்களிலிருந்து அந்த நகரத்தின் தலை எழுத்தை தங்களது இஷ்டம்போல அமைத்துக் கொண்டிருந்த, குறிப்பிட்ட மாகாணத்தைச் சார்ந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தனர் அந்த இருவருமே. ஆனால் அத்தனை வருடங்களாக அவர்கள் பார்த்துக் கொள்ளாததால் ஆரம்பத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நேநா டெகொண்டே அசைவின்றி அவளது அதீதமான நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள எதுவும் செய்யாது, நின்று கொண்டேயிருந்தாள். பிறகு பில்லி சான்ஷெஸ் சிறுபிள்ளைத்தனமான சடங்கை நடத்தினான் தன் சிறுத்தைப்புலித்தோல் உள்ளாடையை கீழிறக்கினான். பிறகு மரியாதைக்குரிய, விரைப்பான அவனது ஆண்மையைக் காட்டினான். அவள் நேராக அதை நோக்கினாள், வியப்புக்கான அறிகுறிகளின்றி.

‘‘இன்னும் பெரிய, விரைப்பானவை நான் பார்த்திருக்கிறேன்” என்றாள் அவள், அவளது பெரும் பீதியை அடக்கிக் கொண்டு. ‘‘ஆகவே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதைப் பற்றி மறுபடியும் யோசி, ஏனெனில் என்னிடம் நீ ஒரு கறுப்பனை விடச் சிறப்பாக இயங்க வேண்டியிருக்கும்”.

உண்மையாய் நேநா டாகொண்டே ஒரு கன்னி மட்டுமின்றி, அந்த நிமிடம் வரை நிர்வாணமாக ஒரு ஆண்மகனையும் பார்த்திருக்கவில்லை. எனினும் அவளது சவால் பயனுள்ளதாயிருந்தது. என்ன செய்ய வேண்டும் என்று பில்லி சான்ஷெஸால் எண்ணமுடிந்ததெல்லாம் அவனது சங்கிலி சுற்றப்பட்டிருந்த முஷ்டியை சுவர் மேல் மோதி, பிறகு கையை முறித்துக் கொண்டதும்தான். மருத்துவமனைக்கு தனது காரில் அவனைக் கூட்டிச் சென்றாள். பிறகு அவனுக்கு காயம் ஆறி உடல் தேறும் காலத்தைப் பொறுத்துக் கொள்ள உதவி செய்தாள். அதன்பின், இறுதியில் எப்படி சரியான முறையில் காதல் செய்வது என்பதை அவர்கள் சேர்ந்தே கற்றுக் கொண்டனர். கடினமான ஜ÷ன் மாத பகல் நேரங்களை நேநா டாகொண்டேவின் புகழ் பெற்ற மூதாதையர் ஆறு தலைமுறையாக எந்த இடத்தில் காலமாகியிருந்தனரோ அந்த வீட்டின் உட்புறமாக இருந்த மாடியில் கழித்தனர். ஹேம்மக்கில் படுத்தவாறு, விட்டு விடுதலைப்படாத மழுங்கடிக்கப்பட்ட உணர்வோடு அவன் அவளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். அவள் சாக்ஸபோனில் பிரபலமான பாடல்கள் இசைத்தாள். அந்த தரைக்கும் கூரைக்குமாக வியாபித்த எண்ணிலடங்கா ஜன்னல்கள் கொண்டதும் மேலும் ‘லா மாங்கா’ மாவட்டத்திலேயே மிகப் பெரியதும், புராதனமானதுமான அந்தக் கட்டிடம் சந்தேகத்திற்கிடமின்றி மிகவும் அசிங்கமானது. ஆனால் எங்கிருந்து நேநா டாகொண்டே இசைத்தாளோ, கட்டம் போட்ட தரை ஓடுகள் பதித்த அந்த மேல் மாடி நான்கு மணி வெய்யிலில் ஒரு பாலைவனச் சோலையாய் இருந்தது மேலும் அது வீட்டோடு சேர்ந்த மாமரம் மற்றும் வாழை மரங்களின் தாராளமான நிழல்களோடு கூடிய முற்றத்தை நோக்கித் திறந்து கொண்டது. அதனடியில் ஒரு பெயரற்ற கல்லறைக்கல்லுடன் ஒரு கல்லறை இருந்தது அந்த வீடு மற்றும் அந்தக் குடும்ப நினைவுகளை விடவும் மிகப் பழமையானதாக. இசைபற்றி எதுவும் அறிந்திராதவர்கள் கூட அப்படிப்பட்ட உன்னதமான ஒரு வீட்டில் அந்த சாக்ஸபோன் கால முரண்மிக்கது என்றே நினைத்தார்கள். ‘‘அது ஒரு கப்பல் போல சத்தமிடுகிறது”, முதன் முறையாக அதை கேட்ட போது நேநா டாகொண்டேவின் பாட்டி கூறினாள். சௌகரியத்தின் பொருட்டு அவளது குட்டைப் பாவாடை தொடை சுற்றி உயர்த்தியபடி தொடைகளை அகற்றிக் கொண்டு இசைக்கு ஒவ்வாத ஒரு காமத்துவ உணர்வுடன் அல்லாது வேறுமுறையில் அதை அவளை வாசிக்கச் செய்ய நேநா டாகொண்டேவின் அம்மா பயனின்றி முயற்சி செய்தாள். ‘‘நீ எந்த இசைக்கருவி வாசிக்கிறாய் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை”, அவள் கூறுவதுண்டு, ‘‘உன் கால்களை அகட்டாமல் நீ வாசிக்கும் வரை.”

ஆனால் நேநா டாகொண்டேவின் அந்தக் கப்பல் பிரிவுபசாரப் பாடல்களும் மற்றும் அந்த காதல் விருந்தும்தான் பில்லி சான்ஷெஸை சுற்றியிருந்த அந்தக் கோபம் மிகுந்த வெளிப்புற ஓட்டினை உடைத்துக் கொண்டு வெளிவர அனுமதித்தது. பெரும் வெற்றியுடன் அவன் தூக்கிப் பிடித்திருந்த படிப்பறிவற்ற காட்டுமிராண்டி என்று பெயருக்கு அடியில்இரண்டு புகழ் பெற்ற குடும்பங்களின் பெயர்களின் சங்கமத்தில் பயந்து போன மென்மையான ஒரு அனாதையைக் கண்டு பிடித்தாள் அவள். கை எலும்புகள் கூடிக் கொண்டு வருகையில் அவளும் பில்லி சான்ஷெஸும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள அவ்வளவு நன்றாகக் கற்றனர். தங்கு தடையின்றி ஏற்பட்ட காதலின் ஓட்டத்தில், ஒரு மழைக்கால பகல் நேரத்தில் அவர்கள் அந்த வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அவள் அவனை அவளது கன்னிப்படுக்கைக்கு இட்டுச் சென்றபோது அவனே கூட ஆச்சரியப்பட்டான். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக, அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற படுக்கையில், சொர்க்கத்தை அவர்களுக்கு முன்பே சென்றடைந்து விட்ட திருப்தியுறாத பாட்டிகள் மற்றும் சிவில் போர்வீரர்களின் மார்பளவு சித்திரங்களின் வியப்பான, ஊன்றிய பார்வைக்கடியில் அவர்கள் களித்துக் கூத்தாடினர்உணர்ச்சியுடனும், நிர்வாணமாயும். வளைகுடாவிலிருந்து வரும் கப்பல்களிலிருந்து வெளியேறி நீரில் மிதந்து செல்லும் கழிவுக் காற்றினைச் சுவாசித்தபடி, அதன் மல துர்நாற்றம், மற்றும் மௌனத்தில் வீட்டு முற்றத்தினின்று வரும் தினப்படி சப்தங்களுடன், சாக்ஸபோன் கேட்டுக் கொண்டு, வாழை மரத்தடி தவளையின் அந்த ஒற்றைச் ஸ்வரம், எவரின் கல்லறை மீதும் வீழ்ந்திடாத அந்த நீர்த்துளி, வாழ்வின் இயல்பான அசைவுகளில் கற்றுக் கொள்ள இதற்கு முன்னர் அவர்கள் பெற்றிடாத சந்தர்ப்பங்கள் என, காதலின் நடுவே, சிறிய இடைவேளைகளில் கூட அவர்கள் ஜன்னல்களை திறந்து வைத்துக் கொண்டு நிர்வாணமாகவே இருந்தனர்.

அவளுடைய பெற்றோர் வீடு திரும்பிய சமயம் நேநா டாகொண்டேவும் பில்லி சான்ஷெஸும் காதலில் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தார்கள் என்றால் இந்த உலகமே வேறு எதற்கும் தேவையான அளவு பெரிதாக இல்லாமல் போயிருந்தது அவர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் காதல் செய்தனர், ஒவ்வொரு முறையும் அதை மறுகண்டுபிடிப்பு செய்ய முயன்றபடி. பில்லி சான்ஷெஸின் தந்தை தன் குற்ற உணர்வுகளை அமைதிப்படுத்த அவனுக்குத் தந்திருந்த அந்த ஸ்போர்ட்ஸ் காரில்தான் முதலில் அவர்கள் போராடினார்கள் பிறகு, கார்கள் அவர்களுக்கு மிகவும் சுலபமாக ஆனவுடன், இரவில், எங்கே விதி அவர்களை முதன் முதலில் ஒன்றிணைத்ததோ அந்த வெறிச்சோடிப் போயிருந்த மார்பெல்லா உடைமாற்றும் அறைக்குள் அவர்கள் செல்வதுண்டு. நவம்பர் மாத களியாட்ட விழாக்களின் போது, மாறு வேட உடையில், ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வரை, பில்லி சான்ஷெஸையும் அவனது ஆயுதச் சங்கிலி கையாளும் குழுவினரையும் பொறுத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருந்த தலைமை தாதிகளின் பாதுகாப்பின் கீழ், பழைய அடிமை மாவட்டமான ஜெஸ்தமனியில் இருந்த வாடகை அறைகளுக்குச் செல்வதுண்டு. அவன் ஒரு கறுப்பனைப்போல இயங்க வேண்டியிருக்கும் என்று அவள் உணர்த்தியதை, அவளது மூர்க்கம் தணிந்த கொள்ளையன் கடைசியாக புரிந்து கொள்ளும் வரை, ஒரு சமயம் சாக்ஸபோன் மீது அவள் வைத்திருந்த வெறிமிகுந்த ஈடுபாடு போலவே, நேநா டாகொண்டே தன்னை ஒரு ரகசியக் காதலுக்குத் தந்திருந்தாள். திறமையுடனும் அதே உற்சாகத்துடனும் அவளுக்கு எப்போதும் அவன் காதலைத் திரும்ப வழங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் திருமணம் முடிந்தவுடன், ஒருவருக்கொருவர் செய்து கொண்ட சபதத்தின்படி அட்லாண்டிக்கைக் கடந்து செல்லும்போது காதல் புரிவதை நிறைவேற்றினார்கள். அந்த விமான பணிப்பெண்கள் உறங்கிய பொழுது விமான கழிப்பறைக்குள் இருவரும் தங்களைத் திணித்துக் கொண்டு, களிப்பை விட சிரிப்பினால் அதிகம் ஆட்கொள்ளப்பட்டனர். அப்பொழுதுôன் அவர்கள் அறிந்தனர் திருமணம் முடிந்து இருபத்து நான்கு மணிநேரம் கழித்து நேநா டாகொண்டே இரண்டு மாதம் கர்ப்பமாகயிருக்கிறாள் என்பதை.

ஆக, அவர்கள் மாட்ரிட் நகரை அடைந்த போது, திகட்டிப் போன காதலர்களாயிருப்பதிலிருந்து வெகு தொலைவிலும், ஆனால் புதுமணத் தம்பதிகள் போல நடந்து கொள்வதற்கான போதுமான உசிதங்களும் கொண்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன், அதிகாரப் படிநிலை நிர்வாக மரபு அதிகாரி ஒருவர் அவளுடைய பெற்றோர் அவளுக்களித்த திருமணப் பரிசான, ஓரங்களில் கறுப்பு நிறத்தில் பளிச்சென்று அலங்கரிக்கப்பட்ட வெண்ணிற மின்க் கோட்டை நேநா டாகொண்டேவிடம் கொடுக்க முதல் வகுப்பு அறைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் காத்துக் கொண்டிருந்த காரின், அடையாளம் குறிக்கப்படாத சாவிகளை பில்லி சான்ஷெஸுக்கு தந்தார். மேலும் அந்தக் குளிர் காலத்தில் ஃபேஷனின் உச்சத்திலிருந்த ‘ஷெர்லிங்’(மயிர் கத்தரிக்கப்பட்ட, ஒரு வருடத்திற்குள்ளான குட்டி ஆட்டின் பதனிடப்பட்ட தோல்) மேல்கோட்டு ஒன்றையும் கொடுத்தார்.

நிர்வாக வரவேற்பறையில் அவர்களது வெளி உறவுத்துறை குழு அவர்களை வரவேற்றது. நேநா டாகொண்டேவுக்காக காத்துக் கொண்டிருந்த அந்த தூதரும் அவரது மனைவியும் இரண்டு குடும்பங்களின் நண்பர்கள் மட்டுமல்லாது, நேநா டாகொண்டே பிறந்தபோது பிரசவம் பார்த்த மருத்துவரும் கூட. அவர் ரோஜாக்கள் நிறைந்த பூங்கொத்துடன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்அவை அவ்வளவு புத்தம் புதியதாயும் ஒளிர்வுமிக்கதாயும் இருந்ததால் பனித்துளிகள் கூட செயற்கையானவையோ என்று தோன்றின. பொய் முத்தங்களுடன் அவர்கள் இருவருக்கும் அவள் வாழ்த்து தெரிவித்து, பிறகு கொஞ்சம் உரிய காலத்தை முந்திவிட்ட மணப்பெண் என்ற அவளது அந்தஸ்த்து பற்றி அசௌகரியமான உணர்வுடன் அந்த ரோஜாக்களை வாங்கிக் கொண்டாள். அவற்றை அவள் எடுத்துக் கொண்ட போது விரல் ஒரு முள்ளின் மேல் பட்டுக் குத்தியது. ஆனால் அந்த அசம்பாவிதத்தை அவள் ஒரு வசீகர சாதுர்யத்துடன் கையாண்டாள்.

‘‘நான் வேண்டுமென்றுதான் அப்படிச் செய்தேன்” அவள் கூறினாள், ‘‘அப்போதுதான் நீங்கள் என் மோதிரத்தைப் பார்ப்பீர்கள்.”

மெய்யாகவே அந்த வெளி உறவுத்துறை குழு முழுவதுமே அந்த மோதிரத்தின் அழகைக் கண்டு வியந்ததுஅது கிட்டத்தட்ட ஒரு வாழ்நாள் வருவாயையே விலையாகக் கொண்டிருக்க வேண்டும்அந்த வைரங்களின் தரம் காரணமாகவன்றி நன்கு பேணப்பட்டிருந்த அதன் புராதனத்தன்மைக்காக. ஆனால் எவருமே அவள் விரலில் ரத்தம் கசியத் தொடங்கியதைக் கவனிக்கவில்லை. அவர்கள் அனைவரும் அந்த புதிய காரின் மேல் தங்கள் கவனத்தை திருப்பினர். அந்த அரசு தூதுவரின் வேடிக்கையான திட்டத்தின்படி, அதை செலோஃபன் காகிதத்தில் சுற்றி, பிறகு அதை ஒரு மிகப் பெரிய தங்க ரிப்பன் கொண்டு கட்டி விட்டிருந்தார். பில்லி சான்ஷெஸ் அவரது புனைவுத் திறனை கவனிக்கவே இல்லை. அவன் அந்தக் காரைக் காண மிகவும் ஆவலாக இருந்ததால் அதைச் சுற்றியிருந்த காகிதத்தை உடனடியாகக் கிழித்தெறிந்து விட்டு மூச்சற்று நின்றான். மேற்புரம் மாற்றி அமைத்துக் கொள்ளும்படியான வசதியுள்ள, அசலான தோல் இருக்கை உறைகளுடன் கூடிய அந்த வருடத்திய பென்ட்லி கன்வெர்ட்டிபிள் கார் ஆகும் அது. ஆகாயம் சாம்பல் போர்வை போல காட்சியளித்தது. துளைத்தெடுக்கும் குளிர் காற்று வீசிய பொழுது வெளியே இருப்பதற்கான உகந்த நேரம் அதுவாக இல்லாத போதிலும், பில்லி சான்ஷெஸ் குளிர் பற்றிய சிந்தனை ஏதுமில்லாதிருந்தான். வெளியே இருந்த வண்டி நிறுத்தத்திலேயே அந்த அரசுக் குழுவை நிறுத்தி வைத்திருந்தான், மரியாதை நிமித்தம் அவர்கள் விறைக்கும் குளிரில் இருப்பதை அறியாமல், அந்தக் காரின் மிகச் சிறிய நுணுக்கத்தையும் விடாமல் பார்த்து முடிக்கும் வரை. பிறகு அந்தத் தூதுவர் அவனருகில் அமர்ந்தார், அவர்களின் அதிகாரபூர்வமான தங்குமிடத்திற்கு வழிகாட்டியபடி. அங்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. வழியில், அந்த நகரத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த பல காட்சிகளைச் சுட்டிக் காட்டினார், ஆனால் பில்லி சான்ஷெஸ் அந்தக் காரின் மந்திரத்தில் மாத்திரமே ஈர்க்கப்பட்டவன் போலிருந்தான்.

அவனுடைய நாட்டுக்கு வெளியே அவன் பிரயாணம் செய்வது அதுவே முதல் முறையாகும். ஞானஸ்நானம் பெறப்படாத குழந்தைகள் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமாக அலைக்கழிக்கப் படுவதைப் போல, மறதியின் அசட்டையில் இலக்கின்றி மிதக்கும் வரை, எல்லாத்தனியார் மற்றும் பொதுப்பள்ளிகள் வாயிலாக திரும்பத் திரும்ப ஒரே வகுப்பில் பயிற்சி பெற்றான். அவனுடைய இடத்தைப் போலன்றி அந்த நகரில் அவனுக்குத் தென்பட்ட ஆரம்பக் காட்சிகள்நடுப்பகல் பொழுதில் எரிய விடப்பட்டிருந்த விளக்குகளுடனான சாம்பல் நிற வீடுகளின் வரிசைகள், இலைகளற்ற மரங்கள், தூரத்து சமுத்திரம் இவை எல்லாமே அவனது இதயத்தின் ஓரத்தில் அவன் கட்டுப்படுத்தி வைக்க யத்தனித்த பாழாய்ப்போய் விட்டதான உணர்வை அதிகரித்தன. ஆனால் சீக்கிரமே அவை பற்றிய பிரக்ஞை இல்லாமல் அவன் மறத்தலின் முதல் வலையில் வீழ்ந்தான். அந்தப் பருவ காலத்தின் மிக ஆரம்பத்திய, ஒரு தீடீர் மௌனப் புயல் தலைக்கு மேல் வெடித்திருந்தது. மதிய உணவிற்குப் பின் அந்த அரசு தூதரின் வீட்டிலிருந்து ஃபிரான்சு நோக்கிய அவர்கள் பயணத்தை தொடங்கிய பொழுது, அந்த நகரம் ஒளிரும் கெட்டிப் பனியால் போர்த்தப்பட்டிருப்பதைக் கவனித்தனர். அப்பொழுது பில்லி சான்ஷெஸ் அந்தக் காரை மறந்தான். மற்ற ஒவ்வொருவரும் கவனித்துக் கொண்டிருக்க, அவன் சந்தோஷ மிகுதியில் கூச்சலிட்டான். முஷ்டி மடங்கிய கை நிறைந்த பனிக்கட்டியை தன் தலைக்கு மேலே வீசி எறிந்து, அந்தத் தெருவின் நடுவே தான் அணிந்திருந்த புதிய கோட்டுடன் உருண்டான்.

அந்தப் புயலுக்குப் பின்னர் ஒளி ஊடுருவித் தெரியும்படியாக மாறிய ஒரு பகற் பொழுதில், அவர்கள் மாட்ரிட் நகரை விட்டுக் கிளம்பும் வரையில் நேநா டாகொண்டே தனது விரலில் இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை உணரவில்லை. அலுவலக நிமித்த மதிய உணவுகளின் போது சாக்ஸபோனில் அரசாங்க விருந்துகளுக்குப் பிறகு இத்தாலிய இசை நாடக பாடல்களைப் பாட விழையும் அந்த அரசு தூதுவரின் மனைவியுடன் சென்று சாக்ஸபோன் வாசிக்கும் போது அவள் விரல் சிரமம் கொடுத்திருக்கவில்லை என்பதால் இது அவளை ஆச்சரியப்படுத்தியது. பிறகு, எல்லைப் பகுதிக்குச் செல்லும் குறுக்குப் பாதைகளை கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுது, அவள் தன் போதமின்றி ஒவ்வொருமுறை ரத்தம் கசிந்த போதும் அந்த விரலைச் சப்பினாள், மற்றும் அவர்கள் ‘பிர்ரனீஸ்’ பகுதியை அடைந்த பொழுதுதான் ஒரு மருந்துக்கடையைத் தேட வேண்டியதை யோசித்தாள். பிறகு அவள் கடந்த சில நாட்களின் அதிகப் படியாய் தங்கிப்போன கனவுகளுக்குள் ஆழ்ந்து மூழ்கிப் போனாள். திடுக்கிட்டு, கார் தண்ணீரின் ஊடாகச் செல்வதான ஒரு அச்சுறுத்தும் கனவுப்பீதியின் மனப்பதிவில் கண்விழித்த சமயம், விரலைச் சுற்றியிருந்த கைக்குட்டையின் ஞாபகம் அவளுக்கு வந்தபோது நீண்ட நேரமாகியிருந்தது. காரின் டேஷ்போர்டில் இருந்த ஒளியூட்டப்பட்டிருந்த கடிகாரத்தை அவள் பார்த்த போது மணி மூன்று ஆகியிருந்தது. மனக்கணக்குப் போட்டவள் பிறகுதான் ‘போர்டோ’வையும் அது போல, ‘லாய்யர்’ நதியின் நீண்ட வெள்ளப் பெருக்கு தடுப்பு மதிலை ஒட்டி சென்று கொண்டிருந்ததையும், ‘அங்கோலேம்’þஐயும் ‘பாய்ட்டியர்ஸ்’ ஐயும் கடந்து விட்டிருந்ததை உணர்ந்தாள்மூடுபனி வழியே வடிந்து இறங்கியது நிலா ஒளி, அந்த கோட்டைகளின் நிழல் வடிவங்கள் பைன் மரங்களின் ஊடாக ஏதோ மாயக்கதைகளில் வருவது போன்ற தோற்றமளித்தன. அந்தப் பிரதேசத்தை மனப்பாடமாக அறிந்திருந்த நேநா டாகொண்டே பாரீசிலிருந்து மூன்று மணி நேரத் தொலைவில் இருக்கிறோம் என்று கணித்தாள். மேலும் பில்லி சான்ஷெஸ் அசந்துவிடாமல் இன்னும் ஸ்டியரிங்கிலேயே இருந்தான்.

‘‘நீ ஒரு முரட்டு ஆசாமி” அவள் கூறினாள். ‘‘நீ பதினோரு மணி நேரமாக கார் ஓட்டிக் கொண்டிருக்கிறாய், மேலும் நீ எதுவும் சாப்பிடவில்லை.”

அந்தப் புதுக்காரின் போதை அவனை செலுத்திக் கொண்டிருந்தது. விமானத்திலும் அவன் அதிகம் உறங்கியிருக்கவில்லை. ஆனால் விடிவதற்குள் பாரீஸ் நகரை அடையத் தேவையான கூர்ந்த விழிப்புடனும் தேவையான தெம்புடனும் இருந்தான். ‘‘அந்த தூதரக மதிய உணவு இன்னும் என் வயிறு நிரம்ப இருக்கிறது”, என்றான் அவன். பிறகு மேலோட்டமான தர்க்கம் ஏதுமின்றி தெளிவாகக் கூறினான், ‘‘அத்தனைக்கும் மேலே, கார்த்தஜீனாவில் அவர்கள் இப்பொழுதுதான் திரைப்படம் முடிந்து செல்கிறார்கள். பத்து மணிக்குப் பக்கமாகத்தான் இருக்கும்.”

என்றாலும் கூட அவன் ஸ்டியரிங்கிலேயே உறங்கிவிடுவானோ என்று நேநா டாகொண்டேவுக்கு பயமாயிருந்தது. மாட்டிரிடில் அவர்கள் பெற்றுக்கொண்ட பல பரிசுப் பொருட்களில் ஒன்றைப் பிரித்தாள் அவள். பிறகு, இனிப்பூட்டி பதனம் செய்யப்பட்ட ஆரஞ்சு ஒன்றை அவன் வாய்க்குள் வைக்க முயன்றாள். ஆனால் அவன் திரும்பிக் கொண்டான்.

‘‘உண்மையான ஆண்கள் இனிப்பு சாப்பிடுவதில்லை” என்றான் அவன்.

ஆர்லியன்ஸுக்கு சற்று முன்னதாகவே அந்த மூடு பனி விலகியது. பனிபடர்ந்த வயல் வெளிகளை மிகப் பெரிய சந்திரன் ஒளியூட்டியது. ஆனால் போக்கு வரத்து மிகவும் சிக்கலாக ஆகியதுகாரணம் பாரீஸுக்கு சென்று கொண்டிருக்கும் உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் எல்லா பெரிய ட்ரக்குகளும், ஒயின் ஏற்றிச்செல்லும் வண்டிகளும் அந்த நெடுஞ்சாலையில் இணைந்தன. நேநா டா கொண்டே காரோட்டுவதில் அவள் கணவனுக்கு உதவி செய்ய விரும்பினாள் என்றாலும் அதை குறிப்பால் உணர்த்தி விடக் கூட தைரியமின்றி இருந்தாள் முதல் முறையாக அவர்கள் இருவருமாக வெளியே சென்றிருந்த சமயம் ஒரு மனைவி காரோட்ட கணவன் பயணம் செய்வது போல அவமானப்படுத்தக் கூடியது வேறு எதுவும் இல்லை என்று அவன் அவளிடம் தெரிவித்திருந்தான். ஐந்து மணிநேர ஆழ்ந்த அமைதியான உறக்கத்திற்குப் பின்னர் அவள் மனம் தெளிவாகியிருந்தது. மேலும், சிறிய வயதினளாக இருந்ததிலிருந்தே அவள் பெற்றோருடன் எண்ணற்ற முறை செய்த பயணங்களால் அவள் அறிந்திருந்த பிரெஞ்சு மாகாணத்தில் அந்த குறிப்பிட்ட உணவகத்தில் கூட நிற்காமல் வந்தது குறித்து சந்தோஷப்பட்டாள். ‘‘இதைப் போல அழகான நாட்டுப் புறம் இந்த உலகில் வேறு எங்கேயும் கிடையாது” அவள் கூறினாள் ‘‘ஆனால் ஒரு குவளை நீர் இலவசமாய் கொடுக்கும் ஒருவரைக்கூட காண முடியாது தாகத்தினால் செத்தே விடுவோம்.” இதுபற்றி அவள் அவ்வளவு உறுதிப்பாட்டுடன் இருந்ததால் கடைசி நிமிடத்தில் அவள் ஒரு சோப்புக் கட்டியையும், கழிவறைகளில் பயன்படும் பேப்பர் ஒரு கட்டும் அவளது ஓரிரவுக்குத் தேவையான பொருட்கள் வைக்கும் பையில் எடுத்து வைத்துக் கொண்டாள் காரணம் பிரெஞ்சு உணவகங்களில் எப்போதும் சோப்புக்கட்டி இருந்ததேயில்லை, குளியலறைகளில் காணப்படும் பேப்பர் கூட முந்தைய வாரத்தின் செய்தித்தாள்கள் சிறு சதுரங்களாக கத்தரிக்கப்பட்டு ஒரு ஆணியில் தொங்க விடப் பட்டிருக்கும். அந்த கணம் அவள் வருந்தியது ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டுமே, அதாவது, புணர்ச்சியின்றி அந்த முழு இரவையும் வீணடித்ததற்காக. அவள் கணவனின் பதில் உடனடியாய் வந்தது.

‘‘நான் இப்போதுதான் நினைத்துக் கொண்டிருந்தேன், பனியில் புணர்வது எத்தனை அற்புதமாயிருக் கக்கூடும் என்று.” அவன் கூறினான் ‘‘இதே இடத்தில், நீ விரும்பினால்.”

நேநா டாகொண்டே அதுபற்றி தீவிரமாக யோசித்தாள். அந்த நெடுஞ்சாலையின் விளிம்பிலிருந்த நிலவொளியூட்டப்பட்ட பனி, பஞ்சு போன்றும் வெதுவெதுப்பாகவும் தோன்றியது. ஆனால் அவர்கள் பாரீஸின் புறநகர்ப் பகுதிகளை நெருங்கியபோது, போக்குவரத்து நெரிசல் அதிகமாயிற்று. அங்கே இருந்தவை வெளிச்சமிடப்பட்டிருந்த கொத்துக் கொத்தான தொழிற்சாலைகளும், மிதி வண்டிகளில் பெரும்பான்மை தொழிலாளிகளும்குளிர் காலமாக இல்லாதிருந்தால் அது ஒரு பட்டப் பகலாக ஆகியிருக்கும் இந்நேரம்.

‘‘பாரீஸ் செல்லும் வரை நாம் சற்று பொறுத்திருப்போம்” என்றாள் நேநா டாகொண்டே. ‘‘மணமான ஜோடிகள் போல, சுத்தமான விரிப்புகளுடனான ஒரு படுக்கையில், நன்றாக, வெதுவெதுப்பாக.”

‘‘இதுதான் முதல்முறையாக நீ என்னை மறுப்பது,” என்றான் அவன்.

‘‘அப்படித்தான்”, அவள் பதில் அளித்தாள், ‘‘நாம் முதல்முறையாக திருமணம் செய்து கொண்டிருப்பதும் இப்பொழுதுதான்.”

விடியலுக்கு சற்று முன்னர் அவர்கள் தெருவோர உணவகத்தில் தங்கள் முகங்களை கழுவிக் கொண்டு சிறுநீர் கழித்தபின், ட்ரக் ஓட்டுனர்கள் காலை உணவுடன் சிவப்பு ஒயின் குடித்துக் கொண்டிருந்த ஒரு கவுண்ட்டரில் காபியும், வெட்டி மடிக்கப்பட்டிருந்த சூடான ரொட்டித் துண்டுகளையும் சாப்பிட்டனர். நேநா டாகொண்டே குளியலறையில் அவள் குட்டைப் பாவாடையிலும், ரவிக்கையிலும் ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டாள். ஆனால் அதைக் கழுவி நீக்கிவிட யத்தனிக்கவில்லை. இரத்தக் கறை படிந்த கைக்குட்டையை குப்பைக் கூடைக்குள் எறிந்தாள். திருமண மோதிரத்தை இடது கைக்கு மாற்றிக் கொண்டாள். பிறகு சோப்பு கொண்டு நீரில் காயம் பட்டிருந்த விரலைக் கழுவினாள். அந்தக் கீறல் ஏறக்குறைய கண்ணுக்குப் புலப்படாததாகவே இருந்தது. இருப்பினும் அவர்கள் காருக்குத் திரும்பிய உடனேயே மீண்டும் அது ரத்தம் கசியத் தொடங்கியது. ஜன்னலுக்கு வெளியே நேநா டாகொண்டே தன் கையைத் தொங்க விட்டாள்வயல்களிலிருந்து வீசும் குளிர்ந்த காற்றுக்கு ரத்தக் கசிவை நிறுத்தும் தன்மை உண்டென்ற நிச்சயத்துடன். இந்த சாமர்த்தியமும் பலனளிக்காது போயிற்று, ஆனால் அவள் அதுபற்றி இன்னும் அக்கறையின்றி இருந்தாள். ‘‘யாராவது நம்மை கண்டுபிடிக்க விரும்பினால் அது மிகவும் சுலபம்”, இயல்பான வசீகரத்துடன் கூறினாள் அவள், ‘‘அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்தப் பனியின் மேல் படிந்த என் ரத்த சுவடை பின் தொடர வேண்டியதுதான்.” பிறகு, அவள் என்ன கூறியிருந்தாளோ அதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தாள். விடியலின் முதல் வெளிச்சத்தில் அவள் முகம் மலர்ந்தது.

‘‘கற்பனை செய்”, அவள் கூறினாள். ‘‘மாட்ரிட்டிலிருந்து பாரீஸ் வரையிலான வழியெங்கிலும் பனியில் ரத்தச் சுவடு. அது ஒரு நல்ல பாடலைத் தரலாமில்லயா?”

மறுபடியும் சிந்திக்க அவளுக்கு நேரம் இருக்கவில்லை. பாரீஸின் புறநகர்ப் பகுதிகளில் அவள் விரல் கட்டுக்கடங்கா வெள்ளம்போல ரத்தமாய்க் கசிந்தது, மேலும் அந்தக் கீறலின் வழியே அவளது ஆன்மாவே வெளியேறிச் சென்று கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள். தனது பையில் கொண்டு வந்திருந்த, கழிவறையில் பயன்படுத்தப்படும் தாள்கள் கொண்டு அந்த வழிதலை நிறுத்த முயற்சி செய்தாள் ஆனால் ரத்தம் தோய்ந்த தாள்களை ஜன்னலுக்கு வெளியே வீசி எறிவதைவிட அவள் விரலில் அவற்றை சுற்றி விடுவதற்கு அதிக நேரம் பிடித்தது. அவள் அணிந்திருந்த ஆடைகள், அவள் கோட், அந்தக் கார் இருக்கைகள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக, சீர் செய்ய இயலாத வகையில் ரத்தத்தால் நனைந்து போய்க்கொண்டிருந்தன. பில்லி சான்ஷெஸ் மெய்யாகவே பயந்து போயிருந்தான். ஒரு மருந்துக்கடை தேடுதலை வற்புறுத்தினான். ஆனால் அவள் அதற்குள்ளாக அறிந்திருந்தாள் இது மருந்துக் கடைக்குட்பட்ட விஷயம் அல்லவென்று.

‘‘நாம் கிட்டத்தட்ட போர்ட் த ஆர்லியன்ஸ் இல் இருக்கிறோம்”, அவள் கூறினாள், ‘‘நேரே மேலே போகவேண்டும், ‘ஜெனரல் லெக்லெர் அவென்யூ வழியாக, நிறைய மரங்கள் நிறைந்த அந்த பெரியது, பிறகு நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்.”

அந்தப் பயணத்தின் மிக சிரமமான பகுதி இதுதான். மத்திய சந்தைகளை அடைய முற்பட்டுக் கொண்டிருந்த சிறிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரிய ட்ரக்குகளால் ஆன ஒரு முடிச்சுடன் இரண்டு பக்கங்களிலும் அந்த ஜெனரல் லெக்லெர் அவென்யூ நெரிசலடைந்திருந்தது. பயனற்ற ஹார்ன்களின் ஒலி ஆரவாரம் பில்லி சான்ஷெஸை அவ்வளவு கொதிப்படையச் செய்திருந்ததால், அவன் பல ஓட்டுநர்களை சங்கிலிþதாக்கும் குழுவின் வசை மொழியில் திட்டினான். மேலும் காரை விட்டு வெளியேறி அவர்களில் ஒருவனை தாக்கக் கூட முயன்றான். ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் உலகிலேயே இங்கிதமில்லாதவர்கள் என்ற போதிலும், அவர்கள் எப்போதும் முஷ்டிச் சண்டையிட்டதில்லை என்று நேநா டாகொண்டே அவனை நம்ப செய்தாள். அது அவளின் சிறப்பான கணிப்பின் ஒரு நிரூபணமாக இருந்தது, ஏனெனில் அந்தக் கணத்தில் நேநா டாகொண்டே சுய நினைவு இழக்காமலிருக்க போராடிக் கொண்டிருந்தாள்.

லியோன் த பெல்ஃபோர்ட்டின் போக்குவரத்து வட்டத்தைச் சுற்றி வரவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுக்கு ஆயிற்று. ஏதோ இரவு போல சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் கடைகள் வெளிச்சமிடப்பட்டிருந்தன, அது ஒரு சராசரி செவ்வாய்க் கிழமை மேகங்கள் மூடிய இருள் சூழ்ந்திருந்த அசுத்தமான பாரீஸ்தன்மையான ஜனவரி மாதத்தில், இடைவிடாது பெய்து, பனிக்கட்டியாய் உறையாத மழையுடன். ஆனால் டென்ஃபெர் ரோஷரூ அவென்யூவில் போக்குவரத்து குறைவாயிருந்தது. அதற்கு அடுத்த ஒரு சில வரிசைக் கட்டிடங்கள் தள்ளி, நேநா டாகொண்டே அவள் கணவனிடம் வலது புறம் திரும்பச் சொன்னாள், பிறகு அவன் ஒரு பெரிய, இருளடர்ந்த மருத்துவ மனையின் அந்த அவசர சிகிக்சைப் பிரிவின் நுழைவாயிலுக்கு வெளியே காரை நிறுத்தினான்.

காரிலிருந்து வெளியே வருவதற்கு அவளுக்கு உதவி தேவைப்பட்டது. இருப்பினும் அவள் தனது அமைதியையோ அல்லது தெளிவையோ இழக்கவில்லை. சக்கரங்கள் பொருத்திய ஸ்ரெட்சர் வண்டியில் படுத்தபடி, பணி நேர மருத்துவருக்காக காத்துக் கொண்டிருந்த போது, அவள் அவளைப் பற்றிய அடையாளக் குறிப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய செவிலியின் வழக்கமான கேள்விகளுக்கு பதிலளித்தாள். பில்லி சான்ஷெஸ் அவள் பையை சுமந்து வந்தான், அவளது திருமண மோதிரத்தை அணிந்திருந்த அந்த இடது கையை இறுகப் பற்றினான் அது தளர்ச்சிடைந்து குளிர்ந்திருந்தது. அவள் உதடுகள் அவற்றின் நிறமிழந்திருந்தன. அந்த மருத்துவர் வந்து சேரும் வரை, அவளது காயம்பட்ட விரலை ஒரு சிறிய பரிசோதனை செய்யும் வரை அவள் கையை பிடித்தபடியே அவன் அவளருகிலேயே இருந்தான். அந்த டாக்டர் மிகுந்த இளவயதுக்காரராக இருந்தார், மழிக்கப்பட்டிருந்த தலையுடனும், பழைய தாமிர உலோக நிறத் தோலுடனும். நேநா டாகொண்டே அவரிடம் தன் கவனத்தைத் தரவில்லை. ஆனால் ஒரு வெளிறிய புன்னகையை தன் கணவன் மேல் திருப்பினாள், ‘‘பயப்படாதே”, அவள் சொன்னாள், அவளது வெல்வதற்கரிய நகைச்சுவை உணர்வுடன், ‘‘நடக்கக் கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் இந்த நரமாமிசன் என் கையை வெட்டி தின்றுவிடுவதுதான்”

அந்த டாக்டர் பரிசோதனையை முடித்தார். பிறகு மிகச் சரியான ஸ்பானிய மொழியில் ஒரு வித்தியாசமான ஆசிய உச்சரிப்புடன் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

‘‘இல்லை குழந்தைகளே,” அவர் கூறினார். ‘‘இந்த நரமாமிசன் இப்படி ஒரு அழகான கையை வெட்டுவதை விட பசியால் இறந்து போவான்.”

அவர்கள் தர்ம சங்கடத்திற்குள்ளானார்கள், ஆனால் ஒரு இணக்கமான அசைவில் அவர்களை அமைதிப்படுத்தினார் அந்த டாக்டர். பிறகு அவர் அந்த கட்டிலை நகர்த்திச் செல்லப் பணித்தார். தன் மனைவியின் கைகளைப் பிடித்தபடி பில்லி சான்ஷெஸ் பின் தொடர முயன்றான். டாக்டர் அவன் கைகளை எடுத்துக் கொண்டு அவனைத் தடுத்து நிறுத்தினார்.

‘‘நீ கூடாது,” அவர் சொன்னார். ‘‘அவள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்கிறாள்.”

நேநா டாகொண்டே அவள் கணவனை நோக்கி மறுபடியும் புன்னகைத்தாள், விடை பெறுவதற்காய் அந்த நடைகூடத்தின் முடிவில் பார்வையிலிருந்து அவள் மறையும் வரை கையசைத்தவாறு இருந்தாள். அந்த டாக்டர் கிளிப் பொருத்திய எழுது பலகையில் அந்த நர்ஸ் எழுதியிருந்த குறிப்புகளை படித்துக் கொண்டிருந்தார். பில்லி சான்ஷெஸ் அவரை அழைத்தான்.

‘‘டாக்டர், அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” அவன் கூறினான்.

‘‘எவ்வளவு நாளாய்?”

‘‘இரண்டு மாதங்கள்”

இந்த தகவலுக்கு பில்லி சான்ஷெஸ் எதிர்பார்த்த அளவு டாக்டர் முக்கியத்துவம் தரவில்லை. ‘‘நீ என்னிடம் சொல்வது சரிதான்,” அவர் கூறினார். பிறகு கட்டிலைத் தொடர்ந்து நடந்தார். நோயாளிகளின் வியர்வை நாற்றமடித்த, துக்கம் தோன்றச் செய்யும் அந்த அறையில் பில்லி சான்ஷெஸ் நின்றவாறே தனித்து விடப்பட்டான். நேநா டாகொண்டேவை அழைத்துச் சென்றிருந்த அந்த கீழ் நோக்கிய, வெறிச்சோடிய நடைகூடத்தில் என்ன செய்வதென்று அறியாது விடப்பட்டிருந்தான். பிறகு மற்றவர்கள் காத்துக் கொண்டிருந்த அந்த மர பெஞ்சில் உட்கார்ந்தான். அவன் எவ்வளவு நேரம் அங்கு உட்கார்ந்திருந்தான் என்பதை அறியவில்லை, ஆனால் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேற அவன் தீர்மானித்த போது மறுபடியும் இரவாகியிருந்தது, மேலும் இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது, இந்த உலகின் பாரத்தால் அமுக்கப்பட்டு, அவன் தான் என்ன செய்யவேண்டுமென்று இன்னும் அறியாதிருந்தான்.

பல வருடங்களுக்குப் பின்னர் அந்த மருத்துவமனை பதிவேட்டிலிருந்து நான் அறிந்து கொண்டபடி ஜனவரி ஏழாம் தேதி செவ்வாய்க் கிழமையன்று நேநா டாகொண்டே 9.30 மணிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டாள். அந்த முதல் நாள் இரவில், பில்லி சான்ஷெஸ் அவசர சிகிச்சை பிரிவு நுழைவாயிலின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரில் உறங்கினான். பின் அடுத்த நாள் அதிகாலையில், மிக அருகாமையில் அவன் கண்டுபிடிக்க முடிந்திருந்த உணவகத்தில் ஆறு வேக வைத்த முட்டைகள் சாப்பிட்டான், இரண்டு கோப்பை காப்பியும் அருந்தினான், ஏனெனில் மாட்ரிட்டிலிருந்து அவன் முழுமையான உணவு உண்டிருக்கவில்லை. பிறகு அவன் அந்த அவசர சிகிச்சைப் பகுதிக்குச் திரும்பச் சென்றான். ஆனால் அவன் பிரதான வாயிலைப் பயன்படுத்த வேண்டுமென்பதை அவனுக்குப் புரியச் செய்தனர். நேநா டாகொண்டே மெய்யாகவே அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாளா என்று உறுதி செய்து கொண்ட பின், பார்வையாளர்கள் செவ்வாய்க் கிழமைகளில் ஒன்பது மணியிலிருந்து நாலு மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்அதாவது மற்ற ஆறு தினங்களில் இல்லை என்று கூறிய அந்த பெண் வரவேற்பாளரிடம் பேசுவதற்கு ஒரு அஸ்ட்டூரிய பராமரிப்புப் பணியாளன் அவனுக்கு உதவி செய்தான். மழிக்கப்பட்ட தலையுடனான ஒரு கறுப்பன் என்று அவன் வர்ணித்த, ஸ்பானிய மொழி பேசும் அந்த டாக்டரைப் பார்க்க முயன்றான். ஆனால் இந்த மாதிரியான இரண்டு எளிய அடையாளங்களின் அடிப்படையில் அவரைப் பற்றி எவராலும் எதுவும் கூற இயலவில்லை.

அந்தப் பதிவேட்டில் நேநா டாகொண்டே இருப்பதை மறு உறுதி செய்து கொண்டவன் காருக்குத் திரும்பினான். ஒரு போக்குவரத்து அதிகாரி, இரட்டைப்படை எண் வரிசைப் பகுதியில், மிகக் குறுகலான ஒரு தெருவில் அவன் வண்டியை இரண்டு வரிசைக் கட்டிடங்களுக்கு அப்பால் நிறுத்தச் செய்தார். தெருவின் அப்பால் ஒரு புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் ஒன்று ஹோட்டல் நிக்கோல் என்ற வாசகத்துடன்அது ஒரு நட்சத்திர அந்தஸ்து மட்டுமே பெற்றிருந்தது, மேலும் அதன் வரவேற்பு பகுதி மிகச் சிறியதாக இருந்தது, அதில் ஒரே ஒரு சோபா மற்றும் ஒரு பழைய, கம்பீரமான பியானோ இருந்தது. குழல் போல உச்சஸ்தாயி குரல் கொண்ட அந்த உரிமையாளர், பணம் இருக்கும் பட்சத்தில் எந்த வாடிக்கையாளரையும் எந்த மொழியிலும் புரிந்து கொள்ள முடிந்தவராயிருந்தார். பில்லி சான்ஷெஸ் தனது பதினோரு பெட்டிகள் மற்றும் ஒன்பது பரிசுப் பெட்டிகளுடன் காலியாக இருந்த அந்த ஒரே அறையை எடுத்துக் கொண்டான். ஒன்பதாவது தளத்தில் இருந்த ஒரு முக்கோண வடிவ அட்டாளி அறைக்குச் செல்லும், வேக வைத்த காலிஃப்ளவர் நெடி வீசிய வட்டவடிவ படிக்கட்டுகளை ஒரே மூச்சில் தாவி ஏறினான். மங்கலான தாள்களால் சுவர்கள் மூடப்பட்டிருந்தன, மேலும் ஒரு பக்கத்து ஜன்னலருகில் எதற்குமே இடமில்லாதிருந்தது, ஆனால் உட்புறமாயிருந்த முற்றம் போன்ற பகுதியிலிருந்து அந்த மங்கலான வெளிச்சம் வருவதற்கு தவிர. இரட்டைப் படுக்கை, ஒரு உயரமான அலமாரி, ஒரு சாய முடியாத நேரான பின்பகுதியுடைய நாற்காலி, கையோடு சுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய ஒரு ‘பிடெட்’ (பிறப்புறுப்புக்களைக் கழுவுவதற்கான பீச்சும் நீர்இணைப்பு கொண்ட அமைப்பு) ஒரு வாஷ்பேசின், நீர் மொள்ளும் பாத்திரம் ஆக அந்த அறையில் இருப்பதற்கு ஒரே வழி அந்தப் படுக்கையில் படுத்துக் கொள்வதுதான். பழையவை என்பதற்கும் மோசமாக எல்லாப் பொருள்களுமே கைவிடப்பட்டவையாய்த் தோன்றின, ஆனால் ஆரோக்கியமளிக்கவல்ல ஒரு சமீபத்திய மருந்து நெடியுடன்.

அவனது வாழ்வின் எஞ்சிய பகுதியை அந்த கருமித்தனத்திற்கான திறமையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்த உலகின் புதிர்களை புரிந்து கொள்ளும் முயற்சியில் கழித்திருந்தாலும் சான்ஷெஸ் அவற்றை விடுவித்திருக்க முடியாது. அவனது தளத்தை அவன் அடையும் முன்னரே அந்தப் படிக்கட்டு விளக்கு அணைந்து போய்விடும் புதிரை அவன் ஒரு போதும் விடுவிக்க இயலவில்லை, மேலும் அவன் அதை மறுபடியும் எப்படி எரிய விடுவதென்று கண்டுபிடிக்கவும் இல்லை. ஒவ்வொரு தளத்தை அடையும் போதும் கழிவறையுடனான ஒரு சிறிய அறை இருந்ததையும், ஒரு சங்கிலி இழுப்பில் அது கழிவுகளைத் தள்ளி விடுவதையும் அறிந்து கொள்ள அவனுக்கு ஒரு காலை நேரத்தின் பாதிப் பகுதி தேவையாயிருந்தது மற்றும் அவன் அதை இருள் நேரத்தில் உபயோகிக்க முடிவு செய்திருந்தான். அப்போதுதான், உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டால் அந்த விளக்கு எரியத் தொடங்கியதும் அதனால் யாருமே அதை மறுபடி அணைக்க மறந்து போக நேரிடாது என்பதையும் அவன் கண்டு பிடித்தான். யதேச்சையாக, அந்த நீண்ட ஹாலின் ஒரு கோடியில் இருந்த ஷவரை, அவன் சொந்த நாட்டில் உபயோகிப்பது போல, ஒரு நாளில் இரண்டு முறை அதை உபயோகப்படுத்த உறுதி செய்து கொண்டான். அதற்கென தனியே பணம் கொடுக்க வேண்டியிருந்தது, கைப்பணமாக, மற்றும் அந்த அலுவலக கட்டுப்பாட்டில் இருந்த அந்த சுடுநீர் மூன்று நிமிடங்களில் நின்று போனது. இருப்பினும் பில்லி சான்ஷெஸ் தேவையான தெளிவுடன் தனதிலிருந்து வேறுபட்டு இந்த விதமாகக் காரியங்களைச் செய்வது பற்றி அறிந்து கொண்டான். எப்படிப் பார்த்தாலும் ஜனவரி மாதத்துக் குளிரில் வெளியே இருப்பதை விடவும் இது மிகவும் சிலாக்கியமானது. மற்றும் அவன் மிகவும் குழப்பமாகவும், தனிமையாகவும் உணர்ந்தான் அதாவது நேநா டாகொண்டேவின் உதவியும், பாதுகாவலும் இன்றி அவனால் எப்படி வாழ்ந்திருக்க முடிந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

புதன் கிழமை காலை அறைக்குச் சென்ற பின், கோட்டுடன் படுக்கையில் முகம் கவிழ்ந்து வீழ்ந்தான். இரண்டு வரிசை கட்டிடங்கள் தள்ளி அப்பால், இன்னும் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் அந்த அற்புதப்படைப்பைப் பற்றி எண்ணியவாறே, அவன் உடனே ஒரு மிக இயல்பான உறக்கத்துள் வீழ்ந்தான். விழித்தபோது அவன் கைக்கடிகாரம் 5 மணி என்றது, ஆனால் அவனால் அது பகலா, காலையா அல்லது வாரத்தின் எந்த நாள் அது என்பது பற்றியோ அல்லது அது எந்த நகரம் என்பதையோ அவனால் கணிக்க இயலவில்லை, இன்னும் ஜன்னல்களைக் காற்றும் மழையும் விளாசிக் கொண்டிருக்க. காலைப்பொழுது தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை, படுக்கையில் விழித்தபடி, எப்போதும் நேநா டாகொண்டேவை நினைத்துக் கொண்டே அவன் காத்திருந்தான். பிறகு அவன் முந்தைய நாள் போலவே அதே உணவகத்தில் காலை உணவு சாப்பிடச் சென்றான். அன்று வியாழக்கிழமை என்று அங்கே தெரிந்து கொண்டான். பிறகு அந்த மருத்துவமனையில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன, மற்றும் மழை நின்றிருந்தது. அதனால் அவன் பிரதான நுழைவாயிலின் வெளியே இருந்த அந்த செஸ்ட்நட் மரத்தின் அடிப்பாகத்தின் மீது சாய்ந்து கொண்டான். எங்கே டாக்டர்களும் நர்சுகளும் வெண்ணிற கோட்டுடன் உள்ளும் புறமும் நடந்தபடி இருந்தனரோ, அங்கே நேநா டாகொண்டேவை சேர்த்த அந்த ஆசிய டாக்டரை காணலாம் என்ற நம்பிக்கையுடன். அப்பொழுதும் மற்றும் மதிய உணவிற்குப் பிறகும் அவன் அவரைக் காணவில்லை. மேலும் அவன் வெளியே நின்று குளிரில் உறைந்து கொண்டிருந்தால் அவனது கண் காணித்தலை முடித்துக் கொள்ள வேண்டிய தருணமாயிற்று. ஏழு மணிக்கு அவன் இன்னுமொரு லைட் காபியைக் குடித்து, கடினமாக வேக வைக்கப்பட்ட இரண்டு முட்டைகளைச் சாப்பிட்டான்இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் ஒரே மாதிரியான பொருட்களைச் சாப்பிட்ட பின்னர் காட்சிக் கவுண்ட்டரிலிருந்து விருப்பப்படி அவனாகவே எடுத்துக் கொண்டான். தூங்குவதற்காக ஹோட்டலுக்குச் சென்ற போது அந்தத் தெருவின் ஒரு பகுதியில், மற்ற கார்கள் யாவும் எதிர்த்திசையில் நிறுத்தப் பட்டிருக்க, அவனுடைய காரின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஒரு அபராதச் சீட்டுடன் அவனது கார் தனியே இருப்பதைக் கண்டான். ஒற்றைப்படை எண் நாட்களில் ஒற்றைப்படை எண் பகுதியில் நிறுத்தலாம் என்றும், இரட்டைப் படை எண் நாட்களில் மற்றொரு பகுதியில் நிறுத்தலாம் என்பதை அவனுக்கு விளக்குவது ஹோட்டல் நிக்கோலின் அந்த சுமை தூக்கும் கூலிக்
ு ஒரு சிரமமான காரியமாக இருந்தது. அப்பேர்ப்பட்ட பகுத்தறிவுத்தனமான யுக்திகள் சீரிய பிறப்பில் வந்த சான்ஷெஸ் டி அவிலாவுக்கு புரிந்து கொள்ள இயலாதவையாக இருந்தன. ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்பாக அந்த துணிகரமிகுந்த போலீஸ்காரர்கள் அருகில் நின்றிருக்க
, மேயரின் அலுவலகக் காரை ஏறக்குறைய அருகில் இருந்த திரைப்பட அரங்கினுள் ஓட்டிச் சென்று முழுநாசம் உண்டாக்கியிருந்தான். அந்தக் கூலி அவனை அபராதப்பணம் செலுத்த அறிவுறுத்திய போதும், அந்தக் குறிப்பிட்ட மணி நேரத்தில் காரை நகர்த்த வேண்டாம் என்று சொன்ன போதும்காரணம் அவன் அதை மறுபடியும் நள்ளிரவில்தான் நகர்த்த முடியும் என்பதையும்இன்னமும் குறைவாகத்தான் புரிந்து கொண்டான். உறங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த போது, முதன் முறையாக நேநா டாகொண்டே பற்றி மட்டுமல்லாது, கரீபியனின் கார்த்தஜீனாவில் பொதுச் சந்தையில் இருந்த உற்சாக மதுபானக் கடைகளில் வேதனை தந்த அவனது இரவுகள் பற்றியும் நினைத்தான். அரூபாவிலிருந்து வந்த பாய்மரங்கள் கொண்ட மரக்கலங்கள் நங்கூரமிட்ட அந்த கப்பல் துறைக்குள் இருந்த உணவகங்களில் தேங்காய் சாதம் மற்றும் வறுக்கப்பட்ட மீன் ருசியையும் அவன் நினைவு கூர்ந்தான். காட்டு பான்ஸி மலர்ச் செடிகள் நிறைந்த தனது வீட்டின் அந்த சுவர்களை, அங்கே முந்தைய இரவில் 7 மணியே ஆகியிருக்கும்அவன் வீடு, மேலும் மேல் மாடியின் குளிர்ச்சியில், பட்டு பைஜாமாவில் அவன் தந்தை செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பதையும் நினைவில் கண்டான் அவன்.

அவன் தன் அம்மாவை நினைத்துக் கொண்டான் எவருக்குமே அவள் எங்கே இருப்பாள் என்று தெரியாதிருந்தது, என்ன சமயமாக இருந்த போதிலும்அவனது விரும்பத்தகுந்த, வாயாடித் தாயார் இரவு வேளையில் காதுக்குப் பின்னால் ஒரு ரோஜாவுடனும், மூச்சுத்திணற அடிக்கும் உஷ்ணமான அந்த சுமையான, மிகச் சிறப்பாக நெய்யப்பட்ட துணியில் ஒரு ஞாயிற்றக் கிழமைக்கான உடையில் புழுங்கியபடி அவனுக்கு ஏழு வயதாகியிருக்கும் போது, ஒரு மதியம், அவன் கதவைத் தட்டாமல் அவளறைக்குச் சென்றிருந்தான், பிறகு அவளது அவ்வப்போதான காதலர்களில் ஒருவனுடன் நிர்வாணமாய் அவளைப் படுக்கையில் கண்டான். இருவருமே சுட்டிக்காட்டிப் பேசாதிருந்த, அந்த விரும்பத்தகாத விபத்து, அன்பை விட உபயோகமானதாய், உடந்தைத்தனமான ஒரு உறவை அவர்களுக்கிடையில் நிறுவியது. ஆனால் அவன் அது பற்றியோ, அல்லது ஒற்றைக் குழந்தைக்கான அவனது தனிமையால் ஏற்பட்ட பல பயங்கரங்கள் பற்றியோ உணர்வில்லாதிருந்தான். ஒரு துயரார்ந்த பாரீஸ் நகர அட்டாளி அறையில் அவனை அந்த இரவு படுக்கையில் தள்ளி வீசியிருப்பதை கண்டு, அவன் வருத்தங்களைச் சொல்வதற்கு யாருமின்றி, தன் மீதே கொண்ட ஆக்ரோஷ கோபத்தில், அழ வேண்டும் என்ற இச்சையை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

அது ஒரு நன்மை பயக்கும் தூக்கமின்மை. வெள்ளியன்று படுக்கையை விட்டு எழுந்து, அவன் கழித்திருந்த அந்த மோசமான இரவினால் புண்படுத்தப்பட்டு, ஆனால் தன் வாழ்வுக்கு ஒரு வரையறை தர தீர்மானமாக இருந்தான். அவர்களது பெரும்பான்மை பணமும், விலாசப் புத்தகமும் ஒரு வேளை பாரிஸில் அவர்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவரின் எண்ணை அவன் கண்டு பிடித்திருக்கலாம்þசாவிகள் எல்லாம் நேநா டாகொண்டேவின் பையில் இருந்ததால் இறுதியில் அவன் தன் பெட்டியின் பூட்டை உடைக்கவும் பிறகு உடைமாற்றிக் கொள்ளவும் முடிவு செய்தான். வழக்கமாக சாப்பிடும் உணவகத்தில் அவன் பிரெஞ்சில் ‘ஹலோ’ சொல்லவும், பன்றிக் கொழுப்பு, இறைச்சிக்கு இடையே வைக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் இவைகளை கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் கற்றுக் கொண்டிருந்தான். இதை உணர்ந்து கொண்டவன், வெண்ணெயோ அல்லது எந்த வகை முட்டை வேண்டும் என்றோ கேட்க ஒருபோதும் இயலாது என்பதை அறிந்திருந்தான். ஏனெனில் அவன் வார்த்தைகளை உச்சரிக்க ஒருபோதும் கற்கவில்லை ஆனால் ரொட்டியுடன் எப்போதும் வெண்ணெய் பரிமாறப்பட்டது மேலும் கடினமாக வேக வைத்த முட்டைகள் அந்தக் கவுண்ட்டரில் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து அவன் அவைகளை கேட்க வேண்டிய அவசியம் இன்றி தானே எடுத்துக் கொள்ள முடிந்தது. அதற்கு மேலும், மூன்றாவது நாளின் போது, அந்தப் பணியாளர்கள் அவனை அடையாளம் கண்டு அவன் புரிந்து கொள்ளப்பட மேற்கொண்ட எல்லா முயற்சிகளின் போதும் அவனுக்கு உதவினர். பிறகு வெள்ளிக்கிழமை மதிய உணவு வேளையில் அவனை சரியாக இருத்திக் கொள்ள முயன்றபோது, எலும்புகள் அகற்றிய கன்றிறைச்சியுடன் வறுத்த உருளைக் கிழங்குகள், மற்றும் ஒரு குவளை ஒயின் ஆகியவற்றுக்கு ஆர்டர் செய்தான். அவ்வளவு சௌகரியமாய் உணர்ந்தவன், மேலும் ஒரு பாட்டிலுக்கு ஆர்டர் செய்து அதில் பாதியைக் குடித்த பிறகு, திடமான தீர்மானத்துடன் அந்தத் தெருவைக் கடந்து மருத்துமனைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தான். நேநா டாகொண்டேவை எங்கே பார்ப்பதென்று அவன் அறியவில்லை, ஆனால் அவன் நினைவில் அந்த ஆசிய டாக்டரின் தெய்வாதீனமான உருவம் நிலை பெற்றிருந்தது, மேலும் அவரைக் கண்டுபிடித்துவிட முடியும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அந்தப் பொதுக் கதவு வழியாக உள்ளே செல்லாமல், மாறாக, சற்று குறைவான கவனத்துடன் கண்காணிக்கப்பட
டதாக அவனுக்குத் தோன்றிய அந்த அவசர சிகிச்சை பிரிவு நுழைவாயிலை உபயோகித்தான். ஆனால் நேநா டாகொண்டே விடை பெற கை அசைத்துச் சென்ற அந்த நடைகூடத்தை தாண்டிச் செல்ல இயலவில்லை. இரத்தத் தெறிப்புகளால் கறைபடிந்திருந்த தளர்ந்த ஆடையணிந்திருந்த ஒரு காவலன்
, அவன் நடந்து சென்ற போது ஏதோ கேட்டதை பில்லி சான்ஷெஸ் கவனிக்காமல் சென்றான். அந்த மனிதன் இவனை பின் தொடர்ந்தான் மீண்டும் அதே கேள்வியை திரும்பத் திரும்ப ஃபிரெஞ்சில் கேட்டவாறே. இறுதியில் அவ்வளவு வேகத்தில் இவன் கையைப் பற்றியதால் இவன் எதிர்பாராது நிறுத்தப்பட்டான். அவனை உதறித் தள்ள முயன்றான் பில்லி சான்ஷெஸ், ஒரு சங்கிலித் தாக்குதல் தந்திரத்துடன். பிறகு அந்த காவலர் பிரெஞ்சு மொழியில், மலங்கழிக்கும் தளமோவென இவன் தாயைப் பழித்துப் பேசி, சுற்றி வளைத்துக் கொண்ட ‘சுத்தியல் பிடியில்’ இவன் கையை தோள் வரையில் முறுக்கி, மறக்காமல் ஓராயிரம் முறை அவன் மலங்கழிக்க தளமான அவனது பரத்தை தாய் என்றவாறே இவனைக் கதவுவரை ஏறக்குறைய தூக்கிச் சென்று, வலியால் துடித்துக் கொண்டிருக்க, உருளை கிழங்குகள் அடைத்த ஒரு மூட்டையைப் போல தூக்கி வீசினான் அந்தத் தெருவின் நடுவில்.

அந்தப் பிற்பகல், அவன் பெற்ற தண்டனையால் வேதனை அடைந்து பில்லி சான்ஷெஸ் கொஞ்சம் முதிர்ந்த மனிதாக இருக்கத் தொடங்கினான். அரசு தூதுவரை நாடிச் செல்லலாம் என்று தீர்மானித்தான், நேநா டாகொண்டே அப்படித்தான் செய்திருந்திருப்பாள். அந்த ஹோட்டல் பணியாளன் சுமுகமற்ற தோற்றம் கொண்டிருப்பினும் மிகவும் உதவியாக இருந்தான். மொழிகள் குறித்த மிகுந்த பொறுமை கொண்டிருந்த அந்தப் பணியாளன் அந்த தூதரக அலுவலக எண், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிவற்றை தொலைபேசி புத்தகத்திலிருந்து கண்டு பிடித்து ஒரு அட்டையில் அவற்றை எழுதியும் கொடுத்தான். ஒரு சுமுகமான பெண் தொலை பேசியில் பதிலளித்தாள். அவளது நிதானமான, ஈர்ப்பில்லாத ‘ஆன்டஸ்’ சொற்களை உடனேயே அடையாளம் கண்டு கொண்டான். அவனது முழுப் பெயரையும் கூறி தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள ஆரம்பித்தான். நிச்சயமாய் அந்த இரண்டு சிறப்பான குடும்பங்கள் அந்தப் பெண்மணி கருத்தில் பதிந்திருக்கும், ஆனால் தொலைபேசியில் அந்தக் குரல் மாறவில்லை. மனப்பாடம் செய்து வைத்திருந்த தனது பாடத்தை அவள் ஒப்பித்ததை கேட்டான் அவன் மாண்புமிகு அரசு தூதுவர் அவரது அலுவலகத்தில் அந்தச் சமயத்தில் இல்லை, நாளை மறுநாள் வரை எதிர்பார்க்க முடியாது, ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முன் அனுமதியின்றி அவரைக் காண இயலாது , அதுவும் அசாதாரணமானஅவசர சூழ்நிலைகளில் மட்டுமே அவரைப் பார்க்க இயலும் என்று சொல்வதை கேட்டான். இந்த வழியிலும் நேநா டாகொண்டேவை பார்க்க முடியாது என்று பில்லி சான்ஷெஸ் அறிந்து கொண்டான். பிறகு அந்த செய்தியை எப்படி மனதுக்கினிய வகையில் அவள் கொடுத்தாளோ அதே உணர்வுடன் அவன் அவளுக்கு நன்றி கூறினான்.

பாரீஸின் மிக அமைதியான மாவட்டங்களில் ஒன்றில், பில்லி சான்ஷெஸை ஈர்த்த ஒரே இடமான 22ரூ த ஷேம்ப்ஸ் எலிஸீஸ் இல், பல வருடங்களுக்குப் பிறகு என்னிடம் அவனே கார்த்தஜீன டி இன்டியாஸ் இல் கூறியது போல, அவனது வருகைக்குப் பின்னர் முதன் முறையாக சூரிய ஒளி கரீபியனில் இருப்பது போலப் பிரகாசமாக இருந்தது. மற்றும் அந்த ஈஃபில் டவர், பிரகாசமான வானின் குறுக்கே, அந்த நகரத்தின் மேலே உயர்ந்து நின்றது. அரசு தூதுவரின் சார்பாக அவனை அழைத்துப் பேசிய அந்த அதிகாரி ஏதோ ஊறு விளைவிக்கவிருந்த நோயிலிருந்து சமீபத்தில்தான் மீண்டு வந்தவரைப் போல் தோற்றமளித்தார்அவரது கறுப்பு காற்சட்டை, கோட்டினால் மட்டுமல்லாது, உறுத்தலான காலர், துக்கம் அனுஷ்டிக்கும் டையும் மட்டுமின்றி, அவரது விவேகமான அங்க அசைவுகளும், குரலும் அமைதிப்படுத்துவதான தன்மையும் சேர்த்து. பில்லி சான்ஷெஸின் அக்கறையை அவர் புரிந்து கொண்டார். ஆனால் அவனது பகுத்தறியும் உசிதங்கள் எதையும் இழந்துவிடாமல் காட்டுமிராண்டி அமெரிக்காக்களுக்கு முரணாக அங்கே அவர்கள் உள்ளே நுழைவதற்கு ஒருவர் செய்ய வேண்டிய தெல்லாம் மருத்துவ விடுதியின் வாயில் காவலருக்கு லஞ்சம் தருவதொன்றேஇங்கே ஒரு நாகரிகமடைந்த நாட்டில் இருப்பதாகவும் அதன் கடுமையான வரையறைகள் மிகவும் புராதனமான, கற்றறிந்த அடிப்படைகள் மீது கண்டறியப்பட்டன என்றும் அவனுக்கு நினைவு படுத்தினார். ‘‘இல்லை, அன்புச் சிறுவனே” அவர் சொன்னார். காரணத்தின் ஒழுங்குக்கு அவன் தன்னை உட்படுத்திக் கொண்டு செவ்வாய்க் கிழமை வரை காத்திருப்பது மாத்திரமே அவனது ஒரே ஒரு புகலிடம்.

‘‘போகட்டும், இன்னும் நான்கு நாட்கள் தானே இருக்கின்றன” அவர் முடித்தார். ‘‘அதற்குள்ளாக லூவர் மியூசியத்துக்குப் போ. பார்க்கவேண்டிய இடம் அது.”

வெளியே வந்தவன், ‘பிளேஸ் த லா கன்கார்ட் இல் தான் இருப்பதைக் கண்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. ஈஃபில் டவரை அந்த மேற் கூரைக்கும் மேலே கண்டான். பிறகு அது மிகவும் அருகில் இருப்பதாகத் தோன்றியது. அதனால் கப்பல்துறை வழியாக அங்கு நடந்து செல்ல முயன்றான். ஆனால் உடனே உணர்ந்து கொண்டான் அது தோன்றிய தொலைவை விட இன்னும் கூடுதல் தொலைவில் உள்ளது என்றும், மேலும் அவன் அதைத் தேடும் சமயத்தில் அது தன் இருப்பு நிலையை மாற்றிக் கொண்டே இருந்தது என்றும். அதனால் அவன் நேநா டாகொண்டேவை பற்றி நினைத்தபடி அந்த ‘சியென்’ சாலையில் ஒரு நீண்ட கல் இருக்கையில் அமர்ந்தான். அவனுக்கு படகுகள் போலன்றி அலைந்து திரியும் வீடுகள் போல காட்சியளித்த அந்த சிறு நீராவிப்படகுகள் சிவப்புக் கூரைகள், மற்றும் ஜன்னல்களில் பூந்தொட்டிகள், தளம் குறுக்கே துணிக் கம்பி வரிசைகளுடன், பாலங்களுக்கு அடியில் கடந்து செல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தான். அசைவற்ற மீன்பிடி கோல், அசைவற்ற மீன் தூண்டில் நரம்புடன் அசைவற்றிருந்த ஒரு மீனவனை பார்த்தான். ஏதாவது அசையக் காத்திருந்த களைத்துப் போனான், இருட்டத் தொடங்கும் வரையிலும். பிறகு ஒரு டாக்ஸி பிடித்து ஹோட்டலுக்குச் செல்லத் தீர்மானித்தான். அப்போதுதான் பாரீஸின் எந்த இடத்தில் அந்த மருத்துவமனை இருக்கிறது என்று தனக்குத் தெரியாமல் இருப்பதையும், அதன் பெயர் அல்லது விலாசம் தெரியாது என்பதையும் உணர்ந்தான்.

பெரும் பீதி மற்றும் மழுங்கடிக்கப்பட்ட உணர்வுடன் அவன் கண்ணில் பட்ட முதல் உணவகத்திற்கு சென்று உயர்ரக ‘கான்யாக்’ பிராந்தி கேட்டு, பிறகு அவன் எண்ணங்களை ஒரு சீராக வைத்துக் கொள்ள முயன்றான். அவன் சிந்தனை செய்து கொண்டிருந்த போது பல்வேறு கோணங்களில், சுவர்களில் இருந்த எண்ணற்ற கண்ணாடிகளில் அவன் திரும்பத் திரும்பத் தோன்றுவதைக் கண்டவன், தான் தனிமையாகவும், பயந்துபோயும் இருப்பதைக் கண்டான். மேலும் அவன் பிறந்ததிலிருந்து முதன் முறையாக இறப்பின் நிதர்சனத்தை பற்றி எண்ணினான். ஆனால் இரண்டாவது கோப்பை பிராந்தியுடன் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தான், மற்றும் அந்த தூதரக அலுவலகத்திற்குச் திரும்பிச் செல்வதற்கான தெய்வாதீனமான உத்தேசம் வந்தது. அவன் பாக்கெட்டுக்குள் விலாசத்துடன் இருந்த அந்த அட்டையை பார்த்தான், பிறகு மறு பக்கத்தில் அந்த ஹோட்டலின் பெயர் மற்றும் தெரு எண் ஆகியவை அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டு பிடித்தான். அந்த அனுபவத்தினால் உலுக்கப்பட்டவனாக அந்த வார இறுதி முழுவதும் சாப்பிடுவதற்கும், ஒரு புறமிருந்து மறு புறத்திற்கு காரை நகர்த்தி நிறுத்துவதற்கும் தவிர அவன் அறையை விட்டு வெளியே செல்லவே இல்லை. அவர்கள் அங்கு வந்து சேர்ந்த காலையில் பெய்தது போலவே மோசமான மழை மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இதுவரையில் முழுமையாக ஒரு புத்தகமும் படித்திராத பில்லி சான்ஷெஸ் படுக்கையில் படுத்துக் கொண்டு, சலிப்பு உணர்விலிருந்து அவனை தற்காத்துக் கொள்ள அப்போது ஒரு புத்தகம் இருந்தால் தேவலாம் என்று விரும்பினான். ஆனால் அவன் மனைவியின் பெட்டிகளில் அவன் கண்டவை எல்லாம் ஸ்பானிய மொழி தவிர ஏனைய மொழிகளில் இருந்தவையே. ஆக, செவ்வாய்க் கிழமைக்காக காத்திருந்தான், சுவர்க் காகிதங்களில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்த மயில்கள் பற்றி சிந்தித்துக் கொண்டும் மற்றும் எப்போதும் நேநா டாகொண்டே பற்றி எண்ணிக்கொண்டும். திங்களன்று, அந்த அறையைச் சீராக்கினான். அந்த நிலையில் அதைக் கண்டால் அவள் என்ன சொல்லக் கூடும் என்று வியந்தான். அப்பொழுதுதான் அந்த மின்க் கோட், காய்ந்த இரத்தக்கறையுடன் இருப்பதைக் கண்டு பிடித்தான். அவளுடைய ஓரிரவுக்கான பொருட்கள் வைக்கும் பையில் இருந்த வாசனை சோப்பால் அதைச் சுத்தம் செய்வதில் அந்தப் பகல் முழுவதையும் செலவழித்தான். மாட்ரிடில், முன்பு விமானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அது இருந்த நிலைக்கு அதனை மீட்டுக் கொண்டு வந்தான் வெற்றிகரமாக.

செவ்வாய் விடிந்தது மேகமூட்டத்துடனும், சில்லிடும் குளிருடனும், ஆனால் மழையின்றி. ஆறுமணிக்கு விழித்தெழுந்த பில்லி சான்ஷெஸ், நோயாளிகளுக்கு பூங்கொத்துகளும் பரிசுப் பொருட்களும் கொணர்ந்த உறவினர்கள் கூட்டத்துடன் மருத்துவமனையின் நுழைவாயிலில் காத்திருந்தான். கூட்டத்துடன் உள்ளே சென்றான், தன் கை மேல் இருந்த அந்த மின்க் கோட்டை எடுத்துக் கொண்டு, எந்த ஒரு கேள்வியும் கேட்காது, நேநா டாகொண்டே எங்கிருக்க முடியும் என்ற எந்த ஒரு கருத்தும் இன்றி, ஆனால் அந்த ஆசிய டாக்டரை சந்திக்கலாம் என்ற நிச்சயத்துடன். ஒரு மிக விஸ்தாரமான உட்புறமுற்றத்தின் ஊடாகபூக்கள் மற்றும் காட்டுப் பறவைகளுடன்அதன் இருபுறமும், வார்டுகள் இருந்தன. பெண்களுக்கு வலது புறமும் ஆண்களுக்கு இடது புறமும். மற்ற பார்வையாளர்களைப் பின் தொடர்ந்து பெண்களுக்கான பகுதியில் நுழைந்தான். ஜன்னல்களின் பெரும் வெளிச்சத்தினால் ஒளியூட்டப்பட்டிருந்த அவரவரது படுக்கையில் மருத்துவ சீருடையில் அமர்ந்திருந்த பெண் நோயாளிகளின் நீண்ட வரிசையைக் கண்டான் மற்றும் வெளியிலிருந்து கற்பனை செய்திருக்க முடிந்ததை விட அதெல்லாம் கூடுதல் சந்தோஷத்துடன் இருந்ததைப் பற்றியும் கூட அவன் நினைத்தான். அந்த நடைகூடத்தின் இறுதியை எட்டியவன் அந்த நோயாளிகளில் நேநா டாகொண்டே இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்ட பின் திரும்பி நடந்தான். பிறகு, அந்த வெளிப்புற அரங்கைச் சுற்றி நடந்தான் அவன் தேடிக் கொண்டிருந்த டாக்டரை அடையாளம் கண்டுவிட்டதாக தோன்றும் வரை, ஆண்கள் பகுதியின் ஜன்னல்கள் ஊடே நோக்கியபடி.

நிஜத்தில் அவன் கண்டிருந்தான். அந்த டாக்டர் ஒரு நோயாளியை, மற்ற சில டாக்டர்கள் மற்றும் நர்சுகளுடனும் பரிசோதித்துக் கொண்டிருந்தார். பில்லி அந்த பகுதிக்குள் சென்றான், அந்த கூட்டத் தினின்று நர்சுகளில் ஒருத்தியை விலக்கிவிட்டு, அந்த நோயாளி மேல் குனிந்திருந்த அவரை நோக்கியவாறு நின்றான். அவன் அவரிடம் பேசினான். டாக்டர் தன் சோகம் கப்பிய கண்களை உயர்த்திப் பார்த்து, ஒரு நொடி யோசித்து, பிறகு அவனை அடையாளம் கண்டு கொண்டார்.

‘‘ஆனால் எங்கே போய்த் தொலைந்தாய் நீ?” அவர் கேட்டார்.

பில்லி சான்ஷெஸ் குழப்பமடைந்தான்.

‘‘அந்த ஹோட்டலில்”, அவன் சொன்னான். ‘‘இதோ இங்கேதான், அந்த திருப்பத்தில்.”

பிறகு அவன் தெரிந்து கொண்டான். அந்த வியாழக்கிழமை மாலை 7 மணி 10 நிமிடத்திற்கு, ஜனவரி ஒன்பதாம் தேதி, ஃபிரான்சின் மிகத் தேர்ச்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களின் அறுபது மணிநேர முயற்சிகள் தோற்றுப் போக, நேநா டாகொண்டே ரத்தம் வருவது நிற்காமல் இறந்து விட்டிருந்தாள். கடைசிவரை தெளிவுடனும், அமைதியுடனும் இருந்திருக்கிறாள் அவள். அவளும் பில்லி சான்ஷெஸும் முன்பதிவு செய்து கொண்டிருந்த ‘ஏதென்னே பிளாசாவில்’ அவள் கணவனை தேடுவதற்கு அவர்களுக்கு அறிவுரைகள் கொடுத்தபடி, மேலும் அவள் பெற்றோரை தொடர்பு கொள்ள தேவையான தகவல்களை அவர்களுக்குத் தந்து கொண்டும். ஏற்கனவே நேநா டாகொண்டேவின் பெற்றோர் பாரீஸுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த பொழுதில், வெள்ளிக் கிழமை அந்த அயல் நாட்டு அலுவலகத்தில் ஒரு துரிதமான தகவல் தரப்பட்டிருந்தது. அந்த அரசு தூதுவர் தாமே, பிணத்தை நறுமண மூட்டிப் பாதுகாத்து வைப்பதிலும் பிறகு இறுதி யாத்திரை போன்றவை சம்பந்தப்பட்ட சடங்குகளிலும் அதிகார எல்லைக்குள் பாரீசின் போலீஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டு பில்லி சான்ஷெஸை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். அவனை வர்ணித்த ஒரு நெருக்கடி நிலை அதிகார அறிக்கை வெள்ளிக் கிழமையிலிருந்து ஞாயிறு மதியம் வரை வானொலி வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் ஒலிபரப்பப்பட்டது மேலும் அந்த நாற்பது மணி நேரமும் பிரான்ஸில் மிகவும் தேவைப்பட்ட மனிதனாக இருந்தான் அவன். நேநா டா கொண்டேவின் கைப்பையில் கண்டெடுக்கப்பட்ட அவனது புகைப்படம் எல்லா இடத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டது. மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி பெற்ற ஒரே மாதிரியான மூன்று பென்ட்லி கார்கள் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் அவற்றில் ஒன்றுகூட அவனுடையதில்லை.

சனிக்கிழமை மதியம் நேநா டாகொண்டேவின் பெற்றோர் வந்து சேர்ந்திருந்தனர். பிறகு அந்த மருத்துவமனை தேவாலயத்தில் அந்த உடலருகே அமர்ந்தனர், கடைசி நிமிடம் வரை பில்லி சான்ஷெஸ் கண்டுபிடிக்கப்படுவான் என்ற நம்பிக்கையுடன். அவனது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பாரீஸுக்கு விமானத்தில் புறப்படத் தயாராக இருந்தனர், ஆனால் கடைசியில் தந்திகளில் ஏற்பட்ட ஏதோ சில குழப்பங்களால் அவர்கள் புறப்படவில்லை. இருநூறு மீட்டரே தள்ளியிருந்த, அந்தத் தரம் குறைந்த ஹோட்டலின் அறையில், நேநா டா கொண்டேவின் காதலுக்கான தனிமை தந்த மன வேதனைகளுடன் பில்லி சான்ஷெஸ் கிடந்திருந்தபோது, ஞாயிறு பிற்பகல் இரண்டு மணிக்கு இறுதிச் சடங்கு நடந்தது. அந்த தூதரக அலுவலகத்தில் அவனை வரவேற்ற அதிகாரி பல வருடங்கள் கழித்து, அந்த அயல் நாட்டு அலுவலகத்திலிருந்து வந்திருந்த தந்தியை, பில்லி சான்ஷெஸ் அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறிய ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அவர் பெற்றுக் கொண்டதையும், பிறகு அவனைத் தேடும் பொருட்டு ‘ரூ த ஃபார்பக் செயின்ட் ஹானர்’ வழியெங்கும் உள்ள மது, உணவு அருந்தும் கடைகளுக்குச் சென்றதையும் என்னிடம் கூறினார். கடற் பிரதேசத்து பையன் ஒருவன், அனுகூலமான, சிறப்பு மிக்க ஒரு தோற்றம் கொண்டிருக்க வேண்டியவன், பாரீஸின் புதுமையில் தாக்கப்பட்டு இப்படி தகுதிக்கு ஒவ்வாத ‘ஷெர்லிங்’ கோட் அணிந்திருந்த ஒருவன் அவ்வளவு பெருமை மிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்தவனாக இருக்க முடியுமா என்று கற்பனை செய்ய முடியாமலிருந்ததை என்னிடம் ஒப்புக் கொண்டார்.

ஆத்திரத்துடன் அழவேண்டும் என்றெழுந்த ஆசையை அவன் அடக்கிக் கொண்ட அன்றிரவு, நேநா டாகொண்டேவின் பெற்றோர் அந்த தேடுதலை நிறுத்திவிட்டு, ஒரு உலோகச் சவப்பெட்டியில் நறுமணமூட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டிருந்த உடலைக்கொண்டு சென்றனர், மற்றும் அதைக் கண்டவர்கள், இப்படி ஒரு அதீத அழகிய பெண்ணை, இறந்தோ உயிருடனோ ஒரு போதும் பார்த்திருக்கவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறினர். செவ்வாய்க்கிழமை காலை பில்லி சான்ஷெஸ் கடைசியாக அந்த மருத்துமனைக்குள் நுழைந்த போது, அந்த சவ அடக்கம் ஏற்கனவே முடிந்திருந்தது, அந்த துக்கமான ‘லா மாங்கா’ கல்லறையில்எந்த வீட்டில் அவர்களது சந்தோஷங்களின் முதல் திறவு கோல்களைக் கொண்டு திறந்து விடுவித்திருந்தனரோ அந்த இடத்திலிருந்து ஒரு சில மீட்டர் தள்ளி. அந்தத் துயரத்தை பில்லி சான்ஷெஸிடம் கூறிய அந்த ஆசிய டாக்டர் அந்த மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் அவனுக்கு அமைதி தரும் தூக்க மருந்துகள் சில தர விரும்பினார். ஆனால் அவன் மறுத்துவிட்டான். போய் வருகிறேன் என்று சொல்லாமல் பில்லி சான்ஷெஸ் புறப்பட்டான். நன்றி என கூறுவதற்கு ஏதுமின்றி, அவனது தனிப்பட்ட துரதிர்ஷ்டத்தை பழிவாங்கும் பொருட்டு பெரும் அவசரத்துடன் யாராவது ஒருவரைக் கண்டுபிடித்து, மூளை தெறித்து வெளியேறும்படி, சங்கிலியால் அடித்து நொறுக்க மட்டுமே அவன் யோசனை கொண்டிருந்தான். அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறியபோது, புறாக்களின் மென்மயிர் போர்த்திய இறகுகள் போன்ற பனி, மென்மையான பளீரென்று சிறு துணுக்குகளாக, இரத்தச் சுவடு ஏதுமின்றி வானத்தினின்றும் வீழ்ந்து கொண்டிருந்ததை அவன் உணரவில்லை, மற்றும் பத்து வருடங்களில் அதுதான் பெரிய, முதல் பனிவீழ்வு என்பதால் பாரீஸ் நகர தெருக்களில் விழாக்கால தோற்றமிருந்ததையும் கூட.

358

The Trail of Your Blood in the Snow, from Strange Pilgrims (Jonathan Cape, London: 1993) by Gabriel Garcia Marques, translated from the Spanish by Edith Grossman

காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- ஆறு மணிக்கு வந்த அந்தப் பெண்/The Woman Who Came at Six O’clock, Gabriel Garcia Marquez

epc-71

காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்-

ஆறு மணிக்கு வந்த அந்தப் பெண்*

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ரங்கநாயகி

அந்த தள்ளு கதவு திறந்து கொண்டது. அந்த நேரத்தில் ஜோஸின் உணவகத்தில் யாரும் இல்லை. அப்போதுதான் ஆறுமணி ஆகியிருந்தது. அவனுக்குத் தெரியும் தினமும் வரும் வாடிக்கையாளர்கள் 6.30 மணிக்கு முன்னர் வரத் தொடங்கமாட்டார்கள் என்று. அவனது எல்லா வாடிக்கையாளர்களும் மாற்றம் விரும்பாதவர்கள், முறை தவறாதவர்கள் என்பது கடிகாரம் சரியாக ஆறுமுறை அடித்து முடிந்திராத பொழுதில், அந்த குறிப்பிட்ட நேரத்தில் தினந்தோறும் வரும் அந்தப்பெண் உள்ளே நுழைந்ததில் தெரிந்தது. எதுவும் பேசாது ஸ்டூலில் அமர்ந்து கொண்டாள். பற்ற வைக்கப்படாத சிகரெட் அவள் உதடுகளுக்கிடையே அழுத்தமாய் இருந்தது.

‘‘ஹலோ, ராணி”, என்று அவள் அமர்வதை பார்த்து ஜோஸ் விளித்தான். பிறகு கவுண்ட்டரின் அடுத்த பகுதிக்குச் சென்று கீறல் விழுந்திருந்த பரப்பை ஒரு கந்தல்துணி கொண்டு துடைத்தான். உணவகத்திற்கு யார், எப்பொழுது வந்தாலும் இதையேதான் செய்கிறான் ஜோஸ். சிவந்த பருமனான முதலாளி ஜோஸ் இப்படி கடும் உழைப்பாளி போன்ற தினசரி நடிப்பை தினமும் ஏற்படுத்திக் கொள்வான், இப்போது இந்தப் பெண் வந்த போதும்கூட. இவளிடம் ஜோஸ் ஒரு விதமான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். கவுண்ட்டரின் மறு மூலையிலிருந்து பேசினான்.

‘‘இன்று உனக்கு என்ன வேண்டும்?”

‘‘முதலில் ஒரு கனவானாக நடந்து கொள்வது எப்படி என்று உனக்கு கற்றுத்தர விரும்புகிறேன்” என்று அந்தப் பெண் கூறினாள். ஸ்டூல்களின் ஓரமாக அமர்ந்து கொண்டிருந்தவள் உதடுகளுக்கிடையில் தீர்ந்துபோன சிகரெட். பற்ற வைக்கப்பட வேண்டிய சிகரெட்டின் மேல் ஜோஸின் பார்வை விழுமாறு கவுண்ட்டரின் மேல் முழங்கைகளை ஊன்றிக்கொண்டு இறுக்கமாய், அழுத்தமாய் பேசினாள்.

‘‘நான் கவனிக்கவில்லை” என்றான் ஜோஸ்.

‘‘இன்னும் நீ எதையும் கவனிக்க கற்றுக் கொள்ளவில்லை” என்றாள் அந்தப் பேன்.

துடைத்துக்கொண்டிருந்த துணியை கவுண்ட்டரின் மேல் விட்டுவிட்டு, மரத்தூசி, தார் வாசனையுடனான இருண்ட அலமாரிகள் இருக்குமிடத்திற்குச் சென்று, உடனே திரும்பி வந்தான் தீப்பெட்டியுடன். கிராமப்புறத்திய, ரோமங்களடர்ந்த முரட்டுக் கைகள் பற்றித் தந்த நெருப்பை பெற்றுக் கொள்ள சாய்ந்தாள். மட்டமான வேஸ்லின் தைலம் தடவிய, வழவழவென்றிருந்த அடர்த்தியான, செழுமையான அவளின் கூந்தலைப் பார்த்தான் ஜோஸ். பூவேலை செய்யப்பட்ட பிரேஸியரின் மேலாக, மறைக்கப்பட்டிராத அவளது தோளைப் பார்த்தான். மங்கலாய்த் தெரிய ஆரம்பித்த அவளது மார்பை அவன் பார்த்தபோது, அந்தப் பெண், உதடுகளுக்கிடையில் இருந்த பற்ற வைத்த சிகரெட்டின் கடைசித் துண்டோடு, தலையை உயர்த்திக் கொண்டாள்.

‘‘நீ இன்றிரவு அழகாய் இருக்கிறாய், ராணி” என்றான் ஜோஸ்.

‘‘உன் முட்டாள்த்தனமான பேச்சை நிறுத்து” என்றாள் அந்தப் பெண். ‘‘இது போன்ற உன் பேச்சு என்னிடமிருந்து உனக்கு எதையும் பெற்றுத் தந்திடாது”

‘‘நான் அப்படி ஏதும் உணர்த்தவில்லை, ராணி” என்றான். ‘‘பந்தயம் கட்டுகிறேன், உன் மதிய உணவு உனக்கு ஏற்றதாயிருக்கவில்லை”.

அடர்த்தியான முதல் புகையை உறிஞ்சி இழுத்துவிட்டு கவுண்ட்டரின் மேல் முழங்கைகளை வைத்துக் குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு உணவகத்தின் பரந்த ஜன்னல் வழியே தெருவை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த பெண். சோகமான முக வெளிப்பாடு கொண்டிருந்தாள். சலிப்பான, இழிவானதொரு சோகம்.

‘‘உனக்காக ஒரு நல்ல ஸ்டீக் சமைக்கிறேன்” என்றான் ஜோஸ்.

‘‘இன்னும் பணம் ஏதும் கிடைத்தபாடில்லை எனக்கு” என்றாள் அந்தப் பெண்.

‘‘மூன்று மாதகாலமாய் உனக்கு பணம் கிடைத்தபாடில்லைதான். இருப்பினும், நல்லதாக நான் ஏதாவதொன்று உனக்கு  சாப்பிடுவதற்குத் தந்து கொண்டுதானிருக்கிறேன்” என்றான் ஜோஸ்.

‘‘இன்று வேறு மாதிரி” என்று சொன்னாள் அந்தப் பெண் துயரத்துடன், இன்னும் தெருவை நோக்கியபடி.

‘‘எல்லா நாட்களும் ஒரே மாதிரிதான்”, என்றான் ஜோஸ். ‘‘தினந்தோறும் கடிகாரம் ஆறுமணி காட்டும் போது நீ வருகிறாய். நாய்ப்பசியுடன் இருப்பதாகச் சொல்கிறாய். நானும் உனக்கு நல்லதாக ஏதாவது உண்பதற்குத் தருகிறேன். நாய்போல பசிக்கின்றது என்று நீ சொல்லாதது ஒன்றுதான் இன்றைய வேறுபாடு. இருந்தாலும் இந்த நாள் மாற்றத்துடன்தான் இருக்கிறது”.

‘‘உண்மைதான்” என்றாள் அந்தப் பெண். கவுண்ட்டரின் மற்றொரு முனையில் குளிர்சாதனப் பெட்டியை சரிபார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதனைப் பார்க்கத் திரும்பினாள். இரண்டு, மூன்று வினாடிகள் அவனை ஆராய்ந்து நோக்கினாள். பிறகு அலமாரிக்கு மேல் இருக்கும் கடிகாரத்தைப் பார்த்தாள். ஆறுமணியாகி மூன்று நிமிடங்கள் கழிந்திருந்தன. ‘‘அது உண்மைதான், ஜோஸ்”. அவள் சொன்னாள். ‘‘இன்று வேறு மாதிரித்தான் இருக்கிறது” என்றாள் அவள். புகையை வெளியேற்றிக் கொண்டு, உணர்ச்சியூட்டும் துருதுருப்பான வார்த்தைகளில் பேசிக் கொண்டே போனாள், ‘‘இன்று நான் ஆறுமணிக்கு வரவில்லை. அதனால்தான் இன்று என்பது வித்தியாசமான நாள், ஜோஸ்”.

அந்த மனிதன் கடிகாரத்தைப் பார்த்தான். ‘‘இந்த கடிகாரம் ஒரு நிமிடம் தாமதம் என்றாலும் நான் என் கையை வெட்டிக்கொள்வேன்” என்றான் அவன்.

‘‘அதில்லை, ஜோஸ். நான் ஆறுமணிக்கு இன்று வரவில்லை” என்றாள்

‘‘சரியாக ஆறு அடித்தது, ராணி” ஜோஸ் சொன்னான்.

‘‘நீ வந்தபோது ஆறுமணி அடித்துமுடிந்து கொண்டிருந்தது” என்றான் ஜோஸ்.

‘‘என்னிடமிருக்கும் கால்மணிநேரம் நான் இங்கே இருந்திருக்கிறேன் என்று சொல்கிறதே” என்றாள் அந்தப்பெண். அவள் இருந்த இடத்திற்குச் சென்றான் ஜோஸ். புடைத்திருந்த அவனது பெரிய முகத்தை அந்தப் பெண்ணை நோக்கி உயர்த்தி, தன் சுட்டு விரலால் ஒரு கண் இமையை இழுத்து விட்டு, ‘‘இங்கே, என்மேல் ஊது” என்றான்.

அந்தப் பெண் தலையைப் பின்னே சாய்த்துக் கொண்டாள். அவள் தீவிரமாகவும், எரிச்சலுற்றும், மென்மையாகவும் இருந்தாள், துயரமும் சோர்வும் மிக்க மேகத்தினால் அழகாக்கப்பட்டு.

‘‘உன் முட்டாள்த்தனத்தை நிறுத்து, ஜோஸ். உனக்குத் தெரியும் நான் ஆறுமாதங்களாக குடிப்பதில்லை என்று”

‘‘வேறு எவனிடமாவது இதைச் சொல்” என்றான் அவன்.  ‘‘என்னிடம் வேண்டாம். பந்தயம் கட்டுகிறேன் குறைந்தபட்சம் ஒன்றோ, இரண்டோ ரவுண்டுகள்”.

‘‘ஒரு நண்பனுடன் கொஞ்சம் குடித்தேன்” என்றாள்

‘‘ஓ! இப்போது எனக்குப் புரிகிறது” என்றான் ஜோஸ்.

‘‘புரிந்துகொள்ள ஒன்றும் இல்லை இதில்” எனக் கூறிவிட்டு, ‘‘இங்கே கால்மணி நேரமாக இருந்து கொண்டிருக்கிறேன்” என்று முடித்தாள் அந்தப் பெண். அம்மனிதன் தன்தோள்களை அலட்சியமாய் குலுக்கிக் கொண்டான்.

‘‘இப்படித்தான் நீ விரும்புகிறாய் என்றால், நல்லது. உனக்கான கால்மணிநேரம் நீ இங்கே இருந்து கொண்டிருப்பதை கூறுவதாகக் கொள்ளலாம்” என்றான் அவன். ‘‘பத்து நிமிடங்கள் இப்படி அப்படி என்றால் என்ன பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது?”

‘‘அது மாற்றம் உண்டாக்கும், ஜோஸ்” என்றாள் அந்தப் பெண், ஏதோ கைவிடப்பட்ட உணர்ச்சி வேகத்தோடு தன் கைகளை அந்தக் கண்ணாடி கவுண்ட்டரின் மேல் நீட்டிக் கொண்டு அவள் கூறினாள். ஓ’‘மேலும், இதனை இப்படியாக நான் விரும்பியிருக்கவில்லை. நான் இங்கு கால்மணி நேரமாக இருந்து கொண்டிருப்பதைத்தான். . .” என்றவள் கடிகாரத்தை மறுபடியும் பார்த்துவிட்டு திருத்திக் கொண்டு கூறினாள், ‘‘நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால்–இருபது நிமிடங்களாகி விட்டிருக்கிறது இப்போது”.

‘‘சரி, ராணி.” அந்த மனிதன் சொன்னான். ‘‘நீ  மகிழ்ச்சியாக இருப்பதைக் காண ஒரு முழுப்பகலையும் அதோடு சேர்ந்துவரும் இரவையும் தருவேன் நான்” என்றான்.

இத்துணை நாழியும் ஜோஸ் கவுண்ட்டரின் பின்புறம் நகர்ந்து கொண்டு, பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு மாற்றி வைத்துக் கொண்டுமிருந்தான். அவன் தன் பங்கினை செயலாற்றிக் கொண்டிருந்தான்.

‘‘நீ மகிழ்ச்சியுடன் இருப்பதை காணவே நான் விரும்புகிறேன்” என்று மறுபடியும் கூறினான். திடீரென நிறுத்திவிட்டு, அந்தப் பெண்  இருக்கும் இடம் நோக்கித் திரும்பி, ‘‘உனக்குத் தெரியுமா நான் உன்னை மிகவும் நேசிக்கிறேனென்று?” என்றான்.

உணர்ச்சியற்று அவனை நோக்கினாள் அந்தப் பெண். ‘‘ஆ. . . மா. . . ம்?. என்ன ஒரு கண்டுபிடிப்பு, ஜோஸ்”.அவள் சொன்னாள்.  ‘‘மில்லியன் பெஸோ தந்தாலும் உன்னுடன் வருவேன் என்று நினைக்கிறாயா?”

‘‘நான் அதைச் சொல்லவில்லை, ராணி” என்றான் ஜோஸ். ‘‘மறுபடியும் பந்தயம், உன் மதிய உணவு உனக்கு ஏற்றதாக இல்லை”.

ஜோஸ் வெட்கினான். அவளை நோக்கி முதுகைத் திருப்பிக் கொண்டு ஷெல்புகளில் இருந்த குடுவைகளை தூசி தட்டத் தொடங்கினான். தலையை திருப்பாமல் பேசினான்,

‘‘அதனால்தான் என்று இப்படிச் சொல்லவில்லை”, என்றான் ஜோஸ். என்றாள் அந்தப் பெண். சோபல்தனம் சற்று குறைந்திருந்ததாக ஒலித்தது அவள் குரல். ‘‘உன் போன்ற பருமன் என்றால் எந்தப் பெண்ணும் தாங்க மாட்டாள் ஒரு மில்லியன் பெஸோ கெடுத்தாலும் கூட”.

‘‘ராணி, இன்று பொறுத்துக் கொள்ள முடியாதவளாக இருக்கிறாய் நீ”. ‘‘உனக்கான உணவை சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்குச் சென்று உறங்கி விடுவதே உனக்குச் சாலச்சிறந்தது இப்போது என்று நினைக்கிறேன்”.

‘‘எனக்குப் பசியில்லை” என்றாள் அந்தப் பெண். தெருவை பார்த்தவாறும், இருள் சூழ்ந்திருக்கும் நகரத்தின் அந்தத் தெருவை கடந்து செல்பவர்களை கவனித்துக் கொண்டுமிருந்தாள். சிறிது நேரம் அந்த உணவகத்தில் ஒரு உவப்பற்ற அமைதி நிலவியது. அலமாரி அருகில் ஜோஸ் ஏற்படுத்திய சின்னச்சின்ன நகர்த்துதல்கள் அந்த அமைதியை உடைத்தன. திடீரென்று தெரு நோக்கிய பார்வையுடன், மென்மையான ஆதுரமான, மாற்றமடைந்த குரலில் பேசினாள், ‘‘நீ என்னை மெய்யாகவே நேசிக்கிறாயா, பெப்பில்லோ?”

அவள் மீதான பார்வையை தவிர்த்து, வறட்சியுடன் கூறினான் ஜோஸ், ‘‘ஆமாம்”.

சற்று நேரம் அமைதி நிலவியது. இன்னும் அந்தப் பெண்மேல் பார்வை செலுத்தாமல், இழுப்பறை பெட்டிகளை நோக்கித் திரும்பிய ஜோஸ் இங்கும் அங்குமாய் நகர்ந்து கொண்டிருந்தான்.

கவுண்ட்டரின் மேல் மார்பின் மேற்பகுதி முழுவதையும் சாய்த்துக் கொண்டு, வாய் நிறைய இன்னும் புகையை ஊதித் தள்ளினாள். பிறது, போக்கிரித்தனத்துடன் நாக்கைக் கடித்துக் கொண்டு, கவனமாய், பதுங்கிப்பதுங்கி, ரகசியம் பேசுவது போல கேட்டாள், ‘‘என்னுடன் படுக்க நீ வரமுடியாது என்றாலுமா?”

அப்போதுதான் ஜோஸ் அவளை நோக்கித் திரும்பினான்.

‘‘நான் உன்னிடம் கூறியிருப்பதை தெரிந்து கொண்ட பிறகுமா?” என்று அந்தப் பெண் கேட்டாள்.

‘‘நீ என்னிடம் என்ன கூறினாய்?” என்று கேட்ட ஜோஸின் குரல் வேதனையற்று ஒலிக்க, அவள் மீதான பார்வையை மேலும் அவன் தவிர்த்தான்.

‘‘அதுதான். அந்த ஒரு மில்லியன் பெஸோ விவகாரம் பற்றி” என்றாள்.

‘‘நான் ஏற்கனவே மறந்துவிட்டேன்” என்றான் ஜோஸ்

‘‘ஆக, நீ என்னை நேசிக்கிறாய், அப்படித்தானே?” அந்தப் பெண் கேட்டாள்

‘‘ஆமாம்”, என்றான் ஜோஸ்.

‘‘உன்னை நான் மிக அதிகமாய் நேசிப்பதாலேயே உன் படுக்கையை பகிர்ந்து கொள்ள மாட்டேன்” என்றான் அவன். பிறகு அவளிருந்த இடம் நோக்கி நடந்தான். அவள் முகத்தை உற்று நோக்கியவாறு நின்றான். திடகாத்திரமான அவன் கைகள் கவுண்ட்டரின் மேல் அவளுக்கு முன்புறாய் சாய்ந்திருக்க, அவள் கண்களுக்குள் உற்று நோக்கினான். ‘‘ஒவ்வொரு இரவும் உன்னுடன் செல்லும் ஒவ்வொரு ஆண் கனையும் கொன்றுவிடுமளவிற்கு உன்னை மிகவும் நேசிக்கிறேன் நான்”, என்று கூறினான் அவன். முதலில் சற்று குழப்பமடைந்தது போல அந்தப் பெண் தோன்றினாள். பிறகு, ஏளனமா, இரக்கமா என்ற நிச்சயமற்ற ஒரு முகபாவத்துடன் கவனமாக அவனைப் பார்த்தாள். ஒரு கணப்பொழுது குழப்பமான மௌனம் சாதித்தாள். அதன் பின்னர் மிகவும் சத்தமாய் சிரித்தாள்.

‘‘உனக்குப் பொறாமை, ஜோஸ். அது முரட்டுத்தனமானது. உனக்குப் பொறாமை!”

ஜோஸ் மீண்டும் முகம் சிவந்து போனான். கபடமற்ற ஏறத்தாழ வெட்கம் கலந்த பயத்துடன் தனது ரகசியங்களை எல்லாம் திடீரென வெளிக்காட்டிவிட்ட ஒரு குழந்தைக்கு நடந்து விட்டதைப் போல.

‘‘இந்த மதிய நேரம் உன்னால் எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை போல் தோன்றுகிறது, ராணி” கந்தல் துணி கொண்டு சுத்தம் செய்து கொண்டே கூறினான்.

‘‘இந்த மோசமான வாழ்க்கை உன்னை கொடுமைப்படுத்துகிறது” என்றான்.

ஆனால், இப்போது அந்தப்பெண் தன் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டிருந்தாள்.

‘‘ஆக, அப்புறம்” என்றவள் அவன் விழிகளுக்குள் விநோத ஒளி கொண்ட அதே சமயம் குழப்பமும், சவாலும் நிறைந்த தன் விழிகள் கொண்டு உற்று நோக்கினாள்.

‘‘ஆக, உனக்குப் பொறாமையில்லை”.

‘‘ஒரு வகையில் எனக்குப் பொறாமைதான்”. ஜோஸ் சொன்னான். ‘‘ஆனால் நீ நினைக்கும் வகையில் அல்ல” என்றான் ஜோஸ். காலரை தளர்த்திக் கொண்டு, துணியால் தன் உடம்பையும், தொண்டையையும் துடைத்துக் கொண்டான்.

‘‘அதனால்?” என்று என்று கேட்டாள் அந்தப் பெண்.

‘‘உண்மை என்னவெனில், உன்னை நான் அவ்வளவு நேசிப்பதால் உனது இந்த செயல்கள் எனக்கு பிடிக்கவில்லை” என்று கூறினான் ஜோஸ்.

‘‘என்ன?” என்று வினவினாள்.

‘‘ஒவ்வொரு நாளும் வேறு வேறு ஆணுடன் நீ செல்லும் இந்த செயல்தான்” என்றான் ஜோஸ்.

‘‘என்னுடன் வர இருப்பவனை தடுக்க வேண்டி நீ அவனை நிஜமாய் கொன்றுவிடுவாயா?” என்று கேட்டாள் அந்தப் பெண்.

‘‘உன்னுடன் செல்பவனைத் தடுத்து நிறத்த அல்ல.” ஜோஸ் கூறினான். ‘‘உன்னுடன் சென்றிருந்தவன் என்பதால் அவனைக் கொல்வேன்”

‘‘இரண்டும் ஒன்றுதான்”, அந்தப் பெண் சொன்னாள்.

அந்த உரையாடல் உணர்ச்சிபூர்வமான செறிவை சென்றடைந்திருந்தது. தாழ்ந்த, மெல்லிய, வலுவற்ற உணர்ச்சிமிக்க குரலில் அந்தப் பெண் பேசிக் கொண்டிருந்தாள். அவள் சொற்களின் மந்திரத்தில் கட்டுப்பட்டாற்போல அசைவற்று நின்றிருந்த அவனது அமைதியான முகத்துடன் ஏறக்குறைய பதிந்து விட்டிருந்தது அவளது முகம்.

‘‘அது நிஜம்” என்றான் ஜோஸ்

‘‘அப்படியானால்” என்றவள், தன் கரம் நீட்டி அம்மனிதனின் முரட்டுக்கரத்தை வருடியபடி, மற்றொரு கரத்தால் சிகரெட்டின் கடைசித்துண்டை சுண்டி எறிந்தாள். ‘‘ஆக, உன்னால் ஒரு மனிதனைக் கொல்ல இயலும், இல்லையா?” என்றாள்.

‘‘நான் கூறிய காரணத்திற்காக, இயலும்” என்றான் ஜோஸ். அவன் குரல் வேகமான அழுத்தத்துடன் ஒலித்தது. வெளிப்படையான, நையாண்டி செய்யும் நோக்கத்துடனான கலக்கும் சிரிப்பில் வெடித்தாள் அந்தப் பெண்.

‘‘என்ன விந்தை, ஜோஸ். என்ன விந்தை” என்றவள் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள். ‘‘ஜோஸ் ஒரு மனிதனைக் கொல்வதா? எனக்காக தினந்தோறும் ஸ்டீக் சமைத்து அதற்காக என்னிடம் பணம் வாங்கிக் கொள்ளாமல், நான் ஒரு ஆளைப் பிடிக்கும் வரை என்னுடன் தமாஷாக பேசிக்கொண்டிருக்கும், பருமனான, புனிதம் வாய்த்தவன் போலிருக்கும் இந்த மனிதனுக்குள் ஒரு கொலையாளி ஒளிந்திருப்பது யாருக்குத் தெரிந்திருக்கும்! என்ன விந்தை, ஜோஸ். நீ எனக்கு அச்சமூட்டுகிறாய்!”

ஜோஸ் குழப்பமடைந்தாள். ஒருவேளை அவன் சிறிது கோபமடைந்திருக்கக் கூடும். அல்லது அந்தப் பெண்ணின் சிரிப்பில் வஞ்சிக்கப்பட்டது போல உணர்ந்திருக்கலாம்.

‘‘நீ குடித்திருக்கிறாய், முட்டாளே” என்றவன் ‘‘போ. சற்று உறங்கு. உனக்கு ஏதும் உண்பதற்குக்கூட  தோன்றவில்லை இன்று”.

ஆனால், அந்தப் பெண் சிரிப்பதை நிறுத்திவிட்டிருந்தாள் இப்போது. மேலும், தீவிரமாள், சிந்தனைவயப்பட்டவளாய், கவுண்ட்டரின் மேல் சாய்ந்துகொண்டாள். அந்த மனிதன் செல்வதை கவனித்தாள். குளிர்சாதனப் பெட்டியை திறந்து அவன் எதையும் வெளியே எடுக்காது மீண்டும் மூடுவதை பார்த்தாள். பளபளக்கும் கண்ணாடியை முன்பு போல அவன் துடைத்து சுத்தம் செய்வதை கவனித்தாள். பிறகு, மிக அன்பான மிருதுவான தொனியில் ‘‘நீ மெய்யாகவே என்னை நேசிக்கிறாயா, பெப்பில்லோ?” என்று கேட்டாள்.

‘‘ஜோஸ்” என்றாள் அவள்.

அந்த மனிதன் அவளை பார்க்கவில்லை.

‘‘ஜோஸ்!”

‘‘வீட்டுக்குப் போ. உறங்கு”, என்றான் ஜோஸ் ‘‘மேலும் படுப்பதற்கு முன் குளித்துவிடு, உறக்கத்தில் மீண்டுவிடு இதிலிருந்து”

‘‘நிச்சயமாய், ஜோஸ், நான் குடிபோதையில் இல்லை” என்றாள் அந்தப் பெண்.

‘‘அப்படியானால் முட்டாளாக மாறிவிட்டிருக்கிறாய்” என்றான் ஜோஸ்.

‘‘இங்கே வா, உன்னிடம் நான் பேசவேண்டியிருக்கிறது” என்றாள் அந்தப் பெண்.

அந்த மனிதன், உவகைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையே தடுமாறியபடி வந்தான்.

‘‘அருகில் வா”.

அந்தப் பெண்ணின் முன்னால் வந்து நின்றான். முன்புறமாக சாய்ந்தவள் அவன் தலைமுடியை வெளிப்படையான ஆதுரத்துடன் பிடித்திழுத்தாள்.

‘‘தொடக்கத்தில் என்ன கூறினாய் என்று மீண்டும் சொல்”

‘‘நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டான் ஜோஸ். தலைமுடி இழுக்கப்பட்ட நிலையில் திரும்பியிருந்த தலை உயர்த்தி அவளைக்காண முற்பட்டான்.

‘‘அதாவது, என்னுடன் படுக்கச் சென்ற ஒருவனை நீ கொன்று விடுவாய் என்று கூறியதை” என்றாள் அந்தப் பெண்.

‘‘உன்னுடன் படுக்கைக்குச் சென்ற ஒருவனை கொன்று விடுவேன், ராணி. அது உண்மை” என்றான்.

அந்தப் பெண் அவனைப் போக விட்டாள்.

‘‘அப்படியாயின் நான் அவனைக் கொன்றால் நீ எனக்கு வக்காலத்து, சரிதானே?” என்று ஜோஸின் பன்றித்தலையை ஒருவித காட்டுமிராண்டித்தனத்துடன், தளுக்காகத் தள்ளிவிட்டு, திட்டவட்டமாக கேட்டாள். அந்த மனிதன் பதிலேதும் அளிக்கவில்லை. அவன் புன்னகைத்தான்.

‘‘பதில் கூறு, ஜோஸ்”. அந்தப் பெண் கேட்டாள். ‘‘நான் அவனைக் கொன்றிருந்தால் எனக்காகப் பரிந்து பேசுவாயா?”

‘‘நீ சொல்வதைப் போல அது ஒன்றும் அத்தனை எளிதானதில்லை. அது சிலவற்றைப் பொறுத்துதான்” என்றான் ஜோஸ்.

‘‘உன்னை விட வேறு எவரையும் போலீஸ்காரர்கள் நம்ப மாட்டார்கள்” என்றாள் அப்பெண். மதிப்பாகவும், திருப்தியாகவும் உணர்ந்தவன், புன்னகை செய்தான். கவுண்ட்டரின் மேல் அவனை நோக்கி கவிழ்ந்து கொண்டு கூறினாள்.

‘‘இது நிஜம் ஜோஸ். உன் வாழ்க்கையில் நீ இதுவரை ஒரு பொய் கூட சொல்லவில்லை என்று நான் பந்தயம் கட்டத் தயாராக இருக்கிறேன்”. அவள் சொன்னாள்.

‘‘இதனால் உனக்கு எந்தப் பயனுமில்லை” என்றான் ஜோஸ்.

‘‘ஒன்றும் வித்தியாசமில்லை. போலீஸ்காரர்களுக்கு உன்னைத் தெரியும். மேலும் நீ கூறினால் மறுவிசாரணையின்றி அவர்கள் எதையும் நம்பி விடுவார்கள் “.

என்ன சொல்வதென்று தெரியாமல் அவளுக்கு நேரெதிராக கவுண்ட்டரின் மேல் ஓங்கி குத்தத் தொடங்கினான். அந்தப் பெண் மீண்டும் சாலையை நோக்கினாள். பிறகு கடிகாரத்தை நோக்கியவள், தன் குரலை மாற்றிக் கொண்டு, பிற வாடிக்கையாளர்கள் வருவதற்கு முன்பு இந்த உரையாடலை முடித்துக்கொள்ள விருப்பமுற்றவள் போல கேட்டாள். ‘‘ஜோஸ், எனக்காக மனமாற ஒரு பொய்  சொல்வாயா?” அவள் கேட்டாள். ‘‘நிஜமாகவே”.

தலைதெறிக்கும்படியான, வலிமையானதொரு சிந்தனைவயப்பட்டவன் போல, கூர்மையான, ஆழமான பார்வையுடன் ஜோஸ் அவளை நோக்கினான். ஒரு செவி வழி நுழைந்த ஒரு சிந்தனை, ஒரு சில கணங்கள் சுழன்றுவிட்டு, தெளிவற்ற, குழப்பமுற்ற நிலையில் இறுக்கமான, சான்றடையாளமற்ற ஒரு அச்சத்தை மட்டும் விட்டுவிட்டு, மற்றொரு செவிவழியே சென்றுவிட்டது.

‘‘ராணி, எதிலாவது சிக்கிக் கொண்டுவிட்டாயா நீ?” என்று கேட்டான் ஜோஸ். கைகளை கட்டிக் கொண்டு கவுண்ட்டரின் முன்புறம் சாய்ந்து கொண்டான் மறுபடியும். கவுண்ட்டரின் மேல் வயிற்றை அழுத்திக் கொண்டிருந்த நிலையில், அவனது அமோனியா நெடியுடனான, திடமான மூச்சிக்காற்றை புலன் பற்றிக் கொண்டாள் அவள். கவுண்ட்டர் அவன் வயிற்றின் மேல் ஏற்படுத்திய அழுத்தம் அவனது சுவாசத்தை சிரமப்படுத்தியது.

‘‘இது மெய்யாகவே விபரீதமானது, ராணி. எதில் சிக்கிக் கொண்டுள்ளாய் நீ?” என்று கேட்டான்.

எதிர்த்திசை நோக்கி தலையை சுழலவிட்டாள் அந்தப் பெண்.

‘‘ஒன்றுமில்லை”.என்றாள் அவள். ‘‘என்னை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டி எதேச்சையாக பேசிக் கொண்டிருந்தேன்” என்று கூறினாள்.

மறுபடியும் அவனை நோக்கினாள்.

‘‘உனக்குத் தெரியுமா நீ எனக்காக எவரையும் கொல்ல வேண்டியிராது என்று?”

‘‘எவரையும் கொல்ல வேண்டுமென்று நான் எப்பொழுதுமே எண்ணியதில்லை” என்று கவலையுடன் கூறினாள் ஜோஸ்.

‘‘இல்லை, ஐயா”.அந்தப் பெண் சொன்னாள். ‘‘என்னுடன் படுக்கைக்கு எவரும் வருவதில்லை என்பது பற்றி நான் சொல்கிறேன்”

‘‘ஓஹோ”, ஜோஸ் சொன்னான். ‘‘இப்பொழுதுதான் நேரடியாகப் பேசுகிறாய். நான் எப்பொழுதுமே எண்ணுவதுண்டு உனக்கு இதுபோன்ற ராத்திரி அலைச்சல்கள் தேவையில்லை என்று. இதையெல்லாம் நீ விட்டுவிட்டாயானால், சத்தியமாய், மிகப் பெரிய ஸ்டீக் சமைத்து தினந்தோறும் உனக்கு இலவசமாகத் தருவேன்”

‘‘நன்றி, ஜோஸ்”, என்றாள் அந்தப் பெண். ‘‘ஆனால், அது எதனாலென்றால் என்னால் இனிமேல் எவன் ஒருவனுடனும் என்னால் படுக்கைக்குச் செல்ல இயலாது”.

‘‘நீ மீண்டும் எல்லாவற்றையும் குழப்புகிறாய்,” பொறுமையிழந்து போனான் ஜோஸ்.

‘‘நான் எதையும் குழப்பவில்லை” என்றாள். அவள் தன் இருக்கையில் நீட்டி முறித்துக்கொண்டாள். பிரேஸியருக்கடியில் அவளது தட்டையான, கவர்ச்சியற்ற துயரார்ந்த மார்பகங்களை கண்டான் ஜோஸ்.

‘‘நாளை நான் போகிறன். சத்தியமாய் நான் இனி உன்னை தொந்தரவு செய்ய  வரமாட்டேன். இனி நான் எவருடனும் படுக்கைக்குச் செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்.”

‘‘எங்கிருந்து இந்த அவசரக் கிளர்ச்சி உனக்கு வந்தது?” ஜோஸ் கேட்டான்.

‘‘ஒரு நிமிடத்திற்கு முன்பாகத்தான் முடிவு செய்தேன்”. அந்தப் பெண் சொன்னாள். ‘‘சற்று முன், ஒரு நிமிடத்திற்கு முன், இது ஒரு கறைபடிந்த தொழில் என்று உணர்ந்தேன்” அந்தப் பெண் கூறினாள்.

ஜோஸ் அந்தப் துணியை எடுத்து மறுபடியும் அவன் முன் இருந்த கண்ணாடியை துடைக்க ஆரம்பித்தான். அவளைப் பார்க்காமல் கூறினான்: ‘‘நிச்சயமாய், நீ செய்துவரும் விதம் காரணமாக கறைபடிந்த தொழில்தான். இதை எப்போதோ நீ உணர்ந்திருக்க வேண்டும்.”

‘‘வெகு நாட்களுக்கு முன்பாகவே நான் புரிந்து கொண்டு தானிருந்தேன்”. அந்தப் பெண் சொன்னாள். ‘‘ஆனால் சற்று முன்னர்தான் நம்பிக்கையூட்டப்பட்டேன். ஆண்கள் எனக்கு அருவருப்பூட்டுகிறார்கள். வெறுப்பு ஏற்படுத்துகிறார்கள்”. ஜோஸ் புன்னகைத்தான். தலையை உயர்த்தி, புன்னகைத்தபடியே அவளைப் பார்க்க முற்பட்டான். ஆனால், அவன் பார்த்தது ஒருமுனைப்படுத்தப்பட்ட, குழப்பமடைந்த முகத்தை, தோள்களை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்த, மௌன முகபாவத்துடன், பருவமுறாத இலையுதிர்கால தானிய மெருகு ஏற்றப்பட்ட முகத்தை. ஸ்டூல் மேல் உட்கார்ந்தபடி சுழன்று கொண்டிருந்த அவள் முகத்தை.

‘‘ஒருவனுடன் கூடித் தனித்திருந்த பின்னர் அவனிடம் ஏற்படும் அருவருப்பு காரணமாக அல்லது அவளுடனிருந்த எல்லோர் மீதும் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, ஒருவனை கொன்று விட்டாள் என்றால் அவளை அனைவரும் நீக்கி வைத்து விடுவார்கள் என்று நீ நினைக்கவில்லையா?”

‘‘அந்தளவிற்குப் போக அவசியமில்லை” நூலிழையாய் இரக்கம் தொனிக்க கலங்கிப்போய் கூறினான் ஜோஸ்.

‘‘பகல் முழுவதும் ஒருவனோடு உருண்டு புரண்ட ஞாபகம் எந்த சவுக்காரமும் அந்த ஆண் வாசனையை அவளிடமிருந்து துப்புரவு செய்து நீக்கிவிடாது என்று உணர்த்துவதை, தன்னை அருவருக்கவைத்த ஆணிடம் அவன் மீண்டும் உடையணியும் சமயம் கூறிவிடுவதில் என்ன தவறு இருக்கிறது?”

கவுண்ட்டரை சுத்தம் செய்தவண்ணம் சிரத்தையற்றுக் கூறினான் ஜோஸ், ‘‘அவை அப்படியே போகட்டும் ராணி. அவனைக் கொல்வதற்கு காரணம் எதுவும் இல்லை. விட்டுவிடு அவனை”. ஆனால், அவள் பேசிக் கொண்டே போனாள். அவள் குரல் சீராக, தங்கு தடையின்றி, கட்டுக்கடங்காத உணர்ச்சி ஓட்டமாக ஒலித்தது.

‘‘ஆனால், அருவருக்கச்செய்கிறான் என்பதை அந்தப் பெண் அவனிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே, உடையணிவதை நிறுத்திவிட்டு, மீண்டும் அவள் மேல் விழுந்து, முத்தமிட்டு இயங்கினான் என்றால். . . ?”

‘‘நாகரீகமான எந்த மனிதனும் அதுபோன்று எப்போதும் செய்ய மாட்டான்,” என்றான் ஜோஸ்.

‘‘அப்படி அவன் செய்திருந்தால்?” என்று கேட்டாள் அவள் எரிச்சலூட்டும் தவிப்புடன். ‘‘நாகரீகமற்றவனாக ஒரு ஆண் அதுபோன்று நடந்து கொண்டால் தான் என்ன? இன்னும் அதிகபட்ச அருவருப்பு கொள்ளும் அந்தப் பெண் செத்துப் போய்விடலாம் என்றுதான் நினைப்பாள், மேலும், அதற்கெல்லாம் முடிவு கட்டுவதற்கான ஒரே வழி ஒரு கத்தியை அவனுள் சொருகி விடுதல்தான்”.

‘‘அது கொடூரம்”, என்றான் ஜோஸ். ‘‘அதிர்ஷ்டவசமாக, நீ சொன்னது போல செய்யக் கூடியவன் எவனுமில்லை”.

‘‘நல்லது”, மிகுந்த எரிச்சலுடன், பொறுமையிழந்து போய் சொன்னாள். ‘‘அதுபோல ஒருவன் செய்திருந்தான் என்றால்?”

‘‘ஒருவேளை அப்படி ஒருவன் நடந்து கொண்டான் என்றால்?”

‘‘எப்படியாயினும் அது அத்துணை மோசமானதில்லையே’‘ என்றான் ஜோஸ், அவன் இருக்கும் நிலையை மாற்றிக் கொள்ளாமல், கவுண்ட்டரை சுத்தம் செய்து கொண்டே, உரையாடலில் சற்று சுவாரசியமில்லாதிருந்தான்.

முஷ்டியால் கவுண்ட்டரில் ஓங்கி அடித்தாள். அழுத்தம் கூடியவளாய், வலியுறுத்தும் பாவனையில் மாறியிருந்தாள் அவள்.

‘‘நீ ஓரு காட்டுமிராண்டி, ஜோஸ்”.அவள் சொன்னாள். ‘‘உனக்கு ஏதும் புரியாது”. அவன் சட்டையை பிடித்து இழுத்தாள். ‘‘வா, இங்கே,சொல். அந்தப் பெண் அவனைக் கொன்று போடவேண்டும் என்று சொல் என்னிடம்”, என்றாள். இணங்கிவிட்டது போன்ற பாவனையில், ஒருதலைபட்சமாய் ‘‘சரி” என்றான். ‘‘எல்லாம் நீ சொல்வதுபடியே அந்த விதத்திலேயே இருக்கக் கூடும்தான்.”

‘‘அது தற்காப்பு இல்லையா?” அவன் சட்டைக்கையைப் பற்றி இழுத்துக் கொண்டே கேட்டாள் அந்தப் பெண். ஜோஸ், அதிக அக்கறையில்லாத ஆனால் உவகையான பார்வை ஒன்றை அவள் மேல் வீசியபடி, கூறினான்.

‘‘கிட்டத்தட்ட அப்படித்தான்”. உள்ளன்புடன் புரிந்து கொண்டதாகவும், குற்றம்புரிய உடந்தையாயிருக்கும் அதே சமயம் அச்சமூட்டும் இணக்கம் போன்ற ஒரு முகபாவத்துடன் அவளைப் பார்த்து கண்சிமிட்டினான்.

‘‘அது போன்ற செயல்புரிந்த ஒரு பெண்ணை நீ ஒரு பொய் சொல்லி காப்பாற்றுவாயா?” அவள் கேட்டாள்.

‘‘அது ஒன்றைப் பொறுத்து”, ஜோஸ் கூறினான்.

‘‘எந்த ஒன்றைப் பொறுத்து?”,அந்தப் பெண் கேட்டாள்.

‘‘அந்தப் பெண்ணைப் பொறுத்து”

‘‘ஒருவேளை அது நீ மிகவும் நேசிக்கும் பெண்ணாக இருந்தால்?” என்றாள் அவள். ‘‘அவளுடன் நீ இணைவதற்காகவல்ல. ஆனால் நீ  சொல்வது போல, நீ மிகவும் நேசிக்கும் பெண்”

‘‘நீ எது சொன்னாலும் சரிதான், ராணி”, தளர்ந்து, சலித்துப் போய் கூறினான் ஜோஸ்.

அவன் மீண்டும் சென்றுவிட்டான். கடிகாரத்தை நோக்கினான். 6.30 மணி ஆகிவிட்டிருந்ததை பார்த்தான் ஜன்னல் வாயிலாக சாலையை நோக்கியபடி. இன்னும் ஒரு சில நிமிடங்களில் அந்த உணவகம் மனிதர்களால் நிறையத்துவங்கும் என்று நினைத்தான். அதனால்தானோ என்னவோ, தன்னிச்சையாய் அந்தக் கண்ணாடியை சற்று கூடுதல் கவனத்துடன், பளபளக்க, தேய்த்துக் கொண்டிருந்தான்.

ஸ்டூலில் அமர்ந்து கொண்டு அமைதியாய், கவனமாய் அம்மனிதனின் அசைவுகளை, நடமாட்டத்தை ஒரு குறைவடையும் துயரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். அணையும் தறுவாயில் உள்ள விளக்கு ஒரு மனிதனை பார்க்கக் கூடும் சாத்தியத்தில் அவனை கவனித்துக் கொண்டிருந்தாள்.

திடீரென, எண்ணெய் வழவழப்பு குரலில், எதிர்ச் செயல் அற்று, அடிமைத்தனத்துடன் பேசினாள்.

‘‘ஜோஸ்”

அழுத்தமான, சோகம் மென்மை சேர்ந்து கொள்ள ஒரு எருதின் தாய்மை உணர்வோடு அவளைப் பார்த்தான். அவள் பேசுவதை கேட்பதற்காக அவன் அவளைப் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்பதற்காகவும், அவள் அங்குதானிருக்கிறாள் என்று உணர்ந்து கொள்வதற்கும், ஏற்புடைய ஒரு பாதுகாப்பு பார்வைக்காக காத்திருக்கிறாள் என்பதற்காகவும் மட்டும். வெறும் விளையாட்டுப் பொருளின் பார்வையுடன்.

‘‘நாளை நான் கிளம்புகிறேன் என்று கூறினேன். நீ எதுவும் சொல்லவில்லையே” என்றாள் அந்தப் பெண்.

‘‘சரி. எந்த இடத்திற்கு என்று நீ கூறவில்லையே” என்றான் ஜோஸ்.

‘‘அங்கேதான் எங்கோ. எங்கே ஆண்களுக்கு படுக்கையில் ஏதாவதொரு துணை தேவையிராதோ அந்த இடத்திற்கு” என்றாள். ஜோஸ் புன்னகைத்தான்.

‘‘மெய்யாகவே நீ போகிறாயா?”, விரைவாக ஏதோ திடீரென்று வாழ்வு பற்றிய ஞானோதயம் ஏற்பட்ட உணர்வுடன் தன் முகபாவத்தை மாற்றிக்கொண்டு கேட்டான்.

‘‘அது உன்னைப் பொறுத்து” என்றாள். ‘‘சரியாக இங்கே நான் எப்போது வந்தேன் என்று கூற உனக்குத் தோதாகுமேயானால், நான் நாளை போய் விடுவேன். மறுபடியும் இந்த மாதிரி எதிலும் சிக்கிக் கொள்ள மாட்டேன். என்ன சொல்கிறாய் நீ?”

ஆமாம் என்பதான தலையசைப்போடு, எளிமையாய் ஸ்தூலமாய் புன்னகைத்தான்.

அவனிருந்த இடம் நோக்கி அவள் சாய்ந்தாள்.

‘‘என்றாவது ஒருநாள் நான் மறுபடியும் இங்கு வருவேன் என்றால், இதே ஸ்டூலில், இதே நேரத்தில் உன்னுடன் யாரேனும் ஒரு பெண் பேசிக்கொண்டிருப்பாள் எனின் அவள் மீது நான் பொறாமை கொள்வேன்”

‘‘நீ மறுபடியும் இங்கு வருவதாயிருந்தால் எனக்காக ஒன்று கொண்டு வரவேண்டியிருக்கும்’ என்றான் ஜோஸ்.

‘‘எங்கேயிருந்தாயினும் அந்த சாதுவான கரடி ஒன்றை தேடி, அதை உன்னிடம் சத்தியமாய் கொண்டுவருவேன்” என்றாள் அந்தப் பெண். ஏதோ கண்ணுக்குப் புலப்படாத ஒரு கண்ணாடி பலகணியை சுத்தம் செய்வது போல, அந்தப் பெண்ணிடமிருந்து இவனை விலக்கியிருந்த காற்றினூடாக கைத்துணியை அசைத்து, ஆட்டி புன்னகைத்தான்.

பொழுது போக்கிற்காக காதல் புரியும் முகத்தோற்றத்துடன், இதமாய் அந்தப் பெண் புன்னகைத்தாள். பிறகு அந்த மனிதன் கவுண்ட்டரின் வேறு பகுதிக்குச் சென்றான். கண்ணாடியை துடைத்து மெருகேற்றிக்கொண்டே.

‘‘பிறகு, என்ன?” என்றான் ஜோஸ் அவளைப் பார்க்காமல்.

‘‘நான் இங்கு ஆறுமணி ஆவதற்கு கால்மணிநேரம் முன்னதாகவே வந்தேன் என்று உன்னிடம் கேட்போரிடம் நிஜமாய்க் கூறுவாயா?” என்று கேட்டாள் அந்தப் பெண்.

அவளை நோக்கி இன்னும் பார்வை திருப்பாமல், அவள் பேசியதை மாத்திரம் கேட்டவன் போல,    ‘‘எதற்காக?” என்றான் ஜோஸ்.

‘‘அது ஒன்றுமில்லை”. அந்தப் பெண் சொன்னாள். ‘‘விஷயம் என்னவெனில் நான் கூறியது  நீ போலவே செயல்பட வேண்டும்” என்றாள் அந்தப் பெண்.

தள்ளு கதவினூடே வந்த முதல் வாடிக்கையாளர் மூலையில் இருந்த மேஜையை நோக்கிச் சென்றதை ஜோஸ் கண்டான். கடிகாரத்தைப் பார்த்தான். துல்லியமாய் 6.30 மணி ஆகியிருந்தது. கவனம் சிதைந்து போய், ‘‘சரி, ராணி”. ‘‘நீ கூறுவது எதுவாயினும், நீ விரும்பிய வண்ணமே நான் எப்போதும் செயல்படுவேன்”

‘‘நல்லது. அப்படியானால் எனக்கான ஸ்டீக் சமைக்க ஆரம்பி” என்றாள் அந்தப் பெண்.

குளிர் சாதனப் பெட்டியிலிருந்து மாமிசத்துண்டு இருந்த ஒரு தட்டை எடுத்து மேஜைமேல் வைத்தான். பிறகு அடுப்பைப் பற்ற வைத்தான்.

‘‘சிறந்த பிரிவுபசார ஸ்டீக் உனக்காக சமைக்கப் போகிறேன்” என்றான் அவன்.

‘‘நன்றி, பெப்பில்லோ”, என்றாள் அவள். ஈரமண்குழைவில், முன்பின் அறிந்திராத வடிவங்களாய் மனிதர்கள் நிறைந்த புதுமையான பாதாள உலகத்தினுள் அமிழ்ந்து போய் விட்டதுபோல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் அவள்.

இறைச்சித்துண்டு எரிந்து, உருகிய கொழுப்பின் மேல் விழும்போது எழுந்த ஒலியை கவுண்ட்டரின் மறுபக்கத்தில் கேட்க இயலவில்லை அவளால். மேலும், வறுக்கும் சட்டியில் புரட்டிப்போட்ட விலாப்பக்கத் துண்டு எழுப்பிய சடசடவென்ற ஓசையையும் அவள் கேட்க வில்லை. கணங்களை கணக்கிட்டபடி அந்த உணவகத்தின் காற்று மண்டலம்  உவகை தரும் வாசனையால் முழுவதுமாய் நிறைத்தது. கணநேர இறப்பிலிருந்து மீண்டு வருபவளைப் போல, திருதிருவென விழித்துபடி, தன் தலையை உயர்த்திக் கொள்ளும் வரை. இப்படியே ஆழ்ந்த, மிக ஆழ்ந்த நிலையில் இருந்தாள். பிறகு, கொழுந்துவிட்டெறியும் நெருப்புடனான அடுப்பின் அருகில் அவனைக் கண்டாள்.

‘‘பெப்பில்லோ”

‘‘என்ன?”

‘‘நீ எதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாய்?” அந்தப் பெண் கேட்டாள்.

‘‘நீ சொன்ன அந்த யந்திர கரடி பொம்மையை எங்கேனும் உன்னால் கண்டு பிடிக்க முடியுமா என்று வியந்து கொண்டிருந்தேன்”, என்றான் ஜோஸ்.

‘‘வாஸ்தவமாக என்னால் முடியும்” என்றாள்.

‘‘உன்னிடமிருந்து எனக்கானது என்று நான் வேண்டுவதெல்லாம் ஒரு விடைபெறும் நேரத்துப் பரிசுதான்”.

அடுப்பிலிருந்து பார்வையை அவள் மீது மாற்றினான். ‘‘எத்துணை முறை நான் உனக்குக் சொல்வது?”. அவன் சொன்னான். ‘‘என்னிடமிருக்கும் மிகச் சிறந்த ஸ்டீக்கை விட வேறு ஏதேனும் உனக்கு வேண்டுமா?” என்றான் அவன்.

‘‘ஆமாம்” என்றாள் அந்தப் பெண்.

‘‘என்ன அது?” ஜோஸ் கேட்டான்.

‘‘கூடுதலாய் ஒரு கால்மணி நேரம் எனக்கு வேண்டும்”.

ஜோஸ் பின்னோக்கி நகர்ந்து கடிகாரத்தைப் பார்த்தான். பின்பு அந்த மூலையில் அமைதியாக காத்துக் கொண்டிருந்த வாடிக்கையாளரைப் பார்த்தான் இறுதியாக வறுபட்டுக் கொண்டிருந்த இறைச்சித் துண்டத்தை.

பிறகுதான் பேசினான் அவன்.

‘‘எனக்குப் புரியவில்லை, ராணி, மெய்யாகவே”.

‘‘முட்டாளாயிராதே, ஜோஸ்” என்றாள் அந்தப் பெண். ‘‘அப்படியே ஞாபகம் வைத்துக் கொள். நான் 5.30 மணியிலிருந்து இங்கே இருந்து கொண்டிருக்கிறேன் என்பதை”.

010

*செயற்கை ரோஜாக்கள் மற்றும் ஆறுமணிக்கு வந்த அந்தப் பெண் ஆகிய கதைகள் மொழிபெயர்ப்பாளரின் அனுமதி பெற்ற பின்னரே வலைப்பூவில் இடுகை செய்யப்பட்டுள்ளன.

The Woman Who Came at Six O’clock, Gabriel Garcia Marquez: Collected Stories, tr.Gregory Rabassa & J.S.Bernstein, Jonathan Cape, London, 1991.

செயற்கை ரோஜாக்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்/Artificial Roses-Gabriel Garcia Marquez


View blog authority

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

செயற்கை ரோஜாக்கள்

ஆங்கிலத்திலிருந்து தமிழில்- ரெங்கநாயகி


இருள் பிரியாத விடியற்காலைப் பொழுதில் தன் வழியை உணர்ந்தவாறு, முந்தைய இரவு படுக்கையருகே தொங்கவிட்டிருந்த கைப்பகுதியற்ற உடையை அணிந்து கொண்டு டிரங்குப் பெட்டியில் பிரித்து அணியக்கூடிய சட்டைக் கைகளைத் துருவித் தேடினாள். பிறகு அதே அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவளது கண் தெரியாத பாட்டியை எழுப்பி விடாதிருக்கும் பொருட்டு சப்தம் செய்யாமலிருக்க முயன்றபடி கதவுகளுக்குப் பின்னாலும் சுவர் ஆணிகளிலும் தேடினாள். ஆனால் இருட்டுக்கு அவள் கண்கள் பழகிவிட்ட பின் அவள் பாட்டி ஏற்கனவே எழுந்து விட்டிருந்ததைக் கவனித்தாள். பிறகு அந்த சட்டைக் கைகள் எங்கே இருக்கின்றன என்று அவளிடம் கேட்பதற்காகச் சமயலறைக்குச் சென்றாள்.

‘‘அவை குளியலறையில் இருக்கின்றன”, அந்த பார்வையற்றவள் கூறினாள். ‘‘நான் நேற்று மதியம் அவற்றைத் துவைத்தேன்”. அவை அங்கேதானிருந்தன, ஒரு கொடிக்கம்பியில் இரண்டு மரக்கிளிப்புகளில் பொருத்தப்பட்டு, இன்னும் ஈரமாக இருந்தன. மினா சமயலறைக்குச் சென்று அந்த சட்டைக் கைகளை அங்கிருந்த கணப்புக்கல் மீது பரத்தினாள். அவளுக்கு நேரெதிராக, எந்த இடத்தில் மருந்து மூலிகைச் செடிகள் கொண்ட பூந்தொட்டிகளின் வரிசை இருந்ததோ அந்த வராந்தாவின் கல் விளிம்பின் மேல் நிலை குத்திப் போன கண் பாவைகளுடன் பார்வையற்ற முதியவள் காபி கலக்கிக் கொண்டிருந்தாள்.

‘‘மறுபடி ஒரு தடவை என் பொருட்களை எடுக்காதே”, என்றாள் மினா. ‘‘வெய்யிலை நம்ப முடியாத நாட்கள் இவை.”
பார்வையற்றவள் அந்தக் குரலை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினாள்.

‘‘இது முதல் வெள்ளிக் கிழமை என்பதை நான் மறந்து விட்டேன்” என்றாள் அவள்.
காபி தயாராகி விட்டதா என்பதை ஒரு ஆழமான மூச்சிழுப்பில் சோதித்த பின் அந்தப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கினாள்.

‘‘ஒரு காகிதத்தை அடியில் போட்டுக் கொள், ஏனெனில் இந்தக் கற்கள் அழுக்காக இருக்கின்றன.”

சுட்டு விரலால் அந்தக் கணப்புக் கற்களைத் தேய்த்துப் பார்த்தாள் மினா. அவை அசுத்தமாக இருந்தன. ஆனால் படிவமாய் கரிப்புகை படிந்த மேல்பாகத்தில் அழுந்த உரசாமல் போனால் அந்தச் சட்டைக் கைகள் அழுக்காகாது.

‘‘அவை அழுக்கானால் நீதான் பொறுப்பு”, என்றாள் மினா.

பார்வையற்ற முதியவள் தனக்கு ஒரு கோப்பை காபியை ஊற்றிக் கொண்டாள். ‘‘நீ கோபமாக இருக்கிறாய்” வராந்தாவை நோக்கி நாற்காலியை இழுத்துப் போட்டவாறு கூறினாள் அவள். ‘‘கோபமாக இருக்கும் போது ஒருவர் புதிய நன்மை பெறுவது தெய்வ நிந்தனை.”

உள் முற்றத்திலிருந்த ரோஜாச் செடிகளுக்கு எதிராக காபி அருந்துவதற்கு அமர்ந்து கொண்டாள். கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்புக்கான மூன்றாவது மணி அடித்த போது கணப்புக் கல்லிலிருந்து இன்னும் ஈரமாக இருந்த அந்த சட்டைக் கைகளை எடுத்தாள் மினா. ஆனாலும் அவற்றை அணிந்து கொண்டாள். மறைக்கப்படாத வெற்றுத் தோள்கள் தெரியும் உடையில் இருந்தால் பாதிரியார் ஏஞ்சல் அவளுக்குப் புதிய நன்மை தர மாட்டார். அவள் முகம் கழுவிக் கொள்ளவில்லை. முகத்தின் ரூஜ் தீற்றல்களை துண்டால் துடைத்துக் கொண்டு, அவள் அறையிலிருந்த சால்வை மற்றும் பைபிளை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினாள். கால் மணி நேரத்தில் திரும்பி வந்து விட்டாள்.

செடிகளுக்கு எதிரே அமர்ந்திருந்த அந்த பார்வையற்ற முதியவள் கூறினாள்.

மினா நேராகக் கழிவறைக்குச் சென்றாள். ‘‘நான் கூட்டுப் பிரார்த்தனைக்குச் செல்ல முடியாது,’‘ என்றாள். ‘‘என் சட்டைக் கைகள் ஈரமாகவும், உடை எல்லாம் சுருக்கமாகவும் இருக்கிறது. ஒரு அர்த்தமுள்ள பார்வை தன்னைத் தொடர்வதை அவள் உணர்ந்தாள்.

‘‘முதல் வெள்ளி நீ கூட்டுப் பிரார்த்தனைக்குப் போக மாட்டாயா?” ஆச்சரியப்பட்டாள் பார்வையற்றவள்.
கழிவறையிலிருந்து திரும்பிய மினா அவளுக்காக ஒரு கோப்பை காபி ஊற்றிக் கொண்டு பார்வையற்றவளின் அருகில் வெள்ளையடிக்கப்பட்டிருந்த அந்தக் கதவு வழியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். ஆனால் அவளால் காபியை குடிக்க முடியவில்லை.

‘‘நீ தான் காரணம்”, மந்தமான ஒரு வன்மத்துடன் தான் கண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் உணர்வுடன் முணுமுணுத்தாள் அவள்.

‘‘அழுதுகொண்டிருக்கிறாய் நீ!” பார்வையற்றவள் வியந்தாள். ஒரிகேனோ (சமையலுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைக் கீரை) இருந்த பூந்தொட்டிக்கு அருகில் பூவாளியை வைத்து விட்டு உள் முற்றத்திற்குச் சென்றவள், மறுபடியும் கூறினாள், ‘‘நீ அழுது கொண்டிருக்கிறாய்!” நிமிர்ந்து உட்காரும் முன்னர் கோப்பையை தரையில் வைத்தாள் மினா.

‘‘நான் கோபத்தால் அழுது கொண்டிருக்கிறேன்” அவள் கூறினாள், பாட்டியின் அருகில் நகர்ந்தவாறே, மேலும் கூறினாள், ‘‘நீ பாவமன்னிப்பு கேட்கச் செல்ல வேண்டும், ஏனெனில் நீதான் நான் முதல் வெள்ளியின் புதிய நன்மை இழந்து விடக் காரணம்.”

மினா அந்த படுக்கையறைக் கதவை மூடுவதற்காக அசைவின்றிக் காத்திருந்த பின், பார்வையற்ற முதியவள், தொடப்பட்டிராத அந்தக் கோப்பையின் துண்டுப்பகுதி தரையில் தட்டுப்படும் வரை வராந்தாவின் ஒரு கோடிக்கு நடந்தவள் சற்று நிறுத்தி குனிந்தாள். மண் தொட்டியில் காபியை கொட்டிவிட்டு தொடர்ந்தாள்-
‘‘ஆண்டவருக்குத் தெரியும் நான் தெளிந்த மனசாட்சி உடையவள் என”

படுக்கையறையிலிருந்து மினாவின் தாயார் வெளியே வந்தாள்.

‘‘யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் நீ?” என்று கேட்டாள்.

‘‘யாரிடமும் இல்லை”, பார்வையற்றவள் சொன்னாள். ‘‘நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லியிருக்கிறேனே என் புத்தி தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று”

தன் அறையின் பாதுகாப்பில் இருந்தவாறு, மினா உள்பாடி பட்டன்களை கழற்றி சேஃப்டி பின்னில் கோர்த்திருந்த மூன்று சிறிய சாவிகளை எடுத்தாள். அவற்றில் ஒன்றைக் கொண்டு துணி அலமாரியின் கீழ் இழுப்பறையைத் திறந்து ஒரு சிறிய மரப்பெட்டியை எடுத்தாள். அதை வேறு ஒரு சாவியால் திறந்தாள். உள்ளே ஒரு ரப்பர் பேண்டினால் சுற்றப்பட்ட, வண்ணத்தாள்களில் எழுதப்பட்ட ஒரு கற்றை கடிதங்கள் இருந்தன. அவற்றைத் தனது உள்பாடிக்குள் மறைத்து கொண்டு, அந்தச் சின்னப் பெட்டியை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு, இழுப்பறையைப் பூட்டினாள். பிறகு கழிவறைக்குச் சென்று அந்தக் கடிதங்களை வீசியடித்தாள்.

மினா சமையலறைக்குள் வந்தபோது, ‘‘நீ தேவாலயத்தில் இருப்பாய் என்றல்லவா நான் நினைத்தேன்,” அவள் தாயார் கூறினாள்

‘‘அவளால் போக முடியவில்லை”, பார்வையற்றவள் இடைமறித்துக் கூறினாள். ‘‘நான் முதல் வெள்ளி என்பதை மறந்து போய் நேற்று மதியம் அந்தச் சட்டைக் கைகளைத் துவைத்து விட்டேன்”

‘‘அவை இன்னும் ஈரமாக இருக்கின்றன”, மினா முணுமுணுத்தாள்.

‘‘நான் இப்போதெல்லாம் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது” என்றாள் பார்வையற்ற முதியவள்.

‘‘ஈஸ்டருக்கு ஒரு நூற்று ஐம்பது டஜன் ரோஜாக்களை நான் முடித்துக் கொடுக்க வேண்டியுள்ளது”, மினா கூறினாள்.
சீக்கிரமாகவே சூரியன் வெதுவெதுக்கத் தொடங்கியது. ஏழு மணிக்கு முன்னரே மினா காகித ரோஜாக்கடையை வரவேற்பறையில் அமைத்தாள்ஙி ஒரு கூடை நிறைய கிரேப் பேப்பர், இரண்டு கத்திரிக் கோல்கள், ஒரு நூல் கண்டு, ஒரு மண் சட்டியில் பசை. ஒரு நொடி கழித்து தன் கையில் ஒரு அட்டைப் பெட்டியுடன் வந்து சேர்ந்த ட்ரினிடாட் ஏன் அவள் (மினா) கூட்டுப் பிரார்த்தனைக்குச் செல்லவில்லை என்று கேட்டாள்.

‘‘என்னிடம் சட்டைக்கைகள் இல்லை” என்றாள் மினா.

‘‘எவர் வேண்டுமானாலும் உனக்குக் கடனாகக் கொடுத்திருக்க முடியும்” ட்ரினிடாட் கூறினாள். பூ இதழ்கள் வைத்திருந்த கூடைக்கு அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள் அவள்.

‘‘நான் மிகவும் தாமதமாகியிருந்தேன்” மினா கூறினாள். ஒரு ரோஜா செய்து முடித்தாள். பிறகு கத்திரிக் கோலின் உதவியுடன் பூ இதழ்களில் சுருக்கம் வைக்க அந்தக் கூடையை தன்னருகே இழுத்துக் கொண்டாள். ட்ரினிடாட் அந்த அட்டைப் பெட்டியை தரையில் வைத்து விட்டுத் தானும் அந்த வேலையில் இணைந்து கொண்டாள்.
மினா அந்தப் பெட்டியைப் பார்த்தாள்.

‘‘ஷுக்கள் வாங்கினாயா நீ?” என்று கேட்டாள்.

‘‘செத்த எலிகள் அவை”, ட்ரினிடாட் கூறினாள்.

சுருக்கம் வைத்து காகிதப்பூ இதழ்கள் செய்வதில் ட்ரினிடாட் தேர்ந்தவள் என்பதால் மினா, பச்சை நிறத்தாள்கள் சுற்றிய கம்பிக் காம்புகள் செய்வதில் நேரம் செலவழித்தாள். எளிய கிராமாந்திர வாழ்க்கையைச் சித்தரிக்கும் படங்களாலும், குடும்பப் புகைப்படங்களாலும் அழகு படுத்தப்பட்டிருந்த அந்த வரவேற்பறையில் சூரியன் முன்னேறிக் கொண்டிருந்ததை கவனியாது, அமைதியாக அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். காம்புகள் செய்து முடித்தவுடன் மினா ட்ரினிடாடை நோக்கித் திரும்பினாள்þவெறுமையில் முடிவது போன்ற ஒரு முகத்துடன். மெச்சத் தகுந்த வகையில் சுத்தமாக, அவளது விரலிடுக்கில் இருந்த காகித இதழ் நுனியை நகர்த்தி விடாமல் சுருக்கம் வைத்துக் கொண்டிருந்தாள் ட்ரினிடாட், கால்களை நெருக்கிக் கொண்டு. ஆண்களுக்கானது போன்ற அவளுடைய ஷுக்களை மினா நோட்டம் விட்டாள். தன் தலையை உயர்த்தாது ட்ரினிடாட் அந்தப் பார்வையைத் தவிர்த்தாள். கால்களைப் பின்னுக்கு இழுக்காமல் வேலை செய்வதை நிறுத்தினாள்.

‘‘என்ன விஷயம்?” அவள் கேட்டாள்

மினா அவளை நோக்கி சாய்ந்தாள்.

‘அவன் போய் விட்டான்,” அவள் சொன்னாள். ட்ரினிடாட் கத்திரிக்கோல்களை மடியில் நழுவவிட்டாள்.

‘‘இருக்காது”

‘‘அவன் போய் விட்டான்,” திரும்பச் சொன்னாள் மினா. இமைக்காது அவளைப் பார்த்தாள் ட்ரினிடாட். செங்குத்தாய் ஒரு நெற்றிச்சுருக்கம் அவள் புருவ முடிச்சைப் பிரித்தது.

‘சரி, இப்போது?,” அவள் கேட்டாள்.

மினா நிதானமான குரலில் பதில் சொன்னாள் ‘‘இப்போது ஏதுமில்லை”. ட்ரினிடாட் பத்து மணிக்கு முன்னதாகவே விடை பெற்றுக் கொண்டாள். அவள் அருகாமை தந்த பாரத்தினின்று விடுபட்டவளாய் ஒரு நிமிடம் அவளை நிறுத்தினாள் அந்த செத்த எலிகளை கழிவறைக்குள் எறிந்துவிட. அந்தப் பார்வையற்ற பெண்மணி ரோஜாப் புதரை நறுக்கி விட்டுக் கொண்டிருந்தாள் .

அவளைக் கடந்து செல்கையில், ‘‘பந்தயம், இந்தப் பெட்டியில் நான் வைத்திருப்பது என்னவென்று உனக்குத் தெரியாது”, என்றாள் மினா.
அந்த எலிகளை குலுக்கினாள் அவள்.

பார்வையற்ற முதியவள் கவனம் செலுத்தி, ‘‘மறுபடியும் அதைக் குலுக்கு” என்றாள். மீண்டும் அசைத்தாள் மினா. ஆனால், தன் காது மடல் மீது சுட்டுவிரலை அழுத்திக் கொண்டு மூன்றாம் முறையாகக் கேட்ட பிறகும் கூட அவை என்ன என்பதை பார்வையற்றவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.
‘‘தேவாலயத்தின் எலிப்பொறிகளில் நேற்றிரவு பிடிக்கப்பட்ட எலிகள்தான் அவை” மினா சொன்னாள்.

அவள் திரும்ப வந்ததும் ஏதும் பேசாது அந்தப் பார்வையற்ற முதியவளைக் கடந்து சென்றாள். ஆனால் பார்வையற்றவள் அவளைப் பின் தொடர்ந்தாள். வரவேற்பறையை அடைந்ததும், மூடியிருந்த ஜன்னலுக்கு அடுத்து, அந்த காகித ரோஜாக்களை செய்து முடித்தபடி இருந்தாள், தனிமையில்.

‘‘மினா” என்றாள் பார்வையற்றவள். ‘‘நீ மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் முன்பின் தெரியாதவர்களிடம் மனந்திறந்து எதையும் சொல்லாதே.”

எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தாள் மினா. அவளுக்கு நேரெதிராக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள், வேலையில் அவளுக்கு உதவ முற்பட்டபோது மினா அவளைத் தடுத்தாள்.

‘‘நீ பதற்றத்திலிருக்கிறாய்,” பார்வையற்றவள் கூறினாள்.

‘‘நீ ஏன் கூட்டுப் பிரார்த்தனைக்குச் செல்லவில்லை?” அவள் கேட்டாள்.

‘‘உனக்கு நன்றாகத் தெரியும் வேறு எவரையும் விட”.

‘‘அந்த சட்டைக் கைகள் காரணமாக இருந்தால் வீட்டை விட்டு கிளம்ப யத்தனித்திருக்க மாட்டாய்” என்றாள் பார்வையற்றவள்.

‘‘உனக்கு ஏதோ ஏமாற்றத்தைத் தந்த யாரோ ஒருவர் வழியில் உனக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கலாம்.”

கண்ணுக்குப் புலப்படாத கண்ணாடிப் பலகையைத் துடைத்து விடும் பாவனையில் அவள் பாட்டியின் கண்கள் முன்னால் கைகளைக் கொண்டு சென்றாள் மினா.
‘‘நீ ஒரு சூனியக்காரி,” அவள் கூறினாள். பார்வையற்றவள் கூறினாள்.

‘‘இன்று காலை நீ இரண்டு தடவை கழிவறைக்குச் சென்றாய். ஒரு தடவைக்கு மேல் எப்போதும் நீ சென்றதில்லை.”

மினா தொடர்ந்து ரோஜாக்கள் செய்தபடி இருந்தாள்.

‘‘அந்தத் துணி அலமாரியின் இழுப்பறையில் நீ எதை ஒளித்து வைத்திருக்கிறாயோ அதை என்னிடம் காட்டத் துணிவிருக்கிறதா உனக்கு?” என்று கேட்டாள் பார்வையற்றவள்.

அவசரப்படாமல் அந்த ரோஜாவை ஜன்னல் சட்டத்தில் செருகி விட்டு, மூன்று சிறிய சாவிகளை அவளது உள்பாடிக்குள்ளிருந்து வெளியே எடுத்தாள் மினா. பிறகு அவற்றை பார்வையற்ற முதியவள் கைகளில் வைத்தாள். அந்தக் கைகளை அவளே மூடினாள்.

‘‘போ, உன் கண்களால் நீயே பார்த்துக் கொள்”, அவள் கூறினாள்.
அந்தச் சிறிய சாவிகளை விரல் நுனி கொண்டு சோதித்துப் பார்த்தாள் பார்வையற்றவள்.

‘‘என் கண்களால் கழிவறையின் கீழே பார்க்க முடியாது”.
வித்தியாசமான ஒரு உணர்வினை அடைந்த மினா தன் தலையை உயர்த்தினாள். அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள் என்பது கூட தெரிந்திருக்கிறது அந்தப் பார்வையற்றவளுக்கு என்பதை உணர்ந்தாள் மினா.

‘‘நான் என்ன செய்கிறேன் என்பதில் நீ மிகவும் விருப்பம் காட்டினால் உன்னை அந்தக் கழிவறையின் கீழே தள்ளி விட்டுக் கொள்.” அவள் சொன்னாள்.

இந்த இடைமறித்தலை பார்வையற்றவள் லட்சியம் செய்யவில்லை.

‘‘எப்போதும் விடியற்காலை வரை நீ படுக்கையில் எழுதிக் கொண்டிருக்கிறாய்”, அவள் சொன்னாள்.

‘‘நீதான் விளக்கை அணைப்பாய்”, மினா சொன்னாள்.

‘‘உடனே அந்த டார்ச் விளக்கை நீ ஏற்றுவாய்.”

‘‘நீ எழுதிக் கொண்டிருக்கிறாய் என்பதை உன் சுவாசத்தை வைத்தே என்னால் கூற முடியும்”, என்றாள் பார்வையற்றவள்.
அமைதியாக இருக்க முயற்சி செய்தாள் மினா.

‘‘நல்லது” தலையை உயர்த்தாமல் சொன்னாள் அவள்.

‘‘அது அப்படித்தான் என்று வைத்துக் கொண்டாலும் அதில் என்ன விசேஷம் இருக்கிறது?”

‘‘ஒன்றுமில்லை”, பார்வைற்றவள் பதில் சொன்னாள். ‘‘அது உன்னை ஒரு முதல் வெள்ளி புதிய நன்மை இழந்து விட செய்திருக்கிறது என்பது மட்டுமே.”

இரண்டு கைகளிலும் அந்த நூல் கண்டு, கத்திரிக்கோல்கள், முடிக்கப்பட்டிராத காம்புகள் மற்றும் ரோஜாக்களை எடுத்துக் கொண்டாள். அந்தக் கூடையில் எல்லாவற்றையும் வைத்து விட்டு பார்வையற்றவளை நோக்கித் முகம் திருப்பினாள். ‘‘எதற்காக நான் கழிவறைக்குச் சென்றேன் என்பதை உன்னிடம் கூற வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?” என்றாள் மினா. ஒரு சஸ்பென்சில் இருவரும் இருந்தனர், தனது கேள்விக்கு மினாவே பதிலளிக்கும் வரையில்.

‘‘நான் மலங்கழிக்கச் சென்றேன்”
பார்வையற்ற முதியவள் மூன்று சிறிய சாவிகளையும் கூடைக்குள் எறிந்தாள். ‘‘இது ஒரு நல்ல சாக்காக அமையலாம்”, அவள் சயமலறைக்குச் சென்றவாறே முணுமுணுத்தாள். ‘‘நீ என்னை நம்ப வைத்திருக்க முடியும் ஒரு வேளை இதுதான் உன் வாழ்நாளில் முதல் முறையாக நான் கேட்க நீ செய்யும் சத்தியம் என்ற பட்சத்தில்.”

மினாவின் தாயார் எதிர்ப்புறமிருந்த நடைபாதையிலிருந்து வந்து கொண்டிருந்தாள், கை நிறைய முட்கள் நிறைந்த மலர்க் கொத்துக்களுடன்
‘‘என்ன நடந்து கொண்டிருக்கிறது?” அவள் கேட்டாள்.
‘‘புத்தி பேதலித்திருக்கிறது எனக்கு”, பார்வையற்ற முதியவள் கூறினாள். ‘‘ஆனால் கற்களை எடுத்து நான் வீசாதிருக்கும் வரை என்னைப் பைத்தியக்கார விடுதிக்கு அனுப்புவதைப் பற்றி மேலோட்டமாக யோசித்துப் பார்த்ததில்லை நீ.”

005

Artificial Roses, from Gabriel Garcia Marquez’s Collected Stories, Translated from the Spanish by Gregory Rabassa and J.S.Bernstein.