பிரைமோ லெவி-முடிக்கப்படாத வேலை/Primo Levi-Unfinished Business

பிரைமோ லெவி (1919-1987)

இதாலியின் மிகப்பிரதானமான நவீன படைப்பாளியாகக் கருதப்படும் பிரைமோ லெவியை பொதுவான வாசகர்கள் புனைகதையாளராகவே அறிவர். யூத எழுத்தாளரான லெவி ஒரு ரசாயன விஞ்ஞானியாகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் சிறைபிடிக்கப்பட்டு ஆஷ்விட்ஸ் மனித வதை முகாமுக்கு அனுப்பப்பட்டவர். அவரது ரசாயன விஞ்ஞான துறை-நிபுணத்துவம் காரணமாக விஷவாயு கிடங்கில் மரணதத்திலிருந்து தப்பித்தார். ஆஷ்விட்ஸில் ஐ.பி.ஃபார்பன் ரப்பர் தொழிற்சாலையில் ஒரு அடிமைத் தொழிலாளியாக வேலை பார்த்தார். 1945ஆம் ஆண்டு சோவியத் துருப்புக்களால் ஆஷ்விட்ஸ் முகாம் விடுதலை செய்யப்பட்ட போது ட்யூரின் நகருக்குத் திரும்பினார். அவரது மரணம் வெளிப்படையாக ஒரு தற்கொலை போலத் தெரிந்தது.

லெவியின் தலைசிறந்த நவீன நாவலின் பெயர் தனிம அட்டவணை. (Periodic Table) ஹிட்லரின் மனிதவதை முகாம்களைப் பற்றிய நுண்ணிய சிறுகதைகளை எழுதியிருக்கிறார். (Moments of Reprieve) அவரது கவிதைச் செயல்பாடுகளை அறிய வேண்டுமானால் ரூத் ஃபெல்ட்மேன் மற்றும் பிரையன் ஸ்வேன் ஆகிய இரு அமெரிக்கர்கள் ஃபேபர் நிறுவனத்திற்காக 1989ஆம் ஆண்டு இணைந்து மொழிபெயர்த்த லெவியின் தொகுக்கப்பட்ட கவிதைகளைப் (Primo Levi : Collected Poems, trans.Ruth Feldman & Brian Swann) படிக்க வேண்டும். புனைவின் சார்புகளை நாவல் என்ற கட்டமைப்பினை விட சுதந்திரமான முறையில் விரிவுபடுத்தி எழுதுவதற்கு லெவிக்கு கவிதை உதவியிருக்கிறது. கவிதையின் பொருளம்சத்தை முன்னிறுத்தி பரவலான பாடுபொருள்களைத் தேர்ந்தெடுக்கிறார் லெவி. தாந்தே, ட்டி.எஸ்.எலியட், ரில்கே, ரோமானியரான காட்டல்லஸ், ஷேக்ஸ்பியர் போன்ற நவீன மற்றும் புராதனமான இலக்கியப் படைப்பாளிகளை மறைமுகக் குறிப்பீடுகள் மூலம் பயன் படுத்திக் கொள்கிறார். புறக்கணித்து விட முடியாத பல நல்ல கவிதைகளைத் தந்திருக்கிறார் பிரைமோ லெவி.

(Primo Levi : Collected Poems, trans.Ruth Feldman & Brian Swann)

primo_levi31

பிரைமோ லெவி-முடிக்கப்படாத வேலை

ஐயா, அடுத்த மாத ஆரம்பத்திலிருந்து

தயவு செய்து என் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுங்கள்,

மேலும், தேவைப்பட்டால், என் இடத்திற்கு ஒரு மாற்று ஆள்பாருங்கள்.

சோம்பல் காரணமாகவோ, நடைமுறைச் சிக்கல்களாலோ

நான் நிறைய முடிக்கப்படாத வேலைகளை விட்டுக் கொண்டிருக்கிறேன்

நான் எவரிடமோ எதையோ சொல்லியிருக்க வேண்டும்,

ஆனால் என்னவென்றோ, யாரிடமென்றோ இனியும் அறியேன்.

நான் மறந்து விட்டேன்.

நான எதையோ எடுத்துக் கொடுத்திருக்கக் கூடும்தான்.

ஒரு அறிவார்ந்த சொல்,

ஒரு பரிசுப் பொருள்,

ஒரு முத்தம்.

ஒரு நாளைக்கு அடுத்து மறுநாளைக்கு தள்ளிப் போட்டு விட்டேன்.

மன்னியுங்கள் என்னை.

மிச்சம் விடப்பட்டிருக்கும் அந்த கொஞ்ச காலத்தில்

அதை நான் முடித்து விடுகிறேன்.

நான் அஞ்சுகிறேன்,

எனது முக்கிய வாடிக்கையாளர்களைப் புறக்கணித்து விட்டேன் என.

நான் விஜயம் செய்திருக்க வேண்டும்

வெகு தூரத்து நகரங்கள், தீவுகள், யாருமற்ற நிலங்கள்.

நீங்கள் திட்ட வரையறையிலிருந்து அவற்றை அடித்து நீக்கிவிட வேண்டும்

அல்லது எனக்கு அடுத்து வருபவரின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும்.

நான் மரங்கள் நட்டிருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை,

எனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும்,

அது ஒரு வேளை அழகற்றதாக இருக்கலாம் ஆனால் திட்டத்திலிருந்து விலகியதாக இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பான ஐயா,

நான் மனதில் வைத்திருந்தேன்

எண்ணிக்கையற்ற ரகசியங்களை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்குமென்ற ஒரு அற்புதப் புத்தகம்,

அது வலியைக் குறைத்திருக்கும், பயத்தை மட்டுப்படுத்தியிருக்கும்,

சந்தேகங்களைக் கரைத்திருக்கும்,

பல மனிதருக்கு கண்ணீர் மற்றும் சிரிப்பின் பரிசுகளைத் தந்திருக்கும்.

அதன் கோட்டுருவான திட்டத்தினை

என் மேஜை இழுப்பறையில் நீங்கள் பார்க்கலாம்

முடிக்கப்படாத வேலையின் பின்பக்கத்தில்.

அதை முடித்துப் பார்க்க எனக்கு சமயம் அமையவில்லை. படுமோசம்.

அது ஒரு மிக அடிப்படையான விஷயமாக ஆகியிருக்கும்.

ஆங்கிலத்திலிருந்து தமிழில் பிரம்மராஜன்

<script type=”text/javascript” src=”http://feeds.delicious.com/v2/js/brammarajan?title=My%20Delicious%20Bookmarks&icon=m&count=5&sort=date&tags&extended&name&showadd”></script>

<script type=”text/javascript” src=”http://shots.snap.com/ss/7bf55d532f95f2f00e7f6c49d36d13e6/snap_shots.js”></script>

ஜோர்ஜ் லூயி போர்ஹே / நித்தியமானவர்கள்/Immortals/Borges/

immortals-borges

ஜோர்ஜ் லூயி போர்ஹே / நித்தியமானவர்கள்

To Cecilia Ingenieros

Salomon saith, “There is no new thing upon the earth. So that as Plato had an imagination, that all knowledge was but remembrance; So Salomon giveth his sentence, that all novelty is but oblivion.”

Francis Bacon: Essays, LVIII

லண்டனில் 1929ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ஸ்மிர்னாவைச் சேர்ந்த ஜோசப் கார்ட்டோ ஃபீலியஸ் என்ற தொல்பொருள் விற்பனையாளர் லூசிஞ் இளவரசிக்கு சிறிய க்வார்ட்டோ சைசில் இருந்த, போப் எழுதிய இலியட் காவியத்தின் ஆறு தொகுதிகளை விற்க முன் வந்தார். இளவரசி அவற்றை வாங்கினார். புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட சமயத்தில் விற்பனையாளரிடம் சில வார்த்தைகள் பேசினார். இளவரசி சொல்கிறபடி அந்த விற்பனையாளன் வெளிர்ந்த கண்களும் நரைத்த தாடியுடனும் தெளிவற்ற அங்கச் சாயல்களுடனும் இருந்த அவன் மண்ணை ஒத்த மனிதனாகவும் நலிந்து குன்றிப் போன உடலுடனும் இருந்தான். பல வேறு மொழிகளில் அவன் தங்குதடையின்றி ஆனால் மடமையுடன் பேசினான். மிகச் சில நிமிடங்களிலேயே பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து ஒரு சலோனிகா ஸ்பானிய மொழி மற்றும் மக்காவோ போர்த்துகீசிய மொழியின் புதிர்க் கலவையான மொழிக்கும் தாவினான். ஜீயூஸ் என்ற கப்பலில் வந்த ஒரு பயணியிடமிருந்து துறைமுக நகரமான ஸ்மிர்னாவுக்குத் திரும்பும் வழியில், கடல் மார்க்த்திலேயே கார்ட்டாஃபீலியஸ் இறந்தான் என்ற செய்தியையும் இயோஸ் தீவில் அவன் புதைக்கப்பட்டான் என்பதையும் இளவரசி தெரிந்து கொண்டாள். இலியட் நூலின் கடைசி தொகுதியில் இந்தக் கையெழுத்துப்பிரதி இருப்பதைக் கண்டு பிடித்தாள்.
மூலப்பிரதி, ஏராளமான லத்தீன்மொழி வார்த்தைக் கலப்புடன், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. நாங்கள் சமர்ப்பிப்பது வரிக்கு வரி உண்மையானது.
என்னால் நினைவு கூற முடிகிற அளவில், எனது பிரயத்தனங்கள், தீபஸ் ஹெகடம்ஃபைலோஸில், ஒரு தோட்டத்தில் தொடங்கியது. அப்போது டயோக்கிளீஷியன் மன்னராக இருந்தார். சமீபத்திய எகிப்தியப் போர்களில் (எவ்விதமானப் புகழாரமுமின்றி) நான் பங்கேற்றிருந்தேன். செங்கடலினை நோக்கி அமைந்திருந்த பெரனீஸ் நகரில் முகாமிட்டிருந்த ராணுவத்தினருக்கு நான் மாகாணத் துணைத் தலைவராக இருந்தேன். வாளின் மீது பெருந்தகைமையுடன் காதல் கொண்டிருந்த பல வீரர்கள் காய்ச்சலுக்கும் மந்திரதந்திரத்திற்கும் இரையானார்கள். மாரிட்டேனிய தேசத்தவர்கள் தோற்கடிக்கப் பட்டனர், முன்பு புரட்சிக்கார நகரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலப்பகுதிகள் என்றென்றைக்குமாக புளோட்டினிய கடவுளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. அடக்கி ஒடுக்கப்பட்டவுடன், அலெக்சாண்டிரியா பயனற்று சீசரின் மன்னிப்பை(கருணையை) வேண்டிற்று, ஒரு வருடத்திற்குள்ளாக வெற்றியைப் பற்றிய தகவலைத் தந்தன படைகள், ஆனால் நானோ போர்க்கடவுள் மார்சின் முகதரிசனத்தைக் கூட சிறிதும் காணவே இல்லை. இந்த வறுமை என்னை வருத்தியது, பயங்கரமானதும், பரந்து விரிந்ததுமான பாலைவனங்களின் ஊடாக நித்தியமானவர்களின் ரகசிய நகரத்தைக் கண்டு பிடிக்க திடீரென நிர்ப்பந்தித்தது ஒரு வேளை இதுவேயாக இருக்கக் கூடும்.
நான் ஏற்கனவே கூறியது போல என் பிரயத்தனங்கள் சகலமும் தீபஸில் ஒரு தோட்டத்தில் தொடங்கியது. அந்த இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. ஏதோ ஒன்று என் மனதிற்குள் போராடிக் கொண்டிருந்தது தான் காரணம். விடியலுக்குக் கொஞ்சம் முன்னர் எழுந்து விட்டேன். என் அடிமைகள் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். முடிவற்ற மணலின் நிறத்தை ஒத்திருந்தது நிலா. களைத்துச் சோர்ந்து போன குதிரைவீரன் ஒருவன் கிழக்கிலிருந்து குருதி பெருக வந்தான். எனக்கு முன்னால் சில அடி தூரத்திற்குள் குதிரையின் இருக்கையிலிருந்து தலை குப்புற கவிழ்ந்து விழுந்தான். ஒரு மெலிந்த, திருப்தியடையாத குரலில் அந்த நகரினைச் சுற்றி ஓடும் நதியின் பெயர் என்னவென்று லத்தீன் மொழியில் விசாரித்தான். மழை நீர்களினால் நிரப்பப்பட்ட எகிப்துதான் அது என்றேன். “நான் வேறு ஒரு நதியினைத்தான் தேடுகிறேன்”, என்று சோகமாக அவன் சொன்னான். “மனிதர்களின் மரணத்தைக் கழுவக்கூடிய ரகசிய நதி அது.” கறுத்த ரத்தம் அவன் மார்பிலிருந்து பீறிட்டது. அவனுடைய தாய்நாடு கங்கை நதியின் மறுபக்கமிருக்கிற ஒரு மலை என்றும், ‘மேற்கில் உலகம் முடிகிற இடத்திற்கு ஒருவர் பயணம் செய்தால் நித்தியத்துவத்தைத் தரும் நதியினை அடையலாம்”என்றும் அங்கிருப்பவர்கள் கூறியதாகச் சொன்னான். ‘அதன் தூரத்துக் கரையில், வட்டவடிவ அரங்குகள், கோயில்கள் மற்றும் முனைப்புமுக அரண்கள் ஆகியவற்றுடன் நித்தியமானவர்களின் நகரம் உயர்ந்து நிற்கிறது’ என்பதையும் கூறினான். விடியும் முன் இறந்து போனான்.
ஆனால், நான் அந்த நகரத்தையும், நதியையும் கண்டு பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டேன். தூக்குத் தண்டனையாளரால் விசாரணை செய்யப்பட்ட மாரிட்டேனிய நாட்டுக் கைதிகள் சிலர் அந்தப் பயணியின் கதையினை ஊர்ஜிதம் செய்தார்கள். பூமியின் விளிம்புப் பிரதேசத்தில் அமைந்து மனிதர்களின் உயிர்கள் அழிவின்றி இருக்கும் எலீசியச் சமவெளியை யாரோ நினைவு கூர்ந்தார்கள். மனிதர்கள் ஒரு நூற்றாண்டு வரை உயிரோடிருக்கும், பேக்டோலஸ் உதிக்கும் மலைச்சிகரங்களை எவரோ ஒருவர் நினைவு கூர்ந்தார். ஒரு மனிதனின் வாழ்வினை நீட்டிப்பது என்பது அவனது அவசங்களை நீட்டித்து அவனது மரணங்களைக் கூட்டுவதற்குச் சமமாகும் என்ற தத்துவவாதிகளுடன் நான் ரோம் நகரில் உரையாடினேன். நித்தியமானவர்களின் நகரம் இருக்கக் கூடும் என்று நான் எப்போதாவது நம்பினேனா என்று எனக்குத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் பிரயத்தனமே போதுமானது என்று நான் நினைத்தேன். கெட்டூலியா மாகாணத் துணைத் தலைவராக இருந்த ஃபிளாவியஸ் இந்தக் காரியத்தின் பொருட்டு இருநூறு போர் வீரர்களை எனக்களித்தார். பாதைகள் தமக்கு நன்றாகத் தெரியும் என்று கூறிவிட்டு முதன் முதலில் படையிலிருந்து ஓடிவிட்ட கூலிப்படையினரையும் நான் இந்த வேலைக்குத் தேர்ந்தெடுத் திருந்தேன்.
பின்பு நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் பிரயாணத்தின் தொடக்க நாட்களின் ஞாபகத்தினை பிரித்தறிய முடியாதபடி குலைத்து விட்டன. ஆர்சிநோவிலிருந்து கிளம்பி தகிக்கும் பாலை வனத்தில் நுழைந்தோம். வார்த்தைகளால் ஆன செய்திப் பரிமாற்றம் பற்றி அறிந்திராத, பாம்புகளைச் சாப்பிடும் ட்ரோக்ளோடைட்டுகளின் நாட்டினைக் கடந்தோம். சிங்கத்தின் மாமிசத்தைப் புசித்து, பெண்கள் அனைவரையும் பொதுவில் வைத்திருந்த காரமான்ட்டுகளின் நாட்டையும், டார்டாரெசை மட்டுமே வணங்கும் அகுயல்களின் நாட்டையும் கடந்தோம். பகல் பொழுதின் ஆக்ரோஷம் பொறுத்தற்கரியதாய் இருந்ததால் பயணிகள் இரவு நேரங்களைக் கைக்கொள்ள வேண்டி வரும் கறுமை நிறமுடைய மணலின் பாலைவனங்களைத் துருவினோம். சமுத்திரத்திற்கு அந்தப் பெயர் வரக் காரணமாயிருந்த சிகரத்தினை மிக நெடிய தூரத்திலிருந்து கண்ணுற்றேன், அதன் புறங்களில் விஷத்தை முறிக்கும் ஸ்பர்ஜ் செடிகள் வளர்ந்தன, இழிதகைமைக்குத் தங்களைத் தந்து விட்ட, வீழ்ச்சியுற்ற காட்டுமிராண்டிகளான சாட்டிர்கள் அதன் உச்சியில் வாழ்ந்தனர், இப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பிரதேசங்கள் தங்களின் உட்புறப் பிரதேசங்களில் – பூமி எங்கே அசுரகணங்களுக்குத் தாயாகிறாளோ அங்கே – அதற்குள்ளே, ஒரு பிரசித்தமான நகரைக் கொண்டிருக்கும் என்று எங்களால் எண்ணவே முடியவில்லை. திரும்பி விடுதல் மதிப்புக் குறைவான செயலாகும் என்பதால் முன்னோக்கிய பயணத்தைத் தொடர்ந்தோம். சில முட்டாள்தனமானவர்கள் தமது முகங்களை நிலவுக்குக் காட்டியபடி தூங்கினர். அவர்களைக் காய்ச்சல் எரித்தது. நீர்த்தொட்டிகளின் அசுத்தப்பட்ட தண்ணீரில் மற்றவர்கள் மரணத்தையும் பைத்தியத்தையும் பருகினார்கள். அப்போதுதான் சிலர் படையிலிருந்து ஓடத்தொடங்குவது ஆரம்பமாகியது. அதற்குக் கொஞ்சம் கழித்து உள்கலகங்கள் ஆரம்பித்தன. அவற்றினை அடக்கும் பொருட்டு நான் கெடுபிடியாக இருப்பதற்குத் தயங்கவில்லை. நான் நியாயமான தீர்ப்பு வழங்கினேன். காட்டிக் கொடுப்பவர்களில் சிலர் (தங்களின் சகா ஒருவனை நான் சிலுவையில் ஏற்றியதை வஞ்சம் தீர்க்கும் பொருட்டு) என்னைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதை ரோமானிய நூற்றுவர் தளபதி ஒருவன் எனக்கு எச்சரிக்கை செய்தான். எனக்கு விசுவாசமாக இருந்த சில வீரர்களுடன் நான் முகாமிலிருந்து தப்பினேன். அவர்களும் நெடிய இரவிலும், மணற்புயல்களிலும் என்னிடமிருந்து காணாமல் போனார்கள். கிரேட்டன் தேசத்து அம்பு ஒன்று என்னைக் காயப்படுத்தியது. பல நாட்கள் நான் குடிக்கத் தண்ணீர் இன்றித் திரிந்தலைந்தேன். என் தாகத்தினாலோ தாகத்தைப் பற்றிய பயத்தினாலோ ஒரு மாபெரும் நாளே பல நாட்கள் போலப் பெருக்கமடைந்து தெரிந்திருக்கலாம். வழியை என் குதிரையின் தீர்மானத்திற்கு விட்டுவிட்டேன். விடியல் பொழுதில் தூரங்கள் பிரமிடுகளாகவும், கோபுரங்களாகவும் சிலிர்த்து நின்றன. சகிக்க முடியாதபடிக்கு ஒரு அரைகுறை புதிர் வழியினைக் கனவு கண்டேன்; அதன் மையத்தில் ஒரு தண்ணீர் ஜாடி; என் கைகள் ஏறத்தாழ அதைத் தொட்டு விட்டன; என் கண்களால் அதைப் பார்க்க முடிந்தது; ஆனால் அதன் வளைவுகள் அத்தனை நுணுக்கமாகவும் குழப்பமுற்றும் இருந்ததால் அதைத் தொடு முன்னர் நான் இறந்து போவேன் என்று எனக்குத் தோன்றியது.

– 2 –

இந்தப் பீதிக்கனவில் இருந்து என்னை இறுதியாக விடுவித்துக் கொண்ட பொழுது என் கைகள் இரண்டும் கட்டப்பட்டு, கல்லால் ஆனதொரு நீள்வட்டவடிவ குழிப்பிறையில் இருந்தேன். அது ஒரு சாதாரண சவக்குழியை விட அதிகமான அகலம் இல்லாமல் ஒரு மலையின் கூரான சரிவில் குடைந்தெடுக்கப்பட்டிருந்தது. அதன் இரண்டு பக்கங்களும் ஈரமாக இருந்தன. மனித யத்தனத்தை விடவும் காலத்தினால் அது மெருகேற்றப்பட்டிருந்தது. என் நெஞ்சில் ஒரு வலி மிகுந்த துடிதுடிப்பினை உணர்ந்தேன். என் தாகத்தினால் நான் தகித்துக் கொண்டிருந்தேன் எனபதையும் உணர்ந்தேன். வெளியே நோக்கி நலிந்த குரலில் உரத்துக் கத்தினேன். மலையின் அடிவாரத்தில் ஒரு அசுத்தமான ஓடை மணலும் இடர்ப்பாட்டுத் துணுக்களிடையிலும்சப்தமின்றி பெருகிக் கொண்டிருந்தது, அதன் எதிர்க் கரையில் (கடைசி அல்லது முதல் சூரிய ஒளியில்) வெளிப்படையாக நித்தியமானவர்களின் நகரம் ஒளிர்ந்தது. அதன் அடித்தளம் ஒரு கல் பீடபூமியாக இருந்தது. அதன் சுவர்களையும், வளைவுகளையும், ஊடு வழிகளையும் நான் கண்டேன். என்னுடையதைப் போன்றே நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட சீரற்ற என்னுடையதை ஒத்த குழிப்பிறைகள் மலையையும் பள்ளத்தாக்கினையும் வடுப்படுத்தியிருந்தன. மணலில் ஆழங்குறைந்த குழிகள் இருந்தன. இந்தக் கேவலமான குழிகளில் இருந்தும், குழிப்பிறைகளில் இருந்தும் குறுக்குமறுக்கான தாடியுடன் சாம்பல் தோல் கொண்ட மனிதர்கள் வெளிப்பட்டனர். நான் அவர்களை அடையாளம் கண்டு கொண்டதாக நினைத்தேன். அரேபிய வளைகுடாப் பகுதியையும், எத்தியோப்பிய குகைப் பிரதேசங்களையும் நிரப்பிய அந்த விலங்குத்தன்மை கொண்ட மனிதர்கள், ட்ரோக்ளோடைட்டுகளின் காமத்துவ வழி வந்தவர்கள். அவர்களால் பேச முடியவில்லை என்பதும், அவர்கள் பாம்புகளை விழுங்கினார்கள் என்பதும் என்னை வியப்படையச் செய்யவில்லை.
என் தாகத்தின் அவசரம் என் பயத்தினை மீறச் செய்தது. மணலில் இருந்து நான் ஒரு முப்பது அடி உயரத்தில் இருந்தேன் எனக் கணக்கிட்டேன். என் கைகள் பின் புறம் கட்டப்பட்டிருக்க, கண்களை மூடிக்கொண்டு மலைச் சரிவில் தலை குப்புற என்னை வீழ்த்தினேன். என் ரத்தம் தோய்ந்த முகத்தை இருண்ட நீரில் அமிழ்த்தினேன். விலங்குகள் நீர் பருகுவதைப் போல நானும் அருந்தினேன். மீண்டும் உறக்கத்திலும், கனவுப்பிதற்றலிலும் என்னை நான் இழக்கும் முன் அர்த்தம் புரியாமல் சில கிரேக்க வார்த்தைகளை திரும்பத் திரும்பச் சொன்னேன்:
“ஜெலியாவிலிருந்து வந்த செழிப்பான ட்ரோஜன்கள் அய்சிபோசின் கருமையான தண்ணீரைக் குடிக்கின்றனர்.”


என் தலைக்கு மேல் எத்தனை பகல்களும் இரவுகளும் கடந்து போயின என்று எனக்குத் தெரியாது. உடலெல்லாம் வலித்தபடி இருக்க, குகைகளின் பாதுகாப்புக்குத் திரும்ப முடியாமல் ஒரு இனம் புரியாத பிரதேசத்தில் நிர்வாணமாக இருந்த நான், சந்திரனையும் சூரியனையும் என் துரதிர்ஷ்டவசமான விதியுடன் சூதாட அனுமதித்தேன். அவர்களின் ஆரம்பத்திய காட்டு மிராண்டித்தனத்தில் உழன்ற ட்ரோக்ளோடைட்டுகள் நான் உயிரோடு இருப்பதற்கோ சாவதற்கோ உதவவில்லை. பயனின்றி, என்னைக் கொன்றுவிடும்படி அவர்களிடம் கெஞ்சினேன். ஒரு நாள் என் கைக் கட்டுகளை சிக்கிமுக்கி கல்லைக் கொண்டு அறுத்துக் கொண்டேன். இன்னொரு நாள் ஆயிரம் ரோமானிய போர் வீரர்களுக்குத் தளபதியாகிய, மார்க்கஸ் ஃபிளாமினியஸ் ரூஃபஸ் ஆகிய நான் என் முதல் வெறுப்புக்குரிய பாம்புக் கரியின் பங்கினைப் பிச்சையாகவோ அல்லது திருடியோ பெற்றேன். அமானுஷ்யமான நகரினைத் தொடுவதற்கும், நித்தியமானவர்களைக் காண்பதற்குமான என் பெரு இச்சை என்னைத் தூங்க விடவே இல்லை. என் நோக்கத்தை ஊடுருவிப் பார்த்துவிட்டவர்கள் போல ட்ரோக்ளோடைட்டுகளும் தூங்க வில்லை. என்னை அவர்கள் கண்காணிக்கிறார்கள் என்று தொடக்கத்தில் நினைத்தேன். பிறகுதான் நாய்களுக்குத் தொற்றுவது போல என் நிலைகொள்ளாத் தன்மை அவர்களையும் தொற்றிக் கொண்டு விட்டது என நினைத்தேன். அந்தக் காட்டுமிராண்டி கிராமத்தை விட்டுச் செல்ல மிகவும் பட்டவர்த்தனமான நேரத்தை, அவரவர் குழிகள் மற்றும் குழிப்பிறைகளில் இருந்து ஏறத்தாழ எல்லா மனிதர்களுமே வெளியே வந்து மறையும் சூரியனைப் பார்க்காமல் பார்க்கும் மாலை வேளையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். தெய்வங்களின் அனுகூலத்தை வேண்டி என்பதை விட உச்சரிக்கப்படும் வார்த்தைகளைக் கொண்டு அந்தப் பழங்குடியினரை மிரட்டுவதே பிரதான நோக்கமாக சத்தமாகப் பிரார்த்தித்தேன். மணல் திட்டுக்களால் அடைபட்டுப் போன ஓடையைக் கடந்து நகரத்தை நோக்கி நான் நடந்தேன். குழப்பத்தோடு என்னை இரண்டு மூன்று பேர் பின் தொடர்ந்தனர். அந்த மெலிந்த தேகமுடையவர்கள் (அந்த இனத்தின் மற்றவர்களைப் போலவே)என்னுள் அருவருப்பை உண்டாக்கினார்களே ஒழிய பயத்தை அல்ல. கல் வெட்டிஎடுக்கும் குழிகளைப் போல எனக்குத் தோன்றிய பல சிறிய மலையிடுக்குகளை நான் தவிர்த்துச் செல்ல வேண்டியதாயிற்று. நகரத்தின் பிரம்மாண்டத் தோற்றத்தினால் உணர்வு மழுங்கிப் போயிருந்த நான் அது குறைவான தூரத்தில் இருக்கும் என்று நினைத்து விட்டேன். நடு இரவை நெருங்கும் போது அதன் சுவர்களின் கரிய நிழல் மீது கால் வைத்தேன். மஞ்சள்நிற மணலில் அதன் உருவ வழிபாட்டுத் தோற்றங்கள் கிளர்ந்து நின்றன. ஒரு புனிதமான பயங்கரத்தினால் நான் நின்று போனேன். புதுமையும் பாலைவனமும் அந்த அளவுக்கு மனிதரால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்ததால், என்னைக் கடைசி வரை தொடர்ந்து வந்த ட்ரோக்ளோ டைட்டுப் பற்றி நான் மகிழ்ச்சி அடைந்தேன். தூங்காமல், என் கண்களை மூடியபடி விடியல் வெளிச்சத்திற்காகத் தூங்காமல் காத்திருந்தேன்.
நகரம் ஒரு கல்பீடபூமியின் மீது அமைக்கப்பட்டிருந்தது என்று சொல்லி இருந்தேன். இந்தப் பீடபூமி ஒரு உயர்ந்த மலைமுகடிற்குச் சமானமாய் இருந்ததால் சுவர்களின் அளவுக்கு சிரமம் தருவதாக இருந்தது. பயனின்றி என் சக்தியைச் செலவழித்துச் சோர்ந்து போனேன். கரிய அடித்தளமானது எந்தச் சிறிய ஏற்றத்தாழ்வினையும் வெளிக்காட்டவில்லை, ஒன்று போலவே இருந்த சுவர்கள் எந்த ஒரு கதவு இருப்பதாகவும் தெரிவிக்கவில்லை, சூரியனின் உக்கிரம் என்னைக் குகையில் தஞ்சம் அடைய வைத்தது, குகையின் பின்புறத்தில் ஒரு பள்ளமும் அந்தப் பள்ளத்தில் ஒரு படிக்கட்டும் இருந்தது, கீழே இருந்த இருட்டுக்குள் முடிவே இல்லாத பாதாளத்திற்குள் அது இறங்கியது. நான் கீழே சென்றேன். படுகளேபரமான படியரங்கங்களின் குழப்பங்களின் ஊடாக, இருட்டில் அமிழ்ந்து போயிருந்த ஒரு வட்ட வடிவ அரங்கினை அடைந்தேன். அதில் எட்டுக் கதவுகள் ஒரு புதிர் வழிக்குக் கூட்டிச் சென்று, மீண்டும் அதே அரங்குக்குத் திரும்பும்படி வஞ்சித்தன. மற்றொரு புதிர்வழியாகச் சென்று ஒன்பதாவது கதவானது முதல் அரங்கிற்கு இணையான இரண்டாவது வட்ட வடிவ அரங்கிற்கு இட்டுச் சென்றது. இந்த நிலவறைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு என்று எனக்குத் தெரியாது. என் துரதிஷ்டமும், பதற்றமும் அவற்றை மிகக் கூடுதலாகத் தெரியவைத்தன. அங்கு நிலவிய நிசப்தம் விரோதமாக, ஏறத்தாழ பூரணமாக இருந்தது. இந்த அடியாழத்து கல்தொடர்ச்சி இணைப்புகளில் பூமிக்கு கீழ்ப்பட்டதான காற்றினுடையதைத் தவிர வேறு எந்த ஓசையும் இருக்கவில்லை. ஆனால் பூமிக்கு அடியில் வீசும் காற்றுக்கான காரணத்தை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. புழைகளின் வழியாக, துருப்பிடித்த நீர்களின் சிறு ஓடைகள் ஓசையின்றி ஓடி மறைந்தன. வெறுக்கத் தகும்படி, இந்த சந்தேகத்திற்குரிய உலகிற்கு என்னை பழக்கப்படுத்திக் கொண்டேன். அந்த ஒன்பது கதவுகள் கொண்ட நிலவறைகள் மற்றும் நீண்டு கிளை பிரிந்த நிலவறைகளைத் தவிர வேறு எதுவும் அங்கு இருக்கும் என்று என்னால் நம்பமுடியவில்லை. பூமிக்கு அடியில் இப்படி எவ்வளவு நேரம் நடந்திருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. அந்த தொகுதிகளுக்கு இடையில் ஒரு தடவை, ஒரு வித ஏக்கத்தில், அந்த காட்டுமிராண்டிகளின் வினோத கிராமத்துடன் எனது பூர்வீக நகரினை குழப்பிக்கொண்டேன்.
நடைகூடமொன்றின் ஆழத்தில் எதிர்பார்த்திராத ஒரு சுவர் என்னைத் தடுத்தது. ஒரு தொலைவான வெளிச்சம் மேலிருந்து வீழ்ந்தது. என்னுடைய குழம்பிப்போன பார்வையை உயர்த்தினேன். தலைச்சுற்றச் செய்யும் நெடிய உயரங்களில் வானத்தின் வட்டவடிவத்தைக் கண்டேன். வானம் வெகு அடர் நீலமாயிருந்ததால் இளம்சிவப்பு போலத் தோன்றியது. சில உலோகக் குறுக்குச்சட்டங்கள் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தன. நான் களைப்பில் கால் சோர்ந்துப் போயிருந்தேன், ஆனாலும் சில சமயம் பெருமூச்சு விட்டுத் தேம்புவதற்கு மட்டும் சற்று நிறுத்தம் செய்து, மேலே ஏறிவிட்டேன். பிரம்மாண்டமான தூண்களின் உச்சிப்பகுதியையும், மடக்குக்கதவுகளின் சந்திப்பு நிலைகளையும், முக்கோண முகப்பு முகடுகளையும், கவிகை மாடங்களையும், கருப்பு மற்றும் வெண்பளிங்கின் குழப்பமான அற்புதக் காட்சிகளையும் கண்டேன். இவ்வாறு,. . . . இருளடைந்த ஒன்றுக்கொன்று பிணைந்திருந்த புதிர் வழிகளின் குருட்டுப் பிரதேசத்தில் இருந்து ஒளிரும் நகருக்குள் இத்தகையதொரு மேலேற்றம் எனக்கு வாய்த்தது.
ஒரு விதமான சிறு சதுக்கம் அல்லது முற்றத்திற்குள் நுழைந்தேன். இதனைச் சுற்றி ஒரு சீரற்ற ஒற்றை வடிவமுள்ள கட்டிடம் மாறுபட்ட உயரங்களுடன் அமைந்திருந்தது; இந்த முரண்கூறுகள் உடைய கட்டிடத்திற்குச் சேர்ந்தவைதான் அந்த பிரம்மாண்ட தூண்களும், தூபி மாடங்களும். நம்புவதற்கரிய இந்த நினைவுச் சின்னத்தின் வேறு எந்த குணாம்சத்தை விடவும் அதன் கட்டுமானத்தின் அதீத தொன்மத்தினாலேயே நான் ஈர்க்கப்பட்டேன். அது மானுடத்தை விடவும், பூமியை விடவும் பழமையானது என்பதாய் எனக்குள் ஒரு உணர்வு எழுந்தது. இந்த வெளிப்படையாகத் தெரியும் பழமை (சில விதங்களில் பயங்கரமாகக் காட்சி அளித்தாலும்) நித்தியமான கட்டிடக்கலைஞர்களின் வேலையுடன் இயைபு கூடி இருந்ததாக எனக்குப் பட்டது. முதலில் மிகுந்த கவனத்துடனும், பிறகு எது பற்றிய பொருட்படுத்தல் இன்றியும், இறுதியில் வேறு வழியின்றியும் பிரிக்கமுடியாத மாளிகையின் நடைகூடத்துப் படிகளில் ஏறித்திரிந்தேன். ( படிகளின் அகலமும் உயரமும் விகிதாசாரத்தில் இருக்கவில்லை என்பதை பிறகு கண்டுபிடித்தேன். அவை வரவழைத்த என் தனித்துவமான களைப்பினைப் புரிந்து கொள்ள இந்த தகவல் உதவியது.) இந்த மாளிகை கடவுளர்களால் கட்டப்பட்டது என்று நான் ஆரம்பத்தில் எண்ணினேன். மனிதக்காலடிகள் படாத அதன் உட்புறங்களை ஆராய்ந்த பின்னர் என்னை நான் திருத்திக் கொண்டேன், இதனைக் கட்டிமுடித்த கடவுளர்கள் இறந்து விட்டார்கள். அதன் வினோத அம்சங்களை கண்டுபிடித்து பிறகு குறிப்பிட்டேன், இதைக் கட்டிய கடவுளர்கள் பைத்தியக்காரர்கள் என. எனக்குத் தெரியும் நான் சொன்னதை நானே புரிந்துக்கொள்ள முடியாத ஏறத்தாழ கழிவிரக்கத்தை ஒத்த ஒரு கண்டனத்துடன், ஒரு அதிகபட்ச அறிவார்த்தமான பயங்கரத்தில் (வெளிப்படையான பயம் என்பதைக் காட்டிலும்) அப்படிச் சொன்னேன் என்று எனக்குத் தெரியும். இந்த அளப்பரிய புராதனத்துடன் பிறவும் சேர்க்கப்பட்டன. முடிவில்லாதெனத் தோன்றியவவையும், சிக்கலான வகையில் வகையில் அர்த்தமற்றிருந்தவற்றையும், அடாதவையும். நான் ஒரு புதிர்ச்சுழலைக் கடந்துவிட்டேன். என்றாலும் நித்தியமானவர்களின் பிரகாசமான நகரம் எனக்குள் பயத்தினையும் அருவருப்பையும் உண்டாக்கியது. மனிதரை குழப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டு வடிவமே புதிர் வழியாகும். அதன் கட்டிடக்கலை ஒத்ததன்மைகளைக் கொண்டிருப்பினும், இந்த நோக்கத்தைச் சார்ந்ததாகவே அமைந்திருந்தது. மாளிகைக்குள் நான் அரைகுறையாக ஆராய்ந்து கட்டிடவடிவாக்கம் அப்படிப்பட்டதொரு அறுதி முடிவை இழந்திருந்தது என்று கண்டேன். அது மூளியான நடைவழிப் பாதைகளால் நிறைந்திருந்தது, உயரமான எட்டவே முடியாத ஜன்னல்கள், ஒரு பள்ளத்திற்கோ அல்லது தனி அறைக்கோ இட்டுச் சென்ற பிரம்மாண்டமான கனத்த கதவுகள், நம்பவே முடியாத அளவில், தலைகீழாகத் தொங்கிய அவற்றின் படிகளும், பக்கக்கம்பிகளும்; மேல்கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் படிக்கட்டுகள்; பிற மாடிப்படிவழிகள் பிரமாண்டமான சுவர்களின் பக்கங்களைத் காற்றாடித் தொற்றிக் கொண்டிருந்தன. தூபிமாடத்தின் உயர்வான இருட்டுக்குள் அவை இரண்டு அல்லது மூன்று திருப்பங்கள் சென்ற பிறகு எங்கேயும் இட்டுச் செல்லாமல் அழியுமாறு இருந்தன. நான் எடுத்துச் சொன்ன காரணங்கள் அனைத்தும் அப்படியே உள்ளது உள்ளதுபடியே தரப்பட்டிருக் கின்றனவா என்று எனக்கு தெரியவில்லை. என் பீதிக் கனவுகளை பல ஆண்டுகளாக அவை தொற்றிக் கொண்டன என்பதை நான் அறிவேன். இன்னின்ன தகவல்கள் யதார்த்தத்தின் நேரடிப் பிரதி எடுப்புதானா என்று இனியும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது என் இரவுகளை இற்றுப் போகச் செய்த வடிவங்கள்தாமா என்று இனிமேல் என்னால் அறிய
முடியாத நிலை. இந்த நகரம் (நான் நினைத்தேன்) மிக பயங்கரமாக இருப்பதன் விளைவாய் அதன் இருப்பும், நிலைப்பும் ஒரு ரகசிய பாலைவனத்துக்கிடையில் இருந்த போதிலும் கடந்த காலத்தினையும் எதிர்காலத் தையும், ஏதோ சில வழியில் நட்சத்திரங்களையும் கூட களங்கப்படுத்துகின்றன. இது நிலைத் திருக்கிற நாள் வரை இந்த உலகத்தில் எவருமே வலுவாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்க முடியாது, என நான் எண்ணினேன். அதை நான் விவரிக்க விரும்பவில்லை, முரண்கூற்று வார்த்தைகளின் பெரும் குழப்பம், ஒரு புலியின் உடல், அல்லது எருதின் உடல் அதில் பற்களும், உடற்பகுதிகளும், தலைகளும் அசுரத்தனமான பரஸ்பர சந்திப்புகளிலும் பல்கிப் பெருகும் அதீத வெறுப்பிலும் என்பதானவை ஒருக்கால் அதன் உத்தேசமான படிமங்களாகலாம்.
தூசிப்புழுதியாலும், ஈரப்பத பூமியடிப் பாறைகள் ஊடாக எனது திரும்புதலின் கட்டங்களை என்னால் ஞாபகபடுத்திப் பார்க்க முடியவில்லை. கடைசி புதிர் வழியை விட்டுச் சென்ற போது, மீண்டும் நான் நித்தியமானவர்களின் நகரத்தினால் சூழப்பட்டு விடுவேன் என்ற பயம் என்னை விட்டு விலகவே இல்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். வேறு எதுவும் நான் நினைவில் கொள்ளவில்லை. இந்த அதீத மறதி, இப்போது மீள முடியாமல், ஒரு வேளை விரும்பித் தேர்ந்ததாய்க் கூட இருக்கலாம். ஒரு வேளை எனது தப்பித்தலின் சூழ்நிலைகள் மிக அசௌகரியமான மனப்பதிவை ஏற்படுத்தியதன் காரணமாய், பிறவற்றைப் போலவே என் நினைவிலிருந்து தப்பி விட்ட பிறகு ஒரு நாளில், அவற்றை மறக்க எனக்குள் உறுதியெடுத்துக் கொண்டேனாயிருக்கலாம்.

– 3 –

எனது பிரயத்தனங்களின் விவரணைகளை கவனத்துடன் படித்தவர்கள் அந்த இனத்து மனிதன் ஒருவன் ஒரு நாயைப் போல அந்த சமச்சீரற்ற சுவர்களின் நிழல்வரை என்னைத் தொடர்ந்து வந்ததை நினைவு கூர்வார்கள். கடைசி நிலவறையில் இருந்து நான் வெளிவந்த பொழுது குகையின் வாயிலில் அவனைக் கண்டேன். மணல் மீது கைகால்களை நீட்டியப்படி கிடந்தான். புரிந்துகொள்ளப்படும் விளிம்பிற்கு வந்து கலைந்து போகும் கனவில் தோன்றும் எழுத்துக்களைப் போல சில குறியீடுகளின் தொடர்களை மணல் மீது. . . வரைந்தபடி அழித்துக் கொண்டிருந்தான். அது ஏதோ விதமான புராதன எழுத்து வடிவமாக இருக்கும் என்று நினைத்தேன். பிறகு பேசப்பட்ட வார்த்தையை அடையமுடியாத மனிதர்கள் எழுத்து வடிவத்தை அடைவது என்ற கற்பனை அபத்தமானது என்று உணர்ந்தேன். அவன் எழுதியதில் எந்த வடிவமும் ஒன்றுக்கொன்று சமமாக இல்லாதிருந்ததால், அவை குறியீட்டு அளவிலான மொழியாக இருக்கலாம் என்கிற சாத்தியத்தை அழித்தன, அல்லது, குறைத்தன. அந்த மனிதன் அவற்றை எழுதிய பின் கவனித்து பின்னர் அதை திருத்தினான். திடீரென இந்த விளையாட்டினால் எரிச்சலுற்றவனாய் தனது முன் கையினாலும் உள்ளங்கையினாலும் அவற்றை அழித்தான். என்னைப் பார்த்தான். ஆனால் என்னை அடையாளம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. தீவிரத்தில் (அல்லது என்னுடைய தனிமை அத்தனை அகண்டதாக, பயங்கரமானதாக இருந்ததால்) குகையின் தரைப்பகுதியில் இருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்த அவன் எனக்காகவே காத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. சமவெளியை சூடாக்கியது சூரியன். முதல் நட்சத்திரங்களின் கீழாக, மணல் பாதங்களை எரித்தது. முதல் வெள்ளி மீன்களின் கீழ் நாங்கள் கிராமத்திற்கு திரும்பத் தொடங்கினோம். ட்ரோக்ளோடைட் என்னை முந்திச்சென்றான். அன்றிரவு அவனுக்கு சில வார்த்தைகளை, அடையாளப்படுத்துவதற்கோ,ஒருவேளை திருப்பிச்சொல்வதற்கோ கற்றுத்தரும் திட்டத்தினை மனதில் உருவாக்கினேன். நாயும், குதிரையும் (நான் யோசித்தேன்) முந்தையதில் திறன் மிக்கவை, பல பறவைகள், சீசரின் நைட்டிங்கேல் பறவைகளைப் போல, பிந்தையதில் திறன் மிக்கவை. ஒரு மனிதனின் மனம் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக இருந்தபோதிலும் அறிவற்ற விலங்குகளினுடையதை விட என்றும் மேன்மையானது.
ட்ரோக்ளோடைட்டின் பணிவான தன்மையும், பரிதாப நிலையும் ஒடிசி காவியத்தில் வரும், இறக்கும் நிலையில் உள்ள, கிழட்டு நாயான ஆர்கோஸின் படிமத்தை என் நினைவுக்கு கொண்டு வந்தது. எனவே அவனுக்கு ஆர்கோஸ் என்ற பெயரிட்டு சொல்லித்தர முயன்றேன். மீண்டும் மீண்டும் தோற்றுப் போனேன். சமரசமும், வன்மையான கண்டிப்பும், பிடிவாதமும் முழுமுற்றாக பயனற்றுப்போயிற்று. சலனமில்லாமல், உயிர் துடிப்பற்ற கண்களுடன் இருந்த அவன், நான் அவன் மீது திணிக்க முயன்ற ஓசைகளை உள் வாங்கிகொண்டதாகத் தெரியவில்லை. சில அடிகனே தள்ளி இருந்தவன், வெகுதொலைவில் இருப்பதாகக் கண்டான். மணல் மீது, சிதைந்த, ஒரு சிறிய, எரிமலைக் குழம்பிலான எகிப்திய புதிர்ச்சிலை மாதிரிக்கிடந்து, தன் மீது கிரகங்களை விடியலின் மெல்லொளியில் தொடங்கி மாலை வரை, சுழல்வதற்கு அனுமதித்தான். என் நோக்கத்தைப் பற்றிய பிரக்ஞை அவனுக்கு இல்லாது இருக்க முடியாது எனவும் அனுமானித்தேன். வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்து தப்புவதற்காக, குரங்குகள் வேண்டுமென்றே பேசாமல் இருக்கின்றன என்பது எத்தியோப்பியர்கள் நன்கு அறிந்தது என்பதையும் நினைவு படுத்திக் கொண்டேன். ஆர்கோஸின் மௌனத்திற்குக் காரணமாக, பயமோ, சந்தேகமோ இருக்கலாம் என்று நினைத்தேன். இந்த கற்பனையில் இருந்து நான் பிற நம்புவதற்கரிய கற்பனைகளுக்குச் சென்றேன். நானும் ஆர்கோஸூம் வேறு வேறு பிரபஞ்சங்களில் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக எண்ணினேன். எங்களது காட்சிப்பாடுகள் ஒன்றேயாக இருப்பினும் அவன் அவற்றை வேறு ஒரு விதத்தில் கலந்து, அந்தக் கலவையிலிருந்து அவன் பிற பொருள்களை உருவாக்கிக் கொண்டான் என்றும் எண்ணினேன். ஒரு வேளை அவனுக்கு எந்தவிதமான பொருள்களும் இருக்கவில்லை என்றும் நினைத்தேன். மிகச்சிறிய மனப்பதிவுகளின் தொடர்ச்சியான தலைச்சுற்றச் செய்யும் இயக்கம் மட்டுமே இருந்தது அவனுக்கு. ஞாபகம் என்ற ஒன்று இல்லாத, காலம் என்ற ஒன்றில்லாத உலகினை நினைத்துப் பார்த்தேன். பெயர்ச்சொற்களும், வினைமுதல் சுட்டாத, ஆளைக் குறிக்காத வினைச்சொற்களும், உருவம் திரிபுறாத பண்புசுட்டுச் சொற்களும் இல்லாத ஒரு மொழியின் சாத்தியம் குறித்து எண்ணினேன். இவ்வாறு நாட்களும்,
அவற்றின் கூடவே வருடங்களும் கடந்தோடின. எனினும் மகிழ்ச்சிக்கு இணையானதொரு நிகழ்ச்சி ஒரு நாள் காலையில் நடந்தது. வலுவான முன்தீர்மானத்துடன் பெய்வதாய் மழை பெருவீச்சுடன் அடித்தது.
பாலைவன இரவுகள் மிக குளிர்ந்திருக்கும், ஆனால் அந்த இரவு நெருப்பாய்த் தகித்தது. தெஸ்ஸாலே நகரிலிருந்த ஒரு நதி (நான் ஒரு தங்க மீனை நான் அதில் திரும்ப விட்டிருக்கிறேன்) என்னை விடுவிக்க வருகிறது என்று நான் கனவு கண்டேன். கருப்புப் பாறைகளின் மீதாகவும், சிவப்பு மணலின் மீதாகவும் அது அணுகுவதை நான் கேட்டேன். காற்றில் இருந்த குளிர்ச்சியும் துரிதமான மழையின் முணுமுணுப்பும் என்னை எழுப்பி விட்டன. நான் நிர்வாணமாக அதைச் சந்திக்க ஒடினேன். இரவு வெளுத்துக் கொண்டிருந்தது. மஞ்சள் நிற மேகங்களுக்கு கீழே, என்னை விட எந்த விதத்திலும் சந்தோஷம் குறையாத அந்த இனத்தவர்கள் உயிர்ப்பும் ஒளிர்வுமாகக் கொட்டும் மழைக்கு ஒரு வகையான பேரானந்தத்துடன் தம்மைத் தந்துக் கொண்டிருந்தனர். கோரிபான்டஸுக்கு சாமி வந்து விட்டது போலத் தோன்றியது. ஆர்கோஸ், தனது கண்கள் விண்ணை நோக்கி இருக்க, முனகல் ஒலி எழுப்பினான், நீரினது மட்டுமின்றி கண்ணீர்த் துளிகளினாலும் ஆன கனத்த சாரல்கள் அவன் முகத்திலிருந்து வழிந்தோடின. (பிறகு நான் அறிந்து கொண்டேன்). நான் ஆர்கோஸ் ஆர்கோஸ் என்று அழுதேன்.
பிறகு, ஒரு மென்மையான போற்றுதலுடன், நீண்ட காலத்திற்கு முன்னரே மறக்கப்பட்டு, இழக்கப்பட்டதைக் கண்டுபிடித்துக் கொள்பவனைப் போல, ஆர்கோஸ் கீழ்க்கண்ட வார்த்தைகளை திக்கி திக்கிச் சொன்னான், “ஆர்கோஸ், யூலிசிஸிஸின் நாய்”. தொடர்ந்து என்னைப் பாராமலேயே கூறினான் ” எருக்குப்பையில் கிடக்கும் இந்த நாய். ”
நாம் யதார்த்தத்தை எளிதாக ஏற்றுக் கொண்டு விடுகிறோம், ஒரு வேளை உள்ளுணர்வு மூலமாய் எதுவுமே நிஜமல்ல என்று உணர்வதால் இருக்கலாம். அவனுக்கு ஒடிசி காவியம் பற்றி என்ன தெரியும் என்று கேட்டேன். கிரேக்க மொழிப்பயன்பாடு அவனுக்கு சிரமமாக இருந்தது. நான் என் கேள்வியை திருப்பிச் சொல்ல வேண்டியதாயிற்று. மிகச் சொற்பம்தான்” என்றான் அவன். சாதாரணமானதொரு வீரகாவியம் எழுதுபவனை விடக் குறைவாகவே. அதை நான் ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடித்தேன்.”

– 4 –

எல்லாம் அந்த தினம் எனக்குத் துலக்கமாகத் தெளிவாகியது. ட்ரோக்ளோடைட்டுகள்தான் நித்தியமானவர்கள். மணற்பாங்கான நீரின் சிறு ஒடைதான் அந்தக் குதிரைவீரன் தேடியலைந்த நதி. கங்கைநதி வரை அதன் புகழ் பரவியிருந்த அந்த நகரத்தை பொறுத்தவரை நித்தியமானவர்கள் அதை அழித்து ஒன்பது நூற்றாண்டுகள் ஆகிவிட்டிருந்தன. அந்த சிதிலங்களின் எச்சங்களுடன் அதே இடத்தில் நான் கடந்து வந்த பைத்தியக்கார நகரத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். ஒருவிதமான நையாண்டி, அல்லது தலைகீழ்ப்புரட்டல். மேலும், மனிதர்களை ஒத்திருக்கமாட்டார்கள் என்பதைத் தவிர வேறொன்றும் அவர்களைப் பற்றித் தெரியாதவர்களும் இவ்வுலகத்தை நடத்திச் செல்பவர்களுமான காரணகாரியங்களற்ற கடவுளரின் கோயில். இந்தக் கட்டிடமே நித்தியமானவர்கள் மனமிறங்கி ஏற்றுக் கொண்ட இறுதிக் குறியீடு. எல்லா முயற்சிகளும் வியர்த்தமானவையே என்று தீர்மானித்து, சிந்தனையில் வாழ்வதென்று முடிவெடுத்த தூய யூகித்தலின் கட்டத்தை அது அடையாளப்படுத்துகிறது. அவர்கள் அந்தக் கட்டிடத்தை எழுப்பினார்கள், மறந்து போனார்கள், குகையில் வாழச்சென்றார்கள். சிந்தனைக்குள் சர்வமும் ஈர்க்கப்பட்டவர்களாய் அவர்கள் ஸ்தூல உலகினை உள்வாங்கிக் கொள்ளவே இல்லை.
ஒரு குழந்தைக்குச் சொல்வது மாதிரி இந்த விஷயங்களை ஹோமர் எனக்குச் சொன்னார். தனது வயோதிகத்தைப்பற்றியும், யூலிசிஸ் மேற்கொண்டது போல, கடல் என்னவென்று தெரியாத, துடுப்பு பற்றித் தெரியாத, உப்பினால் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்டிராத மனிதர்களைச் சென்றடையும் குறிக்கோளினால் உந்தப்பட்டு அவர் மேற்கொண்ட கடைசிப் பயணத்தைப் பற்றியும் கூறினார். ஒரு நூற்றாண்டு வரை நித்தியமானவர்களின் நகரத்தில் வாழ்ந்திருக்கிறார். அது அழிக்கப்பட்டவுடன் அந்த மற்றொன்று நிறுவப்பட வேண்டுமென்று அறிவுரை வழங்கியிருக்கிறார். இது நமக்கு வியப்பைத் தரக்கூடாது; இலியன் நகரின் போரைப் பற்றிப் பாடிய பிறகு தவளைகள் மற்றும் எலிகளின் சண்டையையும் அவர் பாடியது பிரசித்தமானதே. ஒரு பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கும் பிறகு ஒரு பெருங்குழப்பத்தை உருவாக்குவதற்கும் அவரால் முடியும்-ஒரு கடவுளைப் போல.
நித்தியமானவராக இருப்பது சர்வசாதாரணம். மனிதனைத் தவிர அனைத்து ஜீவராசிகளுமே நித்தியமானவையே-காரணம் அவற்றின் மரணம் பற்றிய அறியாமை; புனிதமானதும், பயங்கரமானதும், புரிந்துகொள்ள முடியாததும் ஒருவர் தான் நித்தியமானவர் என்று அறிவது. மதங்களையும் மீறி இந்த ஆழ்ந்த நம்பிக்கை மிக அரிதானதென நான் கண்டு கொண்டிருக்கிறேன். இஸ்ரேல் நாட்டவர்களும், முகமதியர்களும், கிறித்தவர்களும் நித்தியத்துவத்தை முன்வைக்கி றார்கள். ஆனால் அவர்கள் இந்த இக உலகிற்குத் தரும் அதிகபட்ச மரியாதை இதைத் தவிர வேறு எதிலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நிரூபிக்கிறது. ஏன் எனில் அவர்கள் எண்ணிலடங்காத மற்றெல்லா உலகங்களையும் இந்த உலகின் பரிசு என்றோ அல்லது தண்டனை என்றோ அறுதிப்படுத்துகின்றனர். ஆனால் சில குறிப்பிட்ட இந்திய மதங்களின் சக்கரம் எனக்கு அதிகம் நியாயமாகப் படுகிறது. ஆரம்பமோ முடிவோ இல்லாத இந்தச் சக்கரத்தில் ஒவ்வொரு வாழ்வும் அதற்கு முந்திய வாழ்வின் விளைவாகி அதன் பின் வரும் வாழ்வினை உற்பத்தி செய்கிறது. ஆனால் இதில் எது ஒன்றுமே முழுமையைத் தீர்மானிப்பதில்லை. . . . . பல நூற்றாண்டுகளின் பழக்கத்தால் கருத்துப் போதனைக்கு உள்ளாகி, நித்தியமானவர்களின் குடியரசினைச் சேர்ந்தவர்கள் சகிப்புத்தன்மையிலும் ஏறத்தாழ அசட்டைத் தன்மையிலும் அதேயளவு பூரணத்துவத்தை எட்டியிருந்தார்கள். முடிவற்ற காலத்தினுள், சகல விஷயங்களும் சகல மனிதர்களுக்கும் நடக்கின்றன என்பதை அறிந்தனர். இந்த கடந்தகாலத்திய அல்லது எதிர்காலத்திய நற்குணங்களினால், ஒவ்வொரு மனிதனும் சகலவிதமான நற்காரியங்களுக்கும், அதே சமயம் சகலவிதமான வக்கிரங்களுக்கும் தகுதியானவனாகிறான், அவனது கடந்த கால, எதிர்கால பெரும்பழி காரணமாக. யதேச்சைத்தன்மைகள் கொண்ட விளையாட்டுக்களில் உள்ளது போல…… எண்கள் நடுநிலை அமைதியை நோக்கிச் செல்வதைப் போல, மந்தத்தன்மையும் அறிவும் ஒன்றை ஒன்று தவிர்த்தும், ஒன்றை ஒன்று சரிசெய்து கொண்டும் இருக்கும். ஹீராக்ளிட்டஸின் ஒரு முகப்பு மேற்கோள் கோருகிற, அல்லது ஊஸ்ரீர்ப்ர்ஞ்ன்ங்ள் இன் ஒரு அடைமொழிச் சொல் கோருகிற எதிர்சமனாக, நாட்டுப்புறத்தன்மையான டர்ங்ம் ர்ச் ற்ட்ங் ஈண்க் இருக்கிறது. மிக வேகத்தில் உண்டாகி அழியும் சிந்தனை கூட கண்ணுக்குப் புலப்படாத வடிவ நேர்த்தியைப் பணிந்து ஒரு ரகசிய வடிவத்திற்குக் கீரிடமிடுவதாகவோ அல்லது அந்த மறை வடிவத்தைத் துவக்கி வைக்கவோ முடியும். வரும் நூற்றாண்டுகளில் நல்லது நடக்க வேண்டுமென்பதற்காக, அல்லது நடந்த முடிந்த நூற்றாண்டுகளில் விளைந்த நன்மைகளின் பொருட்டுத் தீவினையைச் செய்தவர்களை நான் அறிவேன். இந்த வகையில் பார்த்தால் நம்முடைய எல்லாச் செயல்களும் நியாயமானவையே. அவை அசட்டைத்தனம் வாய்ந்தவையும் கூட. தார்மீக அல்லது அறிவார்த்த குணாம்சங்கள் என்று எதுவும் கிடையாது. ஹோமர் ஒடிசி காவியத்தை எழுதினார்; நாம் முடிவற்ற காலப்பகுதியினை, அதன் முடிவற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் மாறுதல்களுடன் முன்வைப்போமானால், ஒரு தடவையாவது ஒடிசியை எழுதாதிருக்கும் சந்தர்ப்பம் இருக்க முடியாது. யாருமே எவரும் கிடையாது. ஒரு நித்தியமான மனிதனே சகல மனிதனும் ஆவான். கார்னீலியஸ் அக்ரிப்பாவைப் போல நானே கடவுள், நானே நாயகன், நானே தத்துவவாதி, நானே அசுரன், நானே உலகம். என் இருப்பின் இன்மையை சலிப்பு மிகுந்த வழியில் சொல்வதே இது.
இந்த உலகினை ஒரு கச்சிதமான இழப்பீடுகளின் அமைப்பாகக் கொண்ட கருதுகோள் நித்தியமானவர்களை அதிகமாகப் பாதித்தது. முதலாவதாக, பரிதாபத்தினால் பாதிக்கப் படாதவர்களாக அவர்களை ஆக்கியது. அந்தப் பக்கத்துக் கரையின் வயல்களைக் குறுக்கிட்ட புராதன கல்குழிகளைப் பற்றி நான் குறிப்பிட்டேன். அதில் மிக ஆழமானதில் ஒரு மனிதன் விழுந்துவிட்டான். அவன் தன்னைக் காயப்படுத்திக் கொள்ளவோ சாகடித்துக் கொள்ளவோ முடியவில்லை. என்றாலும் தாகம் அவனை எரித்தது. அவனுக்கு மற்றவர்கள் ஒரு கயிறை வீசுவதற்கு முன் எழுபது வருடங்கள் கழிந்தன. தங்களது விதி பற்றியும் அவர்கள் ஈடுபாடு காட்டவில்லை. அவர்களைப் பொறுத்த வரை உடலானது கீழ்ப்படிதலுள்ள ஒரு வீட்டு மிருகம். மாதத்திற்கு ஒரு தடவை சில மணி நேரங்களின் சொற்ப தூக்கம், ஒரு மிடறு தண்ணீர், இறைச்சியின் துணுக்கு ஆகியவை போதுமானது. எவரும் நம்மை கடுந்துறவி அளவுக்குக் கீழிறக்கி விட வேண்டாம். சிந்தனையை விட நெருக்கமான முற்றுப் பெற்ற மகிழ்ச்சி எதுவும் கிடையாது. அதற்கு எம்மை சரண் தந்துவிட்டோம். சில சமயம் ஒரு அசாதாரண தூண்டுதல் எம்மை ஸ்தூல உலகிற்கு மீட்டுத் தரும். உதாரணமாக, அன்று காலையில் பெய்த அந்த புராதன, மூலாதாரமான சந்தோஷத்தைக் கொடுத்த மழை. இம்மாதிரிப் பிழைகள் எப்போதாவது தான் நடக்கும். எல்லா நித்தியமானவரும் முழுமுற்றான நிச்சலன அமைதி கைவரப் பெற்றவர்கள். என்றுமே எழுந்து நிற்காதிருந்த ஒருவனை எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு பறவை அவனது நெஞ்சின் மீது கூடு கட்டிவிட்டது. வேறு ஏதொன்றிலோ இழப்பீடு இல்லாதிருக்கிற எதுவுமேயில்லை என்ற சிந்தாத்தத்தின் துணை முடிபுகளில் ஒன்றின் கருத்து முக்கியத்துவம் மிகச்சொற்பமே. ஆன போதிலும் அதுவே பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அல்லது இறுதியில், எங்களை இந்த உலகின் முகத்திலிருந்தே அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தூண்டியது. அதைக் கீழ்க்கண்ட வார்த்தைகளில் சொல்லலாம்: நித்தியத்துவத்தை அளிக்கக் கூடிய நீரையுடைய நதி இருந்தாக வேண்டும். வேறு ஒரு பிரதேசத்தில் அந்த நித்தியத்துவத்தை அகற்றிவிடக் கூடிய நீரையுடைய மற்றொரு நதி இருக்கிறது. நதிகளின் எண்ணிக்கை முடிவற்றதன்று. நித்தியத்துவத்தினை அடைந்த பயணி ஒருவன் இந்த உலகின் குறுக்கும் நெடுக்குமாய்ப் பயணம் செய்யும்போது, என்றாவது ஒரு நாள் எல்லா நதிகளில் இருந்தும் நீரினைக் குடித்திருப்பான். அந்த நதியைக் கண்டுபிடிப்பதென்ற தீர்மானத்திற்கு வந்தோம்.
மரணமும்(அல்லது மறைகுறிப்பும்)மனிதரை அரிதானவர்களாக்கி, பரிதாபமானவர்களாக்கி விடுகிறது. அவர்களின் ஆவித்தோற்ற நிலை காரணமாக அவர்கள் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள்; அவர்கள் செயல்படுத்தும் ஒவ்வொரு செயலும் அவர்களின் கடைசியாக இருக்கக் கூடும். ஒரு கனவிலான முகம் போல் கலைந்து விடும் விளிம்பில் இல்லாத எந்த முகமும் இல்லை. அநித்தியமானவர்களுக்கிடையேயான அனைத்துமே மீட்க முடியாதது, பேராபத்து வாய்ந்தது ஆகியவற்றின் மதிப்பார்த்தமாக இருக்கிறது. இதற்கு மாறாக அநித்தியமானவர்களின் மத்தியில் ஒவ்வொரு செயலும் (மற்றும் ஒவ்வொரு சிந்தனையும்) கடந்த காலத்தில் அவற்றிற்கு முந்தி இருந்த செயல்களின் எதிரொலியாக, வெளிப்படையான தொடக்கம் எதுவும் இல்லாமல், அல்லது எதிர்காலத்தில் அது தலை சுற்றச் செய்யும் அளவுக்கு இரட்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கைபூர்வமான முன்கூறல் எதுவும் இன்றி இருக்கின்றன. இடையறாத கண்ணாடிகளின் புதிர்ச்சிக்கலில் தொலைந்து போவதாய் இழக்கப்படாதிருப்பது என்று எதுவுமே கிடையாது. ஒரே ஒரு முறை நடக்கக் கூடியது என்று எதுவுமே இல்லை, எதுவுமே விலைமதிக்க முடியாத அளவுக்கு நிலையற்றதில்லை. இரங்கற்பாடல்தன்மை மிக்கதும், பொருட்படுத்த வேண்டியதும், சடங்கு நிறைந்ததும் நித்தியமானவர்களுக்கு ஒத்துப் போவதில்லை. ஹோமரும் நானும் டேன்ஜியர் என்ற இடத்தின் நுழைவாயிலில் பிரிந்தோம். நாங்கள் பரஸ்பரம் போய் வருகிறேன் என்று கூட சொல்லிக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

– 5 –

புதிய சிறிய நாடுகள், பெரிய நாடுகள் வழியாகப் பயணம் செய்தேன். 1066 ஆம் ஆண்டின் குளிர்பருவத்தில் ஸ்டேம்ஃபோர்டு பாலத்தில் நான் போரிட்டேன். சீக்கிரமே வாழ்விறுதிக்கு வந்து விட்ட ஹெரால்டின் ராணுவத்தினருடன் சேர்ந்தா என்பது நினைவில் இல்லை. அதிர்ஷ்டமில்லாத ஆங்கில மண்ணின் ஆறடி அல்லது அதற்கு சற்று மேலானதைக் கைப்பற்றிய மகிழ்ச்சியற்ற ஹெரால்ஹார்ட்ரோடாவின் படையினருடன் சேர்ந்தா? ஹெஜிரா வருட அமைப்பில், ஏழாவது நூற்றாண்டில், புலாக் என்ற பிரதேசத்தின் புறநகர்ப்பகுதியில், நான் அறியாத அட்ஷர எழுத்துக்களைக் கொண்டு, மறந்து போய்விட்ட மொழியில், ஒரு நிதானமான அழகிய கையெழுத்தில் சிந்துபாதின் ஏழு துணிகரப் பயணங்களையும், வெண்கல நகரின் வரலாற்றினையும் நான் படி எடுத்து எழுதினேன். சாமர்க்கண்ட் நகரத்தின் சிறை முற்றத்தில் நிறையவே சதுரங்கம் விளையாடினேன். பிக்கானீரிலும் பொஹிமியாவிலும் நான் ஜோதிட விஞ்ஞானத்தை எடுத்துரைத்தேன். 1638ஆம் ஆண்டு கோலோஷ்வாரிலும் பிறகு லீப்ஸிக்கிலும் இருந்தேன். 1714ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் அபெர்டீன் நகரில் போப் என்பவர் எழுதிய ஆறு தொகுதி இலியட் நூலுக்கு சந்தா கட்டினேன். அதனுடைய பக்கங்களை திரும்பத் திரும்ப படித்து சந்தோஷப்பட்டேன். 1729ஆம் ஆண்டு வாக்கில் அந்தக் கவிதையின் தோற்றுவாய் பற்றி சொல்கலைப் பேராசிரியர் ஒருவரிடம்-அவர் பெயர் கியம்பட்டிஸ்ட்டா என்று நினைக்கிறேன்-விவாதித்தேன். அவருடைய வாதங்கள் மறுத்துப் பேச முடியாதவையாக எனக்குத் தோன்றின. 1921ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் நான்காம் தேதி, பாட்னா என்ற பெயருடைய கப்பலில் பம்பாய்க்கு பயணம் செய்தேன். எரித்ரேயக் கடல் எல்லையில் இருந்த துறைமுகத்தில் அது நங்கூரமிட வேண்டி வந்தது.* நான் நிலப்பகுதிக்குச் சென்றேன். செங்கடலின் எதிர்த்த பகுதியில், மாயாஜாலமும் காய்ச்சலும் போர்வீரர்களை வீணடித்த, முகாமின், ரோமானிய மாவட்ட முதல்வராக இருந்த போது பார்த்த, மிகப்புராதனமான பிற வேறு காலை நேரங்களை நினைவு கூர்ந்தேன். நகரத்தின் வெளிப்புறங்களில் ஒரு தெளிந்த நீரோடையைக் கண்டேன். பழக்கத்தினால் தூண்டப்பட்டு அதன் நீரைப் பருகினேன். கரை ஏறி வரும்போது முட்புதர் ஒன்று என் கையின் பின்புறத்தைக் காயப்படுத்தியது. என்றுமில்லாத அந்த வலியை நான் தீவிரமாக உணர்ந்தேன். நம்பவே முடியாமலும், பேச்சிழந்தும், ஆனந்தமாகவும் நிதானமாய் உருவான ஒரு சொட்டு ரத்தத்தின் தோன்றுதலை ஆழ்ந்து பார்த்தேன். மீண்டும் ஒரு முறை நான் அநித்தியமானவன் ஆனேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், மீண்டும் ஒரு முறை நான் எல்லா மனிதரையும் போல ஆகிவிட்டேன் என்று திரும்பவும் சொல்லிக் கொண்டேன். அந்த இரவு விடியும் வரை தூங்கினேன் …
ஒரு வருடம் கழித்து நான் இந்தப் பக்கங்களைப் பரிசீலித்தேன். அவை உண்மையைப் பிரதிபலிக்கின்றன என்பது உறுதி. ஆனால் முதல் அத்தியாயத்திலும், பிற அத்தியாயங்களின் குறிப்பிட்ட பத்திகளிலும் தவறான விஷயங்கள் இருப்பதைக் கண்டு பிடித்தேன்.
*இந்த இடத்தில் கையெழுத்துப் பிரதியில் அழித்தல் இருக்கிறது. ஒரு வேளை துறைமுகத்தின் பெயர் அகற்றப்பட்டிருக்கலாம்.
துணை விவரணைகளை தேவைக்கு அதிகமாய்ப் பயன்படுத்துவதால் இது நேர்ந்திருக்கக் கூடும்,சகலத்தையும் பொய்ம்மையினால் அசுத்தப்படுத்தும் இந்த செயல்முறையை நான் அந்தக் கவிஞனிடமிருந்து கற்றுக் கொண்டேன், ஏன் எனில் அந்தக் குறிப்பிட்ட தகவல்கள் யதார்த்தங்களினால் பல்கிப் பெருகலாமே அன்றி அவற்றின் நினைவு கூறலினால் அல்ல … எவ்வாறாயினும் இதை விட மிக அத்யந்தமான ஒரு காரணத்தைக் கண்டுபிடித்தேன்.
நான் அதை எழுதுவேன், என்னை ஒரு பைத்தியக்காரன் என்று யார் தீர்மானித்தாலும் பரவாயில்லை.
நான் கூறிய கதை நிஜமல்லாதது போலத் தோன்றக் காரணம் இரு வேறுபட்ட மனிதர்களின் நிகழ்ச்சிகள் அதில் கலந்திருக்கின்றன. முதல் அத்தியாயத்தில், குதிரைவீரன் தீபஸ் நகரின் அரண்களைச் சுற்றி ஓடும் நதியின் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்புகிறான். ஃபிளேமினியஸ் ரூஃபஸ், அந்த நகருக்கு ஹெக்டெம்ஃபைலோஸ் என்ற அடைமொழியை வழங்கியவன், நதியின் பெயர் எகிப்து என்று கூறுகிறான்; இந்த உரையாடல் மொழி எதுவுமே அவனுக்கு உரியது அல்ல, ஹோமருக்கு உரியது. ஹோமர் இலியட் காவியத்தில் தீபஸ் ஹெக்டம்பைலோஸ் பற்றி வெளிப்படையாகக் கூறிவிட்டு, ஒடிசி காவியத்தில் வரும் புரோட்டியஸ் மற்றும் யூலிசிஸ் ஆகிய பாத்திரங்கள் வழியாக நைல் நதி என்று சொல்வதற்குப் பதிலாக எகிப்து என்று கூறுகிறார். இரண்டாவது அத்தியாயத்தில் அந்த ரோமானியன் நித்திய நதியின் நீரைக்குடித்து விட்டு சில கிரேக்க வார்த்தைகளைக் கூறுகிறான். இந்த வார்த்தைகள் யாவும் ஹோமர் தன்மையானவை, கப்பல்களின் பிரசித்தமான பட்டியல்களின் இறுதியில் அவற்றைத் தேடிப் பிடிக்கலாம். பின்னர் அந்த தலை
சுற்றச் செய்யும் மாளிகையில் அறிவார்த்தமான பயங்கரத்தில், “ஏறத்தாழ பின் வருத்தத்தை ஒத்ததொரு கண்டனம்” என்று சொல்கிறான்”.
இந்தச் சொற்களும் ஹோமருக்குச் சொந்தமானவையே. அவர்தான் அந்தப் பயங்கரத்தை முன் நிறுத்தியவர். இப்படிப்பட்ட முரண்பாடுகள் என் அமைதியைக் குலைத்தன. மற்றவை, ஒரு வித
அழகியல் முறையில் அமைந்தவை, உண்மையைக் கண்டு பிடிக்க என்னை அனுமதித்தன. அவை கடைசி அத்தியாயத்தில் இடம் பெற்றிருந்தன. அதில் நான் ஸ்டாம்ஃபோர்டு பாலத்தில் போரிட்டதாக எழுதப்பட்டிருக்கிறது, புலாக்கில் கடலோடி சிந்துபாதின் பயணங்களை பிரதி எடுத்து எழுதியதாகவும், அபெர்டீனில் போப்பின் ஆங்கில மொழி இலியடுக்கு சந்தா செலுத்தியதாகவும். மற்றவைகளுக்கிடையில், ஒரு வரி இப்படிப் படிக்கக் கிடைக்கிறது: “பிக்கானீரில், பொஹிமியாவில் ஜோதிட விஞ்ஞானத்தை எடுத்துரைத்தேன்.” இந்தச் சான்றுகள் எதுவுமே பொய்யானதல்ல, முக்கியமானது என்னவென்றால், அவை வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவது ஒரு போர் வீரனுக்கு பொருந்திப் போகும். ஆனால், பிறகு விவரணையாளன் போர்த்தன்மையான செயல்பாடுகளைத் தொடர்ந்து பேசாமல் மனிதர்களின் ஊழ்வினைகளில் நின்று நிலைக்கிறான் என்பதை நம்மால் கண்டறிய முடிகிறது. இவற்றைத் தொடர்ந்து வருபவை இன்னும் கூட விநோதமாக இருக்கின்றன. ஒரு இருண்மை யான மூலாதாரமான காரணார்த்தம் அவற்றைப் பதிவு செய்ய என்னைக் கட்டாயப்படுத்தியது. நான் அப்படிச் செய்ததற்குக் காரணம் அவை பரிதாபகரமாய் இருந்ததுதான். ரோமானியன் ஃபிளேமினியஸ் ரூஃபஸால் பேசப்பட்ட அளவில் அவை அத்தன்மையதல்ல. ஆனால் ஹோமரால் பேசப்பட்ட அளவில் அவை அப்படித்தான். இரண்டாமவர் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிந்துபாதின் பராக்கிரமங்களைப் பிரதியெடுப்பதும், பின் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஒரு வடதிசை ராஜ்ஜியத்தில் காட்டுமிராண்டி மொழியில், தனது இலியடைப் படிப்பவர்களைக் கண்டுபிடிப்பதும் விசித்திரமாக இருக்கிறது. பிக்கானீர் என்ற பெயர் இடம் பெற்றிருக்கும் அந்த வாக்கியத்தைப் பொறுத்த மட்டில், அற்புத வார்த்தைகளை வெளிக்காட்டும் ஆர்வமிக்க (அந்தக் கப்பல்களின் பெயர்ப்பட்டியலின் ஆசிரியரைப் போல) சொற்கலையில் சிறந்த மனிதனால்தான் அது புனையப்பட்டது என்பதை அனைவராலும் அறிய முடியும்.
முடிவு அண்மையேகி வருகையில், நினைவு கூறப்பட்ட படிமங்கள் என்று எதுவுமே நிலைப்பதில்லை. ஒரு காலத்தேஎன்னைப் பிரதிநிதித்துவப்படுத்திய வார்த்தைகளை எல்லாம் பல நூற்றாண்டுகள் என்னோடு வந்தவனின் விதிசார் குறியீடுகளோடு காலம் குழப்பிக் கொள்ள வேண்டி வந்ததில் எந்த விசித்திரத்தன்மையும் இல்லை. நான் ஹோமராக இருந்தேன். விரைவிலேயே யூலிசிஸ் போல ஒரு அநாமதேயமாகி விடலாம். விரைவிலேயே எல்லா மனிதர்களுமாகி, நான் இறந்தும் போய்விடுவேன்.

பின்குறிப்பு (1950)
முந்தைய வெளியீடு தோற்றுவித்த விளக்க உரைகளிலேயே மிகவும் விநோதமாய், அல்லது மிகவும் நடைநயம் மிக்கதாய், வேதாகமத் தலைப்பிடப்பட்டது மிகவும் பிடிவாத எழுத்துக்காரரான டாக்டர் நாஹம் கார்டோவெராவின் A Coat of Many Colours (Manchester, 1948) என்று தலைப்பிடப்பட்ட புத்தகம். இது ஒரு நூறு பக்கங்களைக் கொண்டது. ஆசிரியர் கிரேக்க செய்யுள் தொடர்களையும், தமது சமகாலத்தவர்களை செனகாவின் சொற்களைக் கொண்டு வர்ணித்த பென் ஜான்சன் பற்றியும், அலெக்சாண்டர் ராஸின் Virgilus Evangelizans ஐப் பற்றியும், ஜார்ஜ் மூர் மற்றும் எலியட் ஆகியோரின் நுண்மையான கலையாக்கங்கள் பற்றியும் கடைசியாக தொல்பொருள் விற்பனையாளன் கார்ட்டோஃபீலியஸூக்கு சொந்தமானது என்று கூறப்படும் விவரணை பற்றியும் பேசுகிறார். முதல் அத்தியாயத்தில் பிளீனியின் நூலான ஹிஸ்டோரிய நேச்சுரலிஸ் (வி.8) என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டு, இடைச்செருகப்பட்டவற்றைக் கண்டனம் செய்கிறார். இரண்டாவதில் தாமஸ் டிக்வென்சியினுடையதை. (Writings, III,439) மூன்றாவதில் Virgilius Evangelizans இன் தூதுவராக இருந்த தெக்கார்த்தேவின் கடிதங்களை, நான்காவதில் பெர்னாட் ஷாவிடமிருந்து (Back to Methuselah,V,) எடுக்கப்பட்டதை. இந்த இடையீடுகள் அல்லது திருட்டுக்களில் இருந்து அந்த முழுப்புத்தகமுமே போலியானது என்று யூகிக்கிறார். என் கருத்தில், அப்படிப்பட்டதொரு முடிவு செய்வது ஒப்புக் கொள்ள முடியாததாய் இருக்கிறது. “இறுதி அருகில் நெருங்கி வரும்போது” கார்ட்டோஃபீலியஸ் எழுதுகிறான். “எந்த ஒரு நினைவுகூறப்பட்ட படிமும் நிலைத்திருப்பதில்லை. சொற்கள் மாத்திரமே நிலைக்கின்றன”. சொற்கள், முடமாக்கப்பட்ட, இடம் பெயர்க்கப்பட்ட சொற்கள், பிறருடைய சொற்கள் மட்டுமே நாழிகைளாலும், நூற்றாண்டு களாலும் அவனுக்கு விட்டுச் செல்லப்பட்ட பிச்சை.’

Translated by James E.Irby

ஜோர்ஜ் லூயி போர்ஹே/ பேரவை/Translation Brammarajan

confgrees_borges

ஜோர்ஜ் லூயி போர்ஹே/ பேரவை

ils s’acheminerent ves un chateau immense, au frontispice duquel on lisait: ‘Je n’appartiens a personne et j’appatiens a tout le monde. Vous y etiez avant que d’y serez encore quand vous en sortirez’

-Diderot, Jacques le Fataliste et son Maitre

போனஸ் அயர்ஸ், 1955.

அலெயாண்ரோ ஃபெர்ரி என் பெயர். யுத்தத்தின் எதிரொலிகளை அதில் கேட்க முடியும். ஆனால், பழைய தெற்குப் பகுதியாக இப்போது இல்லாத அந்த நகரின் தெற்குப் பகுதியிலுள்ள சாண்டியாகோ தெல் எஸ்ட்டரோ தெருவில் உள்ள உணவு விடுதியொன்றின் மேல்  தளத்திலிருந்து இந்த வரிகளை கோர்த்துக் கொண்டிருக்கும் ஏறத்தாழ அநாமதேயமான மனிதனோடு வெற்றிவாகையின் உலோகப் பதக்கங்களும் சரி, அல்லது மேசிடோனியனின் பிரம்மாண்ட நிழலும் சரி–இந்த வார்த்தைககள் தனது நட்பினால் என்னைக் கௌரவப்படுத்திய, பளிங்குத் தூண்களை எழுதிய கவிஞனுக்கு சொந்தமானது–எந்த விதத் தொடர்பும் கிடையாது.

இப்பொழுது எந்த நாளிலும் எனக்கு வயது எழுபத்து ஒன்றோ அல்லது எழுபத்து இரண்டோ ஆகிவிடும். சொற்ப எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு நான் இன்னும் ஆங்கிலம் போதித்து வருகிறேன். தீர்மானமின்மை காரணமாகவோ அல்லது கவனக்குறைவினாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தினாலோ, நான் திருமணம் செய்து கொள்ளவேயில்லை. இப்போது நான் தனியே வசிக்கிறேன். தனிமை என்னை வருத்துவதில்லை. நம்மை நாமே சகித்துக்கொண்டு, நமது தனிப்பட்ட பழக்கவழக்கங்களைப் பொறுத்துக் கொண்டும் வாழ்க்கை கடினமாக தான் இருக்கிறது. எனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என்பதும் எனக்குத் தெரிகிறது. இதற்கான சந்தேகத்திற்கிடமில்லாத நிரூபணம் அல்லது அறிகுறி இதுதான். எந்தப் புதுமைகளும், ஒரு வேளை அவை அடிப்படையில் புதுத்தன்மையாக எதையும் கொண்டிருப்பதில்லை என்றும், அவை வலுவற்ற மாறுதல்களன்றி வேறொன்றும் இல்லை என்றும் நான் கருதுகிற காரணத்தினாலோ என்னவோ, என் ஆர்வத்தைக் கிளறுவதும் இல்லை. என் கவனத்தைக் குலைப்பதும் இல்லை. நான் இளைஞனாக இருந்த போது, சூர்யாஸ்தமனங்களும், நகரின் விரிந்து பரவியிருக்கும் சேரிகளும், சோகமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. இப்பொழுதெல்லாம், விடியற்காலைகளையும், அமைதியையும், நாகரீக நகர்ப்புறத்தினையும்  தான் நான் விரும்புகிறேன். நான் இப்பொழுதெல்லாம் ஹேம்லெட்டாக வேடம் தாங்குவதில்லை. கன்சர் வேட்டிவ் கட்சியின், மற்றும், ஒரு சதுரங்க சங்கத்தின் அங்கத்தினராகி விட்டேன்.  பின்னதில் பார்வையாளனாக, சமயத்தில் மறதி நிறைந்த பார்வையாளனாகப் பங்குகொள்வது என் வழக்கமாகி இருக்கிறது.  ஆர்வக் குறுகுறுப்புள்ள எவர் வேண்டுமானாலும் மெக்சிகோ தெருவி லிருக்கும் தேசிய நூலகத்தின் ஏதோ ஒரு சம்பந்தமற்ற முடுக்கிலிருந்து என்னுடைய Short Study of Johh Wilkins’ Analytical Language புத்தகத்தின் பிரதியினைத் தேடி எடுக்கலாம். முக்கியமாக அதனுடைய ஏராளமான பிழைகளைத் திருத்துவதற்கும் அல்லது குறைப்பதற்கும் ஒரு புதிய பதிப்பை எதிர்நோக்கி பரிதபாகரமாக நின்று கொண்டிருக்கும் என்னுடைய படைப்பான அந்த நூலைப் பார்க்கலாம்.  ஒரு புதிய பதிப்பு தேவைப்படும் நூல் அது. நூலகத்தின் புதிய இயக்குனர், நான் அறிந்தபடி, பழமையான மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கும் (அது ஏதோ, நவீன மொழிகளில் தேவையான அரிச்சுவடித்தன்மைகள் இல்லாதது போல), கற்பனையான போனஸ்அயர்சின் கத்திச்சண்டை வீரர்களின் கணக்கெடுப்பு மேம்பாட்டிற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இலக்கியவாதி என்று நான் கேள்விப்பட்டேன். நான் அவரைச் சந்திக்க வேண்டுமென்று அக்கறை காட்டியதில்லை. 1899 ஆம் ஆண்டு நான் இந்த நகருக்கு வந்தேன். கத்திச் சண்டை வீரன் ஒருவனை, அல்லது, அந்த மாதிரி பெயர் பெற்ற ஒருவனை ஒரே ஒரு முறை தான் நேருக்குநேர் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  பின்னால், அதற்கேற்ப ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால் அந்த நிகழ்ச்சி பற்றி மேலும் கூறுகிறேன்.

நான் தனியாக வாழ்கிறேன் என்பதை ஏற்கனவே சொல்லி விட்டேன். கொஞ்ச நாட்களுக்கு முன்னால், நான் ஃபெர்மின் எகுரன் என்பவரைப் பற்றி பேசுவதைக் கேட்ட ஒரு சக அறைவாசி, எகுரன், “பன்ட்டா தல் எஸ்டே”வில் இறந்து போய்  விட்டதாக என்னிடம் கூறினான்.

கண்டிப்பாக என்றுமே எனக்கு நண்பனாக இருந்திராத அந்த மனிதனின் மரணம், காரணமற்ற வகையில் வருத்தமடைய வைத்தது. நான் தனியாக இருக்கிறேன் என்பதை அறிவேன். சகல உலகத்திலும் நான் ஒருவன் மட்டுமே-பேரவை-அதன் ஞாபகங்களை என்னால் இனிமேல் பகிர்ந்து கொள்ள முடியாது-அந்த ரகசிய நிகழ்வை பொத்தி வைத்துக் கொண்டிருப்பவன். அந்தப் பேரவையின் கடைசி அங்கத்தினாக நான் இப்பொழுது இருக்கிறேன். எல்லா மனிதர்களுமே பேரவையின் அங்கத்தினர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை– இந்தப் பூமியின் மீதிருக்கும் எந்த ஒரு ஜீவனுமே அதில் அங்கமாக இல்லாதிருக்க முடியாது. ஆனால், நான் வேறு ஒரு வகையில் அதன் அங்கத்தினன் என்று எனக்கு தெரியும். 1904 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி, மிகப் புனிதமானவற்றின் மீது (இந்த பூமியின் மீது எதுவும் புனிதமானதாக இருக்கிறதா..?.அல்லது புனிதமாக எதுவும் இல்லாதிருக்கிறதா..?) பேரவையின் வரலாற்றினை என்றுமே வெளிபடுத்தக் கூடாதென்று சத்தியம் செய்தோம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால்  நான் அந்த சத்தியத்தை மீறப் போகிறேன் என்பதும் பேரவையின் ஒரு பகுதியே என்பதை மறுப்பதற்கில்லை. இந்தக் கடைசி வாக்கியம் ஒளி குறைத்துத் தரப்பட்டிருக்கிறது. ஆனால் அது இனிமேல் நான் எழுதப் போவதைப் படிக்க இருக்கும் வாசகர்களின் ஆர்வக் குறுகுறுப்பைக் கூர்மைப் படுத்தக் கூடும்.

எப்படியாயினும் நான் எனக்கென எடுத்துக்கொண்டிருக்கும் காரியம் எளிதானதல்ல. இதற்கு முன்னால் விவரிப்புக் கலையை நான் என்றுமே முயன்று பார்த்ததில்லை, கடிதம் எழுதும் வடிவத்தில் கூட  அதை எழுதப் பார்க்க முயன்றதில்லை, அதை விட, சந்தேகத்திற்கிடமின்றி, அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால் கதையே நம்ப முடியாதது. இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டிய பொறுப்பு, The Marble Pillars நூலை எழுதிய, அநியாயமாக உலகம் மறந்து போய் விட்ட படைப்பாளி ஜோஸ் பெர்னான்டஸ் இராலாவின் பேனாவுக்குத்தான் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. நான் வேண்டு மென்றே நிஜமான தகவல்களைத் திரித்துக் கூறமாட்டேன் என்றாலும் கூட எனது சோம்பேறித்தனமும், ஆற்றலின்மையும் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் தவறுக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதை என்னால் முன்யூகம் செய்ய முடிகிறது.

மிகச் சரியான தேதிகள் பயனற்றவை. என் பிறந்த பிரதேசமான ‘சான்டா ஃபெ’விலிருந்து நான் 1899 ஆம் ஆண்டு வந்தேன் என்பது நினைவு கூறப்பட வேண்டும். நான் திரும்பிச் செல்லவே இல்லை. எனக்கு அப்படி ஒன்றும் விருப்பமானதென்று கூற முடியாத போனஸ் அயர்ஸ் நகருக்கு நான் பழகிப் போய்விட்டேன்-தன் உடல் அங்கங்களுக்கு அல்லது நாள்பட்ட உடல் உபாதைக்குப் பழகி விடுவதைப் போல. அது பற்றி அதிக அக்கறை ஒன்றுமில்லை என்றாலும், நான் விரைவில் சாகப் போகிறேன் என்பதையும் நான் அறிவேன். இதன் காரனமாக நான் எனது சுற்றிவளைத்துச் சொல்லும் தன்மைகளை கட்டுப்படுத்திக் கொண்டு கதைக்குச் செல்ல வேண்டும்.

வருடங்கள் நமது அடிப்படையான சுயங்களை – ஒருவருக்கு அடிப்படை சுயம் என்ற ஒன்று இருந்தால்-மாற்றுவதில்லை. எந்த உத்வேகம் என்னை முதலில் Ultima Horaபத்திரிகையின் ஊழியர்களுக்கிடையில் கொண்டு வந்து சேர்த்ததோ அதுவே என்னை ஓர் இரவு உலகப் பேரவைக்கு வழிநடத்திச் சென்றது. கிராமப்புறங்களில் இருந்து வந்த ஒரு ஏழைப் பையனுக்கு  பத்திரிக்கைக்காரனாக ஆவது என்பது ரொமாண்டிக்கான விதியாகும். எவ்வாறு ஏழை நகர்ப்புறப் பையனுக்கு பண்ணையில் வேலை பார்ப்பது, அல்லது, மாடு ஓட்டுவது முதலியன கவர்ச்சிகரமான வாழ்க்கைமுறை ஆகிறதோ அப்படி.ஒரு காலத்தில் பத்திரிக்கைக்காரனாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டது-அந்தத் தொழில் இன்று எனக்கு அற்பமாக தோன்றுகிறது-பற்றி எனக்கு எந்தவித அவமான உணர்வும் இல்லை. என்னுடன் வேலைப் பார்த்த சகா பெர்னான்டஸ் இராலா பத்திரிகைக்காரர்கள் மறதிக்கு எழுதுகிறார்கள் என்று சொல்லிக் கேட்டது நினைவிருக்கிறது. ஆனால் அவருடைய  வாழ்வு நோக்கமாக இருப்பது காலத்திற்கும் நினைவுக்கும் எழுதவேண்டும் என்பதே. (இந்த வினைச் சொல் அப்பொழுது பொதுப்புழக்கத்தில் இருந்தது).  பின்னாளில் மறுபடியும் ஒரு சில சிறிய திருத்தங்களோடு The Marble Pillars  இல் வெளியாகிய திருத்தமான பதினான்கடிச் செய்யுள்களில் சிலவற்றை அவர் அப்போது ஏற்கனவே செதுக்கியிருந்தார்.

முதல் முறையாக பேரவை பற்றிப் பேசப்பட்டதைக் கேட்டது எப்போது என்று நினைவு கூறமுடியவில்லை. காசாளர் எனக்கு என் முதல்மாத சம்பளத்தைத் தந்த அதே மாலையாக இருக்கக் கூடும். போனஸ் அயர்ஸ் என்னை ஏற்றுக் கொண்டுவிட்டது என்பதற்கான இந்த நிரூபணத்தைக் கொண்டாட நானும் இராலாவும் சேர்ந்து இரவு உணவு சாப்பிட வேண்டும் என்று தெரிவித்தேன். அவனால் பேரவைக்கு செல்லாமல் இருக்க முடியாது என்பதால் மன்னிக்க வேண்டும் என்றான். ஒரு நிழல்சாலையின் இறுதியில் வளைந்த முகப்புடைய, ஸ்பானிஷ்காரர்கள் நிறைந்த பகட்டான கட்டிடத்தை அவன் குறிப்பிடவில்லை என்பதும் அதை விட மிக ரகசியமானதும் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒன்றைத்தான் அவன் குறிப்பிடுகிறான் என்பதும் எனக்கு உடனடியாகப் புரிந்துவிட்டது. பேரவை பற்றி சிலர் வெளிப்படையான வெறுப்போடும், சிலர் குரல் தாழ்த்தியும். இன்னும் சிலர் பீதியுடனும். தேவையற்ற ஆர்வத்துடனும் அதைப் பற்றி எதுவுமே தெரியாமல் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். சில சனிக்கிழமைகள் கழித்து  இராலா பேரவைக்குத் தன்னுடன் வரும்படி என்னை அழைத்தான்.

ட்ராம் வண்டியில் நாங்கள் பயணம் செய்த பொழுது இரவு ஒன்பது அல்லது பத்து மணி இருக்க வேண்டும். இந்த தொடக்கக் கூட்டங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடக்கின்றன என்பதையும். அலெயாண்ரோ கிளென்கோ என்பவர்தான் பேரவையின் தலைவர் என்பதையும், என் பெயரினால் ஈர்க்கப்பட்டு ஏற்கனவே என் வருகைக்கான ஒப்புதல் கையெழுத்திட்டுவிட்டார் என்பதையும் என்னிடம் சொன்னான் இராலா. கேஸ் லாம்ப் காபி விடுதிக்கு நாங்கள் சென்றோம். ஒரு நீளமான மேஜையைச் சுற்றி பேரவையின் அங்கத்தினர்கள் பதினைந்து அல்லது இருபது பேர் உட்கார்ந்திருந்தார்கள். பேசுபவருக்கான மேடை ஒன்று இருந்ததா, அல்லது, என் ஞாபகம் அதைச் சேர்த்துக் கொள்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. நான் முன் பின் பார்த்திராத அதன் தலைவரை நான் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டேன். டான் அலெயாண்ரோ ஏற்கனவே வயதாகி விட்டிருந்த கனவானாகத் தெரிந்தார். குறைந்து வரும் தலைமுடியும், உயர்ந்த நெற்றியும், சாம்பல் நிறக்கண்களும், நரைத்துக் கொண்டிருந்த சிவப்பு தாடியும் அவருக்கு இருந்தன. அவர் உயரமாகவும் கம்பீரமாகவும் இருந்தார். அடர்ந்த நிறத்தில் இருந்த நீண்ட மேலங்கி போன்ற உடுப்பில்தான் நான் அவரை எப்போதும் பார்த்திருக்கிறேன். அவரது கைகள் இரண்டும் எப்போதும் அவருடைய கைத்தடியின் தலைப்பாகத்தினை கோர்த்தபடி இருக்கும். அவருக்கு இடது பக்கத்தில் சிவப்பு முடியுடைய மிக இளைய வயதினன் ஒருவன் அமர்ந்திருந்தான். அதன் களேபர நிறம் நெருப்பை நினைவூட்டியது. மாறாக, கிளென்கோவின் தாடியின் நிறம் இலையுதிர்கால இலைகளைப் போலிருந்தது.  வலது பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞனுக்கு நீளமாக முகமும் அபூர்வமான சிறிய நெற்றியும் இருந்தது. ஆடையை வெளிக்காட்டும் நோக்கத்திற்காகவே உடை அணிபவனைப் போல உடுத்தியிருந்தான். நிறைய பேர் காபிக்கும். சிலர் அபிசிந்திற்கும், மதுபானத்திற்கும் சொல்லியிருந்தார்கள். பல ஆண்களுக்கு மத்தியில் இருந்த ஒரே ஒரு பெண்ணின் இருப்பு என் கவனத்தை முதலில் ஈர்த்தது. மேஜையின் மற்றோர் கோடியில் பத்து வயது மதிக்கத் தகுந்த, மாலுமிகளைப் போல உடையணிந்திருந்த,  விரைவிலேயே தூக்கத்தில் ஆழ்ந்துவிட்ட சிறுவன் உட்கார்ந்திருந்தான். ஒரு புராட்டஸ்டன்ட் மினிஸ்டரும். சந்தேகத்திற்கிடமில்லாத இரண்டு யூதர்களும். ஒரு அடியாள் போல உடம்பைப் பிடிக்கும் உடையணிந்திருந்தான் இன்னொருவன். கழுத்தைச் சுற்றி வெண்ணிறப் பட்டுக் கைக்குட்டையைக் கட்டியிருந்தான் ஒரு நீக்ரோ. நீக்ரோவுக்கு முன்னாலும், சிறுவனுக்கு முன்னாலும் சாக்லேட் கோப்பைகள் வைக்கப்பட்டிருந்தன. திரு.மார்செல் டல் மேஜோவைத் தவிர வேறு எந்த  ஆளையும் எனக்கு நினைவில்லை. மிகுந்த தன்னடக்கம் நிறைந்த, சிறந்த உரையாடல் காரராக இருந்த அவரை நான் மறுபடி  பார்க்கவே இல்லை. (இந்தக் கூட்டத்தின் சரியாக எடுக்கப்படாத, வெளுத்துப் போன புகைப்படம் ஒன்று இன்னும் உள்ளது. ஆனால் நான் அதை வெளியிடமாட்டேன். ஏன் எனில் அந்த உடைகளும், நீண்ட முடியும், அந்தக் காலத்தினுடைய மீசைகளும், சகலத்தையும் தமாஷாகவும் கேவலமாகவும் தோன்றச் செய்யும்).

எல்லாக் குழுக்களும் தமக்கே உரித்தான பிரத்யேக மொழிவழக்குகளையும், சடங்குகளையும் உருவாக்கும். எப்போதும் ஏதோ ஒரு வித கனவுத்தன்மையினால் சூழப்பட்டிருந்த பேரவை- தனது அங்கத்தினர்கள், சாவதானமாக, தாங்களாகவே, அதனுடைய நிஜ நோக்கங்களையும், அங்கத்தினர்களின் பெயர்கள் மற்றும் துணைப்பெயர்கள் ஆகியவற்றையும் கூடக் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதாகத் தோன்றியது. கேள்விகள் கேட்காமலிருப்பதும் என் கடமை என்பதை விரைவிலேயே தெரிந்து கொண்டேன். பெர்னான்டஸ் இராலாவிடமும் கேட்பதைத் தவிர்த்தேன் நான். அவனும் எந்த விஷயத்தையும் எப்போதும் என்னிடம் சொன்னதில்லை. இரண்டாவது சந்திப்பிலிருந்து எனக்கு அடுத்து இருந்தவர் தென்னக ரயில்வேயில் என்ஜினீயராக இருந்த, பின்னாளில் அவர் எனக்கு ஆங்கிலப் பாடங்கள் சொல்லித்தந்த டோனால்ட் ரே என்பவர்.

டான் அலெயாண்ரோ பேசியது மிகக் குறைவு. மற்றவர்கள் அவரை நேரடியாகப் பார்த்துப் பேசவில்லையாயினும், அவர்களுடைய எல்லாப் பேச்சுமே அவருக்கென்று பேசப்பட்டதென்றும், ஒவ்வொருவரும் அவரது ஏற்பையே எதிர்பார்த்திருந்தார்கள் என்றும் நான் உணர்ந்தேன். அவர் கையின் ஒரு நிதானமான அசைவு மற்றவர்களுடைய உரையாடலின் கருப்பொருளை மாற்றப் போதுமானதாக இருந்தது. சிறிது சிறிதாக, அவருக்கு இடது பக்கத்தில் இருந்த மனிதனின் விநோதப் பெயர் ட்வெர்ல் என்பதைக் கண்டுபிடித்தேன். அவனது மெலிவான தோற்றம். சில உயரமான மனிதர்களுக்கே உரித்தாக இருப்பதான, ஏதோ அவர்களுடைய உயரமான ஆகிருதி அவர்களுக்குத் தலை சுற்ற வைத்து, முன் நோக்கி வளைந்து கொள்ளும் வலுக்கட்டாயத்தை உண்டாக்கியதாய், எளிதில் முறியும்படியான ஒருவித நலிந்த தோற்றத்தை அவன் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவனுடைய கரம் ஒரு செப்பு திசைகாட்டிப் பெட்டியுடன் அடிக்கடி விளையாடிக் கொண்டிருந்ததையும், அவ்வப்பொழுது அவன் அதை மேஜை மேல் பொருத்திய தையும் நான் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். 1914ஆம் ஆண்டு இறுதியில் ஐரிஷ் ராணுவத்தின் தரைப்படை வீரர்களில் ஒருவனாக இருந்த அவன் கொல்லப்பட்டான். வலது புறத்திலேயே எப்போதும் அமர்ந்த அந்த நபர், சிறிய நெற்றியை உடைய இளைஞன், அவைத்தலைவரின் அக்காள் மகனான ஃபெர்மின் எகுரென்.

யதார்த்தத்தின் வழிவகைகளில் எந்த நம்பிக்கையும் வைக்காமல் (அப்படி ஒன்று என்றேனும் இருந்திருக்கும் பட்சத்தில் அது உச்சபட்ச செயற்கைத்தனமான இயக்கம்) சிறிது சிறிதாகக் கற்றுக் கொண்ட அனைத்தையும் ஒரே வீச்சில் அறிவித்து விடுகிறேன். அதற்கு முன்,  அந்த சமயத்திலான என்னுடைய சூழ்நிலையை வாசகனுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நான் கேசில்டா விலிருந்து வந்திருந்த ஏழைப் பையன். ஒரு குடியானவனின் மகன். தலைநகருக்கு வருகை தந்து திடுமென போனஸ்அயர்சின் அத்யந்த மனதிற்குள், மற்றும், ஒரு வேளை முழு உலகத்தின் அத்யந்த மனதிற்குள்ளாகவும் கூட ஒரு வேளை அப்படியும் இருக்கலாம் யார் கண்டது தன்னைக் கண்டு கொண்டவன்–அப்படித்தான் நான் உணர்ந்தேன். அரை நூற்றாண்டுக்குப் பிறகு, இப்பொழுதும் அந்த பளப்பளத்து ஒளிரும் முதல் தருணங்களை, நிச்சயமாகக் கடைசியாகி விடாத அந்த அற்புத கணங்களை என்னால் உணர முடிகிறது.

உண்மைத் தகவல்கள் இதோ கீழ்க்கண்டவாறு: அவற்றை என்னால் முடிந்த அளவு சுருக்கமாகக் கூறுகிறேன். பேரவைத் தலைவரான டான் அலெயாண்ரோ கிளென்கோ, உருகுவே நாட்டைச் சேர்ந்த கால்நடைப் பண்ணை மற்றும் பிரேசில் நாட்டு எல்லையைத் தொட்டபடி விரிந்து கிடக்கும் அகன்ற நிலப்பரப்பு ஆகியவற்றின் உரிமையாளர். அவருடைய தந்தை அபெர்டீன் நகரில் பிறந்தவர். இந்தக் கண்டத்திற்கு வந்து சென்ற நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர். அவர் தன்னுடன் நூறு புத்தகங்களைக் கொண்டு வந்தார். டான் அலெயாண்ரோ அவரது வாழ்நாளிலே படித்தது அந்தப் புத்தகங்கள் மாத்திரமே என்று என்று நான் துணிந்து சொல்வேன். முதிய கிளென்கோ இறக்கும் போது அவருக்கு மகனும் மகளும் இருந்தனர். அந்த மகன்தான் பின்னாளில் எங்களுக்குத் தலைவரானார். மகள் ஒரு எகுரெனை மணந்து ஃபெர்மினுக்குத் தாயானாள். ஒரு சமயம்  டான் அலெயாண்ரோ உருகுவே தேசியப் பேரவைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பி இருக்கிறார். ஆனால் அரசியல் பெருந்தலைகள் அவர் வழியை அடைத்து விட்டனர். ஏமாற்றத்துடனும் வேதனையுடனும் அதை விட பெரிய அளவிலான பேரவை ஒன்றைத் துவக்குவது என்று தீர்மானித்தார். கார்லைல் எழுதிய எரிமலைத் தன்மையான பக்கங்களில், அறிவின் பெண் தெய்வத்தை வணங்கி, முப்பத்தாறு வெளிநாட்டவர் களின் தலைமையில் பாரிஸ் நகரக் கூட்டத்தில் மனிதகுலத்தின் குரல் கொடுப்போனாகப் பேசிய அனெக்கார்சிஸ் குலூட்சின் வாழ்க்கைப் போக்கைப் பற்றிப் படித்ததை நினைவு கொண்டார். இந்த எடுத்துக் காட்டினால் உத்வேகமளிக்கப்பட்டு, எல்லா நாட்டின் எல்லா மனிதர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும், சகல உலகத்திற்குமான பேரவையைக் கூட்டுவது என்ற கருத்தை உருவாக்கினார். கேஸ் லாம்ப் காபி விடுதிதான் தொடக்க கட்டக் கூட்டங்களுக்கான மையம். இன்னும் நான்கு வருடங்களுக்குள் நடைபெற இருந்த அதன் சம்பிரதாயத் தொடக்க விழா டான் அலெயாண்ரோவின் கால்நடைப் பண்ணையில் நடப்பதாக இருந்தது. எந்த விதத்திலும் உருகுவேயின் தேசீய நாயகனான ஆர்த்திகாஸை விரும்பாத டான் அலெயாண்ரோவும் பல உருகுவே நாட்டவர்களைப் போலவே போனஸ் அயர்ஸ் மீது பிரேமை வைத்திருந்தார். என்றாலும் கூட, பேரவை முடிவாக அவரது நாட்டில்தான் கூடவேண்டும் என்று தீர்மானித்தார். வியத்தகு வகையில் அந்த நான்கு வருட திட்டக்காலம் ஏறத்தாழ மந்திரத்தன்மை வாய்ந்ததான ஒரு கச்சிதத்தில் செயல்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் எங்களுக்கு ஒரு கணிசமான தொகை நாள் ஒன்றுக்குத் தரப்பட்டது. எங்களை மூழ்கடித்த பேரார்வம் என் அளவுக்கு ஏழ்மையில் இருந்த பெர்னான்டஸ் இராலாவைத் தனது தொகையைத் தியாகம் செய்ய வைத்தது. மற்றவர்களும் இராலாவைப் பின்பற்றினோம். ஏனெனில் அது தான்யத்திலிருந்த உமியைப் பிரித்தெடுக்க உதவியது. அங்கத்தினர்களின் எண்ணிக்கை குறைந்து போய், விசுவாசமானவர்கள் மட்டுமே நிலைத்தனர். சம்பளத்திற்கான ஒரே பதவி காரியதரிசி நோரா எர்ஃஜோர்டினுடையது. வேறு எந்த வகையான சம்பாத்திய உதவி இல்லாமல் இருந்ததோடு, மிக அதிகமான வேலைகளையும் அவள் செய்து கொண்டிருந்தாள். ஒரு உலகளாவிய அமைப்பினை நிறுவுவது என்பது அற்பமான காரியம் கிடையாது. கடிதங்கள் வந்தன, போயின. அவ்வாறே தந்திகளும் கேபிள்களும். முக்கியத்துவம் வாய்ந்த பங்கேற்பாளர்கள் பெருவிலிருந்தும், டென்மார்க்கிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் கடிதம் எழுதினார்கள். பொலீவிய நாட்டுக்காரர் ஒருவர் கடல்மார்க்கத்திலான அணுகும் வழி இல்லாத தங்கள் நாட்டின் குறைபாடு எங்களது தொடக்கக் கூட்டங்களின் பிரதான அக்கறைக்குரிய விஷயமாக இருக்க வேண்டும் என்று எழுதினார். தொலை நோக்கு மனம் கொண்ட ட்வெர்ல் தத்துவ அடிப்படையிலான பிரச்சனை ஒன்று பேரவைக்கு இருக்கிறதென்று குறிப்பிட்டான். அனைத்து மனிதர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு பேரவையைத் திட்டமிடுவது என்பது, பல நூற்றாண்டுகளாகச் சிந்தனையாளர்களின் மூளையையும், கற்பனைத் திறன்களையும் கசக்கிப் பிழிந்திருந்த, மனித வகைகளின் மிகச் சரியான எண்ணிக்கையை நிர்ணயிப்பது போல், புரியாப்ó புதிராக இருந்தது. களத்திலிருந்து ஒரேயடியாக விலகிவிடாமல் கூற வேண்டுமென்றால், டான் அலெயாண்ரோ மாட்டுக்காரர்களை மட்டுமின்றி, உருகுவே நாட்டு மக்களையும், மேலும் மனிதகுலத்தின் பெரும் முன்னோடிகளையும், மேலும் சிவப்பு தாடி கொண்ட கொண்ட ஆண்களையும், மேலும் நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மனிதர்களையும் கூட பிரதிநிதித்துவப்படுத்தலாம் என்று யோசனை கூறினான். நோரா எர்ஃஜோட் நார்வே நாட்டைச் சேர்ந்தவள். காரியதரிசிகளை அவள் பிரதிநிதித்துவம் செய்வாளா? நார்வே நாட்டின் பெண்மையையா? அல்லது, எல்லா அழகான பெண்களையுமா? ஒரே ஒரு என்ஜினீயர், எல்லா என்ஜினீயர்களையும். நியூஸிலாந்தில் உள்ளவர்களையும் சேர்த்து பிரதிநிதித்துவப் படுத்தப் போதுமானவரா?

அப்பொழுதுதான், என்று நினைக்கிறேன், ஃபெர்மின் குறுக்கிட்டான். “”ஃபெர்ரி அயல்நாட்டவர் எல்லோருக்கும் பிரதிநிதி” என்று சிரிப்பலைகளுக்கு நடுவே சொன்னான்.

டான் அலெயாண்ரோ அவனைக் கடுமையாகப் பார்த்து விட்டு, ஏற்ற இறக்கமற்ற சீரான குரலில் கூறினார். “இந்த நாட்டினைக் கட்டுமானம் செய்வதற்கு தமது உழைப்பினைப் பங்களிக்கும் குடியேற்றக்காரர்களின் பிரதிநிதியாக ஃபெர்ரி இருக்கிறார்.”

ஃபெர்மின் எகுரெனுக்கு எப்பொழுதுமே என்னைக் கண்டாலே பிடிக்காது. கலப்படமான பல விஷயங்களில் அவனுக்குத் தற்பெருமை இருந்தது. ஒரு உருகுவேக்காரனாக இருப்பது பற்றி, உயர்ந்த குடும்பத்திலிருந்து பிறந்தது பற்றி, பெண்களைக் கவருபவனாக இருப்பது பற்றி, அதிகப் பணம் வசூலிக்கும் தையற்காரனைத் தேர்ந்தெடுத்தது பற்றி, கடவுளுக்குத்தான் காரணம் தெரியும், பாஸ்க் இனத்தில் தோன்றியது பற்றி. அந்த மக்கள் காலம் காலமாக மாடுகளைப் பால் கறந்தது தவிர வேறு எதையும் வரலாற்றுப் போக்கு முழுக்க செய்தறியாதவர்களாய் இருந்தனர்.

மிக அற்பமான வகை நிகழ்ச்சி எங்களுடைய பகைமையை உறுதிப்படுத்தியது. பேரவையின் சில சந்திப்புகளுக்குப் பிறகு யூனின் தெருவிலிருந்த விபச்சார விடுதிகளில் ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தான் எகுரென். திட்டம் எனக்குக் கவர்ச்சியாக இருக்கவில்லை. ஆயினும் அவனுடைய பரிகாச கிண்டல்களுக்கு ஆளாக விரும்பாமல் ஒப்புக்கொண்டேன். நாங்கள் ஃபெர்னான்டஸ் இராலாவுடன் சென்றோம். விடுதியிலிருந்து வெளியே செல்லும் போது அசுரத்தனமான ஒரு மனிதனைச் சந்தித்தோம். சற்றே குடிபோதையில் இருந்த எகுரென் அந்த மனிதனை ஒரு தள்ளு தள்ளினான். உடனடியாக எங்கள் வழியை மறித்த அந்த மனிதன் அழுத்தமான குரலில் கூறினான். “இங்கிருந்து போக விரும்புகிற எவரும் இந்தக் கத்தியைத் தாண்டிவிட்டுப் போகலாம்.”

நீண்ட நுழைவழிப் பாதையின் இருட்டில் கண்ட கத்தி முனையின் பளபளப்பு எனக்கு ஞாபகம் இருக்கிறது. வெளிப்படையாகத் தெரிந்த பயத்துடன் பின்வாங்கினான் எகுரென். என்னைப் பற்றி அவ்வளவு உறுதியாக இருக்க முடியாவிட்டாலும் எனது வெறுப்பு பயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அக்குளுக்குள் கையை வைத்து ஒரு ஆயுதத்தை எடுப்பவன் போல உறுதியான குரலில் சொன்னேன். “நாம் இதை தெருவில் சென்று தீர்த்துக் கொள்வோம்.”

இப்போது அந்த அந்நியன் வேறு ஒரு குரலில் பதில் சொன்னான், “அந்த மாதிரி ஆளைத்தான் எனக்குப் பிடிக்கும். நான் உங்களைச் சோதிக்க விரும்பினேன் நண்பா.” பிறகு சுமுகமான வகையில் சிரிக்கத் தொடங்கினான்.

“நண்பன்” என்ற வார்த்தைக்கு, அப்படி நீதான் நினைத்துக் கொள்கிறாய் என்று நீதான் நினைக்கிறாய்.” அவனைக் கடந்து நாங்கள் மூவரும் சென்றோம்.

கத்தி வைத்துக் கொண்டிருந்த அந்த ஆள் விபச்சார விடுதிக்குள் சென்றான். பிறகு அவன் டாப்பியாவா அல்லது பாரதெஸ் அல்லது அப்படிப்பட்ட வேறு ஏதோ ஒன்று என்பதையும், அவன் குடித்து விட்டுக் கலகம் செய்வதற்கு பெயர்பெற்ற  ஒருவன் என்றும் தெரிந்து கொண்டேன். நடைபாதையில் செல்லும்போது பதட்டப்படாதிருந்த இராலா என் முதுகில் தட்டிக் கொடுத்து அழுத்தமாகச் சொன்னான்.”நம் மூன்று பேரிலேயே ஒரு போர்வீரனைப் பெற்றிருந்தோம். வாழ்க ஆர்த்தக்னான்.”

ஃபெர்மின் எகுரென் பின்வாங்கலுக்குச் சாட்சியமாக நான் ஆகியதற்காக என்னை அவன் என்றும் மன்னிக்கவே இல்லை.

இப்பொழுது, இப்பொழுதுதான் என் கதை தொடங்குவதாக எனக்குத் தோன்றுகிறது. முந்தைய பக்கங்கள் நம்ப முடியாத அந்த சம்பவத்தை–ஒருக்கால் என்னுடைய முழு மொத்த வாழ்க்கையின் ஒற்றைச் சம்பவமாக இருக்கக் கூடிய அந்த அசாத்திய நிகழ்ச்சியை நடத்தி முடிப்பதற்கு சந்தர்ப்பம் அல்லது விதிக்குத் தேவைப்பட்ட நிபந்தனைகளை மட்டுமே வகுத்துரைத்தன. டான் அலெயாண்ரோ பேரவையின் மையத்தில் எப்போதும் இருந்தார். என்றாலும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு, காலப்போக்கில் நிஜமான தலைவர் ட்வெர்ல்தான்  என்று வருத்தத்தோடு நாங்கள் எண்ணத் தொடங்கினோம்.  பிழம்பான மீசையுடனிருந்த இந்த விசேஷப் பேர்வழி கிளென்கோ மற்றும் ஃபெர்மின் எகுரெனுக்கு ஆமாம் போடுபவனாக இருந்தான். ஆனால் அவன் இதைச் செய்த மிகைப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்ப்போருக்கு அவ்விருவரையும் அவன் கிண்டல் செய்வதாகத் தோன்றும். இப்படிச் செய்ததால் அவன் தன் நேர்மையை என்றும் விட்டுக் கொடுத்து விடவில்லை. கிளென்கோ அவரது பெரும் சொத்தின் பெருமையால் சிரமப்பட்டார். எந்த ஒரு காரியத்தையும்  நிறைவேற்றிக் கொள்வதற்கு, அது தலைவரின் சக்திக்கு  மீறியது என்று சொன்னால் போதுமானது என்பதை ட்வெர்ல் கண்டுபிடித்துக் கொண்டான். ஆரம்பத்தில் பேரவை என்பது ஒரு ஏனோதானோ பெயர் என்பதற்கு மேலாக இருக்கவில்லை என்பது என் சந்தேகம். ட்வெர்ல் தொடர்ந்த ரீதியில் புதிய செயல் விரிவாக்க எல்லைகளை எடுத்துச் சொல்ல டான் அலெயாண்ரோ அவற்றை எப்போதும் ஏற்றுக்கொண்டார். எல்லாம் ஏதோ விரிந்து கொண்டே போகும் வட்டத்தின் நடுவில் இருப்பது போல், அந்த வட்டமும் எப்பொழுதும் அகண்டு கொண்டே, அப்பாலுக்கப்பால் வளர்ந்து கொண்டே இருப்பதான உணர்வைத் தோற்றுவித்தது. எடுத்துக்காட்டாக ட்வெர்ல் ஒரு தகவல் குறிப்பு நூலகம் இன்றி பேரவை இயங்க முடியா தென்றான். உடனே புத்தகக் கடையொன்றில் பணியாற்றி வந்த நிரென்ஸ்டீன்  ஜஸ்டஸ் பெர்த்தஸ்ஸின் உலகப்பட புத்தகங்களையும், விரிவான பல கலைக்களஞ்சியங்கள் – பிளீனியின்  Natural History மற்றும் Beauvis இன் Speculum முதல், (நான் இந்த வார்த்தைகளை பெர்னான்டஸ் இராலாவின் குரலில் மறு வாசிப்பு செய்கிறேன்) பிரசித்தமான பிரெஞ்சு கலைக்களஞ்சியங்கள், பிரிட்டானிகாவின் கலைக்களஞ்சியங்கள்,   பியர் லாரவுசின் கலைக்களஞ்சியம், ப்ராக்ஹாசின் கலைக்களஞ்சியம், லார்சனின் கலைக்களஞ்சியம் மற்றும் Montaner  y  Simon னுடையது என அனைத்து வகையான இனிய புதிர்ச்சிக்கல்கள் வரை எங்களுக்காக வாங்கிப் போட்டுக் கொண்டே இருந்தார். குறிப்பிட்ட ஒரு சீனக் கலைக்களஞ்சியத்தின் பட்டுத் தொகுதிகளை  நான் பயபக்தியுடன் வருடிக்கொண்டிருந்ததை நினைவு கூர்கிறேன். அத்தொகுதியில் இருந்த, நுண்மையான தூரிகையால் எழுதப்பட்ட எழுத்துக்கள் ஒரு சிறுத்தையின் மேனியில் இருந்த புள்ளிகளை விட அதிக மர்மமானவையாய் எனக்குப் பட்டன. அவற்றுக்கு என்ன கதி ஏற்பட இருந்தது என்பது பற்றி இப்பொழுது நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். அது பற்றி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.

டான் அலெயாண்ரோவை முகஸ்துதி செய்யாதிருந்த ஆட்கள் நாங்கள் மாத்திரமே என்ற காரணத்தாலோ என்னவோ என்னையும், பெர்னான்டஸ் இராலாவையும் அவருக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. லா கேலிடோனியாவில் அவருக்கு இருந்த கால்நடைப் பண்ணையில் சில நாட்கள் தங்கிச்செல்ல எங்களுக்கு அழைப்பு விடுத்தார். அங்கே ஏற்கனவே சில  இரவுகளைக் கழிக்க வேண்டி வந்தது. பிறகு லகுவான வண்டியில் நாங்கள் பிரயாணமானோம்.  நாட்டுப்புறம்  நான் பிறந்த போதிருந்த சிறு பண்ணையை விட அதிக அகலமாகவும் தனிமையாகவும் காணப்பட்டது. கால்நடைப் பண்ணையைப் பற்றி இன்னும் இரண்டு விதமான மனச் சித்திரங்களை இன்னமும் வைத்துக் கொண்டிருக்கிறேன்-ஒன்று, நான் என்னுடன் கொண்டு வந்தது.  மற்றது, கடைசியாக என் கண்களால் பார்த்தது. ஒரு கனவில் வருவது போல,– சான்டா ஃபெயின் தட்டைச் சமவெளிகள் மற்றும் போனஸ்அயர்சின் ஒரு கொச்சைப் பளபளப்போடு தோற்றமளிக்கும் விக்டோரிய பாணி நீர்நிலைகள் ஆகியவற்றின் அசாத்தியமானதொரு கலவைக் காட்சியை நான் கற்பனை செய்து வைத்திருந்தேன்.  லா கேலிடோனியா, வேயப்பட்ட முக்கோண வடிவ கூரையும் கல் பாவப்பட்ட வெளித்தளமும் கொண்ட ஒரு நீண்ட, களிமண்ணும் புல்லாலும் ஆன செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடம். சிரமங்களுக்கும், சகிப்பாற்றலுக்குமாகக் கட்டப் பட்டதாகத்  தோன்றியது அது. பூசப்படாத அதன் கடினச் சுவர்கள் ஏறத்தாழ ஒரு கஜம் பருமனாகவும், அதன் கதவுகள் குறுகலாகவும் இருந்தன. ஒரு மரத்தை அங்கே நடவேண்டும் என்று எவருக்குமே ஒரு போதும் தோன்றவில்லை. சூரியனின் முதல் மற்றும் கடைசிக் கதிர்கள் கட்டிடத்தைத் தாக்கின. பாதுகாப்பு வேலிகள் கல்லால் ஆனவை. நீண்ட கொம்புகளுடைய மெலிந்த கால்நடைகள் நிறைய இருந்தன. குதிரைகளின் வீசும் வால்கள் தரையைத் தொட்டன. என் வாழ்நாளிலே முதல் முறையாக புத்தம் பதியதாக வெட்டப்பட்ட இறைச்சியின் சுவையை ரசித்தேன். சில சாக்குகள் நிறைய ‘கடல் பிஸ்கட்டு’கள் கொண்டு வரப்பட்டன. சில நாட்களுக்குப் பிறகு, தன் வாழ்நாளிலே இது வரை ரொட்டி சாப்பிட்டதில்லை என்று கூறினான் தலைமைப் பண்ணையாள். இராலா கழிவறை எங்கே என்று கேட்க, கையை வீசி, டான் அலெயாண்ரோ, ஒட்டுமொத்தமான கண்டத்தையே சுட்டிக்காட்டினார். அது ஒரு நிலாக்காலம். நான் வெளியில் காலார நடந்துவிட்டு வரச் சென்றபோது,  ஒரு நெருப்புக்கோழியின் கவனத்திற்கு ஆளாகியிருந்த இராலாவை நான் ஆச்சரியத்தில் ஆழ்த்தினேன்.

இரவு நேரமும் துரத்தி விட்டிருக்காத புழுக்கம் தாங்க முடியாததாக இருந்தது.  ஒவ்வொருவரும்  குளிர்ச்சியை புகழ்ந்து பேசினோம். அறைகள் தாழ்கூரைகளோடு ஏராளமாக இருந்தன. அவற்றில் ஏதும் சாமான்கள் இல்லாதது போலவே எனக்குப் பட்டது. எங்களுக்குத் தெற்குப் பார்த்த அறை ஒன்று தரப்பட்டது. அதில் இரண்டு கட்டில்களும், ஒரு ஒப்பனை மேஜையும், வெள்ளி வாஷ்பேசினும் தண்ணீர்த் தொட்டியும் இருந்தன. தரை மண்புழுதியாக இருந்தது.

இரண்டாவது நாள் நூலகத்திற்கும், அதில் கார்லைலின் தொகுதிகளுக்கும் வந்து சேர்ந்தேன். அதன் பக்கங்கள் மனிதகுலத்தின் பிரதிநிதியான, என்னை அந்தக் காலை நேரத்திற்கும், தனிமைக்கும் இட்டுச் சென்ற, அனெக்கார்சிஸ் குலூட்ஸூக்கு அர்ப்பணம் செய்யப் பட்டிருந்ததைக் கண்டேன். காலை உணவு சாப்பிட்ட பிறகு (இரவு உணவுக்கும் அதற்கும் வேறுபாடு இல்லாமல் இருந்தது) கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடத்தை எங்களுக்குக் காட்டினார் டான் அலெயாண்ரோ. விரிந்த திறந்த வெளியில் மூன்று அல்லது நான்கு மைல் தூரம் குதிரையில் சென்றோம். இராலாவுக்கு குதிரையேற்றப் பயிற்சி சரி இல்லாததால் அவனுக்கு விபத்து ஏற்பட்டது. சிரிக்காமல் தலைமைத் தொழிலாளி குறிப்பிட்டார்: “அர்ஜன்டீனாக் காரர்களுக்கு எப்படி இறங்குவது என்பது நன்றாகவே தெரியும்.”

நீண்ட தூரத்திற்கு அப்பால் இருந்தே கட்டிட தளத்தை எங்களால் பார்க்க முடிந்தது. இருபதிற்கும் அதிகமான தொழிலாளிகள் ஒரு விதமான வலுவற்ற அரைவட்ட அரங்கினைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். பல மேடைகளின் தொடர்ச்சிகளையும், ஏணிகளையும், கல் அடுக்குகளையும் அவற்றினூடாய் இடையிடையே  தெரிந்த வானத்துடன் பார்த்தோம் என்பதை என்னால் நினைவு கூற முடிகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அந்த மாட்டுக்காரர்களுடன் பேச முயற்சி செய்து தோற்றுப் போனேன். ஏதோ ஒரு வகையில், அவர்கள் வேறுபட்டவர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்களுக்குள்ளாக, குறைந்தபட்சமான ப்ரேஸீல் மயமாக்கப்பட்ட ஸ்பானிய மொழியைப் பேசிக்கொண்டனர். அவர்கள் உடம்பில் நீக்ரோ மற்றும் சிவப்பிந்திய ரத்தம் கலந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.அவர்கள் குள்ளமானவர்களாகவும் வலிமையானவர்களாகவும் இருந்தார்கள். லா கேலிடோனியாவில் நான் உயரமான மனிதனாகி விட்டேன்–அது வரையில் எனக்கு என்றுமே ஏற்பட்டிராத ஒன்று அது.

அநேமாக எல்லோரும் “ச்சிரிப்பா”வில் கால்களை மூடியபடி உடையணிந்திருந்தார்கள். இன்னும் சிலர் அகலமான தொளதொளத்த “பாம்போச்சா”வை அணிந்திருந்தார்கள். ஹெர்னான்டஸ் அல்லது ரஃபேல் ஒப்லிகாடோ ஆகிய எழுத்தாளர்களின் நூல்களில் இருந்த நாயகர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒற்றுமை மிகச் சொற்ப அளவே இருந்தது, அல்லது, அறவே இல்லாதிருந்தது. சனிக்கிழமை இரவு குடித்த சாராயத்தின் தூண்டுதலால் அவர்கள் வன்முறைக்கு மிகச் சுலபமாகத் தயாரானார்கள். அந்தச் சுற்றுப்புறத்தில் ஒரு பெண்ணைக் கூடப் பார்க்க முடியவில்லை,  ஒரு தரம் கூட கிட்டார் இசை கேட்கக் கிடைக்கவில்லை.

இந்த எல்லையோர நாட்டு மனிதர்களிடம் ஈடுபாடு கொண்டதை விட டான் அலெயாண்ரோவுக்கு நிகழ்ந்திருந்த மாறுதலில் நான் அதிகம் ஈடுபாடு காட்டினேன். போனஸ் அயர்சில் அவர் ஒரு இனிமையான, அதிகம் பேசாத கனவான். லா கேலிடோனியாவில், அவரது முன்னோர்களைப் போலவே அவர் ஒரு மனிதக் குழுவின் கண்டிப்பான தலைவராக இருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் அந்த வேலையாட்களுக்கு வேதாகமத்தைப் படித்துக்காட்டினார். அவர்களுக்கு அதில் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. ஒரு நாள் இரவு தலைமைத் பண்ணையாள்-தன் வேலையை அவனது அப்பாவிடம் இருந்து ஸ்வீகரித்துக் கொண்டவன்-பகல் நேர வேலையாட்களில் ஒருவனும் அங்கே நிரந்தரமாக வேலை செய்து கொண்டிருந்த ஒருவனும் கத்திச் சண்டையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தான். கொஞ்சம் கூடப் பதட்டப்படாமல் டான் அலெயாண்ரோ கிளம்பினார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களின் வட்டத்திற்கு வந்தபோது அவர் எப்போதும் தன்னுடன் வைத்திருந்த ஆயுதத்தை வெளியே எடுத்து தலைமைப் பண்ணையாளிடம் கொடுத்து விட்டு (அவன் கெஞ்சுபவன் போல இருந்தான்) இரண்டு கத்திகளுக்கிடையே நுழைந்தார். உடனே அவரிடமிருந்த கிளம்பிய கட்டளையை என்னால் கேட்க முடிந்தது. “கத்திகளைக் கீழே போடுங்கள் பையன்களா. இப்போது ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி விட்டு மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். இங்கே எந்தக் குடிகார சண்டையும் நடப்பதை நான் விரும்பவில்லை.”

அந்த இருவரும் கீழ்ப்படிந்தனர். டான் அலெயாண்ரோ அடுத்த நாள் தலைமைப் பண்ணையாளை நீக்கிவிட்டதாக நான் தெரிந்து கொண்டேன்.

எனக்குள் ஒரு தனிமை ரீங்கரித்துக் கொண்டிருந்தது. நான் திரும்பவும் போனஸ் அயர்சுக்கு போகவே முடியாதோ என்று பயப்படத் தொடங்கினேன். இந்த பயம் ஃபெர்னான்டஸ் இராலாவுக்கு இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. அர்ஜன்டீனாவைப் பற்றியும் அங்கே திரும்பிய உடன் என்ன செய்வோம் என்பது பற்றியும் நாங்கள் நிறைய பேசினோம். ஜூஜூரி தெருவில் ஒரு குறிப்பிட்ட வீட்டு வாசலில் ‘பிளாசா தல் ஒன்சு’க்கு அருகில் இருந்த கல் சிங்கங்களையும், நகரின் வெளிச்சம் குறைவான பகுதியில் இருந்த தெரு ஒன்றில் இருந்த பழைய மதுவருந்தும் கூடத்து ஒளியையும் இழந்ததாக உணர்ந்தேன். ஆனால் என்னுடைய பரிச்சயமான இடங்களை அல்ல. நான் எப்போதும் நல்ல குதிரை சவாரிக்காரன். குதிரை மீதேறி நீண்ட தூரங்களுக்குச் செல்லும் பழக்கத்திற்கு ஆளானேன். நானே கால் வைத்து ஏறிக்கொண்ட ஒரு பழுப்பு நிறக் குதிரையை எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. ஏதோ ஒரு மதியம், அல்லது ஒரு இரவு, அல்லது, வேறொன்றில் நான் உத்தேசமாக ப்ளரேஸீலில் இருந்திருக்கலாம்; காரணம் எல்லைப் பகுதியானது அகலமாக வைக்கப்பட்ட குறிப்பான்களால் ஆன ஒரு கோடாக இருந்ததுதான். ஒரு நாள் மாலை, மற்றெல்லாவற்றையும் போலவே டான் அலெயாண்ரோ சொன்னார். “நாம் சீக்கிரமாகத் திரும்புவோம். சீதோஷ்ணம் குளுமையாக இருக்கும் போதே நாளைக்குள் கிளம்பி விடலாம்.”

கீழ்நோக்கிய நதியில் பயணம் செய்த போது நான் மிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன், லா கேலிடோனியாவை ஒரு வித அன்புடன் நினைத்துப் பார்க்க முடிந்தது.

மீண்டும் எங்களது சனிக்கிழமை சந்திப்புகளைத் தொடர்ந்தோம். முதலாவதில் பேசுவதற்கு ட்வெர்ல் வாய்ப்பு கேட்டான். அவனுடைய எப்போதும் போலான ஜோடனையான பேச்சில் உலகப் பேரவையின் நூலகம் குறிப்பு நூல்களுக்குள் குறுக்கப்பட்டு விடக் கூடாது என்றும், எல்லா நாடுகளின், எல்லா மொழிகளிலும் உள்ள செவ்வியல் நூல்களும் எளிதில் புறக்கணித்து விட முடியாக “பொக்கிஷ அறையாக இருக்கிறது எனவும் கூறினான். இந்தக் கருத்து உடனடியாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஃபெர்னான்டஸ் இராலாவும், லத்தீன் மொழி ஆசிரியராக இருந்த டாக்டர் இக்னேசியோ க்ரூஸூம் தகுதியான நூல்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையை ஒப்புக் கொண்டார்கள். ட்வெர்ல் இது பற்றி ஏற்கனவே நிரன்ஸ்டீனுடன்  பேசியிருந்தான்.

பாரீஸைத் தனது கனவுலகமாகக் கொள்ளாத எந்த ஒரு தனி அர்ஜன்டீனியனும் அந்தக் காலத்தில் இருந்ததில்லை. இதில் எங்களிடையே மிகவும் உத்வேகமாக இருந்தவன் ஃபெர்மின் எகுரென்; இதற்கடுத்து, பல வேறுபட்ட காரணங்களுக்காக அடுத்த உற்சாகக்காரனாக இருந்தவன் ஃபெர்னான்டஸ் இராலா. ஙஹழ்க்ஷப்ங் டண்ப்ப்ஹழ்ள் எழுதிய கவிஞனுக்கு பாரிஸ் என்றாலே கவிஞன் வெர்லெய்னும் லக்கோ த லியோவும் என்று இருந்தது. எகுரனுக்கோ பாரிஸ் என்பது விபச்சாரவிடுதிக்குப் பெயர் போன ஜூனின் தெருவின் முன்னேறிய மறுவடிவமாக இருந்தது. அவன் ட்வெர்லுடன் ஒரு புரிந்துகொள்ளலுக்கு வந்திருக்க வேண்டும் என்று நான் சந்தேகித்தேன். இதைத் தொடர்ந்த அடுத்த சந்திப்பில் பேரவையின் அங்கத்தினர்கள் என்ன மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியை முன் நிறுத்தினான் ட்வெர்ல். அதற்கான செய்தி சேகரிக்க வேண்டி இரண்டு பங்கேற்பாளர்களை லண்டனுக்கும் பாரிசுக்கும் அனுப்பும் சாத்தியத்தை விவாதித்தான்.

பாரபட்சமில்லாமல் இருப்பதாகப் பாசாங்கு செய்து என்னுடைய பெயரை முதலில் முன்மொழிந்து, ஒரு வெளிப்படையான மறுசிந்தனை போல தன் நண்பன் எகுரனின் பெயரை முன்மொழிந்தான். எப்பொழுதும் போலவே இதை டான் அலெயாண்ரோ ஏற்றுக் கொண்டார்.

சில இத்தாலிய மொழிப் பாடங்களுக்கு பரிமாற்றமாக ரென், கரைகாணவியலாத ஆங்கில மொழிப் படிப்புக்கு என்னை ஆயத்தப்படுத்தினார் என்று ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். முடிந்த வரையில் நாங்கள் இலக்கணத்தையும், ஆரம்ப கட்ட மாணவருக்காகத் தயாரிக்கப்படும் அப்பியாசப் பயிற்சிகளையும் விலக்கிவிட்டு நேரடியாக, சுருக்கத்தினைக் கோரும் வடிவமான கவிதைக்குள் நுழைந்தோம். என் வாழ்வை நிரப்பிய அந்த மொழியுடனான எனது முதல் தொடர்பு ஸ்டீவென்சனின் துணிச்சலான ரிக்வெயம் தான். கௌரவமிக்க பதினெட்டாம் நூற்றாண்டுக்கு பெர்சி என்பவர் வெளிப்படுத்திய ஆங்கிலக் கதைப்பாடல்கள்; லண்டனுக்குக் கிளம்புவதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன் ஸ்வின்பர்னின் கவிதைகளால் திகைத்துப் போனேன்.-இந்த அனுபவம் இராலா எழுதிய அலெக்ஸாண்ரிய ஆறடிக் கவிதைப்பாக்களின் உயர்வினைச் சந்தேகிக்க (அதற்காகக் குற்ற உணர்வும் அடைய வைத்தது) வைத்தது.

1902ஆம் ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் நான் லண்டனை அடைந்தேன்; நான் இதுவரை என்றுமே பார்த்திராத மென்மையான வீழ்பனியின் தொடுதல் உணர்வை நான் நினைத்துப் பார்க்கிறேன்; அதற்கான ஒரு கடப்பாட்டு உணர்வும் என்னுள் நிரம்பியது. அதிர்ஷ்டவசமாக நானும் எகுரெனும் தனித்தனியாகப் பயணம் செய்திருந்தோம். பிரிட்டீஷ் மியூசியத்தின் பின்பக்கத்தில் ஒரு சுமாரான தங்கும் விடுதியில் அறை எடுத்திருந்தேன்.  மியூசியத்தின் நூலகத்தில் உலகப் பேரவைக்குத் தகுதியான மொழியைத் தேடியபடி காலை மதிய வேளைகளில் படித்துக் கொண்டிருந்தேன். நான் சர்வதேச மொழிகளை உதாசீனப்படுத்தவில்லை. பாரபட்சமற்ற, எளிய, சிக்கனமான, மொழி என்று லுகோனஸ் தகுதிப்படுத்தி இருந்த எஸ்பிராண்ட்டோ மொழியையும், அதன் வினைச் சொற்களின் வேற்றுமை உருபுத்திரிபுகள், மாறுதல்கள் ஏற்கும் பெயர்ச் சொற்கள் ஆகியவற்றால் சகலவிதமான மொழியியல் சாத்தியத்தையும் உண்டுபண்ணும் முயலும் வோலபுக் மொழியையும் ஆராய்ந்து கொண்டிருந்தேன். லத்தீன் மொழியை மீண்டும் உயிர்ப்பிப்பது தொடர்பான சாதக பாதக விவாதங்களைச் சீர்தூக்கிப் பார்த்தேன். லத்தீன் மொழிக்கான இந்த ஏக்கம் பல நூற்றாண்டுகளாகியும் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஜான் வில்க்கின்ஸ் எழுதிய பகுப்பாய்வு மொழியின் ஆராய்ச்சியிலும் நிலைப்பட்டிருந்தேன். அதில் ஒவ்வொரு சொல்லின் விவரணையையும் அந்தச் சொல்லை உச்சரிக்கும் எழுத்துக்களில் கண்டறியப் படலாகும்; முடியும். படிப்பறையின் உயர்ந்த குவிமாடத்திற்குக் கீழேதான் நான் முதன் முதலில் பியட்ரிஸை சந்தித்தேன்.

இது, உலகப் பேரவையின் பொது சரித்திரமாக இருக்க வேண்டுமே தவிர அலெயாண்ரோ ஃபெர்ரியினுடையதாக இருக்கக் கூடாது. ஆனால் முன் சொன்னது பின்னால் கூறப்பட்டதை எடுத்துக் கொண்டு விடுகிறது–எல்லா வரலாறுகளிலும் நடப்பதைப் போலவே. பியட்ரிஸ் உயரமாய், பக்குவமான அமைப்புடன், கூர்மையான அங்கங்களுடன் சிவப்பான தலைமுடியுடன் இருந்தாள். அவளுடைய தலை முடி மூடுமந்திரமான ட்வெர்லினுடையதை எனக்கு ஞாகப்படுத்தி இருக்க வேண்டும்.-ஆனால் என்றுமே அப்படிச் செய்யவில்லை. அப்பொழுது அவளுக்கு இருபது வயது பூர்த்தியாகி இருக்கவில்லை. வடக்கு நாடுகள் ஒன்றிலிருந்து இங்கிலாந்தில் இருந்த பல்கலைக்கழகம் ஒன்றில் இலக்கியம் படிப்பதற்கு வந்திருந்தாள். அவளது குடும்பப் பின்னணியும் என்னுடைதைப் போலவே, சாதாரணமானது. அந்தக் காலகட்டத்தில் போனஸ் அயர்சில் இதாலியக் குடும்பங்களில் இருந்து வந்தவர்களை இன்னும் கூட தரம் தாழ்த்தியே பார்த்தார்கள். ஆனால் லண்டனில் இதாலிய நாட்டவராய் இருப்பது பலருக்கு ஒரு ரொமாண்டிக் அம்சத்தைத் தெரிவிப்பதாக இருந்தது. ஒரு சில மாலை நேரங்கள் முடிவதற்குள் நாங்கள் காதலர்களாகினோம். என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவளிடம் வேண்டினேன். ஆனால், நோரா எர்ஃப்ஜோர்டைப் போல பியட்ரிஸ் ஃபிராஸ்ட்டும் இப்ஸன் போதித்த கொள்கையில் நம்பிக்கை கொண்டவளாக இருந்தாள். அவள் எந்த ஒரு நபருடனும் தன்னைப் பிணைத்துப் போட்டுக் கொள்ள விரும்பவில்லை. நான் பேசத்துணியாத வார்த்தைகள் அவள் உதட்டிலிருந்து வந்தன.

ஓ இரவுகளே, ஓ பகிரப்பட்ட கதகதப்பான இருளே,  ஏதோ ரகசிய நதியாய், நிழல்களாய்ப் பெருகி ஓடும் நேசமே, ஒருவரே இருவருமாகும் பேரின்பத்தின் பொற்கணமே, ஓ அந்தப் பேரின்பத்தின் பரிசுத்தமே, நிர்மலமே, ஓ பின்னால் உறக்கத்தில் நம்மைத் தொலைவித்துக் கொள்ள வாகாய் நாம் தொலைந்து போன அந்த அற்புத இணைவே, நான் அவளைப் பார்த்தபடி இருக்க வரும் விடியலின் முதல் ஒளியே.’

கரடுமுரடான ப்ரேஸீல் எல்லையில் வீட்டுக்கான ஏக்கத்தினால் நான் பெரிதும் துன்பப்பட்டேன். லண்டனின் சிவப்பு சுழல்வழிகளில்-அது பல விஷயங்களை எனக்களித்தது-அப்படி இருக்கவில்லை. திரும்ப என் நாடு செல்வதற்கான திட்டத்தினைத் தாமதப்படுத்த நான் தருவித்துக் கொண்ட சாக்குப் போக்குகளையும் மீறி அந்த வருட இறுதியில் நான் திரும்ப வேண்டியதாயிற்று. நானும் பியட்ரஸூம் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடினோம். டான் அலெயாண்ரோ அவளை பேரவையின் உறுப்பினராகச் சேர்வதற்கு அழைப்பார் என்று நான் உறுதியளித்தேன்.  அசிரத்தையான முறையில், பூமியின் தெற்குக் கோளத்திற்கு வருகை தர வேண்டும் என்று தான் எப்போதுமே விரும்பியதாகவும் கூறினாள். அவளுடைய அத்தை மகன், ஒரு பல் டாக்டர், டாஸ்மானியாவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டான் என்றும் தெரிவித்தாள்.

படகு வரை வருவதற்கு பியட்ரிஸ் விரும்பவில்லை. அவளுடைய சிந்தனைப் போக்கின்படி விடைபெறுதல்கள் என்பவை மிக நாடகீயமானவை; துக்கத்தின் அர்த்தமற்ற விருந்தளிப்பு.  அவள் உணர்ச்சிமயமானவற்றை வெறுத்து ஒதுக்கினாள். அதற்கு முந்தைய குளிர்காலத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்ட அதே நூலகத்திலேயே பிரிந்தோம். ஒரு ஆண் என்கிற வகையில் நான் ஒரு கோழை. கடிதங்களுக்காகக் காத்திருக்கும் மனவலியைத் தவிர்க்க வேண்டி அவளிடம் என் முகவரியைக் கொடுக்கவில்லை.

தாயகம் திரும்பும் பயணங்கள் குறுகலானவை என்பதை நான் எப்போதும் கவனித்திருக்கிறேன். ஆனாலும் அட்லாண்டிக் சமுத்திரத்தை பதற்றங்கள் மற்றும் நினைவுகளின் பாரத்துடன் கடந்த அந்தப் பயணம் எப்போதுமில்லாமல் நீளமாகத் தோன்றியது. என் வாழ்வுக்கு இணையான தொன்றில் பியட்ரிஸ் அவளுக்கான வாழ்க்கையை, நிமிஷம் அடுத்து நிமிஷமாக, இரவு அடுத்து இரவாகத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பாள் என்ற எண்ணம் வேறு எதையும் விட அதிகமாகத் என்னைத் துன்புறுத்தியது. நான் ஒரு நீண்ட கடிதத்ததை எழுதி, மான்ட்டி வீடியோவிலிருந்து கிளம்புவதற்கு முன் கிழித்து விட்டேன். அர்ஜன்டீனாவை அடைந்ததும்–அது ஒரு வியாழக்கிழமை–எனக்காக இராலா, கப்பல் நிற்கும் தளத்தில் காத்துக் கொண்டிருந்தான். சிலி தெருவிலிருந்த என் பழைய வீட்டுக்குச் சென்றேன். அந்த நாளும் அதற்கு அடுத்து நாளும் நானும் அவனும் நீண்ட தூரம் நடந்துகொண்டும் பேசிக்கொண்டும் இருந்தோம். நான் மீண்டும் போனஸ் அயர்சை மீட்டுக் கொள்ள விரும்பினேன்.

ஃபெர்மின் எகுரென் தொடர்ந்து பாரிஸில் தங்கியிருக்கிறான் என்று அறிந்தது எனக்கு விடுதலை உணர்வைத் தந்தது. அவனுக்கு முன்னால் நான் திரும்பி விட்ட உண்மை என் நீண்ட காலத்து இல்லாமையை ஒரு விதத்தில் சரிசெய்து விடும் என்று எனக்குத் தெரிந்திருந்தது.

இராலா முகம் வாடிப்போயிருந்தான். பெரும் தொகைகளை ஃபெர்மின் ஐரோப்பாவில் வீணடித்துக் கொண்டிருந்தான். ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நாடு திரும்ப வேண்டும் என்ற கட்டளைக்கு கீழ்ப்பணிய மறுத்தான். இது முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டிய ஒன்றுதான். வேறு செய்திகள் என்னை அதிகம் அலைக்கழித்தன. ட்வெர்ல், இராலா மற்றும் க்ரூஸ் ஆகியோரின் எதிர்ப்பை மீறி ஏதோ ஒரு நல்ல விஷயம் இல்லாமல் எந்தப் புத்தகமும் மோசமாகிவிடாது என்ற கருத்தினை பிளீனி இளைவரிடமிருந்து காரணம் காட்டி, தினசரி பத்திரிக்கைகளின் வெளியீடுகளில் “பைண்டு” செய்யப்பட்டவைகளை தராதரம் பிரிக்காமல் வாங்குவது என்ற தீர்மானத்தை முன் வைத்திருந்தான். இதில் வேறுபட்ட பதிப்புகளில் இருந்த டான் க்விக்ஸாட்டின் மூவாயிரத்து நானூறு பிரதிகளும், ஜெனரல் மிட்ரேவின் எழுதிய எல்லாப் புத்தகங்களும், டாக்டர் பட்டத்திற்காக எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளும், நாடக அரங்குகளின் நிகழ்ச்சி நிரல்களும் அடங்கும். சகலமும் சாட்சியம் தருகிறது என்று அவன் சொல்லியிருக்கிறான். நிரன்ஸ்டீன் அவன் கருத்துக்கு ஆதரவு அளித்திருக்கிறான். டான் அலெயாண்ரோ, மூன்று களேபரமான சனிக்கிழமைகளுக்குப் பிறகு (இராலாவின் வார்த்தைகளில்) மசோதாவை ஏற்றுக்கொண்டார். நோரா எர்ஃஜோட் தனது காரியதரிசி பதவியை ராஜினாமா செய்துவிட்டாள். அந்தப் பதவிக்கு வந்திருக்கிற புதிய அங்கத்தினரான கார்லின்ஸ்கி, ட்வெர்லின் கையாள். கோப்புகளோ, அட்டவணைகளோ இல்லாமல் பின் அறைகளிலும், டான் அலெயாண்ரோவின் பிரம்மாண்டமான, பழைய நகர வீட்டின் நிலத்தடி மதுசேமிப்பறைகளிலும் தடிமனான புத்தகப் பொட்டலங்கள் குவிய ஆரம்பித்தன. ஜூலை மாதத் தொடக்கத்தில், இராலா, லா கேலிடோனியாவில் ஒரு வாரம் தங்கியிருந்திருக்கிறான். அங்கே கட்டிடத் தொழிலாளிகள் வேலையை நிறுத்திவிட்டிருந்தார்கள். விளக்கம் கேட்கப்பட்டதில் தலைமை வேலையாள் தங்கள் எஜமானர் சொன்னதைத்தான் செய்திருப்பதாகவும், எப்போதுமே மறுநாள் வேண்டிய நேரமிருக்கும் என்றும் விளக்கியிருக்கிறான்.

லண்டனில் இருக்கும் போது நான் ஒரு அறிக்கையைத் தயார் செய்திருந்தேன். அதைப் பற்றிப் பேசுவது இப்போது பயனற்றது. அந்த வெள்ளிக்கிழமை, டான் அலெயாண்ரோவைப் பார்ப்பதற்கும் என் அறிக்கையின் பிரதி ஒன்றைக் கொடுப்பதற்காகவும் போயிருந்தேன். ஃபெர்னான்டஸ் இராலா என்னுடன் வந்திருந்தான். மாலைத் தொடக்கமாக இருந்த அந்த நேரத்தில் குளிர்ச்சியான தெற்குக் காற்று வீட்டிற்குள் வீசியடித்தது. அல்சினா தெருவில், முன்பக்க நுழைவாயிலில் மூன்று குதிரைகள் பூட்டிய சரக்கு கொண்டு வரும் வண்டி காத்துக் கொண்டிருந்தது. சரக்கு இறக்குபவர்கள் கடைசி முற்றத்தில் தங்கள் கைச்சுமைகளை தொடர்ந்து குவித்துக் கொண்டிருக்கையில் அவர்களுடைய சுமை அவர்களைக் கீழ்நோக்கி அழுத்திக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ராஜரீகமான தோரணையில் ட்வெர்ல் அவர்களுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்தான். வீட்டுக்கு உள்ளே ஏதோ நடக்கப்போகிறது என்பதை உணர்ந்தவர்கள் போல நோரா எர்ஃஜோர்ட், நிரன்ஸ்டீன், க்ரூஸ், டோனால்ட் ரென் மற்றும் சில பேரவை அங்கத்தினர்கள் உள்ளே குழுமி இருந்தனர். நோரா அவளது கைகளை என் மீது வீசிப்போட்டு என்னை முத்தமிட்டாள். அந்த அணைப்பும் முத்தமும் பிறவற்றை ஞபாகம் கொள்ள வைத்தன. நல்தன்மையும் சந்தோஷமும் பொங்கி வழிந்துகொண்டிருந்த நீக்ரோ என் கையை முத்தமிட்டான்.

அங்கிருந்த அறைகளில் ஒன்றில், நிலவறைக்கான சதுரமான இறங்கு கதவு விரியத் திறந்திருந்தது. சில கட்டிடப் படிகள் அதன் இருட்டுக்குள் ஆழ்ந்திருந்தன. திடீரென்று காலடிச் சப்தம் கேட்டது. பார்ப்பதற்கு முன்னமே அது டான் அலெயாண்ரோதான் என்று தெரிந்து கொண்டேன். ஏறத்தாழ ஒரு ஓட்டமான நடையில் அவர் வந்தார்.

அவருடைய குரல் வித்தியாசமாக இருந்தது. எங்களது சனிக்கிழமைகளுக்குத் தலைமை தாங்கிய கனவானுடைய திட்டமிட்ட குரலாக அது இருக்கவில்லை. அல்லது, ஒரு கத்திச்சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனது மாட்டுக்காரர்களுக்கு வேதாகமம் போதித்த நில உடமையாள ருடையதாகவும் அது இருக்கவில்லை. ஆனால் இப்போதைய குரல் அந்த இரண்டாவதை அதிகம் ஒத்திருப்பதாகத் தோன்றியது.

எவர் ஒருவரையும் பார்க்காமல் அவர் கட்டளையிட்டார். “கீழே கட்டி வைத்திருக்கும் சகலத்தையும் வெளியே எடுங்கள். ஒரு புத்தகம் கூட நிலவறைக்குள் மிச்சம் விடக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.”

இந்த வேலை ஒரு மணி நேரம் அளவுக்கு நடந்தது. வெளியே கடைசித் முற்றத்து மண்தரையில், மிக உயரமான தலையை விட மிக உயரமான குவியலைச் சேர்த்தோம். எல்லோரும் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தோம். நகராமலே இருந்த ஒரே ஒரு நபர் டான் அலெயாண்ரோ மட்டும்தான்.

பிறகு வந்தது கட்டளை, “அந்தக் குவியலுக்குத் தீ வையுங்கள்.” ட்வெர்லுக்கு முகம் வெளிறிப்போயிற்று. நிரன்ஸ்டீன் நாக்குழறக் கேட்டான்: “நான் இவ்வளவு அன்புடன் சேகரித்த விலைமதிப்பற்ற விஷயங்கள் இல்லாமல் எப்படி உலகப் பேரவை இருக்க முடியும்?”உலகத்தின் பேரவையா?” என்றார் டான் அலெயாண்ரோ.  வெறுப்புடன் சிரித்தார் அவர். இதற்கு முன் ஒருபோதும் அவர் சிரித்ததை நான் கேட்டதில்லை.

அழிப்பதில் ஒருவித மர்மமான சந்தோஷம் இருக்கிறது. தீப்பிழம்புகள் வெளிச்சமாக வெடித்தன, நாங்கள் எல்லோரும் சுவர்களை நோக்கியோ, வீட்டுக்கு உள்ளேயோ ஓடவேண்டி இருந்தது. அந்தகாரம், சாம்பல்கள், எரிவின் மணம் முதலியவை முற்றத்தில் எஞ்சின. பாதிப்புக்கு உள்ளாகாத பக்கங்களில் சில தரையை வேறுபடுத்தி வெண்மையாக நின்றது நினைவுக்கு வருகிறது. முதிய ஆண்களிடம் இளைய பெண்களுக்கு ஏற்படும் அந்த அன்பை டான் அலெயாண்ரோவிடம் காட்டிய நோரா எர்ஃப்ஜோர்ட், நிஜமாகப் புரிந்து கொள்ளாமலே கூறினாள்: “டான் அலெயாண்ரோவுக்குத் தெரியும் அவர் என்ன செய்கிறார் என்று.”

இராலா என்றும் இலக்கியத்திற்கு விசுவாசமானவன். ஒரு  பொருள் செறிந்த வாக்கியத்தைச்  சொல்ல முயன்று அவன் சொன்னான்: “அலெக்ஸாண்ரியாவின் நூலகம் சில நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை எரித்துத் தள்ளப்பட வேண்டும்.”

“பிறகு எங்களுக்கு விளக்கத் தெளிவு தரப்பட்டது. “நான் சொல்லப் போவதைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன”, என்று தொடங்கினார் டான் அலெயாண்ரோ: “என் நண்பர்களே, நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்பு மிகப் பரந்து பட்டது-இப்போது எனக்குத் தெரிகிறது–அது உலகளாவியது. ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்த கால்நடைப் பண்ணையின் கொட்டில்களில் பரஸ்பரம் காது செவிடாகப் பேசும் முட்டாள்களின் கும்பலாக நமது பேரவை இருக்கலாகாது. உலகத்தின் பேரவை அகிலத்தின் முதல் கணத்தில் தொடங்கி நாம் செத்து தூசியான பிறகும் தொடர்ந்து நீடிக்கும். இந்தப் பூமியின் மீது அது இல்லாத ஒரு இடமும் இருக்க முடியாது. நாம் எரித்த புத்தகங்களும் பேரவை. சாம்பல் குவியலின் மீதிருக்கும் ஜோபும்  சிலுவை மீது அறையப்பட்ட கிறிஸ்துவும் பேரவைதான். எனது கைப்பொருளை விபச்சாரிகளுக்கு வீணடித்துக் கொண்டிருக்கும் பிரயோஜனமில்லாத இளைஞனும் பேரவைதான்.”

என்னால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. “டான் அலெயாண்ரோ” நான் குறுக்கிட்டேன் “நானும் குற்றச்சாட்டிற்கு உரியவன்தான். என்னுடைய அறிக்கையை நான் முடித்து விட்டேன், அதை நான் இப்போது தருகிறேன், ஆனால் நான் உங்கள் பணத்தை ஒரு பெண்ணுக்குச் செலவழித்துக் கொண்டு தொடர்ச்சியாக அதிக காலம் இங்கிலாந்தில் தங்கினேன்.”

டான் அலெயாண்ரோ தொடர்ந்தார், “நான் ஏறத்தாழ அந்த விஷயத்தை யூகித்து விட்டேன் ஃபெர்ரி. பேரவை எனது கால்நடை. நான் விற்றேன், அந்தக் கால்நடைகளும், இனி மேலும் ஒரு போதும் எனதாக இராத, பல மைல் நிலங்களை நான் விற்றேனே, நான் விற்ற அந்த நிலங்களும் பேரவைதான்.”

பீதியுற்ற ஒரு குரல் எழுந்தது.-ட்வெர்லினுடையது: “நீங்கள் லா கேலிடோனியாவை விற்றுவிட்டதாகச் சொல்கிறீர்களா?”

“ஆம்” என்று அமைதியாகச் சொன்னார் டான் அலெயாண்ரோ. “நான் விற்றுவிட்டேன். என் பெயரில் ஒரு சதுர அடி நிலம் கூட மிச்சமில்லை. அதற்காக நான் வருந்தவும் இல்லை, காரணம் இப்போது நான் விஷயங்களை உள்ளது உள்ளபடியே பார்க்கிறேன். ஒரு வேளை நாம் மீண்டும் சந்தித்துக் கொள்ளாமலே போய்விடக்கூடும். ஏன் எனில், பேரவைக்கு நாம் இனி தேவைப்படோம். ஆனால் இந்தக் கடைசி ராத்திரி நாம் அனைவரும் சேர்ந்து நிஜமான பேரவை எப்படி இருக்கும் என்பதைக் காணப் போகிறோம்.”

வெற்றிக் களிப்பின் போதையில், அவரது தீர்மானத்தாலும் நம்பிக்கையாலும் எங்களைத் திணறச் செய்தார். எவர் ஒருவரும் ஒரு வினாடி கூட அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கவில்லை.

சதுக்கத்தில் ஒரு திறந்த ‘சாரட்’ வண்டியில் ஏறிக்கொண்டோம்.  வண்டி ஓட்டியின் பக்கத்தில், வண்டி ஓட்டியின் இருக்கையில் என்னை நெருக்கி அமர்ந்து கொண்டேன். டான் அலெயாண்ரோ கட்டளையிட்டார்.: “மேஸ்ட்ரோ, நகரத்தைச் சுற்றிப் பார்க்கலாம். உங்களுக்குப் பிடித்த எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.”

கால் வைக்கும் பலகையில் ஏறிக்கொண்ட வண்டி ஓட்டும் நீக்ரோ புன்முறுவல் செய்வதை நிறுத்தவே இல்லை. என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருந்ததா, இல்லையா என்று எனக்கு என்றைக்குமே தெரியப் போவதில்லை.

பகிர்ந்து கொள்ளப்பட்ட ஞாபகம் கற்பித்துக் கொள்ளும் குறீயீடுகளே வார்த்தைகள். நான் இப்போது பதிவு செய்ய விரும்பும் நினைவு என்னுடையது மாத்திரமே. இதைப் பகிர்ந்து கொண்ட எல்லோருமே இறந்து விட்டார்கள். ஒரு ரோஜாவை, முத்தத்தை, எல்லாப் பறவைகளாகவும் இருக்கும் ஒரு பறவையை, எல்லா சூரியன்களாகவும் இருக்கும் ஒரு சூரியனை, ஒரு கோப்பை மதுவை, ஒரு தோட்டத்தையோ, புணர்ச்சியின் செயல்பாட்டினையோ மறைஞானிகள் வழிபடுகிறார்கள். விடியலின் எல்லையில் நிறைவுற்ற எங்களை, சந்தோஷமும் களைப்பும் ததும்பியவர்களாய் எங்களை விட்டுச் சென்ற ஆனந்தமயமான அந்த நீண்ட ராத்திரியைச் சொல்வதற்கு மேற்குறிப்பிட்ட எந்த உருவகமும் எனக்குப் பயன்படாது. தெருவில் பாவப்பட்ட உருளைக் கற்களின் மீது குதிரைகளின் குளம்பொலியும் சக்கரங்களின் சத்தமும் கேட்ட போது நாங்கள் எதுவுமே பேசவில்லை. விடியல் வருமுன், மால்டோனாடோவாக அல்லது வேறு ரியாகியோலாவாகவோ இருந்திருக்கலாம் என்கிற இருண்ட நீரோட்டத்தின் அருகில் நோரா எர்ஃப்ஜோர்டானின் உச்சஸ்தாயிக் குரல் ஸர் பேட்ரிக் ஸ்பென்ஸ் எழுதிய கதைப் பாடலைப் பாடியது. ஒரு தாழ்வான குரலில் சுருதி சேராமல் அலெயாண்ரோ சில கவிதை வரிகளை ஒத்திசைத்தார். அந்த ஆங்கில வார்த்தைகள் எனக்குப் பியட்ரிஸின் படிமத்தை நினைவுக்குக் கொண்டு வரவில்லை. எனக்குப் பின் பக்கத்திலிருந்து ட்வெர்ல் முணுமுணுத்தான்: “நான் தீவினை செய்ய விரும்பினேன். நல்லது செய்து விட்டேன்.”

நாங்கள் காட்சி கொண்டதில் சிறிதளவு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது- ரெக்கோலெட்டா கல்லறையின் சிவப்பு நிறச் சுவர்,ஒரு சிறைச்சாலையின் மஞ்சள் நிறச்சுவர், செங்குத்துக் கோணத்தில் இருந்த தெரு முனையில் நடனமாடிக் கொண்டிருந்த ஒரு ஜோடி ஆண்கள், குறுக்குக் கம்பிகளால் ஆன வேலி போடப்பட்ட தேவாலயத்தின் கருப்பு மற்றும் வெண்ணிற ஓடுகள், ரயில் பாதையுடன் குறுக்கிடும் சாலை, எனது வீடு, சந்தையிடம், ஈரப்பதமிக்க, ஆழம்காண முடியாத  இரவு-ஆனால் விரைந்து மறையக் கூடிய, வேறு எதுவாக வேண்டுமானாலும் இருந்திருக்கக் கூடிய அவை எதுவுமே இப்போது பொருட்டல்ல. இப்போது முக்கியமாகப்  படுவதெல்லாம், ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நாங்கள் கேலி செய்திருந்த எங்கள் திட்டம் மெய்யாகவும் ரகசியமாகவும் இருந்து வந்திருக்கிறது. இந்த அகிலமாகவும் நாங்களாகவும் இருந்து வந்திருக்கிறது. அதற்குப் பிறகான வருடங்களினூடாய், பெரிய அளவில் நம்பிக்கையின்றி, நான் அந்த இரவின் சுவையைத் தேடியிருக்கிறேன். சில தடவைகள் இசையில், காதலில், நம்பிக்கை வைக்க முடியாத நினைவுகளில் மீட்டுவிட்டதாக நினைத்தேன். ஆனால் அது ஒரே ஒரு தடவை கனவில் மாத்திரமே வந்ததே தவிர வேறெப்போதும் அது திரும்ப வரவேயில்லை. எவரிடமும் ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாதென்று நாங்கள் உறுதி எடுத்துக் கொண்டபோது ஏற்கனவே சனிக்கிழமை காலை ஆகிவிட்டிருந்தது.

இராலாவைத் தவிர, அவர்கள் எவரையும் நான் மீண்டும் சந்திக்கவில்லை. நானும் அவனும் என்றுமே பேரவை பற்றிப் பேசவில்லை. அப்படி ஏதாவது நாங்கள் பேசியிருந்தால் அது அவமரியாதை செய்வதாக ஆகியிருக்கும். 1914ஆம் ஆண்டு டான் அலெயாண்ரோ காலமானார். அவர் மான்ட்டிவீடியோவில் புதைக்கப்பட்டார். போன வருடத்திற்கு முந்தைய வருடமே இராலா இறந்தாகி விட்டிருந்தது.

ஒரே ஒரு முறை லிமா தெருவில் நிரன்ஸ்டீனும் நானும் எதிரும் புதிருமான நெருக்கத்தில் வர நேர்ந்தது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காத மாதிரி பாவனை செய்து கொண்டோம்.

Translated  by Norman Thomas di Giovanni

redbook-1a

குறுக்கீட்டாளர்-Intruder-Jorge Luis Borges-Translation Brammarajan

intruderjlb1

குறுக்கீட்டாளர்

ஜோர்ஜ் லூயி போர்ஹே

[1966]

  • …passing the love of women.
    2 Samuel I:

ஜனங்கள் சொல்கிறார்கள் (இது சாத்தியமில்லை) இந்தக் கதை நெல்சன் சகோதரர்களில் இளையவனான எடுவர்டோவினால், தூக்கத்திலேயே இறந்து போன அவனது சகோதரன் இறந்த இரவு சொல்லப்பட்டதென்று. இது தொண்ணூறுகளில் மொரோன் மாவட்டத்தின் வெளிப்பகுதி களில் நடந்திருக்கலாம்.  நிஜம் என்னவென்றால் நீட்சியாகித் தெரிந்த அந்த மங்கலான இரவில் ஒரு மிடறு உள்ளூர் மதுவிற்கும் மற்றதற்கும் இடையில் எவரிடமிருந்தோ எவரோ இந்தக் கதையைக் கேட்டிருக்கலாம். அதை சான்டியாகோ டபோவிற்குச் சொல்லி இருக்கலாம். அவரிடமிருந்துதான் நான் இந்தக் கதையைக் கேட்டேன். பல வருடங்களுக்குப் பிறகு கதை நடந்த துர்தேரா பிரதேசத்தில் அதை மீண்டும் நான் கேட்டேன். இரண்டாவதும் மிக விலாவரி யானதுமான கதை சான்டியாகோ சொன்னதை அடியொற்றிச் சென்றாலும் சில சிறிய மாறுதல் களையும் முரண்பாடுகளையும் கொண்டிருந்தது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் போனஸ் அயர்சின் விளிம்பில் அனுபவங்களால் உரமேறிய மனிதர்களின் கதாபாத்திரத்தின் பரிதாபகர மான குறுகுகிற பகுதியாக அதை நான் எழுதிவைக்கிறேன்.  சுற்றி வளைக்காமல் இதை நான் செய்ய விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்பே குறிப்பிட்ட தகவல்களை அழுத்திச் சொல்வது அல்லது சேர்த்துவிடுவது போன்ற எழுத்தாளனுக்கே உரிய சபலத்திற்கு ஆட்பட்டு விடுவேன் எனத் தெரிகிறது.

அவர்கள் வாழ்ந்த துர்தேரா பகுதியில் அவர்களை நில்சன் சகோதரர்கள் என்றே அழைத்தார்கள். அங்கிருந்த பாதிரியார் ஒருவர் அவரது முன்னோராகப் பட்டவர் நில்சன்களின் வீட்டில் கறுப்பு எழுத்துக்களில் அச்சிடப்பட்ட கனமாக பைண்ட் செய்யப்பட்ட நைந்து போன ஒரு பைபிள் இருந்ததை ஏதோ ஒரு வித ஆச்சர்யத்தில் பார்த்ததை நினைவு கூர்ந்தார். உள் அட்டைப்பக்கத்துத் தனித்தாளில் கையால் எழுதப்பட்ட பல பெயர்களையும் தேதிகளையும் கண்ணுற்றிருக்கிறார். நில்சன்களின் திரியும் வரலாறாக வீட்டில் இருந்த ஒரே புத்தகம் அதுதான். எல்லாப் பொருள்களும் ஒரு நாள் தொலைந்து போவது போல் அதுவும் தொலைந்து போயிற்று. அந்தப் பரந்த பழைய வீடு (இப்போது இல்லை) கலவை பூசப்படாத செங்கல் கட்டிடமாக இருந்தது. வளைந்த நுழைவாயிலின் வழியாக சிவப்பு ஓடுகள் பதிக்கப்பட்ட முற்றத்தையும் அதற்கு அப்பால் இறுகலான மண்ணினால் அமைந்த மற்றொன்றினையும் பார்க்க முடியும். அந்த வீட்டிற்கு உள்ளே சென்றவர்கள் சொற்பமே. நில்சன்கள் தங்களுக்கு உள்ளாகவே வாழ்ந்தார்கள். ஏறத்தாழ வெறுமையான அறைகளில் அவர்கள் கட்டிலின் மீது தூங்கினார்கள். அவர்களுடைய ஆடம்பரமாக இருந்தவை குதிரைகள், வெள்ளிப்பட்டி இடப்பட்ட சவாரி உடைகள், சிறிய நீளமுள்ள குறுங்கத்திகள், சனிக்கிழமை இரவுகளில் பகட்டாக உடையணிதல் ஆகியவை. இந்த சமயத்தில் அவர்கள் பணத்தைத் தாராளமாகச் செலவழித்து குடிகாரத் தகராறுகளில் பங்கேற்றார்கள். எனக்குத் தெரியும் அவர்கள் இருவருமே உயரமானவர்கள் என்று. இந்த அர்ஜன்டீனிய சகோதரர்களின் ரத்தத்தில் அவர்கள் கேள்விப்பட்டிராத டென்மார்க் அல்லது அயர்லாந்து அம்சம் கலந்திருக்க வேண்டும். இந்த சிவப்புத் தலையர்களைக் கண்டு சுற்று வட்டாரத்தில் இருந்தவர்கள் அச்சப்பட்டார்கள். இருவரில் ஒருவன் தன்னுடைய எதிரியைத் தீர்த்துக் கட்டியிருக்கிறான் என்பது சாத்தியம்தான். ஒரு முறை தோளோடு தோளிணைந்து போலீசோடு மோதினார்கள். யுவான் இபராவுடன் இளையவன் மோதினான் என்றும் அதை ஒன்றும் மோசமாகச் செய்துவிடவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அவர்கள் மாடுமேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டவர்களாகவும், குதிரைத் திருடர்களாகவும், சூதாட்டத்தினை தொழிலாகச் செய்பவர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய கஞ்சத்தனம் பிரசித்தமானது. குடியும் சீட்டாட்டமும் மட்டுமே அவர்களை செலவாளிகளாக ஆக்கியது. அவர்களுடைய சொந்தக் காரர்கள் யார் என்பது பற்றியோ, அவர்களின் ஆதியாகமம் பற்றியோ எதுவுமே தெரியவில்லை. அவர்களுக்கு ஒரு வண்டியும், மாடுகளும் சொந்தமாக இருந்தன.

கோஸ்டா பிரேவா பிரதேசத்திற்குக் கிடைத்த மோசமான பெயருக்குக் காரணமாக இருந்த மற்ற அடியாட்களை விட அவர்களின் வெளித்தோற்றம் வித்தியாசமாக இருந்தது. இதுவும், நமக்குத் தெரியாத பலவும், அவர்களுக்கு இடையே இருந்த நெருக்கமான பிணைப்புகளை புரிந்து கொள்ள உதவும். அவர்களில் ஒருவரைப் பகைத்துக் கொண்டாலும் இரண்டு எதிரிகளைச் சந்திக்க வேண்டி வரும்.

பெண்களுடன் பொழுதுபோக்குவதை நில்சன்கள் விரும்பினர். ஆனால் அந்தநாள் வரை அவர்களுடைய காமத்துவ சாகசங்கள் இருளடைந்த வழிவெளிகளிலும், விபச்சார விடுதிகளிலுமே நடத்தப்பட்டன. ஆகவே ஜுலியான பர்கோஸ் என்பவளை தன்னுடன் வாழ்வதற்கு கிறிஸ்டியன் கூட்டி வந்தபோது அதைப் பற்றிய பேச்சு நிற்கவேயில்லை. ஒத்துக்கொள்ளும்படி, இந்த வகையில் அவனுக்கு ஒரு வேலைக்காரி கிடைத்தாள். தன்னுடைய பணத்தையெல்லாம் சுரண்டி அவளுக்கு மிக மட்டரகமான நகைகள் வாங்குவதில் ஈடுபட்டான் என்பதும் விருந்துகளுக்கு அவளை அழைத்துச் சென்று பகட்டாகக் காட்டினான் என்பதும் உண்மை.

அந்த விருந்துகள் குடிசைகளில் நடத்தப்பட்டன. அங்கே விஷயங்களை மறைமுகமாகத் தெரிவிக்கக்கூடிய நடன அசைவுகள் கறாராகத் தடை செய்யப்பட்டிருந்தன. மேலும் நடன ஜோடிகள் அவர்களுக்கிடையே ஆறு அங்குல வெளிச்ச இடைவெளி தெரியும்படி ஆடினார்கள். ஜூலியானா கறுப்பான பெண். அவளுக்கு மாறு கண்கள் இருந்தன. எவர் ஒருவர் அவளைப் பார்த்தாலும் அவள் புன்முறுவல் செய்து விடுவாள். சலிப்படையச் செய்யும் வேலையும் புறக்கணிப்பும் பெண்களை வீணடித்து விடக் கூடிய ஒரு ஏழ்மையான பகுதியில் அவள் பார்ப்பதற்கு மோசமாக இருக்கவில்லை.

ஆரம்பத்தில் எடுவர்டோ அவர்களுடன் சேர்ந்தே பல இடங்களுக்குச் சென்றான். பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் அரெசியசின் வடக்குப் பகுதிக்கு வியாபாரத்திற்கோ அன்றி வேறெதற்கோ பயணம் செய்தான். வீட்டுக்குத் திரும்புகையில் வழியில் அவன் கூட்டிக்கொண்ட பெண் ஒருத்தியை அழைத்து வந்தான். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவளைத் துரத்தி விட்டான். இன்னும் கோபம் மிகுந்த மௌனத்தில் ஆழ்ந்து போனான். கிறிஸ்டியனின் கிழத்தி மீது அவன் காதல் வயப்பட்டு விட்டான். அவன் அதை அறிந்து கொள்ளும் முன்பே அறிந்து வைத்திருந்த அந்தப் பிரதேசத்து ஜனங்கள் இரு சகோதரர்களுக்கு இடையில் பகையின் ஆரம்பத்தை மிக சந்தோஷத்துடன் எதிர்நோக்கி இருந்தனர்.

ஒரு நாள் இரவு தாமதமாக வீடு திரும்பியபொழுது கிறிஸ்டியனுடைய பெரிய பழுப்பும் சிவப்பும் கலந்த நிறமுடைய குதிரை, தயாராக,  அவிழ்க்கும் கழியில் கட்டப்பட்டிருந்தது. உள்ளே முற்றத் திற்குள் தன் உடைகளிலேயே சிறந்தவற்றை உடுத்தியிருந்த கிறிஸ்டியன் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். “நான் ஃபரியாசின் வீட்டுக்குச் செல்கிறேன்; அங்கே ஒரு விருந்து கொடுக்கிறார்கள். ஜூலியானா இங்கே உன்னுடன் தங்குகிறாள்; உனக்கு வேண்டுமானால் அவளைப் பயன்படுத்திக் கொள்.”

அவனுடைய தொனி பாதி கட்டளை இடுவதாகவும் பாதி நட்பு தொனியுடனும் இருந்தது. எடுவர்டோ அவனை முறைத்தபடி என்ன சொல்வதென்று தெரியாமல் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தான். கிறிஸ்டியன் எழுந்தான். தன் தம்பியிடம் மட்டும் விடை பெற்றுக்கொண்டான். ஜூலியானாவிடம் அல்ல; அவள் ஒரு பொருள் என்ற அளவில்தான் இருந்தாள். தன் குதிரை மீதேறி சாவதானமாக சாதாரண வேகத்தில் கிளம்பிச் சென்றான்.

அந்த இரவிலிருந்து அவர்கள் இருவரும் அவளைப் பகிர்ந்து கொண்டார்கள். கோஸ்டா பிரேவோவின் கௌரவத்தையே கூட சீரழித்த இந்த பங்காளித்தன்மையின் விரிவான தகவல்கள் பற்றி எவருக்குமே தெரியாது. இந்த ஏற்பாடு சில வாரங்களுக்குச் சரியாக இருந்தது. ஆனால் நீடித்திருக்கவில்லை. சகோதரர்கள் தங்களுக்குள்ளாக அவள் பெயரைக் குறிப்பிடவே இல்லை. அவளைக் கூப்பிடுவதற்குக் கூட. ஆனால் முரண்பாடு கொள்வதற்கான காரணங்களைக் கண்டு பிடித்தபடியும் தேடியபடியும் இருந்தார்கள். ஏதோ ஒரு தோல் விற்பனை பற்றி விவாதம் செய்தார்கள். ஆனால் அவர்கள் சண்டை போட்டுக் கொண்டது வேறு எதுவோ பற்றி. கிறிஸ்டியன் குரலை உயர்த்திக் கத்தத் தொடங்கினான். எடுவர்டோவோ மௌனமாய் இருந்தான். அவர்களை அறியாமலேயே அவர்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி அடியாட்கள் நிறைந்த சுற்றுப்புறங்களில் பெண்ணாகப்பட்டவள் ஒரு மனிதனுக்கு காமம் என்பதற்கும் உடைமை என்பதற்கும் அப்பாற்பட்டு ஒரு பொருட்டாகிறாள் என எவரிடமும் எவரும்-ஏன் தனக்குத்தானே கூட என்றுமே ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் சகோதரர்கள் இருவரும் காதல்வயப்பட்டு விட்டனர். இது ஏதோ வகையில் அவர்களை அவமான உணர்வு கொள்ளச் செய்தது.

ஒரு மதியம் லோமாஸ் பகுதியின் சதுக்கத்தில் எடுவர்டோ யுவான் இபராவைச் சந்திக்க நேர்ந்தது. அவன் எடுவர்டோவுக்கு கிடைத்த அழகியைப் பற்றி பாராட்டிப் பேசினான். அப்பொழுது தான் என்று நம்புகிறேன் அவன் எதிராளிக்குக் கொடுத்தான். எவருமே இனி அவன் முகத்துக்கெதிரில் கிறிஸ்டியனைக் கிண்டல் பேசமுடியாது.

ஒரு வித விலங்கின் பணிதலுடன் இரண்டு ஆண்களின் தேவையையும் அவள் பூர்த்தி செய்தாள். ஆனால் இளையவனுக்கென்று அவள் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட தெரிவினை அவளால் மறைத்து வைக்க முடியவில்லை. அவன் அவளைப் பகிர்ந்து கொள்வதற்கு மறுக்கவுமில்லை; முன்மொழியவுமில்லை.

ஒரு நாள் ஜூலியானாவை அழைத்து முதல் முற்றத்தில் இரண்டு நாற்காலிகளைப் போடச் சொல்லி கட்டளையிட்டனர். அவர்களுக்கிடையே பேசித் தீர்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்ததால் கொஞ்ச நேரத்திற்கு அங்கே தலை காட்டக்கூடாது என்றார்கள். ஒரு நீண்ட அமர்வினை அவர்களுக்கிடையே எதிர்பார்த்த அவள் தூங்குவதற்காக உடலைச் சரித்தாள். அவளுடைய அம்மா அவளுக்கு விட்டுச்சென்ற சிறிய சிலுவை, கண்ணாடி ஜெபமாலை உட்பட எல்லாப் பொருள்களையும் ஒரு சாக்கு மூட்டையில் கட்டச் சொன்னார்கள். எந்தவிதமான விளக்கமும் சொல்லாமல் அவளைத் தூக்கி மாட்டு வண்டியில் உட்கார வைத்து ஒரு நீண்ட , களைப்படையச் செய்யக்கூடிய மௌனமான பயணத்தைத் தொடங்கினார்கள். மழை பெய்திருந்தது. சாலைகள் சகதி மண்ணால் நிரம்பி இருந்தன. மோரானை அடையும் பொழுது ஏறத்தாழ விடியற்காலை ஆகிவிட்டிருந்தது. அங்கே விபச்சார விடுதி நடத்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அவளை விற்றார்கள். வியாபாரம் குறித்த விஷயங்கள் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தன. கிறிஸ்டியன் பணத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர் தன் தம்பியுடன் அதைப் பிரித்துக் கொண்டான்.

துர்தேராவுக்குத் திரும்பி வந்து, அதுவரை அந்தப் ராட்ஷசத்தனமான காதலின் வலையில் சிக்கிக்கொண்டிருந்தவர்கள் (இதுவும் கூட ஒருவிதமான பழக்கம்தான்) ஆண்களுக்கு மத்தியில் ஆண்களாக வாழும் வாழ்க்கையைத் தொடங்க முயன்றார்கள். சனிக்கிழமை முழுவதும் நில்லாமல் தொடர்ந்த குடியாட்டத்திற்கும் சீட்டாட்டத்திற்கும் கோழிச்சண்டைக்கும் மீண்டும் திரும்பினார்கள். சில நேரம் தாங்கள் காப்பாற்றப்பட்டு விட்டோம் என்று உணர்ந்தார்கள். ஆனால் அடிக்கடியும் ஒவ்வொருவரும் தங்கள் வழியில் கணக்கிலடங்காத இல்லாமைகளில் ஆழ்ந்து போனார்கள். அந்த வருடம் முடிவதற்குக் கொஞ்சம் முன்னால் இளையவன் தனக்கு நகரத்தில் வேலை இருக்கிறது என்று சொன்னான். உடனடியாக கிறிஸ்டியன் மோரானுக்குக் கிளம்பிச் சென்றான். விபச்சார விடுதியில் குதிரைகள் கட்டுமிடத்தில் எடுவர்டோவின் குதிரையை அடையாளம் கண்டுகொண்டான். அங்கே அவனுடைய முறைக்காகக் காத்திருந்தான் அவன் தம்பி. கிறிஸ்டியன் அவனிடம் இப்படிச் சொன்னதாகக் கூறப்படுகிறது: “இதே மாதிரி நாம் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் குதிரைகளை ஓய்த்து விடுவோம். அவளை நமக்கு அருகிலே வைத்துக் கொண்டால்தான் நமக்கு நல்லது”.

அவன் விடுதியின் சொந்தக்காரியிடம் பேசினான். அவனுடைய பணம் வைத்திருக்கும் பெல்ட்டிலிருந்து கைநிறைய காசுகளைக் கொடுத்து விட்டு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றார்கள். ஜூலியானா கிறிஸ்டியனின் குதிரையில் சவாரி செய்தாள். அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்க விரும்பாத எடுவர்டோ முள்சக்கரம் பதித்த தன் காலணியை அழுத்தி குதிரையில் வேகமாகப் பறந்தான்.

ஏற்கனவே சொல்லப்பட்ட அங்கே திரும்பிச் சென்றார்கள். அவர்களின் தீர்வு தோல்வியில் முடிந்தது. ஏன் எனில் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றத் தொடங்கினார்கள். கெய்ன் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பினும், நில்சன்களுக்கிடையே இருந்த பாசம் மகத்தானது-யாருக்குத் தெரியும் எப்படிப்பட்ட ஆபத்துக்களை எல்லாம் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்து சந்தித்தார்கள் என்று? அவர்களுடைய கோபத்தை மற்றவர்கள் மீது காட்ட விரும்பினார்கள். அந்நியர்கள் மீதும், நாய்கள் மீதும், அவர்களுக்கிடையே பிளவினை வளர்த்த ஜுலியானா மீதும்.

மார்ச் மாதம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தாலும் வெப்பம் குறைவதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை (ஞாயிற்றுக் கிழமை ஜனங்கள் சீக்கிரமே தூங்கப் போய்விடுவார்கள்) சலூனிலிருந்து வீட்டுக்கு வரும்போது கிறிஸ்டியன் வண்டியில் எருதுகளைப் பூட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான். கிறிஸ்டியன் அவனிடம் சொன்னான். : “வா நாம் பர்டோவின் வீட்டில் சில தோல்களைக் கொண்டு போய் போட வேண்டும். நான் ஏற்கனவே அவற்றை வண்டியில் ஏற்றிவிட்டேன். இரவின் குளிர்ந்த காற்றினை நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.”

பர்டோவின் கிடங்கு தெற்கில் தொலைவில் இருந்தது என்று நான் நம்புகிறேன். கால்நடைகளின் பழைய அடிச்சுவட்டுப் பாதை வழியாக ஒரு சாலையில் திரும்பினார்கள். அப்பொழுதுதான் பற்ற வைத்திருந்த சுருட்டினைத் தூக்கி எறிந்து விட்டு சீராகச் சொன்னான் கிறிஸ்டியன், “நாம் துரிதமாக ஆவோம் சகோதரா. கொஞ்ச நேரத்தில் பிணந்தின்னிக்கழுகுகள் வேலையை ஆரம்பித்து விடும். இன்று மதியம் அவளைக் கொன்றேன். அவளுடைய மலிவான மணிகளுடன் அவள் இங்கே இருக்கட்டும். அவள் நமக்கு எந்த வித கஷ்டத்தையும் கொடுக்க மாட்டாள்.”

ஒருவர் மீது ஒருவர் கைகளை வீசிப் போட்டுக் கொண்ட அவர்கள் அழுகையின் விளிம்பில் இருந்தனர். கொடூரமான வகையில் அவர்கள் தியாகம் செய்த அந்தப் பெண், அவளை மறக்க வேண்டிய பொதுவான தேவை,’என்ற இந்த கூடுதலான பந்தம் அவர்களைப் பிணைத்தது.

Translated by Normon Thomas Di Giovanni.