கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்-பனிப்பாதையில் உனது ரத்தச் சுவடு/Marquez-The Trail of Your Blood in the Snow

2கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

பனிப்பாதையில் உனது ரத்தச் சுவடு

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ரெங்கநாயகி

பகல் பொழுது சாய்ந்து இரவு தொடங்கி விட்டிருந்த சமயம், அவர்கள் அந்த நகர எல்லையை அடைந்த போது, திருமண மோதிரம் அணிந்திருந்த அவளது விரலிலிருந்து இன்னும் இரத்தம் கசிந்து கொண்டிருப்பதை நேநா டாகொண்ட்டே உணர்ந்தாள். முரட்டுத் தோலால் ஆன தனது மும்முனைத் தொப்பியை கடினமான கம்பளிப் போர்வை மறைத்தபடி இருக்க பிரனீஸிலிருந்து அடிக்கும் ஆக்ரோஷ காற்றில் தன் பாதங்களை திடமாய் ஊன்றிக் கொள்ளப் போராடிக் கொண்டு, கார்பைட் விளக்கின் வெளிச்சத்தில், அவர்களது அரசாங்க பாஸ்போர்ட்டுகளை பரிசோதித்தார் அந்த சிவில் பாதுகாவல் அதிகாரி. அந்த இரண்டு பாஸ்போர்ட்டுகளும் முழுமையான ஒழுங்கில் இருந்த போதிலும், அந்தப் புகைப் படங்கள் அவர்களை ஒத்திருக்கின்றனவா என்று நிச்சம் செய்து கொள்ள அந்த விளக்கினை உயரே தூக்கிப் பிடித்தார். நேநா டாகொண்டே கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் போல இருந்தாள், மகிழ்ச்சியான ஒரு பறவையின் கண்களுடன், சோகம் கப்பிய ஜனவரி மாதத்தின் மங்கிய ஒளியில் அவளது வெல்லப்பாகு போன்ற சருமம் இன்னும் பளபளப்பாக இருந்தது. அந்த எல்லையோரப் படையின் முழு வருடச் சம்பளத்தையும் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத மின்க்கின் மென் தோலால் ஆன கோட் கன்னம் வரை அவளை போர்த்தியிருந்தது. அந்தக் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவள் கணவன், ஓராண்டு இளையவனாக அதற்குரிய அழகுடன், ஒரு பேஸ்பால் தொப்பியுடன், வண்ணக்கோடுகளால் கட்டங்கள் இழைத்த கோட் அணிந்திருந்தான். அவனது மனைவி போலன்றி அவன் உயரமாக, உடல் வலிமையுடனும், அச்சமூட்டும் அடியாள் ஒருவனின் இரும்பு போன்ற இறுகிய தாடையும் கொண்டிருந்தான். ஆனால் எது அவர்கள் இருவரின் அந்தஸ்த்தை சிறப்பாக வெளிப்படுத்தியது என்றால், உயிருள்ள விலங்கு போல மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதான உட்பகுதி அமைந்த அந்த வெள்ளி நிறக் கார் வளம் குறைந்த எல்லைப் பகுதி வழியே என்றுமே காண முடியாத ஒன்று அது. அந்தப் பின்புற இருக்கை மிகப் புதிய பெட்டிகளாலும், மேலும் இன்னும் திறக்கப்பட்டிராத பல பரிசுப் பொருள் அடங்கிய பெட்டிகளாலும் நிறைந்து வழிந்தது. அவளின் அமைதி குலைத்த கடற்கரை முரடனின் மென்மையான காதலுக்கு அவள் அடிபணியும் முன்னர், நேநா டாகொண்டேவின் வாழ்வில் அடக்க இயலாத, மற்ற அனைத்தையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்த, அந்த உயர்ஸ்வர சாக்ஸபோனையும் அந்தக் கார் தாங்கியிருந்தது.

முத்திரையிட்ட பாஸ்போர்ட்டுகளை அந்த அதிகாரி திரும்பக் கொடுத்தவுடன், பில்லி சான்ஷெஸ் அவனது மனைவியின் விரலைக் குணப்படுத்த மருந்துக்கடை ஏதாவது தென்படுமா என்று அவரிடம் கேட்டான். அதற்கு அந்த அதிகாரி பிரெஞ்சுப் பகுதியான ‘ஹென்டே’யில்தான் அவர்கள் விசாரிக்க இயலும் என்று காற்றினூடே கத்தியபடி கூறினார். ஆனால் ஹென்டேயில் இருந்த பாதுகாவலர்கள், வெதுவெதுப்பான, நன்றாக ஒளியூட்டப்பட்டிருந்த அவர்களுக்கான பிரத்யேகமான சதுரமான கண்ணாடி எல்லைக் காவல் அறைக்குள், மேஜையில் அமர்ந்தபடி, கையில்லாச் சட்டையுடன் சீட்டு விளையாடிக் கொண்டு, பெரிய கண்ணாடிக் குவளைகளில் இருந்த மதுவில் ரொட்டித் துண்டுகளை முக்கி எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அப்போது பார்க்க வேண்டியிருந்ததெல்லாம், ஃபிரான்சுக்குள் செல்ல கையசைத்து அனுப்ப வேண்டியிருந்த அந்தக் காரை, அதன் அளவினை, தயாரித்த கம்பெனியை மாத்திரமே. பில்லி சான்ஷெஸ் ஹார்னை பலமுறை அழுத்தினான், ஆனால் அவன் அவர்களை அழைக்கிறான் என்று அந்த காவலர்கள் புரிந்து கொள்ளவில்லை. மேலும், அவர்களில் ஒருவன் ஜன்னலைத் திறந்து, காற்றைவிட அதிக சீற்றத்துடன் அலறினான்

“Merde! Allez-vouz-en!”

காதுகள் வரை மேல்கோட்டால் போர்த்தப்பட்டிருந்த நேநா டாகொண்டே பிறகு காரை விட்டு வெளியே இறங்கி அந்தக் காவலரிடம் சுத்தமான ஃபிரெஞ்சில் மருந்துக்கடை எங்கே உள்ளது என்று கேட்டாள். அவனது வழக்கம் போல வாய் நிறைய ரொட்டியுடன், அது அவன் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை என்றும், அதுவும் இது போன்ற புயல் நேரத்தில் மிகக்குறைந்த பட்சம் கூட இல்லை என்றும் பதலளித்தான் பிறகு ஜன்னலை மூடினான். ஆனால், பிறகு அவன் சற்று கூடுதல் கவனத்துடன், மின்க்கின் இயற்கையான மினுமினுப்பு மிக்க தோலால் முழுவதும் போர்த்தப்பட்டிருந்த அந்தப் பெண்ணை நோக்கினான் அந்த பயங்கர இரவில் காயம் பட்ட தன் விரலை சப்பிக் கொண்டிருந்தவளை ஏதோ ஒரு மந்திரக் காட்சியாக அவன் நினைத்திருக்க வேண்டும் காரணம் அவனுடைய மனநிலை உடனடியாக மாறியது. மிகவும் அண்மையிலிருக்கும் நகரம் ‘பியாரிட்ஸ்’ என்றும், ஆனால் அந்த மத்திய குளிர்காலத்தில், ஓநாய்களைப் போல ஊளையிடும் அந்தக் காற்றில், சற்றுத் தொலைவிலுள்ள ‘பேயோன்’ பிரதேசம் செல்லும்வரை, திறந்திருக்கும் ஒரு மருந்துக் கடையையும் அவர்களால் கண்டு பிடிக்க இயலாது என்று விளக்கினான்.

‘‘மிகவும் மோசமான நிலையா?”, என்று கேட்டான்.

‘‘அது ஒன்றுமில்லை,” நேநா டாகொண்டே புன்னகைத்துக் கொண்டே சொன்னாள். நுனியில், ஏறத்தாழ கண்ணுக்குப் புலப்படாத சிறிய ரோஜா முள் கீறலுடனான, வைர மோதிரம் அணிந்திருந்த விரலை அவனிடம் காண்பித்தாள். ‘‘அது வெறும் முள்”.

அவர்கள் ‘பேயோனை’ அடையும் முன்னரே பனிமழை பெய்யத் தொடங்கியது மறுபடியும். ஏழு மணியாகவில்லை எனினும் தெருக்கள் நடமாட்டமின்றி காட்சியளித்தன. புயலின் சீற்றத்தையொட்டி வீடுகள் மூடப்பட்டிருந்தன. பல மூலை முடுக்குகள் சென்று திரும்பிய பிறகும் ஒரு மருந்துக்கடையும் தென்படாது போகவே, அவர்கள் தொடர்ந்து செல்ல முடிவு செய்தனர். இந்த முடிவு பில்லி சான்ஷெஸை சந்தோஷப்படுத்தியது. கார்களுக்கென, அபூர்வமான, திருப்தியுறாத ஒரு ஆவல் கொண்டிருந்தான் அவன், மேலும் அவனுக்கு பல குற்றவுணர்வுகள் கொண்ட ஒரு அப்பா இருந்தார், மேலும் அவனது இஷ்டத்தையெல்லாம் திருப்திப்படுத்த அவரிடம் வசதியிருந்தது திருமணப் பரிசாக அவனுக்கு அளிக்கப்பட்டிருந்த, மேல் பகுதியை மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க பென்ட்லி வகைக் காரை அவன் இதுவரை ஓட்டியிருக்கவில்லை.

ஸ்டீயரிங் பிடிப்பதனால் உண்டான அவனது அதீதப் பேரானந்தத்தின் காரணமாக எவ்வளவு தொலைவு ஓட்டினானோ, அதற்கேற்ப குறைந்த பட்சமே அசதியடைந்தான். அந்த இரவே ‘போர்டோ’வை அடைந்து விட விரும்பினான். ‘ஸ்ப்லென்டிட் ஹோட்டலில்’ மணப் பெண்ணுக்கான தொடர் அறைகளை அவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். மேலும், மாறி மாறி வீசும் பலத்த காற்றும், பனியுடனான ஆகாயமும் அவனைப் பிடித்து நிறுத்திவிட முடியாது. இதற்கு மாறாக, மேட்ரிட்லிருந்து தொடங்கிய அந்த நீண்ட நெடுஞ்சாலையின் கடைசி நீட்சியில்குறிப்பாக ஆலங்கட்டிப் புயல் அடித்துத் தாக்கும், மலை ஆடுகளுக்கு ஏற்ற செங்குத்தான பாறையின் விளிம்புப் பகுதியில்நேநா டாகொண்டே உற்சாகம் தீர்ந்து விட்டிருந்தாள். எனவே பேயோனுக்குப் பிறகு அவள் ஒரு கைக்குட்டையை மோதிர விரலில் சுற்றிக் கொண்டாள் அழுத்தமாக, அமுக்கி, இன்னும் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை நிறுத்திவிட. பிறகு ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினாள். நடு இரவு நெருங்கும் வரை, பனி அடித்து முடிந்திருந்ததையும், சடாரென ஊசி இலைக் காட்டில் காற்று நின்று விட்டதையும், மேய்ச்சல் நிலத்தில் உறைந்த நட்சத்திரங்கள் ஆகாயத்தை நிறைக்கும் சமயத்தை எட்டியதையும் பில்லி சான்ஷெஸ் கவனிக்கவில்லை. ‘போர்டோ’வின் தூங்கி வழியும் விளக்குகளைக் கடந்து விட்டிருந்தான். ஆனால் நெடுஞ்சாலையின் வழியே பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் கலத்தை நிரப்பிக் கொள்ள மட்டும் நிறுத்தினான். மேலும், பாரீஸ் வரை நிறுத்தமின்றி வண்டி ஓட்டுவதற்கான தெம்புடனிருந்தான் அவன் போலவே உணர்ந்தாளா என்று அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை அவன். அவனது பெரிய 25000 பவுண்ட் ஸடெர்லிங் பெறுமானமுள்ள பொம்மையினால் அவன் அவ்வளவு களிப்படைந்திருந்ததால்அவனருகில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவள்இரத்தம் தோய்ந்திருந்த மோதிர விரலின் கட்டு அவளது வளர்பிராயத்துக் கனவுகளை முதல் முறையாக நிச்சயமின்மையின் மின்னல் தீற்றல்கள் துளைக்கஅந்த ஜீவனும் அப்படியே உணர்ந்தாளா என்று அவன் தனக்குத்தானே கேட்டுக் கொள்ளவில்லை.

மூன்று தினங்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் திருமணம் செய்து கொண்டிருந்தனர், பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருந்த, ‘கார்த்தஜீனா த இன்டியாஸ்’ இல்அவன் பெற்றோர்கள் வியப்படையவும், அவளது மதிமயக்கம் நீங்கவும், மற்றும் ஆர்ச் பிஷப்பின் தனிப்பட்ட ஆசிர்வாதத்துடனும். அந்தக் காதலின் உண்மையான அஸ்திவாரத்தையோ அல்லது முன்கூட்டியே கண்டறிந்திராத தோற்றுவாயையோ இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ளவில்லை. அந்தத் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அது துவங்கியிருந்தது, கடலோரத்தில் ஒரு ஞாயிறன்று பில்லி சான்ஷெஸின் குழுவினர் மார்பெல்லா கடற்கரையில் பெண்களின் உடையணியும் அறைகளை புயல் போல தாக்கிய தருணத்தின் போது. நீனா அப்போதுதான் பதினெட்டு வயது நிரம்பியிருந்தாள் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ‘செயின்ட்பிளேய்ஸ்’ என்னுமிடத்தில் ‘ஷேட்டல் லெனி’ பள்ளியிலிருந்து வந்திருந்தாள் நான்கு மொழிகளில் சீர் அழுத்தமற்ற உச்சரிப்புடன் பேசிக் கொண்டும், உயர்ஸ்வர சாக்ஸபோனில் தேர்ச்சி பெற்ற அறிவுடனும் மேலும் இது, அவள் திரும்பி வந்ததிலிருந்து, அந்தக் கடற்கரைக்கு அவளது முதல் ஞாயிறு வருகை. சருமம் தெரிய உடைகள் அனைத்தையும் உரிந்து விட்டிருந்தாள் அவள் பக்கத்து உடைமாற்றும் அறைகளிலிருந்து கடற் கொள்ளையரின் கூக்குரலும் பீதியுற்ற ஜனங்களின் நெருக்கடி சந்தடியும் கேட்கத் தொடங்கிய பொழுது அவளது நீச்சல் உடையை அணியப் போன நேரத்தில், என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லைஅவள் கதவுத் தாழ்ப்பாள் உடைந்து நொறுங்கும் வரை கற்பனைக்கெட்டக்கூடிய மிக அழகான கொள்ளைக்காரன் அவள் முன் நிற்கும் வரை. போலி சிறுத்தைப்புலித் தோலால் ஆன கயிற்று உள்ளாடை ஒன்றைத் தவிர அவன் வேறெதுவும் அணிந்திருக்கவில்லை. மற்றும் அவன் சமுத்திரத்திற்கருகில் வாழ்பவர்களின் சமாதானமான, நெகிழ்தன்மை மிக்க தேகம் கொண்டிருந்தான். வலது மணிக்கட்டில் உலோகத்தாலான ரோமானிய வாட்போர் சண்டியனின் உருவம் பொறித்த காப்பு அணிந்திருந்தான். வலது முஷ்டியைச் சுற்றி ஒரு இரும்புச் சங்கிலியைப் பிணைத்திருந்தான் அதை அவன் ஒரு அபாயகரமான ஆயுதமாகப் பிரயோகப்படுத்தினான். அவன் கழுத்தைச் சுற்றி எந்த புனிதனின் உருவமும் பொறிக்கப்படாத ஒரு பதக்கம் தொங்கியது அவன் இதயத்தின் துரித ஓட்டத்தில் மௌனமாய் அதுவும் துடித்தது. அவர்கள் இருவரும் ஒரே தொடக்கப்பள்ளிக்கு சென்றிருந்தனர், அதே பிறந்தநாள் விருந்துகளில் பல ‘பினாட்டாக்களை’(லத்
ீன் அமெரிக்க திருவிழாக்களில் சிறு பரிசுப் பொருள்கள் மற்றும் இனிப்புகள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட
, மேற்கூரையிலிருந்து தொங்கவிடப்படும் கலங்கள் அவற்றை கோலால் உடைத்து பரிசுகளைப் பெற வேண்டும்) உடைத்திருந்தனர், ஏனெனில், குடியேற்ற நாட்களிலிருந்து அந்த நகரத்தின் தலை எழுத்தை தங்களது இஷ்டம்போல அமைத்துக் கொண்டிருந்த, குறிப்பிட்ட மாகாணத்தைச் சார்ந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தனர் அந்த இருவருமே. ஆனால் அத்தனை வருடங்களாக அவர்கள் பார்த்துக் கொள்ளாததால் ஆரம்பத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நேநா டெகொண்டே அசைவின்றி அவளது அதீதமான நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள எதுவும் செய்யாது, நின்று கொண்டேயிருந்தாள். பிறகு பில்லி சான்ஷெஸ் சிறுபிள்ளைத்தனமான சடங்கை நடத்தினான் தன் சிறுத்தைப்புலித்தோல் உள்ளாடையை கீழிறக்கினான். பிறகு மரியாதைக்குரிய, விரைப்பான அவனது ஆண்மையைக் காட்டினான். அவள் நேராக அதை நோக்கினாள், வியப்புக்கான அறிகுறிகளின்றி.

‘‘இன்னும் பெரிய, விரைப்பானவை நான் பார்த்திருக்கிறேன்” என்றாள் அவள், அவளது பெரும் பீதியை அடக்கிக் கொண்டு. ‘‘ஆகவே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதைப் பற்றி மறுபடியும் யோசி, ஏனெனில் என்னிடம் நீ ஒரு கறுப்பனை விடச் சிறப்பாக இயங்க வேண்டியிருக்கும்”.

உண்மையாய் நேநா டாகொண்டே ஒரு கன்னி மட்டுமின்றி, அந்த நிமிடம் வரை நிர்வாணமாக ஒரு ஆண்மகனையும் பார்த்திருக்கவில்லை. எனினும் அவளது சவால் பயனுள்ளதாயிருந்தது. என்ன செய்ய வேண்டும் என்று பில்லி சான்ஷெஸால் எண்ணமுடிந்ததெல்லாம் அவனது சங்கிலி சுற்றப்பட்டிருந்த முஷ்டியை சுவர் மேல் மோதி, பிறகு கையை முறித்துக் கொண்டதும்தான். மருத்துவமனைக்கு தனது காரில் அவனைக் கூட்டிச் சென்றாள். பிறகு அவனுக்கு காயம் ஆறி உடல் தேறும் காலத்தைப் பொறுத்துக் கொள்ள உதவி செய்தாள். அதன்பின், இறுதியில் எப்படி சரியான முறையில் காதல் செய்வது என்பதை அவர்கள் சேர்ந்தே கற்றுக் கொண்டனர். கடினமான ஜ÷ன் மாத பகல் நேரங்களை நேநா டாகொண்டேவின் புகழ் பெற்ற மூதாதையர் ஆறு தலைமுறையாக எந்த இடத்தில் காலமாகியிருந்தனரோ அந்த வீட்டின் உட்புறமாக இருந்த மாடியில் கழித்தனர். ஹேம்மக்கில் படுத்தவாறு, விட்டு விடுதலைப்படாத மழுங்கடிக்கப்பட்ட உணர்வோடு அவன் அவளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். அவள் சாக்ஸபோனில் பிரபலமான பாடல்கள் இசைத்தாள். அந்த தரைக்கும் கூரைக்குமாக வியாபித்த எண்ணிலடங்கா ஜன்னல்கள் கொண்டதும் மேலும் ‘லா மாங்கா’ மாவட்டத்திலேயே மிகப் பெரியதும், புராதனமானதுமான அந்தக் கட்டிடம் சந்தேகத்திற்கிடமின்றி மிகவும் அசிங்கமானது. ஆனால் எங்கிருந்து நேநா டாகொண்டே இசைத்தாளோ, கட்டம் போட்ட தரை ஓடுகள் பதித்த அந்த மேல் மாடி நான்கு மணி வெய்யிலில் ஒரு பாலைவனச் சோலையாய் இருந்தது மேலும் அது வீட்டோடு சேர்ந்த மாமரம் மற்றும் வாழை மரங்களின் தாராளமான நிழல்களோடு கூடிய முற்றத்தை நோக்கித் திறந்து கொண்டது. அதனடியில் ஒரு பெயரற்ற கல்லறைக்கல்லுடன் ஒரு கல்லறை இருந்தது அந்த வீடு மற்றும் அந்தக் குடும்ப நினைவுகளை விடவும் மிகப் பழமையானதாக. இசைபற்றி எதுவும் அறிந்திராதவர்கள் கூட அப்படிப்பட்ட உன்னதமான ஒரு வீட்டில் அந்த சாக்ஸபோன் கால முரண்மிக்கது என்றே நினைத்தார்கள். ‘‘அது ஒரு கப்பல் போல சத்தமிடுகிறது”, முதன் முறையாக அதை கேட்ட போது நேநா டாகொண்டேவின் பாட்டி கூறினாள். சௌகரியத்தின் பொருட்டு அவளது குட்டைப் பாவாடை தொடை சுற்றி உயர்த்தியபடி தொடைகளை அகற்றிக் கொண்டு இசைக்கு ஒவ்வாத ஒரு காமத்துவ உணர்வுடன் அல்லாது வேறுமுறையில் அதை அவளை வாசிக்கச் செய்ய நேநா டாகொண்டேவின் அம்மா பயனின்றி முயற்சி செய்தாள். ‘‘நீ எந்த இசைக்கருவி வாசிக்கிறாய் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை”, அவள் கூறுவதுண்டு, ‘‘உன் கால்களை அகட்டாமல் நீ வாசிக்கும் வரை.”

ஆனால் நேநா டாகொண்டேவின் அந்தக் கப்பல் பிரிவுபசாரப் பாடல்களும் மற்றும் அந்த காதல் விருந்தும்தான் பில்லி சான்ஷெஸை சுற்றியிருந்த அந்தக் கோபம் மிகுந்த வெளிப்புற ஓட்டினை உடைத்துக் கொண்டு வெளிவர அனுமதித்தது. பெரும் வெற்றியுடன் அவன் தூக்கிப் பிடித்திருந்த படிப்பறிவற்ற காட்டுமிராண்டி என்று பெயருக்கு அடியில்இரண்டு புகழ் பெற்ற குடும்பங்களின் பெயர்களின் சங்கமத்தில் பயந்து போன மென்மையான ஒரு அனாதையைக் கண்டு பிடித்தாள் அவள். கை எலும்புகள் கூடிக் கொண்டு வருகையில் அவளும் பில்லி சான்ஷெஸும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள அவ்வளவு நன்றாகக் கற்றனர். தங்கு தடையின்றி ஏற்பட்ட காதலின் ஓட்டத்தில், ஒரு மழைக்கால பகல் நேரத்தில் அவர்கள் அந்த வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அவள் அவனை அவளது கன்னிப்படுக்கைக்கு இட்டுச் சென்றபோது அவனே கூட ஆச்சரியப்பட்டான். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக, அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற படுக்கையில், சொர்க்கத்தை அவர்களுக்கு முன்பே சென்றடைந்து விட்ட திருப்தியுறாத பாட்டிகள் மற்றும் சிவில் போர்வீரர்களின் மார்பளவு சித்திரங்களின் வியப்பான, ஊன்றிய பார்வைக்கடியில் அவர்கள் களித்துக் கூத்தாடினர்உணர்ச்சியுடனும், நிர்வாணமாயும். வளைகுடாவிலிருந்து வரும் கப்பல்களிலிருந்து வெளியேறி நீரில் மிதந்து செல்லும் கழிவுக் காற்றினைச் சுவாசித்தபடி, அதன் மல துர்நாற்றம், மற்றும் மௌனத்தில் வீட்டு முற்றத்தினின்று வரும் தினப்படி சப்தங்களுடன், சாக்ஸபோன் கேட்டுக் கொண்டு, வாழை மரத்தடி தவளையின் அந்த ஒற்றைச் ஸ்வரம், எவரின் கல்லறை மீதும் வீழ்ந்திடாத அந்த நீர்த்துளி, வாழ்வின் இயல்பான அசைவுகளில் கற்றுக் கொள்ள இதற்கு முன்னர் அவர்கள் பெற்றிடாத சந்தர்ப்பங்கள் என, காதலின் நடுவே, சிறிய இடைவேளைகளில் கூட அவர்கள் ஜன்னல்களை திறந்து வைத்துக் கொண்டு நிர்வாணமாகவே இருந்தனர்.

அவளுடைய பெற்றோர் வீடு திரும்பிய சமயம் நேநா டாகொண்டேவும் பில்லி சான்ஷெஸும் காதலில் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தார்கள் என்றால் இந்த உலகமே வேறு எதற்கும் தேவையான அளவு பெரிதாக இல்லாமல் போயிருந்தது அவர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் காதல் செய்தனர், ஒவ்வொரு முறையும் அதை மறுகண்டுபிடிப்பு செய்ய முயன்றபடி. பில்லி சான்ஷெஸின் தந்தை தன் குற்ற உணர்வுகளை அமைதிப்படுத்த அவனுக்குத் தந்திருந்த அந்த ஸ்போர்ட்ஸ் காரில்தான் முதலில் அவர்கள் போராடினார்கள் பிறகு, கார்கள் அவர்களுக்கு மிகவும் சுலபமாக ஆனவுடன், இரவில், எங்கே விதி அவர்களை முதன் முதலில் ஒன்றிணைத்ததோ அந்த வெறிச்சோடிப் போயிருந்த மார்பெல்லா உடைமாற்றும் அறைக்குள் அவர்கள் செல்வதுண்டு. நவம்பர் மாத களியாட்ட விழாக்களின் போது, மாறு வேட உடையில், ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வரை, பில்லி சான்ஷெஸையும் அவனது ஆயுதச் சங்கிலி கையாளும் குழுவினரையும் பொறுத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருந்த தலைமை தாதிகளின் பாதுகாப்பின் கீழ், பழைய அடிமை மாவட்டமான ஜெஸ்தமனியில் இருந்த வாடகை அறைகளுக்குச் செல்வதுண்டு. அவன் ஒரு கறுப்பனைப்போல இயங்க வேண்டியிருக்கும் என்று அவள் உணர்த்தியதை, அவளது மூர்க்கம் தணிந்த கொள்ளையன் கடைசியாக புரிந்து கொள்ளும் வரை, ஒரு சமயம் சாக்ஸபோன் மீது அவள் வைத்திருந்த வெறிமிகுந்த ஈடுபாடு போலவே, நேநா டாகொண்டே தன்னை ஒரு ரகசியக் காதலுக்குத் தந்திருந்தாள். திறமையுடனும் அதே உற்சாகத்துடனும் அவளுக்கு எப்போதும் அவன் காதலைத் திரும்ப வழங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் திருமணம் முடிந்தவுடன், ஒருவருக்கொருவர் செய்து கொண்ட சபதத்தின்படி அட்லாண்டிக்கைக் கடந்து செல்லும்போது காதல் புரிவதை நிறைவேற்றினார்கள். அந்த விமான பணிப்பெண்கள் உறங்கிய பொழுது விமான கழிப்பறைக்குள் இருவரும் தங்களைத் திணித்துக் கொண்டு, களிப்பை விட சிரிப்பினால் அதிகம் ஆட்கொள்ளப்பட்டனர். அப்பொழுதுôன் அவர்கள் அறிந்தனர் திருமணம் முடிந்து இருபத்து நான்கு மணிநேரம் கழித்து நேநா டாகொண்டே இரண்டு மாதம் கர்ப்பமாகயிருக்கிறாள் என்பதை.

ஆக, அவர்கள் மாட்ரிட் நகரை அடைந்த போது, திகட்டிப் போன காதலர்களாயிருப்பதிலிருந்து வெகு தொலைவிலும், ஆனால் புதுமணத் தம்பதிகள் போல நடந்து கொள்வதற்கான போதுமான உசிதங்களும் கொண்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன், அதிகாரப் படிநிலை நிர்வாக மரபு அதிகாரி ஒருவர் அவளுடைய பெற்றோர் அவளுக்களித்த திருமணப் பரிசான, ஓரங்களில் கறுப்பு நிறத்தில் பளிச்சென்று அலங்கரிக்கப்பட்ட வெண்ணிற மின்க் கோட்டை நேநா டாகொண்டேவிடம் கொடுக்க முதல் வகுப்பு அறைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் காத்துக் கொண்டிருந்த காரின், அடையாளம் குறிக்கப்படாத சாவிகளை பில்லி சான்ஷெஸுக்கு தந்தார். மேலும் அந்தக் குளிர் காலத்தில் ஃபேஷனின் உச்சத்திலிருந்த ‘ஷெர்லிங்’(மயிர் கத்தரிக்கப்பட்ட, ஒரு வருடத்திற்குள்ளான குட்டி ஆட்டின் பதனிடப்பட்ட தோல்) மேல்கோட்டு ஒன்றையும் கொடுத்தார்.

நிர்வாக வரவேற்பறையில் அவர்களது வெளி உறவுத்துறை குழு அவர்களை வரவேற்றது. நேநா டாகொண்டேவுக்காக காத்துக் கொண்டிருந்த அந்த தூதரும் அவரது மனைவியும் இரண்டு குடும்பங்களின் நண்பர்கள் மட்டுமல்லாது, நேநா டாகொண்டே பிறந்தபோது பிரசவம் பார்த்த மருத்துவரும் கூட. அவர் ரோஜாக்கள் நிறைந்த பூங்கொத்துடன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்அவை அவ்வளவு புத்தம் புதியதாயும் ஒளிர்வுமிக்கதாயும் இருந்ததால் பனித்துளிகள் கூட செயற்கையானவையோ என்று தோன்றின. பொய் முத்தங்களுடன் அவர்கள் இருவருக்கும் அவள் வாழ்த்து தெரிவித்து, பிறகு கொஞ்சம் உரிய காலத்தை முந்திவிட்ட மணப்பெண் என்ற அவளது அந்தஸ்த்து பற்றி அசௌகரியமான உணர்வுடன் அந்த ரோஜாக்களை வாங்கிக் கொண்டாள். அவற்றை அவள் எடுத்துக் கொண்ட போது விரல் ஒரு முள்ளின் மேல் பட்டுக் குத்தியது. ஆனால் அந்த அசம்பாவிதத்தை அவள் ஒரு வசீகர சாதுர்யத்துடன் கையாண்டாள்.

‘‘நான் வேண்டுமென்றுதான் அப்படிச் செய்தேன்” அவள் கூறினாள், ‘‘அப்போதுதான் நீங்கள் என் மோதிரத்தைப் பார்ப்பீர்கள்.”

மெய்யாகவே அந்த வெளி உறவுத்துறை குழு முழுவதுமே அந்த மோதிரத்தின் அழகைக் கண்டு வியந்ததுஅது கிட்டத்தட்ட ஒரு வாழ்நாள் வருவாயையே விலையாகக் கொண்டிருக்க வேண்டும்அந்த வைரங்களின் தரம் காரணமாகவன்றி நன்கு பேணப்பட்டிருந்த அதன் புராதனத்தன்மைக்காக. ஆனால் எவருமே அவள் விரலில் ரத்தம் கசியத் தொடங்கியதைக் கவனிக்கவில்லை. அவர்கள் அனைவரும் அந்த புதிய காரின் மேல் தங்கள் கவனத்தை திருப்பினர். அந்த அரசு தூதுவரின் வேடிக்கையான திட்டத்தின்படி, அதை செலோஃபன் காகிதத்தில் சுற்றி, பிறகு அதை ஒரு மிகப் பெரிய தங்க ரிப்பன் கொண்டு கட்டி விட்டிருந்தார். பில்லி சான்ஷெஸ் அவரது புனைவுத் திறனை கவனிக்கவே இல்லை. அவன் அந்தக் காரைக் காண மிகவும் ஆவலாக இருந்ததால் அதைச் சுற்றியிருந்த காகிதத்தை உடனடியாகக் கிழித்தெறிந்து விட்டு மூச்சற்று நின்றான். மேற்புரம் மாற்றி அமைத்துக் கொள்ளும்படியான வசதியுள்ள, அசலான தோல் இருக்கை உறைகளுடன் கூடிய அந்த வருடத்திய பென்ட்லி கன்வெர்ட்டிபிள் கார் ஆகும் அது. ஆகாயம் சாம்பல் போர்வை போல காட்சியளித்தது. துளைத்தெடுக்கும் குளிர் காற்று வீசிய பொழுது வெளியே இருப்பதற்கான உகந்த நேரம் அதுவாக இல்லாத போதிலும், பில்லி சான்ஷெஸ் குளிர் பற்றிய சிந்தனை ஏதுமில்லாதிருந்தான். வெளியே இருந்த வண்டி நிறுத்தத்திலேயே அந்த அரசுக் குழுவை நிறுத்தி வைத்திருந்தான், மரியாதை நிமித்தம் அவர்கள் விறைக்கும் குளிரில் இருப்பதை அறியாமல், அந்தக் காரின் மிகச் சிறிய நுணுக்கத்தையும் விடாமல் பார்த்து முடிக்கும் வரை. பிறகு அந்தத் தூதுவர் அவனருகில் அமர்ந்தார், அவர்களின் அதிகாரபூர்வமான தங்குமிடத்திற்கு வழிகாட்டியபடி. அங்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. வழியில், அந்த நகரத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த பல காட்சிகளைச் சுட்டிக் காட்டினார், ஆனால் பில்லி சான்ஷெஸ் அந்தக் காரின் மந்திரத்தில் மாத்திரமே ஈர்க்கப்பட்டவன் போலிருந்தான்.

அவனுடைய நாட்டுக்கு வெளியே அவன் பிரயாணம் செய்வது அதுவே முதல் முறையாகும். ஞானஸ்நானம் பெறப்படாத குழந்தைகள் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமாக அலைக்கழிக்கப் படுவதைப் போல, மறதியின் அசட்டையில் இலக்கின்றி மிதக்கும் வரை, எல்லாத்தனியார் மற்றும் பொதுப்பள்ளிகள் வாயிலாக திரும்பத் திரும்ப ஒரே வகுப்பில் பயிற்சி பெற்றான். அவனுடைய இடத்தைப் போலன்றி அந்த நகரில் அவனுக்குத் தென்பட்ட ஆரம்பக் காட்சிகள்நடுப்பகல் பொழுதில் எரிய விடப்பட்டிருந்த விளக்குகளுடனான சாம்பல் நிற வீடுகளின் வரிசைகள், இலைகளற்ற மரங்கள், தூரத்து சமுத்திரம் இவை எல்லாமே அவனது இதயத்தின் ஓரத்தில் அவன் கட்டுப்படுத்தி வைக்க யத்தனித்த பாழாய்ப்போய் விட்டதான உணர்வை அதிகரித்தன. ஆனால் சீக்கிரமே அவை பற்றிய பிரக்ஞை இல்லாமல் அவன் மறத்தலின் முதல் வலையில் வீழ்ந்தான். அந்தப் பருவ காலத்தின் மிக ஆரம்பத்திய, ஒரு தீடீர் மௌனப் புயல் தலைக்கு மேல் வெடித்திருந்தது. மதிய உணவிற்குப் பின் அந்த அரசு தூதரின் வீட்டிலிருந்து ஃபிரான்சு நோக்கிய அவர்கள் பயணத்தை தொடங்கிய பொழுது, அந்த நகரம் ஒளிரும் கெட்டிப் பனியால் போர்த்தப்பட்டிருப்பதைக் கவனித்தனர். அப்பொழுது பில்லி சான்ஷெஸ் அந்தக் காரை மறந்தான். மற்ற ஒவ்வொருவரும் கவனித்துக் கொண்டிருக்க, அவன் சந்தோஷ மிகுதியில் கூச்சலிட்டான். முஷ்டி மடங்கிய கை நிறைந்த பனிக்கட்டியை தன் தலைக்கு மேலே வீசி எறிந்து, அந்தத் தெருவின் நடுவே தான் அணிந்திருந்த புதிய கோட்டுடன் உருண்டான்.

அந்தப் புயலுக்குப் பின்னர் ஒளி ஊடுருவித் தெரியும்படியாக மாறிய ஒரு பகற் பொழுதில், அவர்கள் மாட்ரிட் நகரை விட்டுக் கிளம்பும் வரையில் நேநா டாகொண்டே தனது விரலில் இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை உணரவில்லை. அலுவலக நிமித்த மதிய உணவுகளின் போது சாக்ஸபோனில் அரசாங்க விருந்துகளுக்குப் பிறகு இத்தாலிய இசை நாடக பாடல்களைப் பாட விழையும் அந்த அரசு தூதுவரின் மனைவியுடன் சென்று சாக்ஸபோன் வாசிக்கும் போது அவள் விரல் சிரமம் கொடுத்திருக்கவில்லை என்பதால் இது அவளை ஆச்சரியப்படுத்தியது. பிறகு, எல்லைப் பகுதிக்குச் செல்லும் குறுக்குப் பாதைகளை கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுது, அவள் தன் போதமின்றி ஒவ்வொருமுறை ரத்தம் கசிந்த போதும் அந்த விரலைச் சப்பினாள், மற்றும் அவர்கள் ‘பிர்ரனீஸ்’ பகுதியை அடைந்த பொழுதுதான் ஒரு மருந்துக்கடையைத் தேட வேண்டியதை யோசித்தாள். பிறகு அவள் கடந்த சில நாட்களின் அதிகப் படியாய் தங்கிப்போன கனவுகளுக்குள் ஆழ்ந்து மூழ்கிப் போனாள். திடுக்கிட்டு, கார் தண்ணீரின் ஊடாகச் செல்வதான ஒரு அச்சுறுத்தும் கனவுப்பீதியின் மனப்பதிவில் கண்விழித்த சமயம், விரலைச் சுற்றியிருந்த கைக்குட்டையின் ஞாபகம் அவளுக்கு வந்தபோது நீண்ட நேரமாகியிருந்தது. காரின் டேஷ்போர்டில் இருந்த ஒளியூட்டப்பட்டிருந்த கடிகாரத்தை அவள் பார்த்த போது மணி மூன்று ஆகியிருந்தது. மனக்கணக்குப் போட்டவள் பிறகுதான் ‘போர்டோ’வையும் அது போல, ‘லாய்யர்’ நதியின் நீண்ட வெள்ளப் பெருக்கு தடுப்பு மதிலை ஒட்டி சென்று கொண்டிருந்ததையும், ‘அங்கோலேம்’þஐயும் ‘பாய்ட்டியர்ஸ்’ ஐயும் கடந்து விட்டிருந்ததை உணர்ந்தாள்மூடுபனி வழியே வடிந்து இறங்கியது நிலா ஒளி, அந்த கோட்டைகளின் நிழல் வடிவங்கள் பைன் மரங்களின் ஊடாக ஏதோ மாயக்கதைகளில் வருவது போன்ற தோற்றமளித்தன. அந்தப் பிரதேசத்தை மனப்பாடமாக அறிந்திருந்த நேநா டாகொண்டே பாரீசிலிருந்து மூன்று மணி நேரத் தொலைவில் இருக்கிறோம் என்று கணித்தாள். மேலும் பில்லி சான்ஷெஸ் அசந்துவிடாமல் இன்னும் ஸ்டியரிங்கிலேயே இருந்தான்.

‘‘நீ ஒரு முரட்டு ஆசாமி” அவள் கூறினாள். ‘‘நீ பதினோரு மணி நேரமாக கார் ஓட்டிக் கொண்டிருக்கிறாய், மேலும் நீ எதுவும் சாப்பிடவில்லை.”

அந்தப் புதுக்காரின் போதை அவனை செலுத்திக் கொண்டிருந்தது. விமானத்திலும் அவன் அதிகம் உறங்கியிருக்கவில்லை. ஆனால் விடிவதற்குள் பாரீஸ் நகரை அடையத் தேவையான கூர்ந்த விழிப்புடனும் தேவையான தெம்புடனும் இருந்தான். ‘‘அந்த தூதரக மதிய உணவு இன்னும் என் வயிறு நிரம்ப இருக்கிறது”, என்றான் அவன். பிறகு மேலோட்டமான தர்க்கம் ஏதுமின்றி தெளிவாகக் கூறினான், ‘‘அத்தனைக்கும் மேலே, கார்த்தஜீனாவில் அவர்கள் இப்பொழுதுதான் திரைப்படம் முடிந்து செல்கிறார்கள். பத்து மணிக்குப் பக்கமாகத்தான் இருக்கும்.”

என்றாலும் கூட அவன் ஸ்டியரிங்கிலேயே உறங்கிவிடுவானோ என்று நேநா டாகொண்டேவுக்கு பயமாயிருந்தது. மாட்டிரிடில் அவர்கள் பெற்றுக்கொண்ட பல பரிசுப் பொருட்களில் ஒன்றைப் பிரித்தாள் அவள். பிறகு, இனிப்பூட்டி பதனம் செய்யப்பட்ட ஆரஞ்சு ஒன்றை அவன் வாய்க்குள் வைக்க முயன்றாள். ஆனால் அவன் திரும்பிக் கொண்டான்.

‘‘உண்மையான ஆண்கள் இனிப்பு சாப்பிடுவதில்லை” என்றான் அவன்.

ஆர்லியன்ஸுக்கு சற்று முன்னதாகவே அந்த மூடு பனி விலகியது. பனிபடர்ந்த வயல் வெளிகளை மிகப் பெரிய சந்திரன் ஒளியூட்டியது. ஆனால் போக்கு வரத்து மிகவும் சிக்கலாக ஆகியதுகாரணம் பாரீஸுக்கு சென்று கொண்டிருக்கும் உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் எல்லா பெரிய ட்ரக்குகளும், ஒயின் ஏற்றிச்செல்லும் வண்டிகளும் அந்த நெடுஞ்சாலையில் இணைந்தன. நேநா டா கொண்டே காரோட்டுவதில் அவள் கணவனுக்கு உதவி செய்ய விரும்பினாள் என்றாலும் அதை குறிப்பால் உணர்த்தி விடக் கூட தைரியமின்றி இருந்தாள் முதல் முறையாக அவர்கள் இருவருமாக வெளியே சென்றிருந்த சமயம் ஒரு மனைவி காரோட்ட கணவன் பயணம் செய்வது போல அவமானப்படுத்தக் கூடியது வேறு எதுவும் இல்லை என்று அவன் அவளிடம் தெரிவித்திருந்தான். ஐந்து மணிநேர ஆழ்ந்த அமைதியான உறக்கத்திற்குப் பின்னர் அவள் மனம் தெளிவாகியிருந்தது. மேலும், சிறிய வயதினளாக இருந்ததிலிருந்தே அவள் பெற்றோருடன் எண்ணற்ற முறை செய்த பயணங்களால் அவள் அறிந்திருந்த பிரெஞ்சு மாகாணத்தில் அந்த குறிப்பிட்ட உணவகத்தில் கூட நிற்காமல் வந்தது குறித்து சந்தோஷப்பட்டாள். ‘‘இதைப் போல அழகான நாட்டுப் புறம் இந்த உலகில் வேறு எங்கேயும் கிடையாது” அவள் கூறினாள் ‘‘ஆனால் ஒரு குவளை நீர் இலவசமாய் கொடுக்கும் ஒருவரைக்கூட காண முடியாது தாகத்தினால் செத்தே விடுவோம்.” இதுபற்றி அவள் அவ்வளவு உறுதிப்பாட்டுடன் இருந்ததால் கடைசி நிமிடத்தில் அவள் ஒரு சோப்புக் கட்டியையும், கழிவறைகளில் பயன்படும் பேப்பர் ஒரு கட்டும் அவளது ஓரிரவுக்குத் தேவையான பொருட்கள் வைக்கும் பையில் எடுத்து வைத்துக் கொண்டாள் காரணம் பிரெஞ்சு உணவகங்களில் எப்போதும் சோப்புக்கட்டி இருந்ததேயில்லை, குளியலறைகளில் காணப்படும் பேப்பர் கூட முந்தைய வாரத்தின் செய்தித்தாள்கள் சிறு சதுரங்களாக கத்தரிக்கப்பட்டு ஒரு ஆணியில் தொங்க விடப் பட்டிருக்கும். அந்த கணம் அவள் வருந்தியது ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டுமே, அதாவது, புணர்ச்சியின்றி அந்த முழு இரவையும் வீணடித்ததற்காக. அவள் கணவனின் பதில் உடனடியாய் வந்தது.

‘‘நான் இப்போதுதான் நினைத்துக் கொண்டிருந்தேன், பனியில் புணர்வது எத்தனை அற்புதமாயிருக் கக்கூடும் என்று.” அவன் கூறினான் ‘‘இதே இடத்தில், நீ விரும்பினால்.”

நேநா டாகொண்டே அதுபற்றி தீவிரமாக யோசித்தாள். அந்த நெடுஞ்சாலையின் விளிம்பிலிருந்த நிலவொளியூட்டப்பட்ட பனி, பஞ்சு போன்றும் வெதுவெதுப்பாகவும் தோன்றியது. ஆனால் அவர்கள் பாரீஸின் புறநகர்ப் பகுதிகளை நெருங்கியபோது, போக்குவரத்து நெரிசல் அதிகமாயிற்று. அங்கே இருந்தவை வெளிச்சமிடப்பட்டிருந்த கொத்துக் கொத்தான தொழிற்சாலைகளும், மிதி வண்டிகளில் பெரும்பான்மை தொழிலாளிகளும்குளிர் காலமாக இல்லாதிருந்தால் அது ஒரு பட்டப் பகலாக ஆகியிருக்கும் இந்நேரம்.

‘‘பாரீஸ் செல்லும் வரை நாம் சற்று பொறுத்திருப்போம்” என்றாள் நேநா டாகொண்டே. ‘‘மணமான ஜோடிகள் போல, சுத்தமான விரிப்புகளுடனான ஒரு படுக்கையில், நன்றாக, வெதுவெதுப்பாக.”

‘‘இதுதான் முதல்முறையாக நீ என்னை மறுப்பது,” என்றான் அவன்.

‘‘அப்படித்தான்”, அவள் பதில் அளித்தாள், ‘‘நாம் முதல்முறையாக திருமணம் செய்து கொண்டிருப்பதும் இப்பொழுதுதான்.”

விடியலுக்கு சற்று முன்னர் அவர்கள் தெருவோர உணவகத்தில் தங்கள் முகங்களை கழுவிக் கொண்டு சிறுநீர் கழித்தபின், ட்ரக் ஓட்டுனர்கள் காலை உணவுடன் சிவப்பு ஒயின் குடித்துக் கொண்டிருந்த ஒரு கவுண்ட்டரில் காபியும், வெட்டி மடிக்கப்பட்டிருந்த சூடான ரொட்டித் துண்டுகளையும் சாப்பிட்டனர். நேநா டாகொண்டே குளியலறையில் அவள் குட்டைப் பாவாடையிலும், ரவிக்கையிலும் ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டாள். ஆனால் அதைக் கழுவி நீக்கிவிட யத்தனிக்கவில்லை. இரத்தக் கறை படிந்த கைக்குட்டையை குப்பைக் கூடைக்குள் எறிந்தாள். திருமண மோதிரத்தை இடது கைக்கு மாற்றிக் கொண்டாள். பிறகு சோப்பு கொண்டு நீரில் காயம் பட்டிருந்த விரலைக் கழுவினாள். அந்தக் கீறல் ஏறக்குறைய கண்ணுக்குப் புலப்படாததாகவே இருந்தது. இருப்பினும் அவர்கள் காருக்குத் திரும்பிய உடனேயே மீண்டும் அது ரத்தம் கசியத் தொடங்கியது. ஜன்னலுக்கு வெளியே நேநா டாகொண்டே தன் கையைத் தொங்க விட்டாள்வயல்களிலிருந்து வீசும் குளிர்ந்த காற்றுக்கு ரத்தக் கசிவை நிறுத்தும் தன்மை உண்டென்ற நிச்சயத்துடன். இந்த சாமர்த்தியமும் பலனளிக்காது போயிற்று, ஆனால் அவள் அதுபற்றி இன்னும் அக்கறையின்றி இருந்தாள். ‘‘யாராவது நம்மை கண்டுபிடிக்க விரும்பினால் அது மிகவும் சுலபம்”, இயல்பான வசீகரத்துடன் கூறினாள் அவள், ‘‘அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்தப் பனியின் மேல் படிந்த என் ரத்த சுவடை பின் தொடர வேண்டியதுதான்.” பிறகு, அவள் என்ன கூறியிருந்தாளோ அதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தாள். விடியலின் முதல் வெளிச்சத்தில் அவள் முகம் மலர்ந்தது.

‘‘கற்பனை செய்”, அவள் கூறினாள். ‘‘மாட்ரிட்டிலிருந்து பாரீஸ் வரையிலான வழியெங்கிலும் பனியில் ரத்தச் சுவடு. அது ஒரு நல்ல பாடலைத் தரலாமில்லயா?”

மறுபடியும் சிந்திக்க அவளுக்கு நேரம் இருக்கவில்லை. பாரீஸின் புறநகர்ப் பகுதிகளில் அவள் விரல் கட்டுக்கடங்கா வெள்ளம்போல ரத்தமாய்க் கசிந்தது, மேலும் அந்தக் கீறலின் வழியே அவளது ஆன்மாவே வெளியேறிச் சென்று கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள். தனது பையில் கொண்டு வந்திருந்த, கழிவறையில் பயன்படுத்தப்படும் தாள்கள் கொண்டு அந்த வழிதலை நிறுத்த முயற்சி செய்தாள் ஆனால் ரத்தம் தோய்ந்த தாள்களை ஜன்னலுக்கு வெளியே வீசி எறிவதைவிட அவள் விரலில் அவற்றை சுற்றி விடுவதற்கு அதிக நேரம் பிடித்தது. அவள் அணிந்திருந்த ஆடைகள், அவள் கோட், அந்தக் கார் இருக்கைகள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக, சீர் செய்ய இயலாத வகையில் ரத்தத்தால் நனைந்து போய்க்கொண்டிருந்தன. பில்லி சான்ஷெஸ் மெய்யாகவே பயந்து போயிருந்தான். ஒரு மருந்துக்கடை தேடுதலை வற்புறுத்தினான். ஆனால் அவள் அதற்குள்ளாக அறிந்திருந்தாள் இது மருந்துக் கடைக்குட்பட்ட விஷயம் அல்லவென்று.

‘‘நாம் கிட்டத்தட்ட போர்ட் த ஆர்லியன்ஸ் இல் இருக்கிறோம்”, அவள் கூறினாள், ‘‘நேரே மேலே போகவேண்டும், ‘ஜெனரல் லெக்லெர் அவென்யூ வழியாக, நிறைய மரங்கள் நிறைந்த அந்த பெரியது, பிறகு நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்.”

அந்தப் பயணத்தின் மிக சிரமமான பகுதி இதுதான். மத்திய சந்தைகளை அடைய முற்பட்டுக் கொண்டிருந்த சிறிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரிய ட்ரக்குகளால் ஆன ஒரு முடிச்சுடன் இரண்டு பக்கங்களிலும் அந்த ஜெனரல் லெக்லெர் அவென்யூ நெரிசலடைந்திருந்தது. பயனற்ற ஹார்ன்களின் ஒலி ஆரவாரம் பில்லி சான்ஷெஸை அவ்வளவு கொதிப்படையச் செய்திருந்ததால், அவன் பல ஓட்டுநர்களை சங்கிலிþதாக்கும் குழுவின் வசை மொழியில் திட்டினான். மேலும் காரை விட்டு வெளியேறி அவர்களில் ஒருவனை தாக்கக் கூட முயன்றான். ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் உலகிலேயே இங்கிதமில்லாதவர்கள் என்ற போதிலும், அவர்கள் எப்போதும் முஷ்டிச் சண்டையிட்டதில்லை என்று நேநா டாகொண்டே அவனை நம்ப செய்தாள். அது அவளின் சிறப்பான கணிப்பின் ஒரு நிரூபணமாக இருந்தது, ஏனெனில் அந்தக் கணத்தில் நேநா டாகொண்டே சுய நினைவு இழக்காமலிருக்க போராடிக் கொண்டிருந்தாள்.

லியோன் த பெல்ஃபோர்ட்டின் போக்குவரத்து வட்டத்தைச் சுற்றி வரவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுக்கு ஆயிற்று. ஏதோ இரவு போல சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் கடைகள் வெளிச்சமிடப்பட்டிருந்தன, அது ஒரு சராசரி செவ்வாய்க் கிழமை மேகங்கள் மூடிய இருள் சூழ்ந்திருந்த அசுத்தமான பாரீஸ்தன்மையான ஜனவரி மாதத்தில், இடைவிடாது பெய்து, பனிக்கட்டியாய் உறையாத மழையுடன். ஆனால் டென்ஃபெர் ரோஷரூ அவென்யூவில் போக்குவரத்து குறைவாயிருந்தது. அதற்கு அடுத்த ஒரு சில வரிசைக் கட்டிடங்கள் தள்ளி, நேநா டாகொண்டே அவள் கணவனிடம் வலது புறம் திரும்பச் சொன்னாள், பிறகு அவன் ஒரு பெரிய, இருளடர்ந்த மருத்துவ மனையின் அந்த அவசர சிகிக்சைப் பிரிவின் நுழைவாயிலுக்கு வெளியே காரை நிறுத்தினான்.

காரிலிருந்து வெளியே வருவதற்கு அவளுக்கு உதவி தேவைப்பட்டது. இருப்பினும் அவள் தனது அமைதியையோ அல்லது தெளிவையோ இழக்கவில்லை. சக்கரங்கள் பொருத்திய ஸ்ரெட்சர் வண்டியில் படுத்தபடி, பணி நேர மருத்துவருக்காக காத்துக் கொண்டிருந்த போது, அவள் அவளைப் பற்றிய அடையாளக் குறிப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய செவிலியின் வழக்கமான கேள்விகளுக்கு பதிலளித்தாள். பில்லி சான்ஷெஸ் அவள் பையை சுமந்து வந்தான், அவளது திருமண மோதிரத்தை அணிந்திருந்த அந்த இடது கையை இறுகப் பற்றினான் அது தளர்ச்சிடைந்து குளிர்ந்திருந்தது. அவள் உதடுகள் அவற்றின் நிறமிழந்திருந்தன. அந்த மருத்துவர் வந்து சேரும் வரை, அவளது காயம்பட்ட விரலை ஒரு சிறிய பரிசோதனை செய்யும் வரை அவள் கையை பிடித்தபடியே அவன் அவளருகிலேயே இருந்தான். அந்த டாக்டர் மிகுந்த இளவயதுக்காரராக இருந்தார், மழிக்கப்பட்டிருந்த தலையுடனும், பழைய தாமிர உலோக நிறத் தோலுடனும். நேநா டாகொண்டே அவரிடம் தன் கவனத்தைத் தரவில்லை. ஆனால் ஒரு வெளிறிய புன்னகையை தன் கணவன் மேல் திருப்பினாள், ‘‘பயப்படாதே”, அவள் சொன்னாள், அவளது வெல்வதற்கரிய நகைச்சுவை உணர்வுடன், ‘‘நடக்கக் கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் இந்த நரமாமிசன் என் கையை வெட்டி தின்றுவிடுவதுதான்”

அந்த டாக்டர் பரிசோதனையை முடித்தார். பிறகு மிகச் சரியான ஸ்பானிய மொழியில் ஒரு வித்தியாசமான ஆசிய உச்சரிப்புடன் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

‘‘இல்லை குழந்தைகளே,” அவர் கூறினார். ‘‘இந்த நரமாமிசன் இப்படி ஒரு அழகான கையை வெட்டுவதை விட பசியால் இறந்து போவான்.”

அவர்கள் தர்ம சங்கடத்திற்குள்ளானார்கள், ஆனால் ஒரு இணக்கமான அசைவில் அவர்களை அமைதிப்படுத்தினார் அந்த டாக்டர். பிறகு அவர் அந்த கட்டிலை நகர்த்திச் செல்லப் பணித்தார். தன் மனைவியின் கைகளைப் பிடித்தபடி பில்லி சான்ஷெஸ் பின் தொடர முயன்றான். டாக்டர் அவன் கைகளை எடுத்துக் கொண்டு அவனைத் தடுத்து நிறுத்தினார்.

‘‘நீ கூடாது,” அவர் சொன்னார். ‘‘அவள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்கிறாள்.”

நேநா டாகொண்டே அவள் கணவனை நோக்கி மறுபடியும் புன்னகைத்தாள், விடை பெறுவதற்காய் அந்த நடைகூடத்தின் முடிவில் பார்வையிலிருந்து அவள் மறையும் வரை கையசைத்தவாறு இருந்தாள். அந்த டாக்டர் கிளிப் பொருத்திய எழுது பலகையில் அந்த நர்ஸ் எழுதியிருந்த குறிப்புகளை படித்துக் கொண்டிருந்தார். பில்லி சான்ஷெஸ் அவரை அழைத்தான்.

‘‘டாக்டர், அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” அவன் கூறினான்.

‘‘எவ்வளவு நாளாய்?”

‘‘இரண்டு மாதங்கள்”

இந்த தகவலுக்கு பில்லி சான்ஷெஸ் எதிர்பார்த்த அளவு டாக்டர் முக்கியத்துவம் தரவில்லை. ‘‘நீ என்னிடம் சொல்வது சரிதான்,” அவர் கூறினார். பிறகு கட்டிலைத் தொடர்ந்து நடந்தார். நோயாளிகளின் வியர்வை நாற்றமடித்த, துக்கம் தோன்றச் செய்யும் அந்த அறையில் பில்லி சான்ஷெஸ் நின்றவாறே தனித்து விடப்பட்டான். நேநா டாகொண்டேவை அழைத்துச் சென்றிருந்த அந்த கீழ் நோக்கிய, வெறிச்சோடிய நடைகூடத்தில் என்ன செய்வதென்று அறியாது விடப்பட்டிருந்தான். பிறகு மற்றவர்கள் காத்துக் கொண்டிருந்த அந்த மர பெஞ்சில் உட்கார்ந்தான். அவன் எவ்வளவு நேரம் அங்கு உட்கார்ந்திருந்தான் என்பதை அறியவில்லை, ஆனால் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேற அவன் தீர்மானித்த போது மறுபடியும் இரவாகியிருந்தது, மேலும் இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது, இந்த உலகின் பாரத்தால் அமுக்கப்பட்டு, அவன் தான் என்ன செய்யவேண்டுமென்று இன்னும் அறியாதிருந்தான்.

பல வருடங்களுக்குப் பின்னர் அந்த மருத்துவமனை பதிவேட்டிலிருந்து நான் அறிந்து கொண்டபடி ஜனவரி ஏழாம் தேதி செவ்வாய்க் கிழமையன்று நேநா டாகொண்டே 9.30 மணிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டாள். அந்த முதல் நாள் இரவில், பில்லி சான்ஷெஸ் அவசர சிகிச்சை பிரிவு நுழைவாயிலின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரில் உறங்கினான். பின் அடுத்த நாள் அதிகாலையில், மிக அருகாமையில் அவன் கண்டுபிடிக்க முடிந்திருந்த உணவகத்தில் ஆறு வேக வைத்த முட்டைகள் சாப்பிட்டான், இரண்டு கோப்பை காப்பியும் அருந்தினான், ஏனெனில் மாட்ரிட்டிலிருந்து அவன் முழுமையான உணவு உண்டிருக்கவில்லை. பிறகு அவன் அந்த அவசர சிகிச்சைப் பகுதிக்குச் திரும்பச் சென்றான். ஆனால் அவன் பிரதான வாயிலைப் பயன்படுத்த வேண்டுமென்பதை அவனுக்குப் புரியச் செய்தனர். நேநா டாகொண்டே மெய்யாகவே அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாளா என்று உறுதி செய்து கொண்ட பின், பார்வையாளர்கள் செவ்வாய்க் கிழமைகளில் ஒன்பது மணியிலிருந்து நாலு மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்அதாவது மற்ற ஆறு தினங்களில் இல்லை என்று கூறிய அந்த பெண் வரவேற்பாளரிடம் பேசுவதற்கு ஒரு அஸ்ட்டூரிய பராமரிப்புப் பணியாளன் அவனுக்கு உதவி செய்தான். மழிக்கப்பட்ட தலையுடனான ஒரு கறுப்பன் என்று அவன் வர்ணித்த, ஸ்பானிய மொழி பேசும் அந்த டாக்டரைப் பார்க்க முயன்றான். ஆனால் இந்த மாதிரியான இரண்டு எளிய அடையாளங்களின் அடிப்படையில் அவரைப் பற்றி எவராலும் எதுவும் கூற இயலவில்லை.

அந்தப் பதிவேட்டில் நேநா டாகொண்டே இருப்பதை மறு உறுதி செய்து கொண்டவன் காருக்குத் திரும்பினான். ஒரு போக்குவரத்து அதிகாரி, இரட்டைப்படை எண் வரிசைப் பகுதியில், மிகக் குறுகலான ஒரு தெருவில் அவன் வண்டியை இரண்டு வரிசைக் கட்டிடங்களுக்கு அப்பால் நிறுத்தச் செய்தார். தெருவின் அப்பால் ஒரு புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் ஒன்று ஹோட்டல் நிக்கோல் என்ற வாசகத்துடன்அது ஒரு நட்சத்திர அந்தஸ்து மட்டுமே பெற்றிருந்தது, மேலும் அதன் வரவேற்பு பகுதி மிகச் சிறியதாக இருந்தது, அதில் ஒரே ஒரு சோபா மற்றும் ஒரு பழைய, கம்பீரமான பியானோ இருந்தது. குழல் போல உச்சஸ்தாயி குரல் கொண்ட அந்த உரிமையாளர், பணம் இருக்கும் பட்சத்தில் எந்த வாடிக்கையாளரையும் எந்த மொழியிலும் புரிந்து கொள்ள முடிந்தவராயிருந்தார். பில்லி சான்ஷெஸ் தனது பதினோரு பெட்டிகள் மற்றும் ஒன்பது பரிசுப் பெட்டிகளுடன் காலியாக இருந்த அந்த ஒரே அறையை எடுத்துக் கொண்டான். ஒன்பதாவது தளத்தில் இருந்த ஒரு முக்கோண வடிவ அட்டாளி அறைக்குச் செல்லும், வேக வைத்த காலிஃப்ளவர் நெடி வீசிய வட்டவடிவ படிக்கட்டுகளை ஒரே மூச்சில் தாவி ஏறினான். மங்கலான தாள்களால் சுவர்கள் மூடப்பட்டிருந்தன, மேலும் ஒரு பக்கத்து ஜன்னலருகில் எதற்குமே இடமில்லாதிருந்தது, ஆனால் உட்புறமாயிருந்த முற்றம் போன்ற பகுதியிலிருந்து அந்த மங்கலான வெளிச்சம் வருவதற்கு தவிர. இரட்டைப் படுக்கை, ஒரு உயரமான அலமாரி, ஒரு சாய முடியாத நேரான பின்பகுதியுடைய நாற்காலி, கையோடு சுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய ஒரு ‘பிடெட்’ (பிறப்புறுப்புக்களைக் கழுவுவதற்கான பீச்சும் நீர்இணைப்பு கொண்ட அமைப்பு) ஒரு வாஷ்பேசின், நீர் மொள்ளும் பாத்திரம் ஆக அந்த அறையில் இருப்பதற்கு ஒரே வழி அந்தப் படுக்கையில் படுத்துக் கொள்வதுதான். பழையவை என்பதற்கும் மோசமாக எல்லாப் பொருள்களுமே கைவிடப்பட்டவையாய்த் தோன்றின, ஆனால் ஆரோக்கியமளிக்கவல்ல ஒரு சமீபத்திய மருந்து நெடியுடன்.

அவனது வாழ்வின் எஞ்சிய பகுதியை அந்த கருமித்தனத்திற்கான திறமையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்த உலகின் புதிர்களை புரிந்து கொள்ளும் முயற்சியில் கழித்திருந்தாலும் சான்ஷெஸ் அவற்றை விடுவித்திருக்க முடியாது. அவனது தளத்தை அவன் அடையும் முன்னரே அந்தப் படிக்கட்டு விளக்கு அணைந்து போய்விடும் புதிரை அவன் ஒரு போதும் விடுவிக்க இயலவில்லை, மேலும் அவன் அதை மறுபடியும் எப்படி எரிய விடுவதென்று கண்டுபிடிக்கவும் இல்லை. ஒவ்வொரு தளத்தை அடையும் போதும் கழிவறையுடனான ஒரு சிறிய அறை இருந்ததையும், ஒரு சங்கிலி இழுப்பில் அது கழிவுகளைத் தள்ளி விடுவதையும் அறிந்து கொள்ள அவனுக்கு ஒரு காலை நேரத்தின் பாதிப் பகுதி தேவையாயிருந்தது மற்றும் அவன் அதை இருள் நேரத்தில் உபயோகிக்க முடிவு செய்திருந்தான். அப்போதுதான், உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டால் அந்த விளக்கு எரியத் தொடங்கியதும் அதனால் யாருமே அதை மறுபடி அணைக்க மறந்து போக நேரிடாது என்பதையும் அவன் கண்டு பிடித்தான். யதேச்சையாக, அந்த நீண்ட ஹாலின் ஒரு கோடியில் இருந்த ஷவரை, அவன் சொந்த நாட்டில் உபயோகிப்பது போல, ஒரு நாளில் இரண்டு முறை அதை உபயோகப்படுத்த உறுதி செய்து கொண்டான். அதற்கென தனியே பணம் கொடுக்க வேண்டியிருந்தது, கைப்பணமாக, மற்றும் அந்த அலுவலக கட்டுப்பாட்டில் இருந்த அந்த சுடுநீர் மூன்று நிமிடங்களில் நின்று போனது. இருப்பினும் பில்லி சான்ஷெஸ் தேவையான தெளிவுடன் தனதிலிருந்து வேறுபட்டு இந்த விதமாகக் காரியங்களைச் செய்வது பற்றி அறிந்து கொண்டான். எப்படிப் பார்த்தாலும் ஜனவரி மாதத்துக் குளிரில் வெளியே இருப்பதை விடவும் இது மிகவும் சிலாக்கியமானது. மற்றும் அவன் மிகவும் குழப்பமாகவும், தனிமையாகவும் உணர்ந்தான் அதாவது நேநா டாகொண்டேவின் உதவியும், பாதுகாவலும் இன்றி அவனால் எப்படி வாழ்ந்திருக்க முடிந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

புதன் கிழமை காலை அறைக்குச் சென்ற பின், கோட்டுடன் படுக்கையில் முகம் கவிழ்ந்து வீழ்ந்தான். இரண்டு வரிசை கட்டிடங்கள் தள்ளி அப்பால், இன்னும் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் அந்த அற்புதப்படைப்பைப் பற்றி எண்ணியவாறே, அவன் உடனே ஒரு மிக இயல்பான உறக்கத்துள் வீழ்ந்தான். விழித்தபோது அவன் கைக்கடிகாரம் 5 மணி என்றது, ஆனால் அவனால் அது பகலா, காலையா அல்லது வாரத்தின் எந்த நாள் அது என்பது பற்றியோ அல்லது அது எந்த நகரம் என்பதையோ அவனால் கணிக்க இயலவில்லை, இன்னும் ஜன்னல்களைக் காற்றும் மழையும் விளாசிக் கொண்டிருக்க. காலைப்பொழுது தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை, படுக்கையில் விழித்தபடி, எப்போதும் நேநா டாகொண்டேவை நினைத்துக் கொண்டே அவன் காத்திருந்தான். பிறகு அவன் முந்தைய நாள் போலவே அதே உணவகத்தில் காலை உணவு சாப்பிடச் சென்றான். அன்று வியாழக்கிழமை என்று அங்கே தெரிந்து கொண்டான். பிறகு அந்த மருத்துவமனையில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன, மற்றும் மழை நின்றிருந்தது. அதனால் அவன் பிரதான நுழைவாயிலின் வெளியே இருந்த அந்த செஸ்ட்நட் மரத்தின் அடிப்பாகத்தின் மீது சாய்ந்து கொண்டான். எங்கே டாக்டர்களும் நர்சுகளும் வெண்ணிற கோட்டுடன் உள்ளும் புறமும் நடந்தபடி இருந்தனரோ, அங்கே நேநா டாகொண்டேவை சேர்த்த அந்த ஆசிய டாக்டரை காணலாம் என்ற நம்பிக்கையுடன். அப்பொழுதும் மற்றும் மதிய உணவிற்குப் பிறகும் அவன் அவரைக் காணவில்லை. மேலும் அவன் வெளியே நின்று குளிரில் உறைந்து கொண்டிருந்தால் அவனது கண் காணித்தலை முடித்துக் கொள்ள வேண்டிய தருணமாயிற்று. ஏழு மணிக்கு அவன் இன்னுமொரு லைட் காபியைக் குடித்து, கடினமாக வேக வைக்கப்பட்ட இரண்டு முட்டைகளைச் சாப்பிட்டான்இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் ஒரே மாதிரியான பொருட்களைச் சாப்பிட்ட பின்னர் காட்சிக் கவுண்ட்டரிலிருந்து விருப்பப்படி அவனாகவே எடுத்துக் கொண்டான். தூங்குவதற்காக ஹோட்டலுக்குச் சென்ற போது அந்தத் தெருவின் ஒரு பகுதியில், மற்ற கார்கள் யாவும் எதிர்த்திசையில் நிறுத்தப் பட்டிருக்க, அவனுடைய காரின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஒரு அபராதச் சீட்டுடன் அவனது கார் தனியே இருப்பதைக் கண்டான். ஒற்றைப்படை எண் நாட்களில் ஒற்றைப்படை எண் பகுதியில் நிறுத்தலாம் என்றும், இரட்டைப் படை எண் நாட்களில் மற்றொரு பகுதியில் நிறுத்தலாம் என்பதை அவனுக்கு விளக்குவது ஹோட்டல் நிக்கோலின் அந்த சுமை தூக்கும் கூலிக்
ு ஒரு சிரமமான காரியமாக இருந்தது. அப்பேர்ப்பட்ட பகுத்தறிவுத்தனமான யுக்திகள் சீரிய பிறப்பில் வந்த சான்ஷெஸ் டி அவிலாவுக்கு புரிந்து கொள்ள இயலாதவையாக இருந்தன. ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்பாக அந்த துணிகரமிகுந்த போலீஸ்காரர்கள் அருகில் நின்றிருக்க
, மேயரின் அலுவலகக் காரை ஏறக்குறைய அருகில் இருந்த திரைப்பட அரங்கினுள் ஓட்டிச் சென்று முழுநாசம் உண்டாக்கியிருந்தான். அந்தக் கூலி அவனை அபராதப்பணம் செலுத்த அறிவுறுத்திய போதும், அந்தக் குறிப்பிட்ட மணி நேரத்தில் காரை நகர்த்த வேண்டாம் என்று சொன்ன போதும்காரணம் அவன் அதை மறுபடியும் நள்ளிரவில்தான் நகர்த்த முடியும் என்பதையும்இன்னமும் குறைவாகத்தான் புரிந்து கொண்டான். உறங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த போது, முதன் முறையாக நேநா டாகொண்டே பற்றி மட்டுமல்லாது, கரீபியனின் கார்த்தஜீனாவில் பொதுச் சந்தையில் இருந்த உற்சாக மதுபானக் கடைகளில் வேதனை தந்த அவனது இரவுகள் பற்றியும் நினைத்தான். அரூபாவிலிருந்து வந்த பாய்மரங்கள் கொண்ட மரக்கலங்கள் நங்கூரமிட்ட அந்த கப்பல் துறைக்குள் இருந்த உணவகங்களில் தேங்காய் சாதம் மற்றும் வறுக்கப்பட்ட மீன் ருசியையும் அவன் நினைவு கூர்ந்தான். காட்டு பான்ஸி மலர்ச் செடிகள் நிறைந்த தனது வீட்டின் அந்த சுவர்களை, அங்கே முந்தைய இரவில் 7 மணியே ஆகியிருக்கும்அவன் வீடு, மேலும் மேல் மாடியின் குளிர்ச்சியில், பட்டு பைஜாமாவில் அவன் தந்தை செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பதையும் நினைவில் கண்டான் அவன்.

அவன் தன் அம்மாவை நினைத்துக் கொண்டான் எவருக்குமே அவள் எங்கே இருப்பாள் என்று தெரியாதிருந்தது, என்ன சமயமாக இருந்த போதிலும்அவனது விரும்பத்தகுந்த, வாயாடித் தாயார் இரவு வேளையில் காதுக்குப் பின்னால் ஒரு ரோஜாவுடனும், மூச்சுத்திணற அடிக்கும் உஷ்ணமான அந்த சுமையான, மிகச் சிறப்பாக நெய்யப்பட்ட துணியில் ஒரு ஞாயிற்றக் கிழமைக்கான உடையில் புழுங்கியபடி அவனுக்கு ஏழு வயதாகியிருக்கும் போது, ஒரு மதியம், அவன் கதவைத் தட்டாமல் அவளறைக்குச் சென்றிருந்தான், பிறகு அவளது அவ்வப்போதான காதலர்களில் ஒருவனுடன் நிர்வாணமாய் அவளைப் படுக்கையில் கண்டான். இருவருமே சுட்டிக்காட்டிப் பேசாதிருந்த, அந்த விரும்பத்தகாத விபத்து, அன்பை விட உபயோகமானதாய், உடந்தைத்தனமான ஒரு உறவை அவர்களுக்கிடையில் நிறுவியது. ஆனால் அவன் அது பற்றியோ, அல்லது ஒற்றைக் குழந்தைக்கான அவனது தனிமையால் ஏற்பட்ட பல பயங்கரங்கள் பற்றியோ உணர்வில்லாதிருந்தான். ஒரு துயரார்ந்த பாரீஸ் நகர அட்டாளி அறையில் அவனை அந்த இரவு படுக்கையில் தள்ளி வீசியிருப்பதை கண்டு, அவன் வருத்தங்களைச் சொல்வதற்கு யாருமின்றி, தன் மீதே கொண்ட ஆக்ரோஷ கோபத்தில், அழ வேண்டும் என்ற இச்சையை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

அது ஒரு நன்மை பயக்கும் தூக்கமின்மை. வெள்ளியன்று படுக்கையை விட்டு எழுந்து, அவன் கழித்திருந்த அந்த மோசமான இரவினால் புண்படுத்தப்பட்டு, ஆனால் தன் வாழ்வுக்கு ஒரு வரையறை தர தீர்மானமாக இருந்தான். அவர்களது பெரும்பான்மை பணமும், விலாசப் புத்தகமும் ஒரு வேளை பாரிஸில் அவர்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவரின் எண்ணை அவன் கண்டு பிடித்திருக்கலாம்þசாவிகள் எல்லாம் நேநா டாகொண்டேவின் பையில் இருந்ததால் இறுதியில் அவன் தன் பெட்டியின் பூட்டை உடைக்கவும் பிறகு உடைமாற்றிக் கொள்ளவும் முடிவு செய்தான். வழக்கமாக சாப்பிடும் உணவகத்தில் அவன் பிரெஞ்சில் ‘ஹலோ’ சொல்லவும், பன்றிக் கொழுப்பு, இறைச்சிக்கு இடையே வைக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் இவைகளை கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் கற்றுக் கொண்டிருந்தான். இதை உணர்ந்து கொண்டவன், வெண்ணெயோ அல்லது எந்த வகை முட்டை வேண்டும் என்றோ கேட்க ஒருபோதும் இயலாது என்பதை அறிந்திருந்தான். ஏனெனில் அவன் வார்த்தைகளை உச்சரிக்க ஒருபோதும் கற்கவில்லை ஆனால் ரொட்டியுடன் எப்போதும் வெண்ணெய் பரிமாறப்பட்டது மேலும் கடினமாக வேக வைத்த முட்டைகள் அந்தக் கவுண்ட்டரில் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து அவன் அவைகளை கேட்க வேண்டிய அவசியம் இன்றி தானே எடுத்துக் கொள்ள முடிந்தது. அதற்கு மேலும், மூன்றாவது நாளின் போது, அந்தப் பணியாளர்கள் அவனை அடையாளம் கண்டு அவன் புரிந்து கொள்ளப்பட மேற்கொண்ட எல்லா முயற்சிகளின் போதும் அவனுக்கு உதவினர். பிறகு வெள்ளிக்கிழமை மதிய உணவு வேளையில் அவனை சரியாக இருத்திக் கொள்ள முயன்றபோது, எலும்புகள் அகற்றிய கன்றிறைச்சியுடன் வறுத்த உருளைக் கிழங்குகள், மற்றும் ஒரு குவளை ஒயின் ஆகியவற்றுக்கு ஆர்டர் செய்தான். அவ்வளவு சௌகரியமாய் உணர்ந்தவன், மேலும் ஒரு பாட்டிலுக்கு ஆர்டர் செய்து அதில் பாதியைக் குடித்த பிறகு, திடமான தீர்மானத்துடன் அந்தத் தெருவைக் கடந்து மருத்துமனைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தான். நேநா டாகொண்டேவை எங்கே பார்ப்பதென்று அவன் அறியவில்லை, ஆனால் அவன் நினைவில் அந்த ஆசிய டாக்டரின் தெய்வாதீனமான உருவம் நிலை பெற்றிருந்தது, மேலும் அவரைக் கண்டுபிடித்துவிட முடியும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அந்தப் பொதுக் கதவு வழியாக உள்ளே செல்லாமல், மாறாக, சற்று குறைவான கவனத்துடன் கண்காணிக்கப்பட
டதாக அவனுக்குத் தோன்றிய அந்த அவசர சிகிச்சை பிரிவு நுழைவாயிலை உபயோகித்தான். ஆனால் நேநா டாகொண்டே விடை பெற கை அசைத்துச் சென்ற அந்த நடைகூடத்தை தாண்டிச் செல்ல இயலவில்லை. இரத்தத் தெறிப்புகளால் கறைபடிந்திருந்த தளர்ந்த ஆடையணிந்திருந்த ஒரு காவலன்
, அவன் நடந்து சென்ற போது ஏதோ கேட்டதை பில்லி சான்ஷெஸ் கவனிக்காமல் சென்றான். அந்த மனிதன் இவனை பின் தொடர்ந்தான் மீண்டும் அதே கேள்வியை திரும்பத் திரும்ப ஃபிரெஞ்சில் கேட்டவாறே. இறுதியில் அவ்வளவு வேகத்தில் இவன் கையைப் பற்றியதால் இவன் எதிர்பாராது நிறுத்தப்பட்டான். அவனை உதறித் தள்ள முயன்றான் பில்லி சான்ஷெஸ், ஒரு சங்கிலித் தாக்குதல் தந்திரத்துடன். பிறகு அந்த காவலர் பிரெஞ்சு மொழியில், மலங்கழிக்கும் தளமோவென இவன் தாயைப் பழித்துப் பேசி, சுற்றி வளைத்துக் கொண்ட ‘சுத்தியல் பிடியில்’ இவன் கையை தோள் வரையில் முறுக்கி, மறக்காமல் ஓராயிரம் முறை அவன் மலங்கழிக்க தளமான அவனது பரத்தை தாய் என்றவாறே இவனைக் கதவுவரை ஏறக்குறைய தூக்கிச் சென்று, வலியால் துடித்துக் கொண்டிருக்க, உருளை கிழங்குகள் அடைத்த ஒரு மூட்டையைப் போல தூக்கி வீசினான் அந்தத் தெருவின் நடுவில்.

அந்தப் பிற்பகல், அவன் பெற்ற தண்டனையால் வேதனை அடைந்து பில்லி சான்ஷெஸ் கொஞ்சம் முதிர்ந்த மனிதாக இருக்கத் தொடங்கினான். அரசு தூதுவரை நாடிச் செல்லலாம் என்று தீர்மானித்தான், நேநா டாகொண்டே அப்படித்தான் செய்திருந்திருப்பாள். அந்த ஹோட்டல் பணியாளன் சுமுகமற்ற தோற்றம் கொண்டிருப்பினும் மிகவும் உதவியாக இருந்தான். மொழிகள் குறித்த மிகுந்த பொறுமை கொண்டிருந்த அந்தப் பணியாளன் அந்த தூதரக அலுவலக எண், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிவற்றை தொலைபேசி புத்தகத்திலிருந்து கண்டு பிடித்து ஒரு அட்டையில் அவற்றை எழுதியும் கொடுத்தான். ஒரு சுமுகமான பெண் தொலை பேசியில் பதிலளித்தாள். அவளது நிதானமான, ஈர்ப்பில்லாத ‘ஆன்டஸ்’ சொற்களை உடனேயே அடையாளம் கண்டு கொண்டான். அவனது முழுப் பெயரையும் கூறி தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள ஆரம்பித்தான். நிச்சயமாய் அந்த இரண்டு சிறப்பான குடும்பங்கள் அந்தப் பெண்மணி கருத்தில் பதிந்திருக்கும், ஆனால் தொலைபேசியில் அந்தக் குரல் மாறவில்லை. மனப்பாடம் செய்து வைத்திருந்த தனது பாடத்தை அவள் ஒப்பித்ததை கேட்டான் அவன் மாண்புமிகு அரசு தூதுவர் அவரது அலுவலகத்தில் அந்தச் சமயத்தில் இல்லை, நாளை மறுநாள் வரை எதிர்பார்க்க முடியாது, ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முன் அனுமதியின்றி அவரைக் காண இயலாது , அதுவும் அசாதாரணமானஅவசர சூழ்நிலைகளில் மட்டுமே அவரைப் பார்க்க இயலும் என்று சொல்வதை கேட்டான். இந்த வழியிலும் நேநா டாகொண்டேவை பார்க்க முடியாது என்று பில்லி சான்ஷெஸ் அறிந்து கொண்டான். பிறகு அந்த செய்தியை எப்படி மனதுக்கினிய வகையில் அவள் கொடுத்தாளோ அதே உணர்வுடன் அவன் அவளுக்கு நன்றி கூறினான்.

பாரீஸின் மிக அமைதியான மாவட்டங்களில் ஒன்றில், பில்லி சான்ஷெஸை ஈர்த்த ஒரே இடமான 22ரூ த ஷேம்ப்ஸ் எலிஸீஸ் இல், பல வருடங்களுக்குப் பிறகு என்னிடம் அவனே கார்த்தஜீன டி இன்டியாஸ் இல் கூறியது போல, அவனது வருகைக்குப் பின்னர் முதன் முறையாக சூரிய ஒளி கரீபியனில் இருப்பது போலப் பிரகாசமாக இருந்தது. மற்றும் அந்த ஈஃபில் டவர், பிரகாசமான வானின் குறுக்கே, அந்த நகரத்தின் மேலே உயர்ந்து நின்றது. அரசு தூதுவரின் சார்பாக அவனை அழைத்துப் பேசிய அந்த அதிகாரி ஏதோ ஊறு விளைவிக்கவிருந்த நோயிலிருந்து சமீபத்தில்தான் மீண்டு வந்தவரைப் போல் தோற்றமளித்தார்அவரது கறுப்பு காற்சட்டை, கோட்டினால் மட்டுமல்லாது, உறுத்தலான காலர், துக்கம் அனுஷ்டிக்கும் டையும் மட்டுமின்றி, அவரது விவேகமான அங்க அசைவுகளும், குரலும் அமைதிப்படுத்துவதான தன்மையும் சேர்த்து. பில்லி சான்ஷெஸின் அக்கறையை அவர் புரிந்து கொண்டார். ஆனால் அவனது பகுத்தறியும் உசிதங்கள் எதையும் இழந்துவிடாமல் காட்டுமிராண்டி அமெரிக்காக்களுக்கு முரணாக அங்கே அவர்கள் உள்ளே நுழைவதற்கு ஒருவர் செய்ய வேண்டிய தெல்லாம் மருத்துவ விடுதியின் வாயில் காவலருக்கு லஞ்சம் தருவதொன்றேஇங்கே ஒரு நாகரிகமடைந்த நாட்டில் இருப்பதாகவும் அதன் கடுமையான வரையறைகள் மிகவும் புராதனமான, கற்றறிந்த அடிப்படைகள் மீது கண்டறியப்பட்டன என்றும் அவனுக்கு நினைவு படுத்தினார். ‘‘இல்லை, அன்புச் சிறுவனே” அவர் சொன்னார். காரணத்தின் ஒழுங்குக்கு அவன் தன்னை உட்படுத்திக் கொண்டு செவ்வாய்க் கிழமை வரை காத்திருப்பது மாத்திரமே அவனது ஒரே ஒரு புகலிடம்.

‘‘போகட்டும், இன்னும் நான்கு நாட்கள் தானே இருக்கின்றன” அவர் முடித்தார். ‘‘அதற்குள்ளாக லூவர் மியூசியத்துக்குப் போ. பார்க்கவேண்டிய இடம் அது.”

வெளியே வந்தவன், ‘பிளேஸ் த லா கன்கார்ட் இல் தான் இருப்பதைக் கண்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. ஈஃபில் டவரை அந்த மேற் கூரைக்கும் மேலே கண்டான். பிறகு அது மிகவும் அருகில் இருப்பதாகத் தோன்றியது. அதனால் கப்பல்துறை வழியாக அங்கு நடந்து செல்ல முயன்றான். ஆனால் உடனே உணர்ந்து கொண்டான் அது தோன்றிய தொலைவை விட இன்னும் கூடுதல் தொலைவில் உள்ளது என்றும், மேலும் அவன் அதைத் தேடும் சமயத்தில் அது தன் இருப்பு நிலையை மாற்றிக் கொண்டே இருந்தது என்றும். அதனால் அவன் நேநா டாகொண்டேவை பற்றி நினைத்தபடி அந்த ‘சியென்’ சாலையில் ஒரு நீண்ட கல் இருக்கையில் அமர்ந்தான். அவனுக்கு படகுகள் போலன்றி அலைந்து திரியும் வீடுகள் போல காட்சியளித்த அந்த சிறு நீராவிப்படகுகள் சிவப்புக் கூரைகள், மற்றும் ஜன்னல்களில் பூந்தொட்டிகள், தளம் குறுக்கே துணிக் கம்பி வரிசைகளுடன், பாலங்களுக்கு அடியில் கடந்து செல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தான். அசைவற்ற மீன்பிடி கோல், அசைவற்ற மீன் தூண்டில் நரம்புடன் அசைவற்றிருந்த ஒரு மீனவனை பார்த்தான். ஏதாவது அசையக் காத்திருந்த களைத்துப் போனான், இருட்டத் தொடங்கும் வரையிலும். பிறகு ஒரு டாக்ஸி பிடித்து ஹோட்டலுக்குச் செல்லத் தீர்மானித்தான். அப்போதுதான் பாரீஸின் எந்த இடத்தில் அந்த மருத்துவமனை இருக்கிறது என்று தனக்குத் தெரியாமல் இருப்பதையும், அதன் பெயர் அல்லது விலாசம் தெரியாது என்பதையும் உணர்ந்தான்.

பெரும் பீதி மற்றும் மழுங்கடிக்கப்பட்ட உணர்வுடன் அவன் கண்ணில் பட்ட முதல் உணவகத்திற்கு சென்று உயர்ரக ‘கான்யாக்’ பிராந்தி கேட்டு, பிறகு அவன் எண்ணங்களை ஒரு சீராக வைத்துக் கொள்ள முயன்றான். அவன் சிந்தனை செய்து கொண்டிருந்த போது பல்வேறு கோணங்களில், சுவர்களில் இருந்த எண்ணற்ற கண்ணாடிகளில் அவன் திரும்பத் திரும்பத் தோன்றுவதைக் கண்டவன், தான் தனிமையாகவும், பயந்துபோயும் இருப்பதைக் கண்டான். மேலும் அவன் பிறந்ததிலிருந்து முதன் முறையாக இறப்பின் நிதர்சனத்தை பற்றி எண்ணினான். ஆனால் இரண்டாவது கோப்பை பிராந்தியுடன் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தான், மற்றும் அந்த தூதரக அலுவலகத்திற்குச் திரும்பிச் செல்வதற்கான தெய்வாதீனமான உத்தேசம் வந்தது. அவன் பாக்கெட்டுக்குள் விலாசத்துடன் இருந்த அந்த அட்டையை பார்த்தான், பிறகு மறு பக்கத்தில் அந்த ஹோட்டலின் பெயர் மற்றும் தெரு எண் ஆகியவை அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டு பிடித்தான். அந்த அனுபவத்தினால் உலுக்கப்பட்டவனாக அந்த வார இறுதி முழுவதும் சாப்பிடுவதற்கும், ஒரு புறமிருந்து மறு புறத்திற்கு காரை நகர்த்தி நிறுத்துவதற்கும் தவிர அவன் அறையை விட்டு வெளியே செல்லவே இல்லை. அவர்கள் அங்கு வந்து சேர்ந்த காலையில் பெய்தது போலவே மோசமான மழை மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இதுவரையில் முழுமையாக ஒரு புத்தகமும் படித்திராத பில்லி சான்ஷெஸ் படுக்கையில் படுத்துக் கொண்டு, சலிப்பு உணர்விலிருந்து அவனை தற்காத்துக் கொள்ள அப்போது ஒரு புத்தகம் இருந்தால் தேவலாம் என்று விரும்பினான். ஆனால் அவன் மனைவியின் பெட்டிகளில் அவன் கண்டவை எல்லாம் ஸ்பானிய மொழி தவிர ஏனைய மொழிகளில் இருந்தவையே. ஆக, செவ்வாய்க் கிழமைக்காக காத்திருந்தான், சுவர்க் காகிதங்களில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்த மயில்கள் பற்றி சிந்தித்துக் கொண்டும் மற்றும் எப்போதும் நேநா டாகொண்டே பற்றி எண்ணிக்கொண்டும். திங்களன்று, அந்த அறையைச் சீராக்கினான். அந்த நிலையில் அதைக் கண்டால் அவள் என்ன சொல்லக் கூடும் என்று வியந்தான். அப்பொழுதுதான் அந்த மின்க் கோட், காய்ந்த இரத்தக்கறையுடன் இருப்பதைக் கண்டு பிடித்தான். அவளுடைய ஓரிரவுக்கான பொருட்கள் வைக்கும் பையில் இருந்த வாசனை சோப்பால் அதைச் சுத்தம் செய்வதில் அந்தப் பகல் முழுவதையும் செலவழித்தான். மாட்ரிடில், முன்பு விமானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அது இருந்த நிலைக்கு அதனை மீட்டுக் கொண்டு வந்தான் வெற்றிகரமாக.

செவ்வாய் விடிந்தது மேகமூட்டத்துடனும், சில்லிடும் குளிருடனும், ஆனால் மழையின்றி. ஆறுமணிக்கு விழித்தெழுந்த பில்லி சான்ஷெஸ், நோயாளிகளுக்கு பூங்கொத்துகளும் பரிசுப் பொருட்களும் கொணர்ந்த உறவினர்கள் கூட்டத்துடன் மருத்துவமனையின் நுழைவாயிலில் காத்திருந்தான். கூட்டத்துடன் உள்ளே சென்றான், தன் கை மேல் இருந்த அந்த மின்க் கோட்டை எடுத்துக் கொண்டு, எந்த ஒரு கேள்வியும் கேட்காது, நேநா டாகொண்டே எங்கிருக்க முடியும் என்ற எந்த ஒரு கருத்தும் இன்றி, ஆனால் அந்த ஆசிய டாக்டரை சந்திக்கலாம் என்ற நிச்சயத்துடன். ஒரு மிக விஸ்தாரமான உட்புறமுற்றத்தின் ஊடாகபூக்கள் மற்றும் காட்டுப் பறவைகளுடன்அதன் இருபுறமும், வார்டுகள் இருந்தன. பெண்களுக்கு வலது புறமும் ஆண்களுக்கு இடது புறமும். மற்ற பார்வையாளர்களைப் பின் தொடர்ந்து பெண்களுக்கான பகுதியில் நுழைந்தான். ஜன்னல்களின் பெரும் வெளிச்சத்தினால் ஒளியூட்டப்பட்டிருந்த அவரவரது படுக்கையில் மருத்துவ சீருடையில் அமர்ந்திருந்த பெண் நோயாளிகளின் நீண்ட வரிசையைக் கண்டான் மற்றும் வெளியிலிருந்து கற்பனை செய்திருக்க முடிந்ததை விட அதெல்லாம் கூடுதல் சந்தோஷத்துடன் இருந்ததைப் பற்றியும் கூட அவன் நினைத்தான். அந்த நடைகூடத்தின் இறுதியை எட்டியவன் அந்த நோயாளிகளில் நேநா டாகொண்டே இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்ட பின் திரும்பி நடந்தான். பிறகு, அந்த வெளிப்புற அரங்கைச் சுற்றி நடந்தான் அவன் தேடிக் கொண்டிருந்த டாக்டரை அடையாளம் கண்டுவிட்டதாக தோன்றும் வரை, ஆண்கள் பகுதியின் ஜன்னல்கள் ஊடே நோக்கியபடி.

நிஜத்தில் அவன் கண்டிருந்தான். அந்த டாக்டர் ஒரு நோயாளியை, மற்ற சில டாக்டர்கள் மற்றும் நர்சுகளுடனும் பரிசோதித்துக் கொண்டிருந்தார். பில்லி அந்த பகுதிக்குள் சென்றான், அந்த கூட்டத் தினின்று நர்சுகளில் ஒருத்தியை விலக்கிவிட்டு, அந்த நோயாளி மேல் குனிந்திருந்த அவரை நோக்கியவாறு நின்றான். அவன் அவரிடம் பேசினான். டாக்டர் தன் சோகம் கப்பிய கண்களை உயர்த்திப் பார்த்து, ஒரு நொடி யோசித்து, பிறகு அவனை அடையாளம் கண்டு கொண்டார்.

‘‘ஆனால் எங்கே போய்த் தொலைந்தாய் நீ?” அவர் கேட்டார்.

பில்லி சான்ஷெஸ் குழப்பமடைந்தான்.

‘‘அந்த ஹோட்டலில்”, அவன் சொன்னான். ‘‘இதோ இங்கேதான், அந்த திருப்பத்தில்.”

பிறகு அவன் தெரிந்து கொண்டான். அந்த வியாழக்கிழமை மாலை 7 மணி 10 நிமிடத்திற்கு, ஜனவரி ஒன்பதாம் தேதி, ஃபிரான்சின் மிகத் தேர்ச்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களின் அறுபது மணிநேர முயற்சிகள் தோற்றுப் போக, நேநா டாகொண்டே ரத்தம் வருவது நிற்காமல் இறந்து விட்டிருந்தாள். கடைசிவரை தெளிவுடனும், அமைதியுடனும் இருந்திருக்கிறாள் அவள். அவளும் பில்லி சான்ஷெஸும் முன்பதிவு செய்து கொண்டிருந்த ‘ஏதென்னே பிளாசாவில்’ அவள் கணவனை தேடுவதற்கு அவர்களுக்கு அறிவுரைகள் கொடுத்தபடி, மேலும் அவள் பெற்றோரை தொடர்பு கொள்ள தேவையான தகவல்களை அவர்களுக்குத் தந்து கொண்டும். ஏற்கனவே நேநா டாகொண்டேவின் பெற்றோர் பாரீஸுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த பொழுதில், வெள்ளிக் கிழமை அந்த அயல் நாட்டு அலுவலகத்தில் ஒரு துரிதமான தகவல் தரப்பட்டிருந்தது. அந்த அரசு தூதுவர் தாமே, பிணத்தை நறுமண மூட்டிப் பாதுகாத்து வைப்பதிலும் பிறகு இறுதி யாத்திரை போன்றவை சம்பந்தப்பட்ட சடங்குகளிலும் அதிகார எல்லைக்குள் பாரீசின் போலீஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டு பில்லி சான்ஷெஸை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். அவனை வர்ணித்த ஒரு நெருக்கடி நிலை அதிகார அறிக்கை வெள்ளிக் கிழமையிலிருந்து ஞாயிறு மதியம் வரை வானொலி வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் ஒலிபரப்பப்பட்டது மேலும் அந்த நாற்பது மணி நேரமும் பிரான்ஸில் மிகவும் தேவைப்பட்ட மனிதனாக இருந்தான் அவன். நேநா டா கொண்டேவின் கைப்பையில் கண்டெடுக்கப்பட்ட அவனது புகைப்படம் எல்லா இடத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டது. மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி பெற்ற ஒரே மாதிரியான மூன்று பென்ட்லி கார்கள் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் அவற்றில் ஒன்றுகூட அவனுடையதில்லை.

சனிக்கிழமை மதியம் நேநா டாகொண்டேவின் பெற்றோர் வந்து சேர்ந்திருந்தனர். பிறகு அந்த மருத்துவமனை தேவாலயத்தில் அந்த உடலருகே அமர்ந்தனர், கடைசி நிமிடம் வரை பில்லி சான்ஷெஸ் கண்டுபிடிக்கப்படுவான் என்ற நம்பிக்கையுடன். அவனது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பாரீஸுக்கு விமானத்தில் புறப்படத் தயாராக இருந்தனர், ஆனால் கடைசியில் தந்திகளில் ஏற்பட்ட ஏதோ சில குழப்பங்களால் அவர்கள் புறப்படவில்லை. இருநூறு மீட்டரே தள்ளியிருந்த, அந்தத் தரம் குறைந்த ஹோட்டலின் அறையில், நேநா டா கொண்டேவின் காதலுக்கான தனிமை தந்த மன வேதனைகளுடன் பில்லி சான்ஷெஸ் கிடந்திருந்தபோது, ஞாயிறு பிற்பகல் இரண்டு மணிக்கு இறுதிச் சடங்கு நடந்தது. அந்த தூதரக அலுவலகத்தில் அவனை வரவேற்ற அதிகாரி பல வருடங்கள் கழித்து, அந்த அயல் நாட்டு அலுவலகத்திலிருந்து வந்திருந்த தந்தியை, பில்லி சான்ஷெஸ் அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறிய ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அவர் பெற்றுக் கொண்டதையும், பிறகு அவனைத் தேடும் பொருட்டு ‘ரூ த ஃபார்பக் செயின்ட் ஹானர்’ வழியெங்கும் உள்ள மது, உணவு அருந்தும் கடைகளுக்குச் சென்றதையும் என்னிடம் கூறினார். கடற் பிரதேசத்து பையன் ஒருவன், அனுகூலமான, சிறப்பு மிக்க ஒரு தோற்றம் கொண்டிருக்க வேண்டியவன், பாரீஸின் புதுமையில் தாக்கப்பட்டு இப்படி தகுதிக்கு ஒவ்வாத ‘ஷெர்லிங்’ கோட் அணிந்திருந்த ஒருவன் அவ்வளவு பெருமை மிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்தவனாக இருக்க முடியுமா என்று கற்பனை செய்ய முடியாமலிருந்ததை என்னிடம் ஒப்புக் கொண்டார்.

ஆத்திரத்துடன் அழவேண்டும் என்றெழுந்த ஆசையை அவன் அடக்கிக் கொண்ட அன்றிரவு, நேநா டாகொண்டேவின் பெற்றோர் அந்த தேடுதலை நிறுத்திவிட்டு, ஒரு உலோகச் சவப்பெட்டியில் நறுமணமூட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டிருந்த உடலைக்கொண்டு சென்றனர், மற்றும் அதைக் கண்டவர்கள், இப்படி ஒரு அதீத அழகிய பெண்ணை, இறந்தோ உயிருடனோ ஒரு போதும் பார்த்திருக்கவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறினர். செவ்வாய்க்கிழமை காலை பில்லி சான்ஷெஸ் கடைசியாக அந்த மருத்துமனைக்குள் நுழைந்த போது, அந்த சவ அடக்கம் ஏற்கனவே முடிந்திருந்தது, அந்த துக்கமான ‘லா மாங்கா’ கல்லறையில்எந்த வீட்டில் அவர்களது சந்தோஷங்களின் முதல் திறவு கோல்களைக் கொண்டு திறந்து விடுவித்திருந்தனரோ அந்த இடத்திலிருந்து ஒரு சில மீட்டர் தள்ளி. அந்தத் துயரத்தை பில்லி சான்ஷெஸிடம் கூறிய அந்த ஆசிய டாக்டர் அந்த மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் அவனுக்கு அமைதி தரும் தூக்க மருந்துகள் சில தர விரும்பினார். ஆனால் அவன் மறுத்துவிட்டான். போய் வருகிறேன் என்று சொல்லாமல் பில்லி சான்ஷெஸ் புறப்பட்டான். நன்றி என கூறுவதற்கு ஏதுமின்றி, அவனது தனிப்பட்ட துரதிர்ஷ்டத்தை பழிவாங்கும் பொருட்டு பெரும் அவசரத்துடன் யாராவது ஒருவரைக் கண்டுபிடித்து, மூளை தெறித்து வெளியேறும்படி, சங்கிலியால் அடித்து நொறுக்க மட்டுமே அவன் யோசனை கொண்டிருந்தான். அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறியபோது, புறாக்களின் மென்மயிர் போர்த்திய இறகுகள் போன்ற பனி, மென்மையான பளீரென்று சிறு துணுக்குகளாக, இரத்தச் சுவடு ஏதுமின்றி வானத்தினின்றும் வீழ்ந்து கொண்டிருந்ததை அவன் உணரவில்லை, மற்றும் பத்து வருடங்களில் அதுதான் பெரிய, முதல் பனிவீழ்வு என்பதால் பாரீஸ் நகர தெருக்களில் விழாக்கால தோற்றமிருந்ததையும் கூட.

358

The Trail of Your Blood in the Snow, from Strange Pilgrims (Jonathan Cape, London: 1993) by Gabriel Garcia Marques, translated from the Spanish by Edith Grossman

மரணமும் காம்பஸ் கருவியும்- ஜோர்ஜ் லூயி போர்ஹே-Death and the Compass-Borges

deathnthecompassjlb1மரணமும் காம்பஸ் கருவியும்

ஜோர்ஜ் லூயி போர்ஹே

-1942-

To Mandie Molina Vedia

எரிக் லோன்ராட்டின் மடத்துணிவான சிந்தனையை வருத்திய பல பிரச்சினைகளுள், இடைவெளி விட்டு தொடர்ச்சியாக நடைபெற்று Trist – le – Roy பங்களாவில் இடைவிடாமல் வீசிய யூகாப்லிப்டஸ் மர வாசனைக்கு இடையில் உச்சகட்டத்தை எட்டிய ரத்தக்களரியான கொலைகளின்தொடர்ச்சி மிக விநோதமானது–கிரமமான விநோதமென்று சொல்லலாம்தான். ஆனால் அவன் அதை முன் கூட்டியே யூகித்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. கடைசிக் கொலையைத் தடுக்கத் தவறிவிட்டான் என்பது உண்மைதான். யார்மோலின்ஸ்கியின் அதிர்ஷ்டமற்ற கொலையாளின்அடையாளத்தை யூகிக்கத் தவறினான். ஆனால் தீவினைமிக்க நிகழ்ச்சித் தொடர்ச்சிகளின் மர்மமான

வடிவமைப்பையும், Scharlach the Dandy-என்ற பட்டப்பெயர் கொண்ட சிவப்பு ஸ்கார்லாக் என்பவன் அவற்றில் ஆற்றிய பங்குகளைப் பற்றியும் அவன் யூகித்துத்தான் இருந்தான். இந்த அடியாள் தலைவன் (அவனது மரபில் வந்த பலரைப் போல) எரிக் லோன்ராட்டை பிடிக்காமல் விடுவதில்லை என்று தன் கௌரவத்தின் மீது சூளுரைத்த போதிலும் லோன்ராட் இதனால் பயமுறுத்தப்படவில்லை. தன்னை ஒரு தூய தர்க்கவியலாளனாகக் கருதினான் லோன்ராட், ஒரு விதமான Auguste Dupin போல, ஆனால் அவனிடத்தில் ஒரு சாகசக்காரனின் தன்மையும், சூதாட்டக்காரனின் அம்சமும் இருந்தன.

அதன் பரந்த நீர்கள் மணலின் நிறத்தைப் போலிருக்கும் கழிமுகத்தை ஆதிக்கங்கொண்டிருந்த, உயர்ந்த முப்பட்டைக் கண்ணாடி போலிருந்த Hotel du Nord என்ற இடத்தில் முதல் கொலை நடந்தது(அது ஒரு வெறுக்கத்தகுந்த மருத்துவமனையின் வெற்றுச் சுவர்களையும், எண்ணிக்கை இடப்பட்ட அறைகளைக் கொண்ட சிறையைப் பற்றிய உணர்வையும், வேசிகள் இல்லத்தினைப் போன்ற பொதுவான தோற்றத்தையும் கொண்டதென்று அனைவரும் அறிவர்). டிசம்பர் மாதம் 3ஆம் தேதி, நரைத்த தாடியும், சாம்பல் நிறக்கண்களும் கொண்ட யூத அறிஞர் மார்செல் யார்மோ லின்ஸ்கி அந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார். மூன்றாவது Talmudic கருத்தரங்கத்திற்கு Podolsk பிரதேசத்திலிருந்து பிரதிநிதியாக அவர் வந்திருந்தார். ஹோட்டல் து நார்ட் அவருக்குப் பிடித்திருந்ததா என்று நாம் என்றுமே அறியப் போவதில்லை. கார்ப்பதியன் பிரதேசத்தில் நடந்த மூன்று வருடப் போரினையும், மூவாயிரம் வருட ஒடுக்கு முறையையும் யூதர்களை ஒழித்துக் கட்டுவதற்கான சதிகளையும் கடந்து வந்திருந்த ஒரு வித விருப்பு வெறுப்பற்ற, காலம்கடந்த மனநிலையுடன் அவர் அதை ஏற்றுக்கொண்டார். A என்ற தளத்தில் அவருக்கு ஒரு அறை கொடுக்கப்பட்டது. Galilee பிரதேசத்தின் நால்வர்தலைவர் தங்கியிருந்த பிரமாதமான அறைக்கு எதிர்த்தாற்போல் இவருடைய அறை இருந்தது.

யார்மோலின்ஸ்கி இரவு உணவருந்தினார். முன்பின் அறிமுகமில்லாதிருந்த அந்த நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதை அடுத்த நாளைக்குத் தள்ளிப் போட்டார். அவர் எழுதிய நிறைய நூல்களையும், சில உடையணிகளையும் அலமாரியில் அடுக்கி ஒழுங்கு செய்துவிட்டு, நடு இரவுக்கு முன்னால் இரவு விளக்கினை அணைத்தார்.(அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த

நால்வர்தலைவரின் காரோட்டி அப்படித்தான் கூறினான்) நான்காம் தேதி காலை 11.03 மணிக்கு, Judische Zeitung செய்தித்தாளின் ஆசிரியர் யூத அறிஞரை தொலைபேசியில் அழைத்தார். டாக்டர். ரபி மார்செல் யார்மோலின்ஸ்கி பதில் தரவில்லை. அதற்குப் பிறகு, அவருடைய அறையில், முகம் வெளிர்ந்து, அவரது பழைய பாணி தொளதொளத்த அங்கியில், முக்கால் பாகம் நிர்வாணமாய் அவர் கண்டு பிடிக்கப்பட்டார். ஹாலின் கதவுக்குப் பக்கத்தில் அவர் கிடந்தார். ஆழமான கத்திக்குத்து அவருடைய நெஞ்சினைப் பிளந்துவிட்டிருந்தது. சில மணிநேரம் கழித்து, அதே அறையில், பத்திரிக்கைச் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களின் கூட்டத்திற்கு மத்தியில் இன்ஸ்பெக்டர் ட்ரெவிரேனசும், லோன்ராட்டும் நடந்திருக்கும் விஷயம் பற்றி அமைதியாகத் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

ட்ரெவிரேனஸ் தனது ராஜரீகமான சுருட்டினைக் கையில் பிடித்தபடி “இங்கே மூன்று கால்களுடைய பூனைகளைத் தேடி நாம் காலத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார். நால்வர்தலைவரிடம் உலகத்தின் மிகச்சிறந்த ரத்தினங்கள் இருப்பது எல்லோரும் அறிந்ததே. அதைத் திருட வந்த எவரோ ஒருவர் இங்கே தவறுதலாக வந்திருக்கலாம். யார்மேலின்ஸ்கி விழித்துக் கொண்டார், திருடனுக்கு அவரைக் கொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. “இந்த விளக்கம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“சாத்தியம்தான், ஆனால் சுவாரசியமாக இல்லை” என்று பதில் அளித்தான் லோன்ராட். “– யதார்த்தம் என்பது சுவாரசியமானதாய் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்று நீங்கள் கூறுவீர்கள். அதற்கு அப்படி இருக்க வேண்டிய கடப்பாட்டை யதார்த்தம் ஒதுக்கிக்கொள்ளலாம். ஆனால் அது நம்மால் முடியாது. உங்களுடைய கருதுகோளின்படி, சந்தர்ப்பம் இதில் பெரிய பங்கு வகிக்கிறது. இதோ இங்கே ஒரு இறந்த ரபி. எனவே யூதகுருமார்களின் தன்மையைக் கொண்ட விளக்கமே நான் விரும்புவது. ஒரு கற்பனையான நகைத் திருடனின் கற்பனை செய்யப்பட்ட தவறுகள் அல்ல.”

“எனக்கு யூதகுருமார்கள் தன்மையான விளக்கங்களில் ஈடுபாடு இல்லை” என சற்று காட்டமாகப் பதில் சொன்னார் ட்ரெவிரேனஸ்; இந்த முன்பின் தெரியாத நபரைக் கொலை செய்தவரைக் கண்டுபிடிப்பதில்தான் என் ஈடுபாடெல்லாம் இருக்கிறது.”

“அவ்வளவு முன்பின் தெரியாத யாரோ ஒன்றும் அல்ல” திருத்தினான் லோன்ராட்“இதோ இங்கே இருக்கிறது அவர் எழுதிய அனைத்துப் புத்தகங்களும்.” அலமாரியின் அறைகளில் வரிசையாக அடுக்கப்பட்ட உயரமான புத்தகங்களைச் சுட்டிக் காட்டினான். Vindication of the Kabbalah, Study of the philosophy of Robert Fludd ஆகிய நூல்கள் இருந்தன. பால் ஷெம் பற்றிய ஒரு வாழ்க்கைச் சரிதமும், ஸெபிர் எஸிரா நூலின் மொழிபெயர்ப்பும், History of the Hasidic Sect என்ற நூலும், ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட டெட்ராகிரமட்டான் பற்றிய ஆய்வுக்கட்டுரையும், Pentateuch இல் கடவுளின் நாமங்களைப் பற்றிய கட்டுரைப்புத்தகமும் இருந்தது. ஒருவிதமான பயத்துடனும், ஏன், அருவருப்புடனும் இன்ஸ்பெக்டர் அவற்றை நோக்கினார். பிறகு அவரிடமிருந்து ஒரு வெடிச் சிரிப்பு கிளம்பியது.

“நான் ஒரு சாதாரண கிறிஸ்துவன்” என்றார். “உனக்குப் பிடித்திருந்தால் இந்த ஊச வாடை அடிக்கிற எல்லாப் புத்தகங்களையும் எடுத்துச் செல்லலாம். யூதமூடநம்பிக்கைகளின் மீது வீணடிக்க என்னிடம் நேரமில்லை.”

“இந்தக் கொலைக் குற்றமே யூத மூடநம்பிக்கைகளின் வரலாற்றுக்குச் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்” என்று லோன்ராட் முனகினான்.

“கிறித்தவ மதத்தைப் போலவே” என்று தன்னை தைர்யப்படுத்திக் கொண்டு சொன்னார் Judische Zeitung பத்திரிக்கையின் ஆசிரியர். அவன் கிட்டப்பார்வை கொண்டவனாகவும், கடவுள் நம்பிக்கையற்றவனாகவும், கூச்ச சுபாவமுள்ளவனாகவும் இருந்தான்.

யாரும் அவனுக்குப் பதில் தரவில்லை.

அவனைப் பற்றி எவரும் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. யார்மோலின்ஸ்கி யின் சிறிய டைப்ரைட்டரில் கீழ் வரும் முடிக்கப்படாத வாசகம் எழுதப்பட்ட வெள்ளைத்தாள் இருந்ததை போலீஸ் துப்பறிவாளர்களில் ஒருவர் கண்டுபிடித்தார் :

பெயரின் முதல் எழுத்து உச்சரிக்கப்பட்டுவிட்டது.

லோன்ராட் புன்முறுவல் செய்வதைக் கட்டுபடுத்திக் கொண்டான். திடீரென புத்தக வெறியனாகவும் எபிரேயப் படிப்பாளியாகவும் மாறிய அவன், இறந்து போன மனிதனுடைய புத்தகங்களை அடுக்கிக் கட்டச் செய்து தனது இருப்பிடத்திற்குக் கொண்டு வருமாறு உத்தரவிட்டான். அங்கே, போலீஸ் விசாரணை குறித்த அக்கறையைப் புறந்தள்ளிவிட்டு புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்து போனான். Pious என்ற இனத்தவரின் ஸ்தாபகரான Israel Baal Shem Tobh இன் போதனைகளைக் கூறியது ஒரு பெரிய எண்மடி அளவு தொகுதி; மற்றொன்று டெட்ராகிரமட்டனின் மந்திரத்தையும் பயங்கரத்தையும் கூறியது. மூன்றாவது தொகுதி “கடவுளுக்கு ஒரு ரகசியப் பெயர் உண்டு, அதில் அவருடைய ஒன்பதாவது அம்சமான நித்தியத்துவத்தையுக் காணலாம்–அதாவது, சூரியனுக்குக் கீழிருக்கும் சகல விஷயங்களின் எதிர்காலம், நிகழ்காலம், கடந்தகாலம் பற்றிய உடனடி அறிவு பெறலாம் என்று கூறியது. (இந்த ரகசியப் பெயர் மேசிடோனியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டரின் படிகக் கோளத்தில் உள்ளது போன்றது என பாரசீகர்கள் கூறுவார்கள்.) பாரம்பரியம் கடவுளின் தொண்ணூற்று ஒன்பது பெயர்களை பட்டியலிடுகிறது ; எபிரேயப் அறிஞர்கள் அந்த முழுமையற்ற பூஜ்ஜியத்திற்கு இரட்டைப்படை எண்கள் பற்றிய இறையியல் தன்மையான பயத்தினால் விளக்கம் தருவார்கள்; ஹேசிடிக் இனத்தவர் இந்த விடுபடும் சொல் நூறாவது பெயரை, முழுமுற்றான பெயரைக் குறிக்கிறது என்று வாதிடுகிறார்கள்.

இந்த புத்தகப்புழுத்தன்மையான செயலில் இருந்து லோன்ராட் சில நாட்களுக்குப் பிறகு Judische Zeitung பத்திரிக்கையின் ஆசிரியரின் வருகையால் கவனம் சிதறினான். வந்தவர் கொலையைப் பற்றிப் பேச விரும்பினார். எனினும் லோன்ராட், கடவுளின் பல பெயர்களைப் பற்றிப் பேசவே விரும்பித் தேர்ந்தான். தலைமை உளவாளி எரிக்லோன்ராட் கொலையாளியின் பெயரைக் கண்டுபிடிக்கும் பொருட்டு கடவுளின் பெயர்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருக் கிறார் என்று அடுத்த நாள், மூன்று பத்திச் செய்தியில் ஆசிரியர் எழுதினார். பத்திரிக்கைத் துறையின் எளிமைப்படுத்தல்கள் பற்றி நன்கு தெரிந்திருந்த லோன்ராட் அது குறித்து வியப்படைய வில்லை. எவர் வேண்டுமானாலும் எந்த ஒரு புத்தகத்தையும் வாங்குவதற்கு விரும்புகிறார் என்பதைக் கண்டு பிடித்துக்கொண்ட வியாபாரி ஒருவர் யார்மோலின்ஸ்கியின் History of the Hasidic Sect புத்தகத்தின் மலிவுப் பிரதி ஒன்றினை விற்க ஆரம்பித்தார்.

நகரத்தின் மேற்கு விளிம்புகளில், யாருமற்ற வெற்றுப் பிரதேசத்தில் இரண்டாவது கொலை ஜனவரி மூன்றாம் தேதி இரவு நடந்தது. விடியற்காலை இந்த தனிமைப் பிரதேசத்தை குதிரை மீதமர்ந்து ரோந்து சுற்றும் போலீஸ்காரர்களில் ஒருவர் சீரழிந்த இரும்பு மற்றும் பெயிண்ட் கடையின் வாசல்படி நிழலில் நீண்ட அங்கி அணிந்த மனிதன் மல்லாக்காகக் கிடத்தப் பட்டிருப்பதை கவனித்தார். ஒரு ஆழமான கத்திக் குத்து அந்த மனிதனின் நெஞ்சை வெட்டிப் பிளந்திருந்தது. அவனது இறுகலான வடிவக் கூறுகள் ரத்தத்தினால் மூடப்பட்டது போல் இருந்தது. கடைசிச் சுவரின் சம்பிரதாய சிவப்பு மற்றும் மஞ்சள் சதுரங்களின் மீது சாக்கட்டி யினால் சில சொற்கள் கிறுக்கப்பட்டிருந்தன. ரோந்துப் போலீஸ்காரர் அதை வாய் விட்டுப் படித்தார். அன்று மாலை ட்ரெவிரேனசும் லோன்ராட்டும் நகரத்தின் வழியாக கொலை நடந்த தூரத்து இடத்தை அடைந்தனர். அவர்களுடைய காரின் இடது மற்றும் வலது பக்கங்களில் நகரம் கலைந்து சென்றது. வானம் அகன்று வீடுகள் குறைவாயின. இப்பொழுது அதிகம் தெரிந்தது செங்கல் சூளைகளும் ஒன்றிரண்டு பாப்லார் மரங்களும்தான். அவலமான அந்த இடத்தினை அடைந்தார்கள். கற்கள் பாவப்படாத குறுகிய சந்து. அஞகே இருபக்கமும் இருந்த ரோஜா நிறச் சுவர்கள் அதீதமான சூர்யாஸ்தமனத்தைப் பிரதிபலிப்பதாய்த் தோன்றியது. இறந்து போனவனின் அடையாளம் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. டேனியல் சைமன் அஸிவேடோ என்ற அவன், பழைய வடக்குப் பிரதேசங்களின் வெளிப்பகுதிகளில் ஓரளவு பெயர் பெற்றிருந்தான். வாகன ஓட்டியாகத் தொடங்கி அடியாள் கும்பலின் தலைவனாக இருந்து தேர்தல்களத்து குண்டனாக மாறி, பிறகு திருடனாகவும், காட்டிக் கொடுப்பவனாகவும் சீரழிந்தான். (அவன் சாவின் விநோதத்தன்மை அவற்றிற்கெல்லாம் பொருத்தமாகத்தான் இருந்தது. தேர்ந்த முறையில் கத்தியைப் பயன்படுத்தத் தெரிந்த குற்றவாளிகளின் தலைமுறையில் கடைசி பிரதிநிதியாகத் திகழ்ந்தான் அஸிவேடோ. ஆனால் அவனுக்கு ரிவால்வாரைப் பயன்படுத்தத் தெரியாது). சுவரின் மீது சாக்கட்டியால் கிறுக்கப்பட்டிருந்த சொற்கள் பின்வருமாறு :

பெயரின்இரண்டாவதுஎழுத்து உச்சரிக்கப்பட்டுவிட்டது.

மூன்றாவது கொலை பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி இரவு நடந்தது. ஒரு மணிக்கு சற்று முன்பாக இன்ஸ்பெக்டர் ட்ரெவரேனசின் அலுவலகத்தில் தொலைபேசி ஒலித்தது. அளப்பரிய ரகசியத் தன்மையுடன் அடித்தொண்டையில் பேசிய மனிதன் தன் பெயர் கின்ஸ்பெர்க்(அல்லது கின்ஸ்பர்க்)என்றும் ஒரு போதுமான அளவு சன்மானத்திற்காக அசிவேடோ மற்றும் யார்மேலின்ஸ்கி ஆகிய இருவரின் இரட்டைத் தியாகங்களைப் பற்றிய தகவல்களைத் தெளிவு படுத்துவதாகவும் கூறினான். விஸில்கள் மற்றும் வண்டி ஹாரன்களின் கலவை ஒலியில் காட்டிக் கொடுப்பவனின் குரல் அமிழ்ந்து போயிற்று. பிறகு தொலைபேசி துண்டிக்கப்பட்டது. அந்த சமயம் பண்டிகைக் களியாட்டக் காலத்தின் உச்சம் என்பதால் ஒரு ஏமாற்று விளையாட்டாக அது இருக்கக் கூடும் சாத்தியத்தையும் தவிர்க்காமல் ட்ரெவிரேனஸ் சோதித்தறிந்து ரூ த தோலான் தெருவில் இருந்த லிவர்பூல் நிலையம் என்ற பெயரிட்ட மாலுமிகளின் தங்கும் விடுதியில் இருந்து தனக்கு அந்த தொலைபேசிச் செய்தி வந்ததென்று தெரிந்து கொண்டார். நீர்முகத்துத் தெருவான அது, மேல் வளைவுகள் கொண்டது. அந்த அழுக்குச் சந்தில் ஒரே சமயத்தில் எதிரெதிரெ மெழுகுப் பொம்மை மியூசியத்தையும், பால் விற்பவனின் கடையையும், விலைமாதர் விடுதியையும் விவிலியப் புத்தகம் விற்பவர்களையும் நம்மால் பார்க்க முடியும். ட்ரெவிரேனஸ் அந்த விடுதியின் உரிமையாளரை தொலைபேசியில் கூப்பிட்டார். அந்த மனிதன் (அவனது பெயர் கறுப்பு ஃபின்னகன்–அவன் சீர்திருந்திய அயர்லாந்துக் குற்றவாளி; இப்போது கௌரவம், மதிப்பு போன்றவற்றால் ஒரேயடியாகக் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறான்.) தொலைபேசியைக் கடைசியாக உபயோகித்தது அவனது விடுதியின் அறை வாசியான கிரிஃபியஸ் என்கிற ஒருவன் என்றும் சில நிமிடங்களுக்கு முன்னர்தான் அவன் தன் நண்பர்களுடன் வெளியில் சென்றான் என்றும் தகவல் தெரிவித்தான். உடனடியாக ட்ரெவிரேனஸ் லிவர்பூல் நிலையத்திற்குக் கிளம்பினார். நிலையத்தின் உரிமையாளர் அவருக்கு கீழ்வரும் கதையை கூறினார்.

எட்டு நாட்களுக்கு முன் கிரிஃபியஸ், மதுவருந்தும் அறைக்கு மேலிருந்த ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டான். கூர்மையான தோற்றக்கூறுகளுடைய அவனுடைய தாடி பனி போன்ற நிறத்தில் இருந்தது. அவனுடைய கறுப்பு நிற உடைகளை சீரற்று அணிந்திருந்தான். வெளிப்படையாகவே அதிகமான ஒரு தொகையை வாடகையாக ஃபின்னகன் கேட்டிருக்கிறான். (அந்த அறையை ஃபின்னகன் எந்த விஷயத்துக்காக பயன்படுத்துகிறான் என்பதை உடனடியாக ட்ரேவரேனஸ் யூகித்துவிட்டார்.) கோரப்பட்ட அந்த தொகையை கிரிஃபியஸ் சிறிதும் தயங்காமல் அந்த இடத்திலேயே செலுத்திவிட்டான். வெளியே செல்லாமலே இருந்த அவன், அறையிலேயே மதிய மற்றும் இரவு உணவைச் சாப்பிட்டான். மதுவருந்தும் பொது அறையில் அவன் முகம் பரிச்சயமே இல்லாதிருந்தது. குறிப்பிட்ட அந்த இரவில், ஃபின்னகனின் அலுவலகத்தில் இருந்த தொலைபேசியைப் பயன்படுத்த கீழிறங்கி வந்திருக்கிறான்.

மூடப்பட்ட கூப்பேவண்டி ஒன்று வாசலில் வந்து நின்றது. வண்டி ஓட்டி, இருக்கையிலிருந்து எழவில்லை. சில வாடிக்கையாளர்கள் அவன் ஒரு கரடியின் முகமூடியை “அணிந்திருந்தான் என்று நினைவு கூர்ந்தனர். இரண்டு வேஷமிட்ட கோணங்கிகள் வண்டியிலிருந்து இறங்கி வந்தனர். அவர்கள் மிகக் குள்ளமான மனிதர்கள். அவர்கள் மிக மோசமான குடி போதையில் இருந்ததை யாரும் கவனிக்கத் தவறவில்லை. தங்கள் ஊதல்களை சத்தமாக ஊதிக்கொண்டு, ஃபின்னகனின் அலுவலகத்திற்குள் திடீரென பிரவேசித்து கிரிஃபியஸின் கழுத்தைச் சுற்றித் தங்கள் கைகளை போட்டுக் கொண்டார்கள். ஆனால் கிரிஃபியஸ் அவர்களை முன்பே அறிந்திருந்த போதிலும் அவர்களுடைய செய்கைக்கு எந்த வித எதிர்வினையும் காட்டவில்லை. சில வார்த்தைகளை எபிரேய மொழியில் மூவரும் பேசிக்கொண்டார்கள்–அவன் தாழ்வான, அடித்தொண்டையிலும், அவர்கள் உச்சஸ்தாயிக் குரல்களிலும். பிறகு மூவரும் படிகளில் ஏறி மாடி அறைக்குச் சென்றார்கள். கால் மணி நேரத்தில் மிகவும் சந்தோஷமாக மூவரும் கீழிறங்கி வந்தனர். அவர்கள் அளவுக்கே குடிபோதையில், கிரிஃபியஸ், இப்போது அந்த வேஷமிட்ட கோணங்கிகள் இருவருக்கு மத்தியில், மிக உயரமானவனாக, போதை உச்சத்தில் தடுமாறி நடந்து வந்தான். (மதுவருந்தும் பொது அறையில் இருந்த பெண்களில் ஒருத்தி அவர்கள் உடையில் காணப்பட்ட சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் சாய்சதுரங்களை நினைவு கூர்ந்தாள்). இரண்டு முறை அவன் தடுக்கி விழுந்தான். கோணங்கிகள் இரண்டு முறையும் அவனைத் தாங்கித் தூக்கிப் பிடித்தனர். அருகிலிருந்த கப்பல் துறைமுகத்திற்காய் கிளம்பிய அம்மூவரும் (அங்கே அப்பகுதி சாய்சதுர வடிவிலான நீர்ப்பகுதிகளை உள்ளடக்கி இருந்தது) வண்டியில் ஏறிக்கொண்டு பார்வையிலிருந்து மறைந்தனர். கோணங்கிகளில் இரண்டாமவன் வண்டியின் முன்னால் ஏறுபலகையில் இருந்தபடி, கடைத்தூண்களில் தொங்கிக்கொண்டிருந்த மார்க்கெட் சிலேட் ஒன்றில் ஆபாசமான வரைபடத் தையும் சில வார்த்தைகளையும் கிறுக்கிச் சென்றான்.

ட்ரெவிரேனஸ் வெளியே எட்டிப்பார்த்தார். ஏறத்தாழ முன் கூறத்தக்க வகையில் அந்த வாக்கியத் தொடர் இவ்வாறிருந்தது:

பெயரின் கடைசி எழுத்து உச்சரிக்கப்பட்டு விட்டது.

பின்னர் அவர் கிரிஃபியஸ்-கின்ஸ்பர்க்கின் சிறிய அறையை சோதனை செய்தார். தரையில் நட்சத்திர அமைப்பில் ரத்தம் சிதறி விட்டிருந்தது; அறை மூலைகளில் ஹங்கேரியன்பிராண்ட் சிகரெட் துண்டுகள் கிடந்தன; துணிகள் வைக்கும் அலமாரியில் 1739 ஆம் வருடப் பதிப்பில் லத்தீனில் எழுதப்பட்ட கங்ன்ள்க்ங்ய் என்பவரின் டட்ண்ப்ர்ப்ர்ஞ்ன்ள் ஐங்க்ஷழ்ஹங்ர் — ஏழ்ஹங்ஸ்ரீன்ள் புத்தகம் இருந்தது. அதில் பல விளக்கக் குறிப்புகள் கையால் எழுதப்பட்டிருந்தன. கோபம் மிகுந்த ஒரு பார்வையை அவற்றின் மீது வீசிய ட்ரெவிரேனஸ் லோன்ராட்டுக்குச் சொல்லி அனுப்பினார். சாத்தியமாக இருக்கக் கூடிய கடத்தல் பற்றி எதிர்மாறான சாட்சிகளை இன்ஸ்பெக்டர் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, லோன்ராட், தான் அணிந்திருந்த தொப்பியைக் கூடக் கழற்ற அக்கறைப்படாமல், படிக்க ஆரம்பித்தான். அதிகாலை நான்கு மணிக்கு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்கள். வளைந்து வளைந்து சென்ற Rue de Toulon தெருவில் அந்த இரவின் அலங்காரத் தோரணங்களையும், ஜிகினாத் துண்டுகளையும் மிதித்தபடி வெளியே வந்த போது ட்ரெவிரேனஸ் குறிப்பிட்டார்: “இந்த இரவு நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு தமாஷாக இருந்தால்?”

எரிக் லோன்ராட், சிரித்தபடி, பக்குவமான நிதானத்துடன் “ஃபிலோலோகஸ் நூலின் முப்பத்து மூன்றாவது ஆய்வுக் கட்டுரையில் அடிக்கோடிடப்பட்டிருந்த ஒரு பகுதியைப் படித்துக் காட்டினான்:

Dies Judaeorum incipit a solis occasu usque ad soils occasum diei sequentis இதற்கு அர்த்தம் என்னவென்றால் என்றவன் தொடர்ந்தான்: “யூதர்களின் ஒரு தினம் சாயங்காலத்தில் தொடங்கி அடுத்த நாள் சாயங்காலத்தில் முடிகிறது.”

அதற்கு ட்ரெவிரேனஸ் கிண்டலாகக் கேட்டார்: “அதுதான் இன்றிரவு நீ சேகரித்த மிக மதிப்பு வாய்ந்த ஒரு தடயமா?”

“இல்லை அதை விட மதிப்பு வாய்ந்தது உங்களுடன் தொலைபேசியில் பேசிய போது கின்ஸ்பர்க் பயன்படுத்திய வார்த்தைகளில் ஒன்று”

அந்த மாலை செய்தித்தாள்கள் அந்த வழக்கமான திடீர் காணாமல்போதல்களைப் பற்றிப் பெரிது படுத்தி எழுதின. சென்ற முறை Congress of Hermits கூட்டம் நடைபெற்ற பொழுது இருந்த பாராட்டத்தக்க கட்டுப்பாட்டினையும் இப்போது நடந்த வன்முறைச் செயல்களையும் வித்யாசப் படுத்திக் காட்டியது La Croix de L’Epee என்ற செய்தித்தாள். The Martyr பத்திரிக்கையில் எழுதிய எர்னஸ்ட் பாலாஸ்ட் என்பவர் பொறுத்துக் கொள்ள முடியாத நிதானத்தில் இந்த ரகசியமான மட்டரகமான கொலைகளையும் அவை மூன்று யூதர்களை ஒழித்துக் கட்ட எடுத்துக்கொண்ட மூன்று மாதங்களைப் பற்றியும் விமர்சித்தார். யூதர்களுக்கு எதிரான ஒரு சதித்திட்டம்–பற்றிய குறிப்பினை ஊடுருவித் துருவும் அறிவுஜீவிகள் பலர் இந்த முக்கொலை மர்மத்திற்கு யூத இனம் அழிய வேண்டும் என்ற நோக்கம் தவிர வேறெந்த காரணமும் இல்லை என்று தீர்மானமாகக் கருதினாலும் Judische Zeitung பத்திரிக்கை மறுத்தது. நகரின் தென்பகுதியில் இருந்த தலைசிறந்த துப்பாக்கிக்காரனான சிவப்பு டான்டி ஸ்கார்லாக், நகரில் அவன் இருக்கும் பகுதியில் இந்த மாதிரியான குற்றங்கள் நடக்கவே நடக்காதென்று சூளுரைத்து, இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸ் ட்ரெவிரேனஸின் மீது தண்டனைக்குரிய அலட்சியத்தன்மை என்ற குற்றத்தையும் சாட்டினான்.

மார்ச் 1ஆம் தேதி இரவு, இன்ஸ்பெக்டருக்கு ஒரு பெரிய முத்திரையிடப்பட்ட கண்ணைக் கவரும் உறை வந்து சேர்ந்தது. அதைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த கடிதத்தை யாரோ ஒரு ‘பாருக் ஸ்பினோசா’ என்பவன் கையெழுத்திட்டிருந்தான். கூட அந்த நகரத்தின் விளக்கமான் வரைபடம் ஒன்றும் இருந்தது. சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டி வரைபடத்திலிருந்து அந்த நகரின் வரைபட அமைப்பு கிழித்தெடுக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. மார்ச் 3ஆம் தேதி, நான்காவதாக ஒரு கொலைக் குற்றம் நடக்கப் போவதில்லை என அந்தக் கடிதம் முன்னறிவித்தது. ஏன் என்றால் மேற்குப் பக்கத்தில் அமைந்த இரும்பு மற்றும் பெயிண்ட் கடை, Rue de Toulon தெருவில் இருந்த விடுதி, மற்றும் Hotel Du Nord ஆகிய இவை மூன்றும் ஒரு சமபக்க மர்மமான முக்கோணத்தின் பண்பட்ட பக்கங்களாக அமைந்துவிட்டன என்று விளக்கம் தரப்பட்டிருந்தது. வரைபடத்தில் தீட்டியிருந்த சிவப்புமை முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் மிகச்சரியான நீளத்தைக் கொண்டிருந்ததை எடுத்துக்காட்டின. ட்ரெவிரேனஸ் இந்த ஜியோமிதித்தன்மையான வியாக்கியானத்தை ஒரு வித சலிப்புடன் படித்துவிட்டு கடிதத்தையும் வரைபடத்தையும் எரிக் லோன்ராட்டுக்கு அனுப்பி வைத்தான். அவன்தான் இந்த மாதிரியான கிறுக்குத்தனமான கருதுதல்களுக்குப் பொருத்தமானவன். அதில் விவாதத்திற்கே இடமில்லை.

லோன்ராட் அவற்றை ஆராய்ந்தான். மூன்று புள்ளிகளுமே சரிசம தூரத்தில் இருந்தன. கால ஒழுங்கிலும் சீர்தன்மை இருந்தது (டிசம்பர் மூன்று, ஜனவரி மூன்று, பிப்ரவரி மூன்று); இப்போது புவித்தள வெளியிலும் சமச்சீர்தன்மை இருந்தது. திடீரென்று, அந்தப் புதிருக்குத் தீர்வு கண்டு பிடிக்கும் விளிம்பில் தான் இருப்பதாக உணர்ந்தான். ஒரு காம்பஸ் கருவியும் டிவைடரும் அவனது திடீர் உள்உணர்வை முழுமையாக்கின. அவன் புன்முறுவல் செய்து, டெட்ராகிரமட்டான் என்ற சொல்லை (அவன் சமீபகாலத்தில் சேகரித்துக் கொண்டது) உச்சரித்தான். பிறகு இன்ஸ்பெக்டரை தொலைபேசியில் அழைத்தான்.

“நீங்கள் நேற்றிரவு அனுப்பி வைத்த சமபக்க முக்கோணத்திற்கு நன்றி” என்றான். “அது மர்மத்தைக் விடுவிக்க எனக்கு உதவியது. நாளை, வெள்ளிக்கிழமை, கொலைகாரர்கள் பத்திரமாக சிறையில் இருப்பார்கள். நாம் அதை நிச்சயமாக நம்பலாம்”

“அப்படியானால் அவர்கள் நான்காவது குற்றத்திற்கு திட்டமிட வில்லையா?”

“மிகச்சரியாக அவர்கள் நான்காவது குற்றத்திற்குத் திட்டமிடுவதால்தான் நம்மால் எளிதில் ஓய்வு கொள்ளமுடியும் என்று என்னால் திட்டவட்டமாகக் கூற முடிகிறது”.

லோன்ராட் தொலைபேசியை வைத்தான். ஒரு மணி நேரம் கழித்து யாருமற்ற திரிஸ்லா ராய் பங்களாவை நோக்கி தென்னக ரயில்வேயின் ரயில்பெட்டிகளில் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தான் அவன். நமது கதை நகரின் தென்புறமாக, தோல் பதனிடும் தொழிற் சாலைகளின் கழிவுகளாலும் சாக்கடைகளாலும் அசுத்தமான ஒரு இருண்ட, சேறு கலந்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் எதிர்ப்பக்கக் கரையில் படுமோசமான அரசியல் பிரமுகன் ஒருவனின் ஆதரவினால் துப்பாக்கிக் கேடிகள் சுபிட்சமாக இருந்து வரும் ஒரு தொழிற்பேட்டை இருந்தது. லோன்ராட் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

துப்பாக்கியைக் கையாள்வதில் எல்லாரையும் விட அதிகம் பெயர்பெற்றவனான சிவப்பு ஸ்கார்லாக், லோன்ராட்டின் இந்த திடீர்ப் பயணத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு எதை வேண்டுமானாலும் கொடுத்திருப்பான். அஸிவேடோ ஸ்கார்லாக்கின் அடியாளாக இருந்தவன். நான்காவது பலி ஆளாக ஸ்கார்லாக்கே இருக்கக் கூடும் என்ற தூரத்து சாத்தியத்தை லோன்ராட் எண்ணிப் பார்த்தான். பிறகு அதை ஒதுக்கி விட்டான். ஏறக்குறைய அவன் புதிரினை முழுமையாக விடுவித்து விட்டான். அந்த வெறும் சந்தர்ப்பங்கள், யதார்த்தம் (பெயர்கள், கைது செய்தல்கள், முகங்கள், சட்ட மற்றும் குற்றவியல் ரீதியான செயல்முறைகள்) போன்றவை அவனுக்கு இப்போது ஈர்ப்பளிக்கவில்லை. மூன்று மாத அலுவலக ஃபைல் வேலைகளுக்கு பிறகு, நத்தை அளவுக்கு நடைபெற்ற ஆய்வுகளுக்குப் பின் அவன் எங்காவது ஓய்வாகச் செல்ல விரும்பினான். யார் அனுப்பியது என்று தெரியாமல் வந்து சேர்ந்த முக்கோணத்திலும், ஒரு தூசு படிந்த கிரேக்கச் சொல்லிலும் அந்தக் கொலைக்குற்றங்களுக்கான தீர்வு இருந்தது என்று ஆழ்ந்து யோசித்தான். மர்மம் இப்போது படிகத்தைப் போல தெள்ளத் தெளிவாகிவிட்டது. ஏறத்தாழ நூறுநாட்களை இதில் செலவழித்து விட்டதற்காக வெட்கப்பட்டான்.

யாருமற்ற அமைதியான ரயில் நிலையமொன்றில் ரயில் நின்றது. லோன்ராட் இறங்கிக் கொண்டான். விடியற்காலையைப் போலவே வெறுமையாக இருந்த பகல் நேரங்களில் அந்தப் பகல் வேளையும் ஒன்றாக இருந்தது. இருளடைந்து புல் நிறைந்த பகுதிகளின் காற்று ஈரம் மிகுந்தும், குளிர்ந்தும் இருந்தது. வயல்களுக்கு குறுக்காகச் செல்ல ஆரம்பித்தான் லோன்ராட். அவன் ஒரு நாயையும், வெளிப்புறச் சுவர் மறைப்பொன்றில் இருந்த காரினையும், தொடுவானத் தையும், தெளிவற்ற சாக்கடையிலிருந்து நீர் பருகிக் கொண்டிருந்த ஒரு வெள்ளை நிறக் குதிரையையும் பார்த்தான். சுற்றிலுமிருந்த யூகாலிப்டஸ் மரங்களின் உயரத்தை எட்டுவது போல் நெடுக மேலெழும்பி இருந்த திரிஸ் லா ராய் பங்களாவின் நீள்சதுர அழுக்கான திறந்த வெளி மேல்மாடியை அவன் பார்த்தபோது இரவு கவியத்தொடங்கி விட்டிருந்தது. பெயரை ஆவலுடன் தேடிக் கொண்டிருப்பவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் அற்புத விநாடியிலிருந்து அவனை இன்னும் ஒரு பகலும் ஒரு இரவும் அல்லது அதற்கும் குறைவான நேரமே (கிழக்கில் ஒரு புராதன ஒளியும் மேற்கில் இன்னொன்றும்) பிரித்து வைத்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டான் அவன்.

அந்த பங்களாவின் சீரற்ற சுற்றளவினை ஒரு துருப்பிடித்த இரும்பு வேலி வரையறுத்திருந்தது. பிரதான வாசல்கேட் சாத்தியிருந்தது. உள்ளே நுழைவதற்கான சாத்தியம் பற்றிய நம்பிக்கை அதிகம் இல்லாமல் லோன்ராட் கட்டடத்தைச் சுற்றி வந்தான். சாத்தப்பட்ட கேட்டினருகே மீண்டும் வந்து, இரும்புக் கம்பிக்கிடையில் ஏறத்தாழ இயந்திரத்தனமாகத் துழாவிய போது அதன் தாழ்ப்பாளைக் கண்டுபிடித்தான். துருப்பிடித்த இரும்பின் கீச்சொலி அவனை ஆச்சரியப் படுத்தியது. ஒரு வித கடினமான பணிவுடன், கேட் முழுமையாகத் திறந்து கொண்டது.

விழுந்த இலைகளின் அடுக்கடுக்கான குழப்பமான தலைமுறைகளை மிதித்த வண்ணம் யூக்காலிப்டஸ் மரங்களுக்கிடையில் லோன்ராட் முன்னேறி நடந்தான். கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும்போது அந்த பங்களா ஏராளமான அர்த்தமற்ற சீர்தன்மைகளின் சிதைவுகளாகவும் ஏறத்தாழ பைத்தியக்காரத்தனமான இரட்டிப்புகளின் இருப்பிடமாகத் தெரிந்தது. ஒரு இருண்ட மாடப்பிறையில் இருந்த டயானா வேறொரு மாடப்பிறையில் இருந்ததை ஒத்திருந்தது. ஒரு மேல் மாடம் மற்றொரு மேல்மாடத்தினைப் பிரதிபலித்தது. வெளியிலிருந்து இரண்டு படிக்கட்டுகள் ஒவ்வொரு இறங்கு தரையிலும் சந்தித்துக் கொண்டன. இரட்டை முகம் கொண்ட ஹெர்மிஸ் சிலை பூதாகரமான நிழலை வீசியது. தரையைச் சுற்றி வழி கண்டுபிடித்த மாதிரி வீட்டையும் சுற்றி வழி தேடினான். ஒவ்வொரு சிறு விவரத்தினையும் நுணுகிப் பார்த்தான். மாடித் தரைமட்டத்தினை ஒட்டி ஒரு குறுகலான திறப்புவழி இருப்பதைக் கவனித்தான்.

அதைத் தள்ளித் திறந்தான். சில பளிங்குப் படிகள் ஒரு நிலவறைக்குக் கீழே இட்டுச் சென்றன. இதற்குள்ளாக அதைக் கட்டிய கட்டிடக் கலைஞனின் இஷ்ட கோணங்களை முன்னோக்கிவிட முடிந்த லோன்ராட் அதற்கு எதிர்த்த சுவரிலும் இதை ஒத்த படிக்கட்டுகள் இருக்கும் என்பதை யூகித்தான். அதே மாதிரி இருக்கவும் செய்தது. அவற்றில் ஏறி, கைகளை உயர்த்தி ஒரு ரகசியத் திறப்பு கதவைத் திறந்தான்.

வெளிச்சத்தின் படிவு ஒன்று அவனை ஒரு ஜன்னலுக்கு இட்டுச் சென்றது. அதைத் திறந்தான். பராமரிப்பு இல்லாதிருந்த தோட்டத்தில் அமைந்த செயற்கை நீர் ஊற்றுக்களை வட்டவடிவமான மஞ்சள் நிற நிலா கோடிட்டுக் காட்டியது. தூசிபடிந்த படிக்கட்டு வழிகளில் ஏறி வட்ட வடிவமான பின்னறைகளைச் சேர்ந்தான். லோன்ராட் வீட்டைத் துருவி ஆராய்ந்தான். சிறிய முன்னறைகள், காத்திருப்பு அறைகள், விருந்தோம்பலறைகள் வழியாக அவன் முற்றங்களை ஒத்த பகுதிக்குச் சென்றான். சென்ற முற்றத்திற்கே மீண்டும் மீண்டும் செல்ல வேண்டி வந்தது. தூசி படிந்த படிக்கட்டுவழிகளில் ஏறி வட்டவடிவமான பின்னறைகளைச் சென்றடைந்தான். அங்கே அவன் உரு முடிவற்ற எண்ணிக்கையில் எதிரெதிர் அமைக்கப்பட்ட நிலைக் கண்ணாடிகளால் பிரதி பலிக்கப்பட்ட உரு பெருக்குமானம் கண்டான். அவன் மூடித்திறந்த, எட்டிப் பார்த்த ஜன்னல்கள் நிர்க்கதியாக விடப்பட்ட தோட்டத்தினை வேறுபட்ட உயரங்களில் இருந்தும், வேறுபட்ட கோணங்களில் இருந்தும் காட்டுவதாக அமைந்திருந்தது. அதில் அவன்சலிப்படைந்தான். அறைகளின் உட்புறம் மரச்சாமான்களின் துண்டங்கள், புழுதி மண்டிய மஞ்சள் காகிதத்தில் சுற்றப் பட்டிருப்பதையும், பளிங்குச் சரவிளக்குகள் மென்துகிலால் சுற்றப்பட்டிருப்பதையுமே கண்டு சலிப்படைந்தான். ஒரு படுக்கையறை அவன் கவனத்தைக் கவர்ந்தது. அதில் ஒரு பீங்கான் பூச்சாடியில் ஒரே ஒரு பூ இருந்தது. ஒரு தொடுதலிலேயே அதன் யுகாந்திர இதழ்கள் தூசியாகப் பொடிந்தன. மூன்றாவது மாடியில், கடைசி தளத்தில், வீடு முடிவற்றும் வளர்கின்ற மாதிரியும் தோன்றியது. இந்த வீடு அத்தனைப் பெரியதல்ல என்று நினைத்தான். இந்தக் குறைவான வெளிச்சம், ஒரே தன்மைகள், நிலைக்கண்ணாடிகள், அந்தப் பல ஆண்டுகள், என் அறிமுக மின்மை, என் தனிமை எல்லாமாகச் சேர்ந்துதான் இதைப் பெரிதாக்கு கின்றன என நினைத்தான்.

சுழல் படிக்கட்டுகளில் ஏறி ஒரு ஆய்வுப் பால்கனிக்குச் சென்றான். அந்த மாலையின் நிலா ஒளி சாய்சதுர வடிவில் இருந்த கண்ணாடிச் சட்டங்கள் வழியாகப் பிரகாசித்தது. அவை சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தன. ஒரு பிரமிக்கத்தக்க மயக்கத்தில் தள்ளக் கூடிய நினைவு கூறல் அவனைத் தாக்கியது.

கட்டையான, குட்டையான இரண்டு மனிதர்கள் அவன் மீது கரடுமுரடாகவும் ஆக்ரோஷமாகவும் பாய்ந்து அவனது ஆயுதத்தைக் கைப்பற்றினர்; உயரமாக இருந்த மற்றொருவன், லோன்ராட்டை அமைதியாக வரவேற்றுச் சொன்னான்: “நீ மிகவும் கருணை உள்ளவன். எங்களுக்கு ஒரு இரவினையும் பகலினையும் மிச்சப்படுத்தி விட்டாய்.”

அவன்தான் சிவப்பு ஸ்கார்லாக். அந்த இருவர் லோன்ராட்டின் இரண்டு மணிக்கட்டுகளையும் சேர்த்துக் கட்டினர். சில வினாடிகளுக்குப் பிறகு லோன்ராட் தன் குரலைத் திரும்பப் பெற்றவனாய்ப் பேசினான் : “ஸ்கார்லாக், நீயும் அந்த ரகசியப் பெயரைத் தேடுகிறாயா?”

எதிலும் பாதிக்கப்படாதவனாக ஸ்கார்லாக் நின்று கொண்டிருந்தான். லோன்ராட்டிடமிருந்து ஆயுதத்தை பறிக்கச் செய்ய ஏற்பட்ட கைகலப்பில் அவன் பங்கேற்கவில்லை. லோன்ராட்டின் ரிவால்வாரை வாங்கிக் கொள்வதற்கும் அவன் கை நீட்டவில்லை. அவன் பேசினான். இந்தப் பிரபஞ்சத்தின் அளவு கொண்ட வெறுப்பினையும், அந்த வெறுப்புக்கு இணையான சோகத்தையும், இறுதி வெற்றியின் சலிப்பினையும் அந்தக் குரலில் லோன்ராட் கேட்க முடிந்தது.

“இல்லை” என்றான் ஸ்கார்லாக். “அதிகம் நித்தியமற்ற, அதிகம் நொய்மையான ஒன்றைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் லோன்ராட்டைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.” மூன்று வருடங்களுக்கு முன்னால் ரூ த தோலான் வீதியில் இருந்த ஒரு சூதாட்டப் புகலிடத்தில் நீயே எனது சகோதரனைக் கைது செய்து ஜெயிலில் தள்ளினாய். துப்பாக்கி சூடுகள் முடியும் முன்னால் என் ஆட்கள் என்னை ஒரு மூடப்பட்ட வண்டியில் ஏற்றினர். ஆனால் என் வயிற்றில் ஒரு போலீஸ்காரனின் துப்பாக்கிக் குண்டு இருந்தது. இந்தக் கைவிடப்பட்ட திருத்தமான பங்களாவில் வலியில் துடித்தபடி ஒன்பது இரவுகள், ஒன்பது பகல்கள் நான் நரகத்தை அனுபவித்தேன். காய்ச்சல் என்னைச் சிதறடித்துக் கொண்டிருந்தது. விடியற்காலைகளையும் சூரியன் மறைதல் களையும் பார்த்துக் கொண்டிருக்கும் வெறுக்கத்தக்க இரட்டை முகம் கொண்ட ஜேனஸ் கடவுளின் உருவம் எனது உறக்கத்தையும், விழிப்புகளையும் பயத்தாலும் பீதியாலும் நிறைத்தது. என் உடலை நான் வெறுக்கத் தொடங்கினேன். இரண்டு கண்கள், இரண்டு கைகள், இரண்டு நுரையீரல்கள் ஆகியவை இரட்டைமுகங்கள்ளு அளவுக்கே பூதாகரமாகத் தோன்றின. என்னை யேசுவின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க முயற்சி செய்த அயர்லாந்துக்காரன் கோயிமி’லிருந்து ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். எல்லா சாலைகளுமே ரோம் நகரை நோக்கியே செல்கின்றன. இரவில் என் காய்ச்சல் அந்த உருவகத்தில் திளைத்தது. இந்த உலகம் ஒரு புதிர்ச்சிக்கல் என்றும் இதிலிருந்து தப்பிப்பது சாத்தியமற்றது என்றும் உணர்ந்தேன். ஏனென்றால் வடக்கு திசை நோக்கியோ தெற்கு திசை நோக்கியோ செல்வதாகத் தோன்றினாலும் எல்லா சாலைகளும் நிஜமாக ரோம் நகரையே நோக்கிச் சென்று கொண்டிருந்திருக்கின்றன. அதே சமயம் அந்த இடம் என் சகோதரன் செத்துக் கொண்டிருந்த சதுர ஜெயில் அறையாகவும் இந்த பங்களாவாகவும் இருந்தது. என் சகோதரனை ஜெயிலுக்கு அனுப்பிய மனிதனைச் சுற்றி ஒரு புதிர்ச்சிக்கலை பின்னுவது என அந்த இரவுகளில் இரட்டை முகங்களைக் கொண்டு பார்க்கும் கடவுளையும், பிற நிலைக்கண்ணாடிகள் மற்றும் காய்ச்சல்களின் கடவுள்களையும் முன் நிறுத்தி சூளுரைத்தேன். நல்லது. அதை நான் பின்னிவிட்டேன். அது இப்போது உறுதியாக இறுகிவிட்டது. ஒரு இறந்து போன யூத அறிஞனையும், ஒரு காம்பஸ் கருவியையும், பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இனத்தையும், ஒரு கிரேக்க வார்த்தையையும், ஒரு நீண்ட கத்தியையும், ஒரு பெயிண்ட் கடையின் சுவரின் மீதிருந்த சாய்சதுர அமைப்புகளையும் அதற்கான ஆகு பொருள்களாக்கினேன்.”

லோன்ராட் இப்போது நாற்காலியில் இருந்தான். அவனருகில் அந்த குட்டையான மனிதர் இருவரும் இருந்தனர்.

“தொடர்ச்சியின் முதல் சொல் மிகவும் சந்தர்ப்பவசமாகவே எனக்குக் கிடைத்தது” ஸ்கார்லாக் சொல்லிக்கொண்டு போனான். “என் கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து–அவர்களில் டேனியல் அஸிவேடோவும் ஒருவன்– நால்வர்தலைவரின் ரத்தினக் கற்களைக் திருடும் திட்டத்தினை முன்பு தீட்டியிருந்தேன். அஸிவேடோ எங்களைக் காட்டிக் கொடுத்து விட்டான். அவனுக்கு முன்பணமாக நாங்கள் கொடுத்ததை வைத்துக் குடித்துவிட்டு ஒரு நாள் முன்னதாகவே அதிகாலை இரண்டு மணிக்கு ஹோட்டலின் பிரம்மாண்டமான குழப்பத்தில் யார்மோலின்ஸ்கியின் அறைக்குள் தவறுதலாக நுழைந்தான். அந்த யூத அறிஞர் தூக்கம் வராமல் போகவே ஏதாவது எழுதுவதென்று தீர்மானித்து எழுதத் தொடங்கியிருந்தார். சாத்தியங்கள் எல்லாவற்றிலும் கடவுளின் பெயரைப்பற்றி குறிப்புகள் தயாரிக்கவோ, கட்டுரை எழுதவோ ஆரம்பித்து பெயரின் முதல் எழுத்து உச்சரிக்கப் பட்டுவிட்டது என்ற வார்த்தைகளை டைப் செய்திருந்தார். அஸிவேடோ அவரை கத்தக் கூடாது அசையக் கூடாது என்று எச்சரித்தான். ஹோட்டலில் வேலை செய்யக் கூடிய எல்லா அலுவலர்களையும் எழுப்பி விட்டிருக்கக் கூடிய அழைப்பு மணியினை நோக்கி அவர் கை நீண்டது. தனது கத்தியால் அவரை அஸிவேடோ ஒரே குத்தில் சாய்த்தான். அது அவன் அறியாமலே செய்த எதிர்வினைதான். “ஐம்பது வருட வன்முறையானது, மிக சுலபமானதும், உறுதியானதுமான செயல், கொல்வதுதான் என்று அவனுக்குக் கற்றுத் தந்திருக்கிறது. . .பத்துநாட்கள் கழித்து, Judische Zeitung பத்திரிகையின் மூலமாக யார்மோ லின்ஸ்கியின் சாவுக்கான திறவுகோலினை, அவர் எழுதிய புத்தகங்களில் இருந்து நீ தேடிக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தேன். நான் அவர் எழுதிய History of the Hasidic Sect நூலை படித்தேன். கடவுளின் பெயரை உச்சரிப்பதில் இருந்த புனித பயமானது,பெயர் ரகசியமான தென்றும் சர்வவல்லமை உடையதான கருத்து உருவாகக் காரணமாயிருந்தது என்றும் தெரிந்து கொண்டேன். Hasidim-ஐச் சேர்ந்த சிலர் அந்த ரகசியப் பெயரினைத் தேடிக் கொண்டிருப்பது மட்டுமின்றி நரபலி கொடுக்கும் அளவுக்கும் சென்றிருக்கின்றனர் என்பதை நான் தெரிந்து கொண்டேன். Hasidim- சேர்ந்தவர்கள் யூத அறிஞரை பலி கொடுத்துவிட்டார்கள் என நீ யூகிப்பாய் என்று நான் உணர்ந்தவுடன் அந்த யூகத்தினை நியாயப்படுத்துவதற்கு என்னாலான எல்லா வற்றையும் செய்தேன். யார்மோலின்ஸ்கி டிசம்பர் மூன்றாம் தேதி இரவு இறந்தார். இரண்டாவது பலிகொடுப்பதற்கு ஜனவரி மூன்றாம் தேதியைத் தேர்ந்தெடுத்தேன். அந்த ரபி வடக்குப் பக்கத்தில் இறந்திருந்தார்; இரண்டாவது பலிகொடுப்பதற்கு மேற்குப் பக்கத்தில் எங்களுக்கு ஒரு இடம் தேவைப்பட்டது. டேனியல் அஸிவேடோதான் எங்களுக்குத் தேவைப்பட்ட பலிஆள். அவன் காட்டிக் கொடுப்பவன், இஷ்டத்திற்கு செயல்படுபவன்; அவனுக்கு சாவு தகுதியானது. அவன் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் எங்களின் முழுத்திட்டமே அழித்தொழிக்கப் பட்டிருக்கும். ஆட்களில் ஒருவன் அவனைக் கத்தியால் குத்தினான். அவன் பிரேதத்தை முந்தைய கொலையுடன் சம்மந்தப்படுத்த வேண்டி பெயிண்ட் கடைச் சுவரில் இருந்த சாய்சதுரங்களின் மீது நான் கிறுக்கினேன் :

பெயரின் இரண்டாவது எழுத்து உச்சரிக்கப் பட்டுவிட்டது.

ஸ்கார்லாக் தன்னிடம் சிக்கியவனை நேருக்கு நேராகப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தான். “மூன்றாவது கொலை பிப்ரவரி மூன்றாம் தேதி நடத்தப்பட்டது. ட்ரெவிரேனஸ் யூகித்தது போல அது ஒரு பொய்த் தயாரிப்பு. கிரிஃபியஸ்–கின்ஸ்பெர்க்–கின்ஸ்பர்க் நான்தான். முற்றுப் பெறவே முடியாதது போலத் தோன்றிய ஒரு வாரம் (இந்த பொய் தாடியுடன்) ரு த துலானிலிருந்த தெள்ளுப் பூச்சிகள் நிறைந்த சிறிய அறையில் என் நண்பர்கள் என்னைக் கடத்திச் செல்லும் வரை தங்கினேன். வண்டியின் ஏறுபலகை மீதிருந்து அதில் ஒருவன் தூணில் எழுதினான்: பெயரின் மூன்றாவது எழுத்து உச்சரிக்கப்பட்டுவிட்டது. அந்தச் செய்தியானது கொலைகளின் தொடர்ச்சி மூன்றாக அமைந்ததைச் சொன்னது. அப்படித்தான் பொதுமக்கள் அதைப் புரிந்து கொண்டார்கள். லோன்ராட் என்கிற தர்க்கக்காரனான நீ கொலைகள் நான்கு என்று தீர்வு ஏற்படுத்திக் கொள்ளும்படி நான் மீண்டும் மீண்டும் சில துப்புக்களை வீசினேன். வடக்கில் ஒரு கொலை, மற்றவை கிழக்கிலும் மேற்கிலுமாக இருப்பது தெற்கில் நான்காவது கொலையைக் கோரியது. டெட்ராகிராமட்டான் கடவுளின் பெயர் JHVH– நான்கு எழுத்துக்களால் ஆனது. கோணங்கிகளும், பெயிண்ட் கடையில் இருந்த குறியீடும் நான்கு புள்ளிகளைக் குறித்தன. லுஸ்டெனின் கையேட்டி லிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை நான் அடிக்கோடிட்டேன் .

ஒரு நாளினை யூதர்கள் சூர்யாஸ்தமனத்திலிருந்து சூர்யோதயம் வரைலானது எனக் கருதினார்கள்’ என்பதை அந்தப் பகுதி தெளிவுப்படுத்துகிறது. மரணங்கள் எல்லாம் ஒவ்வொரு மாதத்தின் நான்காம் தேதியில் சம்பவித்தன என்று அதே பகுதி புரியத்தருகிறது. நான்தான் ட்ரெவிரேனசுக்கு அந்த முக்கோணத்தை அனுப்பி வைத்தேன். விடுபடும் புள்ளியை நீயே தந்து கொள்வாய்-முழுமையான சாய்சதுரத்தின் புள்ளியை–அந்தப் புள்ளி, சாவு உனக்கு எங்கே காத்துக் கொண்டிருக்கிறதோ அதை நிச்சயப்படுத்துகிறது என்று தெரிந்தே செய்தேன். எரிக் லோன்ராட் ஆகிய உன்னை திரிஸ்லா ராயின் தனிமைக்கு கவர்ந்து வர எல்லாவற்றையும் திட்டமிட்டேன்”.

ஸ்கார்லாக்கின் பார்வையைத் தவிர்த்தான் லோன்ராட். சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற சாய்சதுரங்களாக உடைபட்டிருந்த வானத்தையும் மரங்களையும் நோக்கினான். தான் மெல்லிதாக சில்லிட்டுப் போவதை உணர்ந்தான். கூடவே ஒருவித தன்வயமற்ற, அநாமதேயமான சோகத்தையும் உணர்ந்தான். இப்பொழுது இரவாகி விட்டிருந்தது. கீழே அநாதரவான தோட்டத்திலிருந்து ஒரு பறவையின் பயனற்ற கூவல் கேட்டது. லோன்ராட், கடைசி தடவையாக ஒரு முறை சீர்தன்மையோடு, தொடர்ச்சியான இடைவெளியில் நடந்த மரணங்கள் என்ற பிரச்சனை குறித்து யோசித்தான்.

இறுதியாக, “உன்னுடைய புதிர்ச்சிக்கலில் அதிகப்படியான மூன்று வரிகள் இருக்கின்றன” என்றான். ஒற்றை நேர்க்கோடாக அமைந்த ஒரு கிரேக்கப் புதிர்ச்சிக்கலை எனக்குத் தெரியும். அந்த வழியில் பலப்பல தத்துவஞானிகள் தங்களை இழந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஒரு சாதாரண துப்பறியும் அதிகாரியும் அப்படியே ஏமாறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்கார்லாக், வேறொரு ஒரு அவதாரத்தில் என்னை நீ வேட்டையாடும்போது. A யில் ஒரு குற்றத்தைப் புரிவதாக நடி. (அல்லது உண்மையாகவே செய்.) A யிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் B யில் இரண்டாவதையும் பின் A யிலிருந்தும் B யிலிருந்தும் சரிசமமாக நன்நான்கு கிலோமீட்டர் தொலைவில் இரண்டிற்கும் இடையில் இருக்கும்படியான C யில் மூன்றாவது குற்றத்தை நடத்து. அதற்குப் பிறகு A யிலிருந்தும் C யிலிருந்தும் சரிசம தூரத்தில். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்படியான D யில் எனக்காகக் காத்திரு. இதோ இப்பொழுது திரிஸ்லா ராயில் என்னைக் கொல்லப் போகிறாயே இதே மாதிரி”.

“அடுத்த முறை நான் உன்னைக் கொல்லும்போது கண்ணுக்குத் தெரியாததும் முடிவற்றதுமான ஒற்றைக் கோடு கொண்ட அந்தப் புதிர்ச்சிக்கலை உனக்குத் தருவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று பதிலளித்தான் ஸ்கார்லாக்.

பின்னோக்கி சில அடிகள் தன்னை நகர்த்தினான். பிறகு அவன் கவனமாகத் துப்பாக்கியால் சுட்டான்.

(இந்தக் கதையை Donald W.Yates என்பவரும் மொழிபெயர்த்திருக்கிறார். இங்கே எடுத்துக் கொள்ளப்பட்ட பிரதி அலெஃப் மற்றும் பிற கதைகள் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. லேபிரின்த்ஸ் தொகுதியிலிருந்து அல்ல.-மொழிபெயர்ப்பாளர்)

தமிழில் பிரம்மராஜன்

Translated by Normon Thomas Di Giovanni..

மணல் புத்தகம்/ஜோர்ஜ் லூயி போர்ஹே/Book of Sand-Borges-Tamil Translation Brammarajan

bookofsandjlbமணல் புத்தகம்

ஜோர்ஜ் லூயி போர்ஹே

தமிழில் பிரம்மராஜன்

Thy rope of sands … – George Herbert

முடிவில்லாத எண்ணிக்கை கொண்ட புள்ளிகளால் ஆக்கப்பட்டிருக்கிறது ஒரு கோடு. முடிவற்ற எண்ணிக்கையிலான கோடுகளால் ஆக்கப்பட்டிருக்கிறது சரிமட்டப்பரப்பு. முடிவற்ற எண்ணிக்கையிலான சரிமட்டப் பரப்பினால் ஆக்கப்பட்டிருக்கிறது ஒரு கன அளவை. மிகை அளவை அத்தகு கன அளவைகளால். . . .இல்லை, நிச்சயமின்றி என் கதையைத் தொடங்குவதற்கான மிகச்சிறந்த வழி இது-அதிகபட்சமான ஜியோமிதி-அல்ல. இட்டுக் கட்டி செய்யப்பட்ட எல்லாக் கதைகளின் தற்போதைய நடைமுறை மரபானது அதை நிஜம் என்று கோருவதுதான், ஆனாலும் என்னுடையது நிஜமாக நடந்ததுதான்.

போனஸ் அயர்சில், பெல்கிரானோ தெருவில் இருக்கும் நான்காவது மாடியிலுள்ள குடியிருப்பு ஒன்றில்  நான் தனியாக வசிக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னால், ஒரு நாள் சாயங்காலம் வெகு நேரம் கழித்து, யாரோ கதவைத் தட்டுவது கேட்டது. நான் திறந்தபோது அந்நியன் ஒருவன் அங்கே நின்று கொண்டிருந்தான். எளிதில் வகைப்படுத்திக் கூற முடியாத சாயல்கள் கொண்ட உயரமான மனிதன. ஒரு வேளை என் கிட்டப் பார்வை அப்படித் தோன்றச் செய்திருக்கக்கூடும். சாம்பல் நிற உடை அணிந்து, சாம்பல் நிற சூட்கேஸ் ஒன்றை வைத்திருந்த அவனிடம் தற்பெருமையற்ற, பாசாங்கற்ற தோற்றம் இருந்தது.  அவன் ஒரு அந்நிய தேசத்தவன் என்பதை உடனடியாகக் கண்டு கொண்டேன். ஆரம்பத்தில் எனக்கு அவன் வயோதிகனைப் போலத் தோற்றமளித்தான். பிறகுதான், அவனுடைய மெலிந்த செம்பட்டை முடி ஒரு ஸ்கான்டிநேவியத் தன்மையில்– ஏறத்தாழ வெள்ளை என்று சொல்லக் கூடிய முடியால்–நான் அப்படி எண்ணத் தலைப்பட்டேன் என்பதை உணர்ந்தேன்.  ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்காத எங்களது உரையாடலின் போக்கில் அவன் ஓர்க்கின்ஸ் தீவுகளைச் சேர்ந்தவன் என்பதைக் கண்டுபிடித்தேன்.

ஒரு நாற்காலியைக் காட்டியபடி அவனை உள்ளே வரவேற்றேன். அவனிடமிருந்து ஒரு சோகத்தன்மை வெளிப்பட்டுக் கொண்டிருந்தது–இன்று என்னிடமிருந்து வெளிப்படுவது போல.

“நான் பைபிள்கள் விற்கிறேன்”, என்றான் அவன்.

ஏதோ விதமான படிப்புப் பகட்டுடன், நான் பதில் கூறினேன். ““இந்த வீட்டில் ஜான் வைக்கிளிஃப்பின் முதலாவதையும் சேர்த்து பல பைபிள்கள் இருக்கின்றன. சிப்ரியானோ த வெலராவினுடையதும், லூத்தருடையதும்– இது இலக்கிய அணுகு முறையில் இருந்து பார்த்தால் மிகவும் மட்டமானது–வல்கேட்டின் லத்தீன் பிரதி ஒன்றும் என்னிடம் இருக்கின்றன. இப்போது உங்களுக்குத் தெரியும், எனக்குத் தேவைப்படுவது குறிப்பாக பைபிள்கள் அல்லவென்று.”

சில கண நேரத்து மௌனத்திற்குப் பிறகு அவன் சொன்னான், “நான் பைபிள்கள் மாத்திரம் விற்பவன் அல்லன். பிக்கானீரின் வெளிப்பகுதிகளில் எனக்குக் கிடைத்த புனிதப் புத்தகத்தை உங்களுக்குக் காட்டுகிறேன். அதில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கக் கூடும்.”

அவனுடைய சூட்கேசைத் திறந்து ஒரு புத்தகத்தை மேஜை மீது வைத்தான். ஒன்றுக்கு எட்டு என்ற அளவில் இருந்த அந்தப் புத்தகம் துணியால் பைண்ட் செய்யப்பட்டிருந்தது. அது பல கைகள் மாறியிருப்பது என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிந்தது. அதன் அசாதாரண கனம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அதன் முதுகில்  புனிதக் கட்டளை என்ற சொற்களும், அவற்றுக்குக் கீழாக“பம்பாய் என்ற சொல்லும் அச்சிடப்பட்டிருந்தது.

“ஒரு வேளை பத்தொன்பதாம் நூற்றாண்டாக இருக்கலாம்”, நான் குறிப்பிட்டேன்.

“எனக்குத் தெரியாது” என்றான் அவன். ““நான் கண்டு பிடிக்கவே இல்லை.”

யதேச்சையான இடத்திலிருந்து புத்தகத்தைத் திறந்தேன். அதில் இருந்த எழுத்து எனக்கு விநோதமாகத் தெரிந்தது. புழங்கித் தேய்மானமடைந்திருந்த அதன் பக்கங்கள் பைபிள் அச்சிட்டிருப்பது போல் இரண்டு பத்திகளில் ஆனால் மோசமான அச்சில் அமைந்திருந்தது.  சிறு சிறு பிரார்த்தனைப் பண் வடிவில் எழுத்துக்கள் மிக நெருக்கமாக அமைந்திருந்தன. பக்கங்களின் மேற்புற மூலைகளில் அரேபிய எண்கள் இருந்தன.

இடது கைப்பக்கம் (என்று வைத்துக் கொள்வோம்) 40,514 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைப் பார்த்தாற் போலிருந்த வலப்புறப் பக்கத்தில் 999 என்றிருந்தது. பக்கத்தைப் புரட்டினேன். அடுத்த பக்கம் எட்டு இலக்கங்களிலான எண்ணைக் கொண்டிருந்தது. தவிர, அதில் அகராதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள வகையைப் போன்று, ஒரு சிறு பள்ளிச் சிறுவனின் திறமையற்ற கரத்தினால் பேனாவும் மையும் உபயோகித்து வரையப்பட்ட நங்கூரம் போன்ற சிறு விளக்கப்படமும் இடம் பெற்றிருந்தது.

இந்தக் கட்டத்தில் தான் அந்த அந்நியன் சொன்னான். “சித்திரத்தை கூர்மையாகக் கவனியுங்கள். உங்களால் மீண்டும் அதைப் பார்க்க முடியாது.”

அந்த இடத்தைக் குறித்துக் கொண்டு புத்தகத்தை மூடினேன். உடனே திரும்பத் திறந்தேன். பக்கம் அடுத்து பக்கமாக நங்கூரத்தின் சித்திரத்தைப் பயனின்றித் தேடினேன். ““ஏதோ ஒரு இந்திய மொழியில் உள்ள மறைநூலின் பதிப்பு போலத் தோன்றுகிறது, இல்லையா?” என்று என் ஏமாற்றத்தை மறைக்க வேண்டி கூறினேன்.

“இல்லை.” என்று பதில் அளித்தான் அவன். பிறகு ஒரு ரகசியத்தைச் சொல்பவனைப் போல, குரலைத் தாழ்த்திக் கொண்டான். “சமவெளிப் பிரதேசங்களில் இருந்த நகரம் ஒன்றில், கொஞ்சம் ரூபாய்க்கும் ஒரு பைபிளுக்கும் மாற்றாக இது கிடைத்தது. அதனுடைய உரிமையாளனுக்குப் படிக்கத் தெரியாது. இந்தப் புத்தகங்களின் புத்தகத்தை அவன் ஒரு தாயத்து மாதிரி கருதியிருக்க வேண்டும் என்பது என் சந்தேகம். அவன் மிகவும் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன். தீண்டத் தகாதவர்களைத் தவிர்த்து வேறு யாரும் அசுத்தம் அடைந்து விடாமல் அவனது நிழல் மீது கூட,  அடி எடுத்து வைக்க முடியாது. அவனுடைய புத்தகம் மணல் புத்தகம் என்றழைக்கப்படுவதாக என்னிடம் தெரிவித்தான் அவன். காரணம் மணலும் சரி, புத்தகமும் சரி, எந்தத் தொடக்கமும் முடிவும் இல்லாதிருக்கின்றன.”

அந்நியன் என்னை முதல் பக்கத்தைக் கண்டு பிடிக்கச் சொன்னான். எனது இடது கையை அட்டை மீது வைத்துக் கொண்டு, எனது கட்டை விரலை உள் முதல் வெறும்தாளுக்கு இடையில் வைக்க முயற்சி செய்தபடி, புத்தகத்தைத் திறந்தேன். பயனிருக்கவில்லை. நான் முயற்சி செய்த ஒவ்வொரு தடவையும், நிறைய பக்கங்கள் அட்டைக்கும் என் கட்டை விரலுக்கும் இடையில் வந்தன. ஏதோ அவை அந்தப் புத்தகத்திலிருந்து வளர்ந்து கொண்டே இருப்பது போல இருந்தது.

“இப்போது கடைசிப் பக்கத்தைக் கண்டு பிடியுங்கள்.”

மீண்டும் நான் தோற்றுப் போனேன். என் குரலைப்போல இல்லாத குரலில், “இது சாத்தியமே இல்லை” என்று திக்கித் தடுமாறிச் சொல்லி முடித்தேன்.

இன்னும் தாழ்வான குரலில் பேசிக்கொண்டிருந்த அந்நியன் சொன்னான், “அது சாத்திய மில்லைதான். ஆனால் சாத்தியமாகியிருக்கிறது. முடிவின்மைக்குக்கு கூடுதலாகவும் இல்லை, குறைச்சலாகவும் இல்லை. எதுவும் முதல் பக்கமல்ல, எதுவும் இறுதிப் பக்கமும் அல்ல. அவை ஏன் இப்படி தன்னிச்சையான முறையில் எண்ணிக்கை இடப்பட்டிருக்கின்றன என்பது எனக்குத் தெரியாது. ஒரு வேளை முடிவற்ற தொடர்ச்சிகளின் வரையறை எந்த ஒரு எண்ணையும் அனுமதிக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாக இருக்கலாம்.”

பிறகு உரத்து சிந்திப்பவனைப் போல சொன்னான், “புவி வெளி எல்லையற்றதாயின், நாம் புவிவெளியின் எந்தப்புள்ளியில் வேண்டுமானாலும் இருக்கலாம். காலம் என்பது எல்லையற்ற தாயின் நாம் காலத்தின் எந்தப் புள்ளியில் வேண்டுமானாலும் இருக்கலாம்.”

அவனது யூகங்கள் எனக்கு எரிச்சலூட்டின. “நீங்கள் மதநம்பிக்கை கொண்டவர்தானே?, சந்தேகமில்லையே?” என்று அவனைக் கேட்டேன்.

“நான் ஒரு பிரெஸ்பிடேரியன். என் மனசாட்சி சுத்தமாக இருக்கிறது. அவனது தீவினை மிகுந்த புத்தகத்திற்குப் மாற்றாக கடவுளின் வார்த்தை நூலைக் கொடுத்த போது அந்த நாட்டு மனிதனை நான் ஏமாற்றவில்லை என்று என்னால் ஓரளவு உறுதியாகச் சொல்ல முடியும்.”

அவன் தன்னைத் தானே கடிந்து கொள்வதற்கு எந்த முகாந்தரமும் இல்லை என்று அவனிடம் உறுதி மொழிந்தேன். பிறகு, வெறுமே தனது பயணப் போக்கில் உலகின் இந்தப் பிரதேசத்தின் வழியாக கடந்து போகிறானா என்று கேட்டேன். அவனுடைய நாட்டுக்கு இன்னும் சில நாட்களில் திரும்பி விடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகப் பதில் கூறினான். அப்பொழுதுதான் அவன் ஸ்காட்லாந்தில் இருந்த ஓர்க்னி தீவுகளைச் சேர்ந்தவன் என்பதைத் தெரிந்து கொண்டேன். ஸ்டீவென்சன், ஹியூம் ஆகியோர் மீதான அன்பின்  வழியாக ஸ்காட்லாந்து மீது ஒரு வித தனிப்பட்ட வகையிலான அளப்பறிய அன்பு கொண்டிருந்தேன் நான் என்று அவனிடம் கூறினேன்.

“நீங்கள் ஸ்டீவென்சனையும், ராபி பர்ன்ஸ்ஐயும் தானே குறிப்பிடுகிறீர்கள்” என்று திருத்தினான்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது அந்த எல்லையற்ற புத்தகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தேன். வரவழைத்துக் கொண்ட ஈடுபாடின்மையுடன், நான் கேட்டேன், “இந்த விநோதப் பொருளினை பிரிட்டிஷ் மியூசியத்திற்கு விற்க உத்தேசித்திருக்கிறீர்களா?”

“இல்லை. நான் உங்களுக்குத் தருகிறேன்”, என்றான். மிகப் பெருந்தொகை ஒன்றை புத்தகத்திற்கு நிர்ணயம் செய்தான். மிகவும் உண்மையான தன்மையுடன் அவ்வளவு பெரிய தொகை என்னால் கொடுக்க முடியாத ஒன்று  எனக் கூறிவிட்டு, யோசிக்க ஆரம்பித்தேன். ஒன்றிரண்டு நிமிடங்களில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

“ஒரு பண்டமாற்று முறையை நான் முன் மொழிகிறேன்” என்றேன். “கைநிறைய ரூபாய்க்கும், பைபிள் பிரதி ஒன்றுக்கும் பதிலாகத்தானே இந்தப் புத்தகம் உங்களுக்குக் கிடைத்தது? எனது ஓய்வூதியத் தொகையின் காசோலையை நான் இப்போதுதான் வாங்கி வந்திருக்கிறேன். அதையும், கறுப்பு எழுத்து வைக்கிளிஃப் பைபிளையும் நான் உங்களுக்குத் தருகிறேன். என் முன்னோர்களிடமிருந்துó நான் ஸ்வீகரித்தது அந்த வைக்கிளிஃப்.”

“ஒரு கறுப்பெழுத்து வைக்கிளிஃப்”, என்று அவன் முணுமுணுத்தான். என் படுக்கை அறைக்குச் சென்று பணத்தையும் புத்தகத்தையும் அவனுக்குக் கொண்டு வந்தேன். பக்கங்களைப் புரட்டி விட்டு, ஒரு நிஜமான பைபிள் ஆர்வலனுக்குரிய தீவிரத்துடன் ஆராய்ந்தான்.

“இந்தப் பண்டமாற்றுக்கு உடன்படுகிறேன்” என்றான் அவன்.

அவன் வாதாடாமல் இருந்தது எனக்குப் பெரும் வியப்பாக இருந்தது. பணத்தை எண்ணிப்பார்க்காமல் உள்ளே போட்டுக் கொண்டான். பிறகுதான் நான் அறிந்தேன் அந்தப் புத்தகத்தினை விற்க வேண்டும் என்ற முடிவோடுதான் என் வீட்டில் நுழைந்திருக்கிறான் என்று.

இந்தியாவைப் பற்றியும், ஓர்க்னி தீவுகளைப் பற்றியும், நார்வே நாட்டை ஒரு காலத்தில் ஆண்டு வந்த ஜார்மன்னர்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அந்த மனிதன் கிளம்பிச் செல்லும் போது இரவாகி விட்டிருந்தது. அவனை மீண்டும் நான் பார்க்கவும் இல்லை, அவனுடைய பெயரும் எனக்குத் தெரியாது.

அலமாரியில் வைக்கிளிஃப் பைபிள் எடுக்கப்பட்டதால் உண்டான இடைவெளியில் மணல் புத்தகத்தை வைக்க எண்ணி, கடைசியில் தொடர்ச்சியற்றுப் போயிருந்த ஆயிரத்தி ஒருஇரவுகள் தொகுதிகளுக்குப் பின்னால் மறைத்து வைப்பதென்று முடிவு செய்தேன். படுக்கைக்குச் சென்றேன், ஆனால் தூங்கவில்லை. காலை மூன்று அல்லது நான்கு மணி சுமாருக்கு விளக்கைப் போட்டேன். அந்த அசாத்தியப் புத்தகத்தை எடுத்து அதன் பக்கங்களைப் புரட்டினேன். அதில் ஒரு பக்கத்தில் செதுக்கு அச்சு செய்யப்பட்ட முகமூடியைப் பார்த்தேன். பக்கத்தின் மேற்புற மூலையில் என்னால் இனியும் ஞாபகப் படுத்த முடியாத பக்க எண் அதன் 9வது பெருக்கு உருவிற்கு  உயர்த்தப்பட்ட  நிலையில் இருந்தது.

என் பொக்கிஷத்தை நான் எவரிடமும் காட்டவில்லை.         அதனை உடைமையாகப் பெற்றிருக் கும் அதிர்ஷ்டத்துடன் அது களவு போய்விடும் என்ற பயமும் தொற்றிக் கொண்டது. சிறிய சித்திரங்கள்,இரண்டாயிரம் பக்கங்களுக்குப் பிறகு வந்தன. ஒரு கையேட்டில் அகர வரிசைப்படி அவற்றைப் பட்டியலிட்டேன். அது சீக்கிரமே நிரம்பி விட்டது. எந்த ஒரு சமயத்திலும் ஒரே சித்திரம் திரும்ப வரவில்லை. இரவில் என் தூக்கமின்மை அனுமதித்த சொற்ப இடைவெளிகளில் அந்தப் புத்தகத்தைக் கனவு கண்டேன்.

கோடை காலம் வந்தது, போயிற்று. அந்தப் புத்தகம் அமானுஷ்யமானது என்பதை உணர்ந்தேன். அந்தத் தொகுதியைக் கண்ணால் பார்த்து, கைகளால் பிடித்துக் கொண்டிருந்த, எந்த வகையிலும் அசுரத்தனம் குறையாத எனக்கு என்ன விதமான நலம் பயக்கும்? அந்தப் புத்தகம் ஒரு பீதிப்பொருள் என்றும், யதார்த்தத்தையே தாக்கி அசுத்தப்படுத்திய ஆபாசமானதென்றும் நான் உணர்ந்தேன்.

தீயைப் பற்றி யோசித்தேன். ஒரு எல்லையற்ற புத்தகத்தை எரிப்பதென்பது அதே போல எல்லையற்றதாகி இந்தப் பூமிக்கோளத்தையே புகையினால் மூச்சுத் திணறச் செய்யக் கூடுமென்று அஞ்சினேன். ஒரு இலையை மறைத்து வைப்பதற்கான சிறந்த இடம் காடுதான் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. பதவி ஓய்வு பெறுவதற்கு முன்னால், மெக்சிகோ தெருவில் இருந்த அர்ஜன்டீனாவின் தேசீய நூலகத்தில்–அதில் ஒன்பது நூறாயிரம் புத்தகங்கள் இருக்கின்றன– வேலை பார்த்தேன். அதன் நுழைவாயிலின் வலது பக்கத்தில் ஒரு வளைவான படிக்கட்டு பூமிக்குக் கீழிருந்த, புத்தகங்களும், சஞ்சிகைகளும், தேசப்படங்களும் வைக்கப்பட்டிருந்த அறைக்கு இட்டுச் செல்லும் என்பது எனக்குத் தெரியும். ஒரு நாள் நான் அங்கே சென்றேன். ஒரு அலுவலரைத் தாண்டி, அது எந்த உயரத்தில் இருந்தது என்பதை அறிய முயலாமலும், கதவிலிருந்து அது எவ்வளவு தூரம் என்பதையும் கவனியாது, பூமியடியில் இருந்த பழுப்பேறிய அலமாரிகளில் ஒன்றில் மணல் புத்தகத்தைத் தொலைத்தேன்.

Translated  by Norman Thomas di Giovanni

Borges’s Notes on his stories-ஜோர்ஜ் லூயி போர்ஹே – அலெஃப் , வட்டச் சிதிலங்கள், மரணமும் காம்பஸ் கருவியும்- பற்றிய குறிப்புகள்

borges-sribe1

ஜோர்ஜ் லூயி போர்ஹே – அலெஃப் , வட்டச் சிதிலங்கள், மரணமும் காம்பஸ் கருவியும்- பற்றிய குறிப்புகள்

அலெஃப் கதை பற்றிய குறிப்புகள்

ஜோர்ஜ் லூயி போர்ஹே

காலத்திற்கு நித்தியத்துவம் எப்படியோ அப்படித்தான் புவிவெளிக்கு அலெஃப். நித்தியத்துவத்தில் கடந்த, நிகழும், மற்றும் எதிர் காலங்கள் ஒரே சமயத்தில் சேர்ந்திருக்கும். அலெஃபில், வெளி தொடர்பான பிரபஞ்சத்தின் மூலமொத்தத்தையும் ஒரு சின்னஞ்சிறிய ஒரு அங்குலத்திற்கு மேற்படாத விட்டம் கொண்ட ஒளிரும் கோளத்தினில் பார்க்க முடியும். என்னுடைய கதையை எழுதிய போது, நம்ப முடியாப் புனைவுக் கதை வாசகனால் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்க வேண்டுமானால் நம்பமுடியாத புனைவுக் கதைகளில் ஒரு சமயத்தில் ஒரேயொரு நம்புவதற்கியலா அம்சம் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற வெல்ஸின் கருத்தினை நினைவு கொண்டேன். உதாரணத்திற்கு செவ்வாய்க்கிரகத்து மனிதர்களால் நமது பூமி படையெடுக்கப் படுவது பற்றி ஒரு புத்தகத்தையும், இங்கிலாந்தில் இருக்கக் கூடிய கண்ணுக்குத் தெரியாத ஒரே ஒரு மனிதன் பற்றி ஒரு புத்தகத்தையும் வெல்ஸ் எழுதியிருக்கிற போதிலும் நம் பூமியைக் கைப்பற்ற வரக்கூடிய கண்ணுக்குத் தெரியாத பல ஆயிரம் மனிதர்கள் பற்றி அவர் எழுத முற்படுவதை விவேகமாகத் தவிர்த்தார்.  அலெஃப்பை ஒரு பிரமிப்பூட்டும் பொருள் என்று பாவித்து, என்னால் கற்பனை செய்யக் கூடியதிலேயே மிகவும் கவர்ச்சியற்ற ஒரு பின்ணனியில் அதை வைத்தேன்–போனஸ் அயர்சின் கர்நாடகமான பகுதிகளில் ஒன்றில் இருந்த வெகுசாதாரண வீட்டின் சிறிய நிலவறையில் இருக்கும்படி. அரேபிய இரவுகளின் உலகத்தில் மந்திர விளக்குகள் மற்றும் மோதிரங்கள் முதலியவை கேட்பாரற்றுக் கிடக்கின்றன, அவை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. நம்முடைய எதிலும் நம்பிக்கை வைக்க முடியாத உலகில், நாம் விநோதமான பொருள்கள் மற்றும் கலவரமூட்டும் விஷயங்களை சுத்தப்படுத்தி சரியாக வைக்க வேண்டும். இங்ஙனமே, அலெஃப் கதையின் இறுதியில் அந்த வீடு இடித்துத் தள்ளப்பட்டு அதனுடன் அந்த ஒளிரும் கோளமும் அழிக்கபட்டாக வேண்டியிருந்தது.

ஒரு சமயம், மேட்ரிட் நகரில், ஒரு பத்திரிகையாளர், “போனஸ் அயர்ஸ் நகரம் நிஜமாகவே ஒரு அலெஃப்பைக் கொண்டிருந்ததா?” என்று என்னிடம் கேட்டார். நான் ஏறத்தாழ சபலத்திற்கு ஆட்பட்டு, “ஆம்” என்று சொல்லிவிட்டேன். ஆனால் நண்பர் ஒருவர் இடையில் புகுந்து அப்படிப்பட்டதொரு பொருள் மட்டும் இருக்குமானால் அது உலகத்திலேயே மிகவும் பிரபலமானதாக மட்டும் இல்லாமல் நமது காலம், வானவியல், கணிதவியல் மற்றும் புவிவெளி ஆகியவை பற்றிய முழுமையான கருதுகோள்களையே புதுப்பித்துவிடக்கூடியதாக இருக்கும் என்று கூறினார். “ஓ” என்றான் பத்திரிகையாளன், “அப்படியானால் அந்த முழு விஷயமுமே உங்கள் கற்பனைதான். நீங்கள் தெருவின் பெயரைக் கொடுத்திருந்ததால் அது உண்மையாக இருக்கும் என்று நினைத்தேன்.”  தெருக்களுக்குப் பெயரிடுவது அப்படி ஒன்றும் பிரமாதமான சாதனை இல்லை என்பதை நான் சொல்லத் துணியவில்லை.

அந்தக் கதையை எழுதுவதில் எனக்கு இருந்த பிரதான பிரச்சனை,  வால்ட்விட்மேன் மிக வெற்றிகரமாக சாதித்திருந்த விஷயத்தில் இருந்தது–முடிவற்ற வஸ்துக்களின் எல்லைக்குட்பட்ட அட்டவணையை தயாரிப்பது. காரியம், வெளிப்படையாகத் தெரிவது போல, அசாத்தியமானது. ஏன் எனில் அப்படிப்பட்ட பெருங்குழப்பமான எண்ணியெடுத்தலினை பாவனை செய்ய மட்டுமே முடியும். மேலும் ஒவ்வொரு வெளிப்படையான தாறுமாறான பொருளும் அதனுடைய அருகாமையில் உள்ளதுடன் ஒரு ரகசிய ஒற்றுமைப் பகிர்வினாலோ அல்லது வேறுபாட்டி னாலோதான் இணைக்கப்பட வேண்டியுள்ளது.

அலெஃப் அதன் வேறுபட்ட அம்சங்களுக்காக வாசகர்களின் பாராட்டினைப் பெற்றிருக்கிறது. நம்புவதற்கரிய விநோதம், கிண்டல், வாழ்க்கைச் சரிதம் தொடர்பானவை, மற்றும் அவலச்சுவை முதலானவை. எவ்வாறாயினும்  செறிவடர்த்திச் சிக்கல்கள் மற்றும் புதிர்வழிசுழல் மீதான நமது இன்றைய வழிபாடு தவறுதானோ என்று சமயங்களில் தோன்றுகிறது எனக்கு. ஒரு சிறுகதையானது அவ்வளவு அதிக சாதனைக் குறிக்கோள் கொண்டதாக இருக்கத்தான் வேண்டுமா என நான் வியக்கிறேன். விமர்சகர்கள் இதற்கு மேலும் போய், பியட்ரிஸ் விட்டர்போவின் கதாபாத்திரத்தில் பியட்ரிஸ் போர்ட்டினாரியின் பாத்திரத்தினையும், டேனரியின் பாத்திரத்தில் தாந்தேவையும், நிலவறையில் இறங்குதலை நரகத்தில் இறங்குவதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். உள்ளபடியே, நான் இந்த எதிர்பாராத பரிசுகளுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்.

பியட்ரிஸ் விட்டர்போ நிஜமாகவே இருந்தாள். நானும் மிகவும் அதிகமாய், ஆனால் நிறைவேறும் சாத்தியப்பாடு இல்லாமல் அவளைக் காதலித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கதையை அவளுடைய இறப்பிற்குப் பிறகு எழுதினேன். கார்லோஸ் அர்ஜன்டீனோ டேனரி என் நண்பர், இன்னும் உயிரோடு இருக்கிறார், இன்று வரை இந்தக் கதையில் அவர் இருக்கிறார் என்ற சந்தேகம் கொள்ளாமல். செய்யுள்கள் அவருடைய செய்யுள்களை பரிகாசம் செய்து எழுதப்பட்டவை. ஆகிலும் டேனரியின் பேச்சு மிகைப்படுத்திக் கூறப்படவில்லை. நேர்மையான பதிவாகும் அது. அர்ஜன்டீனிய எழுத்தாளர்களின் அகாதெமி இந்த மாதிரி வகைமாதிரிகளுக்கு வாழ்விடம்.

வட்டச் சிதிலங்கள் பற்றிய குறிப்புகள்

எதுவுமோ அல்லது எவருமோ தனது காரணார்த்திலிருந்தே தோன்றுகிறதான–அதாவது அதன் காரணம் அதுவே–என்கிற அறிவுத்தோற்றவியல் விவாதம், ஸ்பினோசா மற்றும் தத்துவப் பள்ளி சிஷ்யர்கள் கூறுவது போல இருப்பது வார்த்தை விளையாட்டுக்கள் போலவோ அல்லது மொழிக்கு இழைக்கப்பட்ட வன்முறை போலவோ எனக்கு எப்போதுமே தோன்றியிருக்கிறது. என் கருத்தில், ஒரு பேச்சானது ஒரு பேசுபவனையும் ஒரு கனவானது ஒரு கனவு காண்பவனையும் உள்ளுணர்த்துகிறது. இது, வாஸ்தவமாக, ஒரு முடிவற்ற எண்ணிக்கையற்ற பேசுவர்கள், கனவுகாண்பவர்கள் ஆகியோரின் தொடர்ச்சிகளின் கருதுகோளுக்கு இட்டுச் செல்கிறது. இதன் முடிவு, ஒரு முடிவே இல்லாத பின்னடைவுக்கு இட்டுச் செல்கிறது. ஒரு வேளை அதுதான் என் கதையின் வேராக அமைந்திருக்கிறதோ என்னவோ. இயல்பாக நான் அதை எழுதியபோது கதையை இப்படிப்பட்ட அரூபமயமான விஷயங்களுடன் சிந்தித்துப் பார்க்கவில்லை. அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு, சதுரங்கம் பற்றி ஒரு ஜோடி சானெட்டுகளை(14 வரி கவிதைகள்) எழுதியபோது நான் மீண்டும் அந்த கருத்தாக்கத்தினை எடுத்துக் கொண்டேன்.  தாங்கள் ஒரு விளையாடுபவனால் வழிகாட்டப்படுகிறோம் என்று சதுரங்கக் காய்களுக்குத் தெரியாது. விளையாடுபவனுக்குத் தெரியாது தான் ஒரு கடவுளால் வழி நடத்தப்படுகிறோம் என்பது. அந்தக் கடவுளுக்குத் தெரியாது வேறு எந்தக் கடவுளர்கள் அவரை வழிநடத்திச் செல்கிறார்கள் என்பது. பல ஆண்டுகள் கழித்து, லபோக்குக்கு வருகை தந்த போது, டெக்சாஸ் பேன் ஹாண்டிலில், வேறு ஒரு கவிதையை எழுதுவதன் மூலம் –கோலம்– வட்டச் சிதிலங்கள் கதையை நான் பிரக்ஞாபூர்வமாக நான் திருப்பி எழுதுகிறேனா என்று என்னிடம் ஒரு பெண் கேட்டாள். இல்லை என்றுதான் பதில் கூறினேன், ஆனால் எனக்குள் இருந்த இந்த எதிர்பார்த்திராத ஒத்த தன்மையைச் சுட்டிக் காட்டியதற்காக நான் அவளுக்கு நன்றி தெரிவித்தேன். உள்ளபடியே, பாலைவனத்தின் விளிம்பு பிரதேசத்திற்கு, நூற்றுக் கணக்கான மைல் தூரம் பயணம் செய்வது, என்னைப் பற்றிய இந்த சிறு தகவலை அடைவதற்கு என்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

வாசகர்கள் வட்டச் சிதிலங்களை என்னுடைய சிறந்த கதை என்று நினைத்திருக்கிறார்கள். இந்தக் கதை தொடர்ந்து முடியும் விளிம்பான நுணுக்கமான எழுத்தினை நான் ஒரு புதிய எழுத்தாளனுக் குரிய பிசகு என்று  நினைப்பதால் அந்தக் கருத்தை நான் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. செய்யப்பட்டுத்தான் ஆக வேண்டுமானால், இந்த மாதிரிக் கதைக்கு இந்த மாதிரியான எழுதுதல்தான் அவசியமாகிறது என்று ஒருவர் சொல்லக் கூடும். அதன் திட்டம் சற்று காலாதீதமாக இருப்பதும், அதன் மங்கலான கீழைநாட்டுப் பின்னணியும் இதற்கு காரணம் தருகின்றன. தலைப்பே கூட பித்தகோரஸ் மற்றும் கீழைநாடுகளின் சுழல்காலம் பற்றித் தெரிவிக்கின்றன.

லூயி கரோலிடமிருந்து இந்தக் கதைக்கான முகப்பு மேற்கோள் எனக்குக் கிடைத்தது. அது அந்தக் கதையின் வித்தாகக் கூட இருக்கலாம். நான் வாழ்க்கையை ஒரு கனவாகப் பார்க்காது இருந்திருப்பேனாயானால்– அந்த வித்து, கோடிக்கணக்கான வாசகர்கள் அறிந்திருந்தது–விதை சாலுக்கு வெளியே விழுந்திருக்கக் கூடும்.

1940இல் நான் வட்டச் சிதிலங்களை எழுதியபோது, அதற்கு முந்தி என்னை நடத்திச் செல்லாத அளவுக்கு நடத்திச் சென்றது அதற்குப் பிறகும் அப்படி நடத்திச் செல்லுதல் நிகழவில்லை. முழுக் கதையுமே ஒரு கனவு, அதை எழுதும்போது, முனிசிபல் நூலகத்தில் என் வேலை, திரைப்படங்களுக்குச் செல்லுதல், நண்பர்களுடன் உணவருந்துதல் போன்ற தினசரிக் காரியங்கள் ஒரு கனவு போலவே தோன்றின. அந்த ஒரு வார காலத்தில் நிஜமாக இருந்தது அந்தக் கதை ஒன்றுதான்.

மரணமும் காம்பஸ் கருவியும் பற்றிய குறிப்புகள்

1923ஆம் ஆண்டிலிருந்து என்னால் ஆன அனைத்தையும் செய்தும் கூட போனஸ் அயர்சின் கவிஞனாக வெற்றிகரமாக ஆக  முடியவில்லை. 1942இல் இந்த நகரத்து இரவு பீதிக்கனவுப் பதிவினை மரணமும் காம்பஸ் கருவியும் சிறுகதையில் பதிவு செய்தபோது,  கடைசியாக என் சொந்த நகரின் போதுமான அளவு அடையாளப்படுத்தக் கூடிய படிமத்தினை உருவாக்க முயன்றிருக்கிறேன் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். சில இட அமைப்பியல் சார்ந்த விளக்கமூட்டல்கள் ஒழுங்கமைவில் இருக்கக் கூடும். ஹோட்டல் து நார்ட், நிஜமான பிளாசா ஹோட்டலைக் குறிக்கிறது. அதில் இடம் பெறும் கழிமுகம் ‘ரியோ த லா பிளேட்டா’வாகும். இதை லுகோன்ஸ் “பெரும் சிங்க நிறத்திலான நதி” என்று அழைத்திருக்கிறார். இதுவே எடுவர்டோ மேலியா என்பவரால் “இயக்கமற்ற நதி” என்று இன்னும் சிறப்பான முறையில் சொல்லப் பட்டிருக்கிறது. ‘ரூ த தோலோன்’ நிஜத்தில் ‘பேஸியோ கொலோன்’ ஆகும். அதனுடைய ரௌடித்தனத்தைப் பொருத்தவரை இன்று ‘லியான்ரோ ஆலெம்’ என்று அழைக்கப்படும் பழைய ‘பேஸியோ த ஜூலியோவா’கும். அமாண்டா மோலினா வேடியா கண்டுபிடித்த அழகான பெயர்தான் ‘ட்ரிஸ் லா ராய்’. அது ஆன்ட்ரோக் நகரில் இருந்த, தற்போது இடிக்கப்பட்டுவிட்ட ஹோட்டல் லாஸ் டீலியாஸைக் குறிக்கும். (அமாண்டா அவளுடைய படுக்கையறையின் சுவற்றில் ஒரு கற்பனைத்  தீவின் வரைபடத்தைத் தீட்டியிருந்தாள். அவளுடைய வரைபடத்தில் நான் ட்ரிஸ் லா ராய் என்ற பெயரைக் கண்டுபிடித்தேன்.) யதார்த்தம் பற்றிய எல்லாவிதமான சந்தேகத்தையும் தவிர்க்க விரும்பி, பெயர்களின் திரித்தல்களுடன் கதையை ஒரு காஸ்மாபொலிட்டன் பின்னணியில், எந்தவிதமான குறிப்பிட்ட பூகோள அமைப்பிற்கும் அப்பால் அமைத்தேன். பாத்திரங்களின் பெயர்கள் இதை மேலும் நிரூபணம் செய்யும். ட்ரெவிரேனஸ் என்பது ஜெர்மானியப் பெயர், “அஸிவேடோ யூத மற்றும் போர்ச்சுகீசியப் பெயர். “யார்மோலின்ஸ்கி ஒரு போலந்து யூதப் பெயர். ஃபின்னகன் ஐரிஷ் மொழியிலிருந்து வந்தது, “லோன்ராட் ஸ்வீடன் நாட்டுடையது.

காலம் மற்றும் இடம் பற்றிய அமைவுகள் கதை முழுவதிலும் தொடர்ந்து வருவதைக் காண முடியும். ஒரு முக்கோணம் தெரிவிக்கப்பட்டாலும் அதன் தீர்வு நிஜத்தில் சாய்சதுரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. வெளிப்படையாக கடத்தல்காரர்கள் போலத் தோற்றமளிப் பவர்களின் கேளிக்கை உடைகளின் மீதிருந்தும், ‘திரிஸ் லா ராய்’ ஜன்னல்களில் இருந்தும், கடவுளின் நான்கு மடக்குப் பெயரான டெட்ராகிராமட்டான் என்பதிலிருந்தும், இந்த சாய்சதுரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. கதையின் பக்கங்களின் ஊடாக ஒரு சிவப்பின் சரடும் ஓடுகிறது. ரோஜா நிறத்துச் சுவர்களின் மீது வரும் சூரியாஸ்தமனம், அதே காட்சியில் இறந்த மனிதனின் முகத்தில் சிதறியிருக்கிற ரத்தம் இது போன்றவை. துப்பறிபவனின் பெயரிலும், துப்பாக்கிக் காரனின் பெயரிலும் இந்த சிவப்பைப் பார்க்கலாம்.

கொல்லப்படுபவனும் கொல்பவனும் ஆகிய இருவரின் மனமும் ஒரே மாதிரி இயங்குகின்றன, ஒரு வேளை அவர்கள் இருவரும் ஒரே மனிதனாக இருக்கலாம். தன்னுடைய சாவுப் பொறியிலேயே சென்று மாட்டிக் கொள்ளும் அளவுக்கு, லோன்ராட் , நம்ப முடியாதபடிக்கு முட்டாள் கிடையாது. இது ஒரு குறியீட்டு  வழியில் தற்கொலை செய்து கொள்ளும்  மனிதன் ஒருவனைக் குறிக்கிறது. இது அவர்கள் இருவரின் பெயரிலும் உள்ள ஒத்ததன்மைகளை வைத்துத் தெரிவிக்கப்படுகிறது. “லோன்ராட் என்பதன் இறுதி அசை ஜெர்மன் மொழியில் சிவப்பு என்று அர்த்தப்படுகிறது. ரெட் ஸ்கார்லாக் என்பதும் ஜெர்மன் மொழியில் சிவப்பு ஸ்கார்லெட் என்று அர்த்தப்படுகிறது. யூத இறையியலான கப்பாலாவைப் பற்றித் திரும்பத் திரும்பக் குறிப்பிடுவதற்கு மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை. அது வாசகனுக்கும், மிக நுணுக்கமான துப்பறியும் நிபுணனுக்கும் ஒரு தவறான வழித்தடத்தைத் தருகிறது. கதை, முக்கால்வாசிப் பெயர்கள் தெரிவிக்கிறபடி யூதத்தன்மையானது. கப்பாலா  மர்மம் பற்றிய இன்னும் கூடுதலான அறிதலைத் தருகிறது.

முக்கால்வாசிக் கதைகளைப் போலவே மரணமும் காம்பஸ் கருவியும் அதன் பொதுமையான சூழ்நிலையை வைத்தே நிலைக்க வேண்டும் அல்லது வீழ்ச்சி அடைய வேண்டும். அதனுடைய கதைத் திட்டத்தை வைத்து அல்ல. அது இன்றைக்கு மிகவும் கர்நாடகமாகவும்  அதன் காரணத்தினாலேயே ஈர்ப்பில்லாமலும் இருக்கிறது. போனஸ் அயர்சையும் அதன் தெற்குப் புறநகர்ப்பகுதிகளின் பல ஞாபகங்களையும் இந்த முரட்டுத்தனமான கதையில் பதித்திருக்கிறேன்.  மிகவும் மனோரம்மியமானதும் விசாலமானதுமான ஹோட்டல் லா டீசியாஸின் திரிக்கப்பட்ட உச்ச வடிவமே ட்ரிஸ் லா ராய். பலருடைய ஞாபகங்களில் அந்த ஹோட்டல் இன்னும் வாழ்ந்திருக்கிறது. நிஜமான ஹோட்டல் பற்றி ஒரு மிக நீளமான, “ஆன்ட்ரோக் என்று தலைப்பிடப்பட்ட இரங்கல் பாட்டை நான் எழுதியிருக்கிறேன்.

கதையின் கடைசியில் வரும் நேர்க்கோட்டுப் புதிர்ச் Zeno of Eleatic *. இடமிருந்து பெறப்பட்டது

*கிரேக்க தத்துவஞானி (கி.மு.490-430).

குறுக்கீட்டாளர் கதை பற்றி

1965ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தின் போது, போனஸ் அயர்சின் புத்தக நுணுக்கரான குஸ்தாவோ ஃபில்லோல் டே அந்த சிறந்த, மகிழ்ச்சியான, சிலருக்கு மாத்திரமே கிடைக்கக் கூடிய ரகசிய பதிப்புகளில் வெளிவரும் வெளிவரும் ஏட்டில் அவர் வெளியிடும் பொருட்டு என்னிடம் ஒரு சிறுகதை வேண்டுமென்று கேட்டார். அந்த சமயத்தில் நான் கிப்ளிங் எழுதிய Plain Tales from the Hills-ஐ நூலை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்தேன். நான் ஒரு கதையை மனதில் கொண்டிருந்ததாக ஃபிலோலிடம் சொன்னேன். இளம் கிப்ளிங்கின் சுருக்கத்தன்மையும் நேரடியாகக் கதை சொல்லும் தன்மையும் என்னை சபலத்திற்கு உட்படுத்தின. காரணம், நான் எப்போதுமே பன்முகங்கள் கொண்ட அடர்ந்த விவரணைகளையே எழுதியிருக்கிறேன். சில மாதங்கள் கழித்து நான் வேலைக்கு ஆயத்தமானேன், 1966ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறுக்கீட்டாளர் கதையை என் அம்மாவிடம் எழுதிக் கொள்ளச் சொன்னேன்.

நான் எந்த சந்தேகமும் கொள்ளாமலேயே, இந்தக் கதையின் குறிப்பு–ஒரு வேளை நான் எழுதியதிலேயே மிகச்சிறந்தது– இருபதுகளின் கடைசியில் எனது நண்பரான டான் நிக்கலஸ் பாரதெரஸ் இடம் நான் யதேச்சையாகப் பேசிக் கொண்டிருந்த உரையாடலில் இருந்து வந்தது– டேங்கோ பாடல்களின் சீரழிவு பற்றி விமர்சனம் செய்து கொண்டிருந்த போது.  செண்ட்டிமென்டலான அடியாட்குழுத்தலைவர்கள் தங்கள் காதலிகளால் வஞ்சிக்கப்பட்டதால் அவை அப்போதுமே உரத்த கழிவிரக்கம் கொண்டிருந்தன. பாரதெரஸ் வறட்சியாகக் குறிப்பிட்டார். நிதானமாக ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பெண்ணைப் பற்றிச் சிந்திக்கிற எந்த மனிதனும் ஒரு மனிதனே இல்லை, அவன் விநோதமானவன். அத்தகைய மனிதர்கள் மத்தியில் காதல் என்பது சாத்தியமே இல்லாதிருந்தது. அவர்களின் நிஜமான ஆர்வம் நட்பில்தான் என்று எனக்குத் தெரியும். இந்த மாதிரியான சில அரூபமான கருத்தாக்கங்களில் இருந்து எனது கதையை நான் உருவாக்கினேன். எவருமே அதன் தகவல்களைப் பற்றி வாதிக்க முடியாதபடி எழுபது வருடங்களுக்கு முந்திய போனஸ் அயர்சின் தெற்குப் பகுதியில் ஏறத்தாழ ஒரு பெயரற்ற நகரத்தில் இந்தக் கதையை நான் அமைத்தேன். நிஜத்தில் இரண்டு சகோதரர்களைக் கொண்ட இரு பாத்திரங்கள் மாத்திரமே உள்ளன. அவர்களில் பெரியவன் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்கவே நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். அவன்தான் எல்லா முடிவுகளையும், இறுதி முடிவினைக் கூட எடுப்பவன். உள்ளபடி எசகு பிசகான புரிந்து கொள்ளல்களைத் தவிர்க்கும் பொருட்டு சாத்தியத்தின் வகையிலே அவர்கள் இருவரையும் நான் சகோதரர்களாக்கினேன்.

கிறிஸ்டியன் எத்தகைய வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்பது உறுதியில்லாமல் கதையின் இறுதியில் எனக்குத் தடங்கல் ஏற்பட்டுப் போயிற்று. ஆரம்பத்திலிருந்தே, அந்தக் கதையை முற்றிலுமாக வெறுத்த என் தாயார், அந்தக் கட்டத்தில் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் எனக்குத் தேவைப்பட்ட வார்த்தைகளைத் தந்தார்.

குறுக்கீட்டாளர் கதைதான் என்னுடைய நேரடியாகக் கதைகள் சொல்லும் புதிய முயற்சியில் முதலாவது. இந்தத் தொடக்கத்திலிருந்து பிற கதைகள் எழுதச் சென்றேன். இறுதியாக அவற்றை Doctor Brodie’s Report என்ற தொகுதியாக சேகரித்தேன்.


ரோசென்டோவின் கதை பற்றிய குறிப்புகள்

இந்தக் கதை என்னுடைய மற்றொரு கதையான தெருக்கோடி மனிதன் என்ற கதையின் தொடர்ச்சியாகவும் அதன் முறிப்பானாகவும் நான் எழுதியது. தெருக்கோடி மனிதன் தவறுதலாக ஒரு யதார்த்தக் கதையாகப் படிக்கப் பட்டிருந்தது. ரோசென்டோவின் கதை, ஃபிரான்சிஸ்கோ ரியால் கொலை செய்யப்பட்ட இரவு, உள்ளபடியே நிகழ்ச்சிகள் எவ்வாறு நடந்திருக்கலாம் என்பதைப் பற்றிய வலிந்த யூகித்தலாக அமைகிறது. தெருக்கோடி மனிதனை நான் எழுதியபோது, நான் அந்த சமயத்திலே சுட்டிக் காட்டியபடி, அதன் நாடகத்தனமான பொய்த்தன்மையைப் பற்றி முழுவதும் உணர்ந்திருந்தேன். வருடங்கள் கடந்த பிறகு, எவ்வாறாயினும் அந்தக் கதை நான் தர்மசங்கடம் அடையும்படிக்கு பிரபலமாயிற்று.  மதிப்பு வைத்து மரியாதை செய்யப்பட்ட-  அந்த சரியான முட்டாள் நானில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன்.

ஆங்கிலக் கவிஞரான ராபர்ட் ப்ரௌனிங்கை நான் மறுவாசிப்பு செய்து கொண்டிருந்தேன். அவருடை Ring and the Book லிருந்து, ஒரு கதையானது, பல வேறுபட்ட பார்வைத் தளங்களில் இருந்து சொல்லப்பட முடியும் என்று தெரிந்து கொண்டேன். முதல் வடிவத்தின் கோழை போல வெளித்தோற்றத்தில் தெரியும் ரோசென்டோ யூவரஸ் அவன் வழியில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன். தெருக்கோடி மனிதனில் வறட்டு வீரம் பேசிக் கொண்டிருக்கும் மனிதனிலிருந்து நமக்கு, ரொமாண்டிக் அர்த்தங்கெட்டதன்மையிலிருந்தும், சிறுபிள்ளைத்தனமாக கத்திச் சண்டையிடுவதில் கிடைத்த தற்பெருமையிலிருந்தும் வெளிவந்து, இறுதியாக மனிதத்தன்மையையும் ஸ்வாதீனத்தையும் அடையும் ஒரு விதமான, பெர்னாட் ஷா தன்மையான கதாபாத்திரம் நமக்குக் கிடைக்கிறது. முதல் தரம் சொல்லிய போது, ஃபிரான்சிஸ்கோ ரியால் நெஞ்சில் குத்துப் பட்டு இறந்து போகிறான் என்று எழுதினேன். வருந்தற்குரிய விதத்திலும், நிஜமாகவும், அவன் லா லூஜனேராவுடன் ஒரு சாக்கடையில் புணர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது முதுகில் குத்தப்பட்டு இறந்தான்.

கதை நடந்த காலத்தில், அடியாட்களுக்கும் கொலைகாரர்களுக்கும் அதிகாரிகள் உதவி செய்தார்கள். குற்றம் புரிய உதவி செய்தார்கள் அதிகாரிகள். காரணம், அதில் முக்கால்வாசிப் பேர் முன்னணி அரசியல்வாதிகளின் அதிகாரபூர்வமான மெய்க்காப்பாளர்களாக இருந்ததுதான். தேர்தல்கள் நடக்கும் சமயத்தில் ஓட்டுப் போட வருபவர்களை பயமுறுத்தி அனுப்புவதற்கும் அவர்கள் பயன்படுத்தப் பட்டார்கள். போலீசின் பக்கபலம் இருப்பதால் சட்டத்தில் சிக்காமல் செயல்பட முடியும் என்று அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள்.  எப்போதுமே அவர்கள் வெளியேற்றப்பட்டவர்கள் கிடையாது. எளிமைப்படுத்திச் சொல்வதானால் வலுவான கரம் கொண்ட மனிதர்கள் அவர்கள். ஆன்ட்ரோக் நகரில் பாதிரியார் ஒருவர் கூறிய சம்பவத்தை நினைவு கூர்கிறேன். ஒரு தேர்தல் சமயத்தில் பாதிரியார் வாக்குச் சாவடிக்குச் சென்றபோது, அங்கிருந்த உள்ளுர் ரௌடியால் இப்படிச் சொல்லப்பட்டார்: “ஃபாதர். நீங்கள் ஏற்கனவே உங்கள் ‘ஓட்டைப்’ போட்டாகிவிட்டது.”

கதையில் கறுப்பு உடையணிந்து பாரெதஸூக்கான கடிதத்தினை எழுதும் அந்த இளைஞன் எவரிஸ்டோ காரிகோ என்ற நிஜக்கவிஞன்.பெட்ரோல் நிலையம் இடாலோ கால்வினோ தமிழில் பிரம்மராஜன்

பெட்ரோல் நிலையம்

இடாலோ கால்வினோ

தமிழில் பிரம்மராஜன்

அது பற்றி நான் முன்பே யோசித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. பன்னிரண்டரை மணிக்கு மேலாகிவிட்டது. நான் நிரப்பிக் கொள்ள மறந்துவிட்டேன். சேவை நிலையங்கள் மூன்று மணிவரை மூடியிருக்கும். ஒவ்வொரு வருடமும் பூமியின் பாறை மடிப்புகளில், லட்சக்கணக்கான நூற்றாண்டுகளாய் மணல் மற்றும் களிமண் படிவங்களுக்கு இடையிலாக சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு மில்லியன் கச்சா எண்ணெய் மேலே கொண்டு வரப்படுகிறது. இப்பொழுது நான் புறப்பட்டால் பாதி வழியில் தீர்ந்துபோய் விடும் ஆபத்து இருக்கிறது. எச்சரிக்கை அளவைமானி கொஞ்ச நேரமாகவே டேங்க் ரிசர்வ்வில் இருக்கிறது என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறது. பூமிக்கு அடியிலான உலகளாவிய சேமிப்புகள் இருபது சில்லரை வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்று அவர்கள் கொஞ்ச காலமாகவே எச்சரித்து வந்திருக்கிறார்கள். அது  பற்றி  சிந்திப்பதற்கு  எனக்கு நிறைய நேரம்  இருந்தது.  எப்போதும்  போல  பொறுப்பில்லாமல்  நான் இருந்திருக்கிறேன். டேஷ்போர்டில் சிவப்பு விளக்கு மினுங்கி எரியத் தொடங்கும் பொழுது நான் கவனம் செலுத்துவதில்லை அல்லது விஷயங்களைத் தள்ளிப்போடுகிறேன். பயன்படுத்துவதற்கு முழு சேமிப்பும் இன்னமும் மிச்சமிருக்கிறது என்று எனக்கு  நானே  சொல்லிக் கொள்கிறேன் பிறகு மறந்து போய் விடுகிறேன். இல்லை, ஒரு வேளை, அதுதான் கடந்த காலத்தில், காற்று அளவுக்கே பெட்ரோல் அபரிமிதமாக இருந்த அந்த நாட்களில் நடந்திருக்கக் கூடும்.  கவனக் குறைவாக இருந்து விட்டு பிறகு அதைப் பற்றி மறந்து விடுவது. இப்பொழுது அந்த மினுங்கல்  வெளிச்சம்  வரும்  பொழுது அது ஒரு அபாயகரத்தையும், பெரும் அச்சுறுத்தலையும், ஒரே சமயத்தில் தெளிவின்றியும் ஆனால் நடந்து விடக்கூடியது என்கிற மாதிரியும் பரிமாற்றம் செய்கிறது.  பலவிதமான  பதற்றம்  நிறைந்த  சமிக்ஞைகள்  என எனது பிரக்ஞையின் மடிப்புகளுக்கிடையே படிந்து விடும் அவற்றுடன்  அந்த  செய்தியையும்  நான் எடுத்துப் பதிவு செய்து கொள்கிறேன். இது எனது ஒருவிதமான மனோநிலையில் கரைந்து விடுகிறது. அந்த மனோநிலையில் அதை என்னால் உதறிவிட முடிவதில்லை. அதே சமயம் அது அதன் விளைவானதொரு கச்சிதமான நடைமுறைக் காரியம் செய்வதற்கு என்னைத் தூண்டுவதில்லை. எடுத்துக் காட்டாக நான்  காண்கிற  முதல்  பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி நிரப்பிக் கொள்வதற்கு.  அல்லது  சேமிப்பதற்கான உள்ளுணர்வு என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறதா–ஒரு அனிச்சையான  கஞ்சத்தனம்?  என்னுடைய டேங்க் தீர்ந்து போகப் போகிறது என்பதை  நான்  உணர்கிற  மாதிரியே  எண்ணெய்  சுத்தகரிப்பு கையிருப்புகள் குறைந்து வருவதையும், எண்ணெய்க் குழாய்களின் போக்குகள் பற்றியும், மேலும் எண்ணெய்க் கப்பல்கள் பாரங்களுடன் கடல்களை உழுது செல்வதையும் உணர்கிறேன். டிரில் பிட்டுகள் பூமியின் ஆழங்களைத் துழாவுகின்றன.  ஆனால்  அழுக்கு  நீரைத்  தவிர  வேறு எதையும் மேலே கொண்டு வருவதில்லை.  ஆக்ஸிலேட்டரின் மீதான  எனது கால் நமது பூமிக்கோளம் சேமித்து வைத்திருக்கும் கடைசி பீற்றுதாரை சக்தியை அதன் மிக எளிய அழுத்தம் கூட எரித்து விடக் கூடும் என்ற உண்மையை உணர்வதாகிறது. என்னுடைய கவனம் கடைசி சொட்டு எரிபொருளை உறிஞ்சுவதில் நிலை கொள்கிறது. டேங்க் ஏதோ ஒரு  எலுமிச்சைப்  பழம்  என்பது  போலவும்  அதிலிருந்து  ஒரு சொட்டு கூட வீணாக்கப்படாமல் பிழியப்பட வேண்டும் என்பது போலவும் நான் பெடலை அழுத்துகிறேன். நான்  வேகத்தைக்  குறைக்கிறேன்.  இல்லை.  அதிகப்படுத்துகிறேன். என் உள்ளுணர்வு பூர்வமான எதிர்வினை, நான் எந்த அளவுக்கு வேகமாகச் செல்கிறேனோ அந்த அ
ளவுக்கு தூரமாக எனது பிழிதலில் இருந்து எனக்குக் கிடைக்கும் என்பதாக இருக்கிறது. மேலும் அது கடைசியானதாய் இருக்கவும் கூடும்.

நிரப்பிக் கொள்ளாமல் நகரத்தை விட்டுச் செல்லும் ஆபத்தில் நான் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. நிச்சயமாக  திறந்திருக்கும் ஒரு பெட்ரோல் நிலையத்தை நான் கண்டுபிடிப்பேன். நிழல்மரச் சாலைகளில் காரை ஓட்டிக் கொண்டு, வேறுபட்ட பெட்ரோலிய கம்பெனிகளின் வர்ண அறிவிப்புப் பலகைள் முளைத்து நிற்கும் நடைபாதைகளையும், மலர்ப்படுகைளையும் தேடிக் கொண்டு செல்கிறேன். முன்பு அவை இருந்த ஆக்கிரமிப்புடன் இன்றில்லை–அந்த நாட்களில் புலிகளும் பிற விலங்குகளும் நமது என்ஜின்களுக்குள்  தீப்பிழம்புகளை உமிழ்ந்த காலத்தில் போல.  மீண்டும் மீண்டும் நான் திறந்திருக்கிறது  என்ற  அறிவிப்புப்  பலகையைப்  பார்த்து முட்டாளாகிறேன். அதற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையம் வழமையான நேரத்தில்  திறந்திருக்கும் எனவே மதிய இடைவேளையின் போது மூடியிருக்கும்.  சில  நேரங்களில்  ஒரு பெட்ரோல்  நிலைய  உதவியாளன்  ஒரு மடக்கு  நாற்காலியில் அமர்ந்தபடி  சாண்ட்விச்சை  சாப்பிட்டுக் கொண்டோ, அல்லது,  அரைத் தூக்கத்திலோ இருக்கிறான். மன்னிப்பு கோரும் தோரணையில் அவன் கைகளை விரித்தும் காட்டுகிறான் சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றுதான் — எனது கேள்வி கேட்கும் சைகைகள்  நான் அவை அவ்வாறு ஆகும் என்று அறிந்திருந்தவாறு பயனற்றவையாகின்றன. சகலமும்  எளிமையாகத் தோன்றிய காலம் முடிந்து விட்டது, அதாவது மனித சக்தியானது இயற்கை சக்தியைப் போலவே நிபந்தனையற்றும் தீராவே தீராமலும் உங்கள் சேவையில் இருக்கிறது என நீங்கள் நம்ப முடிந்த காலம். அப்போது பெட்ரோல் நிலையங்கள் எல்லாமும் உங்கள் வழியில், வரிசையாக கவர்ச்சியுடன் முகிழ்த்தவாறு, அவற்றின் உதவியாளன் பச்சை அல்லது நீலம் அல்லது கோடுபோட்ட தொளதொள முழு அங்கியை அணிந்தவாறு வண்டுகள் கூட்டத்தின் அரைபடலால் காரின் முன்பக்கத்துக் கண்ணாடி அசுத்தப்பட்டுப் போனதைத் துடைப்பதற்குத் தயாராக நீர் சொட்டும் ஸ்பாஞ்சினை கையில் வைத்துக் கொண்டிருப்பான்.

அல்லது, மாறாக. ஒரு சில வேலைகளை மேற்கொண்டிருந்த சிலர் இருபத்தி நாலு மணி நேரமும் வேலை செய்து கொண்டிருந்த  காலங்களின்  முடிவுக்கும்,  சிலவித  பொருள்கள் என்றைக்குமே தீர்ந்து போகாது  என்று  நீங்கள்  கற்பனை செய்திருந்த காலங்களின் முடிவுக்கும் இடையில் ஒரு முழு வரலாறே இருக்கிறது–அதன் நீளம் ஒரு நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்  வேறுபடுகிறது, ஒரு தனிநபருக்கும்  இன்னொரு  தனிநபருக்கும் கூட.  அதனால் நான் சொல்கிறேன் இந்த கணத்தில் செழுமைச் சமுதாயங்கள் என்று  அழைக்கப் பட்டவற்றின்  எழுச்சியையும்,  உச்சத்தையும்  வீழ்ச்சியையும்  நான்  ஒரே  சமயத்தில்  அனுபவம்  கொள்கிறேன்– ஒரு சுழலும் டிரில் கருவி ஒரு கணத்தில் பிளியோசீனிய, கிரெடீசிய, டீரசீய படிவப் பாறைகளின் ஊடாக ஒரு மில்லினியத்திலும் அடுத்த மில்லினியத்திலும் நுழைவதைப் போல.

கிலோமீட்டர்மானி தந்திருக்கிற தகவல்களை உறுதி செய்து கொண்டு காலம் மற்றும் புவி வெளியில் எனது நிலைமையைக் கணக்கெடுக்கிறேன். இப்பொழுதான் முள் பூஜ்யத்திற்கு வந்து நிற்பதையும், எரிபொருள் மானி இப்பொழுது நிலையாக பூஜ்யத்தில் நிற்பதையும் காலக் கடிகாரத்தின் சிறிய மணிக்கை இன்னும் மேற்புற கால்வட்டத்தில் நிற்பதையும் பார்க்கிறேன். மதிய வேளைகளில் தண்ணீருக்கான ஒப்பந்தம் தாகமாக இருக்கும் புலியையும் மானையும் கலங்கிய ஒரே குட்டைக்குக் கொண்டு வந்தது போல என்னுடைய கார் அதன் எண்ணெய் ஒப்பந்தம் அதை, ஒரு பெட்ரோல் நிலையம் அடுத்து மற்றொன்றுக்கு ஓடச் செய்யும் பொழுது  பயனின்றி புத்துணர்ச்சிக்காகத் தேடுகிறது. கிரெடீசிய உயிர்களின் உச்சிவேளைப் பொழுதுகளில் கடலின் மேற்பரப்பில் பொங்கிப் பரவின–வாழ் உயிரிகள் நுண்ணிய பாசிக்கூட்டங்கள்  நுண்ணிய பாசிகளின் அடர்ந்த கூட்டம், ப்ளாங்க்டன்களின் மெல்லிய ஓடுகள், மிருதுவான கடல் பஞ்சுகள், கூர்மையான பவளப் பாறைகள்–அவற்றினூடாய் ஒரு வாழ்வு சாவைத் தொடரும் நீண்ட சுழற்சியில் தொடர்ந்து கொதித்து, அவற்றினூடாய் வாழ்ந்து கொண்டேயிருக்கும்  சூரியனைக் கொண்டிருக்கும் அவை. இவை ஒரு கனமற்ற விலங்கு மற்றும் தாவரக் கசடுகளின் மழையாய் மாற்றப்படும் பொழுது,  மேலோட்டமான நீர்களில் படிந்து, பிறகு சகதியில் அமிழ்ந்து, பின் கடந்து செல்லும் பிரளயங்களினால் வழியாக அவை கால்கரீயப் பாறைகளின் தாடைகளில் மெல்லப்பட்டு,  சின்க்லைன் மற்றும் ஆன்ட்டிக்கிளைன் ஆகிய மடிப்புகளில் செரிக்கப்பட்டு, அடர்த்தியான எண்ணெய்யாக மாற்றப்பட்டு, இருண்ட, பூமியின் அடியிலான போரோசைட்டு களின் வழியாக மேலே உந்தித் தள்ளப்படுகின்றன–அவை பாலைவனங்களுக்கு மத்தியில் பீச்சி அடிக்கும் வரை. பின்பு பிழம்புகளாக வெடித்து மீண்டும் ஒரு முறை பூமியின் தளத்தை ஒரு புராதன மதியம் போல கண்கூசும் ஒளியால் சூடாக்குகின்றன.

மேலும், இங்கே மதியத்தின் மத்தியில் உள்ள நாகரீக பாலைவனத்தில் ஒரு திறந்திருக்கும் சேவை நிலையத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். கார்களின் கூட்டம் ஒன்று அதைச் சுற்றி பரபரத்துக் கொண்டிருக்கிறது. உதவியாளர்கள் ஒருவருமில்லை. பணநோட்டுக்களை மெஷின்களில் எடுத்துக் கொள்ளக் கூடிய சுய சேவை நிலையங்களில் ஒன்றுதான் அது. குரோம் நிற பம்ப் நாஸில்களை அவற்றின் உறைகளில் இருந்து வெளியில் எடுத்தபடி சுறுசுறுப்பாக இருக்கின்றனர். இயக்கக் குறிப்புகளை வாசிப்பதற்காக அவர்களின் கையசைவுகளை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். தானாகவே உள்ளிழுத்துக் கொள்ளக் கூடிய ரப்பர் பம்ப்புகள் பாம்புகள் போல வளைகின்றன.  மாறுதல்களின் காலத்தில் உருவான,  எனது கைகள், எனது உயிர் பிழைப்புக்கான அத்தியவாசிய செயல்பாடுகளை வேறு கைகள் நிகழ்த்துவதற்குக் காத்திருந்து பழகிவிட்ட அந்த என்னுடைய கைகள் பம்ப்புடன் தடுமாறுகின்றன. இந்த நிலைமை நிலையானதல்ல என்பதை நான் எப்போதோ கொள்கை ரீதியில் அறிந்திருந்தேன். கோட் பாட்டளவில் என் கைகள் மனித இனத்தின் உடல் ரீதியான இயக்கங்கள் அனைத்தையும் மீட்டுக் கொள்வது தவிர வேறு எதையும் செய்ய விரும்பாது. பழங்காலத்தில் சீற்றம் மிகுந்த இயற்கையை இரண்டு வெறுங்கைகளால் மாத்திரம் நேர் கொண்டது மாதிரி இன்று காட்டுமிராண்டித்தனமான  இயற்கையை  விட அதிகம் எளிதாய், சந்தேகத்திற்கிடமின்றி இயக்கி விட முடியக் கூடிய யந்திர உலகத்தினை நாம்  எதிர் கொண்டிருக்கிறோம்.  நமது கைகள் இனி தமக்குத் தாமாகவே சமாளித்துக் கொண்டாக வேண்டிய, நமது தினசரி வாழ்வு சார்ந்திருக்கிற யந்திர உழைப்பினை பிற கைகளுக்கு மாற்றிக் கொடுக்க  இனி இயலாத உலகத்தில் இருக்கிறோம்.

நிஜத்தில் எனது கைகள் சிறிது ஏமாற்றம் அடைந் திருக்கின்றன.  பயன்படுத்துவதற்கு பம்ப் மிக எளிதாக இருக்கிறது.  சுயசேவை  நிலையங்கள்  ஏன்  பல  ஆண்டுகளுக்கு முன்னரே  சர்வ சாதாரணமாக ஆகவில்லை என வியக்க வைக்கிறது. ஆனால், ஒரு தானியங்கி சாக்லேட் விநியோக யந்திரத்தைப் பயன்படுத்துவதில் இருப்பதை விடவும் அல்லது வேறு எந்த பணம் எண்ணும் இயந்திரத்தை  இயக்குவதால் வருவதை விடவும் இதில் நீங்கள் கூடுதலான சந்தோஷத்தை பெறவில்லை. சிறிது கவனம் தேவைப்படும் ஒரே செயலாக்கம் பணம் செலுத்துவதில் அடங்கியிருக்கிறது. ஒரு சிறிய இழுப்பறையில் நீங்கள் ஒரு ஆயிரம் லயர் நோட்டை சரியாக வைக்க வேண்டும்–அதன் எலக்ட்ரிக் ஒளிக்கண் ‘குய்செப் வெர்டி’யின் தலை உருவப்பொறிப்பினை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு ஏற்றவாறு, அல்லது, ஒவ்வொரு வங்கி நோட்டின் குறுக்காகச் செல்லும் மெல்லிய உலோகப்பட்டியை அடையாளம் காணுமளவுக்கு குறுக்காகச் செல்லும்படி. அந்த நோட்டு விழுங்கப்படும் போது ஒரு வெளிச்சம் கிளம்பும்.  அப்பொழுது நான் விரைய வேண்டும், பம்ப்பின் நுனியை டேங்கின் வாயில் நுழைத்து  கச்சிதமாக, நடுங்கியபடி வரும் ஜெட்டை உள்ளே பொங்கிப் பீறிட நுழைக்க வேண்டும்.  இந்தப் பரிசினை நான் அனுபவிக்க விரைய வேண்டும். இது எனது அறிவுணர்வுகளை சந்தோஷப் படுத்துவதற்கு தகுதியற்றது எனினும் எனது போக்குவரத்து வழியாக இருக்கும் எனது உடற்பகுதிகள் அதற்கு ஆர்வத்துடன் ஏங்குகின்றன.  இவை எல்லாவற்றையும் சிந்தித்து முடித்ததுதான் தாமதம். அப்பொழுது ஒரு கூர்மையான ‘க்ளிக்’ ஓசையுடன் பெட்ரால் வருவது நின்று போய் சமிக்ஞைவிளக்குகள் அணைந்து போகின்றன. சில விநாடிகளுக்கு முன்பாக இயக்கி விடப்பட்ட சிக்கலான கருவி ஏற்கனவே இயக்கமற்று நிறுத்தப்பட்டுவிட்டது.  எனது சடங்குகள் உயிர் கொடுத்த நிலவுலகம் சார்ந்த சக்திகளின் நகர்வுகள் ஒரு கணத்திற்கு மேலாக நீடிக்கவில்லை.வெறும்  உலோகப் பட்டிகையாகக்  குறைக்கபட்ட ஆயிரம் லயர் நோட்டுக்கு மாற்றாக பம்ப் மிகக் குறைந்த அளவு பெட்ரோலையே தரும். கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை பதினோரு டாலர்.

நான் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். வேறு ஒரு நோட்டு, பிறகு மற்றது, ஒரு தடவைக்கு ஒரு ஆயிரம் என தர வேண்டும். பணமும் பாதாள லோகமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. அவை நீண்டகாலம் பின்னோக்கிச் செல்கின்றன. அவற்றின் உறவு ஒரு பிரளம் அடுத்து மற்றொரு பிரளயமாக வெளிப்பாடு காண்கிறது–சில நேரங்களில் மந்தமாகவும், சில நேரங்களில்  மிகத்  திடீரென்றும். எனது டேங்கை சுயசேவை நிலையத்தில் நிரப்பிக் கொண்டிருக் கையில் பாரசீக வளைகுடாவில் புதையுண்டிருக்கும் ஒரு கருப்பு ஏரியில் ஒரு வாயுக் குமிழி வீங்கி உயர்கிறது. ஒரு எமீர் மௌனமாக தனது அகன்ற வெண்ணிற சட்டையில்  மறைக்கப்பட்ட கைகளை உயர்த்தி தனது மார்புக்கு குறுக்காக மடிக்கிறார். ஆகாயத்தைத் தொடும் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் எக்ஸான் கம்ப்யூட்டர் ஒன்று எண்களை மெல்லுகிறது. கடலில் மிகத் தொலைவில் ஒரு சரக்குக்கப்பல் அது வேறு திசையில் செல்ல வேண்டும் என்ற ஆணையைப் பெறுகிறது. எனது பாக்கெட்டுகளில் நான் துழாவுகிறேன். காகிதப் பணத்தின் நோஞ்சான் சக்தி ஆவியாகிப் போகிறது.

என்னைச் சுற்றிலும் நான் பார்க்கிறேன். ஆளற்ற பம்ப்புகளுக்கிடையில் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருக்கிறேன்.  இந்த நேரத்தில்  திறந்திருக்கும் ஒரே பெட்ரோல்  நிலையத்தைச் சுற்றியிருந்த கார்களின் முன்வருதலும் பின்போதலும் எதிர்பாராத விதத்தில் நின்று போயிற்று.  ஏதோ மிகச் சரியான இந்தக் கணத்தில் பதுங்கிக் கொண்டிருந்த பிரளயங்களின் ஒருமிப்பு திடீரென்று அந்த உச்சபட்சமான பிரளயத்தை உருவாக்கி விட்டதைப் போல–ஒரே சமயத்தில்  பம்ப்புகள், கார்புரேட்டர்கள், மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் எண்ணெய்க் கிணறுகளின் குழாய் வழிகள் போன்ற சகலமும் வறண்டு போகின்றன. முன்னேற்றம் அதற்கான ஆபத்துக்கள் நிறைந்ததாகத்தான் இருக்கிறது, இதில் பொருட்படுத்தப்பட வேண்டியது என்னவென்றால் நீங்கள் இதையெல்லாம் முன்னரே எதிர்நோக்கி விட்டீர்கள் என்று சொல்ல முடிவதுதான். இப்பொழுது சமீப காலமாக எதிர்காலத்தை என்னால் அச்சமின்றி கற்பனை செய்ய முடிகிறது. என்னால் ஏற்கனவே வரிசை வரிசையான, நூலாம்படை படிந்த, கைவிடப்பட்ட கார்களைப் பார்க்க முடிகிறது.  இந்த நகரம் ஒரு பிளாஸ்டிக் காயலான் கடையாக சிறுத்துப் போவதையும், முதுகின் மேல் சாக்குகளுடன் திரியும் மனிதர்கள் எலிகளால் துரத்தப்படுவதையும்  இப்பொழுதே என்னால் பார்க்க முடிகிறது.

திடீரென்று இந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்ற ஏக்கத்தால் நான் பீடிக்கப்படுகிறேன். ஆனால், எங்கே போவது? எனக்குத் தெரியவில்லை. அதனால் பரவாயில்லை. ஒரு வேளை  சக்தியின் எந்தச் சிறு மிச்சம் விடப்பட்டிருக்கிறதோ அதை எரித்து சுழற்சியை முற்றுப் பெறச் செய்ய விரும்புகிறேனாக இருக்கலாம். இன்னும் ஒரு தாரைப் பெட்ரோலை வடித்து விட நான் கடைசி ஆயிரம் லயர் நோட்டைத் தோண்டி எடுக்கிறேன்.

ஒரு ஸ்போர்ட்ஸ் கார் பெட்ரோல் நிலையத்தில் வந்து நிற்கிறது. அதன் ஓட்டுநர் ஒரு இளம்பெண். அவளுடைய வழிந்தோடும் கூந்தல் சுழற்சிகளினாலும், கழுத்தை இறுக்கிப் பிடிக்கிற மாதிரி ஸ்வெட்டராலும் ஸ்கார்ஃபாலும் சுற்றப்பட்டு தெரிகிறாள். இந்த சிக்கு விழுந்த குவியலில் இருந்த ஒரு சிறிய மூக்கினை உயர்த்தியபடி சொல்கிறாள்: ”அவளை நிரப்பு”

நான் அங்கே பெட்ரோல் நிரப்பும் நாஸிலுடன் நின்று கொண்டிருக்கிறேன்.  நான் நிகழ்த்தும் இயக்கங்கள், நான் பயன்படுத்தும் பொருட்கள்,  நான் எதிர்பார்க்கும் மீட்பு என சகலமும் கவர்ச்சியில்லாமலிருக்கும் ஒரு உலகத்தில் குறைந்த பட்சம் அவை எரியும் பொழுது மகிழ்ச்சிகரமான ஞாபகங்களையாவாது விட்டுச் செல்லட்டும் என்பதற்கு வேண்டி இந்தக் கடைசி ஆக்டேன்களை அவளுக்கு அர்ப்பணம் செய்யலாம். ஸ்போர்ட்ஸ் காரின் எரி பொருள் செலுத்தும் மூடியைக் கழற்றுகிறேன். பம்ப்பின் வளைந்த மூக்கினை உள்ளே நுழைத்து பித்தானை அழுத்துகிறேன். அந்தப் பிரவாகம் உள்ளே செல்வதை உணர்கையில் இறுதியாக ஒரு தூரத்துச் சுகிப்பின் ஞாபகமொன்றினை அனுபவம் கொள்கிறேன். ஒரு உறவினை உருவாக்கக் கூடிய ஒரு விதமான வீர்ய சக்தி, ஒரு திரவ ஒழுகலோட்டம் எனக்கும் கார் ஸ்டீயரிங் வளையத்திற்கு முன்னால் அமர்ந்திருக்கும் அந்த அந்நியளுக்கும் இடையே நிகழ்கிறது.

அவள் என்னைப் பார்க்க வேண்டி திரும்புகிறாள். அவளது மூக்குக் கண்ணாடியின் பெரிய சட்டங்களை உயர்த்துகிறாள். அவளுக்கு ஒளிகசியும் ஊடுருவல் மிகுந்த பச்சைக் கண்கள் இருக்கின்றன: ”ஆனால் நீங்கள் பெட்ரோல் நிலைய உதவியாளர் இல்லையே. . .என்ன செய்கிறீர்கள் நீங்கள். . .ஏன்?” என் பக்கத்து காதலின் அதீதமான செயல்பாடு இது என அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மனித இனம் தன்னுடையதென சொந்தம் கொண்டாடிக் கொள்ளக் கூடிய வெப்பத்தின் கடைசி வெடித்தலில் அவளை நான் இணைக்க விரும்புகிறேன். அந்த செயல்பாடு ஒரு காதல் செயலாக இருக்கையில் வன்முறைச் செயலாகவுமிருக்கும், ஒருவிதமான வன்புணர்ச்சி, பாதாள சக்திகளின் ஆளை அழிக்கும் உக்கிரத் தழுவல்.

அவளைக் ‘கப்சிப்’ என்று இருக்கச் சொல்லி சைகை செய்கிறேன். காற்றில் என் கையைக் கொண்டு கீழ் நோக்கிச் சுட்டுகிறேன். இந்த மயக்குநிலை எந்த கணத்தில் வேண்டுமானாலும் துண்டிக்கப் பட்டுவிடலாம் என எச்சரிப்பதற்கு என்பது போல. பிறகு நான் ஒரு விதமான வட்டவடிவக் கையசைப்பினைச் செய்கிறேன்–பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை என்று சொல்வது போல. மேலும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்  என் மூலமாக கருப்பு நிற புளூட்டோ பாதாள உலகிலிருந்து மேலே வருகிறான், அவள் வழியாக ஒரு சுடர் விடும் பெர்ஸிஃபோன்*þஐ தூக்கிச் செல்ல. ஏனெனில் அவ்வாறுதான் வாழும் வஸ்துக்களை கருணையற்று விழுங்குபவளான பூமி தன்னுடைய சுழற்சியை மீண்டும் தொடங்குகிறாள்.

தனது கூர்மையான, இளமையான முன்பற்களை வெளிக் காட்டியபடி அவள் சிரிக்கிறாள். அவள் தீர்மானமில்லாதவளாக இருக்கிறாள். காலிஃபோர்னியாவில் எண்ணெய்ப் படிவு களுக்காக மேற்கொள்ளப்பட்ட தேடல் அதில் வாள் வடிவப் பற்களையுடைய புலியும் அடக்கம்–கரிய ஏரிக்குழியின் மேற்புறமிருக்கும் நீர்ப்பரப்பால்தான் அந்த மிருகம் கட்டாயமாக ஈர்க்கப் பட்டிருக்கும். அந்த நீர்ப்பரப்பு அதை உறிஞ்சி உட்கொண்டு விட்டது.

ஆனால் எனக்கு அளிக்களிக்கப்பட்ட குறைந்த நேரம் முடிந்துவிட்டது.  பெட்ரோல் வருவது நின்று விட்டது. பம்ப் சலனமில்லாதிருக்கிறது. அணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மனித இனத்தின் சுழற்சி வாழ்வு நின்று போய், எல்லா இடங்களிலும் சகல என்ஜின்களும் எரிப்பதை நிறுத்திவிட்ட மாதிரி ஒரு கனத்த மௌனம் நிலவுகிறது.  இந்த பூமியின் மேல் ஓடு இந்த நகரங்களை மறுபடி உள்ளிழுத்துக் கொள்ளும் நாளில், மனித இனமாக இருந்த இந்த ப்ளாங்க்டன் படிவம் ஒரு மில்லியன் வருடங்களில் ஆஸ்பால்ட் மற்றும் சிமிண்ட்டின் புவியியல் அடுக்குகளால் மூடப்பட்டு விடும்  அது எண்ணெய்ப் படிவுகளாய்ப் பெருகும். யார் பொருட்டு என்று நாம் அறியோம்.

அவளுடைய கண்களுக்குள் நான் பார்க்கிறேன்: அவள் புரிந்து கொள்வதில்லை. ஒரு வேளை அப்பொழுதான் பயப்படத் தொடங்கியிருக்கிறாள்  போலும்.  நல்லது.  நான் நூறு வரை எண்ணுவேன். மௌனம் தொடர்ந்தால், நான் அவள் கையைப் பற்றுவேன். பிறகு நாங்கள் ஓடத் தொடங்குவோம்

.• .• .•

_______________________________________________

*பெர்ஸிஃபோன் பாதாள உலகத்தின் தேவதை. கிரேக்கப் புராணிகத்தின்படி ஒரு வருடத்தின் மூன்றில் ஒரு பகுதியில் பாதாள உலகத்திலும் ஒரு பகுதியில் பூமியிலும் வாழ்கிறாள். ரோமானியர்கள் Prosperina என்று இவளை அழைத்தனர். விதைகள் பூமியில் முளைக்கக் காரணம் என்று கருதப்படுகிறவள். எனினும் விதைமுளைப்புச் சடங்குகளில் பெர்சிஃபோனின் பெயரைச் சொல்லக் கூடாது என்ற ஐதீகம் இருந்தது.

Petrol Pump-Numbers in the Dark [1999] Vintage Edition, New York translated by  Tim Parks

Italo Calvino-தேனீக்கூடுகளின் வீடு-நாய்களைப் போலத் தூங்குதல்-நாய்களைப் போலத் தூங்குதல-கேண்ட்டீனில் -கேண்ட்டீனில் பார்த்தது

4stories_calvinoதேனீக்கூடுகளின் வீடு

மிகத் தொலைவிலிருந்து இங்கே பார்ப்பது கடினம்,
மேலும் யாராவது ஒருவர் இங்கே ஒரு முறை வந்திருந்தாலும் கூட திரும்பிச் செல்லும் வழியை ஞாபகப்படுத்த முடியாது. ஒரு காலத்தில் இங்கே ஒரு பாதை இருந்தது, ஆனால் முள்செடிகளை வளரவிட்டு நான் ஒவ்வொரு தடயத்தையும் அழித்தேன். இது நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, இந்த என் வீடு. மஞ்சள் பூக்கும் காட்டு முள்செடிகள் அடர்ந்த கரையில், ஒரே ஒரு தளம் கொண்டது, பள்ளத்தாக்கிலிருந்து இதைப் பார்க்க முடியாது, இந்த வீடு சுண்ணாம்பில் வெள்ளை அடித்திருப்பதையும் ஜன்னல்கள் சிவப்பு நிறத்தில் தீட்டப் பட்டிருப்பதையும்.
இதைச் சுற்றி கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதில் நான் வேலை செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. லெட்டூஸ் கீரைகளை நத்தைகள் மெல்லும் ஒரு துண்டு காய்கறிப் பாத்தி எனக்குப் போதுமானது. சற்றே மேடாக்கப்பட்ட பூமியில் ஒரு முள் மண்வெட்டியைக் கொண்டு உருளைக் கிழங்கு வளர்த்துக் கொண்டிருக்கிறேன், எல்லாம் ஊதா நிறத்தில் மொட்டு விட்டுக் கொண்டிருக்கிறது. நான் எனக்கு உணவளித்துக் கொள்ளும் பொருட்டு உழைத்தால் போதுமானது, காரணம் எவரிடமும் எதையும் எனக்கு பகிர்வதற்கு ஒன்றுமில்லை.
நான் முள் செடிகளை மீண்டும் வெட்டுவதில்லை, இப்போது வீட்டின் கூரையின் மீது ஏறிக்கொண்டிருப்பதையும் சரி, கொஞ்சம் கொஞ்சமாய் விழத்தொடங்கும் பனிச்சரிவு போல, பக்குவப்படுத்தப்பட்ட நிலத்தின் மீது படர்ந்து வருபவற்ûயும் சரி. அவை சகலத்தையும் புதைத்து விடுவதை, என்னையும் சேர்த்து, விரும்புவேன். பல்லிகள் தம் கூடுகளை சுவர்களின் வெடிப்புகளில் வைத்திருக்கின்றன, எறும்புகள் தரையின் செங்கற்களில் இருந்து தமது துளைகள் மிகுந்த நகரங்களைத் தோண்டி எடுத்துக் கொண்டுவிட்டன. ஒவ்வொரு நாளும் புதிய வெடிப்புகள் வந்திருக்கின்றனவா என்று எதிர்பார்ப்பேன், மேலும் மனித இனத்தின் நகரங்களும் களைகளால் நிறைக்கப்பட்டு விழுங்கப்படுவதை நான் சிந்தித்துப் பார்க்கிறேன்.
என் வீட்டின் மேற்புறமாக கரடுமுரடான பள்ளத்தாக்குகளின் சில பகுதிகள் உள்ளன. அவற்றில் நான் எனது ஆடுகளைத் திரிய விடுகிறேன். அதிகாலை வேளையில் சில சமயங்களில் நாய்கள், முயல்களின் வாசனை பிடித்துக் கொண்டு இந்தப் பகுதியைக் கடந்து செல்லும். அவற்றை கற்களை வீசி நான் விரட்டுவேன். நாய்களை நான் வெறுக்கிறேன், அவற்றின் அடிமைத்தனமான மனித விசுவாசத்தையும். எல்லா வீட்டு மிருகங்களையும் நான் வெறுக்கிறேன், எண்ணெய்ப் பிசுக்கு பிடித்த தட்டுக்களின் மிச்சங்களை நக்குவதற்காக அவை மனிதர்களிடம் காட்டும் அவற்றின் கருணை போன்ற பாசாங்கினையும். நான் பொறுத்துக் கொள்ளக் கூடிய மிருகங்கள் ஆடுகள் மாத்திரமே, காரணம் அவை மனித நெருக்கத்தை எதிர்பார்ப்பதும் இல்லை, எதையும் கொடுப்பதும் இல்லை.
சங்கிலியால் கட்டப்பட்ட நாய்கள் என்னைக் காப்பதற்கு எனக்குத் தேவையில்லை. உயிர் வேலிகளோ, பூட்டுகளோ, கூட., அவை அருவருக்கத் தக்க மனிதரின் உபகரணங்கள். என்னுடைய தோட்டத்தைச் சுற்றிலும் தேனீக்கூடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன, ஒரு தேனீக் கூட்டத்தின் பறத்தல் என்பது முள்ளடர்ந்த உயிர்வேலி போன்றது. அதை நான் மட்டுமே கடக்க முடியும். இரவு நேரத்தில் தேனீக்கள் பீன்ஸ் விதைகளின் தோல்கள் மீது உறங்குகின்றன, ஆனால் எந்த மனிதனும் என் வீட்டினருகில் வருவதில்லை. அவர்களுக்கு என்னைப் பற்றி பயம், அதுவும் சரிதான். என்னைப் பற்றி அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட கதைகள் நிஜம் என்பதல்ல இதற்குக் காரணம். அவை பொய்கள் என்று நான் சொல்கிறேன், அவர்கள் எப்போதும் சொல்கிற விஷயங்கள்தான். ஆனால் அவர்கள் என்னைப் பற்றிப் பயப்படுவது சரிதான், அவர்கள் பயப்பட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.
காலையில் நான் உச்சிப் பகுதிக்குச் செல்லும் போது, கீழே பள்ளத்தாக்கு விரிவதை நான் பார்க்கிறேன், உயரமாக எல்லாப் பக்கமும் என்னைச் சுற்றி கடலும் உலகமும் இருப்பதை நான் பார்க்கிறேன். மனிதர் இனத்தின் வீடுகள் கடலின் விளிம்புகளில் அமைந்திருப்பதையும், அவற்றின் பொய்யான அண்டை வீட்டுத்தன்மையுடன் தரைதட்டியிருப்பதையும், பழுப்பு மஞ்சளான சுண்ணாம்புக் கற்களால் ஆன நகரத்தை, அவற்றின் ஜன்னல்கள் பளபளப்பதையும், அவற்றின் நெருப்பு புகையையும். ஒரு நாள் முள் செடிகளும் புல்லும் அவற்றின் சதுக்கங்களை மூடிவிடும், கடல் வந்து அவற்றின் சிதிலங்களைப் பாறைகளாக வடிவமைத்து விடும்.
இப்பொழுது தேனீக்கள் மட்டும்தான் என்னுடன் இருக்கின்றன. தேனடைகளில் நான் தேன் எடுக்கும் பொழுது என்னைக் கொட்டாமல் என் கைகளைச் சுற்றி ரீங்கார மிடுகின்றன, என் மீது ஒரு வாழும் தாடி போன்று படிந்து விடுகின்றன. நட்பான தேனீக்கள், எந்த வித வரலாறும் இல்லாத புராதன இனம். பல ஆண்டுகளாக இந்த மஞ்சள் பூ முள்செடிகளின் கரைப்பகுதியில் வாழ்ந்து வருகிறேன், ஆடுகளுடனும், தேனீக்களுடனும். கடந்து சென்ற ஒவ்வொரு வருடத்தையும் குறிக்க ஒரு சமயம் சுவற்றில் குறியிடும் வழக்கம் இருந்திருக்கிறது . ஆனால் முள் செடிகள் இப்போது எல்லாவற்றையும் மறைத்து விட்டன. நான் ஏன் மனிதர்களுடன் வாழ்ந்து அவர்களுக்காக வேலை செய்ய வேண்டும்? நான் அவர்களின் வியர்வை மிகுந்த கைகளை வெறுக்கிறேன், அவர்களின் நடனங்களையும், தேவாலயங்களையும், அவர்களுடைய பெண்களின் அமில எச்சிலையும். ஆனால் அந்தக் கதைகள் நிஜமல்ல, என்னை நம்புங்கள், அவர்கள் என்னைப் பற்றிய அந்தக் கதைகளை சொல்லி வந்திருக்கிறார்கள், அந்தப் பொய்யுரைக்கும் கீழ்மையானவர்கள்.
நான் எதையும் கொடுப்பதுமில்லை, நான் எவருக்கும் எதுவும் கடன்பட்டதுமில்லை. இரவு நேரங்களில் மழை பெய்தால், காலையில் கரையில் வழுக்கி நகர்ந்து வரும் பெரிய நத்தைகளைச் சமைத்து உண்கிறேன். காட்டின் தரையில் ஈரமான, மிருதுவான குடைக் காளான்கள் இரைந்து கிடக்கின்றன. எனக்குத் தேவைப்படும் மற்ற எல்லாவற்றையும் இந்த காடு தருகிறது. எரிப்பதற்கான குச்சிகளையும், பைன் காய்களையும், வாதுமைக் கொட்டைகளையும். பொறி வைத்து நான் முயல்களையும் =த்ரஷ்+ பறவைகளையும் பிடிக்கிறேன் ஏன் எனில் எனக்கு காட்டு விலங்குகளைப் பிடிக்காது, அல்லது இயற்கை பற்றிய உன்னத வழிபாடும்–அது மனிதனின் அபத்தமான புறம்பேசும் தன்மைகளில் ஒன்று–எனக்கில்லை. இந்த உலகத்தில் நாம் ஒருவரை ஒருவர் விழுங்க வேண்டும் என்பதையும், வலுவானவன் வைத்த சட்டமே நிலைக்கிறது என்பதையும் நான் அறிவேன். எனக்குத் தேவையான விலங்குகளை மாத்திரமே நான் கண்ணி வைத்து கொல்கிறேன், துப்பாக்கிகள் கொண்டல்ல, அவற்றை எடுத்து வருவதற்கு வேறு மனிதர்கள் அல்லது நாய்கள் தேவைப்படும்.
சரியான நேரத்தில் ஒவ்வொரு மரமாக அவர்கள் வெட்டும் கோடரிகளின் மழுங்கின “தட்” ஓசையால் நான் எச்சரிக்கப்படாது விட்டால் சில சமயங்களில் நான் காட்டில் மனிதர்களைப் பார்ப்பதுண்டு. அவர்களை நான் பார்க்காதது போல பாசாங்கு செய்வேன். ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகள் இந்தக் காடுகளுக்கு விறகு சேகரிக்க வருவார்கள், கற்றாழைகளின் பிடுங்கப்பட்ட தலைகளைப் போல அவர்கள் எடுத்திருப்பார்கள். அடிமரங்கள் கயிறுகள் கொண்டு இழுத்துச் செல்லப்படுகின்றன, அவை உருவாக்கும் ஒழுங்கற்ற தடங்கள் புயல் காலத்தில் மழையைத் தேக்கி நிலச்சரிவுகளை உண்டாக்கத் தூண்டுகின்றன. மனிதர் வாழும் நகரங்களில் உள்ள எல்லாமும் இத்தகைய அழிவுக்கே சென்று சேரட்டும். ஒரு நாள் நான் நடந்து செல்லும் போது நான் பார்க்கலாமா, வீட்டுப் புகை போக்கிகள் பூமியிலிருந்து வெளிவருவதையும், படுபாதாளங்களில் விழும் தெருக்களின் பகுதிகளை நான் சந்திப்பேனா, ரயில் பாதையின் துண்டுகளை காட்டின் மத்தியில் என் கால்களைத் தடுக்குமா?
நீங்கள் வியப்பீர்கள், இந்த என்னுடைய தனிமை என் மீது கனத்துக் கவிவதை நான் உணரவில்லையோ என்று, ஏதோ ஒரு மாலையில் நீண்ட அந்திமயங்கும் நேரங்களில் ஒன்றில், நீண்ட வசந்த காலத்தின் மாலை மயங்கும் நேரத்தில், எந்த வித குறிப்பிட்ட நோக்கமும் என் சிந்தனையில் இன்றி, மனித இனத்தின் வீடுகளை நோக்கி நான் செல்லவில்லையா என்று. நான் செல்லத்தான் செய்தேன், ஒரு கதகதப்பான மாலை மயங்கும் நேரத்தில், கீழே இருக்கும் தோட்டங்களைச் சூழ அமைந்திருக்கும் சுவர்களை நோக்கிச் சென்று மெட்லர் மரங்களின் வழியாக கீழே இறங்கினேன். ஆனால் பெண்கள் சிரிப்பதையும் ஒரு தூரத்துக் குழந்தையின் அழைப்பினையும் கேட்டவுடன் நான் இங்கே வந்து விட்டேன். அதுதான் கடைசி தடவை. இப்பொழுது நான் தனியாக இங்கிருக்கிறேன். நல்லது, ஒரு சமயம் விட்டு ஒரு சமயம் தவறுகள் செய்வது பற்றி நானும் பயந்து விடுகிறேன் உங்களைப் போலவே. மேலும் உங்களைப் போலவே நானும் முன்பு போலவே தொடர்கிறேன்.
நீங்கள் எனக்குப் பயப்படுகிறீர்கள், வாஸ்தவமாக, உங்கள் கணக்கு சரிதான். அந்த விஷயத்தின் காரணமாக அல்ல, இருந்தாலும். அது எப்போதாவது நடந்ததா அல்லது இல்லையா என்பதெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர், இப்போது அது ஒரு விஷயமே அல்ல, எப்படியும்.
அந்தப் பெண்– நீண்ட புல்வெட்டும் ‘சைத்’ கருவியுடன் இங்கு வந்த அந்த கறுப்புப் பெண், அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது. அப்பொழுது இன்னும் கூட மனித உணர்ச்சிகளால் நிறைந்தவனாய் இருந்தேன்–நல்லது, அவள் அந்த சரிவின் உச்சியில் வேலை செய்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன், என்னை அவள் கையசைத்து அழைத்தாள், ஆனால் நான் பதில் சொல்லாமல் கடந்து சென்று விட்டேன். ஆமாம், நான் அப்பொழுது கூட மிஞ்சியிருந்த மனித உணர்ச்சி களால் நிரம்பியிருந்தேன், மேலும் அந்தப் பழைய கோபத்துடனும் கூட. மேலும் அந்தப் பழைய கோபத்தினால் –அவளுக்கு எதிராக இல்லை என்றாலும் கூட, அவளுடைய முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லை,–நான் அவளுக்குப் பின் புறம் சென்றேன், அவளுக்கு என் ஓசை கேட்காமல்.
இப்பொழுது மனிதர்கள் சொல்லும் கதைகள் வெளிப்படையாகவே பொய்யானவை, காரணம் அப்போது மிகவும் தாமதமாகியிருந்தது, பள்ளத்தாக்கில் ஒரு குஞ்சும் கூட இல்லை, அவளுடைய குரல்வளையைச் சுற்றி என் கைகளைப் போடும் போது எவரும் அவள் சப்தத்தைக் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு நான் என்னுடைய கதையை தொடக்கத்திலிருந்து சொல்ல வேண்டியிருக்கும்.
ஆங், நல்லது, நாம் அந்த மாலை நேரத்தைப் பற்றி இனி குறிப்பிட வேண்டாம். இங்கே நான் வாழ்கிறேன், லெட்டூஸ் கீரைகளைத் துளையிடும் நத்தைகளுடன் எனது லெட்டூஸ்களைப் பகிர்ந்து கொண்டு. குடைக்காளான்கள் வளரும் எல்லா இடங்களையும் எனக்குத் தெரியும் , அவற்றில் விஷக் காளான்களை நல்லவற்றிலிருந்து பிரிக்கத் தெரியும். பெண்களைப் பற்றியும் அவர்களின் விஷங்களைப் பற்றியும் நான் இனியும் சிந்திப்பது கிடையாது. கற்புடன் இருப்பது ஒரு பழக்கமே தவிர வேறல்ல, சாதாரணமாக.
அவள்தான் கடைசி ஆள், புல் வெட்டும் கருவியுடனிடருந்த அந்தக் கறுப்புப் பெண். வானம் நிறைய மேகம் இருந்தது. நான் நினைவுபடுத்துகிறேன், கறுப்பு மேகங்கள் கடந்து சென்றன. அது போன்றதொரு விரையும் வானத்தின் கீழாக, ஆடுகளினால் ஒட்ட மேயப்பட்ட சரிவுகளில், முதல் மனிதத் திருமணங்கள் நடந்திருக்கும். மனித ஜீவன்களுக்கிடையிலான தொடர்பில் பரஸ்பர பயங்கரமும், அவமானமும் தவிர வேறெதுவும் இருக்க முடியாது. அதுதான் நான் விரும்பியதும் கூட. பயங்கரத்தையும் அவமானத்தையும் காண்பதற்கு, அவள் கண்களில் வெறும் பயங்கரத் தையும் அவமானத்தையும் பார்க்க. அந்த ஒரு காரணம்தான் அதை நான் அவளுக்குச் செய்தது, என்னை நம்புங்கள்.
அதைப் பற்றி என்னிடம் ஒருவரும் ஒரு வார்த்தையும் என்றுமே சொல்லவில்லை. அவர்கள் சொல்வதற்கு ஒரு வார்த்தையும் கிடையாது, அந்த மாலை பள்ளத்தாக்கே வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் மலைகள் இருளில் மூழ்கும்போது, லாந்தர் விளக்கொளியில் அந்தப் பழைய புத்தகத்தின் அர்த்தத்தை என்னால் பின் தொடர முடியவில்லை. மேலும் நான் அதனுடைய மனிதர்களுடனும், வெளிச்சங் களுடனும், இசையுடனும் கீழே அவர்கள் இருப்பதை உணர்கிறேன். உங்கள் குரல்கள் எல்லாம் என்னைக் குற்றம் சாட்டுவதை உணர்கிறேன்.
ஆனால் என்னைப் பார்ப்பதற்கு பள்ளத்தாக்கில் ஒருவரும் இருக்கவில்லை. அவர்கள் அந்த விஷயங்களைச் சொல்வதற்குக் காரணம் அந்தப் பெண் வீடு திரும்பவில்லை என்பதால்தான்.
கடந்து செல்லும் நாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று உறைந்துபோகின்றன, தரையைத் தம் கால்களால் கீறி ஊளையிடுகின்றன என்றால், அதற்குக் காரணம் அங்கே ஒரு வயதான குழிமுயலின் வளை இருப்பதுதான், நான் சத்தியம் செய்கிறேன், ஒரு வயதான குழிமுயலின் வளை, அவ்வளவுதான்

The House of the Bee Hives-[from Adam, One Afternoon] -Translated by Archibald Colquhoun and Peggy Wright.

endflourishred

நாய்களைப் போலத் தூங்குதல்

அவன் ஒவ்வொரு முறை கண்விழிக்கும் போதும் டிக்கட் வழங்கும் கூடத்தின் பெரிய ஆர்க் வெளிச்ச பல்புகள் அமில மஞ்சள் ஒளியை அவன் மீது கூசிவீசுவதை உணர்ந்தான். இருட்டையும் வெதுவெதுப்பையும் தேடியவனாக தனது மேலங்கியின் மார்புப் புற உள் மடிப்புகளை மேலே இழுத்து விட்டுக் கொண்டான். அவன் அங்கே தன்னைக் கிடத்திக் கொண்ட பொழுது தரையின் கல் ஓடுகள் எந்த அளவுக்கு கடினமாகவும் ஜில்லிட்டும் இருக்கும் என்பதைக் கவனிக்கவில்லை. இப்பொழுது குளிரின் தாரைகள் மேல் எழும்பி அவனுடைய ஆடைகளின் அடியிலும், காலணியில் இருந்த ஓட்டைகள் வழியாகவும் உள் நுழைந்து கொண்டிருந்தன. கல்பகுதிக்கும் அவனது எலும்புப் பகுதிக்கும் இடையில் அழுத்தப்பட்டு அவனுடைய இடுப்புப் பகுதியில் இருந்த குறைவான தசைப்பகுதி வலிக்கத் தொடங்கியது.
ஆனால் அவன் ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான். அமைதியாகவும் மனிதர்களின் வழியிலிருந்து விலகியும் படிகளுக்கு அடியிலும் இருந்தது அந்த மூலை. அவன் அங்கே படுத்திருந்த கொஞ்ச நேரத்தில் அவன் தலைக்கு மேலாக இரண்டு பெண்களின் நான்கு கால்கள் வந்து நின்றன. அவன் அந்தக் குரல்கள் சொல்வதைக் கேட்டான்: “ஏய்! இவன் நம் இடத்தைப் பிடித்துக் கொண்டான்.”
படுத்துக் கிடந்த மனிதன் சரியானபடி விழிப்புக் கொள்ளாதிருந்தும் இது அவனுக்குக் கேட்டது. அவனுடைய வாயின் ஒரு ஓரத்திலிருந்து எச்சில் ஒழுகி, அவனுடைய தலையணையாய் அமைந்திருந்த சிறிய சூட் கேஸின் அட்டையின் மேல் வழிந்தது. மேலும் தலை முடி தன்னிச்சையாய் உறங்குவதற்குத் தயார்ப்படுத்திக் கொண்டது, அவன் உடலின் கிடை கோட்டு வரிசையைப் பின்பற்றி.
“சரி”. பம்மியிருந்த பாவாடையின் மேலிருந்த அழுக்கான முட்டிகள் மேலிருந்த அதே குரல் சொன்னது: “நம் பொருள்களை கீழே வைப்போம். குறைந்த பட்சம் நம் படுக்கையையாவது நாம் தயார் செய்யலாம்.”
இந்தக் கால்களில் ஒன்று, பூட்ஸ் அணிந்த பெண் கால், அவனது இடுப்புப் பகுதியில் ஒரு நுகரும் விலங்கின் மூக்கினைப் போல குத்தியது. முன்னங்கையை வைத்து தன்னைச் சுதாரித்துக் கொண்டான், அவனது திகைத்துப்போன வலிக்கும் விழிப்பந்துகளை சிமிட்டிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் மேல்பார்வைக்கு எந்தவித கவனிப்பும் கொள்ளாது அவனுடைய தலை முடி நெட்டுக் குத்தாக சிலுப்பி நின்றது. பிறகு மீண்டும் அவனது தலையை சூட்கேஸின் மீது மோதுவது போல சரிந்தான்.
அந்தப் பெண்கள் தங்கள் தலைகளின் மீதிருந்த சாக்குகளை இறக்கி வைத்தனர். ஒரு மனிதன் இப்போது அவர்களின் பின் புறமிருந்து தோன்றி, படுக்கை விரிப்புகளின் சுருள் ஒன்றினை கீழே போட்டு அவற்றை ஒழுங்குபடுத்தத் தொடங்கினான். முதிய பெண் கீழே படுத்திருந்தவனிடம் சொன்னாள்: “ஏய்! மேலே நகரு, நீயும் கூட இதற்கடியில் பிறகு வந்துவிடலாம்.” பதில் இல்லை. அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
“அவன் பயங்கரமாகக் களைத்துப் போயிருக்க வேண்டும்”, அந்தப் பெண்களில் இளையவள் சொன்னாள், அவளுடைய எலும்பான உடலின் சதைப்பற்றுப் பகுதிகள் போர்வைகளை விரித்து, அவற்றுக்குக் கீழே சாக்குகளை தூக்கி வைக்கையில் ஏறத்தாழ தொங்கின.
அவர்கள் மூவரும் கள்ள மார்க்கெட்காரர்கள். தெற்கு நோக்கி காலி டின்களுடனும், நிறைந்த சாக்குகளுடனும் பயணம் செய்பவர்கள். ரெயில் நிலையங்களின் தரைகளில் உறங்கியும், கால்நடை ட்ரக்குகளில் பிரயாணம் செய்தும் அவர்களின் எலும்புகள் கடினமாகியிருந்தன. ஆனால் அவர்கள் தங்களை ஒருங்கிணைக்கக் கற்றுக் கொண்டிருந்தார்கள். கீழே மெத் தென்றிருப்பதற்கும் மேலே கதகதப்பாக இருப்பதற்கும் அவர்கள் தங்களுடன் போர்வைகள் எடுத்துச் சென்றனர். சாக்குகளும் காலி டின்களும் தலையணைகளாக ஆயின.
அதில் முதியவள் தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு அடியில் போர்வையின் ஒரு மூலையைச் செருக முயன்றாள். கொஞ்சம் கொஞ்சமாக அவனை அவள் உயர்த்த வேண்டி யிருந்தது. காரணம் அவன் அசையவே இல்லை. “அவன் நிஜமாகவே மிகவும் களைத்துப் போயிருக்க வேண்டும்.” என்றாள்: “ஒரு வேளை அவன் அந்த நாடு மாறுபவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும்.”
இதற்கிடையில் அவர்களுடனிருந்த மனிதன், –ஜிப்புகளுடன் இருந்த மனிதன்–போர்வைகளுக்கு அடியில் புகுந்து தன் கண்களின் மீது ஒரு முனையை இழுத்துவிட்டுக் கொண்டான்.”ஹேய்! அடியில் வா. நீ இன்னும் தயாராக வில்லையா?” என்று அந்த இளைய பெண்ணின் முதுகுப்பக்கம் பார்த்துக் கூறினான். அவள் இன்னும் சாக்குகளை தலையணையாக ஒழுங்குபடுத்தியபடி இருந்தாள். அவள் அவனுடைய மனைவி. ஆனால் அவர்களின் கல்யாணப் படுக்கையை விடவும் மேலாக ரயில் நிலையங்களின் காத்திருப்போர் அறைகளின் தரையை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். அந்த இரண்டு பெண்களும் போர்வைக்கு உள் வந்தனர். இளையவளும் அவளுடைய கணவனும் ஒருவரை ஒருவர் ஒட்டிப் படுத்துக் கொண்டு குளிரில் நடுங்கும் ஓசைகளை எழுப்பினர். முதிய பெண் அந்தப் பரிதாபகரமாகத் தூங்கும் மனிதனை போர்வைக்கு உள்ளே சேர்த்துப் வைத்துக் கொண்டிருந்தாள். ஒரு வேளை அந்த முதிய பெண் அவ்வளவு வயதானவளாக இல்லாமலிருக்கலாம். ஆனால் எப்போதும் மாவுச் சுமைகளையும் சமையல் எண்ணெய்யையும் தலை மீது தூக்கியும் இறக்கியும் இந்த ரயில்களில் வாழ்ந்த வாழ்க்கை அவளை அப்படி நசுக்கியிருக்கிறது. அவளது உடையே கூட சாக்கு மாதிரித்தான் இருந்தது. அவளது தலை முடி எல்லாப் பக்கமும் பறந்தது.
சூட்கேஸிலிருந்து நழுவியபடி இருந்தது தூங்கும் மனிதனின் தலை. சூட்கேஸ் கழுத்துக்கு மிக உயரமாய் இருந்து சுளுக்கச் செய்தது. முதியவள் அவனைச் சரியாக்க முயன்றாள், ஆனால் அவன் தலை ஏறத்தாழ தரையில் சரிந்தது. எனவே அவனுடைய தலையைத் தூக்கித் தனது தோள்களில் ஒன்றின் மீது நிமிர்த்தி வைத்துக் கொண்டாள். அந்த மனிதன் தன் உதடுகளை மூடினான். எச்சில் விழுங்கினான். அவளுடைய இன்னும் மிருதுவாய் கீழே இருந்த பகுதியில் தன்னைச் சரி செய்து கொண்டு குறட்டை விட ஆரம்பித்தான்.
அவர்கள் எல்லோரும் தூங்கத் தொடங்கியிருந்தார்கள், அப்போது இதாலியின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த மூவர் அங்கு வந்து சேர்ந்தனர். கறுப்பு நிற மீசை வைத்திருந்த ஒரு அப்பாவும், மற்றும் இரண்டு கறுப்பான, பருமனான மகள்களும். அந்த மூவருமே குள்ளமாக இருந்தனர். அவர்கள் மூவருமே முடையப்பட்ட கூடைகள் வைத்திருந்தனர். அவர்களின் கண்களை அந்த வெளிச்சத்திற்கு அடியில் தூக்கம் பசைபோட்டு ஒட்டிய மாதிரி இருந்தது. மகள்கள் ஒரு திசையிலும் அப்பா வேறு திசையிலும் செல்வதற்கு இருந்த மாதிரித் தோன்றியது. எனவே முகத்தைப் பார்த்துக் கொள்ளாமல் அவர்கள் சண்டை பிடித்துக் கொண்டிருந்தனர். கிட்டித்த பற்களுக்கிடையில் வந்த சிறு சொற்றொடர்கள் தவிர கைகளின் அவசர கதி இயக்கங்கள் தவிர அவர்கள் ஏறத்தாழ பேசிக்கொள்ளவில்லை. படிகளுக்கு அடியில் இருந்த அந்த இடம் ஏற்கனவே அந்த நான்கு பேரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் அவர்கள் இன்னும் முன்பை விட அதிகமாய் திகைத்துப் போனவர்களாக நின்றிருந்தனர்–தங்கள் தோள்களின் மீது கோட்டுகளைத் தொங்கவிட்டிருந்த, கால்பட்டிகளுடன் இருந்த இரண்டு இளைஞர்கள் அவர்கள் அருகில் வரும் வரை.
இந்த இருவரும் அந்த தெற்கத்திக்காரர்களான மூவரையும் அவர்களின் போர்வைகளை ஏற்கனவே அங்கிருந்த நால்வருடன் ஒன்றாகச் சேர்த்து ஒரு குழுவாக ஆக்கிக் கொள்வதற்கு வற்புறுத்தத் தொடங்கினர். அந்த இரண்டு இளைஞர்களும் பாரிசுக்கு நாடு மாறுவதற்கு இருந்த வெனிஸ்காரர்கள். அவர்கள் கள்ளமார்க்கெட்காரர்களை எழும்பச் செய்து, எல்லா போர்வைகளையும் மறு ஒழுங்குபடுத்தி எல்லோரும் சரிசெய்து கொள்ளச் செய்தனர். இது எல்லாமே அந்த இரண்டு இளம் பெண்களின் பக்கத்தில் இருக்க ஏதுவாக இருக்கும் பொருட்டு செய்யப்பட்ட தந்திரமான செயல்பாடு என்பது வெளிப்படை யாகத் தெரிந்தது. அந்தப் பெண்கள் ஏற்கனவே பாதித் தூக்கத்தில் இருந்தனர். ஆனால் இறுதியில் எல்லோருமே ஒருவாறு சரியாக விட்டனர், தூங்கும் மனிதனின் தலை அவளது மார்பின் மீது இருந்ததால் நகராதிருந்த முதிய கள்ள மார்க்கெட் பெண் உட்பட. அந்த இரு வெனிஸ் காரர்களுக்கு வாஸ்தவமாக, இடையில் அந்தப் பெண்கள் கிடைத்து விட்டனர், அவர்களின் அப்பா மற்றொரு பக்கம் இருந்தார். போர்வைகளுக்கும் கோட்டுகளுக்கும் இடையில் தடவித் தேடியபடி அவர்களால் மற்ற பெண்களையும் தொட முடிந்தது.
யாரோ ஒருவர் ஏற்கனவே குறட்டை விட ஆரம்பித்தார். ஆனால் தெற்கு இதாலியிலிருந்து வந்த அந்த அப்பா அவர் மீது கனத்துக் கவிந்திருந்த அவ்வளவு தூக்கத்திற்கு மிஞ்சியும் இன்னும் தூங்க முடியாமல் இருந்தார். அமில மஞ்சள் வெளிச்சம் அவரது விழிமூடிகளுக்கு நேர் கீழே குடைந்து கொண்டிருந்தது, கண்களைப் பொத்தியிருந்த கைகளுக்கு அடியிலும். மனிதத்தன்மையற்ற ஒலிபெருக்கியின் அலறல்கள் “ரயிலை நிதானமாக்கவும் . . . பிளாட்பாரம். . .கிளம்புகிறது . . .” அவரை ஒரு தொடர்ந்த நிலையின்மையில் வைத்திருந்தது. அவர் சிறுநீர்கழிக்க வேண்டிய அவசியமும் இருந்தது, ஆனால் எங்கே போவது என்று தெரியாயமலிருந்தார். அந்த பெரிய ரயில் நிலையத்தில் தொலைந்து போய்விடும் பயத்தில் இருந்தார். கடைசியாக அந்த ஆண்களில் ஒருவரை எழுப்புவது எனத் தீர்மானித்து அவனை உலுக்கத் தொடங்கினார். முதன் முதலில் தூங்கத் தொடங்கிய அதிர்ஷ்டமில்லாத மனிதன்தான் அவன்.
“கழிப்பிடம், நண்பனே! கழிப்பிடம் . . .” என்றார் அவர். அந்த உடைகளால் சுற்றப்பட்ட உடல்களின் குவியல்களின் மத்தியில் எழுந்து உட்கார்ந்தபடி அவனுடைய முன்னங்கையைப் பற்றி இழுத்தார்.
தூங்கிக் கொண்டிருந்தவன் ஒரு திடுக்கிடலுடன் எழுந்து உட்கார்ந்தான் அவனுடைய பனிபடர்ந்த சிவந்த கண்களுடனும் ரப்பர் மாதிரி இருந்த வாயுடன். அவன் மீது குனிந்திருந்த முகத்தினை நோக்கினான். ஒரு சிறிய சுருக்கம் விழுந்த முகம், ஒரு பூனையினுடையதைப் போல, கறுப்பு மீசைகளுடன்.
“கழிப்பிடம், நண்பனே!. . .” என்றார் தெற்கத்திக்காரர்.
சுற்றிலும் ஒரு பீதிப்பார்வையை வீசியபடி மற்றவன் பிரமை பிடித்தது போல அங்கே உட்கார்ந்திருந்தான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வாயைத் திறந்தபடி பார்த்துக் கொண்டே இருந்தனர்–அவனும் அந்த தெற்கு இதாலிக்காரரும். இன்னும் அரைத் தூக்கத்தில் இருந்த அந்த மனிதனுக்கு எதுவும் புரியவில்லை. அவனுக்கு அருகில் தரையில் படுத்திருந்த பெண்ணின் முகத்தை பயங்கரத்துடன் உற்று நோக்கினான். ஒரு வேளை அவன் ஒரு வீறிடலைச் செய்வதற்குத் தயாராக இருந்திருக்கக் கூடும். பிறகு திடீரென்று தன் தலையை அந்தப் பெண்ணின் மார்பகத்தில் புதைத்துக் கொண்டு மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்து போனான்.
தெற்கு இதாலியைச் சேர்ந்த மனிதர், இரண்டு அல்லது மூன்று உடல்களைப் புரட்டியபடி எழுந்து கொண்டார். தீர்மானமற்ற காலடிகளை எடுத்து வைத்து அந்த பிரம்மாண்டமான, கண்கூசும் வெளிச்சம் மிகுந்த, குளிர்நடுக்கும் கூடத்தை நோக்கிச் சென்றார். ஜன்னல்களுக்கு ஊடாகத் தெளிவான இருளையும் ஜியோமித வடிவ இரும்புக் கிராதிகளின் நோக்கையும் பார்க்க முடிந்தது. சுருக்கம் விழுந்த சூட் அணிந்திருந்த கறுப்பான, அவரை விடக் குள்ளமான மனிதன், அவரை நோக்கி ஒரு வித அசட்டையான பாவத்துடன் வருவதைக் கவனித்தார்.
“கழிப்பிடம், நண்பனே!” என்று கெஞ்சும் பாவனையில் தெற்கு இதாலிக்காரர் அவனிடம் கேட்டார்.
“அமெரிக்க, ஸ்விஸ் நாட்டு சிகரெட்டுகள்!” என்று பதிலளித்தான் மற்றவன். ஒரு பாக்கெட்டின் முனையைக் காட்டினான், அவனுக்கு இவர் சொன்னது புரியவில்லை.
ரயில் நிலையங்களை வருடம் முழுவதற்கும் சுற்றிக் கொண்டிருக்கும் அவன் பெயர் பெல்மொரெட்டோ. இந்த உலகத்தின் முகத்தில் அவனுக்கு ஒரு வீடோ அல்லது ஒரு படுக்கையோ கிடையாது. கொஞ்ச காலத்திற்கு ஒரு முறை ரயில் பிடித்து நகரங்கள் மாறிக் கொள்வான். சிகரெட் மற்றும் மெல்லக்கூடிய புகையிலை விற்பனையின் நிச்சயமற்ற போக்குவரத்துகள் எங்கெல்லாம் கொண்டு செல்கின்றனவோ அங்கெல்லாம். ஒரு ரயிலுக்கும் மற்றதற்கும் இடைப்பட்ட நேரத்தில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு குழுவில் இரவு சேர்ந்து விடுவான். இப்படி ஒரு போர்வைக்கடியில் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் படுத்துக் கொண்டு சமாளித்தான். இது முடியாவிட்டால் காலை வரையில் சுற்றிக் கொண்டேயிருப்பான் –இவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு குளியலுக்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்து தன்னுடன் உறங்க வைக்கக் கூடிய யாரோ ஒருவரைச் சந்தித்தால் ஒழிய. பெல்மொரெட்டோவும் தெற்கு இதாலியைச் சேர்ந்தவன்தான். அவன் கறுப்பு மீசை கொண்டவரிடம் மிகக் கருணையுடன் நடந்து கொண்டான், அவர் முடிக்கும் வரை காத்திருந்தான், மீண்டும் அவரைக் கூட்டிச் செல்ல. அவருக்கு அவன் ஒரு சிகரெட் கொடுத்தான். நிலையம் விட்டுச் செல்லும் ரயில்களையும், கீழே கூடத்துத் தரையில் தூங்கிக் கொண்டிருந்த மனிதர்களின் குவியல்களையும் தூக்கம் கப்பிய கண்களால் பார்த்தபடி இருவரும் சேர்ந்து புகை பிடித்தனர்.
“நாங்கள் நாய்களைப் போலத் தூங்குகிறோம்” என்றார் அந்த வயதான மனிதர், “ஆறு பகல்கள் ஆறு இரவுகள் ஆயிற்று நாங்கள் படுக்கையைப் பார்த்து.”
“ஒரு படுக்கை” என்றான் பெல்மொரெட்டோ, “சில சமயங்களில் நானும் கூட கனவு காண்கிறேன் ஒரு படுக்கையை. ஒரு அழகிய வெண்ணிறப் படுக்கை, எனக்கே எனக்கு மட்டுமானது.”
வயதான மனிதர் திரும்பிச் சென்று கொஞ்சம் தூங்குவதற்கு முயற்சி செய்தார். தனக்கு இடம் பண்ணிக் கொள்ள ஒரு போர்வையைத் தூக்கினார். அந்த வெனிஸ்காரர்களில் ஒருவனின் கை அவருடைய மகள்கள் ஒருத்தியின் கால் மீது இருப்பதைப் பார்த்தார். அந்தக் கையை விலக்க முயன்றார். ஆனால் வெனிஸ்காரன் தனக்கும் அந்த சுவை வேண்டும் என முயற்சித்த தன் நண்பனின் கை என நினைத்து அதைத் தள்ளி விட்டான். வயதானவர் அவனை சபித்து ஒரு கையை ஓங்கினார். மற்றவர்கள் எல்லோரும் தூங்க முடியவில்லை என்று கத்தினார்கள். இறுதியில் வயதானவர் தனது இடத்திற்கு முட்டிக் கால்களால் நகர்ந்து போர்வைகளுக்கடியில் அமைதியாகப் படுத்தார். குளிரியதால் தன்னைச் சுருட்டிக் கொண்டார். அழுவதற்கான ஒரு ஏக்கம் அவருக்குள்ளாக மேலோங்கியது. பிறகு, மிகுந்த கவனத்துடன், அவரது கையை அருகாமையில் இருந்த உடல்களுக்கு இடையில் நீட்டினார். அவர் கைக்கு இரு பெண்களின் முட்டிகள் தட்டுப்பட அவர் வருடத் தொடங்கினார்.
கள்ள மார்க்கெட்காரர்களில் முதிய பெண் தன் மார்பகத்தின் மீது டன் கணக்கிலான தூக்கத்தால் நசுக்கப்பட்டவன் போலத் தோன்றிய அந்த மனிதனின் முகம் இன்னும் ஓய்வு கொண்டிருந்தது. அவனை எங்கே தொட்டாலும் எந்த வித எதிர்வினையுமே இல்லாதிருந்தது. இங்கும் அங்கும் லேசான அறைகுறை விழிப்பின் அறிகுறிகள் தென்பட்டன. இப்போது அந்தப் பெண் அவளது முட்டியின் மீது ஒரு கையை உணர்ந்தாள், சுருக்கங்களும், தோல் முண்டுகளும் நிரம்பிய சிறிய கையை. அந்தக் கையைச் சுற்றித் தன் கால்களை வைத்து அழுத்தினாள். அது இயக்கம் நின்று உடனடியாக அமைதியாயிற்று. தெற்கு இதாலியைச் சேர்ந்த அந்த வயதான மனிதரால் தூங்க முடியவில்லை. ஆனால் இப்போது மகிழ்ச்சியாக உணர்ந்தார். அவரது கை சுற்றப்பட்டிருக்கிற மிருதுவான கதகதப்பு அவருடைய உடலின் எல்லாப் பகுதி களுக்கும் மெல்ல மெல்லப் பரவுவதாகத் தோன்றியது.
இந்த கணத்தில் நாய் ஒன்று போர்வைகளை மூக்கு நுனியில் நோண்டுவது போல ஒரு விநோத ஜந்து அவர்களுக்கிடையே நகர்வதை உணர்ந்தார்கள். பெண்களில் ஒருத்தி அலறினாள். போர்வைகள் அவசரம் அவசரமாக விலக்கப்பட்டன அந்த ஜந்து என்னவென்று கண்டுபிடிக்கும் பொருட்டு. அவர்களுக்கு மத்தியில் அவர்கள் பெல்மொரெட்டோவைக் கண்டார்கள், அவன் ஏற்கனவே குறட்டை விட்டுக் கொண்டிருந்தான், அவனுடைய ஷ÷க்களை கழற்றியிருந்தான், கர்ப்பக் குழந்தை மாதிரி சுருண்டிருந்தான். அவனது முதுகின் மேல் விழுந்த தட்டுகளினால் விழிப்படைந்தான்: “என்னை மன்னியுங்கள். நான் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.”
ஆனால் அவர்கள் எல்லோரும் இப்பொழுது விழித்துக் கொண்டு சபித்தனர், எச்சில் வழிந்து கொண்டிருந்த அந்த முதல் மனிதனைத் தவிர.
“அவனவனுக்கு எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன, முதுகு குளிரில் உறைகிறது”, என்று அவர்கள் சொன்னார்கள்: “நாம் அந்த விளக்கினை உடைக்க வேண்டும் அந்த ஒலிபெருக்கியின் இணைப்பினைத் துண்டிக்க வேண்டும்.”
“நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன் ஒரு படுக்கை விரிப்பை எப்படிச் செய்வது”, என்று என்றான் பெல்மாரெட்டோ.
“படுக்கை விரிப்பு” என்று மற்றவர்கள் திரும்பச் சொன்னார்கள். “படுக்கை விரிப்பு.”
ஆனால் பெல்மொரெட்டோ ஏற்கனவே போர்வையில் கொஞ்சத்தை ஒதுக்கி, மடிப்புகளாக மடிக்கத் தொடங்கினான், ஜெயிலில் இருந்த எவருக்கும் இந்த முறை தெரியக் கூடியது. தேவையான அளவுக்கு போர்வைகள் இல்லாததால் அவர்கள் அவனை நிறுத்தச் சொன்னார்கள், யாராவது ஒருவருக்கு கொஞ்சம் கூட போர்வை இல்லாமல் போகலாம். பிறகு அவர்கள் விவாதித்தார்கள், ஒருவர் தலைக்கு அடியில் எதுவுமே இல்லாமல் தூங்குவது எவ்வளவு கடினம் என்பதை விவாதித்தார்கள். தெற்கத்திக்காரர்களின் முடையப்பட்ட கூடைகளினால் எந்தப் பயனும் இருக்கவில்லை. பிறகு பெல்மொரெட்டோ ஒரு முழு அமைப்பினை உருவாக்கினான். இதன் மூலம் ஒவ்வொரு ஆணும் தன்னுடைய தலையை ஒரு பெண்ணின் கால் மீது வைத்துக்கொள்ள முடியும். போர்வைகள் காரணமாக இது செயல்படுத்துவதற்கு மிக சிரமமாக இருந்தது, ஆனால் கடைசியில் அது எல்லாமே அமைக்கப்பட்டது, நிறைய புதிய பொருத்தங்கள் உண்டாயின. ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் எல்லாம் ஒட்டு மொத்தமான குழப்பத்தில் முடிந்தது, ஏன் எனின் அவர்களால் அசையாமல் இருக்க முடியவில்லை. பிறகு பெல்மொரெட்டோ ஒவ்வொருவருக்கும் ஒரு நேஷனல் சிகரெட் விற்க முடிந்தது. அவர்கள் எல்லோரும் புகைபிடிக்க ஆரம்பித்து மற்றவர்களுக்கு தங்கள் தூங்கி எத்தனை இரவுகள் ஆயிற்று என்று சொல்லத் தொடங்கினர்.
“மூன்று வாரங்களாய் நாங்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்கள் வெனிஸ்காரர்கள். “மூன்று முறை இந்த பிராந்தியத்தை நாங்கள் கடக்க முயன்றோம். அவர்கள் எங்களை திருப்பி அனுப்பி விட்டார்கள். ஃபிரான்சில் நாங்கள் காணும் முதல் படுக்கையில் படுத்து நான்கு மணி நேரத்திற்குத் தூங்கப் போகிறோம்.”
“ஒரு படுக்கை” என்றான் பெல்மொரெட்டோ. புதியதாக துவைத்த மேல் விரிப்புகளுடன், புதையும்படியான இறகு மெத்தையுடன். ஒரு கதகதப்பான, குறுகலான படுக்கை தனியாகப் படுப்பதற்கு”.
“நாங்கள் என்ன செய்வது இந்த மாதிரியான வாழ்க்கையை எப்போதும் வாழ்ந்தவர்கள்?” என்றான் கள்ள மார்க்கெட்கார ஆண்: “நாங்கள் வீட்டுக்குச் சென்றவுடன் ஒரு இரவு படுக்கையில் கழிக்கிறோம். பிறகு உடனே மீண்டும் ரயில்களில் பயணம் செய்கிறோம்.”
“ஒரு கதகதப்பான படுக்கை, சுத்தமான மேல்விரிப்புகளுடன்” என்றான் பெல்மொரெட்டோ, “உடைகள் களைந்து விட்டு நான் படுக்கைக்குச் செல்வேன் அம்மணமாக.”
“நாங்கள் உடைகளைக் கழற்றியே ஆறு இரவுகள் ஆகிவிட்டன” என்றார் வயதான தெற்கத்திக்காரர். “நாங்கள் உள்ளாடைகள் மாற்றி ஆறுநாட்கள் ஆகிவிட்டன. ஆறு நாட்களாய் நாங்கள் நாய்களைப் போலத் தூங்கிக் கொண்டிருக்கிறோம்.”
“ஒரு வீட்டில் திருடனைப் போல பதுங்கி நுழைவேன்”, வெனிஸ்காரர்களில் ஒருவன் சொன்னான், “திருடுவதற்கு அல்ல. ஒரு படுக்கையில் படுத்து காலை வரை தூங்குவதற்கு.”
“அல்லது ஒரு படுக்கையைத் திருடிக் கொண்டு இங்கே வந்து தூங்குவதற்கு”, மற்றவன் சொன்னான்.
பெல்மொரெட்டோவுக்கு ஒரு திட்டம் உதித்தது.
“பொறுங்கள்” என்று சொன்னவன் கிளம்பிப் போனான்.
பைத்தியக்கார மரியாவைச் சந்திக்கும் வரை வெளியில் வளை வுகளின் கீழ்ப்புறமாகத் திரிந்தான். ஒரு வாடிக்கையாளரையும் கண்டு பிடிக்க முடியாமல் பைத்தியக்கார மரியா ஓர் இரவு கழித்தால், அடுத்த நாள் அவளுக்கு சாப்பாடு கிடையாது. எனவே அவள் இந்த அதிகாலை நேரத்தைக் கூட கைவிடாமல் காலை வரை அந்த நடைபாதைகளில் மேலும் கீழுமாய் நடந்து கொண்டிருப்பாள், அவளுடைய சணல் கயிறுகள் போன்ற சிவப்பு நிற முடியுடனும், சதைப்பற்றான கெண்டைக் கால்களுடனும். பெல்மொரெட்டோ அவளுடைய சிறந்த நண்பன்.
ஜன்னல்களில் இருள் தெளிவதற்குக் காத்துக் கொண்டு ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் அவர்கள் இன்னும் தூக்கத்தைப் பற்றியும் படுக்கைகள் பற்றியும், வாழ்ந்த நாய் வாழ்க்கை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். முதுகில் ஒரு சுருட்டப்பட்ட படுக்கையைச் சுமந்தவாறு பத்து நிமிடங்கள் கழியும் முன் பெல்மொரெட்டோ திரும்பி வந்தான்.
“உடனே வந்து படுங்கள்” என்றான் படுக்கையைத் தரையில் விரித்தபடி. “அரை மணி நேரத்திற்கு 50 லயர் பணம். ஒரே சமயத்தில் நீங்கள் இருவர் தூங்கலாம். உடனே படுங்கள்! ஒரு தலைக்கு 25லயர் என்பது சாதாரணம்தானே?”
பைத்தியக்கார மரியாவிடமிருந்து ஒரு படுக்கையை அவன் வாடகைக்கு வாங்கி வந்திருந்தான். அவளிடம் இரண்டு இருந்தது. அதை இப்போது இரண்டாம் வாடகைக்கு விட்டுக் கொண்டிருக்கிறான் அரைமணி கணக்குக்கு. ரயில் மாறுவதற்காக காத்துக் கொண்டிருந்த மற்ற தூக்கம் நிறைந்த பயணிகள் அங்கே வந்து ஆர்வத்துடன் பார்த்தனர்.
“உடனே படுங்கள்” என்றான் பெல்மொரெட்டோ, “உங்களை எழுப்புவதை நான் கவனித்துக் கொள்கிறேன். உங்கள் மீது ஒரு போர்வையை போர்த்தி விடுகிறோம். எவரும் உங்களைப் பார்க்க முடியாது. நீங்கள் விரும்பிதைச் செய்யலாம். உடனே படுங்கள் இப்போதே.”
தெற்கு இதாலிப் பெண்களில் ஒருத்தியுடன் அந்த வெனிஸ்காரர்களில் ஒருவன் முதலில் முயற்சி செய்து பார்த்தான். கள்ள மார்க்கெட் பெண்களில் முதியவள் இரண்டாவது ஷிப்டை தனக்கும் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் பரிதாபமான அந்த மனிதனுக்குமாக முன் பதிவு செய்தாள். அவன் தலையை இன்னும் சரியாக வைத்தவாறிருந்தாள். பெல்மொரெட்டோ ஏற்கனவே ஒரு குறிப்பேட்டினை உருவி எடுத்து முன் பதிவுகளை எழுதி வைக்கத் தொடங்கினான், மிகவும் சந்தோஷமானவனாய்.
விடியற்காலையில் படுக்கையை பைத்தியக்கார மரியாவிடம் எடுத்துச் செல்வான், அவர்கள் இருவரும் மதிய உச்சி வரை படுக்கையில் குட்டிக் கரணம் அடிப்பார்கள். பிறகு இறுதியில் அவர்கள் உறங்கிப் போவார்கள்.
••••
Sleeping Like Dogs-[Adam, One Afternoon] -Translated by Archibald Colquhoun and Peggy Wright.

endflourishred

ஒரு நகரத்தில் காற்று

எதுவோ, ஆனால் என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சமதளத் தெருக்களின் வழியாக நடந்து செல்கிற மனிதர்கள் மலையில் ஏறுவது போலவோ இறங்குவது போலவோ, உதடுகளும் நாசித்துவாரங்களும் செவுள்களைப் போல துடித்தபடி இருக்கின்றனர். பிறகு அந்த வீடுகளும் கதவுகளும் பறப்பதைப் போலவும் தெருக்களின் திருப்பங்கள் வழக்கமாக இருப்பதை விடவும் கூர்மையாக இருப்பதைப் போலவும் இருக்கின்றன. அது காற்றுதான். பிறகு நான் உணர்ந்து கொண்டேன்.
ட்யூரின் ஒரு காற்றில்லாத நகரம். வீறிடும் சங்குகளைப் போல இதன் தெருக்கள் இயக்கமற்ற காற்றின் கால்வாய்களாய் எல்லையின்மைக்குள் சென்று மறைகின்றன: ஆவி மூடாக்கினால் மிருதுவாகவோ, உறைபனியில் கண்ணாடி போலவோ இருக்கிறது இந்த இயக்கமற்ற காற்று. தமது தண்டவாளங்களின் மீது மிதந்து செல்லும் ட்ராம்களினால் மாத்திரமே அசைவிக்கப் படுகிறது. பல மாதங்களாக நான் காற்று என்ற ஒரு வஸ்து இருப்பதையே மறந்து விட்டேன். மிச்ச மிருப்பதெல்லாம் ஒரு தெளிவற்ற தேவை மட்டுமே.
ஆனால் ஒரு நாள் ஒரு தெருவின் அடியிலிருந்து உயரும் ஒரு காற்று வீச்சு போதுமாயிருந்தது. என்னைச் சந்திக்க வந்தது அந்தக் காற்று. நான் கடலுக்குப் பக்கமாக அமைந்த என்னுடைய காற்றுரசும் கிராமத்தையும், மேலும் கீழுமாக அமைக்கப்பட்ட அதன் வீடுகளையும், அவற்றின் மத்தியில் மேலும் கீழுமாய் போய் வந்து கொண்டிருக்கும் காற்றையும், படிகள் மற்றும் வட்டத் தள கற்கள் பாவப்பட்ட தெருக்களையும், குறுகுகிற சந்துவழிகளின் மேற்புறமாகத் தெரியும் நீலநிற, காற்றுத்தன்மையான வானத் துண்டங்களையும் நான் நினைவு கொள்கிறேன். ஷட்டர்கள் அடித்துக் கொள்ளும் என் வீட்டையும், ஜன்னல்களுக்கு அருகில் முனகும் தென்னை மரங்களையும், மலை உச்சியில் உரக்கக் கத்திக் கொண்டிருக்கும் என் தந்தையின் குரலையும் கூட.
நான் அப்படித்தான், ஒரு காற்று மனிதன். நான் நடக்கும் பொழுது முன் செல்வதற்கான காலியிடமும் உராய்வும் தேவைப்படுகிறது எனக்கு. திடீரென்று உரக்கக் கத்திப் பேசும் பொழுது காற்றினைக் கடிக்க வேண்டிய அவசியம் எனக்கு வருகிறது. நகரத்தில் காற்று கிளம்பத் தொடங்குகையில்– ஒரு புறநகர்ப்பகுதி அடுத்து மற்ற புறநகர்ப்பகுதிக்கு நிறமற்ற பிழம்பின் நாக்குகளில் பரவும் பொழுது–இந்த நகரம் எனக்கு முன்னால் ஒரு புத்தகத்தைப் போலத் திறந்த கொள்கிறது. அது ஏதோ நான் பார்க்கிற சகலரையும் என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்கிற மாதிரி. அந்தப் பெண்களிடமும் அந்த சைக்கிள் ஓட்டிகளிடமும் கைகளை அசைத்தபடி நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேனோ அதை வெளியே உரக்கக் கத்துவது போல ‘‘ஏய் இங்கே பாருங்கள்!” என்று கூவ வேண்டும் போலத் தோன்றுகிறது.
காற்று இருக்கும் போது என்னால் உள்ளே சும்மா இருக்க முடியாது. ஐந்தாவது மாடியில் ஒரு வாடகை அறையில் நான் வசிக்கிறேன். என் ஜன்னலுக்குக் கீழே, குறுகலான தெருவில் பகலிலும் இரவிலும் ட்ராம்கள் உருண்டோடுகின்றன, ஏதோ என் அறையின் குறுக்காகவே சடசடத்து ஓடுகிற மாதிரி. இரவு நேரத்தில், தூரத்தில் ஆந்தைகளைப் போல கிறீச்சிடுகின்றன ட்ராம்கள். வீட்டுச் சொந்தக் காரியின் மகள், ஒரு ஸ்தூல உடலுடன், ஹிஸ்டீரியா பாதிப்புடன், ஒரு காரியதரிசியாக வேலை பார்க்கிறாள்: ஒரு நாள் நடைவழியில் ஒரு தட்டு நிறைய பச்சைப் பட்டாணியைப் போட்டு உடைத்து விட்டு வீறிட்டபடி அவள் தன்னை அவளுடைய அறையில் வைத்துப் பூட்டிக் கொண்டாள்.
கழிப்பறை வெளியே முற்றத்தை நோக்கியவாறு அமைந் திருக்கிறது: அது ஒரு குறுகலான நடைவழியின் முடிவில் இருக்கிறது. ஏறத்தாழ ஒரு குகை. அதன் சுவர்கள் ஈர ஓதத்துடனும் பாசிபடர்ந்தும் இருக்கிறது. ஸ்டாலசைட்டுகள் கூட உருவாகக் கூடும். ஜன்னல்களின் குறுக்குக் கம்பிகளுக்கு அப்பாலிருக்கும் முற்றம், ட்யூரின் நகரின் முற்றங்களைப் போலவே இருக்கிறது– சிதைவுப் படலங்களின் அடியில் சிக்கிக் கொண்டு உங்களால் உங்கள் மீதெல்லாம் துரு விழாமல் இரும்பு பால்கனியின் கைப்பிடிக் கிராதிகளின் மீது சாய முடியாது. ஒன்றன் மீது மற்றொன்றாக, கழிப்பறைகளின் துருத்தி நிற்கும் கூண்டுகள் ஒரு விநோதமான கோபுரத்தை உருவாக்கு கின்றன: பூஞ்சாளங்கள் அளவுக்கே மிருதுவான சுவர்களுடன் கழிப்பறைகள், அடிப் பாகத்தில் சதுப்புநிலம் போல் இருக்கிறது.
தென்னை மரங்களுக்கு மத்தியில், கடலுக்கு மேலே உயரமான இடத்தில் அமைந்த என் சொந்த வீட்டை நினைத்துப் பார்க்கிறேன். என் சொந்த வீடு மற்றெல்லா வீடுகளிலிருந்தும் எவ்வளவு வேறுபட்டிருக்கிறது. என் நினைவுக்கு வரக்கூடிய முதல் வித்தியாசம் அதன் கழிப்பறை களின் எண்ணிக்கை. எல்லா வகைமைகளிலும் கழிப்பறைகள். வெண்ணிற தளஓடுகள் பளபளக்கும் பாத்ரூம்கள், துருக்கிய கழிப்பறைகள், அதன் கொள்களன்களைச் சுற்றி அமைக்கப் பட்ட நீலநிற அலங்காரப்பட்டிகளுடன் அமைந்த புராதன தண்ணீர்க் கழிப்பிடங்கள்.
இவற்றை எல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டு நான் நகரத்தைச் சுற்றி, காற்றை முகர்ந்தவாறே திரிந்து கொண்டிருக்கிறேன். நான் போகும் போது எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணைச் சந்திக்கிறேன். அவள் அடா இடா.
‘‘நான் சந்தோஷமாக இருக்கிறேன்: இந்தக் காற்று”. நான் அவளிடம் சொல்கிறேன்.
‘‘அது என்னை எரிச்சலூட்டுகிறது”, அவள் பதிலுரைக்கிறாள்.
‘‘என்னுடன் கொஞ்சம் நடந்து வா. இதோ அது வரை.”
உங்களுடன் மோதிக் கொண்டவுடன் உடனடியாகத் தமது வாழ்க்கைக் கதைகளைச் சொல்லத் தொடங்குகிற பெண்களில் ஒருத்திதான் அடா இடா. உங்களைத் தெரிந்திருக் கவில்லை என்றாலும் கூட அவர்கள் பல் வேறு விஷயங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தொடங் குகிறார்கள். அவர்களுக்கே ரகசியமாக இருக்கக்கூடிய விஷயங்களைத் தவிர தங்களிடம் எந்த ஒரு ரகசியமும் இல்லாத பெண்கள். அந்த ரகசியங்களுக்கும் கூட அவர்கள் வார்த்தைகளைக் கண்டு பிடித்து விடுவார்கள்–பிரயத்தன மின்றியே முளை விடும் அன்றாடச் சொற்கள், அவர்களின் சிந்தனைகள் ஏதோ சொற்களின் துகிலில் தயாராக உடையணிந்து, மொட்டு விட்டதைப் போல.
‘‘இந்தக் காற்று எனக்கு எரிச்சலூட்டுகிறது”, அவள் சொல்கிறாள்ஙி ‘‘என்னை என் வீட்டில் பூட்டிக் கொண்டு, காலணிகளை உதறி எறிந்துவிட்டு, அறையைச் சுற்றி வெறுங்காலில் திரிகிறேன். பிறகு எனக்கு ஒரு அமெரிக்க நண்பன் கொடுத்த விஸ்கி பாட்டிலை எடுத்துக் குடிக்கிறேன். நான் என்றுமே தன்னந்தனியாகக் குடித்து போதையில் மூழ்க முடிந்ததில்லை. ஒரு புள்ளியில் அழுகை வெடித்துக் கிளம்ப நான் நிறுத்திக் கொள்கிறேன். என்னை வைத்து என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு வாரத்திற்கும் மேலாக நான் திரிந்து கொண்டிருக்கிறேன்.”
அடா இடா அதை எப்படிச் செய்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை, அவர்கள் எவருமே கூட எப்படிச் செய் கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோருடனும் அத்யந்தமாக இருக்க முடிகிற அந்த ஆண்களும் பெண்களும்– எல்லோரிடமும் சொல்வதற்கு ஏதாவது ஒன்று அவர்களுக்குக் கிடைக்கிறது. அவர்கள் பிற மனிதர்களின் காரியங்களில் சிக்கிக் கொள்கின்றனர். மற்றவர்களைத் தங்களுடையதுடன் சம்மந்தப்பட அனுமதிக்கின்றனர். நான் சொல்கிறேன்: ‘‘நான் ஐந்தாவது மாடியில் ஒரு அறையில் இருக்கிறேன். அங்கே ட்ராம்கள் இரவில் ஆந்தைகளைப் போலிருக்கின்றன. கழிப்பறை பூஞ்சாளப் படிவினால் பச்சை நிறமாக இருக்கிறது, ஸ்டாலசைட்டு களுடன், ஒரு சதுப்புநிலத்தின் மீதான குளிர்கால புகைபனி போலவும். ஒரு புள்ளி வரை ஒவ்வொரு நாளும் மனிதர்கள் தங்களை வைத்துப் பூட்டிக் கொள்ள வேண்டிய கழிப்பறைகளின் அடிப்படையில்தான் அவர்களுடைய குண இயல்புகள் சார்ந்திருக்கின்றன என நினைக்கிறேன். நீங்கள் அலுவலகத்திலிருந்து திரும்புகிறீர்கள். உங்கள் கழிப்பறை பச்சை நிறமாக பூஞ்சை படர்ந்தும், சகதியாகவும் இருப்பதைப் பார்க்கிறீர்கள். எனவே நடைவழியில் ஒரு தட்டு நிறைய பட்டாணிகளைப் போட்டு உடைத்து விட்டு உங்கள் அறையில் உங்களைப் பூட்டிக் கொண்டு வீறிட்டுக் கத்துகிறீர்கள்.”
நான் தெளிவாகச் சொல்லவில்லை. அதைப் பற்றி நான் நினைத்தது நிஜமாக இப்படியல்லை. அடா இடா நிச்சயமாகப் புரிந்து கொள்ள மாட்டாள். ஆனால் என் எண்ணங்கள் பேச்சுக்கான வார்த்தைகளாக மாறுவதற்கு முன் அவை ஒரு காலிப் பிரதேசத்தைக் கடந்து செல்ல வேண்டும். அங்கிருந்து அவை போலியாக வெளியில் வருகின்றன.
‘‘நான் வீட்டில் வேறு எந்த இடத்தை விடவும் அதிகமான சுத்தப்படுத்துதலை கழிப்பறையில் செய்கிறேன்”, அவள் சொல்கிறாள்: ‘‘ஒவ்வொரு நாளும் நான் தரையைக் கழுவுகிறேன். எல்லாப் பொருள்களையும் பாலிஷ் செய்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஜன்னலின் மீது ஒரு சுத்தமான, வெண்ணிறத்தில் பூ வேலைப்பாடுகள் செய்த திரைச்சீலையைப் போடுகிறேன். மேலும் ஒவ்வொரு வருடமும் சுவர்களுக்கு வர்ணம் அடிக்க ஏற்பாடு செய்கிறேன். ஒரு நாள் நான் கழிப்பறையைச் சுத்தம் செய்வதை நிறுத்தினேனால் அது ஒரு மோசமான அறிகுறியாகிவிடும் என நினைக்கிறேன். நான் இதில் என்னை மேலும் மேலும் அனுமதித்து பொறுமை யிழக்கும் வரை. அது சிறிய இருண்ட கழிப்பறை, ஆனால் நான் அதை ஒரு தேவாலயத்தைப் போல வைத்திருக்கிறேன். ஃபியட் கம்பெனியின் நிர்வாக இயக்குநருக்கு என்னவிதமான கழிப்பறை இருக்குமென நான் யோசிக்கிறேன். வா, என்னுடன் சிறிது நடந்து வா, ட்ராம் நிறுத்தம் வரை.”
அடா இடாவைப் பற்றிய உன்னத விஷயம் என்னவென்றால் நீங்கள் சொல்கிற அனைத்து விஷயங்களையும் அவள் ஏற்றுக்கொள்கிறாள். அவளை எதுவும் ஆச்சரியப் படுத்துவதில்லை–நீங்கள் முன்வைக்கிற எந்த ஒரு விஷயமும். அவள் மேற்கொண்டு பேசுவாள் அது ஏதோ முதலாவதாக அந்தக் கருத்தாக்கம் அவளுடையது என்பது மாதிரி. மேலும் நான் அவளுடன் ட்ராம் வரை நடந்து வர வேண்டுமென்று விரும்புகிறாள்.
‘‘சரி, நான் வருகிறேன்,” நான் அவளிடம் சொல்கிறேன்: ‘‘ஆக ஃபியட் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் ஒரு பெரிய ஓய்வுக்கூடம் அளவுக்கு தூண்கள், திரைச்சீலைகள், கம்பளங்கள், சுவர்களில் மீன்காட்சியகங்கள் ஆகியவற்றுடன் ஒரு கழிப்பறையைக் கட்டச் செயதார். சுற்றிலும் உடம்பை ஆயிரம் தடவை பிரதிபலிக்கிற மாதிரி கண்ணாடிகள் இருந்தன. ஆண்கள் கழிப்பிடத்திற்கு கைகள் இருந்தன. சாய்ந்து கொள்வதற்கு முதுகு. மேலும் அது ஒரு அரியாசனம் அளவுக்கு உயரமாக இருந்தது. அதன் மேலே ஒரு மேற்கவிகை கூட இருந்தது. கழிவைத் தள்ளி விடுவதற்கான நீரை இணைக்கும் சங்கிலி இழுக்கப்பட்டவுடன் ஒரு நிஜமான சந்தோஷமான மணிகளின் இன்னிசை இசைத்தது. ஆனால் ‘ஃபியட்’ கம்பெனியின் நிர்வாக இயக்குநருக்கு மலஜலம் கழிக்க முடியவில்லை. அவர் அந்த மீன்காட்சியகங்கள் மற்றும் கம்பளங்களால் பயமுறுத்தப்பட்டு விட்டார். ஒரு அரியாசனம் போல உயரமாயிருந்த ஆண் கழிப்பறையின் மீது அவர் அமர்ந்த போது அவருடைய உடலைக் கண்ணாடிகள் ஆயிரம் தடவை பிரதிபலித்தன. தனது குழந்தைப் பிராயக் காலத்து வீட்டிலிருந்த, தரையெல்லாம் மரத்தூள் சிந்தியிருந்த, நியூஸ் பேப்பர் காகிதங்கள் ஒரு ஆணியில் குத்தப்பட்டிருந்த அந்தக் கழிப்பறைக்கான ஏக்கம் கொண்டார் அவர். எனவே அவர் இறந்தார். பல மாதங்களாக மலஜலம் கழிக்க முடியாமல் போனதால் உண்டான குடல் தொற்று நோயினால்.”
‘‘எனவே அவர் இறந்தார்!”, அடா இடா ஒப்புக் கொள்கிறாள். ‘‘சும்மா அப்படியே அவர் இறந்தார். உனக்கு இது போன்று வேறு ஏதாவது கதைகள் தெரியுமா? இதோ என் ட்ராம் வருகிறது. என்னுடன் ஏறிக்கொண்டு வேறொன்று சொல்.”
‘‘ட்ராமில் சரி. பிறகு எங்கே?”
‘‘ட்ராமில். உனக்கு ஏதாவது ஆட்சேபம் உண்டா?”
நாங்கள் ட்ராமில் ஏறிக்கொள்கிறோம். ‘‘என்னால் உனக்கு எந்தக் கதையையும் சொல்ல முடியாது”, நான் சொல்கிறேன். ‘‘காரணம் எனக்கு இந்த இடைவெளி இருக்கிறது. எனக்கும் மற்றவர்களுக்குமிடையில் ஒரு வெற்று வெளி இருக்கிறது. அதற்குள்ளே என் கைகளை வீசுகிறேன். ஆனால் எதையும் என்னால் பிடித்துக் கொள்ள முடிவதில்லை. அதற்கு உள்ளே நான் உரக்கக் கத்துகிறேன். ஆனால் எவருக்கும் அது காதில் விழுவதில்லை. அது ஒரு ஒட்டு மொத்த வெறுமை.”
‘‘அது மாதிரியான சூழ்நிலைகளில் நான் பாடுகிறேன்”, அடா இடா சொல்கிறாள்: ‘‘என் மனதிற்குள் பாடுகிறேன், வேறு யாரோ ஒருவரோடு நான் பேசிக்கொண்டிருக்கையில், இனிமேலும் என்னால் தொடர முடியாது என்கிற புள்ளிக்கு வந்து விடுகிறேன், நான் ஏதோ ஒரு நதியின் விளிம்புக்கு வந்துவிட்டது போல. என்னுடைய சிந்தனைகள் தூர ஓடுகின்றன பதுங்கிக் கொள்ள. கடைசியாக சொல்லப்பட்ட அல்லது பேசப்பட்ட வார்த்தையை நான் என் மனதிற்குள் பாடத் தொடங்குகிறேன். அவற்றை ஒரு மெட்டுக்கு அமைத்து–ஏதோ ஒரு பழைய மெட்டு. என் நினைவுக்கு வரும் பிற வார்த்தைகள், அதாவது அதே மெட்டைப் பின் தொடர்ந்து வருபவை, அவை என் சிந்தனையின் சொற்கள். எனவே அவற்றை நான் சொல்கிறேன்.”
‘‘முயற்சி செய்.”
‘‘எனவே அவற்றை நான் சொல்கிறேன். நான் அவர்களில் ஒருத்தி என்று நினைத்துக் கொண்டு என்னை யாரோ ஒருவர் தொந்தரவு செய்த சமயத்தில் செய்ததைப் போல.”
‘‘ஆனால் நீ இப்போது பாடவில்லையே?”
‘‘நான் என் மனதில் பாடிக்கொண்டிருக்கிறேன், பிறகு அதை நான் மொழிபெயர்க்கிறேன். இல்லையென்றால் உன்னால் புரிந்து கொள்ள முடியாது. அந்த சமயத்தில் அந்த மனிதனுடன் நான் இதையேதான் செய்தேன். கடைசியில் நான் மூன்று வருடங்களாக ஒரு இனிப்பு கேண்டி கூட சாப்பிடவில்லை என்று சொல்லி முடித்தேன். அவன் எனக்குப் பை நிறைய இனிப்பு கேண்டி வாங்கித் தந்தான். பிறகு நிஜமாகவே அவனிடம் என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நான் எதையோ தெளிவின்றி முணுமுணுத்துவிட்டு அந்தப் பை நிறைய கேண்டிகளுடன் ஓடிப்போய் விட்டேன்.”
‘‘எதையுமே நான் பேசவோ, சொல்லவோ முடியாது”, என்கிறேன் நான். ‘‘அதனால்தான நான் எழுதுகிறேன்.”
‘‘பிச்சைக்காரர்கள் என்ன செய்கிறார்களோ அதைச் செய்”, அடா இடா சொல்கிறாள், ட்ராம் நிறுத்தத்தில் ஒருவனைச் சுட்டிக் காட்டியபடி.
ட்யூரின் நகரம் ஒரு இந்தியப் புனித நகரம் அளவுக்கு பிச்சைக்காரர்களால் நிறைந்திருக்கிறது. பணம் கேட்கும் பொழுது பிச்சைக்காரர்கள் கூட மிகப் பிரத்யேகமான வழிகளைக் கையாளுகின்றனர். ஒருவன் எதையோ முயற்சி செய்கிறான். மற்றவர்கள் அனைவரும் அவனைக் காப்பி யடிக்கிறார்கள். சமீபத்தில் கொஞ்ச காலமாக ஏராளமான பிச்சைக்காரர்கள் தங்களுடைய வாழ்க்கைக் கதைகளை நடைபாதையின் மேல் வர்ண சாக்கட்டிகள் கொண்டு எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். படிக்கும் அளவுக்கு அது மனிதர்களை ஈடுபாடுள்ளவர்களாக ஆக்குவதற்கான நல்ல வழி. பிறகு கொஞ்சம் சில்லைரைகளைத் தந்து விடும் மனநிலையை அவர்கள் எட்டுகிறார்கள்.
‘‘ஆமாம்”, நான் சொல்கிறேன், ‘‘ஒரு வேளை நானும் என் கதையை சாக்கட்டியால் நடைபாதை மேல் எழுத வேண்டும். அதனருகில் அமர்ந்து மனிதர்கள் என்ன சொல்கின்றனர் என்பதைக் கேட்க வேண்டும். குறைந்தபட்சம் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேராகப் பார்த்துக் கொள்வோம். ஆனால் ஒரு வேளை எவருமே கூட கவனிக்காமல் கூட போய்விடலாம். மேலும் அவர்கள் அவற்றின் மீது நடந்து ஒரு வேளை அவற்றை அழித்து விடலாம்.”
‘‘என்ன எழுதுவாய் நீ, நடைபாதை மேல், நீ ஒரு பிச்சைக்காரனாய் இருந்தால்?” அடா இடா கேட்கிறாள்.
நான் எழுதுவேன் எல்லாமே கொட்டை எழுத்துக்களில்: பேசுவதைக் கையாள முடியாதவர்களில் ஒருவனாக நான் இருப்பதால் எழுதுகிறேன். இது பற்றி மன்னிக்க வேண்டும் நண்பர்களே! ஒரு முறை நான் எழுதிய எதையோ ஒரு செய்தித்தாள் வெளியிட்டது. அது அதிகாலையில் வெளிவரும் செய்தித்தாள். அதை வாங்கும் மனிதர்கள் பிரதானமாக தொழிற்சாலைக்குப் புறப்படுபவர்களாக இருப்பவர்கள். அந்த நாள் காலை நான் சீக்கிரமாகவே ட்ராமில் ஏறிவிட்டிருந்தேன். நான் எழுதிய விஷயங்களை ஜனங்கள் படிப்பதைப் பார்த்தேன். எந்த வரியை நோக்கி அவர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முயன்று நான் அவர்களின் முகங்களைக் கவனித்தேன். நீங்கள் எழுதும் எல்லா விஷயத்திலும் நீங்கள் சிலவற்றுக்காக வருந்துகிறீர்கள் அதை ஏன் எழுதினோம் என. நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவீர்கள் என்பதற்காகவோ அல்லது வெட்கத்தினாலோ. மேலும் ட்ராம்களில் அந்தக் காலையில், அந்த விஷயத்திற்கு அந்த மனிதர்கள் வரும் வரை நான் அவர்களின் முகங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு நான் சொல்ல விரும்பினேன். கவனியுங்கள்! ஒரு வேளை அதை நான் நன்றாக விளக்காமல் இருந்திருப்பேன், அதுதான் நான் சொல்ல விரும்பியது. ஆனால் அங்கே எதையும் சொல்லாமல் முகம் சிவந்து போய் மௌனமாய் அமர்ந்திருந்தேன்.
இதற்கிடையில் ட்ராமை விட்டு நாங்கள் இறங்கினோம். அடா இடா மற்றொரு ட்ராம் வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். நான் இப்போது எந்த ட்ராமைப் பிடிக்க வேண்டு மென்று எனக்குத் தெரியவில்லை. நான் அவளுடன் காத்திருக்கிறேன்.
‘‘நான் இதை எழுதுவேன்”, அடா இடா சொல்கிறாள். ‘‘நீலம் மற்றும் மஞ்சள் நிற சாக்கட்டிகளில்”: சீமான்களே! சீமாட்டிகளே! மற்றவர்களைத் தங்கள் மீது சிறுநீர்கழிக்கச் செய்வதைத் தங்களுடைய உச்சபட்ச சந்தோஷமாகக் கொள்ளும் மனிதர்கள் இருக்கிறார்கள். டி அனன்சியோ* அப்படிப்பட்ட ஒருவர் என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் அதை நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் அதை நினைக்க வேண்டும், மேலும் நாம் அனைவரும் ஒரே இனம் என்பதை நினைவில் வைக்க வேண்டும், ஒருவரை விட ஒருவர் உயர்வானவராய் நடந்து கொள்ளக் கூடாது. மேலும் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என் அத்தை பூனை உடல் கொண்ட ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். நீங்கள் நினைவில் வைக்க வேண்டும் அந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்பதை, மறக்கவே கூடாது என்றைக்கும். மற்றும் ட்யூரின் நகரில் மனிதர்கள் நடை பாதையில், வெது வெதுப்பாக இருக்கும் நிலத்தடி சேமிப்பறைகளின் உலோகக் குறுக்குச் சட்டங்களின் மீது தூங்குகிறார்கள் என்பதையும். நான் அவர்களைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு மாலை வேளையிலும், உங்களுடைய ஸ்தோத்திரங் களைச் சொல்வதற்குப் பதிலாக அவை எல்லாவற்றையும் பற்றி நினைக்க வேண்டும். மேலும் அவற்றைப் பகல் வேளையில் மனதில் நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் உங்களின் சிந்தனையெல்லாம் பல நிறைய திட்டங்களாலும் போலித் தனங்களாலும் நிறைந்திருக்காது.
‘‘அதைத்தான் நான் எழுதுவேன். இந்த ட்ராமிலும் என்னுடன் கூட வா, இனிமையாக இரு.”
ட்ராம் மாறி மாறி நான் ஏன் அடா இடாவுடன் போனேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஏழ்மையான புறநகரங்களின் வழியாக நீண்ட தூரம் சென்றது ட்ராம். ட்ராமில் இருந்த மனிதர்கள் தோல்சுருக்கங்களுடனும் சாம்பல் நிறத்திலும் ஏதோ ஒரே விதமான தூசியினால் அழுக்கடைந்த வர்கள் போல இருந்தார்கள்.
போவோர் வருவோரையெல்லாம் ஏதாவது சொல்வது என்று அடா இடா பிடிவாதமாக இருக்கிறாள்! ‘‘எவ்வளவு மோசமான நரம்பிழுப்பு அந்த மனிதனின் முகத்தில் தெரிகிறது பார்! அந்த வயதான பெண் எவ்வளவு முகப்பவுடரை அப்பிக் கொண்டிருக்கிறாள் பார்!”
இது எல்லாமே என் மனதை நோகச் செய்யும்படியான வையாக எனக்குத் தோன்றியது. அவள் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். ‘‘அதனால்? அதனால்?” நான் சொன்னேன். ‘‘நிஜமாக இருக்கிற சகலமும் அறிவார்த்தமானதுதான்.” ஆனால் மிக ஆழத்தில் நான் திருப்தியடையவில்லை.
நானும் கூட நிஜமாகவும் அறிவார்த்தமாகவும் இருக்கிறேன். நான் எண்ணினேன். ஏற்றுக் கொள்ளாமலே, திட்டங்களை யோசித்தபடி, சகலத்தையும் மாற்றியமைக்க வேண்டி. ஆனால் சகலத்தையும் மாற்றுவதற்கு நீங்கள் அங்கிருந்து தொடங்க வேண்டும், நரம்பியல் இழுப்பு கொண்ட அந்த மனிதனிலிருந்து தொடங்க வேண்டும், நிறைய முகப்பவுடரை அப்பிக் கொண்டிருக்கும் அந்த வயதான பெண்ணிடமிருந்தும். திட்டங்களில் இருந்தல்ல. ‘‘அது வரை என்னுடன் கூட வா”. என்று இன்னும் சொல்லிக் கொண்டிருக்கும் அடா இடாவிடமிருந்தும் கூட.
‘‘இதுதான் நமது நிறுத்தம்”, அடா இடா சொல்கிறாள். நாங்கள் இறங்குகிறோம். ‘‘என்னுடன் அது வரை கூட வா. உனக்கு ஆட்சேபம் இல்லையே?”
‘‘நிஜமான சகலமும்அறிவார்த்தமானதுதான், அடா இடா”, நான் சொல்கிறேன் அவளிடம். ‘‘இன்னும் ஏதாவது பிடிக்க வேண்டிய ட்ராம் இருக்கிறதா?”
‘‘இல்லை. நான் இந்த திருப்பத்தில் வசிக்கிறேன்”
நாங்கள் நகரத்தின் முடிவில் இருந்தோம். தொழிற் சாலைகளுக்குப் பின்னால் இரும்புக் கோட்டைகள் நிமிர்ந்து நின்றன. புகைபோக்கிகளின் இடிதாங்கிகளை ஒட்டி காற்று புகைத் துணுக்குகளை வீசியது. அங்கே புற்களுக்குள் மடிந்து ஓடிய ஒரு ஆறு இருந்தது. டோரா நதி.
பல ஆண்டுகளுக்கு முன்னர் காற்று மிகுந்த ஒரு நேரத்தை டோராவின் அருகில் கழித்ததை நினைவு கொண்டேன். அப்பொழுது நான் அதன் பக்கமாக ஒரு இளம் பெண்ணின் கன்னத்தைக் கடித்தபடி நடந்து கொண்டிருந்தேன். அவளுக்கு நீளமான, நிஜமாகவே அழகிய முடி. அது எனது பற்களுக்கு இடையில் குறுக்கிட்டுக் கொண்டிருந்தது. ‘‘ஒரு சமயம்”, நான் சொன்னேன், ‘‘நான் ஒரு இளம் பெண்ணின் கன்னத்தைக் கடித்தேன், இங்கே இந்தக் காற்றில். நான் முடியைத் துப்பினேன். அது ஒரு அற்புதமான கதை.”
‘‘இங்கேதான்”, அடா இடா சொன்னாள். ‘‘என் இடம் வந்துவிட்டது.”
‘‘அது ஒரு அற்புதமான கதை”, நான் அவளிடம் சொல்கிறேன்.
‘‘ஆனால் அதைச் சொல்வதற்கு நிறைய நேரம் பிடிக்கும்.”
‘‘நான் வந்து சேர்ந்துவிட்டேன்”. சொன்னாள் அடா இடா.
‘‘அவன் ஏற்கனவே வீட்டுக்கு வந்திருக்க வேண்டும்.”
‘‘அவன் யார்?”
‘‘தஒய இல் வேலை பார்க்கும் அந்த மனிதனுடன்தான் நான் இருக்கிறேன். அவன் பைத்தியம் பிடித்தவன் மாதிரி மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஃப்ளாட் முழுவதையும் மீன் பிடிக்கும் உபகரணங்களாலும், செயற்கைப் பூச்சிகளாலும் நிரப்பி விட்டான்.”
‘‘நிஜமான சகலமும் அறிவார்த்தமானதுதான்”, நான் சொல்கிறேன். ‘‘அது ஒரு அற்புதமான கதை. நான் திரும்பச் செல்வதற்கு எந்தெந்த ட்ராம்களைப் பிடிக்க வேண்டுமென்று சொல்.”
‘‘இருபத்தி இரண்டு, பதினேழு, பதினாறு”, அவள் சொல்கிறாள். ‘‘ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நாங்கள் சாங்கோனுக்குச் செல்வோம். இன்னொரு நாள், இதோ இவ்வளவு பெரிய ட்ரவுட் மீன்.”
‘‘நீ உன் மனதில் பாடிக் கொண்டிருக்கிறாயா?”
‘‘இல்லை. ஏன்?”
‘‘சும்மா கேட்டேன். இருபத்தி இரண்டு, இருபத்தியேழு, பதிமூன்று.”
‘‘இருபத்தி இரண்டு, பதினேழு, பதினாறு. அந்த மீனை அவனே வறுக்க விரும்புகிறான். அதோ, என்னால் வாசனை பிடிக்க முடிகிறது. வறுப்பது அவன்தான்.”
‘‘மேலும் எண்ணெய்? உங்கள் மளிகைப் பொருள்கள் போதுமானவையா? இருபத்தாறு, பதினேழு, பதினாறு.”
‘‘நாங்கள் ஒரு நண்பனுடன் மாற்றிக் கொள்கிறோம். இருபத்தி இரண்டு, பதினேழு.”
‘‘இருபத்தி இரண்டு, பதினேழு, பதினான்கு.”
‘‘இல்லை. எட்டு, பதினைந்து, நாற்பத்தி ஒன்று.”
‘‘சரி. எனக்கு ஞாபக மறதி அதிகம். எல்லாமே அறிவார்த்தமாய் இருக்கிறது. விடை பெறுகிறேன் அடா இடா.”
அந்தக் காற்றில், எல்லா தவறான ட்ராம்களிலும் ஏறி, ஓட்டுநர்களிடம் எண்கள் பற்றி விவாதம் செய்து, ஒரு மணி நேரம் கழித்து வீடு சேர்கிறேன். நான் அங்கே உள்ளே நுழைகிறேன். பட்டாணிகளும், உடைந்த தட்டின் துண்டுப் பகுதிகளும் நடை வழியில் கிடக்கின்றன. ஸ்தூலமான காரியதரிசி தன்னை அறையில் வைத்துப் பூட்டிக் கொண்டிருக்கிறாள், அவள் வீறிட்டுக் கத்துகிறாள்.
•••
_________________________________________________________________________
*Gabriele D’Annunzio(1863-1938) இதாலியக் கவிஞர், நாவலாசிரியர் மற்றும் நாடகாசிரியர்.

Wind in a City-Numbers in the Dark [1999] Vintage Edition, New York translated by Tim Parks

endflourishred

கேண்ட்டீனில் பார்த்தது

உடனடியாக ஏதோ நடக்கப் போகிறதென நான் அறிந்திருந்தேன். மேஜைக்கு அப்பாலிருந்து அந்த இருவரும் மீன்காட்சியகத்தில் மீன்களைப் போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர், உணர்ச்சி வெளிப்பாடற்ற கண்களில். ஆனால் எவரும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாத அந்நியர்கள் என்பதையும், இரண்டு விநோத விலங்குகள் ஒன்றை ஒன்று நம்பாமல் கண்காணித்துக் கொண்டிருந்ததைப் போல இருந்தனர் என்பதையும் பார்க்க முடிந்தது.
அவள் முதலில் வந்து விட்டிருந்தாள். கறுப்பு உடையணிந்த தடித்த உடம்புக்காரி. வெளிப்படையாக ஒரு விதவை போலத் தெரிந்தாள்– மேல் நகரத்துக் கிராமப் புறங்களிலிருந்து இங்கு வியாபாரத்தின் பொருட்டு வந்த ஒரு விதவை–அவளைப் பார்த்தவுடன் நான் அப்படித்தான் கணித்தேன். அவள் மாதிரியான ஆட்களும் நான் உணவருந்திய பிரபலமான 60லயர் கேண்ட்டீனுக்கு வருகை தந்தார்கள். அவர்களிடம் அவர்களின் ஏழ்மை நாட்களிலிருந்து தொடங்கிய சுருங்கச் செலவு செய்வது பற்றிய ஒரு தேர்வு இன்னும் மிச்சமிருந்தது. ஆனால் எப்போதாவது செலவாழித்தன்மையின் திடீர் வெளிப்பாடுகள் அவர்களை ஸ்பேகட்டி, மாட்டிறைச்சி ஸ்டீக் போன்றவற்றுக்கு ஆர்டர் செய்யவும் வைத்தது. ஆனால் மற்ற நாங்கள், மெலிந்த திருமணமாகாத இளைஞர்கள் டோக்கன் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு, அவர்களைப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டு எங்கள் காய்கறி சூப்பினை விழுங்குவோம். அந்தப் பெண் ஒரு பணவசதி மிக்க கறுப்பு மார்க்கெட் காரியாக இருக்க வேண்டும். மேஜையின் ஒரு பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள். அவளுடைய பையிலிருந்து வெண்ணிற ரொட்டித் துண்டுகளையும், பழத்தையும், கவனமின்றி சுற்றி வைக்கப்பட்டிருந்த வெண்ணெய்க் கட்டியையும் மேஜை விரிப்பு முழுவதிலும் பரப்பி வைக்கத் தொடங்கினாள். பிறகு அவளுடைய கறுப்பு விளிம்பு கொண்ட விரல்களால் துண்டு ரொட்டிகளையும் திராட்சைகளையும் யந்திரத்தனமாய்ப் பிய்த்து எடுக்க ஆரம்பித்தாள். அவளது வாய்க்குள் திணித்துக் கொண்டாள் –ஒரு நிதான மெல்லும் இயக்கத்தில் அவை மறைந்து போயின.
இந்தக் கட்டத்தில்தான் அந்த மனிதர் அங்கே வந்து அந்த காலி நாற்காலியையும் இன்னும் பொருள்களால் நிறைந்து போகாதிருந்த மேஜையின் ஒரு மூலையையும் கவனித்தார். அவர் உடலை பணிவாக தாழ்த்தினார். “நான் இங்கே உட்காரலாமா?” மேல் நோக்கி ஒரு பார்வையை அந்தப் பெண் வீசிவிட்டு தொடர்ந்து மெல்லுவதில் ஈடுபட்டாள். அவர் மீண்டும் முயற்சி செய்தார். “என்னை மன்னிக்க வேண்டும். நான் இங்கே?” அந்தப் பெண் தோள்களைக் குலுக்கி விட்டு வாய் நிறைய அரைக்கப்பட்ட ரொட்டியுடன் ஒருவித முனகலான கனைப்பினை வெளிப் படுத்தினாள். அந்த மனிதர் அவரது தொப்பியை மரியாதை தெரிவிக்கும் முகமாக உயர்த்தி விட்டு உட்கார்ந்தார். சுத்தமாக இருந்த அந்த வயோதிகர் நைந்து போன உடையணிந்திருந்தார். மாவினால் அவருடைய காலர் முடமுடப்பேற்றப்பட்டிருந்தது. குளிர்காலமாய் அது இல்லாதிருந்த போதிலும் ஓவர் கோட் அணிந்து கொண்டிருந்தார். காது கேளாதவர்க்கான கருவியிலிருந்து வந்த ஒயர் அவர் காது பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. உடனடியாக அவருக்காக நான் வருத்தப்பட்டேன் –அவருடைய ஒவ்வொரு உடல் அசைவி லிருந்தும் சைகையிலிருந்தும் வெளிப்பட்டவாறிருந்த நல்ல வளர்ப்பு முறைக்காக நான் வருத்தப்பட்டேன். இந்த உலகத்திற்கு வந்து சேர்ந்த வெளிப்படையான ஒரு கனவானாக அவர் இருந்தார். மரியாதைகளும் பணிவான அசைவுகளும் நிறைந்த ஒரு உலகிலிருந்து, எப்படி நிகழ்ந்ததென்றே தெரியாமல், தள்ளுதல்கள் மற்றும் இடித்தல்களால் ஆன உலகத்தில் வந்து வீழ்ந்து விட்டார். ஆனால் அவர் ஏதோ ஒரு அரசவை வரவேற்பு உபசாரத்திலிருப்பவர் போல இந்த கேண்ட்டீன் கும்பலில் தொடர்ந்து உடல் தாழ்த்தி பணிந்து கொண்டிருக்கிறார்.
அந்த ஒரு காலத்துப் பணக்காரரும், அந்த புதுப் பணக்காரியும் இப்பொழுது நேருக்கு நேர் வந்து விட்டனர். அந்தப் பெண் கட்டையாகவும் குட்டையாகவும் பருமனான உடலுடனுமிருந்தாள். அவளுடைய பெரிய கைகள் மேஜையின் மீது நண்டின் கொடுக்குகள் போல ஓய்வு கொண்டிருந்தன. அவள் ஸ்வாசித்தது அவள் தொண்டைக்குள் ஏதோ நண்டு இருந்ததைப் போலிருந்தது. அந்த வயோதிகர் நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருந்தார். உறைகளால் மூடப்பட்டிருந்த அவருடைய கைகள் இயக்கமிழந்திருந்தன. சிறிய நீலநிற ரத்தக் குழாய்கள் அவர் முகத்தில் துருத்தி நின்றன–ஒரு சிவப்புக் கல்லின் மீதிருந்து பாறைப் பாசியைப் போல.
“இந்த தொப்பிக்காக மன்னிக்க வேண்டும்.” அவர் சொன்னார். அவளது மஞ்சள் நிறக் கண்களால் அவரைப் பார்த்தாள். அவரைப் பற்றிய எதையுமே அவள் புரிந்து கொள்ளவில்லை.
“மன்னிக்க வேண்டும்”, மறுபடி அந்த மனிதர் சொன்னார். “இங்கே என் தொப்பியை வைப்பதற்காக. ஒரு மாதிரியாகக் காற்று வீச்சு இருக்கும் போலிருக்கிறது.”
பருத்த, ஸ்தூலமான அந்த விதவை இப்பொழுது புன்முறுவல் செய்தாள்–அவளுடைய வாயின் விளிம்பு களிலிருந்து. அது ஒரு பூச்சியினுடையதைப் போல மிருதுவான மென் முடியால் மூடப்பட்டிருந்தது. ஒரு இறுக்கமான புன்முறுவல், ஏறத்தாழ அவள் முகத்தின் ஒரு தசையைக் கூட அசைக்காமல், ஒரு குரல் வித்தைக் கலைஞனைப் போல.
“மது”, அவள் அப்பொழுது கடந்து சென்று கொண்டிருந்த பரிசாரகப் பெண்ணிடம் அறிவித்தாள்.
அந்த வார்த்தைக்கு, கையுறைகள் அணிந்து கொண்டிருந்த மனிதரின் கண்கள் மினுங்கின. அவர் வெளிப்படையாகவே அவருக்கான மதுவினை விரும்பினார். அவர் மூக்கின் மிதிருந்த ரத்தக் குழாய்கள் ஒரு நீண்டகால, கவனமிக்க உணவுச்சுவைஞரின் மது அருந்துதலுக்கு சாட்சிய மளித்தது. ஆனால் அவர் சிறிது காலமாகவே குடிப்பதை நிறுத்தி விட்டிருக்க வேண்டும். அந்த விதவை இப்பொழுது ரொட்டித் துண்டுகளை மதுக் கிண்ணத்தில் போட்டுக் கொண்டிருந்தாள். பிறகு நிதானமாக மென்று கொண்டிருந்தாள்.
ஒரு வேளை கையுறைகள் அணிந்து கொண்டிருந்த வயோதிகர் திடீரென ஒரு அவமான உணர்வின் குத்தலை உணர்ந்திருக்க வேண்டும். அவர் ஏதோ அந்தப் பெண்ணை காதல் செய்து கொண்டிருப்பவரைப் போல, தான் ஈனமானவராகத் தோன்றுவது பற்றி அச்சமுற்றார்: “எனக்கும் கூட வேண்டும்”, அவர் அழைத்துச் சொன்னார்.
பிறகு உடனடியாக அதைச் சொன்னது பற்றி மனம் வருந்தியவராகத் தோன்றினார். ஒரு வேளை அவர் எண்ணியிருக்க வேண்டும்–இந்த மாதத்தின் இறுதிக்குள் பென்ஷன் பணத்தை செலவழித்து முடித்து விட்டால் அவரது ஓவர் கோட்டில் புதைந்தபடி குளிர் நடுக்கும் அட்டாலி அறையில் பல நாட்கள் பட்டினி கிடக்க வேண்டி வரும் என்பதை எண்ணினார். அவரது கோப்பையில் மதுவை ஊற்றிக் கொள்ளவில்லை. “ஒரு வேளை” அவர் நினைத்தார் “நான் அதைத் தொடாமலிருந்தால் என்னால் திருப்பிக் கொடுத்து விட முடியும், எனக்கு இனியும் அது தேவைப்படவில்லை என்று சொல்லி, பிறகு அதற்காக நான் பணம் செலுத்த அவசியமிருக்காது.”
மேலும் வாஸ்தவமாக, மதுவிற்கான அவருடைய விருப்பம் ஏற்கனவே மறைந்து விட்டிருந்தது. அது போலவே சாப்பிடு வதற்கான அவருடைய விருப்பமும் கூட. சுவையில்லாத சூப்பில் ஸ்பூனை வைத்து கடகடவென்று சப்தம் செய்தார்–தனது மிஞ்சியிருக்கும் பற்களைக் கொண்டு மென்றார். பருமனான விதவை வெண்ணெய் சொட்டும் மேக்கரோனியை முள்கரண்டி நிறைய எடுத்து விழுங்கினாள்.
“அவர்கள் அமைதியாக இருப்பார்கள் என்று நம்புவோம்”. என்று நான் நினைத்தேன். “அவளோ அவரோ விரைவில் முடித்துவிட்டு கிளம்பி விடுவார்கள்”. நான் எதைப் பற்றிப் பயப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. அவரவர் வழிகளில் ஒவ்வொருவரும் அரக்கத்தனமான பிறவிகளாகவும், கெட்டியான மேல் ஓடுடைய கடல் உயிரிகள் போன்ற தோற்றத்திற்கடியில் ஒருவருக்கு மற்றவர் மீதான வெறுப்பினால் நிறைந்திருந்தார்கள். கடலின் அடியில் ஒன்றை யொன்று நார்நாராகக் கிழித்து சண்டையிடும் அசுர விலங்குகளுடையதைப் போன்ற ஒரு போரினை நான் அவர்களுக்கிடையே கற்பனை செய்தேன்.
அந்த வயோதிகர் ஏற்கனவே சூழப்பட்டிருந்தார், ஏறத்தாழ மேஜை முழுவதும் பிரித்துப் போடப்பட்டிருந்த அந்த விதவையின் உணவுப் பொட்டலங்களினால் முற்றுகை யிடப்பட்டிருந்தார். மேஜையின் ஒரு மூலையில் தனது சுவையில்லாத சூப் மற்றும் மடித்த கூப்பன் ரொட்டியுடன் நெருக்கப்பட்டிருந்தார். எதிரி முகாமில் அவை தொலைந்து போய்விடும் என்று பயந்தது போல அவற்றைத் தன்னருகே இழுத்து வைத்துக் கொள்ள முயன்றார். ஆனால் அவரது இயக்கம் குறைந்த, கையுறைகள் அணிந்த கையின் ஒரு அனிச்சை இயக்கத்தினால் மேஜை மீதிருந்த ஒரு துண்டு வெண்ணெய்க் கட்டியைத் தவறித் தள்ளி விட்டார். அது தரையில் விழுந்தது.
முன்பிருந்ததை விட அவருக்கு முன்னால் மிகவும் பூதாகாரமாக அந்த விதவை உருவமெடுத்தது போலத் தோன்றினாள். பல் தெரிய அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். “என்னை மன்னிக்க வேண்டும். . . என்னை மன்னிக்க வேண்டும்.” கையுறை அணிந்திருந்த அந்த வயோதிகர் சொன்னார். ஒரு புதுவிதமான விலங்கினைப் பார்ப்பது போல அவள் அவரைப் பார்த்தாள். ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை.
“இப்பொழுது” நான் நினைத்தேன், “இப்பொழுது அவர் உரக்கக் கத்தப் போகிறார். ‘’போதும் நிறுத்து”, பிறகு மேஜை விரிப்பினைக் கிழித்தெறியப் போகிறார்!”
மாறாக அவர் கீழே குனிந்து, அசௌகரியமான இயக்கங்களில் மேஜைக்கடியில் இருந்து வெண்ணெய்க் கட்டியைத் தேடினார். அந்த பருத்த விதவை நிறுத்தினாள். அவரை ஒரு கணம் பார்த்து விட்டு, பிறகு ஏறத்தாழ நகராமல், அவளுடைய மாபெரும் கைகளில் ஒன்றை கீழே விட்டு வெண்ணெய்க் கட்டியை எடுத்தாள். அதைத் துடைத்து விட்டு அவளுடைய பூச்சி வாயில் பட்டென்று போட்டுக் கொண்டாள். கையுறை அணிந்த வயோதிகர் மேஜைக்கடியிலிருந்து மேலெழும்பு முன் விழுங்கி விட்டாள்.
இறுதியாக அவர் தன்னை சரி செய்து கொண்டார். இந்த முயற்சியினால் உண்டான வலியினை அனுபவித்தபடி, குழப்பத்தினால் முகம் சிவந்து போய் அவருடைய தொப்பி இடம் மாறியிருந்தது. காது கேளாதோர்க்கான கருவியின் இணைப்பு கோணலாகியிருந்தது.
இப்பொழுது நான் நினைத்தேன் இப்பொழுது அவர் ஒரு கத்தியை எடுத்து அவளைக் கொல்லப் போகிறார்.
எனினும், இதற்கு மாறாக, அவர் ஏற்படுத்தி விட்டதாய் அவர் நினைத்த அவரைப் பற்றிய தவறான மனப்பதிவிற்காக அவரை அவரால் தேறுதல் படுத்திக் கொள்ள முடியாதவர் போல் தோன்றினார். வெளிப்படையாகவே அவர் பேசுவதற்கு ஏங்கினார். எதையாவது சொல்லி அந்த அசௌகரியமான சூழ்நிலையைக் கலைக்க விரும்பினார். ஆனால் அந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடாத, ஒரு மன்னிப்பு போலத் தோன்றாத ஒற்றை வாக்கியத் தொடரைக் கூட அவரால் சிந்திக்க முடியவில்லை.
“அந்த வெண்ணெய்க்கட்டி”, அவர் சொன்னார். “எவ்வளவு பரிதாபம், நிஜமாக–நான் வருந்துகிறேன். . .” அந்த பருத்த விதவை அவளுடைய மௌனத்தினால் அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை. அவரை முற்றிலுமாக அழுத்தி நெருக்க விரும்பினாள்.
“ஓஙு அது பெரிய விஷயமே இல்லை”, அவள் சொன்னாள். “கேஸ்டல் பிரான்டோனில் எனக்கு இந்தப் பெரிய வெண்ணெய்க் கட்டி இருக்கிறது”. அவளுடைய கைகளை அகலமாக விரித்தாள். ஆனால் அவளுடைய கைகளுக்கு இடையிலிருந்த இடை வெளி அந்த வயோதிகரை ஈர்க்கவில்லை.”
“கேஸ்டல் பிரான்டோனா?” அவர் கேட்டார். அவர் கண்கள் பளிச்சிட்டன. “95இல் நான் கேஸ்டல் பிரான்டோனில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இரண்டாவது லெஃப்டினன்ட் ஆக இருந்தேன். . . நீங்கள் அந்தப் பகுதியிலிருந்து வருபவராக இருந்தால் பிரான்டோன் டி ஆஸ்பிரஸ் பிரபுக்களை உங்களுக்குத் தெரிந்திருக்குமே?”
அந்த விதவை பல் தெரிய சிரிக்க மட்டும் செய்யவில்லை. சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தாள். சிரித்தபடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள், வேறு எவரும் இந்த ஏளனமான வயதான மனிதரைக் கவனித்துவிட்டார்களா என்பதைத் தெரிந்து கொள்ள.
அந்தப் பருத்த விதவை தன் கடிகாரத்தைப் பார்த்தாள். அவர் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் ஒரு தட்டு ஈரலுக்கு ஆர்டர் கொடுத்து அவசரம் அவசரமாக சாப்பிடத் தொடங்கினாள். கையுறை அணிந்த வயோதிகர் அவர் தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்திருந்தார். ஆனால் நிறுத்தவில்லை. நிறுத்துவது ஒரு மோசமான மனப் பதிவினை ஏற்படுத்தியிருக்கும். அவர் தொடங்கிய கதையை அவர் முடிக்க வேண்டும்.
“பிரகாசமாக வெளிச்சமிடப்பட்டிருந்த வரவேற்பறையில் பிரபு நுழைந்தார்.” அவர் கண்கள் கண்ணீரால் நிறைய அவர் தொடர்ந்தார். “ஒரு பக்கம் அவருக்கு மரியாதையாய் வணக்கம் சொல்லியபடி இருந்தனர் பெண்கள். அடுத்த பக்கத்தில் விரைப்பாய் நின்று கொண்டிருந்தோம் அதிகாரிகள் நாங்கள். பெருமாட்டிகளின் கை மீது முத்தமிட்டு ஒருவர் அடுத்து மற்றவராக வணக்கம் சொன்னார் பிரபு. பிறகு அவர் என்னிடம் வந்தார் . . .”
மேஜை மீது இரண்டு கால் லிட்டர் மது பாட்டில்களும் அருகருகே இருந்தன. அந்த விதவையினுடையது ஏறத்தாழ காலியாகியும், அந்த வயோதிகருடையது இன்னும் முழுமை யாகவும் இருந்தது. யோசனையே செய்யாமல் அந்த விதவை முழு பாட்டிலில் இருந்து கொஞ்சம் மதுவை ஊற்றிக் குடித்தாள். அவருடைய கதை சொல்லலின் சுவாரசியத்திலும் அந்த வயோதிகர் இதைக் கவனித்தார். இப்பொழுது எந்த நம்பிக்கையுமில்லை. அவர் அதற்கான பணத்தைச் செலுத்தியாக வேண்டும். ஒரு வேளை அந்த விதவை முழுவதையுமே குடிக்கக் கூடும். ஆனால் அவளது தவறைச் சுட்டிக் காட்டுவதென்பது மரியாதைக் குறைவான செயலாகி விடும். இது தவிர அவளது உணர்வுகளை அது காயப்படுத்தக் கூடும். கூடாது. அது மிகவும் ரசக்குறைவானதாகும்.
மேலும் பிரபு என்னைக் கேட்டார்: “மற்றும் நீங்கள் லெஃப்டினன்ட்?” போகிற போக்கில் அவர் கேட்டார். நான் விரைப்பாக நின்று கொண்டிருந்தேன். “இரண்டாவது லெஃப்டினன்ட் டி ஃபிரஞ்சஸ் பிரபுவேங!”. பிரபு சொன்னார்: “உங்கள் அப்பா கிளெர்மாண்ட்-ஐ எனக்குத் தெரியும். அவர் ஒரு சிறந்த போர் வீரர்.” அவர் என் கையைக் குலுக்கினார். . . போகிற போக்கில் அவர் சொன்னார். “ஒரு சிறந்த போர் வீரர்.”
அந்த பருத்த விதவை சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்தாள். மற்றொரு நாற்காலியின் மீது தூக்கி வைக்கப்பட்ட அவளுடைய பையில் கையை விட்டு எதையோ துழாவிக் கொண்டிருந்தாள். அப்பொழுது நாற்காலியின் மீது சாய்ந்தாள். மேஜையின் மேற்புறத்தில் பார்க்கக் கிடைத்த தெல்லாம் அவளது பிருஷ்டம் மாத்திரமே, ஒரு மாபெரும் தடித்த பெண்ணின் கருப்பு ஆடை மூடிய பிருஷ்டம். வயோதிக கிளெர்மாண்ட் இப்போது அந்த பக்கவாட்டில் அசைந்த பெரிய பிருஷ்டத்தை நேர் கொண்டிருந்தார். அவர் முகம் எந்த மாறுதலையும் அடையாமல் கதையை அவர் சொல்லிக் கொண்டே போனார்: “சரவிளக்குகளாலும் நிலைக் கண்ணாடிகளாலும் முழு அறையே பிரகாசித்தது. பிரபு என் கையைக் குலுக்கிக் கொண்டிருக்கிறார். சபாஷ் கிளெர்மாண்ட் அவர் சொன்னார் என்னிடம். . . . மற்றும் அந்தப் பெண்கள் அனைவரும் மாலை உடையில் சூழ்ந்து நின்றனர். . . .”
••••

endflourishred
Seen in the Canteen, Adam, One Afternoon (1957), translated from the Italian by Archibald Colquhon and Peggy Wright

.

Mirror,Target-இடாலோ கால்வினோ-நிலைக் கண்ணாடி, இலக்கு

Mirror,Target

Mirror,Target

நிலைக் கண்ணாடி, இலக்கு.

இடாலோ கால்வினோ

தமிழில் பிரம்மராஜன்

நான்  சிறு பையனாக இருந்தபோது கண்ணாடியின் முன்னால் முகத்தை அஷ்ட கோணலாக்கி பல முகங்களை உருவாக்கியபடி  மணிக்கணக்காக நேரத்தைச் செலவழித்தேன். பார்க்கப் பார்க்கச் சலிப்பே தராத அவ்வளவு அழகான முகமென்று என் முகத்தை நான் நினைக்கவில்லை. மாறாக, என்னால்  அதைப்  பொறுத்துக்  கொள்ள  முடியவில்லை, அந்த என் முகத்தை. முகத்தைக் கோணலாக்கி புதியவற்றை முயற்சி செய்வதற்கு அது ஒரு வாய்ப்பளித்தது. தோன்றிய உடனே பிற முகங்களால் மாற்று செய்யப்பட்ட முகங்கள் அதனால் நான் வித்தியாசமான வேறு நபர் என்று எனக்கு நம்புவதற்கு  முடிந்தது.  ஒவ்வொரு  வகையிலும்  ஏராளமான மனிதர்கள்,  தனிநபர்களின் திரள் என ஒருவர் அடுத்து ஒருவராக நானாக மாறினார்கள், அதாவது நான் அவர்களானேன், அதாவது ஒவ்வொருவரும் பிறநபர்களாக மாறினார்கள். என்னைப் பொறுத்தவரை நான் இல்லாதது போலவே தோன்றியது.

சில  சமயங்களில்  மூன்று நான்கு, ஒரு வேளை பத்து அல்லது பன்னிரண்டு முகங்களை முயற்சி செய்து பார்த்த பிறகு, என்  விருப்பத் தேர்வு  இவற்றில் ஏதோ ஒன்று என முடி வெடுப்பேன். அதை  மறுபடியும்  வரவழைக்கப்  பார்ப்பேன். என் முகக் கூறுகளை ஒழுங்கு செய்து எந்த முகத்தில் அது அவ்வளவு அழகாக இருந்ததோ அதில் பொருத்திக் கொள்ள. வாய்ப்பே இல்லை. ஒரு முகம் ஒரு முறை போய்விட்டால் அதை மீண்டும் பெறுவதற்கும், என் முகத்துடன் அதை ஒன்றிணைய வைப்பதற்கும் எந்த வழியுமில்லை. இந்த முயற்சியில், தொடர்ந்து மாறிக்கொண்டே யிருக்கும் முகங்களை நான் கற்பித்துக் கொள்வேன். முன்பின் தெரியாதவை, அந்நியருடையவை, விரோதமான முகங்கள். அவை அந்தத் தொலைந்த முகத்திலிருந்து என்னைத் தொலைவாக்கிக் கொண்டே வருவதாய்த் தோன்றும். பயந்து போய், முகங்கள் உருவாக்குவதை நிறுத்துவேன். என்னுடைய பழைய தினசரி முகம் மீண்டும் தட்டுப்படும். முன்பு இருந்ததை விடவும் அது ஈர்ப்பில்லாததாய்த் தோன்றுவதாய் நினைப்போடும் என்னுள்.

ஆனால் எனது இந்தப் பயிற்சிகள் எப்பொழுதுமே நீண்ட நேரம் நீடித்திருக்கவில்லை. யதார்த்தத் திற்கு என்னை மீட்டுக் கொண்டு வரக்கூடிய குரல் ஒன்று எப்பொழுதும் இருந்தது.

”ஃபுல்கன்ஸியோ! ஃபுல்கன்ஸியோ! எங்கே போய் திருட்டுத்தனமாகப் பதுங்கிக் கொண்டாய்? வாடிக்கைதான். எனக்குத் தெரியும் அந்த மடையன் எவ்வளவு அழகாகப் பொழுதைப் போக்குகிறான் என்று. ஃபுல்கன்ஸியோ! கண்ணாடி முன்னால் நின்று முகத்தைக் கோணலாக்கும் பொழுது உன்னைப் பிடித்து விட்டேன். மறுபடியும்!”

வெறி கொண்டவனாய் நான் திடீரென ஆயத்தம் செய்து உருவாக்குவேன்–கையும் களவுமாகப் பிடிபட்ட முகங்கள், விரைப்பாய் நிற்கிற ராணுவ வீரர்களின் முகங்கள், கீழ்ப் படிதலுள்ள நல்ல பையன் முகங்கள், பிறந்ததிலிருந்தே முட்டாள்  முகங்கள், அடியாட்கள் முகங்கள், தேவதை முகங்கள், ராட்ஷச முகங்கள் என ஒன்று அடுத்து ஒன்றாக.

”ஃபுல்கன்ஸியோ! உனக்குள்ளாகவே தோய்ந்து ஆழ்ந்து போய்விடாதே என்று எத்தனை தடவை நாங்கள் உனக்குச் சொல்வது? ஜன்னல்களுக்கு வெளியே பார்! பார் எப்படி இயற்கை கொழுந்துவிடுகிறது, குருத்து விடுகிறது, சுழல்கிறது, பூக்கிறதென்று. இந்த சுறுசுறுப்பான நகரம் எப்படிக் குமுறுகிறது, படபடக்கிறது, துடிக்கிறது, அரைக்கிறது, உருவாக்குகிறது என்று”. குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் கையை உயர்த்தி வெளியில் நிலக்காட்சியில் எதையாவது அவர்கள் பார்த்த வகையில் அந்த ஏதோ ஒன்று என்னை ஈர்க்கும், அதிஉற்சாகப்படுத்தும், எனக்குத் தேவையான ஆனால் என்னிடம் அவசியமான அளவு இல்லாதிருந்த அதாவது–அவர்கள் பார்த்த விதத்தில் சக்தியைத் தரும் என்று அவர்கள் நம்பும்படியான எதையாவது சுட்டிக் காட்டுவார்கள். நானும் வேண்டிய அளவுக்குப் பார்ப்பேன், என் கண்கள் அவர்களின்  சுட்டிய  விரல்களைப் பின்தொடரும். நான் ஈடுபாடு கொள்ள முயற்சி செய்வேன். அப்பா அம்மா அத்தைகள் மாமன்கள் அண்ணன்கள் பாட்டிகள் தாத்தாக்கள் சகோதரர்கள் சகோதரிகள் ஒன்றுவிட்ட இரண்டுவிட்ட மூன்றுவிட்ட மாமன் மகன்கள் ஆசிரியர்கள் மேற்பார்வை யாளர்கள் சப்ளை ஆசிரியர்கள் பள்ளித் தோழர்கள் மற்றும் விடுமுறைக்கால நண்பர்கள் எனக்குப் பரிந்துரைப்பதில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள. பொருள்களும் வஸ்துக்களும் அவை இருக்கிற விதத்தில் எதையும் வித்தியாசமாக என்னால் பார்க்க முடியவே இல்லை.

ஆனால் இந்த விஷயங்களின் பின்னால் மறைந்திருக்கிற மற்ற விஷயங்கள் ஒரு வேளை இருந்திருக்கக் கூடும். அவை, ஆம், அவை  எனக்கு ஈர்ப்புடையதாக இருக்கக்கூடும் உண்மை யிலேயே அவற்றில் மிக ஆழ்ந்த துருதுருத்த ஆர்வம் கொண்டிருந்தேன்.  சில சமயங்களில் எவரோ எதுவோ–அல்லது ஏதோ ஒரு பெண் தோன்றி மறைவதை நான் பார்ப்பேன்.  அது  என்னவென்றோ, யார் என்றோ, அடையாளம் கண்டுபிடிக்கும் அளவுக்கு எனக்கு வேகம் போதவில்லை என்பதால் உடனடியாக அவர்களைப் பின் தொடர்ந்து அதி வேகமாக ஓடுவேன். எல்லாவற்றினுடைய மறைக்கப்பட்ட பக்கங்களுமே என்னை ஆர்வத்தில் ஆழ்த்தியது. வீடுகளின் மறைக்கப்பட்ட பகுதி, நகரங்களின் மறைக்கப்பட்ட பகுதி, தோட்டங்களின் மறைக்கப்பட்ட பகுதி, தெருக்களின் மறைக்கப்பட்ட பகுதி, டெலிவிஷன்களின் மறைக்கப்பட்ட பகுதி, பாத்திரங்கள் கழுவும் யந்திரங்களின் மறைக்கப்பட்ட பகுதிகள், கடலின் மறைக்கப்பட்ட பகுதி, நிலவின் மறைக்கப்பட்ட பகுதி. ஆனால் நான் அந்த மறைக்கப்பட்ட பகுதியை தேடுவதை எப்படியாவது முயன்று எட்டிவிடும் போது எனக்குப் புரிந்தது நான் தேடுவது  மறைக்கப்பட்ட பகுதியின் மறைக்கப்பட்ட பகுதியை, அல்லது மறைக்கப்பட்டதின் மறைக்கப்பட்டதின் மறைக்கப்பட்ட பகுதி, இல்லை, மறைக்கப்பட்டதின் மறைக்கப்பட்டதின் மறைக்கப்பட்ட பகுதியை. . . .

”ஃபுல்கன்ஸியோ! என்ன செய்து கொண்டிருக்கிறாய்? ஃபுல்கன்ஸியோ! எதைத் தேடிக் கொண்டிருக்கிறாய்? நீ யாரையாவது தேடிக்கொண்டிருக்கிறாயா ஃபுல்கன்ஸியோ?” எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

சில சமயங்களில் நிலைக்கண்ணாடியின் பின்னால், எனது பிரதிபிம்பத்தின் பின்புறம் ஒரு இருப்பினைக் கண்டேன் என நினைத்தேன். அதை அடையாளப்படுத்திக் கொள்ள வேகமற்றவனாக இருந்தேன். மேலும் அது உடனடியாகப் பதுங்கிக் கொண்டுவிட்டது. நிலைக்கண்ணாடியில் நான் என்னை ஆராயாமல் எனக்குப் பின்புறமிருந்த உலகினை ஆராய முயன்றேன். எதுவும் என் கவனத்தை ஈர்க்கவில்லை. நான் திரும்பிச் செல்லவிருந்த அந்த சமயத்தில், அங்கே அது நிலைக் கண்ணாடியின்  எதிர்ப்புறத்திலிருந்து  எட்டிப்  பார்ப்பதை நான் பார்ப்பேன்–எப்பொழுதுமே நான் எங்கே சிறிதும் அதை எதிர்பார்க்கவில்லையோ அந்த இடத்தில்  என் கண்களின் ஓரத்திலிருந்து  அதைப் பிடித்து விடுவேன். ஆனால் நான் அதைக் கூர்ந்து பார்ப்பதற்கு முயற்சி செய்யும் பொழுது அது போய் விட்டிருந்தது. அதன் வேகத்திலும் இந்த ஜந்து வழிந்தோடியவாறும், மிருதுவாகவும், ஏதோ நீருக்கடியில் நீந்திக்  கொண்டிருப்பது போலவும் இருந்தது.

நான் கண்ணாடியிலிருந்து விலகி அந்த இருப்பு மறையத் தெரிந்த இடத்தைப் பார்க்கத் தொடங்கினேன். ”ஓட்டில்லியா! ஓட்டில்லியா!” என்று அதை நான் கூப்பிடத் தொடங்கினேன். காரணம் அந்தப் பெயரை நான் விரும்பினேன். மேலும் நான் விரும்பிய பெண்ணுக்கு வேறு ஒரு பெயர் இருக்க முடியாது என்று நினைத்தேன். ”ஓட்டில்லியா? எங்கே நீ ஒளிந்து கொண்டிருக்கிறாய்?” அவள் எனக்கு மிக அருகில் இருப்பதான மனப்பதிவு எனக்கு எப்பொழுதும் இருந்தது, அங்கே எனக்கு முன்னால், இல்லை; அங்கே பின்பக்கத்தில், இல்லை; அங்கே மூலைத் திருப்பத்தில். ஆனால் எப்பொழுதுமே ஒரு வினாடி தாமதித்தே, அவள் சென்ற பிறகே வந்து சேர்ந்தேன். ”ஓட்டில்லியா! ஓட்டில்லியா!” ஆனால் ”யாரது ஓட்டில்லியா?” என்று அவர்கள் என்னைக் கேட்டிருப்பார்களானால் எனக்குத் தெரிந்திருக்காது என்ன சொல்வதென்று.

”ஃபுல்கன்ஸியோ! ஒருவருக்கு என்ன வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும் ஃபுல்கன்ஸியோ! உன்னுடைய திட்டங்களைப் பற்றி நீ எப்பொழுதுமே இவ்வளவு தெளிவில்லாமல் இருக்கக் கூடாது ஃபுல்கன்ஸியோ! நீ சாதிக்க வேண்டிய இலக்கினை கண்டிப்பாக நிச்சயிக்க வேண்டும்–நீ தொடர்ந்து முன்னேற வேண்டும் உன் இலக்கினை நோக்கி–உன் பாடத்தை நீ படிக்க வேண்டும், நீ போட்டியில் வெல்ல வேண்டும்,  நீ ஏராளமாய்ச் சம்பாதிக்க வேண்டும், ஏராளமாய்ச் சேமிக்க வேண்டும். . .”

நான் எங்கு செல்லத் திட்டமிட்டிருந்தேனோ அதற்குக் குறி வைத்தேன். என்னுடைய சக்திகளை ஒருமுகப்படுத்தினேன். என்னுடைய மனத்திடத்தை இறுக்கினேன். ஆனால் நான் சென்று சேர வேண்டிய இடம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.  என்னுடைய சக்திகள் மையத்திற்கு எதிர்த்த திசையில் செயல்பட்டுக் கொண்டிருந்தன. என்னுடைய தீர்மானம் தளரத் தொடங்கியது. என்னிடம் இருந்ததை எல்லாம் அதற்குக் கொடுத்தேன். ஜப்பானிய மொழி கற்றுக் கொள்ள கடுமையாக உழைத்தேன், விண்வெளி வீரனுக்கான என்னுடைய டிப்ளோமாவைப் பெறுவதற்கு, பளு தூக்கும் சாம்பியனாவதற்கு, நூறு லையர் நோட்டுகளில் ஒரு மில்லியன் சேர்ப்பதற்கு என்று எல்லாவற்றிற்கும் மிக ஆக்ரோஷமாக முயற்சி செய்தேன்.

”நீ தேர்ந்தெடுத்த பாதையில் சரியாகப் போய்க்கொண்டிரு ஃபுல்கன்ஸியோ!” ஆனால் நான் தடுக்கி விழுந்தேன். ”உனக்காக நீ நிச்சயித்து வைத்திருக்கிற வரிசையிலிருந்து விலகிச் செல்லாதே!” ஆனால் நான் என்னைக் குழப்பினேன் இப்படியும் அப்படியுமான பாதைகளில், மேலும் கீழுமாக. ”தடைகளைத் தாவி விடு என் மகனே!” தடைகள் என் மீது விழுந்தன.

இறுதியில் நான் அவ்வளவு மனமொடிந்து போயிருந்ததால் நிலைக் கண்ணாடியில் இருந்த முகங்கள் கூட எனக்கு எந்த வித உதவியும் அளிக்கவில்லை. அதன் கண்ணாடி இனியும் என் முகத்தைப் பிரதிபலிப்பதை நிறுத்தி விட்டது.  ஓட்டில்லியாவின் நிழலைக் கூட. ஏதோ, நிலவின் தரையில் சிதறியிருப்பதைப் போல சிதறிய கற்களின் ஒரு பரப்பு மாத்திரம் தெரிந்தது.

என் குணநலனை வலுவாக்கும் பொருட்டு வில்வித்தைப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். என்னுடைய சிந்தனைகளும், செயல்களும் அம்புகளாக மாற வேண்டும். மிகச் சரியான புள்ளியில் முடிகிற கண்ணுக்குப் புலனாகாத கோட்டினை ஒட்டி காற்றில் அவை பறந்து சென்று எல்லா மையங்களின் மையத்தைச் சென்றடைய வேண்டும். ஆனால் என் குறிக் கூர்மை பயனற்றதாய் இருந்தது. என் அம்புகள் என்றுமே குறிக் கூர்மைக்கான இலக்கின் மையத்தை சென்றடையவே இல்லை.

வேறு ஒரு உலகத்தின் தூரம் அளவுக்குத் தள்ளித் தெரிந்தது இலக்கு. அந்த உலகில் சகலமும் கச்சிதமான கோடுகளாலும் கூர்மையான வர்ணங்களாலும், நேரானவையாகவும், ஜியோமித ஒழுங்குடனும், ஒருமை நிறைந்தும் காணப்பட்டன. அந்த உலகத்தில் இருப்பவர்கள் அவற்றில் எவ்விதத் தெளிவின்மையும் அற்ற திடீரென்ற மிகக் கச்சிதமான இயக்கங்களையே மேற்கொள்ள வேண்டியவர்கள். அவர்களைப் பொருத்தவரை நேர்க்கோடுகள், காம்பஸ் கருவியால் வரைந்த வட்டங்கள், செட்ஸ்கொயர்  மூலைகள் மாத்திரமே இருக்க முடியும். . .

நான்  முதல்  தடவை  கொரின்னாவைப்  பார்த்த  பொழுது இன்னமும்  எனக்கு  இடமளிக்காத  அந்த  முழுமையான உலகம் அவளுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்தேன்.

கொரின்னா அவளுடைய வில்லில் இருந்து ஒரு அம்பை விடுவாள். விர்ர். விர்ர். விர்ர். ஒன்றன் பின் ஒன்றாக அந்த அம்புகள் மையத்தில் போய் அடிக்கும்.

”நீ ஒரு சாம்பியனா?”

”இந்த உலகத்திற்கே”

”உன்னுடைய பாணத்தை பல வேறுபட்ட வகைகளில் உனக்கு வளைக்கத் தெரிகிறது. ஒவ்வொரு தடவையும் அம்பின் பயணப்பாதை அதை நேரடியாக இலக்கிற்கே எடுத்துச் செல்கிறது. அதை நீ எப்படிச் செய்கிறாய்?”

”நீ நினைக்கிறாய் நான் இங்கிருக்கிறேன் இலக்கு அங்கிருக்கிறது  என்று.  கிடையாது.   நான் இங்கே யுமிருக்கிறேன் அங்கேயுமிருக்கிறேன். நானேதான் வில்லாளி நானேதான் வில்லாளியின் அம்புகள் ஈர்க்கும்  இலக்கு,  பறக்கும் அம்புகளும்  நானேதான்,  அந்த  அம்புகளை  விடுக்கும் வில்லும் நானேதான்.”

”எனக்குப் புரியவில்லை.”

”நீ என்னைப் போல் மாறிவிட்டால் உனக்குப் புரியும்.”

”நானும் கற்றுக் கொள்ளலாமா?

”நான் உனக்குக் கற்றுத்தர முடியும்.”

முதல் பாடத்தில் கொரின்னா என்னிடம் கூறினாள்: ”உனக்கு இல்லாதிருக்கும் ஸ்திரத்தன்மையை உன் கண்ணுக்குத் தருவதற்கு நீ நீண்ட நேரம் இலக்கினை உற்றுப் பார்க்க வேண்டும். சும்மா அதைப் பார், முறைத்துப் பார், அதில் உன்னை நீ இழக்கும் வரை, இந்த உலகத்தில் அந்த இலக்கினைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று நீ உன்னை நம்ப வைத்துக் கொள்கிற வரை, நீயே அந்த மையத்தின் மையத்தில் இருப்பதான உணர்வு வரும் வரை.”

நான் இலக்கை உற்று நோக்கினேன். அதனுடைய காட்சி என்றுமே எனக்கு ஒரு நிச்சயத்தன்மையைச் சொல்லி வந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது நான் அதிகமாகப் பார்க்கப் பார்க்க நிச்சயத்தன்மையைத் தாண்டி சந்தேகங்கள் நிறைகின்றன. சில கணங்களில் பச்சை நிறத்தில் தனித்துத் தெரியும்படி சிவப்புப் பிரதேசங்கள் தூக்கலாகத் தெரிவது போலத் தோன்றின. பச்சை நிறப் பிரதேசங்கள் உயர்ந்த போது மற்றவையும் தூக்கலாகி அதே சமயம் சிவப்பு அமிழ்ந்து போயிற்று. கோடுகளுக்கு இடையிலாக இடைவெளிகள் திறந்தன.  செங்குத்துப்பாறைகள், பெரும் பிளவுகள், மையம் ஒரு அருவி அரித்த மலைச் சந்தின் கீழ் இருந்தது, அல்லது, ஒரு கோபுரக்  கூம்பின்  முனையில்,  வட்டங்கள்  மயக்கச்  சரிவு தரும்  ஆழ்பார்வைகளைத் திறந்துவிட்டன.  கோடுகளின் அமைவுகளின்  மத்தியிலிருந்து கை ஒன்று வெளியே வரு மென்று நினைத்தேன் நான். ஒரு கை, ஒரு நபர் என்று நான் நினைத்தேன். . . .ஓட்டில்லியா. நான் உடனடியாக நினைத்தேன். ஆனால் வேகமாக அந்த சிந்தனையைத் துரத்தி விட்டேன். நான் கொரின்னாவைத்தான் பின்பற்ற வேண்டும், ஒட்டில்லியாவை அல்ல. அவளது உருவம் மாத்திரமே இலக்கினை ஒரு சோப் குமிழி மாதிரிக் கரைய வைக்கப் போதுமாகயிருந்தது.

இரண்டாவது பாடத்தில் கொரின்னா சொன்னாள்: ”அது தன்னைத் தளர்த்திக் கொள்ளும் போதுதான் வில் அம்பை விடுவிக்கிறது. ஆனால் அதைச் செய்வதற்கு முதலில் சரியானபடிக்கு  இறுக்கமடைய வேண்டும். ஒரு வில்லைப் போல  கச்சிதமாக  நீ  ஆக  விரும்பினால் இரண்டு விஷயங்களை நீ கற்றுக்கொள்ள வேண்டும். உனக்குள்ளாக உன்னை ஒருமுகப்படுத்தி, எல்லா மன அழுத்தங்களையும் வெளியே விட்டுவிட வேண்டும்.”

ஒரு வில்லைப் போல என்னை இறுக்கமாக்கி தளர்த்திக் கொண்டேன்.  விர்ரென்று சென்றேன். ஆனால் அதன் பிறகு கர்ர் என்றும் கொர்ர் என்றும் ஆனேன். ஒரு யாழைப் போல நான் அதிர்ந்தேன். அதிர்வுகள் காற்றில் பரவின. அவை வெறுமையின் அடைப்புக் குறிகளைத் திறந்துவிட்டன. அதிலிருந்து காற்று கிளம்பியது. “விர்ர்” என்பதற்கும் “கர்ர்” என்பதற்கும் இடையிலாக ஒரு ஹேம்மக் ஒன்று ஆடிக் கொண்டிருந்தது. வெளியினூடாக சுழற்சிகளில் ஒரு திருகு போல நான் முன்னேறினேன். அங்கு ஒட்டில்லியா ஒரு ஹேம்மக்கில் தொடர்ச்சியாக மீட்டப்பட்ட யாழ் நரம்புகளுக்கிடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள். ஆனால் அதிர்வுகள் தேய்ந்து நின்றன. நான் வீழ்ந்தேன்.

மூன்றாவது பாடத்தில் கொரின்னா எனக்குச் சொன்னாள்: ”நீ உன்னை ஒரு அம்பாகக் கற்பனை செய்து கொண்டு இலக்கினை நோக்கி ஓடு.”

நான் ஓடினேன். காற்றை வெட்டிக் கொண்டு சென்றேன். நான் ஒரு அம்பைப் போல இருக்கிறேனென்று எனக்கே உறுதியளித்துக் கொண்டேன். ஆனால் நானாகிய அம்புகள் சரியான திசையை விட்டுவிட்டு மற்றெல்லா திசையிலும் திரிந்தன. வீழ்ந்த அம்புகளைச் சேகரிக்க நான் சென்றேன். நான் மேலும் கல்லனைய வீண்களுக்குள் தொடர்ந்து சென்றேன். கல்லாய்க் கிடந்த வீணான பரப்புகளில். கண்ணாடியில் பிரதிபலித்தது என்னுடைய பிம்பமா? அல்லது நிலவா?

கற்களுக்கிடையில் நான் முனை மழுங்கிய அம்புகளைக் கண்டேன், குஞ்சச் சிறகுகளின்றி. வளைந்து போய், மணலில் தைத்துக் கிடந்தன. அங்கே அவற்றுக்கிடையில் ஒட்டில்லியா இருந்தாள். ஒரு தோட்டத்தில் மலர்களைச் சேகரித்துக் கொண்டிருப்பவள் போலவோ பட்டாம் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டிருப்பவள் போலவோ அவள் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தாள்.

நான்–ஏன் இங்கிருக்கிறாய் ஓட்டில்லியா? நாம் எங்கே இருக்கிறோம்? நிலவின் மீதா?

ஓட்டில்லியா–இலக்கின் மறைக்கப்பட்ட பகுதியில் நாம் இருக்கிறோம்.

நான்–இங்குதான் எல்லா மோசமான எய்தல்களும் போகின்றனவா?

ஓட்டில்லியா–மோசமா? எந்த எய்தலும் எப்போதுமே மோசமானதில்லை.

நான்–ஆனால் இங்கே அம்புகள் வந்து தாக்குவதற்கு ஒன்றுமில்லையே

ஃட்டில்லியா–இங்கே அம்புகள் வேர் பிடித்து காடுகளாக மாறுகின்றன.

நான்–நான் பார்க்க முடிவதெல்லாம் உடைசல்கள், துணுக்குகள் மற்றும் சிதைவுகள்.

ஓட்டில்லியா–நிறைய சிதைமானங்கள் ஒரு பல அடுக்குமாடிக் கட்டிடத்தை ஆக்குகின்றன. நிறைய பல அடுக்குமாடிகளை அடுக்கி வைத்தால் அது சிதைமானம்.

கொரின்னா–ஃபுல்கன்ஸியோ! எங்கே போய் விட்டாய் நீ? இலக்கைப் பார்!

நான்–நான் போக வேண்டும் ஓட்டில்லியா. நான் உன்னுடன் இருக்க முடியாது. நான் இலக்கின் மறுபக்கத்திலிருந்து குறி வைக்க வேண்டும்.

ஓட்டில்லியா–ஏன்?

நான்–இங்கு சகலமும் உருக்குலைந்ததாக, வடிவ மற்றிருக்கிறது.

ஓட்டில்லியா–கவனமாகப் பார். மிக மிக அருகாமையில். உன்னால் என்ன பார்க்க முடிகிறது?

நான்–பள்ளங்களும் மேடுகளும் நிறைந்த மணிக் கட்டமைப்புகள் கொண்ட தளம்.

ஓட்டில்லியா— ஒரு  மேட்டுக்கும்  இன்னொரு  மேட்டுக்கும் இடையிலும்,  ஒரு துகளுக்கும் மற்றொரு துகளுக்கு இடையிலும் ஒரு பிளவுக்கும் மற்றொரு பிளவுக்கும் நடுவிலும் போய்ப் பார். தோட்டத்திற்கான ஒரு கதவினைக் காண்பாய்–அதில் பச்சை நிற பூம்படுகைகளும் தெளிவான நீர்ச் சேகரமும் இருக்கும். அங்கே அவற்றின் கீழ்ப்புறத்தில் நானிருக்கிறேன்.

நான்–நான் தொடும் எல்லாமும் சொரசொரப்பாகவும், குளிர்ந்தும் வறண்டும் போயிருக்கிறது.

ஓட்டில்லியா–மேற்பகுதியின் மேல் உனது கையை மெதுவாகப்  படர விடு. அது க்ரீம் போல மென்மை யாக்கப்பட்ட ஒரு மேகம்.

நான்–எல்லாமும் ஒரேமாதிரி, மௌனித்து, கையடக்கமாக இருக்கிறது.

ஓட்டில்லியா–உன் கண்களையும் காதுகளையும் திறந்து விடு. நகரத்தின் பரபரக்கும் இரைச்சலைக் கேள், ஜன்னல்கள் மற்றும் பளபளப்பான கடை விளம்பர ஒளிர்வுகளைப் பார். பியூகிள் ஒலிப்தை, மணி அடிப்பதை, மற்றும்  வெள்ளை  மஞ்சள்  கறுப்பு, மற்றும் சிவப்பு நிறத்தில் மனிதர்கள், பச்சையிலும், நீலத்திலும் ஆரஞ்சிலும் காவி வர்ணத்திலும் உடை உடுத்தியிருப்பதைப் பார்.

கொரின்னா–ஃபுல்கன்ஸியோ! எங்கே இருக்கிறாய் நீ!

ஆனால் இந்த முறை என்னால் ஓட்டில்லியாவின் உலகத்திலிருந்தும் பூங்காவிலிருந்த அந்த நகரத்திலிருந்தும் பிய்த்துக் கொண்டு வர முடியவில்லை. இங்கே நேராகச் செல்வதை விடுத்து அம்புகள் கண்ணுக்குப் புலனாகாத வரிகளில் துடித்தன. சுழன்றன. இந்த வரிகள் அவைகளுக்குள்ளாக சிக்கலுற்று, சிக்குப் பிரிந்து தாமாகச் சுருண்டு கொண்டு பிறகு சுருள் கலைந்தன. ஆனால் இறுதியில் எப்போதுமே இலக்கினைத் தாக்கின. நீங்கள் ஒருக்கால் எதிர்பார்த்ததை விட சற்றே வேறுபட்ட இலக்காக இருக்கலாம்.

அதைப் பற்றிய விநோத விஷயம் இதுதான்: உலகம் சிக்கலானதென்று, ஒன்றுக்கொன்று பூட்டிக் கொள்கிற மாதிரி பிரித்துக் கொள்ளவே முடியாதது போல இருக்கிறதென நான் எவ்வளவுக்கெவ்வளவு உணர்ந்து கொண்டேனோ அந்த அளவுக்கு நான் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எளிமையாகவும் குறைவாகவுமிருந்தன. அவற்றை நான் புரிந்து கொண்டு விட்டால் ஒரு அமைவில் உள்ள கோடுகள் போலத் தெளிவாகி விடும்.  இதை  கொரின்னாவிடம் நான் சொல்ல விரும்பியிருக்கலாம் அல்லது ஓட்டில்லியாவிடம். ஆனால் நான் அவர்களைப் பார்த்து கொஞ்ச காலமாகிவிட்டது. இரண்டு பேரையும். மேலும் மற்றொரு விநோத விஷயம் இங்கே இருக்கிறது. அவர்கள் இருவரைப் பற்றி நினைக்கும் போது அடிக்கடி ஒருத்தியை மற்றவளுடன் குழப்பிக் கொள்ளும் படியாகியது.

நான் என்னை நீண்ட காலமாகக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் ஒரு கண்ணாடியின் பக்கமாக கடந்து செல்ல வேண்டி வந்தபோது நான் இலக்கினை அதனுடைய அத்தனை நுணுக்கமான வர்ணங்களுடனும் கண்டேன். என்னை ஒருபக்கவாட்டுத் தோற்றத்தில்  வைக்க முயன்றேன். நான் அப்பொழுதும் இலக்கினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ”கொரின்னா!” நான் கத்தினேன்: ”இங்கே பார் கொரின்னா. பார் நான் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்பினாயோ அப்படி இருக்கிறேன்.” ஆனால் நான் அப்பொழுது நினைத்தேன் கண்ணாடியில் நான் பார்த்துக் கொண்டிருப்பது என்னை மட்டுமல்ல இந்த உலகத்தையும் கூட. ஆகவே  நான்  கொரின்னாவை  அதில்  கண்டுபிடிக்க வேண்டும். அங்கே வர்ணக் கோடுகளுக்கிடையில். அப்புறம் ஒட்டில்லியா? ஒரு வேளை ஓட்டில்லியாவும் கூட அங்கே தோன்றிக்  கொண்டும்  மறைந்து  கொண்டும்  இருக்கலாம். நான் அந்த கண்ணாடி–இலக்கினை நீண்ட நேரம் உற்றுப் பார்த்தவுடன்  ஒரு மையத்தைக் கொண்ட வட்டங்களில் இருந்து எட்டிப் பார்ப்பதாக நான் கண்டது கொரின்னாவா, ஓட்டில்லியாவா?

சில சமயங்களில் அவளை யதேச்சையாக நேர்கொண்டதாக எனக்குள் ஒரு எண்ணமெழும்.  ஒருத்தி அல்லது மற்றவளை. நகரத் தெருக்களில் அவள் ஏதோ என்னிடம் சொல்ல விரும்புகிறவள்  மாதிரி  தெரிவாள் ஆனால்  நிலத்தடி  ரயில்கள் எதிரெதிர் திசைகளில் கடக்கும் பொழுதுதான் நிகழும் அது. அது ஓட்டில்லியாவின் பிம்பமா–அல்லது கொரின்னாவின் பிம்பமா?–என்னை நோக்கி வந்து மறைய எனக்குள் ஒரு எண்ணமெழும். அதைத் தொடர்ந்து அதி வேகமாக ரயில் ஜன்னல்களில், நான் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து சுழித்தவை போல சட்டமிட்ட முகங்களின் தொடர்ச்சிகள்.

••••

Numbers in the Dark [1999] Vintage Edition,New York translated by  Tim Parks

readerr1